HOME      Khutba      சோதனையில் நன்மை நிச்சயம்! | Tamil Bayan - 738   
 

சோதனையில் நன்மை நிச்சயம்! | Tamil Bayan - 738

           

சோதனையில் நன்மை நிச்சயம்! | Tamil Bayan - 738


சோதனையில் நன்மை நிச்சயம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனையில் நன்மை நிச்சயம்!
 
வரிசை : 738
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 02-09-2022 | 06-02-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தவனாக, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறியவனாக! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் மீதும், அவர்களின் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக! 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழும் படி உபதேசம் செய்தவனாக, உண்மையையும், நேர்மையையும், நீதத்தையும், சத்தியத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு சுபஹானஹு தஆலா நம் அனைவருடைய பாவங்களையும் மன்னிப்பானாக! அல்லாஹ் பொருந்தி கொண்ட நல்லடியார்களில் என்னையும் உங்களையும் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக! 
 
இந்த உலகமே சோதனை தான். சோதனைகளில் இருந்து நபிமார்களே தப்பிக்கவில்லை என்றால், நபிமார்களும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்! 
 
நிச்சயமாக சோதனை உண்டு. அல்லாஹு தஆலா நம்மை சோதிக்கிறான். நம்முடைய ஈமானை, அமல்களை, பொறுமையை,  யகீனை அல்லாஹ் சோதிக்கிறான். நம்முடைய மறுமை நம்பிக்கையை அல்லாஹ் சோதிக்கிறான். இந்த மார்க்கத்தில் எந்த அளவு உறுதியாக நாம் இருக்கிறோம் என்பதை அல்லாஹ் சோதிக்கிறான். 
 
அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறோமா? அல்லாஹ்விடம் உதவி தேடுகிறோமா? அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறோமா? என்றெல்லாம் அல்லாஹு தஆலா நம்மை சோதிக்கிறான் .
 
அல்லாஹு தஆலா நம்மை சிரமப் படுத்த வேண்டும் என்பதற்காக சோதிப்பதில்லை. நம்மை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் சோதிப்பான். 
 
அல்லாஹு தஆலா நம்மை சோதித்துக் கொண்டே இருப்பான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணம் வரை சோதிக்கப்பட்டார்கள்.
 
முஃமின்கள் எல்லோரும் அவர்களுடைய இறுதி மூச்சு வரை சோதிக்கப்பட்டார்கள். நம்முடைய உண்மையான இல்லம் மறுமை தான். சொர்க்கம் தான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏
 
நல்ல அழகிய முடிவு இறை அச்சம் உள்ளவர்களுக்கு மறுமையில் இருக்கிறது.  (அல்குர்ஆன் 7 : 128)
 
இந்த உலக வாழ்க்கை ஒரு அற்ப கால வாழ்க்கை. ஒரு சொற்பமான வாழ்க்கை. இந்த உலக வாழ்க்கையில் அலங்காரங்கள், இந்த உலக வாழ்க்கையின் சுகபோகங்கள், இந்த உலக வாழ்க்கையில் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக்கூடிய ஆட்சி அதிகாரங்கள், ஆதிக்கங்கள் நம்மை மயக்கி விடக்கூடாது. ஏமாற்றத்தில் வீழ்த்தி விடக்கூடாது. 
 
அல்லாஹ்வுடைய தீன், அல்லாஹ்வுடைய இறையச்சம், இறை நம்பிக்கை இதுதான் உண்மையானது. நிரந்தரமானது. சத்தியமானது.
 
இதைத் தவிர எல்லாம் போலியானது. உண்மையற்றது. கவர்ச்சியாக இருக்கலாம். பார்ப்பதற்கு மனதை பறி கொடுக்கும்படி அதனுடைய தோற்றம் இருக்கலாம். 
 
