HOME      Khutba      ரமளானும் அல் குர்ஆனும்! | Tamil Bayan - 872   
 

ரமளானும் அல் குர்ஆனும்! | Tamil Bayan - 872

           

ரமளானும் அல் குர்ஆனும்! | Tamil Bayan - 872


ரமளானும் அல் குர்ஆனும்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமளானும் அல் குர்ஆனும்! 
வரிசை : 873
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 23-03-2024 | 13-09-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்தவனாகவும் அல்லாஹ்வுடைய நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய இறுதி இறை தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும்! இன்னும் அவர்களின் உறவினர்கள் குடும்பத்தார் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும்! என்று வேண்டியவனாக உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும், அருளையும் வேண்டியவனாக! இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நேர்வழியில் நம்மை உறுதிப்படுத்துவானாக! அல்லாஹ்வோடு எப்போதும் உறுதியான தொடர்புடையவர்களாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றக் கூடியவர்களாக, அல்லாஹ்வுடைய வேதத்தை பற்றி பிடித்தவர்களாக, அதனுடைய ஹலாலை ஹலாலாகவும் அதனுடைய ஹராமை ஹராமாகவும் ஏற்று நடப்புவர்களாக அல்லாஹுத்தஆலா நம்மையும் நமது சந்ததிகளையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்!
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ரமலானுடைய மாதத்தை கிடைக்கப்பெற்றோம்; ‘ ஒரு வருஷம் ஒரு மாதத்தை போன்றும் ஒரு மாதம் ஒரு வாரத்தை போன்றும் ஒரு வாரம் ஒரு நாளை போன்றும் ஒரு நாள் ஒரு மணி நேரத்தை போன்றும் ஓடிவிடும்’ இந்தக் கூற்று  ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்அறிவிப்பாக கூறிய கியாமத்துடைய அடையாளங்களில் ஒன்று. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 10560.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அந்த முன்னறிவிப்பின் படி தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரமலான் வரப்போகிறது வரப்போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.  வந்தது. இருந்தது. சென்றது 
 
சகோதரர்களே இப்படித்தான் ஒரு நாள் நமக்கு மரணம் வரப்போகிறது. எந்த மரணத்தை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமோ எந்த மரணம் நமது உறவுகளையும் நண்பர்களையும் அழைத்து செல்வதை பார்க்கிறோமோ ஒரு நாள் அந்த மரணம் நம்மையும் அழைத்து செல்லும். 
 
சகோதரர்களே அந்த மரணத்துக்கான தயாரிப்புக்குத் தான் அல்லாஹுத்தஆலா நமக்கு காலங்களை கொடுத்திருக்கிறான். அமல்களை செய்வதற்காக நம்முடைய பாவ மன்னிப்பை தேடிக் கொள்வதற்காக சில தினங்களுக்கு அல்லாஹுத்தஆலா நம்மை அழைக்கிறான் அப்படி அல்லாஹுத்தஆலா கொடுத்த முக்கியமான காலங்களில் ஒன்றுதான் இந்த ரமலான் மாதம். 
 
இது நோன்புடைய மாதம் என்றால் அமலுடைய மாதம் என்பதை புரிய வேண்டும்.  ரமலான், நோன்புமாதம் என்றால் வெறும் பசியாக இருப்பது மட்டுமல்ல பசியாக இருந்து நாம் நம்மை அமல்களில் ஈடுபடுத்துவது நாம் நம்மை இபாதத்துகளிலே நம்மை வலுக்கட்டாயமாக திணிப்பது. அதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். நம்முடைய நஃப்ஸ் ஆத்மா, நன்மைகள் எதையும் தானாக செய்யாது. அதை நாம் கழுத்தை பிடித்து கழுத்திலே ஒரு கயிரை மாட்டி சில விலங்குகளை இழுத்துச் செல்வது போன்று இழுத்துச் சென்று இதை தள்ள வேண்டும். அப்படி தள்ளி இதை பழக்கும் போது தான் இந்த நஃப்ஸ் நன்மைகளை செய்யப் பழகிக் கொள்ளும் அதற்கு பிறகு தான் நன்மை இதற்கு இலகுவாகும் இதை அதனுடைய போக்கிலே விட்டால்.
 
