HOME      Khutba      தவ்ஹீதில் சமரசம் இல்லை? | Tamil Bayan - 740   
 

தவ்ஹீதில் சமரசம் இல்லை? | Tamil Bayan - 740

           

தவ்ஹீதில் சமரசம் இல்லை? | Tamil Bayan - 740


தவ்ஹீதில் சமரசம் இல்லை
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : தவ்ஹீதில் சமரசம் இல்லை
 
வரிசை : 740
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 16-09-2022 | 20-02-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால், அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்தத் தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!
 
வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை என்று சாட்சி கூறியவனாக; மேலும், முஹமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய அடியார் என்று சாட்சி கூறியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுபஹானஹு வதஆலா அவனுடைய மார்க்கத்தில் நிலைத்திருக்கக் கூடிய, உறுதியாக இருக்கக் கூடிய, அவனுடைய மார்க்கத்தை பின்பற்றக் கூடியவர்களின் நற்பாக்கியசாலிகளில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
 
நம்முடைய சிந்தனைகள், ஒழுக்கங்கள், செயல்கள், நம்பிக்கைகள் இவற்றில் வழி கேடுகள், அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்கள் நுழைவதில் இருந்து அல்லாஹு தஆலா நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்.
 
அல்லாஹு சுபஹானஹு வதஆலா நம்மைப் பார்த்து அவனுடைய திருவேதம் அல்குர்ஆனில் இப்படி நினைவூட்டுகிறான்:
 
وَلَئِنْ مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ
 
நீங்கள் இறந்தாலும் அல்லது போரில் கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடம் தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப் போகிறீர்கள். (அல்குர்ஆன் 3 : 158)
 
இந்த வசனம் எப்போது இறங்குகிறது? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உஹது போர் முடிந்து, அவர்களும் காயமுற்றவர்களாக இருந்த நிலையில், தோழர்களில் பலர் ஷஹீதானதற்குப் பிறகு, பல தோழர்கள் படுகாயமுற்று இருக்கும் நிலையில், அங்கே மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. ஹம்ராவுல் அசத் என்ற போருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
 
பார்க்க : அர்ரஹீக் அல்மக்தூம், ஹம்ராவுல் அசத், தாரீக் இப்னு இஸ்ஹாக்.
 
அபூ ஸுஃப்யான் தன்னுடைய படைகளோடு மதீனாவின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு வருகிறார் என்று.
 
நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
 
ஆயுதத்தை தூக்குவதற்கே சக்தி இல்லை. அவ்வளவு காயம் உடம்பெல்லாம். ஒவ்வொரு ஸஹாபிக்கும் 50 க்கும் மேற்பட்ட காயங்கள் ஈட்டியால் வாள்களால். அதனால் நடக்க முடியவில்லை.
 
அந்த நேரத்தில் அல்லாஹு தஆலா ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழைப்புக்கு பதில் கொடுத்த தோழர்கள் பற்றி கூறுகிறான்:
 
الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ
 
அவர்கள் (-அந்த உண்மையான நம்பிக்கையாளர்கள்) தங்களுக்கு காயமேற்பட்ட பின்னரும் அல்லாஹ்விற்கும் தூதருக்கும் பதிலளித்தார்கள். (அவர்கள் காயங்களுடன் இருந்தபோதும் தூதரின் அழைப்பை ஏற்று போருக்கு சென்றார்கள்.) நல்லறம் புரிந்து, அல்லாஹ்வை அஞ்சிய (அ)வர்களுக்கு மகத்தான கூலி உண்டு. (அல்குர்ஆன் 3 : 172)
 
அல்லாஹு தஆலா அத்தகைய தோழர்களின் ஈமான்களை இந்த வசனத்தில் புதுப்பிக்கிறான். உறுதிப்படுத்துகிறான்.
 
நபியை நம்பிக்கை கொண்டவர்களே! மறுமையை நம்பிக்கை கொண்டவர்களே! மார்க்கத்தை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் பின் வாங்கலாமா, நீங்கள் மௌத்தை பார்த்து பயப்படலாமா, நீங்கள் கொல்லப்பட்டால் என்ன? இறந்தால் என்ன? அல்லாஹ்விடம் தான் வரப் போகிறீர்கள். நான் உங்களை கண்ணியப்படுத்த போகிறேன்.
 
இந்த வசனம் அந்த நேரத்தில் அந்த முஃமின்களுக்கு ஈமானை உறுதிப்படுத்தியது. தக்வாவை அதிகப்படுத்தியது. அல்லாஹ்வின் பாதையில் செல்வதற்குரிய ஆர்வத்தை, உத்வேகத்தை அந்த ஈமானிய உறுதியை கொடுத்தது. இதுதான் நம்முடைய நிலைப்பாடு.
 
