HOME      Khutba      ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் | Tamil Bayan - 732   
 

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் | Tamil Bayan - 732

           

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் | Tamil Bayan - 732


ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்
 
வரிசை : 732
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 05-08-2022 | 07-01-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனது மன்னிப்பையும், அருளையும், நேர்வழியையும், சொர்க்கத்தின் வெற்றியையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ், அவனுடைய தூய்மையான நேரான இந்த மார்க்கத்தில் நம்மை உறுதிப்படுத்துவானாக! நிலைத்திருக்க செய்வானாக! இறுதிவரை முஃமின்களாக முஸ்லிம்களாக வாழ்ந்து மரணித்து அல்லாஹ்வை சந்திக்கக்கூடிய நர்பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன். 
 
அல்லாஹ் காலங்களை சுழற்றுகின்றான். 
 
  وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ
 
அந்த நாட்களை நாமே மக்களுக்கு மத்தியில் சுழற்றுகிறோம் என்று அல்லாஹுத்தஆலா கூறுகிறான். (அல்குர்ஆன் 3 : 140)
 
இந்த உலக வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும், லாபமும் நஷ்டமும், மகிழ்ச்சியும் துக்கமும், நோயும் சுகமும் இப்படியாக மனிதனை சுற்றி இந்த நாட்கள் சுழன்று கொண்டே இருக்கும்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த சோதனைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அபூ சுஃயான் இடத்தில் ஹிர்க்கல் மன்னர் கேட்டார்: உங்களுக்கும் அவருக்கும் இடையில் போர் நடந்திருக்கிறதா? என்று. 
 
அபூ சுஃயான் கூறினார்: ஆம் நடந்திருக்கிறது என்று. அந்தப் போர் எப்படி இருந்தது? யார் வெற்றி பெற்றார்கள்? யார் தோல்வி அடைந்தார்கள்? என்று அந்த மன்னர் கேட்கும்போது, சில நேரங்களில் அவர்கள் வெற்றி அடைவார்கள். சில நேரங்களில் நாங்கள் வெற்றி அடைவோம். 
 
இப்படித்தான் போர் என்பது கிணற்றின் வாலியை போல சில நேரம் மேலே இருக்கும். சில நேரம் கீழே என்பதாக அபூ சுஃப்யான் பதில் கூறினார்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7.
 
ஒரு முஃமினுடைய தொடர்ச்சியான பயணம் என்பது சொர்க்கத்தில் போய் சேரக்கூடியதாக இருக்கிறது. அந்த சொர்க்கத்தில் சேருகின்ற வரை, சொர்க்கத்தை அடைகின்ற வரை, சொர்க்கவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருடைய அமல்களின் ஏடுகள் வலது கரத்தில் கொடுக்கப்பட்டு, வலப்பக்கம் உள்ளவர்களில் அவன் அழைக்கப்பட்டு, சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுகிறவரை நாம் பல சோதனைகளை கண்டிப்பாக கடந்துதான் ஆக வேண்டும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ‏
 
நீங்கள் கடினமான ஒரு நிலையிலிருந்து கடினமான இன்னொரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிப்பீர்கள். (அல்குர்ஆன் 84 : 19)
 
சொர்க்கம் ஒன்றுதான் நாம் நிம்மதியாக இருப்பதற்கு, நாம் முழுமையான மகிழ்ச்சியோடு இருப்பதற்கு, நிறைவான அருளோடு இருப்பதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய இல்லம். 
 
இந்த உலக வாழ்க்கை என்பது மிகப்பெரிய சோதனைகளின் இல்லமாகும். இந்த உலகத்தினுடைய இன்பங்கள் ஏமாற்றக்கூடிய இன்பங்கள். இந்த உலகத்தில் நம்முடைய கண்களை கவரக்கூடிய வகையில், நம்முடைய மனதை ஈர்க்கக்கூடிய வகையில், நம்முடைய ஆசைகளை கட்டி போடக் கூடிய வகையில் என்னென்ன அலங்காரங்கள் இருக்கின்றதோ இவையெல்லாம் அலங்கரிக்கப்பட்ட சொற்ப காலத்திற்காக வேண்டி அழகாக்கப்பட்ட அலங்கரிப்புகள், இன்பங்கள் ஆகும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا
 
நிச்சயமாக நாம், பூமியின் மேலுள்ளதை அதற்கு அலங்காரமாக ஆக்கினோம், அவர்களில் யார் செயலால் மிக அழகியவர் என்று அவர்களை நாம் சோதிப்பதற்காக. (அல்குர்ஆன் 18 : 7)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا 
 
