நல்ல முடிவு நல்லவர்களுக்கே! | Tamil Bayan - 607
بسم الله الرحمن الرّحيم
நல்ல முடிவு நல்லவர்களுக்கே
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தும்,அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை தக்வாவை நினைவூட்டியவனாக,அல்லாஹ்வுடைய மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி நடப்பது தான் நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதை நினைவூட்டியவனாக,
அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குவது தான் நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு என்பதை நினைவூட்டியவனக,அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நமக்கு அல்லாஹ் நாடாமல் உதவி செய்ய முடியாது,அல்லாஹ்வின் உதவியை மிகப்பெரிய உதவி,அல்லாஹ்வையே சார்ந்து இருப்போம்,அவனையே நம்பி இருப்போம்,அவனிடமே முறையிடுவோம் என்ற உபதேசத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக!அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் நம்மை நெருக்கமாக்கி வைப்பானாக!நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து சுமூகமான நன்மையான நிலைகளை நமக்கு உருவாக்கித் தருவனாக!
ஆபத்துகளிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் எல்லாவிதமான சீர்கேடுகளிலிருந்தும் நம்மையும் உலக சமுதாய மக்களையும் பாதுகாப்பானாக!நம்முடைய மறுமை வாழ்க்கையை இம்மை வாழ்க்கை விட சிறப்பானதாக ஆக்கி அருள்வானாக. ஆமீன்.
தொடர்ந்து சில வரலாறுகளை,நபிமார்களின் வரலாறுகளையும்,அல்குர்ஆன் நபிமார்களை எப்படி வர்ணிகின்றது?அந்த வர்ணிப்பிலிருந்து நாம் எப்படி படிப்பினைகள் பாடங்கள் பெறவேண்டும்?என்பதையும் பார்த்து வந்தோம்.
அதனுடைய தொடர்ச்சியாக இன்னும் சில விஷயங்களை இன் ஷா அல்லாஹ் நாம் பார்க்க இருக்கின்றோம்.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் எப்பேற்பட்ட துன்பங்களை,துயரங்களை,சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை அல்குர்ஆனில் விரிவாக கூறியிருப்பதை நாம் பார்த்தோம்.
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா சூரா ஹூதுடைய நாற்பத்தி ஒன்பதாவது வசனத்தில் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த வரலாற்றை கூறி முடித்ததற்கு பிறகு நம்முடைய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அந்த வரலாற்றினுடைய பாடத்தை படிப்பினையை கூறுகிறான்.
வரலாறையும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். பிறகு அந்த வரலாற்றிலிருந்து நபியே நீங்கள் என்ன படிப்பினை பாடம் பெற வேண்டும்? இந்த வரலாறு உங்களுக்கு ஏன் எடுத்துக் கூறப்பட்டது? என்பதையும் அந்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
تِلْكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهَا إِلَيْكَ مَا كُنْتَ تَعْلَمُهَا أَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هَذَا فَاصْبِرْ إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِينَ
(நபியே!) இது (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹ்யி மூலமாகவே நாம் இதை உமக்கு அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இதை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப்போல் நீரும் சிரமங்களைச்) சகித்துப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக முடிவான வெற்றி இறையச்சம் உடையவர்களுக்குத்தான்.
இந்த வரலாறுகள் உங்களுக்கும் தெரியாது உங்களது சமுதாய மக்களுக்கும் தெரியாது நாம் உங்களுக்கு வஹியின் மூலமாக இந்த சம்பவத்தை விரிவாக எடுத்துக் கூறினோம். (அல்குர்ஆன் 11:49)
இதிலிருந்து நீங்கள் பெறவேண்டிய படிப்பினை என்ன? பொறுமையாக இருங்கள்.உறுதியாக இருங்கள். நிலைகுலையாமல் இருங்கள். தடுமாறாமல் இருங்கள். தைரியம் இழந்து விடாமல் நம்பிக்கை இழந்து விடாமல் நீங்கள் எந்த சோதனையிலும் மார்க்கத்தில் பலவீனம் ஏற்பட்டுவிடாமல் உறுதியாக இருங்கள்.அல்லாஹ்வுடைய உதவியை எதிர்பார்த்து இருங்கள்.
நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்வுடையஉதவியை எதிர்பார்த்து இருந்ததை விட அதிகமான காலங்கள் நாம் இருந்துவிட்டோமா? யோசித்துப் பாருங்கள்!
