HOME      Khutba      எதற்காக வாழ்கிறோம்!! | Tamil Bayan - 735   
 

எதற்காக வாழ்கிறோம்!! | Tamil Bayan - 735

           

எதற்காக வாழ்கிறோம்!! | Tamil Bayan - 735


எதற்காக வாழ்கிறோம்?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : எதற்காக வாழ்கிறோம்?
 
வரிசை : 735
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 19-08-2022 | 21-01-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் கண்ணியத்திற்குரிய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றி வாழும்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை பின்பற்றி வாழும்படி உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுபஹானஹு தஆலா நம் அனைவருடைய பாவங்களை தவறுகளை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருந்து, அல்லாஹ்வை வணங்கியவர்களாக, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்களாக,  அல்லாஹ்விற்கும் அவனுடைய ரசூலுக்கும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹு தஆலா நம்முடைய உயிர்களை கைப்பற்றுவானாக! ஆமீன்.
 
ரப்புல் ஆலமீன் சொல்கிறான்: 
 
اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰى‏
 
நிச்சயமாக உங்களுடைய உழைப்புகள் உங்களுடைய முயற்சிகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன. (அல்குர்ஆன் 92 : 4)
 
ஒவ்வொருவரும் ஒன்றை இலக்காக, லட்சியமாக, குறிக்கோளாக, அடிப்படையாகக் கொண்டு அதை அடைவதற்காக முயற்சி செய்கிறீர்கள். 
 
இந்த உலகத்தில் இப்படியாக மனிதன் ஒன்றை நினைத்து கவலைப்படுகிறான். அதை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதற்காக பெரும் முயற்சி எடுக்கிறான். 
 
அல்லாஹு தஆலா நபிமார்களை இந்த பூமியில் எதற்காக அனுப்பினான்? இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டது எதற்காக? 
 
மனிதர்களை உலக கவலையிலிருந்து உலக மோகத்திலிருந்து விடுதலை செய்து, மனிதர்களை இந்த உலகத்தின் அற்ப வாழ்க்கையை தேடி அதில் மூழ்குவதிலிருந்து அவர்களை காப்பாற்றி, மறுமையின் பக்கம் அழைப்பதற்காக, நிரந்தரமான சொர்க்க இன்பத்தின் பக்கம் அழைப்பதற்காக, மறுமையில் நிரந்தரமான வெற்றியின் பக்கம் அவர்களை அழைப்பதற்காக அல்லாஹு தஆலா நபிமார்களை அனுப்பினான்.
 
இறைத்தூதர்கள் எல்லோரும் இந்த ஒரே அழைப்பை, இந்த ஒரே தூதுத்துவத்தைதான் கொண்டு வந்தார்கள். மக்களே நீங்கள் மறுமைக்காக படைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டியது மறுமையில் தான். அங்கே உங்களுக்கான சொர்க்க வாழ்க்கையை தேடிக் கொள்ளுங்கள். 
 
அல்லாஹுவை வணங்குவதின் மூலமாககே, இந்த உலக வாழ்க்கையை இபாதத்துக்காக மாற்றிக் கொள்வதின் மூலமாக, இந்த உலக வாழ்க்கையின் லட்சியமாக இபாதத்தை நீங்கள் ஆக்கிக் கொள்வதின் மூலமாக மறுமையின் வெற்றியைத் தேடிக் கொள்ளுங்கள். இதுதான் எல்லா நபிமார்களுடைய அழைப்பாக இருந்தது.
 
இன்று நாம் முஸ்லிமாக பிறந்து, முஸ்லிமாக வளர்ந்து, ஒரு முஸ்லிமான சூழ்நிலையில் வாழ்கிறோம். ஆனால், நம்முடைய உணர்வுகள் எந்த அளவு இஸ்லாமாக ஈமானாக இருக்கிறது? எந்த அளவு மறுமையை குறித்து நினைவுள்ளவர்களாக, மறுமையின் பயம் உள்ளவர்களாக, மறுமையின் தேடல் உள்ளவர்களாக நாம் இருக்கிறோம்? 
 
