HOME      Khutba      இப்ராஹீம் நபியின் தியாகம் | Tamil Bayan - 726   
 

இப்ராஹீம் நபியின் தியாகம் | Tamil Bayan - 726

           

இப்ராஹீம் நபியின் தியாகம் | Tamil Bayan - 726


இப்ராஹீம் நபியின் தியாகம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : இப்ராஹீம் நபியின் தியாகம்
 
வரிசை : 726
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 08-07-2022 | 08-12-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாகவும், உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாகவும்!
 
அல்லாஹ்வுடைய மார்க்க சட்டத்தை பின்பற்றி வாழும்படி, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழகிய வழிமுறையை பின்பற்றி வாழும் படியும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அவன் ஏற்றுக்கொண்ட நல்லவர்களில் என்னையும் உங்களையும் நம்முடைய பெற்றோர்களையும் குடும்பத்தாரையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பற்றி சொல்கிறான்:
 
وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا
 
அல்லாஹ் இப்ராஹீமை தன்னுடைய உற்ற நண்பனாக, நெருக்கமான தோழனாக எடுத்துக் கொண்டான். (அல்குர்ஆன் 4 : 125)
 
காரணம், அந்த இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வுக்கு, தான் உண்மையான அடிமை என்பதை நிரூபித்தார்கள். 
 
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
 
இன்னும், இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்ததை நினைவு கூர்வாயாக. ஆக, அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டுகிற) தலைவராக ஆக்குகிறேன்.” அவர் கூறினார்: “என் சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு).” (அதற்கு) அல்லாஹ் கூறினான்: “அநியாயக்காரர்களுக்கு எனது (இந்த) உடன்படிக்கை நிறைவேறாது.” (அல்குர்ஆன் 2 : 124)
 
மேலும், அல்லாஹ் அவர்களை இப்படி உயர்த்திக் கூறுகிறான்:
 
وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّى
 
இன்னும், (தனது தூதுத்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய ஏட்டில் உள்ளதைப் பற்றி அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா? (அல்குர்ஆன் 53 : 37)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ (120) شَاكِرًا لِأَنْعُمِهِ اجْتَبَاهُ وَهَدَاهُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
 
நிச்சயமாக இப்ராஹீம் நன்மையை போதிப்பவராக, அல்லாஹ்விற்கு மிக பணிந்தவராக, இஸ்லாமிய கொள்கையில் உறுதியுடையவராக இருந்தார். இன்னும் அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை. அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், நேரான பாதையில் அவரை அவன் நேர்வழி செலுத்தினான். (அல்குர்ஆன் 16 : 120,121)
 
அல்லாஹு தஆலா மிகப்பெரிய எஜமானன். அவனுக்கு மேல் வேறொரு எஜமானன் இல்லை. அவன் தான் நம்முடைய இறுதி எஜமானன். எல்லா எஜமானர்களுக்கும் அவன் எஜமானன். எல்லா அரசர்களுக்கும் அவன் அரசன்.
 
இந்த உலகத்தில் ஆட்சி அதிகாரம் செலுத்தக்கூடிய எல்லோரும், தங்களை மன்னர்கள் அரசர்கள் சக்கரவர்த்திகள் என்று பெருமை பேசிக் கொள்ளக் கூடிய எல்லோரும் அவனுடைய அடிமைகளே. அவன் ஒருவன் தான் உண்மையான அரசன்.
 
ஆட்சிகளுக்கு முழுமையான சொந்தக்காரன். எல்லா ஆட்சியும் அவனது கரத்தில் தான் இருக்கிறது.
 
அவன் கட்டளை இட்டால் தான் மழை பெய்யும். அவன் கட்டளை இட்டால் தான் காற்று வீசும். அவன் கட்டளை இட்டால் தான் பூமி முளைக்கச் செய்யும். எல்லாம் அவனுடைய கட்டளையைக் கொண்டு. அத்தகைய மாபெரும் அரசன் அல்லாஹ் மட்டும் தான்.
 
அந்த அல்லாஹ்விற்கு முற்றிலும் பணிவது தான் இஸ்லாம். ஏன்? எதற்கு? என்று கேட்காமல், யோசிக்காமல், ரப்பு உடைய கட்டளை இப்போது வந்து விட்டால், அதை செயல்படுத்துவது தான் அடிமைகளாகிய நமக்கு அழகு.
 
إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ
 
(இப்ராஹீமை நோக்கி) அவருடைய இறைவன், “நீ எனக்குப் பணிந்து (முஸ்லிமாகி)விடு!” என்று அவருக்குக் கூறியபோது, அவர் கூறினார்: “அகிலத்தார்களின் இறைவனுக்கு நான் பணிந்து (முஸ்லிமாகி) விட்டேன்.” (அல்குர்ஆன் 2 : 131)
 
அவனுக்குப் பணிவதற்கு முன்னால் யார் பெருமை அடிக்க முடியும்?
 
وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِنْ دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ
 
இன்னும், அவர்களில் யார் “நிச்சயமாக அவனை அன்றி நான்தான் கடவுள் என்று கூறுவாரோ அவருக்கு நரகத்தையே கூலியாக கொடுப்போம். இவ்வாறுதான், அநியாயக்காரர்களுக்கு கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 21 : 29)
 
அந்த ரப்புக்கு முன்னால் அவனுடைய இபாதத்தை விட்டு யார் பெருமை அடிக்க முடியும்? அப்படி பெருமை அடித்தால் அவருக்கு நரகம் தான்.
 
அவர் எத்தகைய பெரிய வானவராக இருந்தாலும் சரி, அவருக்கு நரகம் தான் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
 
நம்முடைய மார்க்கமே நமக்கு கட்டளை தான். அல்லாஹுதஆலா அவன் ஞானமானவன்; நுட்பமானவன்; ஆழ்ந்தறியக் கூடியவன்.
 
அடியார்களாகிய நமக்கு அவன் ஒரு சட்டத்தை கொடுத்தால், அவன் ஒரு வழிகாட்டலை கொடுத்தால், கண்டிப்பாக நமக்கு அதில் இவ்வுலகத்தின் உடைய மறு உலகத்தினுடைய நன்மை இருக்கின்ற காரணத்தினாலேயே அந்தக் கட்டளையை கொடுக்கிறானே தவிர, விளையாட்டாக வேடிக்கைக்காக பொழுதுபோக்குக்காக அல்ல.
 
يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
 
அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (அல்குர்ஆன் 2 : 185)
 
நம்முடைய நன்மைக்காக அல்லாஹு தஆலா சட்டத்தை கொடுக்கிறானே தவிர, நம்மை சிரமப் படுத்துவதற்காக அல்ல. அல்லாஹ்வுடைய ஒவ்வொரு சட்டமும் அப்படித்தான்.
 
ஒன்று, அந்த சட்டத்தால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கக்கூடிய அப்தியத் -நான் அல்லாஹ்விற்கு அடிமை; அல்லாஹ் எனக்கு எஜமானன் என்பதை நிரூபிப்பது அங்கே இருக்கும்.
 
இரண்டாவது, அடியார்கள் தங்களுக்கு மத்தியில், ஒருவர் மூலமாக ஒருவருக்கு நன்மை செய்வதாக இருக்கும். அல்லாஹ்வுடைய எந்த சட்டங்களை எடுத்துப் பார்த்தாலும் அந்தச் சட்டத்தால் ஒன்று, அல்லாஹ்விற்கு நீங்கள் உண்மையான நன்றியுள்ள விசுவாசமான அடிமை என்பதை நிரூபிப்பது அங்கே இருக்கும்.
 
பிறகு, அந்த சட்டத்தை அமல்படுத்துவதால் உங்களுக்கு நன்மை இருக்கும். உங்களுக்கு அங்கே பல அல்லாஹ்வுடைய அருள்கள் பரக்கத்கள் இருக்கும்.
 
உங்களால் உங்களை சுற்றி இருக்கக்கூடிய அடியார்களுக்கு, உங்களுடைய தாய் தந்தைக்கு, உங்களுடைய பிள்ளைகளுக்கு, உங்களுடைய குடும்பத்தார்களுக்கு, உங்களுடைய அண்டை வீட்டார்களுக்கு, உங்களுடைய சமூகத்திற்கு என்று மொத்த சமூகத்திற்கும் அங்கே நன்மை இருக்கும்.
 