950ஆண்டுகாலம் அல்லாஹ்விடத்திலே அவர்கள் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
இறுதியாக அல்லாஹுத்தஆலா இந்த மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் இவர்களை நாம் அழிக்கப் போகிறோம் என்று கூறினான்:
أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ
நபியே! இனி உங்களது மக்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 11:36)
وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ
இந்த அநியாயம் செய்தவர்களுக்காக நபியே நீங்கள் இனி சிபாரிசு பேசாதீர்கள் இவர்கள் மூழ்கடிக்கப்பட போகிறார்கள். (அல்குர்ஆன் 11:36)
என்று அல்லாஹ்வுடைய அந்த எச்சரிக்கையின் வாக்கு உறுதியாகி அது நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்ற வரை நூஹ் அலைஹிஸ்ஸலாம் தங்களது தாவா பணியை செய்து கொண்டே இருந்தார்கள். அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டே இருந்தார்கள். அல்லாஹ் உதவுவான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள்.
இன்று நம்முடைய பலவீனம் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. சின்ன சின்ன சோதனைகளிளெல்லாம் தடுமாறி விடுகிறோம்.
நீங்கள் கேட்கலாம், அல்லது சிலர் யோசிக்கலாம்; இப்போது நடக்கக்கூடியவையெல்லாம் சிறிய சோதனையா? என்று.
நமக்கு முன்னால் சந்தித்த மக்களுடைய சோதனையோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நமக்கு முன்னால் வாழ்ந்த முஃமின்கள் சந்தித்த அந்த ஆபத்துகளோடு இதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அப்படி பார்த்தால் இப்போது நாம் சந்திப்பது அந்த சோதனைகளுக்கு முன்னால் இது ஒரு சோதனையே அல்ல.
அம்மாரும், கப்பாபும், பிலாலும் சுடுமணலில் சாய்க்கப்பட்டு, சாட்டையால் அடிக்கப்பட்டு, நெருப்பு கங்குகளில் கிடத்தப்பட்டு, நெஞ்சின் மீது பாறைகள் வைக்கப்பட்டதற்கு பிறகு அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே வந்து முறையிட்ட போது, இவர்களுக்கு எதிராக நீங்கள் துஆ செய்ய மாட்டீர்களா? என்று.
அப்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்கள் அவசரப்படுகிறீர்கள் என்று சொன்னார்கள்.
உங்களுக்கு முன்னால் இருந்த மக்களில் ஈமான் கொண்டவரை இழுத்து கொண்டு வரப்படும். அவருடைய இடுப்பு அளவு குழி தோண்டப்படும். பிறகு,ரம்பத்தைக் கொண்டு வந்து அவருடைய தலையில் இருந்து அறுக்கப்பட்டு இரண்டாக அவர் பிளக்கப்படுவார்.
இத்தகைய சோதனையிலும் அவர் ஈமானை விடவில்லை. நிலைகுலையவில்லை. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ளவராக இருந்தார்.
இன்னொருவரைக் கொண்டு வரப்படும். கூர்மையான பற்களையுடைய இரும்பு சீப்புகளால் அவருடைய உடல் எல்லாம் அப்படியே வகுத்து எடுக்கப்படும். எலும்புகள் தனியாக, சதைத் தனியாக.
அப்படியிருந்தும் அவர் நிலைகுலைந்தது இல்லை. நீங்கள் அவசரப்படுகிறீர்களே.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு சுப்ஹானஹுதஆலாநம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நூஹ் அலைஹிஸ்ஸலாம் உடைய இந்த சம்பவத்தை எடுத்துக் கூறி சொல்கிறான்:
فَاصْبِرْ
நபியே நீங்கள் பொறுமையாக இருங்கள். அல்குர்ஆன் -11:49
பொறுமை என்றால் என்ன துன்பங்களைச் சகித்துக் கொள்வது மட்டுமல்ல. துன்பங்களை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல பொறுமை.
இங்கு இன்னும் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்:ஒன்று இருக்கின்றது; வேறு வழி இல்லாமல் துன்பத்தை ஏற்றுக் கொள்வது;வேறு வழியில்லாமல் இன்னல்களை சகித்துக் கொள்வது;அது எதிர்த்து எதையும் செய்ய முடியாத ஒரு பலவீனமான சமுதாயம் செய்யக்கூடிய ஒன்று.
அல்லாஹுத்தஆலா நமக்கு இந்த இடத்திலே சொல்லக்கூடிய ஸப்ர் –பொறுமை என்பது செய்ய முடியாத நிலையில் ஏற்படக்கூடிய அந்த பொறுமையைப் பற்றி அல்ல. இதற்கும் மேலாக ஈமானிய பொறுமையை அல்லாஹுத்தஆலா இங்கே சொல்லிக் காட்டுகின்றான்.
ஈமானியப் பொறுமை என்ன? எந்த பொறுமையை நபிமார்கள் கையாண்டார்களோ எந்த பொறுமையை நல்லவர்கள் கையாண்டார்களோ எந்த பொறுமையை அல்குர்ஆன் நமக்கு எடுத்துச் சொல்கிறதோ அந்த பொறுமை இருக்க வேண்டும் .
அந்த பொறுமை என்பது அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருந்து இந்த சோதனை என்னுடைய தீமையால் என்னுடைய கரத்தால் என்னுடைய பாவத்தால் வந்திருக்கலாம்.
அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!நான் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி இதற்குண்டான தீர்வை தேடுகிறேன் என்று அல்லாஹ்வைக் கொண்டு பொறுமை தேடுவது.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மேலும் மேலும் பிடிப்பை உண்டு பண்ணி தன்னிடத்தில் மார்க்க விஷயங்களில் என்ன பலவீனம் இருக்கிறது? நான் இன்று எத்தனை பஃர்ளுகளை விட்டிருக்கிறேன்? எத்தனை வாஜிபுகளை விட்டிருக்கிறேன்? எத்தனை பெரும் பாவங்களை செய்து இருக்கிறேன்? எத்தனை சிறு பாவங்களை செய்து இருக்கிறேன்? என்று தன்னை பரிசோதித்து தன்னை சீர்திருத்திக் கொண்டு அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பது.
அதோடு இந்த மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் கடமையாக்கிய தாவா பொறுப்பை நான் செய்கிறேனா?இந்த மக்களுடைய நேர்வழிக்கு நான் என்ன செய்திருக்கிறேன்?
எந்த மக்கள் இன்று என்னை எதிர்க்க வேண்டும் என்று அல்லது நான் இந்த உலகில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்களோ இவர்களுக்கு நான் அல்லாஹ்வைப் பற்றி மறுமையைப் பற்றி ஆஹிரத்தைப் பற்றி நபியைப் பற்றி நான் என்ன எடுத்துச் சொல்லியிருக்கிறேன்? இதற்காக என்னுடைய தியாகம் என்ன? இது சோதனை.
இதிலே நாம் உறுதியாக இருப்பது. இதிலே நாம் பொறுமையாக இருப்பது. இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான்:
நீங்கள் பொறுமையாக இருங்கள். (அல்குர்ஆன் 11:49)
இந்த பொறுமையை அல்லாஹ் உடைய தூதர் (ஸல்) அவர்கள் எப்படிக் கையாண்டார்கள்? பொறுமையாக இருங்கள் என்று அல்லாஹ்வுடைய கட்டளை வந்தவுடன்.
நாம் இன்று என்ன விளங்குகிறோம்? நாம் செய்யக்கூடிய இபாதத்தை குறைத்து விட வேண்டும். தாவாவை குறைத்துவிட வேண்டும். எனக்கு எதற்கு இந்த வேலை? அப்படி அல்ல.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூஹ் நபியுடைய இந்த வரலாறு சொல்லப்பட்டதற்கு பிறகு சீர்திருத்தப் பணியை, நன்மையை ஏவுவதை தீமையை தடுப்பதை அவர்கள் மேலும் அந்த உறுதியோடு முன்னெடுத்து செய்தார்களா? அல்லது விட்டுவிட்டு வெறும் தன்னுடைய வணக்க வழிபாடு என்று அவர்கள் கஃபத்துல்லாஹ்வோடு ஒதுங்கிவிட்டார்களா?
அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்? எப்போது உதவ வேண்டும் என்பதை அல்லாஹ் அறிந்திருக்கிறான். அல்லாஹ்வுடைய உதவி தாமதமாகவும் வரலாம். சீக்கிரமாகவும் வரலாம். அல்லாஹ் தன்னுடைய இல்மிலே அதற்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறான்.
சிலர் கேட்பார்கள் : அல்லாஹ்வுடைய உதவி வருவதற்குள் நம்மில் எத்தனையோ நல்லவர்கள் எத்தனையோ சமுதாயங்கள் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் அழிந்து விடுவார்களே?! அவர்களுக்கெல்லாம் என்ன ஆகப் போகிறது என்பதாக.
அன்பு சகோதர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவிலே இறுதி ஹஜ்க்கு பிறகு மிகப்பெரிய ஒரு இஸ்லாமிய சாம்ராஜியத்தை நிறுவினார்களே!
அபூ பக்ரும், உமரும்,உஸ்மானும், அலியும் அதற்குப் பிறகு இஸ்லாமிய மன்னர்கள் தோன்றி நீதமான ஒரு ஆட்சியை கொடுத்தார்களே!
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; இதற்கு முன்பு எத்தனை சஹாபாக்கள் ஷஹீதாகி இருந்தார்கள். இதற்கு முன்பு எத்தனை நூற்றுக்கணக்கான நல்லவர்கள் அல்லாஹ்விடத்தில் அந்த சோதனையில் போய் சேர்ந்தார்கள்.
நாம் என்ன நினைக்கிறோம்:நம்மில் ஒவ்வொருவரும் அந்த நல்ல முடிவை இப்போது உடனடியாக கண்டுவிட வேண்டும்.
நம்மிலிருந்து ஒரு கூட்டம் சோதனைகளை தாங்குவதற்கும்,சகிப்பதற்க்கும்,அல்லாஹ்வுடைய மறுமையை தேர்ந்தெடுப்பதற்கும் தயாராக இல்லை என்றால் எப்படி அல்லாஹ்வுடைய உதவி வரும்?
