இபாதுர் ரஹ்மான் | Tamil Bayan - 944
இபாதுர் ரஹ்மான்
ஜுமுஆ குத்பா தலைப்பு : இபாதுர் ரஹ்மான்!
வரிசை : 944
இடம் : JAQH மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் குறிச்சிப்பிரிவு, கோவை
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 24-01- 2025 | 24-07-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிகச் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிகக் கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழி-கட்டுப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். . (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அன்பிற்குரிய சகோதரர்களே! தாய்மார்களே! சகோதரிகளே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை உபதேசம் செய்தவனாக; அல்லாஹ்வுடைய தக்வாவை மனதில் வைத்து அல்லாஹ்வை பயந்து அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பின்பற்றி அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹலால் ஆக்கி அல்லாஹ் ஹராம் ஆக்கிய, தடுத்த அனைத்து சிறிய பெரிய பாவங்கள் குற்றங்கள் கொள்கைகள் செயல்கள் அனைத்தையும் விட்டு விலகி, அல்லாஹ் எப்படி விரும்புகிறானோ, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எப்படி வழி காட்டினார்களோ அந்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹுத்தஆலா நமக்கு மறுமையில் மகத்தான சொர்க்க வாழ்க்கையை தந்தருள்வானாக! இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் அல்லாஹு தஆலா மகத்தான வெற்றியை கண்ணியத்தை உயர்வைத் தருவானாக!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு சுப்ஹானஹு வ தஆலா நமக்காக மறுமை வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கிறான். அந்த மறுமை வாழ்க்கையில் அல்லாஹு சுப்ஹானஹு வ தஆலா நமக்கு சொர்க்க தோட்டங்களை, மாடமாளிகைகளை, நம்முடைய நஃப்ஸுக்கு ஆன்மாவுக்கு உள்ளம்கவர்ந்த பிடித்தமான எல்லா இன்பங்களையும் சுகங்களையும் மகிழ்ச்சிகளையும் அல்லாஹுத்தஆலா அங்கே நிரப்பமாக்கி வைத்திருக்கிறான்.
نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ
“நாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் நேசர்கள் ஆவோம். அ(ந்த சொர்க்கத்)தில் உங்கள் உள்ளங்கள் கவர்ந்தவையும் உங்களுக்கு உண்டு. இன்னும், அதில் நீங்கள் (வாய்மொழி ஏவி பெறுவதும்) கேட்பதும் உங்களுக்கு உண்டு.” (அல்குர்ஆன் 41:31)
வசனத்தின் கருத்து : முஃமின்களே நான் விரும்பியபடி உலகில் வாழ்ந்து மறுமைக்கு வாருங்கள். நீங்கள் வேண்டியது விரும்பியதெல்லாம் கிடைக்கும் படியான ஒரு சொர்க்கத்தை நான் வைத்திருக்கிறேன் என்று அல்லாஹு தஆலா வாக்களித்து இருக்கிறான்.
நீங்கள் கேட்டதெல்லாம் அங்கே உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் விரும்பியதெல்லாம் அங்கே உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய நஃப்ஸ் எதை ஆசைப்படுகிறதோ அது இந்த துன்யாவிலே உங்களுக்கு ஹராமாக -தடுக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் மறுமையிலே ஒரு முஃமினுக்கு அல்லாஹுத்தஆலா அவனுடைய நப்ஸ் எதையெல்லாம் விரும்புகிறதோ ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் சத்தியமாக நிறைவேற்றி தருவேன் என்று வாக்களிக்கிறான்.
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِىَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍ جَزَآءً بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
ஆக, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்காக (உலகில்) மறைத்து (சொர்க்கத்தில் வழங்க தயார் நிலையில்) வைக்கப்பட்டுள்ள கண்களுக்கு குளிர்ச்சியான (இன்பத்)தை ஓர் ஆன்மாவும் அறியாது. (அல்குர்ஆன் 32:17)
வசனத்தின் கருத்து : முஃமின்களே கவலைப்படாதீர்கள். சஞ்சலப்படாதீர்கள். இந்த உலக வாழ்க்கையில் மார்க்கத்தை பின்பற்றுவதிலே நீங்கள் சந்திக்கக்கூடிய சிரமங்களை இன்னல்களை பார்த்து நீங்கள் சோர்ந்து விடாதீர்கள். அல்லாஹ்வுடைய தீன் இது உங்களுக்கு ஒரு போராட்டம். அல்லாஹ்வுடைய தீன் நஃப்ஸுக்கு சிரமமாக இருக்கும். நீங்கள் மறுமைக்கு வாருங்கள். உங்களுடைய கண்கள் குளிர்ச்சி அடையும் அளவு உங்களுக்கு இன்பங்களை கொடுத்து நான் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவேன் என்று நம்மை படைத்த அல்லாஹு தஆலா நமக்கு வாக்களிக்கிறான்.
இதைவிட ஒரு பெரிய நற்செய்தி என்ன இருக்க முடியும்? அல்குர்ஆனிலே அல்லாஹுத்தஆலா தன்னுடைய நபிக்கு என்ன சொல்கிறான்?
நபியே என்னை ஈமான் கொண்ட நான் சொல்லக்கூடிய அமல்களை செய்யக்கூடிய எனது அடியார்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள். மகிழ்ச்சியான செய்தியை சொல்லுங்கள். அது என்ன மகிழ்ச்சியான செய்தி?
இந்த உலக வாழ்க்கையின் ஆடம்பரமா? இந்த உலக வாழ்க்கையின் வசதியா? இல்லை.. இல்லை அங்கே அல்லாஹ்வுடைய பொருத்தம் , சொர்க்கம் கிடைக்கும். அங்கே அல்லாஹ்வை பார்க்கலாம். படைத்தவன் ரஹ்மானை பார்க்கலாம். அழகான ஒளி மிக்க அல்லாஹுத்தஆலாவை பார்க்கலாம். அது சாதாரணமான ஒரு வாழ்க்கை அல்ல. அதற்காக இந்த உலகத்திலே தனி முயற்சி தேவை. நமது நஃப்ஸோடு.போராட வேண்டும். உள்ளப்போரட்டம்.
அல்லாஹு தஆலா 25வது அத்தியாயம் சூரா அல் ஃபுர்கானி லே 64-வது வசனத்திலிருந்து சொர்க்கத்தின் உயர்ந்த ஒரு (கேட்டகிரி) தரம், சொர்க்கத்தின் ஒரு பெரிய (விஐபி உடைய) முக்கிய பிரமுகர், முக்கியஸ்தர்களின் லிஸ்ட்டை சொல்கிறான்.
நமக்கெல்லாம் பூமி உலகில் முக்கிய புள்ளி (விஐபி) ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது அழியக்கூடிய கேவலப்படக்கூடிய வாழ்க்கை. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! மறுமையின் கண்ணியம் இருக்கிறதே அதுதான் உண்மையான கண்ணியம். அந்த மறுமையின் கண்ணியத்திலே அல்லாஹு தஆலா சொர்க்கத்திலே விஐபிகளாக ரொம்ப முக்கியமான மக்களாக அல்லாஹுத்தஆலா சிலரை அப்படியே கொண்டு போவான்.
اُولٰٓٮِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ
அவர்கள் பொறுமையாக இருந்ததால் அறை(கள் நிறைந்த உயரமான மாளிகை)களை கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும், அதில் அவர்களுக்கு முகமன் வாழ்த்து கூறப்பட்டும் ஸலாம் கூறப்பட்டும் அவர்கள் வரவேற்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 25:75)
இந்த உலக வாழ்க்கைச்சிரமங்களை சகித்தார்கள், பொறுத்தார்கள், மார்க்கத்தில் உறுதியாக இருந்தார்கள், தீன் அல்லாஹ்வுடைய மார்க்கம், ஆகிரத் மறுமை, அல்லாஹ்வுடைய சட்டம், குர்ஆன் சுன்னா, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு அல்லாஹ்வுடைய தீனை எடுத்துரைப்பது, இதிலே ஏற்படக்கூடிய பொருளாதார உடல் ரீதியான சமூக ரீதியான எல்லா இன்னல்களையும் துன்பங்களையும் எல்லாவிதமான அநியாயங்களையும் சகித்து கொண்டார்கள். தாங்கிக் கொண்டார்கள். எதையும் விட தயார் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் மாறு செய்வார்கள்; ஆனால் அல்லாஹ்விற்கு மாறு செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வை தேர்ந்தெடுத்தவர்கள்.
ஸப்ர் -உறுதி உள்ளவர்கள். அவர்களுக்காக சொர்கத்திலே மிகப்பெரிய அரண்மனைகள் தயார் நிலையில் இருக்கிறது.
அது மட்டுமா? அவர்கள் எங்கு திரும்பினாலும் வானவர்களிலேயே உயர்ந்த வானவர்கள் (எல்லா வானவர்களும் உயர்ந்தவர்கள் தான்) விஐபிகளை கவனிப்பதற்கு என்று அல்லாஹுத்தஆலா சொர்க்கத்திலே சில வானவர்களை வைத்திருக்கிறான் என்றால் அந்த வானவர்கள் அந்த சொர்க்கவாசிகளை எப்பொழுதும் சலாம் சலாம் -முகமன் கூறி வாழ்த்துகளை அள்ளி வழங்கி உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களுக்கு பணிவிடை செய்வதற்காக வாழ்த்து கூறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! அத்தகைய நல்லடியார்களில் நாம் ஆக வேண்டுமா? இல்லையா? அதற்கான ஆசை வேண்டுமா? இல்லையா? அல்லாஹுத்தஆலா சொல்லக்கூடிய 13 தன்மைகளை நாம் கவனிக்க வேண்டும். சூரா அல் புர்கானுடைய 64-வது வசனத்திலிருந்து இறுதி வசனம் வரை அல்லாஹுத்தஆலா விஐபிகளின் 13 குணங்களை சொல்கிறான்.
சகோதரர்களே ஆகிறத்துக்கான விஐபியாக ஆகுவது ரொம்ப எளிது. அதற்கு என்ன தேவையென்றால் அல்லாஹ்வுடைய கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.
அல்லாஹ்வுடைய மார்க்கம் இலகுவானது. அல்லாஹு தஆலா சொல்லக்கூடிய அந்த தன்மைகளின் பட்டியலை பாருங்கள். இதிலே சில தன்மைகள் நம்முடைய குணங்களோடு சம்பந்தப்பட்டது. இதில் சில நம்முடைய அமல்களோடு சம்பந்தப்பட்டது. இரண்டும் ஒரு முஃமின் இடத்திலே ஒன்று சேர வேண்டும். அவனுடைய குணாதிசயங்களும் செயல்களும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பக்கூடிய முறையிலே மாற வேண்டும். அவனுடைய செயல்களும் பண்பும் உள்ளமும் மாற வேண்டும்.
இன்று நம்மிலே சில முரண்பாடுகள் உள்ளன. சிலர் செயல்களை மட்டும் பேணுவார்கள். தொழுகைக்கு சரியா வந்துவிடுவார்கள். பிறகு வியாபாரத்திற்கு சென்றால் பொய் பேசுவார்கள். சிலர் சமூக பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால், அதே நேரத்திலே வணக்க வழிபாடுகள் இபாதத்துகள் இருக்காது. கேட்டா எங்க உள்ளம் சுத்தம் நாங்க நாலு பேருக்கு நல்லது செய்கிறோம் யாருக்கு அநியாயம் பண்றோம் என்று தத்துவம் பேசுவார்கள்.
அல்லாஹ்வுடைய தீன் அப்படிப்பட்ட நிலை தடுமாறிய மார்க்கம் அல்ல. சமநிலையுடைய மார்க்கம். ஒரு மனிதனுக்கு (இபாதத்) வணக்க வழிபாடு தேவையான அதே அளவிற்கு அவனுக்கு நற்குணங்களும் (அக்லாக்கும்) தேவை.
அல்லாஹுத்தஆலா சொல்கிறான். அல்லாஹுத்தஆலா இந்த விஐபிகளை நேசிக்கிறான் விரும்புகிறான் இவர்கள் மீது அவனுடைய அன்பின் மழையை பொழிந்திருக்கிறான். அதனால் தான் அவர்களைப் பற்றி பேச ஆரம்பிக்கும்போதே அவன் சொல்லக்கூடிய அந்த வாக்கியத்தைப் பாருங்கள்!
وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا
ரஹ்மானுடைய அடியார்கள் பூமியில் மென்மையாக (அடக்கமாக, பணிவாக, பெருமையின்றி, அக்கிரமம் செய்யாமல்) நடப்பார்கள். இன்னும், அவர்களிடம் அறிவீனர்கள் பேசினால் ஸலாம் கூறி (விலகச் சென்று) விடுவார்கள். (அல்குர்ஆன் 25:63)
வசனத்தின் கருத்து : அளவற்ற அருளாளன் அந்த பேரருளாளனுடைய அடியார்கள் என்று தொடங்குகிறான் எப்படி சொல்கிறான்? ரஹ்மான் ஆகிய என்னுடைய அடியார்கள் என்று நம்மை அல்லாஹ்வோடு இணைத்துக் கொள்கிறான்?.
அல்லாஹ்வோடு சேர்ந்து பேசப்படுவது இது சாதாரணமான விஷயமா? நபியுல்லாஹ் -அல்லாஹ்வுடைய நபி, ரசூலுல்லாஹ் -அல்லாஹ்வுடைய ரசூல், பைத்துல்லாஹ் -அல்லாஹ்வுடைய ஆலயம். இந்த 13 தன்மைகள் அல்லாஹ்விற்கு பிரியமானதாக இருப்பதால் இந்த தன்மைகள் கொண்டவர்களை எனக்குள்ளவர்கள், நான் தேர்ந்தெடுத்தவர்கள், நான் நேசிப்பவர்கள், எனக்கு நெருக்கமானவர்கள், ரஹ்மானின் அடியார்கள் என்று பலவாறு அல்லாஹ் புகழ்கிறான். பாருங்கள். !
அதில் முதலாவதாக அல்லாஹ் சொல்கிறான்: அவர்கள் பூமியிலே மென்மையாக அடக்கமாக நடப்பார்கள். வாழ்வார்கள்.
