HOME      Khutba      ஹஜ்ஜும் அதன் பலன்களும் | Tamil Bayan | 720   
 

ஹஜ்ஜும் அதன் பலன்களும் | Tamil Bayan | 720

           

ஹஜ்ஜும் அதன் பலன்களும் | Tamil Bayan | 720


ஹஜ்ஜும் அதன் பலன்களும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ்ஜும் அதன் பலன்களும்
 
வரிசை : 720
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 10-06-2022 | 10-11-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாகவும், ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீது நிலவட்டும் என்று வேண்டியவனாகவும்!
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் அன்பையும் வேண்டியவனாக, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்ற, வணக்க வழிபாடுகளில் இன்பம் காண்கின்ற உடலை எண்ணத்தை உள்ளத்தை வேண்டியவனாகவும் இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம் அனைவருடைய பாவங்களையும் மன்னித்தருள்வானாக! அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு, அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றி, அவன் தடுத்த விஷயங்களை விட்டு விலகி, அல்லாஹ்வின் பொருத்தத்தை பின்பற்றி வாழ்ந்த நல்ல மக்களில் என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
இந்த துல்கஃதா துல்ஹஜ் மாதம் எத்தகைய மாதம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ
 
ஹஜ் என்ற இந்த உயர்ந்த வணக்கம் அறியப்பட்ட மாதங்களில் நிறைவேற்றப்படுகிற ஒரு இபாதத் என்று அல்லாஹு தஆலா இந்த ஹஜ்ஜை அறிமுகப்படுத்துகிறான். (அல்குர்ஆன் 2 : 197)
 
இந்த ஹஜ் என்பது நமக்கு மட்டுமா? அல்லது முந்திய இறைத்தூதர்களுக்கும் இருந்ததா? என்றால், முந்திய இறைத் தூதர்களுக்கும் இந்த ஹஜ் என்ற வணக்கம் இருந்தது.
 
குறிப்பாக, அல்குர்ஆனில் இருந்து நாம் நேரடியாக பார்க்கும் போது அல்லாஹு தஆலா தன்னுடைய கலீல் இப்ராஹீமுக்கு இப்படி கட்டளையிடுகின்றான்:
 
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ
 
(அவரை நோக்கி) “ஹஜ்ஜூக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிக்கையிடுவீராக. (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த (ஒட்டக) வாகனங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள். (அல்குர்ஆன் 22 : 27)
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம். அவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் நடந்த உரையாடலை குர்ஆனுடைய விரிவுரையாளர்கள் பதிவு செய்கிறார்கள். இப்ராஹீம் அலைஹிவஸல்லம் கேட்கிறார்கள்;
 
யா அல்லாஹ்! என்னுடைய இந்த அறிவிப்பு உலக மக்களுக்கு எல்லாம் எப்படி சென்று சேரும்? நான் எப்படி அறிவிப்பு செய்ய வேண்டும்? 
 
இப்போது நாம் கஅபத்துல்லாஹ் அருகில் பார்க்கிறோம் அல்லவா, மகாமு இப்ராஹீம் என்ற அந்தக்கல். அது சொர்க்கத்தில் இருந்து இறக்கப்பட்ட கல், அல்லாஹு தஆலா அந்த கல்லின் மீது நின்று நீங்கள் மக்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள் என்று இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிட, அந்த கல்லின் மீது ஏறி நின்ற உடன், அந்தக் கல்லானது இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவருடைய அந்த இரு பாதங்களையும் அப்படியே அடையாளமாக உள்வாங்கிக் கொண்டது.
 
அதைத்தான் இப்போதும் நாம் இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்தப் பாதை அடையாளங்களை பார்க்கிறோம். அல்லாஹு தஆலா குர்ஆனில் அதை குறிப்பிடுகிறான்:
 
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ (96) فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
 
 (இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா' (மக்கா)வில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
 
அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (பாதுகாப்புப் பெற்று) அச்சமற்றவராகி விடுகிறார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 96,97)
 
அதில் குறிப்பாக, இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்கள் நின்ற அந்த இடம் அந்தக் கல் அங்கே இருக்கிறது என்று அல்லாஹு தஆலா தன்னுடைய அத்தாட்சியாக இப்ராஹிம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களுக்கும் தனக்கும் இடையே இருந்த அந்த நட்பின் அடையாளமாக, ஏகத்துவத்தின் அடையாளமாக, மூஃமீன்களுக்கு தவ்ஹீதின் அடையாளமாக அந்தக் கல்லை அங்கே குறிப்பிடுகிறான்.
 
