HOME      Khutba      அல்லாஹ் இருக்கிறான் அஞ்சவேண்டாம்! | Tamil Bayan - 721   
 

அல்லாஹ் இருக்கிறான் அஞ்சவேண்டாம்! | Tamil Bayan - 721

           

அல்லாஹ் இருக்கிறான் அஞ்சவேண்டாம்! | Tamil Bayan - 721


அல்லாஹ் இருக்கிறான்! அஞ்சவேண்டாம்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ் இருக்கிறான்! அஞ்சவேண்டாம்!
 
வரிசை : 721
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 17-06-2022 | 17-11-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்தத் தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் கண்ணியத்துக்குரிய தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக! 
 
எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய இம்மை மறுமையின் அருளையும் பாதுகாப்பையும், இம்மை மறுமையின் வெற்றியையும், சொர்க்க வாழ்க்கையையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, தக்வாவின் அடிப்படையில் இந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு, அல்லாஹ்வுடைய மார்க்க சட்ட வரம்புகளை பேணி நடக்குமாறு, அல்லாஹ்வுடைய வேதத்தையும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பற்றி பிடிக்குமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
நிச்சயமாக அல்லாஹ் ஒருவன் தான் நம்முடைய காயப்பட்ட உள்ளங்களுக்கு மருந்திடக் கூடியவன். நிவாரணம் கொடுக்கக் கூடியவன். அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்பட்ட கைகள் தோல்வி அடைவதில்லை. அல்லாஹ்விடத்தில் கேட்கப்பட்ட துஆக்கள் நிராகரிக்கப் படுவதில்லை.
 
அல்லாஹு தஆலா கூறுவதாக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்:
 
فإنَّهُ ليسَ بينَها وبينَ اللَّهِ حجابٌ
 
அநீதி இழைக்கப்பட்டவருக்கும் வானத்திற்கும் இடையில் எந்த திரையும் இல்லை. (1)
 
அறிவிப்பாளர் : ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1496, திர்மிதி, எண் : 2014.
 
அநீதி  இழைக்கப்பட்டவரைப் பார்த்து அவர் அல்லாஹ்விடத்தில் கையேந்தும் பொழுது அல்லாஹ் கூறுகிறான்:
 
لأنصرَنَّكَ ولَو بعدَ حينٍ
 
சத்தியமாக நான் உனக்கு உதவி செய்வேன். அது சிறிது காலத்திற்குப் பிறகு ஆயினும் சரி. (2)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3598.
 
அல்லாஹ்வுடைய உதவி கண்டிப்பாக வந்தே தீரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹுதஆலா சொல்கிறான். 
 
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
 
நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம் மீது கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 30 : 47)
 
وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ
 
முஃமின்களை கண்டிப்பாக நாம் இப்படித்தான் இரட்சிப்போம். (அல்குர்ஆன் 21 : 88) 
 
அல்லாஹு தஆலா அநியாயக்காரர்களை உடனே தண்டித்து விடுவதில்லை. அல்லாஹ் சொல்கிறான்:
 
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ
 
அவன் அவனுடைய அடியார்கள் விஷயத்தில் மிக நுணுக்கமாக நுட்பமாக நடந்து கொள்கிறான். (அல்குர்ஆன் 42 : 19) 
 
அல்லாஹ்வுடைய ஒவ்வொரு செயலும் தியாகத்தின் அடிப்படையில், ஹிக்மத் என்ற அந்த உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. மனிதர்கள் அவசரப்படக் கூடியவர்கள். தீர்ப்பை உடனடியாக எதிர்பார்க்கக்கூடியவன்.
 
அல்லாஹு தஆலா தன்னுடைய நபிக்கு 13 ஆண்டுகள் மட்டுமல்ல. மக்காவின் அந்த வாழ்க்கையை மட்டும் பார்க்காதீர்கள். மதீனாவிற்கு வந்ததற்குப் பிறகும் 8 ஆண்டுகள் அவர்கள் பொறுக்க வேண்டியிருந்தது. அவர்களை மக்காவை வெற்றி கொள்ளும் படி வைத்தான்.
 
