HOME      Khutba      துஆவும் தொழுகையும் வெற்றியின் வழிகள்! | Tamil Bayan - 723   
 

துஆவும் தொழுகையும் வெற்றியின் வழிகள்! | Tamil Bayan - 723

           

துஆவும் தொழுகையும் வெற்றியின் வழிகள்! | Tamil Bayan - 723


துஆவும் தொழுகையும் வெற்றியின் வழிகள்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : துஆவும் தொழுகையும் வெற்றியின் வழிகள்!
 
வரிசை : 723
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 24-06-2022 | 24-11-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்தப் தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் வேண்டியவனாக!
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மறுமையின் வெற்றியை நன்மையை அல்லாஹ்வுடைய அருளை அன்பை சொர்க்கத்தின் வெற்றியை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து அருள்வானாக! நம்முடைய பெற்றோரின் பாவங்களை மன்னிப்பானாக! முஃமினான ஆண்கள் பெண்களுடைய பாவங்களை மன்னிப்பானாக! சொர்க்கத்தின் பாதையை அல்லாஹுதஆலா நமக்கு எளிதாக்கி தருவானாக! ஆமீன்.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
مَا كَانَ اللَّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَى مَا أَنْتُمْ عَلَيْهِ حَتَّى يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ
 
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் நம்பிக்கையாளர்(களாகிய உங்)களை அல்லாஹ் விட்டுவிடுபவனாக இல்லை. (சோதனையின்) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். (அல்குர்ஆன் 3 : 179)
 
எவ்வளவு அழகான ஒரு வசனம்! எவ்வளவு அழகான நினைவூட்டல்! இந்த வசனம் எப்பொழுது இறங்கியது? மக்காவிலிருந்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் துரத்தப்பட்டார்களே. 
 
மதினாவில் வந்து ஈமான் இஸ்லாமின் அடிப்படையில் நிம்மதியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், மக்காவுடைய சிலை வணங்கிகள் ஹிஜ்ரத் செய்து சென்றவர்களை அந்த ஊரில் பிறந்தவர்களாக இருந்தாலும், அந்த ஊரில் சொந்தக்காரர்களாக இருந்தாலும், ஒரே மொழி உடையவர்களாக இருந்தாலும், ஒரே குலத்தை உடையவர்களாக இருந்தாலும், ஈமான் கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த மக்காவுடைய காஃபிர்கள் இந்த முஸ்லிம்களை பகைத்தார்கள்.
 
அல்லாஹுதஆலா இப்படியும் சொல்லிக் காட்டுகின்றான்.
 
وَمَا تَنْقِمُ مِنَّا إِلَّا أَنْ آمَنَّا بِآيَاتِ رَبِّنَا لَمَّا جَاءَتْنَا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
 
“இன்னும், எங்கள் இறைவனின் அத்தாட்சிகளை - அவை எங்களிடம் வந்தபோது - நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகவே தவிர எங்களை நீ பழிக்கவில்லை.” “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் பணிந்தவர்களாக) எங்க(ள் உயிர்க)ளை கைப்பற்று!” (அல்குர்ஆன் 7 : 126)
 
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் என்ற ஒரே காரணத்திற்காக தான் இத்தனை கொடுமைகளை அந்த மக்காவுடைய காஃபிர்கள், ரஸூலுல்லாஹ்வின் மீதும் அந்த ஸஹாபாக்கள் மீதும் செய்தார்கள். வேறு எந்த காரணமும் இல்லை. வேறு எந்த குற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை.
 
இது ஷிர்க் உடைய இயற்கை. இணைவைத்தல் என்ற குணத்தின் பிரதிபலிப்பு. அந்த குணத்தின் வெளிப்பாடு அப்படித்தான். 
 
காரணம், இணைவைத்தல் என்பது நேரடியாக ஷைத்தானிடமிருந்து இப்லீஸ் இடமிருந்து வரக்கூடியது. இஸ்லாம் ஈமான் அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து அல்லாஹ்வின் அடியார்களை சொர்க்கத்தின் பக்கம் அழைப்பதற்காக அல்லாஹ் கொடுத்த உண்மையான நேரான சத்தியமான அறிவுப்பூர்வமான நீதமான ஒழுக்கமான பாதை. அந்தப் பாதையில் செல்வது ஷைதானுக்கு பிடிக்காது.
 