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ‌ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
 
“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்). (அல்குர்ஆன் 12:53)
 
وَمَنْ جَاهَدَ فَاِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِه اِنَّ اللّٰهَ لَـغَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
 
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார்; நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.  (அல்குர்ஆன் : 29 : 6 )
 
இந்த நஃப்ஸ் நமக்கு தீமையை தான் ஏவக்கூடியதாக இருக்கும் கெட்டதை தான் நமக்கு தூண்டக்கூடியதாக இருக்கும். அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்தானோ அவர்களுக்கே தவிர அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்தான்? யார் அவர்கள்? யார் இந்த நஃப்ஸை அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் பழக்க வேண்டும் என்று அதற்காக முஜாஹதா முயற்சி எடுத்தார்களோ , யார் அல்லாஹ்வுடைய பாதையிலே போர் புரிவாரோ , அவர் அதனுடைய நன்மையை அனுபவிப்பார். அது அவருக்குத்தான். அல்லாஹுத்தஆலா இந்த இடத்திலே ஜிகாத் என்று சொல்கிறான். நமது நஃப்ஸை நன்மையில் பழக்குவது ஜிஹாத். அது ஒரு கடினமான போர் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொன்னார்கள்: ஒரு உண்மையான போராளி (முஜாஹித்) யார்..? யார் தனது நஃப்ஸ்  இடத்திலே ( உள்ளத்துடன் ) போராடுகிறானோ தனது நஃப்ஸிடத்திலே சண்டை செய்கிறானோ அவன் உண்மையான போராளி
 
இந்த நஃப்ஸ் சோம்பேறித்தனத்தின் பக்கம் அழைக்கிறது. இந்த நஃப்ஸ் விளையாட்டின் பக்கம் அழைக்கிறது. இந்த நஃப்ஸ் நேரங்களை வீணாக்குவதின் பக்கம் அழைக்கிறது. இந்த நஃப்ஸ் சுதந்திரமாக இருப்போம். எதை விரும்புகிறோமோ அதை  செய்வோம்.  நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப நடப்போம் என்று இந்த நஃப்ஸ் நம்மை அழைக்கிறது. தூண்டுகிறது .அப்போது அந்த நஃப்ஸ் இடத்திலே நாம் போராட வேண்டும். அதை வலுக்கட்டயமாக நன்மையின் பக்கம் கொண்டு வர வேண்டும். அதை உட்கார வைக்க வேண்டும்.
 
இதைத்தான் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
المُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ
 
முஜாஹித் போராளி , யார் முழுமையான முஜாஹித் யார் அல்லாஹ்வுடைய பாதையிலே போருக்கு செல்லக்கூடிய முஜாஹிதாக இருந்தாலும் அவர்களிடம் சிறந்த முஜாஹிது யார் என்றால் தனது நஃப்ஸிடத்திலே போராடிக் கொண்டிருப்பவர்தான் முழுமையான உண்மை முஜாஹித் போராளி. 
 
அறிவிப்பாளர் : ஃபழாலா இப்னு உபைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1621.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு மகத்துவ மிக்கவர்கள் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா உபதேசம் செய்யும்போது எப்படி சொல்கிறான் 
 
وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ‌ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَواهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا‏
 
(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கு நீர் கட்டுப்படாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது. (அல்குர்ஆன் : 18:28)
 
கருத்து : நபியே உங்களது நஃப்ஸை அடக்குங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். எப்படி சொல்கிறான் நபியே உங்களது நஃப்ஸை அடக்குங்கள் அதைப் பொறுமைக்கு கொண்டு வாருங்கள். அதன் மீது நீங்கள் கண்ட்ரோல் உங்களுடைய ஆதிக்கம் இருக்கட்டும். 
 
