HOME      Khutba      மானக்கேடான செயலைத் தடுத்து நிறுத்துவீர்! | Tamil Bayan - 725   
 

மானக்கேடான செயலைத் தடுத்து நிறுத்துவீர்! | Tamil Bayan - 725

           

மானக்கேடான செயலைத் தடுத்து நிறுத்துவீர்! | Tamil Bayan - 725


மானக்கேடான செயலைத் தடுத்து நிறுத்துவீர்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : மானக்கேடான செயலைத் தடுத்து நிறுத்துவீர்!
 
வரிசை : 725
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 01-07-2022 | 01-12-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாகவும், உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாகவும் இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுபஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நமக்கும் நம்முடைய மார்க்கத்திற்கும் உயிரையும் பொருளையும் பாதுகாத்து தந்தருள்வானாக! கண்ணியமான வாழ்க்கையை அல்லாஹ் இந்த உலகத்திலும் கொடுத்து, மறுமையின் வாழ்க்கையை இதைவிட சிறப்பான வாழ்க்கையாக நம் அனைவருக்கும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
இந்த உலகத்தில் முஸ்லிம்கள் ஏன் உருவாக்கப்பட்டார்கள்? முஸ்லிம்களுடைய பொறுப்பு, முஸ்லிம்களுடைய கடமை என்ன? அன்றாட வணக்க வழிபாடுகளை அவர்கள் செய்வது, தனது மனைவி மக்களுக்காக பொருளாதாரத்தை தேடுவது.
 
இதுதான் அவர்களுடைய கடமையா? அல்லது இதற்கு மேலாக இந்த உலகத்தை குறித்து, இந்த உலக மக்களை குறித்து அவர்களுக்கு அல்லாஹு தஆலா ஏதாவது பொறுப்பு சாட்டி இருக்கிறானா என்றால், அல்குர்ஆன் அதற்கு நமக்கு விடை அளிக்கிறது.
 
ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
 
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
 
(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்களோ பாவிகள்தான். (அல்குர்ஆன் 3 : 110)
 
நீங்கள் உலக சமுதாயத்தில் சிறந்த சமுதாயம். இந்த உலகத்தில் தோன்றிய மக்களிலேயே நீங்கள் சிறந்த மக்கள். நீங்கள் பிரபஞ்சத்தில் உள்ள இந்த மக்களுக்காக வேண்டி உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். 
 
உலகத்தில் அல்லாஹ் சுபஹானஹு வதஆலா முஸ்லிம்கள் மீது உண்டான பொறுப்பை மட்டும் கொடுக்கவில்லை. உலக மக்களுடைய பொறுப்பை அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கிறான்.
 
அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த கொள்கையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், உலக பிரபஞ்ச உருண்டையில் எந்த இடத்தில் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுடைய பொறுப்பு அவர்களுடைய சீர்திருத்தம் ஒரு முஸ்லிமின் மீது சுமத்தப்பட்டுள்ளது. 
 
அல்லாஹு தஆலா அடுத்து சொல்லித் தருகிறான்; உங்களுடைய கடமை, உங்களுடைய பணி என்ன? உங்களுடைய அடையாளம் என்ன? நீங்கள் நன்மையை‌ மக்களுக்கு ஏவிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
நன்மையை ஏவுவது என்பது, முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் செய்து கொள்ளக் கூடிய ஒரு கடமை அல்லது ஒரு நல்ல காரியம் என்பதாக பலர் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். 
 
ஆனால், அப்படி அல்ல. நன்மையை ஏவுவது என்பது, தீமையை தடுப்பது என்பது, உலக மக்கள் எல்லோருக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை. அவர்களை நன்மையின் பக்கம் அழைப்பதும், அவர்களை தீமையில் இருந்து தடுப்பதும் அல்லாஹு தஆலா  இந்த மார்க்கத்தின் மூலமாக நம் மீது சுமத்திய கடமை. 
 