கண்டிப்பாக வரும்.அந்த உதவியை நம்மிலே யார் உயிரோடு இருக்கின்றார்களோ அவர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.
யார் அல்லாஹ்விடம் சேர்த்துவிட்டார்களோ அவர்கள் கண்டிப்பாக அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய மறுமையின் அந்த மகத்தான வெற்றியை, மகத்தான நற்பாக்கியத்தை கொண்டு சந்தோஷம் பெறுவார்கள்.
அதுமட்டுமல்ல, யார் தங்களுக்குப் பின்னால் வருவார்களோ அவர்களைக் கொண்டும் அவர்கள் சுபச்செய்தி பெறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கூறுகிறான்:
நபியே நீங்கள் பொறுமையாக இருங்கள். நல்ல முடிவு தக்வா உள்ளவர்களுக்கு தான். (அல்குர்ஆன் 11:49)
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய இந்த வசனத்தின் பொருளை படிக்கும் போது நம்மிலே சிலர் இப்படி எண்ணுகிறார்கள்: அதாவது, என்னிடத்திலே தொழுகை இல்லையா?நமது சமுதாய மக்களிடத்தில் ஜகாத் இல்லையா?அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லவில்லையா? அவர்கள் இபாதத்து செய்யவில்லையா?என்று மட்டும் எண்ணிக் கொள்கிறார்கள்.
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே தக்வா என்று கூறினால், எந்த இடத்தில் அந்த متقينஎன்ற வார்த்தையையோ, அல்லது தக்வா என்ற வார்த்தையையோ, அல்லது لعلّكم تتقونஎன்ற வார்த்தையை சொல்கிறானோ அதனுடைய முன்பின் தொடரோடு சேர்த்து அந்த தக்வாவை புரிந்து கொள்ளப்படும் என்பது தான் முஃபஸ்ஸிர்களுடைய கருத்து.
வெறும் தொழுவது மட்டுமல்ல,வெறும் நோன்பு வைப்பது மட்டுமல்ல,அல்லாஹ்வை அஞ்சி பெரும் பாவங்களை விடுவது மட்டுமல்ல.
தக்வா என்பது ஒரு விசாலமான ஒன்று. அந்த தக்வாவுடைய அம்சங்களிலே ஒன்றுதான் நம்மிடத்திலே ஆட்சி கொடுக்கப்பட்டால், நம்மிடத்திலே அதிகாரம் கொடுக்கப்பட்டால்,இந்த பூமியின் வாரிசுகளாக அல்லாஹ் நம்மை ஆக்கினால் அந்த பூமியில் ஆளக்கூடிய ஈமானிய இஸ்லாமிய தகுதி நம்மிடத்திலே எத்தனை பேருக்கு இருக்கிறது?
நம்மிலே அதிகாரத்தில் உள்ளவர்கள் இல்லையா?பொறுப்பில் உள்ளவர்கள் இல்லையா?முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் முஸ்லிம்களிலே பொறுப்பிலே இருப்பவர்களுக்கும் இடையில் என்ன வித்தியாசத்தை இன்று நம்மால் பார்க்க முடிகிறது.
லஞ்சம் என்றால் இவர்களும் செய்கிறார்கள்.அவர்களுக்கு செய்கிறார்கள்.அநியாயம் என்றால் இவர்களும் செய்கிறார்கள்.அவர்களும் செய்கிறார்கள்.கையாடல் என்றால் இவர்களுக்கு செய்கிறார்கள்.அவர்களும் செய்கிறார்கள்.
பணியில் அலட்சியம்,பணியில் கவனக் குறைவு,பொறுப்பு அமானிதத்தை நிறைவேற்றாமல் இருப்பது,வாக்கை மீறுவது,இப்படி தலைமைத்துவத்திற்கும் மக்களை ஆட்சி ஆழ்வதற்கும் என்னென்ன முரண்பாடுகள் இருக்கின்றனவோ,எதெல்லாம் கூடாத செயல்களோ அந்த செயல்கள் நம்முடைய சமுதாயத்தில் ஆட்சி கொடுக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கு தகுதி கொடுக்கப்பட்வர்களுக்கு இருக்கிறதா?இல்லையா?
இந்த நிலையில் அல்லாஹுத்தஆலா எப்படி நம்முடைய நிலையை மாற்றுவான்?யோசித்துப்பாருங்கள்.
நம்மிலே ஆட்சி கொடுக்கப்பட்டால் அந்த ஆட்சியை,மக்களை நிர்வகிக்கக்கூடிய அந்த தக்வா நம்மிடத்திலே இருக்கிறதா?அந்த பேணுதல் நிமிடத்தில் இருக்கிறதா?நீதம், நேர்மை,அமானிதம்,சொத்துக்களை,பொது கடமைகளை எப்படி நிறைவேற்ற வேண்டும்?என்ற அந்த ஈமானிய நம்பிக்கை,அந்த தக்வா,அந்த இஸ்லாமிய ஒழுக்கங்கள் நம்மிடத்திலே இருக்கின்றனவா?
