HOME      Khutba      இன்றைய முஸ்லிம்களின் திருமணங்கள்! | Tamil Bayan - 752   
 

இன்றைய முஸ்லிம்களின் திருமணங்கள்! | Tamil Bayan - 752

           

இன்றைய முஸ்லிம்களின் திருமணங்கள்! | Tamil Bayan - 752


இன்றைய முஸ்லிம்களின் திருமணங்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : இன்றைய முஸ்லிம்களின் திருமணங்கள்
 
வரிசை : 752
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 02-12-2022 | 08-05-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை முதல் உபதேசமாக கூறியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் இம்மையிலும் வெற்றியடைவார்கள்; நிம்மதி பெறுவார்கள்; அல்லாஹ்வின் அன்புக்கும் அருளுக்கும் உரியவர்களாக இருப்பார்கள். மறுமையிலோ அல்லாஹ் சுபஹானஹு தஆலா நல்லோருக்காக ஏற்படுத்தி இருக்கக் கூடிய அந்த உயர்ந்த இன்பங்கள் உடைய நிரந்தரமான சொர்க்கத்திலே அவர்கள் எந்த விதமான கேள்வி கணக்கு இன்றி அல்லது மிக இலகுவான கேள்வி கணக்கோடு முதல் கூட்டமாக சொர்க்கத்திற்கு செல்வார்கள்.
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா என்னையும் உங்களையும் இறையச்சம் மிகுந்த நல்லடியார்களின் ஆக்கி அருள்வானாக! தக்வாவோடு வாழ்ந்து தக்வாவோடு அல்லாஹ்வை சந்திக்கக் கூடிய அந்த நர்பாக்கியத்தை தந்தருள் புரிவானாக! ஆமீன்.
 
அல்லாஹு தஆலா நமக்கு மிக இலகுவான எளிமையான மார்க்கத்தை கொடுத்தான். அதுபோன்று மிகவும் எளிமையான, மிகவும் ஒரு பண்பான, மார்க்கத்தை மக்களுக்கு எளிதாக்கி தருவதையே குறிக்கோளாக கொண்ட ஒரு அழகிய தூதரையும் அல்லாஹு தஆலா நமக்கு அனுப்பினான்.
 
எத்தனை சட்டங்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்! நான் உங்களுக்கு சிரமம் கொடுத்து விடுவேன் என்பதில்லை என்றால் நான் இந்த சட்டத்தை உங்கள் மீது விதித்திருப்பேன். 
 
நான் சிரமம் கொடுத்து விடுவேன் என்ற பயம் எனக்கு இல்லை என்றால் உங்கள் மீது இது ஃபர்ழாக்கப்பட்டு இருக்கும். உங்களுக்கு நான் இதை கடமையாக்கி இருப்பேன். இதை செய்யும்படி உங்களை நான் கட்டளையிட்டு இருப்பேன். (1)
 
என்றெல்லாம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் என்றால், இந்த மார்க்கத்தை நமக்கு இலகுவாகி தருவதில் எந்த அளவு கருத்துடையவர்களாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள்!
 
தொழுகையை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் 50 வக்து தொழுகை கடமையாக்கப்பட்டது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமது நபி இடத்தில் சொன்னார்கள்: முஹம்மதே! நான் இஸ்ரவேளர்களிடத்திலே நல்ல அனுபவத்தை பெற்று இருக்கிறேன். உங்களது உம்மத்தால் இது முடியாது. திரும்ப சென்று ரப்பிடத்தில் குறைக்க சொல்லுங்கள். 
 
இப்படியாக பத்து பத்தாக குறைத்து, பிறகு ஐந்து நேர தொழுகையாக அல்லாஹு தஆலா கொடுத்தான். (2)
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 163.
 
இல்லையென்றால் நாம் எவ்வளவு சிரமப்பட்டு இருப்போம்! யோசித்துப் பாருங்கள். அல்லாஹு தஆலா இந்த ஐந்துக்கு 50 உடைய நன்மை தருவதாகவும் வாக்களித்து இருக்கிறான்.
 
இந்த உதாரணம் எதற்காக என்றால், நாம் நம்முடைய மார்க்கத்தையும் நம்முடைய சமூக பழக்க வழக்கங்களையும் எளிதாக்கிக் கொள்ளவில்லை என்றால், இலகுவாக்கி கொள்ளவில்லை என்றால், நாமும் மற்றார்களைப் போன்று ஒரு கேடுகெட்ட நிலைக்கு ஆளாகி விடுவோம். 
 
அவர்கள், இறை வழிபாடாக இருக்கட்டும், அவர்களுடைய கலாச்சாரமாக இருக்கட்டும் ஒவ்வொன்றிலும் எத்தகைய சிரமத்தோடு வலியோடு வேதனையோடு இன்னல்களோடு துன்பங்களோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
வாழ்க்கையே அவர்களுக்கு ஒரு சிரமமாக மாறிவிட்ட அளவிற்கு அவர்களுக்கு அந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருப்பதை பார்க்கிறோம். 
 
அவர்களின் இறை வழிபாடும் கடினமானது. அவர்களுடைய சமூக கலாச்சாரமும் சடங்குகள் நிறைந்து. 
 
அல்லாஹு தஆலா நமக்கு ஒரு அழகிய துஆவை கற்றுக் கொடுத்தான்.
 
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே!  (அல்குர்ஆன் 2 : 286)
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
இஸ்ரவேலர்களை யூதர்களை நீங்கள் பின்பற்றுவீர்கள்; உங்களுக்கு முன்னால் சென்ற அந்த வழிகேடர்களை நீங்கள் பின்பற்றுவீர்கள்; ஒரு ஜோடி செருப்பில் ஒரு செருப்பு இன்னொரு செருப்புக்கு ஒத்து இருப்பதை போன்று. அவர்களிலே ஒரு முட்டாள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்து இருப்பானேயானால் நீங்களும் அதற்குள் நுழைய முயற்சி செய்வீர்கள். 
 
