ரமழான் ஏற்படுத்தும் சமூக மாற்றம்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழான் ஏற்படுத்தும் சமூக மாற்றம்!!
வரிசை : 870
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 08-03-2024| 27-08-1445
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!உங்கள் முன்னால் அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக,அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் கண்ணியத்திற்குரிய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனா;உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் இம்மை மறுமை வாழ்க்கையின் வெற்றியை வேண்டியவனாக சொர்க்கத்தை வேண்டியவனாக;நரகத்திலிருந்து பாதுகாவல் தேடியவனாக நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை வேண்டியவனாக அல்லாஹ்வுடைய அருளையும் அன்பையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நம்மை பொருந்தி கொள்வானாக!அல்லாஹ்வை கொண்டு பொருந்தி கொண்ட நல்லோர்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!ஆமீன்!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் ரமழானை நாம் சந்திக்க இருக்கின்றோம்.அல்லாஹ் அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நமக்கு நன்மைக்கான மாதமாக அந்த ரமழானை ஆக்கி வைத்திருக்கிறான்.
ரமழான் அல்லாஹ்வுடைய அன்பை அடைவதற்கும், அல்லாஹ்வுடைய நெருக்கத்தை அடைவதற்கும், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் உரிய மாதமாகும். ரமழான் புத்தாடைகள் வாங்குவதற்காக, வகை வகையான உணவுகளை சாப்பிடுவதற்காக அல்லது இங்கும் அங்கும் சுற்றித் திரிந்து சந்திப்புகளை அதிகப்படுத்தி கொள்வதற்காக உள்ள மாதம் அல்ல.
ரமழான் மாதம், பணிவுக்கான மாதம்; பயத்திற்கான மாதம்; இபாதத்திற்கான மாதம்; அல்லாஹ்வை நெருங்குவதற்குரிய வழிகளை தேடுவதற்குரிய மாதம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
2:183. நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.
அல்லாஹ்வின் அடியார்களே! நாம் புத்தாடைகள் அணிய வேண்டும் என்றால் வகை வகையான, சுவையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு எவ்வளவோ காலங்கள் இருக்கின்றன. நேரங்கள் இருக்கின்றன! இந்த மாதம் நம்முடைய தக்வாவை கவனிப்பதற்காக, நம்முடைய இறையச்சத்தில் ஏற்பட்ட பலவீனத்தை சரி செய்வதற்காக உள்ள மாதம். நம்முடைய வணக்க வழிபாடுகளில் ஏற்பட்ட குறைகளை சரி செய்வதற்குரிய மாதம்.
இது ஏனைய மாதங்களில் நாம் கவனிக்காமல் விட்ட, நாம் உதவி செய்யாமல் விட்ட, நம்முடைய உறவுகள் நம்முடைய ஏழை நண்பர்கள் நமது முஹல்லாவில் இருக்கக்கூடிய எளியோர் போன்றோருக்கு நம்முடைய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட ஒரு அழகிய பகுதியை கொடுத்து உதவுவதற்காக உள்ள மாதம் இது.
இந்த ரமழானுடைய மாதம் நம்முடைய செல்வத்தை நாமே உண்டு கழிப்பதற்காக, நாமே ஆடம்பரமாக செலவு செய்து தீர்ப்பதற்காக உள்ள மாதம் அல்ல இது .
அல்லாஹ்வின் அடியார்களே! நாம் பொதுவாக கவலைப்பட வேண்டிய கண்ணீர் வடிக்க வேண்டிய ஒரு வருத்தமான செய்தி என்ன? இன்று குர்ஆன் இருக்கிறது; குர்ஆன் ஓதப்படுகிறது. ஆனால், இதே குர்ஆன் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் இருந்தது; ஓதப்பட்டது.
பிறகு, அவர்கள் இந்த குர்ஆனை வாழ்க்கையில் கொண்டு வந்தார்கள். இந்த குர்ஆனை அவர்களது வியாபாரத்தில் கொண்டு வந்தார்கள். அவர்களது ஆட்சியில் கொண்டு வந்தார்கள். அவர்களது குடும்ப வாழ்க்கையில் கொண்டு வந்தார்கள். அவர்களது சமூக உறவுகளில் அதை செயல்படுத்தினார்கள். இன்று குர்ஆனின் பிரதிகள் அழகாக அச்சடிக்கப்படுகின்றன. குர்ஆன் அழகிய குரலிலே ஓதப்படுகிறது.
ஆனால், அத்தோடு மட்டும் நமக்கு குர்ஆன் போதும் என்று நின்று விடுகிறோம். அதை வாழ்க்கையில் கொண்டு வருவதில்லை.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ
2:185. ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.......
