HOME      Khutba      வெற்றி வேண்டுமா? | Tamil Bayan - 718   
 

வெற்றி வேண்டுமா? | Tamil Bayan - 718

           

வெற்றி வேண்டுமா? | Tamil Bayan - 718


வெற்றி வேண்டுமா?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : வெற்றி வேண்டுமா?
 
வரிசை : 718
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 27-05-2022 | 25-10-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் என்றென்றும் நிலவட்டும் என்று வேண்டியவனாக! 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு வேண்டியவனாக சொர்க்கத்தை வேண்டியவனாக நரகத்திலிருந்து பாதுகாப்பை வேண்டியவனாக அல்லாஹ்வுடைய அன்பையும் திருப்பொருத்தத்தையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் அல்லாஹ்வுடைய பயம் மட்டும்தான் நிச்சயமாக ஈடேற்றத்திற்கான வழி என்ற அல்லாஹ்வுடைய உபதேசத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்தக் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
இந்த உலகத்தில் முஸ்லிம்கள் புதிதாக எந்த சோதனைகளையும் அவர்கள் பார்க்கவில்லை. எந்த சோதனைகளை இன்று நாம் சந்திக்கின்றோமோ, இதே சோதனைகளை இதைவிட அதிகமாக இதைவிட கடினமாக நம்முடைய முன்னோர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
 
ஆனால், அவர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் அழகிய பொறுமையோடு இருந்தார்கள். அந்த சோதனை காலங்களில் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்கள். தங்களுடைய மார்க்க நிலைப்பாட்டை அவர்கள் சரி செய்து கொண்டார்கள்.
 
தங்களை சீர்திருத்தம் செய்து கொண்டார்கள். தங்களுடைய இறைநம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். தங்களுடைய மார்க்கப்பற்றை அதிகப்படுத்திக் கொண்டார்கள். அல்லாஹ்விற்கும் தங்களுக்கும் இடையில் உண்டான அந்த தொடர்பை சரி செய்து கொண்டார்கள். பாவங்களை விட்டு விலகினார்கள்.
 
அல்லாஹு தஆலா அவர்களைப் பாதுகாத்தான். இப்படித்தான் நம்பிக்கை கொண்டவர்களை நாம் பாதுகாப்போம்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
 
உண்மையான முஃமின்களுக்கு இப்படித்தான் நாம் நற்கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 12 : 22)
 
அல்லாஹு தஆலா அவர்களை வாழ்த்தி அவர்களுடைய வரலாறுக்கு பிறகு, நமக்கு படிப்பினையை சொல்கிறான். 
 
பொதுவாக மக்கள் சொல்வார்கள்; காலம் கெட்டுருக்கிறது என்று. காலம் ஒரு போதும் கெடவில்லை. அந்தக்காலத்தில் வாழ்கிற மனிதர்கள்தான் கெட்டுருக்கிறார்கள். அவர்களுடைய இறை நம்பிக்கை பலவீனப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய மார்க்கப்பற்றில் தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
 
அவர்களுடைய இறை நினைவு அவர்களுடைய தொழுகை அவர்களுடைய இறையச்சம் இப்படியாக இந்த தீன் அவர்களிடத்தில் பலவீனமடைந்து இருக்கின்ற காரணத்தால் இந்த சோதனையில் இருந்து எப்படி விடுதலை பெறுவது? சோதனையிலிருந்து எப்படி வெளியாகுவது? என்று தெரியாமல் நாம் கைவிடப்பட்டு விட்டோமோ!
 
நமக்கு ஆதரவு அளிப்பவர்கள் யாரும் இல்லையோ! நமக்கு அல்லாஹ்வுடைய உதவி வராதோ! என்றெல்லாம் எண்ணக்கூடிய பலவீனப் படக்கூடிய நிலையை இன்று நம்மில் பலரிடத்தில் பார்க்கிறோம்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சூரா அல் மாயிதா 12-வது வசனத்தில்  இஸ்ரவேலர்களுக்கு செய்த உபதேசத்தை நமக்கு நினைவூட்டுகிறான்.
 
