HOME      Khutba      அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் அமர்வு 4-5 | Tamil Bayan - 603   
 

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் அமர்வு 4-5 | Tamil Bayan - 603

           

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் அமர்வு 4-5 | Tamil Bayan - 603


அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் (அமர்வு 4-5)
 
வரிசை : 603
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 06-12-2019 | 09-04-1441
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு கூறும் படிப்பினைகள்
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் சுபஹானஹு வதஆலாவை போற்றிப் புகழ்ந்து, நமது தூதரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் சலாமும் கூறி, அல்லாஹ்விடத்தில் எங்களுக்கும் உங்களுக்கும் நேர் வழியையும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டும், அவனுடைய நபியின் சுன்னாவை கொண்டும், நற்பலன் பெறுவதையும் அல்லாஹு தஆலா கூறிய அறிவுரைகளின் படி வாழ்ந்து, அல்லாஹ்வுடைய அன்பை பெறுவதற்கும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்த சிறிய பெரிய அனைத்துப் பாவங்களிலிருந்து விலகி அல்லாஹ்வுடைய கோபத்தில் இருந்து தப்பிப்பதற்குண்டான நல்வழியையும் வேண்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக. நமது பெற்றோருடைய முஃமின்களுடைய பாவங்களை மன்னிப்பானாக. அல்லாஹ் பொருந்திக் கொண்ட ஏற்றுக்கொண்ட நல்லடியார்களோடு நம்மை மறுமையில் சேர்த்து வைப்பானாக! ஆமீன்.
 
அல்லாஹ் சுபஹானஹு வதஆலா தன்னுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு கட்டளை கொடுக்கின்றான். 
 
فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
 
ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள். (அல்குர்ஆன் 7 : 176)
 
تفكر என்று சொன்னால் ஒரு விஷயத்தை ஆழ்ந்து கண்காணித்து தன்னுடைய அறிவை தன்னுடைய ஞாபக சக்தியை தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஒரு விஷயத்தை சிந்தித்து அதிலிருந்து படிப்பினை பெறுவதற்கு "தஃபக்குர்" என்று சொல்லப்படும். 
 
மேலோட்டமாக பேசுவது, மேலோட்டமாக பார்ப்பது, மேலோட்டமாக ஒரு விஷயத்தை படித்து கடந்து செல்வது அப்படியல்ல.
 
அல்குர்ஆனில் يعقلون என்ற வார்த்தை يتدبرون  يتفكرون இந்த மூன்று வார்த்தைகள் அதிகமாக அலகுர்ஆனில் சம்பவங்களையும் அத்தாட்சிகளையும் கூறிய பிறகு அல்லாஹு தஆலா பயன்படுத்துவான். 
 
அந்த மூன்று வார்த்தைகளில் ஒன்றுதான், இந்த இடத்தில் "தஃபக்குர்" என்பது. அவர்கள் ஆழ்ந்து கவனித்து சிந்திப்பார்கள். தங்களுடைய புத்தியை, அறிவை, தங்களுடைய புத்திக்கூர்மையை, இதில் அவர்கள் செலவழிப்பார்கள். அதை உணர்வார்கள். 
 
பிறகு அதிலிருந்து தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை பாடங்களை அவர்கள் எடுப்பார்கள். அதை அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுவார்கள். 
 
இது அல்லாஹு தஆலா தன்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூறிய கட்டளை அல்லாஹு தஆலா தன்னுடைய நபிக்கு குர்ஆனில் கூறுகிறான்:
 
وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ 
 
நபியே! அதிகமான இறைத்தூதர்களுடைய வரலாறுகளை இந்த வேதத்தில் இதற்கு முன்பு நாம் உங்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிறோம். இன்னும் எத்தனையோ தூதர்களை நாம் அனுப்பி இருக்கின்றோம். ஆனால் அவர்களுடைய வரலாறுகளை இன்னும் நாம் உங்களுக்கு கூறவில்லை. (அல்குர்ஆன் 4 : 164)
 
இப்படி அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தன் புறத்திலிருந்து வெறும் உபதேசங்களை மட்டும் இறக்காமல், அந்த உபதேசங்கள் எந்த நபிமார்களுக்கு கூறப்பட்டதோ இதற்கு முன்பாக அந்த நபிமார்களோடு அல்லாஹு தஆலா எப்படி நடந்து கொண்டான் என்பதையும், அவர்களை ஏற்றுக் கொண்டவர்களோடு எப்படி அல்லாஹ் நடந்துகொண்டான், நிராகரித்தவர்கள் உடன் எப்படி நடந்து கொண்டான் என்ற வரலாறையும் சேர்த்து அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்து கூறினான். 
 
அதனுடைய நோக்கம் என்ன என்பதைப் பற்றி ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
 
كُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ
 
உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உமக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 11 : 120)
 
இன்று முஸ்லிம்கள் ஏன் கோழையாகி விடுகிறார்கள்? இன்று முஸ்லிம்கள் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு ஏன் விலகுகிறார்கள்? இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் பலவீன படுகிறார்கள்? என்று நாம் சிந்தித்துப் பார்த்தால் அங்கே நமக்கு கிடைக்கக்கூடிய பதில், இந்தக் காலத்தில் மார்க்கத்தை பின்பற்றினால் என்ன நடக்கும்? 
 
இப்போது எதிரிகளின் ஆட்சி நடக்கிறதே, அல்லது நம்மீது அநியாயமான முறையில் வழக்குத் தொடுக்கபடுகின்றதே, அல்லது நம்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நாம் எங்கே செல்வது? எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது? இவ்வளவு பிடிப்பாக மார்க்கத்தில் இருந்தால் நமக்கு பிரச்சனைகள் வரலாம். 
 
இப்படியெல்லாம் காரணங்கள் பல கூறி மார்க்கத்தில் கொஞ்சம் பலவீனம், இப்படியாக தங்களின் பலவீனம் அதிகமாகி அதிகமாகி தன்னுடைய இஸ்லாமிய அடையாளத்தையே அழித்துவிட்டு, அதற்குப் பிறகு வணக்க வழிபாடுகளை விட்டும் கொஞ்சம் கொஞ்சமாக கழன்று, தூரமாகி, பிறகு முஸ்லிம் என்ற பெயர் மட்டும் இருக்கும். அடையாளம் இருக்காது. வாழ்க்கையில் இஸ்லாமிய கலாச்சாரம் இருக்காது. வணக்க வழிபாடுகளும் இருக்காது. 
 
