HOME      Khutba      இஸ்லாம் கூறும் சமூக நல்லிணக்கம் | Tamil Bayan - 739   
 

இஸ்லாம் கூறும் சமூக நல்லிணக்கம் | Tamil Bayan - 739

           

இஸ்லாம் கூறும் சமூக நல்லிணக்கம் | Tamil Bayan - 739


இஸ்லாம் கூறும் சமூக நல்லிணக்கம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : இஸ்லாம் கூறும் சமூக நல்லிணக்கம்
 
வரிசை : 739
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 02-09-2022 | 06-02-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து விட்டு, அவனுடைய தூதர் முஹம்மது அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக! 
 
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை உபதேசம் செய்தவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்திலே பாவ மன்னிப்பை வேண்டியவனாக, இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக, சொர்க்கத்தை வேண்டியவனாக இந்த குத்பா உரையை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம்மை மன்னிப்பானாக! நம் மீது அருள் புரிவானாக! உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் இஸ்லாமின் பக்கம், குர்ஆனின் பக்கம், சுன்னாவின் பக்கம் திருப்புவானாக! 
 
முஸ்லிம்கள் எல்லோருக்கும் அல்லாஹ்வுடைய தீனின் மீது பிடிப்பையும், பற்றையும், உறுதியையும் ஏற்படுத்துவானாக! நம்முடைய மார்க்கத்தில் நம்மிடத்தில் பலவீனமோ, குழப்பமோ, சந்தேகமோ, தடுமாற்றமோ வருவதிலிருந்து அல்லாஹு தஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! சோதனைகள் பல இருக்கின்றன. ஒரு மனிதன் சொத்து சுகங்களை எல்லாம் இழந்து விட்டு நடுத்தெருவிலே நிற்பது, அவனது உடைமைகள் எல்லாம் பேராபத்துகளிலே பறிபோய், எந்த ஆதரவும் இல்லாமல் அவன் ஒரு குழப்பமான நிலையில் ஆதரவற்ற நிலையில் இருப்பது, இதுவல்ல பெரிய சோதனை. 
 
சோதனை தான்; சிரமம் தான்; ஆனால், பெரிய சோதனை அல்ல. சோதனையில் எது பெரிய சோதனை? எந்த சோதனை ஒரு முஸ்லிமை அவனுடைய மார்க்கத்திலிருந்து திருப்புகிறதோ, ஒரு முஸ்லிமுடைய இஸ்லாமை பலவீனம் அடைய செய்கிறதோ, ஒரு முஃமினுடைய ஈமானை பறிக்கிறதோ அது பெரிய சோதனை. 
 
இந்த உலகத்தினுடைய எல்லா இழப்புகளுக்கும் ஒரு ஈடு உண்டு. நிரந்தரம் இல்லை. பல சோதனைகளுக்கு வெற்றி கண்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், ஒரு மனிதன் ஈமானிலே தோற்றுவிட்டால், ஈமானிலிருந்து ஷிர்க்குக்கு சென்று விட்டால், இஸ்லாமிலிருந்து குஃப்ருக்கு சென்று விட்டால் பிறகு இந்த உலகத்திலே அவன் வாழ்வதால் என்ன பயன்? 
 
இந்த உலகத்தில் ஒரு நாட்டிலே அவருக்கு அங்கீகாரம் கிடைப்பதால், அவனுடைய ஊர் மக்கள் எல்லாம் அவனை  போற்றுவதால், பெரிய மனிதனாக மதிப்பதால் என்ன பலன்? என்ன செய்ய முடியும்? 
 
நாளை இந்த நாடு அல்லாஹ்விற்கு முன்னால் வந்து நிற்குமா? இவனுக்கு சொர்க்கத்தை தேடி தருமா? இவனுடைய ஊர் மக்கள் எல்லாம் அல்லாஹ்விற்கு முன்னால் வந்து சிபாரிசு செய்வார்களா? நரகத்திலிருந்து இவனை பாதுகாப்பார்களா? 
 
ஒரு முஃமின் ஒரு முஸ்லிம் இந்த உலக செல்வங்களில் இந்த உலக வஸ்துகளில் எதில் வேண்டுமானாலும் அவன் சமரசம் செய்யலாம். ஆனால், ஒரு முஸ்லிம் ஒரு மூஃமின் அவனுடைய இஸ்லாமில் ஈமானில் சமரசம் செய்யவே முடியாது. நமக்கு இஸ்லாம் ஒன்றுதான் மார்க்கம். இதை விட்டால் குஃப்ர் -இறை நிராகரிப்பு, ஷிர்க் -இணைவைப்பு அவ்வளவுதான்.
 