அல்லாஹுத்தஆலா நபிக்கு நஃப்ஸை அடக்க கூடிய அந்த வழிமுறையை சொல்லிக் கொடுத்து இந்த நஃப்ஸை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் நீங்கள் யாரோடு இருக்க வேண்டும். இந்த நஃப்ஸ் உங்களைக் கெடுத்து விடும். எப்படி கெடுக்கும்  எப்போது கெடுக்கும் என்றால் நீங்கள் யாரோடு சேரக்கூடாதோ, அவரோடு சேர்ந்து விட்டால் கெடுக்கும். அதையும் அல்லாஹுத்தஆலா நபிக்கு சொல்லிக் காட்டுகிறான். 
 
நபியே உங்களை நீங்கள் அடக்கி வையுங்கள்! யாரோடு? யார் காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ மஸ்ஜிதிலே தொழுது கொண்டிருக்கிறார்களோ அவர்களோடு உங்களை அடக்கி வையுங்கள். அவர்களை விட்டு உங்களுடைய கண் பார்வைகள் திரும்பிவிட வேண்டாம். நீங்கள் அவர்கள் அல்லாத யாரையும் பார்த்து விடாதீர்கள். அவர்கள் தோற்றத்தால் எளியவர்களாக இருக்கலாம் அவர்கள் வசதியால் வறுமையில் உள்ளவர்களாக இருக்கலாம். அதனால் நீங்கள் திரும்பி விடாதீர்கள். உங்களது கண்கள் திரும்பி விட வேண்டாம். உலக அலங்காரங்களை பார்த்து உலக செல்வங்களை பார்த்து உங்களது பார்வை திரும்பிவிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அடுத்து  அல்லாஹ் சொல்கிறான்: 
 
நபியே ஒருபோதும் கட்டுப்பட்டு விடாதீர் கீழ்படிந்து விடாதீர்! யாருக்கு? யாருடைய உள்ளத்தில் நம்முடைய நினைவை விட்டு மறதியை நாம் ஏற்படுத்தி விட்டோமோ  யார் தன்னுடைய மன இச்சையை பின்பற்றுகிறாரோ வரம்பு மீறி செல்கிறாரோ அவர்களுக்கு ஒரு போதும் நீங்கள் கீழ்ப்படிந்து கட்டுப்பட்டு நடந்து விடாதீர். அவர்களோடு நீங்கள் சேர்ந்து விடாதீர் என்று அல்லாஹுத்தஆலா எச்சரிக்கை செய்கிறான். (அல்குர்ஆன் : 18:28)
 
இது இந்த உலகத்தினுடைய போராட்டம்! நம்முடைய மௌத் வரை நாம் இந்த போராட்டத்தில் தொடர்ந்து கொண்டே இருப்போம். ஒரு நாள் ஒரு நிமிடம் நாம் அலட்சியம் செய்தாலும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இந்த சைத்தானும் இந்த கெட்ட நட்புகளும் நம்மை வழிகேட்டில் படு பாதாளத்திலே தள்ளி விடுவார்கள்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நாம்  பக்குவப்பட வேண்டும் என்பதற்காக. இந்த நோன்பின் மூலமாக நம்முடைய உள்ளங்களை அல்லாஹுத்தஆலா பக்குவப்படுத்த விரும்புகிறான். நம்முடைய ஈமானிய உணர்வுகளை அல்லாஹுத்தஆலா மேம்படுத்த விரும்புகிறான். நமக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் இருக்கக்கூடிய உறவுகளை அல்லாஹுத்தஆலா உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறான். 
 
அதற்காக தான் இந்தக் காலத்தை கொடுத்து இதிலே விசேஷமான அமல்களை கொடுத்தான்.  ஒன்று ஈமானிய உணர்வோடு அந்த தக்வாவை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அல்லாஹுக்காக நான் எதையும் செய்வதற்கு தயார் எதையும் விடுவதற்கு தயார் என்று அந்த உணர்வோடு இந்த பசியை மேற்கொள்வது தாகத்தை தாங்கிக் கொள்வது ஆசையை அடக்கிக் கொள்வது.
 
