HOME      Khutba      அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் அமர்வு 3-5 | Tamil Bayan - 603   
 

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் அமர்வு 3-5 | Tamil Bayan - 603

           

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் அமர்வு 3-5 | Tamil Bayan - 603


அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் (அமர்வு 3-5)
 
வரிசை : 603
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 29-11-2019 | 02-04-1441
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு கூறும் படிப்பினைகள்
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் என்ற தலைப்பில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் எப்படி கூறுகின்றான்? இன்னும் அவர்களுடைய வரலாற்றிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை பாடங்கள் என்ன? என்பதைப் பற்றி சென்ற ஜும்ஆவில் சிறிதளவு பார்த்தோம். அதன் தொடரில் இன்ஷா அல்லாஹ் சில விஷயங்களை இந்த ஜும்ஆவில் பார்ப்போம்.
 
அல்லாஹு தஆலா சூரா தாஹா உடைய 115 -வது வசனத்தில் இந்த சம்பவத்தை கூறும்போது,
 
وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا (115) وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى (116) فَقُلْنَا يَاآدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى (117) إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى (118) وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَى (119) فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَاآدَمُ هَلْ أَدُلُّكَ عَلَى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَا يَبْلَى (120) فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ وَعَصَى آدَمُ رَبَّهُ فَغَوَى (121) ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى (122) قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى (123) وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى (124) قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا (125) قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى (126) وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى
 
இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக அதற்கு மாறு செய்யும்) உறுதியான எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை. வானவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (அவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான்.
 
ஆதலால், (நாம் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப்படுத்தி விடவேண்டாம். (எச்சரிக்கையாக இருப்பீராக!) இன்றேல் நீர் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்'' என்று கூறினோம்.
 
‘‘நிச்சயமாக நீர் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர். நிச்சயமாக நீர் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்'' (என்று கூறினான்). எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி ‘‘ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உமக்கு அறிவிக்கவா?'' என்று கூறினான்.
 
ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானம் அவ்விருவருக்கும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறுசெய்து வழி தவறிவிட்டார்.
 
பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் அவரை செலுத்தினான்.
 
‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான்.
 
எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம். (அச்சமயம்) அவன் ‘‘என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேன்ன!'' என்று கேட்பான்.
 
அதற்கு (இறைவன்) ‘‘இவ்வாறே (குருடனைப்போன்றே உன் காரியங்கள் இருந்தன) நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்'' என்று கூறுவான். எவன் வரம்பு மீறி, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும். (அல்குர்ஆன் 20 : 115-127)
 
அல்லாஹு தஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இல்மை கொண்டு கண்ணியப் படுத்தினான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا
 
பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 2 : 31)
 
மலக்குமார்களை அல்லாஹ் தஆலா ஸஜ்தா செய்யும்படி வைத்தான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சொர்க்கத்தில் தங்க வைத்தான். 
 
இப்படித்தான் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பாக ஆதமைப் படைத்து கண்ணியப்படுத்தி அல்லாஹு தஆலா சொர்க்கத்தில் தங்க வைத்தான். 
 
அல்லாஹ் தஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிட்டான். இந்த இப்லீஸ் உங்களுக்கு எதிரி என்பதாக.
 
فَقُلْنَا يَاآدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى
 
ஆதலால், (நாம் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப்படுத்தி விடவேண்டாம். (எச்சரிக்கையாக இருப்பீராக!) இன்றேல் நீர் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்'' என்று கூறினோம். (அல்குர்ஆன் 20 : 117)
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கை செய்யவில்லை என்றாலும் கூட, ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஷைத்தானின் விஷயத்தில் அவர்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். 
 
முதல் காரணம், தன் மீது அவன் பொறாமைப்பட்டவன். பிறகு அல்லாஹ்விடத்தில் பெருமை அடித்தான். அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறு செய்தான். 
 
அப்படிப்பட்ட இப்லீஸ் விஷயத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்யாமல் இருந்திருந்தாலும், ஆதம் அலைஹிஸ்ஸலாம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அவனுடைய ஆசை வார்த்தையை நம்பாமல் இருந்திருக்க வேண்டும்.
 
இருந்தும் அல்லாஹ் எச்சரிக்கை செய்தான். ஆதமே! இவன் உங்களுக்கு எதிரி என்று அல்லாஹ் கூறினான். இவன் உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றுவான். அதற்கு தேவையான சூழ்ச்சிகளை தந்திரங்களை செய்வான். ஆசை வார்த்தைகளை கூறுவான் என்றும் அல்லாஹ் எச்சரிக்கை செய்தான்.
 