செல்வமும், ஆண் பிள்ளைகளும் உலக வாழ்க்கையின் அலங்காரங்கள் ஆகும். (அல்குர்ஆன் 18 : 46)
 
இந்த உலக வாழ்க்கையில் ஒரு மனிதனுடைய வெற்றி என்பது அல்லாஹ்வுடைய தீன் கிடைக்கப் பெறுவதும் அல்லாஹ்வை அறிவதும் தான் வெற்றி.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவின் வீதிகளில் கடைத்தெருவுகளில் ஹஜ்ஜுக்கு வந்திருந்த அந்த ஹாஜிகளுக்கு மத்தியில் மினாவில் கூறினார்கள்:
 
" يَا أَيُّهَا النَّاسُ قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، تُفْلِحُوا "
 
நீங்கள் லா யிலாஹ இல்லல்லாஹ்வை ஏற்று அதை மொழிந்து விடுங்கள் நீங்கள் வெற்றி அடைவீர்கள். (1)
 
அறிவிப்பாளர் : தாரிக் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மது, எண் : 16023,16603.
 
இந்த தூய திருக்கலிமாவை அறிந்து புரிந்து, மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, ஒரு மனிதர் இந்த உலகத்தில் கொல்லப்பட்டாலும் சரி, நாடோடியாக துரத்தப்பட்டாலும் சரி, நாடு இல்லாமல் வீடு இல்லாமல் ஒதுங்க இடம் இல்லாமல் அவர் இங்கும் அங்குமாக அழைத்தாலும், எல்லோரும் அவரை விரட்டிவிட்டாலும் சரி, இந்த லாயிலாஹ இல்லல்லாஹ் இருக்கின்ற வரை அவர் வெற்றியாளர்தான்.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கடிதத்தை ஒரு கபிலாவின் தலைவர் இடத்தில் கொடுப்பதற்காக ஒரு தோழரிடம் கொடுத்தனுப்புகிறார்கள். அந்த கடிதத்தை வாங்கிய அந்த தலைவர் வஞ்சகமாக தனது சபையில் இருக்கக்கூடியவரை பார்த்து கண்ணசைக்கிறார். 
 
ரசூலுல்லாஹி உடைய கடிதத்தை கொண்டு வந்த அந்த சஹாபி அந்த தலைவருக்கு முன்னால் நின்றிருக்கும் போது பின்னால் இருந்து ஒரு வீரன் ஈட்டியால் அவர் மீது குத்த, அவருடைய முதுகில் குத்தி அந்த ஈட்டியானது நெஞ்சிப் புறத்திலிருந்து வெளியே வந்து விடுகிறது. 
 
அந்த தோழர் சாய்கிறார். அந்த நேரத்தில் அவர் சொல்கிறார்:
 
فُزْتُ وَرَبِّ الكَعْبَةِ
 
நீங்கள் நினைப்பதை போன்று அல்ல. நான் தோற்றுவிட்டேன், கொல்லப்பட்டு விட்டேன், எங்களது இஸ்லாம் முடிந்துவிட்டது, எங்களது நபியின் தூதுத்துவம் அழிந்துவிட்டது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். ஒருபோதும் அவ்வாறு இல்லை.
 
கஅபாவின் இறைவனின் மீது சத்தியமாக சொல்கின்றேன்; நான் வெற்றி பெற்று விட்டேன். (2)
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2801,4091.
 
இதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய வெற்றி. சூரா அல் புரூஜில் நீங்கள் ஒரு சம்பவம் படித்திருப்பீர்கள். கடந்த கால ஒரு நிகழ்வை விளக்குவதற்காகவே அல்லாஹ் இறக்கிய முழு அத்தியாயம் அது. 
 
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ (1) وَالْيَوْمِ الْمَوْعُودِ (2) وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3) قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
 
கோள்களை உடைய வானத்தின் மீது சத்தியமாக! வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக! சாட்சியாளர் (-வெள்ளிக்கிழமை) மீது சத்தியமாக! சாட்சியளிக்கப்பட்டவர் (-அரஃபா நாள்) மீது சத்தியமாக! அகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள். விறகுகளால் நெருப்பு மூட்டியவர்கள் (அழிக்கப்பட்டார்கள்). அதனருகில் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது, அவர்களோ நம்பிக்கையாளர்களுக்கு எதை செய்ய இருந்தார்களோ அதற்காக (அங்கு) ஆஜராகி (சாட்சிகளாக) இருந்தார்கள். மிகைத்தவனாகிய, புகழாளனாகிய, அல்லாஹ்வை (முஃமின்கள்) நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர அவர்களை (இந்த அகழ்க்காரர்கள்) தண்டிக்கவில்லை. (அல்குர்ஆன் 85 : 1-8)
 
