ரமளானின் சிறப்புகளை அடைவோம்!!
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமளானின் சிறப்புகளை அடைவோம்!!
வரிசை : 872
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 15-03-2024 | 05-09-1445
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா இந்த ரமளானை அடையக்கூடிய பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் இன்ன பிற மூமின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் தந்திருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்!
நமது உறவினர்கள் குடும்பத்தார்கள் எத்தனையோ முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டவர்களாகவும் நோயிலே சிக்கியவர்களாகவும் இன்னும் பல ஆபத்துகளில் இறந்தவர்களாகவும் அல்லாஹ்விடத்திலே சென்று விட்டார்கள். அல்லாஹுத்தஆலா அவர்களுடைய கப்ருகளை பிரகாசமாக ஆக்குவானாக! அல்லாஹ் அவர்களைப் பொருந்தி கொள்வானாக! அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நம்முடைய பிரச்சனை என்னவென்றால் ஒன்று மறதி, நாம் மார்க்க உபதேசங்களை கேட்கிறோம். குர்ஆனும் ஹதீஸும் சொல்லக்கூடிய அறிவுரைகளை வழிமுறைகளை சிறப்புகளை செவியுறுகிறோம். ஆனால் மறந்து விடுகிறோம்.
அதனால் என்ன பிரச்சனை உருவாகிறது? அமல்களில் நமக்கு ஆர்வம் ஏற்படுவதில்லை. ஒரு காரியத்தினுடைய சிறப்பை நாம் முதலாவதாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த சிறப்பு அதனுடைய நினைவு நம்முடைய உள்ளத்தில் இருக்க வேண்டும். பிறகு அதன் மீது நம்பிக்கையை நாம் வளர்க்க வேண்டும்.
இன்று இவை அனைத்துமே நமக்கு இல்லாமல் இருக்கிறது. நோன்பை பற்றி சில சிறப்புகளை சொல்லக்கூடிய ஹதீஸ்கள் தெரியுமா? அந்த ஹதீஸ்களை எந்த அளவுக்கு நினைவில் வைத்திருக்கிறோம்! அதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டி அதன் மீது ஈமானை எந்த அளவுக்கு வலுப்படுத்தி இருக்கிறோம்!
சகோதரர்களே! இதுதான் அடிப்படை. காரணம் நம்முடைய நோன்பு சடங்காக இருப்பதற்கும் நம்முடைய நோன்பு ஒரு வழக்கமாக மாறிவிட்ட காரியமாக இருப்பதற்கும் சஹாபாக்கள் உடைய நோன்பு ஒரு இபாதத்தாக வணக்கமாக கழிந்ததற்கும் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அந்த ஹதீஸை அப்படியே பற்றி பிடித்துக் கொண்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
مَن صَامَ رَمَضَانَ، إيمَانًا واحْتِسَابًا، غُفِرَ له ما تَقَدَّمَ مِن ذَنْبِهِ
யார் ரமளானிலே அல்லாஹ்வுடைய அருளை ஆதரவு வைத்து அல்லாஹ்வுடைய மன்னிப்பை ஆதரவு வைத்து மறுமைக்காக நோன்பு நோற்பாரோ இறை நம்பிக்கையோடு அந்த நோன்பை கழிப்பாரோ அவருடைய முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் படும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 38.
யார் இறை நம்பிக்கையோடு அந்த நோன்பை கழிப்பார்? நோன்பு வைப்பவரே முஃமின். ஆனால், நோன்பு அந்த ஈமானை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் என்ன பொருள்? அந்த ஈமானுடைய அமல்களில் நோன்பாளி இருக்க வேண்டும். ஈமானை வலுப்படுத்தக்கூடிய ஈமானை அதிகப்படுத்தக்கூடிய ஈமானை பசுமையாக்க கூடிய நோன்பாளியுடைய ஈமானின் தரஜாக்களை உயர்த்தக்கூடிய அமல்களிலே இருக்க வேண்டும்.
ஒருவர் கேட்கலாம்; நான் ஒரு கூலி வியாபாரி, நான் மூட்டை தூக்கக்கூடியவன். நான் அலையக்கூடியவன், நான் பல இடங்களுக்கு செல்ல வேண்டும், எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவர் தொடர்ந்து நோன்போடு இன்னும் ஒரு இபாதத்தை செய்து கொண்டே இருக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை எந்த மன்னரும் உங்களுக்கு அதற்கு தடை போட முடியாது. உங்களது எந்த எஜமானரும் உங்களை அதிலிருந்து திருப்ப முடியாது. தடுக்க முடியாது. அதுதான் அல்லாஹ்வுடைய திக்ரு.