அவர்களிலே ஒரு மகா பாவி தன்னுடைய தாயிடத்திலே சேர்ந்து இருப்பானேயானால் அதை செய்பவரும் உங்களிடத்திலே இருப்பார் என்று எவ்வளவு கோபப்பட்டு இருப்பார்கள்.
 
எவ்வளவு வேதனை பட்டு இருப்பார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (3)
 
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி - 3456, திர்மிதி - 2641.
 
நான் ஏன் இதை சொல்ல வருகிறேன் என்று சிந்திக்க வேண்டும். இன்று நம்முடைய சமுதாயம் வணக்க வழிபாடுகளில் பித்அத்துகளை நுழைத்து, சடங்குகளை நுழைத்து,  சம்பிரதாயங்களை நுழைத்து, அதிலே வணக்க வழிபாடுகள் ஒரு புள்ளி அளவுக்கு அவர்கள் உருவாக்கிய சடங்குகள் சம்பிரதாயங்கள் தான் அதை சுற்றி இருப்பதையும் பார்க்கிறோம்.
 
கடைசியில் சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மகத்துவமும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு, இபாதத் டம்மியாக ஆக்கப்பட்டு விடுகிறது. 
 
அவர்களுடைய ஃபர்ழ் தொழுகையை எடுத்துக் கொள்ளுங்கள். நோன்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஹஜ்ஜை எடுத்துக் கொள்ளுங்கள். 
 
இப்படி எந்த இபாதத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே இபாதத் என்பது நடுவில் ஒரு மறைக்கப்பட்ட டம்மி புள்ளியாக இருக்கும். அவர்களது சடங்குகள்தான் விசாலமாக, அலங்கரிக்கப்பட்டதாக, ஜோடிக்கப்பட்டதாக, மகத்துவம் செய்யப்படுவதாக, அதை புகழப்படுவதாக, அதற்கு மக்கள் வரவேற்கப்படுவதாக, மக்களை கவர்வதாக இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இன்று நிலைமை எப்படி என்றால், நம்முடைய கலாச்சாரமும் அப்படித்தான் மாறிவிட்டது. இன்று, நமக்கு வாழ்க்கையிலே பெரிய சோதனை என்னவென்றால், திருமணம் முடிப்பது திருமணம் முடித்து வைப்பது, நிக்காஹ் செய்வது, நிக்காஹ் செய்து வைப்பது. 
 
காஃபிர்கள் சொல்வார்கள் அல்லவா; தமிழிலே ஒரு பழமொழி, வீட்டை கட்டிப்பாருங்கள் கல்யாணத்தை செய்து பாருங்கள் என்று. 
 
இந்த இரண்டுமே இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கண்டிக்கப்பட்டது. 
 
சொன்னார்கள்: செல்வத்தில் மிக மோசமான செல்வம் வீடுகளை உயர்த்தி கட்டுவதில் செலவழிக்க கூடியது என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : ஹாரிஸா இப்னு முளர்ரிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2483.
 
பிறகு திருமணத்திற்கு வாருங்கள்; அவர்களை விட நாம் என்ன சளைத்தவர்களா? அவர்களை விட நாம் என்ன குறைந்தவர்களா? நம்மிடத்திலே படிப்பில்லையா? அவர்கள் அளவுக்கு பொருளாதாரம் இல்லையா? அவர்கள் அளவுக்கு வசதி இல்லையா? என்று அவர்களோடு அந்த இறை நிராகரிப்பின் கலாச்சாரத்திலே போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் நம்முடைய மக்கள்.
 
இதிலே செல்வந்தர்கள், நடுத்தர மக்கள் ஏழைகள் என்று யாரும் இல்லை. காரணம், நோய் அப்படி பிடித்து விட்டது. எப்படி இந்த கொரோனா காலத்திலே மக்களையெல்லாம் அந்த நோய் பிடித்துக் கொண்டிருந்ததோ அதுபோன்று எல்லோருக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டது. 
 
ஏழைகள் வட்டிக்கு வாங்குகிறார்கள். கடன் வாங்குகிறார்கள். வாழ்நாள் எல்லாம் கடனை அடைக்கக் கூடிய அளவுக்கு அவர்கள் இந்த திருமண சடங்குகளிலே செலவு செய்து, வாழ்நாள் எல்லாம் அவர்கள் வேதனை படுகிற நிலையை பார்க்கிறோம்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! நமக்கு தொழுகையில் மட்டும் ரசூலுல்லாஹ்வை  பின்பற்றுவது அல்ல, எல்லா விஷயங்களிலும் அவர்களை பின்பற்ற வேண்டும்.
 
நான் பிற மக்களை பற்றி சொல்ல வரவில்லை. அவர்கள் தான் எங்களுக்கு ரசூலுல்லாஹ் வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்கள். யார், குர்ஆன் சுன்னாவை பற்றி பேசுகிறார்களோ, தவ்ஹீதை பேசுகிறார்களோ, ரசூலுல்லாஹ்வை முன் மாதிரியாக வணக்க வழிபாடுகளுக்கு எடுத்து பேசுகிறார்களோ அவர்களைப் பற்றி நான் பேசுகிறேன்.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடவா? சமூக உணர்வுடையவர்கள், மக்களைத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் நம்மிலே யாராவது இருப்பார்களா? 
 
எனக்கு ரசூலுல்லாஹ்வை விட அதிகமான மக்கள் தெரியும்; அதிகமான மக்கள் பழக்கம் உள்ளவர்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குறைஷி ஹாஷிமி வம்சத்தை விட பெரிய வம்சம் உள்ளவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா? அப்படிப்பட்ட ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய திருமணத்திற்கு யாரையும் சொல்லி அனுப்பவில்லை. 
 