உமர் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தபோது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் ஆசைப்படுகிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நாம் இந்த இப்ராஹிம் என்ற இடத்தில் இருந்து கொண்டு, இந்த தவாப் உடைய தொழுகையைத் தொழுதால் சிறப்பாக இருக்குமே என்ற தங்களுடைய ஆசையை வெளிப்படுத்துகிறார்கள்.
 
யார் கஅபாவைத் தவாஃப் செய்கிறார்களோ, ஏழு சுற்றுகள் சுற்றியதற்குப் பிறகு, அவர்கள் அந்த இரண்டு ரக்காத்துகள் நஃபிலுடைய தொழுகை தவாபினுடைய தஹிய்யாவாக தொழ வேண்டும்.
 
உமர் ஃபாருக் ரலியல்லாஹு அன்ஹு ஆசைப்படுகிறார்கள். யா ரசூலுல்லாஹ்! அந்த இடத்தில் நின்று தொழுதால் நன்றாக இருக்குமே என்று.
 
அல்லாஹு தஆலா வசனம் இறக்குகிறான்:
 
وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى
 
இப்ராஹீம் என்ற அந்த கல்லுக்கு அருகில் நீங்கள் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 125)
 
இத்தகைய உயர்ந்த வணக்கங்களை உடையதுதான் ஹஜ் என்ற வணக்கம். இந்த ஹஜ் என்ற வணக்கம் வழிபாட்டுக்காக அல்லாஹு தஆலா குறிப்பிட்ட மாதங்களை தேர்ந்தெடுத்தான்.
 
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ
 
ஹஜ்ஜூ (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்களில்தான். (அல்குர்ஆன் 2 : 197)
 
ரமலான் மாதம் நோன்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம். ஒவ்வொரு நாளும், அதில் அல்லாஹு தஆலா இறை வழிபாட்டுக்காக நமக்கு தொழுகையை ஏற்படுத்தி இருக்கிறான். 
 
ஜக்காத்துக்காக ஒவ்வொருவருக்கும் அவருடைய பொருளாதாரத்தில் இருந்து ஓராண்டு பூர்த்தியாகும் போது, அவர் அந்த ஸக்காத்தை கொடுக்க வேண்டுமென்று அல்லாஹு தஆலா விதித்து வைத்தான்.
 
உலக முஸ்லிம்கள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்று சேர்க்க வேண்டும்; அவர்களுக்கு மத்தியில் நிறத்தால் பாகுபாடு இல்லாமல், மொழியால் பாகுபாடு இல்லாமல், சமூகத்தால் பாகுபாடு இல்லாமல், கலாச்சார உடைகளால் கலாச்சார பழக்கவழக்கங்களால் பாகுபாடு இல்லாமல், எல்லோரையும் அல்லாஹு ஸூப்ஹானஹூ வதஆலா தன்னுடைய அடியார்களாக, தன்னை வணங்கியவர்களாக, தன்னுடைய திக்ரில் திளைத்தவர்களாக, தல்பியாவை முழக்கமிட்டவர்களாக, செல்வந்தர்களாக இருந்தாலும், பெரிய மந்திரிகளாக ராஜாக்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நாம் எல்லாம் அல்லாஹ்வின் அடிமை.
 
அல்லாஹ்வுடைய அன்புக்காக, அல்லாஹ்வுடைய அந்த கண்ணியத்திற்க்கு முன்னால் பணிந்தவர்களாக அல்லாஹ்வின் அடிமைகள், அடியார்கள், ஏழைகள் என்பதை நிரூபிக்கும் விதமாக, நமக்கு மத்தியில் செல்வத்தால், மொழியால், சமூகத்தால், கலாச்சாரத்தால், நாட்டால், எந்த விதத்திலும் யாரும் எந்தவிதமான பிரிவினையும் உண்டாக்க முடியாது.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ
 
மூஃமின்கள் எல்லாம் சகோதரர்கள். (அல்குர்ஆன் 49 : 10)
 
மூஃமின்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்ற அந்த ஈமானிய தத்துவத்தை நிரூபிக்கும் விதமாக அல்லாஹு தஆலா அந்த அடியார்களை தன் வீட்டிற்குள் அழைக்கிறான்.
 