அல்லாஹுத்தஆலா ஒன்றை அவன் பேசும்போதே அதில் அவன் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியும். அல்லாஹுத்தஆலா ஒன்றை நமக்கு விவரிக்கும் போதே அதில் அவன் எவ்வளவு ஈடுபாடு காட்டுகிறான் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒன்றை அல்லாஹுத்தஆலா நமக்கு வர்ணிக்கும் போதே அது அல்லாஹ்விடத்தில் எவ்வளவு மகத்துவம் மிக்கது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அது போன்று அல்லாஹுத்தஆலா ஒன்றை சொல்லும்போது அதிலே அவனது கோபம் எவ்வளவு இருக்கிறது அவனது வெறுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
சகோதரர்களே! இந்த ரமழானை பற்றி அல்லாஹ் சொல்லும் பொழுது அந்த வாக்கியத்தின் நடையை பாருங்கள்! இந்த மாதத்தை அல்லாஹ் எப்படி கண்ணியப்படுத்துகிறான் என்பதை சிந்தியுங்கள்!
அல்லாஹ் கூறுகிறான்:
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் கண்டிப்பாக நோன்பு நோற்கவும். இன்னும், எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழிபடுத்தியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள்)! (அல்குர்ஆன் 2:185)
கருத்து : ரமழான் மாதம் அது எத்தகைய கண்ணியமிக்க மாதம் தெரியுமா? அதில் குர்ஆன் இறக்கப்பட்டது. பிறகு அந்த குர்ஆனை அல்லாஹ் புகழ்கிறான். அந்த குர்ஆனை அல்லாஹ் உயர்த்துகிறான். இந்த குர்ஆன் சடங்குகளுக்காக இறக்கப்படவில்லை. சம்பிரதாயங்களுக்காக இறக்கப்படவில்லை. போட்டிகள் நடத்துவதற்காக இறக்கப்படவில்லை.
இவர் நன்கு அழகுற ஓதக்கூடிய பெரிய காரியா? அவர் பெரிய காரியா? யாருடைய குரல்வளம் அழகாக இருக்கிறது? அப்படி பெருமை பேசுவதற்காக இந்த குர்ஆன் இறக்கப்படவில்லை. மக்களை மாற்றுவதற்காக...உயர்ந்த சமூகத்தை உருவாக்குவதற்காக... மக்களை வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் மீட்டெடுப்பதற்காக, மக்களை அறியாமையிலிருந்து ஞானத்தின் பக்கம் கொண்டு வருவதற்காக, மக்களை மூடநம்பிக்கையிலிருந்து தெளிவானபகுத்தறிவின் பக்கம் கொண்டு வருவதற்காக இந்த குர்ஆன் இறக்கப்பட்டது. இந்த குர்ஆன்! இந்த மாதத்தில் தான் இறக்கப்பட்டது.!
சகோதரர்களே! உங்களுக்குத் தேவையான வாழ்க்கையின் அத்தனை வழிகாட்டல்களுக்கும் இந்த குர்ஆனிலே ஆதாரம் இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான எல்லா வகையான வழிகாட்டல் அதாவது உங்களுடைய வியாபாரம் எப்படி இருக்க வேண்டும்? நீங்கள் யாரோடு பழக வேண்டும்? யாரோடு பழகக் கூடாது? உங்களது மனைவியிடத்தில் யார் எப்படி நடக்க வேண்டும்? உங்களது பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்? முஸ்லிம்களுடைய சமூகம் எப்படி இருக்க வேண்டும்? எந்த கேள்வியை எடுத்தாலும் அந்த கேள்விக்குரிய விளக்கமான பதிலை அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே வைத்திருக்கிறான்.
உண்மையை பொய்யிலிருந்து, சத்தியத்தை அசத்தியத்திலிருந்து பிரித்தறிவதற்கு உண்டான முறைகள் இவை . இதனுடைய வழிகாட்டல் உலகத்தில் ஓங்க வேண்டும். இதை அமல்படுத்தக்கூடிய ஒரு சமூகம் ஒரு கூட்டம் இந்த உலகத்திலே மிகைக்க வேண்டும். அவர்கள் உலக மக்களை வழிநடத்த வேண்டும். அதற்காக இறக்கப்பட்ட குர்ஆன் இது.
சகோதரர்களே! இதனுடைய வசனங்களை அழகிய வளைவு எழுத்துக்களால் எழுதி வைத்து அவற்றை ஃபிரேம்களாக மாட்டி வீடுகளை அலங்கரிப்பதற்காக இறக்கப்பட்ட வேதம் அல்ல இது. நமது வீடுகளின் சுவர்களை அலங்கரிப்பதற்காக இறக்கப்பட்ட வசனங்கள் அல்ல.
