HOME      Khutba      முஃமின்களின் தாய் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா! | Tamil Bayan - 942   
 

முஃமின்களின் தாய் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா! | Tamil Bayan - 942

           

முஃமின்களின் தாய் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா! | Tamil Bayan - 942


முஃமின்களின் தாய் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா!!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : முஃமின்களின் தாய் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா!!
 
வரிசை : 942
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 17-01-2025 | 17-07-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு கட்டுப்பட்டவர்களாக வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கு முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் தோழர்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் நேரான கொள்கையை, நேரான பாதையை, மனத்தூய்மையை, அல்லாஹ்வின் மன்னிப்பை, அல்லாஹ்வின் அன்பை, அருளை, மறுமையின் மகத்தான வெற்றியை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா உடைய பயத்தை உங்களுக்கும் எனக்கும் முதலாவதாக உபதேசம் செய்கிறேன். யார் அல்லாஹ்வை பயந்து கொண்டார்களோ அவர்களுடைய இம்மை காரியங்களும் மறுமை காரியங்களும் சீர் பெற்றுவிடும். அல்லாஹ்வுடைய பயத்தைக் கொண்டு நம்முடைய காரியங்களை அல்லாஹ்விடத்தில் நாம் இலகுவாக்கிக் கொள்ளலாம். நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அல்லாஹு தஆலா தந்தருள்வான்! 
 
அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய இஸ்லாம் என்ற இந்த பரிசுத்தமான நேர்வழியிலே, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் கண்ணியத்திற்குரிய சஹாபாக்களையும் பின்பற்றுகின்ற, நேர்வழியில் இருக்கின்ற வெற்றி பெற்ற கூட்டத்திலே அல்லாஹுத்தஆலா நம்மை ஆக்கி இருக்கின்றான். அந்தக் கூட்டத்தில் அல்லாஹு தஆலா இறுதிவரை நம்மை நிலைத்திருக்க செய்வானாக! 
 
நம்முடைய சிந்தனைகளில் சொற்களில் வழிகேடுகள் குழப்பங்கள் தடுமாற்றங்கள் நிகழ்வதிலிருந்து அல்லாஹுத்தஆலா நம்மை பாதுகாப்பானாக! ஆமீன். 
 
அன்பிற்குரிய சகோதரர்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சஹாபிய பெண்களின் தியாகம் அவர்களுடைய பங்களிப்பு என்பது மிகவும் நினைவு கூரத்தக்கதாகும். 
 
இஸ்லாமிய சமூகத்திதிலிருந்து, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உருவாக்கிய சமுதாயத்திலிருந்து சஹாபிய பெண்களின் பங்களிப்பை பிரித்துப் பார்க்க முடியாது. ஆண் சஹாபாக்கள் எந்த அளவு வீரத்தாலும், பொறுமையாலும், சகிப்புத்தன்மையாலும், கொடைத்தன்மையாலும், கல்வியினாலும் இன்னும் பல சிறப்புகளாலும் அறியப்படுகிறார்களோ அது போன்று தான் சஹாபிய்யாத் -கண்ணியத்திற்குரிய நபித்தோழிகள். சஹாபியாத் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய  சஹாபிய பெண்மணிகள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக! 
 
அதிலே குறிப்பாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்களை நாம் அறிவது நம்முடைய ஈமான் சார்ந்த விஷயமாகும். அல்லாஹு தஆலா அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி சொல்லும் பொழுது, 
 
اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ‌ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ‌  
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், மூமின்களுக்கு அவர்களின் (ஆன்மாக்)உயிர்களை விட மிக விருப்பத்திற்குரியவர். நெருக்கமானவர் என்று கூறிவிட்டு, நபியின் மனைவிகள் மூமின்களுக்கு தாய்மார்களாக இருக்கிறார்கள்; நபியின் துணைவிகள் நமக்கு அன்னையர்களாக இருக்கிறார்கள் என்று அல்லாஹுத்தஆலா அடையாளப்படுத்துகின்றான். (அல்குர்ஆன் 33:6)
 
அல்லாஹ்வின் அடியார்களே! எப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது ஈமானோ, அல்லாஹ்வின் கட்டளையோ, அதுபோன்று தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சஹாபாக்களை அதில் குறிப்பாக அஹ்லுல் பைத் -ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குடும்பத்தார்களை இன்னும் அதிலும் குறிப்பாக விசேஷமாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துணைவியர்களை நேசிப்பது. இது நம்முடைய ஈமான் சார்ந்த விஷயம். 
 
இன்று, எப்படி இஸ்லாமிய மார்க்கத்தில் பல கல்விகளை நாம் அறியாமல் மறந்து விடுகிறோமோ (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) அல்லது அலட்சியம் செய்து விடுகிறோமோ அவற்றில் ஒன்றுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்களை பற்றி நாம் அதிகம் அறியாமல் இருப்பது. 
 