ஆகவேதான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்படிச் சொல்லிக் காட்டுகிறான். நாம் உபதேசம் செய்தோம், ஆதமுக்கு. நாம் கட்டளை கொடுத்தோம். ஆனால் அந்தக் கட்டளையை அவர் மறந்துவிட்டார். அந்தக் கட்டளையை விட்டுவிட்டார். அவரிடத்தில் மன உறுதியை பார்க்கவில்லை என்று.
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் உடைய மன உறுதி எப்படி என்றால், அவர்களிடத்தில் இருந்த சகிப்புத்தன்மை, மனக்கட்டுப்பாடு, எந்த அளவிற்கு இருந்தது என்றால், இமாம் தபரி ரஹ்மத்துல்லாஹி பதிவு செய்கிறார்கள். அபூ உமாமா என்ற ஸஹாபி கூறுகிறார்கள்:
 
உலகத்தை அல்லாஹ் படைத்து, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பூமியில் வந்ததிலிருந்து மறுமைநாள் வருகின்ற வரை, அத்தனை மனித சமுதாயம் எல்லாருடைய பொறுமையையும், கட்டுப்பாட்டையும், உறுதியையும் தராசின் ஒரு தட்டில் வைத்து, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மனக்கட்டுப்பாட்டை ஒரு தராசில் வைத்தால் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மனக்கட்டுப்பாடு, அவர்களுடைய மன உறுதிதான் அதிகமாக கணக்கூடியதாக இருக்கும். 
 
பார்க்க : தஃப்ஸீர் தபரி.
 
அவ்வளவு மனக்கட்டுப்பாட்டோடு இருந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஷைத்தான் ஆசை வார்த்தைகளை கூறி, நயவஞ்சகமாக பேசி ஏமாற்றி விட்டான் என்றால், நம்மைப் போன்ற மனிதர்களுடைய நிலைமை என்ன? என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
 
ஆகவேதான், அல்லாஹு தஆலா இந்த ஷைத்தானைப் பற்றி நமக்கு குறிப்பிடும்போது, உங்களை அவன் மயக்கி விட வேண்டாம் என்று கூறுகிறான். 
 
إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ
 
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கிறான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தன்னைப் பின் பற்றிய) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே. (அல்குர்ஆன் 35 : 6)
 
யாரை அல்லாஹு தஆலா தன்னுடைய கரத்தால் படைத்து, நேரடியாக பேசி, சொர்க்கத்தில் தங்கவைத்தானோ அப்பேற்பட்ட ஒரு மனிதரையே ஷைத்தான் வழிகெடுக்க முடியும் என்றால், நம்முடைய நிலையை இங்கு பார்க்க வேண்டும். 
 
நம்மில் சிலர், எனக்கு எல்லாம் தெளிவாக தெரியும்; நான் தப்பு செய்ய மாட்டேன்; நான் ரொம்ப மனக்கட்டுப்பாடு இருப்பேன்; என்னை யாரும் வழிகெடுக்க முடியாது என்று நினைக்கிறார்கள். 
 
ஷைத்தான் தன்னுடைய மாய வலையை விரித்து விட்டால், ஷைத்தான் தன்னுடைய ஆசை வார்த்தையை கூறி, அலங்கரித்து அவன் நம்மை ஏமாற்றுவதற்கு வழி கெடுப்பதற்கு முன் வந்து விட்டால், அல்லாஹ் பாதுகாத்தாலே தவிர, ரப்புல் ஆலமீன் உதவி செய்தாலே தவிர, நம்மால் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது. 
 
நம்மால் ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து, அவனுடைய ஆசை வார்த்தைகளில் இருந்து, அவன் மயக்கக்கூடிய மயக்க வாழ்க்கையில் இருந்து நம்மால் பாதுகாக்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர. 
 
குர்ஆனை ஓதும் போதெல்லாம், தொழும் போதெல்லாம் பாதுகாப்பு தேட வேண்டும்.
 
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ 
 
(நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!. (அல்குர்ஆன் 16 : 98)
 
அல்லாஹ்வுடைய கலாம் ஓதப்படும் போது கூட, ஷைத்தான் நம்முடைய சிந்தனைகளை பறித்து செல்வான் என்றால், நம்முடைய உலக காரியங்களில் இருக்கும் போது எப்படி எல்லாம் ஷைத்தான் வழிகெடுப்பான், ஏமாற்றுவான் என்று யோசித்துப் பாருங்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான், ஆதமிடத்தில் அந்த மன உறுதியை பார்க்கவில்லை என்று. 
 
முக்கியமான விஷயம் என்னவென்றால், யார் மீது அல்லாஹ்வுடைய அருள் எந்த அளவு இருக்கிறதோ, யார் மீது அல்லாஹ்வுடைய கருணை, அருட்கொடை எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் தப்பு செய்தால் அந்த அளவு அல்லாஹ்வுடைய கோபமும் வருத்தமும் அதிகமாக இருக்கும்.
 
