HOME      Khutba      “அல் வஃபா” நிறைவு செய்தல் | பிரதிபலன் செய்தல் | Tamil Bayan - 852   
 

“அல் வஃபா” நிறைவு செய்தல் | பிரதிபலன் செய்தல் | Tamil Bayan - 852

           

“அல் வஃபா” நிறைவு செய்தல் | பிரதிபலன் செய்தல் | Tamil Bayan - 852


அல் வஃபா நிறைவு செய்தல் பிரதிபலன் செய்தல் 
 
தலைப்பு : அல் வஃபா நிறைவு செய்தல் பிரதிபலன் செய்தல் 
 
வரிசை : 852
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 29- 12- 2023 | 16-06-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹ் சுபஹானஹூதஆலாவை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதருடைய குடும்பத்தார் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக! உங்களுக்கும், எனக்கும் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பையும், சொர்க்கத்தையும் நல்ல முடிவையும் வேண்டியவனாக! இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! காஸாவிலே கஷ்டப்படக்கூடிய நமது முஸ்லிமான சகோதரர்களுக்கு, சகோதரிகளுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! புனித மஸ்ஜிதுல் அக்ஸாவை அல்லாஹுத்தஆலா முஸ்லிம்களுக்கு மீட்டு தருவானாக! முஸ்லிம்களை எதிர்க்கக்கூடிய அளிக்க நினைக்கக்கூடிய யூத காபிர்களுக்கு அல்லாஹுத்தஆலா இழிவையும், அழிவையும், நாசத்தையும் கெட்ட முடிவையும் தந்தருள்வானாக ஆமீன்!
 
அல்லாஹுத்தஆலா முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும், இஸ்லாமையும், முஸ்லிம்களையும், பாதுகாக்க வேண்டும் என்ற ஈமானிய உணர்வையும் தந்தருள்வானாக! சத்தியத்தில் அவர்களை ஒன்று சேர்ப்பானாக! யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கும், அல்லாஹ்வுடைய அடியார்களுக்கும் துரோகம் செய்வதிலிருந்து அல்லாஹுத்தஆலா அவர்களையும் நம்மையும் பாதுகாப்பானாக ஆமீன்!
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! மிக முக்கியமான ஒரு நற்குணத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு வலியுறுத்துகிறான். அந்த நற்குணம் முஸ்லிம்களுடைய மிக முக்கியமான பண்பாக இருக்க வேண்டும், அவர்களின் அடையாளமாக வெளிப்பட வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா வலியுறுத்துகிறான்.
 
அல்குர்ஆனில் ஒன்றுக்கு மேற்பட்ட பல வசனங்களில் வலியுறுத்தப்பட்ட ஈமானின் உயர்ந்த தரஜா என்று வர்ணிக்கப்பட்ட, அல்லாஹ்விடத்தில் திறந்த நற்கூலி அதற்கு இருக்கிறது என்று வாக்களிக்கப்பட்ட நற்குணம்.
 
அது என்ன நற்குணம்? அல் வஃபா ஒரு அடியான் தன் மீது எது கடமையாக இருக்கிறதோ அந்த கடமையை நிறைவாக பரிபூரணமாக செய்வது, அல்லாஹுவிற்கு நன்றி உள்ளவனாக இருப்பது, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கும், தனக்கும் இடையில் என்ன ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் இருக்கின்றனவோ அந்த ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவது. அது போன்று பிறர் நமக்கு ஏதாவது ஒரு நன்மை செய்திருந்தால் உதவி செய்திருந்தால் அதற்கு நன்றி கடன் பட்டு பிரதிபலன் அதற்கு சரியான அழகான பிரதிப் பரிகாரம் செய்வது.
 
அவர் செய்த அந்த நன்மையை, உதவியை மறக்காமல் இருப்பது எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமோ அப்போது அவர் நமக்கு செய்ததை விட சிறந்ததை அவருக்கு செய்வதற்கு முயற்சி செய்வது. இதற்கு பெயர்தான் அரபியில் அல் வஃபா என்று சொல்லப்படும். இந்த அத்தனை அர்த்தங்களையும் உள்ளடக்கிய ஒரு கருத்து தான் அல் வஃபா என்பதாகும்.
 
மீண்டும் ஒருமுறை பார்ப்போம் நாம் நம் மீது எதை அல்லாஹ்விற்காக கடமையாக்கி கொண்டோமோ, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு என்ன வாக்குகள் செய்து கொடுத்தோமோ, உடன்படிக்கைகள் செய்து கொடுத்தோமோ, அந்த கடமைகளையும், வாக்குகளையும், ஒப்பந்தங்களையும் குறைவின்றி நிறைவாக முழுமை படுத்துவது பரிபூரணமாக செய்து முடிப்பது.
 
பிறகு, அல்லாஹ்வுடைய அடியார்கள் புரத்திலிருந்து நமக்கு என்ன நன்மை ஏற்பட்டதோ என்ன உதவிகள் ஏற்பட்டனமோ அவர்கள் செய்ததற்கு நாம் நன்றி கடன் படுவது, அதற்கு சிறந்த பிரதி பலனை அவர்களுக்கு செய்வது, அவர்கள் நமக்கு செய்ததை விட அழகிய முறையில் அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் உறுதி செய்வது. 
 