மௌத்தை பார்த்து, இவ்வுலகத்தில் காஃபிர்கள் நம் மீது படை எடுத்து வருவதைப் பார்த்து, அவர்கள் நம்மை கொன்று விடுவார்களோ, அவர்கள் நமக்கு இன்னல்கள் கொடுத்து அழித்து விடுவார்களோ என்று பயப்படக்கூடிய பயம் முஃமின்களுடைய உள்ளத்தில் இருக்கக் கூடாது. 
 
முஃமின்கள் உள்ளத்தில் இருக்க வேண்டிய பயம் என்னவென்றால், என்னுடைய தீன் எனக்கு பாதுகாக்கப்பட வேண்டும்; என்னுடைய ஈமான் எனக்கு பாதுகாக்கப்பட வேண்டும்.
 
நான் இந்த ஈமான் இல்லாமல் சென்று விட்டால், இந்த தவ்ஹீத் இல்லாமல் நான் இறந்து விட்டால், அல்லாஹ்விற்கு இணை வைத்த நிலையில் நான் இறந்து விட்டால், (அல்லாஹ் பாதுகாப்பானாக) நரகத்தை நான் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்!
 
நரக தண்டனை, அல்லாஹ்வின் கோபம் என்ற பயம் மட்டுமே ஒரு முஃமினுடைய உள்ளத்தில் இருக்க வேண்டும்.
 
இந்த உலகத்தில் முஃமின்கள் கொல்லப்பட்டது இல்லையா? இந்த உலகத்தில் முஃமின்கள் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டது இல்லையா? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலும், தோழர்களுடைய வாழ்க்கையிலும், முந்தைய நபிமார்களுடைய வாழ்க்கையிலும் நமக்கு அழகிய படிப்பினை இல்லையா? நம்மை பிற மக்களிடமிருந்து பிற மதத்திடமிருந்து பிரிக்கக் கூடியது, அந்த தவ்ஹீத் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா தான்.
 
இந்தக் கலிமாவை நீங்கள் விட்டு விட்டால், இந்த தவ்ஹீதில் நீங்கள் சமரசம் செய்து கொண்டால், இந்த தவ்ஹீதை மாற்றம் செய்து விட்டால், பிறகு உங்களுடைய எந்த வழிபாடும் அல்லாஹ்வுக்கு தேவையில்லை. உங்களுடைய எந்த இபாதத்தை கொண்டும் மறுமையில் அல்லாஹ்விடம் சொர்க்கத்தை கேட்க முடியாது.
 
இந்த லா இலாஹ இல்லல்லாஹ் என்ற தவ்ஹீதில் பாதிப்பு அடையாமல், இதில் ஓட்டை விழாமல், இதில் குளறுபடிகள் நடக்காமல், உங்களிடம் இபாதத் இருந்தால் மட்டுமே சொர்க்கம். 
 
இந்த தவ்ஹீதில் ஓட்டையை போட்டுவிட்டு, நீங்கள் நூற்றுக்கணக்கான உம்ராக்களை, பத்துக்கணக்கான ஹஜ்களை, கோடிக்கணக்கான செல்வங்களை தர்மம் செய்துவிட்டு அல்லாஹ்விடத்தில் வந்தாலும் சரி, அல்லாஹ் அந்த நன்மைகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். குப்பைகளாக அல்லாஹ் ஆக்கி விடுவான்.
 
அல்லாஹு தஆலா தன்னுடைய நபிக்கே இப்படி எச்சரிக்கிறான் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்! நம்முடைய அமல்கள் எல்லாம் என்ன எடையில் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்!
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
 
திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்ட(தாவ)து: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும், நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.” (அல்குர்ஆன் 39 : 65)
 
இப்படி அல்லாஹு தஆலா தவ்ஹீத் உடைய இமாமை, தன்னுடைய ரஸூலை எச்சரிக்கிறான்.
 
இன்று இஸ்லாமிய மார்க்கத்தில் நல்லிணக்கம், மென்மை, பரந்த மனப்பான்மை, சமூக ஒற்றுமை என்றால், இந்த தவ்ஹீதில் சமரசம் செய்வதை ஆக்கிக் கொண்டார்கள். லா இலாஹ இல்லல்லாஹுவை விட்டுக் கொடுப்பதில் ஆக்கிக் கொண்டார்கள். 
 
பிறகு, நீங்கள் முஸ்லிம் என்று தனித்திருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது?
 
இந்த தவ்ஹீதை விட்டதற்குப் பிறகு உங்க தாடியாலும், தொப்பியாலும், உங்கள் எந்த வணக்க வழிபாட்டாலும் நீங்கள் முஸ்லிமாக ஆக முடியாது, இந்த தவ்ஹீத் இல்லாமல். 
 
இங்கு பிரச்சனை, பெரும்பான்மையை பார்த்து ஒரு பயம். பிற மக்களின் ஆதிக்கத்தை பார்த்து ஒரு பயம். அவர்கள் நம்மை சூழ்ந்து இருப்பதை பார்த்து ஒரு பயம். அவர்களுக்கு மத்தியில் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதை பார்த்து நமக்கு ஒரு பயம். 
 
