HOME      Khutba      உயர்வான இலட்சியம் | Tamil Bayan - 737   
 

உயர்வான இலட்சியம் | Tamil Bayan - 737

           

உயர்வான இலட்சியம் | Tamil Bayan - 737


உயர்வான இலட்சியம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உயர்வான இலட்சியம்
 
வரிசை : 737
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 26-08-2022 | 28-01-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாகவும்! 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாகவும், அல்லாஹ்விடத்தில் அவனது பொருத்தத்தையும் அன்பையும் வேண்டியவனாகவும் இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நமது எண்ணங்களை நமது நோக்கங்களை உயர்வாக்கித் தருவானாக! அல்லாஹ்வை அடைவதிலும் அவனுடைய அன்பை பொருத்தத்தை அடைவதிலும் நம்முடைய வாழ்க்கையை செலவழிப்பதற்கும், ஜன்னத்துல் ஃபிர்தௌசை பெறுவதற்குரிய அமல்களை செய்வதற்கும் அல்லாஹு தஆலா அருள் புரிவானாக! 
 
தாழ்ந்த நோக்கங்கள் லட்சியங்களில் இருந்தும், கெட்ட எண்ணங்கள் கெட்ட செயல்களில் இருந்தும், கெட்ட கொள்கையிலிருந்தும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கு எப்போதும் நல்லதை, உயர்வானதை, சிறந்ததை விரும்புகிறான். நமது மார்க்கமே நமக்கு அப்படித்தான் வழிகாட்டி இருக்கிறது. 
 
இந்த உலகத்தில் எது சிறந்த கொள்கையோ அதை நமக்கு நம்முடைய மார்க்கம் கொள்கையாக கொடுக்கிறது. உணவுகளில், உடைகளில், எண்ணங்களில், குணங்களில் எது சிறந்ததோ அதைத்தான் நம்முடைய மார்க்கம் நமக்கு போதிக்கிறது. 
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் நம்மில் என்ன விரும்புகிறார்கள் என்றால், நாம் எண்ணத்தாலும், செயல்களாலும், குணத்தாலும் எல்லா வகையிலும் இந்த உயர்வோடு சிறப்போடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
 
ஒரு முஃமின் தாழ்ந்த குறிக்கோள் உடையவனாக, மட்டமான லட்சியமுடையவனாக, அற்பமான இலக்கு உடையவனாக இருக்கக் கூடாது. 
 
ஒரு முஸ்லிம் உடைய லட்சியம் எப்போதும் உயர்வாக இருக்க வேண்டும். இதைதான் மார்க்கத்தில்  علو الهمةஎன்று சொல்வார்கள். உயர்ந்த லட்சியத்தை உயர்ந்த மன உறுதியை கொண்டிருப்பது.
 
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்: இந்த உயர்ந்த லட்சியம் உயர்ந்த கொள்கை என்றால் ஒரு மனிதனுடைய தேடல் அல்லாஹ்வை அவனுடைய பொருத்தத்தோடு அன்போடு அடைக்கிற வரை அது நின்று விடக்கூடாது. 
 
ஒரு மனிதனுடைய உயர்ந்த லட்சியம் என்பது, நான் அல்லாஹ்வை அடைய பெற வேண்டும்; அல்லாஹ்வுடைய அன்பை அல்லாஹ்வுடைய பொருத்தத்தை இந்த உலக வஸ்துக்கள் எந்த ஒன்றுக்காகவும் நான் அல்லாஹ்வை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
 
இப்படியாக நம்முடைய உள்ளத்தில் அந்த உயர்ந்த தேடல் வரவேண்டும். பிறகு, மார்க்கத்தின் விஷயங்களாக இருக்கட்டும், மற்ற பொது விஷயங்களாக இருக்கட்டும், எல்லா விஷயங்களிலும் வரக்கூடிய அந்த உயர்ந்த லட்சியம்தான் علو الهمة -மன உறுதி உயர்ந்த லட்சியம் என்பதாக சொல்லப்படுகிறது 
 
கலீஃபா உமருல் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு அழகிய உபதேசத்தை நமக்குச் சொல்கிறார்கள். கலிஃபா உமர் உடைய உபதேசங்களே வாசிப்பதற்கும், படித்து புரிந்து சிந்தித்து செயல்படுவதற்கும் மிகவும் உயர்ந்த உபதேசங்கள். 
 
