HOME      Khutba      ஆஃபியா நற்சுகம் | Tamil Bayan - 743   
 

ஆஃபியா நற்சுகம் | Tamil Bayan - 743

           

ஆஃபியா நற்சுகம் | Tamil Bayan - 743


ஆஃபியா- நற்சுகம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஆஃபியா- நற்சுகம்
 
வரிசை : 743
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 11-11-2022 | 17-04-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் வேதத்தை பற்றி பிடிப்பதையும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவைவைப் பற்றி பிடிப்பதையும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நம் மீது கருணை காட்டுவானாக! அவனுடைய அருளையும் அன்பையும் கருணையையும் ஆஃபியத் என்ற உயர்ந்த நற்சுகத்தையும் நல்ல பாதுகாப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வுடைய மார்க்கமாகிய இஸ்லாம் அல்லாஹ்வுடைய தூதராகிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வாழ்க்கையில் நமக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். 
 
அதில் மிக முக்கியமான ஒன்றுதான் துஆ. அல்லாஹ்விடத்தில் கையேந்துவது. அடியான் தன்னுடைய சிறிய பெரிய எல்லா தேவைகளையும் முறையிட்டு அல்லாஹ்விடத்தில் கெஞ்சி அந்தத் தேவைகளை அவன் நிறைவேற்றிக் கொள்ள முடியும். 
 
அந்தத் தேவைகள் உலகத்தினுடைய தேவைகளாக இருந்தாலும் சரி, மறுமையுடைய தேவைகளாக இருந்தாலும் சரி, நாம் அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டிய தேவைகளிலேயே மிக முக்கியமான தேவை, முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை நம்முடைய மார்க்கத்துடைய மறுமையுடைய தேவை. 
 
இந்த உலக தேவையை பொருத்தவரை அல்லாஹு சுபஹானஹு தஆலா அவனுடைய விதியில் எழுதிவிட்டான். இருந்தும் அதையும் அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. 
 
அல்லாஹு தஆலா நம்முடைய துஆவின் மூலமாக நம்முடைய வாழ்க்கையை எளிதாக்கி விடுவான். சிரமத்தில் இருந்து பாதுகாத்து நமக்கு சுலபமாக்கி விடுவான். 
 
பலருக்கு அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டு பெரிய செல்வந்தனாக ஆகிவிட வேண்டும் என்பதாக எண்ணம் இருக்கிறது. 
 
உங்களுக்கு அல்லாஹு தஆலா செல்வத்தை கொடுக்க வேண்டும் என்று வைத்திருந்தால் கண்டிப்பாக அல்லாஹு தஆலா செல்வத்தை கொடுப்பான். ஆனால், உங்களை அல்லாஹு தஆலா ஏழையாக விதித்திருந்து, நீங்கள் அல்லாஹ்விடத்தில் செல்வத்தினுடைய பரக்கத்திற்காக துஆ கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அந்த செல்வம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், நீங்கள் நினைத்ததை போன்று பெரிய செல்வந்தனாக ஆகவில்லை என்றாலும், ஒரு செல்வந்தனுக்கு என்னென்ன நிஃமத்துகள் உலகத்தில் கிடைக்குமோ, அவருடைய தேவைகள் எப்படி நிறைவேறுமோ அதுபோன்று அல்லாஹு சுபஹானஹு தஆலா உங்களுடைய தேவைகளை எளிதாக்கி விடுவான்.
 
உங்களுடைய தேவைகளை சுலபமாக்கி விடுவான். மனதிற்கு ராஹத்தை கொடுத்து விடுவான். 
 
ஒருவன் பெரிய கோடீஸ்வரனாக இருக்கிறான். கோடிகளுக்கு மேல் கோடி அவனிடத்தில் கொட்டி கிடக்கிறது. ஆனால், தினந்தோறும் மருத்துவமனைக்கு அழைந்து கொண்டிருக்கிறான். லட்சங்கள் கோடியாக மாறுகிற அளவுக்கு அவன் மருத்துவத்திற்கு செலவு செய்கிறான். 
 
