HOME      Khutba      அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் அமர்வு 2-5 | Tamil Bayan - 603   
 

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் அமர்வு 2-5 | Tamil Bayan - 603

           

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் அமர்வு 2-5 | Tamil Bayan - 603


அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் (அமர்வு 2-5)
 
வரிசை : 630
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 22-11-2019 | 25-03-1441
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா உடைய அச்சத்தை அல்லாஹ்வின் பயத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழவும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியவனாக வாழவும் அல்லாஹு தஆலா உங்களுக்கும் எனக்கும் அருள் புரிவானாக!
 
அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக. அவன் பக்கம் திரும்பிய நல்லடியார்களில் ஒருவராக நம்மை ஆக்குவானாக. அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி அதன் மூலம் பயன்பெற்ற அறிவுடையோர்களில் நல்லவர்களில் நம்மையும் ஒருவராக ஆக்குவானாக!
 
அல்லாஹ்வுடைய வேதம் கூறுகின்ற பாடங்களை கற்றறிந்து ஆழ்ந்து சிந்தித்து, அதன் மூலமாக நல்ல படிப்பினைகளை பெற்று, அந்த வேதத்தின் பணியில் வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் தஆலா எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதமான அல்குர்ஆனில் எந்தெந்த வரலாறுகளை நமக்கு எடுத்துக் கூறுகிறானோ அந்த அந்த ஒவ்வொரு வரலாற்றிலும்  நமக்கு பல பாடங்களும் படிப்பினைகளும் வைத்திருக்கின்றான்.
 
குறிப்பாக நபிமார்களைப் பற்றி அல்லாஹு தஆலா விளக்கமாக எடுத்துச் சொல்லக்கூடிய சம்பவங்கள் நிகழ்வுகள் வரலாறுகள், அது தொடர்பான ஒவ்வொரு வசனமும் நமக்கு மிக விசாலமான விரிவான ஆழமான படிப்பினை உடையவை ஆகும்.
 
நாம் சிந்திக்க வேண்டிய புத்தகங்கள், சிந்திக்க வேண்டிய நூலில் மிக சிறந்தது, அல்லாஹ்வுடைய வேதமான அல்குர்ஆன்தான். 
 
ஒவ்வொரு குத்பாவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வார்கள்: பேசப்பட்ட அந்தப் பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வுடைய பேச்சாகும். வேதங்களில் மிக அழகானது அல்லாஹ்வுடைய வேதமாகும் என்று கூறுவார்கள்.
 
நாம் சிந்திப்பதற்கும் படித்து உணர்வதற்கும் மிகமிக தகுதியான ஒன்று, அல்லாஹ்வுடைய வேதம் தான். இதை சிந்திப்பவர்களுக்கு அறிவின் வாசலை அல்லாஹ் திறந்து விடுகிறான். இதற்காக நேரம் கொடுக்கக் கூடியவர்களுக்கு வாழ்க்கையில் பரக்கத் செய்கின்றான்.
 
எப்படி ஹதீஸ் கலையில் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி பேசுகிறோமோ அதேபோன்று தப்ஸீர் கலையில் இமாம் தபரி இல்லை என்றால் இன்று நமக்கு ஹதீஸ்களிலிருந்து சஹாபாக்கள் உடைய கூற்றிலிருந்து விளக்கங்களை பெற்றிருக்க முடியாது.
 
அந்த அளவுக்கு தப்ஸீருக்காக குர்ஆன் விரிவுரைக்காக பல தூர தூர பயணங்களை மேற்கொண்டு ஸஹாபாக்களும் தாபியீன்களும் குர்ஆனுக்கு என்னென்ன விளக்கங்களை கூறினார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்தார்கள்.
 
இமாம் தபரி சொல்கிறார்கள்: நான் ஒரு சாதாரண மனிதனாக இருந்தேன். எப்போது நான் அல்லாஹ் உடைய வேதத்தை கற்றுக்கொண்டேனோ, அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டேனோ, அதனை சிந்திப்பதற்கும் அதனை விளங்குவதற்கான வழியை தேடினேனோ அப்போது அல்லாஹ் எனக்கு கண்ணியத்தை கொடுத்தான் என்று கூறினார்கள்.
 
நாம் அனைவரும் தினமும் குர்ஆன் ஓதுகிறோம். ஆனால், அதனை சிந்திப்பவர்கள் குறைவுதான், நாம் நபிமார்களுடைய சம்பவங்களை ஓதிவிட்டு அதனை கடந்து செல்கிறோம்.
 