இஸ்லாம் வருவதற்கு முன்பும் சரி, இஸ்லாம் வந்ததற்குப் பின்பும் சரி, அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். மணமகள் ஒத்துக் கொள்வார். இருக்கக் கூடியவர்களை சாட்சியாக்கி, இருப்பதைக் கொடுத்து மஹராக, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருமணம் முடித்தார்கள். 
 
அப்படித்தானே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருமணம் முடிச்சாங்க. திருமணத்திற்காக தேதியை நிர்ணயித்தார்களா? திருமணத்திற்கு தேதியை நிர்ணயிப்பது இருக்கட்டும், திருமணத்திற்கு முன்னால் ஒரு நிச்சயதார்த்தம், சீனி போடுவது, பரிசம் போடுவது, அப்புறம் மருதாணி போடுவது போன்ற அனாச்சாரங்கள் நபியின் காலத்தில் இருந்ததா? 
 
சமுதாயத்துல இன்று சில செல்வந்தர்கள் இதற்கு செலவழிக்கக்கூடிய செல்வத்தில் ஒரு 10, 20,30 நடுத்தர ஏழை குடும்பத்தார்களுக்கு திருமணமே செய்து வைத்து விடலாம். 
 
அல்லது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கணக்குப்படி, அவர்களது காலத்தின் திருமணம்படி வைத்தால், லட்சம் பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாம். 
 
என்ன முட்டாள்தனமான சடங்குகளில் சமுதாயம் தனது நேரத்தையும் செல்வத்தையும் செலவழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கா நமக்கு செல்வம் கொடுக்கப்பட்டது? இதற்கா நமக்கு நேரம் கொடுக்கப்பட்டது? இதற்கா நமக்கு வாழ்க்கை கொடுக்கப்பட்டது?
 
அறிவில்லை; புத்தி இல்லை; என்ன சமுதாயமாக நாம் நாசமாகிக் கொண்டிருக்கிறோம்.
 
சிலரிடத்திலே ஏன் இப்படி சம்பாதிக்கிறீர்கள்? இவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்றால், கல்யாணம் பண்ணி வைக்கணும். 
 
வாழ்க்கையில் சம்பாதிப்பதையே பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்காக என்று கொள்கையுடைய ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? யோசித்துப் பாருங்கள்!
 
சஹாபாக்கள் எதற்கு சம்பாதித்தார்கள்? அல்லாஹ் எதற்கு சம்பாதிக்க சொல்கிறான்? அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பதற்காக.
 
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
 
எவர்கள் தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 274)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ
 
உங்களது உயிரால் உங்களது செல்வத்தால் அல்லாஹ்வின் பாதையிலே போராடுங்கள். (அல்குர்ஆன் 9 : 41)
 
என்று அல்லாஹ் சொல்லுகிறான். மஸ்ஜிதுகள் கட்டுவதற்காக, மதராசாக்கள் கட்டுவதற்காக, அனாதைகளை பராமரிப்பதற்காக, ஏழைகளை வாழ வைப்பதற்காக, விதவைகளுக்கு உதவுவதற்காக, சமுதாயத்திலே எளியவர்கள் நலிந்தவர்களுக்கு உதவுவதற்காக ஒரு முஸ்லிம் சம்பாதிப்பானா? 
 
தனது மகளை திருமணம் செய்து வைப்பதற்காக, தனது பேத்தியை திருமணம் செய்து வைப்பதற்காகவா? 
 
என்ன கேவலமான நோக்கம் இது? சொல்லுங்கள் பார்க்கலாம். எப்படி அவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடிகிறது என்று தெரியவில்லை. என்ன கலாச்சார பின்னணியிலே வாழ்ந்தார்கள்? வளர்கிறார்கள்? என்பது புரியவில்லை. 
 
பெண் பார்க்க போவதற்கே பல முயற்சிகள். அதற்காக பல செலவுகள். அதுபோன்று பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை பார்ப்பதற்கும் பல செலவுகள்.
 
பிறகு, எல்லாம் முடிந்துவிடும். பலவிதமான பரீட்சை உடைய கேள்விகளைப் போல. ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு, ஐஏஎஸ் எக்ஸாம், ஐபிஎஸ் எக்ஸாம், நீட்டு, இந்த எக்ஸாம் மாதிரி இரண்டு வீட்டாரும் ஒருத்தர் ஒருத்தர கேட்டுக்கிற கேள்வியை பார்க்கணுமே! 
 
இதுல எங்கேயாவது இஸ்லாம் இருக்கிறதா? என்று சொன்னால் எனக்கு தெரியல. யாராவது தன்னுடைய மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது, அந்த மாப்பிள்ளையை கூப்பிட்டு, ரெண்டு ரக்காத்து தொழுது காட்டு, உன்னுடைய இரண்டு ரக்காத்து தொழுகையிலே நீ ஓதக்கூடிய சூராக்களுக்கு அர்த்தம் தெரியுமா? ஃபஜ்ருடைய தொழுகை எத்தனை நாளு ஜமாத்தா தொழுவுற? ஆயத்துல் குர்ஸிக்கு அர்த்தம் தெரியுமா? அல்லாஹ் எங்க இருக்கான்னு கேட்டா சொல்ல தெரியுமா? 
 
ஆக, இஸ்லாமிக் knowledge டோட்டலி ஜீரோ. படிச்சிருக்கிறாரா? டிகிரி வாங்கி இருக்கிறாரா? வேலை செய்கிறாரா? 
 
அதுபோன்று, மாப்பிள்ளை விட்டார்கள் பெண்ணைப் பற்றி எல்லாம் கேட்பார்கள். குறிப்பா பேக்ரவுண்ட் பார்ப்பாங்க. 
 
ஒரு பேச்சாளர் பேசும்போது ரொம்ப அழகா சொன்னார். நவீன தவ்ஹீதின் நவீன வரதட்சணை வாங்கும் கலாச்சாரம் என்று.
 
