HOME      Khutba      ரமழான் முடிந்ததே தவிர அமல்கள் முடியவில்லை! | Tamil Bayan - 714   
 

ரமழான் முடிந்ததே தவிர அமல்கள் முடியவில்லை! | Tamil Bayan - 714

           

ரமழான் முடிந்ததே தவிர அமல்கள் முடியவில்லை! | Tamil Bayan - 714


ரமலான் முடிந்ததே தவிர அமல்கள் முடியவில்லை
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமலான் முடிந்ததே தவிர அமல்கள் முடியவில்லை
 
வரிசை : 714
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 06-05-2022 | 04-10-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்தத் தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் கண்ணியத்துக்குரிய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் வேதத்தையும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையையும், கண்ணியத்திற்குரிய தோழர்களின் பாதையையும் பின்பற்றி நடக்கும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம் அனைவருடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ் பொருத்திக் கொண்ட நேர்வழி பெற்ற நல்லோரில் என்னையும் உங்களையும் நம் சந்ததிகளையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹு தஆலா தன்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூறுகிறான்:
 
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ‏
 
உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் 15 : 99)
 
உலகத்திலேயே அல்லாஹ் கொடுத்த அல்லாஹ் பொருந்திக் கொண்ட ஒரே மார்க்கமாகிய உண்மையான மார்க்கம் ஆகிய இஸ்லாம் ஒன்றில் மட்டும்தான், இடைவிடாத விடுமுறை இல்லாத இறை வணக்க வழிபாடுகள் இருக்கின்றன.
 
எந்த மதங்களை கொள்கைகளை மக்களாக ஏற்படுத்திக் கொண்டார்களோ, அவர்கள் இறைவனை வழிபடுவதற்கு, தாங்கள் உருவாக்கிய கற்பனை சிலைகளை சிலுவைகளை வணங்குவதற்கு சில குறிப்பிட்ட நாட்களை வைத்துக்கொள்வார்கள். அந்த நாட்களில் அந்த இணை தெய்வங்களை வணங்கி விட்டு, பிறகு மறந்து விடுவார்கள்.
 
அல்லாஹு தஆலா நம்மை பாதுகாத்தான். பரிசுத்தப் படுத்தினான். அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ 
 
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். (அல்குர்ஆன் 3 : 19) 
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
 
இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார். (அல்குர்ஆன் 3 : 85)
 
இத்தகைய தூய இஸ்லாம் கொடுக்கப்பட்ட நாம், (அல்லாஹு தஆலா நம்மை மன்னிப்பானாக!) நம்மில் பலர், வணக்க வழிபாடுகளில் உண்மை யதார்த்த நிலையை அதனுடைய ரகசியத்தை, அதனுடைய நோக்கத்தை, அதனுடைய லட்சியத்தை புரியாதவர்களாக இருக்கிறார்கள்.
 
சிலர், பெருநாள் தொழுகையை நிறைவேற்றிவிட்டு தங்களுக்கு தொழுகை இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். சிலர், ஜும்ஆவிற்கு வந்துவிட்டு பிறகு எங்களுக்கு இறைவழிபாடு இல்லை என்று நினைக்கிறார்கள்.
 
சிலர், ரமலான் மாதத்தில் மட்டும் அல்லாஹ்வை நினைத்து விட்டு, வணங்கிவிட்டு, நோன்பு நோற்று விட்டு, பிறகு மற்ற மாதங்களில் அல்லாஹ்வுடைய தொழுகை இல்லை, இன்னபிற நஃபிலான நோன்புகள் இல்லை, ஃபர்ளான தொழுகைகளே இல்லை, இப்படியாக நம்மில் பலர் இருக்கிறார்கள்.
 
உண்மையில் அவர்கள் எந்த இஸ்லாமை பின்பற்றுகிறார்கள் என்று தெரியவே இல்லை. அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய ரஸூலும் கற்றுக்கொடுத்த இஸ்லாமை பின்பற்றுகிறார்களா? அல்லது அவர்களே இஸ்லாம் என்று அவர்களுடைய கற்பனைக்கு ஏற்றவாறு, மன இசைக்கு ஏற்றவாறு, விருப்பத்திற்கு ஏற்றவாறு, இந்த இஸ்லாமை மாற்றிக் கொண்டார்களா?
 
மிக வேதனையான விஷயம், இந்த முடிந்த பெருநாள் தொழுகையில், தொழுகைக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு கல்வியாளர் போன் செய்து சொல்கிறார்; பெருநாள் தொழுகைக்கு நிறையபேர் வருவாங்க. புதுசா தொழக் கூடியவர்கள் எல்லாம் வருவாங்க. அதனால் நீங்கள் தொழுகையை சுருக்கமாக முடித்துக் கொள்ளுங்கள்.
 
