HOME      Khutba      முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! அமர்வு 2 | Tamil Bayan - 764   
 

முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! அமர்வு 2 | Tamil Bayan - 764

           

முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! அமர்வு 2 | Tamil Bayan - 764


முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! அமர்வு 2
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! (அமர்வு 2) 
 
வரிசை : 764
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 09-07-2021 | 29-11-1442
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்திலே இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக, அல்லாஹ்வுடைய அன்பையும் பொருத்தத்தையும் வேண்டியவனாக, நம்முடைய இம்மை காரியங்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளுக்கு ஏற்ப அமையும்படி அல்லாஹு தஆலா நமக்கு ஆக்கித் தர வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் அவனுடைய திருப்பெயரைக் கொண்டு வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி அதன் மூலமாக நற்பலன் பெற்ற, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவைப் படித்து, அதன் மூலமாக தங்களது குணங்களை ஒழுக்கங்களை சீர் செய்து கொண்ட நல்லவர்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
அல்குர்ஆனை சிந்திப்போம்; அல்குர்ஆனை ஆராய்ச்சி செய்வோம். நம்பிக்கையாளர்களை பற்றி அல்குர்ஆன் எப்படி வர்ணிக்கிறது? நம்பிக்கையாளர்கள் யார் என்று அல்குர்ஆன் எப்படி அவர்களுடைய பண்புகளை குணங்களை அடையாளங்களை விவரித்து வருகிறது? என்பதை நாம் தொடர்ந்து பல ஜும்ஆகளிலே பார்த்து வருகிறோம்.
 
சென்ற ஜும்ஆவிலே சூரா அல்முஃமினூன் என்ற அந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா நம்பிக்கையாளர்களை எப்படி போற்றி புகழ்ந்து, அவர்களின் குணங்களை பண்புகளை அமல்களை விவரிக்கிறான் என்பதை நாம் பார்த்தோம். அதனுடைய தொடரிலே இன்ஷா அல்லாஹ் இன்னும் சில முக்கியமான செய்திகளை பார்ப்போம்.
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா கூறுகிறான்:
 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
 
நம்பிக்கை கொண்டவர்கள், அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய ரஸூலையும் உண்மைப்படுத்தியவர்கள், அவர்கள் சொல்வது உண்மை, அவர்களுடைய மார்க்கம் உண்மை என்று ஏற்றுக் கொண்டவர்கள், பிறகு அந்த மார்க்கத்தின் படி தங்களது அமல்களை அமைத்துக் கொண்டவர்கள் வெற்றி அடைந்து விட்டார்கள். (அல்குர்ஆன் 23 : 1)
 
அதாவது, தங்களது நோக்கத்தை அவர்கள் அடைந்து விட்டார்கள் அல்லாஹுதஆலா அவர்களுக்கு வாக்களித்த சொர்க்கத்தை அடைந்து கொள்வார்கள்.
 
பிறகு, அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா எந்த நம்பிக்கையாளர்களை பற்றி சொல்கிறான். நம்பிக்கையாளர்களிடத்தில் இருக்க வேண்டிய சில அடையாள பண்புகள் குணங்கள் என்ன என்று சொல்லும்போது, 
 
الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
 
முதலாவதாக, அவர்களுடைய தொழுகை சரியாக இருக்கும். அவர்களுடைய இபாதத்துகளில் தொழுகை சரியாக இருக்கும். அதாவது, உள்ளச்சம் உடைய அல்லாஹ்வை பயந்த தொழுகை அவர்கள் இடத்தில் இருக்கும். (அல்குர்ஆன் 23 : 2)
 
ஒருஒரு தொழுகையையும் அது பர்ளாக இருக்கட்டும், சுன்னத்தாக இருக்கட்டும், நஃபிலாக இருக்கட்டும் எந்த தொழுகையையும் அலட்சியமாக அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். ஒரு ஒரு தொழுகையையும் அவர்கள் அல்லாஹ்வை பயந்தவர்களாக, மறுமையை பயந்தவர்களாக, ஆஹிகிரத்தின் பயத்தோடு, அமைதியாக, நிதானமாக ஓத வேண்டியதை நிறுத்தி, சரியாக உணர்ந்து ஓதி, செய்ய வேண்டிய ருக்னுகளை எல்லாம் நிறுத்தி நிதானமாக செய்து, அவர்கள் அந்த தொழுகையை நிறைவேற்றுவார்கள்.
 
பிறகு, இதோடு தொடர்பு படுத்தி அல்லாஹு தஆலா இந்த நம்பிக்கையாளர்களின் பண்புகளை முடிக்கும் போது, 
 
وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ
 
அவர்கள் தொழும்போது தொழுகையை பேணுவது மட்டுமல்ல, தொழுகைக்காக அவர்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். தொழுகையின் நேரங்களை வீணடிக்காமல், தொழுகையை பேணுவார்கள் என்று அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா கூறுகிறான். (அல்குர்ஆன் 23 : 9)
 
இந்த மூஃமின்களுடைய பண்புகளிலே, அல்லாஹு தஆலா சொல்லக்கூடிய சில முக்கியமான பண்புகளை இந்த குத்பாவிலே பார்ப்போம்.
 
