HOME      Khutba      முஹர்ரம் சிறப்புகள் சட்டங்கள் | Tamil Bayan - 730   
 

முஹர்ரம் சிறப்புகள் சட்டங்கள் | Tamil Bayan - 730

           

முஹர்ரம் சிறப்புகள் சட்டங்கள் | Tamil Bayan - 730


முஹர்ரம் சிறப்புகள் | சட்டங்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : முஹர்ரம் சிறப்புகள் | சட்டங்கள்
 
வரிசை : 730
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 29-07-2022 | 30-12-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்தத் தூதரின் கண்ணியத்திற்குரிய பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக! 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை வேண்டியவனாக, நேர்வழியை வேண்டியவனாக, இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக, சொர்க்கத்தை வேண்டியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவை பயந்து கொள்வது தக்வா உடைய வாழ்க்கையில் எல்லா நன்மைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. இறை நம்பிக்கை அல்லாஹ்விற்கு கட்டுப்படுதல் என்ற ஈமான் இஸ்லாம் ஆகிய இரண்டும் ஒரு மனிதனுக்கு மிக மிக அவசியமாகும்.
 
இந்த தக்வா என்ற இறையச்சத்தைக் கொண்டுதான் மனிதனுடைய இஸ்லாம் பாதுகாக்கப்படுகிறது. முழுமை அடைகிறது. தக்வாவில் ஒரு மனிதன் குறை செய்வானேயானால், அது அவனுடைய இஸ்லாமை பாதிப்படையச் செய்யும். ஈமானில் பாதிப்பை உண்டாக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வை அதிகம் அதிகம் அஞ்சக்கூடிய நல்லடியார்களில் என்னையும், உங்களையும், நம்முடைய குடும்பத்தார்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு சில நாட்களில் இன் ஷா அல்லாஹ். அல்லாஹ்வுடைய ஒரு புனித மாதத்தை நாம் அடைய இருக்கிறோம். 
 
அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான்:
 
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
 
நிச்சயமாக அல்லாஹ்விடம், வானங்களையும், பூமியையும் படைத்த நாளில், அல்லாஹ்வின் விதியில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் புனிதமான நான்கு மாதங்கள் உள்ளன. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அவற்றில் (-அம்மாதங்களில் பாவம் செய்து) உங்களுக்கு தீங்கு இழைக்காதீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இணைவைப்பவர்களிடம் போர் புரியுங்கள் அவர்கள் ஒன்றிணைந்து உங்களிடம் போர் புரிவது போன்று. நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9 : 36)
 
அல்லாஹு தஆலா இந்த நான்கு மாதங்களை உயர்வான, கண்ணியமான மாதங்கள் என்று சொல்லும் பொழுது, அந்த மாதங்களை குறிப்பிட்டு சொல்கின்றான். இந்த மாதங்களில் நீங்கள் பாவம் செய்யாதீர்கள். அநியாயம் செய்யாதீர்கள். உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் என்று.
 
அதற்கு என்ன பொருள் என்றால், இந்த மாதத்திற்கு அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய கண்ணியத்தை நீங்கள் பேணி நடந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த மாதங்களில் பாவம் செய்யாமல் மற்ற மாதங்களில் பாவம் செய்யலாம் என்று தவறான அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
 
ஏனென்றால், இந்த நான்கு மாதத்திற்கு அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக அல்லாஹு தஆலா இப்படி கூறியிருக்கிறான்.
 
உதாரணத்திற்கு, ஹஜ் உடைய காலகட்டங்களில் சண்டை சச்சரவு செய்யக்கூடாது. பாவம் செய்யக்கூடாது என்று அல்லாஹ் சொல்லுகிறான். (அல்குர்ஆன் 2 : 197)
 
அதற்கு யாரும் இப்படி தவறாக புரிந்து கொள்ளமாட்டார்கள்; ஹஜ் முடித்ததற்கு பிறகு சண்டை செய்து கொள்ளலாம், ஹஜ் முடித்ததற்கு பிறகு பாவம் செய்து கொள்ளலாம் என்று. 
 