அவர்கள் பேசத் தகுதியானவர்கள். நினைவு கூரத் தகுதியானவர்கள். புகழப்படுவதற்கு தகுதியானவர்கள். யாரை அல்லாஹ் புகழ்ந்தானோ, யாரை நோக்கி குர்ஆனிலே ஓதப்படக் கூடிய வசனங்களை இறக்கினானோ;
 
يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ ‏
 
(அல்குர்ஆன் 33:28)
 
يٰنِسَآءَ النَّبِىِّ 
 
(அல்குர்ஆன் 33:30)
 
நபியின் மனைவிமார்களே! நபியே உங்களது மனைவிமார்களுக்கு! என்ற எத்தனை வசனங்களில் அந்த கண்ணியத்திற்குரிய சிறப்பிற்குரிய முன்னோடிகளான அந்தப் பெண்களைப் பற்றி, நம்முடைய தாய்மார்களை பற்றி அல்லாஹு தஆலா பேசி இருக்கின்றான்! 
 
நாம் சிந்தித்துப் பார்த்தோமா! நம்மில் எத்தனை பேருக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனை மனைவிமார்கள் என்பது தெரியும்? பலருக்கு தெரியவே தெரியாது. 
 
கதீஜா ரலியல்லாஹு அன்ஹா, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, இப்படி ஒரு சிலருடைய பெயர்களை தவிர பல மனைவிமார்களின் பெயர்கள் தெரியாது. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்ன செய்தார்கள்? இந்த உம்மத்திற்கு என்ன கல்வியை கொடுத்தார்கள்? அவர்கள் செய்த தியாகம் என்ன? பங்களிப்பு என்ன? எத்தகைய இன்னல்களை எல்லாம் இந்த தீனுக்காக சுமந்தார்கள்? தாங்கினார்கள்? என்பது யாருக்கு தெரியும்? 
 
அல்லாஹ்வின் அடியார்களே! குறிப்பாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்கள் கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்குப் பிறகு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிக விருப்பமான,
 
الصديقة بنت الصديق ,الحبيبة بنت الحبيب
 
ஸித்தீக் -வாய்மையாளர்கள் என்ற தரத்தை அடைந்த, அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வின் தூதர் இடத்தில் மிகவும் வாய்மையாளர், ஈமானிலே மிக உண்மையாளர் என்று அறியப்பட்டவருடைய மகளார்; அல்லாஹ்வுடைய தூதரின் கலீஃபாவின் மகளார்; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகப் பிரியமான மிக நேசமான மனைவியார் நம்முடைய தாயார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை பற்றி தான் சிறிது நாம் அறிய இருக்கின்றோம். 
 
அல்லாஹுவின் அடியார்களே! ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மகளார். அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மனைவிமார்களில் ஒருவராகிய உம்மு ரூமானுக்கு பிறந்தவர்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் கிடைத்ததற்கு பிறகு பிறந்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தாயும் தந்தையும் ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு அழைத்து வந்தார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை இழந்த போது, கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மரணம் ஏற்பட்டபோது, அதற்குப் பிறகு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய ஆறாவது வயதிலே அல்லாஹ்வின் கட்டளையின்படி அல்லாஹுவின் அறிவிப்பின்படி அவர்களை திருமணம் செய்கிறார்கள். 
 
பிறகு, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பத்ரு போர் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது, ஹிஜ்ரி மூன்றாவது ஆண்டிலே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா பருவ வயதை அடைந்து பாலிகானதற்கு பிறகு திருமண வாழ்க்கைக்கு அவர்கள் தயாராகி விட்டதற்குப் பிறகு அன்சாரி பெண்களால் அலங்கரிக்கப்பட்டு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு குடும்ப வாழ்க்கை நடத்துவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை தவிர வேறு கன்னிப் பெண்ணை மணந்ததில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மணந்த அத்தனை மனைவிமார்களும் கணவனை இழந்த விதவைகளாக இருந்தார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவிமார்களில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தான் கன்னி பெண்ணாக இருந்தார்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மிகவும் நேசித்தார்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
أُرِيتُكِ قَبْلَ أنْ أتَزَوَّجَكِ مَرَّتَيْنِ، رَأَيْتُ المَلَكَ يَحْمِلُكِ في سَرَقَةٍ مِن حَرِيرٍ، فَقُلتُ له: اكْشِفْ، فَكَشَفَ فإذا هي أنْتِ، فَقُلتُ: إنْ يَكُنْ هذا مِن عِندِ اللَّهِ يُمْضِهِ، ثُمَّ أُرِيتُكِ يَحْمِلُكِ في سَرَقَةٍ مِن حَرِيرٍ، فَقُلتُ: اكْشِفْ، فَكَشَفَ، فإذا هي أنْتِ، فَقُلتُ: إنْ يَكُ هذا مِن عِندِ اللَّهِ يُمْضِهِ
 
