HOME      Khutba      சமுதாய வெற்றிக்கு அல்லாஹ்வின் கட்டளை! | Tamil Bayan - 958   
 

சமுதாய வெற்றிக்கு அல்லாஹ்வின் கட்டளை! | Tamil Bayan - 958

           

சமுதாய வெற்றிக்கு அல்லாஹ்வின் கட்டளை! | Tamil Bayan - 958


சமுதாய வெற்றிக்கு அல்லாஹ்வின் கட்டளை!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : சமுதாய வெற்றிக்கு அல்லாஹ்வின் கட்டளை!
 
வரிசை : 958
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 04-04-2025 | 06-10-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே!  உங்கள் முன்னால் அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாக; அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக; நம் அனைவருக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் அவனுடைய அருளையும் அன்பையும் ஆதரவு வைத்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய வணக்க வழிபாடுகளை ஏற்றுக் கொள்வானாக! நாம் செய்த குறைகளை எல்லாம் பொறுத்துக் கொள்வானாக! அல்லாஹ் ஏற்றுக்கொண்ட நல்லோரில் என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்! 
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ரமழான் மாதம் தான் முடிந்திருக்கிறதே தவிர வணக்க வழிபாடுகள் ஒரு முஃமினுக்கு எப்போதும் முடிவதில்லை. ஃபர்ழான நோன்புகள் தான் முடிந்து விட்டனவே தவிர உபரியான சுன்னத்தான நோன்புகள் ஒருபோதும் முடிவதில்லை. அதுபோன்று இரவிலே கூட்டான இரவு வணக்கம் தான் முடிந்து விட்டதே தவிர தனிப்பட்ட இரவு வணக்கம் இரவு தொழுகை ஒருபோதும் முடிவதில்லை. 
 
அதுபோன்றுதான் குர்ஆன் ஓதுதல், மற்றும் அல்லாஹ்வை திக்ரு செய்தல், தான தர்மங்கள் செய்தல், உறவுகளுக்கு கொடுத்தல், உறவுகளை சேர்த்து வாழுதல் இப்படியாக ரமழானில் என்னென்ன வணக்கங்களை செய்தோமோ எந்தெந்த வணக்க வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமோ நாம் அவற்றை ரமழானுக்காக மட்டும் கொடுக்கவில்லை. அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடி அல்லாஹ்விற்காக செய்தோம். அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக செய்தோம். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வ  தஆலா ரமழானில் இந்த நன்மைகளை அதிகப்படுத்த கூறினானே தவிர ரமழானோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை. 
 
ஏனைய மதங்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? அவர்கள் சில குறிப்பிட்ட நாட்களோடு தங்கள் வணக்க வழிபாடுகளை முடித்துக் கொள்வார்கள். ஒரு முஸ்லிமால் ஒருபோதும் அப்படி இருக்க முடியாது. 
 
அவன், இரவும் தொழுவான். காலையில் சுப்ஹும் தொழுவான். பிறகு லுஹாவும் தொழுவான். பிறகு லுஹரும் தொழுவான். இப்படியாக ஒரு வணக்க வழிபாட்டில் இருந்து இன்னொரு வணக்க வழிபாட்டை நோக்கி ஒரு முஸ்லிம் சென்று கொண்டே இருப்பானே தவிர ஒரு வணக்க வழிபாட்டோடு முடித்து விடவே மாட்டான்.
 
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ‏
 
நபியே! உங்களுக்கு மரணம் வருகின்ற வரை உங்களது ரப்பை வணங்கிக் கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் 15:99)
 
இபாதத்துகள் முடிவதில்லை. அல்லாஹு சுப்ஹானஹு வ தஆலா இந்த ரமழான் மூலமாக நமக்கு கொடுத்த அந்த தக்வாவை இபாதத்துடைய ஆர்வத்தை யார் தக்கவைத்துக் கொண்டு தங்களுடைய மற்ற மாதங்களிலும் அவற்றை பேணுகிறார்களோ அல்ஹம்து லில்லாஹ் அவர்கள்தான் உண்மையில் ரமழானை அனுபவித்தவர்கள் ரமழானின் நற்பாக்கியங்களை பெற்றவர்கள். 
 