இந்த இஸ்ரவேலர்கள் நபிமார்களின் வாரிசுகள். இஸ்ராயில் என்பது யஅகூப் மற்றும் அந்த பரிசுத்தமான ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்த இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய மகனுடைய மகனார் பேரன். அவர்களுடைய வம்சத்தில் வந்தவர்கள் தான். இந்த பனு இஸ்ராயில். இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.
 
ஆனால், இவர்கள் எப்போது தங்களுடைய நபிமார்களின் கட்டளைகளுக்கு வழிகாட்டுதலுக்கு மாற்றமாக சென்றார்களோ, உலத்தின் மீது மோகம் கொண்டார்களோ, நன்மையை ஏவி தீமையை தடுப்பதை விட்டார்களோ, ஆசாபாசங்கள் மன இச்சைகளின் பக்கம் அவர்கள் நாட்டம் கொண்டார்களோ, அல்லாஹு தஆலா அவர்களை சோதித்தான்.
 
அந்த சோதனை இன்று நாம் சந்திக்கின்ற சோதனைகளை விட மிக மிக அதிகமான சோதனை. மிகக் கடுமையான சோதனை. மிக நீண்ட கால சோதனை.
 
ஆனால், அந்த இஸ்ரவேலர்களுடைய அழகிய முடிவை பற்றி அல்லாஹ் சொல்கிறான்:
 
وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ
 
இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம். (அல்குர்ஆன் 7 : 137)
 
இது முடிவு. இதற்கு முன்னால் என்ன நடந்தது? அவர்கள் எப்படிப்பட்ட சோதனையின் உச்சத்தில் சென்றார்கள் என்பதை அல்லாஹு தஆலா சொல்லிக்காட்டுகிறான்:
 
قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (128) قَالُوا أُوذِينَا مِنْ قَبْلِ أَنْ تَأْتِيَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا قَالَ عَسَى رَبُّكُمْ أَنْ يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ
 
(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார்.
 
(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகிறோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) ‘‘உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்கள் நடத்தை எவ்வாறு இருக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான்'' என்று கூறினார். (அல்குர்ஆன் 7 : 128-129)
 
வானத்தின் உதவிக்கு என்று தனி இலக்கணம் இருக்கிறது. அது மனிதர்கள் செய்யக்கூடிய  உதவியின் இலக்கணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதுதான் அல்லாஹ்வுடைய உதவி. 
 
அல்லாஹு தஆலா எப்போது அதை இறக்குவான்? எப்படி இறக்குவான்? யார் மூலமாக இறக்குவான்? என்பதை அல்லாஹ் அறிந்தவன்.
 
அவன் ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்து இருக்கிறான். அந்த நேரம் வரை நீங்கள் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ
 
நபியே! நீ பொறுமையாக இரு. அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானது. (அல்குர்ஆன் 30 : 60)
 
அதைத்தான், மூஸா அலைஹி வஸ்ஸலாம் தன் மக்களுக்கு இங்கு சொல்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள். அல்லாஹ்விடம் ஓடி வாருங்கள். உங்களுக்கு ஆறுதல் அளிப்பவன் ஆதரவு அளிப்பவன் பாதுகாப்பு அளிப்பவன். (அல்குர்ஆன் 7 : 128)
 
அல்லாஹ்விடத்தில் வந்த பிறகு கொல்லப்பட்டால் சொர்க்கம் நமக்கு உறுதி. அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்.
 
