HOME      Khutba      நபிவழியில் திருமணம் | Tamil Bayan - 756   
 

நபிவழியில் திருமணம் | Tamil Bayan - 756

           

நபிவழியில் திருமணம் | Tamil Bayan - 756


நபி வழியில் திருமணம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : நபி வழியில் திருமணம்
 
வரிசை : 756
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 16 -12 -2022 | 22-05-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலாத்தும் சலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும் நேர்வழியையும் இம்மை மறுமையின் மகத்தான வெற்றியையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, தக்வாவை முன்வைத்து தங்களுடைய வாழ்க்கையை, வியாபாரத்தை, தொழில்துறையை, குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்து கொள்கிறேன்.
 
அன்பிற்குரிய சகோதரர்களே! தொடர்ந்து சில வாரங்களாக நாம் பேசி வருகிறோம்; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தினுடைய திருமணம் எப்படி இருந்தது? இன்று நமது காலத்திலே திருமணம் எப்படி மாற்றப்பட்டு இருக்கிறது? 
 
என்னென்ன அனாச்சாரங்களை, என்னென்ன மார்க்க முரண்பாடுகளை இந்த திருமணத்தில் நாம் நுழைத்திருக்கிறோம்? இன்று திருமணத்தின் பெயரால் எத்தனை எத்தனை வகையான சிரமங்களை, இன்னல்களை, நெருக்கடிகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று. 
 
இன்று, முக்கியமாக சில செய்திகளை பார்த்து இந்த தலைப்பை நிறைவு செய்வோம். முதலாவதாக திருமணத்தின் சட்டம் என்பது மஹரிலிருந்து ஆரம்பமாகிறது. அதாவது, ஒரு ஆண் பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயமான மணக்குடை.
 
وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً‌
 
நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளை கண்டிப்பாக கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் 4 : 4)
 
திருமணத்தைப் பற்றி எங்கெல்லாம் அல்லாஹு தஆலா அல்லாஹ் குர்ஆனிலே குறிப்பிடுகின்றானோ மஹரை கண்டிப்பாக அந்த திருமணத்தோடு சேர்த்து குறிப்பிடுகிறான். மஹர் குறிப்பிடப்படாமல் திருமணம் அல்குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. 
 
ஆகவே, இந்த மஹர் என்பது கட்டாயமான ஒன்றாக இருக்கக்கூடிய அதே நேரத்திலே இந்த மஹர் எளிமையாக இருக்க வேண்டும். இந்த மஹர் ஆடம்பரமாகவோ பகட்டாகவோ இல்லாமல், எந்த அளவு எளிமையாகவும் குறைவாகவும் இருக்குமோ அந்த அளவு இந்த திருமணம் அல்லாஹ்வால் பரக்கத் செய்யப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட, ஒரு நல்ல திருமணமாக அமையும் என்று ஹதீஸிலே நாம் பார்க்கிறோம். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
 
خيرُ الصَّداقِ أيسَرُه
 
திருமண மஹரிலே சிறந்த மஹர் என்பது எது மிக இலகுவாக இருக்குமோ அதாவது ஈசியாக தோது செய்து கொடுக்கப்படக் கூடிய ஒன்றாக இருக்குமோ அதுதான். 
 
அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 3279.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இன்னொரு ஹதீஸை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். 
 
إِنَّ مِنْ يُمْنِ المرأةِ تيسيرُ خِطْبَتِها
 
ஒரு பெண் நர்பாக்கியுடையவள்; பரக்கத் இருக்கிறது; அல்லாஹ்வுடைய அருள் இருக்கிறது என்பதனுடைய அடையாளங்களில் ஒன்று, அவளை பெண் பேச செல்வதே ஒரு இலகுவாக இருக்கும்; அவளை பெண் பேசி முடிப்பது இலகுவாக இருக்கும்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 2235.
 
இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்; இன்று இந்த பெண் பேசுதல் என்பது எத்தகைய ஒரு சடங்காக சம்பிரதாயமாக இன்னும் அதை தொடர்ந்து தங்கள் மேல் சுமத்தப்பட்ட ஒரு சிரமமான அதாவது சடங்குகள் மிக்க ஒரு நிகழ்வாக மாறி இருக்கிறது என்று. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஒரு பெண்ணுடைய பரக்கத், அந்த பெண் அருள் வளம் மிக்கவள், அல்லாஹ்வால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்ற அடையாளங்களிலே ஒன்று, அவளை பெண் பேசுவது மிக இலகுவாக ஆக்கப்பட்டு இருப்பதாகும்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 2235.
 
அங்கே சமுதாயத்தில் பொதுவாக செய்யப்படக்கூடிய, பகட்டாக, ஒரு ஃபார்மாலிட்டியாக பின்பற்றப்படக்கூடிய எதுவும் அங்கு இருக்காது. சென்றார், தந்தையிடத்திலே பேசினார், தந்தைக்கு பேச வந்த மணமகன் பிடித்தார், பிறகு தனது மகளிடத்திலே இப்படி இப்படி என்று சொன்னார், மணமகளுக்கும் பிடித்தது, பிறகு இருவரும் பார்த்தார்கள், முடிந்தது, அவ்வளவுதான். 
 
அடுத்து தேதியைக் முடிவு செய்துவிட்டு வர வேண்டியது தான். இன்று இந்த கித்துபா என்று சொல்கிறார்கள் அல்லவா, கன்ஃபார்ம் பண்றதுக்கே பெண் வீட்டுக்காரங்களை ஒரு கதி பண்ணிடுவாங்க, முதல்ல நான் வரேன் அப்படின்னு சொல்லுவாங்க, வைஃபை கூட்டிகிட்டு போவாரு, அதுக்கு அப்புறமா அண்ணன் தம்பி அவங்க வைஃபுகளை கூட்டிக்கிட்டு போவாரு, இப்படி அப்படி கூட்டிட்டு போய் கடைசியில தெரிஞ்சவங்க எல்லாரையும் கூட்டிட்டு போயிட்டு, கடைசியா ஒரு வழியா பேசின உடனே அதுக்கு அப்புறமா எங்கேஜ்மென்ட் எங்க வைக்கிறது, அதற்கு தனியா ஒரு மண்டபம் அல்லது அதற்கு தனியா ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல், இங்க ஆரம்பத்திலேயே அந்த கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு விடுகிறது. பரக்கத் எடுபட்டு விடுகிறது. 
 