ஆயிஷா மூன்று இரவுகள் உன்னை எனக்கு கனவிலே காண்பிக்கப்பட்டது. பட்டுத்துணியிலே உன்னை வானவர் என்னிடம் கொண்டு வந்தார். அவர் கூறினார்: இவர் தான் உன்னுடைய மனைவி என்பதாக. அப்போது உன்னுடைய அந்த பட்டுத் துணியை அகற்றி உன்னுடைய முகத்தை பார்த்தேன். நீங்கள் தான் அவராக இருந்தீர்கள். அந்த மூன்று இரவுகளிலும் எனக்கு காண்பிக்கப்பட்ட போது நான் சொல்லுவேன்; இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருக்குமேயானால் அல்லாஹ் இதை நடத்தி தருவான்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 7012.
 
இது ரசூல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களோடு நடந்த அந்த திருமணத்தினுடைய முன் நிகழ்வு. 
 
அமர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். மிகப்பெரிய நபித்தோழர். அல்லாஹ்வுடைய தூதருக்காக இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு பெரிய தியாகங்களை செய்த ஒரு மூத்த சஹாபி. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் جيش السلاسل என்ற போருக்கு இவரை துணை அமீராக நியமித்து அனுப்புகிறார்கள். இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர். ஆனால், எப்போது ஈமான் இஸ்லாம் உறுதியாகி விடுகிறதோ அங்கு அதற்கு காலங்கள் தேவையில்லை. 
 
பல காலம் முஸ்லிமாக இருந்தவர். ஈமானை விட்டு ஓடிவிடலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லது ஈமானிலே பலவீனமாக இருக்கலாம். நேற்று இஸ்லாமிற்கு வந்தவர் அவர் பலகால முஸ்லிமாக இருப்பவரை விட ஈமானில் உறுதியானவராக வலுமிக்கவராக இருக்கலாம். 
 
நம்பிக்கை என்பது உள்ளத்தில் ஊறக்கூடிய, உள்ளத்தில் உறுதியாகி விடக் கூடிய ஒரு அம்சமே தவிர அது காலத்தால் உள்ள அம்சம் அல்ல. யார் ஈமானை தனக்குள் உறுதிப்படுத்த விரும்புவாரோ அல்லாஹ் அவருக்கு ஈமானை உறுதிப்படுத்திக் கொடுப்பான். 
 
யார் இக்லாஸை தனக்குள் உறுதிப்படுத்த விரும்புவாரோ அவருக்கு அல்லாஹ் இக்லாஸை உறுதிப்படுத்துவான். யார் அல்லாஹ்விற்காக அல்லாஹ்வுடைய தூதருக்காக தன்னை தனது வாழ்க்கையை தனது அறிவை திறமை செல்வத்தை அர்ப்பணிக்க விரும்புவாரோ அவருக்கு அல்லாஹ் வாய்ப்பளிப்பான். 
 
இதிலே முந்தி இஸ்லாத்தை ஏற்றவர் அல்லது நீண்ட காலமாக இஸ்லாத்தில் இருப்பவர் அல்லது முஸ்லிம்களுக்கு பிறந்தவர் என்று பாகுபாடு எல்லாம் கிடையாது. அல்லாஹ் உள்ளத்தை பார்க்கிறான்.
 
وَمَنْ يُّؤْمِنْ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ‌ 
 
ஈமான் யாருக்கு இருக்குமோ அவருடைய கல்புக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்கின்றான். (அல்குர்ஆன் 64:11)
 
அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை துணை அமீராக நியமித்து போருக்கு அனுப்புகிறார்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படித்தான். சஹாபாக்கள் அப்படித்தான். அந்த நபியை பார்த்தால் அந்த நபியின் மீது பாசம் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. அவரை நேசிக்காமல் யாரும் இருக்க முடியாது. அவருக்கு மிக நெருக்கமானவராக நான் ஆக வேண்டும் என்ற துடிப்பு வந்துவிடும். அப்பேற்ப்பட்ட ஒரு வசீகர தன்மை கொடுக்கப்பட்டவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 
 
ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும், சிறியவர்களாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் அல்லாஹ்வுடைய தூதரை பார்த்து விட்டால் அவ்வளவு பெரிய ஒரு அன்பை பாசத்தை நேசத்தை அல்லாஹு தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்ப்பவர்களுடைய உள்ளத்திலே நிரப்பி விடுவான். 
 
அம்ர் இப்னு ஆஸ் யார் இவர் உங்களுக்கு தெரியும். ஹபஷாவிற்கு மூமின்கள் ஹிஜ்ரத் செய்து சென்றார்களே மக்காவிலிருந்து அப்போது அந்த மூமின்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்பதற்காக நஜ்ஜாஷி மன்னர் இடத்திலே தூதராக சென்றவர். 
 