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (51) قُلْ هَلْ تَرَبَّصُونَ بِنَا إِلَّا إِحْدَى الْحُسْنَيَيْنِ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ أَنْ يُصِيبَكُمُ اللَّهُ بِعَذَابٍ مِنْ عِنْدِهِ أَوْ بِأَيْدِينَا فَتَرَبَّصُوا إِنَّا مَعَكُمْ مُتَرَبِّصُونَ
 
 (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் இறைவன்'' என்று நீர் கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும். (நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்மையே ஆகும்.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கிறோம். (அல்குர்ஆன் 9 : 51,52)
 
இதைதான் மூஸா அலைஹிஸ்ஸலாம் இங்கு சுட்டிக் காட்டுகிறார்கள்; அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் அல்லாஹ்விடம் வந்து விடுங்கள். உங்களது நம்பிக்கையை உங்கள் மார்க்கபற்றை சரி செய்யுங்கள். 
 
உங்களுடைய வாழ்க்கையில் ஹலால் ஹராமை நீங்கள் சீர்திருத்தி பாருங்கள். உறுதியாக இருங்கள். நிலைகுலையாமல் இருங்கள். 
 
இந்த ஈமான் எப்படி அதிகரிக்கிறது? இந்த இபாதத் எப்படி சுத்தமடைகிறது? உள்ளம் எப்படி பரிசுத்தம் அடைகிறது? என்ற அந்தப் பரிசுத்தத்தை நோக்கி அந்த தர்பியாவை நோக்கி அந்த தஸ்கியாவை நோக்கி நீங்கள் வாருங்கள். 
 
ஏன் தெரியுமா? இந்த பூமி அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அவன் யாருக்கு நாடுகின்றானோ, அவர்களுக்கு அதை கொடுப்பான். ஆனால், முடிவு தக்வா உள்ளவர்களுக்கு. தக்வா இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. 
 
எல்லாம் இருந்து, இந்த தக்வா இல்லை என்றால், எல்லாம் வீணானது. இந்த தக்வா ஒன்றை நம்பிக்கையாளர்கள் எடுத்துக்கொண்டால் அவர்களின் இம்மையின் காரியம் சீர் பெற்றது; அவர்களின் மறுமையின் காரியமும் சீர் பெற்றது. 
 
அப்போது அந்த இஸ்ரவேலர்கள் இப்படி சொன்னார்கள்; மூஸா நீங்கள் வருவதற்கு முன்பிருந்தே நாங்கள் ஃபிர்அவ்னால் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வந்ததற்க்குப் பிறகும் அதே நிலை தொடர்கிறதே!
 
மூஸா அலைஹி வஸ்ஸலாம் சொன்னார்கள்: சமுதாயமே! உங்களது இறைவன் விரைவில் உங்களது எதிரிகளை அழிப்பான். பூமியில் உங்களுக்கு ஆட்சியை கொடுப்பான். உங்களுடைய அமல் எப்படி இருக்கிறது? என்று அவன் கண்டிப்பாக பார்க்கத்தான் போகிறான். (அல்குர்ஆன் கருத்து : 7 : 128,129)
 
இங்கேதான் நம்முடைய ஈமானுடைய‌ பலவீனம் வெளிப்படுகிறது. சோதனையில் இருக்கும் போது, அல்லாஹ்வை நினைப்பது. கஷ்டத்தில் இருக்கும்போது, அல்லாஹ் கைவிட்டு விட்டானா? என்று சொல்வது.
 
எப்போது செல்வம் வருகிறதோ வசதி வருகிறதோ நிம்மதி வருகிறதோ பாதுகாப்பான வாழ்க்கை வருகிறதோ அல்லாஹ்வை மறந்து விட்டு, உலக ஆசாபாசங்களில் மூழ்கி, வணக்க வழிபாடுகளை வீணாக்குவது. அல்லாஹ்வை விட்டு தூரமாகி விடுவது.
 
அல்லாஹ் நமக்கு நிம்மதியை பாதுகாப்பை கொடுக்கவில்லையா? அல்லாஹ் நமக்கு வாழ்க்கையில் வாழ்வாதாரத்தை செல்வ செழிப்பை உயர்வை கண்ணியத்தைக் கொடுத்திருக்கவில்லையா? எல்லாம் கொடுத்திருந்தான். அதற்கு நாம் நன்றி செலுத்தினோமா?
 