அடுத்து சொன்னார்கள்: அவளுடைய மஹர் இலகுவாக்கப்படுதல். உங்களிடத்தில் என்ன இருக்குமோ அல்ஹம்துலில்லாஹ்! கொடுங்கள். ஒருவரால் அவருடைய வசதிக்கு ஏற்ப இலகுவாக என்ன உடனடியாக தோது செய்யப்படுமோ அதுதான் இலகுவான மஹர் என்பது. அதன் மூலமாக அவளுடைய ரத்த உறவுகளை சேர்த்தல்; இரு குடும்பங்களுக்கு இடையிலே அந்த சொந்தங்கள் இணைதல். 
 
உமருள் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக அழகாக இது குறித்து நமக்கு விளக்கம் தருகிறார்கள்! 
 
قَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ: أَلَا لَا تُغَالُوا صَدُقَةَ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا، أَوْ تَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «مَا عَلِمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكَحَ شَيْئًا مِنْ نِسَائِهِ وَلَا أَنْكَحَ شَيْئًا مِنْ بَنَاتِهِ عَلَى أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً»:
 
பெண்களுடைய மஹர் தொகைகளை நீங்கள் கூட்டிக் கொண்டே உயர்த்திக் கொண்டே செல்லாதீர்கள். நான் செல்வந்தன், எனக்கு வசதி இருக்கின்றது, நான் கொடுக்க முடியும், என்னால் கொடுக்க முடியும், இப்படியாக நீங்கள் உங்களுடைய செல்வ பெருமையை, உங்களுடைய சமுதாய பொருளாதார தகுதியை பேசி பெண்களின் மஹரை நீங்கள் கூட்டிக்கொண்டு செல்லாதீர்கள்.
 
இப்படி மஹர் உயர்த்தி கொடுக்கப்படுவது உலகத்திலே ஒரு கண்ணியமாக இருக்குமேயானால் அது ஒரு பெண்ணை கண்ணியப்படுத்துவதோ சங்கைப்படுத்துவதோ அது ஒரு மரியாதையாக இருக்குமேயானால் அல்லது அல்லாஹ்விடத்திலே இறையச்சத்திற்குரிய ஒரு அமலாக இருக்குமேயானால் 
 
மஹர் கூட்டி கொடுக்கப்படுவதற்கு அதிகப்படுத்துவதற்கு தகுதி உடையவர்களாக அல்லாஹ்வுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள். 
 
பிறகு உமருல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்:
 
12 ஊக்கியா வெள்ளியை விட அதிகமாக மஹர் கொடுத்து தன்னுடைய மனைவிமார்களில் யாரையும் முடித்ததாகவோ தன்னுடைய மகள்களில் யாருக்காவது திருமணம் முடித்ததாகவோ நான் அறியவில்லை. 
 
ஒரு ஊக்கியா என்பது 40 திர்ஹம். ஒரு திர்ஹம் என்பது 2.97 கிராம். இன்றைய வெள்ளியின் மதிப்பு 72 .50 காசு. அந்த கணக்குப்படி இந்த 40 ஊக்கியா என்பது அதிகப்படியா ஒரு லட்சம் அல்லது ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் அல்லது 2000 ரூபாய். அதிகப்படியானது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மஹர் என்பது 10 ஆயிரத்திலிருந்து ஆரம்பித்து அதிகப்படியா ஒரு லட்சம் அளவிற்கு தான் இருந்தது. 
 
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1114. 
 
இந்த ஒரு லட்சம் என்பது இன்று செல்வந்தர்களிடத்திலும் ஒரு கண்ணியமான தொகை. அதே அந்த ஒரு லட்சத்தை நீங்கள் திர்ஹமிலே மாற்றினாலும் சரி, டாலரிலே மாற்றினாலும் சரி, ஒரு லட்சம் என்பது ஒரு நல்ல மதிப்புள்ள ஒரு தொகை. 
 
அல்லாஹ்வுடைய மார்க்கம் ரசூலுல்லாஹ் உடைய வழிமுறை என்பது எக்காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும் என்பதிலே எவ்வளவு பெரிய ஒரு அருமையான எடுத்துக்காட்டு பாருங்கள்! 
 
இன்று பார்க்கிறோம்; வைர நெக்லஸ், வைர செயின், இப்படியாக பல கோடிகளை மஹராகவே கொடுத்து அந்த திருமணங்களிலே பெருமை பேசப்படுவதை, பகட்டு காட்டப்படுவது, ஆடம்பரம் செய்யப்படுவதை பார்க்கின்றோம். 
 
உமர் சொன்னார்கள்: நீங்கள் மஹரை கூட்டாதீர்கள். 
 
இன்று, பல செல்வந்தர்களுடைய குடும்பத்திலே அந்த செல்வந்தர்களுடைய பிள்ளைகள் வயது இருபதிலிருந்து தாண்டி கொண்டு முப்பது வரை செல்கிறது. என்ன சொல்கிறார்கள்? மஹர் கொடுக்க வேண்டும். என்ன மஹர் கொடுக்கப் போகிறார்? இரண்டு கோடிக்கு வைர நெக்லஸ் கேட்டிருக்கிறார்கள். இதற்காக சம்பாதித்து கொண்டிருக்கிறேன். 
 
ஒரு பக்கம் பெண்களிடத்திலிருந்து வரதட்சனை வாங்குவது என்ற பெயரிலே அந்த வரதட்சனை எவ்வளவு பெரிய கொடுமையாக மாறி, இன்று பல சகோதரிகள் வரதட்சனை கொடுப்பதற்கு சக்தி இல்லாமல், கேட்கப்பட கூடிய அந்த வரதட்சனையை ஏற்பாடு செய்யக் கூடியதற்கு சக்தி இல்லாமல் அவர்களுடைய வயது கூடிக்கொண்டு போகிறது என்றால், இன்னொரு பக்கம் இப்படியும் அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. 
 
இரண்டு வகையுமே மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றுதான். பெண்களிடத்திலே வரதட்சணை வாங்குவது என்பது முற்றிலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் தடுக்கப்பட்ட கேவலமான ஒரு செயல். அதுபோன்று ஆண்கள் மகரை கண்ணியப்படுத்தி அதிகப்படுத்தி கொடுக்கிறோம் என்ற பெயரிலே அந்த மஹரை கூட்டிக் கொண்டு செல்வதும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே அனுமதிக்கப்பட்டதல்ல.
 
அடுத்து, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இந்த திருமணத்தை பற்றி சொல்லும் பொழுது, திருமணம் வெளிப்படையாக செய்ய வேண்டும்; அறிவிப்பு செய்ய வேண்டும்; திருமணம் நடந்ததற்கு பிறகு அந்த திருமணத்தை அறிவிப்பு செய்தல். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 1089. 
 