மனிதர்களுக்கு நன்மை பயக்காத, சமூகத்திற்கு பலனளிக்காத, ஒரு மூடத்தனமான, மூட நம்பிக்கையான சட்டத்தை அல்லாஹ் இந்த தீனில் ஏற்படுத்தவில்லை.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
مَا كَانَ عَلَى النَّبِيِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ اللَّهُ لَهُ
 
நபியின் மீது, அல்லாஹ் அவருக்கு கடமையாக்கியதை செய்வதில் அறவே குற்றம் இருக்கவில்லை. இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் வழிமுறையை (நபியே! உமக்கும்) வழிமுறையாக ஆக்கப்பட்டது. அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்படுகிற தீர்ப்பாக இருக்கிறது. (அல்குர்ஆன் 33 : 38)
 
வெறும் தர்மசங்கடமாக ஆகிவிடும்படியான ஒரு சட்டத்தை அல்லாஹு தஆலா இந்த மார்க்கத்தில் ஏற்படுத்தவில்லை.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ
 
ஆக, அறியாமைக் காலத்தின் சட்டத்தையா அவர்கள் தேடுகிறார்கள்? (அல்லாஹ் உடைய சட்டங்களின் நீதியை சிந்தித்து புரிந்து அவற்றை) உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட சட்டத்தால் மிக அழகானவன் யார்? (அல்குர்ஆன் 5 : 50)
 
இந்த குர்பானி உடைய சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அங்கே சோதிக்கப் படுகிறார். ஒவ்வொரு நபியை அல்லாஹு தஆலா ஒவ்வொரு விதமாக சோதித்தான். எந்த நபியும் சோதிக்கப் படாமல் இல்லை. நபிமார்களே ரஸூல்மார்களே சோதிக்கப் பட்டார்கள் என்றால், நம்மை என்ன சொல்வது?
 
ஒன்று இருக்கிறது; விருப்பம் கொடுக்கப்பட்டு சோதிக்கப்படுவது. நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைத்து விடுவது. 
 
இன்னொன்று இருக்கிறது; நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைக்காமல் போவது. இது பெரிய சோதனை. 
 
இப்படி அல்லாஹு தஆலா நபிமார்களையும் சோதித்து இருக்கிறான் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்?
 
அப்படி அல்லாஹ் சோதிப்பதில் மிகப்பெரிய நன்மை இருக்கிறது என்பதை புரிய வேண்டும். நம்முடைய கல்பை, நம்முடைய உள்ளத்தை தனக்கென பரிசுத்தமாக்க விரும்புகிறான். 
 
எனவேதான், நான் விரும்பியதை அல்லது என்னுடைய மனது அல்லாஹ்வை மறந்து எதில் ஈடுபட்டு விடுமோ, அதிலிருந்து அல்லாஹ் என்னை தடுத்தான் என்பதை அடியார் புரிய வேண்டும்.
 
நீங்கள் விரும்பியதை நீங்கள் ஆசைப்பட்டதை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருந்து, அதனால் நீங்கள் அல்லாஹ்வை மறக்கும் படி நேர்ந்திருந்தால், அல்லாஹ்வின் சட்டங்களை மீறும் படி நேர்ந்திருந்தால், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு தூரமாகும் படி ஏற்பட்டிருந்தால், அது எத்தனை பெரிய நஷ்டம் என்பதை யோசித்துப் பாருங்கள்!
 
அல்லாஹ்வை விட்டு விலகுவதை விட, அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவதைவிட, என்ன பெரிய கேவலம் நஷ்டம் இருக்க முடியும்! அல்லாஹ்வுக்கு நெருக்கமாகுவதை விட வேறு என்ன பெரிய நற்பாக்கியம் மகிழ்ச்சி இருக்க முடியும்!
 
எது அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்குமோ, அல்லாஹ்விற்கு என்னை பிடித்தமாக்குமோ, என்மீது அல்லாஹ்விற்கு எது முஹப்பத்தை உண்டாக்குமோ, அதுதான் அடியாருடைய ஆசையாக எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.
 
எந்த ஆசையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த ஆசையை விட, அல்லாஹ்வின் ஆசை மிகைத்ததாக இருக்க வேண்டும்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மாரிய்யா கிப்தியா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலம் பிறந்த தன்னுடைய மகன் இப்ராஹிம் வாழவேண்டுமென்று விரும்பினார்கள். அவ்வளவு அன்பு அந்த பிள்ளை மீது வைத்திருந்தார்கள். 
 