நோன்பு வைத்துக் கொண்டு அல்லாஹ்வுடைய திக்ரை அதிகப்படுத்தி கொள்ளட்டும். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், அஸ்தஃபிருல்லாஹ் என்று. அவர் தனக்கு கேட்கும் அளவிற்கோ அல்லது தனது வாய்க்குள்ளோ அதுவும் முடியவில்லை என்றால் தனது மனதிற்குள்ளோ அந்த திக்ரை அவர் ஓட விட்டுக் கொண்டே இருக்கட்டும்.
அதைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் நோன்பு வைத்தால் உலக வேலைகளை செய்யக்கூடாது என்று குர்ஆனும் சொல்லவில்லை; ஹதீஸும் சொல்லவில்லை; அறிஞர்களும் சொல்லவில்லை.
நோன்பு வைத்துக் கொண்டு வீணான பேச்சுகளை பேசாதீர்; நோன்பு வைத்துக் கொண்டு ஹராமானதை பார்க்காதீர்; ஹராமானது எப்போதும் கூடாது; ஹராமானதை எப்போதும் கேட்கக் கூடாது; நோன்பிலே அது செய்யப்பட்டால் பாவத்தின் கடுமையால் இன்னும் அதிகமாகி விடுகிறது.
பொய் எப்போதும் ஒருவன் பேசக்கூடாது. அல் மஸ்ஜிதுல் ஹராமிலே இருந்து கொண்டு பொய் பேசினால் நாம் என்ன சொல்வோம்? இந்த புனித மஸ்ஜிதில் இருந்து கொண்டா பொய் பேசுகிறாய்? என்று சொல்வோம். அதற்கு எப்படி பொருள் எடுத்துக் கொள்ளக் கூடாது? அப்ப கஃபாவிற்கு வெளியே சென்றால் பொய் பேசலாம் என்ற எடுத்துக் கொள்ள மாட்டோம்.
அன்பான சகோதரர்களே! அப்படித்தான் சஹாபாக்கள். உடனே இதை நம்பினார்கள். இதன்படி செயல்பட்டார்கள். வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
அவருடைய முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நற்செய்தி சொன்னார்கள்:
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நம்முடைய பிரச்சனை நம்முடைய மறதி தான் ஹதீஸ்களை தொடர்ந்து படிப்பதில்லை. படித்த ஹதீஸ்களை மனப்பாடம் செய்வோம் என்று நாம் அதற்காக முயற்சி செய்வதில்லை. ஏன் ஹதீஸ்களை ஆலிம்கள் மட்டும்தான் மனப்பாடம் செய்ய வேண்டுமா? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆலிம்களுக்கு மட்டுமா நபியாக அனுப்பப்பட்டார்கள்?
இந்த உள்ளங்கள் நபியவர்களின் ஹதீஸ்களை மனப்பாடம் செய்வதற்கு இல்லை என்றால், இந்த அறிவு அவர்களின் ஹதீஸை புரிவதற்கு இல்லை என்றால் குப்பைக்கு கூட இந்த அறிவும் உள்ளமும் தகுதியானது கிடையாது.
இந்த உள்ளத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸ் இல்லை என்றால், நம்முடைய அறிவைக் கொண்டு ஹதீஸை புரிவதற்கு நாம் முயற்சி செய்யவில்லை என்றால், பிறகு எதற்கு இந்த உள்ளம்? பிறகு எதற்கு இந்த அறிவு?
விட்டுப் போகக்கூடிய இந்த அற்ப உலகத்தை சம்பாதித்து, அனுபவித்து விட்டு செல்வதற்கு தானா இந்த அறிவு கொடுக்கப்பட்டது?
அல்லாஹ்வின் அடியார்களே! நோன்பு சாதாரணமான ஒன்று அல்ல, எந்த ஒரு இபாதத்தும் சாதாரணமானதல்ல. நன்மையில் எதையும் நீங்கள் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அப்படி என்றால் நன்மையிலேயே பெரிய நன்மையாகிய இந்த நோன்பை இன்று நாம் எவ்வளவு சாதாரணமாக ஆக்கிவிட்டோம்.
ஸஹரிலிருந்தே பயம் வர வேண்டும். இஃப்தாரின் போது பயம் கூட வேண்டும். இஃப்தாருக்குப் பிறகு இரவிலே இன்னும் பயம் அதிகமாக வேண்டும். அதுதான் நோன்பு.