நம் சார்பாக நமக்கு பழி வாங்குவதற்கு நம்முடைய ரப் இருக்கும்பொழுது நாம் ஏன் கவலைப்பட வேண்டும்! நாம் இறந்து விடலாம், நாம் பலவீனர்கள், நம்முடைய ரப்புக்கு இழப்பு இல்லையே, நம்முடைய இறக்காதவன் ஆயிற்றே!
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ
 
(நபியே!) என்றுமே மரணிக்காமல் உயிரோடிருக்கின்ற (இறை)வன் மீது நம்பிக்கை வைப்பீராக! (அல்குர்ஆன் 25 : 58)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ
 
அவனுடைய காரியத்தில் அவன் மிகைத்தவன். (அல்குர்ஆன் 12 : 21)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا (14) وَلَا يَخَافُ عُقْبَاهَا
 
ஒட்டகத்தை கொன்றவன் ஒருவனாக இருந்தாலும் அதை எல்லோரும் பொருந்திக் கொண்டதால் அந்த சமுதாயத்தில் இருந்த எல்லோருக்கும் அதே தண்டனையை கொடுத்து அழித்துவிட்டான்.)  இன்னும், அவன் அதன் முடிவைப் பயப்பட மாட்டான்.  (அல்குர்ஆன் 91 : 14,15)
 
அவர்களை அல்லாஹு தஆலா தரைமட்டமாக அழித்து விட்டான். சின்னாபின்னமாக்கி விட்டான். அல்லாஹ்வுக்கு அவர்களை பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ரப்புல் ஆலமீன் ஏன் பயப்பட வேண்டும்? யாரை பயப்பட வேண்டும்? 
 
அல்லாஹு தஆலா பலவீனர்கள் சார்பாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக அதுவும் முஃமின்களுக்காக அல்லாஹுதஆலா பழி வாங்குவான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
اِنَّ اللّٰهَ عَزِيْزٌ ذُوْ انْتِقَامٍ‏
 
நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 14 : 47)
 
அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களில் ஒன்று, பழி வாங்கக் கூடியவன். பழி தீர்க்கக் கூடியவன். யாருக்காக என்றால் நம்பிக்கை கொண்ட மூமின்களுக்காக, அநீதி இழைக்கப்பட்ட முஃமின்களுக்காக. 
 
இந்த முஃமின்கள் கொல்லப்பட்டு விடலாம். அவர்களின் சந்ததிகளும் கொல்லப்படலாம். ஆனால், கண்டிப்பாக அல்லாஹுத்தஆலா அநியாயமாக கொல்லப்பட்ட இவர்களுக்காக இம்மையிலும் பழி வாங்குவான். நாளை மறுமையிலும் அல்லாஹு தஆலா கடினமான தண்டனை கொடுப்பான்.
 
وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏
 
நரகத்தில் சுடர் விட்டு எரியக்கூடிய அந்த நெருப்பில் பொசுக்க கூடிய அந்த நெருப்பில் அவர்களை பொசுக்கி பழி வாங்குவான். (அல்குர்ஆன் 22 : 22)
 
அந்த மக்கள் எல்லாம் ஈமானை ஏற்றார்கள். தவ்ஹீதை ஏற்றார்கள். லாயிலாஹ இல்லல்லாஹுவை ஏற்றார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு மைதானத்தில் கொண்டு வந்து அல்லாஹ்வை நிராகரித்த இந்த மன்னரை நம்பிக்கை கொள்ளுங்கள்; இல்லை என்றால் உங்களுக்கு இதோ தோண்டப்பட்டு இருக்கிறதே இந்த அகழில் நெருப்பை நீங்கள் பார்க்கிறீர்களே, அதில் தான் நீங்கள் தள்ளப்படுவீர்கள். 
 
அந்த நேரத்தில் ஒருவர் கூட முர்த்தத் ஆகவில்லை. கண்ணுக்கு நேராக எரியும் அந்த நெருப்பை பார்த்து அவர்களில் யாரும் பயப்படவில்லை. 
 
இன்று சின்ன சின்ன சோதனைகளுக்கெல்லாம் ஈமானிய அடையாளங்களை இஸ்லாமிய அடையாளங்களை மறைக்கிறோம்.
 