அல்லாஹ்வுக்காக பசித்திருந்து தாகித்து இருந்து ஆசையை அடக்கி காலையிலிருந்து மாலை வரை இந்த கட்டுப்பாட்டோடு இருப்பது. அல்லாஹ்வுக்காக எனது ரப்புக்காக அவனது பொருத்தத்திற்கு என்னுடைய ரப்புடைய விருப்பத்திற்காக என்று மனதிலே சொல்லிக் கொண்டே இருப்பது. அந்த எண்ணத்தைக் கொண்டு வந்து கொண்டே இருப்பது. 
 
அன்பான சகோதரர்களே! இந்த பசியோடு மட்டும் நின்று விடுவதில்லை. அதற்கு மேல் அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நமக்கு சில வணக்க வழிபாடுகளை கொடுத்திருக்கிறான். இந்த நோன்பு இதனுடைய அந்த பிரகாசத்தை அடைய வேண்டும் என்றால் இந்த நோன்புடைய அந்த வெளிச்சம் அந்த பிரகாசம் இந்த நோன்பினுடைய அந்த தக்வாவின் உணர்வுகள் இந்த நோன்பு நம்மை எப்படி பக்குவப்படுத்த வேண்டுமோ அந்த பக்குவம் வர வேண்டும் என்றால் அதற்கு இந்த நோன்போடு இன்னும் சில அமல்கள் சேர வேண்டும். 
 
அல்லாஹுத்தஆலா அப்படித்தான் நமக்கு வைத்திருக்கிறான். இந்த மார்க்கம் இருக்கிறதே! சுப்ஹானல்லாஹ் ! இது ஒரு வித்தியாசமான மார்க்கம் ! இது ஒரு ஆச்சரியமான மார்க்கம்!
 
இதனுடைய சட்டங்கள் அவ்வளவு அற்புதமானது ஒவ்வொரு சட்டமும் இன்னொரு சட்டத்தோடு தொடர்புடையதாக இருக்கும். ஒரு இபாதத்துக்குள் நூற்றுக்கணக்கான இபாதத்துகள் இருக்கும். ஒரு இபாதத்துக்குள் நூற்றுக்கணக்கான இபாதத்துகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததாக சேர்ந்ததாக கூட்டாக  இருக்கும். தொழுகை என்று எடுத்துக் கொண்டால் அது ஒரு இபாதத் அல்ல ! பல இபாதத்துகள் ஒன்று  சேர்ந்தது, தொழுகையாகிய ஒரு இபாதத் !
 
தொழுகையிலே குர்ஆன் ஓதுவது இருக்கிறது. அது ஒரு இபாதத்! தொழுகையிலே திக்ரு செய்வது இருக்கிறது, அது ஒரு இபாதத்! சுஜூது செய்வது இருக்கிறது, அது ஒரு இபாதத் ! துஆ  கேட்பது இருக்கிறது, அது ஒரு இபாதத்! துஆ வே ஒரு பெரிய வணக்கம்! 
 
இப்படியாக பல வணக்கங்களை சேர்த்து தான் ஒரு வணக்கமாக நமக்கு மார்க்கத்திலே சொல்லப்படும். இந்த பல வணக்கங்களும் சேரும்போது தான் அங்கே ஒரு வணக்கம் முழுமை அடைகிறது. ஒரு மனிதனுடைய தொழுகை எதைக் கொண்டு முழுமை அடைகிறது அவனுடைய தக்பீரிலிருந்து அவனுடைய நிலையிலிருந்து குர்ஆன் ஓதுவதில் இருந்து ருகூவு  சுஜூத் இப்படி அனைத்தையும் சரிவர செய்து நிறைவாக செய்து உள்ள உணர்வோடு செய்து அந்த ஒரு நிலையை எட்டும் போது தான் அந்த தொழுகை முழுமை அடைகிறது. 
 
ஒரு மனிதன் நிலையிலே நேராக சரியாக நின்றார்  ஓதுவதை சரியாக செய்தார்  ருகூவு  சுஜூதை சரியாக செய்யவில்லை. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீ தொழுதது தொழுகையே இல்லை திருப்பித் தொழு என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார்கள். மறுபடியும்  நீ தொழு நீ தொழுதது தொழுகையே இல்லை என்று திருப்பி விட்டார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6251,6667.
 