சுஹைப் ரூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை மக்கள் எல்லாம் சூழ்ந்து கொண்டார்கள். தனியாக ஹிஜ்ரத் செய்கிறார்கள். மக்கா உடைய வாயிலிலே சுஹைப் ஹிஜ்ரத்துக்காக நிற்கிறார். அவர் வெளியேறுகின்ற அந்த நிலையிலே அந்த மக்களைப் பார்த்து சுஹைப் பேசுகிறார்:
 
உங்களுக்கு என்ன வேண்டும்? என்னுடைய செல்வம் வேண்டுமா? இன்ன வீட்டிலே எனது செல்வம் இருக்கிறது. என்னுடைய அடிமைகள் வேண்டுமா? அவர்கள் இன்னாரிடத்திலே அமானிதமாக இருக்கிறார்கள். என்னுடைய சொத்துக்கள் வேண்டுமா? இங்கே இங்கே என்னுடைய சொத்துக்கள் இருக்கின்றன. 
 
எனது மார்க்கம் வேண்டுமா? எனது மார்க்கம் வேண்டும் என்றால் அந்த மார்க்கத்தை நான் கொடுக்க தயார் இல்லை. என்னுடைய வில்லிலே கடைசி அம்பு இருக்கிற வரை போராடுவேன். என்னுடைய வாள் உடைக்கிற வரை போராடுவேன். நான் உங்கள் இடத்தில் அடிபணிய மாட்டேன். 
 
இல்லை, உங்களுக்கு எனது செல்வம் வேண்டுமென்றால் நான் இப்போது சொன்ன இந்த இடத்திலே என்னுடைய இன்னென்ன செல்வங்கள் இருக்கின்றன, அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். 
 
அங்கே, குரைஷிகள் நின்று விட்டார்கள். செல்வங்களை எடுப்பதின் பக்கம் சென்று விட்டார்கள். சுஹைப் தன்னுடைய உயிரோடு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே வருகிறார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுஹைபை பார்த்துவிட்டு சொல்கிறார்கள்:
 
«يَا أَبَا يَحْيَى، رَبِحَ الْبَيْعُ»
 
சுஹைபே! நீங்கள் செய்த இந்த விற்பனை வெற்றி அளித்து விட்டது. அல்லாஹ் உங்களை பொருந்திக் கொண்டான். உங்கள் விஷயத்திலே ஓதப்படுகிற வசனத்தை இறக்கிவிட்டான். (1)
 
وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
 
இன்னும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி, (தன் செல்வத்தைக் கொடுத்து) தன் உயிரை (சொர்க்கத்திற்கு பதிலாக அல்லாஹ்விடம்) விற்பவரும் மக்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள் மீது மிக இரக்கமுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 207)
 
அறிவிப்பாளர் : சுஹைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 5706.
 
இந்த பூமியிலே ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் கொடுப்பான் என்றால், கண்ணியத்தை அல்லாஹ் கொடுப்பான் என்றால், உயர்வை மதிப்பை அல்லாஹ் கொடுப்பான் என்றால், இவர்களைப் பார்த்தால் பயம் ஏற்படும்படி எதிரிகளின் உள்ளத்தை அல்லாஹு தஆலா கோழையால் பலவீனத்தால் நிரப்புவான் என்றால், இத்தகைய மக்களின் தன்மைகளைக் கொண்டுதான்.
 
இன்று, நாம் எப்படி ஆகிவிட்டோம் என்றால், அவர்களுடன் சேர்ந்து ஆட்சிக்காக சண்டை, அதிகாரத்திற்காக சண்டை, இட ஒதுக்கீட்டுக்காக சண்டை. இப்படி எல்லாவற்றிலும் போட்டி. 
 
எல்லாம் எங்களுக்கு தேவை. எங்களுக்கு தேவை இல்லாதது ஒன்று இருக்கிறது என்றால் அது எங்களது மார்க்கம். எங்களுக்கு எங்கள் மார்க்கம் தேவையில்லை. நீ என்ன சொன்னாலும் எங்களது மார்க்கத்திலே அனைத்தையும் விட்டுக் கொடுக்க தயார். காம்ப்ரமைஸ் செய்ய தயார். துன்யாவில் காம்ப்ரமைஸ் செய்ய தயார் இல்லை. 
 
நமது முன்னோர்கள் எப்படி இருந்தார்கள்? துன்யாவில் காம்ப்ரமைஸ் செய்தார்கள். ஆனால், தீனிலே நோ காம்ப்ரமைஸ். எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். அடிமையாக வாழ்வதற்கு கூட நாங்கள் தயார். ஆனால், நாங்கள் மூஃமினாக வாழ வேண்டும்; முஸ்லிமாக  வாழ வேண்டும். 
 
அடிமையாக வாழ்ந்தால் சொர்க்கம் கிடைக்காதா? அடிமையாக வாழ்ந்தால் ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்காதா? அடிமையாக வாழ்வது குற்றமா? எத்தனை நபித்தோழர்கள் அடிமையாக இருந்திருக்கிறார்கள்! அடிமை வாழ்வு என்ன இளக்காரமானதா?
 