குர்ஆன் உடைய வசனங்கள் நம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்காக இறக்கப்பட்ட வசனங்கள். நம்முடைய சமுதாயத்தை மாற்றுவதற்காக இறக்கப்பட்ட வசனங்கள். அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனை கொண்டு குழப்பத்திலிருந்த, அநியாயத்திலிருந்த, அறியாமையிலிருந்த, சிலை வணக்கத்தில் இருந்த அராஜகம் செய்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த, எதை சாப்பிடுவது என்பது கூட தெரியாமல் செத்துப்போன மிருகங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த, உறவுகளை துண்டித்துக் கொண்டிருந்த, இனங்களை அழித்துக் கொண்டிருந்த, அந்த அரேபிய சமுதாயத்தை அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனை கொண்டு மீட்டெடுத்தான். சுத்தப்படுத்தினான். அவர்கள் மாறினார்கள். யார் அவர்கள்? முட்டாள்கள் என்றும் மடையர்கள் என்றும் வீணர்கள் என்றும் பழிக்கப்பட்டு கொண்டிருந்தார்களோ அவர்கள் தான். இந்த குர்ஆனை நம்பிக்கை கொண்ட போது இந்த குர்ஆன் கொண்டுவந்த இஸ்லாமை ஏற்ற போது அல்லாஹ்வால் புகழப்பட்டார்கள்.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
9:100. முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். மேலும், தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
யார் இந்த உலக வரலாற்றிலே திரும்பிப் பார்ப்பதற்கு கூட அருகதை அற்றவர்கள் என்று இருந்தார்களோ, வேட்டையாடுவதற்கும், விபச்சாரம் செய்வதற்கும், சூதாடுவதற்கும், நடனங்களுக்கும் இதற்கு தான் இந்த சமுதாயம் தகுதியானது என்று இருந்தார்களோ அந்த சமுதாயத்தை உலகை வழிநடத்தும் சமுதாயமாக, உலகை ஆட்சி செய்யும் சமுதாயமாக, உலக ஆட்சிகளை சீர்திருத்தம் செய்யும் சமுதாயமாக, இந்தக் குர்ஆனை கொண்டே அல்லாஹ் மாற்றினான்.
எப்போது இந்த குர்ஆனை கைவிட்டார்களோ மீண்டும் அதே அரபுலக மக்கள் தங்களுடைய ஜாஹிலியத்தின் (அறியமைக்காலத்தின்) பக்கம் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எப்போது இந்த குர்ஆனை புறக்கணித்தார்களோ மீண்டும் அதே ஜாஹிலியத்திற்கு ஆடல், பாடல், இசை, கூத்து, கும்மாளம் போன்ற அந்த அராஜக அநியாய விபச்சார கலாச்சாரத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சகோதரர்களே! இப்ராஹிம் நபியுடைய உம்மத் இந்த தவ்ஹீதை விட்டு விலகிய போது, இஸ்மாயில் நபியுடைய வம்சம் அவர்களுடைய அந்த தவ்ஹீத் கோட்டைகொள்கையை விட்டு விலகிய போது, எந்த அளவு இழிவானவர்களாக கேவலமானவர்களாக ஆனார்கள் என்றால் கஃபத்துல்லாவிலே நிர்வாண கலாச்சாரத்தைக் கொண்டு வந்தார்கள். அதே கலாச்சாரத்தின் பக்கம் தற்போது திரும்பி கொண்டிருக்கிறார்கள்.
எப்போது குர்ஆனை விட்டார்களோ।.. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அவர்கள் மட்டுமல்ல! எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் சரி, குர்ஆனை விட்டு தங்களது சமூகத்தை தூரமாக்குவார்களேயானால்... எப்படி? குர்ஆன் வேண்டும்!... எதற்கு?... எங்களுக்கு போட்டிகள் நடத்துவதற்கு.. குர்ஆன் வேண்டும்!... எதற்கு?... எங்களது இமாம்கள் அழகிய குரலிலே அதை ஓதி தொழுகை நடத்த வேண்டும். அவ்வளவுதான். அதற்கு மேல் குர்ஆனுடைய தஃலீம்?..?.. குர்ஆன் எதை கட்டளையிடுகிறது? குர்ஆன் எதை தடுக்கிறது? அதைப்பற்றி பிரச்சாரம் செய்யாதீர்கள்; அதனுடைய சட்டத்தை மக்களுக்கு மத்தியிலே பரப்பாதீர்கள். பேசாதீர்கள் .