என்ன விளக்கம்? இமாம் தபரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி குர்ஆனுடைய மிகப்பெரிய விரிவுரையாளர். சஹாபாக்கள் தாபியீன்கள் இடமிருந்து இந்த வசனத்திற்கான விளக்கத்தை எழுதுகிறார்கள்.
அல்லாஹ் நாடியிருந்தால் இதற்கு மூன்று வசனங்களுக்கு பிறகு சொல்லக்கூடிய இரவு தொழுகை தஹ்ஜ்ஜத்தை அல்லாஹ் சொல்லி இருக்கலாம். அடுத்து சொல்லக் கூடிய தவ்ஹீதை அல்லாஹ் சொல்லி இருக்கலாம்.
ஆனால், அக்லாக் -நற்குணம் தேவை. நல்ல பண்பு தேவை. ஒழுக்கம் நற்குணம் இல்லையென்றால் உன்னுடைய ஈமானால் உன்னுடைய தவ்ஹீதால் சமூகத்திலே நீ என்ன மாற்றத்தை உண்டாக்க முடியும்? எதை வைத்து இந்த தவ்ஹீதை மக்களுக்கு எடுத்து சொல்ல முடியும்?
ஆகவே, அல்லாஹு தஆலா முதலாவதாக நம்மை தஸ்கியா நம்முடைய உள்ளத்தை கல்பை ஒழுக்கம் , நற்குணம் (அக்லாக்கை) கொண்டு தஸ்கியா செய்கிறான். உள்ளத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுகிறான்.
முஃமின்களே! ரஹ்மானின் அடியார்களே! உங்களிடம் முதலில் பணிவு வேண்டும். அடக்கம் வேண்டும். இமாம் தபரி சொல்கிறார்கள்; பொறுமை வேண்டும். சகிப்புத்தன்மை வேண்டும். கண்ணியம் வேண்டும். பெருமை இருக்கக்கூடாது. மக்களுக்கு மத்தியிலே குழப்பம் விஷமம் செய்யக்கூடாது. கலகம் செய்யக்கூடாது. மக்களுக்கு மத்தியிலே பாவங்களை பரப்பக் கூடாது. கெட்ட செயல்களை செய்யக்கூடாது. மக்களுக்கு மத்தியிலே அடக்கமாக பணிவோடு இருக்க வேண்டும்.
உன்னுடைய படிப்பு உனக்கு பெருமையை உன்னுடைய பொருளாதாரம் அகம்பாவத்தை உன்னுடைய பதவி உனக்கு தலைக்கணத்தை தற்பெருமையை கொடுத்து விடக்கூடாது. நீ சாதாரண அல்லாஹ்வுடைய அடியார்களில் ஒரு அடியாராக மக்களுக்கு மத்தியிலே வாழ வேண்டும். உன்னுடைய படிப்பு உன்னுடைய பதவி உன்னுடைய அழகு உன்னுடைய கண்ணியம் இவையெல்லாம் அல்லாஹ் உனக்கு கொடுத்தவை. உன்னை சோதிக்கின்றான். இதை கொண்டு எந்த அளவுக்கு என்னுடைய அடியார்களுக்கு நீ பலன் உள்ளவனாக இருக்கிறாய்?
உன்னுடைய கல்வி வெறும் உன்னுடைய பொருளாதாரத்திற்காக அல்ல. உன்னுடைய பதவி வெறும் உன்னுடைய பொருளாதாரத்திற்காக அல்ல. உன்னுடைய செல்வ செழிப்பு உன்னுடைய பொருளாதாரத்திற்காக உனது வாழ்க்கை வசதிக்காக மட்டுமல்ல. அப்படி வாழ்ந்தால் அவனைவிட மட்டமானவன் அல்லாஹ்வின் பார்வையிலே யாரும் இருக்க மாட்டார்கள்.
மக்களுக்கு மத்தியிலே அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக ஒழுக்கம் உள்ளவர்களாக அடக்கமானவர்களாக இருப்பார்கள். மக்களுக்கு மத்தியிலே பெருமை அடிக்க மாட்டார்கள். யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டார்கள். யாருக்கும் அக்கிரமம் செய்ய மாட்டார்கள்.
சகோதரர்களே! நம்முடைய வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! கொஞ்சம் படிப்பு கூடிவிட்டால் கொஞ்சம் செல்வம் அதிகமாகிவிட்டால் ஏதாவது ஒரு பதவி கிடைத்து விட்டால் மாறி விடுகிறோம்.
உலக பதவிகள் ஒருபக்கம் இருக்கட்டும். இன்று பலருக்கு பள்ளிவாசலிலே ஒரு பதவி கிடைத்து விட்டால் கூட நோய் சேர்ந்து ஒட்டிக் கொள்கிறது. பள்ளிவாசல் பதவி என்பது அவர் பள்ளிவாசல்களில் வருபவர்களுக்கு பணிவிடை செய்வதற்காக கொடுக்கப்பட்டதே தவிர, பள்ளிவாசல்களில் வரக்கூடியவர்கள் மீது அதிகாரம் ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல.
ஒருத்தர் பள்ளிவாசலுடைய முத்தவல்லி என்றால் அவர் பள்ளியை கூட்டக்கூடியவராக சுத்தம் செய்யக்கூடியவராக அங்கே வரக்கூடிய தொழுகையாளிகளுக்கு பணிவிடை செய்யக் கூடியவராக இருக்க வேண்டும். அதுதான் ஒரு முத்தவல்லியினுடைய அக்லாக் பண்பு, குணம்.
அல்லாஹ்வுடைய வீடு கஅபா. அதனுடைய முதல் முத்தவல்லி, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம். அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த கட்டளை என்ன?
وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهْْمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ
இப்ராஹீமே இஸ்மாயிலே! உங்களுக்கு நான் கட்டளை இடுகிறேன்; உங்களிடத்திலே நான் ஒப்பந்தம் வாங்குகிறேன்; யார் இந்த கஅபாவிற்கு தொழ வருகிறார்களோ, தவாப் செய்ய வருகிறார்களோ, அங்கே ருகூஃ, சுஜூது செய்து இரவெல்லாம் தொழுகையில் இருக்கிறார்களோ அவர்களுக்காக இந்த கஅபாவை நீங்கள் இருவரும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 2:125)
சகோதரர்களே! கவனிக்க வேண்டும் இந்த பணிவு என்பது அடக்கம் என்பது அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு முந்திக்கொண்டு சலாம் சொல்வது. அவர்களுக்கு பணிவிடை செய்வது. ஏழைகளோடு பழகுவது. அனாதைகளோடு பழகுவது. இல்லாதவர்களுக்கு உதவி செய்வது. தன்னை ஒரு பெரியவனாக நினைக்கக் கூடாது. எனக்கு அது தெரியும் நான் எப்படி இவருக்கு இறங்கி இரங்கி வருவேன் என்ற அனாணியத் -நான் என்ற அந்த அகந்தை இருக்கக் கூடாது.
