HOME      Khutba      ரஸூல் ﷺ மீது உண்மையான அன்பும் போலியான அன்பும்!! | Tamil Bayan - 742   
 

ரஸூல் ﷺ மீது உண்மையான அன்பும் போலியான அன்பும்!! | Tamil Bayan - 742

           

ரஸூல் ﷺ மீது உண்மையான அன்பும் போலியான அன்பும்!! | Tamil Bayan - 742


ரசூலுல்லாஹ் (ஸல்) மீது உண்மையான அன்பும் போலியான அன்பும்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரசூலுல்லாஹ் (ஸல்) மீது உண்மையான அன்பும் போலியான அன்பும்
 
வரிசை : 742
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 30-09-2022 | 04-03-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு  தஆலாவைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் நேசத்திற்குரிய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழும்படி உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய வேதத்தையும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவையும் பற்றிப்பிடித்து, அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வுடைய தூதர் மீதும் நேசம் கொண்டவர்களாக வாழும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய உள்ளங்களை அவனுடைய அன்பாலும், அவருடைய தூதரின் அன்பாலும், அந்த தூதரின் தோழர்கள் உடைய அன்பாலும் நிரப்புவானாக! ஆமீன். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு கூறும்போது யாருக்கு அவர்கள் மீது அன்பு வராமல் இருக்கும்?! நபி என்று ரசூல் என்று அல்லாஹ்வுடைய தூதர் என்று சொல்லும்போதே கண்டிப்பாக ஒவ்வொரு முஃமினுடைய முகமும் உள்ளமும் மளர்ச்சி அடையும். 
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா, நம்முடைய நேசம் எல்லாம் அந்த தூதர் மீது நிலை கொள்வதற்குரிய ஒரு உயர்ந்த தூதரை அல்லவா நமக்கு அனுப்பி இருக்கிறான்.
 
அல்லாஹு தஆலா கட்டளையாக நமக்கு சொல்லவில்லை என்றாலும், இதை ஒரு மார்க்க சட்டமாக நமக்கு சொல்லவில்லை என்றாலும் கூட, அந்த தூதரை பற்றி அவர்களுடைய வரலாற்றை பற்றி படிக்கும்போது கண்டிப்பாக அவர்கள் மீது அவர்களுடைய அந்த தூய சீறாவை படிக்கக்கூடிய ஒவ்வொருவரும் நேசம் வைப்பார்; அன்பு வைப்பார். 
 
அல்லாஹு சுபஹானஹு தஆலா அதற்கு மேல் அதை நமக்கு ஒரு மார்க்க கட்டளையாகவும், அந்த தூதரின் மீது நான் நேசம் வைத்திருக்கிறேன்; அன்பு வைத்திருக்கிறேன்; அவரை என்னுடைய உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டேன் என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது இன்னும் அந்த அன்பு என்பது மற்றிட முடியாத அளவிற்கு, அளவிட முடியாத அளவிற்கு, நம்மால் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு நம்முடைய உள்ளத்திலே உதித்தெழும். நம்முடைய உள்ளத்திலே அந்த பாசம் குடிகொள்ளும் என்பது கண்டிப்பாக ஒரு நிதர்சனமான உண்மை ஆகும்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நமக்கு நினைவூட்டுகிறான்:
 
النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ
 
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். (அல்குர்ஆன் 33 : 6)
 
எல்லா வகையான அன்பு, பாசம், நேசம், உறவுகள் உடைய உரிமைகளை நாம் கொடுப்பதற்கு இந்த மனிதர்களிலேயே முதல் தகுதி உள்ளவர் நம்முடைய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு முஃமினுடைய ஈமானின் தேட்டமாக, ஈமானின் அடையாளமாக, ஈமானின் சின்னமாக இந்த முஹப்பத்தை நமக்கு வலியுறுத்தி சொன்னார்கள்.
 
அல்லாஹ்வின் மீது அன்பு வைக்காதவர்களுடைய ஈமான் நிறைவடையாது. அதுபோல்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது முழுமையான அன்பு வைக்காதவர், அவர்களை முழு உள்ளத்தில் இருந்தும் நேசிக்காதவருடைய ஈமானும் நிறைவுறாது. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
لَا يُؤْمِنُ أحَدُكُمْ، حتَّى أكُونَ أحَبَّ إلَيْهِ مِن والِدِهِ ووَلَدِهِ والنَّاسِ أجْمَعِينَ
 
என் ஆன்மா யாருடைய கரத்தில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரும் சரியான முஃமினாக ஆக முடியாது.
 
