HOME      Khutba      அல்லாஹ்விற்காக ஏங்குதல்! | Tamil Bayan - 957   
 

அல்லாஹ்விற்காக ஏங்குதல்! | Tamil Bayan - 957

           

அல்லாஹ்விற்காக ஏங்குதல்! | Tamil Bayan - 957


அல்லாஹ்விற்காக ஏங்குதல்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்விற்காக ஏங்குதல்!
 
வரிசை : 957
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 21-03-2025 | 21-09-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிகச் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிகக் கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழி-கட்டுப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தும் அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இன்னும் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீது அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாக, உபதேசம் செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய அன்பையும் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அருளையும் வேண்டியவனாக மகத்தான மறுமையின் சொர்க்கத்தின் வெற்றியை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய குற்றங்களை மன்னிப்பானாக! அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் மறதியாக நினைவாக வேண்டுமென்றோ அலட்சியமாகவோ நாம் செய்த ஒவ்வொரு சிறிய பெரிய பாவத்தையும் தனிமையில் செய்ததையும் சபைகளில் செய்ததையும் அல்லாஹு தஆலா மன்னித்து அருள்வானாக! ஆமீன். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரமழான் மாதம் அடைந்தோம். இப்போது இன்னும் சில தினங்களில் அதை பிரியப் போகிறோம். அல்லாஹ்வுடைய அன்பை பெறுவதற்காக, மறுமையின் மகத்தான நற்பாக்கியங்களை பெறுவதற்காக, ஆண்டின் மற்ற மாதங்களில் நாம் செய்த குறைகளுக்கு நாம் செய்த தவறுகளுக்கு நாம் செய்த பாவங்களுக்கு பாவ மன்னிப்பு தேடி கொள்வதற்காக, ஆண்டின் மற்ற மாதங்களில் நாம் இழந்த நன்மைகளை பெற்றுக் கொள்வதற்காக, கொடுக்கப்பட்ட மகத்தான நற்பாக்கியமிக்க இந்த மாதத்தை அடைந்தோம். இன்னும் சில தினங்களில் அதை பிரியப் போகிறோம்.
 
யார் ரமழான் மாதத்தை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காண்பித்துக் கொடுத்த வழியில் கழித்தார்களோ அல்ஹம்து லில்லாஹ் அவர்கள் மிக்க பாக்கியவான்கள். 
 
அன்பான சகோதரர்களே! ஈமான் இஸ்லாம் என்று நாம் பேசுகிறோம். ஈமான் இஸ்லாம் என்ற இந்த பரிசுத்தமான வாக்கியங்களுக்குள் மறைந்து இருக்கக்கூடிய சில ரகசியங்களையும் நாம் அறிய வேண்டும். அல்லாஹ்வுடைய இந்த தீன் அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் இதிலே ஒரு மகத்தான ஒரு தன்மை இருக்கிறது. அடியானை அல்லாஹ்வின் பக்கம் திருப்புவது. அடியானுடைய முகத்தை அல்லாஹ்வின் பக்கம் திருப்புவது.
 
اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ ‏
 
(அல்குர்ஆன் 6:79)
 
நம்முடைய முகம் உலகத்தை நோக்கி, உலக மோகத்தை நோக்கி, அழிந்து விடக்கூடிய அற்பமான இச்சைகள் ஆசைகளை நோக்கி இருக்கிறது. அந்த முகத்தை நம்மை படைத்த அல்லாஹ்வின் பக்கம், மகத்தான மறுமையின் பக்கம், சொர்க்கத்தின் பக்கம் அந்த மறுமையின் சொர்க்கத்தின் மகத்தான வெற்றியை அடைவதற்கு வழியாக இருக்ககும் நல்ல அமல்களின் பக்கம் நம்முடைய முகங்களை திருப்ப வேண்டும். 
 
நம்முடைய கல்போடு உள்ளத்தோடு நம்முடைய முகங்களை திருப்ப வேண்டும். இந்த உள்ளம் அல்லாஹ்வை மறந்த உள்ளமாக ஆகிவிடக்கூடாது. அல்லாஹுத்தஆலா தன்னுடைய நபியை எச்சரிக்கிறான்.
 
وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ‏
 
நபியே! அல்லாஹ்வை மறந்தவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். (அல்குர்ஆன் 7:205)
 
மேலும், அல்லாஹு தஆலா நமக்கு சொல்கிறான்:
 
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰٮهُمْ اَنْفُسَهُمْ‌ اُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏
 
அல்லாஹ்வை மறந்தவர்களை போன்று வாழாதீர்கள்! யார் அல்லாஹுவை மறக்கின்றார்களோ அல்லாஹுத்தஆலா அவர்களையே அவர்களுக்கு மறக்க வைத்து விடுவான். (அல்குர்ஆன் 59:19)
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! சகோதரர்களே! நாம் ஒருத்தரிடத்திலே கொடுத்த செல்வத்தை மறக்கலாம். நம்முடைய உரிமைகளை மறக்கலாம். அல்லாஹ்வை மறப்பது மிகப்பெரிய நஷ்டம். அல்லாஹ்வை மறப்பதால் தான் நம்முடைய தொழுகைகள் பலவீனமாக இருக்கிறது. தொழுகையில் அலட்சியம். தொழுகைக்கு செல்வதில் அலட்சியம். தொழுது கொண்டு இருக்கும்போதும் அலட்சியம். 
 