அன்பான சகோதரர்களே! இந்த நோன்பு என்பதும் அப்படித்தான். இந்த நோன்பு வெறும் பசித்திருப்பதால் மட்டும் நிறைவேறி விடும் என்று நினைத்து விடாதீர்கள்! ஆஹா நான் ஸஹர் செய்து விட்டேன், நான் பட்டினி கிடக்கிறேன், நான் தாகத்தோடு இருக்கிறேன், நான் இப்தார் செய்து விட்டேன், என்னுடைய நோன்பு உயர்ந்து விட்டது. அப்படித்தான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்! ஏதோ நோன்பு என்ற ஒரு வணக்கத்தின் நன்மையை அல்லாஹ் கண்டிப்பாக வீணாக்க மாட்டான். ஆனால் அது முழுமை அடைந்ததாக நிறைவடைந்ததாக அதனுடைய குறிக்கோளை அடைந்ததாக ஆகுமா என்றால் எதுவரை அந்த நோன்பிலே இன்னும் பல இபாதத்துகள் சேராதோ அதுவரை அந்த நோன்பு நிறைவடையாது. அதனுடைய குறிக்கோளை அடையாது.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அத்தகைய அந்த வழிபாடுகளில் ஒன்று தான் நோன்பு இருக்கும்பொழுது அல்லாஹ்வுடைய குர்ஆனோடு நாம் நம்முடைய தொடர்பை அதிகப்படுத்துவது. 
 
வேலைகள் இருக்கலாம், நீங்கள் பணிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தங்கள் இருக்கலாம்; உங்களுக்கு வியாபாரங்கள் இருக்கலாம்; தொழில்கள் இருக்கலாம்; இருந்தும் அல்லாஹ்வுடைய இந்த வேதத்தோடு இந்த ரமலானுடைய மாதத்தில் நம்முடைய தொடர்பை நாம் அதிகப்படுத்துவது; உறுதிப்படுத்துவது இருக்கிறது . 
 
நமக்கு ஒரு நன்மை என்றால், நமக்கு ஒரு அதிகப்படியான லாபம் கிடைக்கிறது என்றால், உலகத்திலே நம்மில் யாரும் அதற்காக நான் சிரமப்பட மாட்டேன் என்று சொல்ல மாட்டோம். அதற்காக என்னால் சிரமம் எடுத்துக் கொள்ள முடியாது; நான் மெனக்கெட மாட்டேன் என்று நம்மில் யாரும் சொல்ல மாட்டோம். 
 
உலகத்திலே கிடைக்கக்கூடிய லாபத்தில் அதிகப்படியாக ஒரு லாபம் கிடைக்கிறது. அதற்கு இந்த சிரமம் இருக்க வேண்டும் என்று இருந்தால் மனப்பூர்வமாக மகிழ்ச்சியாக நாம் எல்லோரும் எடுக்க தயாராக இருக்கிறோமே. 
 
சகோதரர்களே! இந்த ரமலான் மாதத்தில் நாம் படக்கூடிய இந்த அதிகப்படியான சிரமத்தால் நம்முடைய மறுமை செழிப்பாகிறது; நம்முடைய உள்ளம் ஒளிமயமாகிறது. அல்லாஹ்வோடு நம்முடைய தொடர்பு உறுதியாகிறது. குர்ஆனோடு நம்முடைய உள்ளம் பசுமை ஆகிறது என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய பாக்கியம் யோசித்துப் பாருங்கள்! 
 
இந்த ரமலான் மாதம் பாக்கியம் பெற்றதே இந்த குர்ஆனைக் கொண்டுதான் என்றால் இந்த குர்ஆன் இந்த நோன்புக்கு எவ்வளவு முக்கியமானது. (திலாவத்துல் குர்ஆன்) குர்ஆனை ஓதுவது நம்முடைய நோன்பை அதனுடைய எல்லைக்கு நம்முடைய நோன்பை அதனுடைய குறிக்கோளுக்கு கொண்டு போகக் கூடியது.
 
ஆகவேதான், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களோடு ரமலானிலே குர்ஆனை பரிமாறிக் கொள்வார்கள். 
 