நீங்களோ சாதாரண ஒரு செல்வந்தராக இருந்து உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறீர்கள் என்றால் இப்போது நீங்கள் எதை விரும்புவீர்கள்? கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. ஆனால், உண்ண முடியவில்லை. நீங்களோ சாதாரணமான நடுத்தர குடும்பத்தில் ஒருவராக இருந்து நீங்கள் விரும்பிய நல்ல உணவை சாப்பிடுகிறீர்கள். நல்ல உடையை உடுத்துகிறீர்கள். ஆரோக்கியமாக நடக்கிறீர்கள் என்றால் நீங்கள் எதை விரும்புவீர்கள்?
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஒரு ஹதீஸை இந்த இடத்தில் நினைவு கூறுவோம். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»
 
ஹதீஸ்களை தினந்தோறும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய செய்திகள் நம்முடைய உள்ளத்திற்கு போய் சென்றால்தான் உள்ளம் ஒளி பெறும். இந்த உள்ளத்துக்கு புரியவரும்; வாழ்க்கை என்றால் என்ன? என்று. 
 
அல்லாஹ்வுடைய தூதர் சொல்லக்கூடிய அழகிய வாக்கியத்தை கவனியுங்கள். உங்களில் யார் தனது குடும்பத்தில் பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கிறாரோ காலையில் எழுந்த உடனேயே மனைவி ஒரு பிரச்சனையை கொண்டு வருவாள். பிள்ளைகள் ஒரு பிரச்சனையை கொண்டு வருவார்கள் என்று இருந்தால் அவர்கள் பங்களாவில் வசித்தால் என்ன, அவர்களிடத்தில் சொகுசு வாகனங்கள் இருந்தால் என்ன, நிம்மதி எப்படி வரும்? வாழ்க்கையின் சுபீட்சத்தை சுகத்தை சந்தோஷத்தை எப்படி அவர்கள் சுவைப்பார்கள்? 
 
சொன்னார்கள்: அவன் காலையில் எழுந்திருக்கும்போது குடும்பத்தில் நிம்மதியாக எழுந்திருக்கிறார். பிள்ளைகளைப் பார்த்தால் மகிழ்ச்சி. பிள்ளைகள் தந்தைக்கு கொடுக்கக்கூடிய மரியாதை. தந்தைக்கு கொடுக்கக்கூடிய பாசம். கணவனுக்கு மனைவியின் மீது மனைவிக்கு கணவனை மீது இருவருக்கும் இடையில் இருக்கக்கூடிய ஒற்றுமை, அன்பு, பாசம், பிணைப்பு, அந்த மகிழ்ச்சி. 
 
அடுத்து சொன்னார்கள்: அவருடைய உடலில் ஆரோக்கியத்தோடு இருக்கிறாரோ. காலையில் எழுந்திருக்கும் போதே இன்றைக்கு இந்த டாக்டரிடத்தில் நமக்கு அப்பாயின்மென்ட். இந்த செக்கிங் போக வேண்டும். இந்த டெஸ்ட் போக வேண்டும் என்ற நிலையில் இருந்தால் எத்தகைய சிக்கல்கள் சிரமங்களில் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
 
அவருடைய உடலில் அவர் ஆரோக்கியம் பெற்றிருக்கிறார். அடுத்து சொன்னார்கள்: அன்றைய நாளில் அவரும் அவருடைய குடும்பத்தாரும் சாப்பிடுவதற்குண்டான உணவு அவரிடம் இருக்கிறது.
 
குடும்பத்தில் நிம்மதி, உடலில் ஆரோக்கியம், அன்றைய நாள் உடைய உணவு இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்! நாளைப்பொழுதைப் பற்றி நாம் கவலைபட வேண்டியதில்லை. 
 
முந்திய வேதங்களில் ஒரு அறிவிப்பில் அல்லாஹ் சொல்லியதாக சொல்லப்படுகிறது: அடியானே! நாளை உடைய அமலை இன்று நான் உன்னிடத்தில் கேட்கவில்லையே. நாளைய லுஹர் தொழுகையை இன்றைக்கே தொழு என்று அல்லாஹ் சொல்லுகிறானா? நாளைய சுபுஹ் தொழுகையை இன்று தொழு என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானா? 
 
இன்றைய தொழுகையை இன்று தொழ வேண்டும். நாளைய வணக்கத்தை நான் உன்னிடம் கேட்கவில்லை. நாளைய ரிஸ்கை நீ என்னிடத்தில் கேட்கிறாயே! நான் எப்படி உன்னிடத்தில் நாளைய இபாதத்தை கேட்கவில்லையோ, நாளைய ரிஸ்க்கை நீ ஏன் என்னிடத்தில் கேட்கிறாய்?
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அன்றைய நாளுடைய உணவு அவரிடத்தில் இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்! அன்று பசி பட்டினி இல்லாமல், பட்டினியால் பிள்ளைகளோ மனைவியோ அழக்கூடிய சிரமப்படக்கூடிய கண் சொருகக் கூடிய அளவுக்கு நிலைமை இல்லை. 
 