எல்லாம் அவனிடத்தில் ஒரு திட்டத்தின் அடிப்படையில் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய நம்பிக்கை பெரும்பான்மையினால் ஆட்சி அமைவது அல்ல. ஆட்சியை கொடுப்பவன் அல்லாஹ். நம்முடைய நம்பிக்கை சிறுபான்மையாக இருக்கும் பொழுது, நாம் ஒதுக்கப்பட்டு விடுவோம் நசுக்கப்பட்டு விடுவோம் என்பது அல்ல. 
 
அப்படி நம்பினால் அது ஈமானிய நம்பிக்கை அல்ல. சிறு பான்மையினரையும் அல்லாஹு தஆலா ஆட்சியாளராக ஆக்குவான். 
 
ஆட்சியை கொடுப்பவனும் அவனே. ஆட்சியிலிருந்து பிடுங்கக் கூடியவனும் அவனே. அல்லாஹ் கூறுகிறான்:
 
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
 
 (நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய். (அல்குர்ஆன் 3 : 26)
 
இது, ஒரு முஃமினுடைய அடிப்படை நம்பிக்கை. அல்லாஹ்வைக் கொண்டு தான் எங்களுடைய வெற்றி, அல்லாஹ்வைக் கொண்டு தான் எங்களுடைய கண்ணியம்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ
 
கண்ணியம் மிகைத்தல் வெற்றி என்பது இறுதியானது அல்லாஹ்விற்கு தான். அல்லாஹ்வுடைய ரஸூலுக்கு தான். மூஃமின்களுக்கு தான். (அல்குர்ஆன் 63 : 8)
 
அல்லாஹு தஆலா நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான்? அல்லாஹ்வுடைய வாக்குப் பொய்யாகுமா?
 
وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا
 
அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை வெற்றிகொள்ள அல்லாஹ் ஒரு வழியையும் வைக்கமாட்டான். (அல்குர்ஆன் 4 : 141)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
நீங்கள் முஃமின்களாக இருந்தால் மனம் தளர வேண்டியதில்லை. நீங்கள் கோழையாக வேண்டியதில்லை. (அல்குர்ஆன் 3 : 139)
 
இது, அல்லாஹு தஆலா உடைய ஆறுதல். ஆறுதல் சொல்பவர்களில் அல்லாஹ் மிக அழகானவன். உண்மையான ஆறுதல், உண்மையான வாக்கை கொடுக்கக் கூடியவன்.
 
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ (45) بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ 
 
அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள். மாறாக, மறுமை நாள்தான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தவணையாகும். அந்த மறுமை நாள் மிக்க திடுக்கமானதாகவும், மிக்க கசப்பாகவும் இருக்கும். (அல்குர்ஆன் 54 : 45,46)
 
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களும், அவர்களோடு சேர்ந்த சில சிறுமிகளும், மக்காவிற்கு வந்தபோது இந்த வசனத்தை திரும்பத் திரும்ப ஓதுவார்கள். 
 
வசனம் என்ன சொல்லுகிறது? கண்டிப்பாக காஃபிர்களின் கூட்டம் தோற்கடிக்க படும். இது எங்கே இறக்கப்பட்ட வசனம்? எப்போது இறக்கப்பட்ட வசனம்? 
 
மக்காவில் முஸ்லிம்கள் அடி வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, மக்காவில் முஸ்லிம்கள் நசுக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது, பலர் கொல்லப்பட்டிருக்கும்போது இறக்கப்பட்ட வசனம், காஃபிர்களின் கூட்டம் தோற்கடிக்கப்படும் என்று. 
 
