HOME      Khutba      சோதனையில் முஸ்லிமின் குணம்! அமர்வு 1 | Tamil Bayan - 717   
 

சோதனையில் முஸ்லிமின் குணம்! அமர்வு 1 | Tamil Bayan - 717

           

சோதனையில் முஸ்லிமின் குணம்! அமர்வு 1 | Tamil Bayan - 717


சோதனையில் முஸ்லிமின் குணம் அமர்வு 1
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனையில் முஸ்லிமின் குணம்
 
வரிசை : 717
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 13-05-2022 | 11-10-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ரப்புல் ஆலமின் நமக்கு ஆறுதல் சொல்கிறான்.
 
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (156) أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
 
(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் ‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்'' எனக் கூறுவார்கள். அவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து (மன்னிப்பும்) புகழுரைகளும் கருணையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தான் நேரான வழியையும் அடைந்தவர்கள். (அல்குர்ஆன் 2 : 155-157)
 
வசனத்தின் கருத்து : நபியே! நீங்கள் அந்த முஃமின்களை சந்தோஷப்படுத்துங்கள். அவர்களை கவலையில் இருந்து துக்கத்திலிருந்து நீங்கள் மீட்டு எடுங்கள்.
 
அல்லாஹ் உடைய நற்கூலியின் மீது அவர்களுக்கு ஆசையூட்டுங்கள். அவர்களது உள்ளத்தை பலப்படுத்துங்கள். அவர்களது நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள். 
 
அந்த மூஃமின்கள் யார்? அவர்கள்தான் பொறுமையானவர்கள், அவர்கள்தான் நிலைகுலையாதவர்கள், அவர்கள்தான் இந்த மார்க்கத்தில் உறுதியானவர்கள்.
 
எந்த சோதனை ஏற்பட்டாலும். நாங்கள் வணங்கக் கூடிய அந்த பரிசுத்தமான இறைவன் அல்லாஹ் ஒருவன் தான், அவனைத் தவிர நாங்கள் யாரையும் எதையும் வணங்க மாட்டோம் என்ற ஏகத்துவக் கொள்கையிலும் பிறகு அவனுடைய மார்க்கத்திலும் உறுதியாக இருப்பவர்கள்.
 
சோதனைகள் அவர்களுடைய இறை நம்பிக்கையை அதிகப்படுத்துமே தவிர, அவர்களது நம்பிக்கையில் பலவீனத்தை ஏற்படுத்திவிடாது. சிரமங்களும், துன்பங்களும், வறுமைகளும், இன்னல்களும், எதிரிகளின் தாக்குதல்களும், அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருக்கக்கூடிய அன்பையும் மன உறுதியையும் மறுமையின் மீது அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த பற்றையும் அதிகபடுத்துமே தவிர, அந்த நம்பிக்கையில் சிறிதளவு கூட தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடாது. 
 
அல்லாஹ் சொல்கிறான்; அந்தப் பொறுமையாளர்களுக்கு நபியே! நீங்கள் நற்செய்தி சொல்லுங்கள் என்று. 
 
ஏனென்றால்? நாவால் மட்டும் தங்களை முஃமின்கள் என்று சொல்பவர்களும் மக்களில் இருக்கிறார்கள்.
 
அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
 
وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ (8) يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ (9) فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
 
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டோம் எனக் கூறுபவரும் மக்களில் உண்டு. அவர்களோ நம்பிக்கையாளர்களே இல்லை. (அவர்கள்) அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் வஞ்சிக்கின்றனர். தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க மாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள். அவர்களின் உள்ளங்களில் ஒரு நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் நோயை அதிகப்படுத்தினான். அவர்கள் பொய் கூறுபவர்களாக இருந்த காரணத்தால் துன்புறுத்தக்கூடிய வேதனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 2 : 8-10)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ
 
மனிதரில் பலர் (மதில்மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்களை ஒரு நன்மை அடைந்தால் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22 : 11)
 
அல்லாஹ்வை வணங்கக் கூடியவர்கள் பலவிதமாக இருக்கிறார்கள். அவர்களில் ஒரு கூட்டம், ஒரு ஓரத்தில் அல்லாஹ்வை வணங்குகிறார்கள். நம்பிக்கையின் ஒரு ஓரத்தில் இருப்பார்கள்.
 
