HOME      Khutba      ஆஃபியத்தை அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய இடங்கள் | Tamil Bayan - 744   
 

ஆஃபியத்தை அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய இடங்கள் | Tamil Bayan - 744

           

ஆஃபியத்தை அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய இடங்கள் | Tamil Bayan - 744


ஆஃபியத்தை அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய இடங்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஆஃபியத்தை அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய இடங்கள்
 
வரிசை : 744
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 18-11-2022 | 24-04-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாகவும் அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாகவும்!
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மறுமையின் மகத்தான வெற்றியை வேண்டியவனாகவும், இந்த துன்யாவுடைய வாழ்க்கையை அல்லாஹ்வுடைய பாதுகாப்போடும் அருளோடும் கருணையோடும் தவ்ஃபிக்கோடும் வாழ்வதற்குரிய நற்பாக்கியத்தை வேண்டியவனாகவும் இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா ஒரு மனிதனுக்கு அவன் புரியக்கூடிய கருணை அருள்களில் மகத்தான கருணை உடல் ஆரோக்கியமும் நற்சுகமும் ஆகும். அதுபோன்று சிறிய பெரிய நோய் நொடிகளிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதும். 
 
பெரும்பாலானவர்களுக்கு செல்வத்தை மட்டுமே ஒரு பாக்கியமாக கருதக்கூடிய ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அவர்கள் பொருளாதாரத்தை மட்டுமே பெரிய ஒரு பாக்கியமாக கருதுவார்கள். 
 
உடல் ஆரோக்கியத்திற்கு நன்றி செலுத்துவதையோ, அல்லாஹு தஆலா நம்மை உடல் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கிறானே என்று அல்லாஹ்வுடைய அந்த நிஃமத்தை நினைத்துப் பார்ப்பதோ பெரும்பாலும் அவர்கள் செய்வதில்லை. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது குறித்து ஒரு ஹதீஸில் நமக்கு சொல்கிறார்கள்:
 
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ
 
அல்லாஹ்வுடைய இரண்டு அருட்கொடைகள் இருக்கின்றன. அதிகமான மக்கள் அந்த இரண்டு அருட்கொடைகளை பயன்படுத்தாமல் கோட்டை விட்டு விடுகிறார்கள். அதிகமான மக்கள் அந்த அருட்கொடைககளில் அலட்சியம் செய்து விடுகிறார்கள். அவை, ஓய்வும் உடல் ஆரோக்கியமும் ஆகும். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6412.
 
நம்மை முடக்கி போடக்கூடிய, நம்மை இயலாமையில் தள்ளக்கூடிய, நம்முடைய உலக வேலைகளிலிருந்தும், மறுமையின் அமல்களிலிருந்தும் நம்மை பலவீனப்படுத்தக்கூடிய நோய் நொடிகளிலிருந்தும் சுகம் பெற்றிருப்பது.
 
அல்லாஹு தஆலா உங்களுக்கு உலக காரியங்களை சுருக்கமாக கொடுத்திருக்கிறான். நமக்கு ஓய்வை ஒரு நிஃமத்தாக கொடுத்திருக்கிறான். எத்தனையோ பேர் மணிக்கணக்காக வேலை செய்வார்கள் குறைந்த லாபத்தை பெறுவார்கள். கடினமான உழைப்பு செய்வார்கள். அந்த உழைப்புக்குப் பிறகு அவர்களுக்கு நீண்ட ஒரு ஓய்வு தேவைப்படுகிற அளவிற்கு அவர்களுடைய உழைப்பு இருக்கலாம். 
 
எத்தனையோ பேருக்கு அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா குறைவான நேரத்தில் அவர்களுடைய ரிஸ்க்கில் பரகத் செய்து விடுகிறான். அவர்களுக்கு உடலுக்கு தேவையான அளவு ஓய்வெடுத்ததற்கு பிறகும் நீண்ட நேரம் அவர்களுக்கு ஓய்வாக இருக்கிறது. 
 
அந்த நேரத்தை வீணாக சுற்றுவதிலும் ஹராமானதை பார்ப்பதிலும் அல்லது ஹலாலான -ஆகுமான ஒன்றாக இருந்தாலும் அதை நீண்ட நேரம் பார்த்து வீணாக பொழுதை கழிப்பதிலும் அவர்கள் ஈடுபடுவதை பார்க்கிறோம்.
 
