HOME      Khutba      நோய்களை தீர்க்கும் துஆக்கள்!! | Tamil Bayan - 615   
 

நோய்களை தீர்க்கும் துஆக்கள்!! | Tamil Bayan - 615

           

நோய்களை தீர்க்கும் துஆக்கள்!! | Tamil Bayan - 615


بسم الله الرحمن الرّحيم

நோய்களைத் தீர்க்கும் துஆக்கள்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூறுகிறான்:

وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ

கருத்து : நபியே நீங்கள் மக்களை பார்த்து பயப்படுகிறீர்களா?உங்களுடைய உள்ளத்தில் இந்த மக்களின் மீது அச்சம் இருக்கிறதா? அல்லாஹ்தான் நீங்கள் பயப்படுவதற்கு அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன். (அல்குர்ஆன் 33 : 37)

நம்முடைய தாய் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள் :

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குர்ஆனில் ஒரு வசனத்தை மறைத்து இருப்பார்களேயானால் இந்த வசனத்தை மறைத்து இருப்பார்கள்.அப்படி ஒரு எந்த வசனத்தையும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குர்ஆனில் மறைக்கவில்லை என்பதற்கு இத்தகைய வசனங்கள் சான்றாக இருக்கின்றன. (1)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம்,எண் : 177.

அல்லாஹுத்தஆலா நபியைப் பார்த்து எச்சரித்து கேட்கின்றான்:நபியே நீங்கள் மக்களைப் பார்த்து பயப்பட ஆரம்பித்து விட்டீர்களா? நீங்கள் பயப்படுவதற்கு தகுதி உள்ளவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.

அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்ட ஒரு முஃமின் அல்லாஹ் அவன் தான் அனைத்தையும் நிர்வகிக்கிறான்.

يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ

வானத்திலிருந்து பூமி வரை உள்ள எல்லா காரியங்களையும் அவன்தான் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். (அல்குர்ஆன் 32 : 5)

وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا

ஒரு மரத்திலிருந்து இலை விழுவதாக இருந்தாலும் சரி அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் அல்லாஹ்வுடைய இல்மு இல்லாமல் அந்த இலையால் தானாக விழ முடியாது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டு. (அல்குர்ஆன் 6 : 59)

فَعَّالٌ لِمَا يُرِيدُ

அவன் தான் நாடியதை செய்து முடித்து விடுவான். (அல்குர்ஆன் 85 : 16)

وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ

அவன் நாடியதை அவன் செய்கிறான். (அல்குர்ஆன் 14 : 27)

அவனுக்குத்தான் அத்தகைய ஆற்றலும் வலிமையும் அந்த உரிமையும் இருக்கின்றது.  அவன் திட்டமிடுவான் நிர்ணயிப்பான் நிறைவேற்றி விடுவான்.

وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ

அல்லாஹுத்தஆலா அவனுடைய காரியத்தில் மிகைத்து விடுவான்.(அல்குர்ஆன் 12 : 21)

யாரும் ரப்பை மிகைக்க முடியாது. அவன் எல்லாரையும் மிகைத்து விடுவான். மனிதர்களை மலக்குகளை ஜின்களை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா படைப்புகளையும் அவன் மிகைத்து விடுவான்.அவனுடைய ஆற்றல் அவனுடைய கட்டளை போதுமானது.

إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ

அவன் ஒரு பொருளை(ப் படைக்க) கருதினால் அதை ‘ஆகுக!' எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் 36 : 82)

ஒன்றை ஆக்க வேண்டும் என்றாலும் அவனுடைய திரு வார்த்தை போதுமானது.ஒன்றை அழிக்க வேண்டும் என்றாலும் அவனுடைய கட்டளை போதுமானது.

அல்லாஹு தஆலாவிடத்திலே பெரிய பட்டாளங்கள் இருக்கின்றன. மிகப்பெரிய ராணுவம் இருக்கின்றது.

وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ

நபியே!உங்களுடைய ரப்புடைய ராணுவங்களை அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 74 : 31)

காற்று,மழை,பூமி,கடல் மட்டுமல்ல, அல்லாஹ்விடத்திலே சிறிய பூச்சிகள் நோய்நொடிகள் இப்படியாக ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மனித கற்பனையால் எண்ணி முடிக்க முடியாத கற்பனை செய்ய முடியாத பட்டாளங்கள் அல்லாஹ்விடத்திலே இருக்கின்றன.

அல்லாஹ் ஏவினால் மனிதனுடைய எந்த சக்தியும் தடுக்க முடியாது.எப்பேற்ப்பட்ட பாதுகாப்பு வளையங்களுக்குள் அந்த மனிதன் இருந்தாலும் அவனை பாதுகாக்க முடியாது அல்குர்ஆன் 4 : 78

மிக உயரமான பெரிய கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரி,உங்கள் மரணமும் அந்த மரணத்திற்காக நான் நிர்ணயம் செய்த காரணமும் உங்களை வந்து பிடித்தே தீரும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒரு மனிதனுக்கு அல்லது ஒரு சமூகத்துக்கு தன்னுடைய ஆற்றலை வல்லமையைக் காட்ட வேண்டுமென்றால் மரணத்தினுடைய நோய்களை அவர்கள்மீது சாட்டுவான்.