ஆனால், அது உண்மையில் ஏமாற்றத்தை தரக்கூடிய, மனிதனை நஷ்டத்தில் தள்ளக்கூடிய, மனிதனுக்கு மிகப்பெரிய கேட்டை விளைவிக்கக் கூடிய, மிகப்பெரிய இன்னலை துன்பத்தில் தள்ளக்கூடிய உலக வாழ்க்கையின் ஒரு மாயை தான். அற்ப சோதனை தான்.
 
அல்லாஹு சுபஹானஹு தஆலா இந்த உலக வாழ்க்கையில் நல்லடியார்களுக்கு பல வகையான சோதனைகளை சுழற்சி முறையில் கொடுத்துக் கொண்டே இருந்தான். நமக்கு முன்னால் உள்ளவர்களும் பல நேரங்களில் அவர்கள் சோதிக்கப்பட்டார்கள்.
 
ஆட்சி அதிகாரங்களை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்தும் சோதித்தான். அவர்களிடமிருந்து ஆட்சி அதிகாரங்களை பறித்தும் சோதித்தான். 
 
இது, உலகத்தில் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா ஏற்படுத்தி இருக்கக்கூடிய ஒரு நியதியாகும். எந்த நிலையிலும் தன் மீது அநியாயக்காரர்கள் சுமத்தப்பட்டு இருப்பதைக் கண்டு, காஃபிர்களின் ஆதிக்கம் தங்கள் மீது ஓங்கி இருப்பதைக் கண்டு, முஸ்லிம்களுடைய உடமைகளும், மஸ்ஜிதுகளும், மதரஸாக்களும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதைக் கண்டு ஒரு முஸ்லிம் பலவீனப்பட்டுவிடக்கூடாது; சோர்ந்து விடக்கூடாது; தளர்ந்து விடக்கூடாது.
 
நான் கைவிடப்பட்டு விடுவோமா? நம்முடைய எதிர்காலம் என்னவாகும்? என்றெல்லாம் ஒரு முஃமின் அவருடைய ஈமானில் பலவீனத்தை, அவருடைய ஈமானில் பின்னடைவை அவன் கண்டு விடக்கூடாது.
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா கண்டிப்பாக அநியாயக்காரர்களுக்கு மிக இழிவான ஒரு முடிவை அவன் ஏற்படுத்தி இருக்கிறான். அந்த முடிவை அநியாயக்காரர்கள் வெகுவிரைவில் சந்திக்கத்தான் போகிறார்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَسَيَـعْلَمُ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّ مُنْقَلَبٍ يَّـنْقَلِبُوْنَ‏
 
(இணைவைத்து) அநியாயம் செய்தவர்கள் தாங்கள் எந்த திரும்பும் இடத்திற்கு திரும்புவார்கள் என்பதை விரைவில் அறிவார்கள். (அல்குர்ஆன் 26 : 227)
 
இன்னும் அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்கிறான்:
 
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
 
(நபியே!) அக்கிரமக்காரர்கள் செய்வதை கவனிக்காதவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று எண்ணி விடாதீர்! அவன் அவர்களை (தண்டிக்காமல்) தாமதிப்பதெல்லாம் ஒரு நாளுக்காகத்தான். பார்வைகள் அதில் கூர்ந்து விழித்திடும். (அல்குர்ஆன் 14 : 42)
 
எந்த மறுமை நாளில் பார்வைகள் எல்லாம் பிதுங்கி விடுமோ, எந்த மறுமை நாளில் பார்வைகள் நிலை குத்தி அப்படியே பார்த்த இடத்தை விட்டு திரும்பாமல், உள்ளங்கள் நடுங்கி, இதயங்கள் எல்லாம் தடுமாறி நின்று விடுமோ அந்த மறுமை நாளுக்காக அல்லாஹு தஆலா அவர்களை விட்டு வைத்திருக்கிறான்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அழகிய ஆறுதல்களை வழங்கி இருக்கிறார்கள். சோதனை காலங்களில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற வழிகாட்டுதலை நமக்கு சொல்லி இருக்கிறார்கள். 
 