சில பெருநாள் தொழுகைகளைத் தவிர, சில வெள்ளிக்கிழமை தொழுகைகளைத் தவிர, அல்லது அவர்களுடைய திருமணம் மஸ்ஜிதில் நடந்தால் அப்பொழுது தெரிந்துகொள்ளலாம். அவர்களும் முஸ்லிம்களே என்று. 
 
அல்லது எங்கேயாவது திருமண மண்டபங்கள் நடந்தாலும் கூட, அங்கே யாராவது அந்த நிக்காஹ் நடத்தி வைப்பதற்கு மார்க்கத்தை சேர்ந்த சிலர் வருவதை கொண்டு தெரிந்துகொள்ளலாம்; இது ஏதோ முஸ்லிம்களுடைய வீட்டு கல்யாணம் நடக்கிறது, அப்படி இல்லை என்றால் அவர்களை முஸ்லிம் என்று கூறுவதற்கு அவர்களுடைய பெயரைத் தவிர ஒன்றுமில்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக. 
 
நபிமார்களின் வரலாறுகளை படித்து பார்த்து அதிலிருந்து படிப்பினை பெற்று நம்முடைய உள்ளத்தை சீர்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, எதிரிகளை பார்த்து பயந்து, அல்லது சூழ்நிலைகளைப் பார்த்து மனம் தளர்ந்து ஈமானையும் இஸ்லாமையும் விடக்கூடிய நிலை இன்று நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ் சொல்லுகிறான், நபியே! இந்த சம்பவங்களின் மூலமாக நாம் உங்களுடைய உள்ளத்தை பலப்படுத்துகிறோம். இதில் உங்களுக்கு சத்தியம் இருக்கின்றது. உபதேசம் இருக்கிறது. மூமின்களுக்கு நினைவூட்டல் இருக்கிறது. (அல்குர்ஆன் 11 : 120)
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் வரலாறை நாம் இந்த ஜும்ஆவில் பார்ப்போம். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எப்பேற்ப்பட்ட ஒரு நபியை நமக்கு உதாரணமாக இந்த குர்ஆனில் எடுத்துக் கூறுகிறான்!
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறில் நமக்கு பெரிய படிப்பினைகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் நாம் சந்திக்கக்கூடிய சோதனைகளை விட, இன்னல்களை விட, மிகப்பெரிய நெருக்கடிகளை விட நூஹ் அலைஹிஸ்ஸலாம் தன்னுடைய சமுதாய மக்களால் சந்தித்தார்கள்.
 
இந்த வரலாற்றுடைய முக்கியத்துவத்தை குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை படிப்போம்.
 
கப்பாப் இப்னு அரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய போர்வையை தலையணையாக வைத்துக்கொண்டு கஅபாவின் நிழலில் சாய்ந்து இருந்தார்கள். நாங்கள் சென்று கூறினோம். 
 
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்ய மாட்டீர்களா? அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்வதற்காக நீங்கள் கையேந்த மாட்டீர்களா? 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுந்து அமர்ந்தார்கள். உட்கார்ந்தார்கள். பிறகு இப்படி கேட்டுவந்த தோழர்களை பார்த்துக் கூறினார்கள். 
 
(இந்த தோழர்களின் நோக்கம் எதுவாக இருந்தது? அல்லாஹு தஆலா முந்திய சமுதாய மக்களுக்கு தன்னுடைய அத்தாட்சியை காட்டியதைப் போன்று, எதிரிகளின் விஷயத்தில் தண்டனையை காட்டியது போன்று, இந்த மக்கா வாசிகளுக்கும் அல்லாஹ் தண்டனையை இறக்கட்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் கேட்டு வந்தார்கள்.)
 
«قَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ، يُؤْخَذُ الرَّجُلُ فَيُحْفَرُ لَهُ فِي الأَرْضِ، فَيُجْعَلُ فِيهَا، فَيُجَاءُ بِالْمِنْشَارِ فَيُوضَعُ عَلَى رَأْسِهِ فَيُجْعَلُ نِصْفَيْنِ، وَيُمْشَطُ بِأَمْشَاطِ الحَدِيدِ، مَا دُونَ لَحْمِهِ وَعَظْمِهِ، فَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَاللَّهِ لَيَتِمَّنَّ هَذَا الأَمْرُ، حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ، لاَ يَخَافُ إِلَّا اللَّهَ، وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ، وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ»
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மக்களுக்கு சில வரலாறுகளை எடுத்துக் கூறினார்கள். ஈமான் என்பதும் இஸ்லாம் என்பதும் எத்தனை சோதனைகளை கடக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் எந்த அளவு ஈமானில் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் பார்க்க விரும்புகிறான். உங்களுடைய பொறுமை அல்லாஹ் சோதிக்க விரும்புகிறான். 
 
இதை உதாரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரலாற்றை கொண்டு கூறினார்கள். தோழர்களே! நீங்கள் இப்படி பொறுமை இழக்கின்றீர்களா? உங்களுக்கு முன்னால் உள்ளவர்களின் வரலாரை நான் உங்களுக்கு சொல்லி காட்டுகிறேன். 
 
ஈமான் கொண்ட ஒரே காரணத்திற்காக ஒரு மூஃமின் கொண்டு வரப்படுவார். அவரை பூமியில் புதைக்கப்படும். அவருடைய இடுப்பு வரை குழி தோண்டிப் புதைக்கப்படும். பிறகு ரம்பம் கொண்டு வரப்பட்டு அவருடைய தலையில் அப்படியே அந்த ரம்பத்தால் அறுக்கப்பட்டு இரண்டு துண்டாக அவர் விழுவார். 
 
இன்னொரு முஃமினை கொண்டு வரப்படும். அவரை நிற்க வைக்கப்பட்டு இரும்பு பற்களுடைய சீப்பைக் கொண்டுவந்து அவருடைய உடம்பெல்லாம் அப்படியே இழுக்கப்படும். அவனுடைய சதை தனியாக, எலும்பு தனியாக, இப்படியாக அவருடைய உடலை கோரப் படுத்தப்படும். 
 
ஆனால் அந்த முன்னோர் இப்படிப்பட்ட இன்னல்களை அனுபவித்த போதும் கூட தன்னுடைய மார்க்கத்தை விடவில்லை. தங்களுடைய ஈமானை விடவில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப்படுத்தினான்.
 