அதுபோன்றுதான், இந்த நான்கு மாதங்களை குறித்து அல்லாஹு தஆலா நமக்கு வழிகாட்டுகின்றான்.
 
இந்த மாதங்களில் இறையச்சத்தை அதிகப்படுத்தும் விஷயங்களை நாம் செய்ய வேண்டுமே தவிர, அந்த இறையச்சத்தில் குறைவு செய்யக்கூடிய, நம்முடைய இபாதத்துகளை வீணாக்கக்கூடிய, வீணான காரியங்களில் ஈடுபட்டுவிடக் கூடாது.
 
இந்த 12 மாதங்களில் நான்கு மாதங்களை அல்லாஹ் புனித மாதங்கள் என்று சொல்லுகிறானே. அது என்னென்ன மாதங்கள்?
 
இன்று, நம் முஸ்லிம்களுடைய கல்வியறிவு, மார்க்க விஷயத்தில் எந்தளவு பலவீனமாக இருக்கிறது, எந்தளவு அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
 
நம்மில் பலருக்கு குறிப்பாக தொழக் கூடியவர்களுக்கு கூட, புனித மாதங்கள் என்ன என்று கேட்டால் பெரும்பாலானவருக்கு தெரியாத நிலை. 
 
இன்னும் மோசமான நிலை என்ன என்றால், ஆங்கில மாதங்கள் தெரியும்; தமிழ் மாதங்கள் தெரியும்; இஸ்லாமிய மாதங்கள் 12ஐ வரிசையாக சொல்லத் தெரியுமா என்றால் தெரியாது.
 
நம்முடைய மார்க்கத்தில் உள்ள ஒவ்வொரு அமல்களையும், அதனுடைய இல்ம்களை தெரிந்து கொள்வது அல்லாஹ்வுடைய வேதத்தை தெரிந்து கொள்வதாகும். 
 
இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இதனால் நமக்கு என்ன ஆகிவிடப்போகிறது? என்பதாக சிலர் எண்ணுகிறார்கள். அது மிகப்பெரிய தவறு. 
 
இதுதான் நிலையான நீதமான மார்க்கம் சட்டம் என்று அல்லாஹு தஆலா சொல்லும்போது, அதை அறிந்து கொள்வது, நான் இந்த புனித மாதத்தில் இருக்கிறேன் என்பதை உணர்வது. நம்முடைய இறை நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது.
 
இது சாதாரணமாக, அலட்சியமாக கடந்து செல்லக்கூடிய, கவனம் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு காரியமே அல்ல. 
 
எப்படி ரமலான் மாதத்தை அடைந்து விட்டால், நான் ரமலான் மாதத்தில் வந்து விட்டேன், ரமலானை அடைந்து விட்டேன் என்று உணர்த்தால்தான், அந்த ரமலான் உடைய சிறப்புகளை நாம் உள் வாங்கினால் தான் அது நமக்கு பயன் தரும்.
 
எப்படி அந்த ரமலானை பயன்படுத்துவோமோ, மதிப்போமோ அதுபோன்றுதான் இந்த புனித மாதங்களை எதிர்பார்ப்பதும், அந்த புனித மாதங்கள் வந்துவிட்டால் நான் அந்த புனித மாதத்தில் இருக்கிறேன் என்ற உணர்வைக் கொண்டு வருவதும் நன்மையான காரியங்களாகும்.
 