அதற்கு ஸலஃபுகள் சொல்வார்கள், சாதாரண மக்களுக்கு நல்லதாக இருக்க கூடிய செயல்கள் கூட, அல்லாஹ்விற்கு நெருக்கமாக இருக்கக் கூடியவர்களுக்கு தப்பாக ஆகிவிடும். 
 
ஆகவேதான், நபிமார்கள் மீது இரவு தொழுகை கடமையாக்கப்பட்டு இருந்தது. அல்லாஹு தஆலா நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு இரவு தொழுகையை கடமையாக்க வில்லை. 
 
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோயினால், பிரயாணத்தில், பலவீனத்தால் தொழ முடியவில்லை என்றால் இரண்டு ரக்அத் தொழுது விட்டு மீதம் பகலில் தொழக்கூடியவராக இருந்தார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், இன்ஷா அல்லாஹ் சொல்ல மறந்தார்கள். அல்லாஹ் கோபித்தான்.
 
وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا (23) إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَى أَنْ يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَدًا
 
(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘‘நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று கூறாதீர். ஆயினும், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுவீராக. நீர் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உமது இறைவனின் பெயரைக் கூறுவீராக. தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்'' என்றும் கூறுவீராக. (அல்குர்ஆன் 18 : 23,24)
 
வஹியை அல்லாஹ் தாமதப்படுத்தி விட்டான். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதறி விட்டார்கள். என் மீது எனது ரப்பு கோபித்துக் கொண்டானே என்று அவர்கள் பதறிப் போனார்கள். 
 
அல்லாஹ் வசனத்தை இறக்கி விட்டான். நபியே! இனி நீங்கள் அப்படி சொல்லாதீர்கள். இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் எதையும் நீங்கள் வாக்களிக்காதீர்கள் என்பதாக.
 
கண்தெரியாத ஒரு சஹாபி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்பதற்கு நபியிடம் வந்தார். அங்கு காஃபிர், முஷ்ரிக்குகளின் தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அந்த கண் தெரியாத ஸஹாபியை பார்த்து, பிறகு ஒரு நேரத்தில் வாருங்கள் என்று கூறியதுதான். 
 
அதுவும் அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லை. வசனத்தை இறக்கி விட்டான்.
 
عَبَسَ وَتَوَلَّى (1) أَنْ جَاءَهُ الْأَعْمَى (2) وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى
 
(நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?) தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா? (அல்குர்ஆன் 80 : 1-3)
 
இப்படி நாம் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். எந்தளவிற்கு ஒரு மனிதனின் மீது அல்லாஹ்வுடைய அருள் இருக்கிறதோ, அவர் அந்த அளவிற்கு அல்லாஹ்வை நெருங்குவதற்கு வழிகளை, அமல்களை, தக்வாவை, இபாதத்தை தேட வேண்டும். 
 
அப்போதுதான் அல்லாஹ் அவனை நெருக்கமாக ஆக்குவான். அப்படி நெருக்கமாக ஆக்கும் போது அவர்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகளுக்கு கூட, உடனடியாக அல்லாஹ் காண்பித்து கொடுப்பான். 
 
அவரை அல்லாஹு தஆலா இந்த உலகத்திலேயே சுத்தப் படுத்துவதற்காக, சில தண்டனைகளை, சில படிப்பினைகளை காட்டுவான்.
 
சிலர் சொல்வார்கள்; நான் செய்தது தப்பாக இருந்தால் எனக்கு தண்டனை வந்திருக்கும். நான் எவ்வளவு சுகத்தோடு இருக்கிறேன். எவ்வளவு செல்வத்தோடு இருக்கிறேன். எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்கிறேன் என்று. 
 
உன் மீது அல்லாஹ்வுடைய கருணை இல்லை என்பதற்கு இதுவே பெரிய அடையாளம். உன்னுடைய மொத்த கணக்கை அல்லாஹ் மறுமையில் சேமித்து வைத்திருக்கிறான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ (25) ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
 
நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும். நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும். (அல்குர்ஆன் 88 : 25,26)
 
நம்முடைய மறதியில் அலட்சியத்தில் இருக்கும்போது நாம் இப்படி எண்ணிவிடக்கூடாது; அல்லாஹ் நம்மை ஒன்றும் செய்யவில்லை, நாம் செய்வது எல்லாம் சரிதான் என்று. 
 
அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது கோபப்பட்டு, உடனடியாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான் என்றால், அல்லாஹ் அந்த அளவிற்கு கோபப்பட்டான். 
 
ஆதமின் மீது அல்லாஹ் அவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கிறான். ஷைத்தான் ஸஜ்தா செய்யாத போது, ஷைத்தான் இப்லீஸை பார்த்து அல்லாஹ் கேட்டான். 
 
என்னுடைய கரத்தால் படைத்த இவருக்கு நீ ஸஜ்தா செய்யவில்லையே, ஏன் என்று. அல்லாஹ் தஆலா எல்லா மலக்குகளையும் ஸஜ்தா செய்ய வைத்தான். எவ்வளவு அன்பு வைத்திருந்தான். 
 