எந்த அளவு இந்த சமூகம் தொழுகை இல்லாதவர்களை முஸ்லிமாக இஸ்லாமியராக ஏற்றுக் கொள்வதற்கு தயாராகிவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 
யார் தொழவில்லையோ, அன்றைய சுப்ஹு தொழ வில்லையோ, அவர் அந்தப் பெருநாள் தொழுகைக்கு வருவதால் என்ன பயன்? யார் அந்த பெருநாள் தொழுகைக்கு பிறகு, அடுத்து லுஹர் தொழமாட்டாரோ, அந்த நியத்தில் இருக்கிறாரோ அவர் எப்படி முஸ்லிமாக முடியும்? அவருக்கும் அந்த பெருநாள் தொழுகைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்ன மார்க்கம் இது? அல்லாஹ் கற்றுக் கொடுத்த மார்க்கமா இது?
 
அப்படி இல்லையே! அல்லாஹ் கற்றுக்கொடுத்த மார்க்கத்தில் மனிதன் ஒரு பக்கம் ஷிர்க் குஃப்ர் என்றால், இந்த இரண்டுக்கும் இடையில், இவரை அங்கே கொண்டு போய் சேர்ப்பது தொழுகையை விடுவதுதான் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
«إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ»
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 82.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
 
அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கிறோம். (அல்குர்ஆன் 9 : 11)
 
அல்லாஹுதஆலா என்ன சொல்ல வருகிறான்? யார், லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினாரோ, பிறகு தொழ வில்லையோ அவர் காஃபிர். அவருக்கும் இஸ்லாமிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை.
 
இன்று எந்த அளவு நம்முடைய சிந்தனை மழுங்கி கிடக்கிறது. நாம் சிந்தனையால் சீர்கெட்டு கிடக்கின்றோம். தொழக்கூடிய முஸ்லிம். தொழாத முஸ்லிம். அப்படி இரண்டு முஸ்லிம்கள் இல்லை. ஒரே முஸ்லிம் தான். தொழுகை இல்லாதவர் முஸ்லிமாக இருக்க முடியாது.
 
இங்கே நாம் மிகப்பெரிய ஒரு உண்மையை சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ 
 
எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 41 : 30)
 
குர்ஆனைப் படித்து பாருங்கள். எங்கும் ஈமான் என்று மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறதா? ஈமானும் அமலும் சேர்ந்து தான் அல்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஈமான் கொண்டாலே வெற்றி என்று எங்கும் சொல்லப்படவில்லை.
 
சகோதரர்களே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்பது, ஒருவரை இஸ்லாமில் நுழைக்குமே தவிர, ஒருவரை முஃமினாக முஸ்லிமாக மாற்றுமே தவிர, அதற்குப் பிறகு அவர் முஸ்லிமாக நீடிக்க வேண்டுமென்றால், அவர் முஃமினாக நீடிக்க வேண்டுமென்றால், அவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் மரணிக்க வேண்டும் என்றால், அவர் அவர் மீது அல்லாஹ் கடமையாக்கிய செயல்களைச் செய்ய வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையாக்கிய கடமைகளை அவர் செய்ய வேண்டும். இடைவிடாது செய்ய வேண்டும். வாரத்தில் ஒரு நாள் தொழுகை அல்ல.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا
 
தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 4 : 103)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا
 
(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வருவீராக. ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வருவீராக. ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது வானவர்கள் கலந்துகொள்ளும் தொழுகையாகும். (அல்குர்ஆன் 17 : 78)
 
காலையில் தொழவேண்டும், மதியம் தொழவேண்டும், மாலையில் தொழவேண்டும், சூரியன் மறையும்போது தொழ வேண்டும், இரவில் தொழவேண்டும், ஐந்து நேரத் தொழுகைகளை அவர் நிறைவேற்றிக் கொண்டே இருக்கவேண்டும், அவரின் இறுதி மூச்சுவரை.
 
இன்று நம்மில் பலர், ரமலானுடைய இரவுத்தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால், மறுமையை மறந்து விட்டார்கள். இவர்களுடைய கியாமுல்லைல் நபிலான தொழுகைகளால் எந்த பிரயோஜனமும் மறுமையில் அடையமுடியாது. ஐங்காலத் தொழுகைகளை வீணாக்கியவர்களாக அவர்கள் இருக்கும் பொழுது, ஐங்காலத் தொழுகைகளை மறந்தவர்களாக அவர்கள் இருக்கும் பொழுது.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்:
 
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
 
(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19 : 59)
 
ஒருவன் காஃபிராக இருப்பது, இன்னொருவன் முஸ்லிமாக இருந்துவிட்டு குஃப்ரில் செல்வது. இவன் தண்டனையால் கடுமையானவன். அல்லாஹ்வின் வேதனையால் இவன் கடுமையானவன். காஃபிராக இருந்தவனை விட. காரணம், இல்முக்கு பிறகு வழி கெட்டவன். நேர்வழிக்கு பிறகு வழி கெட்டவன்.
 