காரணம்? அல்லாஹ்வை மறந்தது. நம் மீது அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை ஆர்வத்தோடு பயத்தோடு செய்ய வேண்டும். ஆனால் அந்த ஆர்வத்தோடு பயத்தோடு செய்கிறோமா? நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ்வை மறந்து இருக்கின்றோம். அல்லாஹுவை விட்டு உலகத்தின் பக்கம் நம்முடைய முகத்தை திருப்பி இருக்கிறோம். அதுதான்காரணம்.
 
நம்முடைய ஆர்வம் நம்முடைய அன்பு அதை கொஞ்சம் எடைபோட்டு பார்ப்போம். அல்லாஹ் இந்த ஆர்வத்தை இந்த அன்பை இந்த ஆசையை யார் மீது வைக்க வேண்டும் என்று சொன்னானோ அவர் மீது இந்த அன்பை ஆசையை ஆர்வத்தை வைத்திருக்கிறோமா? அல்லது சபிக்கப்பட்ட அல்லாஹ்விடம் இருந்து நம்மை திசை திருப்பக் கூடிய ஷைத்தானின் நண்பர்களாக நம்மை மாற்றி விடக் கூடிய சொர்க்கத்தை விட்டு நம்மை தூரமாக்க கூடிய வஸ்துக்களின் பக்கம் இந்த ஆர்வத்தை இந்த அன்பை ஆசையை வைத்திருக்கிறோமா? 
 
நாளை மறுமையில்,
 
يَوْمَ تُبْلَى السَّرَآٮِٕرُۙ‏
 
(அல்குர்ஆன் 86:9)
 
உள்ளத்தில் உள்ள ரகசியங்கள் எல்லாம் வெளியே கொண்டுவரப்பட்டு அல்லாஹ் அடியானுக்கு முன்னால் காண்பிப்பான். 
 
உலகத்தில் மக்களிடமிருந்து நீ மறைத்திருக்கலாம். ரப்பிடத்திலே எதையும் மறைக்க முடியாது.
 
رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِىْ وَمَا نُعْلِنُ‌ 
 
இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் துஆவிலே சொன்னார்கள்: எங்கள் இறைவா நாங்கள் மறைத்தாலும் நீ அறிவாய். நாங்கள் வெளிப்படுத்தினாலும் நீ அறிவாய். (அல்குர்ஆன் 14:38)
 
يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ‏
 
கடை கண்கள் செய்யும் துரோகத்தையும் மோசடியையும் அல்லாஹ் அறிவான். உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 40:19)
 
நாளை மறுமையில் இந்த உள்ளத்தின் ஆசைகள் வெளிப்படுத்தப்படும் போது இந்த உள்ளத்தில் அல்லாஹ்வின் ஆசை இல்லை; அல்லாஹ்வின் அன்பு இல்லை; அல்லாஹ்வின் ஆர்வம் இல்லை என்று வெளிப்படுமேயாயானால் ஹலாலான ஆசை போக, மனைவியை விரும்புவது, பிள்ளைகளை விரும்புவது, ஹலாலான வருமானத்தை விரும்புவது இவையெல்லாம் ஹலாலான ஆசை. 
 
அல்லாஹ் என்னையும் உங்களையும் மன்னிப்பானாக! ஹலாலான ஆசைகள் மட்டும்தான் நம்முடைய உள்ளத்தில் இருக்கிறதா? ஹராமான ஆசைகள் இல்லையா? அந்த ஹராமான ஆசைகள் வெளியே கொண்டுவரப்பட்டால் எவ்வளவு கேவலப்படுவோம்! நினைத்துப் பார்க்க வேண்டும். 
 
அது மட்டுமா? ஹலாலான ஆசையே அளவாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். மனைவியை நேசிப்பது ஹலால். பிள்ளைகளை நேசிப்பது ஹலால். நீங்கள் ஹலாலாக சம்பாதித்து ஹலாலாக கட்டிய வீட்டை நேசிப்பது ஹலால். நீங்கள் ஹலாலாக செய்யக்கூடிய ஏமாற்றாமல் வாக்கு மீறாமல் ஒப்பந்தங்களை முறிக்காமல் செய்யக்கூடிய வியாபாரத்தை நேசிப்பது ஹலால். ஆனால் அல்லாஹ் என்ன சொல்கிறான்?
 