ஒரு பயணி ஸன்ஆவில் இருந்து ஹழர் மௌத் வரை (ஏமனில் உள்ள மிகப்பெரிய இரண்டு நகரங்கள் இந்த நகரத்தில் இருந்து இந்த நகரம் வரை) பயணம் செய்து வருவான். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் பயப்பட மாட்டான். 
 
தன்னுடைய ஆடுகள் வைத்திருந்தால் அந்த ஆடுகள் மீது ஓநாய் தாக்கி விடுமோ என்ற பயத்தை தவிர மனிதர்கள் யாருடைய அச்சமும் இல்லாமல் நிம்மதி பெற்று வருவார். 
 
அந்தளவு அல்லாஹு தஆலா இஸ்லாம் மார்க்கத்தைக் கொண்டு சேர்ப்பான். நீங்கள் அவசரப்படுகிறீர்கள் என்று அந்த தோழர்களுக்கு கூறி அவர்களைப் சாந்தப்படுத்தினார்கள்.
 
அறிவிப்பாளர் : கப்பாப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6943.
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறை குர்ஆனில் நாம் பார்க்கும் போது இத்தகைய சோதனைகளை கடந்து தான் வந்திருக்கிறார்கள். 
 
அல்லாஹு தஆலா ஒவ்வொரு நபியை பற்றி குறிப்பிடும் போது அந்த நபியை அல்லாஹு தஆலா அவர்களிடத்தில் உள்ள சிறப்பு தன்மையை கொண்டு குறிப்பிடுவான்.
 
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا
 
நூஹ்வுடன் நாம் கப்பலில் ஏற்றி பாதுகாத்தவர்களுடைய சந்ததிகளே! அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (ஆகவே, அவர்களின் வழித்தோன்றல்களாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.) (அல்குர்ஆன் 17 : 3)
 
அல்லாஹு தஆலா அவனுடைய நபிமார்களின் வரலாறை இந்த அல்குர்ஆனில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறான். 
 
நீங்கள் குர்ஆனை திறந்து ஆராய்ந்து பாருங்கள். நபிமார்களின் வரலாறுகள் எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ ஒன்று மூசா நபியின் வரலாறு ஆரம்பமாகும். இல்லையென்றால் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு ஆரம்பமாகும். 
 
பொதுவாக நபிமார்களின் வரலாறு குறிப்பிடும்போது, பெரும்பாலான இடங்களில் அல்லாஹு தஆலா நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறை கூறித்தான் ஆரம்பிப்பான். 
 
ஏனென்றால் இந்த பூமியில் ரசூலாக அனுப்பப்பட்டவர்களில் முதலாவது ரசூல் நூஹ் அலைஹிஸ்ஸலாம். முதலாவது ரசூல் மட்டுமல்ல, அல்லாஹு தஆலா ரஸூல்மார்களில் ஐந்து தூதர்களை மற்ற தூதர்களை காட்டிலும் மேன்மையாக்கி சிறப்பாக்கி அவர்களை விசேஷமாக ஆக்கினான். அந்த ஐந்து தூதர்களில் நூஹ் அலைஹி வசல்லம் அவர்கள் முதலாமவர்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு பொறுமையானவர். எவ்வளவு சகிப்பாளர். தனக்காக பழி வாங்கியதே இல்லை. தனக்காக கோபப்பட்டதே இல்லை. தன்னை ஏசியதால் திட்டியதால் தன் மீது துப்பியதால் தனக்கு இடையூறு ஏற்படுத்தியதால் தனக்கு வேதனை அளித்ததால் துளிகூட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பழி வாங்கியது கிடையாது. அவர்கள் எதிர்த்தது கிடையாது. 
 
ஆனால், அல்லாஹ்வுடைய சட்டம் பாழக்கப்பட்டலே தவிர. அல்லாஹ்வுடைய மார்க்கம் பாழக்கப்பட்டலே தவிர. 
 
இப்பேற்ப்பட்ட நபிக்கு அல்லாஹ் தஆலா, நபியே! இன்னும் நீங்கள் பொறுமையாக இருங்கள் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 46:35)
 
இன்று, நாமெல்லாம் சர்வ சாதாரணமாக கூறுகிறோம்; பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, பொறுத்தது போதும், இனிமேல் என்னால் பொறுக்க முடியாது என்று.
 
அல்லாஹு தஆலா தன்னுடைய நபிக்கு சொல்கிறான்; இன்னும் பொறுமையாக இருங்கள் என்று. எப்படி? எந்த அளவு? யாரைப் போன்று? பொறுமையாக இருக்க வேண்டும். 
 
ரசூல்மார்களில் வீரமிக்கவர் உறுதி உடையவர்கள் என்று யாரை நாம் உங்களுக்கு குறிப்பிட்டிருக்கிறோமோ அந்த நபிமார்கள் பொறுமையாக இருந்தது போன்று.
 
நூஹ் எவ்வளவு ஆண்டுகாலம் பொறுமையாக இருந்தார்கள். அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
 
وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا فَأَخَذَهُمُ الطُّوفَانُ وَهُمْ ظَالِمُونَ
 
நூஹ் நபியை நம் தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப் பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. (அல்குர்ஆன் 29 : 14)
 
950 ஆண்டுகாலங்கள் தாவா செய்தார்கள். இன்று காலையில் தாவா செய்தால் மாலையில் சலிப்படைந்து விடுகிறோம். இந்த ஒரு வாரம் தாவா செய்தால் என்னமோ பிறந்ததிலிருந்து தாவா செய்துக்கொண்டிருக்கிற மாதிரி அதோட அப்படியே நான்தான் தாயி போல பேச்சு. இந்த மக்கள் எல்லாம் இதை ஏத்துக்க மாட்டார்கள் பேசி பிரயோஜனம் கிடையாது.
 
அல்லாஹ் தஆலா சொல்லிக்காட்டுகிறான்: 950 ஆண்டுகள்  குறைவானவர்களைத் தவிர நூஹ் நபியை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். கப்பலில் அவர்கள் எற்றியபோது வெறும் 80 குடும்பத்தார்கள்தான். அவ்வளவு பொறுமையாக இருந்தார்கள்.
 