கலீஃபா உமருள் பாரூக் அவர்களைவிட சமுதாயத்திலே அரசாட்சியிலே சமூக அந்தஸ்திலே யார் ஒரு கண்ணியமானவர் இருக்க முடியும்!
ஒரு ஏழைக்கு மாவு மூட்டையை தன்னுடைய முதுகிலே சுமந்து கொண்டு உமர் ஓடி செல்கிறார். அடிமை கூட ஓடி வருகிறார். உமரே! என் எஜமானரே! இதற்கு தானே நான் இருக்கிறேன். எனக்கு கொடுங்கள் நான் தூக்கி வருகிறேன் என்று.
சொன்னார்கள்; நாளை மறுமையில் அல்லாஹ் என்னிடத்திலே கேட்பான். உன்னிடத்திலே கேட்க மாட்டான் என்று அதை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.
சகோதரர்களே! இது பணிவு. இத்தகைய பணிவை அல்லாஹுத்தஆலா நமக்கு நற்குணமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறான்.
சில நேரங்களில் சமுதாயத்தில் இப்படியும் சூழ்நிலை ஏற்படலாம். நீங்கள் அறிவுள்ளவர்களாக இருப்பீர்கள். உங்கள் பக்கம் உண்மை இருக்கலாம். உங்கள் பக்கம் சத்தியம் இருக்கலாம். ஆனால் அதே நேரத்திலே உங்களோடு பேசக்கூடியவர் முரண்டு பிடிக்கக் கூடியவராக உங்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலே உங்களை வைத்து குழப்பம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலே அல்லது அதன் மூலமாக அவருக்கு ஒரு நன்மை வேண்டும் என்ற அடிப்படையிலே இருக்கலாம்.
அந்த நேரத்திலே நீங்கள் அவரோடு தர்க்கம் செய்யக்கூடாது. நீ பெரியவன் என்பதை நிரூபிப்பதற்காக அவர்கள் உனக்கு பயன்படுத்தக்கூடிய அந்த அசிங்கமான அல்லது மட்டமான அல்லது தரைக்குறைவான வார்த்தைகளை அவர்களுக்கு நீங்கள் பயன்படுத்தக் கூடாது.
முஃமினே! நீ என்னுடைய அடியானாக நீ ஆகிவிட்டாய். இப்போது உன்னுடைய வாயிலிருந்து சலாம் என்ற வார்த்தை தான் வரவேண்டும்.
அல்லாஹ் உனக்கு சாந்தியை தருவானாக! அல்லாஹ் உனக்கு ஈடேற்றத்தை தருவானாக! உன்னிடத்தில் இருந்து நான் அல்லாஹ்விடத்திலே ஈடேற்றத்தை பாதுகாப்பை தேடுகிறேன். அவ்வளவுதான் ஒரு முஃமினுடைய மிக அழகான பண்பு.
ஹசன் பசரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்திலே ஒருவர் வருகிறார். நான் உங்கள் இடத்திலேயே தர்க்கம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். மார்க்க விஷயங்கள் ஆதாரங்களிலே உங்களிடத்திலே விவாதிக்க விரும்புகிறேன் என்று சொன்னார்.
இமாம் அவர்கள் சொன்னார்கள்; நான் தோற்றுவிட்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன். விவாதமே ஆரம்பிக்கவில்லை. நான் தோற்றுவிட்டேன் நீ ஜெயித்து விட்டாய். போய் வா. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
அல்லாஹ்வின் அடியார்களே! மார்க்கம் என்பது ஆதாரங்களை கொண்டு முடிவு செய்யப்படுமே தவிர தர்க்கவாதங்களை கொண்டு அல்ல. சமூக விஷயத்திலும் நம்முடைய குடும்ப விஷயங்களிலும் எந்த விஷயத்திலும் சரி, இந்த மூடத்தனமான தர்க்கங்கள்தான் கணவன் மனைவியின் பிரிவினைக்கு பெற்றோர் பிள்ளைகளின் பிரிவினைக்கு இன்னும் நண்பர்களுக்கு மத்தியிலான பிரிவினைக்கு காரணமாக இருக்கிறது.
அல்லாஹு தஆலா சமூக வாழ்க்கைக்கு தேவையான அவ்வளவு அழகான ஒழுக்கத்தை சொல்கிறான்:
وَاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا
ஜாஹில்கள் அறிவிலிகள் அவர்களிடத்தில் பேச வந்தால் சலாம் என்று சொல்லி அவர்கள் அப்படியே விலகி சென்று விடுவார்கள். (அல்குர்ஆன் 25:63)
இந்த இரண்டு வசனத்தை வைத்து இமாம் ஹசன் பசரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள் ‘ரஹ்மானின் அடியார்’களின் வாழ்க்கை, அவர்களின் குணாதிசயங்களை, அவர்கள் அவர்களைப் பார்த்தால் எப்படி இருப்பார்கள்? சஹாபாக்கள் தாபியீன்கள் எப்படி இருந்தார்கள்? என்பதை நமக்கு முன்னால் சொல்லால் வர்ணித்து காட்டுகின்றார்கள் பாருங்கள்!
சொல்கிறார்கள்: முஃமின்கள் நம்பிக்கையாளர்கள் யார்? பணிவான மக்கள். அவர்களுடைய பார்வைகளிலேயே பணிவு வெளிப்படும். அவர்களுடைய செவியிலே பணிவு ஏற்படும். யாராவது யாரிடத்திலாவது பேசினால் அப்படியே காது கொடுத்து அன்பாக கேட்பார்கள். அவர்களுடைய பார்வை அவ்வளவு பணிவாக இருக்கும் அவர்களுடைய உடல் உறுப்புகள் அவ்வளவு பணிவாக இருக்கும்.
எவ்வளவு மக்களுக்கு மத்தியிலே தன்னடக்கமாக இருப்பார்கள் என்றால், அவர்களை அறியாதவர் அவர்களை பார்க்கும் பொழுது இவர் ஒரு நோயாளி போல் இருக்கு, இவ்வளவு சாஃப்ட்டா மென்மையாக மெதுவாக பேசுறாரு, இவ்வளவு குனிஞ்சி இருக்கிறாரே, இவ்வளவு ஒரு அடக்கமா அப்படியே உருகி இருக்கிறாரே, ஏதோ ஒரு நோயில ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதாக அறியாதவர்கள். புரிந்து கொள்வார்கள். அவர்கள் யார்? அவர்களுடைய உள்ளங்கள் ஆரோக்கியமானது.
இன்று நம்முடைய உடலோ ஆரோக்கியமாக இருக்கிறது. உள்ளமோ நோயுற்று இருக்கிறது. உடலின் ஆரோக்கியத்திற்காக மருந்து சாப்பிடுகிறோம். மருத்துவரை அணுகுகிறோம். உடலின் ஆரோக்கியத்திற்காக அவ்வளவு கவலைப்படுகிறோம்? நம்முடைய உள்ளமும் நோயுற்று இருக்கிறது. பொறாமையினால் பெருமையினால் ஆணவத்தால் தற்பெருமையால் கருமித்தனத்தால் குரோதத்தால் எத்தனை கெட்ட குணங்கள்? எண்ணிக்கொண்டே சொல்லலாம். எல்லாவற்றிலும் நமக்கு ஒரு பங்கு இருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
சொன்னார்கள்; ஏன் அவர்கள் இப்படி ஆனார்கள் தெரியுமா? இவர்களுடைய உள்ளங்களிலே அல்லாஹ்வுடைய பயம் குடி கொண்டு விட்டது.
