HOME      Khutba      பேரருளாளனின் அடியார்கள் | Tamil Bayan - 757   
 

பேரருளாளனின் அடியார்கள் | Tamil Bayan - 757

           

பேரருளாளனின் அடியார்கள் | Tamil Bayan - 757


பேரருளாளனின் அடியார்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : பேரருளாளனின் அடியார்கள்
 
வரிசை : 757
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 23-12-2022 | 29-05-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹு தஆலாவின் அச்சத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழுமாறு, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்று அதன்படி தங்களுடைய வியாபாரங்கள், தொழில்துறைகள், திருமணங்கள், தங்களுடைய குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை அனைத்தையும் அல்லாஹ்வுடைய தீனுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா தனது கண்ணியமான வேதத்திலே எல்லோரையும் பார்த்து கேட்கிறான்:
 
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
 
ஆக, அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டாமா? அவர்களது உள்ளங்கள் மீது பூட்டுகளா போடப்பட்டுள்ளன? (அல்குர்ஆன் 47 : 24)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
 
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா? (அல்குர்ஆன் 54 : 17, 22, 32, 40)
 
இந்த குர்ஆன் சஹாபாக்களை அந்த உயர்ந்த அந்தஸ்திற்கு கொண்டு சென்றது. அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய கண்ணியத்தை பெற்று கொடுத்தது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த குர்ஆன் கொடுக்கப்பட்ட மாதத்தை நோன்பிருந்து, கண்ணியப்படுத்தி, இந்த குர்ஆனை நம்முடைய வாழ்க்கையிலே கொண்டு வருவதற்குரிய, இஸ்லாமை நம்முடைய வாழ்க்கையிலே கொண்டு வருவதற்குரிய, தக்வாவை பெறுவதற்குரிய மாதமாக இந்தக் குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் ஆக்கப்பட்டது.
 
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
 
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் கண்டிப்பாக நோன்பு நோற்கவும். இன்னும், எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழிபடுத்தியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள்)! (அல்குர்ஆன் 2 : 185)
 
அல்லாஹ் சொல்லுகிறான்: இத்தகைய மாபெரும் இறைவேதம் பரிசுத்தமான இந்த திக்ர் நமக்கு கொடுக்கப்பட்டதற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துதல். இரண்டாவது, இந்த குர்ஆனை கொண்டு நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்கு தேவையான பக்குவத்தை தர்பியாவை அடைதல். 
 
அந்த குர்ஆனை சிந்தித்தலின் தொடரிலே பல வசனங்களை நாம் உதாரணமாக எடுக்கலாம். அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா சூரத்துல் ஃபுர்கான் 25-வது அத்தியாயத்தில் 63 லிருந்து 77 வரை சூரா இறுதிவரை சில அடையாளங்களை சில செய்திகளை கூறுகிறான்.
 
மூமின்கள் எப்படி இருப்பார்கள்? நம்பிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள்? யாரை அல்லாஹ் நேசிக்கிறானோ அந்த மக்கள் எத்தகைய தன்மையுடையவர்களாக பண்புடையவர்களாக இருப்பார்கள்? என்பதை அல்லாஹ் கூறுகிறான்.
 
وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏
 
ரஹ்மானுடைய அடியார்கள் பூமியில் மென்மையாக (அடக்கமாக, பணிவாக, பெருமையின்றி, அக்கிரமம் செய்யாமல்) நடப்பார்கள். இன்னும், அவர்களிடம் அறிவீனர்கள் பேசினால் ஸலாம் கூறி (விலகி சென்று) விடுவார்கள். (அல்குர்ஆன் 25 : 63)
 
அல்லாஹு தஆலா இந்த இடத்தில் சொல்லப்படக்கூடிய அந்த நல்லோரை عِبَادُ الرَّحْمٰنِ -ரஹ்மானுடைய அடியார்கள் என்று புகழ்கிறான்.
 
அவர்களை அல்லாஹுத்தஆலா புகழ்கிற அந்த வாசகத்தை பாருங்கள்; عِبَادُ الرَّحْمٰنِ
 
தன்னை அல்லாஹு தஆலா ரஹ்மான் என்று புகழ்ந்து கொண்டு, ரஹ்மான் ஆகிய என்னுடைய அடியார்களை நான் பொருந்தி கொண்டேன்; நான் இவர்களை என்னுடைய அடியார்களாக ஏற்றுக் கொண்டேன்; இவர்களை நான் அங்கீகரித்துக் கொண்டேன் என்று அல்லாஹு தஆலா இவர்களை வாழ்த்தி ஆரம்பிக்கிறான். 
 
தொடர்ந்து வரக்கூடிய வசனங்களில் சொல்லப்படுகிற அந்த தன்மைகளை உடையவர்கள் மீது எந்த அளவு அல்லாஹு தஆலா மகிழ்ச்சி அடைந்திருந்தான் என்றால், அவர்கள் மீது எந்த அளவு அல்லாஹ் திருப்தி அடைந்திருந்தான் என்றால் அவர்கள் ரஹ்மானாகிய என்னுடைய அடியார்கள் என்று அல்லாஹு தஆலா அவர்களை உயர்த்தி பேசுகிறான்; தன்னோடு இணைத்து பேசுகிறான். 
 
அப்படி என்ன விசேஷமான குணங்கள் அவர்களிடத்திலே இருக்கும்? அதை அல்லாஹ் சொல்கிறான்:
 
الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا
 
அவர்கள் இந்த பூமியிலே பெருமை இல்லாமல், ஆணவம் இல்லாமல், கர்வம் இல்லாமல், மமதை இல்லாமல், அகந்தை இல்லாமல், செருக்கு இல்லாமல், எந்தவிதமான தற்பெருமையும் இல்லாமல் பணிவாக நடப்பார்கள். 
 
அல்லாஹ் அக்பர்! இந்த வசனத்தில் அல்லாஹு தஆலா இரவு தொழுகையும் பற்றி குறிப்பிடுகிறான். இன்னும் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் பலவற்றை குறிப்பிடுகிறான். 
 
ஆனால், இந்த ரஹ்மானுடைய அடியார்களின் சிஃபத்துகளை ஆரம்பிக்கும்போது அவர்களிடத்தில் வெளிப்படையாக அறியப்படுகிற முதல் அடையாளமாக அல்லாஹு தஆலா அடையாளப்படுத்த விரும்புவது, அவர்கள் இடத்தில் இருக்கக்கூடிய பணிவை.
 
மக்களோடு அவர்கள் எப்படி இருப்பார்கள்? உங்களுடைய ஆடை உயர்ந்து இருக்கலாம். உங்களுடைய வீடு பிரமாண்டமாக இருக்கலாம். உங்களுடைய வாகனம் பிரம்மாண்டமாக இருக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் பொருள் விலை மதிப்பான பெரிய ஆடம்பரமான பொருளாக இருக்கலாம். 
 
ஆனால், அதனால் உள்ளத்தில் பெருமை வந்து விடக்கூடாது. இது என்னிடத்தில் இருப்பதால் நான் பெரியவன்; இது இல்லாததால் அவன் தாழ்ந்தவன்; பிறரை விட தன்னை தனக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கிற ஒரு பொருளாதார நிஃமத்தால் உயர்ந்தவனாக காட்டிக் கொண்டு, செல்வத்தில் அல்லது சமூக அந்தஸ்தில், பொருளாதாரத்தில் குறைந்த ஒருவரை ஏளனமாக பார்ப்பது.
 