அல்லாஹ்வுடைய படைகளில் ராணுவத்தில் ஒன்று தான் இந்த நோய் என்பது. சிலநேரங்களில் இந்த நோய் அல்லாஹ்வுடைய ரஹ்மத் ஆகவும் அமைந்திருக்கும்.

இதே நோய் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு முஃமினுக்கு ஏற்படும்போது அது அவருடைய பாவங்களைப் போக்கக் கூடியதாக, அவருடைய மறுமையின் அந்தஸ்துகளை உயர்த்தக்கூடியதாக அல்லாஹ்விடம் நெருக்கமாக்கி வைப்பதாக இருக்கும்.

மறுமையிலே அந்த அடியார் பாவங்கள் மன்னிக்கப்பட்டவனாக பரிசுத்தமாக வர வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றான். எனவே அல்லாஹ் அந்த நோயை அவருக்கு கஃப்பாராவாக ஆக்கி விடுகின்றான்.

ஆகவேதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லும் போது,

«لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ»

பரவாயில்லை, பொறுமையாக இருங்கள்; அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் நாட்டத்தால் இந்த நோய் உங்களை சுத்தப்படுத்தக் கூடியதாக ஆகிவிடும். உங்கள் பாவங்களை உங்கள் குற்றங்களை குறைகளை போக்க கூடியதாக ஆக்கிவிடும் என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு,நூல் : புகாரி, எண் : 3616.

ஆனால், இந்த நோயை அல்லாஹ் அவனுடைய அடியார்களில் வரம்பு மீறக்கூடிய, அல்லாஹ்வின் கட்டளையை மீறக்கூடிய, அல்லாஹ்வின் மார்க்கத்தை நிராகரிக்கக்கூடிய, அல்லாஹ்வின் மார்க்கத்தோடு சண்டை செய்யக்கூடிய, அல்லாஹ்விற்கு எதிராக யுத்தத்தை பிரகடனப்படுத்திய எதிரிகளின் மீதும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சாட்டுவான்.

அது அவர்களுக்கு இம்மையில் கேவலமாக அமையும். மறுமைக்குரிய தண்டனைக்கு முன்னெச்சரிக்கையாக அமையும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கின்றான் :

وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ

அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம். (அல்குர்ஆன் 32: 21)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான் :

وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ

ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ

(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான (இ)தைப் பின்பற்றுங்கள். (அல்குர்ஆன் 39 : 54, 55)

முஸ்லிமுடைய நிலையைப் பொறுத்தவரை அவனுடைய உள்ளம் அல்லாஹ்வை மட்டுமே பயந்ததாக அல்லாஹ்வுடைய பிடியை கொண்டு மட்டுமே பயந்ததாக இருக்க வேண்டும்

எதிரிகளால் அல்லது இது போன்ற நோய்களால் அல்லது வேறு எந்த ஒரு திடுக்கம் கொடுக்கக்கூடிய அச்சுறுத்தக்கூடிய காபிர்கள் எதைப் பார்த்து எல்லாம் பயப்படுவார்களோ அதைப் பார்த்தெல்லாம் ஒரு முஃமின் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அவர்கள் அல்லாஹ்வை நம்பாதவர்கள். காரணங்களை நம்பக்கூடியவர்கள். பொருட்களை நம்பக்கூடியவர்கள். வஸ்துக்களை நம்பக் கூடியவர்கள்.

இது தான் அதற்கு காரணம் என்று கூறி அந்த காரணத்தை பயப்படக்கூடியவர்கள். ஆனால் நாமோ அந்த காரணத்தை படைத்து உருவாக்கிய அந்த அல்லாஹ்வை பயப்படக்கூடியவர்கள் .

எந்த நோயும் நமக்கு மரணத்தை கொடுக்க முடியாது அல்லாஹ் நாடினாலே தவிர. எந்த மருந்தும் நமக்கு ஷிஃபாவை கொடுக்கமுடியாது அல்லாஹ் நாடினாலே தவிர.

எனவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் இப்படி கூறுவார்கள் :

«أَذْهِبِ البَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا»

அல்லாஹ்வே உன்னுடைய மருந்தை தவிர வேறு மருந்து இல்லை. இந்த நோயை குணப்படுத்துவதற்கு நீ மருந்தை கொடுக்க வேண்டும். நீ நிவாரணத்தைக் கொடுக்க வேண்டும். உன்னுடைய ரஹ்மத்தை கொடுக்க வேண்டும்.

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி,எண் : 5675.

எந்த மருந்தும் அது ஷிஃபாவை கொடுக்க முடியாது. ஷிஃபாவிற்கு காரணமாக இருக்கலாம். அல்லாஹ் நாடினால் அந்த மருந்தால் ஷிஃபாவை தருவான்.

நோய் மரணத்தைக் கொடுக்காது. அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு முஃமினுடைய நம்பிக்கை அல்லாஹ்வின் விதியின் படி இருக்க வேண்டும்.

وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا

எந்த ஒரு ஆன்மாவும் அல்லாஹ்வின் விதியின் படியே தவிர மரணிக்காது. அதற்குரிய தவணை அல்லாஹ்விடத்தில் எழுதப்பட்ட தவணையாக இருக்கின்றது. (அல்குர்ஆன் 3 : 145)

உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய காலத்திலே ஷாம் தேசத்திலே மிகப் பெரிய கொடிய நோய் காலரா பரவியது.ஆயிரக்கணக்கான சஹாபாக்கள் தாபியீன்கள் முஸ்லிம் முஜாஹித்கள் தாபியீன்களிலே உள்ள வீரர்கள் அதிலே இறந்தார்கள்.