பயத்தை போக்கும் படி, துணிவை கொடுக்கும்படி அல்லாஹ்விடத்தில் வேண்டுங்கள். அல்லாஹ்விடத்தில் மன்றாடுங்கள்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயப்படவில்லையா? அவர்களுக்கு நடுக்கம் வரவில்லையா? என்ன வேண்டினார்கள்:
 
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي
 
யா அல்லாஹ்! எங்களுடைய பலவீனங்களை மறைத்து விடுவாயாக. எங்களுடைய பயங்களைப் போக்கி எங்களுக்கு நிம்மதி தருவாயாக; பாதுகாப்பு தருவாயாக! (1)
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3871.
 
இப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழுதார்களே. அந்தத் துஆ அந்த அழுகை ஏன் நம்மிடத்தில் இல்லை.
 
சில உதாரணங்களை பாருங்கள். நமக்கு அல்லாஹு தஆலா எத்தனை படிப்பினைகளை வைத்திருக்கிறான். 
 
இன்று நாம் சந்திப்பது, நம்முடைய ஸஹாபாக்கள் சந்தித்த இன்னல்களில், துன்பங்களில், அச்சுறுத்தல்களில் இருந்து லட்சத்தில் ஒன்று கூட கிடையாது. 
 
அவர்கள் அந்த நிலையில் கூட மார்க்கத்தில் துணிந்தவர்களாகவும், தவ்ஹீதில் உறுதியானவர்களாகவும் இருந்தார்கள். 
 
காரணம், அவர்களுடைய ஒரே நோக்கம் அல்லாஹுவாக மறுமையாக சொர்க்கமாக இருந்தது. சொர்க்கத்திற்காக நாம் இவ்வுலகில் எதை இழந்தாலும் அது இழப்பில்லை என்று புரிந்து வைத்திருந்தார்கள்.
 
உயிரை கொடுத்தோம். நாம் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டோம். நம்முடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்னும், என்னென்ன கொடுமைகள் இழைக்க வேண்டுமோ அவையெல்லாம் முஃமின்கள் மீது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டன. 
 
அநியாயமாக இந்த மார்க்கத்திற்காக கொல்லப்பட்டவர்கள். இவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்தி கொள்வான். அவர்களுடைய ஒரு சொட்டு ரத்தம் இந்த பூமியில் விழுவதற்கு முன்னால், அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மார்க்கத்தில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. 
 
ஸஹாபாக்களைப் பார்த்து அந்த காஃபிர்கள் ஏளனம் செய்தார்கள். உங்களுடைய மார்க்கம் உங்களை மயக்கி வைத்திருக்கிறது என்று.
 
அப்பொழுது அவர்கள் சொன்னார்கள். எங்களையா எங்கள் மார்க்கம் மயக்கி வைத்திருக்கிறது. உங்களை உங்கள் துன்யா மயக்கி வைத்திருக்கிறது.
 
அதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்:
 
قُلْ هَلْ تَرَبَّصُونَ بِنَا إِلَّا إِحْدَى الْحُسْنَيَيْنِ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ أَنْ يُصِيبَكُمُ اللَّهُ بِعَذَابٍ مِنْ عِنْدِهِ أَوْ بِأَيْدِينَا فَتَرَبَّصُوا إِنَّا مَعَكُمْ مُتَرَبِّصُونَ
 
(நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் இந்த) இரு சிறப்பானவற்றில் ஒன்றைத் தவிர (வேறு எதையும்) எங்களுக்கு எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ், தன்னிடமிருந்து; அல்லது, எங்கள் கரங்களால் ஒரு தண்டனையின் மூலம் உங்களை சோதிப்பதை நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். ஆகவே, எதிர்பாருங்கள்! நிச்சயமாக நாங்கள் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்க்கிறோம். (அல்குர்ஆன் 9 : 52)
 
முஃமின்கள் தங்களுடைய துஆவில், தங்களுடைய இபாதத்தில், தங்களுடைய வணக்க வழிபாட்டில் இஹ்லாஸ் உள்ளவர்களாக, தவ்ஹீதில் சுத்தமானவர்களாக இருந்தால், கண்டிப்பாக அல்லாஹு தஆலா அவர்களுக்கு உதவியை இறக்கியே தீருவான்.
 
ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற அந்த தோழர்களை நினைத்துப் பாருங்கள். எத்தகைய சூழ்நிலை! குரைஷிகளிடமிருந்து தப்பித்து ஓடுகிறார்கள். அங்கே ஹபஷா அஸ்மஹா மன்னர் இடத்தில் அடைக்கலம் கேட்கிறார்கள். பிறகு, அங்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
 
அங்கு, கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினர். மன்னரும் கிறிஸ்தவர். ஆட்சியும் கிறிஸ்துவ ஆட்சி. இப்பொழுது இந்த குரைஷிகள் எல்லாம் ஓடி வருகிறார்கள். அவர்களுடைய இரண்டு தலைவர்களை அனுப்பி வைக்கிறார்கள். அந்தத் தலைவர்கள் ஒரு திட்டத்தோடு வருகிறார்கள். ஏராளமான அன்பளிப்புகளை கொண்டு வருகிறார்கள். அங்கு இருக்கக்கூடிய பாதிரிகளுக்கு அந்த அன்பளிப்புகளை லஞ்சமாக கொடுக்கிறார்கள்.
 