அந்த அளவுக்கு முஸ்லிம்கள் மீது இஸ்லாமின் மீது வெறுப்பை கொண்டிருந்தவர். அல்லாஹுத்தஆலா அவருடைய உள்ளத்திலே ஈமானை போட்டு விட்டான். அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்தை கொடுத்து விட்டான். ஹிதாயத் நேர்வழி அல்லாஹ்வுடைய கையிலே இருக்கிறது யாருக்கு அல்லாஹ் நாடுகிறானோ அவர்களுக்கு ஹிதாயத்தை தருவான். அவருடைய ஈமான் இஸ்லாம் அழகாகிவிட்டது; பரிசுத்தமாகிவிட்டது. 
 
இப்போது ரசூல்லாஹ்விடத்திலே என்ன கேட்கிறார் தெரியுமா? நேற்று தானே இஸ்லாமிற்கு வந்தோம். இப்போது தானே சில நாட்கள் ஆகி இருக்கிறது. இங்கே அது பேச்சு இல்லை. 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே நேரடியாக சென்று கேட்கிறார்கள்; 
 
أيُّ النَّاسِ أحَبُّ إلَيْكَ؟ قَالَ: عَائِشَةُ، فَقُلتُ: مِنَ الرِّجَالِ؟ فَقَالَ: أبُوهَا، قُلتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: ثُمَّ عُمَرُ بنُ الخَطَّابِ، فَعَدَّ رِجَالًا
 
அல்லாஹ்வின் தூதரே! மக்களில் உங்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய பண்பாடு எப்படி என்றால், யார் தன்னிடத்தில் பழகினாலும் அவரை தனக்கு மிக நேசத்திற்குரியவராக பாவிப்பார்கள். ஒவ்வொருவரும் பிறரை விட நான் தான் இந்த நபிக்கு நெருக்கமானவர் என்று எண்ணுகிற அளவுக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்கள் மீது பாசத்தை அன்பை பொழிவார்கள். 
 
யாருடைய உள்ளத்திலே மனத்தூய்மை இருக்குமோ நேர்மை இருக்குமோ நீதம் இருக்குமோ கண்டிப்பாக அவர் தன்னுடைய தோழர்கள் இடத்தில் அப்படித்தான் நடந்து கொள்வார். அதற்கு மிகப்பெரிய முன்னோடி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதார்த்தமானவர்கள். அவர்கள் எதார்த்தமாக சொன்னார்கள்: எனக்கு மக்களில் மிக விருப்பமானவர் என்னுடைய மனைவி ஆயிஷா என்று. 
 
அவர் என்ன எதிர்பார்த்தார்? தன்னை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்வார்களோ என்ற எதிர்பார்ப்பிலே அவர் கேட்கிறார். 
 
பிறகு அந்த சஹாபி அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு சிறிது தாமதித்து விட்டு பிறகு அல்லாஹ்வின் தூதரே! நான் மனைவிமார்களில் கேட்கவில்லை. நானோ ஆண்களில் யார் உங்களுக்கு விருப்பமானவர் என்று கேட்கிறேன் என்று சொன்னார். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடனே அடுத்து மிக அழகிய பதிலாக ‘’ஆயிஷா உடைய தந்தை’’ என்று சொன்னார்கள். 
 
பாருங்கள் அமர் இப்னு ஆஸ் உடைய அந்த தேடலை! அல்லாஹ்வின் தூதரே! அபூபக்கருக்கு பிறகு யார் பிரியமானவர்? உங்களுக்கு அதிகம் பிடிக்கும் ‘’உமர் ‘’என்றார்கள். 
 
இப்படியாக சளைக்காமல் அம்ர் இப்னு ஆஸ்சும் கேட்டுக் கொண்டிருக்க அடுத்த அடுத்ததாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஒரு சஹாபியின் பெயரை சொல்லிக்கொண்டே வருகிறார்கள். 
 
அம்ர் இப்னு ஆஸ் பார்த்தார். இது என்னடா வம்பா இருக்கே. கடைசி ஆளா நம்ம போய்ட வேணா போதும் இதோட நம்முடைய கேள்வியை நிறுத்திக் கொள்வோம் என்பதாக அங்கே அவர் முடித்துக் கொள்கின்றார். 
 
அறிவிப்பாளர் : அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3662.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவ்வளவு பிரியமானவர் நம்முடைய அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. 
 
அது மட்டுமா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விசேஷமான துஆவிற்கு உரியவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா. அவர்கள் மூலமாக அறிவிக்கப்படுகிறது. 
 