சிலர், திருமணம் நடக்குவதற்கு முன்பே அறிவிப்பு செய்கிறார்கள். அது பிரச்சனை இல்லை. ஆனால் முக்கியம் என்ன? திருமணம் நடந்து விட்டது என்று அறிவிப்பு செய்து அந்த திருமணத்திற்காக வலிமாவிற்கு அழைப்பது. 
 
அப்போ இதிலிருந்து என்ன தெரிகிறது? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலேயே திருமணத்திற்கான விருந்து என்பது ஒரு விருந்தாகத்தான் இருந்தது. 
 
இன்று, பெண் வீட்டின் மீது திருமண விருந்து முற்றிலுமாக சுமத்தப்பட்டு விடுகிறது. நூறிலிருந்து ஆரம்பமாகி ஆயிர கணக்கில் அங்கே விருந்தாளிகள் வருவார்கள். அங்கே யார் விருந்து கொடுக்க வேண்டும்? பெண் வீட்டார்கள். 
 
அதற்குப் பிறகு இவர் வலிமா என்று இவர் தனியாக வைத்திருப்பார். இதில் என்ன ஒரு அதிசயம்; சில ஆண்கள் இவரு திருமணத்திற்கு கூட்டிட்டு வர விருந்தாளிகள் எல்லாருக்கும் பெண் வீட்டுக்காரங்க விருந்து கொடுத்திடனும். அது நூறாக இருக்கட்டும், ஆயிரம் இருக்கட்டும், இவரு வலீமாவுக்கு ஒரு பட்ஜெட் போடுவாரு, 100 பேரு, 200 பேரு, முன்னூறு பேரு, பெண் வீட்டுக்காரங்களுக்கு ஒரு கோட்டா அலாட் பண்ணுவாரு, 50 70 30 என்று ஒரு கோட்டா அலாட் பண்ணுவாரு. 
 
இதுக்கு மேல நீங்க கூட்டிட்டு வராதா இருந்தா கூட்டிட்டு வரலாம். அதற்குண்டான காசு நீங்க தனியா கட்டிடுங்க. 
 
எப்படி நிலைமை இருக்கிறது என்று பாருங்கள்! இவரு ஹராமான விருந்துக்கு கூட்டிட்டு வராரு கணக்கில்லாம. அதற்கு கண்டிப்பாக விருந்து போட வேண்டும். இவர் சொல்ற மண்டபத்தில் வைக்க வேண்டும். அதுவும் எல்லா செலவும் பெண்ணை பெத்தவனுடைய தலை மேலே போட்றது. 
 
இவரு சுன்னத்தா கொடுக்கக்கூடிய அந்த வலிமாவுக்கு எல்லாம் லிமிட் பண்ணி, கணக்கு பார்த்து ஒரு 50 பேர் கோட்டா, இதற்கு மேல நீங்க கூட்டிட்டு வரதா இருந்தா நீங்க கூட்டிட்டு வரலாம், அதற்குண்டான செலவை நீங்க கொடுத்துடுங்கன்னு சொல்றது. 
 
சகோதரர்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த ஹதீஸை பாருங்கள்! இந்த நிக்காஹை அறிவிப்பு செய்யுங்கள். 
 
நிக்காஹ் நடந்ததற்கு பிறகு என்னுடைய மகளுக்கு, என்னுடைய மகனுக்கு திருமணம் நடந்தது, இப்போது இஷாவுக்கு பிறகு வலிமா இருக்கின்றது, லுஹருக்கு பிறகு வலிமா இருக்கிறது, உண்ண வாருங்கள் என்று அறிவிப்பு செய்வது. 
 
அந்த வலிமாவுடைய விருந்தின்போது அல்லது நிக்காஹ் நடந்த அந்த இரவிலே சிறு பிள்ளைகள் தஃப் அடித்து விளையாடுவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இது ஒரு சுன்னா. ஆண்கள் அல்ல, பெண்கள் அல்ல, சிறுமிகள் அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் தஃப் அடித்து, இசை இல்லாமல் பாட்டு பாடி விளையாடுவது, அது ஒரு சுன்னா. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«فَصْلُ مَا بَيْنَ الْحَلَالِ وَالْحَرَامِ الدُّفُّ وَالصَّوْتُ فِي النِّكَاحِ»
 
ஹராமான செயலுக்கும் ஹலாலான செயலுக்கும் அதாவது விபச்சாரத்திற்கும் ஹலாலான நிக்காஹ்விற்க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஹலாலான நிக்காஹிலே தஃப் இருக்கும். அதிலே சத்தம் இருக்கும். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : நசாயி, எண் : 3369.
 
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அன்சாரி உடைய வீட்டிற்கு அருகிலே செல்லும் பொழுது அங்கே கொஞ்சம் ஆரவாரம் இருந்தது. 
 
«يَا عَائِشَةُ، مَا كَانَ مَعَكُمْ لَهْوٌ؟ فَإِنَّ الأَنْصَارَ يُعْجِبُهُمُ اللَّهْوُ»
 
என்னவென்று? கேட்டார்கள். திருமணம் என்று சொன்னார்கள். அப்படியா திருமணமானதா, அங்கே எந்த விதமான தஃப் நிகழ்ச்சி இல்லையே, இவர்களுக்கு அந்த மாதிரியான விளையாட்டு வேடிக்கை பிடிக்குமே என்று கூறி, அந்த சிறுமிகளை தப்ஃபடித்து, பாட்டு பாடி, சந்தோஷப்படுத்தும்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டினார்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 5162. 
 
அடுத்ததாக, வலிமா என்ற இந்த விருந்தை பொறுத்தவரை, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எது உங்களுக்கு முடியுமோ, எது உங்களுக்கு சாத்தியமானதோ அதை கொடுங்கள்.
 
இந்த மார்க்கத்தை பொருத்தவரை இபாதத்துகளிலேயே அல்லாஹு தஆலா உடைய சட்டம்,
 
لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا  
 
எந்த ஒரு ஆன்மாவையும் அதனுடைய சக்திக்கு மேலாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை. (அல்குர்ஆன் 2 : 286)
 
அப்படி இருக்கும் பொழுது, அல்லாஹு தஆலா நம்முடைய இந்த தேவைகளை, நம்முடைய இந்த வாழ்க்கையின் அவசியங்களை நம் மீது சிரமமாக இருக்கும் அளவிற்கு, நம் மீது நமக்கு இடையூறாக இருக்கும் அளவிற்கு, நமக்கு அதை சுமத்தி இருப்பானா? அப்படி ஒரு கலாச்சாரத்தை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்திருப்பார்களா? என்றால் அறவே இல்லை.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வலிமாவை அவரவருடைய வசதிக்கு ஏற்ப, அதிலும் எவ்வளவு சுருக்கமாக இலகுவாக செய்து கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு இந்த வலிமாவை நிறைவேற்றும்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த வழிகாட்டலை பார்க்கிறோம்.
 
அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹுவை பார்த்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: 
 
«أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»
 
அப்துர் ரஹ்மான்! முடிந்தால் ஒரு ஆட்டையாவது நீங்கள் அறுத்து வலீமா கொடுங்கள் என்று. 
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6082.
 
அதுபோன்று, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த வழிகாட்டலிலே ஒன்று, வலிமாவுக்கு அழைக்கப்பட்டால் அந்த வலிமா விருந்துக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
«إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الوَلِيمَةِ فَلْيَأْتِهَا»
 
உங்களில் யாராவது ஒருவர் வலிமா விருந்துக்கு அழைக்கப்பட்டால் அந்த விருந்துக்கு கண்டிப்பாக வரட்டும். வலீமா விருந்துக்கு செல்வது வாஜிப். வலிமாவுடைய விருந்துக்கு செல்வது மிக கட்டாயமான ஒன்று. புகாரி, 
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : எண் : 5173.
 
ஆனால், அந்த இடத்திலே ஏதாவது முன்கர் -தடுக்கப்பட்ட காரியங்கள் நிகழ்கின்றன, இசையோ அல்லது ஆண்கள் பெண்கள் ஹிஜாப் இல்லாமல் கலப்புகளோ, இப்படியாக மார்க்கத்தில் தடுக்கப்பட்ட வெறுக்கப்பட்ட செயல்கள் இருக்குமேயானால் நாம் சென்றாலும் அந்த இடத்தில் அவர்களை கண்டிக்க முடியாது, சொல்ல முடியாது என்று இருக்குமேயானால் அத்தகைய வலிமாக்களுக்கு செல்லக்கூடாது. 
 
எங்கே மார்க்கம் அனுமதித்த ஷரியா முறைப்படி விருந்து இருக்கின்றதோ அந்த வலிமா விருந்துக்கு செல்வது முக்கியமான ஒரு சுன்னா. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வலிமாவை எப்படி தங்களுடைய வசதிக்கு ஏற்ப இலகுவாக்கினார்கள் என்பதற்கு ஒரு முக்கியமான ஒரு ஹதீஸை பாருங்கள்! அதாவது ஆடு அறுத்து தான் வலிமா போட வேண்டுமா? அல்லது இருக்கக்கூடிய எந்த உணவையாவது வலிமாவாக ஆக்கிக் கொள்ளலாமா? என்றால் அதற்கு இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹதீஸை பதிவு செய்கிறார்கள். 
 
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைபருக்கும் மதினாவிற்கும் இடையிலே இருக்கும் பொழுது, ஹைபர் போரில் இருந்து திரும்பிய பொழுது, சஃபியா ரலியல்லாஹு அன்ஹா அவர்களோடு குடும்ப வாழ்க்கையை தொடங்கினார்கள். கைபரிலே திருமணம் நடந்தது. குடும்ப வாழ்க்கையை மதினாவிற்கு வரும் வழியிலே தொடங்கினார்கள். 
 
அப்போது அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பினார்கள். அடுத்த நாள் என்னுடைய வலிமா விருந்துக்கு முஸ்லிம்களை அழைத்து வாருங்கள் என்று. 
 
அனஸ் சொல்கிறார்கள்: அந்த வலிமாவிலே ரொட்டியும் இல்லை, கறியும் இல்லை. அங்கே என்ன இருந்தது? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிலாலுக்கு சொன்னார்கள்: பிலாலே! விரிப்பை விரியுங்கள் என்று. அதற்குப் பிறகு அங்கே பேரித்தம் பழங்கள் கொட்டப்பட்டன. பிறகு அந்த பாலாடை கட்டி கொட்டப்பட்டது. அதை எடுத்து நாங்கள் சாப்பிட்டோம். அவ்வளவுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வலிமா. (1)
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4213.
 
சபியா ரலியல்லாஹு அன்ஹா என்ற மிக உயர்ந்த குலத்துடைய சிறந்த பெண்மணியை மணமுடித்தார்கள். அவர்கள் அந்த வலிமாவை எப்படி இலகுவாக்கிக் கொண்டார்கள்? மதினாவிற்கு போவோம், கிராண்டா பண்ணுவோம், இவ்வளவு பெரிய பெண்ணை கல்யாணம் பண்ணி இருக்கோம், இப்படி எல்லாம் திட்டம் போடுவதற்கு அங்கே வேலை இல்லை. 
 
இன்று நிக்காஹ், அடுத்த நாள் வலிமா, மதியம் நிக்காஹ் அடுத்த நாள் மதியம் வலிமா, இவ்வளவு எளிமையாக ஒரு விருந்துக்கு மக்கள் செய்யக்கூடிய சிரமங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!
 
அடுத்து, இந்த திருமணமானவருக்கு நாம் துஆ செய்வது என்பது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய முக்கியமான ஒன்றாக இருந்தது. 
 
இன்று, நிக்காஹ் செய்கிற அந்த மணமகனோடு செல்ஃபி எடுத்துக் கொள்வதில்தான் பலருக்கு போட்டா போட்டி இருக்கிறதே தவிர, யாராவது மனம் உணர்ந்து, அங்கே இக்லாஸாக துஆ செய்கிறார்களா? 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கே சொன்னார்கள்:
 
«بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ»
 
பாரக்கல்லாஹு லக்க -அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும்; அல்லாஹ் உனக்கு மனைவியை கொடுத்திருக்கிறான், அந்த மனைவிலே உனக்கு பரக்கத் செய்யட்டும்; அல்லாஹ் உனக்கு கொடுத்திருக்கக்கூடிய செல்வத்திலே பரக்கத் செய்யட்டும்.
 
وبارك عليك -உன் மீது அல்லாஹ் பரக்கத் செய்யட்டும். அதாவது உன்னையும் பரக்கத் உள்ளவனாக, உனது குணத்தால், உனது பண்புகளால், ஒழுக்கத்தால், ஈமானால், இஸ்லாமால் உன்னை பரக்கத் உள்ளவனாக ஆகட்டும். 
 
யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க; பரக்கத் என்றாலே துட்டு என்று. நமக்கு என்ன ஆயிப்போச்சு, பரக்கத் என்றாலே துட்டு நிறைய இருக்கணும், காசு காசு காசு காசு காசுனு ஒரே காசு பைத்தியம்.
 
பரக்கத் என்பது பணத்தையே குறிக்காது. அப்படியே குறிக்கும் என்றாலும், அது அதனுடைய கடைசி அர்த்தமாக இருக்கும், முதல் எது? நம்முடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய ஈமான். அல்லாஹ்விடத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அங்கீகாரம். அல்லாஹ்விடத்தில் இருந்து நமக்கு கிடைக்கக்கூடிய தௌஃபீக். அல்லாஹ்விடத்தில் இருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ரஹ்மத். நல்லவர்களுடைய மூமின்களுடைய முஹப்பத். அதுதான் முதல் பரக்கத். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுவார்கள்: அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும். உன் மீது பரக்கத் செய்யட்டும். 
 
وجمع بينكما في خير - இன்னும் உங்கள் இருவரையும் உங்கள் இருவருக்கும் இடையிலே ஒற்றுமையை ஏற்படுத்தட்டும், நன்மையான விஷயங்களுக்கு சேர்த்து வைக்கட்டும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபுதாவுது, எண் : 2130.
 
அதாவது, மார்க்க விஷயங்களிலே கணவன் சினிமாவுக்கு கூப்பிடுறான்; கணவனோட சேர்ந்திருக்கனும், போயிடலாமா? கணவனுக்கு ஹிஜாப் பிடிக்கவில்லை என்பதற்காக ஹிஜாபை எடுத்த சகோதரிகள் எத்தனை பேர்! ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அடுத்து, அந்த திருமணமான அன்றைய இரவு கணவன் மனைவியிடத்திலே நடந்து கொள்ளக் கூடிய அந்த ஒழுக்கத்தை பற்றியும் ஹதீஸ்களிலே நாம் பார்க்கிறோம். 
 
அஸ்மா பின்த் உமைஸ் ரழியல்லாஹு அன்ஹா சொல்லுகின்றார்கள்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மக்காவில் திருமணம் நடந்திருந்தது. எங்கே அவர்கள் சேர்த்து வைக்கப்பட்டார்கள்? மதினாவிலே. அவர்கள் பாலிஃக் ஆனதற்கு பிறகு மட்டுமல்ல, பாலிஃக் ஆகி, இவர்கள் தாம்பத்திய உறவுக்கு தகுதியாகி விட்டார்கள் என்று மதினாவின் உடைய பெண்கள் சாட்சி சொன்னதுக்கு பிறகு, உடல் வாகை பார்த்து அந்த காலத்திலே எப்படி முடிவு செய்யப்படுமோ இந்தப் பெண் தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி உள்ளவளாக ஆகிவிட்டால் என்று அது முடிவு செய்யப்பட்டதற்கு பிறகு, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா உடைய தாயாரும், அன்சாரி பெண்களும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை ஜோடிச்சு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே கொண்டு வருகிறார்கள். 
 
அஸ்மா பின்த் உமைஸ் சொல்கிறார்கள்: நாங்கள் ஆயிஷாவை அழைத்துக் கொண்டு ரசூலுல்லாஹ்விடத்திலே சென்றபோது, என்னோடு மற்ற பெண்மணிகளும் இருந்தார்கள். அங்கே நாங்கள் ஒரு புது பெண்ணை அழைத்துச் செல்கிறோம், எந்த விருந்துமே அங்கே இருக்கவில்லை, எந்த வகையான உணவும் அங்கே இருக்க வில்லை.
 
ஒரு கோப்பையிலே பால் இருந்தது, அவ்வளவுதான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பாலை எடுத்து குடித்துவிட்டு ஆயிஷாவிடத்திலே கொடுக்கிறார்கள். 
 
அஸ்மா பின்த் உமைஸ் சொல்லுகிறார்கள்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வெட்கத்தால் அந்தப் பாலை வாங்காமல் அப்படியே நிற்கிறார்கள். அஸ்மா பின்த் உமைஸ் சொல்லுகிறார்கள்: ரசூலுல்லாஹ் உடைய கரத்தால் கொடுக்கும் போது அதை தட்டாதே வாங்கிக்கொள் என்று. 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அதை வாங்கி வெட்கத்தோடு குடிக்கிறார்கள். பிறகு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகிறார்கள்: இங்கே இருக்கக்கூடிய உனது தோழிகளுக்கும் கொடு! அப்போது வந்திருந்த தோழிகள் சொன்னார்கள்: எங்களுக்கு இப்ப அதை குடிக்க வேண்டும் என்ற நாட்டம் இல்லை என்று.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: பசியை பொய்யோடு சேர்க்காதீர்கள்! என்று. ஏன் அந்த அளவு ஒரு நெருக்கடியான சிரமமான வாழ்க்கையில் தான் அவர்கள் இருந்தார்கள். அந்தப் பெண்கள் பசியோடு இருந்தார்கள். 
 
அந்த வார்த்தையை பாருங்கள்! ஒரு புதுப் பெண்ணை அழைத்துக் கொண்டு வருகிறோம், வீடு எப்படி உணவுகளால் நிரம்பி இருக்குமோ அது எதுவுமே அங்கு இல்லை. பசியோடு அந்த பெண்கள் இருந்தார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த இரக்க குணத்தை பாருங்கள்! தான் மட்டும் அதை குடித்து விடவில்லை. தன்னுடைய மனைவிக்கு மட்டும் கொடுக்கவில்லை. அதிலே மீதம் வைத்து அங்கு வந்திருக்கக் கூடிய எல்லா பெண்களுக்கும் கொடுங்கள் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (2)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னது அஹ்மத், எண் : 26925,27471.
 
அதுபோன்று, அந்த புது மணமகளை கணவன் என்ன செய்ய வேண்டும்? ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: உங்களிலே ஒருவர் மனம் முடிப்பாரேயானால் அவர் அந்தப் பெண்ணுடைய நெற்றி முடியை பிடித்து சொல்லட்டும்:
 
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
 
யா அல்லாஹ்! இவளுடைய நன்மையை உன்னிடத்திலே நான் எனக்கு கேட்கிறேன். இவளை நீ எந்த நற்குணத்தில் வைத்திருக்கிறாயோ அந்த நற்குணத்தை உன்னிடத்திலே கேட்கிறேன். இவளுடைய தீங்கிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன். எந்த குணத்திலே இவளை நீ அமைத்திருக்கிறாயோ அந்த குணங்களில் என்னென்ன கெடுதிகள் தீமைகள் இருக்கின்றனவோ அந்த தீமைகளிலிருந்து நான் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். (3)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 2160.
 