நபிமார்கள் முதலாவதாக, தவ்ஹீதை உலக மக்களுக்கு ஏவ வேண்டும் என்று படைக்கப்பட்டார்கள். அது மட்டுமல்ல, தவ்ஹீதோடு அவர்களுடைய தாவா பணி நின்று விட்டதா என்றால் கண்டிப்பாக இல்லை.
 
தவ்ஹீதை தொடர்ந்து இன்னும் என்னென்ன நன்மைகள் பொதுவாக இந்த சமுதாயத்தில் இருக்க வேண்டுமோ, அந்த நன்மைகளையும் நபிமார்கள் ஏவினார்கள். இன்னும் எந்தெந்த தீமைகளால் அல்லாஹ்வுடைய கோவம் இந்த உலகத்தில் உடனடியாக இறங்குமோ, எந்த குற்றங்களால், உலகத்தில் சீர்கேடுகள், ஒழுங்கீனங்கள், இன்னும் பல வன்முறைகள், கொடுமைகள், சமுதாய பாவங்கள் நிகழுமோ அவற்றையும் தடுக்கும்படி அல்லாஹு தஆலா  நபிமார்களுக்கு கட்டளை கொடுத்தான். அந்த நபிமார்களும் அதை செய்தார்கள்.
 
இறைத்தூதர்களில் யாரும், வெறும் தவ்ஹீதை மட்டும் ஏவியவர்களாக, தொழுகையை மட்டும் ஏவியவர்களாக சென்று விடவில்லை. மாறாக, தங்களுடைய சமுதாயத்தில் காணப்பட்ட பாவங்களை, குற்றங்களை, சமூக சீர்கேடுகளை அவர்கள் கண்டித்து இருக்கிறார்கள். 
 
இன்னொரு விஷயம் என்னவென்றால், நமக்கு அனுப்பப்பட்ட நம்முடைய நபியின் வரலாறையே அறியாத மக்களாக தான் நாம் இருக்கிறோம். நமக்கு அனுப்பப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறை குர்ஆனிலிருந்து  சுன்னாவிலிருந்து சீராவிலிருந்து படித்து, ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய வாழ்க்கைக்கு அந்த சீராவிலிருந்து எனக்கு என்ன படிப்பினை?
 
என்பதையாவது கற்று அறிந்து புரிந்து வைத்திருக்கிறோமா? நம்முடைய மண்டையில் நாம் ஏற்றி வைத்திருக்கிறோமா?
 
எதற்கு அனுப்பப்பட்டார்கள்? என்ன செய்தார்கள்? அவருடைய தாவா பணி எப்படி இருந்தது? சமூக சீர்திருத்த பணி எப்படி இருந்தது?
 
எதிரிகளோடு அவர்களுடைய தொடர்பு எப்படி இருந்தது? போர் எப்படி செய்தார்கள்? சமாதானம் எப்படி செய்தார்கள்? குற்றவாளிகளை எப்படி தண்டித்தார்கள்? கண்டித்தார்கள்? குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது? 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக மட்டும் தான் இருந்தார்களா? அவர்களோடு நபித்துவத்தோடு, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகள் என்ன? 
 
இப்படி ஏதாவது நேரத்தை ஒதுக்கி, கற்று புரிந்து ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால், மிக கவலையாக இருக்கிறது.
 
நம்மில் ஒரு கூட்டம் மவ்லூதுக்கும் மீலாதுக்கும் மட்டும் ரசூலுல்லாஹ்வை வைத்திருக்கிறார்கள் என்றால், இன்னொரு கூட்டம், விரலை ஆட்டுவதற்கும், நெஞ்சில் தக்பீர் கட்டுவதா, அல்லது இறக்கி கட்டுவதா என்று சண்டை போடுவதற்கும், ரமலான் மாதத்தில் தராவீஹ் எட்டா? 21? என்று சண்டை போடுவதற்கு மட்டும் தான் ரசூலுல்லாஹ்வை வைத்திருக்கிறார்களே தவிர, இதற்கு மேலாக என்னுடைய நபி எனக்கு என்ன பணியை விட்டு சென்றார்கள்? என்னென்ன நற்பண்புகளை விட்டுச் சென்றார்கள்? என்ன சமூக சீர்திருத்தத்துடைய‌ சமூக செயல்பாட்டை விட்டு சென்றார்கள்? இதையெல்லாம் படித்திருக்கிறோமா?
 