அந்த ஸஹாபாக்களுக்கு இருந்த நம்பிக்கை, அவர்களது பிள்ளைகளுக்கு இருந்த நம்பிக்கையை பாருங்கள். இதை ஓதிக் கொண்டே இருப்பார்கள். சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
 
எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வசனம் இறக்கப்பட்டது? அல்லாஹு தஆலா சூழ்நிலைகளை எப்படி மாற்றுவான்? யாராவது எண்ணிப்பார்த்து இருப்பார்களா? இதைத்தான் அல்லாஹ் சொல்கின்றான்:
 
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
 
எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்ல தீர்வுபெற) வழியை ஏற்படுத்தித் தருவான். மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். (அல்குர்ஆன் 65 : 2,3) 
 
நம்முடைய கைகளால் நாம் தீர்வை தேடினால் அது குழப்பங்களில் முடியும். நம்முடைய குறுகிய அறிவைக்கொண்டு, தீமைக்கு தீமை என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் கட்டளையை மீறி நாம் செயல்பட்டால், அது குழப்பத்தில் தான் முடியும். 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ 
 
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீர் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அவ்வாறாயின், உமது கொடிய எதிரியை அதே சமயத்தில் உமது உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர். (அல்குர்ஆன் 41 : 34)
 
கெட்டதை தீயதை அழகியதைக் கொண்டு தவிர்த்தல். அப்படி நீங்கள் செய்தால், உங்களோடு யார் பகைத்துக்கொண்டு, விரோதியாக இருக்கிறாரோ, அவன் உங்களுக்கு உற்ற நண்பனாக ஆகிவிடுவான்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அழகிய அணுகுமுறையை பாருங்கள். அவர்களின் அழகிய பண்பாடுகளை பாருங்கள். ஸஹாபாக்களை அவர்கள் எப்படி உருவாக்கினார்கள் என்று பாருங்கள். 
 
பொறுமையின் மீது ஒற்றுமையின் மீது ஒருங்கிணைத்து இருப்பதன் மீது சகோதரத்தின் மீது ஈமான் மீது இக்லாஸின் மீது தக்வாவின் மீது உருவாக்கினார்கள்.
 
அந்த சமுதாயம் இதை (அல்குர்ஆன் 54 : 45,46) ஓதிக் கொண்டிருந்தது.
 
அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையாக வேண்டுமென்றால், அந்த வாக்கிற்கு ஏற்ப நாம் முதலில் அந்த வாக்கை பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆக வேண்டும். அல்லாஹு தஆலா இஸ்ரவேலர்களுக்கு கூறியதை நமக்குக் கூறுகிறான்:
 
يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ
 
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள் புரிந்திருந்த என் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள், நான் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 2 : 40)
 
நிபந்தனை இடுவதற்கும், சட்டம் போடுவதற்கும், அதிகாரம் செலுத்துவதற்கும் அல்லாஹ்விற்கு தான் உரிமை இருக்கிறதே தவிர, நமக்கு உரிமை இல்லை.
 
அல்லாஹ் என்ன அதிகாரம் செலுத்துகிறான்? அல்லாஹ் என்ன சட்டம் போடுகிறான்? என்றால் நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள் என்று. நான் உங்களுக்கு கொடுத்த மார்க்கத்தின் படி நீங்கள் முதலில் நடந்து காட்டுங்கள். நீங்கள் என்னுடைய வாக்கை நிறைவேற்றுங்கள். நீங்கள் எனக்கு செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் மீது நான் கடமையாக்கிய கடமைகளை நீங்கள் பின்பற்றி, அதை பாழாக்காமல் செயல்படுத்தி காட்டுங்கள். பிறகு, நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன். நான் உங்களுடன் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவேன்.
 
இன்று, அல்லாஹ்வுடைய இந்த வாக்கு நமக்கு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்று பாருங்கள்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நல்லவர்களையும் சோதிப்பான். தீயவர்களையும் சோதிப்பான். பாவிகளையும் அல்லாஹ் சோதிப்பான். நாம் இப்போது இந்த மூன்று கூட்டத்தில் எதில் இருக்கிறோம்? என்று நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும். 
 
நல்லவர்களுக்கு சோதனை வரும் பொழுது, அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அந்த சோதனையில் அவர்களுடைய ஈமான் அதிகரிக்கும்படி, அவர்களுடைய மார்க்கப்பற்று அதிகரிக்கும்படி, அல்லாஹ்வுடைய தீனில் அவர்களுக்கு மேலும் மேலும் உறுதி ஏற்படும்படி, அவர்களுடைய மனதை பக்குவப்படுத்தி, அவர்களுடைய மனதை தயார்படுத்தி உறுதிப்படுத்தி வைத்திருப்பான். 
 