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌  وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏
 
உங்களுக்கு அல்லாஹ்வின் ஆசையை விட, உங்களுக்கு அல்லாஹ்வின் அன்பை விட, அல்லாஹ்வின் தூதரின் ஆசையை விட, அல்லாஹ்வின் தூதரின் அன்பை விட, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக செய்ய வேண்டிய ஜிஹாதின் அன்பை விட, ஆசையை விட உங்களது பெற்றோரின் மீது உங்களின் பிள்ளைகளின் மீது உங்கள் மனைவிகளின் மீது உங்கள் சகோதரர்களின் மீது உங்களுடைய குடும்பத்தின் மீது நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் செல்வத்தின் மீது நீங்கள் கட்டிய வீட்டின் மீது ஆசை அதிகமாகி விட்டால் அல்லாஹ்வுடைய தண்டனையை எதிர்பாருங்கள்! (அல்குர்ஆன் 9:24)
 
ஹலால் ஆன ஆசையாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது உண்டான ஆசையை அது மிகைத்து மீறி விடக்கூடாது.
 
وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ 
 
அல்லாஹ் சொல்கிறான்: மூஃமின்கள் அல்லாஹ்வை அளவு கடந்து நேசிப்பார்கள். (அல்குர்ஆன் 2:165)
 
முஃமின் என்போர் ஆடையை கொண்டா? வெறும் சில தோற்றங்களை கொண்டா? முஃமின்! வேஷம் போடுவது நடிப்பது இலகுவானது. 
 
அல்லாஹ்வின் தூதரின் காலத்திலே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு கூட்டம் நடித்துக் கொண்டு இருந்தார்கள். பாசாங்கு காட்டிக் கொண்டிருந்தார்கள்.
 
اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ‌ۘ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ  وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَـكٰذِبُوْنَ‌ ‏
 
நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் சாட்சி பகருகிறோம்” என்று கூறுவார்கள். நிச்சயமாக நீர் அவனது தூதர்தான் என்று அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி பகருகிறான். (அல்குர்ஆன் 63:1)
 
அல்லாஹ் அக்பர்! சகோதரர்களே! முஃமின்கள் அல்லாஹ் உடைய அன்பை உணரக்கூடியவர்கள். ஈமான் என்பது அல்லாஹ்வுடைய அன்பை கொடுக்க வேண்டும். ரசூலுல்லாஹ் உடைய அன்பை கொடுக்க வேண்டும். இந்த மார்க்கத்தின் மீது உண்டான பற்றை உணர்த்த வேண்டும். அதுதான் ஈமான். அல்லாஹ்வுடைய அன்பு கலக்காத அல்லாஹ்வுடைய நேசம் கலக்காத அல்லாஹ்வுக்காக  ஏங்காத உள்ளத்திலே ஈமான் இருக்காது. ரப்பின் மீது அப்படிப்பட்ட பாசம் வர வேண்டும். என்றைக்காவது இப்படி நாம் அல்லாஹ்வை தேடி இருக்கின்றோமா? ஒரு தொழுகை அந்தத் தொழுகையில் அல்லாஹ்வுடைய ஆசையோடு தொழுகிறோமா? அப்படி தொழுது இருப்போமேயானால் அந்த தொழுகையை எவ்வளவு அழகாக தொழுது இருப்போம்! 
 
فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ‌ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ‏
 
ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவருக்கு யஹ்யாவை (வாரிசாக) வழங்கினோம். இன்னும், (அதற்கு முன்னர்) அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர். (அல்குர்ஆன் 21:90)
 
இன்று, நாம் தொழக்கூடிய தொழுகை அல்லாஹ்வுடைய ஆசையோடு நிறைவேற்றப்படுகிறது என்று நினைத்து விடாதீர்கள்! ஏதோ பழகி விட்டோம்; ஏதோ கடமையை செய்தாக வேண்டும்; ஒரு பெயருக்கு அதை ஒட்டிக் கொண்டிருக்கின்றோமே தவிர அல்லது ஒட்டி வைத்திருக்கின்றோமே தவிர அந்த முழு ஆசையோடு, அல்லாஹ்வுடைய நேசர்களிடத்தில் இருக்கும் என்று அல்லாஹ் வர்ணிக்கின்ற அந்த ஆசையோடு அல்லாஹ்வை அணுகுகிறோமா? தொழுகையில் ஈடுபடுகிறோமா?
 
மின்விசிறி இருக்கிறதா இல்லையா? ஏர் கண்டிஷன் இருக்கிறதா இல்லையா? கார்பெட்டில் இருக்கிறோமா இல்லையா? இதுவெல்லாம் இல்லை என்றால் இன்று நம்மால் தொழ முடியுமா? நாம் சுகத்தை பழகி வைத்துக் கொண்டு அந்த சுகத்தோடு சில வணக்கங்களை சேர்த்துவைத்திருக்கிறோம் அவ்வளவுதான். இந்த சுகங்கள் எல்லாம் நமக்கு இல்லை என்றால் நம்முடைய நிலைமை என்ன என்று அல்லாஹ் தான் அறிவான். 
 
