HOME      Khutba      முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! அமர்வு 1 | Tamil Bayan - 764   
 

முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! அமர்வு 1 | Tamil Bayan - 764

           

முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! அமர்வு 1 | Tamil Bayan - 764


முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! அமர்வு 1 
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : முஃமின்கள் வெற்றி பெற்றார்கள்! 
 
வரிசை : 764
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 03-02-2023 | 12-07-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அகிலங்களின் இறைவனாகிய, நம்முடைய ரப்பாகிய அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் இறங்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய மன்னிப்பை வேண்டியவனாக, இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக, மறுமையில் உயர்ந்த சொர்க்க வாழ்க்கையை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பானாக! நம் அனைவரையும் அவனுடைய அன்பிற்கும் பொருத்தத்திற்கும் சொர்க்கத்திற்கும் உரியவராக ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹு தஆலா கேட்கிறான்:
 
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏
 
அவர்கள் குர்ஆனை சிந்திக்க வேண்டாமா அவர்களது உள்ளங்களில் பூட்டுகளாக போடப்பட்டுள்ளன? (அல்குர்ஆன் 47 : 24)
 
குர்ஆனை யார் ஓத மாட்டார்களோ, யார் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களோ அவர்கள் அல்லாஹ்வுடைய அருளிலிருந்து நேர்வழியிலிருந்து மிக தூரமாக இருப்பார்கள். அல்லாஹு தஆலா இந்த வேதத்தை நாம் சிந்தித்து செயல்படுவதற்காக இறக்கினானே தவிர, வெறும் அதனுடைய வசனங்களை ஓதிக் கொண்டிருப்பதற்காக மட்டும் அல்ல. 
 
இமாம் ஹசன் பசரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: குர்ஆனை ஓத வேண்டும்; அதை சிந்திக்க வேண்டும்; அதிலே அல்லாஹு தஆலா ஹலால் ஆக்கியதை மட்டுமே எடுத்து நடக்க வேண்டும்; அல்லாஹ் அதில் ஹராமாக்கியதை விட்டு விலகி இருக்க வேண்டும். 
 
மூமின்கள் என்றால் யார் என்று என்னென்ன நற்குணங்களை அடையாளங்களை தன்மைகளை அல்லாஹு தஆலா கூறினானோ அந்த அடையாளங்கள், அந்த நற்குணங்கள், அந்த தன்மைகளை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். 
 
இதற்குதான் குர்ஆன் இறக்கப்பட்டு இருக்கிறது தவிர, தாயத்துகளுக்காகவோ தகடுகளுக்காகவோ அல்லது மந்திரமாக ஜெபித்து நம்முடைய காரியங்களை சாதித்துக் கொள்வதற்காகவோ அல்ல. 
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா தன்னை நம்பிக்கை கொண்ட முஃமின்கள் அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? அவன் விரும்பக் கூடிய மூமின்கள் யார்? எந்த மூமின்களுக்கு இம்மை மறுமையின் வெற்றியை கொடுப்பதற்கு அவன் காத்துக் கொண்டிருக்கிறான்? 
 
எந்த மூமின்களுக்காக அல்லாஹு தஆலா ஜன்னத்துல் பிர்தௌசை அலங்கரித்து வைத்திருக்கிறான்? ஜென்னத்துல் அத்னை, ஜென்னத்துல் மஃவாவை, தாருஸ் ஸலாமை அலங்கரித்து வைத்திருக்கிறான் என்று அல்லாஹு தஆலா குர்ஆனுடைய பல்வேறு இடங்களிலே பட்டியல் போட்டு சொல்லிக் கொண்டே இருக்கிறான்.
 
அத்தகைய இடங்களை தேட வேண்டும். அல்லாஹ் விரும்பக்கூடிய முஃமினாக நான் ஆக வேண்டும் என்றால் குர்ஆனை திறக்க வேண்டும். அல்லாஹ் எந்த முஃமினை புகழ்கிறான்? எந்த முஃமினை அல்லாஹுத்தஆலா உயர்த்துகிறான்? என்னென்ன தன்மைகளை அல்லாஹ் அவர்களுக்கு அடையாளமாக சொல்லுகிறான்? கொஞ்சம் படித்து பாருங்கள்! 
 
அல்முஃமினூன் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை அல்லாஹ் சுபஹானஹு தஆலா எத்தகைய ஒரு பாசத்தோடு, ஒரு பிரியத்தோடு, ஒரு மதிப்போடு, ஒரு கண்ணியத்தோடு அந்த அடியார்களை நினைவு கூறுகிறான் பாருங்கள்!
 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ
 
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகி இருப்பார்கள். இன்னும், அவர்கள் ஸகாத்தை சரியாக நிறைவேற்றுவார்கள். இன்னும், அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை (விபச்சாரத்தை விட்டும் ஓரின சேர்க்கையை விட்டும்) பாதுகாப்பார்கள். தங்கள் மனைவியர்களிடம்; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடம் தவிர. (ஆகவே, அவர்கள் மற்ற பெண்களிடம் தங்கள் ஆசையை தீர்க்க மாட்டார்கள்.) நிச்சயமாக இ(த்தகைய)வர்கள் பழிக்கப்படுபவர்கள் அல்லர்.
 