அல்ஹம்து லில்லாஹ்! உணவு இருக்கிறது. சமைத்து பசி போக்கக்கூடிய அளவுக்கு உணவு இருந்தால் இந்த மூன்று நிஃமத்துகள் இருந்தால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: உலக செல்வங்கள் எல்லாம் அவருக்கு ஒன்று சேர கொடுக்கப்பட்டு விட்டன.
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு முஹ்ஸின் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2346.
 
செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு எது வேண்டுமோ அதை அல்லாஹு தஆலா செல்வம் இல்லாமலேயே கொடுத்து விட்டால் பிறகு என்ன தேவை இருக்கிறது! 
 
உடல் ஆரோக்கியம் அல்ஹம்து லில்லாஹ். குடும்பத்தில் நிம்மதி. கணவன் மனைவிக்கு இடையில் பிள்ளைகளுக்கு இடையில் பெற்றோருக்கு இடையில் அன்பு, பரஸ்பர உறவு, அக்கறை, நேசம் தேடுதல் இதைவிட உலகத்தில் ஒரு செல்வம் இருக்க முடியுமா? 
 
பிறகு உடல் ஆரோக்கியம். பிறகு மற்றவர்களிடத்தில் கையேந்தாத அளவுக்கு பிறர் இடத்தில் கடன் கேட்டோ கையேந்தியோ நம்முடைய தேவையை நிறைவேற்றிக் கொள்கிற அளவுக்கு ஏழ்மையில் இல்லாமல் நம்முடைய செல்வத்தைக் கொண்டு நம்முடைய பசியை நம்முடைய அவ்ரத்தை போக்க முடியுமோ எந்த வீட்டில் இருக்க முடியுமோ அதற்குண்டான அளவுக்கு அல்லாஹ் கொடுத்திருந்தால் அல்ஹம்து லில்லாஹ் உலக செல்வமே நமக்கு கொடுக்கப்பட்டதை போன்று.
 
ஆகவே, செல்வத்தை மட்டுமே அல்லாஹ்விடத்தில் அதிகமாக கேட்பது இருக்கிறதே அதுவும் அல்லாஹ்விற்கு பிரியமானது அல்ல. அல்லாஹு தஆலா ஒருவேளை அந்த செல்வத்தை நமக்கு சோதனையாக ஆக்கிவிட்டால், அந்த செல்வத்தை நமக்கு பிரச்சனையாக ஆக்கிவிட்டால் நிலை என்னவாகும்!
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடனிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள். பிறரிடம் தேவையாகுவதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள். வறுமையில் சிக்கி பலவீனப்படுவதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள். இதான் நம்முடைய துஆவாக இருக்க வேண்டும்.
 
துஆக்களில் முக்கியமான ஒன்று, அல்லாஹ்விடத்தில் ஆஃபியத்தை கேட்பது. பலரும் ஆஃபியத் என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த ஆஃபியத்தை கேட்பதற்கு இவ்வளவு முக்கியத்துவமா? இதில் அவ்வளவு ரகசியம் இருக்கின்றனவா? அவ்வளவு தத்துவங்கள் அடங்கி இருக்கின்றனவா? என்பது தெரியாது.
 
 ஆஃபியத் என்றால் என்ன? இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் சொல்லுகிறார்கள்: உலகத்திலும் நமக்கு ஆஃபியத் வேண்டும். மறுமையிலும் ஆஃபியத் வேண்டும். ஆஃபியத் என்றால் என்ன? பாவங்களால் ஏற்படுகிற பிரச்சனைகளிலிருந்து அடியானுக்கு பாதுகாப்பு.
 
ஒரு மனிதன் இந்தப் பாவங்களில் இருந்து அவன் விலகி விட்டால், அவன் பாதுகாப்பு பெற்று விட்டால், நீங்கி விட்டால் பாவங்களினால் அல்லாஹு தஆலா என்ன தண்டனைகளை கொடுக்கிறானோ அந்த சோதனையிலிருந்து அவன் பாதுகாப்பு பெற்று விடுவான். 
 