சுப்ஹு தொழ வைப்பார்கள் ஜனாஸாவோடு. அந்த சுபுஹுத் தொழுகையை நடத்திய இமாம் லுஹர் தொழுகையில் ஜனாஸாவாக இருப்பார்கள். லுஹரிலே தொழவைத்த சஹாபி உடைய ஜனாஸா அசரிலே வரும். அசரிலே தொழ வைத்த அந்த இமாமுடைய ஜனாஸா மஃரிபிலே வரும். ஏறக்குறைய பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த காலரா நோயிலே மரணித்தார்கள் என்று எழுதுகிறார்கள்.

நூல் : தஃஸீர் இப்னு கசீர்

சஹாபாக்கள் பயந்தார்களா?விரண்டு ஓடினார்களா? இது அல்லாஹ்வுடைய விதி. உமர் ரழியல்லாஹுஅன்ஹு மற்றும்முஆது இப்னு ஜபல் என்ற ஸஹாபியை மிகப்பெரிய கல்விமானை மதீனாவிற்கு அழைத்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் வருவதற்கு மறுத்து விட்டார்கள். காரணம் என்ன?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் :

«إِذَا سَمِعْتُمْ بِالطَّاعُونِ بِأَرْضٍ فَلاَ تَدْخُلُوهَا، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا مِنْهَا»

எந்த ஊரில் நோய் பரவி இருக்கிறதோ அந்த ஊரில் இருந்து வெளியேற வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலும் எந்த ஊரில் நோய் பரவி இருக்கிறதோ அந்த ஊருக்கு செல்லாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா இப்னு ஸைத்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 5728.

ஸபபின் அடிப்படையிலே இதுதான் ஈமான்.இது தான் இஸ்லாம்.ஒரு ஊரிலே இருப்பதால் அந்த ஊரிலேயே நோய் பரவி விட்டதால் கண்டிப்பாக நமக்கு மரணம் உண்டு என்று அர்த்தம் கிடையாது,அல்லாஹ் நாடினாலே தவிர,

ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்:

«لاَ عَدْوَى»

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு நோய் இன்னொருவருக்கு தானாக தோற்றும் என்பது கிடையாது, தொற்று நோய் என்பது கிடையாது.

அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 5707.

அப்பொழுது ஒரு சஹாபி கேட்கின்றார்: அல்லாஹ்வின் தூதரே!எனக்கு ஒரு சந்தேகம் நாங்கள் பாலைவனத்திலே ஒட்டகங்களை வளர்க்கின்றோம்,துள்ளி ஓடும் புள்ளி மானை போல அந்த ஒட்டகங்கள் சுறுசுறுப்பாக இருக்கின்றன.

அப்போது எங்கிருந்தோ ஒரு ஒட்டகம் உள்ளே நுழைகிறது,நோய் பிடித்த ஒட்டகம் சொறி பிடித்த ஒட்டகம் வந்ததற்குப் பிறகு எல்லா ஒட்டகங்களும் அந்த நோயால் அந்த சொறியால் பாதிக்கப்படுகின்றன;பலவீனம் அடைந்து விடுகின்றது என்று கேட்டார்கள்.

மிக சுருக்கமாக மிகவும் அழகிய முறையிலே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அந்த கேள்வி கேட்ட சஹாபி இடத்தில் கேட்டார்கள்:

فَمَنْ أَجْرَبَ الأَوَّلَ

அந்த முதல் ஒட்டகத்திற்கு அந்த சொறி நோயை கொடுத்தவன் யார்? அந்த முதல் ஒட்டகத்திற்கு அந்த நோய் எப்படி வந்தது அவன்தான் அந்த இரண்டாவது ஒட்டகத்திற்கு அந்த நோயை கொடுத்தான். (2)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 2143, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

யாருக்கு அந்த நோய் ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்து விட்டானோ அவர்களுக்குத்தான் அந்த நோய் தீண்டுமே தவிர அது தானாக சென்று விடாது.உலகத்தில் எதுவும் தானாக நடக்காது அல்லாஹ் நாடாமல்.

ஒருவர் இந்த நோய் இவரால் தான் எனக்கு ஏற்பட்டது என்று நினைத்தால் அதுவும் ஒரு இறை நிராகரிப்பு.யாருக்கு இந்த நோயால் பாதிப்பு ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் முடிவு செய்திருக்கின்றனோ அவர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். யாரை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டானோ அவர்களை அந்த நோயால் தானாக எந்த ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு முஸ்லிம் உடைய நம்பிக்கை பலவீனப்படக்கூடாது. இந்த உள்ளத்திலே பலவிதமான அச்சங்கள் இருக்கின்றன. இந்த உள்ளம் பலவீனமானது தான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் மன்றாடிக் கொண்டே இருக்கின்றார்கள்.

يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என்னுடைய உள்ளத்தை உன்னுடைய தீனின் மீது புரட்டிவை, உன்னுடைய தீனின் மீது உறுதிப்படுத்தி வை.