எப்படி நாம் மஸ்ஜிதுக்குள் வந்தால் மஸ்ஜிதில் இருக்கிறேன் என்ற உணர்வு, எப்படி நாம் ஹரமில் இருக்கிறோம் என்றால் ஹரமில் இருக்கிறோம் என்ற உணர்வு, எப்படி அரஃபாவில் முஸ்தலிஃபாவில் மினாவில் இருக்கிறோம் என்று அந்த இடத்தினுடைய புனிதத்தில், அந்த இடத்தினுடைய கண்ணியத்தின் உயர்வை நாம் உணர்ந்து நம்முடைய வழக்கத்தில் சரி படுத்தினால் தான் அங்கே நமக்கு ஈமானுடைய கவனம், அமலுடைய கவனம், இபாதத்தின் கவனம், இறையச்சத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற கவனம் நமக்கு வருமோ, அதுபோன்று தான் இந்த நேரத்தையும் நாம் உணர வேண்டும்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா வெள்ளிக்கிழமைக்காகவே வேண்டி ஒரு அத்தியாயத்தை இறக்கி, அதற்காக பல ஹதீஸ்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறப்பிட்டு கூறியிருக்கிறார்கள் என்றால், அந்த நாளை நாம் உணர வேண்டும். 
 
இன்று நான் வெள்ளிக்கிழமை அடைந்து விட்டேன். என்னை சுத்தப்படுத்துவதில் இருந்து, சூரா கஹ்ஃப் ஓதுவதிலிருந்து, அல்லாஹ்வுக்காக தயாராகுவதிலிருந்து, தொழுகைக்காக முன்கூட்டி வருவதிலிருந்து என்று நம்மை அந்த நாளுக்காக வேண்டி தயார் படுத்திக்கொள்கிறோம்.
 
ஏன், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நாளை ஏழு நேரங்களாக பிரித்து, முதலாவது நேரத்தில் வருபவருக்கு இந்த சிறப்பு, அடுத்த நேரத்தில் வருபவருக்கு இந்த சிறப்பு என்று இவ்வளவு சிறப்புகளை சொல்லுகிறார்கள். (1)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 881.
 
அப்படி என்றால், அந்த நேரத்தை, அந்த காலத்தை, அந்த மாதத்தை நாம் உணர வேண்டும். அதற்குள் செல்லும்போது, நம்முடைய ஈமானில் ஒரு புத்துணர்ச்சி, நம்முடைய ஈமானை அதிகப்படுத்த வேண்டும்; இபாதத்தை அதிகப்படுத்த வேண்டும். 
 
அல்லாஹ்வுடன் நான் நெருங்குவதற்கு, அல்லாஹ்வுடைய அச்சத்தை அடைவதற்கு அல்லாஹ் ஒரு காலத்தை, வாய்ப்பை நமக்கு கொடுத்திருக்கிறான் என்ற உணர்வை நாம் கொண்டு வர வேண்டும்.
 
ஆகவேதான், அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த விஷயத்தை, அல்லாஹ்வுடைய விதி புத்தகத்தில், ஒரு ஆண்டுடைய மாதங்கள் 12 மாதங்கள், அதில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்று வலியுறுத்தி கூறுகிறான். (அல்குர்ஆன் 9 : 36)
 
அந்த நான்கு மாதங்கள்; 1. துல்கஅதா 2. துல்ஹஜ் 3. முஹர்ரம் 4. ரஜப்.
 
துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் இந்த மூன்றும் தொடர்ந்து வரக்கூடிய மாதம். பிறகு ரஜப் தனியாக வரக்கூடிய மாதம்.
 
அல்லாஹு தஆலா இந்த மாதங்களை எப்படி அமைத்திருக்கிறான் என்றால், அறிஞர்கள் சொல்கிறார்கள்; ஆண்டுடைய இறுதி மாதத்தை புனித மாதமாக ஆக்கினான். அது துல்ஹஜ் உடைய மாதம். அதுபோன்று, ஆண்டுடைய முதல் மாதத்தையும் அல்லாஹு தஆலா புனித மாதமாக ஆக்கினான். அது முஹர்ரம் உடைய மாதம்.
 
இது, நம் இபாதத்தையும் ஈமானையும் அதிகப்படுத்துவதற்கு, அந்த உணர்வை கொண்டு வருவதற்கு மிகப்பெரிய ஒரு ஹிக்மத்தாக இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸை அபூ தர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
 
அபூ தர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் பல நுணுக்கமான பல தத்துவமான கேள்விகளை கேட்டு கல்வி கற்றவர்கள். 
 