மூஃமின்களுக்கு அல்லாஹு தஆலா சோதனைகளை கொடுப்பான். காரணம், அவர்களை இந்த உலகத்திலேயே சுத்தப்படுத்தி மறுமையில் வரும்போது குற்றமற்றவர்களாக அவர்களை பரிசுத்தவான்களாக அழைத்து வரவேண்டும் என்பதற்காக. 
 
ஆஃபியத் -உடலில் ஆரோக்கியம், மார்க்கத்தில் பாதுகாப்பு, மனதில் நிம்மதி, வாழ்க்கையில் ஒரு தெளிவு, அல்லாஹ்வுடைய நெருக்கம், நம்முடைய நற்சுகம், நல்ல பாதுகாப்பு, நல்ல சிந்தனை. 
 
இவை அனைத்தையும் உள்ளடக்கிய துன்யாவுக்கும் ஆகிறத்துக்கும் தேவையான ஒன்றுதான் ஆஃபியத் என்பது. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சிறிய தந்தை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களோடு நடந்த சில நிகழ்வுகளை பாருங்கள்.
 
அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் பலமுறை வந்திருக்கிறார்கள். சந்தித்திருக்கிறார்கள். குறிப்பாக சில விஷயங்களை கேட்பதற்காகவே முக்கியத்துவம் கொடுத்து அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களுடைய வருகை இருந்திருக்கிறது. 
 
அதில் ஒருமுறை ரசூலுல்லாஹ் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து பேசிக் கொண்டிருந்தபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய அந்த சிறிய தந்தை அப்பாஸுக்கு சொன்னார்கள்:
 
«أَكْثِرِ الدُّعَاءَ بِالْعَافِيَةِ»
 
நீங்கள் அல்லாஹ்விடத்தில் ஆஃபியத்துக்கான துஆவை அதிகமாக கேளுங்கள்.
 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண்: 1939.
 
ஒருமுறை அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ்விடத்தில் வருகிறார்கள். வந்து கேட்கிறார்கள்:
 
عَنْ العَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ عَزَّ وَجَلَّ، قَالَ: «سَلِ اللَّهَ العَافِيَةَ»، فَمَكَثْتُ أَيَّامًا ثُمَّ جِئْتُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ، فَقَالَ لِي: «يَا عَبَّاسُ يَا عَمَّ رَسُولِ اللَّهِ، سَلِ اللَّهَ، العَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ».
 
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒன்றை நீங்கள் கற்றுக் கொடுங்கள். நான் கண்ணியத்திற்கும் கம்பீரத்திற்கும் உரிய அல்லாஹ்விடத்தில் அதை கேட்க வேண்டும். அத்தகைய ஒரு விஷயத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடனே சொன்னார்கள்: அல்லாஹ்விடத்தில் ஆஃபியத்தை கேளும் என்று.
 
கேட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். பிறகு, பல நாட்கள் கழித்து மீண்டும் வருகிறார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திப்பதற்காக.
 
எனக்கு நீங்கள் ஒன்றை கற்றுக் கொடுங்கள்; அல்லாஹ்விடத்தில் நான் கேட்கிறேன். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அப்பாஸ் அவர்களே! ரசூலுல்லாஹ் உடைய சாச்சாவே!
 
இந்த உலக வாழ்க்கையிலும் ஆகிறத்துடைய வாழ்க்கையிலும் அல்லாஹ்விடத்தில் ஆஃபியத்தை -நற்சுகத்தை வேண்டுவீராக! 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3514.
 
துன்யாவில் பாவங்களிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவதையும், சோதனைகளிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவதையும், மறுமையில் அல்லாஹ்வுடைய கோபத்தில் இருந்தும், தண்டனையிலிருந்தும் நீங்கள் பாதுகாக்கப்படுவதற்காக ஆஃபியத்தை நீங்கள் கேளுங்கள்.
 
இந்த இடத்தில் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்! அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு எத்தனை முறை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் குறிப்பிட்டு விசேஷமான துஆவை கேட்டும் அவர்களுக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்த துஆ, அல்லாஹ்விடத்தில் ஆஃபியத்தை நீங்கள் கேளுங்கள். துன்னியாவிலும் கேளுங்கள். ஆஃகிரத்திலும் கேளுங்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு வழமை இருந்தது. யாராவது இஸ்லாமை ஏற்றுக் கொண்டால், யாராவது இஸ்லாமை ஏற்று ஷஹாதாவை கூறினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தோழருக்கு விசேஷமாக ஒன்றை கற்றுக் கொடுப்பார்கள். 
 