பொதுவாக அவர்கள் தொழுகின்ற இரவு தொழுகையில்  அதிகமாக குர்ஆனை ஓதி தொழுவார்கள். ரமலானுடைய மாதத்திலே இன்னும் கொஞ்சம் அதிகமாக குர்ஆனை ஓதி இரவு தொழுகையிலே ஈடுபடுவார்கள். (2)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3220.
 
தங்களுடைய தோழர்களுக்கு சொன்னார்கள்:
 
مَن صَامَ رَمَضَانَ، إيمَانًا واحْتِسَابًا، غُفِرَ له ما تَقَدَّمَ مِن ذَنْبِهِ
 
ரமலானுடைய நோன்பை ஈமானோடு இஹ்திசாபோடு நன்மையை ஆதரவு வைத்து யார் வைப்பார்களோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 38.
 
இந்த குர்ஆன், ஓதியவர்களுக்கு சிபாரிசு செய்யக் கூடியதாக வரும். சுப்ஹானல்லாஹ் குர்ஆனுடைய சிபாரிசு இருக்கிறதே அல்லாஹ்விடத்திலே உரிமையாக பேசும். 
 
மற்றும் ஒரு ஹதீஸிலே வருகிறது. நோன்பு அல்லாஹ்விடத்திலே சொல்லும்; யா ரப் நான் இவனை இவனுடைய ஆசையிலிருந்து உணவில் இருந்து தடுத்தேன் எனவே என்னுடைய சிபாரிசை ஏற்றுக்கொள் என்று நோன்பு அல்லாஹுவிடத்திலே போராடும். குர்ஆன் சொல்லும்; யா அல்லாஹ் இவனை தூக்கத்தில் இருந்து நான் தடுத்தேன் உன்னுடைய கலாமான என்னை இவனுக்கு ஓத வைத்தேன்; ஆகவே, என்னுடைய சிபாரிசை நீ ஏற்றுக் கொள் என்பதாக. (3)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 6626.
 
கண்ணியத்திற்குரியவர்களே! நம்முடைய மறுமையில் சிபாரிசுகளிலே மிகச் சிறந்த சிபாரிசாக  அல்லாஹ்வுடைய குர்ஆன் இருக்கிறது. 
 
إنَّ للَّهِ أَهْلينَ منَ النَّاسِ قالوا: يا رسولَ اللَّهِ ، من هُم ؟ قالَ: هم أَهْلُ القرآنِ ، أَهْلُ اللَّهِ وخاصَّتُهُ
 
அல்லாஹ்வுக்கு என்றே விசேஷமான மக்கள் இருக்கிறார்கள். என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். அவர்கள் யார்? என்று மக்கள் கேட்டார்கள். சொன்னார்கள்; அவர்கள்தான் குர்ஆனை உடையவர்கள். தொடர்ந்து அதிகமாக அதை ஓதக்கூடியவர்கள்; அதை சிந்திக்க கூடியவர்கள்; அதை படித்துக் கொடுக்கக்கூடியவர்கள்; அதை பரப்பக் கூடியவர்கள்; அதனுடைய சட்டங்களை எடுத்து செயல்படுத்தக்கூடியவர்கள். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 179.
 
இவர்கள் எல்லோரும் அஹ்லுல் குர்ஆன் என்ற இந்த வரையறையிலே வருவார்கள். மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
ما اجتمَعَ قومٌ في بيتٍ من بيوتِ اللَّهِ يتلونَ كتابَ اللَّهِ ، ويتدارسونَهُ فيما بينَهم إلَّا نزلَت عليهِم السَّكينةُ ، وغشِيَتهُمُ الرَّحمةُ ، وحفَّتهُمُ الملائكَةُ ، وذكرَهُمُ اللَّهُ فيمَن عندَهُ
 