ஆனால், அது நமக்கு என்ன படிப்பினை தருகிறது? இந்த நபியின் வரலாரோடு நமக்கு என்ன தொடர்பு இருக்கிறது? இந்த நபியின் வரலாற்றில் எனக்கு என்ன மாற்றங்களை உண்டு பண்ணவேண்டும்? என்று நம்மில் மிகக் குறைவானவர்கள் தான் சிந்திக்கின்றோம்.
 
முதலாவதாக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். குர்ஆனில் அதிகமாக சொல்லப்பட்ட வரலாறுகளில் ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களது வரலாறும் ஒன்று. 
 
எப்படி அவர்கள் படைக்கப்பட்டார்கள்? படைக்கப்பட்ட போது நடந்த நிகழ்வுகள் என்ன? இதைப் பற்றி அல்லாஹு தஆலா ஒன்றுக்கு மேற்பட்ட பல வசனத்தில் விரிவாக விளக்கமாக சொல்லிக் கொண்டே இருக்கின்றான். 
 
ஒவ்வொரு சூராவிலும் அல்லாஹ் கூறியிருப்பதைப் படித்துப் பார்க்கும்போது அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வித்தியாசமான பல படிப்பினைகளை பாடங்களை உள்ளடக்கிய வசனங்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
 
அதில் குறிப்பாக சூரா தாஹா, சூரா அஃராப், சூரா பகரா, சூரா ஹீத், சூரா ஹிஜ்ர், சூரா கஹ்ஃப், சூரா பனி இஸ்ராயில் ஆகிய இந்த வசனங்களில் எல்லாம் அல்லாஹு தஆலா விளக்கமாகவும் விரிவாகவும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் உடைய வரலாறுகளை சொல்லி இருக்கின்றான்.
 
அல்குர்ஆன், நபிமார்கள் வரலாற்று சம்பவங்களை மட்டும் எடுத்துக் கூறுவது மட்டும் அதனுடைய நோக்கமல்ல. அந்த வரலாற்றை கொண்டு படிப்பினை பெறுவதற்காக முஃமின்களை உயர்த்துவதற்காக அவர்களை பக்குவ படுத்துவதற்காகத்தான் அல்லாஹ் இந்த வரலாறுகளை கூறுகின்றான். மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக வரலாறுகளை கூறுகின்றான்.
 
அல்லாஹ், ஆதம் அலைஹிஸ்ஸலாம் உடைய வரலாற்றை சூரா பகராவில் ஆரம்பிக்கும்போதே கண்ணியமாக ஆரம்பிக்கின்றான்.
 
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
 
(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி “நான் பூமியில் (என்) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றன்'' எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் “(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன் பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன் பரிசுத்தத் தன்மையைக்கூறி உன் புகழைக்கொண்டு உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவன் “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்'' எனக் கூறிவிட்டான். (அல்குர்ஆன் 2: 30)
 
வசனத்தின் கருத்து : ஆதம் அலைஹி வஸல்லம் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பாக மனிதர்கள் பூமியில் வருவதற்கு முன்பாக அங்கே வாழ்ந்தவர்கள் ஜின்கள். அவர்கள் தங்களுக்கு மத்தியில் குழப்பங்களை செய்துகொண்டிருந்தார்கள்; அநியாயம் செய்து கொண்டிருந்தார்கள்; இரத்தங்களை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். 
 
அல்லாஹ் எப்போது ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களை படைக்க நாடினானோ அப்போது மலக்குமார்களை அனுப்பி பூமியை சுத்தம் செய்தான். இங்கு வசித்துக் கொண்டிருந்த ஜின்களை காடுகளுக்கும் மலைகளுக்கும் அல்லாஹ் விரட்டி அடிக்க மலக்குகளுக்கு கட்டளையிட்டான்.
 
எனவே, இந்த பூமியில் ஏற்கனவே வசித்துக் கொண்டிருந்த இந்த ஜின் இனத்தைச் சேர்ந்தவர்களை போன்றுதான் இந்த மனித இனமும் குழப்பம் செய்வார்களோ? இவர்கள் அல்லாஹ்வுக்கு கீழ்படியாமல் மாறு செய்வார்களோ? என்ற அடிப்படையில்தான் மலக்குமார்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு கேட்டார்கள்.
 
அப்போது அல்லாஹ் மலக்குகளிடம் கூறினான்: நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்.
 
அதாவது மலக்குகளுக்கு தெரியாது; இந்த படைப்பிலிருந்து அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான நல்லவர்கள் நபிமார்கள் ஷஹீதுகள் ஸாலிஹீன்கள் இருப்பார்கள் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. 
 