ஆலிம்கள் அறிஞர்கள் சொல்வார்கள்: யார் அல்லாஹ்வை-நம்மை படைத்த ரஹ்மானை ரமழானிலேயே தவிர அறியவில்லையோ அவர்கள் ரமழான் முடிந்ததற்குப் பிறகு வணக்க வழிபாட்டில் ஈடுபட வில்லையோ அவர்கள் ரமழானில் அல்லாஹ்வை ரஹ்மானை வணங்கவில்லை, மாறாக ரமழானை வணங்கினார்கள். 
 
எனவே, ரமழான் முடிந்ததால் இபாதத்தை முடித்துக் கொண்டார்கள். அல்லாஹ்வை வணங்கியவர்கள் ஒருபோதும் இபாதத்துகளை முடிக்க மாட்டார்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரமழான் மாதம் தான் முடிகின்றதே தவிர, அல்லாஹு தஆலா உடைய அருள் எல்லா காலங்களிலும் பொழிந்து கொண்டே இருக்கிறது. அடியானுக்காக அல்லாஹுத்தஆலா தவ்பாவின் வாசலை திறந்து வைத்திருக்கிறான். ரஹ்மத்தின் வாசலை திறந்து வைத்திருக்கிறான். முன்னோக்கி கொண்டே இருக்கிறான். அழைத்துக் கொண்டே இருக்கிறான்.
 
وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ 
 
அல்லாஹு தஆலா சொர்க்கத்தின் பக்கம் அழைக்கிறான். மன்னிப்பின் பக்கம் அழைக்கிறான். தன்னுடைய அருளின் பக்கம் அழைக்கிறான். (அல்குர்ஆன் 2:221) (குறிப்பு:1) 
 
அன்பானவர்களே! அல்லாஹு தஆலா உடைய நெருக்கம் நமக்கு கிடைக்க வேண்டும். அல்லாஹ்வுடைய மன்னிப்பு நமக்கு கிடைக்க வேண்டும். அல்லாஹ்வுடைய அன்பு நமக்கு கிடைக்க வேண்டும். அல்லாஹ்வுடைய பொருத்தம் நமக்கு கிடைக்க வேண்டும். அல்லாஹு தஆலா ஏற்றுக் கொண்டவர்களாக நாம் ஆக வேண்டும். அதுதான் உண்மையான வாழ்க்கை. அதுதான் உண்மையான வெற்றி. 
 
அல்லாஹு சுப்ஹானஹு வ  தஆலா சூரத்துல் அன்ஃபால் உடைய 46 ஆவது வசனத்தில் கூறுகிறான்:
 
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏
 
இன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இன்னும், (உங்களுக்குள்) தர்க்கிக்காதீர்கள் (சண்டை சச்சரவு செய்து கொள்ளாதீர்கள்)!. அவ்வாறாயின், நீங்கள் தோற்றுவிடுவீர்கள்; இன்னும், உங்கள் ஆற்றலும் போய்விடும். இன்னும், நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 8:46)
 
நாம் இந்த வசனத்தை எடுத்து கொள்வோம் எல்லோரும் கவலைப்படுகிறோம்; சமுதாயம் வெற்றி பெற வேண்டும்; சமுதாயம் ஓங்க வேண்டும்; சமுதாயத்திற்கு கண்ணியம் வேண்டும்; சமுதாயத்திற்கு இந்த பூமியிலே ஒரு நிலைப்பாடு வேண்டும்; இப்படி எல்லாம் ஆசைப்படுகிற நாம் அதற்கு அல்குர்ஆன் சொல்லக்கூடிய வழிகாட்டுதல் என்ன தீர்வு என்ன என்பதை சிந்திக்கின்றோமா? 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: ஒரு முஸ்லிம் சமுதாயம் எப்படி உருவாக்கப்பட வேண்டும்? முஸ்லிம் சமுதாயம் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும்? முஸ்லிம் சமுதாயத்தின் கொள்கை கோட்பாடுகள் மட்டுமல்ல, அரசியல் நிலைபாடுகள் அவர்களின் சமூக ஒற்றுமை எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான அழகிய வழிகாட்டுதல்களுடன் இறக்கப்பட்ட சூராக்கள் தான் சூரத்துல் அன்ஃபால், சூரா தவ்பா, சூரா அல்ஃபத்ஹ், சூரா முஹம்மத் போன்ற   இந்த சூராக்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்காக மட்டும் இறக்கப்பட்ட அத்தியாயம் அல்ல. அல்லது தொழுகையில் ஓதுவதற்காக மட்டும் இறக்கப்பட்ட அத்தியாயங்கள் அல்ல. சிந்தித்து பின்பற்றுவதற்காக நடைமுறைப்படுத்துவதற்காக இறக்கப்பட்ட அத்தியாயங்கள். 
 