அல்லாஹு கூறியது போன்று,
 
لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
 
(வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்). குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள். ஆகவே, அவ்வாறு அறுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்; சிரமப்படும் ஏழைகளுக்கும் புசிக்கக் கொடுங்கள். (அல்குர்ஆன் 22 : 28)
 
அங்கே வருவதால் அவர்களுக்கு நன்மைகளே நன்மை. அந்த நன்மைகளை அடைய அவர் வரவேண்டும். 
 
சிலர் நினைப்பார்கள்; அதில் குறிப்பாக, ஏழைகளை விட பல செல்வந்தர்கள் எப்படி நினைக்கிறார்கள்? 
 
உண்மையில் அல்லாஹ்வுடைய அருளால், அல்லாஹ்விற்கு கொடுப்பதால், அல்லாஹ் பன்மடங்காக திருப்பி கொடுக்கிறான் என்பதை அறிந்தவர்கள் பற்றி சொல்லவில்லை. 
 
அவன் மார்க்கத்திற்காக கொடுக்கும்போது, அல்லாஹ்விற்காக ஏழை எளியவர்களுக்கு, நலிந்தவர்களுக்கு, எத்தீம்களுக்கு, இல்லாதவர்களுக்கு, யாசிப்பவர்களுக்கு கொடுக்கும்பொழுது, நாம் கொடுத்ததை விட சத்தியமாக, அல்லாஹு தஆலா பன் மடங்காக இந்த உலகத்திலும் திருப்பிக் கொடுப்பான். மறுமையில் கொடுப்பதோ மிக விசாலமானது என்பதை புரிந்தவர்கள் பற்றி சொல்லவில்லை, 
 
சில செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களுடைய பேங்க் பேலன்ஸ், அவருடைய சேமிப்பால் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருப்பார்கள். அவருடைய வீட்டில் செல்வம் கொட்டி கிடக்கும். எல்லா வகையான செல்வமும் இருக்கும்.
 
தங்கமா, வெள்ளியா, கரன்சியா, இன்னபிற ஆபரணங்களா, சொத்துக்களா இப்படி  எல்லாம் கொட்டி கிடக்கும்.
 
ஆனால், அவர்கள் உள்ளத்தால் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். உள்ளத்தால் ஃபக்கீர்களாக இருப்பார்கள். உள்ளத்தால் மிஸ்கீன்களாக இருப்பார்கள். 
 
அத்தகைய செல்வந்தர்கள் நினைப்பது என்னது தெரியுமா? இவ்வளவு செல்வத்தைச் செலவு செய்தா ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டும்? இவ்வளவு பணமா? சரி பார்க்கலாம், பின்னால் பார்க்கலாம் என்று, வாழ்க்கையின் மொத்த தேவைகளையும் இவர்கள் போட்டு வைத்திருக்கிற கணக்குப்படி நிறைவேற்றியதற்குப் பிறகு, இனி எந்த வகையிலும் நமக்கு எந்த தேவையும் இல்லை என்பதை எல்லாம் இவர்கள் முடிவு செய்ததற்கு பிறகு, இறுதியாக இப்போது ஹஜ்ஜுக்கு செல்லலாம் என்று முடிவு வைத்திருப்பார்கள்.
 
இவர்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த அழகிய ஹதீசை புரிந்து கொள்ள வேண்டும். 
 
«تَابِعُوا بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الفَقْرَ»
 
யார் அல்லாஹ்விற்காக ஹஜ்ஜு செய்வாரோ அவர் ஏழ்மையாக மாட்டார். அவர் பிறரிடம் தேவை உள்ளவராக ஆகமாட்டார். (1)
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 810.
 
நீங்கள் கொடுக்கக்கூடிய ஜகாத் உங்களுக்கு செல்வத்தில் வளர்ச்சியைக் கொடுக்கும். நீங்கள் கொடுக்கக்கூடிய தர்மம் உங்கள் செல்வங்களில் வளர்ச்சியைக் கொடுக்கும்.
 
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் சொல்கிறான்:
 
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ 
 
சத்தியமாக அல்லாஹு தஆலா வட்டியை அழித்தே தீருவான். தர்மத்தை வளர்த்தே தீருவான்.  (அல்குர்ஆன் 2 : 276)
 
ஸதக்காவிற்கு ஸதக்கா என்றும், அதுபோன்று ஜகாத்திற்க்கு சதக்கா என்றும் சொல்லப்படுகிறது. ஜகாத்திற்க்கு ஜகாத் என்றும் சொல்லப்படுகிறது. 
 
