HOME      Khutba      நல்ல நடத்தை தக்வாவின் வெளிப்பாடு! | Tamil Bayan - 741   
 

நல்ல நடத்தை தக்வாவின் வெளிப்பாடு! | Tamil Bayan - 741

           

நல்ல நடத்தை தக்வாவின் வெளிப்பாடு! | Tamil Bayan - 741


நல்ல நடத்தை தக்வாவின் வெளிப்பாடு
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : நல்ல நடத்தை தக்வாவின் வெளிப்பாடு 
 
வரிசை : 714
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 23-09-2022 | 27-02-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார், தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும்! 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தையும் தக்வாவையும் நினைவூட்டியவனாகவும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழும்படி உபதேசம் செய்தவனாகவும், அல்லாஹ்விடத்தில் உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும் அருளையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம் அனைவரையும் அவனுடைய அருளால் சொர்க்கவாசிகளில் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய திருவேதமாகிய அல்குர்ஆன், இன்னும் அவன் நமக்கு அனுப்பி இருக்கக்கூடிய கன்னித்திற்குரிய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழகிய வழிகாட்டுதல்கள், இந்த இரண்டிலிருந்து முஸ்லிம்கள் பெறவேண்டிய படிப்பினைகள், ஒழுக்க மாண்புகள் ஏராளம் இருக்கின்றன. 
 
இந்த இஸ்லாமிய மார்க்கம், இது வெறும் வழிபாட்டுக்காக மட்டும் கொடுக்கப்பட்ட மார்க்கம் அல்ல. வணக்க வழிபாடுகள்தான் நம்முடைய வாழ்க்கையின் அடிப்படை. இது ஒவ்வொரு அடியானுக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உள்ள ஒரு தனிப்பட்ட விஷயம்.
 
ஒருவன் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்க வேண்டும் என்றால் அவன் அல்லாஹ்வை வணங்க கூடிய வணக்கசாலியாக இருக்க வேண்டும். இபாதத் நம்முடைய உயிரைப் போன்றது. 
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏
 
நாம் அவனை வணங்குவதற்கே தவிர, வேறு ஒன்றுக்காக அவன் நம்மை படைக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறான். (அல்குர்ஆன் 51 : 56)
 
இந்த இடத்திலே கவலையான ஒரு செய்தி என்னவென்றால் தொழுகையில், நோன்பில், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளில் கவனமாக, பேணுதலாக இருக்கிற நம்முடைய பல சகோதர சகோதரிகள், நம்முடைய பல முஸ்லிம் பெருமக்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் இன்னொரு முக்கிய பக்கமான ஒழுக்கம், நற்குணம் போன்றவற்றில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். 
 
அல்லாஹு தஆலா வணக்க வழிபாட்டை இபாதத்தை வலியுறுத்துகிற எல்லா இடங்களிலும் நற்குணத்தையும், ஒழுக்கத்தையும், உயர்ந்த குணங்களையும் வலியுறுத்திதான் சொல்கிறான். குர்ஆனை பொருளுணர்ந்து அதனுடைய அழகிய அர்த்தங்களோடு படிப்பவர்கள் இதை கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பார்கள்.
 
எங்கெல்லாம் அல்லாஹு தஆலா அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வேறு யாரையும் வணங்க கூடாது; வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறானோ அதற்கு அடுத்ததாக அல்லாஹு தஆலா நீங்கள் பெற்றோருடன் நல்ல முறையில் ஒழுக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்துகிறான். 
 
பார்க்க -  (அல்குர்ஆன் 2 : 83) (அல்குர்ஆன் 17 : 23)
 
அது மட்டுமல்ல, நான்காவது அத்தியாயத்தின் மிக முக்கிய வசனமாகிய 36வது வசனத்தை படித்து பாருங்கள்.
 