அவர்களும் உங்களைப் போன்றவர்கள் தான் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 3 : 195)
 
தேவை என்ன? நீ அடிமையாக இருந்தாலும் சுதந்திரமானவனாக இருந்தாலும் உனக்கு ஈமான் இஸ்லாம் தேவை.
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
 
இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப்பெண் இணைவைப்பவளைவிடச் சிறந்தவள், (இணைவைக்கும்) அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. (இணைவைக்கும்) அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ்வோ, தன் கட்டளையினால் சொர்க்கம் இன்னும் மன்னிப்பிற்கு (உங்களை) அழைக்கிறான். இன்னும், மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான். (அல்குர்ஆன் 2 : 221)
 
இன்று, மூஃமின்கள் எப்படி ஆகிவிட்டார்கள் என்றால், அவர்களுக்கு மறுமை வாழ்க்கை தூரமாகி விட்டது. மறுமை ரொம்ப மலிவாகிவிட்டது. சொர்க்கம் ரொம்ப சீப்பாகிவிட்டது. அல்லாஹ்வின் பொருத்தம் மார்க்கம் எல்லாம் அவர்களிடத்திலே செல்லாக் காசுகளைப் போல ஆகிவிட்டது.
 
தேவை என்ன? அவர்களுடைய பொருளாதாரம், அவர்களுடைய சமூக அந்தஸ்து, அவர்களுடைய அரசியல் பங்களிப்பு எல்லாம் எங்களுக்கு தேவை. தேவை இல்லாத ஒன்று இருக்கிறது என்றால் அது தீன்தான். எங்கே தீனை விட முடியுமோ தீனுக்கு மாற்றம் செய்ய முடியுமோ எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார்.
 
ஐந்து நேரம் தொடர்ந்து தொழக் கூடிய ஒரு முஸ்லிம் ஒரு நேரத் தொழுகையை விடுவதே மார்க்கம் இங்கு குஃப்ர் என்று கண்டிக்கிறது. ஐந்து நேர தொழுகைகளை தொடர்ந்து தொழக்கூடிய முஸ்லிம் அவனை எப்படி எச்சரிக்கிறது? உனக்கு நீ தூக்கத்தில் இருந்து விட்டாலே தவிர, அல்லது சுத்தமாக மறந்து விட்டாலே தவிர, நீ நினைவு இருக்கிற நிலையில் ஒரு வக்த் தொழுகையை நீ விட்டால் காஃபிர் என்று மார்க்கம் எச்சரித்துக் கொண்டிருக்கிறது.
 
இங்கே தங்களுக்கு முஸ்லிம் என்ற பட்டமும் வேண்டும். மூஃமின் என்ற பட்டமும் வேண்டும். அஹ்லுஸ் ஸுன்னா என்ற பட்டமும் வேண்டும். நாங்கள் தவ்ஹீத் வாதிகள் என்ற பட்டமும் வேண்டும். 
 
ஆனால், ஷிர்க்கான செயல்களை முஷ்ரிக்குகளோடு சேர்ந்து எந்த கூச்சமும் இல்லாமல், எந்த விதமான அச்சமும் இல்லாமல், அதை நாகரீகம் என்று சொல்லி, சமூக நல்லிணக்கம் என்று சொல்லி, சமூக உடன்பாடு என்று சொல்லி, சகோதரத்துவம் பேணுதல் என்று சொல்லி, இவர்கள் செய்கிறார்கள் என்றால், இதை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் இதை இஸ்லாம் அங்கீகரிக்குமா? 
 
உங்களது நாடுகள் அங்கீகரிக்கலாம்; உங்களோடு வாழக்கூடிய மக்கள் அங்கீகரிக்கலாம். அல்லாஹ் அங்கீகரிப்பானா? அல்லாஹ்வுடைய தூதர் அங்கீகரிப்பார்களா? எதற்காக சஹாபாக்கள் கொல்லப்பட்டார்கள்? எதற்காக ஹிஜ்ரத் செய்தார்கள்? தேவை இல்லையே.
 
அதெல்லாம் எதற்காக? மக்காவை விட்டு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹிஜ்ரத் செய்ய வேண்டிய நிலை ஏன்? ரசூலுல்லாஹ் உடைய மகள் கொல்லப்பட வேண்டிய நிலை ஏன்? நூற்றுக்கணக்கான சஹாபாக்கள் படுகொலை செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்? யோசித்துப் பாருங்கள்!
 
காஃபிர்கள் என்ன சொன்னார்கள்: கண்டிஷனுக்கு மேல் கண்டிஷன். இறுதியாக சரி இதையாவது செய்யுங்கள் எங்களது சிலைகளை பறிக்காதே. ஒரு வருடம் நீங்கள் எங்களது சிலையை வணங்குங்கள். நாங்கள் உங்களது அல்லாஹ்வை வணங்குகிறோம். முடியாது. சரி ஒரு மாதம் எங்களது சிலைகளை வணங்குங்கள்; நாங்கள் உங்களது அல்லாஹ்வை ஒரு மாதம் வணங்குகிறோம். அதற்கும் முடியாது. சரி, ஒரு வாரம் எங்களது சிலையை நீங்கள் வணங்குங்கள்; நாங்கள் ஒரு வாரம் உங்களது சிலையை ஒரு வாரம் வணங்குகிறோம். அதற்கும் முடியாது. சரி, குறைந்தபட்சம் எங்களது சிலைகளை தொட்டாவது தடவிக் கொள்ளுங்கள்; நாங்கள் உங்களது அல்லாஹ்வை முழுமையாக வணங்குகிறோம். அதற்கும் முடியாது. சரி, குறைந்தபட்சம் இந்த சிலைகளின் பலவீனத்தை பற்றி சொல்லக்கூடிய வசனங்களையாவது நீங்கள் ஓதாமல் இருங்கள்; நாங்கள் உங்களது அல்லாஹ்வை வணங்க தயார். முடியாது. 
 