அதன் பிறகு, அல்லாஹ் ஒரு மலக்குக்கு கட்டளையிடுகிறான். சில அறிவிப்பில் அது ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் என்று வருகிறது. 
 
பூமியின் மேற்பரப்பிற்கு சென்று அங்கிருந்து மண்ணை எடுத்து வரும்படி கட்டளை. பல பகுதியிலிருந்து கருப்பு நிறத்தில் உள்ள வெள்ளை நிறத்தில் உள்ள சிவப்பு நிறத்தில் உள்ள இப்படி பல இடங்களிலிருந்தும் மண்ணை அந்த மலக்கு எடுத்துக்கொண்டு வருக்கிறார். 
 
அதனால்தான், நம்முடைய குணங்களும் நிறங்களும் வித்தியாசமாக மாறுபட்டிருப்பது, நமது தந்தை ஆதம் அலைஹி வஸல்லம் அவர்கள் பல பகுதியின் மண்ணிலிருந்து படைக்கப்பட்டார் என்பது காரணமாக இருக்கின்றது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆதம் என்று ஏன் பெயர் வைக்கப்பட்டது என்றால், பூமியின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் இருந்து அவர்கள் படைக்கப்பட்டதால் அவர்களுக்கு இந்தப் பெயர் வந்துள்ளது.
 
அதுபோன்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்பதற்கு இப்லீஸ் ஆகிய அந்த ஷைத்தான் ஆதமுக்கு ஏன் ஸஜ்தா செய்யவில்லை என்று அல்லாஹ் கேட்கும் போது அதற்கு அவன் இப்படி பதில் கூறுகிறான்:
 
قَالَ يَاإِبْلِيسُ مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ أَسْتَكْبَرْتَ أَمْ كُنْتَ مِنَ الْعَالِينَ (75) قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ
 
அதற்கு இறைவன், ‘‘இப்லீஸே! நானே என் இரு கரங்களால் படைத்தவருக்கு முன் நீ சிரம் பணிய உன்னைத் தடுத்தது எது? நீ உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? அல்லது நீ, (என் கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாத) உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?'' என்றான். (அல்குர்ஆன் 38 : 75)
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மண் குளைக்கப்படுகிறது; பிறகு காய வைக்கப்படுகிறது. இப்படியாக பல படித்தரங்களை கொண்டு அவர்கள் படைக்கப்பட்டு அவருடைய படைப்பு முழுமையாக ஆகிறது, வெள்ளிக்கிழமையின் அந்த கடைசி நேரத்தில்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1410.
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்படும் போது, அதற்கு முன்பாக மலக்குகளுக்கு அல்லாஹ் ஒரு முன்னறிவிப்பு செய்கிறான். 
 
அதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்:
 
فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ
 
‘‘நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்'' (என்று கூறி, பிறகு, சிரம்பணிய கட்டளையிட்டான்.) (அல்குர்ஆன் 15 : 29)
 
சில இடத்தில் நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள் என்று வந்துள்ளது. இந்த இடத்தில் அல்லாஹ் மிக அழுத்தமாக சொல்கிறான். 
 
ஸஜ்தா என்றால் எப்படி நாம் பூமியில் தலை வைத்து கீழே இறங்கி செய்கின்றோமோ அதுபோன்ற சஜ்தாவை அல்லாஹ் கூறுகின்றான். 
 
ஆனால், இதற்கு சிலர் தவறான விளக்கம் சொல்கிறார்கள்; ஒரு கண்ணியப்படுத்தும் விதமாக தான் அல்லாஹ் கூறினானே தவிர, நாம் செய்வது போன்று அல்ல என்று தவறாக விளக்கம் கூறுகிறார்கள்.
 
ஆனால், அந்த விளக்கத்தை குர்ஆனின் இந்த வசனம் மறுக்கிறது.
 
ஸுஜூது செய்தவராக அவரிடத்தில் விழுந்து விடுங்கள் என்று தான் அல்லாஹ் கூறினான். 
 
அந்த நேரத்தில் மலக்குகள் மிகப்பெரிய சம்பவம் நிகழப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ரூஹ் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிக்கின்றது. 
 
முதலாவதாக தலையில் அந்த ரூஹை அல்லாஹ் ஊதினான். கண்களைக் கொண்டு சொர்க்கத்தின் கனிகளைப் பார்த்தார்கள். அதனுடைய ஆறுகளைப் பார்த்தார்கள். பிறகு அவருடைய முக்கன்தண்டுக்கு ரூஹ் வருகிறது.
 