எனவே, ஷைத்தான் தூண்டி விடுவான்; கிளப்பிவிடுவான்; உசுப்பேத்தி விடுவான். அல்லாஹ் கூறுகிறான்:
 
أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُّهُمْ أَزًّا
 
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நிராகரிப்பவர்கள் மீது ஏவி விட்டுள்ளோம். அவை அவர்களை (பாவத்தின் பக்கம்) தூண்டுகின்றன. (அல்குர்ஆன் 19 : 83)
 
யார், இந்த இணைவைப்பாளர்களாக குறிப்பாக அதில் வரம்பு மீறி செயல்பட கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது அல்லாஹு தஆலா ஷைத்தான்களை ஏவி விட்டு விடுகிறான்.
 
அந்த ஷைத்தான்கள் அந்த காஃபிர்களை -இறை நிராகரிப்பாளர்களை பிடித்து இழுத்து அவர்களைத் தூண்டிக் கொண்டே இருப்பான். அவர்களை அவன் இயக்கிக் கொண்டே இருப்பான். 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்வதற்காக திட்டங்கள் தீட்டினார்கள். யாரை அமீன் சாதிக் என்று அழைத்தார்களோ, யாருடைய தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களோ, யாருடைய குலமும் வம்சமும் அறியப்பட்டதாக இருந்ததோ, யாருடைய உயர்ந்த குணங்களும் பண்புகளும் அறியப்பட்டதாக இருந்ததோ, அந்த நபியை கொல்வதற்கு திட்டம் தீட்டினார்கள் என்றால், இந்த குஃப்ர் ஷிர்க் எத்தகைய ஒரு காழ்புணர்ச்சியை வெறுப்புணர்ச்சியை உள்ளத்தில் ஏற்படுத்தும் பாருங்கள்.
 
இஸ்லாம் ஈமான் எனபது, அன்பை வளர்க்கக்கூடிய கருணையை வளர்க்கக்கூடிய ஒரு கொள்கை. காரணம், இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. அல்லாஹ்வோ ரஹ்மானாக ரஹீமாக இருக்கிறான். 
 
ஆகவேதான், பெரிய வித்தியாசத்தை பார்க்கிறோம்; ஒருவர் ஈமானை ஏற்றுக் கொண்ட உடனேயே, அவரது உள்ளத்தில் வரக்கூடிய அந்த கருணை. அவரிடம் ஏற்கனவே இருந்த அந்த முரட்டுக் குணம், சண்டித்தனம், அவருடைய வம்பு, இன்னும் எத்தனை ஒரு கொடூர குணங்கள் இருந்ததோ, அந்த குணத்தில் இருந்து அப்படியே விலகி, அவருடைய உள்ளம் பன்படுத்தப்பட்டதாக, பக்குவப்படுத்தப்பட்டதாக, பரிசுத்தமானதாக மாறுகிறது என்றால், அதற்கு காரணம் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அந்த தூய கலிமாவை ஏற்ற உடனேயே அவருடைய உள்ளத்தை அல்லாஹுதஆலா கழுவி விடுகிறான். சுத்தப்படுத்தி விடுகிறான்.
 
அவருடைய உள்ளத்தை நற்குணங்களால் அல்லாஹு தஆலா ஷைத்தானுடைய ஆதிக்கத்திலிருந்து பாதுகாத்து விடுகிறான். இந்தத் தூய திரு கலிமாவை சொன்னவுடனேயே அவருடைய உள்ளத்தை அத்தனை கெட்ட இச்சைகளிலிருந்து, அத்தனை கெட்ட எண்ணங்களிலிருந்து அல்லாஹு தஆலா பாதுகாத்து விடுகிறான்.
 
ஆகவேதான், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களுக்கு அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
 
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் மக்காவிலிருந்து துரத்தப்பட்டார்கள். அவர்கள் விருப்பத்தோடு வெளியேறவில்லை. நிர்ப்பந்த படுத்தபட்டு, வேறு வழி இல்லாமல், அல்லாஹ்வை அந்த பூமியில் வணங்க முடியவில்லை, பிறகு தங்களுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை; அடுத்த தலைமுறைக்கு குர்ஆனை சொல்லித்தர முடியாது; தொழுகையை சொல்லித்தர முடியாது; நோன்பை வெளிப்படையாக வைக்க முடியாது; இப்படியாக பல நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டபோதுதான் மக்காவிலிருந்து வெளியேறினார்கள்.
 