அல்லாஹு தஆலா நமக்கு இந்த உலக வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் மறுமைக்காக கொடுத்திருக்கிறான். இந்த உலக வாழ்க்கையினுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் அல்லாஹு தஆலா நமக்கு மறுமைக்காக நம்முடைய சொர்க்கத்தை கட்டி எழுப்புவதற்காக கொடுத்திருக்கிறான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ
 
ஓர் ஆன்மா, அது (தனது) மறுமைக்காக எதை முற்படுத்தி இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 59 : 18)
 
وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا وَاسْتَغْفِرُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
 
உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 73 : 20)
 
அல்லாஹ்வுடைய இந்த ஆஃபியத் குறித்து சென்ற ஜும்ஆவில் பார்த்தோம். நோயிலிருந்து ஆஃபியத்; பாவத்திலிருந்து ஆஃபியத். இன்னும் மனதை சஞ்சலப் படுத்தக் கூடிய காரியங்கள், மனதை காயப்படுத்தக்கூடிய காரியங்கள், இப்படியாக நோய்களாக இருக்கட்டும், பாவங்களாக இருக்கட்டும், இன்னும் நம்முடைய மனதுக்கு வருத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளாக இருக்கட்டும். அதிலிருந்து அல்லாஹு தஆலா நமக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அல்லாஹ் ஆஃபியத்தை கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நாம் அழுது மன்றாடி பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். 
 
இது ஒரு சாதாரணமான துஆ அல்ல. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல துஆக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த துஆக்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதில் மிக முக்கியமான ஒன்றாக இந்த ஆஃபியத்தை ஹதீஸ் உடைய அறிஞர்கள் நமக்கு அடையாளப்படுத்துகிறார்கள். 
 
எந்தெந்த இடங்களிலெல்லாம் ஆஃபியத்துடைய துஆவை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு தொழுகைக்காக எழும்போது இரவுத் தொழுகையில் நிற்கும்போது என்ன துஆவை கூறி ஆரம்பிப்பார்கள்?
 
(ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைத் தவிர வேறு யார் இந்த செய்தியை அறிவிப்பதற்கு தகுதியானவர் என்று யோசித்துப் பாருங்கள்.)
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொல்லுகிறார்கள்: அல்லாஹ் அக்பர் என்று கட்டியதற்குப் பிறகு அல்லாஹு அக்பர் என்று பத்து முறை தக்பீர் சொல்வார்கள்.
 
பிறகு, சுப்ஹானல்லாஹ் என்று பத்து முறை தஸ்பீஹ் சொல்வார்கள். பிறகு, பத்து முறை استغفر الله العظيم  என்று பத்து முறை இஸ்திக்ஃபார் செய்வார்கள். அதற்குப் பிறகு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஆரம்பிப்பதற்கு முன்பாக சொல்லுவார்கள்:
 
«اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَعَافِنِي»
 
அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக; எனக்கு வழிகாட்டுவாயாக; எனக்கு ரிஸ்கை தருவாயாக; எனக்கு ஆஃபியத்தை கொடுப்பாயாக! (1)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா, எண் : 1356.
 
அந்த அளவு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உலக வாழ்க்கையில் ஆஃபியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அந்த துஆவை இரவு தொழுகையின் தொடக்கத்தில் கேட்டிருக்கிறார்கள்.
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இப்னு அப்பாஸ் ஒட்டி இருந்தவர்கள். நபி மரணிக்கும் போது அவர்களுக்கு 13 வயது தான் இருக்கும். 
 
ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதீனாவில் வந்து சந்தித்த அந்த நாளிலிருந்து, கல்வியின் மீதுண்டான தேடல், இத்தனை ஆண்டுகள் ரசூலுல்லாஹ்வை மக்காவில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற அந்தத் தேடலில் அப்படியே ஒட்டிக் கொண்டார்கள். 
 
ரசூலுல்லாஹ்வை விட்டு பிரியவே இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்கும் போது ஏறக்குறைய 9 வயது இருக்கும். 
 
அந்த வயதிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள். போருக்கு செல்கிறார்கள். எந்தப் பயணத்திலும் அவர்களை விடவில்லை. ஏன், குடும்ப வாழ்க்கையில் வீட்டுக்குள் செல்லும்போது கூட, ரசூலுல்லாஹ் உடைய அனுமதியோடு அவர்களுக்கு பக்கத்தில் சென்று படுத்துக் கொள்கிறார்கள்.
 