நாம் ஏன் வெளிப்படுத்த வேண்டும்? நாம் காபிர்களுடைய நாட்டில் வாழ்கிறோம், இங்கு நாம் இப்படித்தான் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமா? கட்டாயம் என்ன இருக்கின்றது? 
 
அதுதான் பள்ளிவாசல்களில் ஐநேரம் தொழுகின்றோமே, என்றெல்லாம் ஈமானுடைய பலவீனங்கள் மக்களுக்கு மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக கரையான் அரிப்பதை போல அவர்களுடைய உள்ளங்களில் உள்ள ஈமானை அரிந்திருப்பதை பார்க்கிறோம்.
 
நிராகரிப்பாளர்களுக்கு பயந்து இஸ்லாமில் ஆல்ட்ரேஷன் செய்து கொள்ளக்கூடிய, இஸ்லாமில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய, மார்க்கத்தின் அடையாளங்களை திறக்கக்கூடிய, மார்க்கத்தின் அடையாளங்களை விடக்கூடிய ஒரு பரிதாப நிலை இன்று சில மக்களிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
ஒரு மனிதன் மார்க்கத்தில் பிடிப்பில்லாதவனாக அல்லது மார்க்கத்தின் சில அமல்களில் சோம்பேறியாக இருக்கின்றான் என்றால் அது தனி ஒரு பாவம். ஆனால் காஃபிரை பயந்து, நிராகரிப்பாளனை பயந்து, அவனுடைய ஆட்சியை பயந்து அவன் இஸ்லாமை விடுகிறான், இஸ்லாமிய சட்டங்களை விடுகிறான், அல்லாஹ்வுடைய கட்டளையை விடுகிறான், நபியின் உடைய சுன்னாவை விடுகிறான் என்றால் அது நேரடியாக அவனுடைய ஈமானின் வேரை பாதிக்க கூடியது; நேரடியாக அவனுடைய இறை நம்பிக்கையை மறுமை நம்பிக்கையை பாதிக்கக் கூடியது. 
 
உலகம் அவருடைய உள்ளத்தில் மிகைத்து விட்டது என்று பொருள். அல்லாஹ்வுடைய பயத்தை விட மனிதர்களின் பயம் அவருடைய உள்ளத்தில் அதிகமாக உள்ளது என்று பொருள். அவன் குஃப்ருக்கு நெருக்கமாகின்றான். ஈமானிலிருந்து தூரமாகி கொண்டே போகிறான். 
 
சம்பவத்தின் தொடர் : அந்த ஊரில் உள்ள எல்லோரும் அந்த நெருப்பில் ஒருவர் பின் ஒருவராக தூக்கி போடப்படுகிறார்கள். கடைசியில் ஒரு பெண், குழந்தையோடு வருகிறாள். தயங்குகிறாள். 
 
நாம் கலிமா சொன்னோம். அல்லாஹ்வை ஏற்று நம்பிக்கை கொண்டோம். பால் குடித்துக் கொண்டிருக்க கூடிய ஒன்றும் அறியாத இந்த குழந்தையோடு நான் நெருப்பில் விழ வேண்டியது இருக்கிறதே! இந்த குழந்தை நெருப்பில் தள்ளப்பட போகிறதே என்று பயந்து அந்த குழந்தையை அணைத்தவளாக நெருப்பில் விழுவதற்கு தயங்கும்பொழுது, அல்லாஹு தஆலா அந்த குழந்தையை பேச வைக்கிறான். 
 
அந்த குழந்தை தனது தாயிடத்தில், எனது தாயே! நீ பொறுத்துக் கொள்; சகித்துக் கொள்; நீ உறுதியாக இரு! நீ சத்திய மார்க்கத்தில் இருக்கிறாய் என்று சொன்னது. 
 
இதை சொன்னவுடன் அடுத்த நொடியில் அந்த தாய் அந்த குழந்தையோடு அப்படியே நெருப்பில் தாவி விடுகிறாள். 
 
இந்த சம்பவத்தை அல்லாஹ் சூரா அல் புரூஜில் சொல்லிக் காட்டுகின்றான். யார் மூலமாக இவர்கள் எல்லாம் இஸ்லாமை ஏற்றார்களோ அந்த வாலிபரும் கடைசியாக இங்கே கொல்லப்படுகிறார். 
 
அறிவிப்பாளர் : சுஹைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3005.
 