இவர் ஒரு ஆடம்பரமான ஆடையை உடுத்திருக்கிறார், அவரோடு சஃப்பிலே சாதாரணமான எளியவர் வந்து நிற்கும்போது, அவருடைய உள்ளம் எப்படி இருக்கும்? இவர் ஒரு பெரிய ஆடம்பரமான வாகனத்திலே செல்கிறார், இன்னொருவர் சாதாரணமான வாகனத்தில் சென்று அங்கே ஒட்டி நிற்கிறார். 
 
இப்படியாக வாழ்க்கையிலே பல சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். அந்த நேரத்தில் நம்முடைய உள்ளம் எப்படி இருக்கிறது? அல்லாஹு தஆலா ஒவ்வொரு நொடியிலும் நம்முடைய உள்ளத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான். 
 
இந்த உள்ளம் எப்படி இருக்கிறது? என்று அல்லாஹு தஆலா கவனித்துக் கொண்டு இருக்கிறான். 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்: ரஹ்மானுடைய அடியார்கள் அவர்கள் பணிவாக இருப்பார்கள்.
 
அவர்கள் நடையே பணிவாக இருக்கும். நடை என்றால் வெறும் அவர்கள் நடப்பது மட்டுமல்ல, அவர்கள் வாகனம் ஓட்டினால் பணிவாக ஓட்டுவார்கள். பிறரை மிரட்டாமல் ஓட்டுவார்கள். அமைதியாக செல்லுவார்கள். இப்படி எல்லா விஷயங்களையும் எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய பேச்சிலே கண்ணியம் இருக்கும். மற்றவர்களை பேச விடுவார்கள். கண்ணியமாக, அமைதியாக, மென்மையாக அவர்கள் நடப்பார்கள்.
 
அடுத்து அல்லாஹ் அவர்களின் அடுத்த பண்பை சொல்கிறான்:
 
وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏
 
அறியாத மக்கள், கல்வி அறிவு இல்லாதவர்கள், ஒழுக்கம் தெரியாதவர்கள், மார்க்கத்தை தெரியாதவர்கள், பண்பாடு இல்லாதவர்கள் அவர்களிடத்திலே சச்சரவு செய்தால், வாக்குவாதத்திற்கு பேச்சுக்கு வந்தால் அவர்கள் சலாம் என்று சொல்லி விலகி விடுவார்கள். (அல்குர்ஆன் 25 : 63)
 
எத்தகைய அழகான சமூக குணத்தை அல்லாஹு தஆலா தன்னுடைய ரஹ்மானுடைய அடியார்களுக்கு விசேஷகுணமாக குறிப்பிடுகிறான்! 
 
இன்று நாம் என்ன செய்கிறோம்? நம்மை பெருமைப்படுத்தி காட்டினால்தான் நாமும் இந்த சமூகத்திலே ஒரு மனிதனாக இருக்கிறோம். நமக்குப் பிறகு என்ன இருக்கிறது? இவ்வளவு வசதி இருந்து, வீடு இருந்து, பங்களா இருந்து, கார் இருந்து, இவ்வளவு செல்வம் இருந்து, நான் இப்படி பணிவாக மக்களில் மக்களாக இருந்தால் பிறகு எனக்கு என்ன இருக்கிறது? எத்தகைய கெட்ட மனநிலைக்கு நாம் மாறி இருக்கிறோம் பாருங்கள்! 
 
அல்லாஹு தஆலா முஸ்லிம்களை பற்றி சொல்கிறான்:
 
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏
 
யார் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, தானும் நல்லமலை செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுவாரோ அவரைவிட பேச்சால் மிக அழகானவர் யார்? (அல்குர்ஆன் 41 : 33)
 
எத்தகைய பெரிய பிரச்சாரம் செய்யக்கூடிய பிரசங்கியாக இருந்தாலும் அவர் எப்படி இருப்பார், அமல் செய்து கொண்டு, நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று காட்டிக் கொள்வார்.
 
தன்னை முஸ்லிம்களை விட்டு பெரிதுபடுத்தி, அன்னியப்படுத்தி, அவர்களை விட எனக்கு ஒரு பெரிய அந்தஸ்து இருக்கிறது என்பதாக காட்டிக் கொள்ள மாட்டார். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சபையிலே உட்கார்ந்திருந்தால் வரக்கூடியவர் கேட்பார்; உங்களிலே முஹம்மது யார்? என்று. பெரும்பாலானவர்கள் அபூபக்கரை நினைத்துக் கொள்வார்கள்; இவர் தான் அல்லாஹ்வுடைய தூதர் என்று. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுட்டிக்காட்டப்பட்டால் தான் அவர்கள் ரசூலுல்லாஹ்வை அடையாளம் காணுவார்கள் என்றால் எந்த அளவு நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திலே பணிவானவர்களாக அடக்கமானவர்களாக இருந்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள்!
 
இரண்டு குணங்களை அல்லாஹு தஆலா முதலாவதாக சொல்கிறான். அடியார்களோடு சம்பந்தப்படக்கூடிய இரண்டு குணங்களை அல்லாஹு தஆலா இந்த 63 வது வசனத்திலே சொல்கிறான். அவர்கள் பூமியிலே மென்மையாக நடப்பார்கள். அவர்களால் யாருக்கும் எந்த பிரச்சனையும், தொந்தரவும் இருக்காது. 
 
المُسْلِمُ مَن سَلِمَ المُسْلِمُونَ مِن لِسَانِهِ ويَدِهِ
 
முஸ்லீம் என்றால் யார் நம்முடைய கரத்தால் நாவால் பிறருக்கு எதுவரை பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை எப்படி முஸ்லிம்களாக ஆக முடியும்
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :10.
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
واللَّهِ لا يُؤْمِنُ، واللَّهِ لا يُؤْمِنُ، واللَّهِ لا يُؤْمِنُ. قيلَ: ومَن يا رَسولَ اللَّهِ؟ قالَ: الذي لا يَأْمَنُ جارُهُ بَوايِقَهُ
 
அல்லாஹ்வுடைய தூதர் மூன்று முறை சத்தியம் செய்து சொன்னார்கள்; உங்களில் ஒருவர் முஃமினாக ஆகவே முடியாது, அண்டை வீட்டார் உங்களுடைய பிரச்சனையிலிருந்து பயம் அற்றவராக ஆகாதவரை.
 
அறிவிப்பாளர் : அபூ ஷுரைஹ் அல்அதவி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6016.
 
இவன் வந்து விட்டானா? இவனால் என்ன ஆகும்? என்ற நடுக்கத்தில், திடுக்கத்தில், பயத்திலே ஒருவர் நம்மை கருதினால் அது ஈமான் கிடையாது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். 
 
அல்லாஹு தஆலா தன்னுடைய ரஹ்மானுடைய அடியார்களை சொல்லும்போது அவர்கள் பூமியில் மென்மையாக நடப்பார்கள் என்று கூறுகிறான். 
 
யாராவது வம்புக்கு சண்டைக்கு வந்தாலும் கூட, அவர்கள் தங்களுடைய பந்தாவை காட்ட மாட்டார்கள். தங்களுடைய சமூக அந்தஸ்தை காட்டி பெருமை அடிக்க மாட்டார்கள். சலாம் என்று சொல்லி அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் துஆ செய்துவிட்டு விலகிக் கொள்வார்கள். 
 
அடுத்த வசனத்தில் அல்லாஹு தஆலா அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இருக்கக்கூடிய அந்த தொடர்பை சொல்கிறான்:
 
وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏
 
அவர்கள் இரவு கழிப்பார்கள், தங்களது இறைவனுக்கு சஜ்தா செய்தவர்களாக. (அல்குர்ஆன் 25 : 64)
 
இறைவனுக்கு முன் நின்றவர்களாக இரவு தொழுகையில் கவனம் செலுத்துவார்கள். இஷா தொழுகை மட்டுமல்ல, ஃபஜ்ர் தொழுகை மட்டுமல்ல, இரவு தொழுகைக்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவார்கள். 
 