ஒரே ஒரு தப்பு தான் செய்தார். வேறு ஒன்றுமில்லை. ஆனால் அல்லாஹ் அவருக்கு செய்த கருணைக்கு அவர் அந்த தப்பை செய்திருக்கக்கூடாது. ஷைத்தான் எப்படி எல்லாம் ஊசலாட்டத்தை கொண்டு வந்தான். 
 
நாம் பார்க்க வேண்டியது, இது அல்லாஹ்வின் கட்டளையா? அல்லாஹ்வின் கட்டளை என்றால் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தடை என்றால் அவ்வளவுதான் நின்றுவிட வேண்டும். காரணங்களை பார்க்கக்கூடாது. நமது எண்ணங்களை பார்க்கக்கூடாது. 
 
ஆயிரம் நல்லெண்ணங்களை வைத்தாலும், இலட்சம் நல்லெண்ணங்களை கொண்டு வந்தாலும், அந்த நல்லெண்ணங்கள் ஒரு பாவத்தை ஆகுமாக்காது. 
 
திருடக்கூடியவன் ஆரம்பத்தில் பசிக்காக நான் திருடினேன், என்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக வேறு வழியில்லை என்று திருட ஆரம்பிக்கிறான். பிறகு அதை தொழிலாக ஆக்கிக் கொள்கிறான்.
 
தீமை செய்பவர்கள் தாங்கள் முதலாவதாக அந்த தீமையை செய்யும் போது, அவருடைய மனசாட்சி அதை தடுக்கிறது. அதற்கு நல்ல காரணங்களை தேடுகின்றார்கள். நல்ல வார்த்தைகளை சொல்கின்றார்கள். 
 
இன்று சமூகத்தில் நடக்கக்கூடிய எவ்வளவு தீமைகளை, எவ்வளவு பாவங்களைச் சொல்லலாம். மன இச்சை சார்ந்த பாவங்களாக இருக்கட்டும், பொருளாதாரம் சார்ந்த பாவங்களாக இருக்கட்டும், அல்லது மக்கள் தொடரக்கூடிய அரசியல் சார்ந்த பாவங்களாக இருக்கட்டும். 
 
ஒவ்வொரு தீமைக்கும் ஒரு நல்ல காரணம் கற்பிக்கப் படுகிறது. அதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. பிறகுதான் அதை செய்வார். யாரும் தப்பை தப்பு என்று சொல்லி செய்ய மாட்டார்கள். அதை நியாயப் படுத்துவார்கள். ஷைத்தான் உள்ளத்தில் இப்படிப்பட்ட ஒரு நியாயத்தை தான் ஏற்படுத்தினான்.
 
ஷைத்தானின் முதல் வழிகேடு ஊசலாட்டத்தில் இருந்து ஆரம்பமாகிறது. 
 
மற்ற எத்தனையோ தீமைகள் இருக்கின்றன. எத்தனையோ ஆபத்துகள், எத்தனையோ கெடுதிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் பாதுகாப்புத் தேடும் போது, அல்லாஹ்வுடைய பெயர் கூறி, அடுத்து நேரடியாக அந்த தீமைகளை சொல்லி பாதுகாப்பு தேடப்படுகிறது.
 
ஆனால், அல்குர்ஆனை நன்கு ஆராய்ந்து பாருங்கள். ஷைத்தானுடைய ஊசலாட்டம், மனக்குழப்பங்கள், ஷைத்தான் ஏற்படுத்துகின்ற தப்பான எண்ணங்களில் இருந்து பாதுகாப்புத் தேடும் போது, அல்லாஹ்வுடைய அத்தனை மகத்துவத்தை எடுத்துக் கூறி, அவனுடைய உளூஹிய்யது, ருபூபிய்யது, அவருடைய அஸ்மாவுஸ் ஸிஃபத், அவனுடைய அத்தனை அடிப்படைகளையும் கூறி அங்கே பாதுகாப்பு தேக்ட கூடிய ஒரே விஷயம் தான் ஊசலாட்டத்தில் இருந்து.
 
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1) مَلِكِ النَّاسِ (2) إِلَهِ النَّاسِ (3) مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4) الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6)
 
(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன். (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன். (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன். மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்). (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114 : 1-6)
 
என்ன குழப்பம்? தப்பான விஷயத்தை செய்வதற்கு அவன் முதலாவது சொல்வது என்னவென்றால், இது தப்பா இருக்குமா இருக்காதா? இது தப்பா இருக்கும் என்று நான் நினைக்கல. அதற்கு பிறகு சரியா தானே இருக்கும். இப்படி எல்லாம் இருக்கும் போது தப்புக்கு என்ன வழி? இப்படிப்பட்ட எண்ணங்கள்.
 