ரசூலுல்லாஹ் உடைய இரவு வணக்கங்களை தெரிந்து கொள்வதற்காக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களுடைய தாயின் சகோதரி சிறிய தாய், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியராக இருந்தார்கள். 
 
ஆகவே, அந்த வீட்டுக்குள் செல்வது; அங்கே தங்குவது; அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக் கொண்டார்கள். 
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா சொல்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு சஜ்தாவிற்கு இடையில் அமர்வா்களேயானால் துஆ ஓதுவார்கள்.
 
இன்று, நம்மில் பலருக்கு இரண்டு சஜ்தாக்கிடையில் கொஞ்ச நேரம் இருப்பது என்றால் என்னமோ தெரியவில்லை, நெருப்பில் அமருவது போன்று அவ்வளவு அவசரம் எல்லோருக்கும். 
 
இதுவல்ல தொழுகை என்பது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் சொல்வார்கள்:
 
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاجْبُرْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي
 
அல்லாஹ் என்னை மன்னித்துவிடு! எனக்கு கருணை காட்டு! எனக்கு ஆஃபியத்தை -நற்சுகத்தை கொடு! எனக்கு நேர்வழியை காட்டு! ரிஸ்க்கை கொடு!
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 284.
 
இந்த واهدني என்பது மூன்று அர்த்தங்களை உடையது. ஒன்று நேர்வழி. எந்த குழப்பத்திலும் சரி, அதில் தெளிவான அல்லாஹ்விற்கு பிடித்தமான பாதை எது என்று காட்டுவது. இரண்டாவது, அந்தப் பாதையில் உறுதியாக இருக்க அல்லாஹ்விடத்தில் வேண்டுவது. மூன்றாவது, அந்த நேரான பாதையில் இருக்கும் நிலையிலேயே மரணம் வரவேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டுவது.
 
பொதுவாக துஆக்களை கேட்கும்போது மனப்பாடம் செய்து, அதனுடைய பொருளை விளங்கி, அதனுடைய கருத்துக்களை உணர்ந்து, இந்த அரபு மொழியிலேயே கேட்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவதுனுடைய கருத்து என்னவென்றால், நீங்கள் தமிழில் நீளமாக கேட்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லது அல்லாஹ் கற்றுக் கொடுத்த குர்ஆனுடைய ஒரு வார்த்தையில் நீங்கள் அத்தனை நன்மைகளையும் அடக்கி விடலாம்.
 
நம்மில் எத்தனை பேர் இந்த வாழ்வாதாரத்துக்காக கவலைப்படுகிறோம்; சிரமப்படுகிறோம்; கஷ்டப்படுகிறோம்.
 
நம்முடைய முயற்சியின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது. நம்முடைய முயற்சியை தொடர்ந்து செய்கிறோம். ஆனால், அதே நேரத்தில் அந்த முயற்சியினுடைய அளவுக்கு துஆவையும் அதிகப்படுத்துகிறோமா? 
 
முயற்சி கண்டிப்பாக தேவை. நம்முடைய மார்க்கம் அஸ்பாப் -காரணங்களை புறக்கணிக்க கூடிய மார்க்கம் அல்ல. அதே நேரத்தில் எந்த அளவு அஸ்பாபுகளை செய்கிறோமோ அதே அளவுக்கு அழுது, அதைவிட அதிகமாக அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். 
 
கண்டிப்பாக அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம்முடைய இந்த துஆவின் மூலமாக நம்முடைய ரிஸ்க்கை இலகுவாக்குவான். வாழ்வாதாரத்தை இலகுவாக்குவான். தேவைகளை அவனுடைய அருளை கொண்டு நிறைவேற்றிக் கொடுப்பான்.
 
நீங்கள் கோடியை கையில் வைத்திருப்பது பெரிதல்ல. வைத்திருந்து என்ன பிரயோஜனம்? அதன் மூலமாக உங்கள் தேவை நிறைவேறவில்லை என்றால்? உங்களுடைய மனம் திருப்தி அடையவில்லை என்றால்? 
 
ஒரு மனிதனிடத்தில் சில சில்லறை ரூபாய்கள் தான் இருக்கின்றன. அவனோ மனம் நிறைவானவனாக இருக்கிறான். அவனுடைய தேவைகள் அழகிய முறையில் நிறைவேறுகிறது என்று சொன்னால், இதைவிட வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில்?
 
அதுபோன்று, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆஃபியத்துக்காக கேட்ட முக்கியமான இடங்களில் துஆக்களில் ஒன்று, இரவினுடைய தொழுகை. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வித்ரு தொழுகையை எப்போதும் விடமாட்டார்கள். ஒரு ரக்அத் ஆவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுது விடுவார்கள். 
 