சஹாபாக்கள் எப்போதும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே ஏதாவது கேட்டு பெறுவதாக இருந்தால் குறிப்பாக துஆக்கள் கேட்டு பெறுவதாக இருந்தால் அதற்கான சந்தர்ப்பத்தை தேடுவார்கள். 
 
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தார்கள். சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே எனக்காக துஆ கேளுங்கள்.
 
ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எதிர்பார்த்தது இதைத்தான். நம்மில் ஒருவர் நமது தலைவரிடத்திலே எதிர்பார்க்கக் கூடிய விஷயங்கள் எதையும் கண்ணியத்திற்குரிய சஹாபாக்களோ சஹாபிய பெண்மணிகளோ தங்களின் தலைவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதிர்பார்த்ததே இல்லை. துன்யாவுக்காக வாழாத ஒரு உத்தமக் கூட்டம் உலகத்திலே பிறந்து வாழ்ந்து முன்மாதிரியாக நடந்திருக்கிறது என்றால் அது சஹாபாக்களின் கூட்டம் தான். 
 
நமக்கோ எப்போதும் நமது சிந்தனையில் எதிர்பார்க்கக் கூடிய விஷம் துன்யா. ஆஹிரத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சஹாபாக்களை பொறுத்தவரை மொத்த கவனமும் ஆகிறத்தை நோக்கித்தான். அது சீராகிவிட்டால் துன்யாவைப் பற்றி பிரச்சனையே இல்லை. இறுதியாக என்ன நடந்து விட போகிறது துன்யாவிலே மரணத்தை தவிர. எப்படி இருந்தாலும் மரணம் தான் முடிவு. அல்லாஹ் சொல்லிவிட்டான் 
 
وَلَٮِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَا۟ اِلَى اللّٰهِ تُحْشَرُوْنَ‏
 
முஃமின்களே! உங்களுக்கு என்ன பிரச்சனை நீங்கள் செத்தாலும் கொல்லப்பட்டாலும் என்னிடம் தானே எழுப்பப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:158)
 
உங்களுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. நீங்கள் வாழ்ந்தாலும் வெற்றியாளர்களாக கண்ணியமானவர்களாக வாழ்வீர்கள். நீங்கள் கொல்லப்பட்டாலும் ஷஹீத்களாக என்னிடம் தானே வருவீர்கள். 
 
பிரச்சனை யாருக்கு? அல்லாஹ்வை நிராகரிக்கின்ற கூட்டத்திற்கு!. பிரச்சனை யாருக்கு அல்லாஹ்வை இணை வைக்கின்ற கூட்டத்திற்கு.! பிரச்சனை யாருக்கு? அல்லாஹு தடுத்த பெரும் பாவங்களை செய்யக்கூடியவர்களுக்கு.! அவர்கள் அல்லாஹ்வின் சாபத்திலே இருக்கிறார்கள். செல்வத்தில் இருந்தால் என்ன? செழிப்பில் இருந்தால் என்ன? ஆட்சியில் இருந்தால் என்ன? அதிகாரத்தில் இருந்தால் என்ன? இந்த உலக வாழ்க்கையின் அத்தனை வசதிகளும் கொடுக்கப்பட்டால் என்ன? 
 
ஒரு மனிதன் பெரும் பாவத்திலே நிராகரிப்பிலே இணை வைப்பிலே இருந்தால் அவன் அல்லாஹ்வின் சாபத்திலே இருக்கிறான். அவன் தான் பிரச்சனை. அவனுக்குத்தான் பிரச்சனை. ஏழையோ பணக்காரனோ பிரச்சனை முஸ்லிமுக்கு அல்ல. மூமினுக்கு அல்ல. 
 
என்ன நடந்து விடப்போகிறது இந்த உலகத்திலே? உணவு இல்லை என்றாலும் கூட, உடை இல்லை என்றாலும் கூட, இறுதியாக இந்த உலகத்தில் மரணம் அவ்வளவுதான். இதோடு உலகம் முடிந்து விடப் போகிறது. 
 
அன்பானவர்களே! ஆஹிரத் மறுமை மறுமை மறுமை! எழுப்பப்படக்கூடிய அந்த நிரந்தரமான வாழ்க்கை! எங்கே மரணம் இல்லையோ, மரணத்திற்கே மரணம் கொடுக்கப்படுமோ அந்த வாழ்க்கையில் அல்லாஹ் பொருந்தி கொள்ள வேண்டும். 
 
சொர்க்கத்தின் வெற்றி கிடைக்க வேண்டும். அதை யார் தங்களது சிந்தனைகளில் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டார்களோ அவர்களுக்கு இந்த உலகம் ஒரு பொருட்டே அல்ல. 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ்விடத்திலே கேட்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இந்த மகிழ்ச்சியான நேரத்தில் எனக்கு நீங்கள் ஒரு துஆ கேட்கலாமே! 
 