அவர்களின் வணக்க வழிபாட்டுக்கு பிறகு, அவர்களுக்கு செல்வம் கிடைத்தால், மகிழ்ச்சி கிடைத்தால் அவர்கள் விரும்பியது நிறைவேறினால் ரொம்ப திருப்தியாக இருப்பார்கள், சந்தோஷமாக இருப்பார்கள், அல்லாஹ்வைப் புகழ்வார்கள்.
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ (15) وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
 
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான். ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான். (அல்குர்ஆன் 89 : 15-17)
 
கொஞ்சம் சோதனை ஏற்பட்டு விட்டால், எதிரிகளின் புறத்திலிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால், சில இன்னல்கள் உயிர் சேதங்கள் ஏற்பட்டால், அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுகிறார். துன்யாவிலும் இவன் நஷ்டவாளி. மறுமையிலும் இவன் நஷ்டவாளி. (அல்குர்ஆன் 22 : 11)
 
இந்த உலகத்தில் யார் சோதிக்கப் படவில்லை? நபிமார்கள் சோதிக்கப்பட வில்லையா? அந்த நபிமார்களுடைய காலத்தில் வாழ்ந்த உறுதியான முஃமின்கள் சோதிக்கப்பட வில்லையா?
 
வாழ்க்கையில் நெருக்கடி என்பது காஃபிர்களுக்கு ஏற்படவில்லையா? எல்லோருக்கும் சோதனை இருக்கிறது. இந்த உலகத்தில் கண்டிப்பாக சோதனைகளில் சோதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. 
 
நமக்கு நபிமார்களில் அழகிய படிப்பினை இருக்கிறது. அவர்களைப் பின்பற்றிய நல்ல முஃமின்களில் நமக்குப்‌ அழகிய படிப்பினை இருக்கிறது. 
 
இந்த சோதனை நமக்கு அல்லாஹ்வுடைய நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். நம்முடைய வணக்க வழிபாட்டில் இன்னும் பரிசுத்தத்தை, இன்னும் ஈடுபாட்டை, இன்னும் அதிகமான தீவிரத்தை அதிகபடுத்த வேண்டும். நம்மை துஆவில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
 
நம்மை தவக்குல் ‌உடைய‌ உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்த வேண்டும். அல்லாஹ் மீது நம்பிக்கை வைப்பது. அந்த உறுதி இன்னும் அதிகமாக வேண்டும். இன்னும் ஆழமாக வேண்டும். 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُمْ بِالْحَقِّ إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى (13) وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَنْ نَدْعُوَ مِنْ دُونِهِ إِلَهًا لَقَدْ قُلْنَا إِذًا شَطَطًا
 
(நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கைகொண்ட வாலிபர்களாவர். (ஆகவே,) மேலும், நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம். 
 
அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று ‘‘வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத் தவிர (வேறொருவரையும் வணக்கத்திற்குரிய) இறைவனாக  நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அப்படி அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்றார்கள்.  (அல்குர்ஆன் 18 : 13,14)
 
அல்லாஹ் எவ்வளவு சந்தோஷப் பட்டான்! அந்த வாலிபர்கள் அல்லாஹ்விற்கு எவ்வளவு பிரியமானவர்களாக ஆகிவிட்டார்கள்!
 
இவர்கள் அல்லவா நான் விரும்பக்கூடிய அந்த வாலிப கூட்டம். இவர்களுக்கு ஈமானை நான் அதிகப்படுத்தினேன்.
 
என்னை நம்பிக்கை கொண்டார்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகப்படுத்தினோம். அவர்கள் உள்ளங்களை நாம் பலப்படுத்தினோம்‌ என்று அல்லாஹு தஆலா போற்றிப் புகழ்ந்து சொல்கிறான்.
 
நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்; இந்த வரலாறுகள் நமக்கு வெறும் தொழுகையில் ஓதப்படுவதற்க்கு அல்லது வரலாறுகளாக படித்துவிட்டு சென்று விடுவதற்கு மட்டும் நமக்கு போதிக்கப்படவில்லை.
 
ஒரு முஃமினுடைய உள்ளம் அல்லாஹ்வின் தொடர்பின் பக்கம் திரும்ப வேண்டும். உலகத்தில் சோதனைகள் நடக்கும் பொழுது, இந்த சோதனைகள் எல்லாம் அவர்களுக்குத்தான், நமக்கு இல்லை என்று நாம் அலட்சியமாக, பயம் அற்றவர்களாக, அந்த ஈமானிய கவனம் அற்றவர்களாக இருந்து விடக்கூடாது.
 
உலகத்தில் எந்த பாகத்தில் முஃமின்களுக்கு சோதனை ஏற்பட்டாலும் அது எனக்கு ஏற்பட்ட சோதனையை போன்று உணர்ந்து, அதற்காக வருத்தப்பட்டு, அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, தவ்பா இஸ்திக்பார் செய்ய வேண்டும்.
 