நாளை நாங்கள் மன்னர் இடத்தில் பேசப்போகிறோம். எங்கள் குடும்பத்தில் உள்ள கோத்திரத்தில் உள்ள வாலிபர்கள் சிலர் ஓடி வந்திருக்கிறார்கள், எங்களுடைய மதத்தை விட்டுவிட்டு. உங்களுடைய மதத்திலும் சேரவில்லை. புதியதாக ஒரு மதத்தை நூதனமாக கொண்டு வந்து இருக்கிறார்கள்.
 
அப்படி பேசும் பொழுது, அவர்களை எங்களோடு அனுப்பி வைக்கும்படி நாங்கள் சொல்லும்போது, நீங்களும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள், எங்களுக்கு சிபாரிசு செய்யுங்கள், மன்னர் இடத்தில் பேசுங்கள் என்று. 
 
எல்லா லஞ்ச பொருட்களையும், அன்பளிப்புகளையும் வாங்கிக் கொண்டார்கள் அந்த பாதிரிமார்கள்.
 
பிறகு, அந்த மன்னர் இடத்தில் பேச போகும்பொழுது, மன்னருக்கும் அதிகமான அன்பளிப்புகள் லஞ்சமாக கொடுக்கிறார்கள். மன்னர் பெற்றுக் கொள்கிறார். 
 
அப்பொழுது முன்வைக்கிறார்கள்: மன்னரே! இங்கு சில வாலிபர்கள் வந்திருக்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்கள் புதிய மதத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். எங்களுடைய மதத்திலும் அவர்கள் இல்லை. உங்களுடைய மதத்திலும் அவர்கள் இல்லை. எங்களுடைய குடும்பத்தை விட்டு எங்களை விட்டு ஓடி வந்து விட்டார்கள். 
 
அவர்கள் , எங்களுடைய குடும்ப உறவுகள்; ரத்த உறவுகள். நாங்கள் அவர்கள் மீது அக்கறை உள்ளவர்கள். அவர்களைப் பற்றி எங்களுக்கு தெரியும். நீங்கள் அவர்களை எங்களோடு அனுப்பி வைத்து விடுங்கள். இதுதான் நல்லது என்று சொல்லும்போது, அந்தப் பாதிரிகள் எல்லாம் ஆம் மன்னரே, நீங்கள் அந்த மக்களை அவர்களுடன் அனுப்பி வைத்து விடுங்கள் என்று சிபாரிசு செய்கிறார்கள்.
 
அப்பொழுது அந்த மன்னர் சொல்கிறார்: என்னை தேடி வந்த மக்களை, அவர்களிடத்தில் நான் கேட்காமல், அவர்களை நான் அனுப்ப மாட்டேன். 
 
என்னிடத்தில் வந்து தங்கிய மக்களுக்கு நான் சூழ்ச்சி செய்ய மாட்டேன். பிற நாடுகளுக்கு செல்லாமல் என்னையும் என் நாட்டையும் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்.
 
பிறகு மன்னர் கூறுகிறார்: நான் அவர்களை அழைப்பேன். அவர்களிடத்தில் கேட்பேன். இந்த இருவர் சொல்வது போன்று தான் உண்மையில் நிலை என்றால், நான் அவர்களை அவர்களிடத்தில் ஒப்படைப்பேன். இல்லையென்றால் ஒருபோதும் ஒப்படைக்க மாட்டேன் என்று நீதமாக மன்னர் கூறிவிடுகிறார். 
 
(ரஸூலுல்லாஹ்வின் வாயால் புகழப்பட்டவர் அல்லவா. அல்லாஹுவால் முதல் ஹிஜ்ரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லவா. அழகிய முறையில் பதில் தருகிறார்.)
 
பிறகு, இந்த செய்திகள் எல்லாம் அங்கு இருக்கின்ற என்பதுக்கும் மேற்பட்ட முஹாஜிர்களுக்கு வந்து விடுகிறது. குரைஷிகளுடைய மதிநுட்பமான திறமை மிக்க அரசியல் தந்திரங்களை தெரிந்த இரண்டு நபர்கள். நம்மை மீண்டும் அழைத்து செல்வதற்காக மன்னர் இடத்தில் வந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய பெரிய அன்பளிப்புகளை லஞ்சமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். நமது நிலை என்னவாகும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
 
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.
 