கண்டிப்பாக அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அவர்களுக்கு அந்த சோதனைக்கு பிறகு வெற்றியை கொடுப்பான்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுத்ததைப் போன்று.
 
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ‏ -இந்த வசனத்தை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் அந்த சிறுமிகளும் ஓதிக் கொண்டிருந்தார்கள். சிந்தித்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்; என்ன நடக்கப்போகிறது? என்று.
 
அல்லாஹ்வுடைய தூதர் அலைஹி வஸல்லம், அபூ ஸுஃப்யான் உடைய இந்த வியாபாரக் கூட்டத்தை தடுத்து நிறுத்தினால், அவர்களுடைய செல்வத்தை பொருளாதாரத்தை முடக்கி விட்டால், அந்த காஃபிர்களுடைய முதுகெலும்பை நாம் உடைத்து விடலாம். 
 
அந்த செல்வத்தை திமிரால் தான் அவர்கள் இப்படி ஒரு அராஜகத்தை அழிச்சாட்டியம் அநியாயத்தை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த செல்வம் இல்லை என்றால், அவர்களால் எப்படி செய்ய முடியும்? என்பதாக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திட்டம் போட்டார்கள்.
 
நாம் எதை நன்மையாக கருதுகிறோமோ அது தீமையாக இருக்கும். நாம் எதை தீமையாக நினைக்கிறோமோ அது நன்மையாக இருக்கும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ 
 
நீங்கள் சிலவற்றை விரும்புவீர்கள். ஆனால், அது உங்களுக்கு தீங்காக இருக்கும். நீங்கள் சிலவற்றை வெறுப்பீர்கள். ஆனால், அது உங்களுக்கு நன்மையாக இருக்கும். அல்லாஹ் அறிந்தவன். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2 : 216)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَى كَافِرَةٌ يَرَوْنَهُمْ مِثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَنْ يَشَاءُ إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِأُولِي الْأَبْصَارِ
 
(பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் 3 : 13) 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நாட்டத்தையே முற்றிலுமாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதற்கு மாற்றமாக நடத்தி காட்டினான்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூ ஸுஃப்யான் உடைய கூட்டத்தை நாடி வருகிறார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களை சந்திக்க வைத்ததோ அபூஜஹல் உடைய கூட்டத்தை. 
 
313 பேரை அழைத்துக்கொண்டு, வியாபாரக் கூட்டத்தை சந்தித்து, செல்வத்தை எல்லாம் எடுத்து விடலாம் என்று நினைத்தார்கள். அல்லாஹ்வுடைய திட்டம் வேறு ஒன்றாக இருந்தது.
 
அங்கே நமக்கு படிப்பினை என்ன? ஸஹாபாக்கள் அல்லாஹ்வுடைய அந்தத் திட்டத்தை பொருந்திக் கொண்டார்கள். மார்க்கத்தில் உறுதியாக இருந்தார்கள். நபிக்கு கட்டுப்பட்டார்கள். தங்களுடைய காரியங்களை ஒருமித்து முடிவெடுத்தார்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
 
மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள். (அல்குர்ஆன் 42 : 38)
 
அவர்கள் தங்களுடைய காரியத்தை ஆலோசித்து ஒன்றுசேர்ந்து முடிவு எடுக்க வேண்டுமே தவிர, நீங்கள் பிரிவுகளாக குழுக்களாக ஜமாத்துகளாக இயக்கங்களாக எந்தப் பெயரிலும் நீங்கள் பிரிந்து இருந்தாலும் சரி, அல்லாஹ்வுடைய உறுதி இறங்குவதற்கு உண்டான அடிப்படைத் தகுதியை இழந்து விட்டீர்கள்.
 