சகோதரர்களே! இன்று, இந்த சுன்னத்தான வழிமுறைகள் எல்லாம் நம்முடைய மணமகனுக்கும் சொல்லித் தரப்படுவதில்லை; மணமகளுக்கும் சொல்லித் தரப்படுவதில்லை. இன்றைய வாழ்க்கையே செல்ஃபி எடுப்பதாகவும், போட்டோ எடுப்பதாகவும் மாறியிருக்கும் போது, ஏன் ஹஜ்ஜுக்கு சென்று காபாவை தவாப் செய்யும் போது கூட செல்ஃபி எடுத்துக் கொண்டுதான் இஹ்ராமிலே செல்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு இவர்களுடைய கவனம் சிதறி இருக்கிறது; அந்த அளவு ஒரு இபாதத்திலேயே கவனம் இல்லாமல் இருக்கும்போது, குடும்ப வாழ்க்கையிலே இந்த துஆக்களை எல்லாம் செய்து, அதுவும் குறிப்பாக சில சலஃப்புகள் செய்திருப்பதைப் போன்று இரண்டு ரக்அத் தொழுது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.
 
குடும்ப வாழ்க்கை என்பது எவ்வளவு ஒரு பெரிய வாழ்க்கை! எவ்வளவு பெரிய ஒரு சவால்கள் நிறைந்த ஒரு வாழ்க்கை! அதற்காக அல்லாஹ்விடத்திலே இருவரும் துஆ செய்து, அந்த வாழ்க்கையை ஆரம்பித்தால் அந்த வாழ்க்கை அல்லாஹ்விடத்திலே எவ்வளவு ஒரு பரக்கத்துக்குரியதாக இருக்கும்! அதற்குப் பிறகு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தாம்பத்திய உறவுக்கு முன்பு ஒரு துஆவை சொல்லித் தருகிறார்கள். 
 
யாராவது தன்னுடைய மனைவியிடத்திலே சேர்வதாக இருந்தால் அதற்கு முன்பாக இந்த துவாவை சொல்லிக் கொடுங்கள்; 
 
بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
 
பிஸ்மில்லாஹ் -யா அல்லாஹ்! இந்த மனைவியை உனது பெயரை கொண்டு தொடுகிறேன். இவளிடத்திலே உனது பெயரை கொண்டு பேசுகிறேன்.
 
யா அல்லாஹ்! ஷைத்தானை எங்களை விட்டும் தூரம் ஆக்கிவிடு! எங்களுக்கு நீ என்ன குழந்தையை கொடுக்கப் போகிறாயோ அந்த குழந்தையிடம் இருந்தும் ஷைத்தானை நீ தூரமாக்கி விடு! என்று துவாவோடு தான் அந்த தாம்பத்திய உறவுக்கு கணவன் செல்ல வேண்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அந்த தாம்பத்திய உறவிலே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமேயானால் அந்தக் குழந்தையை ஷைத்தான் தீண்ட மாட்டான். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3271.
 
ஆகவே, இந்த துஆ என்பது முக்கியமான துஆ. இன்று, பொதுவா ஒரு காலம் இருந்தது. எனக்குத் தெரிந்து கிராமங்களில் எல்லாம் வயசானவர்கள் பெண்ணை பெண்பார்க்கும் வரும்போது முதல்ல கேட்கிறது, குர்ஆன் முடிச்சிருக்கிறாங்களானு கேட்பாங்க; அப்புறம், தர்ஜுமத்தில் குர்ஆன் முடிச்சு இருக்காங்களான்னு கேட்பாங்க. இப்படித்தான் கேட்டு அங்கு பெண் பார்ப்பது ஆரம்பமாகி கொண்டிருந்தது. 
 
ஆனால், இன்று எல்லாம் எடுத்த எடுப்பிலேயே என்ன டிகிரி முடிச்சு இருக்காங்க? அதுக்கு முன்னாடியே பெண்ணுடைய வீட்டை பார்த்து தான் பெண் கேட்க வருவாங்க. பெண்ணுடைய வீட்டை பார்த்து இவங்களுக்கு சொந்த வீடு இருக்கா? இவங்களுக்கு என்ன வியாபாரம்? எல்லாத்தையும் ஒரு வகையா நமக்கு முன்னாடியே சி ஐ டி போட்டு விசாரிச்சதுக்கு பிறகு தான் பெண் பார்க்கவே வருவாங்க. அதுக்கு தான் இடையில புரோக்கர் வேற நிறைய இருக்காங்களே, அவர்களும் டீடெயில ஃபுல்லா குடுத்துடுவாங்க. 
 
ஏன் சொல்கிறேன் என்றால், இங்கே ஒரு முக்கியமான திருமணத்தைப் பற்றி நாம் நினைவு கூற வேண்டும். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய காலத்திலே இந்த திருமணம் நடத்தி வைத்தல், திருமணம் செய்து கொடுத்தல், மகனுக்கும் மகளுக்கும் எவ்வளவு எளிமையான ஒன்றாக இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
 
சயீத் இப்னு முஸய்யிப் ரஹிமஹுல்லாஹ் என்ற மிகப்பெரிய தாபிஃயீ. இவர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய அந்த பரம்பரை அதாவது அப்துல் முத்தலிப் உடைய உடைய வம்சத்தோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நெருக்கமான உறவு என்ற முறையிலே வரக்கூடியவர்கள். 
 
இவர்கள் யாரை மணம் முடிக்கிறார்கள் என்றால், அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகளை. அவர்கள் பெயர் ஃபாத்திமா. இவர்களைப் பற்றியே தனி வரலாறு இருக்கிறது. 
 
சயீத் இப்னு முஸய்யிப் அவர்கள் பெரிய தாபிஃயீ. அவர்களுக்கு ஒரு மகள், மிக அழகான மகள். மார்க்க கல்வியிலும் சிறந்த பெண். அப்போது மன்னராக இருந்த அப்துல் மாலிக் இப்னு மர்வான் அவர்களும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய அந்த உயர்ந்த அந்தப் பரம்பரையிலே வருவார்கள். 
 