இது அல்லாஹ்வின் கட்டளை என்றால் அதை விடுவதற்கான காரணங்களை தேடக்கூடாது. அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய ரசூலும் கூறி இருந்தாலே தவிர. 
 
நோன்பு வைக்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. பயணியாக இருந்தால் விட்டுவிடுங்கள். பிறகு ஒரு நேரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:184)
 
இது அல்லாஹ் அனுமதித்த காரணம். நோயாளியாக இருந்தால் நீங்கள் விட்டுவிடலாம். வேறு ஒரு நேரத்தில், வேறு ஒரு மாதத்தில் நீங்கள் வைக்கலாம். இது அல்லாஹ் அனுமதித்த காரணம். 
 
எந்த ஒரு கட்டளைக்கு அல்லாஹ்வும் ரசூலும் அதை விடுவதற்கு காரணத்தை சொல்லவில்லையோ, நாமாக அதற்கு உள்ளத்தில் ஒரு காரணத்தை தேடினால், நாம் புரிந்து கொள்ள வேண்டும்; ஷைத்தான் எனது உள்ளத்தில் அந்த காரணத்தை போடுகிறான் என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக. 
 
ஒரு பாவம், தடுக்கப்பட்ட ஒரு செயல், செய்யக் கூடாது என்ற ஒரு செயல், அதை செய்வதற்கு மனம் விரும்புகிறது என்றால், அதை செய்வதற்கு நஃப்ஸு தேடுகிறது. எத்தனை காரணங்களைக் கொண்டு வந்தாலும் சரி, அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்றால் அந்தப் பாவம் அந்த தீமை நமக்கு நல்லதாக ஆகாது.
 
அல்லாஹு தஆலா மது அருந்துவதை, பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதை, அல்லது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாததை, இறந்ததை புசிப்பதற்கு தடை செய்திருக்கிறான். 
 
ஆனால், உங்களுக்கு கடும் பசி ஏற்பட்டு, வேறு உணவு கிடைக்காமல் இதை சாப்பிடவில்லை என்றால், உங்களுக்கு மரணம் என்ற நிலை இருக்கும் என்றால், நீங்கள் அதை சாப்பிடலாம். இது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் சொன்ன காரணம். 
 
இப்படி இல்லாமல் நாமாக அதற்கு ஒரு விளக்கத்தை தேடினால், நாமாக அதற்கு உதாரணங்களைக் கொண்டு வந்தால் இது தான் ஷைத்தானுடைய ஊசலாட்டம். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
 
فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ
 
சைத்தான் ஆதமிடத்தில் ஊசலாட்டத்தை கொண்டு வந்தான். (அல்குர்ஆன் 20 : 120)
 
அதனை உனக்கு நான் சொல்லட்டுமா? உனக்கு கற்றுத் தரட்டுமா? என்று நயமாகப் பேசினான்.
 
எந்த மரத்திலிருந்து நீ சாப்பிட்டால் சொர்க்கத்தில் நிரந்தரமாக இருந்து விடுவாயோ அதை நான் சொல்லித் தரட்டுமா? அழியாத ஆட்சிக்கு நீ சொந்தம் ஆகிவிடுவாய். அப்படிப்பட்ட ஒரு மரத்தை நான் உனக்கு சொல்லித் தரட்டுமா? 
 
அல்லாஹு தஆலா அதுபற்றி கூறுகின்றான், 
 
وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ
 
‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்'' என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்தான். (அல்குர்ஆன் 7 : 21)
 
ஒரு தீயவன் நம்மிடத்தில் நயமாக பேசினால், ஓர் இறைமறுப்பாளன் அல்லாஹ்வுக்கு மாறு செய்யக் கூடிய விஷயத்தில், அல்லாஹ்வுடைய கட்டளையைப் மீறக்கூடிய விஷயத்தில், நமக்கு என்ன நயமான வார்த்தையை கூறினாலும் சரி, அது ஷைத்தானுடைய ஊசலாட்டம், ஷைத்தானுடைய வழிகேடு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஆதம் அலைஹிஸ்ஸலாமுக்கு மீண்டும் மீண்டும் இந்த எண்ணங்களை கொண்டு வந்தே இருந்தான். சத்தியம் செய்து கொண்டே இருந்தான்.
 
இருவரும் சாப்பிட்டு விட்டார்கள். அவ்விருவரின் அவ்ரத் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. (அல்குர்ஆன் 20 : 121)
 
இந்த இடத்தில் மார்க்க அறிஞர் எழுதுகிறார்கள்; ஷைத்தானின் மிகப்பெரிய ஓர் வலைகளில் ஒன்று, மனிதனை அல்லாஹ் கண்ணியமாக அவனுடைய அவ்ரத்துக்கும் கண்ணியத்திற்கும் பாதுகாப்பாக கொடுத்த அந்த ஆடையில் இருந்து அவனை கழட்டுவது. 
 