நம்முடைய குடும்பத்தாருக்கு, நம்முடைய நண்பர்களுக்கு, நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு, இந்த ஈமானிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களில் பலர் உண்மையில் தொழுகையின் முக்கியத்துவத்தை அறியாதவர்களாகவும் தெரியாதவர்களாகவும் இருக்கலாம். 
 
சிலர், தெரிந்து கொண்டும் பிடிவாதப் போக்கில் இருக்கலாம், தொழுகையை விடுவது பெரும் பாவம் மட்டுமல்ல. அது குஃப்ரில் சேர்க்கக்கூடிய குஃப்ரான பாவம் என்பதை, அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 
அடுத்து, இந்த நோன்புகள் என்பது, ரமலானுடைய ஃபர்ளான நோன்புகளோடு முடிந்துவிடுவதில்லை என்பதை நாம் விளங்க வேண்டும்.
 
ஒரு முஸ்லிம் எப்படி ஃபர்ளான தொழுகைக்குள் சுன்னத்தான நபிலான தொழுகைகளை கொண்டு அல்லாஹ்வை நெருங்க ஆசைப்பட வேண்டுமோ, அதுபோன்றுதான் அடியான் உபரியான சுன்னத்தான நஃபிலான நோன்புகளை கொண்டும் அல்லாஹ்வை நெருங்க ஆசைப்பட வேண்டும்.
 
நம்முடைய முன்னோர்கள் ஸாலிஹீன்கள், நபிமார்கள் அந்த நபிமார்களின் வழித்தோன்றல்கள் எப்படி தொழுகையின் மூலமாக அல்லாஹ்வின் முஹப்பத்தை அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றார்களோ, அதுபோன்றுதான் நஃபிலான நோன்புகளின் மூலமாக அல்லாஹ்வின் நெருக்கத்தை முஹப்பத்தை அவர்கள் பெற்றார்கள். 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வழிமுறையை பார்க்கிறோம். கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களின் வழிமுறையை பார்க்கிறோம்.
 
இன்று, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் ஆர்வமூட்டிய உபரியான நோன்புகள் நம்முடைய சமுதாயத்தில் இல்லாத ஒரு நிலையில் பார்க்கிறோம். அல்லது மிகக் குறைவாக இருப்பதை பார்க்கிறோம்.
 
எப்படி, நஃபிலான தொழுகைக்கு அல்லாஹ்விடத்தில் அதிக சிறப்பு இருக்கிறதோ, அதுபோன்றுதான் நஃபிலான நோன்புகளுக்கு அல்லாஹ் இடத்தில் அதிக சிறப்புகள் இருக்கின்றன.
 
பொதுவாக நஃபிலான நோன்புகள் எந்த நாட்களில் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால், அது தனியாக ஒரு நாள் சனிக்கிழமையாகவோ, வெள்ளிக் கிழமையாகவோ இருக்கக் கூடாது. 
 
குறிப்பாக அல்லாஹ்வுடைய பாதையில் ஒரு நஃபிலான நோன்பு நோற்பதை பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
 
مَن صامَ يَوْمًا في سَبيلِ اللَّهِ، بَعَّدَ اللَّهُ وجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا
 
யார், அல்லாஹ்வுடைய பாதையில் போருக்கு செல்லும் போது ஒரு நாள் நோன்பு நோற்பாறோ அல்லாஹு தஆலா 70 ஆண்டுகள் தூரத்தில் அவருடைய முகத்தை நரகத்திலிருந்து தூரமாக்கி விடுகிறான்.
 
அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2840.
 
அதுபோன்று, நஃபிலான முக்கியமான நோன்புகளில் இந்த ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள் ஒன்று.
 
ரமலான் முடிந்ததற்கு பிறகு, இந்த ஷவ்வால் மாதத்தில் தொடர்ந்தோ, அல்லது விட்டுவிட்டோ ஆறு நோன்புகள் ஷவ்வால் மாதத்தில் நோற்க்கப்பட வேண்டியவை. 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
مَن صامَ رَمَضانَ ثُمَّ أتْبَعَهُ سِتًّا مِن شَوَّالٍ، كانَ كَصِيامِ الدَّهْرِ
 
யார் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு ஷவ்வாலில் ஆறு நாட்கள் நோன்பு வைப்பாரோ, அவர் அந்த ஆண்டெல்லாம் நோன்பு நோற்பவரைப் போன்று. 
 
அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல்அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1164.
 
இந்த இடத்தில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷவ்வாலில் இருந்து ஆறு என்று சொன்னார்கள். ஷவ்வாலிலிருந்து தொடர்ந்து ஆறு நாட்கள் என்று சொல்லவில்லை. 
 
எனவே அறிஞர்கள் கூறுகிறார்கள்; ஷவ்வாலுக்குப் பிறகு, பெருநாள் முடிந்து அடுத்த நாளிலிருந்து வைத்தாலும் சரி அல்லது விட்டு வைத்தாலும் சரி அல்லது ஒரு ஒரு நோன்பாக வைத்தாலும் சரி, எப்படி வைத்தாலும் இந்த நன்மை அவருக்கு கிடைக்கும்.
 
ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக.
 
صِيامُ شهْرِ رمضانَ بِعشْرَةِ أشْهُرٍ ، و صِيامُ سِتَّةِ أيَّامٍ بَعدَهُ بِشهْرَيْنِ ، فذلِكَ صِيامُ السَّنةِ
 
ரமலான் உடைய நோன்புகள் பத்து மாதத்தின் நோன்புகளுக்கு சமம். அதற்குப்பின்னால் நோற்க்கப்படக் கூடிய ஆறு நோன்புகள் இரண்டு மாத நோன்புக்கு சமமானவை. இது முழுமையாக ஒரு வருடத்தின் நோன்புக்கு சமம் ஆகிவிடுகிறது.
 
அறிவிப்பாளர் : ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 3851.
 
அடுத்ததாக, ஷவ்வாலுக்கு அடுத்து, துல்கஅதா, துல்ஹஜ் மாதங்கள் இருக்கின்றன. இந்த துல்ஹஜ் மாதம், புனிதமான நான்கு மாதங்களில் ஒன்று. பொதுவாக புனித மாதங்கள் எல்லாம் அமலுக்கு மிக மிக சிறப்பான மாதம் இது.
 
துல்ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்கள் அல்லாஹ்விடத்தில் நன்மையால் மிக சிறந்தது. இரவில் ரமலானுடைய இறுதிப் பத்து. பகல் நேரத்தைப் பொறுத்தவரை துல்ஹஜ் மாதத்தினுடைய முதல் 10, பகல்களால் அல்லாஹ்விடத்தில் மிக சிறப்பானது.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
ما العَمَلُ في أيَّامٍ أفْضَلَ منها في هذه، قالوا: ولا الجِهادُ؟ قالَ: ولا الجِهادُ، إلَّا رَجُلٌ خَرَجَ يُخاطِرُ بنَفْسِه ومالِه، فلَمْ يَرْجِعْ بشَيءٍ
 
இந்தத் துல்ஹஜ் உடைய பத்து நாட்களில் நோன்பு வைப்பது, இதைவிட சிறப்பான ஒன்று கிடையாது. வேறு எந்த நாட்களில் அந்த அமல் செய்தாலும் சரி.
 
அப்பொழுது ஸஹாபாக்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாதில் செல்வதை விடவா? ஆம் ஜிஹாதில் செல்வதை விட தான். 
 
யார் ஒரு மனிதன் தன்னுடைய உயிரை எடுத்துக்கொண்டு, தன்னுடைய பொருளை எடுத்துக்கொண்டு, அதை அவன் ஆபத்தில் போட்டு விட்டானோ, அதாவது ஷஹீத் ஆகிவிட்டானோ, திரும்ப வரவில்லையோ, அவனைத் தவிர என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 969.
 
இந்த ஹதீஸில் பொதுவாக அமல் என்று குறிப்பிடுவதில் இருந்து, அறிஞர்கள் சொல்கிறார்கள்.
 
அமல்களில் மிகச்சிறப்பான அமல் நோன்பு. எனவே, துல்ஹஜ்ஜுடைய அந்த முதல் 10 நாட்களில், பிறகு 1 -லிருந்து ஒன்பது வரை அரஃபா வரை வரக்கூடிய அந்த நாட்களில் நோன்பு வைப்பது மிகச்சிறப்பான ஒரு அமலாகும்.
 