மன்னர் தன்னுடைய மகனுக்கு அதாவது அல்வலீத் இப்னு அப்துல் மலிக் அவருக்கு உங்களுடைய மகளை மணம் முடித்து தாருங்கள் என்று கேட்டு வருகிறார். ஒரு மன்னர் பொதுவா பொண்ணு எங்க எடுப்பாரு ஆலிம்சா வீட்ல எடுப்பாரா? சாதாரண வசதி உள்ளவங்களும் ஆலிம்சா பொண்ணு எடுக்கிறது கிடையாது. 
 
எல்லாரும் என்ன பாக்குறீங்க; ஆலிம்ஸாக்கு பொண்ணு கிடையாதுங்க. ஆலிம்ஸாக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க. ஆலிம்சா என்னங்க சம்பாரிப்பாரு? பாவம் 10 ஆயிரம் 15 ஆயிரம் சம்பளத்தை வைத்து அவர் வாழ்வாரா? என்று பிள்ளையை கொடுக்க மாட்டாங்க. ரொம்ப பரம்பரை ஃபக்கிர்ல வேற வழி இல்லாம ஆலிம்சாக்கு பொண்ணு கொடுத்தா தான் உண்டு, எனக்கு தெரிந்து முஸ்லிம்கள் ஊர்ல ஆலிம்களுக்கு பொன்னே கொடுக்க மாட்டாங்க. ஆலிம்களுக்கு பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்க சொந்த ஊர்லயே யாராவது அவர்களுடைய உறவிலேயே கஷ்டப்படுறவங்க யாராவது பார்த்து கொடுத்தா தான் உண்டு. அதனாலேயே தமிழ்நாட்டுல ஆலிம்களுக்கு யாருமே படிக்கப் போறதே கிடையாது. இப்ப எல்லாம் வடநாட்டில் இருந்து வாடகைக்கு கூட்டிட்டு வரதா ஆயிப்போச்சு. 
 
முதல எல்லாம் ஆலிம்களுக்கு சம்பளம் இல்லைனா கூட, சமுதாயத்துல கண்ணியமாவது இருந்துச்சு. இந்த தருதல தவ்ஹீத் வந்து அந்த கண்ணியமும் போச்சு. இப்ப பொருளாதார வசதியும் கிடையாது. சமுதாயத்துல கண்ணியமும் கிடையாது. யார் பொண்ணு கொடுப்பா? யாரு வாழ்க்கை கொடுப்பா?
 
இங்க பாருங்க! இங்கே என்ன நடக்குது? மன்னர் அப்துல் மலிக்கு தன்னுடைய இளவரசருக்கு அடுத்து அவர் தான் பட்டத்து இளவரசர். அவருக்கு பெண் கேட்டு வராரு. யாரிடம்? மஸ்ஜிதுல ஹதீஸ் பாடம் நடத்திக் கொண்டிருக்க கூடிய சயீத் இப்னு முசய்யிப்  அவர்களிடம் உங்க பொண்ண கொடுங்கன்னு கெஞ்சி வராரு. 
 
இங்க தான் பாருங்க, அதெல்லாம் கொடுக்க முடியாது வாப்பா, ரெண்டு பேருக்கும் செட்டாகாது, கொடுக்க மாட்டேங்குறாரு, சரியான கோபம் மன்னருக்கு, அத பின்னாடி அவரு வச்சு வேற செஞ்சுறாரு. 
 
ஒரு சந்தர்ப்பத்தை பார்த்து கூப்பிட்டு வச்சு, நல்ல சாட்டையால வேற அடிச்சிடறாங்க. அதை பத்தி எல்லாம் அவங்க கவலைப்பட மாட்டாங்க. எத்தனை அடியை வாங்கினாலும் சரி, அல்லாஹ்வுக்காக அதை தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள் தான் அந்த ஆலிம்கள். 
 
இவர்கள் பரம்பரை அரபி குரேஷி வம்சம். குரேஷிகளிலேயே அவ்வளவு பெரிய குடும்பம். மகளா சொல்ல வேண்டாம், ஒரு இளவரசருக்கு தகுதியாக கூடிய அளவுக்கு அந்த ஒரு அழகிலேயும் அறிவிலேயும் உள்ளவர்கள். 
 
அன்னைக்கு அன்றைய பாடத்துல பாக்குறாங்க, தன்னுடைய மாணவர்களை. அதுல குராசான் -ஈரான்ல உள்ள ஒரு பகுதி பாரசீகம். இன்று அது வந்து அந்த காலத்திலேயே அரபு மொழிகள்ள மக்கள் படித்து படித்து அவர்கள் மதர் டங் ஃபார்சியாக இருந்தாலும், அரபிய தாய் மொழியாக ஆக்கக்கூடிய அளவுக்கு மார்க்க கல்வியிலேயே தேரியவர்கள். 
 
இப்ப பாக்குறாங்க. தன்னுடைய மாணவர்களில் குராஸான்ல உள்ள ஒரு மாணவர பார்த்து கூப்பிடுறாங்க. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சானு? கேட்கிறாங்க. நானோ பரம ஃபகீரு. என் ஊரு எங்க இருக்கு, நீங்க திமஷ்குல இருக்கீங்க, பரதேசியா வந்திருக்கிறேன், எனக்கு எங்க கல்யாணம்? எனக்கு யாரு பொண்ணு கொடுக்க போறா? 
 
சரி, ஓகே என்னுடைய மகளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேங்கிறாரு. அவருக்கு கை கால் எல்லாம் ஒன்னும் ஓடல, நடுங்குது. ஆசிரியர் வேற, எப்படிப்பட்ட ஆசிரியர்! ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியர் உடைய தர்ஜாவில் உள்ள, இமாம்களுக்கு எல்லாம் அவர்களுடைய காலத்தில் வந்த தாபியீன்களுக்கெல்லாம் இவர் ஆசிரியர். 
 
அப்படிப்பட்டவர் மூளையில் உட்கார்ந்திருக்கிற ஒரு மாணவரை கூப்பிட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னா எல்லாரும் பாத்துட்டு இருக்காங்க. மன்னர் வந்து பொண்ணு கேட்டுட்டு கொடுக்க மாட்டேன்னு சொன்னதையும், பார்த்துட்டு இருக்கிற நேரத்துல இப்படி சொன்னா அவருக்கு எப்படி இருக்கும்! 
 
என்னிடம் ஒன்னுமே இல்லையே என்று சொல்றாரு. பரவாயில்ல அப்படின்னு சொல்லிட்டு கொஞ்சம் திர்ஹங்கள் தீனார்களை இவர்கள் அன்பளிப்பாக செய்கிறார். இத மஹரா கொடுத்துக்க அப்படின்னு சொல்லி அன்பளிப்பாக கொடுத்து, அப்ப சுத்தியுள்ள தன்னுடைய சமகாலத்து தாபிஃயீன்களை கூப்பிட்டு, அதே மஜ்லிஸ்ல நிக்காஹ் பண்ணி வச்சிடுறாங்க. முடிஞ்சு போச்சு. 
 