ஆக, (தனது மனைவி, அல்லது தனது அடிமைப் பெண் ஆகிய) இவர்கள் அல்லாத பெண்களிடம் யார் (காமத்தை) தேடுவார்களோ அவர்கள்தான் (அல்லாஹ்வின் சட்டத்தை மீறிய) எல்லை மீறிகள் ஆவார்கள். இன்னும், அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் தங்கள் உடன்படிக்கையையும் கவனித்து நடப்பார்கள். இன்னும், அவர்கள் தங்கள் தொழுகைகளை பேணி பாதுகாப்பார்கள். அவர்கள்தான் (சொர்க்கத்தை) சொந்தமாக்கிக் கொள்பவர்கள்,  ‘ஃபிர்தவ்ஸ்’ (என்னும்) சொர்க்கத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1-11)
 
வசனத்தின் விளக்கம் : அல்லாஹு தஆலா எத்தகைய உயர்ந்த தன்மைகளை கொண்டு அவர்களை புகழ்கிறான்! அந்த தன்மைகள் அவர்களிடத்திலே இருந்தால் அல்லாஹ் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய வாக்கு என்ன? 
 
ரப்பு சொல்கிறான்:
 
قَدْ اَفْلَحَ -திட்டவட்டமாக வெற்றி பெற்று விட்டார்கள். நற்பாக்கியத்தை அடைந்து கொண்டார்கள். அவர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள். அல்லாஹ்வுடைய பொருத்தம் அவர்களுக்கு உண்டு. அல்லாஹ்வுடைய மன்னிப்பு அவர்களுக்கு உண்டு. அல்லாஹ்வுடைய கருணை அவர்களுக்கு உண்டு. 
 
இந்த உலக வாழ்க்கையில் இருந்து அவர்கள் முடிவே இல்லாத நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்கு செல்லும்போது அவர்களுக்கு எந்த குறையும் இருக்காது. பயம் இருக்காது. கவலை இருக்காது. தோல்வி இருக்காது. நஷ்டம் இருக்காது. அல்லாஹ்வுடைய கோபம், அல்லாஹ்வுடைய சாபம் அவர்கள் மீது இருக்காது. நரகம் அவர்களை தீண்டாது. அத்தகைய மகத்தான வெற்றியை அவர்கள் பெறுவார்கள்.
 
எது வெற்றி? ஆட்சி கிடைப்பதா? உலகத்தின் செல்வங்களை சேகரித்துக் கொள்வதா? உலகத்தில் வசதியான வாழ்க்கை கிடைப்பதா? எதை விட்டு நாம் பிரிந்து விடுவோமோ, எது நம்மை விட்டு பிரிந்து விடுமோ அது கிடைப்பது எப்படி வெற்றியாக ஆக முடியும்? 
 
அதுவெல்லாம் தற்காலிக மகிழ்ச்சி அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உண்டான சந்தோஷம் அவ்வளவுதான். இந்த உலகம் எல்லாம் அப்படித்தான். நீங்கள் படித்து பட்டதாரியாக ஆகுவதும், மிகப் பெரிய வேலையோ வியாபாரமோ அமைவதும், பிறகு நீங்கள் விரும்பக்கூடிய அளவுக்கு செல்வம் உங்களுக்கு கிடைப்பதும், நீங்கள் நினைப்பதெல்லாம் இந்த உலகத்திலே உங்களுக்கு கிடைத்துக் கொண்டே போனாலும், ஒருநாள் கண்டிப்பாக நாம் அதை விட்டு பிரிவோம். அது நமக்கு சொந்தமானது அல்ல. நிரந்தரமானது அல்ல. 
 
அப்படி என்றால் அது கிடைப்பதை நான் எப்படி எனக்கு பெரிய வெற்றியாக கருத முடியும்? சொர்க்க வாழ்க்கை ஒன்றுதான் வெற்றி. 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
 
நரக நெருப்பை விட்டு யார் பாதுகாக்கப்பட்டாரோ, சொர்க்கத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டாரோ அவர்தான் பாக்கியம் பெற்றவர்; அவர்தான் வெற்றி அடைந்தவர். எந்த உலகத்தை அது கிடைப்பதை வெற்றி என்று கருதுகின்றீர்களோ அது உங்களை மயக்கக்கூடிய அற்ப இன்பம். (அல்குர்ஆன் 3 : 185)
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்: கண்டிப்பாக வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் வெற்றியாளர்கள். யார் அவர்கள்? அவர்கள் முஃமீன்கள். அல்லாஹ்வை தன்னுடைய ரப்பாக யார் நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا 
 
எங்களது ரப்பு அல்லாஹ், நாங்கள் வணங்குவது அல்லாஹ்வை, நாங்கள் உதவி தேடுவது அல்லாஹ்வை, எங்களது இறைவன் அல்லாஹ், அவனுக்குத்தான் சுஜூது செய்வோம், அவனிடத்திலே தான் துவா கேட்போம், எங்களது முயற்சி, ஆதரவு, பயம், நம்பிக்கை எல்லாம் எங்களை படைத்து பரிபாலிக்கின்ற அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே. (அல்குர்ஆன் 41 : 30)
 
மூமின்களுக்கு தான் வெற்றி. ஆட்சி இல்லை என்றாலும் சரி, செல்வம் இல்லை என்றாலும் சரி, எது இந்த உலகத்தில் அவர்களுக்கு இல்லாமல் போனாலும், அல்லாஹ் வாக்களித்த மறுமையின் வெற்றி அவர்களுக்கு கண்டிப்பாக உண்டு. யார் மறுமையை நம்பவில்லையோ, அல்லாஹ்வை நம்பவில்லையோ அவர்களுக்கு இழிவு தான், கேவலம் தான் மிஞ்சும், மறுமையில் நரகத்தின் தண்டனை தான் மிஞ்சும்.
 
அல்லாஹு தஆலா நமக்கு இந்த ஈமானை பாதுகாத்துக் கொடுப்பானாக! இந்த ஈமானை அதிகப்படுத்தி கொடுப்பவனாக! அல்லாஹ்விடத்தில் துவா கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எப்படிப்பட்ட பாக்கியவான்கள்! எப்பேற்பட்ட கொடுப்பினை பெற்றவர்கள் நாம்! 
 