பல ஸஹாபிகளிடமிருந்தும் பல கேள்விகள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு ஸஹாபிக்கும் ஒரு தனிப்பட்ட விசேஷம் உண்டு. அந்த ஸஹாபி அந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, ரஸூலுல்லாஹ் இடத்தில் அந்த கல்வியை தேடுவார்கள்.
 
இப்படி அல்லாஹு தஆலா ஸஹாபாக்கள் மூலமாக பலதரப்பட்ட கல்விகளை நமக்கு சேர்ப்பித்திருக்கிறான். அபூ தர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்படி என்றால், படைப்புகளைப் பற்றி, பல நுணுக்கமான சிறப்புகளைப் பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேள்வி கேட்டு அறிந்து கொண்டவர்கள். 
 
(நீங்கள் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஸஹாபாக்கள் ரஸூலுல்லாஹ் இடத்தில் கேட்ட கேள்விகளை பார்த்தால், அது ஒன்று ஈமானை, தக்வாவை, அமல்களை அதிகப்படுத்தக் கூடியதாக இருக்கும். இதைத் தவிர வெட்டியான கேள்விகளை, துன்யா சார்ந்த கேள்விகளை கேட்க மாட்டார்கள்.)
 
அபூ தர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹ்விடம் கேட்டார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! நான் இரவில் இபாதத் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். (அவர்கள் முழு இரவும் விழித்திருப்பதற்கு தயார் தான்.) இரவில் வணக்கத்திற்கு எந்த பகுதி சிறந்தது?
 
ஏனென்றால் சல்மான் ஃபார்சி உடைய சம்பவத்தை நீங்கள் பார்த்தால், சல்மானை படுக்க வைத்துவிட்டு, முழு இரவும் வணங்குவதற்காக இவர்கள் நின்று விடுகிறார்கள். அத்தகைய ஒரு தோழர். (2)
 
அறிவிப்பாளர் : வஹ்ப் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1968.
 
ஆனால், அந்த இரவு வணக்கத்திலேயே, எந்தப் பகுதிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எந்தப் பகுதியில் இபாதத்தை நான் அதிக படுத்த வேண்டும்? என்று கேட்கிறார்கள்.
 
பிறகு, மாதத்தில் எந்த மாதம் சிறந்தது? அல்லாஹ்வுடைய தூதரே! என்று கேட்கிறார்கள்.
 
(நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வை நெருங்கிக் கொண்டே இருக்க வேண்டும். மரணம் நம்மை நெருங்கிக் கொண்டே இருக்கிறது. நாம் நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளை கடந்து கொண்டிருக்கும் பொழுதும், நாம் மௌத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆயுள் முடியப்போகிறது.
 
ஆனால், அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நாம் அதிகமாக்கவில்லை என்றால், எத்தகைய பயங்கரத்தில் நாம் இருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கி நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
 
இப்படி நெருங்கிக் கொண்டிருக்கிற நாம், நம்முடைய அமலால், இபாதத்தால், தக்வாவால், அல்லாஹ்வுடைய முஹப்பத்தால், ரஸூலுடைய முஹப்பத்தால், மார்க்கத்தின் பற்றால், அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்களாக நாம் ஆகவில்லை என்றால், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குரிய அமல்களை நாம் வைத்திருக்கவில்லை என்றால், (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!) எவ்வளவு பெரிய ஆபத்தில் நாம் இருக்கிறோம்!)
 
ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வுடைய தூதரே! இரவில் எந்த பகுதி சிறந்தது? மாதத்தில் எந்த மாதம் சிறந்தது? 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
«أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلَاةُ اللَّيْلِ»
 
இரவில் மிகச் சிறந்த பகுதி அதன் நடுப்பகுதி. மாதங்களில் மிகச்சிறந்தது அல்லாஹ்வுடைய மாதம். அதைத்தான் நீங்கள் முஹர்ரம் என்று அழைக்கிறீர்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163.
 