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
 
அல்லாஹு தஆலா புகழ்ந்த வெற்றியாளர்கள் என்று வர்ணித்த, ஜன்னத்துல் ஃபிர்தௌஸுக்கு உரத்த தகுதியான அந்த சொர்க்கவாசிகள், வீணான காரியங்களை விட்டு விலகி இருப்பார்கள். விலகி மட்டுமல்ல, வீணானவற்றை புறக்கணித்து விடுவார்கள். ஒதுங்கி விடுவார்கள். தங்களை அதிலிருந்து தூரப்படுத்திக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 23 : 3)
 
வீணானது என்றால் என்ன? அல்பாத்தில் -ஒவ்வொரு பொய்யான செய்தியும் வீணான ஒன்றுதான். அல்மஆசி -பாவங்கள் எல்லாம் வீணானவை. ஷிர்க் -இணை வைத்தல் அதுவும் வீணானவை. எந்த ஒரு அமல், எந்த ஒரு செயல், எந்த ஒரு சொல் உங்களுக்கு உலக ரீதியான பலனை கொடுக்கவில்லையோ, அதுபோன்று எந்த ஒரு செயல் மறுமைக்கு லாபமாக இல்லையோ அவை அனைத்தும் வீணானவை.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்: மூஃமின்கள் வீணான காரியங்களை விட்டு விலகி இருப்பார்கள். வீணான பேச்சுகளை விட்டு விலகி இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 3)
 
இன்று, நமக்கு மிகப்பெரிய சோதனை, அமல்கள் இருக்கின்றன, பல நன்மைகளை செய்கின்றோம். ஆனாலும், வெட்டியாக நேரத்தை வீணடிப்பதிலே, பயனில்லாமல் பிரயோஜனம் இல்லாமல் நேரத்தை கழிப்பதிலே நாம் எல்லோருக்கும் அதிலே பங்கு இருக்கிறது. அல்லாஹ் மன்னிப்பானாக! பாதுகாப்பானாக!
 
நம்மை அறியாமலேயே, பேச்சுக்களில், செயல்களில், இன்னும் இதுபோன்ற காரியங்களில் நாம் நேரங்களை வீணடிப்பவர்களாக இருக்கின்றோம். நேரத்தை வீணடிப்பது என்பது, ஒழுக்கம் சார்ந்த, பண்பு சார்ந்த குற்றம் மட்டுமல்ல. மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட ஒரு பெரிய குற்றங்களில் ஒன்றுதான் நேரங்களை வீணடிப்பது; வீணான காரியங்களில் ஈடுபடுவது.
 
வெற்றியை வேண்டக்கூடிய முஸ்லிம்கள் வீணானவற்றில் ஈடுபட மாட்டார்கள் மட்டுமல்ல, வீணானவற்றை புறக்கணித்து விடுவார்கள். நான் ஒன்றில் ஈடுபடாமல் இருப்பது என்பது வேறு, அதை முற்றிலும் புறக்கணித்து விலகி இருப்பது என்பது வேறு. புறக்கணிப்பதில் வெறுப்பு இருக்கும். 
 
அது எனக்கு பிடிக்கவில்லை. அது எனக்கு இடையூறு தரக்கூடியது. அதன் மீது எனக்கு ஒரு வருத்தம் கோபம் இருக்க வேண்டும். அப்போதுதான் புறக்கணிப்பு என்பது ஏற்படும். அல்லாஹு தஆலா அந்த வார்த்தைதான் இங்கே சொல்கின்றான்.
 
இன்று நம்மிலே பலருடைய நிலைமையை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விவரிக்கிறார்கள் பாருங்கள்! நாம் எவ்வளவு அலட்சியத்தோடு இருக்கிறோம்! அல்லாஹ் பாதுகாப்பானாக! மன்னிப்பானாக! 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
إنَّ الرجلَ لَيتكلَّمُ بالكلمةِ لا يرى بها بأسًا يهوي بها سبعين خريفًا
 
மனிதர்கள் சில பேச்சுகளை வாய்க்கு வந்தபடி, எண்ணத்திற்கு வந்தபடி பேசுகிறார்கள். அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இந்தப் பேச்சால் நரகத்தில் அவர்கள் 70 ஆண்டுகள் வீசி எறியப்படுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுத் தர்கீப், எண் : 2875.
 
இமாம் முன்திரி ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்கள். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கக்கூடிய இன்னொரு ஹதீஸிலே கொஞ்சம் விரிவாக வருகிறது.
 
சிலர், சில பேச்சுகளை பேசுவார்கள். அது நல்ல பேச்சாக இருக்கும். அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு உரியதாக இருக்கும். ஆனால் அதை அவர்கள் சிந்தித்து பேசி இருக்க மாட்டார்கள். 
 
அப்படி என்றால் என்ன அர்த்தம்? அப்படியே அவர்கள் அந்த நன்மையிலேயே இருக்கின்ற காரணத்தால், அவர்கள் பேசினாலே நல்ல பேச்சுகள் தான் வரும்.
 
யார் பழக்கத்தில் வெட்டியான எண்ணத்தில் இருக்கிறார்களோ, அவர்கள் நினைத்து பேசினாலும் வெட்டியானதை வீணானதையே பேசுவார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
إنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بالكَلِمَةِ مِن رِضْوانِ اللَّهِ، لا يُلْقِي لها بالًا، يَرْفَعُهُ اللَّهُ بها دَرَجاتٍ، وإنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بالكَلِمَةِ مِن سَخَطِ اللَّهِ، لا يُلْقِي لها بالًا، يَهْوِي بها في جَهَنَّمَ
 
அந்த மனிதன் அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கு உண்டான வார்த்தையை பேசி விடுகிறான். சொர்க்கத்திலே பல அந்தஸ்துகளை அல்லாஹு தஆலா அவனுக்கு உயர்த்தி விடுகிறான். 
 
சில அடியார்கள் அல்லாஹ்விற்கு வெறுப்பான வார்த்தையை சிந்திக்காமலேயே பேசி விடுகிறார்கள். அதனால் அவர்கள் நரகத்தின் ஆழத்திலே தள்ளப்படுகிறார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6478.
 
யோசித்துப் பாருங்கள்! வீணான பேச்சு என்பதும், வீணான செயல் என்பதும், நேரத்தை வீணாக்குவது என்பதும், இது ஏதோ இந்த உலகத்தோடு முடியக்கூடிய ஒன்று அல்ல. அந்த மனிதனுடைய மறுமையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களின் இயலாமையை மக்களின் அறியாமையை சொல்லுகின்றார்கள் பாருங்கள்!
 
نِعْمَتانِ مَغْبُونٌ فِيهِما كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ والفَراغُ
 
அல்லாஹு தஆலா பெரிய இரண்டு அருட்கொடைகளை மக்களுக்கு கொடுத்திருக்கின்றான். ஆனால், மக்களோ ஏமாந்து விட்டார்கள். அந்த அருட்கொடைகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அலட்சியம் செய்து விடுகிறார்கள்.
 