உலகத்தினுடைய எந்த இழப்பை நினைத்தும், நமக்கு அன்றாட வாழ்க்கையில் அல்லாஹ்வின் விதியின் படி ஏற்படக்கூடிய எந்த சேதத்தை நினைத்தும், எந்த ஆபத்துகளை நினைத்தும், நாம் வருத்தப்படத் தேவையில்லை, ஈமான் நம்மிடத்திலே பாதுகாப்பாக இருக்கும் பொழுது. 
 
ஈமான் பாதுகாப்பாக இல்லை என்றால், எந்த நிலையில் இருந்தால் என்ன, கேவலமும் நஷ்டமும் தான். 
 
ஈமான் பாதுகாப்பாக இருக்கின்ற நிலையில் சஹாபாக்களுடைய நிலை எப்படி இருந்தது யோசித்து பாருங்கள்! எதிரிகளால் கொல்லப்படவில்லையா? நாடோடிகளாக அவர்கள் விரட்டப்படவில்லையா? சொத்து சுகங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு பரமை ஏழையாக ஃபகிராக அவர்கள் துரத்தப்படவில்லையா? 
 
அல்லாஹுத்தஆலா வெற்றியாளர்கள் என்றல்லவா அவர்களை சொல்கிறான். உண்மையாளர்கள் என்றல்லவா அல்லாஹ் அவர்களை சொல்கிறான். நான் பொருந்தி கொண்ட நல்லடியார்கள் என்றல்லவா அல்லாஹுத்தஆலா அவர்களை சொல்கிறான். 
 
அவர்களின் காலடிகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கத்திலே செவியுற்று வந்தார்களே!  அவர்களின் மாளிகையை சொர்க்கத்திலே பார்த்து வந்தார்களே! இன்னாருக்கு இன்னாருக்கு இன்ன சொர்கம் வாக்களித்தார்களே! (1)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1149.
 
அதுதான் வெற்றி! முஃமின்கள் கவலைப்பட தேவையில்லை.
 
وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
 
நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்; நீங்கள் ஏன் பலவீனப்பட வேண்டும்; நீங்கள் தான் உயர்ந்தவர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால். (அல்குர்ஆன் 3 : 139)
 
ஆகவே, ஈமானை நினைத்து நாம் கவலைப்பட வேண்டும். இந்த ஈமானிலே ஷிர்க் கலக்காமல் இருக்க வேண்டும். 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ‏
 
எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையில் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தை கலக்கவில்லையோ அவர்களுக்கே (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) பாதுகாப்பு உண்டு. இன்னும், அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் ஆவர். (அல்குர்ஆன் 6 : 82)
 
وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏
 
அதிகமானவர்கள் ஈமான் கொள்கிறார்கள். அவர்கள் முஷிரிக்காக இருக்கும் நிலையில். (அல்குர்ஆன் 12 : 106)
 
அல்லாஹு தஆலா எத்தகைய ஈமானை கேட்கின்றான்:
 
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ‏
 
அவர்கள் வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக, இணைவைப்பை விட்டு விலகியவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் ஸகாத்தைக் கொடுப்பதற்கும் தவிர ஏவப்படவில்லை. இன்னும், இதுதான் நேரான (நீதியான, சரியான சட்டங்களுடைய) மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98 : 5)
 
இணைவைத்தல் கலக்காத ஈமானை அல்லாஹுத்தஆலா விரும்புகிறான். அதை தான் வெற்றிக்கான நிபந்தனையாக அல்லாஹ் சொல்கிறான். 
 
வணக்க வழிபாட்டிலே இணை வைத்தல் கலக்கக்கூடாது. நம்பிக்கையில் இணைவைத்தல் கலக்கக்கூடாது. துவாவிலே தவக்குளிலே பயத்திலே ஆதரவிலே இப்படி அல்லாஹ்வுக்கு மட்டும் சிறப்பான வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு மட்டும் சிறப்பாக அடியான் வெளிப்படுத்த வேண்டிய அந்த குணங்களில் அந்த பண்புகளில் அடியான் வேறு யாரையும் சேர்க்க முடியாது. சேர்த்தால் அவன் முஷிரிக். 
 
அல்லாஹ்வை ஆதரவு வைக்க வேண்டிய அடியான், ஆதரவு வைக்க வேண்டிய அந்த இடத்திலே, அல்லாஹ் அல்லாதவனை ஆதரவு வைத்து விட்டால் அவன் ஷிர்க் செய்து விடுகிறான். அவன் தொழுதாலும் சரியே. அல்லாஹ்வை பயப்பட வேண்டிய இடத்தில் அல்லாஹ் அல்லாதவனை பயந்துவிட்டால் அல்லாஹ்விடத்திலே கேட்க வேண்டிய நேரத்தில் அல்லாஹ் அல்லாதவனிடத்திலே கேட்டுவிட்டால் அவன் ஷிர்க் செய்து விட்டான்.
 
அன்பு சகோதரர்களே! நன்றாக புரிந்து கொள்ளுங்கள்! உங்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்! கண்டிப்பாக பெரும் பாவங்களை பயப்பட வேண்டும். பெரும் பாவங்களை குறித்த விழிப்புணர்வு நமக்கு வேண்டும். பெரும் பாவங்களை குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். 
 