இப்படி இருக்கும் பொழுது, குர்ஆனில் அல்லாஹு தஆலா  நமக்கு ரசூலுல்லாஹ்வை முன்மாதிரி என்று சொல்லி, ரசூலுல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள் என்று சொல்லி, இன்னும் இந்த குர்ஆனில் 25 நபிமார்களின் வரலாறுகளை திரும்பத் திரும்ப சொல்கிறான். 
 
அதை சிந்தித்து பார்க்க எங்கே நேரம் இருக்கும்? ரசூலுல்லாஹ் உடைய வாழ்க்கையையே படித்துப் பார்க்க நேரமில்லை சிந்தித்துப் பார்க்க நேரமில்லை என்றால், குர்ஆனில் இத்தனை நபிமார்கள் உடைய வரலாறை ஒன்னுக்கு பலமுறை அல்லாஹு தஆலா  ஏன் சொல்கிறான்? 
 
அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளில், அவர்களுடைய அழைப்பு பணியில், படிப்பினை இல்லை என்றால், அதை ஏன் அல்லாஹு தஆலா  படிப்பினைகள் நிறைந்த, நேர்வழிகள் நிறைந்த, உபதேசங்கள் நிறைந்த வேதம் என்ற போற்றப்படக்கூடிய அவன் இந்த குர்ஆனில் நமக்கு ஏன் சொல்ல வேண்டும்? 
 
சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஷுஐப் அலைஹி வஸல்லம் குர்ஆனில் அதிகமாக நினைவு கூறப்படுகின்ற நபிமார்களில் ஒருவர்.
 
அவர்கள் தங்களுடைய சமுதாய மக்களுக்கு முன் வந்து, முதலாவதாக சொன்னார்கள்:
 
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَاقَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ وَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ (84) وَيَاقَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ 
 
இன்னும், ‘மத்யன்’ (வாசிகளு)க்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. இன்னும், அளவையிலும் நிறுவையிலும் (பொருள்களை) குறைக்காதீர்கள். நிச்சயமாக நான், நல்லதொரு வசதியில் உங்களை காண்கிறேன். நிச்சயமாக நான், சூழ்ந்து விடக்கூடிய ஒரு நாளின் தண்டனையை உங்கள் மீது பயப்படுகிறேன்.”
 
என் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாக (அவற்றில் பொருள்களை குறைக்காமல்) முழுமைப்படுத்துங்கள். இன்னும், மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். இன்னும், நீங்கள் பூமியில் விஷமிகளாக (-மக்களுக்கு கெடுதிவிளைவிப்பவர்களாக) இருக்கும் நிலையில் எல்லை மீறி விஷமம் (கலகம், அடவாடித்தனம்) செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 11 : 84,85)
 
இன்னொரு இடத்தில் அல்லாஹு தஆலா  இப்படி சொல்லி காட்டுகிறான்:
 
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَاقَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
‘மத்யன்’க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐப்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக வந்து விட்டது. ஆகவே, அளவையையும் நிறுவையையும் முழுமையாக்குங்கள். இன்னும், மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறை(த்து கொடு)க்காதீர்கள். இன்னும், பூமியில் அது சீர்திருத்தப்பட்(டு அதில் சமாதானம் ஏற்பட்)ட பின்னர் கலகம் (குழப்பம், சீர்கேடு) செய்யாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நான் கூறும் உபதேசங்களாகிய) இவை உங்களுக்கு சிறந்ததாகும்.” (அல்குர்ஆன் 7 : 85)
 
இந்த வசனங்களில் அல்லாஹு தஆலா ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம் அவர்களுடைய தாவாவைப் பற்றி சொல்லிக் காட்டுகிறான். 
 