அது என்ன அருட்கொடை? உடல் ஆரோக்கியமும், அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய ஓய்வும்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6412.
 
ஓய்வு என்றால் என்ன? உதாரணத்திற்கு ஹலாலான வருமானத்தை ஈட்டுவதில் இருந்து அல்லது உடல் உழைப்பு செய்வதிலிருந்து கிடைக்கக்கூடிய ஒரு நேரம்.
 
ஒரு எட்டு மணி நேரம் பத்து மணி நேரம் வேலை செய்தோம். நமக்கு இரவிலே நேரம் கிடைக்கிறது. அல்லது ஃபர்ளான தொழுகைகளை நஃபிலான தொழுகைகளை தொழுதோம். இப்போது நமக்கு சற்று ஓய்வு கிடைக்கிறது. இது அல்ஃபராஹ் -ஒய்வு ஆகும்.
 
இந்த ஓய்வை எப்படி பயன்படுத்த வேண்டும்? இதற்கும் மார்க்கம் நமக்கு வழிகாட்டி இருக்கிறது. இது ஓய்வு தான் என்பதற்காக, கண்டதை பார்ப்பதிலோ, கண்டதை கேட்பதிலோ, வீணாக சுற்றுவதிலோ நாம் கழித்து விட முடியாது. 
 
அது நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடியதா? இதைப் பார்ப்பதால் நம்முடைய சிந்தனை பெற்று விடுமா? இதைப் பார்ப்பது அல்லாஹ்வுடைய கோபத்தை ஏற்படுத்துமா? இது நமக்கு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? இப்படி இது என்னுடைய தீனுக்கோ, துன்யாவிற்கோ ஆபத்தை ஏற்படுத்துமா? இல்லை பாதிப்பை ஏற்படுத்துமா? என்று கவனித்து தான் நாம் அதில் ஈடுபட முடியுமே தவிர, ஓய்வு நேரம் தான், அது என்னுடைய நேரம் என்பதாக நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப நாம் ஈடுபட்டு விட முடியாது.
 
தூங்கலாம், தேவையான அளவுக்கு. மனைவி பிள்ளைகள் இடத்திலே பேசலாம், அவர்களை சந்தோசப்படுத்துவதற்காக, நமது உள்ளம் சந்தோஷ படுவதற்காக. அது அனுமதிக்கப்பட்ட ஒன்று. வீட்டு வேலைகளிலே ஈடுபடலாம். நம்முடைய குடும்பத்திற்கும் நல்லது. நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 
 
நம்முடைய கல்வியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அல்லாஹ்வைப் பற்றிய அறிவை நாம் வளர்த்துக் கொள்ளலாம். மார்க்கத்தினுடைய சட்டத்தினை, ஹலால் ஹராமை நாம் கற்றுக் கொள்ளலாம். 
 
இதற்கு தான் அந்த ஓய்வு கொடுக்கப்படுகிறதே தவிர, அல்லாஹு தஆலா வழங்குகிறானே தவிர, வெட்டியாக பொழுதை கழித்து, ஹராமை சம்பாதிப்பதற்காகவோ, ஹராமிலே நேரத்தை கழிப்பதற்காகவோ, தீனுக்கும் துன்யாவிற்கும் நன்மை அற்றதில் கழிப்பதற்காக அல்ல.
 
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி சொன்னார்கள். இரண்டு நிஃமத்துக்கள் மக்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், மக்களோ அதனுடைய அருமையை உணராமல் இருக்கின்றார்கள். உடல் ஆரோக்கியமும், ஓய்வும் என்பதாக.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6412.
 
அபூதர் ரலியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே வருகிறார்கள். அபூதர் ரலியல்லாஹு அன்ஹு. அவர்களின் ஒவ்வொரு ஹதீஸுமே ஒரு வித்தியாசமாக இருக்கும். 
 
ஸஹாபாக்களில் ஒவ்வொருவரும் ரஸூலுல்லாஹ்விடம் கேட்பதில் இருந்து, நாம் வகை வகையான பல இல்முகளை கற்றுக் கொள்கிறோம்.
 
அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து வருகின்ற ஹதீஸ்களிலே நமக்கு ஒரு மிகப்பெரிய விசாலமான சிந்தனையை, அறிவின் விசாலமான கதவை திறக்கக் கூடியதாக இருக்கும். 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே வருகிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் சிறந்த அமலை எனக்கு கற்று தாருங்கள் என்று கேட்கிறார்கள். 
 
உங்களுக்கு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே ஸஹாபாக்கள் கேட்ட கேள்விகள் எல்லாமே இப்படித்தான் இருக்கும். மறுமையை குறித்து, சொர்க்கத்தை குறித்து. 
 
சிறந்த அமல் எது? அல்லாஹ்விற்கு பிரியமான அமல் எது? இப்படியாகத்தான் அவர்கள் கேட்பார்களே தவிர, ஆஹிரத்தை தேடக் கூடியவர்களாக மறுமையை தேடக் கூடியவர்களாக இருந்தார்கள். 
 
அவர்களிடத்தில் வறுமை இல்லையா? பிரச்சனை இல்லையா? உலக சிக்கல்கள் சிரமங்கள் இல்லையா? இது எல்லாம் நடக்கக்கூடிய ஒன்றுதான். உலகம் என்று இருந்தாலே அது ஆபத்துக்களால் சூழப்பட்டது. சிரமங்களால் சூழப்பட்டது. 
 
நாம் சென்று சேரக்கூடிய நிரந்தரமான மறுமையின் இல்லத்தில், அங்கு நாம் எப்படி செல்ல வேண்டும்? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதுதான் அந்த ஸஹாபாக்களுடைய லட்சியமாக தேடலாக இருந்தது.
 
அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் சிறந்தது எது? என்று கேட்டார்கள். நபியவர்கள் பதில் அளித்தார்கள்: 
 
«الْإِيمَانُ بِاللهِ وَالْجِهَادُ فِي سَبِيلِهِ»
 
அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது. அல்லாஹ்வுடைய பாதையிலே போர் புரிவது.
 