இன்னொரு செய்தி என்னவென்றால், எந்த அளவு பெரும் பாவங்களை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்திலே இருக்கின்றதோ அல்லது பெரும் பாவத்தை குறித்த பயம் நமது மக்களிடத்திலே இருக்கின்றதோ அந்த அளவு ஷிர்க்கை பற்றிய விழிப்புணர்வு இல்லை, இணைவைத்தலை பற்றிய பயமில்லை, நாம் வினை வைப்போமா அல்லது இதெல்லாம் இணை வைக்கக் கூடிய செயலா? இதெல்லாம் ஒரு கலாச்சாரம், இதெல்லாம் ஒரு பண்பாடு, இதெல்லாம் ஒரு மரியாதை, இது எப்படி ஷிர்க்காக ஆகும்? என்பதாக ஷிர்க்கை நியாயப்படுத்தக் கூடிய நிலை, ஷிர்க்கை சரி காணக்கூடிய நிலை, ஷிர்கிர்க்கு இஸ்லாமிய போர்வையை போர்த்தக்கூடிய இஸ்லாமிய ஆடையை போர்த்தக்கூடிய நிலை, இஸ்லாமிய அடையாளத்தை கொடுக்கக் கூடிய நிலை, இன்றைய முஸ்லிம்களிடத்திலே பெருவாரியாக இருப்பதை பார்க்கிறோம். 
 
வெகுஜன மக்களிடத்திலே சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. எங்கே இணைவைத்தல் காலையும் மாலையும் இரவும் பகலுமாக நடக்கின்றதோ அது முஸ்லிம்களுடைய கலாச்சார மையமாக, முஸ்லிம்களுடைய அடையாளச் சின்னமாக, முஸ்லிம்களுடைய பரம்பரை ஒரு வழிபாட்டுத் தளமாக அங்கீகரிக்கப்படக்கூடிய நிலைக்கு இன்றைய முஸ்லிம்களுடைய நிலை ஈமானிலே கேவலமாக மோசமாக இருக்கிறது. 
 
எப்படி அல்லாஹுத்தஆலா உதவி செய்வான்? எப்படி அல்லாஹுத்தஆலா வானவர்களை இறக்குவான்? எப்படி அல்லாஹுத்தஆலா இரட்சிப்பு செய்வான்? ஈமான் கொண்டு தான் எல்லாம். இஸ்லாமுடைய ஐந்து கடமைகளில் முதல் கடமை என்ன ஈமான்.
 
ஈமான் இல்லை என்றால் அங்கே இஸ்லாமே இல்லை. இன்று ஒட்டுமொத்தமாக பெரும்பாலான மக்கள் அல்லாஹ் பாதுகாத்த சிலரை தவிர, இந்த ஷிர்கிர்கு இஸ்லாமிய அடையாளத்தை கொடுத்து விட்டார்கள். இஸ்லாமிய அங்கீகாரத்தை கொடுத்து விட்டார்கள். 
 
எத்தனை முஸ்லிம்களுடைய வீடுகள் தர்காக்களுடைய போட்டோக்களால் நிரம்பி இருக்கின்றன. எத்தனை முஸ்லிம்கள் தங்களுடைய விசேஷமான நாட்களிலே அவர்கள் நாடி செல்லக்கூடிய இடம் தர்காக்களாக இருக்கின்றன. அல்லாஹ் அல்லாதவர்களுடைய வழிபாட்டு தலங்களாக இருக்கின்றன. 
 
இன்று நாம் பார்க்கிறோம்; அத்தகையவர்கள் தான் இன்று பிற மத மக்களோடு தங்களுடைய மார்க்கத்தில் சமரசம் செய்து கொண்டு இன்று சிலை வழிபாட்டுக்கும் தயாராகி விட்டார்கள். யார் தர்கா வழிபாடுகளை செய்து கொண்டிருந்தார்களோ, அதை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்களோ இன்று காஃபிர்களுக்கு முஷ்ரிக்குகளுக்கு பயந்து சிலை வழிபாடுகளுக்கும் சென்று விட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالمُشْرِكِينَ، وَحَتَّى يَعْبُدُوا الأَوْثَانَ
 
கியாமத் நிகழாது, என்னுடைய உம்மத்தில் இருந்து ஒரு பெருங்கூட்டம் முஷ்ரிக்குகளோடு சேர்ந்து கொள்ளும் வரை. 
 
அறிவிப்பாளர் : சவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2219.
 
சேர்ந்து விட்டார்களா இல்லையா? அன்பு சகோதரர்களே! ஷிர்க்கை பயப்பட வேண்டும். المؤمنون என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வுடைய அந்த நிபந்தனைக்கு உட்பட்ட பரிபூரணமான மூஃமின்கள். 
 
அல்லாஹு தஆலா அந்த முஃமின்கள் எப்படி இருப்பார்கள் என்று சில அடையாளங்களை இங்கே சொல்கிறான்:
 
الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ‏
 
மூஃமின் என்றால் முஸ்லிம் என்றால் அவரிடத்தில் தொழுகை இருக்க வேண்டும். அந்தத் தொழுகை உள்ளச்சத்தோடு இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 23 : 2)
 
இங்கும் நம்முடைய பொதுமக்களுடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள்! முஸ்லிம். ஆனால், எத்தனை வகையான முஸ்லிம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்த முஸ்லிம் யார்? ஒரே ஒரு வகையான முஸ்லிம் தான். இங்கே எத்தனை வகையான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். 
 
இவர் ஐந்து வேளை தொழக்கூடிய முஸ்லிம். இவர் வெள்ளிக்கிழமை மட்டும் தொழக்கூடிய முஸ்லிம். இவர் பெருநாள் மட்டும் தொழக்கூடிய முஸ்லிம்.
 
இஸ்லாமிலே யாருக்கு தொழுகை இல்லையோ அவருக்கு இஸ்லாமில் பங்கு இல்லை. அதுவும் ஐந்து நேர தொழுகையை தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னார்களே தவிர, வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, பெருநாளை மட்டுமல்ல. 
 