பார்க்க : தஃப்சீர் தபரி
 
ஏன்? அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
قُلْ يَاأَيُّهَا الْكَافِرُونَ (1) لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (2) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (3) وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ (4) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (5) لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
 
(நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை. இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை. உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும். (அல்குர்ஆன் 109 : 1-6)
 
நீ ஒரு சிலை அல்ல; ஆயிரம் அல்ல; லட்சம் சிலைகளை நீ வணங்கினாலும் அது இறை வணக்கமாக ஆகாது.
 
நான் வணங்குவது இந்த பிரபஞ்சத்தை படைத்தவனை. நான் வணங்குவது என்னையும் உன்னையும் படைத்தவனை.
 
நீ அதை வணங்கவில்லையே? ரெண்டு பேருடைய வணக்கமும் எப்படி சமமாக முடியும்? இரண்டு பேரும் வணங்கக்கூடிய பொருள் எப்படி ஒன்றாக முடியும்?
 
أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَى قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ
 
நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான் அதற்கு) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவன் எல்லாம் வணங்கப்படுவதற்கு தகுதியான ஒரே ஓர் இறைவன்தான். (பலர் அல்ல.) இன்னும், நிச்சயமாக நான் நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகியவன் ஆவேன்.” (அல்குர்ஆன் 6 : 19)
 
இத்தகைய அழகான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்ட மார்க்கத்திலே ஷிர்க்கோடு காம்ப்ரமைஸ். இவர்களுடைய தொப்பி தாடி இந்த சமுதாயத்தை கேவலப்படுத்துவதற்கு. அல்லாஹ்வுடைய தீனை கேவலப்படுத்துவதற்கு. 
 
ஒரு முஷ்ரிக்குக்கு முன்னால் அவனை ஒரு தலைவனாக ஆக்கி, தன்னையும் தனது சமுதாயத்தையும் தாழ்ந்தவர்களாக ஆக்கி, அவர் மேலே அமர்ந்திருக்க, இவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்களாக கீழே அமர்ந்து கொண்டு சமரசம் பேச சொல்கிறார்களே! இங்கே எது விற்கப்படுகிறது? மார்க்கம் விற்கப்பட்டு விட்டது; மார்க்கம் அவமானப்படுத்தப்பட்டு விட்டது.
 
நபித்தோழர்களை நினைத்துப் பாருங்கள். ரிப்யீ இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நினைத்துப் பாருங்கள். கீழே உடுத்துவதற்கு மட்டும் ஒரு ஆடை. அதுவும் அந்த ஒட்டகங்கள் குதிரைகளின் மீது போடப்பட்டு, இனி பயன்படாது என்று தூக்கி எறியப்பட்ட ஒரு ஆடை, தைக்கப்பட்ட ஒரு கந்தல் என்று சொல்வார்களே அது இருக்கிறது. மேலே ஆடையும் இல்லை.
 
ருஸ்தும் இடத்திலே செல்கிறார். தன்னுடைய குதிரையோடு செல்கிறார். அரண்மனைக்குள் குதிரையோடு இதே நிலையிலே வருவேன். வாளை தொங்க விட்டவனாக வருவேன். 
 
அங்கு சென்று அவர் சொல்கிறார்: நீயும் நானும் சமம், உனக்கு சமமாக உட்காருவது என்றால் வருவேன். இல்லையென்றால் வரமாட்டேன் என்று.
 
பார்க்க : அல்பிதாயா வன்னிஹாயா.
 
என்ன ஈமானிய துணிவு! அவர்கள் ஈமானுக்காக இருந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு துணிவை தைரியத்தை போட்டான். அவர்களைப் பார்த்த காஃபிர்களுக்கு பலவீனத்தைக் கோழைத்தன்மையை போட்டான். 
 
துணிவாக பேசுகிறார். இந்த சம்பவத்தை எடுத்துப் படித்துப் பாருங்கள். இங்கு எந்த பிரச்சனையுமே இல்லை. இவர்களுடைய உள்ளத்தில் உள்ள கோழைத்தனம் பலவீனம் இவர்களது மார்க்கத்தையும் சமுதாயத்தையும் கேவலப்படுத்தும்படி ஆக்கியது. 
 
இப்போது அவர்கள் முஸ்லிம்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். இணங்கி போங்கள்; சகித்துக் கொள்ளுங்கள்; சேர்ந்து வாழுங்கள் என்று. 
 