அப்படியே பேசினாலும் பேசுவதோடு படிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். கல்லூரிகளில் பாடங்களாக பாடசாலைகளிலே தனி ஒரு சப்ஜெக்ட் ஆக கருப்பொருளாக படிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். குர்ஆன் வாழ்க்கைக்கு தேவையில்லை. நாங்கள் பின்பற்றுவது எங்களுடைய மன இச்சையை. நாங்கள் பின்பற்றுவது யூத நசராக்களின் கலாச்சாரத்தை. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! இப்படியே போனால்
இழிவுக்கு மேல் இழிவு, அவமானத்திற்கு மேல் அவமானம், சோதனைக்கு மேல் சோதனை, அல்லாஹுத்தஆலா சாட்டிக் கொண்டே இருப்பான்.
அன்பான சகோதரர்களே! கலீஃபா உமருல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு பாலஸ்தீனத்தை அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெற்றி கொண்ட பிறகு, மஸ்ஜிதுல் அக்சாவை வெற்றி கொண்டதற்கு பிறகு அந்த சாவியை நாங்கள் உங்களுடைய கலிஃபா அமீருள் முஃமினின் உமருல் ஃபாரூக் இடத்தில்தான் கொடுப்போம் என்று அந்தப் பாதிரிகள் சொல்ல அபூ உபைதா என்னென்னமோ அங்கே செய்து பார்க்கிறார்கள். கலிஃபாவை அவ்வளவு தூரத்திலிருந்து வரவழைக்க வேண்டுமே சிரம படுத்த வேண்டுமே என்று தந்திரமாக கலீஃபா உமருல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு பதிலாக வேறு யாரை காட்டினாலும் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
உங்களின் உமருடைய அடையாளம் எங்கள் தவுராத்திலே இன்ஜிலிலே இருக்கிறது. இவர் உமர் அல்ல என்று மறுத்து விடுகிறார்கள். இறுதியாக அன்றைய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதி உமர் அவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு ஒட்டகம்... கூட ஒரு அடிமை... சிறிது தூரம் அடிமை வாகனிக்கிறார். உமர் கடிவாளத்தை பிடித்து வருகிறார். பிறகு, சிறிது தூரம் உமர் வாகனிக்கிறார். அடிமை பிடித்து வருகிறார். இவ்வாறு மாறி மாறி பல நாள்கள் பல மைல் தூரங்கள்.
பைத்துல் மாலில் இருந்து இரண்டு ஒட்டகங்களை எடுத்து வருவதற்கு கூட உமருல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தயார் இல்லை. காரணம் பைத்துல் மால் செல்வம் அதாவது முஸ்லிம்களுடைய செல்வம் என்பது அப்படி பாதுகாக்கப்பட வேண்டிய செல்வம்.
அரசாங்க சொத்து என்பது அரசர்களின் ஆடம்பர, சுகபோக வாழ்க்கைக்காக செலவழிக்கக் கூடிய சொத்து அல்ல என்பதை உமருல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கே நிரூபித்தார்கள். அங்கே வழிகாட்டினார்கள்.
தர்மமாக பெறப்பட்ட சதக்காவுடைய ஒட்டகங்களை எல்லாம் உமருல் ஃபாரூக் ஒரு முறை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதனை பார்த்த அலி அவர்கள் சொன்னார்கள். அமீருல் முஃமினீன் உமர் அவர்களே! இதை உங்களுடைய சில அடிமைகளுக்கு கட்டளையிட்டால் இந்த ஒட்டகங்களை பராமரிக்கக் கூடிய வேலையை செய்து விடுவார்களே அல்லது எங்களிடத்தில் நீங்கள் சொல்லலாமே நாங்கள் இதை செய்து விடுவோமே, நீங்கள் இப்படி சிரமப்படுகிறீர்களே. என்று அலி சொல்ல
அலியை திரும்பி பார்த்து ’’இந்த சதக்கா என்ற முஸ்லிம்களின் (பொது நிதி ) பைத்துல் மாலுடைய சொத்தை பற்றி அல்லாஹ் என்னிடத்திலே கேட்பானா? உங்களிடத்திலே கேட்பானா?.
அன்பான சகோதரர்களே!இவர்கள் கலீஃபாக்கள்.இவர்கள் முஸ்லிம்களை ஆளுவதற்கு தகுதியானவர்கள்.இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கும்பொழுது அல்லாஹுத்தஆலா எதிரிகளுடைய உள்ளத்திலே அந்த பயத்தை போடுவான்.முஸ்லிம் சமுதாயம் கண்ணியம் பெறும்.
இங்கே சம்பவத்திற்கு வருவோம்.. அபூ உபைதா அவர்கள் உமருல் ஃபாரூக் அவர்களை சந்தித்து அமீருல் முஃமினீன் உமர் அவர்களே நாளை மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு செல்ல வேண்டும்.
அபூ உபைதா அதனை மிகவும் தாழ்மையோடு பணிவோடு அன்போடு சொல்கிறார்.