يَاعِبَادِيَ الَّذِينَ آمَنُوا إِنَّ أَرْضِي وَاسِعَةٌ فَإِيَّايَ فَاعْبُدُونِ
 
நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக எனது பூமி விசாலமானது. ஆகவே, என்னையே (கலப்பற்ற முறையில்) நீங்கள் வணங்குங்கள்! (அல்குர்ஆன் 29 : 56)
 
இந்த மக்காவில் என்னை அவர்கள் வணங்க முடியவில்லை என்றால் இங்கிருந்து அவர்கள் ஹிஜ்ரத் செய்யட்டும் என்று அல்லாஹு தஆலா அனுமதி கொடுத்தவுடன், தங்களுடைய மார்க்கத்திற்காக, ரப்பை வணங்குவதற்காக, அந்த ஊரை விட்டு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் வெளியேறினார்கள். 
 
இந்த இடத்தில் மிகப் பெரிய முக்கியமான படிப்பினை இருக்கின்றது. முஃமின்கள் சந்திக்கக்கூடிய சோதனை, பொதுவாக மனிதர்கள் சந்திக்கக்கூடிய சோதனை போல் இருக்குமேயானால், அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதற்கு ஒரு விதி இருக்கிறது. அதற்கு ஒரு ஏற்பாடு இருக்கிறது. அதற்கு ஒரு சட்டம் இருக்கிறது.
 
இன்னொன்று, அவர்கள் மூஃமினாக இருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணுகிறார்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறார்கள் என்று ஈமானுக்காக அவர்கள் தொந்தரவு கொடுக்கப்பட்டால் இப்போது அல்லாஹ்வுடைய விதி அல்லாஹ்வுடைய சட்டம் ஒன்றாக இருக்கும். 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையில் இதைத்தான் படிப்பினையாக பார்க்கிறோம்.
 
அல்லாஹு தஆலா குர்ஆனில் வசனங்களை இறக்கினான். முதலாவதாக, எதை நாம் இன்று செய்யவில்லையோ, அதை தான் முதலாவதாக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் செய்தார்கள். 
 
நாம் எல்லாமே நம்முடைய சக்திக்கு உட்பட்டது; நம்முடைய திட்டத்திற்கு உட்பட்டது; நம்முடைய அறிவுக்கு உட்பட்டது என்று எண்ணுகிறோம். நம்முடைய திறமையை நம்முடைய அனுபவத்தை அங்கே முன்வைக்க பார்க்கிறோம். 
 
அல்லாஹ்வுடைய உதவியை முதலாவதாக முஸ்லிம்களே மதிப்பதில்லை. அதனுடைய மதிப்பை சக்தியை முஸ்லிம்களாகிய நாம் உணரவில்லை. அதற்குண்டான அந்த மகத்துவத்தை நாம் கொடுக்கவில்லை.
 
அல்லாஹு தஆலா குர்ஆனுடைய வசனம் இறங்கி, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கு இதைத்தான் உணர்த்துகிறான்.
 
உங்களுடைய தொடர்பை அல்லாஹ்வுடன் ஏற்படுத்துதல்; அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தல்; உங்களுடைய கரங்களை அல்லாஹ்வின் பக்கம் உயர்த்துதல். நமது திட்டங்கள் உண்மையில் சிறந்த திட்டமாக இருக்கலாம். மிகவும் அனுபவப்பூர்வமான அறிவுப்பூர்வமான திட்டமாக இருக்கலாம்.
 
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்; அல்லாஹ்விடத்தில் கெஞ்சப்பட்டு கதரப்பட்டு மன்றாடி வேண்டப்பட்டு அல்லாஹ்வுடைய உதவி நம்முடைய திட்டத்தில் சேரவில்லை என்றால், அந்தத் திட்டம் குப்பை. அந்தத் திட்டத்தால் எந்த நன்மையும் நமக்கு வரப்போவதில்லை.
 
எந்த திட்டத்தில் எந்த யோசனையில் அல்லாஹ்வுடைய உதவி சேருமோ, அப்போதுதான் நமக்கு வெற்றி கிடைக்கும். அந்தத் திட்டம் தான் நிலைக்கும். அந்தத் திட்டத்தை தான் அல்லாஹு தஆலா அதன் எல்லை வரை கொண்டு சேர்ப்பான்.
 
அப்படி இல்லையென்றால், ஒரு தலைமுறை மட்டுமல்ல, இன்னும் எத்தனை தலைமுறை திட்டங்களைத் தீட்டிக் கொண்டு இருந்தாலும் சரி, காலங்கள் இப்படித்தான் சென்று கொண்டே இருக்கும். நடக்கப்போவது எதுவும் கிடையாது. 
 