அவரிடத்தில் தொழுகை இருக்கலாம்; நோன்பு இருக்கலாம்; இன்னும் பல இபாதத்துகள் இருக்கலாம்; இன்னும் பல நன்மையான நல்ல காரியங்கள் இருக்கலாம். என்ன இருந்தாலும் சரி, எத்தகைய மனிதனாக இருந்தாலும் சரி, அவர் ஈமான் உள்ளவராக நிறைவான ஈமான் உள்ளவராக ஆக முடியாது.
 
எதுவரை என்றால், அவருக்கு நான் மிக விருப்பத்திற்கு உரியவனாக நேசத்திற்குரியவனாக ஆகிற வரை.
 
அவனுடைய உயிரை விட, அவனுடைய செல்வத்தை விட, அவனுடைய பிள்ளைகளை விட, மக்கள் அனைவரையும் விட ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அந்த ஈமானுடைய அன்பை கொண்டு நாம் நேசம் கொள்ளாத வரை நம்முடைய ஈமான் நிறைவேறாது. அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்த ஈமானாக ஆகாது.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 15.
 
சாதாரண எச்சரிக்கையை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்யவில்லை. 
 
ஒருமுறை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கரத்தைப் பற்றிப் பிடித்தவராக உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு நடந்து செல்கிறார்கள். 
 
அதை கொஞ்சம் கற்பனையில் கொண்டுவந்து சிந்தித்துப் பாருங்கள். எத்தகைய ஒரு பாக்கியமாக இருக்கும், ரசூலுல்லாவுடைய கரத்தோடு தன்னுடைய கரம் இணைந்திருக்க, அவர்களோடு சேர்ந்து உமருல் பாரூக் நடக்க எத்தகைய ஒரு பாசமாக இருக்கும்! அந்த உமருடைய உள்ளத்தில் எத்தகைய ஈமானுடைய ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கும்! எத்தனை அன்பு மழைகள் பொழிந்து கொண்டிருக்கும்! எத்தகைய பாச உணர்வுகள் பீறிட்டு கொண்டு இருந்திருக்கும்! என்பதை சிந்தித்துப் பாருங்கள்! 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யாராவது குறைத்து பேசினால் மட்டும் அல்ல, இவர் ரசூலுல்லாஹ்விற்கு தொந்தரவு தருவார் என்று நினைத்தால், அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள், அவருடைய தலையை சீவி விடுகிறேன் என்ற அளவுக்கு நபியின் மீது மிக அதிகமான ஆழமான பாசமுடையவர், நேசமுடையவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். 
 
அந்த உமர் ரசூலுல்லாஹ்வை பார்த்து சொல்கிறார்கள்; 
 
يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي
 
மனம் நிரம்ப உள்ளத்தில் இருந்து சொல்கிறார்கள்; உணர்வோடு சொல்கிறார்கள்.
 
நாமும் சொல்லலாம். நம்முடைய உள்ளம் ஒன்றை வைத்திருக்கும். நாவில் ஒன்றை சொல்வோம். நம்முடைய உள்ளம் ஒன்றுக்கு சாட்சியாக இருக்கும். நாவு வேறொன்றை சொல்லும். 
 
ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மஜ்லிஸில் யாரும் பொய் பேசி விட முடியாது. அவர்களுடைய மஜ்லிஸில் யாரும் பகட்டு புகழ்ச்சி செய்து விட முடியாது. உடனே அல்லாஹ் வசனத்தை இறக்கி வைத்து விடுவான்.
 
وَمِنَ النَّاسِ مَنْ يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ
 
இன்னும், (நபியே!) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி எவனுடைய பேச்சு உம்மை வியக்க வைக்குமோ அ(த்தகைய)வனும் மக்களில் இருக்கிறான். அவன், தன் உள்ளத்தில் உள்ளவற்றிற்கு (பொய்யாக) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். அவனோ வாதிப்பதில் மிகக் கடுமையான பேச்சாளன் (மிகவும் பொய்யாகவும் முரட்டுத்தனமாகவும் வாதிடுபவன்.) (அல்குர்ஆன் 2 : 204)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
 
நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் சாட்சி பகருகிறோம்” என்று கூறுவார்கள். நிச்சயமாக நீர் அவனது தூதர்தான் என்று அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி பகருகிறான். (அல்குர்ஆன் 63 : 1)
 
ரசூலுல்லாஹ்வுடைய மஜ்லிஸ் வஹியோடு தொடர்புடைய மஜ்லிஸ். அர்ஷ்ஷுடைய இறைவனோடு தொடர்புடைய மஜிலிஸ். அந்த நபிக்கு முன்னால் யாரும் பொய் சொன்னால் அல்லாஹு தஆலா காட்டி கொடுத்து விடுவான். அடையாளப்படுத்தி விடுவான். அல்லாஹு தஆலா அவரை அசிங்கப்படுத்தி விடுவான்.
 