அப்போது அவர்கள் தும்பினார்கள். அப்போது மலக்குகள் அவருக்கு அல்ஹம்துலில்லாஹ் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் கூறினான்: உமது இறைவன் உன் மீது கருணை காட்டுவானாக என்று கூறினான்.
 
பிறகு, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அந்த ரூஹ் அவருடைய வயிற்றை அடைகிறது. அப்போதுதான் உடனடியாக அந்த சொர்க்கத்தின் கனியை பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் வயிற்றில் ரூஹ் இறங்கிய போது உணவு உண்ண வேண்டும்  என்ற ஆசை அவர்களுக்கு ஏற்படுகிறது. 
 
பிறகு, அவர்களுடைய உடல் எல்லாம் சென்று ரூஹ் முழுமை அடைவதற்கு முன்பாக அந்த கனிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் எழுவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் காலில் இன்னும் ரூஹ் வரவில்லை அதனால் அவர்களால் எழும்ப முடியவில்லை.
 
இதுகுறித்து அல்லாஹ் கூறுகிறான்:
 
خُلِقَ الْإِنْسَانُ مِنْ عَجَلٍ
 
மனிதன் அவசரத்தில் படைக்கப்பட்டிருக்கிறான். (அல்குர்ஆன் 21 : 37)
 
ரூஹ் தனது உடலில் சென்றடையும் முன்பாகவே தான் எழுந்து நடமாடி விட வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர் முயற்சி செய்ததை சொல்லும் விதமாக அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான்.
 
உடலில் ரூஹ் முழுமையடைந்த போது அல்லாஹ்வின் கட்டளை மலக்குகளுக்கு வருகிறது, ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று.
 
இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், அல்லாஹ் நம்முடைய தந்தையாகிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்ணியப் படுத்துவதின் மூலமாக அவருடைய சந்ததியான நம்மையும் கண்ணியப்படுத்தி இருக்கின்றான்.
 
தந்தையுடைய கண்ணியம் அவருடைய மகனுக்கும் கண்டிப்பாக இருக்கும் பாட்டன் முப்பாட்டனுக்கு உள்ள கண்ணியம் அவருடைய பேரன் பிள்ளைகளுக்கும் இருக்கும்.
 
எப்போது என்றால், அந்த பிள்ளைகளும் அந்த பேரப்பிள்ளைகளும் அவருடைய சந்ததிகளும் தன்னுடைய மூதாதையர் தந்தை அல்லது பாட்டன் எந்த நல்ல வழியில் இருந்தாரோ எந்த சத்தியப் பாதையில் இருந்தாரோ எந்த ஒழுக்கத்திலும்  நன்மைகளிலும் இருந்தாரோ அதே வழிகளில் அவருடைய பிள்ளைகளும் அவருடைய சந்ததிகளும் அந்த முறையை பின்பற்றினால்.
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا
 
ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைப் பயணிக்க வைக்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம். (அல்குர்ஆன் 17 : 70)
 
நம்முடைய இச்சைகளை ஒதுக்கி அல்லாஹ்வுடைய கட்டளைக்கு நாம் கீழ்படியும் போது கண்டிப்பாக நம்மை அல்லாஹ் மலக்குகளை விட மேன்மையாக ஆக்கி வைப்பான். அவனுக்கு அருகில் இருக்கக்கூடிய மலக்குகளை விட நம்மை உயர்த்தி விடுவான்.
 
எப்போது என்றால், இச்சைக்கு அடிமை ஆகாமல் இருந்தால்; அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு முரணான ஆசைகளுக்கு அடிமையாகாமல் இருந்தால்; அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதை தேர்ந்தெடுத்தால்; அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதை தேர்ந்தெடுத்துக் கொண்டால்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ
 
ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள்(அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். (அல்குர்ஆன் 98 : 7)
 
வசனத்தின் கருத்து : நிச்சயமாக யார் ஈமான் கொள்வார்களோ, இன்னும் அல்லாஹ் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று கூறிய அனைத்தையும் நம்பிக்கை கொள்வார்களோ, ஈமானை உறுதிப்படுத்திக் கொள்வார்களோ நன்மைகளை நல்லறங்களை செய்வார்களோ அவர்களுக்கும் நன்மை உண்டு.
 
நல்லறங்கள் என்றால், அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய கடமைகளை செய்வது நன்மை. அல்லாஹ் நம்மீது ஹராமாக்கிய காரியங்களை விட்டு விலகி இருப்பதும் மிகப்பெரிய நன்மையாகும்.
 