يَنْزِلُ رَبُّنا تَبارَكَ وتَعالَى كُلَّ لَيْلةٍ إلى السَّماءِ الدُّنْيا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ، يقولُ: مَن يَدْعُونِي، فأسْتَجِيبَ له؟ مَن يَسْأَلُنِي فأُعْطِيَهُ؟ مَن يَستَغْفِرُني فأغْفِرَ له؟
 
அல்லாஹ்வை தனிமையிலே இரவிலே சந்திப்பதற்காக, அல்லாஹு சுபஹானஹு தஆலா முதல் வானத்திற்கு இறங்கி வந்து தேவைகளை கேட்பவர்கள் இருக்கிறார்களா? பாவமன்னிப்பு தேடுபவர்கள் இருக்கின்றார்களா? நான் பாவ மன்னிப்பு அளிக்கிறேன் என்று சொல்லுகின்றான் அல்லவா, அல்லாஹ்விடத்தில் பேசுவதற்காக இரவிலே நேரம் ஒதுக்குவார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1145.
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா இந்த வசனத்திற்கு கூடுதல் விளக்கம் சொல்கிறார்கள்: குறைந்தபட்சம் மகரிபுக்கும் இஷாவுக்கும் இடையிலே மகரிபுடைய அந்த சுன்னத் இரண்டு ரக்அத்தை தொழுது விட்டாலும், இந்த வசனத்திற்கு உரியவராக தகுதி உடையவராக அவர் ஆகிவிடுகிறார். 
 
அந்த இரவு நேரங்களை அல்லாஹ்வுக்கு சுஜூது செய்தவர்களாக, அல்லாஹ்விற்கு கியாம் நிலையிலே நின்றவர்களாக இறைவனை வணங்குவார்கள்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ருடைய தொழுகை இஷா உடைய தொழுகையை சிறப்பித்து சொன்னார்கள்:
 
مَن صَلَّى العِشَاءَ في جَمَاعَةٍ فَكَأنَّما قَامَ نِصْفَ اللَّيْلِ، وَمَن صَلَّى الصُّبْحَ في جَمَاعَةٍ فَكَأنَّما صَلَّى اللَّيْلَ كُلَّهُ
 
ஃபஜ்ருடைய தொழுகை இஷாவுடைய தொழுகையை நாம் ஜமாத்தோடு நிறைவேற்றும்போது முழு இரவு தொழுத நன்மை நமக்கு கிடைக்கின்றது.
 
அறிவிப்பாளர் : உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 656.
 
அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் அவர்கள் எந்த அளவு ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள் என்பதை அல்லாஹு தஆலா அடுத்த வசனத்தில் சொல்லுகிறான். 
 
அவர்களுடைய உள்ளத்தில் இருந்து வரக்கூடிய அந்த துஆக்கள் எப்படி இருக்கும்? அவர்கள் மறுமைக்காக அதிலும் குறிப்பாக அல்லாஹ்வை பயந்து நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடக்கூடிய துஆக்களை அல்லாஹ்விடத்திலே அதிகம் கேட்பார்கள்.
 
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا (65) إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
 
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னம் - நரகத்தின் தண்டனையை தூரமாக்கி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை (நிராகரிப்பாளர்களை விட்டும்) நீங்காத ஒன்றாக இருக்கிறது.” “நிச்சயமாக அது நிரந்தர தங்குமிடத்தாலும் தற்காலிக தங்குமிடத்தாலும் மிக கெட்டது.” (அல்குர்ஆன் 25 : 65,66)
 
இன்று, நம்முடைய வணக்க வழிபாடுகளிலே இறையச்சம் குறைந்திருப்பது, நம்முடைய உள்ளங்களில் அல்லாஹ்வுடைய பயம் குறைந்திருப்பது, நம்முடைய கண்களில் அழுகை இல்லாமல் இருப்பது, இதற்கெல்லாம் காரணம், அந்த நரகத்தை குறித்த அச்சமின்மை; அல்லாஹ்விடத்திலே அந்த நரகத்திலிருந்து அதிகம் பாதுகாப்பு தேடாமல் இருப்பது.
 
அப்படியே சடங்காக சில துஆக்களை சொன்னாலும் நாவின் ஓரத்தில் இருந்து கேட்டுவிட்டு கடந்து விடுகின்றோமே தவிர, உணர்ந்து நரகத்தினுடைய அந்த அதாபை மனதிலே கொண்டுவந்து, அதை சிந்தித்து எப்படி எல்லாம் அல்லாஹு தஆலா நரகத்தைப் பற்றி எச்சரிக்கை செய்திருக்கிறான்? ஹதீஸ்களிலே எத்தனை அச்சுறுத்தல் வந்திருக்கின்றன? அவற்றையெல்லாம் மனதிலே நிறுத்தி, கொஞ்சம் கண் கலங்கி, அல்லாஹ் இத்தகைய கொடிய தண்டனையிலிருந்து என்னை பாதுகாப்பாயாக என்று துஆ செய்ய வேண்டும். 
 
போகிறபோக்கில் கேட்கிற நூறு விஷயங்களோடு ஒரு விஷயமாக, யா அல்லாஹ்! எங்களை நரகத்திலிருந்து பாதுகாப்பாயாக! என்று நுனிநாக்கிலே கேட்டுவிட்டு சென்று விடுவதல்ல. 
 
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்:
 
ஜஹன்னம் உடைய அதாபை எங்களை விட்டு தூரமாக்கி விடுவாயாக. (அல்குர்ஆன் 25 : 65)
 
அன்பிற்குரிய சகோதரர்களே! குர்ஆனிலே நபிமார்களுடைய துஆக்களை சிந்தித்து பாருங்கள்! ஹதீஸிலே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறி இருக்கக்கூடிய துஆவை சிந்தித்துப் பாருங்கள்! நரகத்தை குறித்து அவர்கள் பாதுகாப்பு தேடியது மிக முக்கியமாக பதிவு செய்யப்பட்டு இருக்கும். சொர்க்கத்தை வேண்டுவது; நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவது. இது மிக முக்கியமாக துஆக்களிலே ஒன்று. 
 
அந்த துஆவை தான் அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். இதிலிருந்து அல்லாஹ் என்ன சொல்லிக் காட்டுகிறான்? ரஹ்மானுடைய அடியார்கள் மறுமையின் சிந்தனை உள்ளவர்களாக இருப்பார்கள். ஆகிறத்துடைய பயத்தை உடையவர்களாக இருப்பார்கள். நரகத்தினுடைய பயத்தை உடையவர்களாக இருப்பார்கள். 
 
யார், நரகத்தை அதிகம் பயப்படுகிறார்களோ, அல்லாஹ்விடத்தில் அதிகமாக யார் பாதுகாப்பு தேடுகிறார்களோ, நரகத்தை சொல்லப்பட்டால் அவர்களுடைய உள்ளத்தில் அச்சம் வருகிறதோ, அவர்களுக்கு தனியாக உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 
 
நீங்கள் பெரும் பாவங்களை விட்டு விடுங்கள் என்று; நீங்கள் வட்டியை விட்டு விடுங்கள்; விபச்சாரத்தை விட்டு விடுங்கள்; வாக்கை மீறுவதை விட்டுவிடுங்கள்; நீங்கள் அந்த பெரும் பாவத்தை செய்யாதீர்கள்; இந்த பெரும் பாவத்தை செய்யாதீர்கள் என்று தனியாக உபதேசம் செய்யத் தேவையில்லை. 
 