அட முட்டாள்களா. யார் இணங்கி போகவில்லை? யார் சகித்துக் கொள்ளவில்லை? அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களிலே சென்று நாம் இடையூறு செய்கிறோமா? அவர்கள் மத சடங்குகள் செய்யும் போது நாம் பிரச்சனை செய்கிறோமோ? 
 
அதுதான் நல்லிணக்கம். அதுதான் சகிப்பு. நாம் நம்முடைய வணக்க வழிபாட்டிலே இருக்கிறோம். அவர்களுக்கு எந்த இடையூறும் தருவதில்லை. எந்த பிரச்சனையும் தருவதில்லை. 
 
அவர்களுடைய வழிபாட்டு தலங்களுக்கு சென்று, நீங்கள் செய்வது கூடாது என்று கூச்சல் குழப்பம் செய்வதில்லை. உங்களுடைய திருவிழாக்களை நாங்கள் கொண்டாட விடமாட்டோம் என்று அவர்களை நாம் தடுக்கவில்லை. இதுதானே இஸ்லாம் சொல்லித் தந்த சமூக நல்லிணக்கம். இதுதானே இஸ்லாம் சொல்லித் தந்த சகிப்புத்தன்மை.
 
لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ‏ என்றால் எது? உனது தீனை எனது தீனாக ஆக்குவது அல்ல. (அல்குர்ஆன் 109 : 6)
 
அதுபோன்று, எனது தீனில் நீ வரவேண்டும் என்று நிர்பந்திப்பதும் அல்ல. (அல்குர்ஆன் 2 : 256)
 
ஒரு முஸ்லிம் அல்லாதவரை கழுத்தை பிடித்து, கையைப் பிடித்து இழுத்து வந்து, நீங்கள் பள்ளியிலே தொழ வேண்டும் என்று நாம் நிர்பந்திக்க முடியுமா? நிர்பந்திக்கலாமா? அப்படி அவர் தொழுதால் தான் அவர் நம்மோடு இணக்கமாக இருக்கிறார் என்று நமக்கு மார்க்கம் கற்றுத் தருகிறதா? முட்டாள் தனம் இல்லையா? 
 
இன்று, முஸ்லிம் அல்லாதவர்கள் பேசுவது வேறு. அவர்கள் மார்க்கத்தை அறியாதவர்கள். அவர்களுக்கு மார்க்கம் தெரியாது. அவர்களை பொறுத்தவரை அறியாதவர்கள். ஆனால், நீ அறிந்தவன்; வேதம் கொடுக்கப்பட்டவன்; குர்ஆன் கொடுக்கப்பட்டவன்; தூதர் அனுப்பப்பட்டவன்.
 
உனக்கு புத்தி இல்லை. உன்னுடைய மார்க்கம் எதை அனுமதித்திருக்கிறது? எதை உனக்கு ஹராமாக்கி இருக்கிறது? என்ற விவஸ்த்தை உனக்கு இல்லை? 
 
ஆயிரம் பாவங்களை செய்தாலும் கூட அல்லாஹ் மன்னிப்பான். ஆனால், ரப்புக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்?
 
அல்லாஹ் கேட்கிறான்:
 
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا
 
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அதைத் தவிர மற்றதை அவன், தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணையை ஏற்படுத்துவாரோ அவர் திட்டமாக (அல்லாஹ்வின் மீது) பெரும் பாவத்தை இட்டுக் கட்டிவிட்டார். (அல்குர்ஆன் 4 : 48)
 
அல்லாஹ் அவனுக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். அதை விட்டு வெளியே வந்து தவ்பா செய்தாலே தவிர. யா அல்லாஹ்! இனி நான் ஷிர்க் செய்ய மாட்டேன் என்று.
 
இந்த சட்டம் இருக்குதே வாழ்நாள் ஃபுல்லா ஷிர்க் செஞ்சாதான், லட்சக்கணக்கான ஷிர்க் செஞ்சாதான் என்று இல்லை. முஷ்ரிக் யார்? ஷிர்க் என்றால் என்ன? வாழ்நாள் எல்லாம் சிலை வணங்கினால் தான் முஷ்ரிக்கா? வாழ்நாள் எல்லாம் அல்லாஹ் அல்லாதவனை வணங்குவது தான் ஷிர்க்கா? இது தவறான புரிதல். 
 
நீ ஒரு முறை அல்லாஹ் அல்லாதவனை வணங்கி விட்டால், அல்லாஹ் அல்லாதவனாக வணங்கப்படுகின்ற ஒரு சிலையையோ சிலுவையோ நீ கண்ணியப்படுத்தி விட்டால், அதனுடைய பூஜையில் நீ கலந்து கொண்டால், அதற்கு செய்யப்படக்கூடிய சடங்குகளோடு நீயும் இணைந்து  கொண்டால் நீ முஷ்ரிக். அவ்வளவுதான். 
 
நீ செய்த அந்த ஷிர்க் நீ செய்த அமல்களை பாதில் ஆக்கிவிட்டது. நீ தவ்பா செய்து மீண்டாலே தவிர. இனி நான் செய்ய மாட்டேன் என்று அல்லாஹுவிடத்திலே வாக்குறுதி கொடுத்தாலே தவிர.
 