அப்படி கழட்டி விட்டால் அடுத்தடுத்து பாவங்களில் அவனை தள்ளுவது, மன இச்சைகளில் தள்ளுவது, எல்லா விதமான மானக்கேடான அசிங்கங்களில் தள்ளுவது, பிறகு அப்படியே நரகத்தில் கொண்டு போய் தள்ளுவது அவனுக்கு இலேசாகிவிடும்.
 
ஷைத்தானுடைய இந்த சூழ்ச்சி தான் இன்று மேலை நாட்டுக்காரர்களால், மேற்கத்தியர்களால், யூதர்கள், இன்னும் பெண்விடுதலை சொல்லக்கூடிய, இந்த ஹிஜாபை குறை சொல்லக் கூடிய எல்லோருடைய நோக்கமும் இதுதான். 
 
ஒரு மனிதனுடைய வெட்கத்தை எடுத்து விட்டால், அந்த ஆடையை கழட்டி விட்டால், அசிங்கமானதை ஆபாசத்தை பார்க்கும்படி செய்து விட்டால், பிறகு அவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். 
 
அறிஞர்கள் எழுதுகிறார்கள்; யாரொருவர் இப்படிப்பட்ட அசிங்கங்களை, அசிங்கமான படங்களை, ஆபாசங்களை பார்ப்பதை வழமையாக்கிக் கொள்வார்களோ, அதற்குப் பிறகு அவருடைய உள்ளத்தில் ஈமானை எடுப்பது, அமல்களில் இருந்து அவனை வெளியேற்றுவது, இன்னும் அடுத்தடுத்த பாவங்களில் தள்ளுவது ஷைத்தானுக்கு மிக இலகுவானது ஆகிவிடும். இன்னும் அவனுக்கு சாதாரணமாகி விடும்.
 
ஆதமுடைய வரலாற்றைப் படியுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், 
 
«إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ»
 
முந்திய நபிமார்களில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒன்று தான் வெட்கம். வெட்கம் இல்லை என்றால் நீ எதை வேண்டுமானாலும் செய்.
 
அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3483.
 
ஷைத்தான் முதலாவதாக ஒரு முஃமினுடைய உள்ளத்திலிருந்து ஹயாவை எடுத்துவிடுவான். அந்த ஹயாவை எடுப்பதற்கு முயற்சி செய்வான். ஓர் பெண் முஸ்லிமாக இருந்தாலும் சரி, காஃபிராக இருந்தாலும் சரி, அவளிடத்தில் வெட்க உணர்வு இல்லை என்றால் ஒரு பெண் போதும் ஒட்டுமொத்த சமூகத்தையும் கெடுப்பதற்கு. 
 
அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்:
 
فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ، فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ
 
பெண்களை பயந்து கொள்ளுங்கள். இஸ்ராயிலின் முதல் ஃபித்னா பெண்களில் இருந்து தான் வந்தது. 
 
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 314, 2742.
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் பற்றி அல்லாஹ் சொல்கின்றான்.
 
وَعَصَى آدَمُ رَبَّهُ فَغَوَى 
 
ஆதம் தனது ரப்புக்கு மாறு செய்துவிட்டார். தனது மனோ இச்சையைப் பின்பற்றி விட்டார்.  (அல்குர்ஆன் 20 : 121)
 
அல்லாஹ் பாதுகாப்பானாக. ஏன் இந்த அளவு அல்லாஹ் கோபப்பட்டான்? எதற்காக  அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவ்வளவு கண்ணியப்படுத்தினான். அவ்வளவு உயர்வாக்கினான். அவ்வளவு சிறப்பித்தான்.
 
அல்லாஹ்வுடைய சிறப்பு, அல்லாஹ்வுடைய கண்ணியம், அதற்கு அவர் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தன் மீது பொறாமை கொண்ட, அல்லாஹ்விடம் பெருமை காட்டிய அந்த இப்லீஸின் கூற்றுக்கு கட்டுப்பட்ட காரணத்தால் அல்லாஹ் ஆதமை பூமிக்கு இறங்குங்கள் என்று சொல்லிவிட்டான்.
 
ஆதமே! இனி நீங்கள் இந்த சொர்க்கத்தில் இருக்க முடியாது. நீங்கள் பூமிக்கு சென்று விடுங்கள் என்று. 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அடுத்த வசனத்தில் சொல்கின்றான். 
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் எப்போது அல்லாஹ் தன்னை கோபித்துக் கொண்டான் என்பதை அறிந்தார்களோ உடனடியாக தனது ரப்புக்கு முன்னால் மன்றாடினார். 
 