அறிவிப்பாளர் : உம்மு ஸலமா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : திர்மிதி,எண் : 3522, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

ஏன் கூறினார்கள்?ஷைத்தான் எந்த அளவு குஃப்ர் உடைய நம்பிக்கைகளை ஷிர்க் உடைய நம்பிக்கைகளை இந்த உள்ளத்தில் புகுத்த முடியுமோ அந்த அளவு ஷைத்தானும் நப்சும் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். உள்ளத்திலே குப்ரை புகுத்தவதற்காக ஷிர்க்கான நம்பிக்கைகளை புகுத்துவதற்காக.

ஒரு மனிதன் அல்லாஹ்வை கொண்டுதான் எனக்கு நன்மை தீமை என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று மார்க்கம் நமக்கு வழிகாட்டியுள்ளது.

நூல் : முஸ்லிம், எண் : 8.

அல்லாஹு தஆலா நபியைப் பார்த்து கேட்கின்றான் :

وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ

அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 10 :107)

ஒரு மனிதன் நினைக்கின்றான்;எனக்கு வறுமை வந்தால் என்னவாகும்?எனக்கு இந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டால் என்னவாகும்?இந்த நோய் ஊரில் பரவுகின்றதே எனக்கு வந்து விட்டால்?என் குடும்பத்திற்கு வந்து விட்டால் செத்துவிடுவேனோ? எனக்கு என்னவாகும்? அல்லது எதிரிகள் வருகின்றார்கள் எனக்கு என்னவாகும்? நான் இருப்பேனா சாவேனா? அல்லாஹ் அல்லாதவர்களை பார்த்து இந்தவகையில் பயப்படுவதும் ஷிர்க்.

அல்லாஹ் அல்லாத வேறு ஒன்றை அது எதிரிகளாக இருக்கட்டும், நோயாக இருக்கட்டும், வறுமையாக இருக்கட்டும், ஜின் ஷைத்தானாக இருக்கட்டும், வேற எந்த ஒன்றாக இருக்கட்டும் இப்படி உள்ளத்தால் பிறர் அல்லாஹ்வை தவிர பிற வஸ்துக்களை கொண்டு உள்ளத்தால் அஞ்சி நடுங்குவது அது ஷிர்க் உடைய வகையை சேர்ந்தது.

ஒன்று, உடலால் பயப்படுவது, சபபை கண்டு பயப்படுவது. மூசா அலைஹிஸ்ஸலாம் பாம்பைப் பார்த்து பயந்தார்கள், ஓடினார்கள். இது உடல் சார்ந்த பயம், நம்பிக்கை சார்ந்த பயம் அல்ல.

ஆனால், உள்ளத்தால் அஞ்சுவது, எனக்கு என்ன ஆகிவிடுமோ அல்லாஹ் என்னை கை விட்டு விடுவானோ? எனக்கு அவ்வளவு தானே! எனக்கு துணை யாரும் இல்லையோ? என்று அல்லாஹ்வை மறந்து பயப்படுவது.

இந்த பயம் அதற்குரிய காரணம் எதுவாக இருந்தாலும் சரி, அங்கே அல்லாஹ்வை மறந்து வஸ்துக்களை பயப்படுவது இது இணைவைப்பில் கொண்டுபோய் சேர்த்துவிடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! ஷிர்க் உடைய வகைகளிலே ஒன்று அல்லாஹ்வை அஞ்சுவது போன்று வஸ்துக்களை அஞ்சுவது.

அல்லாஹ் கூறுகின்றான் :

وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ

நீங்கள் பயப்படுவதற்கு அல்லாஹ் தான் மிகத் தகுதியானவன். (அல்குர்ஆன் 33 :37)

وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

மக்களை பயப்படாதீர்கள்; என்னை பயப்படுங்கள் நீங்கள் முஃமினாக இருந்தால். (அல்குர்ஆன் 3 : 175)

ஹஷ்யா, ஹவ்ப், ரஹ்பா, தக்வா, இப்படியாக நான்கு வகையான பயங்களை அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான். பிறகு ஹுஷூஃ என்ற உள்ளத்தின் இன்னொரு அச்சத்தையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்

இப்படி ஒரு வஸ்துவை பார்த்தோ, கண்ணுக்கு எட்டாத ஒரு விஷயத்தை நினைத்தோ அல்லது மரியாதை கலந்த அல்லது ஒருவருடைய கண்ணியத்தால், உள்ளத்தால் ஏற்படக்கூடிய நடுக்கத்தால் ஏற்படக்கூடிய அச்சமாகவோ இப்படி எந்த ஒரு பயமாக இருந்தாலும் சரி அல்லாஹ்வை மறந்து பயப்படுவது ஒரு மனிதனை ஒரு முஃமினை (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!) ஷிர்கிலே குப்ரிலே தள்ளிவிடும்.

முஃமின்களை பொருத்தவரை அவர்கள் தற்காப்பிற்காக அல்லாஹ் ஏற்படுத்திய அஸ்பாபுகளை –காரணங்களை கண்டிப்பாக கையாளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

«لِكُلِّ دَاءٍ دَوَاءٌ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللهِ عَزَّ وَجَلَّ»

அல்லாஹ் ஒரு நோயை படைத்திருந்தால் அந்த நோய்க்கு உண்டான மருந்தையும் படைத்திருக்கின்றான். எனவே அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அவருடைய நோய் குணமாகிறது.

அறிவிப்பாளர் : ஜாபிர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2204.