நம்முடைய ஒவ்வொரு செயலையும் நாம் கண்காணிக்க வேண்டும். இதனால் எனக்கு மறுமையில் லாபமா நஷ்டமா? என்னுடைய இந்த செயல் எனக்கு மறுமையில் வெற்றியை கொடுக்குமா? நஷ்டத்தை கொடுக்குமா? என்னுடைய மறுமை வாழ்க்கையை இது உயர்த்துமா அல்லது பாதிக்குமா? என்று அந்த உயிரோட்டமான சிந்தனையில் நாம் வாழ்கிறோமா? யோசித்துப் பார்க்க வேண்டும். 
 
அந்த சிந்தனை இல்லாத காரணத்தினால்தான் நம்முடைய தொழுகையே செத்துப் போய் இருக்கிறது. தொழுகிறோம். ஆனால், தொழுகையின் உணர்வை எடுத்தவர்களாக மஸ்ஜிதிலிருந்து நாம் திரும்பச் செல்கிறோமா? நம்முடைய தொழுகை நம்முடைய உள்ளத்தை மென்மையாக்கியதா? அல்லாஹ்வின் அச்சத்தால் நமது கண்களில் இருந்து ஒரு சில கண்ணீர் துளிகளையாவது சிந்த வைத்ததா? 
 
நம்முடைய தவறை நினைத்து அந்த தவறுக்காக வருந்தி அல்லாஹ்விடத்தில் தவ்பா கேட்க வைத்ததா? இப்படித்தான் நம்முடைய ஏனைய இபாதத்துகளும் மறுமையின் உணர்வு இல்லாமல், மறுமையின் சிந்தனை இல்லாமல், மறுமையினுடைய அந்த பயம் இல்லாமல் இருக்கின்றது. 
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ்வை வணங்குவது, இதுதான் நபிமார்கள் கொண்டு வந்த அழைப்பு. இதோடு சேர்ந்து மக்களுக்கான பல சீர்திருத்தங்களை அவர்கள் சொன்னார்கள். 
 
எல்லா சீர்திருத்தங்களுடைய அடிப்படை, அல்லாஹ் ஒருவனை வணங்குவது; வணக்க வழிபாட்டை குறிக்கோளாக வைத்து வாழ்க்கையை அமைப்பது; மறுமைக்காக வாழ்வது; இந்த உலகத்தில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை பயப்படாமல், சோதனைகளை பயப்படாமல், இந்த உலகத்தினுடைய லாபத்தை ஆசைப்படாமல், இந்த உலகத்தினுடைய ஆட்சி அதிகாரம், செல்வம், பதவி, புகழ் இப்படி எது இருக்கின்றதோ இதன் எதன் மீதும் மோகம் கொள்ளாமல், ஆசை கொள்ளாமல், ஆகிரத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே வாழ்வது. 
 
என்னுடைய மறுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எதையும் என்னால் செய்ய முடியாது. 
 
அதாவது, அல்லாஹ்வுடைய சட்டத்தை மீறுவது, அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை மீறுவது, அவர்களது கட்டளையை மீறுவது, இது ஒவ்வொன்றும் என்னுடைய மறுமையை பாதிக்கும்.
 
இந்த தர்பியத்தைத்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்களுக்கு கொடுத்தார்கள். அவர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லையா? சோதனை இருக்கவில்லையா? எதிரிகளால் அச்சுறுத்தல் இருக்கவில்லையா? வறுமை இல்லையா? வியாபார பிரச்சனை இல்லையா? பிள்ளைகள் குடும்பத்தினுடைய சுமைகள் அவர்களுக்கு இல்லையா? 
 
நம்மை விட அதிகமாக இருந்தது. நாமோ ஒரு மனைவியை கட்டி, சில பிள்ளைகளை பெத்துக் கொண்டு, இவ்வளவு செல்வத்தை வைத்துக் கொண்டு, துன்யாவுக்கு இன்னும் நாம் குறைபட்டுக் கொண்டிருக்கிறோம்; எனக்கு அது இல்லையே, இது இல்லையே என்று.
 
அந்த நபித்தோழர்களோ பல மனைவி உடையவர்கள். பல பிள்ளைகளை உடையவர்கள். பெரிய குடும்பம் வறுமையில் இருந்தார்கள். பல சோதனைகளில் இருந்தார்கள். எல்லா வகையான நெருக்கடிகளும் நம்மை விட அதிகமாகதான் சஹாபாக்களுக்கு இருந்தது. 
 