அது என்னங்க அப்படின்னு கேட்டா, எங்களுக்கு காசு பணம் எல்லாம் வேணாங்க, நாங்க வந்து வரதட்சணை எல்லாம் வாங்க மாட்டோங்க, நாங்க வரதட்சனை கேட்க மாட்டோங்க, நீங்க எவ்வளோ நகை போட்டாலும் சரி, நீங்க கார் கொடுத்தாலும் சரி, கொடுக்காட்டியும் சரி, வீடு வாங்கி வச்சாலும் சரி, வைக்காட்டியும் சரி, நாங்க அதெல்லாம் எதுவுமே பார்க்க மாட்டாங்க. 
 
ஆனால், ஏற்கனவே புரோக்கர் கிட்ட என்ன சொல்லி வச்சிருப்பாங்க? பணக்கார வீடா ஒரே பொண்ணு உள்ள வீடா பாருங்கன்னு. 
 
அது எப்படி சூசகமா சொல்லுவாங்கன்னா, கொஞ்சம் பெரிய குடும்பமா இல்லாம பாருங்க அப்படின்னு.
 
இங்கேயே மட்டமான கலாச்சாரத்திற்கு ஆளாகி விட்டோம். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட, வாழ்த்தப்பட்ட, போற்றப்பட்ட, புகழப்பட்ட அல்லாஹ்வின் கருணைக்கு உரித்தான குடும்பம், எந்த குடும்பத்தில் அதிக பிள்ளைகள் இருக்கிறார்களோ. 
 
ஒருத்தருக்கு பிள்ளையே பிறக்கல அது அல்லாஹ்வுடைய நாட்டம் பிறக்கக்கூடிய பிள்ளையை நீ தடுத்துக் கொண்டால் அதை நீ கொலை செய்ததைப் போன்று, அவன் ஷைத்தானை வணங்கியவன். 
 
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டினான்:
 
قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ افْتِرَاءً عَلَى اللَّهِ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ
 
அறிவின்றி (அபத்தமாக) முட்டாள்தனமாக தங்கள் பிள்ளைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ் (அனுமதி) கொடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீது) தடுத்தவர்களும் திட்டமாக நஷ்டமடைந்து விட்டனர். (இவ்வாறு) அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகிறார்கள். (அவர்கள்) திட்டமாக வழிகெட்டு விட்டனர். இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை. (அல்குர்ஆன் 6 : 140)
 
யார், இந்த பர்த் கண்ட்ரோல் செய்கிறார்களோ, குழந்தை வேண்டாம் என்று தடுத்துக் கொள்கிறார்களோ, உடல் ஆரோக்கியம் இருக்கும் நிலையில், வறுமையை பயந்து மட்டும், செல்வத்தை பயந்து மட்டும், யார் பர்த் கண்ட்ரோல் செய்கிறார்களோ அவர்கள் வயிற்றிலே குழந்தையை கொன்றாலும் சரி, பிறந்த குழந்தையை கொன்றாலும் சரி, குழந்தையே வேண்டாம் என்று தடுத்துக் கொண்டாலும் சரி, அல்லாஹ்வின் மீது இட்டு கட்டுகிறார்கள்; மடையர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
 
காஃபிர்களுடைய சிந்தனை எப்படி நமக்கு புகுத்தப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
 
மிதமிஞ்சி செலவழிப்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கிறார்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி மனம் முடித்தார்கள்? எப்படி மனம் முடித்துக் கொடுத்தார்கள்? அவர்களை விடவா நாம் குடும்பத்தாள் உயர்ந்து விட்டோம்? சமூகத்தால் சிறப்பாகி விட்டோம்? அவர்களை விடவா, அவர்களின் கலாச்சாரத்தை விடவா நமக்கு ஒரு அழகிய கலாச்சாரம் இருக்கிறது? 
 
பிறகு ஏன் குத்பாக்களிலே இமாம்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்:
 
وَأَحْسَنَ الهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ
 
கலாச்சாரங்களில் சிறந்தது முஹம்மதுடைய கலாச்சாரம் என்று. 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6098.
 
அது ஒரு காதிலே வாங்கி இன்னொரு காதிலே விடுவதற்கு தானா? பின்பற்றுவதற்கு இல்லையா? 
 
நான் பெரியவன், ரசூல்லாஹ்வை விட நீ பெரியவனா? சமுதாயத்திலே எனக்கு ஸ்டேட்டஸ் இருக்கிறது, ரசூலுல்லாஹ்வை விட ஸ்டேட்டஸ் உள்ளவரா நீ? உங்களது குடும்பம் ரசூலுல்லாஹ் உடைய ஹாஷிமி குடும்பத்தை விட பெரிய குடும்பமா? அவர்களை விட நீங்கள் உயர்ந்து விட்டீர்களா? அவர்களை விட உங்களுக்கு மதிப்பு வேண்டுமா?
 
ரசூலுல்லாஹ் உடைய எல்லா மகள்களையும் மணம் முடித்துக் கொடுத்து விட்டார்கள். மிஞ்சி இருப்பது ஃபாத்திமா மட்டும். ஃபாத்திமாவுக்கும் நல்ல வயதாகி விட்டது. கண்டிப்பாக தனது மகளுக்குரிய மணமகனை அல்லாஹ் கொண்டு வருவான்.
 
மணமகளை தேடி மணமகன் வர வேண்டும். அதுதான் மார்க்கம். மணமகளுடைய தந்தை ஒரு நல்லவரை பார்த்தால் என் மகளை உங்களுக்கு மணமுடித்து வைக்கிறேன் என்று சொல்லலாம். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயந்தார்களா? கவலைப்பட்டார்களா? இன்று, நம்மிலே ஒருவர் கவலைப்படுவதுப் போன்று. நீங்கள் எப்படி நிய்யத் வைப்பீர்களோ அப்படி அல்லாஹ் உங்களிடத்திலே நடந்து கொள்வான்.
 