ஜகாத்திற்கு அல்லாஹு தஆலா ஜகாத் என்று ஏன் பெயரிட்டான் தெரியுமா? அரபியில் ஜகாத் என்றால் வளர்ச்சி என்று சொல்லப்படும்.
 
ஜக்கா - யஷ்க்கு என்றால் அழகான வளர்ச்சிக்கு, வசந்தமான வளர்ச்சிக்கு, சுபிட்சமான வளர்ச்சிக்கு சொல்லப்படும்.
 
ஒரு மனிதன் தன்னுடைய செல்வத்திலிருந்து கடமையான அந்த தர்மத்தை கொடுப்பதால், அவனுடைய செல்வம் அழகான முறையில், சுபிட்சமான முறையில் வளரும் என்பதற்காக அதை உணர்த்துவதற்காக அந்த கடமையான தர்மத்திற்கு அல்லாஹ் ஸகாத் என்ற பெயரை தேர்ந்தெடுத்தான். 
 
சிலர் இப்படி கூட எண்ணுகிறார்கள்; அவர்களுடைய குடும்பத்தில் சிலர் தங்களுடைய மனைவிகளை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதில் கூட கருமித்தனம் பார்ப்பவர்கள் உண்டு. 
 
அவங்க அம்மா வீட்டிலிருந்து அவங்க வாங்கிட்டு வரட்டும், உன் நகை வித்துட்டு நீ ஹஜ்ஜுக்கு வா.
 
நாம் நம்முடைய செல்வத்தைக் கொண்டு நாம் மட்டும் ஹஜ் செய்வது அல்ல, நம்முடைய மனைவி, நம்முடைய பிள்ளைகள், நம்முடைய தாய் தந்தை, நம்முடைய குடும்பத்தார், ஏன் நம்முடைய நண்பர்கள், நம்முடைய தோழர்கள், நமக்கு அறிமுகமானவர்கள் இவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதில் அல்லாஹு தஆலா மிகப்பெரிய நன்மையை வைத்திருக்கிறான். 
 
இஸ்லாமிய வரலாற்றில் உறவுகளிலும் சரி, நட்புகளிலும் சரி, சமூகத்திலும் சரி, ஒரு இறுக்கமான, ஒரு கசப்பான, நட்பால், அன்பால், பாசத்தால், நேச உறவுகளால், தூரமான விலகிப்போன ஒரு வாழ்க்கையை நம்முடைய ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, சஹாபாக்களோ, தாபியீன்களோ, இமாம்களோ, நல்லவர்களோ, வாழவில்லை. 
 
ஆம், அவர்கள் நம்மை விட வாழ்க்கை வசதியில் குறைவானவர்களாக இருந்தார்கள். நம்மைவிட அவர்களிடத்தில் பொருளாதாரம் குறைவாக இருந்தது. நம்மை விட அவர்கள் சிரமத்தில் கஷ்டத்தில் இருந்தார்கள்.
 
ஆனால், இவ்வளவு சிரமத்திலும் நெருக்கடியிலும் இருந்த அவர்கள், இன்று நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து சமுதாயத்துக்காக என்ன செலவு செய்கிறோமோ? அந்த செலவுகளை அப்போது இருந்த ஒரு தனிமனிதர் செலவு செய்வார். 
 
அவருடைய வாழ்க்கை வசதியில், அவருடைய பொருளாதாரத்தில், சமூகத்துக்காக, ஏழைகளுக்காக, மஸ்ஜித்களுக்காக, மதரஸாக்களுக்காக, மர்க்கஸுக்காக, சமூக மேம்பாட்டுக்காக அவ்வளவு கொடுக்கக் கூடியவர்களாக விசாலமான உள்ளம் உள்ளவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
 
நம்மைப்போன்ற கருமிகளாக இல்லை. ஏன் சொல்கிறேன் என்றால், இன்று தன்னுடைய மனைவியை ஹஜ் செய்ய வைப்பதற்கே யோசிப்பவர்கள், தன்னுடைய மகளை ஹஜ் செய்ய வைப்பதற்கே யோசிப்பவர்கள், நீ கல்யாணம் கட்டிட்டு நீ உன்னுடைய புருஷன் செலவில் ஹஜ்ஜுக்கு போய்க்கோ, என்னமோ இவர் பிச்சைக்காரனா, மிஸ்கீனா இருக்கிற மாதிரி, அன்றாட சாப்பாடுக்கே இவர் கஷ்டப்படுற மாதிரி.
 