ஸஹாபாக்களை பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கே வைத்துக்கொண்டு தன் தோழர்களுடன் மஷூரா செய்கிறார்கள். நாம் வந்ததோ ஒன்றை விரும்பி, ஆனால், நடக்கப்போவதோ வேறொன்று. என்ன செய்வது?
 
தான் தலைவனாக இருந்தாலும், தான் அமீராக இருந்தாலும், தன்னுடைய பேச்சுக்கு இவர்கள் கட்டுப்படுவார்கள் என்று இருந்தாலும், அல்லாஹ் தனக்கு என்ன கட்டளையை கொடுத்தானோ, அதை ரஸூலுல்லாஹ் மீறவில்லை. 
 
அல்லாஹ் தங்களுக்கு என்ன கட்டளையை கொடுத்தானோ, அந்தக் கட்டளையை ஸஹாபாக்கள் மீறவில்லை. அல்லாஹ் வெற்றியை இறக்கினான்.
 
இன்று, தலைவரும் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறக் கூடியவர். மக்களும் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறக் கூடியவர்கள். அல்லாஹ்வுடைய உதவி எப்படி வரும்? 
 
அல்லாஹ் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தான்?
 
وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ
 
நீங்கள் அவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். (அல்குர்ஆன் 3 : 159)
 
நபியே! நீங்கள் நபி என்பது வேறு. ரஸூல் என்பது வேறு. உங்களுக்கு நான் வஹீ அனுப்புவது என்பது வேறு. ஆனால், மூஃமின்கள் உடைய காரியத்தில், அவர்களுடைய தலைவர் இடத்தில் நீங்கள் ஆலோசனை செய்யுங்கள்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆலோசனை செய்கிறார்கள். முஹாஜிர்களை அழைத்து ஆலோசனை செய்கிறார்கள். அன்சாரிகளை அழைத்து ஆலோசனை கேட்கிறார்கள். அன்சாரிகள் உடைய அவ்ஸை அழைத்து, ஒவ்வொரு குடும்பத்தார்களின் தலைவரை அழைத்து ஆலோசனை கேட்கிறார்கள். 
 
ஒருமித்து முடிவு எடுக்கிறார்கள். அங்கே அல்லாஹ்வின் உதவியைப் பார்க்கிறார்கள். 
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ
 
அதிகமான கூட்டத்தை எத்தனையோ குறைவான கூட்டம் அல்லாஹ்வின் அனுமதியினால் வென்றுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். 2 : 249)
 
ஸஹாபாக்கள் பொறுமையாக இருந்தார்கள். நபிக்கு இதாஅத் செய்தார்கள்.
 
நாம், நம்முடைய கையில் இருக்கக்கூடிய சக்தியை நம்பி இருக்கக் கூடியவர்கள் அல்ல. வானத்தில் இருக்கக்கூடிய இறைவனின் சக்தியை ஆற்றலை அவனுடைய உதவியை நம்பி இருக்கக்கூடியவர்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ
 
உங்கள் இறைவனிடம் நீங்கள் பாதுகாப்புத்தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, “தொடர்ந்து வரக்கூடிய ஆயிரம் வானவர்களின் மூலம் நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன்” என்று (அல்லாஹ்) உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன் 8 : 9)
 
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்; ரஸூல் மட்டுமல்ல, ஸஹாபாக்கள் எல்லோரும் அல்லாஹ்விடத்தில் மன்றாடி அழுதார்கள் என்று.
 
இதுவே நம்மிடத்தில் இல்லை. செய்திகளை பார்ப்பதற்கு இருக்கக்கூடிய ஆர்வம். தொழுது அல்லாஹ்விடத்தில் துஆ செய்வதில், பாதிக்கப்பட்ட நம்முடைய சகோதரர்களுக்காக கண்ணீர் சிந்தி, கைகளை உயர்த்தி, அல்லாஹ்விடத்தில் மன்றாடுவது இல்லையே. 
 
ஸஹாபாக்கள் ஒரு பக்கம் அழுகையில், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு பக்கம் அழுகையில், கைகளை உயர்த்தி உயர்த்தி அவர்களுடைய மேல் இருந்த அந்த போர்வையை கீழே விழுகின்ற அளவிற்கு.
 