ஒரு முஸ்லிம் குர்ஆனையும் சுன்னாவையும் பற்றி பிடித்தவனாக, தன்னுடைய மார்க்கத்தைக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடக்கூடியவனாக, அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்வை தேடக்கூடியவனாக இருக்கிறவரை அவனுக்கு எந்த பயமும் இல்லை. அவனுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. எந்த குழப்பமும் இல்லை. எந்த சஞ்சலமும் இல்லை. எதைப் பற்றியும் அவன் கவலைப்பட தேவையில்லை.
 
மக்காவிலிருந்து அத்தனை நூறு முஹாஜிர்கள் துரத்தப்பட்டார்களே! விரட்டியடிக்கப்பட்டார்களே! சொந்த பூமியிலிருந்து, இப்ராஹிம் நபியுடைய ஊரிலிருந்து, அல்லாஹ்வுடைய வீடு இருக்கக்கூடிய புனிதமான ஊரில் இருந்து விரட்டப்பட்டார்களே! 
 
அல்லாஹு தஆலா அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பான இடத்தை கொடுத்தான். அவர்களை அல்லாஹ் எப்படி உயர்த்தினான்!
 
அநியாயக்காரர்கள் அடிச்சுவடு இல்லாமல் போவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.  (அல்குர்ஆன் 108 : 3)
 
அல்லாஹு தஆலா இந்த மார்க்கத்தை பூமியில் கொடுத்த நாளிலிருந்து இந்த வரலாறு தான் எழுதப்படுகிறது. இஸ்லாமும், இதை பின்பற்றக் கூடியவர்களும், இதை பிரச்சாரம் செய்யக் கூடியவர்களும், இதன் பக்கம் மக்களை அழைக்கக் கூடியவர்களும், இதன் மீது உறுதியாக இருப்பவர்களும் தான் இந்த பூமியில் அழகிய உயர்வுகளைக் கொண்டு, உயர்ந்த சிறப்பான நற்பெயர்களைக் கொண்டு, நற்புகழ்ச்சிகளைக் கொண்டு இந்த பூமியில் நினைவு கூரப்படுவார்கள். நிலைத்திருப்பார்கள். 
 
அல்லாஹுவை எதிர்க்கக்கூடிய, இந்த தீனை எதிர்க்கக் கூடிய, இந்த சத்தியத்திற்கு எதிராக நிற்கக்கூடிய யாராக இருந்தாலும் சரி, எத்தகைய மன்னனாக இருந்தாலும் சரி, அவனுக்கு அழிவு நிச்சயம்.
 
அவன் இந்த பூமியில் இகழப்படுவான்; தூக்கப்படுவான்; அவருடைய அடிச்சுவடுகள் இருக்காது; அவருடைய சந்ததிகள் இருக்காது; அவனைப் பற்றி நினைவு கூறக்கூடியவர்கள் இருக்க மாட்டார்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆண் குழந்தைகள் இறந்தபோது சிலர் நபியை ஏசினார்கள். சந்ததியற்றவன், பாக்கியம் அற்றவன், துப்பாக்கியவான் என்றெல்லாம் ஏசினார்கள். 
 
அல்லாஹு தஆலா கூறினான்: நபியே! உங்களை ஏசக் கூடியவர்கள்தான், உங்களுடைய மனதை காயப்படுத்தக்கூடியவர்கள்தான், உங்களை அசிங்கப்படுத்த நினைப்பவர்கள்தான் சந்ததியற்றவர்கள்; நற்புகழ்ச்சி அற்றவர்கள்; துர்ப்பாக்கியவான்கள்; என்னுடைய அருளற்றவர்கள் என்பதாக அல்லாஹ் பதில் கூறினான்.
 
மக்காவில் குறைஷி குடும்பத்தில் எத்தனை காஃபிர்கள் வாழ்ந்தார்கள். அந்த காஃபிர்கள் எல்லாம் தலைவர்களாக, பேரோடும், ஆதிக்கத்தோடும், ஆணவத்தோடும் எத்தனை காஃபிர் தலைவர்கள் இருந்தார்கள். 
 