இங்கே உமர் உடைய ஈமான் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈமான். இங்கே உமருடைய உள்ளத்தில் பதிந்த அந்த இறைநம்பிக்கை அல்லாஹ் பதித்த நம்பிக்கை. அல்லாஹ் எழுதிய ஈமான். 
 
எந்த பத்ரு சஹாபாக்களை பார்த்து, அல்லாஹ் இவர்களின் உள்ளத்தில் ஈமானை பதிவு செய்து விட்டான் என்று சொன்னானோ (அல்குர்ஆன் 58:22) அந்தத் தோழர்களில் ஒருவராயிற்றே! 
 
அவருடைய வார்த்தை வெறும் வார்த்தை ஜாலமாக இருக்குமா? பகட்டாக இருக்குமா? வாய் நிரம்ப மனம் நிரம்ப சொல்கிறார். பாசத்தோடு சொல்கிறார்: 
 
يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي
 
யா ரசூலல்லாஹ்! நீங்கள் எனக்கு மிகப் பிரியமாணவர் எல்லாவற்றையும் விட, இந்த உலகத்தில் எதுவும் எனக்கு விருப்பமானது இல்லை. உங்களுக்கு முன்னால் நீங்கள் தான் எனக்கு விருப்பமானவர். எனது உயிரைத் தவிர என்று சொன்னபோது, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சாந்தமாக அந்த உமருக்கு பதில் சொன்னார்கள்:
 
«لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ»
 
உமரே! அது சாத்தியமில்லை. இந்த அன்பு ஏற்றுக் கொள்ளப்படாது. நான் உனக்கு உன்னை விட, உன்னுடைய உயிரை விட விருப்பமுள்ளவனாக ஆகுகின்ற வரை அது நடக்காது.
 
நீங்கள் எதிர் பார்க்கின்ற சொர்க்கம் கிடைக்காது. நீங்கள் எதிர்பார்க்கின்ற அல்லாஹ்வின் அன்பு கிடைக்காது. நீங்கள் எதிர்பார்க்கின்ற அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்காது. நீங்கள் எதிர்பார்க்கின்ற ஈமானிய லெவல் எதுவும் கிடைக்காது. இந்த மார்க்கத்தை கொண்டு நீங்கள் என்ன ஆசை வைக்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்காது.
 
அப்போதுதான் உமர் அவர்கள் உடனே தனது உள்ளத்தை மாற்றுகிறார்கள். 
 
நாமாக இருந்தால் என்ன சொல்வோம்? ரசூலுல்லாஹ் அது கொஞ்சம் கொஞ்சமா வந்துரும். கொஞ்சம் டைம் கொடுங்களேன் என்று. 
 
அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்; அல்லாஹ்வுடைய தூதருக்கு கீழ்ப்படியுங்கள் என்று சொல்லப்பட்டால் செவியற்றோம் கீழ்ப்படிந்தோம் என்று நம்மில் கட்டுப்படக் கூடியவர்கள் எத்தனை பேர்! 
 
எந்த அளவு முடியுமோ அந்தளவிற்கு ஆயத்தை தஃவில் செய்ய வேண்டும். ஹதீஸை தஃவில் செய்ய வேண்டும். எங்களுக்கு தெரியாதா? இதற்கு நிறைய விளக்கம் இருக்கு. நீங்க போய் உங்க ஆலிம்கிட்ட கேட்டு பாருங்க. இப்பதானே இந்த ஹதீஸ் தெரிய வந்திருக்கு, கொஞ்சம் கொஞ்சமா நாங்க எடுத்து நடப்போம். 
 