ஆனால், அவர்கள் குர்ஆனை புரிந்தார்கள். நான் ஏன் முஸ்லிமாக இருக்கிறேன் என்பதை புரிந்தார்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் இடையில் உண்டான மிகப்பெரிய வித்தியாசம். மிகப்பெரிய வேறுபாடு. 
 
முஸ்லிமல்லாத ஒருவனுக்கும் எனக்கும் என்ன வேறுபாடு? அவனும் பொய் சொல்கிறான். நானும் பொய் சொல்கிறேன். அவனும் அல்லாஹ்வை வணங்குவதில்லை, நானும் அல்லாஹ்வை வணங்குவதில்லை. 
 
அவனும் வியாபாரத்தில் மோசடி, வாக்கை மீறுவது, அவனும் குடும்பத்தினுடைய உறவுகளில் இறையச்சம் இல்லாமல் இருப்பது, அதே வாழ்க்கைதான் இங்கே முஸ்லிம்களிடத்திலும் மூஃமின்களிடத்திலும் என்றால் என்ன வித்தியாசம்? 
 
ஒரு முஃமின் ஏன் முஃமினாக இருக்கிறான் என்றால் அவன் அல்லாஹ்வை ஐந்து நேர தொழுகைகளை அல்லாஹ்விற்காக இறையச்சத்தோடு தொழுவதால் அவன் முஸ்லிம்.
 
பெயரால் அல்ல, தன்னை ஒரு சமுதாயத்தில் இணைத்துக் கொள்வதால் அல்ல. ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருப்பது அவனுடைய இபாதத்தினால், அவனுடைய உள்ளத்தில் உள்ள ஈமானினால், அவனுடைய உள்ளத்தில் உள்ள தக்வாவினால்.
 
அல்லாஹு தஆலா நபிமார்களுக்கு இந்த சிந்தனையை கொடுத்தான். இறை தூதர்களுக்கு இந்த லட்சியத்தை புரிய வைத்தான். 
 
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹு தஆலா வஹியை கொடுக்கிறான். வஹி கொடுக்கும் பொழுது அல்லாஹு தஆலா மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இந்த வஹினுடைய நோக்கம் என்ன என்பதைப் பற்றி பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.
 
اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِىْ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ‏
 
நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னை வணங்குவீராக! இன்னும், என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன் 20 : 14)
 
இந்த இபாதத்தோடு நம்முடைய வாழ்க்கையை இணைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து நேரத் தொழுகைகளை அவற்றுக்குரிய நேரத்தில் தொழுவது; உணர்வோடு தொழுவது; இலட்சியத்தோடு பயத்தோடு ஆதரவோடு தொழுவது; ஆசையோடு தொழுவது. 
 
இன்னும் இந்த தொழுகையை நீட்ட வேண்டுமே! இன்னும் சில நேரம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதில் இருக்க வேண்டுமே என்ற ஆர்வத்தோடு தொழுவது. 
 
அந்த தொழுகையில் இருந்து விலகும்போது அல்லாஹ்வை விட்டு பிரிகிறோமே! யா அல்லாஹ்! என்னை உன்னுடைய ஈமானிலிருந்து உன்னுடைய இஸ்லாமிலிருந்து பிரித்து விடாதே! என்னை மீண்டும் உன் பக்கம் நெருக்கமாக்கு! 
 
ஆகவேதான் பள்ளியை விட்டு செல்லும் பொழுது,
 
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ , اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
 
யா அல்லாஹ்! உனது அருளை கேட்கிறேன். ஷைத்தானிடமிருந்து என்னை பாதுகாத்துக் கொள்! என்ற துஆ ஓட வெளியே போக சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா, அபூ உசைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் எண்: 713, இப்னுமாஜா எண்: 773.
 
நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் தொழுகை அவசியம் ஆகும். நீங்கள் ஹலாலான தொழிலில் எதை செய்தாலும் அதில் அல்லாஹ்வை மறக்காமல் அல்லாஹ்வுடைய நினைவுள்ளவர்களாக உங்களை இந்த தொழுகை மாற்றினால் நீங்கள் தொழுத தொழுகை உண்மையாகும்.
 
அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! அல்லாஹ் நம்மை சீர்திருத்தம் செய்வானாக! தொழுகையிலேயே அல்லாஹ்வை மறந்தவர்களாக இருக்கக்கூடிய நாம், அதில் நாம் பலவீனமானவர்களாக இருக்கும்போது, தொழுகையை விட்டு சென்றதற்குப் பிறகு அல்லாஹ்வுடைய நினைவு நமக்கு எந்த அளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! 
 
ஈமான் உள்ளவர்களின் தொழுகையைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்:
 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
 
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1,2)
 
அரபியில் அச்சம் பயம் என்பதற்கு நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. خوف என்று சொல்வார்கள். خشية என்று சொல்வார்கள். رهبة என்று சொல்லுவார்கள். تقوى என்று சொல்லுவார்கள். அதில் ஒரு வார்த்தை தான் خشوع  என்பது.
 
خشوع என்றால் ஒரு விதமான பணிவோடு பயத்தோடு ஆசையோடு உள்ளத்தில் ஆழத்திலிருந்து ஏற்படக்கூடிய ஒரு அச்ச உணர்வு. 
 
தான் யாரை வணங்குகிறோமோ அவனுடைய கண்ணியத்தை மதிப்பை உள்ளத்தில் நிறுத்தி, அவன் மீது ஆசை கொண்டவனாகவும், அவனை பயந்தவனாகவும், அவனுடைய தண்டனையை பயந்தவனாகவும், அவனுடைய ரஹ்மத்தை ஆசை வைத்தவனாகவும் இருக்கின்ற நிலையில், மதிப்பு மிக்க அரசனுக்கு முன்னால் நிற்கிறோமே என்ற ஈமானிய உணர்வோடு, தன்னுடைய தவறுகளை குற்றங்களை நினைத்து ஏற்படக்கூடிய அந்த அச்ச உணர்வுதான் خشوع என்பது.
 
அதை தமிழில் உள்ளச்சம் என்று சுருக்கமாக சொல்லுவார்கள். 
 
எந்த மூஃமின்கள் தொழுகையில் உள்ளச்சம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் வெற்றி அடைந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான்.
 
அல்லாஹு தஆலா இபாதத்துக்காகதான் நம்மை படைத்திருக்கிறான். நம்முடைய ஒவ்வொரு நாளும் நாம் மறுமைக்கு நெருங்கிக் கொண்டே இருக்கிறோம். 
 
அல்லாஹ் தஆலா, மறுமைக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை ஒரு வசனத்தில் அல்ல பல வசனங்களில் எச்சரிக்கையாக நமக்கு சொல்கிறான்:
 
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ‌
 
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! ஓர் ஆன்மா, அது (தனது) மறுமைக்காக எதை முற்படுத்தி இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளட்டும். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 59 : 18)
 
வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் வரும். எவ்வளவோ பிரச்சனைகள் வரலாம். குழப்பங்கள் வரலாம். உலகம் சார்ந்த எத்தனை சோதனைகள் வேண்டுமானாலும் வரலாம். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தீனில் சோதிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு தேடினார்கள். தீனில் சோதிக்கப்படுவது என்றால் நம்முடைய வாழ்க்கையில் இபாதத்துகள் குறைவது. 
 
நம்முடைய இபாதத்துடைய நிலை நேற்றைய நாளைய விட இன்றைய நாள் அதிகமாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
 
இதுதான், சஹாபாக்களுக்கும் நமக்கும் இடையில் உண்டான வித்தியாசம். ஒவ்வொரு நபித்தோழரும் ஒவ்வொரு சஹாபிய பெண்மணியும் அவர்களுடைய வாழ்க்கையில் இபாதத்தை அதிகப்படுத்தி, அவர்களுடைய ஒவ்வொரு நாளும் வணக்க வழிபாட்டில் கண்காணிப்பு உள்ளவர்களாக இருந்தார்கள். 
 
இபாதத்தினுடைய குறையை அதில் அலட்சியம் ஏற்படுவதை ஒருபோதும் அவர்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை. 
 
இன்று நாம் எப்படி எல்லா இபாதத்தையும் மூட்டை கட்டுவதற்கு நமக்கு நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராக இருக்கிறோம். 
 
துன்யாவிற்காக இபாதத்தில் எல்லா ஆல்ட்ரேஷனும்  செய்வதற்கு தயார். ஆனால், துன்யா என்று வந்துவிட்டால் அதில் எந்த குறைவுக்கும் நாம் தயார் இல்லை.
 