இன்று, எந்த வரலாறும் அவர்களை நினைவு கூருவதில்லை. அப்படியே கூரப்பட்டாலும்கூ,ட இகழ்ச்சியோடு அவர்கள் கூரப்படுகிறார்கள். இறை சாபத்தோடு அவர்கள் கூரப்படுகிறார்கள். 
 
குறைஷிகளுக்கு தலைவர்களாக இருந்த அபூ ஜஹலை நினைத்துப் பாருங்கள்! அபூ லஹபை நினைத்துப் பாருங்கள்! உமையாவை நினைத்துப் பாருங்கள்! உத்பாவை நினைத்து பாருங்கள்! 
 
அதேநேரத்தில் ஈமான் கொண்டு, இஸ்லாமை ஏற்று, இந்த நபியுடைய உம்மத்துகளில் ஒருவராக இருந்த ஏழை ஹுபைபை நினைத்துப் பாருங்கள்! பிலாலை நினைத்துப் பாருங்கள்! அம்மாரை நினைத்துப் பாருங்கள்! 
 
அல்லாஹு தஆலா அவர்களது பெயர்கள் காலமெல்லாம் நினைவு கூறும்படி, வரலாற்றில் இறுதிவரை வழித்தோன்றக்கூடிய மக்கள் அவர்களை வாழ்த்தும் படியாக ஆக்கி வைத்திருக்கிறான் என்றால் நிரந்தரம் அல்லாஹ்விற்கும் மட்டும்தான். 
 
அல்லாஹு தஆலா, இந்த உலகத்தின் அழகிய நிரந்தரத்தை அவனுடைய மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும் அவனுடைய மார்க்கத்திற்கு பணிந்தவர்களுக்கும் தான் கொடுப்பான்.
 
இஸ்லாம் எதிர்க்கப்படாத ஒரு மார்க்கமா? என்றால் கண்டிப்பாக இல்லை. நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாம் எதிர்க்கப்பட்டதா? இல்லையா? இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாம் எதிர்க்கப்பட்டதா இல்லையா? எந்த நபியினுடைய காலத்தில் இந்த தீன் எதிர்க்கப்படவில்லை!
 
நாம் இன்னும் குர்ஆனை சரியாக படிக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். அல்லாஹு தஆலா நமக்கு எச்சரிக்கையாக சொல்கிறான்:
 
وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً اَتَصْبِرُوْنَ وَكَانَ رَبُّكَ بَصِيْرًا‏
 
இன்னும், உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கினோம். நீங்கள் பொறு(மையாக இரு)ப்பீர்களா? மேலும், உமது இறைவன் உற்று நோக்குபவனாக (அனைத்தையும் கூர்ந்து பார்ப்பவனாக) இருக்கிறான். (ஆகவே அவனது பார்வையை விட்டு எதுவும் தவறி விடாது.) (அல்குர்ஆன் 25 : 20)
 
இன்று, இறைமறுப்பாளர்கள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் இஸ்லாமோடும் முஸ்லிம்களோடும் என்ன செய்கிறார்களோ, எப்படி நடந்து கொள்கிறார்களோ அந்த செயல்களை விட அதிகமாக கடுமையாக நம்முடைய முன்னோர்களோடு செய்திருக்கிறார்கள். 
 
வீடுகள், பள்ளிகள் இடிக்கப்பட்டுள்ளது. ஊர்களை விட்டு அவர்கள் துரத்தப்பட்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் நம்முடைய முன்னோர்களுக்கு நடந்திருக்கிறது.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீடுகளை, இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் செய்த சஹாபாக்களுடைய வீடுகளை, அவர்களுடைய செல்வங்களை குறைஷிகள் பிடுங்கிக் கொண்டார்கள். பலருடைய வீட்டை இடிக்கவும் செய்தார்கள். 
 