நாம் என்ன செய்கிறோம்? ஸஹரை பற்றி சிந்திப்பதில், நோன்பு இப்தார் உணவை பற்றி சிந்திப்பதிலே நோன்பு இப்படியாக உண்டு கழிக்க கூடிய உணவுகளை சிந்திப்பதிலேயே நம்முடைய நோன்புகள் கழிந்து விடுகிறது. இன்னும் இப்படி கண் சிமிட்டும் நேரத்திலே இந்த இறுதி பத்து வந்துவிடும். இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். முதல் 10 என்பதாக கண் சிமிட்டுவதைப் போல இறுதி பத்திற்குள் செல்ல இருக்கிறோம், சென்று விடுவோம். அல்லாஹ் நமக்கு நசீபாக்கி தருவானாக!
ஆனால், இந்த உம்மத் அந்த இறுதிப்பத்தை ஷாப்பிங் செய்வதிலே பாழாக்குகிறது. அல்லாஹ்வை வணங்குவதற்காக மஸ்ஜிதுகளில் தம்மை அடக்கி கொள்வதற்காக தம்மை கட்டி போட்டுக் கொள்வதற்காக தம்மை தடுத்து வைப்பதற்காக தம்மை பூட்டி வைப்பதற்காக கொடுக்கப்பட்ட அந்த இறுதி பத்து ஊர் சுற்றுவதற்காக ஆகிவிட்டது; ஷாப்பிங்காக ஆகிவிட்டது.
அன்பானவர்களே! நமக்கெல்லாம் என்ன அருமை தெரியும்? நமக்கு நோன்புடைய என்ன அருமை தெரிந்திருக்கிறோம்? இதே ரமளான் மாதத்தில் தான் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் மதினாவில் இருந்து ஆயுதங்களையும் தளவாடங்களையும் சுமந்து கொண்டு. கால்நடையாக நோன்பு வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போருக்காக புறப்பட்டு சென்றார்கள்.
என்ன சஹர் சாப்பிட்டு இருப்பார்கள்? நம்மை போன்று பலவகையான உணவுகளா? குடித்துவிட்டு மீதம் வைக்க வேண்டிய அளவுக்கு உண்டான தண்ணீர்தான் இருந்தது. குடிப்பதற்கு தண்ணீர் கூட போதுமான அளவு அங்கே இருக்கவில்லை.
சகோதரர்களே! ஸஹாபாக்களுக்கு ஒரு மனிதர் தாகம் தீர முழுமையாக குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை மதினாவிலே. குறைந்தது அந்த குடியிருப்பு பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சென்று தான் நல்ல தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு மிடறு நீர் கொடுத்தாலும் உங்களுக்கு நோன்பு வைத்த நன்மை கிடைக்கும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : ஸல்மான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹுஸைமா, எண் : 1887. தரம்: அலீ இப்னு ஜைத் இப்னு ஜத்ஆன் என்ற அறிவிப்பாளர் விஷயத்தில் அறிஞர்களிடம் மாறுபட்ட பல கருத்துக்கள் இருப்பதால் இதில் இவரால் சிறிது பலவீனம் காணப்படுகிறது.
இன்று நமக்கு பாட்டில் பாட்டிலாக அல்லது பைப்பை திறந்தால் நம் தண்ணீரை பார்க்கிறோம், வாங்குகிறோம். நமக்கு முன்னால் இருக்கிறது. எத்தனையோ பேரை நீங்கள் பார்க்கலாம்; திருமண நிகழ்ச்சிகளிலே குடிப்பதற்கு பாட்டில் தண்ணீர் கொடுப்பார்கள். அதில் கொஞ்சத்தை குடித்துவிட்டு அப்படியே போட்டுவிட்டு வருவார்கள். நாளை மறுமையிலே அல்லாஹ்விடத்திலே பதில் சொல்ல வேண்டும். அந்த பாட்டிலில் ஒரு சொட்டு தண்ணீர் இருந்தால் கூட அதற்கு நீங்கள் மறுமையிலே அல்லாஹ்விடத்திலே நின்று பதில் சொல்லியாக வேண்டும். அந்த நிஃமத்தை ஏன் நீ வீணடித்தாய் என்று.
இன்று அந்த காசா மக்களை நினைத்துப் பாருங்கள்! முஸ்லிம்கள் இடத்திலே நைல் நதி ஓடுகிறது. இராக்கிலே ஃபுராத்தும் திஜ்லாவும் ஓடுகின்றன. அந்த மக்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முஸ்லிம் சமுதாயத்தால் முடியவில்லை. யூதர்களுக்கு முன்னால் கைகட்டி நிற்கிறார்கள். ஐநா பார்த்துக் கொள்ளும் ஐநா வழிகாட்டும் என்று சொல்கிறார்கள். அரக்கர்கள் கொடூரர்கள் குற்றவாளிகள் அவர்களிடத்திலே சட்டம் பேசுமா?