உடனே எல்லாம் வந்துருமா? எப்படி எல்லாம் தந்திரங்கள் சொல்லி, மனசுக்கு பொய்யான பொய்யான காரியங்களை கூறி, குர்ஆனை ஒதுக்க முடியுமோ, ஹதீஸின் வழிமுறைகளை ஒத்தி வைக்க முடியுமோ அதற்கு எல்லாம் நாம் திட்டம் போடுவோம். இப்லீஸ் அங்கு ஒரு பக்கத்திலிருந்து உதவி செய்வான். நஃப்ஸ் இன்னொரு பக்கத்தில் இருந்து உதவி செய்யும்.
 
ஆனால், முஸ்லிம்கள் அப்படி இருக்க கூடாது. முழுமையாக அல்லாஹ்வுடைய தூதருக்கு கட்டுப்பட்டு விடுவது. அவர்கள் சொல்லி விட்டார்களா? முடிந்தது, அவ்வளவுதான். எனது நப்சை எனது காலுக்கு கீழே போட்டு மிதிப்பேன். அது என் பாசத்திற்குரிய மனைவியாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி. 
 
ஆனால், நாம் வைத்திருக்கக்கூடிய முஹப்பத் எப்படி என்றால், எல்லோரையும் திருப்தி படுத்திவிட்டு யாருக்கும் கஷ்டமில்லை என்றால், யாருடைய மனசும் நோகவில்லை என்றால் அல்லாஹ்வை திருப்தி படுத்துவதை பற்றி பிறகு யோசிக்கலாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை எடுத்து நடப்பது பற்றி அப்போது யோசிக்கலாம். 
 
எல்லாரையும் சந்தோஷப்படுத்தி விட்டு மார்க்கத்தை பின்பற்ற நினைத்தால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு இறை நிராகரிப்பு தான் மிஞ்சும். அல்லாஹ் தெளிவாக தனது நபிக்கு கட்டளை இட்டு விட்டான். 
 
நபியே! பூமியில் உள்ள அதிகமானவர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் உங்களை வழி கெடுத்து விடுவார்கள் என்று. ஆகவே, நீங்கள் பின்பற்ற வேண்டியது அல்லாஹ்வுடைய கட்டளையை. நீங்கள் பின்பற்ற வேண்டியது உங்கள் பக்கம் இறக்கப்படக்கூடிய வஹியை.
 
உங்களுக்கு இறக்கப்படக்கூடிய வஹியை பின்பற்றுங்கள். (அல்குர்ஆன் 7 : 203)
 
இங்கேதான் உமருடைய ஈமானை பார்க்கிறோம். அல்லாஹ்விடத்தில் அபூ பக்ருக்கு அடுத்ததாக இந்த மார்க்கத்தில் இத்தகைய ஒரு கண்ணியத்தை உமருக்கு அல்லாஹ் ஏன் கொடுத்தான்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏன் கொடுத்தார்கள் என்றால், இத்தகைய ஒரு வார்த்தையை கேட்டவுடன் ஏதாவது விதண்டாவாதம் செய்தார்களா? 
 
உடனே சொன்னார்கள்:
 
فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي
 
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு எல்லாவற்றையும் விட பிரியமானவர்கள். எனது உயிரை விடவும் நீங்கள் தான் பிரியமானவர். 
 
அடுத்த நொடியில் மாற்றி விட்டார்கள். நப்ஸுக்கு சாட்டை அடி கொடுத்தார்கள். 
 
அல்லாஹு தஆலா இத்தகையவர்களைப் பற்றி சொல்கிறான்:
 
رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
 
அவர்களைப் பற்றி அல்லாஹ் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். (அல்குர்ஆன் 5 : 119)
 
மேலும் அல்லாஹ் சொல்கிறான்:
 
يَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ لِيُرْضُوكُمْ وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ
 
அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள்.  (அல்குர்ஆன் 9 : 62)
 
இந்த வசனத்தை நாம் நம் வாழ்க்கையில் ஒருமுறை நடைமுறைப்படுத்தினால் கூட, கரை சேர்ந்து விடுவோம். 
 
அல்லாஹ் சொல்கிறான்: நீங்கள் திருப்தி படுத்துவதற்கு மகிழ்ச்சி படுத்துவதற்கு மிகவும் தகுதியானவர்கள் உரிமை உள்ளவர்கள் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் தான். பிறகு தாயை திருப்தி படுத்த முடிந்தால், தந்தையை திருப்தி படுத்த முடிந்தால், மனைவியை திருப்தி படுத்த முடிந்தால், மனைவிக்கு கணவனை திருப்தி படுத்த முடிந்தால், பிள்ளைகளை திருப்தி படுத்த முடிந்தால், நண்பர்களை திருப்தி படுத்த முடிந்தால், நாட்டை நாட்டின் ஆட்சியாளர்களை திருப்தி படுத்த முடிந்தால் திருப்தி செய்வோம்.
 