இமாம் நசயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஒரு ஹதீஸை பதிவு செய்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போருக்கு சென்று கொண்டிருந்தார்கள். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தோழர்களை ஒருவர் பார்த்தார். சாதாரண மனிதர் கிராமத்து மனிதர் அந்த தோழர்களோடு பழகினார்; பேசினார். அவருக்கு ஈமான் இஸ்லாம் பிடித்து விட்டது. மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே ஷஹாதாவை சொன்னார். 
 
எங்கே செல்கிறீர்கள்? அல்லாஹ்வுடைய பாதையில் எதிரிகளிடத்திலே போர் செய்வதற்காக. அப்படியா? அல்லாஹ்வுடைய பாதையா? நானும் அந்த பாதையிலே கலந்து கொள்கிறேன். 
 
(போர் அல்லாஹ்வுடைய பாதை. سبيل الله அல்லாஹ்வோடு இணைக்கப்படக்கூடிய அந்தப் பொருள்களிலே வஸ்துக்களிலே நமக்கு என்ன ஈடுபாடு இருக்கிறது! கிதாபுல்லாஹ் -அல்லாஹ்வுடைய வேதம்; இதன் மீது நமக்கு உண்மையான பாசம் இருக்கிறதா? இதை எப்படி ஓத வேண்டுமோ அப்படி ஓதத் தெரிந்திருக்கிறோமா? இதற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கொடுக்கிறோம்? யோசித்துப் பாருங்கள்! அல்லாஹ்வோடு ஒரு சொல் இணைக்கப்படுகிறது என்றால் دين الله -அல்லாஹ்வுடைய மார்க்கம் بيت الله -அல்லாஹ்வுடைய கஃபா, அல்லாஹ்வுடைய வீடு, نبي الله ரசூலுல்லாஹ் -அல்லாஹ்வுடைய நபி அல்லாஹ்வுடைய ரசூல். இப்படி அல்லாஹ்வோடு ஒரு சொல் சேர்த்து சொல்லப்பட்டால் அதற்கான மகத்துவமே தனிதான்.)
 
ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வின் தூதரே! அந்த பாதையில் நானும் வரவேண்டும். கலந்து கொண்டார். எதிரிகளை சந்தித்தார். மாலை நேரத்திலே அன்று கிடைத்த கனிமத்துகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பங்கு வைத்தார்கள். 
 
எல்லோருக்கும் கனிமத்துகளை பங்கு வச்சாங்க. அப்புறம் இந்தப் பங்கை நேற்று இஸ்லாமை ஏற்ற அந்தத் தோழருக்கும் கொடுத்து விடுங்கள் என்றார்கள். அவர் ஸஹாபாக்களுடைய கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அவர் வந்த உடனே இந்த பங்கு கொடுத்திருங்க. சஹாபாக்களில் சிலர் அதை வாங்கி வைத்துக் கொண்டார்கள். 
 
அந்த சஹாபி மாலை கழிந்து நல்ல இரவான உடனே வராரு. அவரை கூப்பிடுறாங்க. இந்தாங்க உங்க பங்கு; உங்களுக்குன்னு உள்ளது. அவருக்கு ஒண்ணுமே புரியல. என்னங்க என்னமோ பொருட்களை கொடுக்குறீங்க? உங்க பங்கு என்று சொல்றீங்க? 
 
(இப்பதானே இஸ்லாமுக்கு வந்து இருக்காரு.) சஹாபாக்கள் சொல்றாங்க; இது அல்லாஹ்வுடைய பாதையில நம்ம ஜிஹாதுக்கு போனோம். எதிரிகளை சந்தித்தோம். போரிட்டோம். அன்றைய தினத்துல நமக்கு என்னென்ன செல்வங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டதோ அது கனிமத்து அதை முஜாஹிதுகள் -போராளிகளுக்கு மத்தியில ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பங்கு வைப்பாங்க. நீங்களும் போர்ல கலந்து கொண்டீர்கள். இது உங்களுக்குள்ள பங்கு. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதை எடுத்துக் கொடுக்க சொன்னாங்க. 
 
உடனே அவர் அந்தப் பங்கை எடுத்துக்கொண்டு அப்படியே ரசூலுல்லாஹ்வை தேடி வர்றார். ரசூலுல்லாஹ் முன்னாடி வைத்துவிட்டு அல்லாஹ்வின் தூதரே! இது என்ன என்று கேட்கிறார். 
 