அமீருல் முஃமினீன் உமர் அவர்களே இந்த கிழிந்து தைக்கப்பட்ட ஆடையோடுதானா நீங்கள் நாளை அந்த கிறிஸ்தவ பாதிரிகளை சந்தித்து அந்த சாவியை வாங்க வரவேண்டும் , அதிலும் இந்த அரேபிய ஒட்டகத்திலா? அதனுடைய கஜாவா பெட்டியும் அதன் மீது போடப்பட்டிருக்க கூடிய அந்த துணியும் அருதப் பழையது. இந்த நிலையிலா புகழ்பெற்ற ரோம பேரரசின் வரலாற்று சிறப்புபெற்ற ஒரு நகரத்திற்குள் நீங்கள் நுழைய வேண்டும்.
குதுஸ் நகரம் ரோமர்களுடைய மிக முக்கியமான நகரமாயிற்றே! . இரண்டாம் கலிஃபாவே நான் ஒரு கம்பீரமான ராஜ நடைபோடும் உயர்ஜாதி குதிரையை கொண்டு வருகிறேன். அதிலே அமர்ந்து கொள்ளுங்கள். நான் சில உயர் ரக ஆடைகளை தருகிறேன் அதை நீங்கள் அணிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அபூ உபைதாவை பார்த்து கலிஃபா உமருல் ஃபாரூக் சொன்னார்கள்; அபூ உபைதா இந்த வார்த்தையை உங்களைத் தவிர வேறு யாரும் சொல்லி இருந்தால், நான் அவருக்கு தகுந்த பாடத்தை புகட்டி இருப்பேன்.
قال عمر رضي الله عنه :"نحن قوم أعزَّنا الله بالإسلام فمهما ابتغينا العزَّة في غيره أذلَّنا الله"
அல்லாஹுத்தஆலா நம்மை இஸ்லாமை கொண்டு கண்ணியப்படுத்தினான். யார் இஸ்லாம் அல்லாத ஒன்றை கொண்டு கண்ணியத்தை தேடுவாரோ அல்லாஹ் அவரை இழிவு படுத்தி விடுவான் என்று சொல்லிவிட்டு அதே பழைய ஆடையோடு அந்த உயர்ரக வாகனத்திலே உட்காருகிறார்கள்.
சரி, ஏதோ ஒரு வாகனம் தானே மாற்றிக் கொண்டால் என்ன என்ற எண்ணத்தில் அந்த வாகனத்தில் ஏறி அமர்கிறார்கள். தனது நஃப்சை பார்க்கிறார்கள். தன் எண்ண ஓட்டத்தை கணக்கிடுகிறார்கள். உடனே கீழே இறங்கிவிட்டு அபூ உபைதா! இந்த குதிரையும் எனக்கு வேண்டாம்; இதில் உட்காரும் போது எனக்கு ஒரு பெருமை வருகிறது. நான் பணிவானவனாக அல்லாஹ்விற்கு முன்னால் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுல் அக்ஸாவிலே நுழைய விரும்புகிறேன். பெருமையோடு அல்ல என்று அந்தக் குதிரையையும் திருப்பி கொடுத்துவிட்டார், வந்த அதே ஒட்டகத்தோடு அதே கிழிந்த தைக்கப்பட்ட ஒட்டு போடப்பட்ட ஆடையோடு அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.
சகோதரர்களே!
(உலகமே ரோம சாம்ராஜ்யத்தின் முன் பயந்து கைகட்டி நின்ற காலம் அது. தற்போது அதே)
(குறிப்பு:: சொல்லவந்த கருத்தில் இது பொருத்தமாக இருந்தால் இதனை இணைத்துக்கொள்ளவும்)
ரோம சாம்ராஜ்யத்தினர் பயந்து கைகட்டி கூனி குறுகி நின்றார்கள். அன்பானவர்களே! எதற்காக குர்ஆன் இறக்கப்பட்டது? நிறைவானவர்களை கண்ணியப்படுத்துவதற்காக இந்த குர்ஆன் இறக்கப்பட்டது. எப்போது அது நடக்கும்? இந்த குர்ஆன் நம்முடைய வாழ்க்கையில் ஹலால் ஹராமுடைய வழியிலே இருக்குமேயானால்.
எது குர்ஆனிலே ஹராம் ஆக்கப்பட்டதோ அதை நாங்கள் தடுத்துக் கொண்டோம். எது குர்ஆனிலே ஹலாலோ அதுதான் எங்களது வாழ்க்கையிலே இருக்கும் என்று பிரதிபலிக்கும்போது.