அல்லாஹு தஆலா நூஹ் நபியுடைய பொறுமையை நம்முடைய நபிக்கு சொல்லிக்காட்டுகிறான். அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு வேதனையை எப்பொழுது கேட்டார்கள் என்றால் இதையும் அல்லாஹு தஆலா சொல்லிக்காட்டுகிறான்:
 
நூஹே இனி யாரும் உங்களது மக்களில் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியதற்குப் பிறகு தான் அல்லாஹ்விடத்தில் அந்த காஃபிர்களுக்கு எதிராக அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
 
மேலும் அல்லாஹ் கூறினான். நான் இந்த மக்களை அழிக்கப் போகிறேன். எனவே நீ இவர்களுக்காக என்னிடத்தில் சிபாரிசு செய்யாதீர்கள் என்று அல்லாஹ் தடுத்தான். இவர்களை மூழ்கடிக்க போகிறேன். இவர்கள் கடலில் மூழ்கி, தண்ணீரில் மூழ்கி  சாகப் போகிறார்கள். இவர்களுக்காக என்னிடத்தில் பரிந்துரை செய்யாதீர் என்று அல்லாஹு தஆலா கூறியதற்குப் பிறகு நூஹ் அலைஹிஸ்ஸலாம் அந்த மக்களுக்கு எதிராகப் கையேந்தினார்கள்.  (அல்குர்ஆன் 11 : 37)
 
இன்று நமக்கு இப்படி யாருக்காவது உறுதி தெரியுமா? இவருக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்கமாட்டான் என்று. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒருமுறை உஹது போரில் அவர்களுக்கு ஏற்பட்ட அந்த இன்னல்களுக்கு பதிலாக அல்லாஹ்விடத்தில் ஒரு ஒரே ஒரு வார்த்தை தங்களுடைய நபியின் தலையை உடைத்த மக்கள் எப்படி வெற்றி பெறுவார்கள் என்று. 
 
சபிக்கவில்லை. வேறுவிதமாக திட்டவில்லை. ஆனால் நம்மிடம் இருந்து இந்த வார்த்தை அல்லாஹ்விற்கு பெரிய ஒன்றாக இருந்தது. அல்லாஹு தஆலா  உடனடியாக வசனத்தை இறக்கினான். 
 
நபியே அதிகாரம் உங்களுக்கு கிடையாது. அல்லாஹ் நாடினால் இவர்களை மன்னிப்பான். அல்லாஹ் நாடினால் இவர்களை வேதனை செய்வான். (அல்குர்ஆன் 3 : 128)
 
நீங்கள் எப்படி சொன்னீர்கள். இவர்கள் வெற்றி பெறுவார்களா என்று. உடனே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில்  கேட்டார்கள். யாஅல்லாஹ் எனது மக்கள் அறியாதவர்கள் அவர்களை மன்னிப்பாயாக என்று.
 
நூல் : புகாரி, முஸ்லிம் எண் : 2290.
 
உஹது போரில் கலந்துகொண்ட அபூஸுஃப்யானை  நினைத்துப் பாருங்கள். காலித் இப்னு வலீதை நினைத்துப் பாருங்கள். அம்ர் இப்னு ஆசை நினைத்துப் பாருங்கள். 
 
நூற்றுக்கணக்கானவர்கள் உஹது போரில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய எதிரணியில் இருந்தவர்கள். அதற்கு பிறகு அல்லாஹ் அவர்களிடத்திலிருந்து தவ்பா செய்ய வைத்தான். அவர்களுக்கு நேர்வழி காட்டினான். 
 
இந்த இஸ்லாமை உலகுக்கெல்லாம் கொண்டு போய் சேர்வதற்கு வீரர்களாக, ஆட்சியாளர்களாக, இந்த இஸ்லாமின் பாதுகாவலர்களாக, அழைப்பாளர்களாக, அல்லாஹு தஆலா அவர்களை மாற்றினான்.
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த அழைப்பு பணியில் நாம் பெற வேண்டிய மிக முக்கியமான  பாடங்களில் ஒன்று, அவர்கள் செய்த அந்த அழைப்பு பணியின் காலத்தில் பொறுமையை அவர்கள் இழக்கவில்லை. சகிப்பு உடையவர்களாக இருந்தார்கள். 
 
மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடத்தில் துஆ செய்து தங்களுடைய மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க கூடியவர்களாக இருந்தார்கள். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்:
 
قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا (5) فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا (6) وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا
 
(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதை மறுத்து அவரைப் புறக்கணித்து விடவே, அவர் தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் மக்களை இரவு பகலாக அழைத்தேன். வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என் அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை. நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்த போதெல்லாம், தங்கள் காதுகளில் தங்கள் விரல்களைப் புகுத்தி அடைத்துக் கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள். (அல்குர்ஆன் 71 : 5-7)
 
நீங்கள் சூரா நூஹை படித்துப் பாருங்கள். அல்லாஹுத்தஆலா இந்த வசனத்தை மிக அழுத்தமாக சொல்கிறான். 
 
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا (10) يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا (11) وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا
 
‘‘உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். பொருள்களையும், ஆண் மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் நதிகளையும் ஓட வைப்பான். (அல்குர்ஆன் 71 : 10-12)
 
இன்று தாவா செய்யக்கூடிய பலர், அல்லாஹு தஆலா பாவங்களை மன்னிப்பான்; அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்; அல்லாஹ் உங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறான்; அல்லாஹ் உங்களுடைய பாவங்களை மன்னிக்க தயாராக இருக்கிறான்; என்று நபிமார்கள் கூறிய அந்த வார்த்தையை மறந்து விடுவார்கள். 
 
எப்படி இஸ்லாமை கொண்டுபோய் சேர்க்கிறார்கள்? இஸ்லாம் ஓர் அறிவியல்பூர்வமான மார்க்கம். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இஸ்லாம் இந்த காலத்திற்கு ஏற்ற மார்க்கம். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள்.
 
நபிமார்களின் தாவா பணி அப்படி இல்லை. நபிமார்களின் தாவா எப்படி இருந்தது என்றால், உங்களுடைய ரப்பின் பக்கம் நாங்கள் உங்களை அழைக்கின்றோம். அவனை நீங்கள் வணங்குவதற்காக. அவனை நீங்கள் ஏற்றுக் கொண்டால் அவன் உங்களை மன்னிப்பான். அவன் உங்கள் மீது கருணை காட்டுவான். உங்களுக்கு மகத்தான சொர்க்கத்தை மறுமையில் தருவான். 
 
இது நபிமார்களின் அழைப்பாக இருந்தது. அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த 950 ஆண்டு காலங்கள் எப்படி தாவா செய்தார்கள்? 
 