வித்ரு தொழுகை என்ற அந்த விசேஷமான தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ ஓதுவார்கள். அந்த துஆவில் அவர்கள் கேட்ட முக்கியமான ஒரு பகுதி ஆஃபியத்துடைய பகுதி.
 
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
 
அல்லாஹ்வே, நீ நேர்வழி யாருக்கெல்லாம் காட்டினாயோ அவர்களோடு சேர்ந்து எனக்கும் நேர்வழி காட்டு! நீ யாருக்கு ஆஃபியத்தை கொடுத்தாயோ அவர்களோடு சேர்த்து எனக்கு ஆஃபியத்தை கொடு! நீ யாரை பாதுகாத்தாயோ அந்த பாதுகாப்பு பெற்றவர்களோடு எனக்கும் பாதுகாப்பு கொடு! அவர்களோடு என்னை சேர்த்து வைத்து விடு! யா அல்லாஹ் நீ எனக்கு எதை கொடுத்தாயோ அதில் பரக்கத் செய்! அதில் வளர்ச்சியை கொடு! 
 
அறிவிப்பாளர் : ஹசன் இப்னு அலி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1425.
 
அல்லாஹ்விடத்தில் அதிகம் வேண்டும் என்று கேட்பதில் தான் நம்முடைய கவனம் இருக்கிறதே தவிர, யா அல்லாஹ்! நீ கொடுத்ததில் எனக்கு பரக்கத்தை கொடு! என்று கேட்பவர்கள் குறைவு. 
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நீதமானவன். அனைத்தையும் அறிந்தவன். யாருக்கு எது பொருத்தமோ, யாருக்கு எது அவசியமோ, அல்லாஹு தஆலா அதை கண்டிப்பாக கொடுப்பான். 
 
யா அல்லாஹ், நீ எனக்கு கொடுத்ததில் எனக்கு பரக்கத் செய்! எனக்கு வளர்ச்சியை கொடு! அதில் அருளை கொடு! உன்னுடைய அன்பை கொடு! உன்னுடைய ஆசீர்வாதங்களை கொடு! இதுவே துஆக்களில் சிறந்தது.
 
அல்லாஹ்விடத்தில் நன்மையை கேட்க வேண்டும். பரக்கத்தை கேட்க வேண்டும். வெறும் அதிகமாக கொடு என்று மட்டும் கேட்பது இருக்கிறதே அந்த அதிகம் ஃபித்னாவாக ஆகிவிட்டால், குழப்பமாக ஆகிவிட்டால், மார்க்கத்திலிருந்து நம்மை திசை திருப்பக் கூடியதாக ஆகிவிட்டால் பிறகு அதைவிட பெரிய முசீபத்து எதுவாக இருக்க முடியும்! 
 
அதுபோன்று, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஃபியத்துக்காக முக்கியத்துவம் கொடுத்த துஆக்களில் ஒன்று, காலை மாலையுடைய துஆக்கள். 
 
ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை நாம் நினைவு கூர வேண்டும். குறிப்பிட்ட அந்த اذكار களைக் கொண்டு, குறிப்பிட்ட துஆக்களை காலையில் மாலையிலும் அதாவது, சுபுஹ் தொழுகைக்குப் பிறகு மதியத்திற்குள் அதுபோன்று, அஸருக்கு பிறகிலிருந்து இஷாவிற்குள் இந்த திக்ருகளை கண்டிப்பாக நாம் செய்தாக வேண்டும்.
 
இதற்கு காலை மாலை திக்ருகள் என்று சொல்லப்படும். அதில் துஆக்களும் அடங்கும். அந்த துஆக்களில் ஒன்று, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாக கேட்பார்கள்.
 
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கின்றார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலையில் சரி மாலையிலும் சரி இந்த துஆவை விட்டதே இல்லை.
 
உங்களுக்கு தெரியும்; இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்று. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பிரியாத, அவர்களிடத்தில் அதிகமாக கல்வி கற்றுக் கொண்ட, அதிகமாக ஹதீஸ்களை அறிவிக்கிற, சுன்னத்துகளை அறிவிக்கிற நபித்தோழர்களில் முக்கியமான ஒருவர், அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் சொல்லுகிறார்கள்:
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலை மாலை நேரங்களில் இந்த துஆக்களை விடவே மாட்டார்கள்.
 