அடுத்து, இந்த நஃபிலான நோன்புகளில் முக்கியமான நோன்பு, அரஃபாவுடைய நோன்பு. அரஃபாவில் தங்கியிருக்காதவர்களுக்காக, அரஃபாவில் இல்லாத ஹாஜிகள் அல்லாதவர்களுக்காக அரஃபாவுடைய நோன்பு.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
 
صيامُ يومِ عَرفةَ إنّي أحْتسبُ على اللهِ أن يُكفّرَ السنَةَ التي بعدهُ ، والسنةَ التي قبلهُ
 
அரஃபாவுடைய நோன்பு நான் அல்லாஹ்விடத்தில் அதை ஆதரவு வைக்கிறேன். முந்தைய வருடத்தினுடைய பாவங்களையும் அது போக்கிவிடும். வரக்கூடிய அடுத்த வருடத்தின் பாவங்களையும் அது போக்கிவிடும். என்று.
 
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.
 
ஆகவே, இந்த அரஃபாவுடைய நோன்பு என்பது அவ்வளவு சிறப்பான நோன்பு. 
 
அதுபோன்றுதான், முஹர்ரம் மாதத்தில் நஃபிலான நோன்புகள் வைப்பது. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். அபூஹுரைரா அறிவிக்கின்றார்கள்.
 
((سُئِلَ- أي النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم- أيُّ الصَّلاةِ أفضَلُ بعد المكتوبةِ؟ وأيُّ الصِّيامِ أفضَلُ بعد شَهرِ رمضانَ؟ فقال: أفضَلُ الصَّلاةِ بعد الصَّلاةِ المكتوبةِ، الصَّلاةُ في جَوفِ اللَّيلِ. وأفضَلُ الصِّيامِ بعد شَهرِ رَمَضانَ، صِيامُ شَهرِ اللهِ المُحَرَّم))
 
அல்லாஹ்வின் தூதரே! ஃபர்லான தொழுகைகளுக்குப் பிறகு, எந்த தொழுகை மிக சிறப்பானது? ரமழானுக்கு பிறகு எந்த நோன்பு சிறப்பானது? என்று கேட்கப்பட்டது.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் சொன்னார்கள்.
 
ஃபர்லான தொழுகைகளுக்குப் பிறகு, சிறப்பான தொழுகை இரவின் நடுப்பகுதியில் தொழக்கூடிய தொழுகையாகும். ரமலானுக்கு பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் வைக்கக்கூடிய நஃபிலான உபரியான நோன்புகளாகும்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2004.
 
குறிப்பாக முஹர்ரம் மாதத்தில் பிறை 10 அன்று ஆஷூரா உடைய நோன்பு நோற்பது. இது மிகவும் சிறப்பான ஒரு அமலாகும்.
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். 
 
((أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قَدِمَ المدينةَ فوجَدَ اليهودَ صيامًا يومَ عاشُوراءَ، فقال لهم رَسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم: ما هذا اليومُ الذي تصومُونَه؟ فقالوا: هذا يومٌ عظيمٌ أنجى اللهُ فيه موسى وقَومَه، وغَرَّقَ فِرعَونَ وقَومَه، فصامَه موسى شُكرًا؛ فنَحن نصومُه، فقال رسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم: فنَحنُ أحَقُّ وأَوْلى بمُوسى منكم، فصامَه رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم، وأمَرَ بِصيامِه))
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினா வந்தார்கள். அப்போது, அந்த ஆஷுரா முஹர்ரம் மாதத்தின் அந்த பத்தாவது நாளில் யூதர்கள் எல்லாம் நோன்பு வைத்திருந்தார்கள்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். இந்த நாளில் நீங்கள் நோன்பு வைக்கிறீர்களே? இந்த நாள் என்ன நாள்? என்று கேட்டார்கள். 
 
யூதர்கள் சொன்னார்கள்; இது ஒரு மகத்தான நாள். அல்லாஹு தஆலா இந்த நாளில் மூஸாவையும் மூஸா உடைய சமூகத்தையும் பாதுகாத்தான். ஃபிர்அவுனையும், ஃபிர்அவுனுடைய சமுதாயத்தையும் மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக, முஹர்ரம் மாதத்தின் இந்த பத்தாவது நாளில் மூஸா அலைஹிஸ்ஸலாம் நோன்பு நோற்றார்கள். எனவே அவர்களைத் தொடர்ந்து, நாங்களும் நோன்பு நோற்க்கிறோம் என்று சொன்னார்கள்.
 
அப்போது அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்: உங்களைவிட, மூஸாவை சொந்தம் கொண்டாடுவதற்கு, மூஸா அவர்களுக்கு நெருக்கம் கொண்டாடுவதற்கு நாங்கள் மிக உரிமையானவர்கள், தகுதியானவர்கள் என்று கூறி, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அந்த பிறை 10-ல் நோன்பு வைத்தார்கள். தங்கள் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும் படி கட்டளையிட்டார்கள். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2004.
 
மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அபூ கதாதா அறிவிக்கின்றார்கள்.
 
((صيامُ يومِ عاشُوراءَ، أحتسِبُ على اللهِ أن يكَفِّرَ السَّنةَ التي قَبْلَه))
 
ஆஷுரா உடைய நோன்பு முந்தைய ஆண்டு பாவங்களை போக்கிவிடும் என்று அல்லாஹ்விடத்தில் நான் ஆதரவு வைக்கிறேன். 
 
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.
 
அதுபோன்றுதான், இந்த பிறை 10-ல் நோன்பு நோற்பது போன்று, அதற்க்கு முந்திய ஒரு நாள் பிறை 9 -லும் நோன்பு நோற்போது. 
 
காரணம், யூதர்கள் பத்தில் மட்டும் வைக்கிறார்கள். அவர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒன்பதையும் சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள்.
 
((لئِن بقيتُ إلى قابلٍ، لأَصُومنَّ التَّاسِعَ))
 
அடுத்த ஆண்டு நான் இருப்பேனே ஆனால், பிறை 9லும் வைப்பேன் என்று. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1134.
 
அதுபோன்று, நஃபிலான நோன்புகளில் மிக முக்கியமான நோன்பு, ஷஅபான் மாதத்தில் நோன்பு வைப்பது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அமலைப்பற்றி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்.
 
((ما رأيتُ رَسولَ الله صلَّى اللهُ عليه وسلَّم أكثَرَ صيامًا منه في شَعبانَ))
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷஅபான் மாதத்தில் அதிகமாக நோன்பு வைப்பதைப் போன்று, வேறு எந்த மதத்திலும் நோன்பு வைப்பதை நான் பார்த்ததில்லை.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1969.
 
இன்று பெரும்பாலும் இந்த ஷஅபானுடைய நோன்பு நம்முடைய சமுதாயத்தால் மறக்கப்பட்ட ஒரு சுன்னத்தாக, கைவிடப்பட்ட ஒரு சுன்னத்தாக, புறக்கணிக்கப்பட்ட ஒரு சுன்னத்தாக இருக்கிறது. 
 
ஷஅபான் மாதத்தின் நோன்பு மிகச் சிறப்பான நோன்பு. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மாதம் ஏறக்குறைய முழுமையாக நோற்க்கக் கூடிய அளவிற்கு இருந்தார்கள். ஒரு சில நாட்களைத் தவிர.
 
அபு ஸலமா சொல்கிறார்கள். நாம் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாவிடம் இந்த ஷஅபானுடைய நோன்பை பற்றி கேட்டேன், அதற்கு அவர்கள் சொன்னார்கள்:
 
((سألتُ عائشة رَضِيَ اللهُ عنها عن صيامِ رَسولِ الله صلَّى اللهُ عليه وسلَّم، فقالت: كان يصومُ حتى نقولَ قد صام، ويُفطِرُ حتى نقولَ قد أفطَرَ، ولم أرَهُ صائمًا من شَهرٍ قَطُّ أكثَرَ مِن صيامِه مِن شَعبانَ؛ كان يصومُ شَعبانَ كُلَّه، كان يصومُ شَعبانَ إلَّا قليلًا))
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு வைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த மாதத்தை மொத்தமாக நோன்பில் முடித்துக் கொள்வார்கள் என்று நாங்கள் நினைப்போம். பிறகு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பை விடுவார்கள்.
 
ஷஅபான் மாதத்தை விட அதிகமாக அதிகமாக நோன்பு வைத்ததை பார்த்ததில்லை. ஷஅபான் முழுமையாகவே நோன்பு வைப்பார்கள். கொஞ்ச நாட்களை தவிர என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1969.
 
அதுபோன்றுதான், ஒவ்வொரு வாரத்திலும் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நமக்கு நோன்பு இருக்கிறது. நாம் வைக்க வேண்டிய நோன்பு. 
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த நோன்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். உஸாமா இப்னு செய்து அறிவிக்கின்றார்கள். 
 
((أنَّ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم كان يصومُ يومَ الاثنينِ والخَميسِ، فسُئِلَ عن ذلك، فقال: إنَّ أعمالَ العِبادِ تُعرَضُ يومَ الاثنينِ والخَميسِ، وأُحِبُّ أن يُعرَضَ عملي وأنا صائِمٌ)
 
திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு வைப்பார்கள். இதற்கு விளக்கம் கேட்கப்பட்டபோது அவர்கள் சொன்னார்கள்.
 
வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அல்லாஹ்வுடைய அடியார்களின் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் பொழுது என்னுடைய அமல்கள் அல்லாஹ் விடத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 
 
அறிவிப்பாளர் : உஸாமா இப்னு செய்து ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 2436.
 