இந்த முஹர்ரம் மாதத்தை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் பக்கம் சேர்த்ததிலிருந்து அதன் முக்கியத்தை நாம் உணர வேண்டும்.
 
எப்படி கஅபா அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்படுகிறது, ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அற்புதமாக கொடுக்கப்பட்ட ஒட்டகம் அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்படுகிறது, அப்படித்தான் இந்த முஹர்ரமுடைய மாதம் அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்பட்டு அதனுடைய கண்ணியம் நமக்கு வெளிப்படுத்தப் படுகிறது.
 
இன்னொரு ஹதீஸை அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 
முஹர்ரம் உடைய மாதம் அமல்களுக்கான மாதம். அந்த அமல்களிலேயே ரஸூலுல்லாஹ் அதிகமாக கவனம் செலுத்தி, இந்த முஹர்ரமுடைய மாதத்தில் செய்த அமல்கள் என்ன? இதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் பார்க்கிறோம்.
 
எப்படி இந்த மாதம் அல்லாஹ்வுடைய மாதம் என்று சேர்க்கப்பட்டதோ, அதுபோன்று எல்லா இபாதத்துகளும் அல்லாஹ்வுடைய இபாதத்துகள்தான். அல்லாஹ்விற்காக செய்யப்படக்கூடிய இபாதத்துகள் தான்.
 
ஆனால், அந்த இபாதத்துகளில் ஒரு இபாதத் இருக்கிறது. அல்லாஹ் விசேஷமாக தனக்கென விரும்பி, தன் பக்கம் இணைத்துக் கொண்ட இபாதத். 
 
அல்லாஹ் சொல்வதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ»
 
ஆதமுடைய மகன் செய்யக்கூடிய அமல்கள் எல்லாம் அவனுக்கு. ஆனால், நோன்பை தவிர. இந்த நோன்பிற்கு நான் கூலி கொடுக்கிறேன். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5927.
 
ஆகவே, இங்கே ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வழிகாட்டுதல்களை பார்க்கிறோம்.
 
ரமலான் மாதத்திற்கு பிறகு, நோன்புகளில் சிறந்த நோன்பு ஷஹ்ருல்லாஹில் முஹர்ரம் - அல்லாஹ்வுடைய இந்த முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படக்கூடிய நோன்பாகும். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163.
 
இந்த ரமலான் மாதம் நோன்பிற்கு பிறகு, இந்த முஹர்ரம் உடைய மாதத்தில் எவ்வளவு நம்மால் நோன்பு வைக்க முடியுமோ, திங்கள் கிழமை, வியாழக்கிழமை மட்டுமல்ல. மற்ற நாட்களில் நஃபிலான நோன்புகளை நாம் செய்ய முடியுமோ இந்த நோன்புகளைக் கொண்டு அந்த மாதத்தை கண்ணியப்படுத்துவது. இது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்தது; ஏற்றமானது.
 
அடுத்து, ஃபர்ளான ஐந்து நேர தொழுகைகளுக்குப் பிறகு, தொழுகைகளில் மிகச் சிறந்தது இரவு தொழுகை ஆகும். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டல்களில், மிகப்பெரிய ஒரு ஹிதாயத்தை நாம் இங்கே பார்க்கிறோம். இந்த முஹர்ரம் மாதத்தை எப்படி கண்ணியப்படுத்துவது என்று.
 
இந்த முஹர்ரம் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய இன்னொரு முக்கியமான அமலை பார்க்கிறோம். 
 
ஒருபுறம் இந்த முஹர்ரம் மாதத்தில் எல்லா நாட்களிலும் நோன்பிற்கு கவனம் செலுத்தினார்கள். இன்னொரு பக்கம், இந்த முஹர்ரமுடைய பிறை 10 இருக்கின்றது. அதை ஆஷூரா என்று நாம் அழைக்கிறோம்.
 