அந்த பயம் மற்றவர்களிடத்திலே இல்லை. மற்றவர்கள் துன்யாவில் இன்பமாக மகிழ்ச்சியாக சுற்றி திரிகிறார்களே இந்த உலகம் கிடைப்பதை கொண்டு இவ்வளவு ஆனந்தப்படுகிறார்களே பெருமைப்படுகிறார்களே. இவர்களால் ஏன் முடியவில்லை?
சொல்கிறார்கள்; இவர்கள் மறுமையை அறிந்து விட்டார்கள். இவர்கள் ஆகிறத்தை அறிந்து விட்டார்கள். அல்லாஹ் அக்பர்!
உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வரவேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு ஹதீஸ். இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள்.
واللهِ لو تعلمون ما أعلمُ لضحكتم قليلًا ولبكيتم كثيرًا
அல்லாஹுவின் மீது ஆணையாக ! நான் அறிந்ததை நீங்கள் அறிந்தால் நீங்கள் குறைவாக சிரித்து அதிகமாக அழுது இருப்பீர்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1044.
சகோதரர்களே! நமக்கு அழுகை வருவதில்லை. ஒரு முஃமினுடைய ஒரு நாள் அல்லாஹ்வின் அச்சத்தால் அழாமல் கடந்தால் அவனுக்கு அதைவிட நஷ்டமான ஒரு நாள் இருக்காது. கடைசியாக நாம் துஆவிலே தொழுகையிலே அழுத நாளை ஒவ்வொருவரும் நினைத்துப் பாருங்கள். எந்த அளவுக்கு அல்லாஹ்விடமிருந்து தூரமாகி இறுகிய உள்ளம் கொண்டவர்களாக நாம் இருக்கிறோம்.
ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ فَهِىَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً
இஸ்ரவேலர்களை பார்த்து அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த வாக்கியம், உங்களது உள்ளங்கள் ஏன் இவ்வளவு இறுகி விட்டன. ஏன் இவ்வளவு கடுமையாகி விட்டன. (அல்குர்ஆன் 2:74)
ஆகிரத்தினுடைய நினைவை குறைத்துக் கொண்டோம். துன்யாவை பற்றி பேசுவதை அதிகப்படுத்திக் கொண்டோம்.
தொடர்ந்து சொல்கிறார்கள்; அவர்கள் சொல்வார்கள்; நாளை மறுமையில் வரும் பொழுது அல்லாஹ் எங்களுக்கு கவலைகளை போக்கிவிட்டான். அதே வார்த்தையை இந்த உலகத்திலும் அந்த முஃமின்கள் சொல்வார்கள். அல்லாஹ் எங்களை கவலை இல்லாமல் வைத்திருக்கிறான்.
என்ன கவலை? அவர்களுக்கு உலகத்தின் கவலை இல்லை. பசி, பட்டினி, பஞ்சம், நெருக்கடி என்ன நெருக்கடியாக இருந்தாலும் சரி, உலகத்திலே அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இருக்காது. இந்த சொர்க்கத்தை தேடுவதற்காக இந்த உலகத்தை அவர்கள் தியாகம் செய்தது அது ஒரு பெரிய பொருட்டாகவே அவர்களுக்கு இருக்காது.
நமக்கு எப்படி? நாம் ஆகிறத்திற்காக சொர்க்கத்திற்காக செய்யக்கூடிய ஒவ்வொரு சிறிய அமலையும் பெருசாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். பள்ளிவாசலுக்கு ஒரு நூறு ரூபாய் சதக்கா குடுத்துட்டா நம்ம தான் பெரிய ஆளு! ஆயிரம் ரூபா குடுத்துட்டா நம்ம ரொம்ப பெரிய ஆளு. பத்தாயிரம் ரூபாய் கொடுத்துட்டா ரொம்ப பெரிய ஆளு. ஒரு லட்ச ரூபா குடுத்துட்டா ரொம்ப பெரிய ஆள்.
சகோதரர்களே! நீங்க அல்லாஹ்வுக்காக கொடுத்தது உங்களுடைய சொர்க்கத்தை வாங்குவதற்காக. அல்லாஹ்வுடைய பொருத்தத்தை வாங்குவதற்காக.
20 கோடி 10 லட்சம் 20 லட்சம் 50 லட்சம் 100 லட்சம் சொல்லி வீடு வாங்குறாங்க. யாருக்கு என்ன வசதி இருக்கிறதோ வாங்குகிறார்கள். நிச்சயமாக வாங்கிய வீட்டுக்கு செல்வோமா? செல்வதற்கு முன்பே மரணிப்போமா? என்பது தெரியாது. கட்டிக் கொண்டிருக்கிற வீட்டில் குடியேறுவோமா? குடியேற மாட்டோமா? தெரியாது. ஆனால் அதற்கு செலவு செய்யும் பொழுது ஆகிரத்துக்காக மறுமைக்காக ஏழைக்காக எளியவருக்காக ஒரு எத்தீமுக்காக ஒரு மஸ்ஜிதிற்காக ஒரு மதரசாவிற்காக கொடுக்கும் தியாகியாக கருதுகிறான்.
நீ செய்கிற இந்த தர்மத்தால் நீ செய்கிற இந்த தானத்தால் உனக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய அந்த மறுமையின் சொர்க்கத்தை நீ நினைத்துப் பார்க்கவில்லை அடியாரே!
அல்லாஹு தஆலா சொர்க்கத்திலே ஒரு சாட்டையின் அளவு ஒரு கால் பாதத்தின் அளவு உனக்கு கொடுக்கக் கூடிய இடம் இந்த உலகம், உலகத்தை விட மகத்தானது.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2892.
அப்படிப்பட்ட சொர்க்கத்தை வாங்குவதற்கு சஹாபாக்கள் உயிரை கொடுத்தார்கள். தங்களிடமிருந்து அனைத்தையும் கொடுத்துவிட்டு (ஏழை)ஃபக்கீர்களாக தெருவிலே நின்றார்களே. யோசித்துப் பார்த்தோமா?
சொன்னார்கள்; சொர்க்கத்திற்காக எதை அவர்கள் தியாகம் செய்தாலும் அது அவர்களுக்கு உலகத்தில் பெருசாக தெரியாது.
நாம் தர்மம் செய்கிறோம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், சொர்க்கத்தை முன்வைத்து செய்வதில்லை. அல்லாஹ்வுடைய பொருத்தத்தை முன்வைத்து செய்வதில்லை. மற்றவர்கள் நம்மை விட குறைவாக கொடுத்திருக்கிறார்கள் நான் இவ்வளவு கொடுத்தேனே என்று தான் பார்க்கிறோமே தவிர, நமக்கு முன்மாதிரியாக அல்லாஹ்வுடைய தூதரை ஸஹாபாக்களை அல்லாஹுத்தஆலா வைத்திருக்கிறானே அவர்களைப் பார்த்தல்லவா நம்முடைய தர்மத்தை ஒப்பிட வேண்டும்.