அல்லாஹு தஆலா பழிவாங்க கூடியவன். பழி தீர்க்கக் கூடியவன். அவன் சூழ்நிலைகளை மாற்றுவான். காலங்களை திருப்புவான். சாதகமானவர்களை பாதகமானவர்களாக, பாதகமானவர்களை சாதகமானவர்களாக அல்லாஹ் மாற்றுவான். 
 
நம்முடைய கடமை, நாம் இந்த மார்க்கத்தில் உறுதியாக இருக்கின்றோமா? ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹிஜிரத்தை நினைத்துப் பாருங்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தூய திரு கலிமாவை மக்களுக்கு மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காக 13 ஆண்டுகள் மக்காவில் சிரமப்பட்டார்கள். இறுதியாக அவர்களுடைய உயிருக்கு அவர்களின் தோழர்களின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, இந்த மக்காவில் இருந்து அவர்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக -நாடோடிகளாக ஊரை விட்டு வேறொரு ஊரில் தஞ்சம் போகக்கூடிய குடியேறயக் கூடிய அகதிகளாக செல்கிறார்கள்.
 
முஹாஜிர் என்றால் அகதி என்று பொருள். அகதிகளாக பயந்தவர்களாக இரவு நேரத்தில் மக்காவிலிருந்து வெளியேறுகிறார்கள். 
 
அல்லாஹு சுபஹானஹு தஆலா இத்தகைய சோதனைகளை நபிமார்களுக்கு கொடுத்து இருக்கிறான். நபிமார்களின் தோழர்களுக்கு கொடுத்து இருக்கிறான். 
 
அல்லாஹ் பயத்தைக் கொண்டும் சோதிப்பான். அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَ
 
இன்னும், பயத்தினாலும், பசியினாலும், செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்களுடைய (சிறிது) நஷ்டத்தினாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே!) பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 155)
 
பயமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து சோதனை. அந்த பயத்தில் நாம் எப்படி இந்த ஈமானை பாதுகாக்க போகிறோம்? அந்த பயத்தில் அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றோமா? அல்லாஹ்வை சார்ந்து இருக்கின்றோமா? அந்த பயத்தினுடைய நேரத்தில் அல்லாஹ்வின் பக்கம் ஓடோடி வருகின்றோமா? உலக வஸ்துக்களின் பக்கம் அல்லது நமது திறமைகளின் பக்கம் நமது அறிவின் பக்கம் திரும்பி வருகின்றோமா? அல்லது இந்த மார்க்கத்தை விட்டு வெளியே ஓடிவிடுகிறோமா? என்று அல்லாஹ் சோதிக்கிறான்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிரிகளின் பயம் வந்தாலும் சரி, காற்று வீசி பயம் ஏற்பட்டாலும் சரி, மின்னல் வெட்டி கடுமையான இடி இடித்து மழை பெய்கின்ற பொழுது பயம் ஏற்பட்டாலும் சரி, எந்த பயத்திலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் திரும்பிய ஒரே திசை அல்லாஹ்வின் பக்கம் தான்.
 
எத்தகைய பயத்திலும் சரி, அவர்கள் கை தூக்கியது அல்லாஹ்வின் முன்னிலையில் தான். அவர்கள் ஒதுங்கியது தொழுகையின் பக்கம் தான். ஹதீஸில் வருகிறது.
 
إذا حزبه أمر فزع إلى الصلاة
 
நபி அவர்களுக்கு கடுமையான ஒரு காரியம் குறுக்கிட்டு விட்டால் உடனே தொழுகையின் பக்கம் அவர்கள் ஓடி வந்து நிம்மதியை தேடுவார்கள்.
 
அறிவிப்பாளர் : ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபுதாவுத், எண் : 1319, தப்ஸீர் தபரி 1/618.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ 
 
பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் 2 : 45)
 
சப்ர் என்றால் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது என்று பொருள். சில மக்களுக்கு அதன் அர்த்தமே தெரியவில்லை. அல்லாஹ்வின் மார்க்கத்தில் பிடிப்பாக உறுதியாக இருப்பது. அல்லாஹ்வின் வேதத்தை உறுதியாக பலமாக துணிவோடு பற்றி பிடிப்பவர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
 
وَاعْتَصَمُوْا بِاللّٰهِ
 
அல்லாஹ்வை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4 : 146) 
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உறுதியாக கடைப்பிடிப்பதை அல்லாஹ்வைப் பற்றி பிடிப்பது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை அணுகினார்கள். அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்கள்
 
இன்று, முஸ்லிம்களாகிய நாம் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் சரி, மார்க்கத்தில் அதற்கு என்ன தீர்வு? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சீராவில் அதற்கு என்ன தீர்வு? என்பதை பார்ப்பதில்லை. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹிஜ்ராவை எடுத்துப் பாருங்கள். அது எத்தகைய அழகிய படிப்பினை நிறைந்த வாழ்க்கை வரலாறு. 
 