இன்று நாமும் இருக்கிறோம். ஒருவர் முஸ்லிம் ஆனாலும் அதை பற்றி கவலை இல்லை. தாஃவா கொடுக்கவில்லை என்றால் அதைப் பற்றியும் கவலை இல்லை. ஒருவர் இஸ்லாமை ஏற்றால் என்ன மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்? அவருக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அவருக்கு என்ன கவனம் செலுத்த வேண்டும்? என எதுவுமே தெரியாத மண்ணாங்கட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
 
அதன் பக்கமே கவனம் இல்லாமல் அந்த உணர்வே இல்லாமல் நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
ஒரு மனிதர் ஷாஹாதா சொல்லி விட்டால், இஸ்லாமை ஏற்றுக் கொண்டாலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை அமர வைத்து அவருக்கு இந்த துஆவை மனப்பாடம் செய்து கொடுப்பார்கள்.
 
இந்த துவாவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அவருக்கு கற்றுக் கொடுப்பார்கள்.  
 
அவருக்கு இந்த துஆக்களை கொண்டு அல்லாஹ்விடத்தில் துஆ கேளுங்கள் என்று கட்டளையிடுவார்கள். 
 
துஆவுக்கான முக்கியத்துவத்தை, அல்லாஹ்வோடு அவருக்கு தொடர்பு ஏற்படுத்துவதை, சிலைகள் இடத்திலும், கற்கள் இடத்திலும், படைக்கப்பட்ட வாயற்ற பேச்சற்ற அந்த இயலாமையில் இருக்கக்கூடிய விக்கிரகங்களிடத்தில் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதனுக்கு அகிலங்களின் இறைவன் சர்வ வல்லமையும் உடைய அல்லாஹ்விடத்தில் எப்படி கேட்க வேண்டும்? எதைக் கேட்க வேண்டும்? எப்படி இறைஞ்ச வேண்டும்? என்பதை சொல்லிக் கொடுத்து இப்படி நீ துவா கேள் என்று வழிகாட்டுவார்கள்.
 
நீங்கள் இஸ்லாமிற்கு வரக்கூடியவர்களுக்கு துஆவை கற்றுக் கொடுத்துப் பாருங்கள்! அவர்களுடைய உள்ளம் எவ்வளவு உறுதி பெறும்! என்பதாக. அவர்களுடைய உள்ளம் எவ்வளவு விசாலமடையும், வெளிச்சமடையும்; மனதில் எவ்வளவு பெரிய ஒரு பாதுகாப்பை உணர்வார்கள்; மகிழ்ச்சியை உணர்வார்கள் என்று. 
 
அல்லாஹ்வோடு அவர்களுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடுவது. இன்று, மனிதர்களை இயக்கங்களோடு தொடர்பு படுத்த முயற்சிக்கிறார்கள். ரப்போடு தொடர்பு படுத்த முயற்சிக்கவில்லை. தங்களோடு நெருக்கமாக்கி வைக்க முயற்சிக்கிறார்கள். 
 
தங்களுடைய பணிகளை செய்வதற்காக அவர்களை ஆக்கிக் கொள்கிறார்களே தவிர, அல்லாஹ்வுடைய அப்தாக அவர்களை மாற்றுவதற்கு அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தி தருவதற்கு முயற்சிகள் மிகக் குறைவாக இருக்கின்றன. அதன் பக்கம் கவனங்கள் அங்கே முழுமையாக கொடுக்கப்படுவதில்லை. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தகைய மாபெரும் இறைத்தூதர். ஒருமுறை கூட இஸ்லாமை ஏற்றவரை தனக்காக அவர்கள் ஆக்கிக் கொள்ளவில்லை. அல்லாஹ்வுக்காக ஆக்கினார்கள். 
 
இந்த துஆவை பாருங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் இஸ்லாமை ஏற்றால் அவருக்கு முதலாவதாக தொழுகையை கற்றுத் தருவார்கள். பிறகு அந்த தொழுகையில் இந்த துஆக்களை ஓதும் படி கட்டளை இடுவார்கள். 
 
«اللهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي»
 
இதில் எல்லாமே வந்து விடும்.
 