அடுத்த கேட்டார்கள். அடிமைகளை உரிமையிட வேண்டுமென்றால், எந்த அடிமையை உரிமை விடுவது மிக சிறப்பானது? என்று. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் சொன்னார்கள்:
 
«أَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا وَأَكْثَرُهَا ثَمَنًا»
 
எந்த அடிமை அவருடைய எஜமானரிடம் விலை உயர்வாக இருக்கிறாரோ, மதிப்பு மிக்கவராக இருக்கிறாரோ, அதிகம் பொருள் கொடுத்து வாங்குபவராக இருக்கிறாரோ அந்த அடிமையை வாங்கி உரிமையிடுவது அல்லாஹ்விற்கு விருப்பமானது. 
 
இதற்கு பல விளக்கங்கள் இருக்கின்றன.
 
அடுத்து, யா ரஸூலுல்லாஹ்! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்கு எனக்கு சக்தி இல்லை. செய்ய முடியவில்லை. என்ன செய்வது? இப்படிப் பெரிய அடிமையை வாங்கி உரிமை இட வேண்டும் என்றால், அதற்கு சம்பாதிக்க வேண்டும்.
 
(அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ ஸஹாபாக்களில் ஃபகீர். பரம ஏழை என்று அறியப்பட்டவர். இன்றைய வருமானத்தை நாளை வைத்துக் கொள்ள மாட்டார். அவருடைய கருத்தின் படி சேமிப்பே கூடாது. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையில் உள்ளவர்.)
 
கேட்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே எனக்கு அதற்கு சக்தி இல்லை. என்னால் முடியாது. என்ன செய்வது? அதற்கு அல்லாஹ்வின் தூதர் பதில் சொன்னார்கள் பாருங்கள்: 
 
«تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ»
 
யாராவது வேலை செய்கிறார்கள் அல்லவா, உடல் உழைப்பு செய்கிறார்கள் அல்லவா, நீ அவருக்கு சென்று உதவி செய். 
 
அல்லாஹு அக்பர்! நம்முடைய மார்க்கம் எவ்வளவு பெரிய ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது பாருங்கள்.
 
ஒருவர் தன்னுடைய பொருளாதாரத்திற்காக, குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைப்பு செய்கிறார். மர வேலையோ, கூலி வேலையோ இப்படியாக ஏதோ உழைத்து வேலை செய்கிறார் அல்லவா, நீ அவருக்கு உதவி செய்.
 
அடுத்து சொன்னார்கள்: அதுவும் முடியவில்லை என்றால், தொழிலே தெரியாமல் இருக்கிறார்கள் அல்லவா, வேலை செய்யவே தெரியாமல் இருக்கிறார்கள் அல்லவா, உன்னால் முடிந்ததை வேலை செய்து அவர்களுக்கு கொடு என்று சொன்னார்கள்.
 
பிறகு அபூதர் கேட்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதரே, இப்பொழுது நீங்கள் சொன்ன இந்த அமல்களில், சில நேரங்களில் சில அமல்களை என்னால் செய்ய முடியாமல் போய்விடுகிறது. 
 
(இப்படி எல்லாம் நோண்டி துருவித் துருவி அமல்கள் விஷயத்தில் கேட்கிறார்கள் பாருங்கள். நாமும் நோண்டி துருவி கேள்விகளை கேட்போம் வெட்டி காரியங்களில், எதை தெரிந்து கொள்வதால் நம்முடைய ஈமானுக்கு அறவே பிரயோஜனம் இருக்காதோ, எதைத் தெரிந்து கொள்வதால் நம்முடைய ஈமானுக்கும் அமலுக்கும் சம்பந்தமே படாது அதை தெரிய ஆர்வப்படுவோம். 
 
எது படிப்பினையோ அதை விட்டுவிடுவார்கள். அது எந்த ஊரில் நடந்தது? எந்த வருடத்தில் நடந்தது? இதுவெல்லாம் நமக்குத் தேவையா, ஈமானுக்கு பலனிருக்குமா என்றால் இருக்காது. இப்படி வெட்டியான விஷயங்களை தேடுவதில் தான் பலருடைய சர்ச்சை இருக்கிறது, தேடல் இருக்கிறது.)
 
அபூதர் கேட்கிறார்கள்; யா ரஸூலுல்லாஹ்! முடியவில்லை என்றால் என்ன செய்வது? நமக்காக எப்படி கேட்டு இருக்கிறார்கள் பாருங்கள். இந்தக் கேள்விகள் எல்லாம் நமக்காக கேட்கப்பட்டதை போன்று இருக்கிறது. 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: பிறருக்கு கெடுதி செய்யாமல் இரு. அது நீ உனக்கு செய்து கொள்ளக் கூடிய தர்மம். பிறருக்கு தொந்தரவு தராமல் இரு.
 
இப்பொழுது நீங்கள் உங்கள் வண்டியை நிறுத்துகிறீர்கள். நான்கு பேருக்கு இடையூறாக நிறுத்திக் கொண்டு செல்கிறீர்கள். நாம் உணர்வதில்லை. உங்களுடைய பொருள்களை ஓரிடத்தில் வைத்து விட்டு செல்கிறீர்கள். அதுவோ பிறருக்கு இடையூறு தரக்கூடியதாக இருக்கிறது. 
 
அல்லது உங்க வீடு சம்பந்தப்பட்ட பொருள். பலர் நம்மிலே என்ன செய்கிறார்கள். தங்கள் வீட்டு குப்பையை நடுத்தெருவில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். அடுத்தவரின் வீட்டு வாசலில் வைத்து விடுவார்கள். இவர் காரை எல்லாம் கழுவி அடுத்தவர் வீட்டு முன் தண்ணீர் ஓடும்படி, அந்தத் தண்ணீரை விட்டுக் கொண்டிருப்பார்கள். நாம் இதை உணர்வதில்லை. இதனால் பிறருக்கு எவ்வளவு அசௌகரிங்கள் எவ்வளவு கெடுதிகள் ஏற்படுகின்றன என்று. அவர்களுக்கு எவ்வளவு மன வருத்தங்கள் சிந்திப்பதில்லை.
 