எப்படி தொழுகை, நோன்பு, ஸகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது நன்மையோ அதேபோன்றுதான் ஒரு பாவத்தை அல்லாஹ்வுக்கு பயந்து விடுவதும் நன்மை.
 
நம்மால் ஒரு இடத்தில் பொய் சொல்ல முடியும். அந்த இடத்தில் பொய் சொல்வதால் லாபம் கிடைக்கும். இருந்தும் பொய் சொல்வது அல்லாஹ்வுக்கு பிடிக்காது என்று அந்த இடத்தில் அடியான் பொய்யை தவிர்த்தால், எப்படி தொழுதவதற்கு நன்மையை தருகிறானோ நோன்பு வைத்தவருக்கு நன்மையை எழுதுகிறானோ அதே நன்மையை அந்த பொய்யை அல்லாஹ்வுக்காக பயந்து விட்டவருக்கு எழுதுகிறான்.
 
இப்படி ஒவ்வொரு பாவத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், எந்த ஒரு பாவமாக இருந்தாலும் சிறிய பாவமாக இருந்தாலும் சரி, பெரிய பாவமாக இருந்தாலும் சரி, உடல் பொருள் சார்ந்த பாவமாக இருந்தாலும் சரி, உள்ளத்தில் செய்யக்கூடடிய பாவங்களாக இருந்தாலும் சரி, அந்த பாவத்தை அல்லாஹ்வுக்காக பயந்து அல்லாஹ்வுக்காக மட்டும் ஒரு அடியான் விட்டுவிட்டால், ஒரு அடியான் தொழுதால் எவ்வளவு நன்மை கிடைக்குமோ, கஅபாவை தவாஃப் செய்தால் என்ன நன்மை கிடைக்குமோ அதுபோன்ற உயர்ந்த நன்மையை இறையச்சத்தை அல்லாஹ்வுடைய நெருக்கத்தை அந்த அடியானுக்கு அல்லாஹ் தருகின்றான்.
 
சிலர் எண்ணுகிறார்கள்; அமல்கள் செய்தால் தான் நன்மை கிடைக்கும், பாவத்தை விடுவதால் என்ன இருக்கு என்று. அப்படி அல்ல, நாம் பெரும்பாவத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا
 
உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக்கொண்டால், உங்கள் (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம். (அல்குர்ஆன் 4 : 31)
 
நம்முடைய எண்ணங்களால் நம்முடைய பேச்சால் ஏற்படக்கூடிய இன்னும் அறியாமலேயே நிகழ்ந்து விடக் கூடிய எத்தனையோ சிறு பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான், பெரும் பாவங்களை விட்டு விலகி இருந்தால்.
 
الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ 
 
வசனத்தின் கருத்து : தக்வா உள்ளவர்கள் யாரென்றால் பெரும் பாவங்களை விட்டு விலகி விடுவார்கள். மானக்கேடான பாவமான காரியங்களை விட்டு அவர்கள் விலகி இருப்பார்கள். சில சிறிய பாவங்களை தவிர. அந்த சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதில் விசாலமானவன். அவர்கள் பெரும் பாவங்களை விட்டு விலகி இருந்ததன் காரணமாகவே சிறு பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (அல்குர்ஆன் 53 : 32)
 
நல்லறங்கள் செய்வது என்பது நன்மைகள் செய்வதும் பாவங்களை விட்டு விலகி இருப்பதும் உள்ளடங்கும்.
 
அல்லாஹ் மலக்குகளுக்கு அவனுக்கு மாறு செய்யக் கூடிய அந்த எண்ணத்தை அவர்களுக்கு படைக்கவில்லை.
 
அதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்:
 
لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
 
அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (பாவிகளை வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள். (அல்குர்ஆன் 66 : 6)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِأَمْرِهِ يَعْمَلُونَ
 
(அவனுக்கு முன்னால்) இ(வ்வான)வர்கள் ஒரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள். (அல்குர்ஆன் 21 : 27)
 
அவர்கள் கண்ணியமான அடியார்கள்; அல்லாஹ்விடம் முந்திப் பேச மாட்டார்கள்; அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் அவர்கள் சோர்வடைந்து விட மாட்டார்கள் என்று அல்லாஹ் மலக்குகளை வர்ணிக்கின்றான்.
 
அவர்களுக்கு அல்லாஹ் இச்சையை ஆசையை படைக்கவில்லை. மாறு செய்யக் கூடிய எண்ணத்தை மலக்குகளுக்கு படைக்கவில்லை. 
 