இந்த ஆஷூரா உடைய தினத்தை சடங்குகளுக்காகவும், உடல்களை சிதைத்து கொள்வதற்காகவும், இன்னும் பல விதமான ஷிர்க்கான -இணை வைத்தலுக்கான சடங்குகளை செய்வதற்காகவும் சிலர் அமைத்து வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
 
இஸ்லாமிற்கும், அவர்கள் செய்யக்கூடிய அந்த சடங்குகளுக்கும், அசிங்கமான மோசமான விகாரமான கலாச்சாரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் செய்வது முற்றிலும் சிலை வழிபாட்டு கலாச்சாரம். இஸ்லாமிய மார்க்கத்திற்கும் இதற்கும் அறவே எந்த சம்பந்தமும் இல்லை. எந்தத் தொடர்பும் இல்லை. 
 
அல்லாஹ்வுடைய தூதருடைய வழிகாட்டுதலிலோ, ஸஹாபாக்கள் உடைய வழிகாட்டுதலிலோ, எந்த இமாமுடைய வழிகாட்டுதலிலும் இல்லாமல், முழுக்க முழுக்க ஷிர்க்கில் இருந்து காப்பியடிக்கப்பட்ட, இருக்கக்கூடிய பித்கத்துக்களிலேயே மிக மோசமான அநாகரிகமான கலாச்சாரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். 
 
قَدِمَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ المَدِينَةَ، فَوَجَدَ اليَهُودَ يَصُومُونَ يَومَ عَاشُورَاءَ فَسُئِلُوا عن ذلكَ؟ فَقالوا: هذا اليَوْمُ الذي أَظْهَرَ اللَّهُ فيه مُوسَى، وَبَنِي إسْرَائِيلَ علَى فِرْعَوْنَ، فَنَحْنُ نَصُومُهُ تَعْظِيمًا له، فَقالَ النبيُّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: نَحْنُ أَوْلَى بمُوسَى مِنكُم فأمَرَ بصَوْمِهِ
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவிற்கு வந்தார்கள். இந்த முஹர்ரம் உடைய பத்தாவது பிறை அன்று, அன்றைய தினம் யூதர்கள் எல்லாம் நோன்பு வைத்திருந்தார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்: இந்த நாளில் நீங்கள் நோன்பு வைக்கிறீர்களே, ஏன்? என்று. அப்பொழுது அந்த யூதர்கள் பதில் சொன்னார்கள்:
 
இந்த நாள் ஒரு மகத்தான நாள். அல்லாஹு தஆலா மூஸா அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார்களையும் பாதுகாத்து, ஃபிர்அவுனையும் அவர்களுடைய சமூகத்தாரையும் அல்லாஹ் மூழ்கடித்தான். 
 
எனவே, மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாளில் நோன்பு நோற்றார்கள். எனவே, நாங்களும் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார்கள்.
 
அப்பொழுது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதைக் கேட்டவுடன் பதில் சொன்னார்கள்: உங்களைவிட மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு  நாங்கள் மிகவும் உரிமை உள்ளவர்கள்; மிகவும் அருகதை உள்ளவர்கள் என்று கூறினார்கள்.
 
இதைக் கூறிவிட்டு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், இந்தப் பத்தில் நோன்பு வைத்தார்கள். எப்பொழுது தெரிந்ததோ அதிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படியே தொடர்ந்தார்கள். ஸஹாபாக்களுக்கு நோன்பு வைக்க சொன்னார்கள். அடுத்த ஆண்டிலிருந்து அப்படியே அந்த நோன்பை பின்பற்றினார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2004, முஸ்லிம் - 1130.
 
அதுமட்டுமல்ல, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 
ما رَأَيْتُ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَومٍ فَضَّلَهُ علَى غيرِهِ إلَّا هذا اليَومَ؛ يَومَ عَاشُورَاءَ، وهذا الشَّهْرَ. يَعْنِي شَهْرَ رَمَضَانَ
 
ஒரு நாளைத் தேடிக் கொண்டு, அந்த நாள் எப்பொழுது வரும்? அந்த நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கவனம் செலுத்தி தேடினார்கள் என்றால், அது ஆஷூரா உடைய நாளை தவிர வேறொரு நாளை பார்க்கவில்லை. அதுபோன்று, ரமலானுடைய மாதத்தை தவிர வேறு ஒரு மாதத்தை பார்க்கவில்லை.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2006.
 