நான் வெளிப்படையாக அவர்களுக்கு சென்று சொல்வேன். பொதுவாக நான் அவர்களுக்கு அறிவிப்பாக செய்வேன். தனிப்பட்ட முறையில் சென்று நான் அவர்களுக்கு செய்வேன். (அல்குர்ஆன் 71 : 8-10) 
 
இப்படியாக தொடர்ந்து அவர்கள் தாவா பணியில் தொய்வில்லாமல் செய்து கொண்டிருந்தார்கள். நூஹ் அலைஹிஸ்ஸலாம் உடைய அந்த கோபம் சாதாரணமான கோபம் இல்லை. மிகப் பெரிய முரட்டு மக்களாக இருந்தார்கள். அநியாயக்கார மக்களாக இருந்தார்கள். 
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடித்து துவைத்து விடுவார்கள். நூஹ் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் உயிர் பிரிந்து விடக் கூடிய அளவிற்கு அடித்து விடுவார்கள். இவர் இறந்து விட்டார் என்று விட்டுவிட்டு செல்வார்கள். 
 
அல்லாஹு ஸூப்ஹானஹு தஆலா ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பலப்படுத்துவான். அவர்களைத் தேற்றுவான். தேறிய உடனே திரும்ப அவர் தங்களுடைய மக்களுக்கு தாவா கொடுக்க செல்வார்கள். 
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றிலிருந்து பெறக்கூடிய பாடங்களில் இன்னொரு முக்கியமான பாடம் என்னவென்றால், அந்த மக்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய நேரடி வம்சத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார்கள். 
 
அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள். நூஹ் ஆதம் இந்த  இருவருக்குமிடையில் பத்து தலைமுறைகள்தான். இவர்கள் எல்லோரும் சத்திய மார்க்கத்தில் தான் இருந்தார்கள். யாரிடத்திலும் இணைவைத்தல் வரவில்லை. ஆனால் எப்போது இணைவைத்தல் வந்ததென்றால், அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அதையும் சொல்லிக் காட்டுகின்றான். (அல்குர்ஆன் 71 : 23)
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய  சமுதாயத்தில் இருந்த சாலிஹான மக்கள் அவர்கள் இறந்த போது அந்த ஷைத்தான் அந்த மக்களிடத்தில் வருகிறான் .
 
இறந்துவிட்ட அந்த முன்னோர்களை நினைவு கூறுகிறான். அவர்களுடைய உள்ளங்களில் அந்த எண்ணங்களை ஏற்படுத்துகிறான். 
 
இன்னாரை பற்றி என்ன நினைக்கிறார்? இவரைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்று. ஓ! அவர்களா மிகப்பெரிய நல்லவர்கள் ஆயிற்றே! இறைநேசர்கள் ஆயிற்றே! அதற்குப் பிறகு நீங்கள் அவர்களை நினைத்தால் உங்களுக்கு மேலும் மார்க்கப் பற்று, இறையச்சம் வருமல்லவா? அவர்களுக்காக நீங்கள் உருவங்களை செய்யுங்கள். அவர்களுடைய படங்களை வரைந்து கொள்ளுங்கள் என்று. 
 
பிறகு அந்தப் படங்கள் சிலைகளாக மாறுகின்றன. இந்த படங்கள் அழிந்துவிடுகின்றன. காலப்போக்கில். எனவே நீங்கள் அவர்களை நினைப்பதற்காக அவர்களுடைய சிலைகளை உங்களுடைய சபைகளில் செதுக்கிக் கொண்டால் அவைகளை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு இறையச்சம் வரும். மார்க்கப்பற்று வரும். அல்லாஹ்வுடைய பயம் வரும் என்பதாகச் சொல்கிறார்கள். 
 
அதுபோன்று அவர்கள் அந்த சிலைகளை அந்த மனிதர்களுடைய உருவங்களை சிலைகளாக செதுக்கிக் கொள்கின்றார்கள். ஒரு தலைமுறை இப்படியாக செல்கின்றது. 
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இந்த விளக்கத்தை இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி பதிவு செய்கிறார்கள். 
 
இப்படியாக ஒரு தலைமுறை சென்று, அந்த தலைமுறை முடிந்தவுடன் ஷைத்தான் அடுத்து வருகிறான். இருந்த அடுத்த அந்த தலைமுறைக்கு சொல்கிறான். உன்னுடைய தந்தை உன்னுடைய பாட்டனார் இந்த சிற்பத்திற்கு முன்னால் சிலைக்கு முன்னால்  இருந்ததை நீ பார்த்ததில்லையா? என்று. 
 
ஆம் பார்த்தோம் என்று. அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் இந்த சிலை இடத்தில்தான் மழையை வேண்டி பிரார்த்தித்தார்கள். இந்த சிலைக்கு தான் மரியாதை செய்தார்கள்,  இதன் மூலமாக தான் நன்மையை ஆதரவு வைத்தார்கள். இந்த சிலை இடத்தில் தான் தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடினார்கள் என்று. அதற்குப் பிறகுதான் அந்த சிலைகள் வணங்கப்பட்டன; தெய்வங்களாக ஆக்கப்பட்டன. (1)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4920.
 
இறந்துவிட்ட முன்னோர்களை கண்ணியப் படுத்துகிறோம் புனித படுத்துகிறோம் என்ற பெயரில்  அவர்கள் மீது அவர்களுக்கு இருந்த  அன்பை அந்த பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி ஷைத்தான் அவர்களை பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம் ஆகிய ஷிர்க்கில்  தள்ளி விட்டான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நம் சமுதாயத்தில் இருக்கக்கூடிய இந்த கப்ருகள், தர்காக்கள், இன்னும் ஜன்டாக்கள் இப்படியாக பல இடங்களில் இந்த ஷிர்க் மலிந்து இருப்பதை அதை ஷிர்க்காக ஏற்றுக் கொள்வதற்கு இந்த சமுதாயம் தயாராக இல்லை. 
 
இந்த நிலைமை எந்த ஒரு பிண்ணனியில் ஏற்பட்டது என்று சிந்தித்துப் பாருங்கள்! அந்த அடக்கம் செய்யப்பட்ட நல்லவர்களை கண்ணியப் படுத்துகிறோம்; அவருடைய கப்ரை ஸியாரத் செய்யப்போகிறோம். அவர்கள் மற்றவர்கள் காட்டிலும் வித்தியாசமாக இருக்க வேண்டாமா? அவர்களை நாம் வித்தியாசப் படுத்த வேண்டாமா? மற்றவர்களுடைய கப்ரை போன்று இவருடைய கப்ரை நாம் சாதாரணமாக விட்டுவிடலாமா? என்று இவர்களாக பேசிக்கொண்டு எண்ணிக்கொண்டு, வீண் விவாதங்கள் செய்து, அந்த கப்ருகளுக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடை செய்ததை அங்கே முதலாவதாக செய்தார்கள். 
 