போர் நேரத்திலே உக்கிரமான தாக்குதல் நடக்கக்கூடிய நேரத்தில் அல்லாஹ் இந்த வசனங்களை இறக்கி அருள்கிறான். 
 
எதிரிகளால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சூழப்பட்டிருந்த போது அரபுலகமே குஃப்பார்களாக முஷ்ரிக்குகளாக யூதர்களாக நஸ்ராணிகளாக நிரம்பி இருந்து, வெறும் மதினாவில் மட்டுமே விரல்விட்டு  எண்ணக்கூடிய அளவு சிறுபான்மை மக்கள் இருந்தார்கள்.. மதினாவை சுற்றி அத்தனை கிராமங்களும் முஸ்லிம் எதிரிகளால் குஃப்பார்களால் முஷ்ரிக்குகளால் நிரம்பி இருந்தது. 
 
அதுமட்டுமா, அரேபிய தீபகற்பத்தின் சற்று வெளியே சென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும் பெரும் படைகளை, பட்டாளங்களை, இராணுவங்களை, ஆயுதங்களை சொந்தமாக்கி கொண்டு பேராட்சி புரிந்து வந்த ரோமர்களாலும் பாரசீகர்களாலும் அச்சுறுத்தப்பட்டு கொண்டிருந்தார்கள் மதினாவாசிகள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அந்த நேரத்தில் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்குகிறான். சிந்தித்துப் பாருங்கள்! எப்பேற்பட்ட வசனம்! 
 
முஃமின்களுடைய வெற்றிக்கு முஃமின்களின் கண்ணியத்திற்கு முஃமின்கள் உறுதி பெறுவதற்கு முஃமின்கள் அதிகாரம் பெறுவதற்கு அல்லாஹ் வழியை சொல்கிறான்:
 
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ 
 
முதலில் நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள். (அல்குர்ஆன் 8:46)
 
ஒரு முஃமின் ஒரு முஸ்லிம் எப்போது முஃமினாக ஆகுவான்? முஸ்லிமாக ஆகுவான்? அல்லாஹ்விற்கு அவன் முழுமையாக கீழ்படிகின்றபோது; ரப்புக்கு முழுமையாக கட்டுப்படுகின்றபோது; ரப்பை முழுமையாக பயப்படுகின்றபோது; ரப்புடைய கட்டளைக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கின்றபோதுதான் அவன் முஃமினாக முஸ்லிமாக ஆகுவான்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! தொழுகையில் நாம் அல்லாஹ் அக்பர் என்று சொல்கிறோமே! அல்லாஹு தஆலா தொழுகையை தக்பீரை கொண்டு ஆரம்பியுங்கள்; ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நீங்கள் மாறும் போதெல்லாம் தக்பீர் கூறிக் கொண்டே இருங்கள். என்று ஏன் அல்லாஹு தஆலா இத்தகைய கட்டளையை கொடுக்கின்றான்?
 
அல்லாஹ்வுடைய திக்ர்களில் எத்தனையோ திக்ருகள் இருக்கின்றன! குர்ஆனின் அத்தியாயங்களை அல்லாஹ் ஆரம்பிப்பதற்கு அர் ரஹ்மான் அர்ரஹீம் என்ற அழகிய பெயர்களை தேர்ந்தெடுக்கின்றான். இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் அல்லாஹு தஆலா தன்னுடைய அழகிய உயர்ந்த திருநாமங்களில் அழகிய உயர்ந்த பண்புகளில் சில பெயர்களை தேர்வு செய்கிறானே; ஏன் அல்லாஹு தஆலா தொழுகைக்கு தக்பீரை அல்லாஹு அக்பர் என்ற அந்த உயர்ந்த மகத்தான வாக்கியத்தை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான் என்று சிந்தித்துப் பார்த்தோமா? 
 
ஆம், ஒரு முஃமின் அவன் அடிமையாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும், வியாபாரியாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும், படித்தவனாக இருந்தாலும், பாமரனாக இருந்தாலும் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் எனக்கு முன்னால் அல்லாஹ்வைத் தவிர எதுவும் பெரியதல்ல, யாரும் பெரியதல்ல. 
 