அதுமட்டுமல்ல, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஆஷூரா தினத்திற்கு சொன்ன சிறப்பு, அதில் அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை பற்றி இரண்டு ஹதீஸ்களை பாருங்கள்.
 
அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
صيامُ يومِ عاشُوراءَ، أحتسِبُ على اللهِ أن يكَفِّرَ السَّنةَ التي قَبْلَه
 
ஆஷூராவுடைய நோன்பு ஒரு வருட பாவத்தை போக்கிவிடுகிறது என்று நான் அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைக்கின்றேன்.
 
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.
 
பிறை பத்தில் நாம் வைக்கக்கூடிய அந்த நோன்பானது, ஒரு வருட பாவத்திற்கான கஃப்ஃபாராவாக இருக்கிறது.
 
அடுத்து, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொடுத்த முக்கியத்துவத்தை பற்றி, ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.
 
أَرْسَلَ النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إلى قُرَى الأنْصَارِ: مَن أصْبَحَ مُفْطِرًا، فَلْيُتِمَّ بَقِيَّةَ يَومِهِ، ومَن أصْبَحَ صَائِمًا، فَليَصُمْ. قالَتْ: فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، ونُصَوِّمُ صِبْيَانَنَا، ونَجْعَلُ لهمُ اللُّعْبَةَ مِنَ العِهْنِ، فَإِذَا بَكَى أحَدُهُمْ علَى الطَّعَامِ، أعْطَيْنَاهُ ذَاكَ حتَّى يَكونَ عِنْدَ الإفْطَارِ
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா உடைய பகலில், அதாவது, மதினாவை சுற்றி இருக்கக்கூடிய அன்சாரிகளுடைய கிராமங்களுக்கு அறிவிப்பு செய்பவர்களை அனுப்பினார்கள்.
 
யார், இன்று நோன்பு வைத்திருந்தார்களோ, அல்ஹம்து லில்லாஹ் அவர் நோன்பை பரிபூரணப்படுத்தட்டும். யார், நோன்பு இல்லாமல் இருந்தாரோ, அவருடைய மீதம் உண்டான நாளில் அந்த நோன்பை கொண்டு பரிபூரணப்படுத்தட்டும். 
 
அதற்குப் பிறகு நாங்களும் அந்த நாளில் நோன்பு வைப்போம். எங்களுடைய சிறு பிள்ளைகளையும் நோன்பு வைக்க ஏவுவோம். நாங்கள் மஸ்ஜிதுக்கு அவர்களை (பிள்ளைகளை) அழைத்து சென்று, பஞ்சில் அவர்களுக்கு விளையாட்டு சாமான்களை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் பசியில் அழுவார்களேயானால், அவர்களுக்கு அந்த விளையாட்டு சாமான்களை கொடுத்து, அவர்களை நாங்கள் இஃப்தார் வரைக்கும் அப்படியே இழுத்துக் கொண்டு வந்து விடுவோம் என்று ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
 
அறிவிப்பாளர் : ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1960.
 
அடுத்து, இந்த முஹர்ரமை பற்றி இன்னும் நிறைய சிறப்புகள் இருக்கின்றன. அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த மாதத்தை சிறப்பிப்பதற்கும், அதில் இந்த முஹர்ரம் உடைய நோன்பை வைப்பதற்கும், ஆஷூராவுடைய நோன்பை வைப்பதற்கும் நமக்கு அருள் புரிவானாக!
 
குறிப்பாக, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். யூதர்களுக்கு மாறு செய்யும் விதமாக, இந்த பத்தாவது நோன்போடு சேர்த்து, ஒன்பதாவது தினத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு வைத்தார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
لئِن بقيتُ إلى قابلٍ، لأَصُومنَّ التَّاسِعَ  
 
நான் அடுத்த ஆண்டு உயிரோடு இருந்தால் பிறை ஒன்பதிலும் நோன்பு வைப்பேன் என்று கூறினார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1134.
 