இப்படி இருப்பவர்கள் சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஏழைகளை சமுதாயத்தில் தனக்கு இருக்கக்கூடிய நண்பர்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதைப் பற்றி வெகு தூரத்தில் நீங்கள் யோசிக்க வேண்டும். 
 
ஆனால், நம்முடைய முன்னோர்கள் பழக்கம் என்னவென்றால், அவர்கள் மட்டும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஹஜ் செய்ய மாட்டார்கள். அதுமட்டுமல்ல, இன்று ஒருதடவை ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டால், ஏதோ பத்ருப் போருக்கு போய் வந்தது போன்று. இனிமேல் அந்தப் பக்கமே தலை வைத்து படுக்காதவர்களாக இருக்கிறார்கள். 
 
அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒரு தடவை ஹஜ்ஜுக்குச் சென்ற பிறகு, ஒரு தடவை உம்ரா செய்த பிறகு, அத்தோடு கடமை முடிந்துவிட்டது. 
 
இதற்கெல்லாம் அவர் உடல் பலவீனமாக இருக்குமேயானால் அது வேற விஷயம். அவருடைய பொருளாதார நெருக்கடியாக இருந்து, அதைவிட குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஹக்களுக்கு முன்னுரிமை இருந்தால் அது வேறு விஷயம். 
 
ஆனால், வெறும் கஞ்சத்தனமும், கருமித்தனமும், உள்ளத்தில் அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் மார்க்கத்தின் மீதும், அந்த வீட்டின் மீதும் இருக்கக்கூடிய அந்தப் பற்றற்றதன்மை தூரமாக இருக்குமேயானால் இவருடைய உள்ளம் அல்லாஹ்வுடைய அன்பிலிருந்து, அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் இருந்து பரக்கத்திலிருந்து வெகுதூரமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 
 
அந்த முன்னோர்களுடைய பழக்கம் எப்படி இருந்தது என்றால், அவர்களும் ஹஜ்ஜுக்கு செல்வார்கள். ஒருமுறை சென்றதற்கு பிறகு மறுமுறை செல்வார்கள். ஒருமுறை சென்றதற்கு பிறகு மறுமுறை சென்று கொண்டே இருப்பார்கள். 
 
ஆண்டுகள் விட்டுவிட்டு செல்வார்கள். தான் மட்டும் செல்ல மாட்டார்கள், தங்களுடைய முஹல்லாக்களிலுள்ள ஏழைகளை அழைத்துச் செல்வார்கள். தங்களது நண்பர்களை அழைத்துச் செல்வார்கள்.
 
தங்களுடைய செல்வங்களை ஹஜ்ஜுக்கு செல்பவர்களுக்காக செலவழிப்பதில், அல்லாஹ்வுடைய அன்பை அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அல்லாஹ்வுடைய பரக்கத்தை, அவர்கள் பார்த்தார்கள். 
 
நம்மைவிட அல்லாஹ்வின் மீது அன்பு உள்ளவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் வீட்டின் மீது பற்று உள்ளவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் வீட்டின் தேடல் உள்ளவர்கள், காபாவின் மீது பாசம் உள்ளவர்கள், அந்தப் புனித இல்லத்தின் மீது தேடல் உள்ளவர்கள் நம்மைவிட பலர் இருக்கலாம். 
 
நாம் ஹஜ்ஜுக்கு செல்லும் போது அவர்களில் சிலரையும் அழைத்துச் செல்லும்போது, நம்முடைய வணக்க வழிபாடுகளை விட, அவர்களுடைய வணக்கவழிபாடுகள் அல்லாஹ்விற்கு பிரியமாக இருக்கலாம். 
 
நம்முடைய வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளபடுவதற்கு நெருக்கமாக இருப்பதை விட, அவர்களின் வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு நெருக்கமாக இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்!
 
இப்படி நாம் இபாதத் செய்வது மட்டுமல்ல, அவர்களுடைய அந்த உள்ள தேடலின் இபாதத்திற்கு காரணமாக நாம் அமைவோமேயானால் அல்லாஹ்விடத்தில் எப்பேர்பட்ட நற்பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
 
இதுதான் நம் சஹாபாக்கள் தாபியீன்கள் உடைய வழிமுறை. அவர்கள் தாங்களும் ஹஜ் செய்ததோடு தங்களுடைய தோழர்களையும், தங்களுடைய குடும்பத்தார்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லக்கூடிய பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். 
 