இங்கே இன்னொரு வரலாற்றை நாம் நினைவுகூர வேண்டும். இந்த உம்மத்தினுடைய அறியாமைக்கு இந்த உம்மத் குர்ஆனை புரியாமல் போனதற்கு குர்ஆனுடைய அந்த ஈடுபாடு இல்லாமல் போனதற்கு இன்று இஸ்லாமிய வரலாறுகளில் கலீஃபாக்களுடைய வாழ்க்கை வரலாறுகள் பேசப்படாமல் போனதும் மிகப்பெரிய காரணம் என்று சொல்லலாம்.
கலிஃபா உமருல் ஃபாருக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திலே பாரசீகர்கள் தோற்று ஓடினார்கள். அவர்களில் பெரும்பாலான படைத்தளபதிகள் அந்த காலத்திலே சீன மன்னனிடம் அடைக்கலம் தேடி ஓடினார்கள். அப்போதும் சீனா மிகப்பெரிய ஒரு வல்லரசாக ஒரு பெரிய பேரரசாக இருந்தது.
அப்போது அந்த பாரசீகர்கள் அந்த சீனர்களிடத்திலே அவர்களுடைய மன்னர்களிடத்திலே சில காலம் தங்கி பேசி எங்களது நாட்டை நாங்கள் மீட்டெடுக்க வேண்டும்; எங்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; எங்களுக்கு நீங்கள் படை கொடுத்து ஆயுதங்கள் கொடுத்து உங்களுடைய போர் வீரர்களை கொடுத்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்கள்.
சகோதரர்களே! அப்போது இருந்த அந்த சீன அரசர் அவர்களிடத்திலே, ‘’.பெரிய பேரரசராக இருந்த உங்களை தோற்கடித்து விரட்டி அடிக்கக்கூடிய அளவுக்கு உள்ள அந்த மக்கள் யார்? அவர்களைப் பற்றி எங்களுக்கு நீங்கள் வர்ணித்து விவரம் கூறுங்கள் என விசாரிக்கின்றார்.
படையின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது. எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. அவன் சொல்லிக் கொண்டே வருகிறான். உரையாடல் தொடர்கிறது “ இதுவெல்லாம் காரணமாக இருக்காது. நான் வேறொன்றை விசாரிக்கிறேன்” என்று கேட்டுவிட்டு “அவர்களுக்கு ஒரு மார்க்கம் இருக்கிறதா? “”என்று கேட்கிறான். ‘’ஆம் அவர்களுக்கு ஒரு மார்க்கம் இருக்கிறது.’’ அந்த மார்க்கத்திற்கு ஒரு வேதம் இருக்கிறதா? என்று கேட்கிறான். ஆம், அவர்களுடைய மார்க்கத்திற்கு ஒரு வேதம் இருக்கிறது. அந்த வேதத்தோடு அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அந்த வேதத்தை ஓதுகிறார்கள்; அந்த வேதத்தில் சொல்லப்பட்ட ஹலாலை அவர்கள் ஹலால் ஆக்குகிறார்கள்; அந்த வேதத்தில் சொல்லப்பட்ட ஹராமை விட்டு விலகிக் கொள்கிறார்கள் இது அந்த வேதத்தோடு அவர்களுக்கு இருக்கக்கூடிய தொடர்பு.
அப்போது அந்த சீன மன்னன் சொல்கிறான்; எனது நாட்டு வீரர்களை மட்டுமல்ல இன்னும் எத்தனை வீரர்களைக் கொண்டு வந்தாலும் சரி, நான் உங்களுக்கு உதவிக்கு அனுப்பினாலும் சரி, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை நம்பிக்கை கொண்டு அதன்படி அவர்கள் நடந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவர்களை ஒருபோதும் மிகைக்க முடியாது. வென்று வெற்றி கொள்ள முடியாது. நான் உங்களுக்கு செய்யக்கூடிய உதவி வீணான உதவி. வேண்டுமென்றால் காலமெல்லாம் நீங்கள் இங்கே எம் நாட்டில் தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளிக்கிறான்.
அன்பானவர்களே! இதற்காகத்தான் இந்த குர்ஆன் இறக்கப்பட்டது. இந்த குர்ஆன் நம்முடைய வெறும் ஒரு மார்க்கத்திற்கு மாறினோம் என்பதற்காக அல்ல. நமது பெயர்களை மாற்றுவதற்காக அல்ல. அவர்களுக்கு ஒரு கலாச்சாரம் இருப்பது போன்று நமக்கு ஒரு கலாச்சாரம் என்பதற்காக அல்ல.
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ ۚوَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا
48:28. அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான்.
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
61:9. அவன்தான் தன் (இத்)தூதரை நேரான வழியைக்கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். (ஈஸாவை அல்லாஹ்வுடைய மகனென்று, அவனுக்கு) இணை வைத்து வணங்கும் இவர்கள் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களையும் அது வென்றேதீரும்.