روي عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال: (لا تصغرنَّ همتكم؛ فإني لم أرَ أقعد عن المكرمات من صغر الهمم)
 
உன்னுடைய மன உறுதியை உன்னுடைய லட்சியத்தை மட்டமாக வைத்துக் கொள்ளாதே! உன்னுடைய குறிக்கோளை உன்னுடைய தேடலை அற்பமாக மட்டமாக மிகச் சிறியதாக ஆக்கிக் கொள்ளாதே!
 
ஒரு மனிதனை செயல்படாமல் வைக்கக் கூடியது எதுவென்றால் அவனுடைய அந்த மட்டமான லட்சியம், அவனுடைய தாழ்வான சிந்தனை. இதுதான் ஒரு மனிதனை முடக்கி விடுகிறது. அவனுடைய இயக்கங்களை தடுத்து விடுகிறது. நிறுத்தி விடுகிறது என்பதாக கலிஃபா உமருல் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.
 
நூல் : அதபுத் துன்யா வத்தீன்.
 
மேலும், இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: ஒரு மனிதன் இந்த மறுமையின் பயணத்தை, அல்லாஹ்வை நோக்கிய சொர்க்கத்தை நோக்கிய இந்த பயணத்தில் அவனுக்கு மிகப்பெரிய மன உறுதி வேண்டும். மிகப்பெரிய கொள்கை உறுதி வேண்டும். உறுதியான உயர்ந்த லட்சியம் வேண்டும். 
 
அந்த லட்சியம்தான் இவனை அந்த மறுமையின் பாதையில் அந்த சொர்க்கப் பாதையில் இவனை இறுதிவரை நடத்திக் கொண்டே இருக்கும். இறுதிவரை அவனை வழி நடத்திக் கொண்டே இருக்கும்.
 
இப்னு பத்தா என்ற மிகப்பெரிய அறிஞர் சொல்கிறார்கள்: நீ எந்த ஒன்றை அடைய நினைத்தாலும் அதில் உயர்ந்ததை, அதில் சிறந்ததை, அதில் மிகவும் மேலானதை அடைய முயற்சி செய். 
 
புகழும் உயர்வுகளும் இதெல்லாம் அவர் அவர்களுக்கு என்று பங்கு வைக்கப்பட்ட இறைவனுடைய விதி என்று சொல்லி கொண்டு நீ முடங்கி விடாதே!
 
ஒரு விஷயத்தை தேடக்கூடியவர்கள் எப்போதும் அதில் போட்டி போடக்கூடியவர்களாக இருந்தால்தான் அவர்கள் தாங்கள் தேடியதை விரும்பியதை அடைய முடியும். அப்படி இல்லாமல் நீ முடங்கி போய் தாழ்ந்ததை நீ தேடிக் கொண்டு விதியின் மீது பழி போட்டுவிட்டு உட்கார்ந்து விடாதே!
 
இந்த உயர்ந்த மன உறுதி என்பது உயர்விலும் இருக்கிறது. தாழ்ந்ததிலும் இருக்கிறது. சிலர், நான் சிறந்த நல்லவனாக ஆக வேண்டும் என்பதாக முயற்சி செய்வார்கள். அல்லாஹ்விற்கு மிக நெருக்கமானவனாக, மார்க்கத்தை பின்பற்றுவதில் மிக உறுதியானவனாக, மக்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்வதில் மிக உயர்ந்த ஒரு முன்னோடியாக ஆக வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தில் முயற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள்.
 
இன்னொரு வகையான உயர்ந்த எண்ணமும் இருக்கிறது. மன உறுதியும் இருக்கின்றது. அதாவது, மட்டமான செயலை செய்வதில், மோசமான செயலை செய்வதில், கீழ்த்தனமான காரியங்களை செய்வதில் போட்டி போடுவது. அதில் உறுதியாக இருப்பது. அதில் தன்னுடைய சிந்தனையை தன்னுடைய முயற்சியை செலவு செய்வது. 
 
அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் போன்றோர் சொர்க்கத்தின் பாதையில் அவர்கள் முயற்சி செய்தார்கள். அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் உதவுவதில் அவர்கள் தங்களை அர்ப்பணித்தார்கள். 
 
அந்த மறுமையின் லட்சியத்திற்காக அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை, அறிவை, சிந்தனையை, தங்களுடைய திறமையை செலவழித்தார்கள். 
 
அதற்கு நேர் எதிராக அங்கே அபூஜஹலும் இருந்தான். அபூலஹபும் இருந்தான். உமைய்யாவும் இருந்தான். உத்பாவும் இருந்தான். 
 
இவர்கள் உலகத்திற்காக, இந்த உலகப் பெயருக்காக, புகழுக்காக தங்களுடைய திறமையை அறிவை செலவழித்து கீழ்த்தரமானவர்களில் கீழ்த்தரமாக மாறினார்கள்.
 
அவர்களுக்கும் ஒரு குறிக்கோள் இருந்தது. இவர்களுக்கும் ஒரு குறிக்கோள் இருந்தது. அவர்களுடைய குறிக்கோளோ அல்லாஹ்வுடைய பொருத்தமாக சொர்க்கமாக இருந்தது. இவர்களுடைய குறிக்கோளோ உண்மையை எதிர்ப்பது; சத்தியத்தை எதிர்ப்பதாக இருந்தது. 
 
அதுபோன்றுதான் நம்முடைய குறிக்கோள், நம்முடைய லட்சியம் எந்த பாதையில் இருக்கிறது? எதற்காக இருக்கிறது? என்பதை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு அழகிய ஹதீஸின் வழிகாட்டலை பாருங்கள். அபூ கப்ஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: 
 
«ثَلَاثَةٌ أُقْسِمُ عَلَيْهِنَّ وَأُحَدِّثُكُمْ حَدِيثًا فَاحْفَظُوهُ»
 
மூன்று ஒழுக்கங்களை உங்களுக்கு நான் சொல்லித் தருகிறேன். அவற்றை மனனம் செய்து கொள்ளுங்கள். 
 
(மனனம் என்றால் சிந்தனையில் அறிவில் மனனம் செய்வது மட்டுமல்ல, வாழ்க்கையில் அதை கடைபிடியுங்கள். நாம் எத்தனையோ வசனங்களை அதனுடைய பொருள்களை ஹதீஸ்களை அறிந்து வைத்திருக்கிறோம். மனனம் செய்து வைத்திருக்கிறோம்.  
 
ஸஹாபாக்களுடைய மனனம் செய்து வைத்திருக்கக் கூடிய அந்த தன்மைக்கும், நம்முடைய முன்னோர்கள் ஸலஃப்புகள் ஹதீஸை மனனமிட்டதற்கும், ஹதீஸை அறிந்ததற்கும், நாம் ஹதீஸுகளை அறிந்திருப்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.
 
அவர்கள் அமலுக்காக அறிந்தார்கள். அவர்களுடைய அறிவோடு சேர்த்து அவர்களுடைய அமலும் இருந்தது. நம்மிடத்தில் அறிதல் இருக்கிறது. அமல் இல்லை. புரிதல் இருக்கிறது. செயல்பாடு இல்லை. இது எந்த பயனையும் தராது.)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன அந்த மூன்று தன்மைகள் என்ன கவனியுங்கள்.
 
இன்று சிலருக்கு எப்படி என்றால் தாரில் கை வைத்தது போன்று (தார் என்றால் ரோடு போடுவதற்கு பயன்படுத்தப்படும்) செலவளிப்பதற்கு பயப்படுகிறார்கள்.
 
அதில் கை வைத்தால் கையோடு அது ஒட்டிக்கொள்ளும். அந்த மாதிரி அவர்கள் தங்களது செல்வத்தில் அப்படி இருப்பார்கள். எடுத்து யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். தனக்கு செலவு செய்வதில் கூட சில கருமிகள் இருக்கிறார்கள். தனது மனைவி பிள்ளைகளுக்கு செலவு செய்வதில் கூட கஞ்சர்கள் இருக்கிறார்கள். 
 