«مَاتَ صَغِيرًا، وَلَوْ قُضِيَ أَنْ يَكُونَ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيٌّ عَاشَ ابْنُهُ، وَلَكِنْ لاَ نَبِيَّ بَعْدَهُ»
 
இந்தப் பிள்ளை இப்ராஹிம் உயிரோடு இருந்தால், அவனும் ஒரு நபியாக ஆவான் என்ற அளவிற்கு அந்தப் பிள்ளையின் மீது ஒரு எதிர்பார்ப்பு வைத்திருந்தார்கள். ஆனால் அல்லாஹு தஆலா அந்த பிள்ளையையும் கைப்பற்றிக் கொண்டான்.
 
அறிவிப்பாளர் : இஸ்மாயீல் இப்னு அபீ காலித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6194.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தக் குழந்தையை தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டு, கண்களில் இருந்து தண்ணீர் அப்படியே கொட்டிக் கொண்டிருக்கிறது. 
 
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் கேட்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நீங்களா என்று? அதற்கு அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்;
 
«إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ»
 
கண்கள் கண்ணீர் சிந்துகிறது. உள்ளம் கவலைப்படுகிறது. ஆனால், எங்களுடைய ரப்புக்கு எது மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அதைத் தவிர நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம். (1)
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1303.
 
நபிமார்கள் அந்த உயர்ந்த பக்குவத்தை ஒரு மன கட்டுப்பாட்டால் பெற்றார்கள்.  அப்படித்தான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹு தஆலா தனக்கென விசேஷமாக ஆக்க விரும்பினான்.
 
وَإِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْأَخْيَارِ
 
இன்னும், நிச்சயமாக அவர்கள், நம்மிடம் மிகச் சிறந்தவர்களான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தார்கள். (அல்குர்ஆன் 38 : 47)
 
அவர்களுடைய கல்பை அல்லாஹ் சோதிக்க விரும்பினான். இந்த கல்பில் என்ன இருக்கிறது? என்று அல்லாஹ் சோதிக்க விரும்பினான்.
 
குழந்தை பிறந்த உடனேயே, அந்தக் குழந்தை வளர்ந்து வரும் பொழுது, அல்லாஹு தஆலா சொல்கிறான்; இந்த குழந்தையை மக்காவில் சென்று விட்டு வாருங்கள் என்று. 
 
ஏதாவது, மறுத்துப் பேசி இருப்பார்களா? இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மாற்று யோசனையை அவர்கள் சிந்தித்து இருப்பார்களா? அல்லாஹ்விடம் Excus கேட்டிருந்தால் கொடுத்திருக்க மாட்டானா? கொடுத்திருப்பான். ஆனால், கலீலாக ஆகி இருக்க மாட்டார்கள்.
 
உடனே தயாராகிவிட்டார்கள். தன்னுடைய மனைவியை அழைத்துச் சென்று, அந்தப் பாலைவனத்தில் விட்டு விட்டு வருகிறார்கள். 
 
என்ன அழகான பொறுமை! அங்கே விட்டுவிட்டு வரும் பொழுது, சில பேரித்தம் பழமும். சில மிடர் தண்ணீரையும் தவிர, எந்த சொத்தையும் அவர்களுக்கு அங்கே விடவில்லை.
 
இங்கேதான் நாம் புரிய வேண்டும்; இன்று, நம்முடைய பிள்ளைகளிடத்தில் எதிலிருந்து நாம் பறிக்கப்படுவோமோ அத்தகைய செல்வத்தை அடிப்படையாக வைத்து, பிள்ளைகள் விஷயத்தில் நாம் கவனத்தை செலுத்துகிறோம்.
 
எந்த நபிமார்கள் தம்முடைய பிள்ளைகளுக்கு சொத்துக்களை விட்டுச் சென்றார்கள்? நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டியது வைக்க வேண்டியது, சொத்துக்களை அல்ல. செல்வங்களை அல்ல. அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டியது தவக்குலை யக்கீனை ஈமானை இஸ்லாமை இக்லாசை.
 
சொத்துக்களை பிள்ளைகளுக்கு விடக்கூடாதா? அப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லவில்லை. 
 
உங்களது பிள்ளைகளை கையேந்தக் கூடிய ஏழைகளாக விடுவதை விட, அவர்களை செல்வந்தர்களாக விடுவது சிறந்தது என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3936. 
 