அல்லாஹ்வின் வீடுகளில் ஒரு வீட்டில் மூஃமின்கள் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய குர்ஆனை ஓதினால் அதைப் படித்தால் அவர்கள் மீது சகீனா -அல்லாஹ்வுடைய அமைதி இறங்குகிறது; அல்லாஹ்வுடைய ரஹ்மத் அவர்களை சூழ்ந்து கொள்கிறது; மலக்குகள் அவர்களை சூழ்ந்து கொள்கிறார்கள்; அவர்களைப் பற்றி அல்லாஹுத்தஆலா பெருமையாக தனக்கு முன்னால் இருக்கக்கூடிய மலக்குகள் இடத்திலே பேசுகிறான். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2699.
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
مَثَلُ الذي يَقْرَأُ القُرْآنَ وهو حافِظٌ له، مع السَّفَرَةِ الكِرامِ البَرَرَةِ، ومَثَلُ الذي يَقْرَأُ وهو يَتَعاهَدُهُ، وهو عليه شَدِيدٌ؛ فَلَهُ أجْرانِ
 
யார் குர்ஆனை திருத்தமாக திறமையாக சரியாக ஓதுவாரோ அவர் மலக்குகளிலே உயர்ந்த கண்ணியமிக்க எழுத்தாளர்களாகிய அந்த மலக்குகளோடு இருப்பார். யார் குர்ஆனை ஓதும் போது சிரமப்பட்டு திக்கி திக்கி ஓதுகிறாரோ அது அவருக்கு சிரமமாக இருந்தும் அதை ஓதுவதை விடாமல் தொடர்ந்து ஓதுகிறாரோ அவருக்கு இரண்டு கூலி கொடுக்கப்படும். ஒன்று, குர்ஆனை ஓதியதற்கு. இரண்டு அவருடைய சிரமத்திற்கு.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4937.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆன் மூலமாக ஒரு கூட்டத்திற்கு கண்ணியத்தை கொடுப்பான். இந்த குர்ஆன் மூலமாக ஒரு கூட்டத்தை இழிவு படுத்தி விடுவான். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2699.
 
யார் இந்த குர்ஆனை ஓதுவார்களோ, மறக்க மாட்டார்களோ, இதை வாழ்க்கையிலே பின்பற்றுவார்களோ, அவர்களுக்கு இந்த குர்ஆன் மூலமாக கண்டிப்பாக கண்ணியம் கிடைக்கும். யார் இந்த குர்ஆனை புறக்கணித்தார்களோ, மறந்தார்களோ, இதை விட்டு விலகினார்களோ, இதை ஓதவில்லையோ, இதைக் கொண்டு படிப்பினை பெறவில்லையோ அவர்களுக்கு கண்டிப்பாக இம்மையிலும் இழிவு, மறுமையிலும் இழிவு. 
 
மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
من قامَ بعشرِ آياتٍ لم يُكتب منَ الغافلينَ ومن قامَ بمائةِ آيةٍ كتبَ منَ القانتينَ ومن قامَ بألفِ آيةٍ كتبَ منَ المقنطرينَ
 
யார் இரவில் பத்து ஆயத்துகளை ஓதி தொழுவாரோ அவர் மறதியாளர்களில் எழுதப்பட மாட்டார். யார் நூறு ஆயத்துகளை ஓதி தொழுவாரோ அவர் இறையச்சமுள்ளவர்களில் எழுதப்படுவார். யார் ஆயிரம் ஆயத்துகளை ஓதி தொழுவாரோ அவர் அதிகமான நன்மைகளை அடைந்தவர்களில் எழுதப்படுவார்.
 
அப்துல்லாஹ் இப்னு அம்ர், அபூ தாவூத்-1398.
 
நீங்கள் குர்ஆன் பின்னால் இருக்கக்கூடிய 29 ஆவது, அதுபோன்று முப்பதாவது ஜுஸ்உ விலே எடுத்துக் கொண்டால் சில சூராக்களை அதாவது இரண்டு மூன்று சூராக்களை ஓதினாலே 100 வசனம் வந்துவிடும். நீங்கள் குர்ஆன் ஆரம்பத்திலே எடுத்துக் கொண்டாலும் ஒரு ஜுஸ்உ வை ஓதினால் நீங்கள் நூறு வசனங்களை ஓதிவிடலாம். 
 