அல்லாஹ் சொல்லுகிறான்: 
 
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي
 
என்னுடைய அடியானுடைய எண்ணத்திற்கு ஏற்ப நான் அவனோடு நடந்து கொள்வேன் என்று. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7505.
 
ஒரு பெரிய ஆலிம்சா சொன்னார்: இந்த காலத்தில் காசு கொடுக்கலைன்னா எப்படி பொம்பள பிள்ளைகளை கரை சேர்க்க முடியும்னு. அல்லாஹ் அதைப் போலவே ஆக்கிட்டான். 
 
ஒரு சாதாரண மனிதர், படிப்பறிவில்லாத, பெரிய மார்க்க கல்வி இல்லாத சாதாரண மனிதர், அல்லாஹ் என்னுடைய பிள்ளைகளை கரை சேர்ப்பான் என்று சொன்னார். அத்தனை பெண் பிள்ளைகளையும் ஒரு செலவு இல்லாமல் அல்லாஹ் கரை சேர்த்து விட்டான். 
 
ஒரு செலவு இல்லாமல் அல்லாஹ் கரை சேர்த்து விட்டான் உங்களுடைய எண்ணம் அப்படி அதற்கு ஏற்ப அல்லாஹ் நடந்து கொள்கிறான். அல்லாஹ்வின் மீது அழகிய எண்ணம் வையுங்கள். அல்லாஹ் அழகிய முறையில் நடத்துவான்; நடத்தித் தருவான்; நடப்பான். 
 
நீங்கள் உங்களுக்கு நீங்களே சங்கிலிகளை போட்டுக் கொண்டால், சடங்குகளை விதித்துக் கொண்டால் அதற்கு யார் பொறுப்பு? அல்லாஹ்வா? மார்க்கமா? ரசூலா? சிந்திக்க வேண்டும். 
 
அன்சாரிகள் அலியை பார்த்து சொல்கிறார்கள்: பத்ர் போர் முடிந்து விட்டது. அலி ரலியல்லாஹு அன்ஹு அவரளுக்கு ஆல்ரெடி 26 வயதுக்கு சென்று விட்டார்கள். அலியே திருமணம் முடிக்காமல் இருக்கிறீர்களே? நீங்கள் மனம் முடியுங்கள் என்று சொல்கிறார்கள். 
 
நான் ஒரு ஏழை, எனக்கு யார் பெண் தருவார்? நான் எங்கே போய் முடிப்பேன்? என்று கேட்கிறார்கள்.
 
ரசூலுல்லாஹ் உடைய பொண்ணை போய் கேளுங்கள் என்று அன்சாரிகள் சொல்லுகிறார்கள். 
 
மனமகன் வருகிறார். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று. அப்படியா அலி, என்ன செய்யலாம்? 
 
உங்களுடைய மகளை எனக்கு கட்டி வைக்கிறீர்களா? அப்படின்னு கேக்குறாங்க. பாத்திமாவையா? ஆமா அல்லாஹ்வுடைய தூதரே. 
 
சரி, மஹருக்கு என்ன வச்சிருக்க? யா ரசூலுல்லாஹ்! நான் தான் ஃபகிர் ஆச்சே. உங்கள் பின்னாடியே சுத்திட்டு இருக்கிறேனே. நான் எங்க போய் மஹர தேடுவது. 
 
சரி, உனக்கு பத்ரு போர்ல ஒரு கேடயம் கொடுத்தேனே அது இருக்கா? ஆமா இருக்கு. ஆனால், அதை நான் வந்து மஹரா கொடுத்துட்டா ஜிஹாதுக்கு வேண்டுமே? 
 
பரவாயில்ல, அடுத்து அல்லாஹ் கொடுப்பான். அதை போய் மார்க்கெட்ல வித்துட்டு காசு கொண்டு வாங்க என்று அனுப்பினார்கள். அதைக் கொண்டு போய் மார்க்கெட்ல வித்துட்டு ஒரு 400 திர்ஹம் கொண்டு வராங்க. 
 
அதை மஹரா வாங்கிக்கிட்டு, அதிலே கொஞ்சம் வீட்டு ஜாமான் எல்லாம் வாங்கி, எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு, ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ரசூலுல்லாஹ் சொன்னாங்க: 
 
இந்த மாதிரி அலி உன்ன பெண் பேசுறாருமா. அலிக்கு மனம் முடிச்சு கொடுக்கலாம்னு சொல்லிட்டு. 
 
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா கேட்கிறார்கள்: 
 
அல்லாஹ்வுடைய தூதரே! குரேஷிகளிலேயே இவரை விட ஃபகிர் யாருமே இல்ல. கடைசியா இவ்வளவு நாளா வச்சி இந்த ஃபகிருக்கு தான் கொடுக்கப் போறீங்களானு கேக்குறாங்க. 
 
அப்போது, ரசூலுல்லாஹ் சொன்ன பதில்; ஃபாத்திமா! அவரை அல்லாஹ் விரும்புகிறான்; அல்லாஹ்வுடைய தூதர் விரும்புகிறார்கள். 
 
உடனே ஃபாத்திமா சொன்னாங்க: நானும் விரும்புகிறேன்; நான் ஏற்றுக் கொண்டேன் என்று சொல்லிட்டு முடிஞ்சிடுச்சு. பள்ளிவாசலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. நிக்காஹ் செஞ்சு வச்சாங்க. அனுப்பி வச்சிட்டாங்க. முடிஞ்சு போச்சு. (4)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 3376.
 
நோ நிச்சயம்; நோ சீனி போடுறது; நோ மருதாணி போடுறது; நோ பரிசம் போடறது; ஒரு நயா பைசா செலவு கிடையாது. 
 