அல்லாஹுவின் அடியார்களே! இது குர்ஆன் நமக்கு கூறிய உபதேசம், இது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு செய்த உபதேசம் அல்லாஹ்வுடைய அடியானை அல்லாஹ்வோடு நெருக்கமாக்கி வைக்கக்கூடிய ஒரு சிறந்த நற்குணம். அது போன்று ஒரு முஸ்லிம் சமுதாயத்தை ஒரு தனிமனிதனோடு, ஒரு தனிமனிதனுக்கும் முஸ்லிம் சமுதாயத்துக்கும் இடையிலே ஆழமான உறவுகளும், நேர்மையான தொடர்புகளும் ஏற்பட்டு, ஒரு சிறந்த சமுதாயம் கட்டமைக்கப்படுவதற்குரிய ஒரு உயர்ந்த குணமாகும்.
 
அல்லாஹ் தன்னுடைய வேதம் அல்குர்ஆனிலே சூரத்துல் ஃபத்ஹ் உடைய பத்தாவது வசனத்திலே சொல்கிறான் பாருங்கள்”
 
إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
 
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத் (-விசுவாச உறுதிமொழி) செய்தார்களோ அவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம் அல்லாஹ்விடம்தான். அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளுக்கு மேல் இருக்கிறது. ஆகவே, யார் (அந்த உறுதி மொழியை) முறிப்பாரோ அவர் முறிப்பதெல்லாம் தனக்கு எதிராகத்தான். (-அது அவருக்குத்தான் கேடாகும்.) இன்னும், யார் அல்லாஹ்விடம் எதன் மீது ஒப்பந்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவாரோ அவருக்கு அவன் மகத்தான கூலியை (-சொர்க்கத்தை) கொடுப்பான். (அல்குர்ஆன் 48 : 10)
 
யார் முழுமையாக நிறைவேற்றுவாரோ, எதை? அல்லாஹ்விற்கு என்ன வாக்கு கொடுத்தாரோ அந்த வாக்கை, அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை, இது நேரடியாக நீங்கள் அல்லாஹ்வோடு செய்தாலும் சரி அல்லது, அல்லாஹ்வுடைய பெயரைக் கூறி உங்களுக்கு மத்தியில் செய்து கொண்டாலும் சரி இதுவெல்லாம் அல்லாஹ்வோடு நாம் செய்து கொள்ளக் கூடிய ஒப்பந்தம் உடன்படிக்கையாகும்.
 
சிலருக்கு புரிவதில்லை அல்லாஹ்விற்கு வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்ற அக்கறை காட்டுவார்கள், தங்களுக்குள் மனிதர்களுக்கு வாக்கு கொடுத்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியம் செய்வார்கள். இல்லை சகோதரர்களே! நீங்கள் உங்கள் சகோதரன் ஒருவனுக்கு இன்ஷா அல்லாஹ்! என்று கூறி பிஸ்மில்லாஹ் என்று கூறி ஒரு உடன்படிக்கையை செய்தீர்களே!
 
ஆனால், அல்லாஹ்வுடைய பெயர் கூறி பிஸ்மில்லாஹ் என்று கூறி உங்களுக்குள் நீங்கள் ஒரு ஒப்பந்தத்தை ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டால், இது நீங்கள் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை போன்று, இது நீங்கள் அல்லாஹ்விற்கு கொடுத்த வாக்கை போன்று, அல்லாஹ்வுடைய பெயரை நீங்கள் அங்கே பயன்படுத்தி இருக்கின்ற காரணத்தால்.
 
ஆகவே, சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா சொல்கிறான் யார் ஒருவர் அல்லாஹ்விற்கு அல்லாஹ்வுக்கு தான் கொடுத்த வாக்கை ஒப்பந்தத்தை பரிபூரணமாக நிறைவேற்றுவாரோ அல்லாஹ் சொல்கிறான். அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா மகத்தான பெரிய கூலியை கொடுப்பான். 
 
அது என்ன கூலி? அவர்கள் எத்தகையவர்கள் அல்லாஹுத்தஆலா சூரா ரஃதுடைய 19 வது வசனத்தில் இருந்து 24 வது வசனம் வரை சுபஹானல்லாஹ்! அதாவது அல்லாஹுத்தஆலா அவனுடைய கலாமில் ஒரு வசனத்தின் ஓரத்தில் ஒரு நற்குணத்தை சொன்னாலே அது எவ்வளவு பெரிய விஷயம்,
 
ஒரு வசனத்தின் ஓரத்தில் ஒரு குறிப்பிட்ட குணத்தை உடைய நல்லவர்களை வர்ணித்தாலே எவ்வளவு பெரிய விஷயம் எத்தனை வசனங்களிலே அல்லாஹுத்தஆலா அந்த நற்குணத்தையும், அந்த நற்குணத்தை உடைய நல்லவர்களையும் போற்றி புகழ்ந்து அவர்களுக்கு என்ன? நற்கூலி என்பதை சொல்கிறான் எப்படி சொல்கிறான் பாருங்கள். 
 