அதற்க்கு எது பொருளல்ல; பிள்ளைகள் உடைய செல்வத்தில் கவனம் செலுத்தி, இந்த உலக விஷயங்களில் கவனம் செலுத்தி, மனிதர்களை நீங்கள் இஸ்லாமிலிருந்து தூரப்படுத்தி விடுவது; தக்வாவை கொடுக்காமல் இருப்பது; அவர்களுக்கு தவக்குலை கொடுக்காமல் இருப்பது; இஸ்லாமை போதிக்காமல் இருப்பது. அது பெரிய நஷ்டம்.
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அங்கே தன்னுடைய மனைவிக்கு கொடுத்தது தவக்குலை, யக்கீனை, ஈமானை கொடுத்தார்கள். 
 
ஹாஜரா அலைஹாஸ்ஸலாம் தனது கணவர் இடத்தில் கேட்கிறார்கள்; இப்ராஹீம்! எங்கே எங்களை விட்டுச் செல்கிறீர்? அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் அவர்களால் எதுவும் பேச முடியாது. திரும்பியவர்கள் திரும்பிப் பார்க்காமல் அப்படியே நிற்கிறார்கள்.
 
இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, இப்ராஹிம்! உங்களுக்கு அல்லாஹ் இந்த கட்டளையை கொடுத்திருக்கிறானா? உங்களுக்கு ஏவியது அல்லாஹ்வா? என்று கேட்கிறார்கள். 
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் திரும்பிய திசையிலேயே நின்று கொண்டு, தலை அசைக்கிறார்கள்; ஆமென்று.
 
உடனே சொன்னார்கள்; அப்படி என்றால் அவன் எங்களை வீணாக்கி விட மாட்டான். நாங்கள் வீணாகும் படி எங்களை விட்டு விட மாட்டான், நீங்கள் செல்லுங்கள் என்பதாக.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3365. 
 
அங்கே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் துஆ செய்து விட்டு செல்கிறார்கள்:
 
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
 
“எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். எங்கள் இறைவா! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்கு அவர்களுக்கு அருள் புரி! எங்கள் இறைவா! ஆகவே, மக்களின் உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! இன்னும், அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி!” (அல்குர்ஆன் 14 : 37)
 
துஆவைக் கொண்டு, எதையும் சாதிக்க முடியும், அல்லாஹ்விடமிருந்து பெற முடியும் என்பதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் சிறந்த உதாரணம். 
 
வயோதிகத்தில் துஆவைக் கொண்டே குழந்தையை அல்லாஹ்விடத்தில் இருந்து பெற்றார்கள். 
 
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
 
யா அல்லாஹ் சாலிஹான ஒரு குழந்தையை எனக்கு கொடு என்று அல்லாஹ்விடத்தில் கெஞ்சிக் கொண்டே இருந்தார்கள். (அல்குர்ஆன் 37 :100)
 
அல்லாஹு தஆலா அவர்களுடைய மலடியான மனைவியிலிருந்தே குழந்தையை பிறக்க வைத்தான்.
 
وَامْرَأَتُهُ قَائِمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنَاهَا بِإِسْحَاقَ وَمِنْ وَرَاءِ إِسْحَاقَ يَعْقُوبَ (71) قَالَتْ يَاوَيْلَتَا أَأَلِدُ وَأَنَا عَجُوزٌ وَهَذَا بَعْلِي شَيْخًا إِنَّ هَذَا لَشَيْءٌ عَجِيبٌ (72) قَالُوا أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ اللَّهِ رَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ إِنَّهُ حَمِيدٌ مَجِيدٌ
 
இன்னும், அவருடைய மனைவி (ஸாரா) நின்றுகொண்டிருந்தாள். ஆக, (வானவர்கள் கூறியதைக் கேட்ட பின்னர் லூத் நபியின் சமுதாயம் அழிக்கப்பட போவதையும், அதை அவர்கள் அறியாமல் இருப்பதையும் நினைத்து) அவள் சிரித்தாள். ஆக, அவளுக்கு (குழந்தையாக) இஸ்ஹாக்கையும்; இன்னும், இஸ்ஹாக்கிற்குப் பின்னால் (பேரனாக) யஅகூபையும் (வழங்குவோம் என்று) நற்செய்தி கூறினோம். அவள் கூறினாள்: “என் துக்கமே! நானுமோ கிழவியாகவும், என் கணவராகிய இவரோ வயோதிகராகவும் இருக்கும் நிலையில் நான் பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்!” (வானவர்கள்) கூறினார்கள்: “(இப்ராஹீமின் மனைவியே!) அல்லாஹ்வுடைய கட்டளையில் வியப்படைகிறீரா? அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருள்களும் (அபீவிருத்திகளும் இப்ராஹீமுடைய) வீட்டாரே உங்கள் மீது நிலவுக! நிச்சயமாக அவன் மகா புகழாளன், மகா கீர்த்தியாளன்.” (அல்குர்ஆன் 11 : 71-73)
 