அல்லாஹ்வையும் ரசூலையும் அதிருப்தி ஆக்கிவிட்டு, அல்லாஹ்வையும் ரசூலையும் அதிருப்தி அடைய செய்து விட்டு உலகத்தில் யாருடைய பொருத்தத்தை தேடினாலும் சரி, நரகம் நிச்சயம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
காரணம், அது அவனை குஃப்ரில் எடுத்துச் செல்லும். நயவஞ்சகத்தில் இழுத்துச் செல்லும். அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் மாறு செய்யக் கூடிய வழிக்கு எடுத்துச் செல்லும். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமானின் சுவைக்கு மூன்று அடையாளங்களை சொன்னார்கள். அல்லாஹ்வும் ரசூலும் அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட பிரியமானவர்களாக ஆகிவிட வேண்டும். 
 
குஃப்ரில் அவர் திரும்புவது அவருக்கு வெறுப்பானதாக ஆகிவிட வேண்டும், நெருப்பில் போடப்படுவதை வெறுப்பது போன்று. 
 
தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்ப வேண்டும். அல்லாஹ் உடைய ரசூலுடைய திருப்திக்கு முன்னால் இந்த உலகத்தின் செல்வமோ, ஆட்சி அதிகாரமோ, இந்த உலகத்தின் வாழ்க்கையோ அறவே சமமாகாது; ஈடாகாது. 
 
உமர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு மிகப்பிரியமானவர்கள் என்னையும் விட என்று. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
«الآنَ يَا عُمَرُ»
 
உமரே இப்போதுதான், இப்போதுதான். 
 
அதாவது, எந்த நற்செய்தியை நான் கொண்டு வந்தேனோ, எந்த தகுதி உங்களுக்கு அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்டதோ அந்த தகுதி உங்களுக்கு இப்போதுதான் கிடைக்கும். உங்களுடைய ஈமான் இப்போதுதான் நிறைவுறுகிறது. 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6632.
 
சிந்தித்துப் பார்க்க வேண்டும்! அல்லாஹ்வுடைய தூதரின் மீது நாம் வைக்கக்கூடிய அந்த அன்பு என்பது உள்ளத்தின் ஆழத்திலிருந்து இருக்க வேண்டும். அது ஈமானிய அன்பாக இருக்க வேண்டும். இஸ்லாமிய அன்பாக இருக்க வேண்டும். அவர்களை பின்பற்றுகின்ற அன்பாக இருக்க வேண்டும். 
 
எப்போதும் எல்லாவற்றிலும் இரண்டு இருக்கும். ஒன்று, அசல். இன்னொன்று, போலி. ஒன்னு ஒரிஜினல். இன்னொன்னு, டூப்ளிகேட். 
 
அதுபோன்றுதான் இன்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பை பேசக்கூடியவர்களிலும் அவர்களுடைய அன்பிலும் இரண்டு இருக்கத்தான் செய்கிறது. 
 
யார், ரசூலுல்லாஹ் உடைய மார்க்கத்தை கற்று அவர்கள் சொன்னதை செய்கிறார்களோ அவர்கள் செய்யாததை விட்டு விலகி இருக்கிறார்களோ, இந்த மார்க்கத்தை அல்லாஹ்வுடைய ரசூலுடைய மார்க்கமாக ஆக்கி அல்லாஹ்வும் ரசூலும் வழி காட்டாத எந்த இபாதத்தையும் செய்யாமல், அல்லாஹ்வும் ரசூலும் வழிகாட்டிய இபாதத்தை ஈமானோடு இஹ்திசாபோடு இக்லாஸோடு செய்கிறார்களோ அவர்கள் உண்மையான அன்பை உடையவர்கள்; உண்மையான பாசத்தை உடையவர்கள்; உண்மையான நேசத்தை உடையவர்கள். 
 