கப்ருகளை கற்களைக் கொண்டு கட்டினார்கள். கோபுரங்களை கட்டினார்கள். அங்கே விளக்குகள் எரித்தார்கள். ஆரம்பத்தில் நாங்கள் ஜியாரத்திற்குதான் செல்கிறோம் என்று சொன்னார்கள். 
 
இப்படியாக சென்று சென்று கடைசியில் அங்கே தங்க ஆரம்பித்தார்கள். பிறகு அதுதான் அங்கு நேர்ச்சை செய்வதும், சுஜுது செய்வதும், அங்கே தவாஃப் செய்வதற்கும், அல்லாஹ்வை நம்புவதைவிட அங்கு அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய மனிதர்களை நம்புவது. 
 
இன்று முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு பெரிய கூட்டத்தை உடைய அந்த உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட நம்பிக்கையாக இருக்கிறது. 
 
இது எப்படி உருவானது? எப்படி நூஹ் அலைஹிஸ்ஸலாமுடைய அந்த சமுதாயத்தில் முன்னோர்களை நினைத்து அவர்களை கண்ணியப் படுத்துகிறோம். நினைவு கூறுகிறோம் என்று ஆரம்பித்து இவ்வளவு பெரிய ஷிர்க்கில் விழுந்தார்களோ, எந்த ஷிர்க்கை எதிர்த்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் பத்ரு போர், உஹதை, அஹ்ஜாபை, ஹீனைனை, கந்தகை, அதுபோன்று கைபரை சந்தித்தார்களே! 
 
மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்தார்களே! அந்த ஷிர்கை ஷைத்தான் எப்படி இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு கொண்டுவந்து விட்டான் பாருங்கள். 
 
இதை அவர்கள் படித்து பார்த்திருப்பார்களேயானால் சிந்தித்து இருப்பார்களேயானால் இந்த ஷிர்கை அவர்கள் செய்திருப்பார்களா? இப்போது உங்களுக்குப் புரியும்; ஏன் நபிமார்களுடைய வரலாறுகளை நாம் படிக்க  வேண்டும். நபிமார்களின் வரலாறு படிக்காமல் விட்டதால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு, மிகப்பெரிய அந்த நஷ்டத்தில் முக்கியமானதை கூறுவதாக இருந்தால் இந்த ஷிர்க்கை விட பெரிய ஒன்றை நாம் என்ன கூற முடியும் யோசித்துப்பாருங்கள். 
 
அல்லாஹு தஆலா நமக்கு சொல்லிக்காட்டுகிறான்:
 
அல்லாஹு தஆலா நபிமார்களை அனுப்பியது அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். ஷிர்கிலிருந்து மக்களை விலக்க வேண்டும் என்பதற்காக தான். (அல்குர்ஆன்16: 36)
 
ஆனால், இன்று மக்கள் தொழுகையைப் பற்றி பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு மற்ற நற்குணங்களைப் பற்றி பேசக் கூடியவர்கள்  இருக்கிறார்கள். இவ்ளோ பெரிய ஒரு கூட்டம் இந்த ஷிர்க்கில் மூழ்கி, அல்லாஹ்வை நம்புவதை விட, அந்த தர்காக்களை, கப்ருகளை நம்பிக்கொண்டிருக்கிறார்களே!
 
பள்ளிக்கு வரக் கூடிய கூட்டத்தை விட, வியாழக்கிழமைகளிலும் மற்ற விசேஷங்களிலும், அந்த உருசுகளிலும், அங்கு செல்லக்கூடிய மக்கள்  அதிகமாகிக் கொண்டிருக்கிறார்களே!
 
இதைப் பற்றிக் கவலைப் படக்கூடியவர்கள் யா? மாற்றார்கள் இடத்தில் இருக்கக்கூடிய ஷிர்க்கை கண்டிக்கின்ற அதேநேரத்தில், இன்று முஸ்லிம் சமுதாயத்தில் ஊடுருவி விட்ட அந்த ஷிர்கை கண்டிப்பது நமக்கு மிக முக்கியமான ஒன்று. 
 
அடுத்து அல்லாஹ்வின் அடியார்களே! நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அவர்களுடைய அந்த வாழ்க்கையில் இருந்து பெறக்கூடிய படிப்பினைகளில் முக்கியமான ஒன்று, முஸ்லிம்கள் அதில் குறிப்பாக, அழைப்பாளர்கள் -அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்கக் கூடியவர்கள், அவர்கள் எவ்வளவுதான் பழி சொல்லால் ஏசப்பட்டாலும் சரி, அவர்களை எவ்வளவுதான் மக்கள் ஏசினாலும் சரி, திட்டினாலும் சரி, வகை வகையான வார்த்தைகளைக் கொண்டு அவர்களை வர்ணித்தாலும் சரி அவர்கள் நிலைகுலையாமல் இருப்பார்கள். அவர்கள் தடுமாறி விடாமல் மனம் உறுதியானவர்களாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும். 
 
எப்பேர்பட்ட அழைப்பாளர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அல்லாஹ்வுடைய நபி, ரசூல். பொதுவாக நபியை அல்லாஹ் தேர்ந்தெடுப்பதே மக்களில் மிக ஒழுக்கமானவரையும் மக்களின் மிகப் பெரிய புத்திசாலியையும், ஞானத்தையும், தன்னுடைய உள்ளத்தை, தன்னுடைய மன இச்சைகளை கட்டுப்படுத்த கூடியவர்களைதான் அல்லாஹு தஆலா நபியாக தேர்ந்தெடுப்பான். 
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மக்கள் நூஹ் நபியை எப்படி எல்லாம் பேசினார்கள் யோசித்துப் பாருங்கள்.
 
அல்லாஹ் சொல்லிக் கொண்டு வருகிறான்:
 
நூஹைப் பார்த்து அந்த மக்கள் சொன்னார்கள்; நூஹே! மிகத் தெளிவான வழிகேட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். (அல்குர்ஆன் 7 : 60)
 
எவ்ளோ பெரிய சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் யோசித்துப்பாருங்கள். வழிகேட்டில் இருப்பவர்கள், நேர் வழிக்கு அழைக்க வந்த, அல்லாஹ்வின் பக்கம் அழைக்க வந்த நபியைப் பார்த்து சொல்கிறார்கள். நீங்கள் வழிகேட்டில் இருக்கிறீர்கள் என்று.
 