அல்லாஹ் கேட்கிறான்:
 
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
 
உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அல்குர்ஆன் 14 : 7)
 
இது அல்லாஹ்வுடைய முடிவு. நன்றியுள்ளவர்களாக இருக்கும்பொழுது அல்லாஹ் அந்த நிஃமத்தை நம்மிடமிருந்து எடுக்க மாட்டான். நன்றி கெட்டத்தனமாக நடக்கும்போது அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு மாறு செய்யும் போது திட்டமாக சோதனை வந்தே தீரும்.
 
அல்லாஹு தஆலா இஸ்ரவேலர்களுக்கு சொல்லிய அந்த அறிவுரை என்பது, அவர்களுக்கு மட்டுமல்ல. அது நமக்குரிய அறிவுரை. அவர்களும் நம்மைப் போன்ற உம்மத் தான்.
 
அவர்களுக்கு எதைக்கொண்டு அல்லாஹு தஆலா வெற்றியைக் கொடுத்தானோ அதைக்கொண்டு தான் எல்லா நபிமார்களுடைய உம்மத்துக்கும் வெற்றியை கொடுத்திருக்கிறான். 
 
நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்களுக்கும் இந்த உபதேசத்தை திரும்பத் திரும்ப அல்லாஹ் கூறுவது உடைய நுட்பம் என்ன? ஞானம் என்ன? இதையே உங்களது உம்மத்துக்கு சொல்லுங்கள். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்?:
 
وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيبًا وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَآمَنْتُمْ بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا حَسَنًا لَأُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ فَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ
 
நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கிறான். இன்னும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கிறோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்(காக சிரமத்தில் இருப்பவர்களுக்)கு அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவற்றை) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் உங்களை நுழைய வைப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார். (அல்குர்ஆன் 5 : 12)
 
வசனத்தின் கருத்து : அல்லாஹு தஆலா சொல்கிறான். இஸ்ரவேலர்கள் உடைய ஒப்பந்தங்களை நாம் எடுத்தோம் அவர்களிடத்தில் வாக்குறுதிகளை வாங்கினோம். அவர்களுக்குப் பனிரெண்டு தலைவர்களை அனுப்பினோம். அவர்களுக்கு அல்லாஹ் கூறினான். நான் நிச்சயமாக உங்களுடன் இருப்பேன். அல்லாஹ் என்னுடன் இருக்கிறான்.
 
அல்லாஹ் நபிமார்களுக்கு கற்றுக்கொடுத்த வார்த்தை இது. ஒரு முஃமினுடைய இறைநம்பிக்கை இது.
 
ஒரு முஃமின் அல்லாஹ்வுடன் தொடர்பு உடையவனாக இருக்கிறான். தான் யாருக்கு ஸுஜூது செய்கிறானோ அவன் வாக்கை மீற மாட்டான்.
 
إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ
 
நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல. (அல்குர்ஆன் 3 : 9)
 
அவன் கொடுத்த வாக்கை விட அழகியதை செய்து கொடுப்பான். இந்த உறுதி எந்த முஃமினுக்கு இருக்குமோ, லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்லக்கூடிய அந்த கலிமாவின் மீது யக்கீன் இருக்கிறதோ, அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை, அல்லாஹ் என்னோடு இருக்கிறான். எனக்கு அவன் போதுமானவன்.
 
அல்லாஹுதஆலா நம்மோடு எப்போ இருப்பான்? நீங்கள் தொழுகையை சரிவர நிறைவேற்றினால்.
 
உலகமே எதிர்த்தாலும் அல்லாஹ் நம்மோடு இருந்தால் அவர்கள் சதி திட்டத்தை எப்படி முறியடிப்பது? என்பது அல்லாஹ்வுக்கு தெரியும். அவனிடத்தில் இல்லாத படையா? அவனுடைய ராணுவங்களை அவனை தவிர யார் அறிய முடியும்?
 