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
 
(அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர். (அல்குர்ஆன் 7 : 23)
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறந்தார்கள். எனவே அவர்களின் சந்ததிகளும் மறந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்:
 
மறதி என்பது, அல்லது சில பாவங்கள் செய்வது என்பது நம்முடைய தந்தையின் இயற்கையின் ஒன்று. அல்லாஹு ரப்புல் ஆலமீன் பாவத்தைக் கொண்டு உடனடியாக பிடித்து விட மாட்டான். அந்தப் பாவத்தில் நீடித்தால் தவிர. 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3076.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்:
 
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ 
 
இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) (அல்குர்ஆன் 3 : 135)
 
ரப்புல் ஆலமீன் கூறுகிறான் ஹதீஸ் குதுஸியில், 
 
" قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ، وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً "
 
ஆதமுடைய மகனே! நீ பாவம் செய்தாய், உனது பாவம் வானத்தின் முகட்டை எட்டிவிட்டது. உனது பாவம் பூமியும் நிறைந்து விட்டது. ஆனால், பிறகு, என் ரப்பே! என்னை மன்னித்துவிடு என்று சொன்னால், நான் எல்லா பாவத்தையும் மன்னித்து விடுகிறேன். எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை. நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். எனது அடிமையை நான் மன்னிக்கிறேன். யார் கேட்பது? 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3540.
 
அல்லாஹ் மன்னிக்க காத்துக் கொண்டிருக்கிறான். எதை நிபந்தனையாக சொல்கிறான்? அவர்கள் செய்த பாவங்களை, அவர்கள் பாவம் என்று தெரிந்ததற்கு பிறகு அதில் விடாப்பிடியாக இருக்க மாட்டார்கள். அதை தொடர மாட்டார்கள். அதை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்க மாட்டார்கள். 
 
இது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றில் பெற வேண்டிய முக்கியமான பாடம், படிப்பினை ஆகும். 
 
ஷைத்தானின் ஊசலாட்டம் என்பது, ஷைத்தானின் வழிகேடு என்பது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கையில் நாம் பெற வேண்டிய மிக முக்கியமான ஒன்று. 
 
மேலும், அந்த ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் பேசினான்:
 
قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ (16) ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ
 
 (அதற்கு இப்லீஸ், இறைவனை நோக்கி) ‘‘நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன் நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்'' (என்றும்) ‘‘பிறகு, நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்'' என்றும் கூறினான். (அல்குர்ஆன் 7 : 17)
 
ஷைத்தான் நமக்கு எதிரி. அவன் நமக்கு எந்த நன்மையும் செய்ததில்லை. ரப்புல் ஆலமீன் நம்முடைய ரப்பு. நம்முடைய அரசன். நமக்கு அருள் புரிந்தவன். நம்மைப் படைத்தவன். நமக்கெல்லாம் இரணம் அளிப்பவன். நாம் பெற வேண்டிய அனைத்து அருள்களும் அல்லாஹ்வுடையது.
 
கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். இப்படி உபகாரம் செய்யக்கூடிய, அல்லாஹ்வுடைய கட்டளையை மீறி ஷைத்தானுக்கு கீழ்படிவதா? 
 
ஷைத்தானுடைய ஒரு கட்டளை, அல்லது ஷைத்தானுடைய உடைய ஒரு ஆசை, அதில் எந்த பாவம் இல்லை என்றாலும் கூட, அது ஷைத்தான் இடத்தில் இருந்து வந்தால் நாம் சிந்திக்க வேண்டும். அவனுக்கு மாறு செய்ய வேண்டும். 
 
காரணம், இவன் நம் தந்தை மீது பொறாமைப்பட்டவன். நம் தந்தையை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவன். இவன் ஒரு தீயவன். இப்படியெல்லாம் இருந்தும் கூட, அதற்கு மேலாக நம்மை வழி கெடுப்பேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து வந்திருக்கிறான்.
 
அவனை குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ وَمَنْ يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَى مِنْكُمْ مِنْ أَحَدٍ أَبَدًا وَلَكِنَّ اللَّهَ يُزَكِّي مَنْ يَشَاءُ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
 
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய பாதைகளை, அடிச்சுவடுகளை, பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் அடிச்சுவடுக்கு பின்னால் செல்வார்களோ ஷைத்தான் என்ன செய்வான்? அசிங்கமான, ஆபாசமான, மானக்கேடான காரியங்களை, பாவமானதை தான் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பான். இப்படி அல்லாஹ் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறான். (அல்குர்ஆன் 24 : 21)
 
ஷைத்தானைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்காமல் இருந்தாலும் ஷைத்தான் சொல்வது அல்லாஹ் சொல்வதற்கு முரண் கொண்டால் கூட ஷைத்தான் கீழ்ப்படியக் கூடாது. கட்டுப்படக் கூடாது. 
 
காரணம் அவன் தீயவன். அவன் ஒரு கெட்டவன். அதில் வெளிப்படையாக நமக்கு தீமை தெரியவில்லை என்றால் கூட பின்னால் தீமை மறைந்திருக்கலாம்.
 
இப்படியிருக்க வெளிரங்கத்தில் அவன் சொல்லக்கூடிய கூற்று அல்லாஹ்வுடைய இந்த கட்டளைக்கு மாற்றமாக இருக்கிறது. அல்லாஹ் தடுத்த இந்த பாவத்திற்கு மாறு செய்வதாக இருக்கிறது. 
 