வெள்ளிக்கிழமை தொழுகை யார் மீது கடமை? யார் ஐந்து நேர தொழுகையை தொழுகின்றார்களோ அவர்கள் மீதுதான் வெள்ளிக்கிழமை தொழுகை கடமை. யார் வெள்ளிக்கிழமை அன்று பஜர் தொழுதார்களோ அவர்கள்தான் வெள்ளிக்கிழமை ஜும்மாவை நிறைவேற்ற முடியும்.
 
யார் அந்த வெள்ளிக்கிழமை அன்று அசரும் மகரிபும் இஷாவும் தொழுவாரோ அவர்களிடமிருந்து தான் ஜும்மா அங்கீகரிக்கப்படும். ஜும்ஆ என்று தனியாக ஒரு தொழுகை இஸ்லாமிலே இல்லை. 
 
இன்றைய முஸ்லிம்களுடைய நிலையை பாருங்கள்! ஜும்மாவுக்கு மட்டும் தொப்பி போட்டு, அத்தர் போட்டு வந்து உட்கார்ந்து விட்டு, அன்னைக்கு கறிசோறு சாப்பிட்டு விட்டால், தாங்கள் முஸ்லிம்கள். 
 
பிறகு ரமலானிலே 27ஆம் கிழமை, பெருநாள் தொழுகை கொண்டாடிவிட்டால் தாங்கள் முஸ்லிம்கள். அதற்குப் பிறகு மவ்லுது மீலாது சடங்கு அது தனி ஒரு பட்டியல். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இத்தகையவர்களை அல்லாஹுத்தஆலா முஃமினாக முஸ்லிமாக ஏற்றுக் கொள்வதே கிடையாது. அல்லாஹுத்தஆலா வாக்களித்து வெற்றி பெற்ற அந்த மூமின்கள் யார்?
 
அவர்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இந்த இரண்டாவது வசனத்தில் அல்லாஹுத்தஆலா இதனுடைய இறுதிப் பகுதி ஒன்பதாவது வசனத்தோடு இணைத்து பார்க்கிறான் பாருங்கள்! எப்படி அவர்கள் தொழுகையிலே உள்ளச்சத்தோடு இருப்பார்கள்?
 
وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏
 
தொழுகையினுடைய நேரங்களை பேணி தொழுவார்கள். (அல்குர்ஆன் : 23:9)
 
இரண்டு விஷயங்கள். ஒன்று, தொழக்கூடிய அந்த தொழுகை உள்ளச்சம் உடைய தொழுகையாக இருக்க வேண்டும். பிறகு, அந்த நேரங்களை பேணி அந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டு தன்மைகளை அல்லாஹுத்தஆலா வெற்றி பெற்ற முஃமின்களுக்கு அடையாளமாக சொல்கிறான்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக்கூடிய ஒரு ஹதீஸை உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 
 
நாம் இன்று பல தொழுகையாளியுடைய நிலையை நினைத்து நாம் வருந்த வேண்டும். அவர்கள் தொழுகையிலே ஓதுவதில் தொழுவதிலே தாங்கள் என்ன செய்கிறோம்? என்பதை உணராமல் தொழக்கூடியவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். 
 
தொழுகையிலே உள்ள அச்சம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக தொழுகையில் நாம் என்னென்ன திக்ருகளை, துஆக்களை, குர்ஆனுடைய வசனங்களை ஓதுகின்றோமோ அதனுடைய பொருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 
 
அந்த பொருளை உணர்ந்து, அந்த பொருளையே நாம் அப்படியே சிந்தித்தவர்களாக அதை நாம் ஓத வேண்டும். அடுத்து, அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கிறேன், என்னுடைய ரப்புக்கு முன்னால் நிற்கிறேன், இது என்னுடைய இறுதி தொழுகையாக இருக்கலாம், யா அல்லாஹ்! இந்த தொழுகையை என்னுடைய மன்னிப்புக்கும் சொர்க்கத்திற்கும் உரிய தொழுகையாக ஆக்கு! என்ற பயத்தோடு மன ஓர்மையோடு தொழுவது. 
 
பார்க்க வேண்டிய இடத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது. இங்கும் அங்கும் பார்வைகளை திருப்பாமல், உடல்களுடைய உறுப்புகளை கொண்டு அசைவுகளை செய்யாமல், உறுப்புகளும் உள்ளமும் அமைதியாக இருந்து நிறைவேற்ற வேண்டும். இது அந்த  உள்ளச்சம் உடைய தொழுகை.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
«يَقُولُ مَا مِنَ امْرِئٍ مُسْلِمٍ تَحْضُرُهُ صَلَاةٌ مَكْتُوبَةٌ فَيُحْسِنُ وُضُوءَهَا وَخُشُوعَهَا وَرُكُوعَهَا، إِلَّا كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنَ الذُّنُوبِ مَا لَمْ يُؤْتِ كَبِيرَةً وَذَلِكَ الدَّهْرَ كُلَّهُ»
 
யார் ஒரு மனிதர் கடமையாக்கப்பட்ட தொழுகையை அவருக்கு வரும் பொழுது ஒளூவை சரியாக செய்கிறாரோ...
 
தொழுகையின் உள்ளச்சத்திற்கு அடிப்படை ஒளூவை சரியாக செய்வது. குறைவான தண்ணீரிலே ஒளூ செய்வது. அந்த உறுப்புகளை சுத்தமான முறையில் எல்லா இடங்களிலும் நினைகின்றனவா என்று கவனித்து கழுவது. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை சஹாபாக்களை பார்த்தார்கள். அவசரமாக அவர்கள் தொழுகைக்கு ஒளூ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய பின்னங்காலுகள் சரியாக கழுவப்படாமல் இருந்ததை பார்த்துவிட்டு ஒளூ செய்யும் பொழுது, 
 
«وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ»
 
யார் குதிங்கால்களை சரியாக கழுவவில்லையோ அவர்களுக்கு நரகத்தின் நாசம் உண்டாகட்டும் என்று தங்களுடைய கண்ணுக்கு முன்னால் அந்த சஹாபாக்களை எச்சரிக்கை செய்தார்கள்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 60, 96, 163.
 