اللهُمَّ اغْفِرْ لِي -அல்லாஹ்வே, என்னை மன்னிப்பாயாக! என்னுடைய முன் சென்ற பாவங்களை மன்னிப்பாயாக! இனி என்னை பாவங்களில் இருந்து பாதுகாப்பாக வைப்பாயாக!
 
وَارْحَمْنِي -என் மீது கருணை காட்டுவாயாக! ரஹ்மத் செய்வாயாக! அருள்புரிவாயாக! 
 
எல்லா இறைத்தூதர்களும் அல்லாஹ்விடத்தில் மன்றாடி வேண்டிய அல்லாஹ்வுடைய அருள்களில் ஒன்று அல்லாஹ்வுடைய ரஹ்மத்.
 
அடுத்து சொன்னார்கள்:  وَاهْدِنِي -எனக்கு நீ இப்போது இஸ்லாமை வழிகாட்டி விட்டாய். இனியும் என்னுடைய இறுதி மூச்சு வரை இந்த இஸ்லாமை நான் எப்படி பின்பற்ற வேண்டும், எப்படி நான் இதில் நிலைத்திருக்க வேண்டும் என்று எனக்கு ஹிதாயத்தை காட்டிக் கொண்டே இரு! 
 
ஒருமுறை ஹிதாயத் கிடைத்து விட்டால் போதாது. இறுதி மூச்சு வரை லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்வில் நம்முடைய கண்கள் மூடுகிறவரை, நம்முடைய உடலிலிருந்து உயிர் மூச்சு பிரிகிறவரை ஹிதாயத்தில் நாம் இருக்க வேண்டும். 
 
ஒரு நொடிக்கு ஹிதாயத்திலிருந்து ஒரு அடியான் பிசகினாலும் சரி, தடம் புரண்டாலும் சரி, அல்லாஹ் பாதுகாப்பானாக! அவன் எந்த அளவு வழிக்கேட்டின் பாதாளத்தில் விழுகிறான் என்று சொல்ல முடியாது.
 
எனவே, யா அல்லாஹ் எனக்கு ஹிதாயத்தை காட்டிக் கொண்டே இரு! ஹிதாயத்தில் என்னை உறுதிப்படுத்திக் கொண்டே இரு! என்று கேட்க வேண்டும்.
 
وَعَافِنِي - எனக்கு ஆஃபியத்தை கொடு! وَارْزُقْنِي -என்னுடைய வாழ்வாதாரத்தை எனக்கு லேசாக்கி கொடு! 
 
அறிவிப்பாளர் : தாரிக் இப்னு உஷைம் அல்அஷ்ஜயீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2697.
 
எத்தகைய அழகிய துஆக்களை புதிதாக இஸ்லாமை ஏற்ற ஒருவருக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையோடு சேர்த்து கற்றுத் தருகிறார்கள் என்று பாருங்கள். 
 
இன்னும் ஒரு ஹதீஸில் வருகிறது. இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். 
 
ஒரு மனிதர் ரசூலுல்லாஹ்விடத்தில் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்க வேண்டும். எப்படி துஆ கேட்க வேண்டும்? என்று கேட்கிறார்.
 
சஹாபாக்களை பாருங்கள். அவர்களுடைய வாழ்க்கையை பாருங்கள். நபியோடு அவர்களுக்கு இருந்த தொடர்பை பாருங்கள். அவர்கள் ரசூலுல்லாஹ்விடத்தில் கேட்டு வந்ததெல்லாம் தீனை பற்றிதான். ஆஃகிறத்தை பற்றிதான். அல்லாஹுவோடு உள்ள நெருக்கத்தை பற்றிதான். அமலை பற்றிதான். 
 
வேறு கவலையே அவர்களுக்கு இருக்காது போலும். உலகப் பிரச்சனைகளைப் பற்றி அவர்களுக்கு எந்த சிந்தனையுமே இருக்காது போலும். எப்போது பார்த்தாலும் சரி, மறுமையைப்பற்றித்தான் அவர்கள் கேட்பார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்கு, ஆஃபியத்தை கேளுங்கள் என்று சொன்னார்கள். 
 
யா ரசூலுல்லாஹ்! நான் அதை எப்படி கேட்க வேண்டும்? என்று எனக்கு சொல்லித் தாருங்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
اللهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي
 
அல்லாஹ்வே, என்னை மன்னிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! எனக்கு நற்சுகத்தை தருவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை லேசாக்கி கொடுப்பாயாக!
 