நபியவர்கள் சொன்னார்கள்: மக்களுக்கு கெடுதி செய்வதை விட்டு, தொந்தரவு செய்வதை விட்டு, நீ உன்னை தடுத்துக் கொள்வது நீ உனக்கு செய்யக்கூடிய தர்மம். (1)
 
அறிவிப்பாளர் : அபூ தர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 84.
 
எதற்காக வேண்டி இந்த ஹதீஸை சொல்கிறேன் என்றால், நம்முடைய நேரங்கள் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும்? வீணான விஷயங்களை விட்டு நாம் விலகி இருக்க வேண்டும் என்றால், பலன் தரக்கூடிய காரியங்களில் நாம் நம்மை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும். ஒன்று நன்மையிலே ஈடுபட வேண்டும். இல்லை என்றால் தீமையிலே ஈடுபட்டு விடுவோம்.
 
அதுபோன்று ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு அழகிய உபதேசத்தை சொல்கின்றார்கள் பாருங்கள்! மனிதனே நீ யார் தெரியுமா? உன்னுடைய உண்மை என்ன தெரியுமா? நீ எப்படி சேர்ந்து இருக்கிறாய் தெரியுமா? உனக்கு எது மிச்சம் தெரியுமா?
 
நீ சில காலங்கள் தான். சில நேரங்கள் தான். இன்று ஒரு நாள் கழிந்து விட்டால், உன்னில் இருந்து ஒரு பகுதி முடிந்து விட்டது. 
 
இப்படியாக நம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை வாழ்நாள் இருக்கிறதே அதுதான் நாம். நம்மில் இருந்து ஒரு நாள் இரண்டு நாட்கள் ஒரு மாதம் என்று கழிய கழிய, நம் உடல் உறுப்பாக இருக்கக் கூடிய நம்மில் இருக்கக்கூடிய அது பிரிந்து கொண்டே இருக்கிறது. மொத்தமாக கடைசி நாள் வரும் பொழுது, நாம் இந்த உலகத்தை விட்டே பிரிந்து விடுகிறோம்.
 
ஆகவே, ஒரு நாள் தவறுவதை ஒரு மணி நேரம் தவறுவதை ஏதோ உனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்காதே. உன்னிலிருந்து அது தவறுகிறது. 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு உபதேசம் செய்தார்கள் பாருங்கள்.
 
ஐந்து காரியங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! உன்னுடைய மரணத்திற்கு முன்னால் உன்னுடைய நேரத்தை பயன்படுத்திக் கொள். உனக்கு வேலை வருவதற்கு முன்னால் உன்னுடைய ஓய்வை பயன்படுத்திக் கொள் என்று.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஃபத்ஹுல் பாரி 11-239
 
இன்று பல மக்களுக்கு அதனுடைய அருமை பெருமை தெரியவில்லை. வீணான பேச்சுகளிலே நேரங்களை கழிக்கிறார்கள். வீணாக சுற்றுவதிலே, வீணாக அலைவதிலே, அரட்டை அடிப்பதில், வீணாக பேசிக் கொண்டிருப்பதிலே நேரங்களை கழிக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
 
இமாம் ஹசன் சொல்கிறார்கள்: இந்த மட்டமானவர்கள் இருக்கிறார்களே, வீணானவர்கள் பொழுதை சுற்றிக் கழிக்கக் கூடிய மட்டமானவர்கள், அவர்களோடு பழகாதே. காரணம் என்ன தெரியுமா? இந்த முட்டாள்கள் உடைய குணங்கள், இந்த வீணர்களுடைய பழக்கங்கள், அது தொற்றக்கூடிய ஒரு நோயைப் போன்று. அது அவர்களிடமிருந்து உனக்கும் தொற்றிக் கொள்ளும். எத்தனையோ நல்லவர்கள் அவர்களுடைய கெட்ட நட்பால் அவர்களும் கெட்டுப் போனார்கள் என்று நாம் பார்க்கிறோம்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நன்மையான காரியத்தில் நேரத்தை பயன்படுத்துவதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை பாருங்கள்! 
 
إنْ قامَتِ السَّاعةُ وفي يدِ أحدِكُم فَسيلةٌ فإنِ استَطاعَ أن لا تَقومَ حتَّى يغرِسَها فلْيغرِسْها
 
மறுமை நிகழப் போகிறது, உங்களின் ஒருவருடைய கரத்தில் ஒரு செடி இருக்கிறது. சின்ன செடிதான் அதை நட்டு விட முடிந்தால் அந்த மறுமை நிகழ்வதற்குள் அதை நட்டு விடட்டும். அந்த நேரத்தை கூட வீணடிக்க வேண்டாம். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்அதபுல் முஃப்ரத், எண் : 479.
 
இப்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நேரத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை பார்க்கிறோம். இந்த நன்மையின் மூலமாக அல்லாஹு தஆலா எனக்கு ஆஹிரத்தில் கருணை காட்டுவான்.
 
இமாம் உபைதா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லுகின்றார்கள்:
 
இந்த நேரம் இருக்கிறதே நீர் பாதுகாக்க வேண்டிய பொருட்களிலேயே மிக மதிப்பானது நேரம் தான். ஆனால், அது எவ்வளவு இலகுவான முறையில் உன்னிடம் வீணாகிறது என்பதை நான் பார்க்கிறேன்.
 
ஜமாலுத்தீன் அல்காசிமி ரஹிமஹுல்லாஹ் ஒரு பெரிய அறிஞர் அவர்களைப் பற்றி, அலீ தன்தாவி ரஹீமஹுல்லாஹ் எழுதுகிறார்கள்.
 
ஆசிரியர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது சில வாலிபர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வீணான காரியங்களிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஜமாலுதீன் காஸிமி ரஹிமஹுல்லாஹ் சொன்னார்கள்: 
 
நேரங்களை விற்கலாம் வாங்கலாம் என்று இருந்திருந்தால், இந்த வாலிபர்களிடமிருந்து அவர்களுக்கு பெரும் செல்வத்தை கொடுத்து நான் நேரத்தை வாங்கியிருப்பேன். 
 