அவர்கள் தங்களுடைய மக்களுக்கு சொன்னார்கள்; மக்களே! இவ்வளவு பெரிய வியாபாரம் வர்த்தகம் செய்கிறீர்களே! அல்லாஹு தஆலா  உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பரக்கத்துகளை வழங்கி இருக்கிறானே!
 
நீங்கள் மக்களிடத்தில் கொடுக்கல் வாங்கல் செய்யும் பொழுது, நிலுவையை நிறுத்து கொடுக்கும் பொழுது, அல்லது அளந்து கொடுக்கும் பொழுது நீங்கள் நீதமாக அளந்து கொடுங்கள், நீதமாக நிறுத்துக் கொடுங்கள்.
 
மக்களுக்கு அவர்களுடைய செல்வத்தைக் குறைத்து, அவர்களுக்கு மோசடி செய்யாதீர்கள்; உங்களுடைய அளவிலும் மோசடி செய்யாதீர்கள்; உங்களுடைய நிலுவையிலும் மோசடி செய்யாதீர்கள். 
 
அப்படி செய்தால் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய தண்டனையை நான் உங்களுக்கு பயப்படுகிறேன். இப்படி நீங்கள் அளவையில் நிறுவையில் மோசடி செய்வது, வர்த்தகத்தில் வாக்கு மாறுவது, குழப்பம் செய்வது, இது நீங்கள் இந்த பூமியில் செய்யக்கூடிய மிகப்பெரிய சீர்கேடு. 
 
இப்படி செய்யாதீர்கள் என்பதாக வியாபாரியாகிய தங்களுடைய மக்களை எச்சரித்தார்.
 
தொழுங்கள், நோன்பு வையுங்கள், அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொல்லிவிட்டு தங்களுடைய பணி முடிந்ததாக அவர்கள் நினைக்கவில்லை. மாறாக அந்த மக்கள் என்ன ஒரு பாவங்களை செய்து கொண்டிருந்தார்களோ அதையும் கண்டித்தார்கள்.
 
وَلَا تَقْعُدُوا بِكُلِّ صِرَاطٍ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ مَنْ آمَنَ بِهِ وَتَبْغُونَهَا عِوَجًا وَاذْكُرُوا إِذْ كُنْتُمْ قَلِيلًا فَكَثَّرَكُمْ وَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ
 
“இன்னும், நீங்கள் எல்லாப் பாதையிலும் (மக்களை) அச்சுறுத்தியவர்களாகவும்; அல்லாஹ்வின் பாதையை விட்டு அவனை நம்பிக்கை கொண்டவரை தடுப்பவர்களாகவும்; இன்னும், அதில் கோணலைத் தேடியவர்களாகவும் அமராதீர்கள். இன்னும், நீங்கள் குறைவாக இருந்தபோது அவன் உங்க(ள் எண்ணிக்கைக)ளை அதிகமாக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். இன்னும், கலகம் செய்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று கவனியுங்கள்!” (அல்குர்ஆன் 7 : 86)
 
பாதைகளில் அமர்ந்து கொண்டு வம்புத்தனம் செய்வது, அங்கே அழுச்சாட்டியம் செய்வது, தொந்தரவு செய்வது, மக்களுக்கு மத்தியில் கழகம் செய்வது, நம்பிக்கையாளர்களை இம்சிப்பது, இப்படிப்பட்ட பாவங்களையும் ஷுஐப் அலைஹி வஸ்ஸலவாத்து வஸல்லம் மக்களைப் பார்த்து கண்டித்தார்கள்.
 
அதுபோன்று, இன்னொரு நபியை பற்றி அல்குர்ஆனில் அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான்.
 
இது இன்னும் ஒரு முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. எந்த ஒரு தீமை எந்த ஒரு பாவம் இன்று உலக சமுதாய மக்களுக்கு மத்தியில் அங்கீகாரம் பெற்று மாறிக் கொண்டிருக்கிறதோ, அதற்காக பல நாடுகளில், ஏன்? பெரும் பெரும் நாடுகளுடைய சபைகளில் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் உரிமையாக்கப்பட வேண்டும் என்பதாக குரல் கொடுக்கப்படுகிறதோ அத்தகைய அந்த ஓரினச்சேர்க்கை என்ற மிகப்பெரிய குற்றம்.
 