இங்கேதான் நம்முடைய ஈமானின் அளவை நாம் பார்க்க வேண்டும். நம்முடைய இறையச்சத்தின், மறுமை சிந்தனையின் அளவை நாம் பார்க்கிறோம். 
 
அந்த நபித்தோழர்களால் வறுமையை, பசியை பட்டினியை, நெருக்கடிகளை, இப்படி துன்யாவின் எல்லா கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் இபாதத்தில் அவர்கள் சோர்ந்து விடவில்லை. வணக்க வழிபாட்டில் அவர்கள் பின்வாங்கவில்லை. 
 
அவர்களுடைய ஜமாஅத்தினுடைய தொழுகை வீணாகவில்லை. அவர்களுடைய இரவுத் தொழுகை அவர்களுக்கு குறையவில்லை. அவர்களுடைய திக்ருகள், துஆக்கள் இன்னும் என்னென்ன வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுடைய தூதரிடம் இருந்து கற்றார்களோ அந்த வணக்க வழிபாடுகள் உயர்ந்து கொண்டே தான் சென்றன. 
 
ஆனால், இன்று நம்மில் வணங்குபவர்கள் கூட தங்களுடைய வணக்க வழிபாட்டுக்கு ஒரு லிமிடேஷன் வைத்திருக்கிறார்கள். இவ்வளவு அல்லாஹ்வுக்கு செய்தால் போதும் என்று.
 
ஆனால் அல்லாஹ்விடமிருந்து செல்வத்தை எதிர்பார்ப்பதோ, உலக வசதிகளை எதிர்பார்ப்பதோ அளவில்லாமல். 
 
யா அல்லாஹ்! எங்களுக்கு பரக்கத்தா கொடு! எங்களுக்கு அதிகமா கொடு! எங்களுக்கு நிறைய நிறைய கொடு! 
 
ஆனால், அல்லாஹ்வுக்கு செய்யக்கூடிய இபாதத்துக்களை, அல்லாஹ்வுடைய பாதையில் கொடுக்கக்கூடிய தர்மங்களை எண்ணி எண்ணி, கணக்கு பார்த்து கணக்கு பார்த்து இது போதும் நமக்கு, இது அதிகம் நமக்கு என்று சொல்லக்கூடியவர்கள் கூட இருக்கிறார்கள்.
 
ஆஃகிறத்துதான் நம்முடைய வாழ்க்கை. ஆஃகிறத்துக்காகதான் அல்லாஹ் நம்மை படைத்தான். இந்த ஆஃகிறத்தை எதிர்பார்த்து மௌத்தை எதிர்பார்த்திருக்ககூடிய ஒரு மூமினுக்கும், ஆஃகிறத்தை எதிர்பார்க்காமல் மௌத்தை எதிர்பார்க்காமல் உலக மக்களில் ஒருவனாக உலகத்தை அடிப்படையாக வைத்து வாழக்கூடியவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? 
 
ஆஃகிறத்துக்காக வாழ்பவர்கள் இபாதத்தில் கவனம் உள்ளவர்களாக இருப்பார்கள். உலகத்தில் மாறக்கூடிய அரசியல் மாற்றங்களோ, அவர்கள் உலகத்தில் சந்திக்கக்கூடிய சோதனைகளோ, பிரச்சனைகளோ அவர்களை இபாதத்திலிருந்து கவனத்தை திருப்பாது. அவர்களை சோர்வடைய செய்யாது. அவர்களுக்கு இபாதத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தாது. 
 
மேலும் மேலும் அல்லாஹ்வை முன்னோக்கி சென்று கொண்டே இருப்பார்கள். எல்லா சோதனைகளையும் அல்லாஹ்விடத்தில் முறையிட்டு, அதற்கான தீர்வை தேடுவார்கள். 
 
ரப்புல் ஆலமீன் சொல்லிக் காட்டுகிறான்:
 
وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ
 
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் முகத்தை நாடி பொறுமையாக இருப்பார்கள்; மேலும், தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; இன்னும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்வார்கள்; இன்னும், நல்லதைக் கொண்டு கெட்டதைத் தடுப்பார்கள். இ(த்தகைய)வர்கள், இவர்களுக்குத்தான் மறுமையின் அழகிய முடிவுண்டு. (அல்குர்ஆன் 13 : 22)
 
ரப்பு நமக்கு சொல்லிவிட்டான்: உங்களுக்கு எதிரிகளால் பிரச்சினை உண்டு. உங்களுக்கு எதிரிகளால் சோதனை உண்டு. 
 