ஒரு அமலை நல்ல அமலாக இருந்தாலும், அதை யூதர்கள் செய்வார்களேயானால், அந்த அமலை நாம் யூதர்களில் இருந்து வித்தியாசப்படுத்தி செய்ய வேண்டும். அவர்கள் பிறை பத்தில் மட்டும் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நாம் அந்த பிறை பத்தோடு சேர்த்து, பிறை ஒன்பதிலும் நோன்பு வைக்க வேண்டும்.
 
இதற்குப் பிறகு ஒரு சில பலவீனமான ஹதீஸ்கள் இருக்கின்றன. அதாவது, 10 அல்லது 11 அல்லது 9, 10, 11 மூன்று நாட்கள் என்பதாக. இந்த இரண்டு ஹதீஸ்களும் பலவீனமானது. ஸஹீஹான ஹதீஸில் ஒன்று 9,10 நோன்பு வைப்பது. அல்லது ஒன்பதில் தவறிவிட்டால். பத்தில் மட்டும் நோன்பு வைப்பது.
 
இந்த அமல்களை நாமும் கவனிப்போமாக! நம்முடைய குடும்பத்தார்களுக்கு அறிவுறுத்துவோமாக! அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவனுடைய தீனை பேணுதலாக பின்பற்றக்கூடிய பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய அமல்களை ஏற்றுக் கொள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
مَنِ اغْتَسَلَ يَومَ الجُمُعَةِ غُسْلَ الجَنَابَةِ ثُمَّ رَاحَ، فَكَأنَّما قَرَّبَ بَدَنَةً، ومَن رَاحَ في السَّاعَةِ الثَّانِيَةِ، فَكَأنَّما قَرَّبَ بَقَرَةً، ومَن رَاحَ في السَّاعَةِ الثَّالِثَةِ، فَكَأنَّما قَرَّبَ كَبْشًا أقْرَنَ، ومَن رَاحَ في السَّاعَةِ الرَّابِعَةِ، فَكَأنَّما قَرَّبَ دَجَاجَةً، ومَن رَاحَ في السَّاعَةِ الخَامِسَةِ، فَكَأنَّما قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإمَامُ حَضَرَتِ المَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ.
 
الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 881 | خلاصة حكم المحدث : [صحيح] | التخريج : أخرجه البخاري (881)، ومسلم (850)
 
குறிப்பு 2)
 
آخَى النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ بيْنَ سَلْمَانَ وأَبِي الدَّرْدَاءِ، فَزَارَ سَلْمَانُ أبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً، فَقَالَ لَهَا: ما شَأْنُكِ؟ قَالَتْ: أخُوكَ أبو الدَّرْدَاءِ ليسَ له حَاجَةٌ في الدُّنْيَا. فَجَاءَ أبو الدَّرْدَاءِ فَصَنَعَ له طَعَامًا، فَقَالَ: كُلْ، قَالَ: فإنِّي صَائِمٌ، قَالَ: ما أنَا بآكِلٍ حتَّى تَأْكُلَ، قَالَ: فأكَلَ، فَلَمَّا كانَ اللَّيْلُ ذَهَبَ أبو الدَّرْدَاءِ يَقُومُ، قَالَ: نَمْ، فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ، فَقَالَ: نَمْ، فَلَمَّا كانَ مِن آخِرِ اللَّيْلِ قَالَ سَلْمَانُ: قُمِ الآنَ. فَصَلَّيَا فَقَالَ له سَلْمَانُ: إنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، ولِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، ولِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فأعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ. فأتَى النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَذَكَرَ ذلكَ له، فَقَالَ النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: صَدَقَ سَلْمَانُ.
 
الراوي : وهب بن عبدالله السوائي أبو جحيفة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
 
الصفحة أو الرقم: 1968 | خلاصة حكم المحدث : [صحيح]
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/