அச்சம் யாருக்கு இல்லை?! அச்சம் யாருக்கு வரும்? மனிதராகப் பிறந்த உள்ளம் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வரும். ஆனால், எந்த அச்சத்தை எந்த ஆசையை மிகைக்க வைக்கிறோம்? என்பதுதான் நமக்கு அங்கே சோதனை. 
 
எதிரிகள் மீது உள்ள அச்சத்தையா? அவர்களோடு சேர்ந்து இந்த உலகத்தில் இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசையையா? அல்லது நரகத்தின் மீதுள்ள அல்லாஹ்வின் தண்டனையின் மீதுள்ள அச்சத்தை மிகைக்க வைக்கப் போகிறோமா. சொர்க்கத்தின் மீது உண்டான ஆசையை உள்ளத்தில் மிகைக்க வைக்க போகிறோமா? இதுதான் சோதனை; இதுதான் ஈமான்; இதுதான் தவ்ஹீத்.
 
வெறும் தொழுகையில் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டிக் கொள்வது மட்டும் தவ்ஹீத் அல்ல. தவ்ஹீத் உள்ளத்தில் ஏற்படக்கூடிய ஒரு மிகப்பெரிய போராட்டத்திற்கான ஒரு தீர்வு அது. எதை நீ தேர்ந்தெடுக்கப் போகிறாய்?
 
தபூக் போரில் அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா மிகப்பெரிய ஒரு கஷ்டமான சூழ்நிலையில் போருக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்ன போது, சிலருக்கு கஷ்டமாக இருந்தது. உடனே அல்லாஹ் வசனம் இறக்கினான். 
 
مَا لَـكُمْ اِذَا قِيْلَ لَـكُمُ انْفِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اثَّاقَلْـتُمْ اِلَى الْاَرْضِ‌ اَرَضِيْتُمْ بِالْحَيٰوةِ الدُّنْيَا مِنَ الْاٰخِرَةِ‌ فَمَا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا قَلِيْلٌ‏ إِلَّا تَنْفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
 
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்களுக்கு என்ன ஆனது? உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள்! மறுமையை பார்க்கிலும் உலக வாழ்க்கையைக் கொண்டு திருப்தி அடைந்தீர்களா? உலக வாழ்க்கையின் இன்பம் மறுமையில் அற்பமானதாகவே தவிர இல்லை! (போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய தண்டனையால் அவன் உங்களை தண்டிப்பான்; இன்னும், உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை (தனது தீனுக்காக) மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 9 : 38,39)
 
அல்குர்ஆன் கருத்து : அல்லாஹ் கேட்கிறான்: அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் புறப்படுங்கள் என்று சொன்னபோது, இந்த பூமியை கவ்வி பிடித்துக் கொண்டீர்களா? இந்த பூமியின் மீது இறுக்கமாக சாய்ந்து கொண்டீர்களா? உங்களுக்கு உலகம் பிடித்து விட்டதா? உலகத்தின் மீது ஆசை ஏற்பட்டு விட்டதா? மறுமையை கவனித்து இந்த உலகம் அற்ப இன்பமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் புறப்படவில்லை என்றால், கடுமையான வேதனை வரும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
 
சிலர் என்ன நினைத்துக் கொண்டார்கள்? நாம் சமரசமாக சென்று விட்டால், நாம் இணக்கமாக சென்று விட்டால்!?
 
என்ன சமரசம், என்ன இணக்கம்? நாம் எந்த சண்டைக்கு சென்றோம். நாம் இணக்கமாக வாழவில்லை என்று எதை வைத்து சொல்வது? அவர்களின் குஃப்ரான ஷிர்க்கான சடங்குகளை செய்வதுதான் இணக்கம் என்றால், அப்படிப்பட்ட இணக்கம் இஸ்லாமில் இல்லை. அப்படிப்பட்ட குஃப்ர் இஸ்லாமில் இல்லை. குஃப்ரும் இஸ்லாமும் ஒன்றிணையாது. ஷிர்க்கும் தவ்ஹீதும் ஒன்றிணையாது. அது வேறு, இது வேறு.
 
நாம் இணக்கமாக வாழ்கிறோம் என்றால், சுமூகமாக வாழ்கிறோம் என்றால், அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம்; அவர்களுடைய வழிபாட்டுத்தலங்களிலோ, அவர்களுடைய சடங்குகளிலோ, நாம் எந்த வம்புதும்புக்கும் போகமாட்டோம். 
 
அவர்களுடைய வழிபாடுகளை அவர்கள் செய்வார்கள். அவர்களுடைய சடங்குகளை அவர்கள் செய்வார்கள். அவர்களுடைய கொண்டாட்டங்களை அவர்கள் கொண்டாடுவார்கள். நாம் இடையூறு செய்ய மாட்டோம். அதுதான் இணக்கம். 
 