இதை அல்லாஹ் சொல்கிறான்: (அல்குர்ஆன் 11 : 49)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவுடைய 13ஆண்டு காலங்களிலும் மதினாவுடைய 10ஆண்டு காலங்களிலும் சேர்த்து உருவாக்கினார்கள்.
வெறும் மஸ்ஜிதுந் நபவியிலே முதல் சஃப்பிலே தொழுகக்கூடிய தொழுகையாளிகளை மட்டும் உருவாக்கவில்லை, நோன்பு நோற்கக்கூடிய நோன்பாளிகளை மட்டும் உருவாக்கவில்லை, ஹஜ் செய்யக்கூடிய ஹாஜிகளை மட்டும் உருவாக்கவில்லை.
அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு மத்தியில் நீதமாக எப்படி நடந்துகொள்ளவேண்டும்? ஒருவன் அநியாயம் செய்தால் அவரை கரம் பிடித்து எப்படி தடுக்க வேண்டும்? பொது சொத்துகளை பொது பொறுப்புகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று அந்த தக்வா உள்ள முஸ்லிம்களை உருவாக்கினார்கள்.
அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாடியிருந்தால் தங்களுடைய பிள்ளைகளில் சிலரை அடுத்து கலீபாவாக ஆகியிருக்கலாம்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாடியிருந்தால் தங்களுடைய ஆண் மக்களில் யாரையாவது ஒருவரை கலீஃபாவாக ஆகியிருக்கலாம்.
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்தபோது அவருடைய சொத்து அவர்களிடத்தில் இருந்த அந்த உடை மட்டும் தான். தன்னுடைய தந்தை கஃபன் இடுவதற்கு கூட தன்னுடைய மகள் ஆயிஷா விடத்திலே சொல்கிறார்கள் : புது துணியை தேடாதே. நான் என்ன உடை உடுத்தி இருக்கிறேனோ அந்த உடையிலேயே எனக்கு கஃபன் இடுங்கள். புதிய துணிக்கு உயிர் உள்ளவர்கள் தான் தகுதியானவர்கள் என்று.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவருடைய நீதத்தைப் பற்றியும் அவருடைய எளிமையைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இப்படிப்பட்ட ஒரு ஈமானிய சமுதாயம் உருவாகும் போது தான் அல்லாஹ் தஆலா அவர்களுக்கு தலைமைத்துவத்தை தருகிறான்.
இன்று நமக்கு நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள்; ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்வாதாரப் பிரச்சினை, ஒவ்வொருவருக்கும் அவருடைய குடும்பத்துடைய பிரச்சனை.
தன்னுடைய பொருளாதாரம் எப்படி மேம்படும்? தன்னுடைய வியாபாரத்தை எப்படி மேம்படுத்துவது? இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து கொண்டு மார்க்கத்தின் ஒரு சிறிய அம்சத்தை மட்டும் நம்மிடம் வைத்துக்கொண்டு திருப்தி அடைந்து கொண்டிருக்கிறோம்.
இதன் காரணமாகத்தான் சோதனைகளின் போது மனம் தளர்ந்து விடுகிறோம். நம்மிடத்திலே இருக்கக்கூடிய குறைந்த அளவுடைய மார்க்க பற்றைக் கொண்டு அல்லாஹ்விடத்தில், எப்படி ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பத்ர் போரில் வெற்றியை கொடுத்தானோ, நூஹ் அலைஹிஸ்ஸலாம், மூசா அலைஹிஸ்ஸலாம் உடைய வெற்றி இப்படிப்பட்ட நபிமார்களுடைய வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய அமல்களும் தக்வாவும் நம்முடைய தவக்குலும், யகீனும் மிகப் பலவீனமான நிலையில் இருந்து கொண்டிருக்க, அல்லாஹ்விடத்தில் நாம் எதிர்பார்ப்பது எதை?சஹாபாக்களுக்கு அல்லாஹுத்தஆலா பத்ரிலே கொடுத்த வெற்றியை,உஹதிலே கொடுத்த வெற்றியை, தபூக்கிலே கொடுத்த வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய யகீனை அல்லாஹுத்தஆலா சீர்திருத்தம் செய்வானாக! சிலர் பலவீனப்பட்டு விடுகிறார்கள். சிலர் தங்களுடைய நம்பிக்கையிலே கோழையாகி விடுகிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான் : பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களிலே சிலர் கொல்லப்படலாம். உங்களில் சிலர் இந்த உலகத்திலிருந்து சென்றுவிடலாம். (அல்குர்ஆன் 11:49)
ஆனால்,நிச்சயமாக நல்ல முடிவு தக்வா உள்ளவர்களுக்கு. யார் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுகின்றார்களோ, அல்லாஹ்வுடைய வேதத்தில் உள்ள அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுகின்றார்களோ, அல்லாஹ் தடுத்த அத்தனை சிறிய பெரிய பாவங்களை விட்டும் நீங்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்றார்களோ அத்தகைய நல்லவர்களுக்கு கண்டிப்பாக நல்ல முடிவு இருக்கத்தான் போகிறது.