அல்லாஹு தஆலா மிக அழகிய முறையிலே அந்த ஒழுக்கத்தை, உயர்ந்த நற்குணத்தை நமக்கு வலியுறுத்துகிறான்:
 
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
 
இன்னும், அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், அவனுக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்கள்; இன்னும், தாய், தந்தைக்கும், உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டைவீட்டாருக்கும், அந்நியரான அண்டை வீட்டாருக்கும், அருகில் இருக்கும் நண்பருக்கும், பயணிக்கும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கும் கருணையுடன் உதவி செய்யுங்கள். கர்வமுடையவனாக, பெருமையுடையவனாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான். (அல்குர்ஆன் 4 : 36)
 
எல்லா மக்களுடனும் இஹ்ஸான் என்ற அழகிய நற்குணத்தோடு நாம் பழக வேண்டும் என்பதை மிக அழுத்தமாக அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
 
இஹ்ஸான் என்றால் என்ன? ஒரு மனிதன் அல்லாஹ்விற்கும் அவனுக்கும் இடையில் உள்ள உறவை சரி செய்வது. பிறகு, இஹ்ஸான் என்றால் என்ன? ஒரு அடியான் தனக்கும் தனது சமுதாயத்தில் உள்ள இன்ன பிற மக்களோடு தனக்கு இருக்கக்கூடிய அந்த உறவுகளை அழகுபடுத்துவது, சரி செய்வது. 
 
தன்னால் ஒருவருக்கும் எந்த விதமான தீங்கும் ஏற்படக்கூடாது, நான் பிறருக்கு நன்மை செய்யக் கூடியவன் என்று ஒரு முஸ்லிம் தன்னை மாற்றினால்தான் அவன் உண்மையான முஸ்லிமாகவே மாறுகிறான். 
 
நூற்றுக்கணக்கான இல்லை, ஆயிரக்கணக்கான ஹதீஸுகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நற்குணங்களை போதிப்பதற்காகவே, ஒழுக்கங்களை போதிப்பதற்காகவே, சமூகத் தொடர்புகளை சீர் செய்வதற்காகவே சொல்லி இருக்கிறார்கள்.
 
குர்ஆனிலே ஹலால் ஹராம் உடைய என்ற சட்டங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஃபிக்ஹ் அறிஞர்கள் சொல்கிறார்கள்; 500 வசனங்கள்தான். ஹதீஸிலே ஃபிக்ஹ் உடைய ஹதீஸ்கள் என்று எடுத்துக் கொண்டால் ஹதீஸ் கலை அறிஞர்கள் சொல்கிறார்கள்; ஐயாயிரம் ஹதீஸ்கள் என்று. 
 
ஆனால், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய லட்சக்கணக்கான மீதமுண்டான ஹதீஸ்கள், குர்ஆனிலே 6000க்கும் மேற்பட்ட வசனங்களிலே இந்த 500 போக உள்ள மற்ற வசனங்கள் எல்லாம் எதை கூறுகிறது என்றால், அல்லாஹ்வுடைய வல்லமையை, அல்லாஹ்வுடைய ஆற்றலை, சொர்க்க நரகத்தை கூறுவதோடு சமூகத்திலே ஒரு மனிதன் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
 
வணக்க வழிபாடுகளுக்காக 500 வசனங்களை அல்லாஹ் கூறுகிறான். ஆனால் ஒழுக்கம் மாண்புகளுக்காக, சமுதாயத்தினுடைய சிறந்த நற்குணங்களை உறுதிப்படுத்துவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்களை அல்லாஹு தஆலா சொல்லித் தருகிறான். 
 
ஸூரா அந்நஹல் உடைய 90வது வசனம் ஒரு அடிப்படையான வசனம். ஜும்மா குத்பாக்களிலே பெரும்பாலும் அந்த வசனத்தை ஓதாமல் கத்திபுகள் குத்பாவை நிறைவு செய்வதில்லை.
 
அல்லாஹு கூறுகிறான்:
 
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
 
நிச்சயமாக அல்லாஹ், (நீங்கள்) நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் (உங்களை) ஏவுகிறான். மேலும், மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான். (அல்குர்ஆன் 16 : 90)
 
இந்த வசனத்தை நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? நிச்சயமாக அல்லாஹ் நீதத்தை ஏவுகிறான். இஸ்லாமிய மார்க்கத்தில் ஒழுக்கங்களில் தலையாய ஒன்று நீதமாக நடப்பது. 
 