அந்த இணக்கத்தை தான் குர்ஆனும் ஹதீஸும் கற்று கொடுக்கிறதே தவிர, அவர்கள் கொண்டாடுவதை நீனும் கொண்டாடு, அவர்கள் கும்பிடுவதை நீனும் கும்பிடு, அவர்கள் தூக்குவதை நீனும் தூக்கு. இதுவல்ல இணக்கம். 
 
இது, அவர்களோடு நீ கலந்து விட்டாய், கரைந்து விட்டாய், முஷ்ரிக்காக ஆகிவிட்டாய், உனக்கு இஸ்லாமில் ஈமானில் எந்தவிதமான இடமும் இல்லை, எந்த பங்கும் இல்லை என்பதாகும்.
 
இங்கு தான் நாம் புரிய வேண்டும். எந்த இணக்கத்தின் பெயரால், தவ்ஹீதை விடுவதால் நமக்கு பாதுகாப்பு, நமக்கெல்லாம் ஒற்றுமை என்று நினைக்கிறோமோ, அங்கிருந்து தான் நமக்கு அதாபே -வேதனையே ஆரம்பமாகும். அங்கிருந்துதான் அல்லாஹ்வின் தண்டனையே இறங்க ஆரம்பிக்கும். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
 
நீங்கள் உலக வாழ்க்கையை விரும்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிட புறப்படவில்லை என்றால், அல்லாஹ்வின் கடுமையான தண்டனையை பயந்து கொள்ளுங்கள் என்று. (அல்குர்ஆன் 9 : 38,39)
 
இன்று, இந்த குஃப்ரில் கரைய கரைய, இந்த ஷிர்கில் கரைய கரைய, ஈமானில் தவ்ஹீதில் சமரசம் செய்து கொள்ள செய்து கொள்ள நான் எப்படி இருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.
 
முந்திய காலங்களில் நம்முடைய முஃமின்கள் தவ்ஹீதில் உறுதியாக இருந்தபோது, எவ்வளவு கண்ணியமாக வாழ்ந்தார்கள்!? 
 
இன்று, அரசியலில் சமூகத்தில் என எல்லா விதத்திலும் தவ்ஹீதில் சமரசம் செய்து கொண்டு, எத்தகைய இழி நிலையை, பலவீனத்தை இந்த சமுதாயம் பார்த்துக் கொண்டிருக்கிறது?
 
சம்பவத்தின் தொடர்: அந்த நேரங்கள் எவ்வளவு பிரச்சினையாக இருந்திருக்கும்! மன்னர் அழைக்கப் போகிறார். நம்மை குறித்து கேட்கப் போகிறார். நம்முடைய மார்க்கம் என்னவென்று நாம் என்ன சொல்கிறோம்?
 
உம்மு சலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த ஹிஜ்ரத்தில் இருந்தவர்கள். அந்த சம்பவத்தில் கலந்து கொண்டவர்கள்.
 
அவர்கள் இதுபற்றி சொல்கிறார்கள்:
 
மன்னருடைய தூதர் நம்மை அழைப்பதற்காக வந்துவிட்டார். அப்பொழுது அந்த ஸஹாபாக்கள் பேசிக் கொண்டார்கள். இப்பொழுது நாம் அந்த மன்னர் இடத்தில் செல்லப் போகிறோமே, அவருக்கு என்ன பதில் சொல்வது?
 
மன்னர் கிறிஸ்தவர். வந்தவர்கள் இணைவைப்பவர்கள். வெளிரங்கத்தில் பாதுகாப்பு வேண்டுமென்றால் இந்த கிறிஸ்துவ மன்னரை திருப்திபடுத்தியாக வேண்டும். அவருடைய நாட்டில் இருப்பதென்றால், அவருடைய அடைக்கலம் தொடர வேண்டும் என்றால், அவரை அதிருப்திப்படுத்தும் படியான எந்த வார்த்தை சொன்னாலும், நம்முடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை.
 
அப்படி பேசினால், ஒன்று, அவரால் தண்டிக்கப்படுவோம். இல்லையென்றால் குரைஷிகள் உடைய கையில் நாம் ஒப்படைக்கப்பட்டால் அங்கேயும் நமக்கு அது தான்.
 
அப்பொழுது ஸஹாபாக்களில் ஒருவர் மற்றொருவரிடம் சொல்கிறார்:
 
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இந்த மார்க்கத்தில் நாங்கள் எதைக் கற்றோமோ, எதை எங்களுக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஏவினார்களோ, அதைத்தான் மன்னருக்கு முன்னால் நாங்கள் சொல்வோம். எது நடந்தாலும் பிரச்சனை இல்லை. என்ன நடந்தாலும் சரி. 
 