என் ரப்பு தான் எனக்கு. அவனைத் தவிர எந்த சக்தியையும் நான் பயப்பட மாட்டேன். அஞ்ச மாட்டேன். அவன் தான் எனக்கு பெரியவன். அவனுடைய மார்க்கம் தான் எனக்கு பெரியது. அவனுடைய கட்டளை தான் எனக்கு பெரியது. அவனுடைய விருப்பம் தான் எனக்கு பெரியது. அவனுடைய அன்பு தான் எனக்கு பெரியது என்ற அந்த ஈமானிய உணர்வு ஒரு முஃமினின் உள்ளத்தின் ஆழத்திலே பதிய வேண்டும். 
 
அதை சொல்லி சொல்லி தொழு! அல்லாஹ் அக்பர் எத்தனை முறை தொழுதாலும் ஒரு நாளைக்கு எத்தனை தொழுகைகளை நிறைவேற்றினாலும் உன்னுடைய ஃபர்ழான தொழுகையாக இருந்தாலும் சரி, உன்னுடைய உபரியான தொழுகையாக இருந்தாலும் சரி, எல்லா தொழுகைகளையும் இந்த தக்பீரை தான் நீ சொல்ல வேண்டும். 
 
அல்லாஹ்வை நீ உன்னை விட, உனது ஆசைகளை விட, உனது தேர்வுகளை விட, உனது தாய் தந்தையை விட, நீ வாழக்கூடிய நாட்டை விட, உன்னை ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியை விட பெரியவனாக நீ ஏற்றுக்கொள்ளாதவரை மதிக்காத வரை அவனுக்கு அந்த ஒரு உறுதிப்பாட்டோடு நீ கீழ்ப்படியாத வரை நீ முஃமினாக முஸ்லிமாக ஆக முடியாது என்ற ஈமானிய தத்துவத்தை அந்த தக்பீர் கொடுக்கிறது.
 
முதலில் நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்! உங்களது பிரச்சனைகள் தீரும். உங்களது சோதனைகளை அல்லாஹ் குறைப்பான். கீழ்ப்படியாதவர்களுக்கு அல்லாஹ் ஏன் வானத்திலிருந்து உதவியை இறக்க வேண்டும் யோசித்துப் பாருங்கள்! 
 
பத்ர் போரிலே அல்லாஹு தஆலா சொல்கிறானே! சிந்தித்துப் பார்த்தீர்களா?
 
اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ‏
 
நீங்கள் அல்லாஹ்விடத்தில் மன்றாடினீர்கள். உடனே அல்லாஹ் உங்களுக்கு பதில் அளித்தான். ஆயிரம் வானவர்கள் மூவாயிரம் வானவர்கள் என்று தொடர்ச்சியாக அல்லாஹ் இறக்கினான். (அல்குர்ஆன் 8:9)
 
ஏன்? அவர்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்தார்கள். (ஷஹாதா என்பது அல்லாஹ் மட்டுமே என்னுடைய இறைவன்; முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்று நாவால் மொழிந்து உள்ளத்தில் உறுதி கொண்டு சாட்சி கூறுதல்) ஒரு முஃமினால் ஒரு முஸ்லிமால் அவனுடைய ஷஹாதா, அல்லாஹ்விற்கு கீழ்படிய அவனை தூண்டவில்லை என்றால், அவனுடைய ஷஹாதாவிலே அங்கே பலவீனம் இருக்கிறது. 
 
எதை பார்த்து நீங்கள் பயப்பட வேண்டும்? யாரைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டும்? அல்லாஹு தஆலா தனது நபி இடத்திலே கேட்கிறான்: 
 
وَتَخْشَى النَّاسَ وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰٮهُ 
 
நபியே நீங்கள் மக்களை பயப்படுகின்றீர்களா? நீங்கள் அல்லாஹ்வைதான் பயப்பட வேண்டும். அல்லாஹ்தான் நீங்கள் பயப்படுவதற்கு தகுதியானவன். (அல்குர்ஆன் 33:37) (குறிப்பு:2) 
 
இந்த கருத்தில் குர்ஆனிலே பல வசனங்கள் உள்ளன.
 
فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ 
 
மக்களை பயப்படாதீர்கள்! என்னை பயப்படுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 5:44) (குறிப்பு:3) 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இறுதியாக உச்சகட்டமாக என்ன செய்ய முடியும்? இந்த உயிரை தான் பறிக்க முடியும். நமக்கு முன்னால் ஃபிர்அவ்ன் அந்த சூனியக்காரர்கள் உயிரை பறிக்க வில்லையா? நமக்கு முன்னால் ஈமானுக்காக கொல்லப்படாதவர்கள் யார்? இறைத்தூதர்கள் சென்று இருக்கிறார்கள். 
 