இவருக்கு கை கால் ஓடல, ஒண்ணுமே விளங்கல. பாடம் முடிச்ச உடனே வீட்டுக்கு ஓடுனவர் தான் வீட்டுக்கு போயிட்டு கதவை பூட்டிக்கிட்டார். வீடுன்னா என்ன, அந்த புறம்போக்கு இடம் இருக்கு பாருங்க அங்க அவங்க அவங்க குடிசை போட்டு இருப்பாங்க, அதுல போய் உட்கார்ந்துட்டாரு. 
 
அவர் சொல்றாரு: அல்லாஹ் நான் என்ன பண்ணுவேன்னு தெரியலையே! பயங்கரமான சிக்கலில் மாட்டிக்கிட்டேனே! எனக்கு இந்த பூமி திடீர்னு பிலந்தால் கூட அதுல போய் பூந்துப்பேனே தப்பிக்கிறதுக்கு. அப்படின்னு தெகசுட்டு இருக்கிறாப்ல. கொஞ்ச நேரத்துல பார்த்தா கதவ தட்டறாங்க. திறந்து பார்த்தா சையது இப்னு முசைப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மகளுடன் நிற்கிறாங்க.
 
இந்தாப்பா, உன் மனைவி. அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும் என்று சொல்லிட்டு, மகள் கிட்ட சொல்றாங்க: இந்த பாரு, ஜனாஸாவா தான் உன்ன பாக்கணும், இந்த வீட்டை விட்டு வெளியே வரதா இருந்தா. 
 
சுபஹானல்லாஹ்! எத்தகைய ஒரு வாழ்க்கை! அவர்களுடைய எளிமையான வாழ்க்கை! எப்படி அவர்கள் திருமணங்களை யோசித்தார்கள்? சிந்தித்தார்கள்? 
 
அதற்குப் பிறகு இந்த ரெண்டு பேர் மூலமாக எப்படி மார்க்கக் கல்வி பரவுது? எப்படி எல்லாம் இவர்கள் சமுதாயத்திற்கு பணி செய்தார்கள்? என்று. 
 
ஆகவே, திருமணம் என்பது அங்கே முதலாவதாக அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக செய்யப்படுகிறதா? இல்மை தக்வாவை அடிப்படையாக வைத்து தேர்வுகள் நடக்கின்றனவா? என்பதை கவனிக்க வேண்டும்.
 
உங்களுக்கு வசதிகள் தேவைப்படலாம்; உங்களுக்கு அழகு தேவைப்படலாம்; உங்களுக்கு பொருளாதாரம் தேவைப்படலாம்; அதை மார்க்கம் குறை சொல்லவில்லை. ஆனால், மார்க்கத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு, மார்க்க ஒழுக்கங்களும், மார்க்க கடமைகளும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, அது குறித்து எந்த விதமான விழிப்புணர்வும் இல்லாமல், வெறும் அழகு, செல்வம், பொருளாதாரம், வாங்கக்கூடிய சம்பளத்தை மட்டுமே வைத்து அங்கே திருமணங்கள் முடிக்கப்பட்டால் அங்கே என்ன பரக்கத் இருக்கும்? என்று யோசித்துப் பாருங்கள்!
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நமக்கு அருள் புரிவானாக! மீண்டும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு வருவதற்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வழிகாட்டலின் பக்கம் திரும்புவதற்கு.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: «أَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ، وَالمَدِينَةِ ثَلاَثَ لَيَالٍ يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ»، فَدَعَوْتُ المُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ، وَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلاَ لَحْمٍ، وَمَا كَانَ فِيهَا إِلَّا أَنْ أَمَرَ بِلاَلًا بِالأَنْطَاعِ فَبُسِطَتْ، فَأَلْقَى عَلَيْهَا التَّمْرَ وَالأَقِطَ وَالسَّمْنَ، فَقَالَ المُسْلِمُونَ: إِحْدَى أُمَّهَاتِ المُؤْمِنِينَ، أَوْ مَا مَلَكَتْ يَمِينُهُ؟ قَالُوا: إِنْ حَجَبَهَا فَهِيَ إِحْدَى أُمَّهَاتِ المُؤْمِنِينَ، وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهِيَ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ، فَلَمَّا ارْتَحَلَ وَطَّأَ لَهَا خَلْفَهُ، وَمَدَّ الحِجَابَ (صحيح البخاري 4213)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ يَعْنِى ابْنَ يَزِيدَ الْأَيْلِيَّ، قَالَ: حَدَّثَنَا أَبُو شَدَّادٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، قَالَتْ: كُنْتُ صَاحِبَةَ عَائِشَةَ الَّتِي هَيَّأَتْهَا وَأَدْخَلَتْهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي نِسْوَةٌ قَالَتْ: فَوَاللَّهِ مَا وَجَدْنَا عِنْدَهُ قِرًى إِلَّا قَدَحًا مِنْ لَبَنٍ، قَالَتْ: فَشَرِبَ مِنْهُ ثُمَّ نَاوَلَهُ عَائِشَةَ فَاسْتَحْيَتِ الْجَارِيَةُ فَقُلْنَا: لَا تَرُدِّي يَدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُذِي مِنْهُ فَأَخَذَتْهُ عَلَى حَيَاءٍ فَشَرِبَتْ مِنْهُ، ثُمَّ قَالَ: نَاوِلِي صَوَاحِبَكِ فَقُلْنَا: لَا نَشْتَهِيهِ فَقَالَ: «لَا تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا» قَالَتْ: فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: إِنْ قَالَتْ إِحْدَانَا لِشَيْءٍ [ص:465] تَشْتَهِيهِ لَا أَشْتَهِيهِ يُعَدُّ ذَلِكَ كَذِبًا قَالَ: «إِنَّ الْكَذِبَ يُكْتَبُ كَذِبًا حَتَّى تُكْتَبَ الْكُذَيْبَةُ كُذَيْبَةً» (مسند أحمد مخرجا 27471)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ [ص:249] وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ». قَالَ أَبُو دَاوُدَ: زَادَ أَبُو سَعِيدٍ، ثُمَّ لِيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَدْعُ بِالْبَرَكَةِ فِي الْمَرْأَةِ وَالْخَادِمِ (سنن أبي داود 2160) [حكم الألباني] : حسن
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/