இன்று, நமக்கு துஆ உடைய நம்பிக்கை இருக்கிறதா? இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொண்டாடுகிறோமே, அந்த இப்ராஹீம் உடைய வாழ்க்கையிலிருந்து என்ன படிப்பினையை பெற்றோம்?
 
பிறகு, அல்லாஹ்வுடைய கட்டளை வருகிறது. இஸ்லாம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களது கனவில் அறுப்பதாக பார்க்கிறார்கள். அங்கிருந்து வருகிறார்கள். மகனை அழைக்கிறார்கள். 
 
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ
 
ஆக, (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்தபோது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” (மகனார்) கூறினார்: “என் தந்தையே! உமக்கு எது ஏவப்படுகிறதோ அதை நீர் நிறைவேற்றுவீராக! இன் ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது) பொறுமையாக இருப்பவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.” (அல்குர்ஆன் 37 : 102)
 
அல்லாஹு அக்பர்! அல்லாஹ்விடத்தில் மகனை அறுக்கும் படி கட்டளை வந்த பிறகும் கூட, அல்லாஹ்விடத்தில் எதிர்த்துப் பேசவில்லை. மறு கேள்வி கேட்கவில்லை. வேறு யோசனை அவர்களுக்கு வரவில்லை.
 
இன்று, நம்முடைய நிலையை எடுத்து பாருங்கள். மார்க்கத்தில் எந்த சட்டம் சொல்லப்பட்டாலும், அந்த சட்டத்தை விடுவதற்கு மீள்வதற்கு மாற்று வழி இருக்கிறதா? என்று தேடக் கூடிய மனநிலை இன்று பெரும்பாலானவர்களுக்கு வந்திருக்கிறது.
 
ஜகாத் கொடுக்கக் கூடிய விஷயத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஹஜ்ஜுடைய விஷயத்தில் எடுத்து கொள்ளுங்கள். ஒரு சட்டம் கொஞ்சம் சிரமமாக தெரிந்து விட்டால், உடனே அந்த சட்டத்தை மாற்றுவதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? என்று தேடுகிறோம்.
 
அல்லாஹ்விற்கு என்று சிரமத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் இல்லை. ஆனால், நாம் தேடக்கூடிய இந்த அற்பமான கேவலமான மட்டமான அழிந்து போகக்கூடிய துன்யாவிற்காக எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இன்முகத்தோடு சந்தித்து தாங்கிக் கொள்ள தயாராகி விடுகிறோம்.
 
அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளுக்காக, ரப்பை திருப்திப்படுத்துவதற்காக நாம் சிரமப்பட வேண்டும்; அதில் நான் களைப்படைய வேண்டும்; அதற்காக நான் அர்ப்பணிப்பை செய்ய வேண்டும் என்ற மனப் பக்குவம் இல்லை. 
 
நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்; அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொண்டிருக்கிறோம்; அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கொடுக்க வேண்டும் என்று. நபிமார்களோடு நம்மை சேர்த்து வைக்க வேண்டுமென்று.
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அங்கே என்ன செய்தார்கள்?
 
فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنَادَيْنَاهُ أَنْ يَاإِبْرَاهِيمُ (104) قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (105) إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106) وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ
 
ஆக, அப்போது அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார். இன்னும், “இப்ராஹீமே!” என்று நாம் அவரை அழைத்தோம். “திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.” நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும். இன்னும், மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம். (அல்குர்ஆன் 37 : 103-107)
 
இந்த நபிமார்கள் வரலாறுகள் நமக்கு ஏன் சொல்லப்படுகின்றன? அவர்கள் சார்ந்த இந்த பெருநாள், இந்தத் தியாகம், இந்த குர்பானி, நமக்கு ஏன் ஒவ்வொரு ஆண்டும் அல்லாஹு தஆலா அதை குறிப்பிட்டு, நம்மை செய்யும்படி கட்டளை கொடுக்கிறான் என்றால், இது ஏனைய மதங்களைப் போல, ஏனைய சமூகங்களை போல, ஒரு சம்பிரதாயக் கொள்கை அல்ல. சம்பிரதாயமான சடங்கு அல்ல.
 