இதை சொன்னவர்கள், முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். எந்த அளவு அல்லாஹ்வுடைய பயம் அல்லாஹ்வுடைய தக்வா இருந்திருக்கும்! 
 
அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். 
 
(أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم سُئِلَ عن صَومِ الاثنينِ، فقال: فيه وُلِدْتُ، وفيه أنزِلَ عليَّ))
 
திங்கட்கிழமை நோன்பை குறித்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இடத்தில் கேட்கபட்டது. அந்த திங்கட்கிழமையில்தான் நான் பிறந்தேன். அன்றுதான் எனக்கு வஹியும் முதலாவதாக அறிவிக்கப்பட்டது என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.
 
ஆகவே, திங்கட்கிழமைகளில் வியாழக்கிழமைகளில் நாம் நோன்பு நோற்பது மிகவும் விருப்பமான ஒரு அமலாக இருக்கிறது.
 
அதுபோன்றுதான், ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது. அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். 
 
(أوصاني خليلي بثلاثٍ لا أدَعُهنَّ حتى أموتَ: صومِ ثلاثةِ أيَّامٍ مِن كلِّ شَهرٍ، وصلاةِ الضُّحى، ونومٍ على وِترٍ))
 
என்னுடைய உற்ற தோழர் எனக்கு மூன்று விஷயத்தை வஸியத்ததாக சொன்னார்கள். என்னுடைய மவுத்துவரை நான் அதை விட மாட்டேன். அந்த மூன்று விஷயங்கள், 1. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு இருப்பது. 2. முற்பகலினுடைய ழுஹா தொழுகை. 3. வித்ரு தொழுது விட்டு தூங்க வேண்டும் என்று. 
 
இந்த மூன்று அமல்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1178.
 
அதுபோன்று இந்த அய்யாமுல் பீழ் உடைய மூன்று நாட்கள் நோன்பு பற்றி வருகிறது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மூன்று நாட்கள் குறிப்பாக, பிறை 13 14 15 நோன்பு நோற்பார்கள். 
 
அது அல்லாமல் அந்த நாட்களில் நோன்பு வைப்பது தவறி விட்டால் அந்த மாதத்தில் எந்த பகுதியிலாவது முதல் பத்திலோ, இரண்டாவதிலோ, மூன்றாவதிலோ, அந்த மூன்று நோன்புகளை நோற்று விடுவார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூதர், ஆயிஷா – நூல் : முஸ்லிம் 1160, திர்மிதி 761.
 
அடுத்ததாக, இந்த நோன்பில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள், அல்லாஹ்வுடைய நெருக்கத்தை பெற முன்னேறக் கூடியவர்கள், அந்த நல்லோர்கள் உடைய ஒரு நோன்பு இருக்கிறது. 
 
அதாவது, வாழ்க்கை எல்லாம் நோன்பு நோற்பது. எப்படி? ஒரு நாள் நோன்பு இருப்பது. ஒருநாள் நோன்பு இல்லாமல் இருப்பது.
 
அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவருடைய அமலைப்பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்தி வருகிறது. என்ன அமல்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பகலெல்லாம் நோன்பு நோற்பேன். இரவெல்லாம் நின்று வணங்குவேன். வாழ்நாள் முழுக்க இதை செய்வேன். இப்படியாக சத்தியம் செய்து கொண்டு இபாதத்தில் மூழ்கிவிட்டார்.
 
இந்த செய்தி ரஸூலுல்லாஹ்விற்கு கிடைத்தவுடன், இங்கே வாருங்கள் என்று அழைத்து, இப்படி இப்படி செய்து கிடைத்தது. இது உண்மைதானா? என்று கேட்டவுடன், ஆம் அல்லாஹ்வின் தூதரே, எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அப்படித்தான் நான் சத்தியம் செய்தேன் என்று சொல்கிறார்கள்.
 
அப்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். 
 
فإنَّك لا تستطيعُ ذلك، فصُمْ وأفطِرْ، وقُمْ ونَمْ، وصُمْ مِن الشَّهرِ ثلاثةَ أيَّامٍ؛ فإنَّ الحَسَنةَ بعَشْرِ أمثالِها، وذلك مِثلُ صِيامِ الدَّهرِ
 
அது உன்னால் முடியாது. நீங்கள் கொஞ்சம் நோன்பு வையுங்கள். கொஞ்சம் நோன்பை விட்டு விடுங்கள். இரவில் சிறிது தொழுங்கள். சிறிது தூங்கி விடுங்கள். மாதத்தில் மூன்று நோன்பு வையுங்கள். நன்மைகள் ஒவ்வொன்றுக்கும் பத்து மடங்கு கிடைக்கும். வாழ்நாளெல்லாம் நீங்கள் நோன்பு வைத்ததை போன்று நன்மை கிடைத்துவிடும் என்று சொன்னார்கள்.
 