அவர்கள் சொல்லக்கூடிய அன்பு உண்மையானது. அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பது உண்மை. அல்லாஹ்வும் ரசூலும் இத்தகையவர்களை கண்டிப்பாக நேசிப்பார்கள். அல்லாஹ் அப்படித்தான் சொல்கிறான்:
 
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 3 : 31)
 
உங்களுக்கு அல்லாஹ்வுடைய முஹப்பத் இருக்குமேயானால் அல்லாஹ்வுடைய முஹப்பத் இருக்கு என்று நீங்கள் சொல்வீர்களேயானால் நபியை பின்பற்றுங்கள்.
 
அல்லாஹ்வுடைய அன்பு எதில் இருக்கிறது? நபியை நபி வழி காட்டிய முறையில் பின்பற்றுவதில் இருக்கிறது. எதில் பின்பற்றுவது? ஆடையில் பின்பற்றினால் போதுமா உணவு சாப்பிடுவதில் பின்பற்றினால் போதுமா? தூங்குவதில் பின்பற்றினால் போதுமா?
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இபாதத்தை கற்றுக் கொடுப்பதற்காக வந்தார்கள். நம்முடைய இபாதத் ரசூலுல்லாஹ் காட்டிய முறைப்படி இருக்க வேண்டும். 
 
ஒரு மனிதர் ரசூலுல்லாஹ்வை ஆடையில் பின்பற்றி விட்டார்; ஒரு மனிதர் தூக்க ஒழுக்கங்களில் பின்பற்றி விட்டார்; இபாதத்தில் அங்க இத்திபாவு ரசூல் இல்லை, அவருடைய வணக்க வழிபாடுகள் மன இச்சையின் படி இருக்கிறது. அவர் சொன்னார்; இவர் சொன்னார்.
 
இந்த இபாதத் ஏன் செய்கிறீர்கள்? எங்க ஊர் ஆலிம்சா சொன்னாரு. ஏன் ஷபே பராத்? எங்க ஊர்ல செய்வாங்க. ஏன் மீலாது? நபி எங்க ஊர்ல கொண்டாடுவாங்க. ஏன் மௌலூது? எங்க ஊரு கலாச்சாரம். 
 
வணக்க வழிபாடுகளில் யார் ரசூலுல்லாஹ்வை பின்பற்றவில்லையோ அவர்கள் அல்லாஹ்வுடைய அன்பை பெற முடியாது. அவர்கள் சொல்லக்கூடிய அன்பு போலியான அன்பு. 
 
பித்அத்தான அமலை கொண்டு அல்லாஹ்வுடைய சாபத்தையும் கோபத்தையும், நபியினுடைய சாபத்தையும் கோபத்தையும் வாங்க முடியுமே தவிர, ஒருபோதும் அல்லாஹ்வுடைய அன்பை அல்லாஹ்வின் தூதருடைய அன்பை பெறவே முடியாது. 
 
நீங்கள் செய்யக்கூடிய ஒரு சின்ன சுன்னத்தான சரியான ஒரு அமலை கொண்டு அல்லாஹ்விடத்தில் நெருக்கம் பெறலாம். அல்லாஹ்வுடைய அன்பும் மன்னிப்பும் உங்களுக்கு கிடைக்கும். 
 
ஆனால், இன்று மனிதர்கள் செய்கிறார்கள் அல்லவா; கூட்டம் போட்டுக் கொண்டு என்னென்ன விதமான பித்அத்துக்கள்! என்னென்ன விதமான டெக்கரேஷன்! என்னென்ன விதமான பகட்டுகள்! பட்டங்கள்! 
 
ரசூலுல்லாஹ்வின் மீது அன்பு வைத்து மீலாது நபி கொண்டாட போகிறோம். 5 கோடி ஸலவாத்து ஓதிவிட்டு வாருங்கள். மௌலூது ஓதப் போகிறோம். அதற்காக முன்கூட்டி இருந்தே ஏற்பாடு. அதில் கலந்து கொள்பவர்களுக்கு தலையில் இருந்து வால் வரை அதற்கான ரேட்டுகள். 
 
அன்பு சகோதரர்களே! அங்கே அந்த உணவும் அதற்குரிய கூலியும் இல்லை என்றால் ஒருவரும் மௌலிது ஓத வரமாட்டார்கள்; மீலாது கொண்டாட வரமாட்டார்கள். ஒரு ஆலிம்ஷாவது தன்னுடைய வீட்டில் மௌலிது ஓதுகிறார்களா? காசு கொடுக்கப்பட்டால் மட்டுமே ஓதுவார்கள். விருந்து வைக்கப்பட்டால் மட்டுமே வருவார்கள். 
 