எனவே ஒரு முஃமின் இந்த உலக வாழ்க்கையை பற்றி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. இந்த உலக வாழ்க்கையை வாழும் பொழுது அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தவனாக நான் வாழ வேண்டுமே! அதைத்தான் அவன் கவலைப்பட வேண்டும். என்னுடைய தீன் என்னுடைய ரப்புடைய கட்டளை அதை பற்றி தான் அவன் சிந்திக்க வேண்டும். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா நம்முடைய இரணத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறான். யாரும் நம்முடைய இரணத்தை பறித்து விட முடியாது. அல்லாஹ்விற்கு நாம் கீழ்ப்படிந்து நடப்பதால் நம்முடைய இரணத்தை வாழ்வாதாரத்தை யாரும் பறித்து விட முடியாது. அல்லாஹ்விற்கு மாறு செய்வதால் நம்முடைய வாழ்வாதாரத்தை இரணத்தை யாரும் கூட்டி விட முடியாது. 
 
எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டுமா? அதுவெல்லாம் இந்த காலத்திலே சாத்தியமா என்று மனிதர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.
 
அன்பானவர்களே! யார் மனதிலே உறுதி கொள்வார்களோ அல்லாஹ் அவர்களுக்கு இந்த மார்க்கத்தை இலகுவாக்கி கொடுப்பான். அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்ததிலே பரக்கத் செய்வான். அபிவிருத்தி செய்வான். தன்னிறைவடையச் செய்வான். கண்ணியத்தை அல்லாஹ் கொடுப்பான். தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய உயர்வை மதிப்பை அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ்வுக்கு கீழ்படியாத ஒருவன் அவன் ஒருபோதும் கண்ணியத்தை அடைய முடியாது. அவன் ஒருபோதும் பிற சமுதாய மக்களுக்கு முன்னால் தலைநிமிர்ந்து நடக்க முடியாது. 
 
அல்லாஹ்விற்கு யார் தலை சாய்த்து விடுகின்றானோ அல்லாஹ் உடைய கட்டளைக்கு யார் தலைவணங்கி விடுகின்றானோ, அவன் பிற சமுதாய மக்களுக்கு முன்னால் ஏன் எப்பேற்பட்ட பேரரசனாக இருந்தாலும் அவனுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தலையை உயர்த்திக்கொண்டு அவனால் கண்ணியமாக துணிவோடு பேச முடியும். அப்படித்தான் ஸஹாபாக்கள் இருந்தார்கள். 
 
அல்லாஹ் அடுத்து சொல்லிக் காட்டுகின்றான்:
 
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَه
 
அவனுடைய ரசூல் -தூதருக்கு கீழ்ப்படியுங்கள்! (அல்குர்ஆன் 8:46)
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏன் அனுப்பப்பட்டார்கள்? அவர்களின் பெயர்களால் மௌலூதும் மீளாதும் கொண்டாடப்படுவதற்காகவா? அவர்களின் பெயரால் சடங்குகள் செய்யப்பட்டு உணவுகள் பரிமாறப்படுவதற்காகவா? அல்லாஹ்வின் தூதருக்காக தோழர்கள் ரத்தம் சிந்தினார்கள். உஹது போரிலே அல்லாஹ்வின் தூதரை பாதுகாப்பதற்கு அன்சாரிகள் அப்படியே அணிவகுத்து நின்றார்கள். ஒருவர் பின் ஒருவராக விஷம் ஏற்றப்பட்ட அம்பால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த நிலையில் கீழே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலின் அருகிலே ஒன்பது அன்சாரிகளின் ஜனாஸாக்கள் நினைத்துப் பாருங்கள்! 
 
அபூ தல்ஹா தன்னுடைய இரண்டு கரங்களால் அல்லாஹ்வின் தூதரை எதிரிகளிடமிருந்து வரக்கூடிய அம்பினால் பாதுகாத்து பாதுகாத்து அவர்களுடைய கைகள் இரண்டும் சூம்பி போய்விட்டன. கைகளை தூக்க முடியவில்லை. பெரும் காயங்களை சகித்துக் கொண்டார்கள்! 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு கட்டளையை நம்முடைய ஒரு சுகத்திற்காக, இன்பத்துக்காக, ஒரு ஆடம்பரத்திற்காக, நம்முடைய பெருமைக்காக தூக்கி எறிகிறோமே! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! எப்படி நமக்கு கண்ணியம் கிடைக்கும் யோசித்துப் பாருங்கள்! 
 