(இதுதானே ஈமான். இதுதான் தவ்ஹீத். லா இலாஹ இல்லல்லாஹ் என்று உருட்டுவது தவ்ஹீத் அல்ல. அதாவது, அது மட்டும் தவ்ஹீத் அல்ல. லாஇலாஹ இல்லல்லாஹ் நாவில் சொன்னது, உள்ளத்தில் தங்கி இருப்பது உண்மை என்றால், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு பிரச்சனைகளுக்கு நீ தயாராக இருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு சமரசம் என்ற பெயரில் ஒருவன் செல்வானேயானால் அவனுக்கு இஸ்லாமில் எந்த பங்கும் இல்லை.)
 
ஆக, அவர்கள் வந்தார்கள். எதை அவர்கள் குர்ஆனில் அல்லாஹ்விடம் இருந்து கற்றார்களோ, எதை நபியிடம் கற்றார்களோ, அதைத்தான் அங்கே சொன்னார்கள். 
 
எனவே பாதுகாப்பு கிடைத்தது. உள்ளங்களை மாற்றக்கூடியவன் அல்லாஹு தஆலா.
 
இரண்டாவது நாள் அங்கே அம்ர் முயற்சி செய்கிறார். இன்று, நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அந்தத் திட்டத்தின் படி அந்த மன்னர் இந்த வாலிபர்களை அடியோடு அறுக்கப் போகிறார் என்று. 
 
உடன் இருந்தவர் சொல்கிறார்; வேண்டாம், எப்படி இருந்தாலும் அவர்கள் நமது உறவுகளே என்று அம்ர் மறுக்கிறார்.
 
அடுத்த நாள் வந்து சொல்கிறார்; மன்னரே, சரி, நேற்று நடந்த பிரச்சனையை விடுங்கள். உங்களது மதத்தில் நீங்கள் கடவுளாக கடவுளின் மகனாக எண்ணுகிற ஈஸாவை பற்றி நீங்கள் அவர்களிடத்தில் கேளுங்கள். எப்படிப்பட்ட அபாண்டமான வார்த்தையை சொல்லுகிறார்கள் என்று.
 
நேற்று நடந்தது அது வேறு பரீட்சை. இன்றோ, உண்டு இல்லை என்ற பரீட்சை. காலம் காலமாக ஈஸாவை அல்லாஹ்வின் குழந்தை என்றோ, கடவுள் என்றோ, மூன்று கடவுள்களில் ஒரு கடவுள் என்று நம்பிக்கை கொண்ட அந்த மக்களிடம் அடைக்கலமாக இருக்கும் பொழுது, அந்த மன்னர் அந்த நம்பிக்கையில் இருக்கும் பொழுது, இப்பொழுது அவருக்கு முன்னால் அந்த ஈமானில் நேரடியாக பரீச்சை. என்ன சொல்லப் போகிறீர்கள். 
 
அப்பொழுதும் ஜாஃபர் ரலியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறித்து, அல்லாஹ் குர்ஆனில் என்ன சொன்னானோ, நபி நமக்கு என்ன சொன்னார்களோ அதைத்தான் நாங்கள் சொல்வோமே தவிர, எந்த பேச்சையும் நாங்கள் பேச மாட்டோம். தெளிவாக குர்ஆனில் உள்ள உண்மையைத்தான் சொல்வோம். என்ன நடந்தாலும் சரியே.
 
பிறகு என்ன நடந்தது? அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தான். 
 
ஈஸாவை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள். உடனே யோசிக்காமல் சொன்னார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய ரஸூல். அல்லாஹ்வுடைய கலிமாவால் படைக்கப்பட்டவர். அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஊதப்பட்ட ரூஹ். பரிசுத்தமான கண்ணியமான மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறக்கப்பட்ட அந்த உயிர் மூலமாக படைக்கப்பட்டவர்.
 
எந்த மழுப்பலுக்கும் இங்கே வேலை இல்லை முஸ்லிமாக இருந்தால்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
 
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நேர்மையான பேச்சைப் பேசுங்கள். (அல்குர்ஆன் 33 : 70)
 
அந்த பேச்சை சொல்லும்போது, உங்களுக்கு இன்னல் ஏற்பட்டால், துன்பம் ஏற்பட்டால், சோதனைகள் ஏற்பட்டால் அதைத் தாங்கிக் கொள்வதுதான் ஈமான். அதை சகித்துக் கொள்வதுதான் ஈமான்.
 
ஈமான் என்பது தொழுகையில் மட்டுமல்ல. ஈமான் என்பது சில தர்மங்களில் மட்டுமல்ல. ஈமான் என்பது சில வேஷங்களில் மட்டுமல்ல. ஈமான் என்பது கொள்கையில் உறுதியாக இருக்கும்போது ஏற்படக்கூடிய சோதனைகளை சகித்துக் கொள்வது, தாங்கிக் கொள்வது.
 