அன்பு சகோதரர்களே! இன்று லிட்டர் கணக்கிலே தண்ணீரை செலவு செய்கிறார்கள். ஆனால், ஒளூவை சரியாக செய்வதில்லை. தண்ணீர் செலவழிக்கப்படுகிறது அதிகமாக. ஆனால், ஒளூ சரியாக செய்யப்படுவதில்லை. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள் தண்ணீரை குறைவாக செலவு செய்தார்கள். ஆனால், ஒழுவை சரியாக செய்தார்கள். 
 
كانَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَغْسِلُ، أوْ كانَ يَغْتَسِلُ، بالصَّاعِ إلى خَمْسَةِ أمْدَادٍ، ويَتَوَضَّأُ بالمُدِّ
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒழு செய்யக்கூடிய தண்ணீரின் அளவு, சஹாபாக்களுடைய ஒழுவுடைய தண்ணீரின் அளவு இன்றைய அரை லிட்டர் அவ்வளவுதான். 
 
இதிலே மூன்று முறை வாய் கொப்பளித்து, மூக்குக்கு தண்ணீர் செலுத்தி, கைகளை கழுவி, மூன்று முறை முகத்தை கழுவி, மூன்று முறை இரு கைகளையும் கழுவி, மூக்குக்கு மசஹ் செய்து, மூன்று முறை இரு கால்களையும் கழுவி விடுவார்கள் அரை லிட்டர் தண்ணீரிலே.
 
இதற்கு மேல் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயன்படுத்தியது இல்லை. 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 201.
 
இன்று எத்தனை அரை லிட்டர் எல்லாம் வேஸ்ட் ஆகிறது? காரணம், மக்களுக்கு அலட்சியம். எப்படியும் செய்யலாம் என்று. 
 
ஒரு ஒளூ இபாதத். ரசூலுல்லாஹ் காட்டி தந்த முறையில் தான் செய்ய வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
فَيُحْسِنُ وُضُوءَهَا وَخُشُوعَهَا 
 
யார் அந்த ஒழுவை அழகாக செய்கிறார்களோ, அந்த தொழுகையினுடைய உள்ளச்சத்தை அழகு படுத்துகின்றாரோ.
 
ஏன் இப்படி சொன்னார்கள்? நம்முடைய உள்ளம் அல்லாஹ்வுடைய கையிலே இருக்கின்றது. கண்டிப்பாக இந்த உள்ளம் சிதறி கொண்டே இருக்கும். இந்த உள்ளம் பறந்து கொண்டே இருக்கும். ஒரு இடத்திலே நிற்காது. சிந்தனைகள் தடுமாறும். அதற்காகவே ஒரு ஷைத்தான் இருக்கின்றான். 
 
நாம் தொழுகையில் இருக்கும் பொழுது, நீ இதை நினை; அதை நினை; நாம் எதையெல்லாம் பல காலமாக மறந்திருப்போமோ அதெல்லாம் நினைவுக்கு வரும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
ஆகவே, அந்த உள்ளச்சத்தை கொண்டு வந்து கொண்டே இருக்க வேண்டும். திரும்பத் திரும்ப அப்படி சிந்தனை சிதறும் பொழுது உடனடியாக நம்முடைய நினைவை நாம் ஓதக்கூடிய அந்த ஓதுதலின் பக்கம், அந்த துவாவின் பக்கம், அந்த திலாவத்தின் பக்கம் கொண்டு வர வேண்டும்.
 
அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கின்றோம் என்ற அந்த எண்ணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும். 
 
பிறகு சொன்னார்கள்: 
 
وَرُكُوعَهَا -அதனுடைய ருகூவை யார் சரியாக செய்வாரோ. 
 
பெரும்பாலானவர்கள் குனிவார்கள். அப்படியே எழுந்து விடுவார்கள். எழுந்து முழுமையாக நின்று இருக்க மாட்டார்கள். சுஜூதுக்கு சென்று விடுவார்கள். இது தொழுகை அல்ல. 
 
இப்படி தொழுதவரை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
 
«ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»
 
திரும்பத் தொழு, திரும்பத் தொழு, திரும்பத் தொழு என்று அவரை திரும்பத் திரும்ப அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். கடைசியிலே அவர் வந்து சொன்னார்: அல்லாஹ்வின் தூதரே! இதற்கு மேல் எனக்கு தொழ தெரியாது, கற்றுக் கொடுங்கள் என்று. 
 
பிறகு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தக்பீர் இப்படி கட்ட வேண்டும். இப்படி நிற்க வேண்டும். ருகூஃ இப்படி செய்ய வேண்டும். ருகூஃ செய்தால் நீ அமைதியாக வேண்டும். பிறகு  ருகூவிலிருந்து எழுந்தால் நீ அமைதியாக வேண்டும். உன்னுடைய முதுகு சரியாக வேண்டும்.
 
ஒவ்வொரு எலும்பும் அதனுடைய இடத்திற்கு மீண்டும் வந்து அமைதியாக வேண்டும். பிறகு நீ சுஜூதுக்கு செல்ல வேண்டும். இப்படியாக ஒவ்வொரு நிலையிலும் நீ அந்த நிலையில் சமமாக வேண்டும். அமைதியாக வேண்டும். அப்போதுதான் அந்த தொழுகை உள்ளச்சம் உடைய, நிதானம் உடைய தொழுகை. அல்லாஹ்விடத்திலே ஏற்றுக்கொள்ளப்படும். (2)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 757, 6251, 6667.
 