அன்பான சகோதரர்களே! நினைத்துப் பார்க்க வேண்டும்! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த நோன்புடைய அருமையை புரிந்த காரணத்தால் அவர்களும் சஹாபாக்களும் ஜிஹாதுக்கு புறப்பட்டார்கள். பயணத்தில் சென்றாலே நோன்பை விடலாம் என்று அல்லாஹ்வுடைய அனுமதி.
اَيَّامًا مَّعْدُوْدٰتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
நீங்கள் நோயாளிகளாக இருந்தால் நீங்கள் பயணத்திலே இருந்தால் வேறு நாட்களிலே நீங்கள் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான். (அல்குர்ஆன் : 2:184)
சகோதரர்களே! ரமளான் உடைய நோன்பல்லவா... நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோற்றார்கள். சஹாபாக்கள் நோற்றார்கள். பயணம் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு சஹாபியும் தன்னால் இயன்றவரை நோன்பு நோற்றுக் கொண்டே இருந்தனர். கடைசியாக ஒரு சஹாபி நோன்பு நோற்ற நிலையில் மயக்கமுற்று விழுந்து விட்டார்.
அதை பார்த்து விட்ட ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாம் மக்காவை நெருங்கி விட்டோம். குறிப்பாக நாளை நாம் எதிரிகளை சந்திக்கலாம் நாளை நோன்பு வைக்க வேண்டாம் என்று நபியே தடுக்கின்ற வரை அந்த ஸஹாபாக்கள் நோன்பு நோற்றார்கள்.
சகோதரர்களே! ஏன்? அந்த நோன்புடைய அருமையை அவர்கள் புரிந்து இருந்தார்கள். நோன்பு என்பது வெறும் சஹர் சாப்பிட்டுவிட்டு தாகத்தோடு பசியோடு சூரியன் மறையும் வரை எதிர்பார்த்து இருப்பது அல்ல. நோன்பு என்பது ஒரு உணர்வு அந்த பசியோடு அந்தத் தாகத்தோடு ஆசைகளின் கட்டுப்பாடோடு அதற்கு மேலாக நம்முடைய உள்ளத்தில் குடிகொள்ள வேண்டிய ஒரு ஈமானிய தக்வா உடைய உணர்வோடு அது ஒரு இறை நெருக்கத்தின் உணர்வு அது.
ஹதீஸ் குதுசியிலே அல்லாஹ் கூறுவதாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் பாருங்கள்; நோன்பை சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு சொல்கிறேன். எந்த இபாதத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது ஒரு சுபஹானல்லாஹ்வாக இருந்தாலும் சரி, ஒருவருக்கு நல்ல வார்த்தையை சொல்வதாக இருந்தாலும் சரி, பாதையில் இடையூறு தரக்கூடியதை அகற்றுவதாக இருந்தாலும் சரி.
சகோதரர்களே! நம்முடைய ஒவ்வொரு அமலுக்கும் சொர்க்கம் காத்துக் கொண்டிருக்கிறது. வீணடிக்க முடியுமா? நம்முடைய ஒவ்வொரு சிறிய நற்செயலுக்கும் அல்லாஹ்வின் பொருத்தம் அல்லாஹுவின் அன்பு காத்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் மன்னிப்பை வாரி வழங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். நாம் அதை அலட்சியம் செய்து விட முடியுமா? நாம் அதை கண்டும் காணாமல் சென்று விட முடியுமா? போட்டி போட வேண்டும் அல்லவா.!
அதற்கு தானே அல்லாஹ் சொல்கிறான்:
وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
நன்மையிலே போட்டி போடுங்கள் என்று. (அல்குர்ஆன் : 2:148)
உலகத்தில் அல்ல, செல்வத்தில் அல்ல, எல்லாம் தேவை. சம்பாதியுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை ஜக்காத் கொடுத்துவிட்டு நீங்கள் சேகரித்துக் கொள்ளுங்கள். உறவுகளை ஆதரித்து விட்டு நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். வழிப்போக்கருக்கும் ஏழைகளுக்கும் கேட்டு வருபவர்களுக்கும் எளியவர்களுக்கும் தர்மம் செய்துவிட்டு நீங்கள் உங்களுக்கு தேவையான ஆசைப்பட்டவைகளை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதற்காகவா நம்முடைய அறிவு? அதற்காகவா நேரம்? அதற்கு மட்டுமா? மரணிக்க மாட்டோமா? மறுமை இல்லையா? கப்ருக்கு செல்ல மாட்டோமா? அல்லது செல்லும்போது இங்கு சம்பாதித்த அனைத்தையும் அள்ளிக் கொண்டு சென்று விடுவோமா?