இங்கே மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த சம்பவத்தை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனுப்பப்பட்ட போது, அந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் தங்களுடைய சமுதாய மக்களை பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமா?
சூரா அஃராஃப்-உடைய அந்த வரலாற்றை அப்படியே எடுத்துப் படித்துப் பாருங்கள். 128-வது வசனத்தில் அதை முடிக்கும் போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய பனீஇஸ்ராயீல் முறையிட்ட அத்தனை முறையீடுகளையும் கேட்டுவிட்டு மூஸா அலைஹிஸ்ஸலாம் அனுப்பப்படுவதற்கு முன்பிலிருந்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனுப்பப்பட்ட காலம் வரை அவர்கள் இந்த ஃபிர்அவுனின் மூலமாக என்னென்ன துன்பங்களை நாங்கள் சந்தித்து வந்தோம் என்ற அவர்களின் முறையீட்டை கேட்டதற்கு பிறகு மக்களுக்கு சொன்னார்கள் :
اسْتَعِينُوا بِاللَّهِ
நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் 7:128)
ஒரு நபியின் வாயிலிருந்து வெளிப்பட்ட அந்த வார்த்தையை அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே நமக்கு சொல்லித்தருகிறான் என்றால் நினைத்துப்பாருங்கள்.
ஃபிர்அவ்ன் போன்று மிகப்பெரிய அநியாயம் செய்தவர்கள் அவனுக்குத் முன்பு தோன்றியதே இல்லை.
அவனைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ (10) الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ (11) فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ
கருத்து : பெரும் ராணுவமுடைய ஃபிர்அவ்னை நினைத்துப்பாருங்கள்.இந்த பூமியிலே மிகப்பெரிய அழிச்சாட்டியம் செய்தான். குழப்பங்களை, கலகங்களை மக்களுக்கு மத்தியில் சீர்கேட்டை மிகப்பெரிய அளவிலே செய்தார்கள். (அல்குர்ஆன் 89 : 10-12)
தனக்கு ஒரு இனம் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் அந்த இனம் மிகைத்து விடும் என்று நினைத்து அந்த இனத்துடைய ஆண் மக்களைக் கொலை செய்தான்.
இஸ்ரவேலர்களை பார்த்து அல்லாஹ் சொல்கிறான் :
يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ
உங்களின் ஆண்மக்களை அருத்தார்கள்,கொன்று குவித்தார்கள். (அல்குர்ஆன் 2:49)
ஒன்று ஒரு பலிகடா ஆட்டை அறுப்பது போன்று. இல்லையென்றால் இமாம் தபரீ ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
அந்த காட்சியை கண்ணுக்கு முன்னால் கொஞ்சம் கொண்டு வந்து நிறுத்தி பாருங்கள் : கர்ப்பிணிப்பெண் கொண்டு வரப்படுவார்; அவருடைய அந்த பிரசவ வலியை அறிவதற்காகவே இஸ்ரவேலர்களுடைய ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஃபிர்அவ்னுடைய காவல்காரர்கள் இருப்பார்கள்.
அந்த வேதனை அவளுக்கு ஆரம்பமான உடன் ஈட்டி போன்று கூர்மையாக மூங்கிலை பாதியாக வெட்டி அந்த கம்புகளை வரிசையாக ஒரு வேலிக்கு வைப்பதைப் போன்று நிறுத்தப்படும். அதற்குப் பிறகு அதற்கு நேர் மேலாக ஒரு கம்பை உயரமாக கட்டுவார்கள்.
பிறகு, அந்த கம்பிலே அந்த கர்ப்பிணிப் பெண் உடைய இரண்டு கைகளும் கட்டப்பட்டு உயரே தொங்க விடப்படுவார். அந்த கர்ப்பிணிப் பெண் தொங்கக்கூடிய அந்த நிலையிலிருந்து அவள் கொஞ்சம் நிற்க வேண்டுமென்றால் அந்த கூர்மையில் தான் நிற்கவேண்டும்.
எப்படி நிற்க முடியும்?இப்படியாக அந்த கர்ப்பிணிப் பெண் தன்னுடைய இரண்டு கால்களையும் இங்கும் அங்குமாக உதறிக்கொண்டு ஒரு பக்கம் தொங்கக் கூடிய வலி, இன்னொரு பக்கம் பிரசவ வலி, பிறகு அந்த காலை வைத்தால் குத்தக்கூடிய வலி.