இங்கே அல்லாஹு தஆலா நம்மிடத்தில் எதிர்பார்ப்பது, உங்களிடத்தில் பொறுமை இருக்கிறதா? உறுதி இருக்கிறதா? 
 
எத்தனையோ பல சோதனைகளுக்கு காரணம், நம்முடைய பாவங்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 
 
நிம்மதியாக வாழ்ந்த காலத்தில் அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவர்களாக இருந்தோமா? அல்லாஹ்வுடைய இந்த தீனை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடியவர்களாக இருந்தோமா? இந்த தீனின் பக்கம் அழைக்கக் கூடியவர்களாக இருந்தோமா? 
 
எவ்வளவு குறைகளை எவ்வளவு அலட்சியங்களை நாம் செய்திருக்கிறோம்! அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நம்முடைய முன்னோர்கள் ஈமானோடு அமல்களோடு இருக்கின்ற நிலையில் அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வுடைய உதவி அவர்களுக்கு வந்தது. 
 
இன்று, நாம் சோதிக்கப்படுவது எதற்காக தெரியுமா? எந்த மார்க்கத்தை விட்டு நாம் விலகி இருந்தோமோ, அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களில் எதில் நாம் அலட்சியமாக இருந்தோமோ, எந்த ஹராமான பாவங்களை நமது சமுதாயம் செய்து கொண்டிருந்ததோ, அதிலிருந்து தவ்பா செய்வதற்காக; அதிலிருந்து விலகுவதற்காக; மார்க்கத்தின் பக்கம் அல்லாஹ்வின் பக்கம் தக்வாவின் பக்கம் வருவதற்காக; ரப்புடைய தீனின் பக்கம் வருவதற்காக அல்லாஹ் நம்மை சோதிக்கிறான். 
 
நம்முடைய முன்னோர்கள் ஈமான் இஸ்லாமில் பரிபூரணமாக இருக்கும்போது சோதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய ஈமானுடைய நிலையை உயர்த்தி இந்த தீனை அல்லாஹு தஆலா பரப்புவதற்காக.
 
சிலருக்கு இப்படியும் சோதனை வரும். அந்த சோதனையில்தான் நாம் இருக்கிறோம். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அலட்சியம் செய்யக்கூடியவர்களை அல்லாஹ் சோதிப்பான். அவர்களை மார்க்கத்தின் பக்கம் திருப்புவதற்காக; இஸ்லாமின் பக்கம் திருப்புவதற்காக; தக்வாவின் பக்கம் திருப்புவதற்காக. 
 
அந்த நேரத்தில் இந்த சோதனையின் உண்மையை அவர்கள் புரிந்துகொண்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பி விடுவார்களேயானால், தங்களுடைய தீனின் பக்கம் திரும்பி விடுவார்களேயானால் அல்லாஹ் சுபஹானஹு தஆலா இந்த சோதனையை இந்த பிரச்சனைகளை ஓர் இரவிலேயே மாற்றுவதற்கும் ஆற்றல் பெற்றவன்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அவன் அடியார்கள் மீது மகா கருணையாளன்.
 
وَكَانَ بِالْمُؤْمِنِيْنَ رَحِيْمًا‏
 
அவன் நம்பிக்கையாளர்கள் மீது மகா கருணையாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 43)
 
அல்லாஹு தஆலா நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான்?
 
நாம் பணிய வேண்டும்; பயப்பட வேண்டும்; அல்லாஹ்வின் பக்கம் ஓடோடி வர வேண்டும்; அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்; இந்த தீனை பற்றி பிடிக்க வேண்டும்; இந்த மார்க்கத்தை முன்வைத்து ஆகிரத்தை முன்வைத்து வாழ வேண்டும் என்பதை அல்லாஹ் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறான். 
 