இன்னும் சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் இப்படிப்பட்டவர்கள் தான். செல்வத்தை எல்லாம் தனக்கும் தனது குடும்பத்துக்கு மட்டும்  என்பதாக நேர்ச்சை செய்து கொண்டவர்கள். 
 
இவர்களை பொறுத்தவரை ஏழைகளோ, அனாதைகளோ, அண்டை வீட்டார்களோ, தேவை உள்ளவர்களோ, அல்லாஹ்வுடைய மார்க்க காரியங்களோ இதெல்லாம் செவிடனின் காதில் சங்கு ஊதுவதைப் போன்று, ஈயத்தைக் காச்சி ஊற்றியதைப் போன்று அவர்களுடைய காதுகளில் ஏறாது. தேவை உள்ளவர்களை பார்த்தாலும் கூட குருடர்களாக கடந்து செல்வார்கள். உள்ளங்கள் உருகாது. 
 
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! தாராளமான மனதை அல்லாஹ் நமக்கு கொடுப்பானாக! அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கக் கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் கொடுப்பானாக! நம்மையும் நம்முடைய செல்வத்தையும் அல்லாஹ்வுடைய தீனுக்காக ஏழைகளுக்காக அல்லாஹ் அங்கீகரிப்பானாக! ஆமீன்.
 
யா அல்லாஹ், எங்களுக்கு காசு கொடு, எங்களுக்கு துன்யால பரக்கத் செய், அல்லாஹ் எங்களுக்கு வியாபாரத்தில் பரக்கத் செய் என்று கேட்டால், ஆமீன் சத்தம் பயங்கரமா இருக்கும்.
 
யா அல்லாஹ், எங்களுக்கு கொடுத்தது எல்லாம் உன்னுடைய தீனுக்காக உன்னுடைய மார்க்கத்திற்காக, ஏழைகளுக்காக, உன்னுடைய பாதைக்காக ஏற்றுக் கொள் என்று கேட்டால் ஆமீன் சத்தமே வராது. 
 
இந்த ஆமீன்லாம் பத்தாது. கல்புல இருந்து வரணும். அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையில் உள்ளது. நாளைக்கு நீங்க போய் அல்லாஹ் கிட்ட பதில் சொல்ல போறீங்க. நான் போயி அல்லாஹ் கிட்ட பதில் சொல்லபோறேன். யாரும் யாருடைய நிய்யத்துக்குப் போயி அல்லாஹ்வுக்கு முன்னால நிக்க முடியாது. பொதுவான நிலைமையை சொல்கிறேன்.
 
நான் என்னுடைய நிய்யத்தை அல்லாஹ்வுக்கு முன்னால் சாட்சி வைத்து சொல்கிறேன். அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! நம்முடைய உயிரை நம்முடைய செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிக்க வேண்டும்; அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லாஹ் பொருந்தி கொள்ள வேண்டும்; அல்லாஹ் கொடுத்ததை எல்லாம் அவனுக்கு கொடுத்துவிட்டு அவனை சந்திப்பதை விட ஒரு நற்பாக்கியம் எதுவும் இல்லை.
 
நம்முடைய உயிராக இருக்கட்டும், நம்முடைய வாழ்நாள் நம்முடைய நேரங்களாக இருக்கட்டும், நம்முடைய செல்வமாக இருக்கட்டும், எதை சம்பாதித்து நாம் கொண்டுபோக போகிறோம் யோசித்துப் பாருங்கள்.
 
எந்த செல்வம் நம்மை கப்ரில் பாதுகாக்கும்? எதை அல்லாஹ்வுடைய பாதையில் கொடுத்தோமோ, எதை ஏழைகளுக்கு எளியவர்களுக்கு கொடுத்தோமோ, எதைக் கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடி அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக கொடுத்தோமோ அதுதான் நமக்கு மறுமைக்கு. அதுதான் நமது சொர்க்கத்திற்கு. 
 
மிச்ச அனைத்தும் இந்த உலகத்தில் பயன்படுத்தியதோடு சரி, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
وَهَلْ لَكَ، يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ؟
 
மனிதனே, நீ என்ன செல்வத்தை கொண்டு அனுபவிக்கப் போகிறாய்? நீ சாப்பிட்டது கழித்தது நீ உடுத்தியது பழையதாக்கியது இதுதான் உனக்கு என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : ப்துல்லாஹ் இப்னு அஷ்ஷுஹைர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2958.
 