எத்தனை வசனங்களில் அல்லாஹு தஆலா பொறுமையாளர்கள் என்று சொல்கிறானே. எது பொறுமை? மவுத்தான வீடுகளில் இன்னா லில்லாஹி ஓதுவது மட்டுமா பொறுமை? பொறுமை முதலில் மார்க்கத்தில் வேண்டும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
 
“எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! இன்னும், நிராகரிப்பாளர்களாகிய மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு’’ என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 2 : 250)
 
அன்பு சகோதரர்களே! இந்த பொறுமையை நாம் விட்டு விட்டோம். எந்த பொறுமையை மார்க்கத்தில் உறுதியாக இருப்பது, சத்தியத்தில் ஈமானில் உறுதியாக இருப்பதோ அந்த பொறுமையை விட்டு விட்டோம். 
 
மாறாக, பொறுமைக்கு என்ன அர்த்தம் கொடுத்து விட்டோம் என்றால், இணங்கி செல்வது, சேர்ந்து செல்வது, கூட்டமாக அவர்களுடைய வழிபாடுகளில் இணைந்து செல்வது. இது சகிப்புத்தன்மை, இது பொறுமை, இது நல்லிணக்கம் என்பதாக.
 
ஒரே கேள்விதான் அல்லாஹ் கேட்கிறான். சொர்க்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? சொர்க்கம் வேண்டும் என்றால், இந்த கலிமாவில் உறுதியாக இருந்து தான் ஆக வேண்டும். சொர்க்கம் வேண்டுமென்றால் இந்த சோதனைகளை தாங்கிதான் ஆக வேண்டும். சொர்க்கம் வேண்டுமென்றால் இந்த தீனுக்காக சில தியாகங்களை சில இழப்புகளை செய்துதான் ஆக வேண்டும்.
 
எந்த இழப்புகளும் இல்லாமல் எனக்கு சொர்க்கம் கிடைக்கும். நான் எனது தீனில் எப்படி வேண்டுமானாலும் சமரசம் செய்து கொள்வேன் என்றால், கண்டிப்பாக அவர்களது மீளும் இடத்தை அல்லாஹ் நரகத்தில்தான் எழுதுவான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
 
நீர் (அவர்களுடன்) அனுசரித்து மென்மையாக போகவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால் அவர்களும் (உம்மை) அனுசரித்து மென்மையாக நடப்பார்கள். (அல்குர்ஆன் 68 : 9)
 
அல்லாஹ்  தன் நபிக்கு எச்சரிக்கை செய்கிறான். அப்படி நீங்கள் இணங்கி விட்டால்;
 
وَلَوْلَا أَنْ ثَبَّتْنَاكَ لَقَدْ كِدْتَ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئًا قَلِيلًا (74) إِذًا لَأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا
 
மேலும், உம்மை நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால் கொஞ்சம் ஓர் அளவாவது அவர்கள் பக்கம் நீர் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர். (அப்படி நீர் சாய்ந்திருந்தால்) அப்போது இவ்வாழ்கையில் இரு மடங்கு தண்டனையையும் மரணத்திற்குப் பின் இரு மடங்கு தண்டனையையும் நீர் சுவைக்கும்படி செய்திருப்போம். பிறகு, நமக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவரை காணமாட்டீர். (அல்குர்ஆன் 17 : 74,75)
 
ஆகவே, இந்த ஈமானுடைய உறுதியை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய வளரக்கூடிய தலைமுறையினருக்கும் சொல்லி வளர்க்க வேண்டும். நம்முடைய ஈமானில் இஸ்லாமில் நம்முடைய தவ்ஹீதில் உறுதியாக இருப்பதோடு, பிற மக்களோடு எப்படி நாம் சமூகமாக வாழ்வது, அன்பான உறவுகளை பேணுவது, இணக்கமாக இருப்பது என்ற நல்ல ஈமானுடைய அஹ்லாக்களை கற்றுக் கொடுக்க வேண்டும். 
 
அதை விட்டுவிட்டு, அவர்களோடு இணங்கி அவர்களுடைய சடங்குகளை செய்வது, அதுவும் ஒரு நல்ல பழக்கம்தான் என்ற தவ்ஹீதுக்கு முரணான விஷயங்களை தயவு செய்து நாமும் செய்து விடக்கூடாது; அதை அவர்களுக்கு அழகாக காட்டிக் கொடுத்து விடக்கூடாது.
 
குறிப்பாக கல்லூரிகளில் பள்ளிக்கூடங்களில் படிக்கக்கூடிய பிள்ளைகள் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுடைய பெற்றோர்கள் இந்த விஷயத்தில் அவர்களுக்கு தெளிவான ஒரு அறிவுரையை வழங்க வேண்டும்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் ஈமானுடைய இஸ்லாமுடைய உறுதியை தந்தருள்வானாக! வழிகேட்டில் செல்வதிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الطَّنَافِسِيُّ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا عُبَادَةُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا جُبَيْرُ بْنُ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ حِينَ يُمْسِي، وَحِينَ يُصْبِحُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، وَاحْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي» قَالَ وَكِيعٌ يَعْنِي الْخَسْفَ  (سنن ابن ماجه- 3871) [حكم الألباني]صحيح
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/