இப்படி நேரத்தை வீணடிக்கிறார்களே. நேரம் எங்களுக்கு போதவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறோம். படிப்பதற்கு, எழுதுவதற்கு, கற்றுக் கொடுப்பதற்கு என்று, ஆனால் இந்த வாலிபர்கள் பாவத்தில் நேரத்தை கழித்து கொண்டிருக்கிறார்களே!
 
இமாம் ஸரஹ்ஷி ரஹிமத்துல்லாஹ் இமாம் அபூஹனீபா மத்ஹபிலே பெரிய அறிஞர். மன்னர் சிறைச்சாலையிலே அடைத்து விடுகிறார். மிகப்பெரிய இரண்டு சட்ட நூல்களை சிறைச்சாலையிலிருந்தே எழுதி முடித்து விடுகிறார்கள்.
 
இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ், மன்னர் அவர்களை சிறைச்சாலையிலே அடைத்து விடுகிறார்கள். அந்த சிறைச்சாலையில் இருந்து கொண்டு அவர்கள் கொடுத்த பத்வா தீர்ப்பு இன்று 40 பாகங்களில் பத்வா தொகுப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான சிறை கைதிகளை சிறையில் இருந்து கொண்டே ஆலிம்களாக ஆக்கிவிட்டார்கள்.
 
இமாம் இப்னு கையும் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஊரிலிருந்து ஹஜ்ஜுக்கு புறப்பட்டார்கள். ஹஜ் உடைய பயணத்திலே கிடைக்க கூடிய இடங்களில் எங்கெல்லாம் உட்கார்ந்தார்களோ புத்தகத்தை எழுதி சாதுல் மஆத் என்று இரண்டு மிகப்பெரிய பாகங்களைக் கொண்ட, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வாழ்க்கை வரலாறு அமல்களோடு சேர்ந்த ஒரு பெரிய இரண்டு கிரந்தங்களை எழுதி முடித்து விட்டார்கள். 
 
யோசித்துப் பாருங்கள்! நம்முடைய முன்னோர்கள் எப்படி நேரங்களை பயன்படுத்தினார்கள் என்று. ஆனால் இன்று நாம் நேரங்களை எந்த அளவில் வீணடித்து கொண்டிருக்கிறோம்.
 
இமாம் ஷாஃபி ரஹிமஹுல்லாஹ் சொல்லுகின்றார்கள். மனிதனே உன்னை நீ சத்தியமானவற்றில் பயன்படுத்தவில்லை என்றால், இந்த நஃப்சானது உன்னை தவறான வழியில் ஈடுபடுத்தி விடும். வீணான காரியங்களில் ஈடுபடுத்தி விடும். 
 
வாலிபக்காலத்தில் நேரங்களை வீணடிப்பது எவ்வளவு அசிங்கமான ஒரு குற்றம். இந்த மனிதனுக்கு எப்போது புரிய வரும். அவனுடைய தலைமுடி நரைத்துவிட்டால்! அப்படி புரிவதால் என்ன பயன் இருக்கும்!
 
மேலும், சொல்லுகிறார்கள்: இந்த துன்யாவிலிருந்து நீ செல்லும் போது, தக்வா இறையச்சம் அது சம்பந்தப்பட்ட நன்மைகளை எடுத்துக் கொண்டு பயணம் செய். உன்னுடைய வாழ்க்கை நாட்கள் தான். அந்த நாட்களோ மிகவும் குறைவானவை.
 
அன்பு சகோதரர்களே! ஒரு அறிஞர் அவர்கள் சொல்லுகின்றார்கள்: யார் தன்னுடைய வாழ்க்கையில் இருந்து ஒரு நாளை தன் மீது கடமையான ஒரு ஹக்கை நிறைவேற்றுவதில் அல்லாமல், அல்லது ஒரு ஃபர்ளை நிறைவேற்றுவதில் அல்லாமல், அல்லது ஒரு சிறப்பை தனக்கு எடுத்துக் கொள்வதில் அல்லாமல், அல்லது ஒரு புகழ்ச்சியான நல்ல குணத்தை தனக்குள் கொண்டு வருவதற்கு அல்லாமல், அல்லது ஒரு நன்மையை அடித்தளமிட்டு மக்களுக்கு உறுதிப்படுத்தி, அந்த நன்மை பரவும் படி அல்லாமல், அல்லது ஒரு கல்வியை கற்றுக் கொள்ளாமல் ஒருவர் ஒரு நாளை கழித்தால், அவர் அல்லாஹ் கொடுத்த அன்றைய தினத்திற்கு மாறு செய்து விட்டார். தனக்கு அவர் பெரும் அநீதியை இழைத்துக் கொண்டார்.
 
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள்:
 
நான் பல விஷயங்களுக்கு கவலைப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு விஷயத்திற்கு கைசேதப்பட்டதை கவலைப்பட்டதைப் போன்று, நான் எதற்கும் கவலைப்பட்டதில்லை. அது என்ன தெரியுமா?
 
ஒரு நாளின் சூரியன் மறைகிறது. அன்றைய நாளில் முந்தைய நாளை விட, என்னுடைய அமல் அதிகமாகவில்லை. அந்த நாளை நினைத்து நான் கைசேதப்பட்டதை போன்று வேறு எதற்கும் கை சேதப்படவில்லை.
 
அன்பு சகோதரர்களே! நேரம் என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று. இன்று நம்மிலே பலருக்கு அவர்களுடைய பொருளாதார வேலை போக வியாபார வர்த்தக வேலைகள் போக, எவ்வளவோ நேரங்கள் கிடைக்கின்றன. 
 
அவர்கள் அந்த நேரத்தில் கல்வியை கற்றுக் கொண்டிருக்கலாம். சமுதாயத்திற்கு பலன் தரக்கூடிய எத்தனையோ நன்மைகளை செய்திருக்கலாம். அவர்களுக்குத் தெரிந்த நல்லதை பலர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கலாம். தன்னுடைய குடும்பத்திற்கு சமுதாயத்திற்கு எவ்வளவோ செய்து இருக்கலாம். 
 