உறவினராக இருந்தாலும் சரி, அவர் தவறு செய்திருந்தால் அங்கே நாம் நீதமாக தான் நடக்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஃபாத்திமா என்ற பெயருடைய பெண் திருட்டு குற்றம் சாட்டப்பட்டவராக வருகிறாள். குற்றம் உறுதி செய்யப்படுகிறது. உயர்ந்த பெண்மணி என்பதற்காக வேண்டி சிபாரிசுக்கு சிலர் வருகிறார்கள். ஏதாவது பொருளாதார நஷடஈடை கொடுத்து அந்தப் பெண்மணியை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வால் நீதமாக நடக்க வேண்டும் என்று கட்டளை இடப்பட்டவர்கள். நீதத்துக்காகவே அனுப்பப்பட்ட நபி.  
 
சொன்னார்கள்:
 
و أنَّ فاطِمَةَ بنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ، لَقَطَعْتُ يَدَها
 
இந்த ஃபாத்திமா இல்லை, என்னுடைய மகள் ஃபாத்திமா திருடி இருந்தாலும் அவருடைய கரத்தை நான் துண்டித்திருப்பேன் என்று.
 
அறிவிப்பாளர் : உர்வா இப்னு சுபைர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4304.
 
இந்த நீதம் என்பது இஸ்லாமிய சமூகத்தின் ஒரு தனி அடையாளம். நமக்கு மொழியின் வெறியோ, அல்லது இனத்தின் வெறியோ, அல்லது குலத்தின் வெறியோ, நிறத்தின் வெறியோ இருக்கக் கூடாது. நம்மிலே சட்டமாக இருக்கக்கூடியது நீதம்தான்.
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தை நிலைநிறுத்துபவர்களாக; அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்! நீதம் உங்களுக்கு அல்லது பெற்றோருக்கு அல்லது உறவினர்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே. (அல்குர்ஆன் 4 : 135)
 
இத்தகைய வழிகாட்டுதல் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து அல்லாஹு தஆலா சொல்லக்கூடிய இரண்டாவது விஷயம், இஹ்ஸான் என்ற மிக அழகிய குணத்தை அல்லாஹ் உங்களுக்கு ஏவுகிறான். (அல்குர்ஆன் 16 : 90)
 
உங்களுடைய குணங்களை நீங்கள் சரி செய்ய வேண்டும்; நீங்கள் பிற மக்களுக்கு உதவியாக, ஒத்தாசையாக, கருணையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் ஏவுகிறான். 
 
இன்று, நம்முடைய நிலையை பாருங்கள்; ஒவ்வொரு முஸ்லிமும் தனது நிலையை நினைத்து வருந்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
இன்று, சமூகம் எப்படி மாறி இருக்கிறது என்றால், சூழ்நிலை எப்படி மாறி இருக்கிறது என்றால், எந்த அளவுக்கு பிறருக்கு இன்னல் தர முடியுமோ, இடையூறுகள் தர முடியுமோ, தொந்தரவுகள் தர முடியுமோ அதுவெல்லாம் சமுதாயத்திலே சகஜமாக ஆகிவிட்டது.
 
அதெல்லாம் சமுதாயத்திலே ஒரு குற்றமில்லாத செயலாக, பரவலாக மக்களால் இதெல்லாம் அப்படித்தான் என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அதாவது சகித்துக் கொள்ளக்கூடிய ஒரு நிலையாக மாறியிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
 
ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார். இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார். (அல்குர்ஆன் 99 : 7,8)
 
என்று மறுமையை நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய ஒரு மூஃமின்‌ தன்னால் பிறருக்கு தொந்தரவு ஏற்படுவதை அவன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். தன்னை அப்படி அவன் பழக்கிக் கொள்ள மாட்டான். அத்தகைய ஒரு கெட்ட ஒரு இழிவான நிலைக்கு அவன் ஆளாகி விட மாட்டான். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே எத்தனையோ பல கேள்விகள் கேட்கப்பட்டன, சொர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்தை பற்றி.
 