இறைதூதர்கள் கொல்லப்படவில்லையா? ஒரு இரவில் 40 நபிமார்களை இஸ்ரவேலர்கள் கொன்றார்கள். 
 
பார்க்க : தஃப்சீர் ஜலாலைன்.
 
இறை நேசர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார்கள். கழு மரத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள். 
 
யாருக்கு சோதனை இல்லை. யாருக்கு பிரச்சினை இல்லை. அல்லாஹ் சொல்லுகிறான்: மேற்சொன்ன வசனத்தின் கருத்து:
 
பொறுமை சகிப்பு என்று சொல்லும் பொழுது அல்லாஹ்வுடைய முகத்தை நாடக்கூடியவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பொறுமை சகிப்பு என்பது இலகுவாக இருக்கும். 
 
மறுமையை குறிக்கோளாக வைத்தவர்களுக்கு தான் பொறுக்க முடியும். இல்லை என்றால் பதட்டப்பட்டு விடுவார்கள்; அவசரப்பட்டு விடுவார்கள்; தடுமாறி விடுவார்கள்; குழம்பி விடுவார்கள். ஈமானிலிருந்து தடம் புரண்டு விடுவார்கள். 
 
அல்லாஹ் சொல்லுகிறான்; யார் பொறுத்தார்களோ, தொழுகையை நிலை நிறுத்தினார்களோ, நாம் அவர்களுக்கு கொடுத்ததில் இருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்தார்களோ அவர்களுக்கு நாளை மறுமையில் அழகிய முடிவு என்று கூறுகிறான்.
 
மிக முக்கியமான ஒன்றை அல்லாஹ் இங்கு சொல்லிக் காட்டுகிறான். பொதுவாக கலப்பு சமுதாயத்தில் வாழக்கூடிய நம் போன்றவர்களுக்கு மிக அழகான அறிவுரையை அல்லாஹ் சொல்லுகிறான். 
 
இன்று நம்மில் சிலர், காபிர்களோடு பழகி பழகி அவர்களின் சிந்தனையும் குஃப்ராக இருக்கிறது. முல்லை முல்லால்தான் எடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.
 
இஸ்லாம் தீமையை நன்மையைக் கொண்டு தடு என்று சொல்கிறது. ஒரு தீமையை தீமையை கொண்டு தடுக்க முடியாது. 
 
குர்ஆன் நமக்கு கூறுகிறது: 
 
اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ
 
மிக அழகியதைக் கொண்டு (தீமையை) தடுப்பீராக! (அல்குர்ஆன் 41 : 34)
 
இவர்களுக்குத்தான் மறுமையினுடைய உயர்வான வெற்றி இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
ஆகவே, இந்த வணக்க வழிபாட்டை குறித்து மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டி கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்கும் சொல்ல வேண்டும். நம்முடைய உலக வாழ்க்கையில் நம்முடைய நோக்கம் ஆஃகிறத்துதான். நம்முடைய நோக்கம் இபாதத்துக்குதான். 
 
அல்லாஹ் என்னை படைத்திருக்கிறான்; நான் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; என்னை அல்லாஹ் வணக்கசாலியாக ஆக்க வேண்டும்; அல்லாஹ்வை வணங்கிய நிலையிலேயே என்னுடைய வாழ்க்கை கழிய வேண்டும்; 
 
இபாதத்துக்காக என்னுடைய வாழ்க்கையினுடைய பெரும் பகுதியை செலவழித்து அல்லாஹ்வை திருப்தி படுத்தியவனாக அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற லட்சியத்தை நாமும் நினைவூட்டி கொண்டு, நம்முடைய குடும்பத்தார்களுக்கு பிள்ளைகளுக்கு நண்பர்களுக்கு இந்த நினைவை நாம் ஏற்படுத்திக் கொண்டே இருப்போமாக!
 
அல்லாஹு சுபஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வை வணங்குவதற்குரிய வாய்ப்பை தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/