أَفَمَنْ يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَى إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
 
ஆக, உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதெல்லாம் உண்மைதான் என்று அறிபவர் (அதை அறியாமல்) குருடராக இருப்பவரைப் போன்று ஆவாரா? (ஆகவே மாட்டார்.) நல்லுபதேசம் பெறுவதெல்லாம் நிறைவான அறிவுடையவர்கள்தான். (அல்குர்ஆன் 13 : 19)
 
உபதேசங்களைக் கொண்டு நல்லறிவு யாருக்கு கிடைக்கும் என்றால் புத்தி உள்ளவர்களுக்கு, நல்லறிவு உள்ளவர்களுக்கு தான் உபதேசங்களை கொண்டு நற்பலன் கிடைக்கும். இந்த நல்ல அறிவுடையவர்கள் தான் அல்லாஹ்வுடைய உபதேசங்களை கொண்டு நற்பலனை அடைவார்கள். 
 
இவ்வாறாக கூறிவிட்டு புத்தி உள்ளவர்கள் என்றால் யார்? யாரை அல்லாஹுத்தஆலா புத்தி உள்ளவர்கள் என்று சொல்கிறான்? காலங்கள் மாற மாற மனிதர்களுடைய குணங்கள் மாறும் என்று ரப்புக்கு தெரியாதா! மனிதர்கள் அவர்களுடைய குணம் கெட்டுவிட்டால்; கெட்டதை நல்லது என்று சொல்வார்கள், நல்லதை கெட்டது என்று சொல்வார்கள்.
 
நமது காலத்திலே ஒருவன் உண்மையைப் பேசினால் அவனுக்கு பெயர் பிழைக்க தெரியாதவன், ஒருவன் நேர்மையாக வியாபாரம் செய்தால் அவனுக்கு பெயர் ஏமாளி, ஒருவன் ஏமாற்றி வியாபாரம் செய்தால், போய் வாக்குகளை கொடுத்து வியாபாரம் செய்தால், 
 
தந்திரமாக வியாபாரத்திலே நடந்து கொண்டால் அவனுக்கு பெயர் புத்திசாலி ஸ்மார்ட் பிசினஸ் மேன், அவன் சம்பாதிக்க தெரிந்தவன், பிழைக்க தெரிந்தவன், குறுக்கு வழியிலே சம்பாதித்து செல்வத்தின் உச்சியை எட்டியவர்களை பார்த்து அவர்களைப் போன்று இருக்க வேண்டாமா! சின்ன வயசுலே பாருங்க எவ்வளவு புத்திசாலித்தனமா சம்பாதித்து விட்டான்.
 
எல்லா வகையிலும் ஹராம் அங்கே கலந்திருக்கும் அவர்களுக்கு சமுதாயம் சொல்லக்கூடிய பெயர் என்ன புத்திசாலி, பிழைக்க தெரிந்தவன், சாமர்த்தியமானவன். யார் நேர்மையாக செல்கிறார்களோ அவர்களுக்கு சமுதாயம் சொல்லக்கூடிய பெயர் என்ன பிழைக்கத் தெரியாதவன், ஏமாளி, அவனுக்கு விவரம் இல்லை.
 
அஸ்தஃபிருல்லாஹ்! அல்லாஹ்விடத்திலே புத்திசாலிகள் நீங்கள் யாரை புத்தி இல்லை சாமர்த்தியம் இல்லை என்று சொல்கிறீர்களோ அவர்களை தான் அல்லாஹுத்தஆலா புத்திசாலிகள் என்று சொல்கிறான். நீங்கள் யாரை புத்திசாலிகள் என்று சொல்லுகிறீர்களோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மட்டமானவர்கள், கேவலமானவர்கள், அல்லாஹ்வின் எச்சரிக்கைக்கு உரியவர்கள் அல்லாஹ் சொல்கிறான்:
 
اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِۙ‏
 
அவர்கள் யார் அறிவு உள்ளவர்கள் யார் புத்தி உள்ளவர்கள் யார், 
 
الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ اللَّهِ وَلَا يَنْقُضُونَ الْمِيثَاقَ
 
அவர்கள் அல்லாஹ்வின் (பெயரால் தங்களுக்குள் செய்த) ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள். இன்னும், உடன் படிக்கையை முறிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 13 : 20)
 
அல்லாஹ்வுடைய வாக்கை முழுமையாக நிறைவேற்றுவார்கள், ஒருபோதும் அவர்கள் ஒப்பந்தங்களை, வாக்குகளை, உடன்படிக்கைகளை முறிக்கவே மாட்டார்கள். புத்தி உள்ளவர்கள் என்று அல்லாஹ் யாரை சொல்கிறான்? தனக்கு என்ன தான் கேடு வந்தாலும் சரி, அதனால் எத்தகைய நஷ்டம் வந்தாலும் சரி ஒரு முஃமின் அவனுடைய வாக்கையும் மீறமாட்டான்,
 
அவனுடைய சத்தியத்தை முறிக்க மாட்டான், அவன் செய்த உடன்படிக்கையை மீற மாட்டான் அந்த உடன்படிக்கை அல்லாஹ்விற்காக தன் மீது அவன் இபாதத்தாக கடமையாக்கிக் கொண்டதாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வின் அடியார்களுக்கு கொடுத்த வாக்காக, அல்லாஹ்வின் அடியார்களுக்கு கொடுத்த செய்து கொடுத்த ஒப்பந்தமாக இருந்தாலும் சரி அதிலே அவன் நிற்பான். இந்த நல்லடியார்களுக்கு சொல்கிறான்:
 
وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ
 
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் முகத்தை நாடி பொறுமையாக இருப்பார்கள்; மேலும், தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; இன்னும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்வார்கள்; இன்னும், நல்லதைக் கொண்டு கெட்டதைத் தடுப்பார்கள். இ(த்தகைய)வர்கள், இவர்களுக்குத்தான் மறுமையின் அழகிய முடிவுண்டு. (அல்குர்ஆன் 13 : 22)
 
இவர்களுக்குத்தான் மறுமையின் மிக மகத்தான நல்ல வெற்றி இருக்கிறது. அது என்ன நல்ல வெற்றி சிறந்த முடிவு என்ன?
 
جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ
 
(நல்ல முடிவு என்பது,) “அத்ன்” சொர்க்கங்கள் ஆகும். அதில் இவர்களும், இவர்களுடைய மூதாதைகளில், இவர்களுடைய மனைவிகளில், இவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்களும் பிரவேசிப்பார்கள். ஒவ்வொரு வாசலில் இருந்தும் வானவர்கள் இவர்களிடம் பிரவேசிப்பார்கள். (அல்குர்ஆன் 13 : 23)
 
سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
 
நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக! ஆக, மறுமையின் அழகிய முடிவு மிகச் சிறந்ததாகும். (அல்குர்ஆன் 13 : 24)
 
இவர்கள் நுழையக்கூடிய சொர்க்கம் “அதுன்” என்ற சொர்க்கங்களில் நுழைவார்கள், இவர்கள் மட்டுமா இவர்களுடைய இந்த புண்ணியம் எத்தகையது என்றால் இவர்களுடைய மூதாதைகளிலே யார் முஃமின்களாக இருந்தார்களோ, இவருடைய அந்த ஈமானுடைய அந்த உயர்வின் பொருட்டால் அவர்களுக்கும் இதே தரஜாவிலே சொர்க்கத்திலே நுழைவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு விடும்.
 
அது மட்டுமா இவனுடைய மனைவிமார்கள் இவனுடைய சந்ததிகள் யாரெல்லாம் ஈமான் இருந்து ஆனால் இவன் அளவிற்கு தரஜா இல்லை என்றாலும் இவனுடைய இந்த ஈமானின் பொருட்டால் இவனிடத்திலே இருந்த அந்த யக்கினின் பொருட்டால் அந்த ஈமானின் உறுதியின் பொருட்டால் இதே தரஜாவிலே அவர்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு விடுவார்கள். அல்லாஹ் சொல்கிறான்” மலக்குகள் இவர்களை சந்திப்பதற்காக ஒவ்வொரு வாசல் வழியாக வந்து,
 
سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
 
உங்களின் பொறுமையின் காரணமாக உங்களுக்கு சலாம் உண்டாகட்டும் மறுமையின் இந்த முடிவு மிகச் சிறந்த முடிவு என்று அந்த மலக்குகள் சொல்வார்கள்.
 
அன்பு சகோதரர்களே! வாக்கிலே சுத்தமாக இருப்பது, உடன்படிக்கையிலே நேர்மையாக இருப்பது, நன்றி உள்ளவர்களாக இருப்பது, அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவர்களாக இருப்பது, அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பது, நேர்மையாக தொழில் செய்வது, ஒப்பந்தங்களில் உடன்படிக்கைகளில் வாக்குறுதிகளில் நேர்மையாக நடப்பது, இது நபிமார்களுடைய குணம், இதற்கு மாற்றமான செயல்கள் இது கெட்டவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்களுடைய செயல்களாகும்.
 
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே பல நபிமார்களின் வரலாறு சொல்கிறான்” அந்த வரலாறுகளில் ஒன்று தான் ஷுஐப் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறு இந்த நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த சமுதாயம் மிகப்பெரிய மோசடிக்காரர்களாக இருந்தார்கள்,
 
மக்களுக்கு அவர்களுடைய கொடுக்கல் வாங்கலில் நஷ்டம் விளைவிப்பவர்களாக, துரோகம் செய்பவர்களாக, மக்களுடைய செல்வங்களில் மக்களை வஞ்சிக்க கூடியவர்களாக இருந்தார்கள், அந்த வியாபாரிகள் தங்களுடைய லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்வார்கள். 
 
எந்த அளவுக்கு பிறரை ஏமாற்ற முடியுமோ, வஞ்சிக்க முடியுமோ, பிறருக்கு நஷ்டத்தை உண்டு பண்ண முடியுமோ அதிலே எந்த குறைவும் செய்ய மாட்டார்கள் அல்லாஹுத்தஆலா அவர்களை பற்றி கடுமையாக எச்சரித்துக் கொண்டே இருக்கிறான்.
 
இதுவே, அவர்களுடைய கடுமையான தண்டனைக்கு காரணமாக அல்லாஹுத்தஆலா ஆக்கினான் அல்லாஹ் சுபஹானஹூதஆலா ஏறக்குறைய ஐந்து இடங்களில் இந்த நிறுவை அளவையில் நேர்மையாக, முழுமையாக நிறைவேற்றுவதை குறித்து அல்லாஹ் கட்டளையாக சொல்கிறான்.
 
وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّه‌ وَاَوْفُوْا الْكَيْلَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ‌ لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰى‌‌ وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا‌ ذٰلِكُمْ وَصّٰٮكُمْ بِه لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
 
இன்னும், அனாதையின் செல்வ(ம் உங்கள் பராமரிப்பில் இருந்தால் அந்த செல்வ)த்தின் பக்கம் மிக அழகிய வழியில் தவிர நெருங்காதீர்கள். இறுதியாக, அவர் தனது பருவத்தை அடையும்போது (அவருடைய செல்வத்தை அவரிடம்  ஒப்படைத்து விடுங்கள்!) இன்னும், அளந்து கொடுப்பதையும் நிறுத்து கொடுப்பதையும் நீதமாக முழுமைப்படுத்தி செய்யுங்கள். ஓர் ஆன்மாவை - அதன் சக்திக்கு உட்பட்டே தவிர - நாம் சிரமப்படுத்துவதில்லை. இன்னும், நீங்கள் (தீர்ப்பு) கூறினால் (அதனால் பாதிக்கப்படுபவர்) உறவினராக இருந்தாலும் நீதமாக (தீர்ப்பு) கூறுங்கள். அல்லாஹ்வின் (பெயர் கூறி நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருடன் செய்யும்) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். இவை, - நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவே இவற்றின் மூலம் (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசித்தான். (அல்குர்ஆன் 6 : 152)
 
நீங்கள் அளந்து கொடுத்தாலும், நிறுத்து கொடுத்தாலும் நீதமாக, முழுமையாக கொடுங்கள் சூரத்துல் அன் ஆமுடைய 152 ஆவது வசனம் சூரா இஸ்ராவில் அல்லாஹுத்தஆலா 35 ஆவது வசனத்தில் சொல்கிறான்.
 
وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
 
இன்னும், நீங்கள் (பொருள்களை) அளந்(து கொடுத்)தால் (அந்த) அளவையை முழுமையாக்குங்கள்; இன்னும், சரியான (நீதமான) தராசைக் கொண்டு (பொருள்களை) நிறு(த்துக் கொடு)ங்கள். அது மிகச் சிறந்ததும் முடிவால் மிக அழகியதும் ஆகும். (அல்குர்ஆன் 17 : 35)
 
நீங்கள் அளந்து கொடுத்தால் அளவையை நிறைவு செய்து முழுமையாக செய்து கொடுங்கள், மிகச் சரியான தராசை கொண்டு நீங்கள் நிறுத்துக் கொடுங்கள். இதுதான் சிறந்தது, இதுதான் அழகிய முடிவு என்று அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! தவ்ஹீதை பற்றி சொல்லக்கூடிய குர்ஆனில் இத்தகைய ஒரு சட்டத்தை அல்லாஹுத்தஆலா விடவில்லை மக்களுடைய கொடுக்கல், வாங்கல் தன்னுடைய இபாதத்தை சரியாக செய்தால் போதும் அவர்களுடைய கொடுக்கல் வாங்கலில் எப்படி நடந்து கொண்டால் என்ன என்று அல்லாஹுத்தஆலா பாரபட்சம் காட்ட வில்லை, எப்படி தன்னுடைய இபாதத்தில் தன்னுடைய அடியார்கள் சரியாக, முழுமையாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறானோ, கட்டளை இட்டு இருக்கிறானோ,
 
அது போன்று, தான் அவர்கள் தங்களுக்கு மத்தியில் இருக்கக்கூடிய உறவுகளிலும், கொடுக்கல் வாங்கலிலும், உடன்படிக்கைகளிலும் நேர்மையானவர்களாக அவற்றை முழுமை செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா விரும்புகிறான்.
 
அன்பிற்குரிய சகோதரர்களே! ‌ஷுஹைப் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அந்த மக்களுக்கு சொன்னார்கள்:
 
وَيَاقَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
 
என் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாக (அவற்றில் பொருள்களை குறைக்காமல்) முழுமைப்படுத்துங்கள். இன்னும், மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். இன்னும், நீங்கள் பூமியில் விஷமிகளாக (-மக்களுக்கு கெடுதி விளைவிப்பவர்களாக) இருக்கும் நிலையில் எல்லை மீறி விஷமம் (கலகம், அடாவடித்தனம்) செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 11 : 85)
 
எனது சமுதாய மக்களே! நீங்கள் அளவையை முழுமையாக அளந்து கொடுங்கள்; நீங்கள் தராசில் நிற்கும்போது நீதமாக, முழுமையாக நிறுத்துக் கொடுங்கள்; நீங்கள் மக்களுடைய செல்வங்களில் அளவை குறைத்து நிறுவையில் மோசடி செய்து அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள், இன்னும் பூமியில் நீங்கள் கலகம் செய்யாதீர்கள், குழப்பம் செய்யாதீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே! இன்று பல உலகளாவிய சட்டங்கள் வந்து, பல உலகளாவிய தர கட்டுப்பாடுகள் வந்ததற்கு பிறகுதான் இன்று உலகளாவிய சமுதாயம் இந்த நிறுவையிலும் அளவையிலும் ஏனைய கொடுக்கல் வாங்கலிலும் இன்று நீதத்தை பார்க்கிறார்கள்.
 