ஆனால், இத்தகைய சோதனைகளையும், கண்ணுக்கு நேராக நம்முடைய சகோதரர்களின் விஷயத்தில், நம்முடைய அண்டையர்களின் விஷயத்தில் கண்டு கொண்டதற்கு பிறகும் கூட, நம்முடைய உம்மத்தில் உள்ளவர்கள் இன்னும் மார்க்கத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள் என்றால், நன்மைகளின் பக்கம் திரும்பி வருவதற்கு பதிலாக மேலும் அதே பாவத்தில் அவர்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதே அழிச்சாட்டியத்திலும் அநியாயங்களில்லும் நிராகரிப்பிலும் அந்த பெரும் பாவங்களிலும் மூழ்கி கிடக்கிறார்கள் என்றால், அல்லாஹ்வுடைய சோதனை எப்படி அதிகமாகும்? என்பதை பயப்பட வேண்டும். 
 
அல்லாஹு தஆலா நம்முடைய சமுதாயத்தை அப்படித்தான் வைத்திருக்கிறான். நான் செய்யக்கூடிய பாவத்தால் எனக்கு வேண்டுமானால் பிரச்சனை ஏற்படலாம், பிறருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.
 
அல்லாஹு தஆலா பாவத்தை எப்படி வைத்திருக்கிறான் என்றால், இந்த உம்மத்தில் ஒருவன் பாவம் செய்வானேயானால் அந்தப் பாவத்தால் இறங்கக்கூடிய சோதனை பொதுவாக இருக்கும்; அந்த பாவத்தால் இறங்கக்கூடிய அல்லாஹ்வின் தண்டனை சாபம் பொதுவாக இருக்கும். 
 
நம்முடைய சமுதாயத்தில் ஒருவன் பாவம் செய்வதை நாம் பார்த்ததற்கு பிறகு எனக்கென்ன என்று கடந்து செல்வதற்கு நமக்கு அனுமதி இல்லை. அல்லாஹ் சுபஹானஹு தஆலா எச்சரித்து சொல்கிறான்:
 
وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّة
 
இன்னும், நிச்சயமாக உங்களில் உள்ள அநியாயக்காரர்களை மட்டுமே வந்தடையாத ஒரு தண்டனையை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 8 : 25)
 
அல்லாஹ்வுடைய தண்டனை வருமேயானால் அந்த தண்டனை பொதுவாக இருக்கும். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கேட்டார்கள்: 
 
يَا رَسُولَ اللَّهِ، أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟
 
அல்லாஹ்வின் தூதரே! எங்களில் நல்லவர்கள் இருக்கும்போது எங்களுக்கு அழிவு வருமா? 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«نَعَمْ إِذَا ظَهَرَ الخُبْثُ»
 
ஆம், தீமைகள் பாவங்கள் அதிகமாகிவிட்டால். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 2185.
 
முஸ்லிம் சமூகத்தில் விபச்சாரம், மது அருந்துதல், வட்டி போன்ற மானக்கேடான பாவங்கள் அதிகமாகிவிட்டன. 
 
தொழுகையை விடுவது அதிகமாகிவிட்டது. மஸ்ஜிதுகளை விட இன்று முஸ்லிம்களின் ஒரு பெரும்பான்மையான எண்ணிக்கைகளிடத்தில் தர்காக்கள் புனிதமாக மதிக்கப்படுகின்றன. 
 
மஸ்ஜிதுகளுக்கு வரக்கூடியவர்களுடைய எண்ணிக்கையை விட தர்காக்களை வணங்கக் கூடியவர்கள், கப்ர்களை வணங்கக் கூடியவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 
 
இப்படியாக பாவத்தினுடைய ஒரு பட்டியலை போட்டு, அந்த பாவங்களை நாம் பார்த்தோமேயானால், இதில் ஏதாவது ஒன்று முஸ்லிம்களிடத்தில் குறைந்திருக்கிறதா என்றால் அப்படி சொல்ல முடியாத நிலையில் பரவலாக இந்தப் பாவங்கள் மக்களிடத்தில் காணப்படுவதை பார்க்கிறோம்.
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனில் நமக்கு எச்சரிக்கை செய்கிறான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கை செய்கிறார்கள்:
 
 
நீங்கள் நன்மையை ஏவுங்கள். தீமையை தடுங்கள். இல்லையென்றால் அநியாயக்கார அரசனை அல்லாஹ் உங்கள் மீது சாட்டுவான் என்று. 
 