(நாமளா இருந்தா என்ன செஞ்சிருப்போம்? யா அல்லாஹ் துனியாவில் பரக்கத் குடு! வியாபாரத்தில் பரக்கத் குடு என்பதற்காகவே தொழுது கொண்டிருக்கிறோம். நம்மில் எத்தனை பேருடைய தொழுகை சொர்க்கத்திற்காக இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள்! 
 
யா அல்லாஹ்! உலகத்துல எதுவுமே வேணாம் எனக்கு. ஆகிரத்தை கொடு! யா அல்லாஹ் உன்னுடைய அன்பை பொருத்தத்தை மன்னிப்பை கொடு! அதற்காகவே தொழுகிறேன். அதுவல்லவா தொழுகை! இது துன்யா பிச்சை. அல்லாஹுத்தஆலா கொடுக்கத்தான் போகிறான் அல்லாஹுத்தஆலா. உனக்கு கொடுக்காமல் யாருக்கு கொடுக்க போறான்?! கண்டிப்பா குடுப்பான். ஆனா இதற்காக அழாதே தொழாதே! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
உளு செய்தாயா? பாவங்கள் மன்னிக்கப்பட்டது. இரண்டு ரக்கஅத் தொழுதாயா? பாவங்கள் மன்னிக்கப்பட்டது. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 666.
 
இதைத்தான் வாக்களித்தார்கள். துன்யா பரக்கத் கண்டிப்பா உனக்குதான் கொடுக்கப் போறான்.
 
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَـفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰـكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
 
இன்னும், ஊர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி இருந்தால், அவர்கள் மீது வானம் இன்னும் பூமியிலிருந்து அருள்வளங்களை திறந்திருப்போம். எனினும், (அவர்களோ நமது தூதர்களைப்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக (தண்டனையால்) அவர்களைப் பிடித்தோம். (அல்குர்ஆன் 7:96)
 
முஃமின்களே தக்குவா உள்ளவர்களே உங்களுக்குத்தான் வானம், பூமி உடைய பரக்கத் கண்டிப்பா திறந்து கொடுப்பேன். வேற யாருக்கு? அல்லாஹ் அக்பர்! ஆனால், துணியாவுக்காக செய்யாதே! மறுமைக்காக மகத்தான நற்பாக்கியங்களுக்காக நிலையான நிரந்தரமான மறுமையின் நற்பெயர்களுக்காக செய்!
 
اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌  وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏
 
செல்வமும் ஆண்பிள்ளைகளும் உலக வாழ்க்கையின் அலங்காரமாகும். ஆனால், என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உம் இறைவனிடம் (உங்களுக்கு) நன்மையாலும் சிறந்தவை; இன்னும், ஆசையாலும் சிறந்தவையாகும். (அல்குர்ஆன் 18:46)
 
ஹதீஸின் தொடர் : அந்த சஹாபி புரிஞ்சிகிட்டாரு.  நபியே இது என்னமோ காசு கொடுத்தாங்க ஏதோ பொருள்கள் எல்லாம் இருக்கு. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னாங்க: அல்லாஹ் உனக்கு கொடுத்த கனிமத். 
 
அப்போது அவர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே ஒரு வார்த்தை சொன்னார்: உங்களோடு ஜிஹாதுல வந்தா எதிரிகளின் சொத்து செல்வம் பொருள் ஏதாவது கிடைக்கும் என்பதற்காக இதற்காக நான் முஸ்லிமாகவில்லை. 
 
அல்லாஹ்வுடைய தூதர் இந்த வார்த்தைக்கு எதுவும் கோவிச்சுக்கல. நான் கொடுக்கிறதை தட்டிட்டியே! அல்லாஹ் உனக்கு கொடுத்த காசு என்று சொன்னதுக்கு மறுக்கிறாயா? என்று. 
 
அல்லாஹ்வுடைய தூதருக்கு தெரியும். கனிமத்தாக இருந்தாலும் இது துன்யா தான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதையும் எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள். 
 
பிறகு கேட்டார்கள்; நீ எதற்காக முஸ்லிம் ஆனாய்? உன்னுடைய இஸ்லாம் எதற்காக? எதற்காக எங்களோடு போரிலே கலந்து கொண்டாய்? சொல்றாரு; 
 