எவ்வளவு கேவலமான செயல்! ரசூலுல்லாஹ் உடைய பிறந்தநாள் ஒன்பதா? பன்னிரெண்டா? வரலாற்று ஆசிரியர்களுக்கு மத்தியில் இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், இறந்தது பிறை 12 என்பதில் சந்தேகமே இல்லை. 
 
எந்த நாளில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்தார்களோ அங்கே பிறந்த நாள் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 
 
உண்மையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்த அந்த நாளில் கொஞ்சமாவது அவர்களுக்கு சோகம் வர வேண்டாமா? கவலை வர வேண்டாமா? 
 
அதற்காக, சரி துக்கம் அனுசரிப்போம்; கவலை அனுசரிப்போம் என்று யாரும் செய்து விடாதீர்கள். மனைவிக்கு கணவன் மீதே தவிர மற்ற யாருக்கும் மூன்று நாளுக்கு மேலாக துக்கம் அனுசரிக்கக் கூடாது. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெயரால் இன்று மார்க்கத்தில் பெரும் ஒரு பிழைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அசிங்கமான சடங்குகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். முட்டாள்தனமான மூட நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். 
 
இவர்கள் மவ்லிது ஓதும் பொழுது அப்படியே அந்த மௌலிதானது ரசூலுல்லாஹ்வை இழுத்துக் கொண்டு வருகிறது. அப்படியே அந்த சபையை தேடி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்து விடுகிறார்கள் என்று எல்லோரும் எழுந்து நின்று
 
يا نبي سلام عليكم يا حبيب سلام عليكم
 
என்று ஓதுகிறார்களே! அந்த மஜ்லிஸில் அல்லாஹ்வுடைய தூதர் வந்துவிட்டார்; அவருடைய ரூஹ் வந்துவிட்டது; எனவே, எழுந்து நிற்கிறோம் என்று. 
 
இது மிகத் தெளிவான குஃப்ர் - இறை நிராகரிப்பு. இறந்துவிட்ட ஒருருடைய உயிர் உலகத்தில் ஓர் இடத்தில் வருகிறது என்று நம்புவது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு படி குஃப்ர் -இறை நிராகரிப்புடைய பாவம். 
 
யார், இந்த உலகத்தில் இறந்து விடுகிறார்களோ அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் இடையே தடுப்பு போடப்பட்டு விடுகிறது. அவர்கள் ஆகிறத்திற்கு சென்றுவிட்டார். அவரும் வர முடியாது; அவருடைய உயிரும் இந்த உலகத்திற்கு வர முடியாது. எத்தகைய குஃப்ரான நம்பிக்கை பாருங்கள்!
 
யார் அல்லாஹ்வின் மீதோ அல்லாஹ்வின் தூதரின் மீதோ பித்அத்தான முஹப்பத்தை சொல்வார்களோ அதற்கு அடுத்து அவர்கள் நிற்பது குஃப்ரில்தான்; ஷிர்க்கில்தான். அதை தான் நாம் இன்று பார்க்கின்றோம். 
 
ஆகவே, இந்த ரபிஊல் அவ்வல் மாதத்தை மக்கள் சடங்குகளுக்கும், ஷிர்க்குகளுக்கும், குஃப்ர்களுக்கும், அனாச்சாரங்களுக்கும், மௌட்டீக செயல்களுக்கும் உள்ள ஒரு மாதமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
நம்மால் முடிந்தவரை நம்முடைய அண்டை வீட்டார்கள் நம்முடைய குடும்பத்தார்கள் நம்முடைய உறவினர்கள் அவர்களுக்கெல்லாம் உண்மையான அந்த அன்புடைய செய்தியை நாம் கொண்டு செல்ல வேண்டும். 
 
ரசூலுல்லாஹ்வை பின்பற்றுவது என்றால் என்ன? அவர்கள் மீது நேசம் வைப்பது என்றால் என்ன என்ற உண்மையான செய்தியை நாம் கொண்டு செல்ல வேண்டும். 
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நமக்கும் அவர்களுக்கும் வழிகாட்டுவானாக! அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய ரசூலையும் உண்மையான முறையில் நேசித்து, அந்த முஹப்பதில் உறுதியானவர்களாக, இக்லாஸ் உள்ளவர்களாக இருந்து அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்று அதை பின்பற்றி, அதன்படி செயல்படுத்தக்கூடிய நல்ல மக்களாக ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/