இதைத்தானே இன்று மற்றவர்கள், முஸ்லிம்களையும், குறிப்பாக இஸ்லாமை பின்பற்றக்கூடிய மக்களைப் பார்த்து சொல்கிறார்கள். நீங்கள் பழமைவாதிகள், நீங்கள் அடிப்படைவாதிகள், உங்களுக்கு நாகரீகம் தெரியாது, உங்களுக்கு காலத்தின் அறிவியல் தெரியாது, நீங்கள் தற்கால சூழ்நிலையில் இருந்து வேறுபட்ட உலகத்தில்  வாழ்கிறீர்கள்.
 
இந்த வசைச் சொற்கள் எல்லாம் நூஹ் நபிக்கு சொல்லப்பட்ட வசை சொல்லுக்கு முன்னால் வைத்து பார்க்கும்போது ஒன்றுமே இல்லை. நூஹ் அலைஹி வஸ்ஸலாம் அவரைப் பார்த்து அந்த மக்கள் சொன்னார்கள்.
 
இந்த நூஹ் ஒரு பைத்தியக்காரன். (அல்குர்ஆன்54 : 9)
 
மார்க்கத்தை பின்பற்றக்கூடிய மக்களை பார்த்து இந்த மக்கள் செல்லக்கூடிய ஒரு சாதாரணமான வார்த்தை அவருக்கு விவரம் இருக்காது, அவருக்கு விளக்கம் இருக்காது, அவருக்கு பிழைக்க தெரியாது. 
 
எப்படி ஹலால் ஹராம் எல்லாம் பார்த்து, இப்படி நீங்கள் சட்டங்கள் எல்லாம் பார்த்தால், நீங்கள் வியாபாரம் செய்யமுடியாது. முன்னேற முடியாது. இவர்களுக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை. 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் பாருங்கள். இதைத்தான் அந்த காஃபிர்கள் சொன்னார்கள். நபியே மஜ்னூன்-பைத்தியக்காரன் அவர் எச்சரிக்கப் பட்டார். அவர் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அதுமட்டுமா நூஹ் நபியைப் பார்த்து  சொன்னார்கள்.
 
நூஹே! உங்களை யார் பின்பற்றுகிறார்கள். உங்களுக்கு பின்னால் வரக்கூடிய மக்கள் யார்? சாதாரண மக்கள். அறிவில்லாத மக்கள்  எங்களில் மிகவும்  மட்டமானவர்கள். அல்குர்ஆன்11:27
 
யாரை மட்டமானவர்கள் என்று சொல்கிறார்கள்? யாரிடத்தில் செல்வம் இல்லையோ, யாரிடத்தில் வசதி இல்லையோ, அவர்களிடத்தில் ஒழுக்கம் இருந்தாலும் சரி, அவர்களிடத்தில் இறை நம்பிக்கை இருந்தாலும் சரி, அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, நியாயமானவர்களாக இருந்தாலும் சரி.
 
அன்பு சகோதரர்களே! இதுதான் நாம் பாதுகாக்க வேண்டும். இன்றைய காஃபிர்கள் இடத்தில் அல்ல. முஷ்ரிக்குகளிடத்தில் அல்ல. பல முஸ்லிம்கள் இடத்திலும் ஒரு அளவுகோலாக ஆகிவிட்டது. 
 
பணம் இருந்தால் அவர் ஒரு  கண்ணியமானவர். வசதி இல்லையா? அவருக்கு எந்த கண்ணியமும் கிடையாது. பணம் இல்லையா அவருக்கு கண்ணியம் கிடையாது. பணம் இருக்கிறதா? கண்ணியம், மார்க்கம், தக்வா, இறையச்சம், அவருடைய ஒழுக்கம், நன்னடத்தை, அவருடைய நம்பிக்கை, இதுவெல்லாம் இன்று மேன்மக்களுக்கு உரிய அடையாளங்கள் அல்ல. 
 
இப்படித்தான் நூஹ் நபி காலத்து மக்கள் சொன்னார்கள்:
 
எங்களை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. நீங்கள் பொய்யர்கள் என்று நாங்கள் கருதுகிறோம். (அல்குர்ஆன் 11 : 27)
 
அல்லாஹ் பாதுகாப்பனாக. இங்கே நூஹ் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் பதிலை பாருங்கள். 
 
என் மக்களே எனக்கு வழிகேடில்லை. என்னில் எந்த வழிகேடும் இல்லை. அகிலத்தின் இறைவன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட ரசூல் நான். என்னுடைய ரப்புடைய தூதுத்துவ செய்திகளை உங்களுக்கு நான் எடுத்துக் கூறுகிறேன். உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடம் அறிந்திருக்கிறேன். (அல்குர்ஆன்7 : 61,62)
 
ஒரு அழைப்பாளன் மக்களை அழைக்கும்போது பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள். அவர்கள் ஏசுகிறார்கள் என்று அதற்கு எதிராக பதிலாக அவரும் அது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது கிடையாது. 
 
அந்த மக்களுக்கு நல்லறிவு வரும் பொருட்டு, மென்மையாகவும், ஞானத்தோடும், புத்தியோடும் அவர்களுக்கு அறிவுரை செய்வது. 
 
இதைத்தான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் செய்கிறார்கள். நான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். நான் அல்லாஹ்விடத்தில் நீங்கள் அறியாததை எல்லாம் அறிவேன் என்று. 
 
இப்படியாக நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த வரலாறு அல்லாஹ் தஆலா தொடர்ந்து சொல்லிக்கொண்டே செல்கிறான். இவ்வளவு நீண்ட அந்த பொறுமை, தியாகங்கள் அதற்குப்பிறகு அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்.
 
யா அல்லாஹ் நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். இந்த மக்கள் என்னை இப்படி இயலாத நிலைக்கு தள்ளி விட்டார்கள். நீ எனக்காக எப்போதும் உதவிக்கு வருவாயாக. (அல்குர்ஆன் 54 : 10)
 
அல்லாஹ் தஆலா மேலும் சொல்லிக்காட்டுகிறான்.
 