அல்லாஹ்வின் தூதரின் உயிருக்காக உயிரை கொடுத்த தோழர்கள் எங்கே? வெறும் அல்லாஹ்வுடைய பெயரை அல்லாஹ்வின் தூதரின் பெயரை சொல்லி ஆடம்பரமான உணவுகளை உண்பதற்கும் விழாக்களை நடத்துவதற்கும் மட்டும் இருக்கக்கூடிய சமுதாயமாகிய நாம் எங்கே? என்று யோசித்துப் பாருங்கள்! 
 
அல்லாஹ் சொல்கிறான்: அல்லாஹ்வுடைய தூதருக்கு கீழ்ப்படியுங்கள்! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றை சொல்லிவிட்டால் அதை மீறமாட்டேன் என்ற கொள்கையில் இருப்பவன் தான் முஸ்லிம். 
 
அல்லாஹ் எப்படி சொல்கிறான்?
 
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ ‌
 
ஏன் நாம் தூதரை அனுப்புகிறோம்? அவருக்கு கீழ்ப்படிவதற்காகத்தான். (அல்குர்ஆன் 4:64) (குறிப்பு:4) 
 
நீங்கள் அனைவரும் அவருக்கு கீழ்படிவதற்காகத்தான் தூதரை அனுப்புகிறோம்.
 
مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ‌
 
ரசூலுக்கு கீழ்படிந்தால் தான் நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தவர்களாக ஆகுவீர்கள். (அல்குர்ஆன் 4:80) (குறிப்பு:5) 
 
ஒரு முஃமின் எப்படி அல்லாஹ்வை நேசிக்கிறானோ அல்லாஹ்வுடைய அன்புக்காக இயங்குகிறானோ அல்லாஹ்வுடைய கட்டளையை மதிக்கிறானோ அதுபோன்று அல்லாஹ்வுடைய தூதரை அவன் மதிக்க வேண்டும். அந்த தூதரை அவன் நேசிக்க வேண்டும். அவனுடைய கட்டளையை மதிக்க வேண்டும். அவருடைய சுன்னத்தை மதிக்க வேண்டும். அவருடைய அன்பு நாளை மறுமையில் கிடைக்க வேண்டுமே என்பதற்காக ஏங்க வேண்டும். ரசூலுக்கு கீழ்படிய வேண்டும். அல்லாஹ்வுக்கு கீழ்படிய வேண்டும். 
 
உங்களுடைய வெற்றி எதிலே இருக்கிறது? அடுத்து சொல்கிறான் பாருங்கள்! 
 
ٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
 
உங்களுக்குள் நீங்கள் சண்டையிடாதீர்கள்! உங்களுக்குள் நீங்கள் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குள் நீங்கள் சச்சரவு செய்து கொள்ளாதீர்கள்! உங்களுக்குள் நீங்கள் பிரச்சனை செய்து கொள்ளாதீர்கள். உங்களை அடக்குங்கள் நீங்கள் உங்களுக்குள் சண்டை செய்தால் உங்களுக்குள் நீங்கள் பிரச்சனை செய்தால் நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள்! தோற்று விடுவீர்கள்! உங்களுடைய ஆற்றல் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விடும். (அல்குர்ஆன் 8:46)
 
ஆட்சி இருந்து என்ன? செல்வம் இருந்து என்ன? பொருளாதாரமிருந்து என்ன? இன்னும் இந்த உலகத்திற்கே நீங்கள் செல்வத்தை கொடுக்கக்கூடிய அளவுக்கு வளங்களை நீங்கள் சொந்தமாக்கி கொண்டு இருந்தால் என்ன? நீங்கள் ஒற்றுமையாளர்களாக இல்லை என்றால் நீங்கள் சொல்வதை உலகம் கேட்காது. உலகம் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும்.. 
 
அல்லாஹ்வுக்கும் கீழ்ப்படிய வேண்டும். அல்லாஹ்வுடைய தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும். ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். அல்லாஹு தஆலா ஒரு கட்டளையை சொன்னால் அந்த கட்டளையில் உள்ள அத்தனை அம்சங்களையும் பின்பற்ற வேண்டும். அந்த கட்டளையில் உள்ள அத்தனை அம்சங்களையும் ஏற்று நடக்க வேண்டும். 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏
 
(அல்குர்ஆன் 8:46)
 
நீங்கள் உங்களுக்குள் சண்டை செய்தால் பிணங்கிக் கொண்டால் பிரச்சனை செய்து கொண்டால் உங்களின் சகோதரத்துவத்தை நீங்கள் முறித்துக் கொண்டால் நீங்கள் கோழையாகி விடுவீர்கள் உங்களது ஆற்றல் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விடும். 
 