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
 
யா அல்லாஹ், நான் உன்னிடத்தில் வேண்டுவது ஆஃபியத்தை, இந்தத் துன்யா வாழ்க்கையிலும் எனக்கு வேண்டும், ஆகிறத்துடைய வாழ்க்கையிலும் எனக்கு வேண்டும்.
 
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي
 
யா அல்லாஹ்! இந்த துன்யாவில் நான் உன்னிடத்தில் மன்னிப்பை வேண்டுகிறேன். ஆஃபியத்தை கேட்கிறேன். பிறகு, எதில் எல்லாம் எனக்கு ஆஃபியத் வேண்டும் என்பதை பட்டியல் போடுகிறார்கள்.
 
فِي دِينِي- என்னுடைய மார்க்கத்தில் எனக்கு ஆஃபியத் வேண்டும். 
 
மார்க்கத்தை சரியாக பின்பற்ற வேண்டும்; மார்க்கத்தை பின்பற்றுவதற்குண்டான இடையூறுகள், மார்க்கத்தை பின்பற்றும்போது எனக்கு தொந்தரவுகள் வரக்கூடாது. 
 
இன்று எத்தனை சகோதரர்கள் வேலை செய்யக்கூடிய இடங்களில் எனக்கு அப்படி நெருக்கடி, தொழுவதற்கு அனுமதி இல்லை, தாடி வைப்பதற்கு அனுமதி இல்லை, அதற்கு அனுமதி இல்லை. இப்படி எல்லாம் புலம்புகிறார்களே. அவர்கள் இந்த துஆக்களில் இருந்து எங்கே சென்று விட்டார்கள்?!
 
யா அல்லாஹ்! என்னுடைய தீனில் எனக்கு ஆஃபியத்தை கொடு! இந்த தீனை நான் முழுமையாக, நிறைவாக, நீ திருப்தி கொள்ளக்கூடிய வகையில் நான் பின்பற்ற வேண்டும். அதற்குண்டான பாதுகாப்பை எனக்கு கொடு! அமல்களை செய்வதற்குண்டான சுகத்தை கொடு! 
 
தொழ வேண்டுமென்றால் அந்தத் தொழுகைக்கு சுகம் தேவை. அந்த தொழுகைக்கு ஆரோக்கியம் தேவை. நோன்பு வைக்க வேண்டும் என்றால், ஹஜ் செய்ய வேண்டும் என்றால், இப்படி எந்த இபாதத்தாக இருக்கட்டும், அதற்கு ஆபியத் தேவை. அந்த ஆஃபியத் முதலில் தீனில் நமக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க வழிகாட்டினார்கள். 
 
அடுத்து, وَدُنْيَاىَ -என்னுடைய உலக வாழ்க்கையில் ஹலாலான சம்பாத்தியத்தை நான் சம்பாதிக்க வேண்டும். பிறருக்கு சுமையாக இருந்து விடக்கூடாது. பிறரிடத்தில் கையேந்தக் கூடியவராக இருந்துவிடக் கூடாது. 
 
அடுத்து கேட்டார்கள்;  وَأَهْلِي- என்னுடைய குடும்பத்தில் எனக்கு ஆஃபியத்தை கொடு!
 
மனைவி, நல்ல குடும்பம் எல்லாம் இருக்கிறது. எல்லா வகையான தேவைகளும் அங்கே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கணவனுக்கு மனைவி பிரச்சனை, மனைவிக்கு கணவன் பிரச்சனை என்றால், பிறகு அந்த குடும்பத்தை நாம் என்ன சொல்வது? 
 
ஹலாலான வருமானம் இருக்கிறது. வசதியான வீடு இருக்கிறது. வாகனம் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது. ஆனால், மனைவிக்கு இடத்தில் என்ன பிரச்சனை என்று கேட்டால், என் கணவன்தான் எனக்கு பிரச்சனை. கணவனிடத்தில் உனக்கு என்ன பிரச்சனை? என்று கேட்டால், என் மனைவிதான் எனக்கு பிரச்சனை. 
 
இதற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டினார்கள்; என்னுடைய குடும்பத்தில் எனக்கு ஆஃபியத்தை கொடு! என்னுடைய மனைவி எனக்கு கண் குளிர்ச்சியாக, என்னுடைய மனைவிக்கு நான் கண்குளிர்ச்சியாக, அவளுக்கு நான் பாதுகாப்பாக, எனக்கு அவள் பாதுகாப்பாக, அவள் மூலமாக எனக்கு நிம்மதியை, என் மூலமாக அவளுக்கு நிம்மதியைக் கொடு! 
 