(ரெண்டு நாலு மூணு நாலு அல்லது ஒரு நாளைக்கு முன்னாடி முஸ்லிமானவர். அவருடைய ஈமானையும் பாருங்கள். நம்ம எல்லாம் “பிறப்பிலேயே முஸ்லிம்” “பரம்பரை பாய்” என்று சொல்லிக்கிட்டு உட்கார்ந்துகிட்டு பிரியாணியை மட்டும் தின்னுகிட்டு உட்கார்ந்திருக்கிறோம்.. அட அறிவாளி பிறப்பிலேயே எல்லாரும் முஸ்லிம் தான்டா. என்னமோ எல்லோரும் பிறந்ததெல்லாம் காஃபிர் மாதிரி இவர் மட்டும் நேரா வானத்திலிருந்து முஸ்லிமா குதிச்ச மாதிரி. எல்லாம் முஸ்லிமாக தான் பிறக்கிறார்கள். பிறகு தான் மாற்றப்படுகிறார்கள்.)
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேக்குறாங்க; நீங்க எதுக்கு முஸ்லிமா ஆனீங்க? சொல்றாரு; அல்லாஹ்வின் தூதரே! உங்களோடு போரிலே கலந்து கொள்ளும் போது நான் போரிலே மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒரு அம்பு சீறி பாய்ந்து வர அது என்னுடைய தொண்டைக் குழியை தாக்கி  இந்தப் பக்கமாக சென்று மறுபக்கமாக வெளியேறி விட அதிலே நான் ஷஹீதாக வேண்டும். அதற்காகத்தான் நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். 
 
அறிவிப்பாளர் : ஷத்தாத் இப்னு அல் ஹாத் அல்லைஸீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 1952.
 
சகோதரர்களே இங்கே கொஞ்சம் நில்லுங்கள்! இந்த ஷஹாதத்தின் மீது அவருக்கு இப்பேற்பட்ட ஒரு ஆசையை ஏற்படுத்தியது என்ன? அல்லாஹ்வின் மீது உண்டான ஆசை. அல்லாஹ்வை சந்திப்பதற்கு வழியை தேடினார். அதற்கு தோழர்கள் இடத்திலே கேட்டிருப்பார். ஷஹாதத்து கிடைத்தால் அல்லாஹ்வை சந்திக்கலாம் என்று சொல்லியிருப்பார்கள்; அதைத்தான் நபியிடம் சொல்லிக் காட்டுகின்றார் 
 
ஆகிரத் அல்லாஹ்வை சந்திப்பதற்கான இடம். மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை சொர்க்க வாழ்க்கை. அல்லாஹ்வுடைய ரஹ்மத்துடைய வாழ்க்கை. அந்த ஆசையோடு வாழ்கிறோமா? 
 
யூதர்கள் நஸ்ராணிகளை பற்றி அல்லாஹ் சொல்கிறான்: 
 
யூதர்கள் இருக்கிறார்களே எல்லாரையும் விட உலகத்தில் துன்யாவை விரும்புறவங்க. ஆயிரம் ஆண்டுகள் உலகத்தில் வாழ வேண்டும் என்று விரும்புவான். (அல்குர்ஆன் : 2:96)
 
அந்த நிலையில் தான் நாமும் இருக்கின்றோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! அவ்வளவு துன்யாவின் ஆசை. உலக மோகத்தின் ஆசை. இந்த துன்யா வாழ்க்கையின் செல்வத்தின் மீது உண்டான ஆசை. 
 
எல்லா செல்வத்தையும் சேர்த்து வைத்திருக்கின்றோமே தவிர, அனுப்பி வைத்திருக்கவில்லை. அதனால் தான் இங்கேயே வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 
 
சஹாபாக்கள் சேர்த்த செல்வத்தை அனுப்பி விட்டார்கள். அதை அனுபவிப்பதற்காக. அல்லாஹ்விடத்திலே மறுமையிலே செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். நாமோ கருமிகளாக கஞ்சர்களாக பேராசை பிடித்தவர்களாக செல்வத்தை எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு உண்மையை உணராமல் அல்லாஹ்வுக்கு கொடுக்காமல் இருக்கிறோம். நம்முடைய சொர்க்கத்திற்கு நம்முடைய கப்ருக்கு கொடுக்காமல் இருக்கிறோம். எப்படி மறுமைக்கு செல்வதை நாம் விரும்புவோம்! 
 
அந்த சஹாபி சொன்ன ஒரு அம்பு வரனும். நான் ஷஹீதாகணும். அவ்வளவுதான். எனக்கு ஆசை. அதற்காகத்தான் என்னுடைய இஸ்லாம். அதற்காகத்தான் என்னுடைய இந்த பயணம். அல்லாஹு அக்பர்! 
 
அதற்கு அடுத்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு வார்த்தை சொன்னாங்க. ஏனென்றால் நபி இடத்தில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொய் பேச முடியாது. ஏமாத்த முடியாது. 
 
ரசூலுல்லாஹ்வை மயக்கனும்னு பேசினால் அல்லாஹ் வசனம் இறக்கிடுவான். நபியே இவன் பக்கா கயவாளி பய. இவன் ஏமாத்து பேர்வழி. இவன் பொய் சொல்றவன். உங்களை வாதித்து பேச்சால் மயக்க பார்க்கிறான். நம்பாதீங்க என்று அல்லாஹ் வசனத்தை இறக்கி விடுவான். 
 