சகோதரர்களே! அனைத்தையும் விட்டுவிட்டு செல்வோம். ஒன்றும் நம்மோடு வராது.
اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰى مِنْ ثُلُثَىِ الَّيْلِ وَ نِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآٮِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰىۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِۙ وَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُ ۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا وَاسْتَغْفِرُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும், உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்.” அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கிறான். நீங்கள் அதற்கு (-இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். ஆக, குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அ(ல்லாஹ்வின் வேதத்)திலிருந்து (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் : 73:20)
நீங்கள் உங்களுக்காக உங்களது நரக விடுதலைக்காக உங்களது சொர்க்க வாழ்க்கைக்காக நீங்கள் உங்களது ரப்பிடத்திலே என்ன சேமித்து வைத்தீர்களோ அதைத்தான் சிறந்த நன்மையாக நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்
اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا
செல்வமும் ஆண்பிள்ளைகளும் உலக வாழ்க்கையின் அலங்காரமாகும். ஆனால், என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உம் இறைவனிடம் (உங்களுக்கு) நன்மையாலும் சிறந்தவை; இன்னும், ஆசையாலும் சிறந்தவையாகும். (அல்குர்ஆன் : 18:46)
இங்கு நாம் கட்டிய உயரமான கட்டிடங்களோ, வசதியான விசாலமான வீடுகளோ, வாங்கிய வாகனங்களோ, அணிந்து பார்த்த நகைகளோ ஆடைகளோ நமக்கு நாளை மறுமையிலே இருக்காது. அது வேறு உலகம். அது அங்கே அமல்களை கொண்டு தான் அங்கே நோன்புடைய அருமையை பார்ப்பீர்கள்.
ஒவ்வொரு அமலுக்கும் ஒரு தகுதியை அல்லாஹ் கொடுப்பான். மனிதன் யோசிப்பான்; ஆஹா இந்த அமலை நான் அதிகப்படுத்தி இருக்க வேண்டாமா? இந்த இபாதத்தை நான் அதிகப்படுத்தி இருக்க வேண்டாமா? இந்த செயலை நான் இன்னும் செய்திருக்க வேண்டாமா? இன்னும் ஒரு முறை நான் இந்த குர்ஆனை ஹத்தம் செய்திருக்க வேண்டாமா? என்னுடைய அமல்களின் தட்டு கணத்திருக்குமே என்று. மனிதன் கைசேதப்படக்கூடிய நாள் அந்த நாள். ஒரு அமலுக்காக ஏங்க கூடிய நாள். இந்த மறுமை நாளிலே நோன்புடைய தரஜாவை பாருங்கள்.
قالَ اللَّهُ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ له، إلَّا الصِّيَامَ؛ فإنَّه لي، وأَنَا أجْزِي به
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லும்போது கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரிய அல்லாஹ் சொல்கிறான்.
ஆதமுடைய மகனின் அமல்கள் எல்லாம், அவனின் இறைவனாகிய எனக்காக தான் செய்கிறான். என்றாலும் அது அவனுக்காக அதாவது மனிதன் தனக்காக செய்வதுபோல . எல்லா அமலும், எல்லா இபாதத்தும் அல்லாஹ்வுக்காக தான். அல்லாஹ் வேறுவிதமாக சொல்கிறான் அவனுக்கான எல்லாம் அமல்களும் அவனுக்காக செய்கிறான். ஆனால் நோன்பைத் தவிர.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1904.
அல்லாஹு அக்பர் அல்லாஹ் இந்த நோன்பை எவ்வளவு நேசித்திருந்தால் எல்லா இபாதத்துகளையும் நேசிக்கிறான். ஆனால் நோன்பை விசேஷமாக நேசிக்கிறான்.
ஆகவேதான் இன்னும் ஒரு ஹதீஸிலே ஒரு சஹாபி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே வந்து கேட்கிறார்கள். அபூ உமாமா அல் பாஹிலி ரலியல்லாஹ் அன்ஹு மிகப்பெரிய நபித்தோழர். யா ரசூலுல்லாஹ் எனக்கு ஒரு அறிவுரை சொல்லுங்கள். நான் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறேன்.
இவர்கள்தான் சஹாபாக்கள். எப்படி? கேட்பார்கள்.. அமல் செய்வதற்காக. செவியுறுவார்கள்... பின்பற்றுவதற்காக. தெரிந்து கொள்வார்கள்... நடைமுறைப்படுத்துவதற்காக நாம் எப்படி? எத்தனை முறை கேட்டாலும் பார்த்துக் கொள்ளலாம் இன்னும் காலம் இருக்கிறது என்று கடந்து சென்று விடுகிறோம்.