அந்த அழுகையைப் பார்த்து, அதை தாங்கிக்கொள்ள முடியாமல், அபூ பக்ர் ரஸூலுல்லாஹ்வை பின்பக்கம் இருந்து அழைத்துச் செல்கிறார்கள்; 
 
حَسْبُكَ يا رَسولَ اللَّهِ؛ فقَدْ ألْحَحْتَ علَى رَبِّكَ
 
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுடைய துஆவை ஏற்றுக்கொள்வான் போதும் போதும் என்று ரஸூலுல்லாஹ்வை சாந்தப் படுத்துகிறார்கள். (3)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2915.
 
அல்லாஹ் தன்னுடைய உதவியை அவர்களுக்கு இறுக்குகிறான். ஆயிரம் வானவர்களை இறக்குவான். ஒரு வானவர் போதும். ஒரு வானவருடைய ஊதுதல் ஒரு சப்தம் போதும். மொத்த உலகத்தை அழிப்பதற்கு.
 
அல்லாஹு தஆலா அந்த ஸஹாபாக்களுக்கு அவர்களுடைய மனதிற்கு ஆறுதல் கொடுப்பதற்காக ஆயிரம் வானவர்களை இறக்குவேன் என்று சொல்லிக் காட்டுகிறான்.
 
بَلَى إِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُمْ مِنْ فَوْرِهِمْ هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ 
 
ஆம், போதுமாகிவிடும். நீங்கள் பொறுமையாக இருந்தால்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால்; இன்னும், அவர்கள் இதே வேகத்தில் (–இதே நேரத்தில்) உங்களிடம் (போருக்கு) வந்தால், (தங்களைத் தாமே) அடையாளமிட்டுக்கொண்ட ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான். (அல்குர்ஆன் 3 : 125)
 
அன்பு சகோதரர்களே! நாம் இந்த உலகத்தினுடைய நம் கண்ணால் பார்க்கின்ற சக்தியை நம்புகிறவர்கள் அல்ல. நம் கண்ணால் பார்க்காத நம்பிக்கை கொண்டு இருக்கிற அல்லாஹ்வின் சக்தியை அவனுடைய உதவியை நம்பி இருக்கக் கூடியவர்கள்.
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ
 
உதவி இல்லை; அல்லாஹ்விடம் இருந்தே தவிர. (அல்குர்ஆன் 8 : 10)
 
மேலும், அல்லாஹ் சொல்கிறான்:
 
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
 
அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. இன்னும், அவன் உங்களை கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார் (இருக்கிறார்)? ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பார்களாக! (அல்குர்ஆன் 3 : 160) 
 
சோதனை நமக்கு மட்டுமல்ல. நமது முன்னோர்களுக்கும் வந்திருக்கிறது. நோய் சோதனையாக இருக்கட்டும்; பொருளாதாரம் சோதனையாக இருக்கட்டும்; வறுமையாக இருக்கட்டும்; எதிரிகளின் அச்சுறுத்தலாக இருக்கட்டும்; எதிரிகளின் அடக்குமுறைகள் ஆக இருக்கட்டும். எல்லாம் நமக்கு முன்னுள்ளவர்களுக்கு வந்திருக்கிறது.
 
நம்முடைய குர்ஆன் படிப்பினை நிறைந்த வரலாறுகளை சொல்லாமல் விடவில்லை. ஆனால், நாம்தான் படிப்பினை பெறாமல், நல்லுபதேசம் பெறாமல், அதிலிருந்து நான் என்னை எப்படி மாற்றவேண்டும்? நான் என்னை எப்படி உருவாக்க வேண்டும்? 
 
எனக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உள்ள உறவுகளை  எப்படி சீர் செய்ய வேண்டும்? என்று குர்ஆனின் அறிவுரைகளைக் கொண்டு, நபியின் வழிகாட்டலை கொண்டு, சீர் செய்யாதவர்களாக இருக்கிறோம். அதுதான் பிரச்சனை.
 