அல்லாஹு தஆலா லூத் அலைஹிஸ்ஸலாம் என்ற ஒரு பெரிய நபியை இந்த கூட்டத்தார்கள் உடைய செயல்களை கண்டிப்பதற்காகவே அனுப்பி வைத்தான். 
 
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அதற்கு சற்று பக்கத்து ஊரில் தான் அவர்கள் தவ்ஹீத் உடைய அழைப்புப் பணியை செய்த அதே நேரத்தில், இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்களுடைய ரத்த உறவாகிய லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹு தஆலா இந்த தீய குற்ற செயலில் இருந்து மக்களை தடுப்பதற்குரிய நபியாகவே அல்லாஹ் விசேஷமாக அனுப்பி வைத்தான். 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ (80) إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ
 
இன்னும், ‘லூத்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் தம் சமுதாயத்தை நோக்கி, “மானக்கேடானதை செய்கிறீர்களா? உலகத்தாரில் ஒருவருமே இதில் உங்களை முந்தவில்லை. (உலகில் எவரும் இதற்கு முன் செய்யாத மானக்கேடான செயலை செய்கிறீர்களா?)” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக. “நிச்சயமாக நீங்கள் பெண்கள் அன்றி ஆண்களிடம் காமத்தை நிறைவேற்ற வருகிறீர்கள். மாறாக, நீங்கள் (பாவத்தில்) எல்லை மீறிய மக்கள்” என்று கூறினார். (அல்குர்ஆன் 7 : 80,81)
 
லூத் அலைஹிஸ்ஸலாம் தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறார்கள். கடைசியில் அந்த மக்கள் லூத் அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த அழைப்பை ஏற்கவில்லை. 
 
அந்த மக்களுடைய ஆண்களில் மட்டும் இந்த அசிங்கமான செயல் பரவி இருக்கவில்லை. அல்லாஹு தஆலா உடைய குர்ஆன் ஒரு கண்ணியமானது. அழகிய நடை உடையது. வெட்கம் நிறைந்த ஒரு வேதம் இது.
 
வரலாற்று ஆசிரியர்கள் இதை எழுதுகிறார்கள்; இமாம் தபரி பதிவு செய்கிறார்கள்; இந்த மானக்கேடான செயல் முதலாவதாக அவர்களுடைய பெண்களில் பரவியது. ஒரு பெண் தன்னுடைய இன்னொரு பெண்ணிடத்தில் தன்னுடைய ஆசையை தீர்த்துக் கொள்ள ஆரம்பித்தாள். அதைத்தொடர்ந்து அவர்களுடைய ஆண்கள் தங்களுடைய ஆண்கள் இடத்தில் ஆசையை தீர்த்துக் கொள்ள அவர்கள் நினைத்தார்கள். 
 
இப்படியாக, ஒரு ஆண் ஒரு ஆண் இடத்தில், ஒரு பெண் ஒரு பெண்ணிடத்தில், இத்தகைய ஒரு மோசமான இச்சையை தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு பழக்கம் அவர்களில் பரவியது. 
 
லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதிலிருந்து, அவர்கள் தவ்ஹீதை மட்டும் ஏவவில்லை. அவர்களுடைய அழைப்பு பணியை பற்றி குர்ஆனில் தொடர்ந்து இறுதிவரை அல்லாஹு தஆலா  எங்கே சொல்கிறானோ அங்கெல்லாம் அவர்கள் இந்த தீமையையும் கண்டித்தார்கள் என்று வருகிறது.
 
இப்ராஹிம் நபி பற்றி கூறப்பட்டால் தொடர்ந்து அப்படியே லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்லுவான்.
 