ரசூலுல்லாஹ் சொன்னாங்க; உண்மையான நிய்யத் வை! உன் நிய்யத்தை உண்மைனா அல்லாஹ் நடத்தி காட்டுவானாக! அல்லாஹு அக்பர்! 
 
நம்ம வைக்கிற நிய்யத் எல்லாம் பொய். அல்லாஹ் சொல்றான்; நான் குடுத்ததுல இருந்து குடு என்கிறான். நாம் அல்லாஹ் கிட்ட சொல்கிறோம்; நீ குடுத்தா நான் கொடுப்பேன் என்கிறோம். என்னமோ இதுவரைக்கும் பிச்சைக்காரனா நடுரோட்டில் இருக்கிற மாதிரி. என்னென்ன வேலை பார்க்கிறோம் பாருங்க. 
 
அல்லாஹ் என்ன சொன்னான் நான் கொடுத்தால் கொடு என்று சொன்னானா? குர்ஆன்ல ஒரு வசனத்தை காட்டுங்க. நான் கொடுத்தால்  குடுன்னு சொல்லி இருக்கானா? எப்படி இருக்கு வசனம்;
 
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ 
 
நான்  கொடுத்ததில் இருந்து அவர்கள் கொடுப்பார்கள். (அல்குர்ஆன் 2:254)
 
அல்லாஹ் சொன்னான்: எது ஏற்கனவே உன்னிடத்தில் இருக்கோ அதிலிருந்து கொடு! அப்புறமாக நான் அதில் பரக்கத் செய்வேன். நம்ம சொல்றது அல்லாஹ் எனக்கு கொடுத்தால் நான் உங்களுக்கு கொடுப்பேன். ஏண்டா பிச்சைக்கார பயலே! உனக்கு எதுக்கு அது. அல்லாஹ்வே டைரக்டா வேற ஆள் மூலமா குடுத்துற போறான். மனிதன் இவ்வளவு ஒரு கருமியாக கேவலமாக நடந்து கொள்கிறான். அல்லாஹ்வோடு உண்மையான நிய்யத்து வை. அல்லாஹ் உனக்கு கொடுப்பான். 
 
ஹதீஸின் தொடர் : அடுத்த நாள் போர் முடிகிறது. கொல்லப்பட்டவர்களை காயப்பட்டவர்களை சஹாபாக்கள் தேடுகிறார்கள். ஒன்று சேர்க்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உயிரோடு இருப்பவர்களில் அவரை தேடுங்கள் என்று சொன்னார்கள். இல்லை. காயப்பட்டவர்களில் அவரைத் தேடுங்கள் என்று சொன்னார்கள். இல்லை. ஷஹீதானவர்களை தேடுங்கள் என்று சொன்னார்கள் தேடினால் ஷஹீதானவர்களில் இருக்கிறார். அவர் எந்த இடத்தில் விரலை வைத்து காட்டினாரோ அதே இடத்தில் அம்பு பாய்ந்து, ஊடுருவிய அந்த அம்பு மறு பக்கத்திலிருந்து வெளியாகி இருக்கிறது. அவர் காட்டிய அதே இடத்தில் தைத்து மறு பக்கத்திலிருந்து அந்த அம்பு வெளியாகி இருக்கிறது. அல்லாஹ் அக்பர்! 
 
நினைத்துப் பாருங்கள்! எப்பேற்பட்ட அல்லாஹ்வின் அன்பை உள்ளத்திலே அவர் கொண்டு வந்திருப்பார்! எப்பேர்பட்ட அல்லாஹ்வின் மீது உண்டான ஆசையை ஆகிரத்தின் மீதும் தான் ஆசையை கொண்டு வந்திருப்பார்! 
 
நமக்கு ரமழான் மாதம் வந்து கூட இன்னும் அல்லாஹ்வின் மீது உண்டான ஆசை வரல. எந்த பள்ளிவாசல்லடா கஞ்சி டேஸ்ட்டா கொடுப்பாங்க. எங்கடா எக்ஸ்ட்ரா இப்தார் குடுப்பாங்கன்னு தான் தேடிக்கிட்டு இருக்கிறோம். நோன்பு வைத்துவிட்டு எங்கடா நல்லா தொழுகை வைப்பாங்க; நிம்மதியா நீண்ட நேரம் தொழுகனும்னு தேடுறோமா? எந்த பள்ளியில் சுருக்கமா தொழுக வைப்பாங்க. என்று தான் தேடிக் கொண்டிருக்கிறோம். 
 
இதுல வேற நம்ம பேசிகிட்டு இருக்கோம்; நம்ம எல்லாம் ஒரிஜினல் பாய். தேடுவது எதை? இபாதத்தை தேட வேண்டும். ஆகிரத்தை தேட வேண்டும். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! மூன்று நபிமார்களுடைய ஹதீஸை சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன். முதலாவதாக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம். அல்லாஹ்வின் மீது பேராசை கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது அப்பேர்பட்ட அன்புடையவர்கள். அல்லாஹ் அவர்களை அன்பராக நண்பராக எடுத்துக் கொண்டான். 
 