ஒரு மனிதன் பெரும் பாவங்கள் செய்து விட்டான். திருடி விட்டான் அல்லது வேறு எதையாவது பெரும் பாவங்களில் ஒன்றை செய்து விட்டான். அல்லாஹு தஆலா அவனை தண்டனைக்கு பிறகும் மன்னிப்பான். இல்லை, அவனுடைய வேறு நன்மைகளால் அல்லாஹ் மன்னிப்பான். அல்லது வேறு நல்லவர்களுடைய சிபாரிசுகளால் அல்லாஹ் மன்னிப்பான். முஷ்ரிக்கை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான், நபி மன்றாடினாலும் சரி.
 
مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ
 
நிச்சயமாக நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுந்ததல்ல, இணைவைப்பவர்களுக்காக அவர்கள் பாவமன்னிப்பு கோருவது, அவர்கள் நரகவாசிகள் என்று அவர்களுக்கு தெளிவான பின்னர். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி. (அல்குர்ஆன் 9 : 113)
 
اسْتَأْذَنْتُ رَبِّي في أَنْ أَسْتَغْفِرَ لَهَا، فَلَمْ يُؤْذَنْ لِي، وَاسْتَأْذَنْتُهُ في أَنْ أَزُورَ قَبْرَهَا، فَأُذِنَ لِي، فَزُورُوا القُبُورَ؛ فإنَّهَا تُذَكِّرُ المَوْتَ
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய தாய்க்கு நான் பாவமன்னிப்பு தேடுகிறேன் என்று அல்லாஹ்விடத்திலே மன்றாடுகிறார்கள். அல்லாஹ் சொன்னான்: முஷ்ரிக் மன்னிப்பு தேட அனுமதி இல்லை. யா அல்லாஹ்! நான் ஸியாரத் செய்யலாமா? அல்லாஹு தஆலா அனுமதி கொடுக்கிறான் கபுருக்கு சென்று வருவதற்கு. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 976.
 
ஸஹாபாக்கள் கேட்கிறார்கள்: இப்ராஹீம் நபி தனது தந்தைக்காக பாவமன்னிப்பு தேடினாரே? அல்லாஹ் உடனே அதற்கு பதில் இறக்குகிறான்:
 
وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ
 
(நபி) இப்ராஹீம் தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது, அவர் அவருக்கு வாக்களித்த வாக்குறுதியை முன்னிட்டே தவிர (வேறு காரணத்திற்காக) இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்விற்கு அவர் எதிரி என அவருக்குத் தெளிவானபோது அவரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் அதிகம் பிரார்த்திப்பவர், பெரும் சகிப்பாளர். (அல்குர்ஆன் 9 : 114)
 
எப்பேற்பட்ட மார்க்கம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மார்க்கம் என்ன விளையாட்டா? எதை வேண்டுமானாலும் கலக்கலாம்; எதில் வேண்டுமானாலும் கலந்துவிடலாம் என்பதற்கு இது என்ன உங்க வீட்டு சரக்கா? எதை வேண்டுமானாலும் கலப்படம் செய்து கொள்வதற்கு.
 
அல்லாஹ் கேட்கிறான்:
 
أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ
 
அறிந்து கொள்ளுங்கள்! பரிசுத்தமான வணக்க வழிபாடுகள் எல்லாம் அல்லாஹ்விற்கே உரியன. (அல்குர்ஆன் 39 : 3)
 
وَلَهُ الدِّينُ وَاصِبًا
 
மேலும், வணக்க வழிபாடுகள் (நிலையானதாக,) என்றென்றும் அவனுக்கே உரியன. (அல்குர்ஆன் 16 : 52)
 
எனக்கு சுத்தமான இபாதத்தை கொடுங்கள். சுத்தமான இபாதத் கலப்படம் இல்லாதது. தொழும்போது பக்கத்துல ஒருத்தர் தொழுகுறாரே; அவர் என்னை பார்ப்பாரே அப்படின்னு ஒரு எண்ணம் வந்து அவருக்காக உங்களது தொழுகையை அலங்கரித்தாலே பாதி ஷிர்க்குல போய்விட்டாய் என்று மார்க்கம் எச்சரிக்கும்போது, எப்படி தொழுது கொண்டு இருக்கிறோம்? நாலு பேர் நம்மள பார்த்தா தொழுகையாளின்னு நினைப்பானே! ஒரு பள்ளிக்கு தர்மம் செய்யறீங்க; நாலு பேரு நம்மள பாத்து ஒரு கொடை வள்ளல்னு சொன்னா எப்படி இருக்கும்? 
 
இதையே மார்க்கம் உனக்கு ஷிர்க் என்று எச்சரிக்கும்போது அல்லாஹ் அல்லாதவனை ஒரு தெய்வமாக எடுத்துக்கொண்டு அறியாத மக்கள் வணங்குகிறார்கள் என்றால் அவர்களோடு சேர்ந்து நீ வழிபாடு செய்துவிட்டு உன்னை எப்படி மூஃமினாக முஸ்லிமாக நீ கருத முடியும்.
 