நரகத்தின் மீதுண்டான பயம், நரகத்தின் மீதுண்டான அச்சம் அவரை கண்டிப்பாக பெரும் பாவங்களில் இருந்து தடுக்கும். ஒவ்வொரு பெரும் பாவத்திலிருந்தும். பொய் சொல்வதாக இருக்கட்டும், கோல் சொல்வதாக இருக்கட்டும், புறம் பேசுவதாக இருக்கட்டும், இன்னும் எந்த ஒரு பெரும் பாவமாக இருந்தாலும் சரி, நரகத்துடைய பயம் யாருடைய உள்ளத்தில் அதிகரித்து விடுமோ நிலையாக நின்று விடுவோம். அவர்களை பெரும் பாவம் செய்ய விடவே விடாது. 
 
அப்படியே நஃப்சுக்கு அடிமையாகி பெரும் பாவத்தின் திரும்பி விட்டாலும் உடனடியாக அவரை அல்லாஹ்விற்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி, அவருடைய கண்களை அழ வைக்கும்.
 
அவருடைய மனதை அப்படியே உருட்டிக் கொண்டே இருக்கும். அதிலிருந்து விலகி தவ்பா செய்து அல்லாஹ்வின் பக்கம் மீளாத வரை அவரை நிம்மதியாக இருக்க விடவே விடாது.
 
இன்றைய முஸ்லிம் சமுதாயத்திலே பெரும் பாவங்கள் மலிந்து விட்டதை பார்க்கின்றோம். எல்லா வகையிலும் பெரும் பாவங்கள், சமூக வாழ்க்கையிலே, குடும்ப வாழ்க்கையில் பெரும்பாவங்கள், பொருளாதாரத்தில் பெரும்பாவம், வணக்க வழிபாடுகளில், பித்அத்துகளை செய்வதிலே பெரும்பாவங்கள். 
 
இப்படியாக மிகப்பெரிய ஒரு சோதனை பெரும்பாவத்தைக் கொண்டு சோதிக்கப்பட்டு இருப்பதற்குரிய காரணம், நரகத்தை ரொம்ப ஈசியாக எடுத்துக் கொண்டார்கள்.  ஈசியாக அதிலிருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணி விட்டார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
ما منكم من أحدٍ إلا سيُكلِّمُه اللهُ يومَ القيامةِ ، ليس بينه وبينه تَرجمانُ ، فينظرُ أيْمنَ منه ، فلا يرى إلا ما قدَّم ، وينظرُ أشأَمَ منه ، فلا يرى إلا ما قدَّم ، وينظرُ بين يدَيه ، فلا يرى إلا النَّارَ تِلقاءَ وجهِه ، فاتَّقوا النَّارَ ، ولو بشِقِّ تمرةٍ ، ولو بكلمةٍ طيِّبةٍ
 
நரகத்தை பயந்து கொள்ளுங்கள்! நாளை அடியார் மறுமையிலே வருவான். அவருடைய வலது பக்கத்தில் அவன் செய்ததை தவிர எதுவும் இருக்காது. அவருடைய இடது பக்கத்தில் அவன்  செய்ததை தவிர எதுவும் இருக்காது. அவருடைய பின்பக்கத்திலே அவன் செய்ததை தவிர எதுவும் இருக்காது. உங்களுக்கு முன்னால் அந்த நரகம் இருக்கும். நரகத்தை பயந்து கொள்ளுங்கள்!
 
அறிவிப்பாளர் : அதி இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7443.
 
மறுமையினுடைய பெயர்களில் ஒன்று, கூலி கொடுக்கப்படக்கூடிய நாள் அது. எப்படி அல்லாஹ் கூலி கொடுப்பான்? துல்லியமாக அல்லாஹ் கொடுப்பான். கணக்கு பார்த்து அல்லாஹ் கொடுப்பான். எதையும் அவன் தவற விட்டு விட மாட்டான். 
 
ஆகவே, அந்த ரஹ்மானுடைய அடியார்கள் அல்லாஹ்வை பயந்து கொண்டு இருப்பார்கள். அல்லாஹ்விடத்தில் நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடி, இஸ்திக்பார் செய்து கொண்டே இருப்பார்கள். 
 
பிறகு, அல்லாஹு தஆலா அவர்களுடைய அடுத்த சமூக வாழ்க்கைக்கு, குடும்ப வாழ்க்கைக்கு, பொருளாதார வாழ்க்கைக்கு வருகிறான். சொல்கிறான்:
 
وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا
 
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வரம்பு மீறமாட்டார்கள், கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். அவர்கள் செலவழிப்பது அதற்கு மத்தியில் நடுநிலையாக இருக்கும். (அல்குர்ஆன் 25 : 67)
 
குடும்பத்திற்கு செலவு செய்தாலும் சரி, அல்லது ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் சரி, எப்படி அவர்கள் செலவு செய்தாலும் சரி, அவர்கள் எல்லை மீற மாட்டார்கள்; வரம்பு மீற மாட்டார்கள். எந்த இடத்தில் எந்த அளவு செலவு செய்ய வேண்டுமோ அதை அவர்கள் மீற மாட்டார்கள்.
 
அவர்கள் கஞ்சத்தனமும் கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். தன்னுடைய தாய்க்கு கொடுப்பதிலே, தந்தைக்கு கொடுப்பதிலே, சகோதரர்களுக்கு கொடுப்பதிலே, உறவுகளுக்கு கொடுப்பதிலே, ஏழைகளுக்கு கொடுப்பதிலே அவர்கள் கருமித்தனம் காட்ட மாட்டார்கள்.
 
அவர்கள் தர்மம் செய்வது, அவர்கள் செலவிடுவது இந்த இரண்டுக்கும் இடையிலே நீதமாக நேர்மையாக இருக்கும்.
 
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹு தஆலா துல்லியமாக சொல்கிறான். ரஹ்மானுடைய அடியானாக வேண்டும் என்றால் இந்த தன்மை இருக்க வேண்டும். இத்தனை தன்மைகள் இருக்க, சிலர் தன்னுடைய ஒரு குறிப்பிட்ட வழிபாட்டை கொண்டு மட்டுமே திருப்தி அடைந்து விட்டு, மற்ற வணக்க வழிபாடுகளை புறக்கணிப்பதை பார்க்கிறோம். 
 
கேட்டால், என்ன ஒரு தைரியம்! என்னிடத்தில் இருக்கக்கூடிய இந்த நன்மையை கொண்டு அந்த பாவங்களை எல்லாம் அல்லாஹ்விடத்தில் சமாளித்து விடலாம் என்று. எதோ மனிதர்களை சமாளிப்பது போன்று, மக்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை சமாளிப்பது போன்று, அல்லாஹ்வை சமாளித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். 
 
அல்லாஹு தஆலா எந்த பாவத்தை கொண்டு அடியானை பிடிப்பான்? எந்த பாவத்தைக் கொண்டு அடியானை தண்டிப்பான்? என்பது நமக்கு தெரியாது. 
 
சில நேரங்களில் ஒரு நன்மை எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுவதற்கு காரணமாகவும் அமைந்து விடலாம். சில நேரங்களில் ஒரு பாவம் எல்லா நன்மைகளும் அழிக்கப்படுவதற்கும் காரணமாக ஆகிவிடலாம். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
إنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بالكَلِمَةِ مِن رِضْوانِ اللَّهِ، لا يُلْقِي لها بالًا، يَرْفَعُهُ اللَّهُ بها دَرَجاتٍ، وإنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بالكَلِمَةِ مِن سَخَطِ اللَّهِ، لا يُلْقِي لها بالًا، يَهْوِي بها في جَهَنَّمَ
 
அடியான் சில நேரங்களில் சில வார்த்தைகளை பேசி விடுகிறான். உள்ளத்தில் அதனுடைய எண்ணங்கள் கூட இருப்பதில்லை. ஆனால், நரகத்தில் அந்த ஒரு வார்த்தையின் காரணமாக அவன் தூக்கி எறியப்படுவான், அதனுடைய ஆழம் வரை. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6478.
 