குர்ஆன்தான் எங்களது கலாச்சாரம்; குர்ஆன்தான் எங்களது அரசியல்; குர்ஆன்தான் எங்களது ஒப்பந்தம்; குர்ஆனை கொண்டுதான் எங்களுடைய போர்; குர்ஆனை கொண்டுதான் எங்களுடைய திருமணம்; முஸ்லிம்கள் என்றால் இந்த குர்ஆன் தான் எங்களுக்கு... முஸ்லிம்கள் என்றால் இந்த குர்ஆனின் படி தான் நாங்கள் செல்வோம் இதற்காகத்தான் குர்ஆன் இறக்கப்பட்டது.
இந்த நோன்பை அல்லாஹ் ஏன் கடமையாக்கினான்? இந்தக் குர்ஆன் இறக்கப்பட்ட மாதத்திலே அல்லாஹுத்தஆலா நோன்பை நமக்குக் கொடுத்ததே இந்த குர்ஆனை எப்படி நமது வாழ்க்கையாக மாற்றுவது? தொழுகையில் ஓதப்படும் வசனங்களாக ....தொழுகையில் ஓதப்படுகிற வார்த்தைகளாக இருப்பதிலிருந்து குரல் ஒலிகளாக இருப்பதிலிருந்து செயல்களாக செயல் வடிவமாக மாற வேண்டும்.
ஒரு முஸ்லிம் வியாபாரியா? அவருடைய கொடுக்கல் வாங்கலிலே அந்த குர்ஆன் வெளிப்பட வேண்டும். ஒரு ஆலிமா? அவருடைய பிரச்சாரத்திலே அவருடைய அழைப்பு பணியிலே அந்த குர்ஆன் வெளிப்பட வேண்டும்.
நம்முடைய திருமணமா? அதில் ஹலால் ஹராம் என்ன? யாரை மணமுடிப்பது என்பதற்கு மட்டும் குர்ஆனை பார்க்கிறோம். ஆனால் திருமணத்தை எப்படி நடத்துவது என்பதற்கு குர்ஆனை பார்ப்பதில்லை.
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
உங்கள் தாய்மார்களும், உங்கள் மகள்களும், உங்கள் சகோதரிகளும், உங்கள் மாமிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்) சகோதரனின் மகள்களும், (உங்கள்) சகோதரியின் மகள்களும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால் குடி சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்மார்களும் நீங்கள் உறவு கொண்டுவிட்ட உங்கள் மனைவிகளிலிருந்து உங்கள் மடிகளில் வளர்க்கப்படுகின்ற (அவர்களின்) பெண் பிள்ளைகளும் உங்களுக்கு (நீங்கள் மணம் முடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அவர்களுடன் உறவு கொண்டிருக்கவில்லையென்றால் (அவர்களை விவாகரத்து செய்தபின் அவர்களின் மகள்களை மணப்பது) உங்கள் மீது குற்றமில்லை. இன்னும், உங்கள் முதுகந்தண்டிலிருந்து (பிறந்த) உங்கள் சொந்த மகன்களின் மனைவிகளும் உங்கள் மீது (நீங்கள் மணம் முடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். இன்னும், இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்ப்பதும் உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னர் நடந்ததைத் தவிர (அதை அல்லாஹ் மன்னிப்பான்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:23)
திருமணம் எப்படி நடத்தப்பட வேண்டும்?திருமணத்துடைய வழிகாட்டுதல் என்ன?அதற்கு குர்ஆன் தேவை இல்லை. விட்டு விடுங்கள். அது எங்களது விருப்பம்.எங்களது ஊர் கலாச்சாரம்.வியாபாரத்தில் ஹலால் ஹராம் ஒரு அடிப்படை அளவுக்கு தான் பார்ப்போம்.அதற்குப் பிறகு இந்த வியாபாரம் எங்களுக்கு சொந்தமானது.எங்களுடைய அந்த வழிமுறைப்படி நாங்கள் செய்வோம்.
இப்படியாக நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அவரவருடைய பங்கிற்கு இந்த குர்ஆனிலேயே எல்லை மீறி கொண்டே இருக்கிறோம்.அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
பொதுமக்கள் ஒரு பக்கம். ஆட்சியாளர்கள் ஒரு பக்கம். அறிஞர்கள் ஒரு பக்கம். செல்வந்தர்கள் ஒரு பக்கம். இப்படி ஆளுக்கு ஒரு பக்கமாக இந்த குர்ஆனுக்கு நாம் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.இந்த குர்ஆனுக்கு நாம் அநியாயம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஓதுவதற்கு மட்டும் குர்ஆன் தேவை,ஏன் ஓதுகிறோம்?அதுவும் பரக்கத்திற்காக. குர்ஆனை ஓதினால் பரக்கத் வரும் என்று சொல்லி இருக்கிறார்கள். குர்ஆன் ஓதினால் வீட்டிலே பரக்கத் வரும், கடையிலே குர்ஆன் ஓதினால் பரக்கத் வரும், குர்ஆன் ஓதினால் மனசுக்கு நிம்மதி, குர்ஆன் ஓதினால் அது ஒரு சந்தோஷம், அவ்வளவுதான். எல்லாம் இந்த உலக வாழ்க்கையோடு முடிந்து விடக்கூடிய ஒரு அற்ப தேவைகளுக்காக குர்ஆன் ஆக்கப்பட்டுவிட்டது.