«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ المُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَابًا مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلَا يُسْتَجَابُ لَكُمْ»
 
பிறகு, நீங்கள் துஆ கேட்பீர்கள். அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படாது.
 
அறிவிப்பாளர் : ஹுதைஃபா இப்னுல் யமான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2169.
 
நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் என்றால் என்ன? ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இது கடமையாக இருக்கிறது. அல்லாஹ்வுடைய கட்டளை, அல்லாஹ்வுடைய சட்டம் ஓரிடத்தில் மீறப்படும்போது, அந்த இடத்தில் அல்லாஹ்வுடைய கட்டளையை நிலைநிறுத்தி, அந்த பாவத்திலிருந்து தனது சகோதரனை தனது சகோதரியை தடுப்பது. இதுதான் மார்க்கத்துடைய முதுகு எலும்பாக இருக்கிறது. 
 
நாம் வெறும் தொழுகையைக் கொண்டு, அல்லது இன்ன பிற சில வணக்க வழிபாடுகளை கொண்டு, நான் உண்டு; என்னுடைய வேலை உண்டு என்று இருந்து விடுவதால் கண்டிப்பாக சோதனை அதிகமாகத்தான் செய்யும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ் நமக்கு கண்டிப்பாக வெற்றி வைத்திருக்கிறான். உயர்வை வைத்திருக்கிறான். எப்போது என்றால் அல்லாஹ்வுடைய தீனை நாம் பற்றி பிடிக்கும்போது; அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வரும்போது. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதுபோன்ற சோதனை காலங்களில் நமக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான பண்புகளில் ஒழுக்கங்களில் ஒன்று, அல்லாஹ்விடத்தில் அதிகமாக துஆ கேட்பது. அல்லாஹ்விடத்தில் மன்றாடுவது.
 
யா அல்லாஹ், எங்கள் மீது எதிரிகளை சாற்றி விடாதே! எதிரிகளால் ஏற்படக்கூடிய குழப்பங்களில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக! 
 
இப்படியாக பல துஆக்கள் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த துஆக்களை நாம் அறிந்து கொண்டு, நம்முடைய பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்து, அர்த்தங்களை புரிந்து, கருத்துக்களை புரிந்து, தவ்பா செய்தவர்களாக, இஸ்திகஃபார் செய்தவர்களாக, அந்த துஆக்களை நாம் அதிகப்படுத்துவோமேயானால், கண்டிப்பாக அல்லாஹ் நம்முடைய பலவீனத்தை மாற்றி நமக்கு பலத்தை கொடுப்பான். 
 
நம்முடைய இயலாமையை போக்கி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு கண்ணியத்தை கொடுப்பான். நாம் எதை பயப்படுகிறோமோ அதிலிருந்து கண்டிப்பாக அல்லாஹ் நம்மை பாதுகாத்து, நமக்கு நிம்மதியான, பாதுகாப்பான, நமக்கும் நம்முடைய தீனுக்கும் பாதுகாப்பான உயர்ந்த வாழ்க்கையை அல்லாஹு தஆலா தர போதுமானவன். 
 
அல்லாஹு சுபஹானஹு தஆலா அவனுடைய தீனுக்கும், முஸ்லிம்களுக்கும், முஃமின்களுக்கும் கண்ணியத்தை தருவானாக! அல்லாஹ்வுடைய தீனை எதிர்க்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு தகுந்த பாடத்தை படிப்பினையை அல்லாஹு தஆலா புகட்டுவானாக! அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அவனுடைய கண்ணியமான அடியார்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/