முஃமின் அப்படித்தான் இருப்பான். ஒவ்வொரு நன்மையையும் இதன் மூலமாக அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தை கொடுக்க வேண்டும் என்று, அந்த நன்மையை பெரிதாக நினைத்து, பேணுதலாக செய்வான். எந்த நன்மையும் அலட்சியம் செய்து விடமாட்டான். 
 
அதுபோன்று எந்த ஒரு பாவத்தையும் சரி, சாதாரணமாக கருதி அதை செய்ய துணிய மாட்டான். இந்தப் பாவம் எனக்கு அல்லாஹ்வின் கோபத்திற்கு சாபத்திற்கு காரணமாகி விடுமோ என்று பயப்படுவான். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை நாம் நினைவு கூற வேண்டும். மூஃமின் யார்? ஒரு பாவம் செய்தால் ஒரு மலை தன் மீது விழுவதை பயப்படுவது போன்று பயப்படுவான். நயவஞ்சகன் யார்? மூக்கிலே ஈ உட்கார்ந்து சென்றால் அதை எப்படி உணர முடியாதோ அல்லது அதை எப்படி அலட்சியம் செய்வோமோ அந்த மாதிரி பாவத்தை உணர்வான். (4)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6308.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த ஹதீஸ் எவ்வளவு பெரிய எச்சரிக்கை பாருங்கள்! 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்: அந்த நல்லவர்கள், ரஹ்மானுடைய அடியார்கள் தர்மம் செய்தாலும், செலவு செய்தாலும் சரி, அளவு கடக்க மாட்டார்கள். கஞ்சத்தனமும் காட்ட மாட்டார்கள். அவர்களுடைய செலவு நடுநிலையாக இருக்கும். 
 
அடுத்து அல்லாஹ் சொல்கின்றான்:
 
وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ 
 
அவர்கள் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணக்கத்திற்குரியவனாக வணங்க மாட்டார்கள். அல்லாஹ்வை தவிர வேற யாரையும் அழைக்க மாட்டார்கள். அல்லாஹ்வைத் தவிர யாரிடத்திலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 25 : 68) 
 
இதுதான் அல்லாஹ்வுடைய மார்க்கம். அல்லாஹ்வுடைய தீன். அல்லாஹ்வுடைய தீன் என்பது  ஒருங்கிணைந்த மார்க்கம் இது. இந்த தீனிலே நற்குணங்களும் இருக்க வேண்டும். தவ்ஹீதும் இருக்க வேண்டும். ஒழுக்கமும் இருக்க வேண்டும். கட்டுப்பாடும் இருக்க வேண்டும். தூய வழிபாடும் இருக்க வேண்டும். 
 
அப்படி இல்லாமல் ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஒன்றை உயர்த்தி பேசப்பட்டு, இன்னொன்று புறக்கணிக்கப்படுமேயானால், அது யூதர்களின் கிறிஸ்தவர்களின் மார்க்கமாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அது இஸ்லாமாக ஆகாது.
 
அந்த நல்லவர்கள் எத்தகையவர்கள் என்றால் அல்லாஹ் உடன் ஒருபோதும் இன்னொரு இறைவனை அவர்கள் அழைக்கவே மாட்டார்கள். வணங்கவே மாட்டார்கள். ஷிர்க்கை விட்டு விலகி இருப்பார்கள். 
 
அல்லாஹு தஆலா அடுத்து சொல்கிறான்:
 
 وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ 
 
இன்னும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைக்க மாட்டார்கள் (-வணங்க மாட்டார்கள்), (கொல்லக்கூடாது என்று) அல்லாஹ் தடுத்த உயிரை கொல்ல மாட்டார்கள் (அதற்குரிய) உரிமை இருந்தாலே தவிர. இன்னும், விபச்சாரம் செய்யமாட்டார்கள். யார் இவற்றை செய்வாரோ அவர் (மறுமையில்) தண்டனையை சந்திப்பார். (அல்குர்ஆன் 25 : 68)
 
அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை அவர்கள் கொலை செய்ய மாட்டார்கள். கொலை குற்றத்திற்கு ஆளாக மாட்டார்கள். எந்த உயிரை கொல்ல வேண்டும் என்று அல்லாஹ் சட்டப்படி அனுமதி கொடுத்தானோ, அவர் ஒன்று ஒருவரை கொலை செய்திருக்க வேண்டும் அல்லது திருமணமானதற்கு பிறகு விபச்சாரம் செய்திருக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். அல்லாஹு தஆலா அனுமதி கொடுக்காத, உரிமை கொடுக்காத எந்த ஒரு உயிரையும் கொலை செய்ய மாட்டார்கள். 
 
இன்னும், அவர்கள் ஜினா -விபச்சாரம் செய்ய மாட்டார்கள். தங்களுடைய மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்வார்கள். அல்லாஹ் ஹலால் ஆக்கிய தங்களுடைய மனைவிமார்களை தவிர, வேறொன்றில் தங்களுடைய இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக அவர்கள் தேட மாட்டார்கள்.
 
எப்படி அல்லாஹுதஆலா ஒருங்கிணைத்துக் கொண்டு வருகிறான் பாருங்கள்! தவ்ஹீதை சொல்கிறான். அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள். பிறகு அல்லாஹுத்தஆலா குற்றவியலை பற்றி சொல்கிறான். அவர்கள் கொலை குற்றம் செய்ய மாட்டார்கள். 
 
பிறகு, அல்லாஹு தஆலா எது இன்று உலக சமுதாயத்தின் ஒழுக்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதோ அதை அழகாக மூஃமின்களுக்கு தடை செய்து விடுகிறான். அவர்கள் ஜினா செய்ய மாட்டார்கள். 
 
ஒரு சமுதாயத்தில் ஷைத்தான் ஜினாவை பரவலாக்கி விட்டால், பிறகு அந்த சமுதாயத்தை கை கழுவி விட வேண்டியது தான். அந்த சமுதாயத்தின் பாதுகாப்பு கண்ணியம் எல்லாம் சீர்குலைந்து விடும். எல்லாம் நாசம் ஆகிவிடும். 
 
பிறகு, அந்த சமுதாயத்தில் வாழ்வது என்பது சாக்கடை அல்ல. கொடிய மிருகங்கள் உள்ள காட்டில் வாழ்வதைவிட மோசமானது. 
 
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான்: அந்த மூமின்கள் எத்தகையவர்கள், அவர்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள். அல்லாஹுத்தஆலா புனிதமாக்கிய உயிரை உரிமையில்லாமல் கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஜினா செய்ய மாட்டார்கள். 
 
யார் இந்த காரியங்களை செய்வார்களோ அவர்களுக்கு அல்லாஹு தஆலா தண்டனையை எச்சரிக்கை செய்து கொள்கிறான்.
 
يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا
 
அவருக்கு அந்த தண்டனை மறுமை நாளில் பன்மடங்காக ஆக்கப்படும். இன்னும், அவர் அதில் இழிவுபடுத்தப்பட்டவராக நிரந்தரமாக தங்கி விடுவார். (அல்குர்ஆன் 25 : 69)
 
அன்பு சகோதரர்களே! இன்று முஸ்லிம் சமுதாயம் ஜினாவை ஒரு சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளது. நாளை மறுமையில் அந்த ஜினா செய்த ஆண்கள், ஜினா செய்த பெண்களை பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
வாய் குறுகலான பிறகு வயிறு பெரிய ஒரு பானை நரகத்திலே பதியப்பட்டு இருக்கும். அதிலே நெருப்பு எரிக்கப்படும். அதிலே மக்கள் அம்மணமாக ஆண்கள் பெண்கள் இருப்பார்கள். அந்த நெருப்பு கடுமையாக எரியும்பொழுது அவர்கள் மேலே வருவார்கள். அவர்கள் மேலே வந்து வெளியேறி விடலாம் என்று நினைக்கும் பொழுது திரும்ப அந்த நெருப்பு உள்வாங்கி விடும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தகைய அதாப்  பெறக்கூடிய மக்கள் யார்? என்று ஜிப்ரில் இடத்திலே கேட்கிறார்கள். அதற்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் சொல்கிறார்கள்: இவர்கள்தான் விபச்சாரம் செய்த ஆண்கள் பெண்கள் என்று. (1)
 
அறிவிப்பாளர் : சமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1386.
 
விபச்சாரம் சாதாரணமான குற்றம் அல்ல. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கடுமையான தண்டனையைக் கொண்டு எச்சரிக்கை செய்யப்பட்ட முதல் பாவங்களில் விபச்சாரம் ஒன்றாகும். 
 
திருமணமானவன் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து அவனை கொன்று விட வேண்டும் என்று தண்டனை. (2)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6325.
 
திருமணம் ஆகாத ஒருவன் விபச்சாரம் செய்தால் நூறு சாட்டை அடி அவனுக்கு உண்டு. (அல்குர்ஆன் 24 : 2)
 
இத்தகைய தண்டனையை நேரடியாக அல்லாஹு தஆலா குர்ஆனிலே எச்சரித்த ஒரு பெரும் பாவம் ஜினா என்பது. அந்த பாவத்தை ரஹ்மானுடைய அடியார்கள் செய்ய மாட்டார்கள். 
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்:
 
إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (70) وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا
 
எனினும், எவர்கள் (பாவங்களை விட்டு) திருந்தி (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு, நன்மையான செயலை செய்வார்களோ அவர்களுடைய தீய செயல்களை நல்ல செயல்களாக அல்லாஹ் மாற்றி விடுவான். (இஸ்லாமில் நுழைவதற்கு முன்பு அவர்கள் செய்த தீமையான காரியங்களுக்குப் பதிலாக நன்மைகளை அவர்கள் செய்யும்படி அவன் அவர்களை மாற்றி விடுகிறான்.) அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான். இன்னும், எவர் (பாவங்களை விட்டு) திருந்தி (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரி, இன்னும், நன்மை செய்வாரோ நிச்சயமாக அவர், அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பி விடுகிறார். (அல்குர்ஆன் 25 : 70,71)
 
அடுத்து, அல்லாஹ் கூறுகிறான்:
 
وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا
 
இன்னும், அவர்கள் (இணைவைத்தல், ஆடல், பாடல், இசை, உண்மைக்கு மாற்றமாக நடத்தல் இன்னும் இதுபோன்ற) பொய்யான செயல்க(ள் நடக்கும் இடங்க)ளில் கலந்துகொள்ள மாட்டார்கள். இன்னும், வீணான செயலுக்கு அருகில் அவர்கள் கடந்து சென்றால் (அதில் ஈடுபடாமல்) கண்ணியவான்களாக கடந்து சென்று விடுவார்கள். (அல்குர்ஆன் 25 : 72)
 
அவர்கள் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள். பொய் பேச மாட்டார்கள். பொய்யுக்குத் துணையாக, ஆதரவாக, சாட்சியாக இருக்க மாட்டார்கள். 
 
அல்லாஹ் அக்பர்! இந்த சமூகத்தில் பொய்யினால் எத்தகைய குடும்பங்கள் எவ்வளவு சமூகத்தினுடைய தொடர்புகள் இன்று குழப்பம் அடைந்திருக்கின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்! 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெரும் பாவங்களை பற்றி சொல்லிக் கொண்டே வந்தார்கள். அப்போது சாய்ந்து இருந்தார்கள்.
 
ألَا وقَوْلُ الزُّورِ، فَما زالَ يُكَرِّرُها حتَّى قُلْنا: لَيْتَهُ سَكَتَ
 
பொய் சாட்சி கூறுதல் என்று சொல்லும் பொழுது திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்கள். சாய்ந்து இருந்தவர்கள் எழுந்து உட்கார்ந்து விட்டார்கள். அப்போது சூழ்ந்து இருந்த சஹாபாக்கள் பயந்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அமைதியாக வேண்டுமே, அமைதியாக வேண்டுமே என்று சொன்னார்கள். (3)
 
அறிவிப்பாளர் : அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6273.
 
பொய் சாட்சி என்பது அந்த அளவு அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய பெரும் பாவம் ஆகும். 
 
கோர்ட்டிலே சென்று சொல்வது மட்டுமல்ல, உங்களுடைய குடும்பத்தில் சில நேரங்களிலே விசாரிக்கிறார்கள், ஒருவரின் மீது நீங்கள் பார்க்காத ஒன்றை சொல்வதும் பொய் சாட்சிதான். 
 
ஒருரிடத்தில் இல்லாததை அவர் இடத்தில் இல்லை என்று தெரிந்தும் அதற்கு எதிராக இருக்கு என்று சொல்வது அல்லது இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்வது இருக்கக்கூடியதை இல்லை என்று சொல்வது எப்படி செய்தாலும் சரி, இது பொய் சாட்சி ஆகும்.
 
அதுபோன்று அவர்கள் வீணான காரியங்களை கடந்து சென்றால், இசை போன்ற, நடனம் ஆபாசம் இப்படி எதை அவர்கள் கடந்து சென்றாலும் கூட, அதை கண்டு கொள்ளாமல் அதை புறக்கணித்தவர்களாக, அங்கிருந்து தங்களுடைய ஈமானை பாதுகாத்துக் கொண்டு, கண்ணியமாக கடந்து சென்று விடுவார்கள். 
 
மேலும், அல்லாஹ் சொல்கின்றான்:
 
وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا
 
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களைக் கொண்டு உபதேசம் செய்யப்பட்டார்களேயானால் அவற்றின் மீது செவிடர்களாக, குருடர்களாக விழமாட்டார்கள். (அவற்றைக் கேட்டு உடனே பயன் பெறுவார்கள்.) (அல்குர்ஆன் 25 : 73)
 
அல்லாஹ் சொல்லி இருக்கிறானா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி இருக்கிறார்களா? என்று உடனே அதை ஏற்றுக் கொள்வார்கள். குருடனுக்கு முன்னால் செவிடனுக்கு முன்னால் சொல்லப்பட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலைமையில் இருக்க மாட்டார்கள். 
 
உடனே அவர்களுடைய உள்ளத்தில் அச்சம் ஏற்பட்டு அல்லாஹ்வுடைய வேதத்திற்கும் நபியினுடைய சுன்னாவிற்கும் செவி சாய்ப்பார்கள். 
 
அடுத்து அல்லாஹ் சொல்கின்றான்: குடும்பத்திலே குடும்ப ஒழுக்கங்களை மனைவி மக்கள் உடைய அந்த ஒழுக்கங்களை எப்படி பேணுவார்கள்?
 