அடுத்து இமாம் ஹசன் பசரி சொல்கிறார்கள்; நரகத்தின் பயம் அவர்களை அழ வைத்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய ஆறுதலை கொண்டு யார் ஆறுதல் அடையவில்லையோ, அல்லாஹ்வுடைய ஆறுதல் என்ன? இந்த உலகத்தில் ஏற்படக்கூடிய எந்த இழப்பைக் கொண்டும் நீ கவலை படாதே! கண்டிப்பாக எதிரிகளால் சோதிக்கப்படுவீர்கள். எதிரிகள் உங்களை கொல்லலாம். உங்களை உங்களது இல்லங்களில் இருந்து வெளியேற்றலாம்.
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ
உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு (வந்த சோதனைகள்) போன்று உங்களுக்கு (சோதனைகள்) வராத நிலையில் நீங்கள் சொர்க்கத்தில் (இலகுவாக) நுழையலாமென்று நினைத்துக் கொண்டீர்களா? அவர்களுக்கு கொடிய வறுமையும் நோயும் ஏற்பட்டன. இன்னும், “அல்லாஹ்வுடைய உதவி எப்போது (வரும்)?‘’ என்று தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் வரை அவர்கள் (எதிரிகளால்) அச்சுறுத்தப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவி சமீபமானதாகும்.’’ (அல்குர்ஆன் 2:214)
நோய் வறுமை எதிரிகளின் அச்சுறுத்தல் எல்லாமே ஏற்படலாம். நம்முடைய ஈமான் ஆகிரத்துக்காக துனியாவுக்காக அல்ல.
சொல்லிக் காட்டுகிறார்கள்; இந்த இழப்புகளுக்கெல்லாம் எனக்கு சொர்க்கம் இருக்கிறது. மறுமை இருக்கிறது. அல்லாஹ்வின் பாதையிலே கொல்லப்பட்டவர் நஷ்டவாளியா? அல்லாஹ்வின் பாதையிலே எதிரிகளால் அடித்து துரத்தப்பட்டவர் நஷ்டவாளிகளா? யார் நஷ்டவாளி? அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு தவுராத்திலே சொர்க்கத்தை வாக்களித்தான். குர்ஆனிலே சொர்க்கத்தை வாக்களித்து இருக்கிறான். ஜபூர், இன்ஜீளில் அல்லாஹ் சொர்க்கத்தை அவர்களுக்கு வாக்களித்திருக்கிறான்.
தனது உயிரை உடலை தனது செல்வங்களை ஏன் தன்னையே அல்லாஹ்வுக்காக இழந்தவர் ஒருபோதும் நஷ்டவாளி அல்ல. இந்த துன்யாவுக்காக இழப்பவர்தான் நஷ்டவாளி.
சொன்னார்கள்; யார் அல்லாஹ்வுடைய ஆறுதலை கொண்டு ஆறுதல் அடையவில்லையோ அவர் தான் இந்த துன்யாவுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். இந்த துனியாவுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர் இழந்ததை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்.
ஒருவருக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய வசதிகள், உலக வாழ்க்கையில் அவர் சாப்பிடக்கூடிய உணவு, உடுத்தக்கூடிய உடை, அவர் தங்கக்கூடிய இருப்பிடம் இது தனக்கு எவ்வளவு வசதியாக ஆரோக்கியமாக விருப்பமாக இருக்கிறதோ அதை வைத்து தான் அவர் அல்லாஹ்வுடைய அருளை தனக்கு முடிவு செய்கிறார் என்றால் அவரை ஒரு சுத்த கல்வியற்றவன், அறிவில்லாதவன், அவனுடைய அதாபு உடனடியாக அவனுக்கு முன்னால் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்.
பசி இல்லாமல், பல வகை உணவுகளை சாப்பிடுவது, எந்த நெருக்கடியுமே இல்லாமல் வாழ்வது இதுதான் அல்லாஹ் ஒரு அடியானுக்கு செய்யக்கூடிய அருள் என்று ஒருவன் நினைப்பானேயானால் அவனுக்கு கல்வி இல்லை. அவனுக்கு இல்மு இல்லை.
ஆகிரத் -மறுமை அல்லாஹ்வுடைய அந்த சொர்க்கம் அதை முன்வைத்து வாழ வேண்டும். அடுத்து அல்லாஹு தஆலா சொல்கிறான்:
وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا
(அல்குர்ஆன் 25:64)
முஃமின்கள் ரஹ்மானுடைய அடியார்கள், இரவு நேரங்களை அல்லாஹ்வை வணங்குவதற்காக வைத்திருப்பார்கள். ஆடல் பாடல் கேளிக்கைகள் வீணான காரியங்களை பார்ப்பதற்காக அல்ல.
அல்லாஹு தஆலா அடுத்த வசனங்களிலே நற்குணங்களை சமூக ஒழுக்கங்களை சொல்லிக் காட்டி மூன்றாவதாக இபாதத்தை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
ஏன்? ஒரு மனிதன் நற்குணங்களோடு அவன் செய்யக்கூடிய இபாதத்தும் நற்குணங்கள் இல்லாமல் செய்யக்கூடிய இபாதத்துக்கும் இடையிலே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒன்று என்ன ? நற்குணங்களோடு ஒருவன் வரும்பொழுது அவனுடைய உள்ளம் இன்னும் மென்மையாக இருக்கும். அந்த வசனங்களை ஓதும் போது அவனுக்கும் அல்லாஹ்விற்கும் இடையிலே நெருக்கம் அதிகமாகும். அழுகை வரும்.
இன்று, நம்முடைய குணங்கள் கெட்டுவிட்டதால் அல்லாஹ்வின் இபாதத்திலே நாம் நம்முடைய ஈமானிய உணர்வுகளை உணர முடியவில்லை. ஆகவே குணங்களை திருத்த வேண்டும். பணிவு வேண்டும். அடக்கம் வேண்டும்.
அடுத்து அல்லாஹ் சொல்கின்றான்; முஃமின்களுடைய இரவு எப்படி இருக்கும் தெரியுமா? அவர்கள் சுஜூதிலே ருகூவிலே கியாமிலே தங்களுடைய இரவுகளை கழிப்பார்கள். மக்ரிபு உடைய தொழுகையை தொழுவார்கள். இஷாவுடைய தொழுகையை தொழுவார்கள். சுபுஹு தொழுகைக்காக எதிர்பார்த்து இருப்பார்கள். இரவிலே அல்லாஹ்விற்கு நெருக்கமான அந்த தஹஜ்ஜத் தொழுகைகளை தொழுவார்கள்.
இப்படியாக அவர்களுடைய இரவு, வணக்க வழிபாடுகளில் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கும். தேவையான ஓய்வையும் எடுத்துக் கொள்வார்கள். அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! நம்முடைய மறதிகளை அலட்சியங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!