முதல் ஹதீஸின் தொடர்:
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«مَا نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ»
 
தர்மத்தால் செல்வம் குறையப்போவதில்லை.
 
என்ன அழகான அறிவுரை பாருங்கள். யக்கீன் வரவேண்டும். ஒன்றைக் கொடுத்தால் அல்லாஹ் பத்து கொடுப்பான். அதை பன்மடங்காக்குவான் என்று அல்லாஹ்வின் வாக்குறுதியில் ஈமான் வரவேண்டும். யக்கீன் வரவேண்டும். 
 
இன்று எல்லோரும் தடுமாற்றத்தில் இருக்கிறோம். நமக்கே இல்லாம போயிடுமோ என்று. அல்லாஹு தஆலா சோதிக்க நினைத்தால் மொத்தமாக அழித்து விடுவான்.
 
இரண்டாவதாக சொன்னார்கள்:
 
وَلَا ظُلِمَ عَبْدٌ مَظْلِمَةً فَصَبَرَ عَلَيْهَا إِلَّا زَادَهُ اللَّهُ عِزًّا
 
ஒரு மனிதன் அநீதி இழைக்கப்படுகிறான். ஒரு மனிதனுக்கு தொந்தரவு கொடுக்கப்படுகிறது. ஆனால், அவன் அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொள்கிறான். அதை தாங்கிக் கொள்கிறான். அத்தகையவனுக்கு அல்லாஹ் உயர்வை கண்ணியத்தைதான் அதிகப்படுத்தி கொடுப்பான். 
 
நமது உறவுகளாலோ நமது குடும்பத்தார்கள் மூலமாகவோ நம்முடைய நண்பர்கள் மூலமாகவோ நமக்கு இழைக்கப்படக்கூடிய அந்த அநீதிகளை நாம் தாங்கிக் கொள்ளும்போது, அல்லாஹ்விற்காக சகித்துக் கொள்ளும் போது, பழி வாங்குவதை விட்டு விடும்போது, அல்லாஹுத்தஆலா நமக்கு கண்ணியத்தை உயர்வை தான் அதிகப்படுத்தி கொடுப்பான். 
 
மூன்றாவதாக சொன்னார்கள்:
 
وَلَا فَتَحَ عَبْدٌ بَابَ مَسْأَلَةٍ إِلَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا
 
ஒரு மனிதன் பிறரிடம் கையேந்த ஆரம்பித்து விட்டால், யாசிக்க ஆரம்பித்து விட்டால் அல்லாஹு தஆலா அவனுக்கு ஏழ்மையின் வாசலை திறந்து விடுவான். அவ்வளவுதான் வாழ்நாள் எல்லாம் யாசிப்பதையே அவன் மீது அல்லாஹ் சாட்டி விடுவான்.
 
அறிவிப்பாளர் : அபூ கப்ஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2325.
 
அடுத்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
இந்த துன்யாவில் நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு அல்லாஹ் செல்வத்தையும் அறிவையும் ஞானத்தையும் கொடுத்தான். அவன் அல்லாஹ்வை பயந்தவனாக வாழ்கிறான். தன்னுடைய உறவுகளுக்கு ரத்த சொந்தங்களுக்கு கொடுத்து வாழ்கிறான். அல்லாஹ் கொடுத்த செல்வத்தில் என்னென்ன கடமைகளை அல்லாஹ் தன் மீது கடமையாக்கி இருக்கிறான் என்பதை அறிந்து, அந்த கடமைகளில் அந்த செல்வத்தை செலவழித்து வாழ்கிறான். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இந்த அடியான் ரொம்ப உயர்ந்த தரஜாவில் இருக்கிறான்.
 
இன்னொரு அடியான், அவனுக்கு அல்லாஹுத்தஆலா ஞானத்தை கொடுத்தான். ஆனால், செல்வத்தை கொடுக்கவில்லை. ஆனால், அவனுடைய நிய்யத் சரியாக இருக்கிறது. அல்லாஹ்! நீ எனக்கு செல்வத்தை கொடுத்தால் நான் இந்த நல்லவர் உனது பாதையில் ஏழை எளியவர்களுக்கு செலவழித்தது போன்று நானும் அந்த செல்வத்தை உனக்கு கொடுப்பேன் என்ற நல்ல எண்ணத்தோடு இருக்கிறான்.
 