மூஃமின்களில் மிகப் பரிபூரணமானவர்கள், மிக உயர்ந்தவர்கள் யார் என்று? ஈமானிலே மிக சிறந்தது எது என்று கேட்கப்பட்டது? அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் மிகப் பிரியமானவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது. நாளை உங்களுடைய சபையிலே உங்களோடு அந்த மறுமையிலே, சொர்க்கத்திலே நெருக்கமாக உள்ளவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது.
 
எத்தனை வகையான கேள்விகள்! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தஹஜ்ஜத்துகள் தொழக்கூடிய முஸ்லிம்கள் என்று சொல்லவில்லை, வார வாரம் நஃபிலான நோன்பு நோற்க்கும் முஸ்லிம்கள் என்று சொல்லவில்லை, மாதம் மாதம் அல்லது ஆண்டுக்கு பலமுறை உம்ரா செல்பவர்கள் என்று சொல்லவில்லை.
 
இத்தனை கேள்விகளுக்கும், இத்தனை சிறப்புகளுக்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரே ஒரு பதிலை சொன்னார்கள் என்றால் யாருடைய குணம் அழகாக இருக்கிறதோ, யார் நற்குணம் உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் என்று பதில் சொன்னார்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
أنا زعيمٌ ببيتِ في رَبَضِ الجنةِ لمَن تَرَكَ المِراءَ وإن كان مُحِقًّا 
 
சொர்க்கத்தின் அந்த வேர் பகுதியிலே ஒரு வீட்டை வாங்கி தருவதற்கு நான் பொறுப்பாளராக இருக்கிறேன். யார் வாக்குவாதம், விதண்டாவாதம், தர்க்கம் செய்யாமல் சுமுகமாக இருக்கிறார்களோ அவர் சத்தியவாதியாக இருந்தாலும் கூட, நேர்மை உண்மை அவரிடத்தில் இருந்தாலும் கூட தர்க்கங்களை விட்டு, குதர்க்கங்களை விட்டு, சச்சரவுகளை விட்டு யார் ஒதுங்கி இருக்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் மேற்புறத்திலே ஒரு வீட்டுக்கு நான் பொறுப்பாளன் என்று அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
அடுத்து சொன்னார்கள்; 
 
وببيتِ في وسطِ الجنةِ لمَن تركَ الكذبَ وإن كان مازحًا  
 
யார், பொய் பேசுவதை முற்றிடுமாக விட்டு விடுகிறாரோ அவருக்கு சொர்க்கத்துக்கு நடுவிலே ஒரு வீட்டுக்கு நான் பொறுப்பாளராக இருக்கிறேன். 
 
(இன்று, பொய் என்பது அவ்வளவு சகஜமாக ஆகிவிட்டது. வாய் கூசாமல், பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை வாலிபர்கள் வரை பொய் என்பது ஒரு கலாச்சார சமூக நோயாக பரவி இருக்கிறது. 
 
எங்கு பார்த்தாலும் பொய், எதிலும் பொய், எல்லாவற்றிலும் பொய் கலந்து யாரின் மீதும் நம்பிக்கை ஏற்படாத அளவிற்கு உண்மை எடுபட்டு, பொய் என்பது சர்வ சாதாரணமாக நம்முடைய நாவுகளிலே நடமாடுவதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
ஒரு முஸ்லிமால் பொய் சொல்ல முடியாது. பொய் சொல்பவனாக ஒரு முஃமின் இருக்க மாட்டான். அநியாயமாக கொல்லப்படக்கூடிய அல்லது தனது சகோதரன் கொல்லப்படக்கூடிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டாலே தவிர, வேறு ஒரு சூழ்நிலையில் உலகத்தின் அற்ப லாபத்திற்காகவோ, அற்ப ஆதாயத்திற்காகவோ பொய் பேசக்கூடியவனாக ஒரு முஃமின் இருக்க மாட்டான்.)
 
ஹதீஸின் தொடர் : யார், பொய்யை முற்றிலுமாக விட்டு விடுகிறார்களோ, அவருக்கு  சொர்க்கத்தின் நடுவிலே அல்லாஹ் ஒரு வீட்டை கொடுப்பதற்கு நான் பொறுப்பாளன் என்று சொன்னார்கள். 
 