ஈமானுடைய உணர்வுகளை கொடுக்கக்கூடிய, இறையச்சத்தை கொடுக்கக்கூடிய, இக்லாஸை கொடுக்கக்கூடிய, அல்லாஹ்வுக்காக நான் என்னை அர்ப்பணிக்க வேண்டும் என்ற உணர்வைக் கொடுக்கக் கூடிய வணக்க வழிபாடுகள். சம்பிரதாயச் சடங்குகள் கிடையாது.
 
அத்தகைய ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு இபாதத்தாக இந்த குர்பானியை நாம் பார்க்க வேண்டும். இந்த ஹஜ் பெருநாளை ஆக்க வேண்டும். நம்மைப் பார்த்து அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய அடியான் என்பதை, நம்முடைய ஆசையை விருப்பத்தை அல்லாஹ்வுக்காக துறந்து, அல்லாஹ்வுடைய கட்டளைக்கு என்னுடைய வாழ்க்கையில் முதலிடம்; அதற்கு பிறகு தான் என்னுடைய உலகம் என்று, அந்த ஆஹிரத்தை முற்படுத்த கூடிய பக்குவத்திற்காக வேண்டி தான் இப்படிப்பட்ட இபாத்துக்களை அல்லாஹ் தருகிறானே தவிர, சடங்குகளுக்காக அல்ல.
 
சிரித்து மகிழ்ந்து கொண்டாடி, சுவையாக சாப்பிட்டுவிட்டு, கடந்து செல்வதற்காக இல்லை இந்த பெருநாட்கள். உடல் ரீதியான மகிழ்ச்சிகளும் சந்தோஷங்களும் இந்தப் பெருநாள்களில் இருப்பதோடு, என்ன ஒரு ஈமானிய மாற்றங்களை இந்த பெருநாட்கள் ஏற்படுத்த வேண்டுமோ, அந்த நல்ல மாற்றங்களை இந்த பெருநாட்களும் இந்த இபாதத்துகளும் நமக்குக் கொடுக்கவில்லை என்றால், அது வெறும் சடங்குகளாக தான் நாம் ஆக்கிக் கொண்டோம் என்ற பொருளே தவிர, அல்லாஹ்வுடைய இபாதத்தாக நாம் ஆக்கவில்லை.
 
அல்லாஹ்வுடைய இபாதத்தாக ஆக்கி இருந்தால், அதைக் கொண்டு நாம் அதை மாற்றி இருப்போம். அவனுடைய நெருக்கத்தை தேடியிருப்போம். அல்லாஹ் உடைய அன்பை தேடி இருப்போம். மறுமைக்கான மாற்றத்திற்கு உண்டான வழியாக நாம் அதை ஆகி இருப்போம்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அவன் நம் மீது கடமையாக்கிய ஒவ்வொரு இபாதத்தையும், ஒவ்வொரு வணக்க வழிபாட்டையும், ஈமானோடு, இக்லாஸோடு, இஸ்திகாமத்தோடு, உணர்வுகளோடு செய்யக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வானாக!
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா, இந்த நாட்டிலும் உலகத்திலும் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கு அவர்களுடைய ஈமானையும், இஸ்லாமையும், அவர்களுடைய செல்வத்தையும், உடைமைகளையும், பிள்ளைகளையும், குடும்பத்தையும், பாதுகாத்து அருள்வானாக! 
 
இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்யக்கூடிய ஒவ்வொருவருடைய சூழ்ச்சிகளையும் அவர்களுக்கு எதிராகவே அல்லாஹு தஆலா திருப்பி விடுவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَبْدِ العَزِيزِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا قُرَيْشٌ هُوَ ابْنُ حَيَّانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَيْفٍ القَيْنِ، وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ، فَقَبَّلَهُ، وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ»، ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ» رَوَاهُ مُوسَى، عَنْ سُلَيْمَانَ بْنِ المُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ [ص:84] عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخاري- 1303)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/