நூஹ் என்னிடத்தில் கையேந்தி மன்றாடினார். பதில் கொடுப்பவர்களில் துஆக்களை ஏற்பவர்களில் நாமே மிக சிறந்தவர்கள். (அல்குர்ஆன் 37 : 75)
 
இந்த ஒரு படிப்பினை என்னவென்றால், அல்லாஹ்விடத்தில் நம்முடைய துஆ கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளக் கூடும். ஒரு  மூஃமின் நிராசையாக கூடாது. அல்லாஹ் என்னுடைய துஆவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பலவீனப்பட்டு விடக்கூடாது. 
 
ஆனால் அவசரப்படக்கூடாது. உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும். உடனே அந்த துஆ வெளிப்படவேண்டும் என்று. 
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் பொறுமையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். 950 ஆண்டு கால தொடர் பிரச்சாரத்திற்குப் பிறகு அல்லாஹ்விடத்தில் துஆ செய்தார்கள். யா அல்லாஹ் எனக்கு உதவி செய்வாயாக என்று.
 
எடுத்த எடுப்பிலேயே ஓராண்டில் அல்ல, இரண்டு ஆண்டுகளில் அல்ல, மூன்று ஆண்டுகளில் அல்ல, தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகாலம். 
 
முஃபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள். அந்த காலகட்டத்தில் ஒருவர் இறந்தால் தன்னுடைய பிள்ளைகளை அழைத்து அவர் வசிய்யத் செய்வாராம். என் பிள்ளைகளே! எனக்கு என்னுடைய தந்தையும், அவருக்கு அவருடைய தந்தையும் ஆலோசனை சொன்னார்கள் என்று. நான் உனக்குச் சொல்கிறேன். இந்த நூஹை பின்பற்றாதே. 
 
இப்படியாக 950 ஆண்டு காலம் அந்த மக்களுக்கு மத்தியில் அவர்கள் அயராது அழைக்க செய்தார்கள். அந்த மக்களுடைய நிராகரிப்பின் காரணமாக நூஹ் அல்லாஹ்விடத்தில் துஆ செய்தார்கள். 
 
யா அல்லாஹ்! இனியும் நீ இவர்களை விட்டால், உனது மற்ற அடியார்களையும் வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் பெற்றெடுக்க கூடிய குழந்தைகளை காஃபிர்களாக ஆக்கிவிடுவார்கள். (அல்குர்ஆன் 71 : 27)
 
எந்த அளவுக்கு தங்களுடைய பிள்ளைகளுக்கு தர்பியத் கொடுத்தார்கள் என்றால், ஒன்றும் அறியாத அந்த குழந்தைகள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பார்த்தால் அந்த குழந்தைகள் தந்தையுடைய  முதுகில் இருக்கும், தோளில் இருக்கும், தந்தையே நீ என்னை இறக்கி விடு. இந்த பைத்தியக்காரனை நானும் கல்லால் அடிக்கிறேன் என்று. 
 
அப்போதுதான் அல்லாஹ்விடத்தில் சொன்னார்கள். இறைவா! நீ இவர்களை விட்டால் இவர்கள் மற்றவர்களை வழி கெடுப்பது மட்டுமல்ல, தங்களுடைய பிறக்கக்கூடிய குழந்தைகளையும் காஃபிர்களாக ஆக்குவார்கள். 
 
இன்று நாம் பார்க்கிறோம்; இஸ்லாமிற்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்ட கூடிய மக்கள் அப்பாவி பிள்ளைகளுக்கு கூட இஸ்லாம் மீதுண்டான காழ்ப்புணர்ச்சிகள், இஸ்லாமீதுள்ளான எதிர்ப்புகளை  அந்த பிள்ளைகளுக்கு சொல்லித்தர, ஒன்றும் அறியாத குழந்தைகள் அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது. 
 
பல இடங்களில் நீ முஸ்லிமை பார்த்தால் என்ன செய்வாய் என்று. அவர்களிடத்தில் சொல்லப்பட்டால் முஸ்லிம் என்றால் நான் வெறுப்பேன். எனது வாழ்க்கை நோக்கம் முஸ்லீம்களை கொல்வது என்று. 
 
அந்த சாதாரண குழந்தை எதுவும் அறியாதவர்கள் சொல்லக்கூடிய அந்த நிலையை பார்த்தால் இதே நிலைதான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்திலும் நடந்தது.
 
தோழர்களே! நம்மிடத்தில் இருக்கவேண்டிய ஒன்று தாவா பணி, பொறுமை, அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது, அதைதான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் வரலாறு நமக்கு பாடமாக படிப்பினையாக இருக்கிறது. 
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டு படிப்பினை பெற்று, அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றக் கூடிய மன உறுதியை தருவனாக!
 
எந்த சூழ்நிலைகளிலும் தடுமாறி விடாமல், கொள்கையில் நாம் தளர்ந்து விடாமல் அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்தவர்களாக, அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றக்கூடியவர்களாக, நம்மை ஆக்கி வைப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَقَالَ عَطَاءٌ: عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «صَارَتِ الأَوْثَانُ الَّتِي كَانَتْ فِي قَوْمِ نُوحٍ فِي العَرَبِ بَعْدُ أَمَّا وَدٌّ كَانَتْ لِكَلْبٍ بِدَوْمَةِ الجَنْدَلِ، وَأَمَّا سُوَاعٌ كَانَتْ لِهُذَيْلٍ، وَأَمَّا يَغُوثُ فَكَانَتْ لِمُرَادٍ، ثُمَّ لِبَنِي غُطَيْفٍ بِالْجَوْفِ، عِنْدَ سَبَإٍ، وَأَمَّا يَعُوقُ فَكَانَتْ لِهَمْدَانَ، وَأَمَّا نَسْرٌ فَكَانَتْ لِحِمْيَرَ لِآلِ ذِي الكَلاَعِ، أَسْمَاءُ رِجَالٍ صَالِحِينَ مِنْ قَوْمِ نُوحٍ، فَلَمَّا هَلَكُوا أَوْحَى الشَّيْطَانُ إِلَى قَوْمِهِمْ، أَنِ انْصِبُوا إِلَى مَجَالِسِهِمُ الَّتِي كَانُوا يَجْلِسُونَ أَنْصَابًا وَسَمُّوهَا بِأَسْمَائِهِمْ، فَفَعَلُوا، فَلَمْ تُعْبَدْ، حَتَّى إِذَا هَلَكَ أُولَئِكَ وَتَنَسَّخَ العِلْمُ عُبِدَتْ» (صحيح البخاري- 4920) 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/