சிலர், இந்த முஹர்ரம் மாசத்தை எதற்கெதற்கோ கொண்டாடுவதற்காக வைத்திருக்கிறார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த ஹிஜ்ரத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுடைய இந்த ஹிஜ்ரி ஆண்டு என்பது, ஒரு மிகப்பெரிய வரலாற்று ஆகும். 
 
இது ஒரு முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களுடைய வாழ்க்கையின் புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடியது. 
 
ஹிஜ்ரத்தை கொண்டு எத்தகைய மாற்றங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரலாற்றில் நிகழ்த்தி காட்டினார்கள்! 
 
பயந்து ஓடக்கூடியவர்கள் எல்லாம் நாட்டில் அப்படியே அகதிகளாக வாழ்ந்து விட மாட்டார்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றி பிடித்திருந்த அல்லாஹ்வுடைய தூதரையும் அவர்களுடைய தோழர்களையும் அல்லாஹு தஆலா இந்த பூமியினுடைய ஆட்சியாளர்களாக அரசராக ஆக்கினான். 
 
அதுபோன்று அல்லாஹு தஆலா பலவீனப்பட்டவர்களையும் ஆக்குவான். அது அவனுக்கு தூரமானது அல்ல. அவர்கள் அல்லாஹ்வுடைய தீனை பற்றி பிடித்திருப்பார்களேயானால். 
 
ஆட்சி இருந்தால்தான் இஸ்லாம், ஆட்சி இல்லை என்றால் இஸ்லாம் இல்லை என்று சில முட்டாள்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதிகாரம் இருந்தால் தான் மார்க்கம், முதலில் ஆட்சி தான் வேண்டுமென்று சில அறிவீனர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் .
 
அப்படி என்றால் எல்லா நபிமார்களையும் அல்லாஹு தஆலா அரசர்களாக ஆக்கி அனுப்பி வைத்திருப்பான். அல்லது அரசர்களை அல்லாஹ் நபிமார்களாக ஆக்கி இருப்பான். 
 
அல்லாஹ்வுடைய தீனை எடுத்து சொல்வதற்கு ஒரு அடிமை போதுமானவர். ஒரு ஏழை போதுமானவர். முதலில் இஸ்லாம், ஈமான். மற்ற அனைத்தும் உலகத்தில் அல்லாஹ் நாடியவர்களுக்கு கொடுப்பான். நாடியவர்களிடமிருந்து எடுப்பான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ
 
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு நீ ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து நீ ஆட்சியை பறிக்கிறாய். (அல்குர்ஆன் 3 : 26)
 
நம்மிடம் இருந்து ஆட்சியை அல்லாஹ் பிடுங்கலாம். நம்மை ஆட்சியில் அமர வைக்கலாம். ஆட்சிக்காக இஸ்லாமல்ல. இஸ்லாமுக்காக ஆட்சியை கொண்டு இஸ்லாம் அல்ல. ஆட்சியில் இஸ்லாம் இருந்தால் அந்த ஆட்சி சரியான ஆட்சி. இஸ்லாம் என்பது ஆட்சி இருந்தாலும் இருக்கும். இல்லையென்றாலும் இருக்கும்.
 
அல்லாஹ்வுடைய தீன் தான் நமக்கு முதலாவதாக இருக்க வேண்டும். லா இலாஹ இல்லல்லாஹுவை நானும் ஏற்க வேண்டும். இதனுடைய அழைப்பை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 
 
அதற்காக வரக்கூடிய சிரமங்களை, துன்பங்களை, இன்னல்களை, சோதனைகளை, எத்தகைய இடையூறுகளையும் நான் சகித்துக் கொள்வேன்; தாங்கிக் கொள்வேன்; என்னுடைய வெற்றி சொர்க்கத்தை கொண்டு. என்னுடைய வெற்றி அல்லாஹ் என்னை பொருந்திக் கொள்வதை கொண்டு.
 
رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا
 
நான் அல்லாஹ்வை புரிந்து கொண்டால், இஸ்லாமை தீனாக பொருந்தி கொண்டால், நபி முஹம்மதை நான் நபியாக பொருந்தி கொண்டால் எனக்கு வெற்றி. (3)
 
அறிவிப்பாளர் : ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 386. 
 
இத்தகைய ஒரு ஆழமான பாடத்தைதான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹிஜ்ரா நமக்கு கொடுக்கின்றது. 
 
மக்காவில் பிறந்து, ஒரு நபியினுடைய வாரிசாக வளர்ந்து, குறைஷினுடைய சமுதாயத்தில் பிறந்து, அந்த மக்காவாசிகள் எல்லாம் நம்பிக்கைக்குரிய உயர்ந்த ஒரு மனிதர் என்று போற்றப்பட்டு கொண்டிருந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அகதியாக நாடோடியாக உயிருக்கு பயந்து, அந்த மக்காவிலிருந்து துரத்தப்பட்ட போது, நான் தோற்றுவிட்டேன் என்று எண்ணினார்களா? யோசித்தார்களா? 
 
நமக்கு இனி என்ன நாடு இருக்கின்றது? இந்த உலகத்தில் நமக்கு யார் ஆதரவு அளிப்பார்? என்று அவர்கள் நினைத்தார்களா? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களின் யாருடைய உள்ளத்திலாவது அப்படிப்பட்ட ஒரு எண்ணம் வந்திருக்குமா?
 
நாம் ஒரு ஊரில் இருந்து வெளியேற்றப்பட்டால், அகிலத்தின் இறைவன் அல்லாஹ்வின் பக்கம் செல்கிறோம். நாம் இந்த மக்களுடைய ஆதரவிலிருந்து ஒதுக்கப்பட்டால் விரட்டப்பட்டால் அல்லாஹ்வுடைய ஆதரவை நோக்கி செல்கிறோம். 
 
நம்மை எல்லோரும் கைவிட்டு விட்டால் நாம் அல்லாஹ்வுடைய அரவணைப்பின் பக்கம் செல்கிறோம். 
 
இந்த உலகத்திலிருந்து நாம் கொல்லப்பட்டாலும் நாம் அல்லாஹ்வின் பக்கம் செல்கிறோம். அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلَئِنْ مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ
 
நீங்கள் இறந்தால் என்ன, கொல்லப்பட்டால் என்ன, அல்லாஹ்வின் பக்கம் தானே கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3 : 158)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
قُلْ لَّنْ يَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِيْلًا‏
 
(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில் வாழ்வதற்கு) நீங்கள் சுகமளிக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 33 : 16)
 
ஆகவே, இந்த உலகத்தின் நெருக்கடிகளுக்கு பயந்து, இறை நிராகரிப்பாளர்களின் சோதனைக்கு பயந்து நம்முடைய ஈமானில் தடுமாற்றம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
வறுமை பிரச்சனை அல்ல; நோய் பிரச்சனை அல்ல; வீடு இல்லாமல் இருப்பது, ஆதரவு இல்லாமல் இருப்பது, ஆட்சியில் பங்கு இல்லாமல் இருப்பது பிரச்சனை அல்ல. 
 
பிரச்சனை எது என்றால் ஈமானில் பலவீனம் ஏற்படுவது. நமது இஸ்லாமிய பற்றில் தடுமாற்றம் ஏற்படுவது. அதுதான் பிரச்சனை. 
 
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹ்வுடைய ஒவ்வொரு வசனமும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சீறாவின் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஆதரவை கொடுக்கின்றது. நம்பிக்கையை கொடுக்கின்றது.
 
அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்கி வைக்கிறது. அல்லாஹ்வின் மீது தவக்களுடைய வாசல்களை திறந்து வைக்கிறது. அதைக்கொண்டு அழகிய படிப்பினை பெற்று நாம் நம்முடைய ஈமானை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். 
 
ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு நாம் வழி விட்டு விடக்கூடாது. ஷைத்தான் நம்மை பயமுறுத்திக்கொண்டே இருப்பான். நப்ஸுடைய ஊசலாட்டங்கள் நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கும். அவற்றுக்கு நாம் செவி சாய்த்து விட்டால், நாம் சருகி விட்டால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ஈமான் பறிக்கப்பட்டு விடும். 
 
ஈமான் பறிக்கப்படுவதை விட ஒரு பரிதாபமான நிலை இந்த உலகத்தில் இல்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக! இந்த இறை நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்வோமாக! அதனுடைய வசனங்களை படித்து நம்முடைய ஈமானை பலப்படுத்திக் கொள்வோமாக! 
 