ஆனால் வெட்டியாக வீணானதை பார்ப்பதிலே, வீணானதை தெரிந்து கொள்வதிலே, வீணானதை பற்றி பிரச்சாரம் செய்வதிலே, வீணானதை பற்றி பேசுவதிலே, இது மட்டுமல்ல பாவமானவற்றை பார்ப்பதிலும் கேட்பதிலும் நேரத்தை கழிக்கிறார்களே, எவ்வளவு பெரிய நஷ்டத்தை அவர்கள் சுமந்து கொள்கிறார்கள் பாருங்கள்.
 
ஆகவே, அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா வெற்றியாளர்கள், சொர்க்கத்தின் வாரிசுகள் ஜன்னத்துல் பிர்தௌஸின் வாரிசுகள் என்று ஒரு கூட்டத்தை அல்லாஹ் வர்ணிக்கிறான் என்றால், அவர்களிடத்திலே இத்தகைய தன்மை இருக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். அவர்கள் வீணானதின் பக்கம் செல்ல மாட்டார்கள்.
 
அடுத்து, இரண்டு பண்புகளை அல்லாஹ் சொல்கின்றான்: 
 
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
 
அவர்கள் ஜகாத்தை கொடுப்பார்கள். (அல்குர்ஆன் 23:4)
 
உங்களுக்கு தெரியும்; இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலே ஒன்று ஜகாத் என்பது. இந்த ஜகாத்திலே உபரியான தான தர்மங்களும் வரும். கட்டாயமாக ஃபர்லான தான தர்மங்களும் வரும்.
 
அடுத்து அல்லாஹுதாலா சொல்கிறான்:
 
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ
 
அவர்கள் மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்வார்கள். தங்களுடைய கற்பொழுக்கத்தை பாதுகாத்துக் கொள்வார்கள். மனைவியிடமே தவிர, அடிமை இடமே தவிர, மனைவியைத் தவிர, அடிமையை தவிர, ஒரு மனிதன் வேறு ஒரு இடத்தில் இச்சையை தணிக்க சென்றால், அவன் மிகப்பெரிய வரம்பு மீறி. அவன் மிகப்பெரிய அநியாயக்காரன். (அல்குர்ஆன் 23 : 5-7)
 
இன்று, நம்முடைய வாலிபர்களுக்கு, நம்முடைய சமுதாயத்திற்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான அறிவுரை உபதேசம் விழிப்புணர்வு இது. 
 
இன்றைய காலக்கட்டத்தில் எப்படி நிலைமை மாறும் என்றால், முதலாவதாக இந்த ஹராமின் மீது உண்டான கசப்பு, வெறுப்பு சமுதாயத்தில் இருந்து எடுபடுகிறது. பிறகு, அது ஒரு சாதாரணமானதாக ஆகிவிடுகிறது. பிறகு, அது ஒரு குற்றமே இல்லை என்ற நிலை மாறி, கடைசியாக இதுவெல்லாம் சகஜம் என்பதாக மாறிவிடுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இஸ்லாம் நம்மை அப்படி விடவில்லை. விபச்சாரம், அன்னிய பெண்களோடு தொடர்பு, இது அல்லாஹ்வின் மார்க்கத்திலே மிக பயங்கரமான குற்றமாக உள்ளது.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
مَن يَضْمَن لي ما بيْنَ لَحْيَيْهِ وما بيْنَ رِجْلَيْهِ، أضْمَنْ له الجَنَّةَ
 
யார் தனது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் உள்ளதை பாதுகாத்துக் கொள்வாரோ, அதாவது நாவை, தனது இரண்டு காலுகளுக்கு மத்தியில் உள்ளதை பாதுகாப்பாரோ, நான் அவருக்கு சொர்க்கத்துடைய உத்திரவாதம் கொடுக்கிறேன்; உறுதி மானம் கொடுக்கிறேன்.
 
அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாயிதி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6474.
 
உங்களுக்கு தெரியும்; அல்லாஹு தஆலா மூன்று நபர்களுடைய கஷ்டத்தை போக்கினான். துன்பத்தை போக்கினான். அவர்களுடைய துவா அங்கீகரிக்கப்பட்டது. அதிலே ஒருவர் யார்? தன்னுடைய மர்மஸ்தானத்தை பாதுகாத்துக் கொண்டு, அதைக் கூறி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டவர். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2743.
 
அன்பு சகோதரர்களே! இது ஏதோ ஒழுக்கம் சார்ந்த பண்பு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். யார் தங்களுடைய ஒழுக்கத்தை பாதுகாத்து, இபாதத்தோடு ஈமானோடு கற்பொழுக்கம் உள்ளவராக இருக்கிறாரோ, அவர்கள் அல்லாஹ்வுடைய ரஹ்மத்துக்கு மிகவும் விசேஷமாக உரித்தானவர்கள்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
اضمنوا لي ستًّا من أنفسكم أضمن لكم الجنة: اصدقوا إذا حدثتم، وأوفوا إذا وعدتم، وأدُّوا إذا ائتمنتم، واحفظوا فروجكم، وغضُّوا أبصاركم، وكفُّوا أيديكم
 
நீங்கள் எனக்கு ஆறு விஷயங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு சொர்க்கத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பேசினால் உண்மை பேசுங்கள். வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுங்கள். 
 
இது எதுவுமே நம்மளால் செய்ய முடியாது என்று நாம் முடிவு பண்ணி விட்டோம்.
 
அன்பு சகோதரர்களே! ஒன்றை சொல்லுகிறேன் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்றால், இந்த முடிவை செய்தால்தான் நாம் பின்பற்ற முடியும். அல்லாஹ்வுடைய சட்டத்தை என்னால் பின்பற்ற முடியும். நான் இப்படித்தான். அல்லாஹ்வுடைய சட்டத்தில் நான் இப்படித்தான். அல்லாஹ் எனக்கு உதவுவான். என்னால் முடியாது. அல்லாஹ் எனக்கு லேசாக்கி கொடுப்பான். அல்லாஹ் எனக்கு இந்த தௌஃபிக்கை கொடுப்பான். அனுபவித்து பாருங்கள். அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் எத்தனை பரக்கத்தை கொடுப்பான் என்பதை அனுபவித்து பாருங்கள்.
 