யா அல்லாஹ்! அந்தக் கடினமான சோதனையிலிருந்து. நீ எனக்கு ஆஃபியத்தை கொடுத்தாய் என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து, என்னுடைய முஸ்லிமான சகோதரனுக்கு  யா அல்லாஹ்!  அவனுக்கு நீ உதவி செய்வாயாக! அவனை இரட்சிப்பாயாக!
 
وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا
 
அந்த பாதிக்கப்பட்டவனுக்கு சார்பாக எங்களுக்கு அநியாயம் செய்தவரிடத்தில் இருந்து நீ எங்களுடைய பழி தீர்ப்பாயாக! என்று அல்லாஹ்விடத்தில் முஃமினுடைய கை உயர வேண்டும். அவன்தான் உண்மையான முஃமின். (1)
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3502.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் உடைய அழகிய வழிமுறையை கவனியுங்கள்.
 
அரபு பிரதேசத்தில் எங்கு சோதனை ஏற்பட்டாலும் உடனே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்களின் கை வானத்தை நோக்கி உயர்ந்து விடும். 
 
குறைஷிகளிடத்தில் சிக்கிக்கொண்ட அந்த முஃமின்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் துஆ செய்கிறார்கள். 
 
اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَالمُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ
 
யா அல்லாஹ்! வலீத் இப்னு வலீதை பாதுகாத்துக் கொள்! அய்யாஷை பாதுகாத்துக் கொள்! இன்னும் முஃமின்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்துக்கொள்! என்று அந்த தோழர்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கையேந்துகிறார்கள். (2)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 804, 1006, 2932.
 
நம்முடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய ஈமானில் பலவீனம், நம்முடைய அலட்சியம், நம்முடைய கவனமின்மை, இன்னும் நம்மிடத்தில் இருக்கக்கூடிய பாவ அழுக்குகள் நம்முடைய உள்ளங்களை எந்த அளவிற்கு உணர்வற்றதாக கவலையற்றதாக ஆக்கிவிட்டது என்றால், ஒன்று அந்த சோதனைகள் பூமியில் பலபகுதிகளில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பொழுது, நமக்கெல்லாம் அப்படி ஏற்படாது, நாமெல்லாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பெருமையோடும் நன்றிகெட்ட தனத்தோடும் சொல்லக்கூடிய அளவுக்கு அவனை வைத்திருக்கிறது. 
 
இன்னொரு பக்கம், அந்த முஃமினுக்காக அல்லாஹ்விடத்தில் ஒரு துஆவை கூட முற்படுத்தாமல், தனது கையை கூட அல்லாஹ்விடத்தில் உயர்த்தாமல் அலட்சியமாக சென்று விடுகிறான்.
 
இத்தகைய சகோதரத்துவத்தையா, இத்தகைய ஈமானிய பிடிப்பையா, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிமாகிய நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்? 
 
" مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ، وَتَرَاحُمِهِمْ، وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
 
முஃமின்கள் எல்லாம் ஓர் உடலை போன்றவர்கள். அந்த உடலுடைய ஒரு உறுப்புக்கு வலி ஏற்பட்டால், உடலுடைய எல்லா பகுதிகளுமே விழித்திருக்கின்றன. உடலுடைய எல்லா பகுதிகளுமே அந்த வலியை உணர்கின்றன. காய்ச்சலாலும், விழித்திருத்தளாளும் உடலுடைய எல்லா பகுதிகளுமே அந்த துக்கத்தில் பங்கு கொள்கின்றன. 
 
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2586.
 
இப்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். இன்று, நம்முடைய நிலையை நினைத்துப் பாருங்கள்.
 
ஒரு முஃமின் அப்படி இருக்க முடியாது. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின் சோதனைகளில் அல்லாஹ்வின் பக்கம் நெருங்க கூடியவனாக, அல்லாஹ்வின் மீது தனது நம்பிக்கையை, தவக்குலை, அதிகப்படுத்தக் கூடியவனாக, துஆவை அதிகப்படுத்த கூடியவனாக இருக்க வேண்டும்.
 
இந்த சோதனைகள் எப்படி நமக்கு இலகுவாகும்? இந்த சோதனைகளில் நாம் எப்படி வெற்றி காண முடியும்?
 
முதலாவதாக, இந்த துஆவை அல்லாஹு தஆலா நமக்கு சொல்லிக் காட்டுகிறான்; இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூற வேண்டும். (அல்குர்ஆன் 2 : 156)
 
நம் வீட்டில் ஒருவர் இறந்து விட்டால் மட்டும் சொல்லக் கூடிய துஆ அல்ல இது. சிலர், அப்படித்தான் நினைத்து வைத்திருக்கிறார்கள். 
 