நோய் ஏற்படும் போது அல்லாஹ் எனக்கு குணம் அளிப்பான் என்று நோய்க்குரிய மருந்தை எடுக்காமல் இருப்பது மார்க்கத்திற்கு முரணான ஒன்று. அந்த நோய்க்கு உண்டான மருந்தை எடுக்க வேண்டும்.

அந்த நோய் எதன் காரணமாக அதிகமாகலாமோ அந்தக் காரணங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

அதற்காகத்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் நோயாளி தண்ணீரை பயன்படுத்தினால் அவருக்கு நோய் அதிகரிக்கும் என்று இருந்தால் தயம்மம் செய்து கொள்வதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். (3)

அறிவிப்பாளர் : ஜாபிர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூதுஎண் : 336, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

அல்லாஹு தஆலா அனுமதி அளித்திருக்கிறான்.

فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا

நீங்கள் நோயாளியாக இருந்தால் உங்களால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால் தூய்மையான மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4 : 43)

இதெல்லாம் மார்க்கத்தின் உடைய வரையறை. ஆனால் அதே நேரத்தில் இந்த நோய் பிடித்துக் கொள்ளுமோ என்று இரவு பகலாக அந்த நோயை நினைத்துக் கொண்டிருப்பது இது குஃப்ரை ஷிர்க்கை ஏற்படுத்திவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஒரு முஃமின் அவனுடைய யகீன் அல்லாஹ்வின் மீது இருக்க வேண்டும். அல்லாஹ் என்னை குணப்படுத்துவான்; அல்லாஹ் என்னை பாதுகாப்பான்; விதியில் அல்லாஹ் நாடி இருந்தால் அல்லாஹ் நாடியது நடக்கும். அவனுடைய விதியை யாராலும் மாற்றமுடியாது.

அதேநேரத்தில் இன்று நம்மில் பலரைப் பார்க்கின்றோம் : இஸ்லாத்தை அறியாத எத்தனையோ பிற மதத்திலே உள்ளவர்கள் அல்லாஹ்வுடைய அந்த நம்பிக்கை இல்லாத காரணத்தால் அஸ்பாபுகளை நம்புகின்றார்கள்.

ஆனால், அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதை அவர்கள் நம்புவதில்லை. மருந்துகளை கண்டுபிடிப்பதில் இரவுபகலாக அவர்கள் அல்லல் படுகிறார்கள். ஆனால் இந்த நோய்க்கு உண்டான காரணம் என்ன என்பதை அவர்கள் தேடுவதில்லை.

அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அல்லாஹ்விடம் துஆ செய்வது மருந்துகளுக்கு எல்லாம் மருந்து.

முஸ்லிம்களாகிய நமக்கு (அல்ஹம்துலில்லாஹ்) அல்லாஹுத்தஆலா அந்த இல்மை -ஞானத்தை தந்திருக்கின்றான். அல்லாஹ்வுடைய வேதத்தின் மூலமாக நபியின் வழிகாட்டுதல் மூலமாக.

நம்மை சுற்றி எத்தனையோ முஸ்லிமல்லாதவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த விஷயத்தை நாம் சென்று சேர்க்க வேண்டும். அவர்களுக்கு நாம் கூற வேண்டும். அல்லாஹ்விடத்திலே கேளுங்கள். இந்த நோய்க்கு உண்டான ஷிஃபா அல்லாஹ்விடத்தில் இருக்கிறது. எனவே அவன் பக்கம் வாருங்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் நமக்கு நோய்களிலிருந்து பாதுகாப்பு தேடுவதற்கு துஆவை கற்றுக்கொடுத்தார்கள். முதலாவதாக துஆ.பிறகு தவா –மருந்து.

அல்லாஹ்விடத்தில் கேட்போம். மனித அறிவால் முடிந்த மருந்துகளை உபயோகிப்போம். நம்பிக்கை அல்லாஹ்வின் மீது நாம் கேட்ட துஆவின் மீது வைப்போம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் சொல்லிக் கொடுத்த சில துஆக்களை பார்ப்போம்.

«بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ»

உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

யார் ஒருவர் காலையிலே மூன்று முறை மாலையிலே மூன்று முறை இதை கூறுவார்களோ அவர்களுக்கு திடீரென எந்த ஒரு ஆபத்தும் நோய் நொடிகளும் முஸீபத்துகளும் அவர்களுக்கு ஏற்படாது.மாலையிலே கூறினால் காலைவரை,காலையிலே கூறினால் மாலைவரை அவர்களுக்கு எந்த முஸீபத்துகளும் ஏற்படாது.

அறிவிப்பாளர் : உஸ்மான் இப்னு அப்பான்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூது,எண் : 5088.

யார் ஒரு அடியான் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு இரவின் உடைய மாலையிலோ இந்த துஆவை மூன்று முறை கூறுவார்கள் அவர்களுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது.

இந்த இடத்திலேயே நம்முடைய உள்ளத்தின் பலவீனத்தை அல்லாஹ்விடத்திலே முறையிட வேண்டும்.

மக்களால் மிகப் பெரிய மருத்துவ நிபுணர் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த சிறந்த மருத்துவர் என்று அறியப்பட்ட ஒருவர் ஒரு நோயாளிக்கு இந்த மருந்தை சாப்பிடுங்கள்,உங்களுக்கு எதுவும் ஆகாது என்று கொடுத்தால் அந்த மருந்தின் மீது நமக்கு எவ்வளவு நம்பிக்கை வருகின்றது!