அடுத்த நாள் காலையில் யார் பள்ளிவாசலுக்கு வந்திருந்தார்களோ அவர்களுக்கு மிச்சம் மீதி காச வச்சு சாப்பாடு கொடுத்தாங்க. முடிஞ்சு போச்சு வலிமா. 
 
என்ன டென்ஷன்? மண்டையிலே இபாதத்தை மறந்து, கடமையை மறந்து, கடனை அடைப்பதை மறந்து, வாழ்க்கையை மறந்து, கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுப்பதை எல்லாம் மறந்து, இந்த காசை கொண்டு போய் கல்யாணத்திலே வலிமாவிலே கொட்டினால் அல்லாஹ் பரக்கத் செய்வானா? சபிக்க மாட்டானா? புரியலையா? 
 
யார் யார் கிட்ட கடன்? யார் யாருக்கு வாக்கு கொடுத்து இருக்கீங்க? யார் யாருக்கு நீங்க என்ன செய்ய வேண்டியது? உங்களது ரத்த உறவுகளை பாருங்கள்! அவர்களில் படிப்பில்லாமல், தொழில் இல்லாமல், வசதி இல்லாமல் சிரமப்படுபவர்களை பாருங்கள்!
 
அவர்களையெல்லாம் நடுத்தெருவிலே நிற்க வைத்து விட்டு உங்களது பிள்ளைகளுக்கு கோடிகளிலே நீங்கள் திருமணம் நடத்தினால் அல்லாஹ்வுடைய அருள் கிடைக்குமா? நாளை மறுமையிலே சொர்க்கத்தின் வாசலை தட்ட முடியுமா? 
 
எத்தனை வகையான வீண்விரயங்கள், எத்தனை வகையான அநியாயங்கள்! மொத்தமாக ஹிஜாப் காற்றில் பட்டமாக பறக்கும். 
 
பெரிய திருமணங்கள் என்றாலே முடிஞ்சு போச்சு. ஆண் பெண் நோ டிஃப்ரண்ட். இதுல இன்னும் ஒரு நவீன கலாச்சாரம் வேற. அலங்கரிக்கப்பட்ட வாடகை பெண்களை அழைத்து வந்து ரிசப்ஷன். அதுபோன்று அவர்களை வைத்து விருந்து பரிமாற்றம். 
 
நீங்கள் இதன் மூலமாக விபச்சாரத்தை ஊக்குவிக்கவில்லை என்று சொல்லுங்கள். அலங்கரிக்கப்பட்ட கவர்ச்சியான பெண்களைக் கொண்டு வந்து விருந்தாளிகளை வரவேற்கிறார்கள். விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறுகிறார்கள். இது விபச்சாரம் இல்லையா? விபச்சாரத்திற்கு துணை போவதில்லையா? 
 
என்னங்க ஒன்னும் புரிய மாட்டேங்குது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாலு மகள்களை மணமுடித்துக் கொண்டுத்தார்கள். தங்களது வாழ்க்கையிலே பதினோரு திருமணங்கள் செய்தார்கள். அவர்களுடைய சஹாபாக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்தார்கள். 
 
எங்கேயாவது ஒரு சடங்கு நிகழ்ந்ததாக சொல்லுங்கள் பார்க்கலாம். அந்த வீட்டில் உள்ளவர்கள் அல்லது அண்டை வீட்டிலே உள்ளவர்கள் அதில் உள்ள சிறுமிகள் அன்றைய இரவு சில நேரங்கள் தஃப் அடித்துக் கொண்டு பாடுவார்கள். அவ்வளவு தான். அதற்கு மேல் அங்கே ஒரு சடங்கு, ஒரு கலாச்சாரம், வீண் விரையம் இருந்ததாக ஒரு ஹதீஸை காட்டுங்கள். 
 
இன்று மணமகனையும் மணமகளையும் உட்கார வைப்பதற்கான மேடைகள் சில லட்சங்களில் இருந்து ஆரம்பமாகி கோடி வரை சென்று விட்டது. ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மூன்று மணி நேரம் வரை பயன்படுத்த கூடிய அந்த மணமேடைகளுக்கு அத்தனை லட்சங்கள். 
 
அப்பறம் அந்த கல்யாணம் மண்டபத்தை அலங்கரிப்பதற்கு பல லட்சங்கள். எல்லாம் சில மணி நேரங்களுக்கு. 
 
இங்கே முஸ்லிம்களுடைய ஏழைகள் படிப்பில்லாமல் சிரமப்படுகிறார்கள். முஸ்லிம்களுடைய எத்தீம்கள் வறுமையிலே இருக்கிறார்கள். எத்தனை செலவுகள் இந்த மார்க்கத்திற்கு இந்த சமுதாயத்திற்கு நாம் செய்ய வேண்டியது இருக்கிறது? அதில் எல்லாம் கஞ்சத்தனம் காட்டிவிட்டு, வீண் விரயம் செய்துவிட்டு இப்படி அநியாயங்களிலே தாராளமாக செலவு செய்கிறோமே! நம்மை விட அயோக்கியர்கள் யார் இருக்க முடியும்?
 
மார்க்கத்தின் ரோஷம் இருக்கிறதா? நமக்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் மீது ஏதாவது புரிந்துணர்வு இருக்கிறதா? 
 
அப்துரஹ்மான் இப்னு அவ்ஃப் பரம்பரை பணக்காரர். நம்மளாவது காசை இப்பதான் பார்த்தோம். அவர் மணம் முடிச்சுட்டு வராரு. ரசுலுல்லாஹ்வுக்கே தெரியல. அத்தர் ஒன்னு தடவி இருந்தாரு. 
 
என்ன அப்துர் ரஹ்மான் நல்ல நறுமணமா இருக்கே? அத்தர் கலரே இப்படி டப்புன்னு ஒட்டி இருக்கே? 
 
யா ரசூலுல்லாஹ்! நான் ஒரு கல்யாணம் பண்ணிட்டேன் என்று சொல்கிறார். 
 