இந்த உலகத்தில் ஒரு சோதனை உடைய உச்சக்கட்டம் என்ன? ஒரு பிரச்சனை ஆபத்தின் உடைய உச்சகட்டம் என்ன? மவுத்.
 
மவுத்திலிருந்து யார் தப்பிக்க முடியும்? அல்லாஹ் கேட்கிறான்:
 
قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لَا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا
 
(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில் வாழ்வதற்கு) நீங்கள் சுகமளிக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 33 : 16)
 
அல்லாஹ்வுடைய இல்மை தவ்ஹீதை ஈமானை இக்லாஸை தவக்குளை நாம் நம்முடைய உள்ளத்தில் பரிபூரணப் படுத்தியவர்களாக இருப்போமேயானால், எதிரிகளால் இந்தத் துன்பத்திற்கு ஆளாகும் போதும் நமக்கு நன்மை. நாம் கொல்லப்படும் பொழுதும் நமக்கு நன்மை. ஆஹிரத்திலோ நன்மையோ நன்மை.
 
அல்லாஹு தஆலா உதவியை ஏற்படுத்துவான். நாம் பலவீனமானவர்கள். நம்மை அல்லாஹ் கை விட்டு விட மாட்டான். அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவனுடைய அடியார்களாகிய நம்மை பற்றி.
 
எல்லாம் ஒரு சின்ன சாதாரணமான சோதனைகள். பார்ப்பதற்கு பேசுவதற்கு பெரிதாக தெரியலாம். ஆனால், நம்முடைய உறுதிக்கு முன்னால் இது ஒன்றுமே இல்லை.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
 
مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ
 
அல்லாஹ்வை அன்றி (சிலைகளையும் இறந்தவர்களையும் தங்களுக்கு) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்தியின் உதாரணத்தைப் போலாகும். அது (தனக்கு) ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிக பலவீனமானது சிலந்தியின் வீடே. அவர்கள் (அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றவற்றின் பலவீனத்தை) அறிந்திருக்க வேண்டுமே! (அல்குர்ஆன் 29 : 41)
 
மூஃமின்களின் திக்ருக்கு முன்னால், மூஃமின்கள் உடைய தக்பீருக்கு முன்னால், மூஃமின்களுடைய நம்பிக்கைக்கு முன்னால், இந்த உலகத்தின் சக்திகள் எல்லாம் அற்பமானது. அந்த நம்பிக்கையை நாம் உருவாக்க வேண்டும்.
 
நமக்கு மத்தியில் உள்ள காரியங்களை, மஷூராவின் அடிப்படையில், ஒருமித்த கருத்தின் அடிப்படையில், ஜமாஅத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும். இதாஅத் வரவேண்டும். அல்லாஹ்வுடைய தீனை முன்னிறுத்தி முடிவுகளை எடுக்க வேண்டும். 
 
இந்த நேர்வழி இல்லாமல், ஈமான் இல்லாமல், தவ்ஹீத் இல்லாமல், கட்டுப்படுதல் இல்லாமல் அல்லாஹ்வுடைய உதவி வராது.
 
அந்த ஒரு ஈமானுடைய நிலையை நாம் அறிவோமாக! புரிவோமாக! நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வருவோமாக!
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் நம்முடைய சமுதாயத்திற்கும் வெற்றியை தருவானாக! அநியாயக்காரர்களை அழிப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவர்களை தண்டிக்க அல்லாஹ்வே போதுமானவன்.
 
எப்படி நமக்கு கொடுமை செய்தார்களோ, தீங்கு செய்தார்களோ, அழிக்க நினைக்கிறார்களோ, அவர்களுடைய சூழ்ச்சிகளை அவர்களுக்கு எதிராகவே திருப்ப நம்முடைய ரப்பு போதுமானவன்.
 
நம்முடைய ரப்பு நாடினால், அவர்களை எப்படி பழி வாங்க வேண்டுமோ அப்படி பழி வாங்குவான். அந்த ரப்பு இடத்தில் முறையிடுவோமாக! அந்த ரப்பு இடத்தில் உதவி தேடுவோமாக!
 