அந்த மருந்தை சாப்பிடவில்லை என்றால் ஆகா எனக்கு அந்த நோய் இருக்கின்றதே இதை அந்த மருத்துவர் கண்டிப்பாக சாப்பிட சொன்னாரே என்று எவ்வளவு பயம் மனதில் வருகின்றது!

ஒரு வஹீ இறங்காத,மறைவைப் பற்றி அறியாத எந்தவிதமான அவனுடைய அனுபவமும் அதுவும் அல்லாஹ்வை மிஞ்சி விட முடியாது. அல்லாஹ்வுடைய விதியை மிஞ்சி விட முடியாது. அந்த அனுபவமும் சில நேரங்களில் தான் பலன் தரும் என்பதை கொண்டிருக்கின்ற அந்த மருத்துவரும் அதே நம்பிக்கையில் தான் இருக்கின்றார்.

ஆனால் அந்த பலகீனமான மனிதனுடைய வார்த்தையின் மீது நமக்கு நம்பிக்கை வந்து அந்த மருந்தை சாப்பிடுவதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம்!

மருந்து சாப்பிடுவதை குற்றம் சொல்லவில்லை. பேணுதலாக மருந்தை எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அந்த நம்பிக்கை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தூதுத்துவ செய்தியை கேட்டு அவர்கள் சொன்ன அந்த துஆவின் மீது நம்பிக்கை இருக்கின்றதா?

ஒரு சாதாரண மருந்திற்கு கொடுக்கின்ற மகத்துவத்தை ஒரு மருத்துவர் மீது வைத்திருக்கக்கூடிய அந்த நம்பிக்கையை என்னுடைய நபி சொன்னார்கள்,அவர்கள் வஹி இல்லாமல் சொல்ல மாட்டார்கள்,இப்படி ஒரு துஆவை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அந்த துஆவில் தாக்கம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த துஆக்களை நாம் ஓதுகின்றோமா?

எவ்வளவு அலட்சியம் பாருங்கள்! மேற்சொன்ன இந்த துஆ என்ன கூறுகின்றது? பிஸ்மில்லாஹ் -அல்லாஹ்வுடைய பெயரைக்கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.

பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டால் அந்த இடத்தில் கடல் போன்று அர்த்தங்களை கொண்டு வரலாம். அல்லாஹ்வுடைய பெயரைக்கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன். அல்லாஹ்வுடைய பெயரைக்கொண்டு நான் என்னைக் காத்துக் கொள்கின்றேன்.

அல்லாஹ்வுடைய பெயர் எப்படிபட்டது தெரியுமா?

تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ

அல்லாஹ்வுடைய பெயர் மிகப் பரிசுத்தமானது மிக பரக்கத் பொருந்தியது. (அல்குர்ஆன் 55 :78)

அல்லாஹ்வுடைய இஸ்ம் பிஸ்மில்லாஹ் சாதாரணமானது அல்ல.அல்லாஹ்வுடைய பெயர் எதிலே கூறப்பட்டு விட்டதோ அதில் மிகப்பெரிய வல்லமை இருக்கிறது, ஆற்றல் இருக்கின்றது. அல்லாஹ்வுடைய அந்த பெயருக்கு முன்னால் ஒன்றுமே இல்லை.

وَتَبَارَكَ اسْمُكَ

யா அல்லாஹ்! உன்னுடைய பெயர் மிக பரகத் பொருந்தியது.

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு,நூல் : திர்மிதி, எண் : 242.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

«بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ»

பிஸ்மில்லா சொல்லுங்கள்.இந்தக் காலைப் பொழுதை அல்லாஹ்வுடைய பெயரைக்கொண்டு தொடங்குகின்றேன்;அல்லாஹ்வுடைய பெயரைக்கொண்டு நான் வாழ்கின்றேன்;அவன் எத்தகையவன்,இந்தப் பெயர் எத்தகையது அவனுடைய பெயரை கூறியதற்கு பிறகு இந்தப் பூமியிலோ வானத்திலோ எதுவும் எனக்கு எந்த தீங்கும் செய்துவிட முடியாது.

அறிவிப்பாளர் : உஸ்மான் இப்னு அப்பான்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூது,எண் : 5088.

ஒரு கனமான வலிமையான யாராலும் திறக்க முடியாத ஒரு பூட்டை நம்பிக்கை கொண்ட மனிதர்கள் போட்டு விட்டேன் என்று சொல்கிறார்கள்.அதன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.யாரும் இந்த பூட்டை உடைக்க முடியாது என்று சொல்கிறார்கள்.

இந்த அல்லாஹ்வுடைய பெயர்,பூட்டுகளுக்கெல்லாம் பூட்டு.பெரிய ராணுவத்தை தன்னை சுற்றி வைத்துக் கொண்டு இந்த ராணுவம் இருக்கும்போது என்னை யாரும் தீண்டி விட முடியாது என்று நினைக்கின்றார்களே இந்த அல்லாஹ்வுடைய பெயர் இராணுவங்களுக்கு எல்லாம் ராணுவம்.

பாதுகாப்பு கோட்டைகளில் மிகப் பெரிய கோட்டை அல்லாஹ்வுடைய கோட்டை.பூமியிலோ வானத்திலோ எதுவும் எந்த தீங்கும் செய்துவிட முடியாது.