இன்னும் எத்தனையோ பாவங்களும் எத்தனையோ தவறுகளும் அதில் மிகவும் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகும் கூட ஒரு மனிதன் ஷைத்தானுடைய ஊசலாட்டத்திற்கு பின்னால் சென்றால், எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை பார்க்க வேண்டும். 
 
இந்த ஷைத்தான் நாளை மறுமையில் இப்படி சொல்வான்:
 
وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُكُمْ فَأَخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِيَ عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنْفُسَكُمْ مَا أَنَا بِمُصْرِخِكُمْ وَمَا أَنْتُمْ بِمُصْرِخِيَّ إِنِّي كَفَرْتُ بِمَا أَشْرَكْتُمُونِ مِنْ قَبْلُ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
 
(இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.) நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; ‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான். (அல்குர்ஆன் 14 : 22)
 
அந்த நேரத்தில் அவதிப்பட்டு, கைசேதப்பட்டு எந்தவிதமான பயனும் இல்லை. ஷைத்தானுடைய இந்த வழிகேடுகளைப் பற்றி அவன் எப்படி எல்லாம் மனிதர்களை வழிகெடுப்பான். 
 
இசை மூலமாக, பெண்களின் மூலமாக, ஹராமான பொருளாதாரம் மூலமாக, உலக ஆசைகள் மூலமாக, இப்படியாக ஒரு பெரிய பட்டியலை அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான். 
 
அல்லாஹ்வுடைய கட்டளையை மீறுவதற்கு தூண்டக்கூடிய, அல்லாஹ்வை மறப்பதற்கு தூண்டக்கூடிய, அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும், மார்க்கத்திலிருந்தும் திசை திருப்பக்கூடிய ஒவ்வொன்றும் அது ஷைத்தானுடைய செயல் என்று புரிந்து கொள்ள வேண்டும். 
 
அது பார்ப்பதற்கு ஹலாலாக இருந்தாலும் சரி, பார்ப்பதற்கு எந்த தவறும் இல்லாமல் இருந்தாலும் சரி. 
 
அல்லாஹ் சொல்லக்கூடிய முக்கியமான காரணங்களில் ஒன்று. மதுவைப்பற்றி சொல்லும்போது, சூதாட்டத்தை பற்றி சொல்லும் பொழுது, இதன் மூலமாக ஷைத்தான் உங்களை அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து திருப்ப நினைக்கின்றான். இதன் மூலமாக ஷைத்தான் உங்களை தொழுகையிலிருந்து திருப்ப நினைக்கின்றான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ
 
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?) (அல்குர்ஆன் 5 : 91)
 
எந்த ஒரு செயலால் அடியான் அல்லாஹ்வை மறக்க நேரிடுகிறதோ, தொழுகையிலிருந்து தூரமாக நேரிடுகிறதோ, எந்த ஒரு செயலால் இபாதத்தில் அலட்சியம் ஏற்படுகிறதோ, அதனுடைய இறுதி பாவமாகத்தான் இருக்கும் அதனுடைய இறுதி கஷ்டமாகத்தான் இருக்கும்.
 
இந்த மன உறுதி நம்மிடத்தில் வர வேண்டும். என்த மன உறுதி பற்றி அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கூறினானோ, அல்லாஹ்விடத்தில் அந்த மன உறுதியை நாம் கேட்க வேண்டும். அதற்கு தான் இஸ்தாகாஃபா அதற்குத்தான் சொல்லப்படுகிறது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் இதை குறித்துதான் பயந்தார்கள். அல்லாஹ்விடத்தில் யாருக்கு இக்லாஸ் இருக்குமோ, அந்த இக்லாஸ் உள்ளவர்கள் இஸ்திகாமதில் இருக்கமுடியும்.
 
இக்லாஸ் பற்றி அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் மிகவும் வலியுறுத்தினார்கள். 
 
அல்லாஹ் கூறியது போன்று,
 
قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى (123) وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى (124) قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا (125) قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى (126) وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى
 
 ‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான். எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம். (அச்சமயம்) அவன் ‘‘என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேன்ன!'' என்று கேட்பான்.
 
அதற்கு (இறைவன்) ‘‘இவ்வாறே (குருடனைப்போன்றே உன் காரியங்கள் இருந்தன) நம்வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்'' என்று கூறுவான். எவன் வரம்பு மீறி, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும். (அல்குர்ஆன் 20 : 123-127)
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவரையும் இம்மை மறுமை உடைய நஷ்டத்திலிருந்து, ஷைத்தானுடைய ஊசலாட்டத்தில் இருந்து, ஷைத்தானுடைய எல்லா விதமான வழிகேட்டில் இருந்து பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/