அல்லாஹ் சொல்கிறான்; நீங்கள் ஒழுங்காக தொழுதால். 
 
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்; இன்று, நம்முடைய உம்மத்தில் தொழக் கூடியவர் எத்தனை பேர்? பிறகு இந்த தொழுகையை சுன்னத்தான முறையில் புரிந்து அதனுடைய சட்டங்களைத் தெரிந்து அல்லாஹ்விற்காக தக்வாவை அதிகப்படுத்தக்கூடிய தொழுகையாக தொழக் கூடியவர்கள் எத்தனை பேர்? அந்தத் தொழுகையை நேரம் தவறாமல் நியமமாக நிரந்தரமாக தொழக் கூடியவர்கள் எத்தனை பேர்? 
 
اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
 
(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வருவீராக. ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவற்றுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்). (அல்குர்ஆன் 29 : 45)
 
وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ
 
இன்னும், எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகிறார்களோ  (அல்குர்ஆன் 70-34)
 
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
 
 (நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக நடுத் தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள். (அல்குர்ஆன் 2 : 238)
 
இப்படி எல்லாம் அல்லாஹு தஆலா இந்தத் தொழுகையை குறித்து சொல்கிறானே இந்த உம்மத்துடைய நிலையை நினைத்துப் பாருங்கள். இப்படி தொழுகையை அலட்சியம் செய்யும் போதும் தொழுகையில் விளையாட்டாக இருக்கும் பொழுதும் தொழுகையை சடங்காக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹு தஆலா உடைய என்ற வாக்கு எப்படி பரிபூரணம் அடையும்? என்பதை யோசித்துப் பாருங்கள். 
 
இன்று, நம்மில் பலருக்கு எதை எதையோ கேட்பதற்கு படிப்பதற்கு சிந்திப்பதற்கு பேசுவதற்கு அதைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்கு அதைப் பற்றி விவாதிப்பதற்கு  நேரமிருக்கிறது. தொழுகையை ஒரு ஆசிரியரிடம் இருந்தோ அல்லது குறைந்தபட்சம் ஒரு நூலிலிருந்து படித்து, நான் தொழக்கூடிய தொழுகை சரியான தொழுகைதானா? என்று தொழுகையை சரி படுத்திக் கொள்வதற்கு நேரமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகத் தரம் தாழ்ந்து இருக்கிறோம்.
 
விளையாடுவதற்கு நேரம் இருக்கிறது. வீண் பேச்சுகளுக்கு நேரம் இருக்கிறது. வெட்டி கதைகள் பேசுவதற்கு நேரம் இருக்கிறது. ஊர் சுற்றுவதற்கு நேரமிருக்கிறது. 
 
முதல் நிபந்தனையை அல்லாஹ் சொல்கின்றான். இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் சொன்ன முதல் நிபந்தனை. உங்களுடைய தொழுகை சரியாக இருந்தால்.
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்; ஸக்காத்தை நீங்கள் கொடுத்தால். ஏழைகளுக்குரிய ஹக்காகிய ஜகாத்தை நீங்கள் சரியாக கொடுத்தால். 
 
அன்பு சகோதரர்களே! ஏதோ ஒரு சில மக்கள் அல்லது விரல் விட்டு எண்ணக்கூடிய சில அற்பமான எண்ணிக்கையில் உள்ளவர்களைத் தவிர, இன்று நம்முடைய சோதனைக்கு மிகப்பெரிய ஒரு காரணம், நம்முடைய செல்வந்தர்கள் நம்மில் உள்ள ஏழைகளை மறந்துவிட்டார்கள். 
 