சுபஹானல்லாஹ்! இன்னைக்கு உங்களுக்கு பழக்கமானவராய் இருந்துட்டு உங்களுக்கு சொல்லாம கல்யாணம் பண்ணிட்டா முடிஞ்சு போச்சு கதை. பழக்கத்தையே முறிச்சிப்பீங்க. உறவே முறிந்து விடுகிறது. 
 
கல்யாண பத்திரிக்கைக்கு போங்க. அதுவே ஒரு முசீபத். அப்படியே வாங்கி அப்படியே கிழிச்சு தூக்கி போட்டுருவாங்க. பத்திரிக்கையை கையில வச்சிக்கிட்டு கல்யாணம் எப்பன்னு? கேட்பாங்க; எங்கன்னு? கேப்பாங்க; யாரு மாப்பிள்ளைனு? கேட்பாங்க. எல்லாம் நடக்கும். 
 
அப்படி இருந்தும் கூட அங்க நூறு ரூபாய் 200 ரூபாய்க்கு பத்திரிக்கை கொண்டு போய் கொடுக்கிறாங்கனா வாங்குறவனை விட கொடுக்கிறவனை விட முட்டாள் யாருங்க இருக்க முடியும்? சொல்லுங்க பாப்போம். 
 
நீங்க ஒருத்தர் கிட்ட 100 ரூபாய கொடுத்தீங்க. அவர் தூக்கி குப்பையில் போட்டார். என்ன செய்வீங்க? அப்படிப்பட்டவனுக்கு கொடுத்த நீங்களும் முட்டாள். வாங்கினவனும் முட்டாள்.
 
ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் டைப் பண்ணி வச்சுக்கிட்டு சொல்லப்போறவருக்கு அனுப்பிட்டு விட்டுவிடலாம். என்ன செஞ்சுரப் போறாங்க அந்த பத்திரிகையை வச்சிக்கிட்டு? வீட்ல ஃபிரேம் போட்டு வைப்பாங்களா? அது என்ன சர்டிஃபிகேட்டா? அது என்ன நினைவு சின்னமா?  
 
எங்கிருந்து இந்த சமுதாயம் தனது முட்டாள் தனத்தையும், தனது மடத்தனத்தையும், தனது மூடத்தனத்தையும் காஃபிர்களிடமிருந்து இரவல் வாங்கி இருக்கிறது? காப்பி அடித்திருக்கிறது? 
 
ஹதீஸின் தொடர் : ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சந்தோஷப்பட்டாங்க. என்ன அப்துர் ரஹ்மான் என்ன கூப்பிடலயேன்னு கோச்சிக்கிட்டாங்களா? எனக்கு சொல்லலையேன்னு, என் குடும்பத்துக்கு பத்திரிக்கை வைக்கலையேன்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க? 
 
அப்படியா சரி, நிக்காஹ்விற்கு ஒரு சுன்னத் இருக்கிறது. ஒரு ஆட்டை அறுத்தாவது வலீமா விருந்து கொடுத்திடுங்கன்னு சொன்னாங்க.
 
அந்த காலத்துல ஒரு ஆடு ஒரு திர்ஹம். ரசூலுல்லாஹ்னு கொடுத்துட்டாங்க. முடிஞ்சு போச்சு. (5)
 
அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : எண் : 2048, 2049, 3781, 5072.
 
இதுதானுங்க நிக்காஹ். இதுக்கு என்னங்க டென்ஷன்? இதுக்கு என்னங்க பிரச்சனை? இதுல என்னங்க குழப்பம் இருக்கு? இதுல என்ன உங்களுக்கு சிக்கல் சிரமம் இருக்கு? 
 
நம்ம சொல்றோமா? இல்லையா?
 
கலாச்சாரத்தில் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய கலாச்சாரம்னு. அப்ப எதுக்கு அந்த கலாச்சாரம்? ஃபிரேம் போட்டு மாட்ட மட்டுமா? 
 
ஆகவே, அன்பானவர்களே! சொல்ல வரக்கூடிய நோக்கம் இதுதான். நாம் மாற வேண்டும். மாறுவதற்கான புரட்சி செய்ய வேண்டும். சும்மா மாறிட முடியாது. யார் என்னை எதிர்த்தாலும் பகைத்தாலும், யார் என் மீது கோபித்தாலும், யார் தனது நட்பை என்னோடு முறித்துக் கொண்டாலும் சரி, நான் இஸ்லாமிய கலாச்சாரத்தின் படிதான் நடப்பேன்; செயல்படுவேன்; எனது குடும்ப காரியங்களை செயல்படுத்துவேன். 
 
நீ உறவ முறிச்சுட்டு போனா அல்லாஹ் சொர்க்கத்தை ஹராம் ஆக்கிடுவானா? நான் யாரை திருப்தி படுத்த வேண்டும்?
 
وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ
 
அல்லாஹ் சொல்றான்: முதலிலே அல்லாஹ்வை திருப்தி படுத்து; அவனது ரசூலை திருப்தி படுத்து. (அல்குர்ஆன் 9 : 62)
 
அடுத்து அந்த திருப்திக்கு முரணாக இல்லை என்றால், உன் தாயை திருப்தி படுத்து; தந்தையை திருப்தி படுத்து; நண்பனை திருப்தி படுத்து. 
 
அல்லாஹ்வை கோபமாக்கிக்கிட்டு, எல்லா அராத் வேலைகளையும் பண்ணிக்கிட்டு, அதுக்கு அப்புறமா நீங்க அல்லாஹ்வை அப்புறம் பாத்துக்கலாம்; குடும்பத்தார்களை இப்போ பாப்போம்னா, நரகத்தில்தான் அவர் தன் தங்கும் இடத்தை தயார் செய்து கொள்ள வேண்டும்.
 