ஆனால், ஆசைப்படக் கூடிய எண்ணமும் இச்சை கொள்ளும் எண்ணமும் அல்லாஹ் தனக்கு கொடுத்த அறிவைக்கொண்டு செய்யக்கூடிய எண்ணமும் படைக்கப்பட்டு, அறிவும் மனசாட்சியும் படைக்கப்பட்ட இந்த மனிதன் தன்னுடைய அறிவைக் கொண்டு தன்னுடைய இச்சையை தன்னுடைய விருப்பங்களை அடக்கி அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் போது அல்லாஹ் அந்த அடியானை மலக்குகளை விட மிக கண்ணியமான ஒரு அந்தஸ்துக்கு உயர்த்துகின்றான். 
 
யார் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்வார்களோ அவர்கள் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 98 : 7)
 
சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்; படைப்புகளிலேயே மிகச் சிறந்த படைப்பு என்ற சான்றிதழை நமக்கு அல்லாஹ் கொடுக்க காத்திருக்கின்றான். 
 
அதை நாம் வாங்குவதற்கான ஒரே வழி, அல்லாஹ்வின் மீது ஈமான் மற்றும் நற்செயல்கள். இந்த இரண்டை நாம் எடுத்துக் கொள்ளும் போது படைப்புகளிலேயே சிறந்த படைப்பு என்ற கண்ணியத்தை நமக்கு கொடுத்து நம்மை கவ்ரவிக்கின்றான்.
 
ஒரு மனிதன் உடைய அறிவு அவனுக்கு நல்லதை கூறும். ஆனால் அதைப் புறக்கணித்து விடுகின்றான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
 
அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார். எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். (அல்குர்ஆன் 91 : 8-10)
 
வசனத்தின் கருத்து : ஆன்மாவிற்கு அல்லாஹ் ஒரு சக்தியை படைத்திருக்கின்றான். அது அவனை பாவத்திலிருந்து கேவலமான காரியத்தை விட்டு தடுக்கும். அவனுடைய ரப்புக்கு மாறு செய்வதிலிருந்து அவனை தடுக்கும்.
 
யார் தனக்கு நேர்வழியை கொடுக்கக் கூடிய அந்த ஆன்மாவை வளர்த்து கொண்டாரோ அவர் வெற்றி அடைந்து விடுவார். அது தனக்கு நன்மையை சொல்லும்போது அதை ஏற்றுக்கொண்டு ஒரு தீமைசெய்யும் போது மனசாட்சியில் ஏற்படும் அந்த இறை பயம் ஒரு அடியானை தடுக்கும் போது அதிலிருந்து விலகிக் கொண்டு அந்த சக்தியை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டால் அந்த ஆன்மாவை பரிசுத்தப்படுத்தி கொண்டால் அவர் வெற்றி அடைந்தார்.
 
யார் அந்த ஆன்மாவை புதைத்து விடுகிறாரோ காலால் மிதித்து விடுகிறாரோ அது அவருக்கு நல்லது சொல்ல அதை அவர் புறக்கணிக்கிறாரோ அது அவரை ஒரு தீமையில் இருந்து தடுக்க அவர் அதற்கு செவி சாய்க்காமல் அந்தத் தீமையை நோக்கி முன்னோக்கி செல்கிறாரோ அல்லாஹ் அவருக்கு அந்த உள்ளத்தில் கொடுத்திருந்த அந்த மனசாட்சியை அவர் மிதித்து விடுகிறார்.
 
இவர்களை அல்லாஹ் எப்படி வர்ணிக்கிறான் என்றால்,
 
أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا
 
அவர்களில் பெரும்பாலானவர்கள் (உமது வார்த்தைகளைக் காதால்) கேட்கிறார்கள் என்றோ அல்லது அதை(த் தங்கள் மனதால்) உணர்ந்து பார்க்கிறார்கள் என்றோ நீங்கள் எண்ணிக் கொண்டீரா? அன்று! அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே தவிர, வேறில்லை. மாறாக, (மிருகங்களை விட) மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 25 : 44)
 
காரணம், ஒரு மிருகம் கூட அதற்காக கொடுத்திருக்கும் அந்த வரையறையில் மாறு செய்வதில்லை. மனிதன் அவனுக்கு கொடுத்த அந்த அறிவை அந்த மிருகத்திற்கு கொடுக்கவில்லை என்றாலும் கூட, அந்த மிருகமானது அதற்கென்று வரையறுக்கப்பட்ட இந்த வரையறைக்குள் சென்று கொண்டிருக்கிறது.
 
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அந்த அறிவு மிருகங்களுக்கு கொடுக்கப்படவில்லையே தவிர, எந்த ஒரு மிருகமும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில்லை. 
 