இவருக்கு இவருடைய நிய்யத்தின்படி இந்த இருவருடைய கூலியும் அல்லாஹ்விடத்தில் சமமானது. 
 
சுப்ஹானல்லாஹ்! ஒரு மனிதனிடத்தில் காசு இல்லை, பணம் இல்லை. ஆனால், அவனுடைய எண்ணம் சுத்தமாக இருக்கிறது. அல்லாஹ் எனக்கு கொடுக்கும்போது எனக்கு கொடுத்தால் நானும் இன்னாரை போன்று அல்லாஹ்வின் பாதையில் கொடுப்பேன் என்று உண்மையான நிய்யத்தோடு இருக்கிறார். 
 
அந்த எண்ணத்தை அல்லாஹ் அறிந்தவன். அப்படி இருந்தால் இவர் எதையுமே தர்மம் செய்யவில்லை என்றாலும் கூட, இவர் எதையுமே ஏழைகளுக்கு கொடுக்கவில்லை என்றாலும் சரி, (ஏன் கொடுக்கவில்லை? இவரே ஏழையாக இருக்கிறார்.) ஆனால் ஏழைகளுக்கு கொடுத்தால் என்ன நன்மை என்பதை அறிந்து வைத்திருக்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: தர்மம் செய்தாரே கொடுத்தாரே அவருடைய கூலியும் உறவுகளை சேர்த்து வாழ்ந்தாரே உறவுகளுக்கு அள்ளி கொடுத்தாரே அவருடைய கூலியும் இவருடைய கூலியும் சமமானது. 
 
அல்லாஹ்விடத்தில் எண்ணத்திற்கு எவ்வளவு பெரிய உயர்ந்த ஒரு கூலி என்று பாருங்கள். நம் ஒவ்வொருவரும் ஒரு நிய்யத் வைக்கிறோம். மஸ்ஜித் கட்ட வேண்டும். ஒரு மதரசாவை கட்ட வேண்டும். 100 மாணவர்களை படிக்க வைக்க வேண்டும். எண்ணங்களுக்கு என்ன தடை இருக்கிறது? 
 
அந்த எண்ணத்தை உண்மையில் நாம் வைக்கும் பொழுது அல்லாஹ் அதற்குரிய பரக்கத்தையும் செய்வான். அல்லாஹு தஆலா நன்மைகளையும் கொடுப்பான். 
 
அடுத்து சொன்னார்கள்: ஒரு அடியானுக்கு அல்லாஹு தஆலா காசு பணத்தையும் விசாலமாக கொடுத்திருக்கிறான். ஆனால், அவனிடத்தில் மார்க்க அறிவு இல்லை, கல்வியில்லை. அவன் என்ன செய்கிறான்?
 
அல்லாஹ்வுடைய தீனை அவன் அறியாமல் இருக்கிற காரணத்தால் தன்னுடைய செல்வத்தில் தட்டு தடுமாறுகிறான். எங்கே செலவழிக்க வேண்டும்? எப்படி செலவழிக்க வேண்டும்? என்ற வரைமுறை அறியாதவனாக இருக்கிறான்.
 
அல்லாஹ்வை பயந்து செலவழிப்பதில்லை. தன்னுடைய உறவுகளுக்கு கொடுப்பதில்லை.  அல்லாஹ்விற்கு இந்த செல்வத்தில் அவனுக்கென்ற ஒரு உரிமை இருக்கிறது அதை நான் கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் அவன் அறிவதில்லை. 
 
இவனைப் பற்றி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இவன் மிகக் கீழ்த்தனமான மிகக் கேவலமான தகுதியில் அல்லாஹ்விடத்தில் இருக்கிறான்.
 