இந்த மூன்று வலிகளுக்கிடையே அவள் தடுமாறும் பொழுது அவளுடைய குழந்தை பிறந்து கீழே விழுந்தால் அந்த குழந்தை நேரடியாக ஈட்டிக் கூர்மையோடு இருக்கக்கூடிய அந்த மூங்கில் கம்பில் தான் விழும்.
இறுதியாக அந்த குழந்தை விழுந்து இறந்து விடும்பொழுது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அல்லது தன்னுடைய வலியிலிருந்து கொஞ்சம் விடுதலை பெறுவதற்காக தன்னுடைய குழந்தையின் மீதே அவள் கால் வைக்கும் நிலைக்கு ஆளாகி விடுவார்.
இதை குர்ஆனிலே அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்,
மிகப்பெரிய அநியாயத்தை ஃபிர்அவ்ன் செய்தான். (அல்குர்ஆன் 89:12)
இப்படிப்பட்ட சோதனைகளுக்கு பிறகு மூஸா அலைஹிஸ்ஸலாம் இடத்திலே அந்த பனீ இஸ்ராயிலியர் வருகிறார்கள்.
قَالُوا أُوذِينَا مِنْ قَبْلِ أَنْ تَأْتِيَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا
மூஸா! நீங்கள் வந்ததற்குப் பிறகும் இந்த சோதனை தொடர்கிறது. நீங்கள் வருவதற்கு முன்பும் இந்த சோதனை எங்களுக்கு நடந்துகொண்டு இருந்தது. (அல்குர்ஆன் 7:129)
அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்கிறார்கள்:
اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا
அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்.இன்னும் பொறுமையாக இருங்கள். (அல்குர்ஆன் 7:128)
உறுதியாக இருங்கள். எந்த உறுதியை சொன்னார்கள்? ஃபிர்அவ்ன் உங்களை இப்படி அச்சமுறுத்துவதால் உங்களது மார்க்கத்தை விட்டு விடாதீர்கள்.அவனுடன் சேர்ந்து விடாதீர்கள்.
அவனுடைய அநியாயத்திற்கு துணை போகிவீடாதீர்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இன்று நம்முடைய இஸ்லாமிய அடையாளங்கள்,நம்முடைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்கள் இதுபோன்ற சூழ்நிலைகளால் எங்கே மாறி விடுமோ என்று பயப்பட கூடிய நிலையில் நாம் இருக்கிறோம்.
மூஸா (அலை)இரண்டு உபதேசங்கள் சொன்னார்கள்:
1. அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்.
2. அல்லாஹ்விடத்திலே முறையிடுங்கள்.
இந்த பூமி இந்த மண் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. எத்தனையோ அநியாயக்காரர்களை அல்லாஹ் உடைய இந்த பூமி பார்த்திருக்கிறது.
எத்தனையோ அநியாயக்காரர்களை தன்னுடைய வயிற்றுக்குள் இந்த பூமி விழுங்கிருக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான் :
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ (6) إِرَمَ ذَاتِ الْعِمَادِ
(நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? உங்களுடைய இறைவன் ஆதுக்கு என்ன செய்தான் என்பதை பார்க்கவில்லையா? (அல்குர்ஆன் 89 : 6 ,7)
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை. (அல்குர்ஆன் 89 : 8)
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள். (அல்குர்ஆன் 89 : 9)
அவர்களை போன்று ஒரு பலமிக்க சமுதாயம் இந்த பூமியில் படைக்கப்பட்டது இல்லை
مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً
எங்களை விட பலம் உள்ளவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று அவர்கள் சவால் விட்டார்கள். (அல்குர்ஆன்41 : 15)
அல்லாஹு தஆலா காற்றை அனுப்பிய போது இந்த காற்றை எதிர்க்கக்கூடிய வலிமை எங்களுக்கு இருக்கிறது என்று இருமாப்பில்லே அந்த காற்றுக்கு முன்னால் நின்று கொண்டார்கள். இந்த காற்று எங்களை தள்ளி விட்டு எங்களை சாய்த்து விட்டு எங்களது சமுதாயத்தை அழித்து விடுமா பார்ப்போம் என்பதாக.
அல்லாஹ்வுடைய பட்டாளம் ராணுவம் என்பது அல்லாஹ்வின் கட்டளை என்பது மனிதனுடைய அறிவுக்கு அப்பாற்பட்டது. குர்ஆனை ஓதவேண்டும் குர்ஆனிலே அல்லாஹ் சொல்வதை கொண்டு நாம் படிப்பினை பெற வேண்டும்.
وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ
ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர். (அல்குர்ஆன் 69 : 6)
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ
ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர். (அல்குர்ஆன் 69 : 7)
அநியாயம் செய்தவர்கள்,அல்லாஹ்வின் அடியார்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள், அவர்களை வேதனை செய்தவர்கள்,அவர்களுடைய உடல் பொருள் உயிர் மார்கத்திலேயே அவர்களை சோதித்தவர்களுக்கு கெட்ட முடிவு கண்டிப்பாக இருக்கும்.விரைவிலேயே அவர்கள் அதை சந்தித்துதான் தீருவார்கள். அநியாயக்காரர்களை அல்லாஹ் விட்டு வைக்கமாட்டான்.