அல்லாஹ் இந்த மனிதனை கால்நடைகளுக்கு ஒப்பாக கூறிவிட்டு பின் இவர்கள் அதை விடவும் கேடு கெட்டவர்கள் அதை விடவும் மோசமானவர்கள் என்று வர்ணிக்கின்றான்.
 
அடுத்து, அல்லாஹ் கூறுகிறான்:
 
فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ (73) إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ 
 
(அச்சமயம்) வானவர்கள் எல்லோரும் அனைவருமே சிரம் பணிந்தார்கள். இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். (அல்குர்ஆன் 38 : 73,74)
 
இந்த ஜின் கூட்டத்தை சேர்ந்த இப்லீஸ் ஆகிய ஜின் உடைய பெயர் இஸ்ராயீல் என்று முன்பு இருந்தது.
 
அவன் ஒரு வணக்க சாலியாக ஒரு கல்விமானாக இருந்த காரணத்தினால் அவனை அல்லாஹ் மலக்குகள் உடைய உலகத்திற்கு உயர்த்தினான். 
 
எப்போது மலக்குகளுக்கே இந்த கட்டளையயோ அப்போது அந்த மலக்குகளோடு  இருந்த இப்லீஸுக்கும் அந்த கட்டளை தான். 
 
மலக்குக்களெல்லாம் ஸஜ்தாவில் விழுந்து விட அவன் இங்குமங்குமாக ஸஜ்தா செய்யாமல் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். 
 
அப்போது, அல்லாஹ் இப்லீஸிடம் கேட்கின்றான்:
 
قَالَ يَاإِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ السَّاجِدِينَ (32) قَالَ لَمْ أَكُنْ لِأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ
 
(அதற்கு உமது இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?'' என்று கேட்டான். அதற்கவன் ‘‘(காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிய தயாரில்லை; (ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்)'' என்று கூறினான். (அல்குர்ஆன் 15 : 32,33)
 
அல்லாஹ் உள்ளங்களை அறிந்தவன். அவன் ஏன் ஸஜ்தா செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிந்தவன். ஆனாலும், அவனை அல்லாஹ் சபிக்க போகின்றான், அதற்கான ஆதாரத்தை அவனுடைய நாவிலிருந்து கேட்க விரும்பினான்.
 
அல்லாஹ் ஒரு மனிதனை நரகத்தில் தள்ளுகின்றான் என்றால், ஒரு மனிதன் அவனுக்கு நரகம் தான் என்றால், அவன் தன்னை நான் நரகத்திற்கு தகுதியானவன் என்று அறிகின்ற வரை அவனை அல்லாஹ் நரகத்தில் தள்ள மாட்டான், அல்லாஹ் அவ்வளவு நீதமானவன்.
 
அல்லாஹ்வுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவது தான் அல்லாஹ்வுடைய அடியார்களாகிய நமக்கு தகுதியானது என்பதை மறந்து, அவன் தனக்கென்று ஒரு கண்ணியத்தை வைத்துக் கொண்டான். 
 
அதனால்தான் அவன் அப்படி கூறினான். ஒரு மண்ணினால் படைக்கப்பட்டவருக்கு ஸஜ்தா செய்வது எனக்கு தகுதியானது அல்ல என்று.
 
قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ
 
அதற்கவன், ‘‘அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்'' என்றான். (அல்குர்ஆன் 38 : 76)
 
பெருமையிலிருந்து அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். என்னைவிட சாதாரணமான ஒருவனுக்கு இப்படி ஒரு கண்ணியத்தை அல்லாஹ் கொடுத்து விட்டானே என்று ஆதம் மீது ஏற்பட்ட பொறாமை. 
 
இன்னும் நான் உயர்ந்தவன் என்று அல்லாஹ் உடைய கட்டளைக்கு முன்னால் கீழ்படிவதையே தனது கண்ணியக் குறைவாக கருதி, எனக்கென்று ஒரு கண்ணியம் இல்லையா என்று அவன் உள்ளத்தில் எண்ணியதுதான் அல்லாஹ் உடைய பார்வையில் அவனை கேவலமாக சபிக்கப் பட்டவனாக மாற்றியது.
 
அறிஞர்கள் கூறுகிறார்கள்: வானங்களிலும் சரி பூமியிலும் சரி அல்லாஹ்வுக்கு செய்யப்பட்ட முதல் பாவம் பெருமையும் பொறாமையும் தான். 
 
எவ்வளவு அல்லாஹ் அவனை உயர்த்தி வைத்திருந்தாலும் அதே அளவுக்கு அல்லது அதைவிட மோசமாக அவனை தரம் தாழ்த்தியது.
 