நான்காவது ஒரு மனிதன், அவனிடத்தில் காசும் இல்லை. பணமும் இல்லை. மார்க்க அறிவும் இல்லை. இவன் என்ன செய்கிறான்? அந்த மூன்றாவது நபர் இருக்கிறான் அல்லவா பணம் இருந்து அறிவில்லாமல் அநியாயத்தில் பாவங்களில் செலவழித்தவனைப் பார்த்து எனக்கு பணம் இருக்குமேயானால் இவனைப் போல நானும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வேன் இவனைப் போன்று நானும் செலவு செய்வேன் என்பதாக மூன்றாவது நபரை பார்த்து ஆசைப்படுகிறான். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இவன் இவனுடைய நிய்யத்திற்கு ஏற்பவே இவனும் முந்தியவனுடைய பாவமும் இரண்டுமே சமமானது தான். (1)
 
அறிவிப்பாளர் : அபூ கப்ஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2325.
 
நிய்யத் எப்பேற்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது! நிய்யத் ஒரு மனிதனை உயர்ந்த தரஜாவிலும் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. மிக மட்டமான மக்களோடும் சேர்த்து விடுகிறது. 
 
இரண்டு வகையான கூட்டத்தை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். இரண்டு வகையான மக்களிடத்திலும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆசை இருந்தது. ஒரு லட்சியம் இருந்தது. 
 
முந்திய கூட்டத்துடைய லட்சியமோ உயர்ந்ததாக இருந்தது. அல்லாஹ்வின் பொருத்தமாக இருந்தது. அல்லாஹ் அவர்களுக்கு உயர்ந்த தரஜாவை கொடுத்தான். இந்த இரண்டாவது வகையுடைய லட்சியமோ மட்டமாக இருந்தது. பாவமாக இருந்தது. தாழ்ந்ததாக இருந்தது. அல்லாஹ் அவர்களையும் அதற்கேற்பவே கேவலப்படுத்தி விட்டான். 
 
இன்னும் இது குறித்து அறிய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த ஜும்மாக்களில் பார்ப்போம். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமக்கும் அந்த உயர்ந்த லட்சியத்தை நோக்கத்தை தந்தருள்வானாக! நோக்கங்களில் சிறந்த நோக்கம் ஆஃகிரத்தினுடைய நோக்கம். நோக்கங்களில் லட்சியங்களில் மிக மட்டமானது இந்த துன்யாவை மட்டுமே குறிக்கோளாக வைத்து வாழ்வது. 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் உயர்ந்த லட்சியத்தோடு அல்லாஹ்விற்கு பிடித்தமான, அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர்ந்த குறிக்கோளோடு வாழக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! தீய எண்ணங்கள் தீய சிந்தனைகளிலிருந்து அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
«وَأُحَدِّثُكُمْ حَدِيثًا فَاحْفَظُوهُ» قَالَ: " إِنَّمَا الدُّنْيَا لِأَرْبَعَةِ نَفَرٍ، عَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالًا وَعِلْمًا فَهُوَ يَتَّقِي فِيهِ رَبَّهُ، وَيَصِلُ فِيهِ رَحِمَهُ، وَيَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا، فَهَذَا بِأَفْضَلِ المَنَازِلِ، وَعَبْدٍ رَزَقَهُ اللَّهُ عِلْمًا وَلَمْ يَرْزُقْهُ مَالًا فَهُوَ صَادِقُ النِّيَّةِ يَقُولُ: لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ بِعَمَلِ فُلَانٍ فَهُوَ بِنِيَّتِهِ فَأَجْرُهُمَا سَوَاءٌ، وَعَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالًا وَلَمْ يَرْزُقْهُ عِلْمًا، فَهُوَ يَخْبِطُ فِي مَالِهِ بِغَيْرِ عِلْمٍ لَا يَتَّقِي فِيهِ رَبَّهُ، وَلَا يَصِلُ فِيهِ رَحِمَهُ، وَلَا يَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا، فَهَذَا بِأَخْبَثِ المَنَازِلِ، وَعَبْدٍ لَمْ يَرْزُقْهُ اللَّهُ مَالًا وَلَا عِلْمًا فَهُوَ يَقُولُ: لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ فِيهِ بِعَمَلِ فُلَانٍ فَهُوَ بِنِيَّتِهِ فَوِزْرُهُمَا سَوَاءٌ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» سنن الترمذي
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/