அடுத்து அல்லாஹ்வுடைய அஸ்மாவுல் ஹுஸ்னாவிலே மிக முக்கியமான இரண்டு திருப்பெயர்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனை ஆராய்ச்சி செய்தால் நீங்கள் பார்க்கலாம்:سميع-சமீஃ,عليم-அலீம் என்ற இந்த இரண்டு பெயர்கள் விசேஷமாக எந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் குறிப்பாக துஆக்கள் உடைய இடங்களிலே இரண்டு திருப்பெயர்களும் வரிசையாக சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம் .

அவன் நன்கு கேட்கக் கூடியவன். அதாவது என்னுடைய பிரார்த்தனையை அவன் செவியுற்று விட்டான். அல் அலீம் என்னுடைய பிரார்த்தனையையும் தேவையையும் அவன் நன்கு அறிந்து கொண்டான்.

ஒரு சின்ன உதாரணம் : நீங்கள் ஒரு பலவீனமான மனிதர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்கு மிக பலமான உங்கள் மீது முழுமையான நேசமும் அக்கறையும் வைத்துக் கொண்டிருக்கின்ற,உங்களுக்கு ஒரு தீங்கு என்றால் உங்களுக்கு உதவுவதற்கு முழுமையான ஆற்றல் உடைய,உங்களை எதிரிகள் சூழ்ந்து கொண்டால் கை கொடுக்கக்கூடிய ஒரு அரசன் உங்களுக்கு துணை இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது நீங்கள் அழைத்த அந்தக் குரல் அந்த மன்னருக்கு சென்றுவிட்டது.அவர் என்னுடைய குரலை கேட்டு விட்டார் என்று உள்ளத்திலே அந்த அறிவு வந்துவிட்டால் எப்பேற்ப்பட்ட நம்பிக்கை அந்த அடியானுக்கு வரும் என்று யோசித்துப் பாருங்கள்.

யாருக்கு சொல்ல வேண்டுமோ நான் சொல்லிவிட்டேன். கண்டிப்பாக அவன் என்னைக் காப்பாற்ற வருவான். அவனுக்கு அந்த வலிமை இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது என்று மனம் எவ்வளவு அமைதியாக இருக்கும்!

இப்படிப்பட்ட துஆக்கள் நாவுகளிலிருந்து உள்ளத்திலிருந்து வெளியாவதில்லை.

நாம் அழைத்த ரப்பு ஸமீஃ -அவன் என்னுடைய பிரார்த்தனையைக் கேட்டு விட்டான். அல் அலீம் -என்னுடைய தேவைகளை அவன் நன்கு அறிந்து கொண்டான். என்னுடைய மவ்ளா –எஜமானன். என்னுடைய மாலிக்குள் முல்க். அல் வாஹிதுல் கஹ்கார் -யாரை யாரும் மிகைக்க முடியாதோ யார் எல்லோரையும் மிகைத்து விடுவானோ, யாருடைய கட்டளை குன் என்ற வார்த்தை இருக்கின்றதோ, அந்த ரப்பு என்னுடைய பிரார்த்தனையை கேட்டுவிட்டான்.

அவன் என்னுடைய நிலைமையை அறிந்து இருக்கின்றான்.

أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ

கருத்து : சிரமத்திலும் துன்பங்களிலும் இன்னல்களிலும் சிக்கி தவிப்பவன் அழைக்கக்கூடிய அழைப்புக்கு பதில் அளிக்கக்கூடியவன் என்னை தவிர வேறு யார்? என்று கேட்கும்போது அந்த அழைப்பை நான் அழைத்து விட்டேன் என்ற மன உறுதி இருக்கும்போது கண்டிப்பாக அல்லாஹ்வினுடைய உதவி வரும். (அல்குர்ஆன் 27 : 62)

இன்று இரண்டு நிலைகளிலே தடுமாற்றத்திலே துஆ கேட்பவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். எப்படி சொல்கிறார்கள்? துஆ கேட்டிருக்கிறேன் பார்ப்போம், துஆ செய்யணுமா? செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன். ஆனா ஒன்னும் நடக்க மாட்டேங்குது. அவரும் துஆ செஞ்சுகிட்டுதான் இருந்தாரு மவ்தா போயிட்டாரே? அவர் நல்ல துஆ கேட்டு தான் இருந்தாரு அவருக்கு இப்படி ஆயிடுச்சே!

சகோதரர்களே! அல்லாஹ்வுடைய நாட்டம் இது. ஆனால், துஆவின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை கண்டிப்பாக ஒரு முஃமினுக்கு மிக ஆழமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வை நம்பக்கூடியவர் துஆவை கைவிடமாட்டார். ஒருவன் துஆவை கேட்கவில்லை என்றால் அவன் அல்லாஹ்வை நம்பவில்லை.

எவன் தனக்கு பசி ஏற்படும்போது, ரப்பே எனக்கு உணவளி! ஒரு நோய் ஏற்படும்போது ரப்பே என்னை பாதுகாத்துக் கொள்! எனக்கு ஷிஃபாவை கொடு! எதிரிகளை பயப்படும்போது ரப்பே என்னைப் பாதுகாத்துக் கொள்! என்று ரப்பிடத்தில் கையேந்த வில்லையோ? அப்படி கையேந்தும் போது என்னுடைய ரப்பு எனக்கு உதவுவான் என்ற நம்பிக்கை இல்லையோ? அவர் அல்லாஹ்வையே நம்பவில்லை.