இந்த ஜுமுஆ முடித்து செல்வோமே, எத்தனை பேர் இந்த ஜும்மாவிலே நோன்பை பற்றி சொல்லப்பட்ட நல்ல செய்திகளை நினைவுப்படுத்திக் கொண்டே நாம் திரும்பச் செல்வோம். யோசித்துப் பாருங்கள்! இதை நமது குடும்பத்தார் நண்பர்கள் வரை கொண்டு போய் சேர்ப்போம் என்று யோசித்துப் பாருங்கள்!
இதுபோன்று எத்தனை ஜும்ஆக்களை எத்தனை ஆலிம்கள் இடமிருந்து நாம் கேட்டுவிட்டு சென்றிருப்போம். சகோதரர்களே! நபித்தோழர்கள் அப்படித்தான் அமலுக்காக கேள்வி கேட்பார்கள். விதண்டாவாதத்திற்காக அல்ல. கடைகளில் வீடுகளில் பரக்கத் வேண்டும் தாயத்து தகடு கொடுங்கள் என்றெல்லாம் அவர்கள் கேட்டதில்லை.
இன்று பொதுவாக ஆலிம்களை ஒருவர் தனிமையிலே சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் ஏதாவது பரக்கத்துக்கு துஆ சொல்லி கொடுங்கள், எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள் பரக்கத் வரும் எங்க வீட்டுக்கு வந்து எப்படியாவது ஆலிம்சா நீங்க சாப்பிட்டு போயிடுங்க எங்க வீட்டுக்கு பரக்கத் வந்துடும். எப்படி எல்லாம் நம்பிக்கை வளர்த்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள்!
தர்மம் செய்யுங்கள் பரக்கத் வரும் என்று அல்லாஹ்வும் ரசூலும் சொல்கிறார்கள். அதை செய்ய மாட்டார்கள். உறவுகளுக்கு அள்ளிக் கொடுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பான் என்று மார்க்கம் சொல்கிறது. அதை செய்ய மாட்டார்கள். ஏழைகளுக்கு கொடுங்கள்! எத்தீம் களுக்கு கொடுங்கள், என்று அல்லாஹ்வும் ரசூலும் சொல்லுகிறார்கள். அதை செய்ய மாட்டார்கள். எப்படியாவது ஈஸியாக பரக்கத்தை விலைக்கு வாங்கி விட வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருக்கிறார்கள்.
اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا ۙ
நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள் (என்று நினைக்கிறார்கள்). அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன் ஆவான். இன்னும், அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பித்தவர்களாக (முகஸ்துதியை விரும்பியவர்களாக) நிற்கிறார்கள்; இன்னும், குறைவாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூரமாட்டார்கள். (அல்குர்ஆன் : 4:142)
இவர்கள் அல்லாஹ்வை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள் அல்லாஹ் இவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.
அன்பானவர்களே! அபூ உமாமா கேட்டார்கள் யாரசூலுல்லாஹ் எனக்கு ஒரு கட்டளை போடுங்கள் நான் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
நோன்பை பற்றி பிடித்துக்கொள்! நோன்பை கடைப்பிடி! ஃபர்ளான நோன்பையும் நஃபிலான நோன்பையும் அதற்கு சமமான ஒரு அமல் இல்லை.
சகோதரர்களே! குறைந்த பட்சம் ஒரு மனிதன் ரமளானுடைய நோன்பை பேணுதலாக நோற்று அதற்குப் பிறகு ஷவ்வால் மாத ஆறு நோன்பை நோற்றால் அவர் அந்த ஆண்டு முழுக்க நோன்பு வைத்தது போன்று.
அது போன்று ஒருவர் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது மூன்று நோன்புகள் வைத்தால் அவர் வாழ்நாள் எல்லாம் நோன்பு வைத்தது போன்று. இது எவ்வளவு பெரிய அமல்.!
இன்று நாம் எப்படி சாதாரணமாக அதை கடத்திக் கொண்டிருக்கிறோம் பாருங்கள்! இதிலே இன்னும் பல வேதனையான செய்தி என்னவென்றால் சில பேருக்கு டைம் போக மாட்டேங்குது நோன்பு வைத்துக் கொண்டு நேரம் கழியவில்லையாம் தூங்கி விழித்து பார்க்கிறார்கள். நேரம் இன்னும் இருக்கிறது தூங்கி விழிக்கிறார்கள். நேரம் இருக்கிறது அடுத்து என்ன செய்வது ஏதாவது நோண்டுவோம். எங்கேயாவது சுற்றுவோம். எதையாவது பார்ப்போம். இப்படி கழிகிறது .