இத்தனை அர்த்தங்களையும் உள்ளடக்கியது தான் இந்த துஆவின் வாசகம். 
 
பிறகு சொன்னார்கள்; وَمَالِي - என்னுடைய செல்வத்திலே எனக்கு ஆஃபியத்தை கொடு!
 
செல்வத்தை சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள். அந்த செல்வத்தை உங்களால் பயன்படுத்த முடியவில்லை என்றால், என்ன பிரயோஜனம்? அந்த செல்வத்தைக் கொண்டு நீங்கள் தர்மம் கொடுக்க முடியவில்லை என்றால், என்ன பிரயோஜனம்? 
 
செல்வம் உங்களுடையது. ஆனால், கட்டுப்பாடு வேறு ஒருத்தருடையது. செல்வம் உங்களுடையது. நீங்கள் உழைத்து சேகரித்தது. ஆனால், உரிமை இன்னொருத்தருடைய கையில் இருக்கிறது. 
 
எனவே, நீங்கள் பயப்படுகிறீர்கள். எடுத்தால் என்ன செய்வார்கள்? மனைவி திட்டுவாளோ? பெற்றோர் திட்டுவார்களோ? அண்ணன் திட்டுவானோ? இப்படியாக பல குழப்பங்கள்.
 
எனவே, என்னுடைய செல்வத்தில் நான் சம்பாதிக்கக்கூடிய செல்வம் எனக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்; எதிரிகளிடமிருந்தும். பொறாமைக்காரர்களிடமிருந்தும். அநியாயக்கார அரசர்களிடமிருந்தும். அதிகாரிகளிடமிருந்தும். அதுபோன்று அழிவதிலிருந்தும். நாசம் அடைவதிலிருந்தும். அதுபோன்று அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு நல்லவர்களுக்கு கொடுக்கும்போது எந்த தடையும் இல்லாமல் எனக்கு அதில் பாதுகாப்பு வேண்டும்.
 
இத்தகைய ஆஃபியத்தை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் கேட்டார்கள்.
 
பிறகு கேட்பார்கள்:
 
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي وَآمِنْ رَوْعَاتِي
 
யா அல்லாஹ், என்னுடைய குறைகளை எல்லாம் மறைத்துவிடு! என்னுடைய பயங்களை எல்லாம் போக்கி எனக்கு நிம்மதி கொடு!
 
اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي
 
யா அல்லாஹ், என்னை வலது புறத்திலிருந்து பாதுகாத்து விடு! இடது புறத்திலிருந்து என்னை பாதுகாத்து விடு! எனக்கு முன்னால் இருந்து எனக்கு பாதுகாப்பை கொடு! எனக்கு பின்னால் இருந்து எனக்கு பாதுகாப்பு கொடு!
 
وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
 
உன்னுடைய மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன்; எனக்கு கீழிருந்து பூமியில் நான் சொருகப்பட்டு விடுவதிலிருந்து.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 5074.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய இந்த துஆ ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் இருந்ததாக இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
 
அதுபோன்று, மற்றொரு ஹதீஸை பாருங்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அபி பக்ரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் தங்களுடைய தந்தை அபூபக்ராவிடத்தில் கேட்கிறார்கள்; தந்தையே நீங்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் மறக்காமல் இந்த துஆவை ஓதுகிறீர்கள். அதாவது, 
 
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
 
யா அல்லாஹ்! எனக்கு உடலில் ஆஃபியத்தை கொடு! என்னுடைய செவியில் எனக்கு ஆஃபியத்தை கொடு! என்னுடைய பார்வையில் எனக்கு ஆஃபியத்தை கொடு! உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. 
 
காலையில் மூன்று முறை இதை ஓதுகிறீர்கள். மாலையில் மூன்று முறை இதை ஓதுகிறீர்களே. என்ன விளக்கம்? என்று கேட்டபோது, அபூபக்ரா ரலியல்லாஹு அன்ஹு அழகிய முறையில் ஒரே வார்த்தையில் சொன்னார்கள்:
 
மகனே, நான் ரசூலுல்லாஹ் ஓதுவதை செவியுற்றேன். எனவே, அந்த சுன்னத்தை பின்பற்றி நான் ஓதுகிறேன் என்றார். (2)
 
அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் இப்னு அபீ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 5090.
 