ஒரு முஸ்லிம் அடிபட்டாலோ, துன்பப்பட்டாலோ, அவனுக்கு ஒரு துக்கம் ஏற்பட்டாலோ உடனே இதை நாம் ஓதவேண்டும்.
 
செத்துப்போனால் தான் இதை ஓத வேண்டும் என்று சிலர் எண்ணி வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படி  இல்லை. 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது வீட்டில் ஒரு முறை திடீரென்று விளக்கு அணைந்துவிட்டது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொன்னார்கள்.
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! இதற்குமா? என்று.
 
«كُلُّ مَا سَاءَ الْمُؤْمِنَ فَهُوَ مُصِيبَةٌ»
 
ஆம், இதுவும் ஒரு முஸீபத். முஃமினுக்கு எதுவெல்லாம் கஷ்டத்தை ஏற்படுத்துமோ அதுவும்  முஸீபத் என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : இம்ரான் அல்கஸீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்மராஸீல் லிஅபீ தாவூத், எண் : 412.
 
இப்படி உலகத்தில் என்ன சோதனை ஏற்பட்டாலும் சரி, இந்த துஆவை அடியார்கள் முதலாவதாக சொல்ல வேண்டும். 
 
அந்த சோதனையில் சிக்கி இருப்பவர்களும் சரி, அந்த சோதனையை கேள்வி படுபவர்களும் சரி, (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்து கையேந்தும் போது கண்டிப்பாக அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அந்த சோதனையிலிருந்து அவர்களுக்கு அழகிய விடுதலையை அழகிய பாதுகாப்பை ஏற்படுத்துவான்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூற, தான் கேட்டதாக உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள். 
 
" مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ، فَيَقُولُ مَا أَمَرَهُ اللهُ: {إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ} اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا، إِلَّا أَخْلَفَ اللهُ لَهُ خَيْرًا مِنْهَا "
 
எந்த ஒரு முஸ்லிம்காக இருக்கட்டும், அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், அல்லாஹ் ஏவியதை அவன் கூறிவிட்டால், இன்னா இலைஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறி, பிறகு, யா அல்லாஹ்! என்னுடைய இந்த சோதனையில் எனக்கு நற்கூலியை தருவாயாக!
 
இதை விட சிறந்ததை எனக்கு பகரமாக ஏற்படுத்திக் கொடு என்று துஆ செய்தால் கண்டிப்பாக அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அந்த சோதனையில் இருந்து அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு சிறந்ததை ஏற்படுத்திக் கொடுப்பான்.
 
பிறகு, உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறார்கள், அபூ ஸலமா இறந்ததற்குப் பிறகு நான் என்குள் கூறிக் கொண்டேன்.
 
இப்போது இருக்கக்கூடிய இந்த முஸ்லிம்களில், அபூ ஸலமாவை விட யார் இருக்க முடியும், நான் திருமணம் முடித்துக் கொள்வதற்கு? அந்த கருத்தில் அவர்கள் சொல்லும் பொழுது. ரசூலுல்லாஹ்வின் பக்கம் ஹிஜ்ரத் செய்த முதல் குடும்பத்தார்கள் ஆயிற்று. என்று அபூ ஸலமாவை நினைத்து பெருமை பட்டு சொன்னார்கள்.
 
பிறகு நான் இந்த துஆவை கூறினேன். அல்லாஹ் எனக்கு அவரை விட சிறந்த ரசூலை பகரமாக கொடுத்தான்.
 
அறிவிப்பாளர் : உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 918.
 
இதுதான் அந்த சஹாபாக்களும், இன்று முஸ்லிம்களாகிய நமக்கும் இடையே உள்ள வித்தியாசம். அந்த நல்லோர்களின் வாழ்க்கை வரலாறை அறிந்து, அவர்களின் பாதைகளில் செல்லக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!
 
குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் ஒருவிதமான சந்தேகம். அல்லாஹ் சொன்ன படி இப்படி செய்தால், நமக்கு வெற்றி கிடைத்து விடுமா?
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறை முதலாவது சரியாகப் படிப்பதே இல்லை. அப்படியே படித்தாலும், தங்களுடைய இயக்க கண்களோடு படித்துவிட்டு, அதற்கேற்ப அந்த சீராவை சாயம் பூசி விட்டு திரிப்பவர்கள் இருக்கிறார்களே தவிர, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறை பின்பற்றி, சமூதாயத்தின் மாற்றத்தை தேடக்கூடியவர்கள், சமுதாயத்தின், முன்னேற்றத்தை தேடக் கூடியவர்கள், வெற்றியின் பாதையை தேடக் கூடியவர்கள் மிகக் குறைவு தான்.
 