நடப்பதெல்லாம் நம்முடைய திட்டங்களுக்கு எதிராகவும் பாதகமாகவும் இருக்குமே தவிர, நம்முடைய பாதுகாப்புக்காக இருக்காது.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா சூழ்ச்சிகளை திருப்பக் கூடியவன். இரவை பகலாக மாற்றக்கூடியவன். பகலை இரவாக மாற்றக் கூடியவன். அவன் திட்டங்களை மாற்றுவதற்கு எந்த ஒரு நேரமும் தேவையில்லை; சிரமமும் இல்லை.
 
நீங்கள் நபிமார்களுடைய வாழ்க்கையை எடுத்து படித்துப் பாருங்கள். ஒவ்வொரு நபியும் தன்னுடைய உம்மத்துக்கு இதைத்தான் சொன்னார்கள். முதலாவதாக, நீங்கள் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள்.
 
நீங்கள் குர்ஆனில் பார்க்கலாம்; மூஸா நபி உடைய வரலாறை இன்னும் சில நபிமார்களுடைய வரலாறை திரும்பத் திரும்ப அல்லாஹு தஆலா சொல்லிக்கொண்டே இருப்பான்.
 
காரணம், இந்த நபிமார்கள் எல்லாம் எதிரிகளால் அச்சுறுத்தப் பட்டார்கள். பலர் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். 
 
எப்படி முந்தைய நபிமார்கள் இடத்தில் வேறு வழி இல்லையோ அதைத் தான் இன்று நாமும் இருக்கிறோம். துஆவைத் தவிர, தொழுகையைத் தவிர, வணக்க வழிபாடுகளை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். 
 
நம்முடைய நிர்ப்பந்தத்தை அல்லாஹ் அறிந்தவன். எது நம்முடைய சக்திக்கு உட்பட்டதாக இருக்கிறதோ, அதில் நாம் நூற்றுக்கு நூறு குறை உள்ளவர்களாக இருக்கிறோம். எது நம்முடைய சக்தியில் இல்லையோ அதை நாம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தேட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
 
மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்தார்கள்.
 
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
 
என் இறைவா! அநியாயக்கார கூட்டத்தாரிடம் இருந்து என்னை நீ பாதுகாத்து கொள்வாயாக! (அல்குர்ஆன் 28 : 21)
 
அன்று அவர்கள் கேட்ட இந்த துவா உடைய அர்த்தத்தை உணருங்கள். நமது காலத்திற்கு இந்த வசனம் நமக்கு இப்போது இறக்கப்பட்டது போன்று இருக்கும்.
 
وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ
 
இன்னும், மூஸா கூறினார்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் (ஆடம்பர) அலங்காரத்தையும் செல்வங்களையும் கொடுத்தாய். எங்கள் இறைவா! அவர்கள் உன் பாதையில் இருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (அவற்றை பயன்படுத்துகிறார்கள்). எங்கள் இறைவா! அவர்களின் பொருள்களை நாசமாக்கு! இன்னும், அவர்களுடைய உள்ளங்களை கடினமாக்கி (அவற்றின் மீது முத்திரையிட்டு) விடு! ஆக, அவர்கள் துன்புறுத்தக்கூடிய தண்டனையை (கண்ணால்) காணும் வரை, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 10 : 88)
 
அல்லாஹு தஆலா உடைய கட்டுப்பாட்டில் வானம் பூமி காற்று இருக்கிறது. இன்னும், எல்லாம் அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. 
 
ஒரு முஃமின் அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்து, அந்த இறையச்சத்தோடு அவர்கள் அல்லாஹ்விடத்தில் கையேந்தி விட்டால், இந்த பிரபஞ்சத்தையே இந்த பூமியில் இருந்து சேவை செய்யக் கூடியதாக, பாதுகாக்க கூடியதாக, இவர்களின் எதிரிகளுக்கு எதிராக அல்லாஹு தஆலா திருப்பி விடுவான்.
 
இன்று நம்முடைய கரங்கள் அல்லாஹ்விற்கு முன்னால் மிக பலவீனமாக உயர்த்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வுடைய உதவி வருமா? என்ற நிராசையோடு கை உயர்த்தப்படுகிறது. ஏதோ நடந்து கொண்டிருக்கிறது; நடக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற பலகீனமான நம்பிக்கையில் நாம் இருக்கிறோம்.
 
அப்படி அல்லாஹு தஆலா விடவில்லை. நம்மையும் அப்படி விட சொல்லவில்லை. சத்தியம் எது? அசத்தியம் எது? அல்லாஹு தஆலா பிரித்து அறிவிக்க விரும்புகிறான். 
 