அப்போது, அப்துல்லாஹ் இப்னு அம்ர் சொல்கிறார்: அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதைவிட செய்வதற்கு சக்தி இருக்கிறது சொல்லித் தாருங்கள் என்று. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அப்படியா சரி, ஒரு நாள் நோன்பு வை. இரண்டு நாள் நோன்பு இல்லாமல் இரு. 
 
அப்துல்லாஹ் இப்னு உமர் ஆஸ் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இதை விட சக்தி அதிகமாக இருக்கிறது. எனக்கு அமலை சொல்லித் தாருங்கள் என்று. 
 
சொன்னார்கள்: அப்படியா, ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பு இல்லாமல் இரு. இதுதான் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய நோன்பாகும். 
 
அவர் சொன்னார்: யா ரஸூலுல்லாஹ்! எனக்கு இதை விட அதிகம் சக்தி இருக்கிறது. எனக்கு சொல்லித் தாருங்கள் என்று. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். இதைவிட சிறப்பு இல்லவே இல்லை. (1)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1976.
 
நம்முடைய மார்க்கம் நடுநிலையான மார்க்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த நஃபில் நோன்பை இப்படி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய முறையில் ஒரு அடியான் வைக்கும்பொழுது, அவனுடைய உள்ளம் எந்த அளவு பரிசுத்தம் அடையும்!
 
அவனுடைய பார்வைகள், அவனுடைய செவிகள், அதுபோன்று அவனுடைய தவறான ஹராமான இச்சைகள் எந்த அளவு கட்டுப்படுத்தப்பட்டு, அவருடைய ஆத்மா பரிசுத்தம் அடைகிறது!
 
ரமலானுடைய நோன்பின் நோக்கத்தை பற்றி அல்லாஹ் சொல்லும் பொழுது, தக்வா என்று சொல்லுகிறானே, அந்த தக்கவை தரக்கூடிய நோன்பை, வாழ்நாளெல்லாம் அவன் கடைப்பிடிக்கும் பொழுது, தக்வா உடைய எந்த உச்சத்திற்கு அவன் எட்டுவான் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
 
ஆகவே, ரமலான் நோன்பு முடிந்து விட்டது. வணக்க வழிபாடுகள் முடிந்துவிட்டன. தொழுகை முடிந்து விட்டது. நோன்பு முடிந்து விட்டது என்று எண்ணி விடாதீர்கள். அல்லாஹ்வின் தொடர்பை யார் முரிக்க நினைப்பாரோ, அவர்தான் இப்படி எண்ணுவார்.
 
அல்லாஹ்வின் தொடர்பில் நான் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் அன்பில் கருணையில் இருக்க வேண்டும் என்று யார் நினைக்கிறாரோ, ஒருபோதும் அவர் வணக்க வழிபாடுகளை விட்டு தூரமாகி விட மாட்டார். 
 
ஒவ்வொரு வணக்கத்திற்கு பிறகும், அடுத்த வணக்கத்தை நோக்கி, அவருடைய உள்ளமும், அவருடைய பாதமும், அவருடைய உடலும் விரைந்து கொண்டு இருக்கும்.
 
அத்தகைய நல்ல மக்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
عن عبدِ اللهِ بنِ عَمرٍو رَضِيَ اللهُ عنهما قال: ((أُخبِرَ رَسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم أنِّي أقولُ: واللهِ لأصومَنَّ النَّهارَ، ولأقومَنَّ اللَّيلَ ما عِشْتُ، فقُلتُ له: قد قلْتُه بأبي أنت وأمي، قال: فإنَّك لا تستطيعُ ذلك، فصُمْ وأفطِرْ، وقُمْ ونَمْ، وصُمْ مِن الشَّهرِ ثلاثةَ أيَّامٍ؛ فإنَّ الحَسَنةَ بعَشْرِ أمثالِها، وذلك مِثلُ صِيامِ الدَّهرِ. قلتُ: إنِّي أطيقُ أفضَلَ من ذلك. قال: فصُمْ يومًا وأفطِرْ يَومَينِ. قلتُ: إنِّي أُطيقُ أفضَلَ من ذلك. قال: فصُمْ يومًا وأفطِرْ يومًا؛ فذلك صيامُ داودَ عليه السَّلامُ، وهو أفضَلُ الصِّيامِ. فقُلتُ: إنِّي أُطيقُ أفضَلَ من ذلك. فقال النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: لا أفضَلَ مِن ذلك))
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/