அப்படி யாராவது சொன்னாலும், இதெல்லாம் அந்தக் காலத்துக்கு, நம்ம காலத்துக்கு ஒத்துவராது என்று சொல்வார்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை புறக்கணிப்பவர்கள், அவர்கள் வழிமுறையை எதிர்ப்பவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.
 
இப்படிப்பட்டவர்கள், எப்படி இந்த துஆவை சொல்ல முடியும்? தங்களுடைய அறிவை, தங்களுடைய சிந்தனையை ரசூலுல்லாஹ் உடைய வழிகாட்டுதலை விட சிறந்ததாக நினைத்திருக்கக்கூடிய இந்த கூட்டம் எப்படி வெற்றி பெற முடியும்? 
 
அல்லாஹ்வின் தூதருக்கு முழுமையாக கீழ்ப்படியாத வரை, வெற்றி என்பது அறவே இல்லை.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இந்த சோதனையில் எத்தகைய நன்மைகளை வைத்திருக்கிறான்? என்பதை நாம் தெரிந்து, அந்த ஆதரவோடு இருக்க வேண்டும்.
 
பதட்டப்படாமல், தடுமாறி விடாமல், குழப்பம் அடையாமல், அல்லாஹ் எனக்கு கொடுத்திருக்கின்ற இந்த சோதனையில், கண்டிப்பாக சில நன்மைகள் இருக்கலாம். என்னுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். என்னை அல்லாஹ் சோதிக்கிறான். நான் பொறுமையாக இருப்பேன் என்று அந்த உறுதி நமக்கு இருக்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:
 
«مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ وَصَبٍ، وَلَا نَصَبٍ، وَلَا سَقَمٍ، وَلَا حَزَنٍ حَتَّى الْهَمِّ يُهَمُّهُ، إِلَّا كُفِّرَ بِهِ مِنْ سَيِّئَاتِهِ»
 
முஃமினுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால், களைப்பு சோர்வு ஏற்பட்டால், நோய் ஏற்பட்டால், கவலை ஏற்பட்டால், அவனுக்கு மனதில் ஏற்படக் கூடிய சில வகையான சஞ்சலங்களாக இருந்தாலும் கூட, அல்லாஹு தஆலா அதன் மூலமாக அவன் பாவங்களை எல்லாம் போக்கி விடுகிறான். முஸ்லிமுக்கு எந்த சோதனை ஏற்பட்டாலும், அல்லாஹு தஆலா அந்த சோதனையை இந்த முஃமினுக்கு கஃப்பாராவாக -பாவப்போக்கியாக ஆக்கி விடுகின்றான். அவனுடைய காலில் தைக்கக்கூடிய ஒரு முள்ளாக இருந்தாலும் கூட.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2572.
 
இப்படி சில ஒழுக்கங்கள் இருக்கின்றன. அடுத்து ஜும்ஆவில் பார்ப்போம். இந்த அடிப்படையை நாம் புரிய வேண்டும். இந்த சோதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் அழகிய விடுதலையை தேடுவதோடு, அழகிய பொறுமையோடு இருப்பதோடு, இந்த சோதனையில் உறுதியாக இருக்க வேண்டும். 
 
இந்த சோதனையில் அல்லாஹ் எனக்கு ஆறுதலை வைத்திருக்கிறான் என்று, அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவர்களாக, ஆஃபியத்தாக கழிந்த நாட்களை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக, அந்த சோதனையில் சிக்கிய முஃமின்கள் முஸ்லிம்களுக்காக, அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பை வேண்டியவர்களாக இருக்க வேண்டும். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா உங்களுக்கும் எனக்கும் உறுதியான ஈமானை இக்லாசை தந்தருள்வானாக! நம் பாவங்களை மன்னித்து, அல்லாஹ் விரும்பிய நல்லோரில் நம்மை ஆக்கியருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ: «اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ اليَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا، وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا».: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ (سنن الترمذي- 3502) [حكم الألباني] : حسن
 
குறிப்பு 2)
 
قَالاَ: وَقَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: " وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، يَدْعُو لِرِجَالٍ فَيُسَمِّيهِمْ بِأَسْمَائِهِمْ، فَيَقُولُ: اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَالمُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ " وَأَهْلُ المَشْرِقِ يَوْمَئِذٍ مِنْ مُضَرَ مُخَالِفُونَ لَهُ (صحيح البخاري- 804) 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/