ஆனால், அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா குர்ஆனின் மூலமாக இந்த முஸ்லிம் சமுதாயத்தை நீதமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், கொடுக்கல், வாங்கலிலே உத்தமர்களாகவும் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே அல்லாஹுத்தஆலா நம்மை சரி செய்து விட்டான்.
 
ஆனால், சகோதரர்களே! இத்தகைய சட்டங்கள் கட்டளைகள் மார்க்கத்தில் இருந்தும் கூட அதை படிக்காத காரணத்தினாலோ அல்லது, மறுமையினுடைய தண்டனையின் பயம் இல்லாத காரணத்தினாலோ நம்மில் சிலர் இன்னும், சில தீய குணங்களோடு மக்களிடத்தில் அவர்களது உடன்படிக்கையிலும், கொடுக்கல் வாங்கலிலும் நடந்து கொள்வது மொத்தமாக நமது சமுதாயத்திற்கும் பல சந்தர்ப்பங்களில் அவப்பெயரை, கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுகிறது. 
 
அல்லாஹுத்தஆலா சூரா அல் மாயிதா உடைய முதல் வசனத்தில் சொல்கிறான் பாருங்கள்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنْتُمْ حُرُمٌ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்களுக்குள் செய்த) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு (மூன்றாவது வசனத்தில்) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. நீங்களோ இஹ்ராமுடையவர்களாக இருக்கும் நிலையில் வேட்டையாடுவதை ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்புவதை (உங்களுக்கு) சட்டமாக்குகிறான். (அல்குர்ஆன் 5 : 1)
 
முஃமின்களே! நீங்கள் உடன்படிக்கைகளை அக்ரீமெண்ட் ஒப்பந்தங்ககளை முழுமையாக நிறைவேற்றுங்கள்; எதை நீங்கள் பிறரோடு ஒப்புக் கொள்கிறீர்களோ, ஒப்பந்தம் செய்து கொள்கிறீர்களோ அதை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். அத்தனை வகையான உடன்படிக்கைகள் அது வாடைகை ஒப்பந்தமாக இருக்கட்டும்,
 
கூட்டு ஒப்பந்தமாக இருக்கட்டும், ஒரு நாடு இன்னொரு நாடோடு செய்யக்கூடிய ஒப்பந்தங்களாக, உடன்படிக்கைகளாக இருக்கட்டும், திருமண ஒப்பந்தங்களாக இருக்கட்டும், எந்த வகையில் நீங்கள் பிறரோடு இருவரும் ஒரு மனதாக அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு முரண் இல்லாமல் ஹலால் ஆன உங்களுக்கு ஆகுமாக்கப்பட்ட பொது விஷயங்களில் நீங்கள் எதை ஒத்துக் கொண்டீர்களோ அவையெல்லாம் ஒப்பந்தங்களில் வரும். 
 
அல்லாஹ் சொல்கிறான்: முஃமின்களே! நீங்கள் நிறைவேற்றுங்கள் என்று மார்க்க அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? ஏன் அல்லாஹுத்தஆலா முஃமின்களே! என்று அழைத்துச் சொல்கிறான் குர்ஆனிலே சொல்லப்படக்கூடிய எல்லா கட்டளைகளும் யாருக்காக தான் முஃமின்களுக்காக தான்.
 
அவ்வாறு இருந்தும் முஃமின்களே! என்று அழைத்து ஒரு சூராவின் ஆரம்பத்தில் அல்லாஹ் இதை சொல்கிறான் என்றால் ஒப்பந்தங்களை பேணுவது, வாக்குகளை முழுமையாக நிறைவேற்றுவது, உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவது, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட அந்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவது என்பது இது ஈமானோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.
 
ஏதோ ஒரு புகழுக்கான குணம் இதை செய்யவில்லை என்றால் தவறு இல்லை செய்தால் நன்மை செய்யவில்லை என்றால் குற்றமில்லை என்று கடந்து விடக்கூடிய ஒரு செயல் அல்ல இது ஈமானோடு சம்பந்தப்படக்கூடிய ஒன்று என்று அறிஞர்கள் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா தக்வா உள்ளவர்கள், நன்மையின் உச்சத்தை அடைந்தவர்கள், ஈமானில் உண்மைதுவம் என்ற அந்த தரஜாவை அடைந்தவர்கள், அதாவது அவர்களுடைய ஈமான் உண்மையானது, அதில் நயவஞ்சகம் கலக்காதது, பொய் கலக்காதது, அத்தகையை ஈமான், அத்தகைய தக்வா உடையவர்கள் என்று ஒரு கூட்டத்தை அல்லாஹுத்தஆலா வர்ணிக்கிறான்.
 