சொல்லக்கூடிய எல்லா இடங்களிலும், தங்களுடைய சமுதாயத்தை நோக்கி அவர்கள் செய்த இந்த சீர்திருத்த பணி; இத்தகைய ஒரு அசிங்கமான, மோசமான, மானக்கேடான, இறைவனுடைய கோபத்திற்குரிய செயலை நீங்கள் செய்யாதீர்கள்; விட்டுவிடுங்கள்; திருமணம் முடித்து உங்கள் காமத்தை தணித்துக் கொள்ளுங்கள் என்று அழகிய அறிவுரையை செய்தார்கள், எச்சரிக்கை செய்தார்கள். 
 
ஆனால், அந்த மக்கள் திருந்துவதாக இல்லை. குர்ஆனுடைய விரிவான வசனங்களை படித்துப் பாருங்கள். சுருக்கமாக சூரா ஹூதில் அல்லாஹு சுபஹானஹு வதஆலா சொல்லக்கூடிய வசனத்தை சிந்தித்துப் பாருங்கள்.
 
அல்லாஹ்வுடைய கோபம் அல்லாஹ்வுடைய அந்த தண்டனை அந்த மக்களுக்கு எப்படி இருந்தது என்பதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்;
 
فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ (82) مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ
 
ஆக, (லூத்துடைய சமுதாயத்தை அழிக்க) நம் கட்டளை வந்தபோது, அதன் மேல்புறத்தை அதன் கீழ்ப்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அதன் மீது (நன்கு) இறுக்கமாக்கப்பட்ட சுடப்பட்ட களிமண்ணினால் ஆன கற்களை மழையாகப் பொழிந்தோம். (அந்த கற்கள்) உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்டவையாகும். (நாம் இறக்கிய) அ(ந்த தண்டனையான)து அக்கிரமக்காரர்களிலிருந்து தூரமாக இல்லை. (அல்குர்ஆன் 11 : 82,83) 
 
அல்லாஹ் சொல்கிறான்; அந்த மக்களில் கீழ் உள்ளவர்களை மேல் உள்ளவர்களாக மாற்றி விட்டோம். மேல் உள்ளவர்களை கீழ் உள்ளவர்களாக மாற்றி விட்டோம். ஜிப்ரீல் அலைஹிவஸ்ஸல்லம் அவர்களை அனுப்பிவிட்டு அந்த ஊரை அப்படியே தலைகீழாக புரட்டி விட்டார்.
 
ஒரு வேதனை அல்ல, அதற்கு முன்பாக, அவர்கள் மீது கல்மழை இறக்கப்பட்டது. அந்த ஒவ்வொரு கல்லிலும், யார் மீது அந்த கல் விழ வேண்டும் என்று அந்த குற்றவாளியுடைய பெயரும் எழுதப்பட்டிருந்தது. அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டன.
 
இத்தகைய மோசமான தண்டனையை அந்த மக்கள் அனுபவித்தார்கள். 
 
இன்று, இந்த செக்குலர் படிப்பில் படிக்கக்கூடிய, கலப்பு பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் படிக்கக்கூடிய நம்முடைய மாணவ மாணவிகளுக்கு குர்ஆன் ஹதீஸினுடைய, இறையச்சத்தினுடைய, ஷரீயா உடைய கல்வி அவர்களுக்கு கொடுக்கப்படாததால், இத்தகைய அசிங்கமான மோசமான செயல்களை அங்கீகரித்து, அதற்காக குரல் கொடுக்கக் கூடியவர்களில் நம்முடைய சமுதாயத்தில் உள்ள பெண்களையும், ஆண்களையும் அங்கு பார்க்கிறோம் என்றால், (அல்லாஹ் பாதுகாப்பானாக!) நம்முடைய சமுதாயம் எந்த அளவுக்கு நன்மை ஏவுவதில் தீமையை தடுப்பதில் அலட்சியம் செய்திருக்கிறது!
 
இது மஸ்ஜிதுகளில் உள்ள இமாம்கள் மீது மட்டும் உள்ள கடமை அல்ல, அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது மட்டும் கடமை அல்ல. 
 
சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவர் மீதும் இந்த கடமை இருக்கிறது. அல்லாஹ் ஏவிய நன்மையை பிறர் மக்களுக்கு எடுத்துச் சொல்வது. அல்லாஹ் தடுத்த பாவத்தை குறித்து பிற மக்களை எச்சரிப்பது.
 
இது, நம்முடைய கடமை. ஈமானுடைய ஒரு பகுதி. ஈமானுடைய பிரிக்க முடியாத ஒரு பகுதி. நாம் இறை மறுப்பாளர்கள், இணை வைப்பவர்கள், நிராகரிப்பாளர்கள் என்று யாரைப் பார்த்தாலும் கூட, சமுதாயத்தில் பரவிக் கொண்டிருக்கின்ற அங்கீகாரம் தேடப்படுகின்ற இந்த ஒரு குற்றத்தை குறித்து, அவர்களுக்கு நாம் கடுமையாக எச்சரிக்கை செய்ய வேண்டும். 
 
இறைவனுடைய கோபத்திற்கு உண்டான செயல் என்பதாக அவர்களுக்கு அந்த மார்க்க அறிவுரையை கூற வேண்டும்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்னவென்று சொன்னார்கள் தெரியுமா?
 
«مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الفَاعِلَ وَالمَفْعُولَ بِهِ»
 
யார், லூத் நபியின் சமுதாயம் செய்த செயலை செய்பவராக நீங்கள் கண்டீர்களோ அந்த செயலை செய்தவனையும் நீங்கள் கொன்று விடுங்கள். அவன் யாரோடு செய்தானோ, அவனையும் நீங்கள் கொன்று விடுங்கள். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1456.
 
எப்படி கொல்வது? அறிஞர்கள் இடத்தில் பல விளக்கம் இருக்கிறது. அதில் இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்; 
 
இந்த குற்றவாளிக்கு ஏனைய மரண தண்டனை பெற்றவர்களுடைய அந்த சாதாரணமான தண்டனை இல்லாமல், அல்லாஹு தஆலா குர்ஆனில் எப்படி அந்த லூத் நபியுடைய அந்தக் கூட்டத்தார்களுக்கு தண்டனை கொடுத்ததாக சொல்கிறானோ, அதுபோன்று அந்த மனிதனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
 
ஒரு பாழடைந்த ஒரு வீட்டுக்கு கீழே கட்டி வைத்து, அவன் மீது அந்தசுவரை அந்த வீட்டை இடித்து விட வேண்டும். 
 
இப்படியான ஒரு தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதுபோன்று, மரண தண்டனை. கழுத்தை ஒரே வெட்டில் சிறைச்சேதம் செய்வது போன்று அல்லாமல் அவருடைய தண்டனை மிகக் கொடூரமாக இருக்க வேண்டும். அந்த குற்றவாளிகளுக்கு படிப்பினை வரவேண்டும். அந்த செயலை செய்வதற்குரிய துணிவு அடுத்தவர்களுக்கு வரக்கூடாது. 
 
இன்று, எந்த ஒரு தவறாக இருக்கட்டும், விபச்சாரமாக இருக்கட்டும், அல்லது இதுபோன்ற ஓரினச் சேர்க்கையாக இருக்கட்டும், யார் விரும்பி செய்கிறார்களோ அவர்களோடு மட்டும் நடந்து விடாது.
 
சமீபத்தில் வந்த ஒரு பத்திரிக்கை செய்தி; ஏறக்குறைய ஜெர்மன் நாட்டில் கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண் சிறுவர்கள் அங்கே உள்ள ஆண்களால் இந்த ஓரினச்சேர்க்கைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். 
 
இன்னும் உலகத்தில் நடக்கக்கூடிய குற்றங்களுடைய பட்டியல்களில் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்த எல்லா குற்றங்களும் அந்த குற்றங்களுக்கு உண்டான உரிமை கோரப்பட்டு, விபச்சாரமாக இருக்கட்டும் அல்லது இது போன்ற எந்த ஒரு பாவமான செயலாக இருக்கட்டும், அதற்கு  அங்கீகாரம் தேடப்பட்டு அதற்குப் பின்னால், அங்கே நடக்கக்கூடிய கொடுரங்களை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். 
 