நாம் சத்தியத்திற்காக துஆ செய்ய வில்லை என்றால், அல்லாஹ்வுடைய இஸ்லாம் ஈமான் ஓங்க வேண்டும் என்று நாம் துஆ செய்யவில்லை என்றால், முஃமின்களுக்கு கண்ணியம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று, முஃமின்கள் உடைய மதிப்பும் கண்ணியமும் திரும்ப கிடைக்க வேண்டும் என்று துஆ செய்ய வில்லை என்றால், நாம் உண்மையில் ஈமானையே இஸ்லாமையே உணரவில்லை என்று பொருள்.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
 
அவன், தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான், - எல்லா மார்க்கங்களைப் பார்க்கிலும் அதை மேலோங்க வைப்பதற்காக. இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே! (அல்குர்ஆன் 9 : 33)
 
என்னுடைய இந்த இஸ்லாம் ஓங்க வேண்டும்; இந்த இஸ்லாம் உயரவேண்டும்; இந்த இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற துஆ ஒரு முஃமின் இடத்தில் இல்லை என்றால், முயற்சி இல்லை என்றால், அதற்கான அழுகை இல்லை என்றால், அவன் இஸ்லாமை புரிந்து கொள்ளவே இல்லை.
 
அவன் வெறும் சம்பிரதாயமாக பின்பற்றிக் கொண்டு இருக்கிறானே தவிர, அவனுடைய மார்க்கத்தைப் பற்றிய வலிமையை, அவனுடைய மார்க்கத்தைப் பற்றிய கண்ணியத்தை அவன் உணரவில்லை.
 
நபிமார்களை அல்லாஹ் அனுப்பியது, முஃமின்கள் இப்படியே ஈமானின் நிலையில் இருப்பதற்கு அல்ல. மூஃமின்கள் இப்படியே துன்பப் படுத்தப்பட்டு கொல்லப்பட்டு இருப்பதற்காக அல்ல. ஈமானை உயர்த்துவதற்காக, மூஃமினை உயர்த்துவதற்காக.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ
 
அல்லாஹ்விற்கு கண்ணியம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய ரஸூலுக்கு கண்ணியம் இருக்கிறது. முஃமின்களுக்கு கண்ணியம் இருக்கிறது. (அல்குர்ஆன் 63 : 8)
 
அல்லாஹ்வுடைய ராணுவம் தான் அல்லாஹ்வுடைய பட்டாளம் தான் அல்லாஹ்வுடைய கட்சியை சார்ந்தவர்கள் தான் என்றுமே வெற்றி கொள்வார்கள் என்று அல்லாஹ் நமக்கு சொல்லி இருக்கிறான்.
 
அப்படி இருக்க எப்படியும் வாழலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்பதற்குப் பெயர் அல்ல பொறுமை என்பது. அல்லாஹ்விடத்தில் கையேந்தாமல், அந்த சூழ்நிலையை அல்லாஹு தஆலா உருவாக்க மாட்டான். 
 
லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
 
قَالَ رَبِّ انْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ
 
அவர் கூறினார்: “என் இறைவா! கெட்ட செயல்களை செய்கிற மக்களுக்கு எதிராக எனக்கு நீ உதவி செய்!” (அல்குர்ஆன் 29 : 30)
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் இப்படி துஆ செய்கிறார்கள்:
 
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
 
“எங்கள் இறைவா! நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! (அவர்கள் மூலம் எங்களை தண்டித்துவிடாதே! அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே! அவர்கள் எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள்!) இன்னும், எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.) (அல்குர்ஆன் 60 : 5)
 
ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள். 
 
قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَاشُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَارِهِينَ (88) قَدِ افْتَرَيْنَا عَلَى اللَّهِ كَذِبًا إِنْ عُدْنَا فِي مِلَّتِكُمْ بَعْدَ إِذْ نَجَّانَا اللَّهُ مِنْهَا وَمَا يَكُونُ لَنَا أَنْ نَعُودَ فِيهَا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّنَا وَسِعَ رَبُّنَا كُلَّ شَيْءٍ عِلْمًا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِينَ
 
அவருடைய சமுதாயத்தில் பெருமையடித்(து நம்பிக்கையை புறக்கணித்)த பிரமுகர்கள், “ஷுஐபே! உம்மையும் உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது, நீங்கள் (அனைவரும்) எங்கள் கொள்கைக்கு நிச்சயம் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள். “நாங்கள் (அந்த கொள்கையை தவறு என்று தெரிந்து அதை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று (ஷுஐபு) கூறினார்.
 