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சொன்னான்; ஆதமுடைய மகனின் அமல்கள் எல்லாம் அவனுக்கு நோன்பைத் தவிர. நோன்பு எனக்கு. நான் அந்த நோன்புக்கு கூலி தருவேன்.
இன்னொரு கூலி என்ன தெரியுமா? நோன்பு கேடயம் என்று சொன்னார்கள். மற்றும் ஒரு ஹதீஸிலே வருகிறது. எப்படி நீங்கள் போரிலே எதிரிகளிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு கேடயத்தை பயன்படுத்துகிறீர்களோ அது போன்று இந்த நோன்பு நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான கேடயம் என்று சொன்னார்கள்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த ரமளான் நோன்புக்காக உள்ள மாதம். இரவு வணக்கத்திற்காக உள்ள மாதம். நம்முடைய செல்வத்தில் ஜகாத்தை மட்டுமல்ல, தவறாக நினைத்து விடாதீர்கள் ஜக்காத் கொடுத்தால் கடுமையான தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், சகோதரர்களே நாளை மறுமையின் அமளிகள், மறுமையின் ஆபத்துகள், மறுமையின் பெரும் கஷ்டங்கள், ஏராளம் இருக்கின்றன.
فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ وَنُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
وَاِنْ نَّكَثُوْۤا اَيْمَانَهُمْ مِّنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوْا فِىْ دِيْـنِكُمْ فَقَاتِلُوْۤا اَٮِٕمَّةَ الْـكُفْرِۙ اِنَّهُمْ لَاۤ اَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُوْنَ
ஆக, அவர்கள் (தங்கள் குற்றங்களில் இருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிப்புக் கோரி) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் (அவர்கள்) மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். (தங்களுக்கு விவரிக்கப்படுவதை) அறிந்து கொள்கின்ற மக்களுக்கு நாம் வசனங்களை (இந்த வேதத்தில்) விவரித்து கூறுகிறோம்.
இன்னும், அவர்கள் தங்கள் உடன்படிக்கைக்குப் பின்னர் தங்கள் சத்தியங்களை முறித்தால்: இன்னும், உங்கள் மார்க்கத்தில் குறை கூறி குத்திப் பேசினால், அவர்கள் (இக்குற்றத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்புடைய (இத்தகைய) தலைவர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக அவர்களுக்கு சத்தியங்கள் அறவே இல்லை. (இவர்கள் தங்கள் சத்தியங்களை மதித்து நடக்க மாட்டார்கள்.) (அல்குர்ஆன் : 9: 11,12)
அல்லாஹ் சொல்கிறான்; அந்த மலைகளை எல்லாம் கடக்காமல் நீங்கள் சொர்க்கத்திற்கு சென்று விடுவீர்களா? என்ன தெரியுமா அந்த மலை? நீங்கள் ஒரு அடிமையை உரிமையிட்டு இருக்க வேண்டும். உறவினரான ஒரு ஏழைக்கு நீங்கள் வாழ்வாதாரத்தை கொடுத்திருக்க வேண்டும். பிச்சை போடுவது அல்ல ஒரு மிஸ்கீனுக்கு. வறுமையில் வாடக்கூடிய ஒரு மிஸ்ககீனை நீங்கள் வாழ வைத்திருக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் வந்துவிட்டு அந்த மறுமையின் அமளிகளை தாண்டி நீங்கள் சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?
ஆகவே, அன்பானவர்களே! ஜக்காத்தோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள்! ஜகாத்தை கணக்கிட்டு கண்டிப்பாக துல்லியமாக நீங்கள் அதைக் கொடுப்பதோடு உபரியான தான தர்மங்களையும் மறவாதீர். ஏனென்றால் இன்று உம்மத்துடைய தேவை அவ்வளவு இருக்கிறது. உங்களது உறவுகளிலே நீங்கள் தேடுங்கள்; உங்களது நெருக்கமான நண்பர்களில் நீங்கள் விசாரியுங்கள்; உங்களோடு அன்றாடம் பழக கூடியவர்கள் இடத்திலே நீங்கள் கேளுங்கள்;
உங்களுக்கு கடன் இருக்கிறதா? உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? ஸ்கூல் பீஸ் கட்டி விட்டீர்களா? வாடகை கொடுத்து விட்டீர்களா? என்று கேளுங்கள் அதற்குப் பிறகு நீங்கள் அவர்களுடைய ஒரு மாதம் இரண்டு மாதம் மூன்று மாதம் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு தேவையானதை அவருக்கு கொடுத்து அவரை நிறைவடைய செய்யுங்கள்.