என்னென்ன தன்மைகளைக் கொண்டு தக்வா அவர்களிடத்தில் உண்மையாக இருக்கும், ஈமான் உண்மையாக இருக்கும் என்ற அல்லாஹுத்தஆலா வர்ணிக்கும் போது சுறா அல் பகரா உடைய 177 வது வசனத்தில் அவர்களுடைய குணங்களை ஒரு பட்டியல் போடுகிறான் அல்லாஹுத்தஆலா இத்தகைய இந்த உயர்ந்த தரஜாவை அடையக்கூடியவர்கள் எந்தெந்த நற்குணத்தில் இருப்பார்கள் என்று ஒரு பட்டியல் போடும்பொழுது அந்த பட்டியலை அல்லாஹுத்தஆலா எப்படி முடிக்கிறான் தெரியுமா? அன்பு சகோதரர்களே! அல்லாஹ் சொல்கிறான்:
 
لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّنَ‌ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّه ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا  وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏
 
நன்மை என்பது மேற்கு, கிழக்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது அல்ல. எனினும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்; இன்னும் செல்வத்தை அதன் விருப்பம் (தமக்கு) இருப்பதுடன் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்தவர்கள்; தொழுகையை நிலைநிறுத்தியவர்கள்; ஸகாத்தைக் கொடுத்தவர்கள்; 
 
மேலும், உடன்படிக்கை செய்தால் தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்கள்; கொடிய வறுமையிலும், நோயிலும், போர் சமயத்திலும் பொறுமையாக இருப்பவர்கள் ஆகிய இவர்களுடைய செயல்கள்தான் நன்மை ஆகும். அவர்கள் எத்தகையோர் என்றால் (தங்கள் நம்பிக்கையை) உண்மைப்படுத்தினார்கள். இன்னும், அவர்கள்தான் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் ஆவார்கள்!. (அல்குர்ஆன் 2 : 177)
 
அவர்கள் யார் தெரியுமா? அவர்கள் உடன்படிக்கை செய்தால், ஒப்பந்தங்கள் செய்து கொண்டால் அவர்கள் தங்களுடைய உடன்படிக்கைகளை, ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பார்கள்.
 
அடுத்து சொல்கிறான்: யுத்த காலங்களில் போர் ஏற்பட்டு விட்டால் பயந்து விட மாட்டார்கள் வறுமை ஏற்பட்டு விட்டால் எதிரிகளின் தாக்குதல் அதிகமாகிவிட்டால், நோய் மக்களின் உயிர்களை கொள்ளை கொள்ளையாக அல்லும்படி பரவி விட்டாள் அதனால், பயந்து விடமாட்டார்கள் பொறுமையாக இருப்பார்கள் ஈமானிலே அல்லாஹ்விடத்திலே மறுமையின் கூலிகளை வேண்டியவர்களாக உறுதியாக இருப்பார்கள்.
 
அன்பான சகோதரர்களே! இன்று அதை அந்த காஸா முஸ்லிம்களில் நாம் எதார்த்தமாக பார்க்கிறோம் வீடு இல்லை, உணவு இல்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, எந்த வாழ்வதற்கு உரிய எந்த வசதியும் இல்லாத நேரத்தில் கூட حسبي الله ونعم المولى ونعم الوكيل என்று சொல்கிறார்கள்,
 
நேரத்திலே தொழுகிறார்கள் அல்லாஹ்வை குறை கூறும்படியான ஒரு துளி வார்த்தையை கூட அவர்கள் உச்சரிக்கவில்லை, அவர்களுடைய சிறுவர்களில் இருந்து பெண்களிலிருந்து வயதானவர்கள் வரை எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் அல்ஹம்துலில்லாஹ்! ஹஸ்பிய அல்லாஹ் வ நிஃமல் வக்கீல் என்று சொல்கிறார்கனே! 
 
அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான் முஃமின்கள் அப்படித்தான் இருப்பார்கள் காஸாவில் அவர்களை அடிக்கக் கூடியவன் பைத்தியம் பிடிக்கிறான், அவனுக்கு குழப்பம் மன நோய் பிடித்துக் கொள்கிறது, எல்லா வசதிகளும் இருந்து எல்லா பாதுகாப்புகளோடும் இருந்து அவர்களால் தூங்க முடியவில்லை, பைத்தியம் பிடித்தவர்களாக அலைகிறார்கள், எந்த பாதுகாப்பும் இல்லாமல் இந்த மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களே அதுதான் ஈமான்.
 
அன்பு சகோதரர்களே! இன்று இதை பார்த்து பலநூறு பேர் இஸ்லாமிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இந்த சிரமத்தில் எப்படி இவர்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது இத்தகைய இந்த இக்கட்டான தருணத்தில் எப்படி அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் இறைவனுக்கு என்று இவர்களால் உச்சரிக்க முடிகிறது, என்பதை சிந்திக்கிறவர்கள் குர்ஆனை திறந்து படித்துவிட்டு இஸ்லாமை நோக்கி வருகிறார்கள். அன்பு சகோதரர்களே! அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
 
வறுமையில், நோயில் யுத்த காலங்களில் பொறுமையாக இருப்பவர்கள் இங்கே அவர்கள் எதிரிகள் யார்? இத்தனை ஆண்டு காலமாக தங்களுடைய தாயைக் கொன்றவர்கள் தந்தையை கொன்றவர்கள் தங்களுடைய பிள்ளைகளை கொன்றவர்கள் அவர்களுடைய கைதிகள் முஸ்லிம்கள் இடத்தில் பாதுகாப்பாக, கண்ணியமாக, இருக்கிறார்கள்.
 