“உங்கள் கொள்கைக்கு நாங்கள் திரும்பினால் - அல்லாஹ் எங்களை அதிலிருந்து பாதுகாத்த பின்னர் - நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டி(யவர்களாகி) விடுவோம். இன்னும், எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடியே தவிர நாங்கள் அதில் திரும்புவது எங்களால் முடியாது. எங்கள் இறைவன் ஞானத்தால் எல்லாவற்றையும் விட விசாலமானவன். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) இருந்தோம். எங்கள் இறைவா! எங்களுக்கிடையிலும் எங்கள் சமுதாயத்திற்கிடையிலும் நியாயமாக தீர்ப்பளி! நீ தீர்ப்பளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.” (அல்குர்ஆன் 7 : 88,89)
 
ஒரு சப்தத்தை எழுப்பி அல்லாஹு தஆலா ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிர்த்த அந்த மக்களை சின்னாபின்னமாக ஆக்கிவிட்டான்.
 
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களது இன்னொரு அறிவுரையும் நாம் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். துஆவை அவர்கள் சொல்லிக் கொடுத்தது போன்று, தொழுகையில் கவனமாக இருக்கும்படி, தொழுகையை சரியாக தொழும்படி, தங்களுடைய கூட்டத்தவர்களுக்கு அறிவுரை சொன்னார்கள்.
 
நம்முடைய தொழுகைக்கும், நம்முடைய உலக காரியங்களின் வெற்றிக்கும், உலக காரியங்களில் மேலோங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கு புரியாது. இங்கே அல்லாஹு தஆலா சொல்லிக்காட்டுகிறான்: 
 
وَأَوْحَيْنَا إِلَى مُوسَى وَأَخِيهِ أَنْ تَبَوَّآ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
 
இன்னும், மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம்: “நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்திற்காக எகிப்தில் (பல) வீடுகளை அமையுங்கள்! இன்னும், (அந்த) உங்கள் வீடுகளை தொழுமிடங்களாக ஆக்குங்கள்! இன்னும், தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு (அல்லாஹ்வின் உதவியும் சொர்க்கமும் உண்டு என்று) நற்செய்தி கூறுவீராக!” (அல்குர்ஆன் 10 : 87)
 
எத்தனை வசனம் பாருங்கள். அல்லாஹுதஆலா கூறுகிறான். இது எப்போது ஃபிரவுனுடைய அநீதி உச்சத்தை எட்டிய போது, சொல்லிக்காட்டுகிறான்.
 
அன்பிற்குரியவர்களே! இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், குறிப்பாக இந்த இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற சோதனை காலங்களில் அல்லாஹ்விடத்தில் அதிகமதிகமாக இரவு நேரங்களில், தொழுகைகளில், எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், அல்லாஹ்வுடைய தீனுக்காக, முஸ்லிம்களுடைய உயர்வுக்காக, நம்முடைய ஈமானின் உயர்வுக்காக, அந்த கண்ணியத்திற்காக, அல்லாஹ்விடத்தில் மன்றாடி இதை வேண்டுவது.
 
தொழுகையை முறையாக சரியாக அதனுடைய நிபந்தனைகளோடு நிறைவேற்றுவது. இது கண்டிப்பாக நம்மை ஒருங்கிணைக்கும். நமக்கு அந்த ஈமானிய சக்தியைக் கொடுக்கும். அல்லாஹ்வுடைய தொடர்பை நமக்கு புதுப்பித்து, உறுதிப்படுத்தி கொடுக்கும்.
 
அல்லாஹு தஆலா நாம் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை அவன் ஏற்படுத்திக் கொடுப்பான். நம்முடைய மார்க்கம் ஓங்குவதற்கு உண்டான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பான். அவன் ஏற்படுத்திக் கொடுத்து விட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது.
 
அல்லாஹ்வுடைய தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது. தள்ளிப்போட முடியாது. அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்கு உதவி செய்ய கருணை காட்ட போதுமானவன். அல்லாஹ்விடத்தில் திரும்புவோமாக!
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா ஈமானுக்கும், இஸ்லாமுக்கும், முஃமின்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கண்ணியத்தையும், உயர்வையும், தந்தருள்வானாக! காஃபிர்களின் அனைத்து விதமான கெடுதல்களில் இருந்து, குழப்பங்களிலிருந்து, ஈமானை இஸ்லாமை முஸ்லிம்களை பாதுகாத்து அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/