பிறகு சொன்னார்கள்: 
 
وببيتٍ في أعلى الجنةِ لمَن حَسُنَ خُلُقُه
 
சொர்க்கத்தினுடைய உயர்ந்த அந்த இடத்திலே ஒரு வீட்டுக்கு நான் பொறுப்பாளராக ஆகி விடுவேன்; யார் தன்னுடைய குணத்தை அழகுப்படுத்திக் கொண்டாரோ, தன்னுடைய குணத்தை நற்குணமாக ஆக்கிக் கொண்டாரோ அவருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த தகுதியிலே ஒரு வீட்டுக்கு நான் பொறுப்பாளர் என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ உமாமா அல்பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4800.
 
சொர்க்கத்தினுடைய உயர்ந்த அந்த வீடு என்றால் மொத்த சொந்தமும் உங்களுக்கு தான்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இங்கே வணக்க வழிபாடுகளில் எதையும் குறிப்பிட்டார்களா? உங்கள் வணக்க வழிபாடு நீங்கள் அல்லாஹ்வுக்கு செய்யக்கூடிய கடமை. அதே நேரத்தில் சொர்க்கத்தின் தகுதி என்பது நற்குணத்தை கொண்டு முடிவு செய்கிறான். 
 
இன்னொரு ஹதீஸை பாருங்கள்; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது; 
 
سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال: تقوى الله وحسن الخلق
 
மக்களை சொர்க்கத்தில் சேர்க்கக்கூடிய அமல்களில் அதிகமான அமல் எது? எந்த அமலை செய்வதால் மக்கள் அதிகமான எண்ணிக்கையில் சொர்க்கத்திற்கு செல்வார்கள்? என்று. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரண்டு விஷயங்களை சொன்னார்கள்: 1. அல்லாஹ்வுடைய பயம். 
 
அதுவும் தனிமையில் இருக்கும்போது எந்த அச்சம் நம்மை அல்லாஹ்வுடைய பாவத்திலிருந்து தடுக்கிறதோ, ஒரு குற்றமான செயலில் இருந்து நம்மை தடுக்கிறதோ, அல்லாஹ்விற்கு வெறுப்பான செயலில் இருந்து நம்மை தடுக்கிறதோ அது தக்வா.
 
தக்வா என்பது ஆடையில் அல்ல, தோற்றத்தில் அல்ல, தோற்றத்தில் தக்வா உடைய வெளிப்படையான ஆடைகளை பலர் அணிந்திருக்கலாம். ஆனால், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய நெஞ்சத்தை சுட்டி காட்டி மூன்று முறை சொன்னார்கள்:  தக்வா என்பது இதோ இங்கே இருக்க வேண்டும் என்று மூன்று முறை சொன்னார்கள்.
 
அடுத்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 2. நற்குணம் என்று.
 
அடுத்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. 
 
وسئل عن أكثر ما يدخل الناس النار فقال: الفم والفرج  
 
மக்களை அதிகமாக நரகத்தில் தள்ளக்கூடிய அமல் எது? என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: மனிதனுடைய வாயும், அவனுடைய மர்ம ஸ்தானமும்.
 
 அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2004.
 
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! ஒரு மனிதன் தன்னுடைய இச்சையை, காம ஆசையை அல்லாஹ் ஹலால் ஆக்காத மனைவி அல்லாத ஒருவருடத்திலே அது பெண்ணாக இருக்கட்டும் அல்லது ஒரு ஆண் ஒரு ஆணோடு இருக்கட்டும் அல்லது ஒரு பெண் ஒரு பெண்ணோடு இருக்கட்டும் இந்த மார்க்கத்திலே மிக கடுமையான குற்றமாகும். 
 
ஒரு ஆண் அவனுடைய காம இச்சையை தனித்து கொள்வதற்கு அல்லாஹ் அனுமதித்த ஒரே வழி அவன் திருமணம் முடித்துக் கொண்ட ஹலாலான மனைவி மட்டும்தான். 
 