அறிவிப்பாளர் : தாரிக் இப்னு உஷைம் அல்அஷ்ஜயீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2697.
 
வாழ்க்கையில் வாழ்வாதாரத்துக்கு எல்லாரும் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும். எல்லாரும் சிரமப்பட்டுதான் ஆக வேண்டும். அதை அல்லாஹ்விடத்தில் எளிதாக்கிதர, ஹலால் ஆக்கிதர, அதில் அல்லாஹு தஆலா பரக்கத் செய்ய வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நாம் துஆ செய்ய வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய திருப்தியோடு ஒரு செல்வம் கிடைக்க வேண்டும். அல்லாஹ்வுடைய அதிருப்தியோடு ஒரு செல்வம் கிடைத்தால் அதில் பரக்கத் இருக்காது. 
 
ஒருவன் லஞ்சம் வாங்குகிறான். வட்டி வாங்குகிறான். பொய் கணக்கு எழுதுகிறான். ஏமாற்றுகிறான். தப்பான வழியில் சம்பாதிக்கிறான். இவர்களெல்லாம் சம்பாதிக்கலாம். செல்வம் இவர்களுக்கு எக்கச்சக்கமாக கிடைக்கலாம். 
 
ஆனால், அது அல்லாஹ் உடைய திருப்தியோடு வந்த செல்வமா? அல்லாஹ்வுடைய திருப்தி அதில் இல்லை. அல்லாஹ்வுடைய சாபத்தோடு அல்லாஹ்வுடைய கோபத்தோடு வந்த செல்வம். 
 
எனவே எவ்வளவுதான் இவர்களுக்கு கிடைத்தாலும் சரி, இவர்கள் திருப்தி பெற மாட்டார்கள். அவர்களுக்கு இதில் எந்த விதமான பரக்கத்தும் அருளும் இருக்காது.
 
பிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதையெல்லாம் அவருக்கு கற்றுக் கொடுத்துவிட்டு தனது நான்கு விரல்களை காட்டி சொன்னார்கள்:
 
«وَيَجْمَعُ أَصَابِعَهُ إِلَّا الْإِبْهَامَ» فَإِنَّ هَؤُلَاءِ تَجْمَعُ لَكَ دُنْيَاكَ وَآخِرَتَكَ
 
சகோதரனே! நான் இப்போது உனக்கு சொல்லி கொடுத்த இந்த துவா இருக்கிறதே 
 
இந்த நான்கு வார்த்தைகள் இருக்கின்றனவே உனக்கு துன்யாவையும் ஒன்று சேர்த்து விட்டது. ஆகிறத்தையும் ஒன்று சேர்த்து விட்டது. 
 
அறிவிப்பாளர் : தாரிக் இப்னு உஷைம் அல்அஷ்ஜயீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2697.
 
அல்லாஹ்வுடைய மன்னிப்பும் ரஹ்மத்தும் கிடைத்துவிட்டால் சொர்க்கம் எளிதாகிவிடும். ஆஃபியத்தும் ரிஸுக்கும் இந்த உலகத்தில் நமக்கு கிடைத்து விட்டால் இந்த உலக வாழ்க்கை எளிதாகிவிடும்.
 
இன்னும் இந்த ஆஃபியத்தை பற்றி நிறைய விஷயங்கள் நாம் தெரிய வேண்டியிருக்கிறது. அல்லாஹு தஆலா நாடினால் அடுத்தடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம். 
 
அல்லாவிடத்தில் நாம் துஆவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக்கொடுத்த துஆக்களை, அந்த துஆக்களுடைய தத்துவங்களோடு ஞானங்களோடு அறிந்து மனப்பூர்வமாக, உள்ளத்தில் ஆழத்திலிருந்து உருக்கமாக கேட்கும்போது, கண்டிப்பாக அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நாம் கேட்க கூடிய அந்த நல்ல துஆக்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவன். அங்கீகரிக்க கூடியவன்.
 
அதன் மூலமாக அல்லாஹு தஆலா அவனுடைய அருளை, கருணையை, அன்பை நம் மீது இந்த உலகத்திலும் நிறைவு செய்வான். ஆஃகிரத்திலும் நிறைவு செய்வான். அல்லாஹு தஆலா நம்முடைய துஆக்களை செவியிடுவதற்கு போதுமானவன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/