யாரையும் அந்த வீட்டை பார்க்காமல் இருக்கக்கூடிய அந்த நிலையிலிருந்து, அந்த சமுதாயத்தை அந்த நல்லவர்கள் பாதுகாத்து இருந்தார்கள். 
 
மன்னர்கள் மட்டுமல்ல, வரலாறுகளை பாருங்கள். இமாம்கள், முஹத்திஸ்கள், வியாபாரிகள் என்று எல்லோரும் இந்த வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். 
 
அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் என்ற பெரிய ஹதீஸ்கலை அறிஞர், தாபியீன்களில் உள்ளவர். அவர்களுடைய பழக்கம் எப்படி இருந்தது என்றால், ஓராண்டுக்கு கல்வி கற்பிப்பது, கல்விக்காகப் பயணம் செய்வது. அப்படி செல்லும் போதும், செய்யும் போதும் நூறு மக்களை அழைத்துக் கொள்வார்கள். 
 
இன்னொரு ஆண்டு ஜிஹாதுக்காக செல்வது. அப்படி செல்லும் போதும் குறைந்தது நூறு பேரை தன்னுடைய செலவில் ஜிஹாதுக்கு அழைத்துச் செல்வார்கள்.
 
அடுத்து, மூன்றாவது ஆண்டு ஹஜ்ஜுக்குச் செல்வது, ஹஜ்ஜுக்கு செல்லும் போது, ஹஜ் செய்யாத மூன்று பேர்களை தன்னுடைய சொந்த செலவில் அவர்கள் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வார்கள்.
 
அவர்கள் ஈராக்கில் இருந்து புறப்பட்டு, மக்கா சென்று மதினா சென்று மீண்டும் ஈராக் வரும்வரை அந்த நூறு ஹாஜிகளுடைய அத்தனை செலவுகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் தங்களுடைய குடும்பத்தார்களுக்கு வாங்கக்கூடிய அன்பளிப்புகளுக்கும் அவர்கள் செலவு செய்பவர்களாக இருந்தார்கள்.
 
இத்தகைய சிறந்த மேன்மக்களால் இஸ்லாம் பாதுகாக்கப்பட்டது. முஸ்லிம்கள் உயர்ந்தார்கள். இன்று நம்முடைய முஸ்லிம்களுக்கு மத்தியில் சில நல்லவர்கள் இருக்கலாம். சிலர், கண்டிப்பாக விதிவிலக்காக இருக்கலாம். 
 
ஆனால், செல்வம் என்று வந்துவிட்டால், இன்று நமது சமுதாயத்தில் கருமித்தனம் கஞ்சத்தனம் அங்கே வந்து விடுகிறது. 
 
இன்று, நாம் நம்முடைய ஆடம்பரமான வாழ்க்கை களுக்கு அடிமையாகி இருக்கிறோம். நம்மில் ஒவ்வொருவரும் தன்னுடைய ஆடம்பரமான செலவுகளுக்கு தன்னுடைய சுகபோகமான மிக ஆடம்பரமான வசதியான வாழ்க்கைக்கு செலவழிப்பதற்கு தான் நம்முடைய சம்பாத்தியம் என்று நாம் கணக்கு போட்டு வைத்திருக்கிறோம். 
 
இதில் எங்கேயாவது சில சில்லறைகள் மிஞ்சி விட்டால், அந்த சில்லரைகளை ஏழைகளுக்கு கொடுக்கலாம், இபாதத்துக்கு கொடுக்கலாம், மஸ்ஜிதுக்கு கொடுக்கலாம், மதரஸாவுக்கு கொடுக்கலாம் என்று கணக்குப் போட்டு வைத்திருக்கிறோம்.
 
இன்று, நாம் சோதிக்கப்பட கூடிய சோதனைகளுக்கு, நம் மீது இழைக்கப்படுகின்ற இன்னல்களுக்கு துன்பங்களுக்கு இதுவும் ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கலாம்.
 
நம்மில் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஏழைகள் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு சிரமத்தில் நெருக்கடியில் இருக்கிறார்கள். 
 