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
 
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களின் குளிர்ச்சியை தருவாயாக! எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக (-வழிகாட்டிகளாக) ஆக்குவாயாக!” (அல்குர்ஆன் 25 : 74)
 
அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொண்டே இருப்பார்கள். வணக்க வழிபாடுகள், ஒழுக்கங்கள் எல்லாவற்றையும் பேணிக்கொண்டு, அதேநிலையில் தங்களுடைய குடும்பத்தை மறக்காமல் குடும்பத்திற்காக துஆ செய்வார்கள். 
 
யா அல்லாஹ்! எங்களுடைய ஜோடிகள் மூலமாக, எங்களுடைய சந்ததிகள் மூலமாக எங்களுக்கு கண் குளிர்ச்சியை தருவாயாக! 
 
ஒரு ஆண் இந்த துஆவை செய்ய வேண்டும். ஒரு பெண் இந்த துஆவை செய்ய வேண்டும். 
 
இறையச்சம் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக, இமாமாக எங்களை ஆக்குவாயாக! எங்களுடைய பிள்ளைகளை இறையச்சம் உள்ளவர்களாக ஆக்கி, அவர்களுக்கு இறையச்சத்தை கற்றுக் கொடுக்கக் கூடிய, ஈமானை இஸ்லாமை கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியராக, எங்களை ஆக்கி வைப்பாயாக! 
 
பிள்ளைகளை தக்வா உள்ளவர்களாக ஆக்கி, அவர்களுக்கு தக்வாவையும், ஈமானையும், இஸ்லாமையும் சொல்லிக் கொடுக்கக்கூடிய நல்ல ஆசிரியராக, பெற்றோர்களாக எங்களை ஆக்கி வைப்பாயாக! என்று அவர்கள் அல்லாஹ்விடத்தில் துஆ செய்வார்கள்.
 
எப்படிப்பட்ட கவலை பாருங்கள்! தன்னுடைய குடும்பம், சமுதாயத்தின் ஒரு அங்கம். அவர்கள் நாம் எப்படி தக்குவா உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற அவர்களுடைய கவலை, அல்லாஹ்விடத்தில் அவர்கள் கை தூக்க வைக்கும்.
 
இன்று, நாம் முக்கியமாக சிந்திக்க வேண்டிய ஒன்று, நம்முடைய குடும்பம், பிள்ளைகள், நம்முடைய சந்ததிகள் உடைய வறுமையை பயந்து எவ்வளவு அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கின்றோம். அவர்களுடைய பொருளாதாரத்திற்காக எவ்வளவு துஆ கேட்கின்றோம்! 
 
அவர்களுடைய மறுமைக்காக, தக்வாவிற்காக, ஈமானுக்காக, இஸ்லாமுக்காக எந்த அளவு நாம் கவலைப்பட்டு துஆ கேட்கின்றோம்! 
 
அல்லாஹு தஆலா அந்த ரஹ்மானுடைய அடியார்களுடைய கவலை எப்படி இருக்கும்? தங்களின் பிள்ளைகளுடைய பசியை விட, அவர்களின் படிப்பை விட, இன்னும் இன்னும் உலகத்தில் எதைப் பற்றி எல்லாம் நம் கவலைப் படுகின்றோமோ அதைவிட அந்த கவலை நம்முடைய பிள்ளைகளுடைய தக்குவாவை பற்றி இருக்கும். 
 
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்: 
 
أُولَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا (75) خَالِدِينَ فِيهَا حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا (76) قُلْ مَا يَعْبَأُ بِكُمْ رَبِّي لَوْلَا دُعَاؤُكُمْ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُونُ لِزَامًا
 
அவர்கள் பொறுமையாக இருந்ததால் அறை(கள் நிறைந்த உயரமான மாளிகை)களை கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும், அதில் அவர்களுக்கு முகமன் கூறப்பட்டும் ஸலாம் கூறப்பட்டும் அவர்கள் வரவேற்கப்படுவார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிரந்தர தங்குமிடத்தாலும் தற்காலிக தங்குமிடத்தாலும் அது மிக அழகானது. (நபியே!) கூறுவீராக! உங்களது (துன்பத்தில் அவனிடம் மட்டும் பிரார்த்திக்கப்படுகின்ற பிரார்த்தனையாக உங்களில் சிலருடைய) பிரார்த்தனை இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை ஒரு பொருட்டாகவே கருதி (உங்களுக்கு உதவி) இருக்க மாட்டான். ஆக, திட்டமாக நீங்கள் (தூதரையும் வேதத்தையும்) பொய்ப்பித்தீர்கள். இ(ந்த பொய்ப்பித்தலின் தண்டையான)து உங்களுக்கு கண்டிப்பாக தொடர்ந்து இருக்கும். (இதன் தண்டனையை இம்மையில்; அல்லது, மறுமையில்; அல்லது, ஈருலகிலும் கண்டிப்பாக அனுபவிப்பீர்கள்.) (அல்குர்ஆன் 25 : 75-77)
 
அன்பிற்குரிய சகோதரர்களே! இப்படி குர்ஆனிலே அல்லாஹு தஆலா முஃமினுடைய அடையாளம் என்று எங்கெல்லாம் சொல்லுகின்றானோ, முஃமினுடைய வர்ணனைகளை எங்கெல்லாம் அல்லாஹ் சொல்லுகின்றானோ அதை எடுத்து படிக்க வேண்டும்; சிந்திக்க வேண்டும். 
 