தங்களுடைய வாகனங்களை எப்படி ஒரு வாகனத்திற்கு பிறகு எப்படி இன்னொரு சொகுசு வாகனமாக மாற்றுவது? தன்னுடைய ஒரு கட்டடத்தை எப்படி இரண்டு கட்டடமாக மாற்றுவது? தன்னுடைய சுகமான வாழ்க்கைக்கு எப்படி வசதியான இடங்களை தேடுவது? வசதியான நாடுகள் தேடுவது? 
 
இப்படி தான் சென்று கொண்டிருக்கிறார்களே தவிர, சமுதாயத்தில் உள்ள உம்மத்தில் உள்ள ஏழைகளை புறக்கணித்த செல்வந்தர்கள் அதிகமாகி விட்ட காரணத்தால் அல்லாஹ்வுடைய சோதனையில் நாம் இப்போது இருக்கிறோம்.
 
அடுத்து அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். என்னுடைய ரசூல்மார்கள் மீது என்னுடைய நம்பிக்கை ஈமான் உறுதியாகி விட்டால். (அல்குர்ஆன் 5 : 12)
 
ரஸூல்மார்கள் மீது நம்பிக்கை எப்படி என்றால், நபிமார்களுடைய அந்த வழிமுறையை நம்முடைய வழிமுறையாக மாற்றுவது.
 
நமக்கும் ரசூலுல்லாஹ்விற்கும் இடையில் என்ன தொடர்பு? முஹம்மது ரசூலுல்லாஹ் என்று சொல்லிவிட்டால் முடிந்துவிட்டதா? மவ்லூது மீலாது கொண்டாடி கத்தம் பாத்திஹா ஓதி, கூட்டு சோறு சாப்பிட்டால் முடிந்துவிட்டதா? 
 
பித்அத்களை செய்து கொண்டு சடங்குகளை செய்து கொண்டு நபியோடு உறவு இருப்பதாக பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள். நபியோ, அவர்களை சபித்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
நபியோடு நமக்கு இருக்கின்ற உறவு என்ன? நபி நமக்கு கொடுக்கப்பட்டார், நபி நமக்கு அனுப்பப்பட்டார். எதற்காக? அவருடைய சுன்னத்தை பின்பற்றுவதற்காக. 
 
இன்று ஃபர்ழ் கைவிடப்பட்ட நிலையில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. சுன்னத் என்று சொன்னால் சுன்னத் தானே, கட்டாயம் இல்லை என்று சுன்னத்தை கேலி செய்யக் கூடியவர்கள்கூட‌ அதிகமாகிவிட்டார்கள். 
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்; கடமையான ஜகாத் மட்டுமல்ல. அதுபோக, உபரியான தர்மங்களை கொண்டு அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் என்று சொல்லப்படக் கூடிய சதக்கா -தர்மங்களை கொண்டு. (அல்குர்ஆன் 5 : 12)
 
இதுதான் அல்லாஹ்வுடைய தீர்ப்பு. இதை யாரும் மாற்ற முடியாது. அல்லாஹ்வுடைய நியதி இப்படித்தான். நமக்கு வெற்றி வேண்டுமா? உயர்வு வேண்டுமா? கண்ணியம் வேண்டுமா? இந்த சமுதாயங்களை பார்த்து மேன்மை வேண்டுமா? 
 
என்றால், எப்படி முந்திய சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்தானோ, அதைக் கொண்டுதான் நாம் அடைய முடியுமே தவிர, நம்முடைய சூழ்ச்சிகளால் நம்முடைய திட்டங்களால் ஒன்றும் ஆகப்போவதில்லை.
 
மாறாக, நஷ்டம் தான் அதிகமாகும். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமக்கு கட்டளை இட்டது போன்று, அழகிய பொறுமையோடு அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றி அல்லாஹ்வுடைய தொடர்பை அதிகப்படுத்துவதோடு அல்லாஹ்விடத்தில் வெற்றியை உதவியை கண்ணியத்தை எதிர்பார்ப்போமாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102) FIRST FLOOR LINGHI STREET MANNADY CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com 044 2524 7866 9840174121 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/