அந்த நபி விரும்பினால் அழகான இந்த உலகத்தின் ஆசையை வாழ்க்கையை தேடி இருக்கலாம். அல்லாஹ்விடத்தில் சொல்கிறார்கள்;
 
رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏
 
யா அல்லாஹ் எனக்கு நல்ல அறிவை கொடு! ஞானத்தை கொடு! நல்லவர்களோடு என்னை சேர்த்து விடு! (அல்குர்ஆன் 26:83)
 
எந்த பணிக்காக என்னை நீ நபியாக தேர்ந்தெடுத்தாயோ அந்த பணி முடிந்து விட்டால் என்னை உன்னிடத்திலே அழைத்துக் கொள்! அந்த நல்லவர்களோடு என்னை சேர்த்து வை! 
 
அல்லாஹ் அக்பர்! இரண்டாவதாக சுலைமான் நபி எப்பேர்பட்ட ஆட்சி அதிகாரம்! அல்லாஹ்விடத்தில் என்ன சொன்னார்கள்:
 
وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏
 
யா அல்லாஹ்! நல்ல அமல்களை செய்ய வேண்டும். நல்லோர்களோடு என்னை சேர்த்து விடு. (அல்குர்ஆன் 27:19)
 
இந்த சுகமான   துன்யாவின் உச்சத்திலே இருந்து கொண்டு மறுமை ஆகிரத்தை விரும்பினார்கள். 
 
மூன்றவதாக யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் மொத்த மிசிரின் எகிப்து ஆட்சி அவர்களுக்கு கிடைத்துவிட்டது. அல்லாஹ்விடத்தில் சொன்னார்கள்; போதும் இந்த துன்யாவுடைய வாழ்க்கை.
 
رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ‌  فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌  تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏
 
“என் இறைவா! திட்டமாக நீ எனக்கு ஆட்சியை தந்தாய். (கனவு சம்பந்தமான) செய்திகளின் விளக்கத்தை எனக்கு கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே. நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் முஸ்லிமாக இருக்கும் நிலையில் என்னை (உயிர்) கைப்பற்றிக்கொள்! இன்னும், நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு!” (அல்குர்ஆன் 12:101)
 
அன்பான சகோதரர்களே! இதற்கு தேவை உள்ளத்திலே உண்மையான ஈமான். எந்த ஈமானிலே அல்லாஹ்வுடைய அன்பு பாசம் நேசம் அல்லாஹ்வுடைய தேடல் கலந்து இருக்குமோ அப்படிப்பட்ட ஈமான் தேவை. 
 
இந்த ரமழானுடைய மாதம் அதற்கான மாதம். பெருநாள் வரப்போகிறது. எங்கே ஆடைகள் விலை மலிவாக கிடைக்கும்; எங்கே ஆடைகள் புதிய டிசைனிலே புதிய வரவிலே கிடைக்கும் என்று பேசுவதற்கான உள்ள மாதம் அல்ல. உணவுகளின் பின்னால் பார்ட்டிகளின் பின்னால் விருந்துகளின் பின்னால் சுற்றுவதற்கான மாதம் அல்ல. அல்லது இரவு நேரங்களில் கதை பேசி நேரங்களை வீணடிப்பதற்கான மாதம் அல்ல. 
 
ரமலானின் கடைசி பத்தின்  இரவுகளில் மகத்தான இரவு லைலத்துல் கத்ரு இரவு. எந்த இரவில் வேண்டுமானாலும் வரலாம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு இருக்கிறது. யாரெல்லாம் அதனுடைய நன்மையை இழந்தார்களோ அவர்கள் வாழ்க்கையில் மொத்த நன்மையும் இழந்து விட்டார்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கிறார்கள். 
 
ஆகவே, இந்த உணர்வை நாமும் கொண்டு வருவதோடு நம்முடைய குடும்பத்தார்கள் சகோதர சகோதரிகளுக்கும் நாம் இந்த உணர்வை கொண்டு வருவோமாக! உபதேசம் செய்வோமாக! ஈமானிய குடும்பமாக அல்லாஹ் உடைய அன்பும் அல்லாஹ்வுடைய தூதரின் அன்பும் பாசமும் கலந்த ஒரு உண்மையான முஃமினான குடும்பமாக நாம் ஆகுவதற்கு முயற்சி செய்வோமாக! 
 
அல்லாஹ்விடத்திலே துஆ செய்வோமாக! அல்லாஹ் நம்மை பொருந்தி கொள்வானாக! முஃமின்களாக முஸ்லிம்களாக பரிசுத்தமான எண்ணம் உள்ளவர்களாக அமல்களிலே ஆர்வமுள்ளவர்களாக நாம் ஆகுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/