இன்று, விபச்சாரம் என்பது ஆண் ஒரு அன்னியப் பெண்ணோடு தனித்திருந்து, இருவரும் விருப்பத்தோடு காம இச்சையை தனித்துக் கொள்வது சாதாரணமாக ஆகிவிட்டது.
 
இதை நியாயப்படுத்தக்கூடிய முட்டாள்கள் சமுதாயத்திலே அதிகமாகி விட்டார்கள். முஸ்லிம் சமுதாயத்தில் கூட இதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு இவர்கள் ஈமான் இறங்கிப் போய்விட்டது. இவர்களுடைய மார்க்கப்பற்று பலவீனம் அடைந்து விட்டது. 
 
அடுத்து இன்னொரு பெரிய முஸீபத், எந்தப் பாவத்தால் அல்லாஹு தஆலா ஒரு சமுதாயத்தையே கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக புரட்டினானோ, அந்த சமுதாயத்தின் கண்களை குருடாக்கினானோ, அந்த சமுதாயத்தின் மீது கல் மழையை பொழிந்தானோ, அந்த ஓரினச்சேர்க்கையையும் கூட அங்கீகரிக்கக் கூடிய அளவுக்கு இன்று நம் சமுதாயத்தில் பலர் மாறி இருக்கிறார்கள் என்றால், இதைவிட மிகப்பெரிய அவமானம் என்ன இருக்க முடியும்!
 
மார்க்கம் இல்லாதவர்கள், மறுமை இல்லாதவர்கள், அல்லாஹ்வின் வேதத்தை அறியாத முட்டாள்கள் வேண்டுமானால் இத்தகைய காரியங்களுக்கு பின்னால் மனித சுதந்திரம் என்று ஓடலாம். 
 
நமக்கு அல்லாஹ் வேதத்தை கொடுத்து இருக்கிறானே அதில் கண்டிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஒரு குற்ற செயல் அல்லவா இது. 
 
இன்று பல வாலிபர்கள் இந்த நோயினால் பீடிக்கப்பட்டு இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். ஒரு ஆண் ஒரு ஆணோடு இச்சையை தணிப்பது, ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் இச்சையை தணிப்பது என்பது விபச்சாரத்தை விட மிகப்பெரிய குற்றம்.
 
அல்லாஹு தஆலா இந்த குற்றச்செயலை செய்த ஒரு சமுதாயத்துக்கே லூத் அலைஹி வஸ்ஸலாம் என்ற ஒரு நபியை அனுப்பி, அந்த மக்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கை செய்தான். அந்த மக்கள் திருந்தவில்லை. 
 
அல்லாஹ்வை நிராகரித்த, நபிமார்களை கொலை செய்த இன்னும் நபிமார்களுக்கு தொந்தரவு கொடுத்த எத்தனை சமுதாயங்களை அல்லாஹ் அழித்ததாக குர்ஆனில் கூறுகிறானோ, மொத்த சமுதாயங்களுக்கு கொடுத்த வேதனையை விட கடுமையான வேதனையை லூத் அலைஹி வஸல்லாம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்தான் என்றால் இந்த பாவம் எவ்வளவு பெரிய பயங்கரமான பாவம் என்பதை புரிய வேண்டும்.
 
இதுகுறித்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்தார்கள். 
 
ஒரு பக்கம் உறுதி கொடுத்தார்கள். 
 
مَن يَضْمَن لي ما بيْنَ لَحْيَيْهِ وما بيْنَ رِجْلَيْهِ، أضْمَنْ له الجَنَّةَ
 
யார், தன்னுடைய இந்த தாடைக்கு நடுவிலே, தன்னுடைய உதட்டுக்கு நடுவிலே இருக்கக்கூடிய நாவுக்கு பொறுப்பேற்று கொள்கிறாரோ நான் சொர்க்கத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
 
அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஸஃத் அஸ்ஸாயிதி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6474.
 