சகோதரர்களே! பிரச்சனை சாதாரணமானது அல்ல. இந்த நாட்டிலே வாழ்வது என்றால் முஷ்ரிக்காக தான் வாழ வேண்டும்; ஷிர்க் செய்து தான் வாழ வேண்டும் என்று பலவீனப்பட்டு விடாதீர்கள்! கோழையாகி விடாதீர்கள்! 
 
நாம் பிறருக்கு இடையூறு செய்ய மாட்டோம். நாம் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எதையும் செய்ய மாட்டோம். நமது உயிரே போனாலும் அதை செய்ய மாட்டோம். எந்த ஒரு நாட்டு பிரதிக்கும் என்னால் எந்த தீங்கும் ஏற்படாது. 
 
அதை நிரூபிப்பதற்காக அவனின் சடங்கை நான் செய்ய வேண்டும் என்றாலும் சரி, என்னை நீ கொன்றாலும் நான் செய்ய மாட்டேன். எனக்கு எதையும் இந்த துன்யாவிலே இந்த நாட்டிலே எனக்கு கொடுக்கவில்லை என்றாலும் சரி, அது எனக்கு தேவையில்லை.
 
எனக்கு எது தேவை என்றால் என்னுடைய ரப்புடைய மன்னிப்பு தேவை. 70,000 சூனியக்காரர்கள் ஒரு நேரத்தில் ஒரு தடவை கலிமா சொன்னதற்காக கழுமரத்திலே ஏற்றப்பட்டார்களே! ஃபிர்அவ்ன் என்ன சொன்னான்? 
 
மந்திரி சபையிலே இடம் தருவேன் என்று சொன்னான். உங்களுக்கு மிகப்பெரிய வெகுமதி தருவேன் என்று சொன்னான். எவ்வளவு வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்தான். ஆனால், அல்லாஹ் உண்மையானவன்; மூஸா நபி உண்மையானவர் என்று தெரிந்த உடனே அவர்கள் கூறினார்கள்:
 
وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (120) قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ (121) رَبِّ مُوسَى وَهَارُونَ
 
இன்னும், சூனியக்காரர்களோ (அல்லாஹ்விற்கு) சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) வீழ்ந்தனர். “அகிலத்தார்களின் இறைவனை (நாங்களும்) நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினார்கள். ‘‘மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனை” (நம்பிக்கை கொண்டோம்)’ (அல்குர்ஆன் 7 : 120,122)
 
قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى (71) قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا
 
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னர் அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் பெரிய(தலை)வர் ஆவார். ஆகவே, நிச்சயமாக நான் உங்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். இன்னும், பேரீச்ச மரத்தின் பலகைகளில் உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன். இன்னும், தண்டிப்பதில் எங்களில் யார் கடினமானவர், நிரந்தரமானவர் என்பதை நிச்சயமாக நீங்கள் (எல்லோரும்) அறிவீர்கள்.
 
20:72. (சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “தெளிவான அத்தாட்சிகளில் இருந்து எங்களிடம் எது வந்ததோ அதை விடவும்; இன்னும், எங்களைப் படைத்த (இறை)வனை விடவும் உன்னை (பின்பற்றுவதை) நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை (முடிவு) செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ (முடிவு) செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில்தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)” (அல்குர்ஆன் 20 : 71,72)
 
இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்கள்: இத்தனை வேதனைகள் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்டும் அவர்களில் ஒருவர் கூட முர்தத் ஆகவில்லை.
 
எத்தகைய சோதனை என்று யோசித்துப் பாருங்கள்! உயிரோடு மாறுகை மாறுகால்; ஈட்டியிலே கீழிருந்து குத்தப்பட்டு கழு மரத்தில் ஏற்றி தொங்கவிடப்படுகிறார்கள். தண்ணீர் இல்லை; உணவு இல்லை; அந்த கொடிய வேதனையிலேயே இறக்கிறார்கள்.
 
லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக்கொண்டு இங்கு சொத்துக்காக, சுகத்துக்காக, ஆடம்பரத்துக்காக, பதவிக்காக, புகழுக்காக, பெயருக்காக நீயும் நானும் ஒன்று; உனது கலாச்சாரமும் எனது கலாச்சாரமும் ஒன்று; நம்முடைய மூதாதையர்கள் ஒன்றுதான்; எனவே, நாங்களும் உங்களோடு இதை செய்வோம் என்று சொல்கிறார்களே!? 
 
முட்டாள்கள் முர்த்ததுகள் புரிய வேண்டாமா? தானும் முர்த்ததாகி மக்களையும் முர்த்ததாக்க பார்க்கிறார்களே? அல்லாஹ்விடத்தில் என்ன பதில் சொல்வார்கள்? எது நல்லிணக்கம்? எது விட்டுக் கொடுப்பது? 
 