அவர்களுடைய உணவுக்காக நெருக்கடி, அவர்கள் உடைக்காக நெருக்கடி, அவர்களின் பிள்ளைகளின் படிப்புக்காக நெருக்கடி, அவர்களின் குடும்பத்திற்கான மருத்துவத்திற்கான நெருக்கடி, அவர்களது வீட்டுக்கான நெருக்கடி.
 
இப்படி நமது சமுதாயத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கக்கூடிய ஏழைகள் நெருக்கடியில் இருக்க, இங்கே செல்வந்தர்கள் தங்களின் மகளின் நிக்காஹ்விற்காக, தங்களின் குடும்பத்தார்களின் நிக்காஹ்விற்காக, எத்தனை கோடிகளை ஒரே நாளில் செலவழித்து நாசம் ஆக்குகிறார்கள்!
 
வலிமா சுன்னத் என்ற பெயரில் அங்கே வலிமா நடக்கிறதா? அல்லது என்னுடைய நிக்காஹ் உடைய விருந்தைப் பாருங்கள் என்று தன்னுடைய விருந்தைப் பற்றி போட்டி போடுவதற்காக, பெருமை அடிப்பதற்காக, முகஸ்துதிக்காக அங்கே நடத்தப்படுகிறதா?
 
எத்தனை ஏழைகளின் திருமணங்கள் சாதாரண அடிப்படை தேவைகளை செய்து அங்கே திருமணம் நடக்காமல் இருக்கிறது. இங்கோ கோடிக்கணக்கான ரூபாய்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள செல்வங்கள் ஒரு திருமணத்தில், ஒரு நாளில் அங்கே வீணாக்கப்படுகிறது. 
 
எப்படி அல்லாஹ்வுடைய சோதனை வராமல் இருக்கும்? அல்லாஹ்வுடைய சோதனைகளுக்கு ஒரு காரணம் மட்டும் இருக்காது, ஒரே ஒரு குற்றத்திற்காக அல்லாஹ் திடீரென பிடித்து விடமாட்டான். 
 
இவ்வளவு நெருக்கடிகள் உலக அளவில் கொடுக்கப்படுகிறதே? நிம்மதியாக பாதுகாப்பாக வாழ்ந்த நம் நாட்டில், கண்ணியமாக வாழ்ந்த நம்முடைய நாட்டில், இவ்வளவு பெரிய நெருக்கடிகள், எங்கு திரும்பினாலும் சோதனைகள், எங்கு திரும்பினாலும் அவமானங்கள், எங்கு திரும்பினாலும் துன்பங்கள். 
 
இதெல்லாம் ஒரே நாளில் வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? எத்தனை பாவங்கள்? எத்தனை அநியாயங்கள்?
 
நம்முடைய சமுதாயத்தின் மீது அல்லது இன்னபிற சமுதாய மக்களின் மீது நிகழ்த்தப்படும் போது கண்டிப்பாக சோதனை வரும். அல்லாஹ்வுடைய பிடி வரும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
 
நம்முடைய செல்வம் என்பது, நாம் அனுபவிப்பதற்காக மட்டுமே கொடுக்கப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள். நாமும் அதிலிருந்து ஹலாலான முறையில் தேவையான முறையில் அதுவும் பலமுறை யோசித்ததற்கு பிறகு அனுபவிக்க வேண்டும். 
 
அதுபோக நம்முடைய நண்பர்களுக்காக, ஏழைகளுக்காக, இல்லாதவர்களுக்காக, கொடுப்பதற்காக அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என்ற ஈமானிய உணர்வு வேண்டும். இந்த ஹஜ் உடைய வணக்கத்தை பொறுத்தவரை அப்படித்தான் நம் மீது அல்லாஹ் கடமையாக்கினான்.
 
فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
 
அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (பாதுகாப்புப் பெற்று) அச்சமற்றவராகி விடுகிறார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 97)
 
சிலர், இப்படியும் எண்ணி வைத்திருக்கிறார்கள்; வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும்; திருமணத்திற்காக பல கோடிகளை, பல லட்சங்களை செலவு செய்ய வேண்டும்; பிறகு வீடு, பிறகு வாகனம், இப்படி எல்லாம் பல தேவைகளை அவர்களாக எழுதி வைத்துக்கொண்டு, அந்தத் தேவைகள் ஒன்றன்பின் ஒன்றாக முடிந்ததற்கு பிறகு, ஹஜ்ஜைப் பற்றி யோசிக்கிறார்கள். 
 