ஸுப்ஹானல்லாஹ்! என்ன துஆவை எதிர்பார்த்து இருப்பார்கள். இங்கும் பார்த்தால் நமக்கு தெரிந்ததெல்லாம் நாம் அக்கறையாக கேட்கக்கூடிய துஆவை நீங்கள் யோசித்துப் பாருங்கள்!
 
பொதுவாக நான் சொல்கிறேன்; ரொம்ப அக்கறையா ஈடுபாட்டால் நம்ம கேட்கிற துஆ. அதுல கூட சுத்தி பார்த்தால் இந்த துண்யா தான் இருக்கும். யா அல்லாஹ்! காச கொடு பணத்தை கொடு பங்களாவை கொடு வீட்டை கொடு சொத்தை கொடு சுகத்தை கொடு இவ்வளவுதான். 
 
சொர்க்கத்திற்கு உள்ள அக்கறை அழவேண்டும். சொர்க்கத்திற்காக நரகத்தை பயந்து அழுது அல்லாஹ்விடத்திலே கேட்க வேண்டும். அல்லாஹ்வுடைய அன்பை அப்படியே சுஜூதிலே தனியாக யாரும் இல்லாத நேரத்திலே இரண்டு ரக்அத்திலே;
 
 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
 
யா அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தை கொடு என்று கதறி அழ வேண்டும். அதுதான் துஆ.
 
நூல் : அபூ தாவூத், எண் : 796.
 
ஆனால் பாருங்கள்! துன்யாவை கேட்கும் போது அவ்வளவு உருக்கமாக, அல்லாஹ் இதுதான் நீ தான் கொடுத்தாகணும் அப்படி கேட்போம். சொர்க்கத்தை மறுமையை கேட்கும் போது அப்படியே சொல்லிவிட்டு கடந்து சென்று விடுவோம். என்னமோ அது நமக்கெல்லாம் ரிசர்வ் பண்ணப்பட்ட மாதிரி. ரிசர்வ் செய்யப்பட்ட சஹாபிய பெண்கள் சஹாபாக்கள் எப்படி அதற்காக அவர்கள் அல்லாஹ்விடத்திலே மன்றாடினார்கள் என்பதை யோசியுங்கள். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவிற்காக துஆ செய்தார்கள்: 
 
اللَّهُمَّ اغْفِرْ لِعَائِشَةَ مَا تَقَدَّمَ مِنْ ذَنَبِهَا وَمَا تَأَخَّرَ، مَا أَسَرَّتْ وَمَا أَعْلَنَتْ
 
அல்லாஹ் ஆயிஷாவுக்கு அவருடைய முன் பாவங்களை பின் பாவங்களை அவர்களின் தனிமையின் பாவங்களை அவர்கள் வெளிப்படுத்திய பாவங்களை மன்னித்தருள்வாயாக! 
 
அல்லாஹு அக்பர்! ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகிழ்ச்சியால் சந்தோஷத்தால் சிரித்து அப்படியே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மடியில் விழுந்து விடுகிறார்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : பஸ்ஸார், எண் : 2658, தரம் : ஹசன்.
 
நமது நபியைப் பற்றி அல்லாஹ் வர்ணிக்கிறான்;
 
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏
 
மூமின்களே! உங்களுக்கு வந்திருக்கக்கூடிய இந்த தூதர் யார் தெரியுமா? உங்களில் உள்ளவர். உங்கள் மீது பேராசை உள்ளவர். உங்களை சிரமப்படுத்துவது அவருக்கு மிகவும் முடியாத காரியம். அது ரொம்ப கடினமாக இருக்கும். உங்கள் மீது அக்கறை உள்ளவர். உங்கள் மீது இரக்கம் உள்ளவர். உங்கள் மீது நேசம் உள்ளவர். மூமின்களின் மீது மஹா கருணை உடையவர். (அல்குர்ஆன் 9:128)
 
அப்பேர்ப்பட்ட அந்த தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எத்தனை சந்தர்ப்பங்களில் இந்த உம்மத்தை அல்லாஹ்விடம் நினைவுக்கூர்ந்தார்கள். 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு இந்த துஆவினால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்! 
 
நம்முடைய பெண்கள் எப்படி? மனைவிமார்களுக்கு துன்யாவுக்காக வேண்டி கேட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்! நீங்கள் கேட்டுப் பாருங்கள் ஒரு டெஸ்ட் வச்சு பாருங்க. நானும் வச்சு பாக்குறேன். மனைவிமார்கள் இடத்தில் போய்; அல்லாஹ் உனக்கு பரக்கத்தை கொடுக்கட்டும்! நூறு பவுன் நகையை கொடுக்கட்டும்! அல்லாஹ் உனக்கு கோடி காசை கொடுக்கட்டும்! ஆமீன் ஆமீன் மாஷா அல்லாஹ் என்று சொல்லிட்டு பிரியாணி போட்டுடுவாங்க. 
 