அல்லாஹு சுபஹானஹு தஆலா நம்மை பாதுகாப்பானாக! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பின்பற்றி, நம்முடைய மார்க்கத்தையும், நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளையும் எளிதாக்கி கொள்வதற்கு, அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்வதற்கு அல்லாஹுதஆலா அருள் செய்வானாக! துணை செய்வானாக! உதவி செய்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ صَلَّى ذَاتَ لَيْلَةٍ في المَسْجِدِ، فَصَلَّى بصَلَاتِهِ نَاسٌ، ثُمَّ صَلَّى مِنَ القَابِلَةِ، فَكَثُرَ النَّاسُ، ثُمَّ اجْتَمَعُوا مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، فَلَمْ يَخْرُجْ إليهِم رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَلَمَّا أَصْبَحَ قالَ: قدْ رَأَيْتُ الذي صَنَعْتُمْ ولَمْ يَمْنَعْنِي مِنَ الخُرُوجِ إلَيْكُمْ إلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ علَيْكُم وذلكَ في رَمَضَانَ. الراوي : عائشة أم المؤمنين | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 1129 | خلاصة حكم المحدث : [صحيح]
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ» صحيح البخاري 887
 
குறிப்பு 2)
 
قالَ ابنُ حَزْمٍ، وأَنَسُ بنُ مالِكٍ: قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: فَفَرَضَ اللَّهُ علَى أُمَّتي خَمْسِينَ صَلاةً، قالَ: فَرَجَعْتُ بذلكَ حتَّى أمُرَّ بمُوسَى، فقالَ مُوسَى عليه السَّلامُ: ماذا فَرَضَ رَبُّكَ علَى أُمَّتِكَ؟ قالَ: قُلتُ: فَرَضَ عليهم خَمْسِينَ صَلاةً، قالَ لي مُوسَى عليه السَّلامُ: فَراجِعْ رَبَّكَ، فإنَّ أُمَّتَكَ لا تُطِيقُ ذلكَ، قالَ: فَراجَعْتُ رَبِّي، فَوَضَعَ شَطْرَها، قالَ: فَرَجَعْتُ إلى مُوسَى عليه السَّلامُ، فأخْبَرْتُهُ قالَ: راجِعْ رَبَّكَ، فإنَّ أُمَّتَكَ لا تُطِيقُ ذلكَ، قالَ: فَراجَعْتُ رَبِّي، فقالَ: هي خَمْسٌ وهي خَمْسُونَ لا يُبَدَّلُ القَوْلُ لَدَيَّ، قالَ: فَرَجَعْتُ إلى مُوسَى، فقالَ: راجِعْ رَبَّكَ، فَقُلتُ: قَدِ اسْتَحْيَيْتُ مِن رَبِّي، قالَ: ثُمَّ انْطَلَقَ بي جِبْرِيلُ حتَّى نَأْتِيَ سِدْرَةَ المُنْتَهَى فَغَشِيَها ألْوانٌ لا أدْرِي ما هي؟ قالَ: ثُمَّ أُدْخِلْتُ الجَنَّةَ، فإذا فيها جَنابِذُ اللُّؤْلُؤَ، وإذا تُرابُها المِسْكُ. الراوي : أنس بن مالك وابن حزم | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 163 | خلاصة حكم المحدث : [صحيح]
 
குறிப்பு 3)
 
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَن قَبْلَكُمْ شِبْرًا بشِبْرٍ، وَذِرَاعًا بذِرَاعٍ، حتَّى لو سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ، قُلْنَا: يا رَسُولَ اللَّهِ، اليَهُودَ وَالنَّصَارَى؟ قالَ: فَمَنْ؟ الراوي : أبو سعيد الخدري | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 3456 | خلاصة حكم المحدث : [صحيح]
 
ليأتينَّ على أمَّتي ما أتى على بني إسرائيل حَذوَ النَّعلِ بالنَّعلِ ، حتَّى إن كانَ مِنهم من أتى أُمَّهُ علانيَةً لَكانَ في أمَّتي من يصنعُ ذلِكَ ، وإنَّ بَني إسرائيل تفرَّقت على ثِنتينِ وسبعينَ ملَّةً ، وتفترقُ أمَّتي على ثلاثٍ وسبعينَ ملَّةً ، كلُّهم في النَّارِ إلَّا ملَّةً واحِدةً ، قالوا : مَن هيَ يا رسولَ اللَّهِ ؟ قالَ : ما أَنا علَيهِ وأَصحابي الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2641 | خلاصة حكم المحدث : حسن | التخريج : أخرجه الترمذي (2641) واللفظ له، والطبراني (14/53) (14646)، والحاكم (444)
 
குறிப்பு 4)
 
لما تزوج عليٌّ رضيَ اللهُ عنهُ فاطمةَ رضيَ اللهُ عنها ، قال له رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم : أعطِهَا شيئًا ، قال : ما عندي . قال : فأين درعُك الحطميَّةُ الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح النسائي الصفحة أو الرقم: 3376 | خلاصة حكم المحدث : صحيح التخريج : أخرجه أبو داود (2125)، والنسائي (3376) واللفظ له
 
குறிப்பு 5)
 
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمَّا قَدِمْنَا المَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ: إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالًا، فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي، وَانْظُرْ أَيَّ [ص:53] زَوْجَتَيَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا، فَإِذَا حَلَّتْ، تَزَوَّجْتَهَا، قَالَ: فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ: لاَ حَاجَةَ لِي فِي ذَلِكَ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ؟ قَالَ: سُوقُ قَيْنُقَاعٍ، قَالَ: فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ، فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ، قَالَ: ثُمَّ تَابَعَ الغُدُوَّ، فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَزَوَّجْتَ؟»، قَالَ: نَعَمْ، قَالَ: «وَمَنْ؟»، قَالَ: امْرَأَةً مِنَ الأَنْصَارِ، قَالَ: «كَمْ سُقْتَ؟»، قَالَ: زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ - أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ -، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ» (صحيح البخاري 2048)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/