நீங்கள் ஓதுவதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் ஒரு ஜுஸ்உ வை அழகான முறையிலே அமைதியாக ஓதி முடிப்பதற்கு முப்பது நிமிடங்களில் இருந்து 40 நிமிடங்கள் போதுமானது. 
 
சகோதரர்களே! இப்படி நாம் முயற்சி செய்தால் ஒரு நாளைக்கு பல ஜுஸ்உகளை ஓதலாம். சமீபத்திலே பாலஸ்தீனத்திலே காசாவிலே மரியம் என்ற குழந்தை ஒரு நாளைக்கு நான் ஆறு ஜுஸ்உ வை சிந்தித்து ஓதுகிறேன் என்று சொல்கிறது. 
 
எங்களுக்கு இப்போது ஸ்கூல் இல்லை. எங்களுக்கு வேறு வேலை இல்லை. நான் என்னுடைய இந்த ஓய்வை அல்லாஹ்வுடைய வேதத்தை மனப்பாடம் செய்வதற்காகவும், சிந்திப்பதற்காகவும், புரிவதற்காகவும் பயன்படுத்திக் கொண்டேன். குர்ஆன் ஓத ஓத எனக்கு ஈமான் அதிகரிக்கிறது. எங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வை இந்த குர்ஆனில் பார்க்கிறேன் என்னுடைய நேரங்களை இந்த குர்ஆனோடு நான் செலவு செய்கிறேன். அல்லாஹ் எனக்கு நிம்மதியை கொடுக்கிறான் என்று ஒரு பத்து பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க மர்யம் என்ற குழந்தை சொல்கிறது.
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! குர்ஆனுக்கும்  நம்முடைய சமுதாயத்திற்கும் இடையே இன்று ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஒரு தூரத்தை ஒரு இடைவெளியை நாம் பார்க்கிறோம். 
 
இந்த ரமலானுடைய மாதம் இந்த நோன்புடைய நேரம் மீண்டும் குர்ஆனோடு நம்முடைய தொடர்பை நம்முடைய உறவை புதுப்பித்துக் கொள்வதற்கு உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அந்த உறவை மீண்டும் சேர்ப்பதற்கான நேரம் என்பதை மறந்து விடாதீர்கள். 
 
இதன் மூலமாக நம்முடைய நோன்புடைய உண்மையான அந்த நோக்கத்தை இலக்கை நாம் அடைய முடியும். அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம் அனைவரையும் அல்லாஹ்வுடைய குர்ஆனுடைய ஹக்கை சரியான முறையில் நிறைவேற்றக் கூடியவர்களாக, அதை உணர்ந்து ஓதக் கூடியவர்களாக, அதை புரியக்கூடியவர்களாக, சிந்திக்க கூடியவர்களாக அதன்படி செயல்படக் கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
وروى أحمد (10560) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( لا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ ، فَتَكُونَ السَّنَةُ كَالشَّهْرِ ، وَيَكُونَ الشَّهْرُ كَالْجُمُعَةِ ، وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ ، وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَةِ ، وَتَكُونَ السَّاعَةُ كَاحْتِرَاقِ السَّعَفَةِ ) والسعفة هي الْخُوصَةُ .
 
குறிப்பு 2)
 
كانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أجْوَدَ النَّاسِ، وكانَ أجوَدُ ما يَكونُ في رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وكانَ جِبْرِيلُ يَلْقَاهُ في كُلِّ لَيْلَةٍ مِن رَمَضَانَ، فيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ أجْوَدُ بالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ. وَعَنْ عبدِ اللَّهِ، حَدَّثَنَا مَعْمَرٌ بهذا الإسْنَادِ نَحْوَهُ، وَرَوَى أبو هُرَيْرَةَ، وفَاطِمَةُ رَضِيَ اللَّهُ عنْهمَا، عَنِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أنَّ جِبْرِيلَ كانَ يُعَارِضُهُ القُرْآنَ. الراوي : عبدالله بن عباس | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
 
குறிப்பு 3)
 
مسند أحمد مخرجا 
 
6626 حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ حُيَيِّ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ "، قَالَ: «فَيُشَفَّعَانِ»
 
 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/