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்; இந்த உலக வாழ்க்கையில் நாம் முதலில் செட்டில் ஆகுவது, அல்லாஹ்வுடைய இபாதத்தை பூர்த்தி செய்வதற்கே தவிர, நம்முடைய ஹாஜத்துகளை பூர்த்தி செய்வதற்கு அல்ல.
 
என்ன கேரன்டி இருக்கிறது? திருமணம் முடியும் வரை, வாலிபன் உயிர்வாழ்வான் என்று. வீடு வாங்கி அந்த வீட்டில் குடியேறும் வரை உயிரோடு இருப்போம் என்பதற்கான ஏதாவது கேரன்டி இருக்கிறதா? 
 
சுகபோகமான வசதியான வாகனம் வாங்கி அந்த வாகனத்தில் ஏறுகின்ற வரை நாம் வாழ்வோம் என்பதற்கு கேரண்டி இருக்கிறதா? 
 
அல்லாஹ் மறுமையில் உன்னிடத்தில் செல்வம் இருந்தது, நீ ஹஜ் செய்தாயா? இல்லையா? என்பதை கேட்பதைத் தவிர, நீ வீடு வாங்கினாயா? நீ வசதியான வாகனம் வாங்கினாயா? நீ திருமணம் முடித்தாயா? என்று அல்லாஹு கேட்க மாட்டான்.
 
இன்று, நமக்கு நாமே சில விதிகளை ஏற்படுத்திக் கொண்டோம். அதனால் ஏற்பட்ட முசீபத் இது. யாருக்கு அவருடைய அவசிய தேவை போக, ஹஜ்ஜுக்குச் சென்று வர செல்வம் இருக்கோ, கண்டிப்பாக அவர் ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டும். 
 
இன்னும் ஒரு ஈமானிய உணர்வு ஈமானிய குணம் என்ன என்றால், அந்த ஹஜ்ஜுக்காகவே செல்வத்தை சேகரிக்க வேண்டும். செல்வத்தில் முதலாவதாக எது வருகிறதோ, அந்த செல்வத்தைக் கொண்டு அல்லாஹ்வின் வீட்டிற்கு புறப்பட வேண்டும். அதுதான் முஃமினுடைய குணமாக இருக்க வேண்டும். 
 
அல்லாஹு தஆலா அத்தகைய ஒரு ஹஜ்ஜை நமக்கு நஸீப் ஆக்குவானாக! ஹஜ் உடைய பாடங்கள், படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹு முடிந்தால் அடுத்தடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம். 
 
இந்த ஹஜ் உடைய வணக்கம் மிக மிக அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய வணக்கம். சில அரைகுறை அழைப்பாளர்கள் சொல்வதைப் போல, ஹஜ் கடமை தான், எப்போது வேண்டுமானாலும் நாம் செய்யலாம்; வாழ்க்கையில் அதற்கு வசதியான, விசாலமான நேரம் இருக்கிறது என்று சிலர் புரிந்து வைத்து சொல்கிறார்களே, அது தவறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா, அல்லாஹ்வுடைய இந்த வணக்க வழிபாட்டை இறையச்சத்தோடு, அல்லாஹ்வுடைய அந்த இக்லாஸோடு நிறைவேற்றக் கூடிய நற்பாக்கியத்தை நமக்கு தந்தருள்வானாக! ஆமீன். 
 
நம்மில் இதுவரை யார் ஹஜ் செய்யவில்லையோ, அவர்களுக்கு அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா குறிப்பாக எளிதாக்கி, விரைவாக்கி தருவானாக! 
 
மீண்டும் மீண்டும் அல்லாஹ்வுடைய வீட்டுக்கு சென்று வரும் நற்பாக்கியத்தை தருவானாக! அதன் மூலமாக நம்முடைய ஈமானும் அல்லாஹ்வின் மீது‌ நம்முடைய அன்பும் அதிகரிக்கக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருவானாக! ஆமீன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَا: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَاصِمٍ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَابِعُوا بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الكِيرُ خَبَثَ الحَدِيدِ، وَالذَّهَبِ، وَالفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ المَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الجَنَّةُ» وَفِي البَابِ عَنْ عُمَرَ، وَعَامِرِ بْنِ رَبِيعَةَ، وَأَبِي هُرَيْرَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ حُبْشِيٍّ، وَأُمِّ سَلَمَةَ، وَجَابِرٍ.: «حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ» (سنن الترمذي- 810) [حكم الألباني] : حسن صحيح
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/