அவர்களை அவர்களுடைய கலாச்சாரத்திலே வாழ விடுங்கள்; தாவா கொடுங்கள்; நிர்பந்திக்காதீர்கள்; அவர்களை ஏசாதீர்கள்; திட்டாதீர்கள்; அவர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்; அவ்வளவுதான். அதுதான் நல்லிணக்கம். அதுதான் விட்டுக் கொடுத்தல். நீ மாறுவது அல்ல; உன்னை மாற்றிக் கொள்வது அல்ல.
 
இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். காலம் போக போக சூழ்நிலைகள் மாறி வருகின்றன. எப்படிப்பட்ட ஒரு மனநிலை உருவாக்கப்படுகிறது என்றால், பிற மத வழிபாடுகளிலே கலந்து கொண்டால்தான் அந்த ஊரார்கள் சமூக நல்லிணக்கவாதிகள் என்றும், அவர்கள்தான் நம் நாட்டிற்கு தேவை என்றும், அவர்கள்தான் நமக்கு முன்னோடியாகவும் இன்று பேசப்படுகிறது; காட்டப்படுகிறது. 
 
இது மிக ஆபத்தான நிலைப்பாடு. இந்த நிலை வந்தால் அடுத்து நீங்கள் இந்த நிலையில் இருக்கும்போதே உங்களுடைய கழுத்துகள் வெட்டப்படும். உங்களது எதிரிகளை பயந்து கொள்ளுங்கள். 
 
உங்களுடைய தீனிலே நீங்கள் இருப்பதால் அல்லாஹ் உங்கள் மீது எதிரிகளை சாட்ட மாட்டான். அல்லாஹ்வுடைய தீனை விட்டு நீங்கள் சிதறும்போது அல்லாஹ் உங்கள் மீது எதிரிகளை சாட்டுவான். அப்போது உங்களுக்கு உதவக் கூடியவர் யாரும் இருக்க மாட்டார். யார் உங்களை ஆதரிப்பார்கள்? யார் உங்களுக்கு உதவுவார்கள்? யார் உங்களுக்கு கை கொடுப்பார்கள்? என்று யாரை நினைத்தீர்களோ அவர்களுடைய கரத்தாலே வெட்டப்படுவீர்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹு தஆலா நம்முடைய ஈமானை இஸ்லாமை இக்லாசை பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
أَخْبَرَنَا أَبُو الْعَبَّاسِ إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ مِيكَالٍ، أَنَا عَبْدَانُ الْأَهْوَازِيُّ، ثَنَا زَيْدُ بْنُ الْحَرِيشِ، ثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدِ الزُّهْرِيُّ، ثَنَا حُصَيْنُ بْنُ حُذَيْفَةَ بْنِ صَيْفِيِّ بْنِ صُهَيْبٍ، حَدَّثَنِي أَبِي، وَعُمُومَتِي، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ صُهَيْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُرِيتُ دَارَ هِجْرَتِكُمْ سَبِخَةً بَيْنَ ظَهْرَانَيْ حَرَّةَ، فَإِمَّا أَنْ تَكُونَ هَجَرًا أَوْ تَكُونَ يَثْرِبَ» قَالَ: وَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ وَخَرَجَ مَعَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكُنْتُ قَدْ هَمَمْتُ بِالْخُرُوجِ مَعَهُ فَصَدَّنِي فَتَيَانُ مِنْ قُرَيْشٍ، فَجَعَلْتُ لَيْلَتِي تِلْكَ أَقُومُ وَلَا أَقْعُدُ، فَقَالُوا: قَدْ شَغَلَهُ اللَّهُ عَنْكُمْ بِبَطْنِهِ وَلَمْ أَكُنْ شَاكِيًا، فَقَامُوا فَلَحِقَنِي مِنْهُمْ نَاسٌ بَعْدَمَا سِرْتُ بَرِيدًا لِيَرُدُّونِي، فَقُلْتُ لَهُمْ: هَلْ لَكُمْ أَنْ أُعْطِيَكُمْ أَوَاقِيَّ مِنْ ذَهَبٍ وَتُخَلُّونَ سَبِيلِي، وَتَفُونَ لِي فَتَبِعْتُهُمْ إِلَى مَكَّةَ؟ فَقُلْتُ لَهُمُ: احْفِرُوا تَحْتَ أُسْكُفَّةِ الْبَابِ فَإِنَّ تَحْتَهَا الْأَوَاقَّ، وَاذْهَبُوا إِلَى فُلَانَةَ فَخُذُوا الْحُلَّتَيْنِ، وَخَرَجْتُ حَتَّى قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَتَحَوَّلَ مِنْهَا - يَعْنِي قُبَاءَ -، فَلَمَّا رَآنِي قَالَ: «يَا أَبَا يَحْيَى، رَبِحَ الْبَيْعُ» ثَلَاثًا، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا سَبَقَنِي إِلَيْكَ أَحَدٌ، وَمَا أَخْبَرَكَ إِلَّا جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ «هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ» (المستدرك على الصحيحين للحاكم 5706)[التعليق - من تلخيص الذهبي] 5706 - صحيح
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/