இப்படித்தான் நாமும் இதுபோன்ற துஆக்களை சத்தமாக காலையிலும் மாலையிலும் ஓதும்போது நம்முடைய பிள்ளைகள் அதிலிருந்து மனப்பாடம் செய்து கொள்வார்கள். இதைத்தான் அல்லாஹு தஆலா நமக்கு துஆவாக கற்றுத் தருகிறான்.
 
இறையச்சம் உள்ளவர்களுக்கு எங்களை வழிகாட்டியாக ஆக்கு! (அல்குர்ஆன் 25 : 74)
 
எங்களுடைய பிள்ளைகளை இறையச்சம் உள்ளவர்களாக ஆக்கு என்று அல்லாஹ் சொல்வதற்கு பதிலாக இறையச்சம் உள்ளவர்களுக்கு எங்களை வழிகாட்டு என்று அல்லாஹு தஆலா சொன்னதிலிருந்து அறிஞர்கள் சொல்லுகிறார்கள்: 
 
நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆகி இறையச்சத்தை கடைப்பிடியுங்கள், உங்களது பிள்ளைகள் அதைப் பார்த்து பின்பற்றுவார்கள் என்று.
 
அதுபோன்று, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலையில் எழுந்த உடனேயே அல்லாஹ்விற்கு ஆஃபியத்துக்காக நன்றி செலுத்தி, ஆஃபியத்தை கேட்பார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நீங்கள் காலையில் எழுந்தவுடன் அல்லாஹ்விடத்தில் சொல்லுங்கள்:
 
الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ
 
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். இந்த ரூஹை அவன் மீண்டும் எனக்கு உடலில் கொடுத்தான். என்னுடைய உடலில் எனக்கு ஆஃபியத்தை கொடுத்தான். அவனை நினைவு கூறுவதற்கு அவனைத் தொழுவதற்கு எனக்கு அனுமதி கொடுத்தான். (3)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3401.
 
அதுபோன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் தூங்குவதற்கு முன்பாக ஓதிய துஆக்களில் ஆஃபியத்துடைய மிக முக்கியமான துஆவாக இருப்பதை அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களுடைய அறிவிப்பில் பார்க்கிறோம். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் படுக்கையில் தலை வைத்ததற்கு பிறகு சொல்வார்கள்:
 
اللهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا، لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا، إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا، وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا
 
யா அல்லாஹ்! என் உயிரை நீ தான் படைத்தாய். அதை நீதான் உயிர் வாங்கப் போகிறாய். என்னுடைய உயிருடைய மரணமும் சரி, வாழ்வும் சரி உனக்காக தான். இந்த உயிரை மீண்டும் நீ எனக்கு கொடுத்தால் நீ இந்த உயிரை (பாவங்களிலிருந்து)  பாதுகாத்துக்கொள்! 
 
இந்த உயிரை நீ எடுத்துக் கொண்டால் எனது உயிருக்கு மன்னிப்பை கொடு என்று அல்லாஹ்விடத்தில் கேட்டதற்கு பிறகு,
 
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ
 
யா அல்லாஹ்! உன்னிடத்தில் நற் சுகத்தை கேட்கிறேன் என்ற துஆவை கூறிவிட்டு, பிறகு சில துஆக்களை கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்குவதற்காக கண்களை மூடுவார்கள். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2712.
 
அதுபோன்று, எப்போதும் சரி அல்லாஹ்விடத்தில் சோதனைகளை கேட்கக்கூடாது. கஷ்டங்களை கேட்கக்கூடாது. ஆஃபியத்தை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பை கேட்க வேண்டுமே தவிர, தண்டனையை கேட்டு விடக்கூடாது. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை தங்களது தோழர்களில் நோயுற்ற ஒரு மனிதரை சந்திப்பதற்காக சென்றார்கள். 
 
அவர் அந்த நோயினால் அப்படியே சுருங்கி விட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மனிதரிடத்தில் கேட்டார்கள்; உனக்கு என்ன ஆனது? நீ என்ன துஆ செய்தாய்? என்று. அல்லாஹ்விடத்தில் நீ ஆஃபியத்தை கேட்கவில்லையா?
 
அந்த மனிதர் கூறினார்: அல்லாஹ்வுடைய தூதரே! நான் என்ன துஆ செய்தேன் என்றால், யா அல்லாஹ், மறுமையில் என்னை நீ தண்டிப்பதாக இருந்தால் அந்த தண்டனையை உலகத்திலேயே கொடுத்து விடு என்று நான் துஆ செய்தேன். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: சுப்ஹானல்லாஹ் அல்லாஹ்வுடைய தண்டனையை உன்னால் எப்படி தாங்க முடியும்? என்ன சக்தி இருக்கிறது அதை நீ தாங்குவதற்கு? நீ இப்படி துஆ செய்திருக்க வேண்டாமா!
 
اللهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ
 
யா அல்லாஹ், உலகத்திலும் எனக்கு நன்மையை கொடு! ஆஃகிரத்திலும் எனக்கு நன்மையை கொடு! நரகத்தின் தண்டனையிலிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்! என்று. (4)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2688.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னும் ஒரு வழிகாட்டளை நமக்கு சொன்னார்கள். 
 
யாராவது ஒருவர் முஸீபத்தில், நோய் நொடியில் அல்லது சிரமத்தில் சிக்கி இருப்பவரை, சோதிக்கப்பட்டிருப்பவரை பார்த்தாலும் கூட, உடனே அந்த இடத்தில் நாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும்.
 
الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا
 
உன்னை சோதித்ததிலிருந்து அல்லாஹ் எனக்கு ஆஃபியத்தை கொடுத்தானே, அவன் படைத்த படைப்புகளில் எத்தனையோ படைப்புகளை காட்டிலும் என்னை மேன்மைப்படுத்தி வைத்தானே! என்னை சிறப்பாக்கி வைத்தானே! என்று நீங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டால், அந்த நிஃமத்துக்குரிய நன்றியை நீங்கள் அல்லாஹ்விற்கு செலுத்தி விட்டீர்கள் என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3432.
 
நம்முடைய பொருளாதார வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், நம்முடைய மார்க்க வாழ்க்கைக்கும், நம்முடைய ஆகிரத்துடைய வாழ்க்கைக்கும் இந்த ஆஃபியத் முக்கியமானது. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் இதைத்தொடர்ந்து கேட்டார்கள். நாமும் அல்லாஹ்விடத்தில் கேட்போமாக! அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து நம்முடைய துன்யா ஆகிரத்தில் நமக்கு ஆஃபியத்தை தந்தருள்வானாக!
 
 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي أَزْهَرُ بْنُ سَعِيدٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: مَاذَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ بِهِ قِيَامَ اللَّيْلِ؟ قَالَتْ: لَقَدْ سَأَلْتَنِي عَنْ شَيْءٍ مَا سَأَلَنِي عَنْهُ أَحَدٌ قَبْلَكَ، كَانَ يُكَبِّرُ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُسَبِّحُ عَشْرًا، وَيَسْتَغْفِرُ عَشْرًا، وَيَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَعَافِنِي» وَيَتَعَوَّذُ مِنْ ضِيقِ الْمُقَامِ يَوْمَ الْقِيَامَةِ (سنن ابن ماجه 1356)[حكم الألباني] حسن صحيح
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْجَلِيلِ بْنِ عَطِيَّةَ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، أَنَّهُ قَالَ لِأَبِيهِ: يَا أَبَتِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ «اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، تُعِيدُهَا ثَلَاثًا، حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي»، فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ، قَالَ عَبَّاسٌ فِيهِ: وَتَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي، فَتَدْعُو بِهِنَّ» فَأُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَعَوَاتُ الْمَكْرُوبِ «اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَبَعْضُهُمْ يَزِيدُ عَلَى صَاحِبِهِ» (سنن أبي داود5090) [حكم الألباني] : حسن الإسناد
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا قَامَ أَحَدُكُمْ عَنْ فِرَاشِهِ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ [ص:473] إِزَارِهِ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّهُ لَا يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ بَعْدُ، فَإِذَا اضْطَجَعَ فَلْيَقُلْ: بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ، فَإِذَا اسْتَيْقَظَ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ " وَفِي البَابِ عَنْ جَابِرٍ، وَعَائِشَةَ،: " وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ، وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ وَقَالَ: فَلْيَنْفُضْهُ بِدَاخِلَةِ إِزَارِهِ " (سنن الترمذي 3401) [حكم الألباني] : حسن
 
குறிப்பு 4)
 
حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَادَ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ؟» قَالَ: نَعَمْ، كُنْتُ أَقُولُ: اللهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ، فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سُبْحَانَ اللهِ لَا تُطِيقُهُ - أَوْ لَا تَسْتَطِيعُهُ - أَفَلَا قُلْتَ: اللهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ " قَالَ: فَدَعَا اللهَ لَهُ، فَشَفَاهُ. (صحيح مسلم- 2688)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/