ஹதீசின் தொடர் :  பேசினால் உண்மை பேசுங்கள். வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுங்கள். உங்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அந்த பொறுப்பை நிறைவேற்றுங்கள். உங்களுடைய மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள். உங்களுடைய கரங்களால் பிறருக்கு கெடுதி செய்யாமல் தடுத்துக் கொள்ளுங்கள். சொர்க்கத்திற்கான உத்திரவாதம் நான் வாங்கித் தருகிறேன் என்று.
 
அறிவிப்பாளர் : உபாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 22757.
 
அன்பு சகோதரர்களே! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
إذا صلَّتِ المرأةُ خَمْسَها ، و صامَت شهرَها ، و حصَّنَتْ فرجَها ، وأطاعَت زوجَها ، قيلَ لها : ادخُلي الجنَّةَ مِن أيِّ أبوابِ الجنَّةِ شِئتِ
 
எந்த ஒரு பெண் ஐந்து நேர தொழுகை தொழுது, ரமலானிலே நோன்பு நோற்று, கற்பை பாதுகாத்துக் கொண்டு, கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறாளோ அவளுக்கு சொல்லப்படும்; சொர்க்கத்தின் எந்த வாசல் வழியாகவும் நீ செல்லலாம் என்று.
 
அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 2/291.
 
மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களை நமக்கு உதாரணமாக சொல்லும் பொழுது, முஃமின்களுக்கு உதாரணமாக அல்லாஹ் சொல்லும் பொழுது, மர்யமை பற்றி சொல்கிறான். அவள் தன்னுடைய கற்பை பாதுகாத்துக் கொண்டவள். தன்னுடைய ஒழுக்கத்தை பாதுகாத்துக் கொண்டவள் என்று. (அல்குர்ஆன் 66 : 12)
 
யார் தன்னுடைய கற்பை பாதுகாத்துக் கொள்கிறார்களோ, ஒழுக்கத்தை பாதுகாத்துக் கொள்கிறார்களோ, அவர்களுடைய பாவங்களை அல்லாஹு தஆலா மன்னித்து விடுகின்றான். அவர்கள் கேட்கக்கூடிய துஆவை அல்லாஹு தஆலா ஏற்றுக் கொள்கிறான்.
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் உடைய மனைவி. அந்த மிஸ்ருடைய அநியாயக்கார மன்னன் எடுத்துச் சென்று விடுகிறான். அவர்கள் தொழுதுவிட்டு அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்.
 
யா அல்லாஹ்! நான் உன்னை நம்பிக்கை கொண்டேன். உனது நபியை நம்பிக்கை கொண்டேன். நான் என்னுடைய கற்பை என்னுடைய கணவரை தவி,ர பிறரிடம் பாதுகாத்துக் கொண்டேன். இந்த அநியாயக்காரனை என் மீது சாட்டி விடாதே என்று. உடனே அல்லாஹு தஆலா அவருடைய துஆவை கபுல் செய்து கொண்டான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2217.
 
இப்படி, கற்பொழுக்கம் என்பது அல்லாஹ்விற்கு மிக மிக பிரியமான ஒன்று. அதுபோன்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 7 நபர்கள் சொர்க்கத்திற்கு உரிய நபர்கள் என்று சொல்கிறார்கள். 
 
அதிலே ஒருவர் யார்? அழகான, சமுதாயத்திலும் கண்ணியத்திலும் ஒரு பெண் அழைத்தும் நான் அல்லாஹ்வை பயந்து கொள்கிறேன் என்று சொல்லி விலகுகிறார்களே, அவர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலிலே இருப்பார்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகிறார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1423.
 
அன்பிற்குரியவர்களே! அடுத்து அல்லாஹ் சொல்கிறான்:
 
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ
 
அவர்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளோ, பொருள்களோ, அதுபோன்று அவர்கள் கொடுத்த வாக்குகளோ அவற்றை அவர்கள் பேணுவார்கள். பாதுகாப்பார்கள். 
 
அடுத்து, அல்லாஹ் சொல்கிறான். 
 
أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ
 
இவர்கள் வாரிசுகள் -சொந்தக்காரர்கள். அல்லாஹ்வுடைய உயர்ந்த சொர்கமாகிய ஃபிர்தௌஸுக்கு சொந்தக்காரர்கள். அந்த சொர்க்கத்திலே இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 10,11)
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் சுபஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும், நம்முடைய குடும்பத்தார்களுக்கும், நம்முடைய சகோதரர்கள், அல்லாஹ்வுடைய அடியார்கள் எல்லோருக்கும், இத்தகைய பண்புகளை, ஒழுக்கங்களை தந்தருள்வானாக! 
 
நம்முடைய வாழ்க்கையில் பட்ட குற்றங்கள், குறைகள் அனைத்தையும் அல்லாஹு தஆலா மன்னித்து, உண்மையான பரிசுத்தமான முஃமின்களாக நம்மை ஆக்கிக் கொள்வதற்கு அல்லாஹு தஆலா உதவி செய்வானாக! அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، ح وَحَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُرَاوِحٍ اللَّيْثِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «الْإِيمَانُ بِاللهِ وَالْجِهَادُ فِي سَبِيلِهِ» قَالَ: قُلْتُ: أَيُّ الرِّقَابِ أَفْضَلُ؟ قَالَ: «أَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا وَأَكْثَرُهَا ثَمَنًا» قَالَ: قُلْتُ: فَإِنْ لَمْ أَفْعَلْ؟ قَالَ: «تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ ضَعُفْتُ عَنْ بَعْضِ الْعَمَلِ؟ قَالَ: «تَكُفُّ شَرَّكَ عَنِ النَّاسِ فَإِنَّهَا صَدَقَةٌ مِنْكَ عَلَى نَفْسِكَ» (صحيح مسلم - 84)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/