தொடர்ந்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
إِلَّا كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنَ الذُّنُوبِ مَا لَمْ يُؤْتِ كَبِيرَةً وَذَلِكَ الدَّهْرَ كُلَّهُ
 
இப்படி ஒரு மனிதர் கடமையான தொழுகையை தொழுதால், உளுவை சரியாக செய்தார், உள்ளச்சத்தை முழுமையாக நிறைவேற்றினார், அதனுடைய ருகூவை அவர் முழுமையாக நிறைவேற்றினார் என்றால் அவருடைய முன் சென்ற எல்லா பாவங்களுக்கும் அந்த தொழுகை கஃப்பாராவாக -பாவங்களை போக்க கூடியதாக ஆகிவிடும். 
 
பெரும் பாவங்களை தவிர. பெரும் பாவங்களுக்கு அவர் தனியாக அல்லாஹ்விடத்திலே தவ்பா கேட்க வேண்டும். மற்ற சிறு பாவங்கள் அவரை அறியாமல் அவர் என்னென்ன பாவங்களை செய்தாரோ, கண்ணாலோ, கையாலோ, காதாலோ அந்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும். இது காலமெல்லாம் இந்த நன்மை அவருக்கு இருக்கும் என்பதாக.
 
அறிவிப்பாளர் : உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 228.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ
 
நீ தொழுகைக்கு நின்றால் எப்படி தொழ வேண்டும் என்றால், உன்னுடைய குடும்பத்தார்களுக்கு எல்லாம் விடை சொல்லிவிட்டு, பயணம் சொல்லிவிட்டு, நீ மரணிப்பதற்கு உள்ள நிலையில் எந்த அளவு உனக்கு மறுமையின் பயம், அல்லாஹ்வுடைய அச்சம் இருக்குமோ அது போன்ற தொழுகையாக, தங்களுடைய குடும்பத்தாரை விட்டு பிரிய கூடிய, மரணத்திற்கு செல்லக்கூடிய அடியான் எப்படி இருப்பானோ அவனுடைய தொழுகையைப் போன்று தொழு என்பதாக கூறினார்கள். (3)
 
அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 4171.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தொழுகையினுடைய நேரங்களை குறித்து நமக்கு எச்சரிக்கை செய்தார்கள். தொழுகையின் நேரங்களை வீணடிப்பவர்களை குறித்து அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
 
فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏ الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏
 
யார் தொழுகையின் நேரங்களை அலட்சியம் செய்தவர்களாக இருக்கின்றார்களோ அந்த தொழுகையாளிகளுக்கு நாசம் உண்டாகட்டும். அந்த தொழுகையாளிகளுக்கு நரகத்தின் நாசம் உண்டாகட்டும். (அல்குர்ஆன் 107 : 5)
 
அன்பு சகோதரர்களே! தொழுகை வேண்டும். அந்த தொழுகை உள்ள அச்சம் உடைய தொழுகையாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, அந்த தொழுகையின் நேரங்களை பேணி நாம் தொழ வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுத்தஆலா வாக்களித்ததாக, பொறுப்பு ஏற்றுக் கொண்டதாக சொல்கிறான். 
 
ني فرَضْتُ على أمتِك خمسُ صلواتٍ، وعَهِدْتُ عندي عهدًا "أنه مَن جاءَ يحافظُ عليهنَّ لوقتِهن أدخلتُه الجنةَ، ومَن لم يُحافِظْ عليهنَّ؛ فلا عهدَ له عندي
 
யார் ஒருவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவாரோ, அதனுடைய கடமைகளை பேணுவாரோ, நான் அவரை சொர்க்கத்திற்குள் சேர்ப்பேன் என்று அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். யார் அந்த தொழுகையை வீணடித்தாரோ, அதை பேணவில்லையோ அவருக்கு என்னிடத்திலே எந்த பொறுப்பும் இல்லை என்று அல்லாஹுத்தஆலா கூறி விட்டதாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ கதாதா அல்ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 430.
 
அல்லாஹுத்தஆலா வாக்களித்த முஃமின்களுடைய அந்த முதல் அடிப்படை தன்மை, முதல் அடிப்படை குணம், அவர்கள் தொழுகையிலே உள்ள அச்சம் உடையவர்களாக இருப்பார்கள். தங்களுடைய ஈமானை பாதுகாத்தவர்களாக இருப்பார்கள். தொழுகையின் நேரங்களை அவர்கள் கவனித்துக் கொண்டு இருப்பார்கள். 
 
இன்று, தொழுகையாளிலே இப்படியும் ஒரு கூட்டம் இருக்கிறார்கள்; தொழுவோம், நேரம் இருக்கின்றது அல்லவா, தொழுவோம், மஸ்ஜிதிற்கு வருவது கிடையாது, அல்லது எப்படியோ ஒரு நேரத்திலே ஒரு சுருக்கமாக, அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொண்டால் போதும் என்று. 
 
அப்படி இல்லை சகோதரர்களே! ஆண்கள் மஸ்ஜிதிற்கு வந்து தொழ வேண்டும். ஜமாத்தோடு தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அந்த தொழுகையிலே அவர்கள் தங்களுடைய எல்லா அமல்களையும் சரியாக செய்கிறார்களா? என்பதை கவனித்து தொழ வேண்டும். 
 