நம்முடைய குடும்பத்தாருக்கும் இந்த தூய வரலாறுகளை எடுத்துக் கூறி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மக்காவின் வாழ்க்கை, ஹிஜ்ரத்தினுடைய வாழ்க்கை, மதீனாவின் வாழ்க்கை இந்த சீராவை அவர்களுக்கு படித்துக் காட்டி அந்த சீறாவிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளை படித்துக் காட்டி, உறுதியான நம்பிக்கை உடைய முஃமின்களாக முஸ்லிம்களாக நம்முடைய தலைமுறையை உருவாக்குவோமாக! அல்லாஹ் சுபஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் உறுதியான ஈமானை தந்தருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ، حَدَّثَنِي أَبُو سُلَيْمَانَ الضَّبِّيُّ دَاوُدُ بْنُ عَمْرِو بْنِ زُهَيْرٍ الْمُسَيِّبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ رَبِيعَةَ بْنِ عِبَادٍ الدِّيلِيِّ، وَكَانَ جَاهِلِيًّا أَسْلَمَ، فَقَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَصَرَ عَيْنِي بِسُوقِ ذِي الْمَجَازِ، يَقُولُ: " يَا أَيُّهَا النَّاسُ قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، تُفْلِحُوا " وَيَدْخُلُ فِي فِجَاجِهَا وَالنَّاسُ مُتَقَصِّفُونَ عَلَيْهِ، فَمَا رَأَيْتُ أَحَدًا يَقُولُ شَيْئًا، وَهُوَ لَا يَسْكُتُ [ص:405]، يَقُولُ: " أَيُّهَا النَّاسُ قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ تُفْلِحُوا " إِلَّا أَنَّ وَرَاءَهُ رَجُلًا أَحْوَلَ وَضِيءَ الْوَجْهِ، ذَا غَدِيرَتَيْنِ يَقُولُ: إِنَّهُ صَابِئٌ، كَاذِبٌ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَهُوَ يَذْكُرُ النُّبُوَّةَ، قُلْتُ: مَنْ هَذَا الَّذِي يُكَذِّبُهُ؟ قَالُوا: عَمُّهُ أَبُو لَهَبٍ، قُلْتُ: إِنَّكَ كُنْتَ يَوْمَئِذٍ صَغِيرًا، قَالَ: لَا وَاللَّهِ إِنِّي يَوْمَئِذٍ لَأَعْقِلُ (مسند أحمد مخرجا- 16023)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرُ الحَوْضِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْوَامًا مِنْ بَنِي سُلَيْمٍ إِلَى بَنِي عَامِرٍ فِي سَبْعِينَ، فَلَمَّا قَدِمُوا قَالَ لَهُمْ خَالِي: أَتَقَدَّمُكُمْ فَإِنْ أَمَّنُونِي حَتَّى أُبَلِّغَهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِلَّا كُنْتُمْ مِنِّي قَرِيبًا، فَتَقَدَّمَ فَأَمَّنُوهُ، فَبَيْنَمَا يُحَدِّثُهُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَوْمَئُوا إِلَى رَجُلٍ مِنْهُمْ فَطَعَنَهُ، فَأَنْفَذَهُ، فَقَالَ: اللَّهُ أَكْبَرُ، فُزْتُ وَرَبِّ الكَعْبَةِ، ثُمَّ مَالُوا عَلَى بَقِيَّةِ أَصْحَابِهِ، فَقَتَلُوهُمْ إِلَّا رَجُلًا أَعْرَجَ صَعِدَ الجَبَلَ، قَالَ هَمَّامٌ: فَأُرَاهُ آخَرَ مَعَهُ، «فَأَخْبَرَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُمْ قَدْ لَقُوا رَبَّهُمْ، فَرَضِيَ عَنْهُمْ، وَأَرْضَاهُمْ»، فَكُنَّا نَقْرَأُ: أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا، وَأَرْضَانَا ثُمَّ نُسِخَ بَعْدُ، فَدَعَا عَلَيْهِمْ أَرْبَعِينَ صَبَاحًا عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ وَبَنِي عُصَيَّةَ الَّذِينَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخاري- 2801)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ الْقُرَشِيِّ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ ذَنْبُهُ» قَالَ ابْنُ رُمْحٍ فِي رِوَايَتِهِ " مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ " وَلَمْ يَذْكُرْ قُتَيْبَةُ قَوْلَهُ: وَأَنَا (صحيح مسلم - 386)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/