முஸ்லிம்களுடைய கைதிகள் எந்த குற்றமும் இல்லாமல் அந்த யூதர்களுடைய சிறைச்சாலையில் அத்தனை கொடுமைகளையும், துன்பங்களையும், உலகத்தில் ஒரு சிறைச்சாலையில் கொடுக்கப்படாத அத்தனை கொடுமைகளையும் அங்கே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
தங்களுடைய கைதிகளுக்கு என்னென்ன அந்த சிறைச்சாலையில் நடக்கிறது என்று தெரிந்தும் கூட நமது சகோதரர்கள் அவர்கள் ஒருபோதும் தங்களிடத்தில் இருக்கக்கூடிய செய்திகளை அப்படி நடத்த வில்லையே! அதைத்தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் அல்லாஹ்வுடைய குர்ஆன் அவர்களை பாதுகாக்கிறது, 
 
அல்லாஹ்வுடைய வாக்கு அல்லாஹ்வுடன் அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை அவர்களை தடுக்கிறது, பாதுகாக்கிறது, அவர்களை நேர்மையாக நடக்க வைக்கிறது, அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்: இவர்கள் உண்மையாளர்கள் யார் இந்த குணத்தில் இருப்பவர்கள் சில காலத்திற்கு முன்னால் இந்த கொரோனா நோய் வந்தது யாருக்கு அல்லாஹுத்தஆலா அந்த நோயில் மரணத்தை கொடுத்தானோ அவர்கள் அல்லாஹ்விடம் சென்று விட்டார்கள்,
 
பொருத்தவர்கள் பொறுமையாக இருந்தார்கள் எத்தனை பேர் அந்த நேரத்திலே என்னென்ன வார்த்தைகளை சொல்லி இருப்பார்கள், எப்படியெல்லாம் நிராசையை வெளிப்படுத்தி இருப்பார்கள் யோசித்துப் பாருங்கள்”
 
அன்பு சகோதரர்களே! ஒரு முஃமின் எப்போதும் அல்லாஹ்வை குறை சொல்லக்கூடியவனாக இருக்க மாட்டான், இன்னும் வாக்கை நிறைவேற்றக் கூடியவர்கள், பொறுமையோடு இருக்கக்கூடியவர்கள் இவர்கள்தான் உண்மையாளர்கள், தக்வா உள்ளவர்கள், இறையச்சம் உள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான்.
 
அன்பு சகோதரர்களே! இன்னும் நிறைய செய்திகள் இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்! முடிந்தால் அடுத்த வாரங்களில் பார்ப்போம். அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகனார் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய ஒரு உபதேசத்தை கூறி இந்த குத்பாவை நிறைவு செய்வோம்,
 
மீதம் உண்டான விஷயங்களை இன்ஷா அல்லாஹ்! அடுத்த குத்பாவில் பார்ப்பதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக! ஹுசைன் இப்னு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் யார் மக்களிடத்தில் கொடுக்கல் வாங்கல் செய்கிறானோ, மக்களிடத்தில் தொடர்பு வைக்கிறானோ அவன் மக்களிடத்தில் பேசும்போது அநியாயம் செய்யவில்லை என்றால், பொய் பேசவில்லை என்றால், 
 
அவர்களுக்கு வாக்கு கொடுத்தால் அந்த வாழ்க்கை அவன் மீறவில்லை என்றால், எந்த குணம் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது அவன் மக்களுக்கு அநீதி செய்யாதவர் மக்களிடத்தில் பேசினால் பொய் பேசாதவர், மக்களுக்கு வாக்கு கொடுத்தார் அதை மீறாதவர் சொல்கிறார்கள் இவர்கள் தான் மனிதர்களிலே முழுமையானவர்கள், 
 
அந்த மனிதம் நேர்மை என்ற அந்த தன்மை முழுமையாக கிடைக்கப் பெற்றவர்கள், இவர்கள்தான் வெளிப்படையான நீதமானவர்கள், இத்தகையவர்களோடு சகோதரத்துவத்தை பேணுவது நமக்கு கடமையாகும், இவர்களைப் பற்றி புறம் பேசுவது நமக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இப்படி நிறைய இந்த நற்குணத்தை பற்றி நம்முடைய அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள், நிறைய வரலாறுகள் இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்! அடுத்தடுத்த குத்பாவிலே பார்ப்போம். 
 
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய சகோதரர்களுக்கு உதவி செய்வானாக! நம்முடைய ஆட்சியாளர்களுக்கு மத்தியில் ஒற்றுமையை, ஈமானுடைய பலத்தை தருவானாக! காஃபிர்களுக்கு எதிராக அவர்கள் ஒன்று சேர்ந்து இந்த இஸ்லாமையும், முஸ்லிம்களையும், பாதுகாக்கக்கூடிய வீரத்தையும், மன வலிமையும் அவர்களுக்கு தந்தருள்வானாக! ஷைத்தான் அவர்களை வழிக்கெடுப்பதிலிருந்தும், இறை நிராகரிப்பாளர்கள் நம்முடைய ஆட்சியாளர்களை வழிக்கெடுப்பதிலிருந்தும் அல்லாஹுத்தஆலா அவர்களை பாதுகாத்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/