ஆனால், அல்குர்ஆனை வேதமாக நம்பாதவர்கள், ரசூலுல்லாஹ்வை நபியாக ஏற்காதவர்கள், உரிமை என்று கூறி, அதை சுதந்திரம் என்று கூறி, எத்தகைய அசிங்கங்களையும், எத்தகைய கொடுமைகளையும். அவர்கள் சீரழித்துக் கொள்ள தயாராக இருப்பார்கள். 
 
அதனால் என்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சரி, எத்தனையோ நோய்கள் பற்றி எழுதுகிறார்கள். அதனால் ஏற்படுகின்ற ஆபத்துகளை பற்றி எழுதுகிறார்கள். உடல் ரீதியான கோளாறுகளைப் பற்றி எழுதுகிறார்கள்.
 
விபச்சாரத்தின் மூலமாக பரவக்கூடிய, எய்ட்ஸ் போன்ற பல இன்னும் நோய்களைப் பற்றி எழுதுகிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு புத்தி வருமா? என்றால் வராது. 
 
காரணம், அவர்கள் மறுமையை நம்பாதவர்கள்; அவர்கள் ஆகிரத்தை நம்பாதவர்கள்; அல்லாஹ்வை நம்பாதவர்கள்; வேதத்தை நம்பாதவர்கள்.
 
நாம் அப்படி அல்ல, அல்லாஹு தஆலா நமக்கு ஒழுக்கமான மார்க்கத்தை கொடுத்திருக்கிறான். அல்லாஹ்வை பயப்படும்படி அல்லாஹ் நமக்கு ஒழுக்கம் போதிக்கிறான். மறுமையை பயப்படும்படி அல்லாஹ் நமக்கு வழி காட்டுகிறான். 
 
நல்லவர்களுக்கு இறையச்சம் உள்ளவர்களுக்கு சொர்க்கத்தை தர அல்லாஹ் வாக்களிக்கிறான். குற்றவாளிகளுக்கு பாவிகளுக்கு அல்லாஹ் நரக தண்டனையை எச்சரிக்கை செய்கிறான். உலகத்திலும் அவர்களுக்கு தண்டனை உள்ளது என்பதை அல்லாஹு தஆலா  காட்டிக்கொண்டு தான் இருக்கிறான்.
 
ஆகவே, இந்த ஒரு பாவத்தையும் குற்றத்தையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எது உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் அல்லது நாட்டில் மாநிலத்தில் எங்கோ ஒரு முஸ்லிம் குடும்பத்தில் நடக்கிறது என்று நினைத்துக் நாம் கொண்டிருக்கிறோமோ, (அல்லாஹ் பாதுகாப்பானாக!) அந்த குடும்பங்களில் ஒரு குடும்பமாக நம்முடைய குடும்பம் ஆகிவிடும். 
 
இப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் தான், அல்லாஹ்வுக்கு பிடிக்காத அல்லாஹ் சபித்த அந்தப் பாவங்களை சமுதாயத்தில் இருந்து நாம் கலைய முடியும்; தடுக்க முடியும்.
 
அப்படி இல்லையென்றால், காற்றில் பற்றக்கூடிய தீயினுடைய உதாரணம் தான் நமக்கு ஏற்படும்.
 
நம்முடைய ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் அல்லாஹு தஆலா  வழிகேட்டில் இருந்து சமுதாயத்தில் நடக்கக்கூடிய சீர்கேடுகளில் இருந்து, குழப்பங்களில் இருந்து, சிறிய பெரிய குற்றங்களில் இருந்து பாதுகாப்பானாக!
 
மக்களுக்கு நன்மையை ஏவி, தீமையை தடுத்து, சத்தியத்தின் பக்கம் அழைக்கக்கூடிய நல்லவர்களாக, அல்லாஹு தஆலா  என்னையும் உங்களையும் உலக முஃமின்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/