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ (77) وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَى يَوْمِ الدِّينِ (78) قَالَ رَبِّ فَأَنْظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ (79) قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ (80) إِلَى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ (81) قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ (82) إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ
 
அதற்கு இறைவன், ‘‘அவ்வாறாயின், நீ இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டு விட்டாய். தீர்ப்பு நாள் வரை என் சாபம் உன்மீது நிச்சயமாக நிலைத்திருக்கும்'' என்றான். அதற்கவன், ‘‘என் இறைவனே! (மரணித்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு'' என்றான். அதற்கு இறைவன் கூறினான்: ‘‘நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது, குறிப்பிட்ட அந்நாள் வரை (உன் தவணை)''  அதற்கவன், ‘‘உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக நான் (மனிதர்கள்) அனைவரையும் வழி கெடுத்து விடுவேன்.''  ‘‘(எனினும்,) அவர்களில் பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர'' என்றான். (அல்குர்ஆன் 38 : 77-83)
 
இதே நிகழ்வை குர்ஆனில் மற்றொரு இடத்தில் கூறும்போது,
 
قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَاؤُكُمْ جَزَاءً مَوْفُورًا (63) وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا (64) إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ وَكَفَى بِرَبِّكَ وَكِيلًا
 
(அதற்கு இறைவன், இங்கிருந்து) ‘‘நீ அப்புறப்பட்டு விடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்'' என்றும், ‘‘நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி'' என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே தவிர வேறில்லை. நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை'' (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவ(னாகிய நா)னே போதுமானவன். (அல்குர்ஆன்17 : 63-65)
 
இந்த சம்பவத்தில் பல படிப்பினைகள் பாடங்கள் நமக்கு இருக்கிறது. நம்முடைய கண்ணியம் என்பது நாம் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதில் தான். 
 
இன்று முஸ்லிமாக இருந்தும் சிலர் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில்  முரண்படுகிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம், நான் தான் என்ற அந்த எண்ணம். 
 
அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதன் கண்ணியத்தை உணராமல் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றியதில் தான் கண்ணியம் இருக்கிறது என்பதை உணராமல் இதை செய்தால் மக்கள் எப்படி என்னை நினைப்பார்கள்? தன்னுடைய மரியாதையில் குறைவு ஏற்படும் என்று அல்லாஹ்வுடைய சட்டத்தை மீறி கொண்டிருக்கிறார்கள்.
 
இப்படியாக அவர்களுடைய நிலைமை சென்று கொண்டிருந்தால் ஒரு நேரத்தில் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். 
 
ஒன்று இருக்கிறது, அல்லாஹ்வுடைய கட்டளைகளில் சிலவற்றை விடுவது, இன்னொன்று, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஆட்சியேபனை செய்து தன்னுடைய நாவை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப நீட்டுவது. 
 
எவ்வளவுதான் பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, நல்ல மனிதனாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஆட்சியேபனை என்ற வாசலை அவர் திறந்து விடுவாரேயானால் அவர் கண்டிப்பாக இப்லீஸ் உடைய வழியில் சபிக்கப்பட்டவராகி விடுவார்.
 
அதற்குரிய ஆதாரம் இந்த சம்பவம். எவ்வளவு சிறப்பு மிக்க வானவர்களுடன் இப்லீஸை அல்லாஹ் தங்கவைத்து இருந்தான். ஆனால் எப்போது அல்லாஹ்வுடைய கட்டளைக்கு இப்லீஸ் ஆட்சியேபனை செய்ய ஆரம்பித்தானோ உடனே அல்லாஹ் இப்லீஸிடம் கூறினான்.
 
நீ இங்கு இருப்பதற்கு தகுதியானவன் இல்லை. இங்கிருந்து உடனே வெளியேறி விடு, நீ சபிக்கப்பட்டு விட்டாய். நீ கருணையில் இருந்து விலக்கப்பட்டு விட்டாய் என்று அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன் 38 : 77; 15 : 34)
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம்மை அவனுடைய கட்டளைக்கு மாறு செய்வதிலிருந்து நம்மை காப்பானாக! அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக அல்லாஹ்வுடைய சட்டங்களை ஏற்று நடக்கக்கூடிய நல்ல மக்களாக நம்மை ஆக்கியருள்வானாக! மேலும் இந்த நபிமார்களுடைய வரலாற்றிலிருந்து நமக்கு நல்ல படிப்பினை பெறக் கூடிய மக்களாக ஆக்குவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/