இன்று, இஸ்லாமிய சமூகத்திலே பெரும்பாலானவர்கள் இந்த இரவை எப்படி கழிக்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும். நம்முடைய முஸ்லிம்களின் வீடுகள் குர்ஆனால் அலங்கரிக்கப்பட்டு வந்த வீடுகள் இன்று ஷைத்தானின் சத்தங்களால் இசைகளால் எந்த காட்சிகள் ஈமானை பறித்து விடுமோ அவற்றால் நிரம்பி இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
ரஹ்மானுக்கு பிரியமான அடியார்களாக ஆக வேண்டும் என்றால் நம்முடைய இரவு அல்லாஹ்விற்கு விருப்பமான வழியிலே அல்லாஹ்வை திக்ரு செய்வதிலே தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனை ஓதுவதிலே அல்லாஹ்விடத்தில் துஆ செய்வதிலே நாம் ஈடுபட வேண்டும். அதை அல்லாஹுத்தஆலா குறிப்பாக அடுத்த வசனத்தில் சொல்லிக் காட்டுகின்றான்.
அந்த இரவிலே அவர்கள் என்ன செய்வார்கள்? அல்லாஹ்விடத்தில் பேசிக்கொண்டிருப்பார்கள்.
இது ஒரு ஈமானிய பண்பு. அல்லாஹ்விடத்தில் நீங்கள் துஆ கேட்கும் போது பேசுங்கள். அல்லாஹ்விடத்தில் உங்களது தேவைகளை சொல்லுங்கள். அல்லாஹ்விடத்தில் அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை அவனுக்கு முன்னால் சொல்லி ஒப்புக்கொள்ளுங்கள்.
யா அல்லாஹ்! எனக்கு நீ படிப்பை கொடுத்தாய். யா அல்லாஹ்! நான் வேலையில்லாமல் இருந்தேன் எனக்கு நீ வேலையை கொடுத்தாய். யா அல்லாஹ்! நான் வறுமையில் இருந்தேன். எனக்கு செல்வத்தை கொடுத்தாய். யா அல்லாஹ்! நோயிலிருந்து எனக்கு ஆரோக்கியத்தை கொடுத்தாய் என்று அல்லாஹ்விடத்தில் பேசுங்கள். யார்யாரிடத்திலோ நாம் பேசுகின்றோம். அல்லாஹ்வை விட நமக்கு விருப்பமானவர் யார்? நான் அவனிடத்தில் பேச வேண்டும் என்ற அந்த ஈமானிய உணர்வு நமக்கு ஏன் வருவதில்லை ?
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: இரவிலே அந்த ரஹ்மானின் அடியார்கள் என்னிடத்திலே பேசுவார்கள்.
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னம் - நரகத்தின் தண்டனையை தூரமாக்கி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை (நிராகரிப்பாளர்களை விட்டும்) நீங்காத ஒன்றாக இருக்கிறது.” “நிச்சயமாக அது நிரந்தர தங்குமிடத்தாலும் தற்காலிக தங்குமிடத்தாலும் மிக கெட்டது.”
(அல்குர்ஆன் 25:65, 66)
அடுத்து அல்லாஹுத்தஆலா 68-வது வசனத்திலே திரும்பவும் வருகிறான். முஃமின்களுடைய சமூகத்தை குறித்து சொல்கின்றான் பாருங்கள். முஃமின்களிடத்தில் தொழுகை மட்டுமா? அவர்களிடத்திலே இரவு வணக்கம் வழிபாடுகள் மட்டுமா? அல்லது அவர்கள் பணிவாக இருப்பது மட்டுமா? நமக்கு ஒரு பெரிய சோதனை இருக்கிறது.
“எனது உம்மத்துக்கு சோதனை, செல்வம்’’ என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
அறிவிப்பாளர்: கஅப் இப்னு இயாழ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2336.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வரம்பு மீறமாட்டார்கள், கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். அவர்கள் செலவழிப்பது அதற்கு மத்தியில் நடுநிலையாக இருக்கும். (அல்குர்ஆன் 25:67)
இது முஸ்லிம்களுடைய நடுநிலையான கூட்டத்தைப் பற்றி அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
தங்களுக்கும் தங்களுடைய மனைவிமார்கள் குடும்பத்தார்களுக்கு தேவையான அவசியமான அளவு அவர்களுக்கும் கொடுப்பார்கள். மிஞ்சியதை அல்லாஹ்வின் பாதையிலே கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
وَيَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ قُلِ الْعَفْوَ
இன்னும், அவர்கள் எதைத் தர்மம் செய்யவேண்டுமென உம்மிடம் கேட்கிறார்கள். “(உங்கள் தேவைக்குப் போக) மீதமுள்ளதை (தர்மம் செய்யுங்கள்)’’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:219)
உங்களுடைய மனைவி மக்களை பசி பட்டினியிலே வைத்துவிட்டு நீங்கள் தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. அதேபோன்று குடும்பத்தாருக்கு வேண்டுமென்று அனைத்தையும் பதுக்கி வைத்துக் கொண்டு ஏழைகளுக்கு இல்லை என்று சொல்வதையும் அல்லாஹுத்தஆலா ஏற்றுக்கொள்ளவில்லை.
அடுத்து அல்லாஹு தஆலா தவ்ஹீதை கொண்டு வருகிறான். ஈமானை கொண்டு வருகிறான்.
சகோதரர்களே! இதுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தவ்ஹீத். இதுதான் குர்ஆன் சொல்லக்கூடிய தவ்ஹீத். அந்த தவ்ஹீதிலே ஈமான் இஸ்லாம் இக்லாஸ் நற்குணங்கள் ஒழுக்கங்கள் சமூக பற்று சகோதரத்துவம் இருக்க வேண்டும்.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் பாருங்கள்!
وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۙ
அல்லாஹ்விற்கு அவர்கள் இணை வைக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:68)
அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை வணங்க மாட்டார்கள். சிலைகளாக இருந்தாலும் சரி, சிலுவைகளாக இருந்தாலும் சரி, தர்காக்களாக இருந்தாலும் கப்ர்களாக இருந்தாலும் சரி, எந்த ஒருவரையும் எந்த ஒன்றையும் அல்லாஹ்வுடன் அவர்கள் வணங்க மாட்டார்கள்.
அடுத்து அல்லாஹ் சொல்கின்றான்;
وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ
யாரையும் அநியாயமாக கொல்ல மாட்டார்கள். யாருடைய உயிரையும் அநியாயமாக பறிக்க மாட்டார்கள். மேலும், ஒழுக்கமானவர்கள்; விபச்சாரம் செய்யவே மாட்டார்கள்.
அல்லாஹ் அக்பர்! ஒழுங்கீனமாக ஒழுக்கம் கெட்டவர்களாக நடக்க மாட்டார்கள். அல்லாஹுத்தஆலா குறிப்பாக இந்த வார்த்தையை சொல்லிவிட்டு சொல்கிறான்:
وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا
யாரு விபச்சாரம் செய்கிறானோ யார் பிற முஃமினை கொல்கின்றானோ அவன் மிகப்பெரிய ஒரு தண்டனையை மறுமையிலே அனுபவிப்பான். சாதாரணமான தண்டனை அல்ல. அவனுக்கு மறுமையிலே தண்டனை பன்மடங்காக ஆக்கப்படும். அந்த நரகத்திலே கேவலப்பட்டவனாக அவன் இருப்பான். (அல்குர்ஆன் : 25:69)
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
(அல்குர்ஆன் 25:70)
وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًـا فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا
(அல்குர்ஆன் 25:71)
தவறு செய்துவிட்டால், நடந்துவிட்டால் அல்லாஹ் சொல்கின்றான்: திருந்தி விடுங்கள்! அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேளுங்கள்! யார் திருந்தி ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்து பாவங்களுக்கு பதிலாக நன்மைகளை செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். அல்லாஹ் மகா மன்னிப்பவனாக கருணையாளனாக இருக்கின்றான்.