அதன் மூலமாக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் வேதத்திற்கு ஏற்ப, நபியின் சுன்னாவிற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
كانَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ إذَا صَلَّى صَلَاةً أقْبَلَ عَلَيْنَا بوَجْهِهِ فَقالَ: مَن رَأَى مِنْكُمُ اللَّيْلَةَ رُؤْيَا؟ قالَ: فإنْ رَأَى أحَدٌ قَصَّهَا، فيَقولُ: ما شَاءَ اللَّهُ فَسَأَلَنَا يَوْمًا فَقالَ: هلْ رَأَى أحَدٌ مِنكُم رُؤْيَا؟ قُلْنَا: لَا، قالَ: لَكِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أتَيَانِي فأخَذَا بيَدِي، فأخْرَجَانِي إلى الأرْضِ المُقَدَّسَةِ، فَإِذَا رَجُلٌ جَالِسٌ، ورَجُلٌ قَائِمٌ، بيَدِهِ كَلُّوبٌ مِن حَدِيدٍ قالَ بَعْضُ أصْحَابِنَا عن مُوسَى: إنَّه يُدْخِلُ ذلكَ الكَلُّوبَ في شِدْقِهِ حتَّى يَبْلُغَ قَفَاهُ، ثُمَّ يَفْعَلُ بشِدْقِهِ الآخَرِ مِثْلَ ذلكَ، ويَلْتَئِمُ شِدْقُهُ هذا، فَيَعُودُ فَيَصْنَعُ مِثْلَهُ، قُلتُ: ما هذا؟ قالَا: انْطَلِقْ، فَانْطَلَقْنَا حتَّى أتَيْنَا علَى رَجُلٍ مُضْطَجِعٍ علَى قَفَاهُ ورَجُلٌ قَائِمٌ علَى رَأْسِهِ بفِهْرٍ - أوْ صَخْرَةٍ - فَيَشْدَخُ به رَأْسَهُ، فَإِذَا ضَرَبَهُ تَدَهْدَهَ الحَجَرُ، فَانْطَلَقَ إلَيْهِ لِيَأْخُذَهُ، فلا يَرْجِعُ إلى هذا حتَّى يَلْتَئِمَ رَأْسُهُ وعَادَ رَأْسُهُ كما هُوَ، فَعَادَ إلَيْهِ، فَضَرَبَهُ، قُلتُ: مَن هذا؟ قالَا: انْطَلِقْ فَانْطَلَقْنَا إلى ثَقْبٍ مِثْلِ التَّنُّورِ، أعْلَاهُ ضَيِّقٌ وأَسْفَلُهُ واسِعٌ يَتَوَقَّدُ تَحْتَهُ نَارًا، فَإِذَا اقْتَرَبَ ارْتَفَعُوا حتَّى كَادَ أنْ يَخْرُجُوا، فَإِذَا خَمَدَتْ رَجَعُوا فِيهَا، وفيهَا رِجَالٌ ونِسَاءٌ عُرَاةٌ، فَقُلتُ: مَن هذا؟ قالَا: انْطَلِقْ، فَانْطَلَقْنَا حتَّى أتَيْنَا علَى نَهَرٍ مِن دَمٍ فيه رَجُلٌ قَائِمٌ علَى وسَطِ النَّهَرِ - قالَ يَزِيدُ، ووَهْبُ بنُ جَرِيرٍ: عن جَرِيرِ بنِ حَازِمٍ - وعلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ بيْنَ يَدَيْهِ حِجَارَةٌ، فأقْبَلَ الرَّجُلُ الذي في النَّهَرِ، فَإِذَا أرَادَ أنْ يَخْرُجَ رَمَى الرَّجُلُ بحَجَرٍ في فِيهِ، فَرَدَّهُ حَيْثُ كَانَ، فَجَعَلَ كُلَّما جَاءَ لِيَخْرُجَ رَمَى في فيه بحَجَرٍ، فَيَرْجِعُ كما كَانَ، فَقُلتُ: ما هذا؟ قالَا: انْطَلِقْ، فَانْطَلَقْنَا حتَّى انْتَهَيْنَا إلى رَوْضَةٍ خَضْرَاءَ، فِيهَا شَجَرَةٌ عَظِيمَةٌ، وفي أصْلِهَا شيخٌ وصِبْيَانٌ، وإذَا رَجُلٌ قَرِيبٌ مِنَ الشَّجَرَةِ بيْنَ يَدَيْهِ نَارٌ يُوقِدُهَا، فَصَعِدَا بي في الشَّجَرَةِ، وأَدْخَلَانِي دَارًا لَمْ أرَ قَطُّ أحْسَنَ منها، فِيهَا رِجَالٌ شُيُوخٌ وشَبَابٌ، ونِسَاءٌ، وصِبْيَانٌ، ثُمَّ أخْرَجَانِي منها فَصَعِدَا بي الشَّجَرَةَ، فأدْخَلَانِي دَارًا هي أحْسَنُ وأَفْضَلُ فِيهَا شُيُوخٌ، وشَبَابٌ، قُلتُ: طَوَّفْتُمَانِي اللَّيْلَةَ، فأخْبِرَانِي عَمَّا رَأَيْتُ، قالَا: نَعَمْ، أمَّا الذي رَأَيْتَهُ يُشَقُّ شِدْقُهُ، فَكَذَّابٌ يُحَدِّثُ بالكَذْبَةِ، فَتُحْمَلُ عنْه حتَّى تَبْلُغَ الآفَاقَ، فيُصْنَعُ به إلى يَومِ القِيَامَةِ، والذي رَأَيْتَهُ يُشْدَخُ رَأْسُهُ، فَرَجُلٌ عَلَّمَهُ اللَّهُ القُرْآنَ، فَنَامَ عنْه باللَّيْلِ ولَمْ يَعْمَلْ فيه بالنَّهَارِ، يُفْعَلُ به إلى يَومِ القِيَامَةِ، والذي رَأَيْتَهُ في الثَّقْبِ فَهُمُ الزُّنَاةُ، والذي رَأَيْتَهُ في النَّهَرِ آكِلُوا الرِّبَا، والشَّيْخُ في أصْلِ الشَّجَرَةِ إبْرَاهِيمُ عليه السَّلَامُ، والصِّبْيَانُ، حَوْلَهُ، فأوْلَادُ النَّاسِ والذي يُوقِدُ النَّارَ مَالِكٌ خَازِنُ النَّارِ، والدَّارُ الأُولَى الَّتي دَخَلْتَ دَارُ عَامَّةِ المُؤْمِنِينَ، وأَمَّا هذِه الدَّارُ فَدَارُ الشُّهَدَاءِ، وأَنَا جِبْرِيلُ، وهذا مِيكَائِيلُ، فَارْفَعْ رَأْسَكَ، فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا فَوْقِي مِثْلُ السَّحَابِ، قالَا: ذَاكَ مَنْزِلُكَ، قُلتُ: دَعَانِي أدْخُلْ مَنْزِلِي، قالَا: إنَّه بَقِيَ لكَ عُمُرٌ لَمْ تَسْتَكْمِلْهُ فَلَوِ اسْتَكْمَلْتَ أتَيْتَ مَنْزِلَكَ. الراوي : سمرة بن جندب | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم : 1386 | خلاصة حكم المحدث : [صحيح] | أحاديث مشابهة | شرح الحديث
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ ابْنِ الْمُسَيَّبِ وَأَبِي سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ النَّاسِ وَهُوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ يُرِيدُ نَفْسَهُ فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ فَأَعْرَضَ عَنْهُ فَجَاءَ لِشِقِّ وَجْهِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي أَعْرَضَ عَنْهُ فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ دَعَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبِكَ جُنُونٌ قَالَ لَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَحْصَنْتَ قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ
 
قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي مَنْ سَمِعَ جَابِرًا قَالَ فَكُنْتُ فِيمَنْ رَجَمَهُ فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ جَمَزَ حَتَّى أَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ فَرَجَمْنَاهُ (صحيح البخاري- 6325)
 
குறிப்பு 3)
 
أَلا أُخْبِرُكُمْ بأَكْبَرِ الكَبائِرِ؟ قالوا: بَلَى يا رَسولَ اللَّهِ، قالَ: الإشْراكُ باللَّهِ، وعُقُوقُ الوالِدَيْنِ. [وفي رواية]: وكانَ مُتَّكِئًا فَجَلَسَ، فقالَ: ألَا وقَوْلُ الزُّورِ، فَما زالَ يُكَرِّرُها حتَّى قُلْنا: لَيْتَهُ سَكَتَ. الراوي : أبو بكرة نفيع بن الحارث | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 6273 | خلاصة حكم المحدث : [صحيح]
 
குறிப்பு 4)
 
إنَّ المُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأنَّهُ قاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخافُ أنْ يَقَعَ عليه، وإنَّ الفاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبابٍ مَرَّ علَى أنْفِهِ فقالَ به هَكَذا، قالَ أبو شِهابٍ: بيَدِهِ فَوْقَ أنْفِهِ. ثُمَّ قالَ: لَلَّهُ أفْرَحُ بتَوْبَةِ عَبْدِهِ مِن رَجُلٍ نَزَلَ مَنْزِلًا وبِهِ مَهْلَكَةٌ، ومعهُ راحِلَتُهُ، عليها طَعامُهُ وشَرابُهُ، فَوَضَعَ رَأْسَهُ فَنامَ نَوْمَةً، فاسْتَيْقَظَ وقدْ ذَهَبَتْ راحِلَتُهُ، حتَّى إذا اشْتَدَّ عليه الحَرُّ والعَطَشُ أوْ ما شاءَ اللَّهُ، قالَ: أرْجِعُ إلى مَكانِي، فَرَجَعَ فَنامَ نَوْمَةً، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فإذا راحِلَتُهُ عِنْدَهُ. الراوي : عبدالله بن مسعود | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 6308 | خلاصة حكم المحدث : [صحيح][أورده في صحيحه وذكر له متابعة وعلق عليه]
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/