உன்னுடைய நாவல் ஒருவர் காயப்படக்கூடாது, உன்னுடைய நாவால் ஒருவனை இழிவுபடுத்தக் கூடாது. அவனுடைய நிறத்தை சொல்லியோ, அவனுடைய எந்த ஒரு குறையை சொல்லியும் நீ அவனை குத்திப் பேசினால், அவனை நீ காயப்படுத்தி விட்டால் அதற்காக நாளை மறுமையிலே உன்னிடத்தில் பழி வாங்கப்படும்.
 
அடுத்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; யார் தன்னுடைய இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இருக்கக்கூடிய மர்மஸ்தானத்தை பாதுகாத்துக் கொள்வாரோ, அவருக்கு நான் சொர்க்கத்துக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் என்று. 
 
அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஸஃத் அஸ்ஸாயிதி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6474.
 
மேலும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
إنَّ مِن أحبِّكم إليَّ وأقربِكُم منِّي مجلسًا يومَ القيامةِ أحاسنَكُم أخلاقًا
 
நாளை மறுமையில் எனக்கு மிக விருப்பமானவர், இன்னும் சபையில் நெருக்கமாக இருப்பவர் யார் என்றால், உங்களில் யார் குணத்தால் மிக அழகாக இருக்கிறார்களோ அவர்தான். (1)
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2018.
 
நம்முடைய வெளித் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய அதே நேரத்திலே, நம்முடைய குணங்களை, ஒழுக்கங்களை, நம்முடைய பண்பாடுகளை நாம் மறந்துவிடக்கூடாது. 
 
முஸ்லிமாகப்பட்டவன் தன்னுடைய வணக்க வழிபாடுகளை கொண்டு அறியப்படுகின்ற அதே நேரத்திலே, அவருடைய உயர்ந்த குணத்தால், சிறந்த சமூகத் தொடர்புகளால், பிறருக்கு அவன் செய்யக்கூடிய உயர்ந்த அழகிய நடத்தைகளால் அவன் அறியப்படுகிறான் என்பதை மறந்து விடக்கூடாது.
 
அல்குர்ஆனை நாம் தொடர்ந்து ஓதி, அதனுடைய அர்த்தங்களை படித்து அதிலிருந்து இங்கு ஒழுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கின்ற அதிகமான ஹதீஸ்களை படித்து ஒவ்வொரு ஹதீஸைக் கொண்டும் அதிலிருந்து எப்படி நான் நற்குணங்களை கற்றுக் கொள்வேன், என்னென்ன தீய குணங்களை அல்லாஹ்வும் ரசூலும் எச்சரித்திற்கார்கள் என்று அறிந்து, தீய குணத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதன்மூலமாக தான் அல்லாஹ்விடத்தில் வெற்றியை அடைய முடியும். 
 
ஒரு ஹதீஸை சொல்லி நிறைவு பெறுகிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்பட்டது: 
 
ما شيءٌ أثقلُ في ميزانِ المؤمِنِ يومَ القيامةِ مِن خُلُقٍ حسَنٍ
 
நாளை மறுமையில் மூஃமின்களின் அந்த நன்மையின் தராசின் தட்டை அதிக கனமாக்கக் கூடிய அமல் எது என்று கேட்கப்பட்டபோது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே வார்த்தையிலே நற்குணம் என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2002.
 
அத்தகைய உயர்ந்த நற்குணத்தை கடைபிடிப்போமாக! நமக்கு மத்தியில் பரப்புவோமாக! அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நமது நற்குணங்களை, நமது குணங்களை, அழகுப்படுத்துவானாக! தீய கெட்ட குணங்களை விட்டு அல்லாஹு தஆலா நம்மை பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
إنَّ مِن أحبِّكم إليَّ وأقربِكُم منِّي مجلسًا يومَ القيامةِ أحاسنَكُم أخلاقًا ، وإنَّ مِن أبغضِكُم إليَّ وأبعدِكُم منِّي يومَ القيامةِ الثَّرثارونَ والمتشدِّقونَ والمتفَيهِقونَ، قالوا : يا رسولَ اللَّهِ، قد علِمنا الثَّرثارينَ والمتشدِّقينَ فما المتفَيهقونَ ؟ قالَ : المتَكَبِّرونَ
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/