சகோதரர்களே! நான் மட்டும் உயர்தரமான ஆடைகளை வாங்கி நம்மை உடுத்தி அழகு பார்ப்பதற்காக அல்ல. நாம் மட்டும் வகை வகையான உணவுகளை உண்டு இந்த ரமளானை சந்தோஷமாக கழித்தோம் என்று பெருமை பேசுவதற்காக அல்ல.
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ரமளானின் முழு சிறப்பை நாம் அடைய வேண்டும் என்றால் இந்த ரமளானுக்கு வாக்களிக்கப்பட்ட நன்மைகளை நாம் அடைய வேண்டும் என்றால் நோன்பை நாம் ஈமானோடு தக்வாவோடு ஈமானிய உணர்வுகளோடு நாம் நோற்க வேண்டும்.
இரவு வணக்கத்தை அல்லாஹ்வுடைய ஆசையோடு நாளை அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும்போது இந்த துன்யாவில் கால் வலிக்க நின்றேனே அல்லாஹ் என்னை பொருந்திக் கொள்ள வேண்டும் என்று அந்த உணர்வோடு நின்று பழக வேண்டும்.
நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும் போது கால் வலிக்க உலகத்திலே நின்றான் இவனை மன்னித்து சொர்க்கத்திற்கு அனுப்புங்கள் என்று அந்த ரப்பு பொருந்திக் கொண்டு சொல்ல வேண்டும். அந்த உணர்வோடு நிற்போமாக! தர்மங்களை கொடுக்கும்போது விசாலமான உள்ளத்தோடு கொடுங்கள் மகிழ்ச்சியோடு கொடுங்கள். உங்களிடத்திலே வந்து வாங்கக்கூடிய ஏழைகளை தேவை உள்ளவர்களை கண்ணியப்படுத்திக் கொடுங்கள்! அவமானப் படுத்தாதீர்கள்!
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ
நம்பிக்கையாளர்களே! எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், மக்களுக்கு காண்பிப்பதற்காகத் தனது செல்வத்தைத் தர்மம் செய்(து அதன் நன்மையை வீணாக்கிவிடு)கிறாரோ அவரைப் போன்று (நீங்கள் கொடுத்த) உங்கள் தர்மங்க(ளின் நன்மைக)ளை - (அவற்றை) சொல்லிக் காட்டுவதாலும் (தர்மம் பெற்றவரை) துன்புறுத்துவதாலும் - வீணாக்காதீர்கள். (செய்த தர்மத்தின் நன்மையை வீணாக்கிய) அவனின் உதாரணம், ஒரு வழுக்குப்பாறையின் உதாரணத்தைப் போன்றாகும். அதன் மீது மண் (படர்ந்து) இருந்தது. ஆக, அடை மழை அதன் மீது பெய்தது. ஆகவே, அதை(க் கழுவி) வெறும் பாறையாக விட்டுவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தர்மத்தின் நன்மையை முகஸ்துதியும், சொல்லிக்காட்டுதலும் அழித்துவிடும்.) (இத்தகைய செயலை செய்த) அவர்கள் (தர்மம்) செய்ததில் (நன்மைகள்) எதையும் பெறுவதற்கு ஆற்றல் பெற மாட்டார்கள். (மன முரண்டாக) நிராகரிக்கின்ற மக்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் : 2:264)
நீங்கள் கொடுத்த தர்மத்தை சொல்லிக் காட்டாதீர்கள் அவர்களுக்கு மன வேதனை தராதீர்கள் தர்மத்தை பாழாக்கி விடுவீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் இந்த ரமளானை அவன் பொருந்திக் கொண்ட ரமளானாக ஆக்கி அருள்வானாக!
பாதிக்கப்பட்ட நம்முடைய காஸா முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹுத்தஆலா உதவி செய்வானாக! அவர்களுடைய வாழ்க்கையை இம்மையிலும் மறுமையிலும் சிறப்பாக்கி தருவானாக! அவர்களுடைய பொறுமைக்கு சிறந்த கூலியை தருவானாக! அவர்களுடைய பாதங்களை அல்லாஹ் பலப்படுத்துவானாக! அவர்களுடைய ஈமானை அல்லாஹுத்தஆலா உறுதிப்படுத்துவானாக!
அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்யக்கூடிய யூதர்களின் பாதங்களை பலவீனப்படுத்துவானாக! குழப்பங்களை அவர்களுக்கு மத்தியிலே அதிகப்படுத்துவானாக! பரிசுத்தமான நாட்டை விட்டு இழிவடைந்தவர்களாக அல்லாஹ் அவர்களை வெளியேற்றுவானாக! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா அந்த புனிதத்தை முஸ்லிம்களுக்கு மீட்டு தருவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/