அதுக்கு அப்பறமா அல்லாஹ் உனக்கு சொர்க்கத்தை கொடுக்கட்டும்! அல்லாஹ் உனக்கு சொர்க்கத்தில் உயர்ந்த பதவியை கொடுக்கட்டும்! அப்படின்னு ஒரு துஆவை போட்டு பாருங்கள்! அப்படியா! அவ்வளவு தான்! முடிஞ்சு போச்சு!. ஏன்? நாம் எப்படியோ அப்படித்தான் நம்முடைய மனைவி. நம்மிலிருந்து உள்ளவர்கள் தானே அவர்கள். 
 
நமது நபி, உம்மத்துக்காகவே வாழ்ந்தவர்கள். நம்முடைய வலி அவர்களுக்கு வலிக்கும். அப்பேற்பட்ட நபி, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிடத்திலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
" أَيَسُرُّكِ دُعَائِي؟ "، فَقَالَتْ: وَمَا لِي لَا يَسُرُّنِي دُعَاؤُكَ؟، فَقَالَ - صلى الله عليه وسلم -: وَاللهِ إِنَّهَا لَدَعْوَتِي لِأُمَّتِي فِي كُلِّ صَلَاةٍ
 
ஆயிஷா என்னுடைய இந்த துஆ உனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய இந்த துஆ எனக்கு எப்படி சந்தோஷத்தை கொடுக்காமல் இருக்கும்?! 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஆயிஷா இது என்னுடைய உம்மத்து மூமின்கள் அனைவருக்கும் நான் கேட்கக்கூடிய துஆ. 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : பஸ்ஸார், எண் : 2658, தரம் : ஹசன்.
 
இதுதான் நம்முடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். நமக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்பவர்கள். அல்லாஹுத்தஆலா சூரா லுஹாவிலே சொல்கிறான்: 
 
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى‏
 
நபியே! உங்களுக்கு அல்லாஹ் மறுமையில் மிக மிக மிக உயர்ந்த நற்பாக்கியங்களை கொடுத்துக் கொண்டே இருப்பான் நீங்கள் திருப்தி அடைகிற வரை. (அல்குர்ஆன் 93:5)
 
இந்த வசனம் இறங்கிய பிறகு அல்லாஹ்விடத்திலே சொன்னார்கள்: யா அல்லாஹ் என்னுடைய உம்மத்தில் ஒருவர் நரகத்தில் இருக்கிற வரை என்னால் திருப்தி அடைய முடியாது. உடனே அல்லாஹு தஆலா ரசூலுல்லாஹ்விற்கு வாக்கு கொடுத்தான். 
 
إنَّا سَنُرْضِيكَ في أُمَّتِكَ، ولا نَسُوءُكَ
 
முஹம்மதே உங்களுடைய உம்மத்தின் விஷயத்தில் உங்களை நாம் பொருந்திக்கொள்ள செய்வோம் மன வருத்தமடைய செய்ய மாட்டோம் என்று. 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 202.
 
சுபஹானல்லாஹ்! சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உம்மத்தை குறித்து அவ்வளவு அக்கறை உள்ளவர்கள். 
 
அதுபோன்று, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குமோ ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். 
 
كَمَلَ مِنَ الرِّجالِ كَثِيرٌ، ولَمْ يَكْمُلْ مِنَ النِّساءِ إلَّا مَرْيَمُ بنْتُ عِمْرانَ، وآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وفَضْلُ عائِشَةَ علَى النِّساءِ كَفَضْلِ الثَّرِيدِ علَى سائِرِ الطَّعامِ.
 
ஆண்களில் பலர் ஈமானிலே  ஒரு உயர்ந்த நிலை பரிபூரண நிலையை எட்டி இருக்கின்றார்கள். ஆனால் பெண்களில் சொல்லப்போனால் இம்ரானுடைய மகள் மர்யம், ஃபிர்அவ்னுடைய மனைவி ஆசியாவை தவிர. அத்தகைய ஒரு ஈமானுடைய நிலையை அடையவில்லை. 
 
ஆயிஷாவின் சிறப்பு பெண்களுக்கு மத்தியிலே எப்படி என்றால் சரீத் என்ற அந்த கறியும் ரொட்டியும் கலந்த ஒரு உணவு அந்த உணவின் சிறப்பு எப்படி ஏனைய உணவுகளில் பார்க்கிலும் சிறப்பு இருக்கிறதோ அப்படித்தான் ஆயிஷா உடைய சிறப்பு என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3769.
 
ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
أنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، قالَ لَهَا: يا عَائِشَةُ هذا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلَامَ، فَقالَتْ: وعليه السَّلَامُ ورَحْمَةُ اللَّهِ وبَرَكَاتُهُ، تَرَى ما لا أرَى، تُرِيدُ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து, ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உனக்கு சலாம் கூறுகிறார். 
 
அல்லாஹ் அக்பர்! எப்பேற்பட்ட சிறப்பு பாருங்கள்! ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பதில் சொல்கிறார்கள்; அவர் மீதும் ஸலாமும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் அல்லாஹ்வுடைய பரக்கத்துகளும் நிலவட்டுமாக! 
 
பிறகு சொன்னார்கள்; ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதரே! என்னால் பார்க்க முடியாததை நீங்கள் பார்க்கிறீர்கள். அதே இடத்தில் தான் ஜிப்ரீல் இருக்கிறார். யாராலும் பார்க்க முடியவில்லை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களாலும் பார்க்க முடியவில்லை. 
 
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3769.
 
இந்த இடத்திலே நாம் ஒரு விஷயத்தை புரிய வேண்டும். உலகத்திலேயே ஈமானால் உயர்ந்தவர்கள் யார்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு ஸஹாபாக்கள். அந்த சஹாபாக்களாலேயே மலக்குமார்களை நேரடியாக பார்க்க முடியாது. அப்படி பார்ப்பதற்கான அந்த தகுதி இருந்திருக்குமேயானால் யார் பார்த்திருப்பார்கள் இந்த இடத்திலே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா பார்த்திருப்பார்கள். 
 
ஹதீஸ்களை புரிய வேண்டும். இந்த நிலை இப்படி இருக்க இன்று சூஃபி தரீக்கா என்று பெயர்களை சொல்லிக்கொண்டு நாங்கள் மலக்குல் மௌத்தை பார்க்கிறோம். நாங்கள் அந்த மலக்கை பார்க்கிறோம். இந்த மலக்கை பார்க்கிறோம். ஏன் இன்னும் சிலர் அல்லாஹுவையே பார்க்கிறோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் கவனிக்க வேண்டும்! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! 
 
சகோதரர்களே! நேரான பாதையில் இருந்து ஹதீஸ் குர்ஆன் சுன்னா ஸஹாபாக்களின் வழிமுறை என்ற ஆதாரத்தில் இருந்து ஒருவன் விலகுவானேயானால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அவர்கள் கண்டிப்பாக மௌட்டிகத்தில் மூடநம்பிக்கைகளில் முரண்பாடுகளில் விழுந்து விடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர் அம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூஃபா நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அங்கே சென்று இருந்தார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணத்திற்கு பிறகு நடக்கக்கூடிய நிகழ்வு இது. 
 
தங்களோடு சேர்ந்து போர் புரிய கூஃபாவாசிகளை அழைக்கும் படி. அலி ரலியல்லாஹு அன்ஹு அம்மார் அவர்களையும் தன்னுடைய மகனார் ஹசனையும் அனுப்பி வைத்தார்கள். அந்த நேரத்திலே அம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் அங்கே இருக்கிறார்கள். சொன்னார்கள் கூஃபாவாசிகளே! எனக்கு நன்றாக தெரியும்; நான் அறிந்திருக்கிறேன்; ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் துன்யாவிலும் ஆகிறத்திலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியாக இருக்கிறார்கள். 
 
என்றாலும் இப்போது அல்லாஹ் உங்களுக்கு ஒரு சோதனையை கொடுத்திருக்கிறான். நீங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைப் பின்பற்றுகின்றீர்களா அல்லது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுகிறீர்களா என்று அல்லாஹ் உங்களை சோதித்திருக்கிறான். 
 
அறிவிப்பாளர் : ஷஃபீக் இப்னு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3772.
 
எனவே கலிஃபாவின் பக்கம் நீங்கள் வந்து விடுங்கள் என்று அழைக்கின்றார்கள். இந்த ஹதீஸிலே தெளிவாக சஹாபாக்களின் வாயிலாக நமக்கு உறுதியாக அறியப்படுகின்றது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா எப்படி உலகத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மனைவியாக இருந்தார்களோ அதுபோன்று ஆகிறத்திலும் அவர்களுக்கு மனைவியாக இருப்பார்கள். இன்னும் பல ஹதீஸ்களிலே இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 
 
இன்ஷா அல்லாஹ் மேலும் பல விளக்கங்களை தொடர்ந்து சில ஜுமுஆக்களிலே பார்ப்போம். அல்லாஹ் தஆலா நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிவதற்கும் அவர்களுடைய குடும்பத்தார்களை அறிவதற்கும் அதன் மூலமாக நாமும் நம்முடைய சமுதாயமும் படிப்பினை பெற்று ஈமானிலே உறுதி பெறுவதற்கும் இந்த மார்க்கத்திற்காக தியாகங்களை செய்வதற்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/