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். (அல்குர்ஆன் 40 : 60)

துஆ கேட்காமல்,அல்லாஹ்விடத்தில் கையேந்தாமல், கஷ்டங்களில் இன்னல்களில் சிக்கல்களில் சிரமங்களில் துன்பங்களில் நோய் நொடிகளில், எதிரிகளால் சோதிக்கப்படும் போது அழைக்காமல் இருப்பவர்களை அல்லாஹ் சொல்கின்றான் : அவர்கள் அல்லாஹ்வை வணங்கவில்லை, நரகத்தில் கேவலப்பட்டு செல்வார்கள் என்று.

ஆகவே,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களாகிய நமக்கு நிறைய துஆக்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ»

 

யா அல்லாஹ்!வென் குஷ்டத்திலிருந்து குஷ்டநோயில் இருந்தும் அதுபோன்று பைத்தியத்தில் இருந்தும் கெட்ட நோய்களிலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக!

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூது,எண் : 1554, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

சில நேரங்களிலே நோய் நமக்கு பலவீனத்தை கொடுத்து இறைவழிபாட்டை செய்யமுடியாமல் ஆக்கக்கூடிய நிலையில் இல்லை என்றால் அது நம்முடைய பாவங்களை மன்னிக்கக்கூடிய ரஹ்மத்தாக இருக்கும்.

சின்ன சின்ன காய்ச்சல் வருகிறது.தலைவலி வருகிறது.வயிற்று வலி,பல் வலி இதெல்லாம் ரஹமத் ஆக அமைந்து கொண்டே செல்லும்.

ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு இத்தகைய துஆக்களை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

ஹதீஸ் உடைய நூல்களிலிருந்து சஹீஹான புத்தகங்களிலிருந்து அந்த துஆக்களை மனப்பாடம் செய்து நாமும் ஓதுவதோடு நம்முடைய பிள்ளைகளுக்கும் அந்த துஆக்களை கற்றுக்கொடுத்து அல்லாஹ்வை பயப்படக்கூடிய அல்லாஹ்வை ஆதரவு வைக்கக்கூடிய அல்லாஹ்விடத்திலே கையேந்தக்கூடிய பழக்கத்தை கொண்டுவருவோமாக!

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்மையும் அல்லாஹ்வினுடைய அடியார்களையும் நாம் பயப்படக்கூடிய தீய நோய் நொடிகளில் இருந்தும், எல்லா விதமான கஷ்டங்களில் இருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا دَاوُدُ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ، وَزَادَ قَالَتْ: وَلَوْ كَانَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَاتِمًا شَيْئًا مِمَّا أُنْزِلَ عَلَيْهِ لَكَتَمَ هَذِهِ الْآيَةَ: {وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ} [الأحزاب: 37[، (صحيح مسلم -177)

குறிப்பு 2)

حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُمَارَةَ بْنِ القَعْقَاعِ قَالَ: حَدَّثَنَا أَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا صَاحِبٌ لَنَا، عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا يُعْدِي شَيْءٌ شَيْئًا»، فَقَالَ أَعْرَابِيٌّ: يَا رَسُولَ اللَّهِ، البَعِيرُ [ص:451] أَجْرَبُ الْحَشَفَةِ نُدْبِنُهُ، فَتَجْرَبُ الْإِبِلُ كُلُّهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ أَجْرَبَ الأَوَّلَ؟ لَا عَدْوَى وَلَا صَفَرَ، خَلَقَ اللَّهُ كُلَّ نَفْسٍ وَكَتَبَ حَيَاتَهَا وَرِزْقَهَا وَمَصَائِبَهَا»: وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَابْنِ عَبَّاسٍ، وَأَنَسٍ وسَمِعْت مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ صَفْوَانَ الثَّقَفِيَّ البَصْرِيَّ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ المَدِينِيِّ، يَقُولُ: لَوْ حَلَفْتُ بَيْنَ الرُّكْنِ وَالمَقَامِ لَحَلَفْتُ أَنِّي لَمْ أَرَ أَحَدًا أَعْلَمَ مِنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ (سنن الترمذي 2143 -]حكم الألباني] : صحيح

குறிப்பு 3)

سنن أبي داود 336 - حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ خُرَيْقٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ قَالَ: خَرَجْنَا فِي سَفَرٍ فَأَصَابَ رَجُلًا مِنَّا حَجَرٌ فَشَجَّهُ فِي رَأْسِهِ، ثُمَّ احْتَلَمَ فَسَأَلَ أَصْحَابَهُ فَقَالَ: هَلْ تَجِدُونَ لِي رُخْصَةً فِي التَّيَمُّمِ؟ فَقَالُوا: مَا نَجِدُ لَكَ رُخْصَةً وَأَنْتَ تَقْدِرُ عَلَى الْمَاءِ فَاغْتَسَلَ فَمَاتَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْبِرَ بِذَلِكَ فَقَالَ: «قَتَلُوهُ قَتَلَهُمُ اللَّهُ أَلَا سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ، إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ وَيَعْصِرَ - أَوْ» يَعْصِبَ «شَكَّ مُوسَى - َعلَى جُرْحِهِ خِرْقَةً، ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ»]حكم الألباني] : حسن دون قوله إنما كان يكفيه

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/