அல்லாஹ்வுடைய தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள்
இந்த பூமி அல்லாஹ்வுக்குச் சொந்தமானது.
அவன் சில காலங்கள் அவனுடைய அடியார்களிலே யாருக்கு வேண்டுமானாலும் அதை கொடுக்கலாம்.நல்லவர்களுக்கும் அல்லாஹ் ஆட்சியை கொடுப்பான். தீயவர்களுக்கும் அல்லாஹ் ஆட்சியை கொடுப்பான். ஆனால், அந்த தீயவர்களுக்கு கொடுக்கக்கூடிய அந்த ஆட்சி என்பது நிலையானதல்ல
நல்ல முடிவு நீதமாக நடந்து கொள்ளக்கூடிய நேர்மையாக நடந்து கொள்ளக்கூடிய அந்த இறையச்சம் உள்ளவர்களுக்குத்தான்.
அல்லாஹ் அவர்களைப் பற்றி சொல்கிறான்:
الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
இவர்கள் எத்தகையோர் என்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 22 : 41)
அல்லாஹுத்தஆலா சூரத்துல் கஸஸிலே இந்த இஸ்ரவேலர்களுடைய வரலாறை கூறியதற்கு பிறகு கூறுகிறான்:
تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சம் உடையவர்களுக்குத்தான் உண்டு. (அல்குர்ஆன் 28 : 83)
நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த வரலாறுகளை எல்லாம் எடுத்துக் கூறி ரப்புல் ஆலமின் சொல்கிறான்:
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى
(நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (இதற்காக) நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை இறையச்சத்திற்குத்தான். (அல்குர்ஆன் 20 132)
அல்லாஹ் நமக்கு இருக்கின்றான். நாம் கவலைப்பட வேண்டிய துக்கப்பட வேண்டிய பலவீனப்படவேண்டிய அவசியமில்லை. இரவிலும் பகலிலும் நம்முடைய தனிமையிலும் அல்லாஹ்விடத்தில் நமக்கு செய்யப்படக்கூடிய இந்த அநியாயத்தை முறையிடுவோம். அல்லாஹ்விடத்தில் உதவி தேடுவோம்.
அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக வரும். அல்லாஹ் நாம் கேட்கக்கூடிய துஆக்களை வீணாக்க மாட்டான். நம்மை அல்லாஹுத்தஆலா கைவிட்டு விட மாட்டான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பற்றி பிடித்து அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பிற மக்களுக்கு எடுத்துக் கூறி இந்த மார்க்கத்திற்காக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலமெல்லாம் கண்டிப்பாக அல்லாஹ்வுடைய உதவி வந்தே தீரும்.
அந்த உதவியை நாம் நம்முடைய வாழ்க்கையில் பார்க்கவில்லை என்றாலும் கண்டிப்பாக அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எந்நிலையிலும் கைவிடமாட்டோம் அல்லாஹ்வுடைய மார்க்கமே எங்களுடைய வாழ்க்கை.
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
நீங்கள் கூறுங்கள்: ‘‘நிச்சயமாக என் தொழுகையும், என் (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. (அல்குர்ஆன் 6 : 162)
இந்த கொள்கையில், நம்பிக்கையில் இந்த வாழ்க்கையின் நெறியில் உறுதியாக இருக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை விட்டு சென்றால் இன் ஷா அல்லாஹ் கண்டிப்பாக அவர்கள் இந்த பூமியை ஆட்சி செய்வார்கள். நீதத்தை நிலை நிறுத்துவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கண்டிப்பாக கொடுப்பான்.
அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிறைவேற்றுவான்.
அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ
நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் (உதவி செய்வோம். இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம். (அல்குர்ஆன் 40 : 51)
அல்லாஹு சுப்ஹானஹுதஆலாநம்முடைய பாவங்களை மன்னித்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்கும் பலவீனப்பட்ட இயலாமையில் இருக்கக்கூடிய அநியாயம் செய்யப்படக்கூடிய எல்லா சமுதாய மக்களுக்கும் உதவி செய்வானாக! அநியாயக்காரர்களின் நேர்வழியின் பக்கம் அல்லாஹ் திருப்புவானாக! நீதத்தின் பக்கம் திருப்புவானாக! சத்தியத்தின் பக்கம் திருப்புவானாக!
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா எல்லா நிலைகளிலும் நாம் நம்முடைய வேதத்தைப் பற்றி பிடித்தும் நபியின் சுன்னாவை பற்றிப்பிடித்தும் வாழக்கூடிய ஒரு ஈமானிய உறுதியை தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/