சகோதரர்களே! நீங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக அல்லாஹுடைய பரக்கத் கிடைக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும் மாற்று கருத்து அறவே கிடையாது. ஆனால் குர்ஆன் ஓதுவதால் அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்குமா? ஒரு காஃபிர் இந்த குர்ஆனை ஓதினால் கூட அவனுக்கு மனநிம்மதி கிடைக்கும், ஒரு காஃபிர் குர்ஆன் ஓதப்படுகிற சத்தத்தை கேட்டால் அவனுக்கு பரக்கத் கிடைக்கும், அவனுக்கு மன அமைதி கிடைக்கும், எல்லாம் கிடைக்கும்.
ஆனால் அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்குமா என்ற கேள்வி எழுமானால் இந்த குர்ஆனுடைய வழிகாட்டுதல்களை இந்த குர்ஆனுடைய நேர்வழிகளை இந்த குர்ஆன் உடைய சட்டங்களை பின்பற்றாத வரை இந்த குர்ஆனை கொண்டு அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்காது.
5:16. (உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான். இன்னும், இருள்களிலிருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும், அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கிறான்.
அல்லாஹ்வுடைய பொருத்தம் தேவை என்ற குறிக்கோள் உள்ள சமுதாயத்திற்கு இந்த குர்ஆனை கொண்டு அல்லாஹ் வழி காட்டுவான் என்பதாக அல்லாஹு தஆலா சொல்கிறான்.
நாம் எல்லோரும் அல்லாஹ்வுடைய பரக்கத் எனக்கு தேவை, எனக்கு கொடுக்கப்பட்ட செல்வம் இரட்டிப்பாக வேண்டும் மூன்று மடங்காக நான்கு மடங்காக பத்து மடங்காக நூறு மடங்காக ஏன் ஆயிரம் மடங்காக, ஆனால் கூட நாம் திருப்தி பட தயார் இல்லை. செல்வத்துக்காக குர்ஆன், வீட்டு பரக்கத்துக்காக குர்ஆன், வீட்டை அலங்கரிப்பதற்காக குர்ஆன். ஆனால் அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்க இந்த குர்ஆனை கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்குத்தான் அல்லாஹ் சொல்கிறான்
இந்தக் குர்ஆனை கொண்டு அல்லாஹ்வுடைய பொருத்தம் வேண்டுமா அதற்கு ஹிதாயத் தேவை. இந்த ஹிதாயத்தை உங்களது நஃப்சுக்குள் உங்களது நஃப்சை மிதித்து உங்களது நஃப்சை கட்டுப்படுத்தி இந்த ஹிதாயத்தை நீங்கள் வர வைப்பதற்கு உங்களுக்கு தக்வா தேவை. தக்வாவை வரவழைப்பதற்கு நீங்கள் நோன்பு வைத்து பயிற்சி எடுங்கள். அதற்குத்தான் இந்த மாதம்.
அலங்கரிப்பதற்காகவோ, சுற்றுவதற்காகவோ, ருசிப்பதற்காகவோ, மற்ற ஆடம்பர தேவைகளுக்காகவோ அல்ல.
அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் இந்த ரமழானுடைய நற்பாக்கியத்தை அடைந்து கொள்வதற்கு அருள் புரிவானாக! நாம் நோற்கக்கூடிய இந்த நோன்பு தக்வாவை நம்மிடத்திலே கொண்டு வருவதற்காக இந்த குர்ஆனை கொண்டு ஹிதாயத்தை பெறுவதற்குரிய நோன்பாக அல்லாஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் நாங்கள் சமுதாய மக்களுக்கும் ஆக்கி அருள்வானாக!
காஸா மக்களுக்கு அல்லாஹுத்தஆலா உதவி செய்வானாக இந்த ரமழானை அவர்களுக்கு பாதுகாப்பான ரமழானாக ஆக்கி வைப்பானாக! அவர்களுடைய உயிர்களுக்கு பொருள்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களுடைய எதிரிகளின் மீது அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை மிகைப்பை தந்தருள்வானாக!
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.