எப்படியோ தொழுதோம் என்று தொழுகையை நிறைவேற்றுவது அல்ல. அந்த தொழுகை வெற்றிக்கு காரணமாக அமையாது. எந்த தொழுகை உள்ளச்சத்தோடு நிறைவேற்றப்படுகின்றதோ, எந்த தொழுகை அல்லாஹ்வுடைய பயத்தோடு நிறைவேற்றப்படுகிறதோ, அதுதான் உண்மையான தொழுகை. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அத்தகைய தொழுகையை தான் நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். 
 
மறுமையினுடைய அடையாளங்களிலே ஒன்று, 
 
يُوشِكُ أَنْ تَدْخُلَ مَسْجِدَ جَمَاعَةٍ فَلَا تَرَى فِيهِ رَجُلًا خَاشِعًا
 
மஸ்ஜிதிலே தொழக் கூடியவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால், அவர்களிடத்திலே உள்ள அச்சம் இருக்காது. (4)
 
அறிவிப்பாளர் : அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2653.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! இன்னும் பல தன்மைகளை இந்த வசனங்களிலே அல்லாஹுத்தஆலா சொல்கிறான். இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்மாவிலே பார்ப்போம்.
 
இப்படியாக குர்ஆனை நாம் சிந்திக்க வேண்டும். அல்லாஹ் சொல்லக்கூடிய மூமின்கள் அவர்களுக்கு என்னென்ன அடையாளங்களை அல்லாஹ் சொல்கிறான்? என்பதை ஒவ்வொரு வசனமாக தேடிப் படித்து, நம்முடைய வாழ்க்கையிலே அந்த தன்மைகளைக் கொண்டு வருவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 
 
அந்த தன்மைகள் குறித்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மேலதிகமாக என்னென்ன விளக்கங்களை சொல்லி இருக்கிறார்கள்? என்பதை ஹதீஸ்கள் மூலமாக நாம் அறிந்து, அந்த நல்ல குணங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டியிருக்கக்கூடிய அந்த வழிகாட்டுதல்களை, நம்முடைய வாழ்க்கையிலே கொண்டு வர வேண்டும். 
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நல்ல தவ்ஃபீக்கை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக! பாவங்களில் இருந்தும், அல்லாஹ்விற்கு பிடிக்காத ஒவ்வொரு சொல், செயல், குணங்கள், கொள்கையிலிருந்து என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
أنَّ النبيَّ صلَّى اللهُ عليه وسلَّمَ قالَ لبِلالٍ عِنْدَ صَلَاةِ الفَجْرِ: يا بلَالُ، حَدِّثْنِي بأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ في الإسْلَامِ؛ فإنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بيْنَ يَدَيَّ في الجَنَّةِ. قالَ: ما عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِندِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا، في سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إلَّا صَلَّيْتُ بذلكَ الطُّهُورِ ما كُتِبَ لي أَنْ أُصَلِّيَ. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 1149 | خلاصة حكم المحدث : [صحيح]
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ المَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ، فَصَلَّى، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَدَّ وَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى، ثُمَّ جَاءَ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ» ثَلاَثًا، فَقَالَ: وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ، فَعَلِّمْنِي، فَقَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ القُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا» (صحيح البخاري- 757)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ قَالَ: حَدَّثَنِي عُثْمَانُ بْنُ جُبَيْرٍ، مَوْلَى أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي، وَأَوْجِزْ، قَالَ: «إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ، وَلَا تَكَلَّمْ بِكَلَامٍ تَعْتَذِرُ مِنْهُ، وَأَجْمِعِ الْيَأْسَ عَمَّا فِي أَيْدِي النَّاسِ» (سنن ابن ماجه 4171)
 
குறிப்பு 4)
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَخَصَ بِبَصَرِهِ إِلَى السَّمَاءِ ثُمَّ قَالَ: «هَذَا أَوَانُ يُخْتَلَسُ العِلْمُ مِنَ النَّاسِ حَتَّى لَا يَقْدِرُوا مِنْهُ عَلَى شَيْءٍ» فَقَالَ زِيَادُ بْنُ لَبِيدٍ الأَنْصَارِيُّ: كَيْفَ يُخْتَلَسُ مِنَّا وَقَدْ قَرَأْنَا القُرْآنَ فَوَاللَّهِ لَنَقْرَأَنَّهُ وَلَنُقْرِئَنَّهُ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا، فَقَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا زِيَادُ، إِنْ كُنْتُ لَأَعُدُّكَ مِنْ فُقَهَاءِ أَهْلِ المَدِينَةِ هَذِهِ التَّوْرَاةُ وَالإِنْجِيلُ عِنْدَ اليَهُودِ وَالنَّصَارَى فَمَاذَا تُغْنِي عَنْهُمْ؟» قَالَ جُبَيْرٌ: فَلَقِيتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، قُلْتُ: أَلَا تَسْمَعُ إِلَى مَا يَقُولُ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ؟ فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ أَبُو الدَّرْدَاءِ قَالَ: «صَدَقَ أَبُو الدَّرْدَاءِ، إِنْ شِئْتَ لَأُحَدِّثَنَّكَ بِأَوَّلِ عِلْمٍ يُرْفَعُ مِنَ النَّاسِ؟ الخُشُوعُ، يُوشِكُ أَنْ تَدْخُلَ مَسْجِدَ جَمَاعَةٍ فَلَا تَرَى فِيهِ رَجُلًا خَاشِعًا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَمُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الحَدِيثِ، وَلَا نَعْلَمُ أَحَدًا تَكَلَّمَ فِيهِ غَيْرَ يَحْيَى بْنِ سَعِيدٍ القَطَّانِ، وَقَدْ رُوِيَ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، نَحْوُ هَذَا» وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (سنن الترمذي 2653) [حكم الألباني] : صحيح
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/