அது மட்டுமல்ல யார் தவ்பா செய்தாலும் சரி, பாவங்களில் இருந்து எந்த பாவத்திலிருந்து அதற்குப் பிறகு அமல் சாலிஹ் செய்துவிட்டால் அல்லாஹுத்தஆலா அவரை தன்னோடு அரவணைத்து கொள்கிறான். அவரை அல்லாஹுத்தஆலா ஏற்றுக்கொள்கிறான்.
அடுத்து அல்லாஹுத்தஆலா சொல்கின்றான்:
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا
கருத்து : அவர்கள் சிலை வணக்கத்தின் பக்கம் செல்ல மாட்டார்கள். அவர்கள் இசைகளை கேட்க மாட்டார்கள். அவர்கள் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள். அவர்கள் பாவமான எந்த செயல்கள் எங்கு நடக்கின்றதோ அந்த இடங்களுக்கு அவர்கள் செல்லவே மாட்டார்கள். பாவங்கள் நடக்கக்கூடிய இடங்களை கடந்து சென்றால் அந்த இடங்களில் தங்களுடைய பார்வைகளை தொலைத்து விடாமல் தங்களுடைய உள்ளங்களை தொலைத்து விடாமல் அதிலிருந்து தங்களுடைய ஈமானை பாதுகாத்துக் கொண்டு கண்ணியமாக கடந்து சென்று விடுவார்கள். (அல்குர்ஆன் 25:72)
நம்முடைய பார்வை எதை நோக்குகிறதோ அதை நோக்கி நம்முடைய உள்ளங்கள் சென்று கொண்டே இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஆகவே தான் முஃமின்களுக்கு அல்லாஹ் சொல்கின்றான்: பார்வைகளை தாழ்த்துங்கள் முஃமினான பெண்களுக்கு அல்லாஹ் சொல்கின்றான்: பார்வைகளை தாழ்த்துங்கள் என்று.
ஒரு முஃமின் எப்படி இருக்க வேண்டும்? எங்கே அல்லாஹ்விற்கு மாறு செய்யப்படுகிறதோ அந்த இடங்களுக்கு அவர் செல்லக்கூடாது. அப்படியே அந்த வழியாக கடக்க நேரிட்டாலும் அதில் தன்னுடைய பார்வையையும் உள்ளத்தையும் பாதுகாத்துக் கொண்டு கண்ணியமாக கடந்து சென்று விட வேண்டும்.
அடுத்து அல்லாஹ் சொல்கின்றான்:
وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا
குர்ஆனுடைய வசனங்களைக் கொண்டு ஹதீஸ்களை கொண்டு நல்லொழுக்கங்களை கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும். காது கொடுத்து கேட்க வேண்டும். எனக்கு தெரியும் நீ யார் சொல்வதற்கு என்று அகம்பாவம் காட்டக்கூடாது.
அல்லாஹ் சொல்கின்றான்: அவர்களுக்கு அல்லாஹ் உடைய வசனங்களை கொண்டு உபதேசம் செய்யப்பட்டால் குருடர்களாகவோ செவிடர்களாகவோ (இருக்க மாட்டார்கள்) அவற்றின் மீது வீழ்ந்து விட மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)
ஒரு முறை இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்திலே ஒருவர் இத்தக்கில்லாஹ் -அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். நடுங்கி விட்டார்கள். எவ்வளவு பெரிய வார்த்தை இந்த வார்த்தையை நினைவூட்ட கூடியவர்கள் அதிகமாக வேண்டுமே என்று.
இதே வார்த்தை நமக்கு சொல்லப்பட்டால் எனக்கே நீ தக்குவாவை சொல்லித் தரியா? எனக்கு தெரியும் அல்லாஹ்வை எப்படி பயப்படுறதுன்னு நீ போ! முதல்ல.! அஸ்தஃபிருல்லாஹ்!
சகோதரர்களே! இது உள்ளத்திலே அல்லாஹ்வுடைய பயம் இல்லை என்பதற்கான அடையாளம். அடுத்து அவர்களின் குடும்ப வாழ்க்கையை பற்றி மனைவிகளோடு பிள்ளைகளோடு எப்படி அவர்கள் இருப்பார்கள்! எத்தகைய அன்போடு அவர்களுடைய மனைவிமார்கள் அவர்களிடத்தில் இருப்பார்கள் என்பதை அல்லாஹுத்தஆலா சொல்லி முடிக்கின்றான்.
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களின் குளிர்ச்சியை தருவாயாக! எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக (-வழிகாட்டிகளாக) ஆக்குவாயாக!” (அல்குர்ஆன் 25:74)
பிறகு அல்லாஹ் சொல்லி முடிக்கின்றான்:
اُولٰٓٮِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ خٰلِدِيْنَ فِيْهَا حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
அவர்கள் பொறுமையாக இருந்ததால் அறை(கள் நிறைந்த உயரமான மாளிகை)களை கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும், அதில் அவர்களுக்கு முகமன் கூறப்பட்டும் ஸலாம் கூறப்பட்டும் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிரந்தர தங்குமிடத்தாலும் தற்காலிக தங்குமிடத்தாலும் அது மிக அழகானது. (அல்குர்ஆன் : 25:75,76)
சொர்க்கத்திலே இவர்களுக்காக ரொம்ப டாப் டவர் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இவர்கள் கண்ணியமான முகமன் கூறி வரவேற்கப்படுவார்கள். அல்லாஹ் சொல்கின்றான்: அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இந்த இடம் மிக அழகான தங்குமிடம். அவர்கள் ஓய்வு எடுப்பதற்கு அவர்கள் ரிலாக்ஸ் செய்வதற்கு, அவர்கள் என்ஜாய் பண்ணுவதற்கு அவ்வளவு அழகான இந்த சொர்க்கம் அவர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
அல்லாஹ்வின் அடியார்களே! இப்படியாக அல்லாஹ்வுடைய வேதங்களை சிந்தித்து ஓதி அதில் சொல்லப்படக்கூடிய நற்குணங்களை கொண்டு நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்வோமாக! அல்லாஹ்விடத்தில் நெருங்குவதற்கு நாம் வழிகளை தேடுவோமாக! அல்லாஹ்விடத்தில் இருந்து நம்மை தூரமாக்கக்கூடிய ஒவ்வொரு சொல்செயல் கொள்கைகள் வழிகளில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்வோமாக! அல்லாஹ் தஆலா முஃமின்களுக்கு நன்மை செய்வானாக! கண்ணியம் அளிப்பானாக! உயர்வு தருவானாக! அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/