உதவி செய்பவர்களில் அவன் மிக சிறந்தவன். நம்முடைய எஜமானர்களில் சிறந்த எஜமானன் அவன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்குப் போதுமானவன். ஹஸ்புனல்லாஹ் நிஃமல் மவுலாஹ் வ நிஃமனுல் வகீல் -நம்முடைய சிறந்த எஜமானன். நம்மை கண்காணித்து உதவக்கூடிய மிகசிறந்த உரிமையாளன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய உலக பிரச்சினைகளையும், நம்முடைய சமூகப் பிரச்சனைகளையும் அழகிய முறையில் நமக்கு எளிதாக்கி, அந்த குழப்பங்களிலிருந்து அழகிய விடுதலையை நமக்கு தந்தருள்வானாக! 
 
நம்மை பாதுகாப்பானாக! நம்முடைய மக்களை அல்லாஹு தஆலா எங்கிருந்தாலும் பாதுகாப்பானாக! நேர்வழியை தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
قالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ لِمُعَاذِ بنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إلى اليَمَنِ: إنَّكَ سَتَأْتي قَوْمًا أهْلَ كِتَابٍ، فَإِذَا جِئْتَهُمْ، فَادْعُهُمْ إلى أنْ يَشْهَدُوا أنْ لا إلَهَ إلَّا اللَّهُ، وأنَّ مُحَمَّدًا رَسولُ اللَّهِ، فإنْ هُمْ أطَاعُوا لكَ بذلكَ، فأخْبِرْهُمْ أنَّ اللَّهَ قدْ فَرَضَ عليهم خَمْسَ صَلَوَاتٍ في كُلِّ يَومٍ ولَيْلَةٍ، فإنْ هُمْ أطَاعُوا لكَ بذلكَ، فأخْبِرْهُمْ أنَّ اللَّهَ قدْ فَرَضَ عليهم صَدَقَةً تُؤْخَذُ مِن أغْنِيَائِهِمْ فَتُرَدُّ علَى فُقَرَائِهِمْ، فإنْ هُمْ أطَاعُوا لكَ بذلكَ، فَإِيَّاكَ وكَرَائِمَ أمْوَالِهِمْ، واتَّقِ دَعْوَةَ المَظْلُومِ؛ فإنَّه ليسَ بيْنَهُ وبيْنَ اللَّهِ حِجَابٌ.الراوي : عبدالله بن عباس | المحدث : البخاري | المصدر : صحيح البخاريالصفحة أو الرقم: 1496 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه البخاري (1496) واللفظ له، ومسلم (19)
 
குறிப்பு 2)
 
ثلاثٌ لا تُرَدُّ دعوتُهُم الصَّائمُ حتَّى يُفطرَ والإمامُ العادلُ ودعْوةُ المظلومِ تُحمَلُ علَى الغَمامِ و تُفتَحُ لها أبوابُ السَّماءِ و يقولُ اللهُ تباركَ وتعالى وعزَّتي وجلالي لأنصرَنَّكَ ولَو بعدَ حينٍ .الراوي : أبو هريرة | المحدث : ابن حجر العسقلاني | المصدر : الفتوحات الربانية | الصفحة أو الرقم : 4/338 | خلاصة حكم المحدث : حسن | التخريج : أخرجه الترمذي (3598)، وابن ماجه (1752) باختلاف يسير، وأحمد (8030) مطولاً.
 
குறிப்பு 3)
 
أنَّ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم قالَ وهو في قُبَّةٍ له يَومَ بَدْرٍ: أنْشُدُكَ عَهْدَكَ ووَعْدَكَ، اللَّهُمَّ إنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ اليَومِ أبَدًا. فأخَذَ أبو بَكْرٍ بيَدِهِ، وقالَ: حَسْبُكَ يا رَسولَ اللَّهِ؛ فقَدْ ألْحَحْتَ علَى رَبِّكَ، وهو في الدِّرْعِ، فَخَرَجَ وهو يقولُ: {سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ * بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ} [القمر: 45، 46]. الراوي : عبدالله بن عباس | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 4877 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : من أفراد البخاري على مسلم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/