உலகம் என்றால் பிரச்சனை இருக்கும். குழப்பம் இருக்கும். சச்சரவு வரலாம். நீங்கள் உறுதியாக பொறுமையாக இருங்கள். சகித்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு முஸ்லிம் தனது சகோதரனை சகிக்கவில்லை என்றால் அவன் எப்படி ஒரு முஸ்லிமாக இருக்க முடியும்? 
 
இன்றைய முஸ்லிம்களுடைய விசித்தரமான பண்பாடு என்ன தெரியுமா? அல்லாஹ் சொல்லிக் காட்டுவதற்கு அப்படியே நேர் மாற்றம். 
 
அல்லாஹ் என்ன சொல்கிறான்? முஃமின்கள் எப்படி இருப்பார்கள்?
 
اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ 
 
முஃமின்களோடு இணக்கமாக, பணிவாக, பண்பாக, அடக்கமாக, பாசமாக விட்டுக் கொடுத்துப் போவார்கள். காஃபிர்கள் இடத்திலே உயர்ந்து நிற்பார்கள். பணிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 5:54) (குறிப்பு:6) 
 
தேவை இல்லை அவனுக்கு நாம் ஏன்பணிய வேண்டும் என்று. உறுதியாக இருப்பார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
 
இன்றைய முஸ்லிம்களின் நிலைமைகளை பாருங்கள்! ஆட்சிகளாக இருக்கட்டும், இயக்கங்களாக இருக்கட்டும், அமைப்புகளாக இருக்கட்டும், பிற மக்களோடு பிற சமுதாய மக்களோடு அவர்கள் இணக்கம் காட்ட துடிப்பார்கள். ஓடுவார்கள். வெளியே இறங்கி போவார்கள். ஏன் சில நேரங்களில் அவனாகவே மாறுவதற்கு கூட தயாராகி விடுகின்றார்கள். அவனுடைய கலாச்சாரத்தை சடங்குகளையே செய்வதற்கு கூட தயாராகி விடுகின்றார்கள். 
 
ஆனால், ஒரு முஸ்லிமோடு இணங்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒரு முஸ்லிமை அணைத்துக்கொள்ள, இணைத்துக் கொள்ள, அவனோடு உறவாட, அவனோட பேச, அவனோடு விட்டுக் கொடுக்க, அவனோடு பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்ள, நீ கொஞ்சம் விட்டுக் கொடு, நான் கொஞ்சம் விட்டுக் கொடுக்கின்றேன்; நீ கொஞ்சம் இறங்கி வா, நான் கொஞ்சம் இறங்கி வருகிறேன் என்று சமாதானம் செய்து கொள்வதற்கு இணங்குவதற்கு இணைவதற்கு சேர்வதற்கு மனம் வரவில்லை என்றால் இவர்கள் எல்லாம் எந்த வகையான முஸ்லிம்கள்?! 
 
அல்லாஹ் சொல்கின்றான்: பொறுமையாக இருங்கள்! ஏன் நான்கு கலீபாக்களின் காலத்திலே இஸ்லாம் ஓங்கியது? இஸ்லாம் உயர்ந்தது? சஹாபாக்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். பிரச்சனை வந்தது. பிறகு ஒற்றுமையாகி விட்டார்கள். அல்லாஹ் மீண்டும் உயர்வை ஒற்றுமையை கொடுத்தான். 
 
ஆம், இதுதான் சமுதாயம். இதுதான் குர்ஆன் சொல்லிக் கொடுக்கக்கூடிய சமுதாயம். இந்த சமுதாயத்திற்கு தான் அல்லாஹ் வெற்றியை வைத்திருக்கிறான். பொறுமையாக இருக்க வேண்டும். 
 
அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான். சகிப்பவர்களோடு இருக்கிறான். உறுதியானவர்களோடு அல்லாஹ் இருக்கிறான். நிலைப்பாடு உடையவர்களோடு அல்லாஹ் இருக்கிறான். மார்க்கத்தில் ஒரு கால், விருப்பத்தில் ஒரு கால்; கொஞ்சம் இஸ்லாம், கொஞ்சம் குஃப்ர்; கொஞ்சம் தவ்ஹீத், கொஞ்சம் ஷிர்க்; கொஞ்சம் ஷரிஆ, கொஞ்சம் செக்யூலரிசம். கொஞ்சம் இப்படி, மற்றது அப்படி அல்லாஹ்வின் வெற்றி , இப்படிப்பட்ட குழப்பவாதிகளுக்கு அல்ல. 
 
சூரா ஆலு இம்ரானுடைய 200 வது வசனத்திலே அல்லாஹ் சொல்வதை இதோடு சேர்த்து படித்து பாருங்கள்! அந்த வசனமும் அந்த அத்தியாயமும் இத்தகைய சூழ்நிலையில் இறக்கப்பட்ட அத்தியாயங்கள் தான். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்:
 
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
 
முஃமின்களே! நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். சகிப்போடு இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3:200)
 
எவ்வளவு அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்! எதற்கெடுத்தாலும் சகோதரனோடு உறவை முறிக்கக் கூடிய மக்கள். சமுதாய சகோதர அமைப்புகளோடு உறவை முறிக்கக் கூடிய மக்கள். இவர்கள் எந்த குர்ஆனை ஓதுகிறார்கள்? 
 
அல்லாஹ் சொல்கிறான்: முஃமின்களே பொறுமையாக இருங்கள்! சகிப்போடு இருங்கள்! உங்களது பொறுமை உங்களது சகிப்பு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அதையும் சொல்லிக் காட்டுகிறான். எவ்வளவு நுணுக்கமாக அல்லாஹ்வுடைய பேச்சு அமைந்திருக்கிறது பாருங்கள்! 
 
பிற சமுதாய மக்கள் தங்களுடைய சமுதாய வெற்றிக்காக பொறுமையாக இருப்பதை விட அதிகமாக நீங்கள் பொறுமையாக இருங்கள்! உங்களது பொறுமை அவர்களை விட அதிகமாக இருக்க வேண்டும். அவர்களை விட உறுதியாக இருக்க வேண்டும். அவர்களோடு பொறுமையிலே போட்டி போடுங்கள். இந்த மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! உங்களது சமுதாயத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! உங்களது சகோதரத்துவத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நீங்கள் வெற்றி அடைவீர்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா சூரத்துல் அன்ஃபால் உடைய இந்த 46 வது வசனத்திற்கு பிறகு 53 வது வசனத்தில் ஒரு எச்சரிக்கை செய்கிறான். மகத்தான எச்சரிக்கை! அந்த எச்சரிக்கை ஒவ்வொரு காலத்தினுடைய முஸ்லிம்களுக்கும் பொருந்தும்.
 
அல்லாஹு தஆலா இந்த நாட்டிலே நமக்கு அதிகாரம் கொடுக்கவில்லையா? ஆட்சி கொடுக்கவில்லையா? கண்ணியம் கொடுக்கவில்லையா? எல்லாம் அல்லாஹ் கொடுத்தான். ஒரு சோதனையில் அல்லாஹு தஆலா பறித்திருக்கிறான். மீண்டும் அல்லாஹ் கொடுப்பான். எப்போது? நாம் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு திரும்பும் போது. 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
 
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّـعْمَةً اَنْعَمَهَا عَلٰى قَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ۙ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌۙ‏
 
அதற்குக் காரணம், நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது, தான் புரிந்த அருட்கொடையை - அவர்கள் தங்களிடம் உள்ளதை மாற்றும் வரை - மாற்றுபவனாக இல்லை என்பதும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் (ஆவான். ஆகவே, அடியார்களின் செயல்களுக்கு ஏற்ப கூலி கொடுக்கிறான்) என்பதும் ஆகும். (அல்குர்ஆன் 8:53)
 
முஸ்லிம்கள் ஆடையால், கலாச்சாரத்தால், சடங்குகளால், சம்பிரதாயங்களால் எத்தனை வகையிலே பிற மதத்தைப் போன்று அவர்கள் ஒப்பாகிக் கொண்டே செல்கிறார்கள். எத்தனை விஷயங்களை சொல்லலாம். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை விட, அல்லாஹ்வுடைய நிஃமத்துகளை எண்ணிப் பார்ப்பதை விட, அல்லாஹ்வுக்கு கீழ் படிந்தார்களா என்ற உணர்வை விட அவர்களுக்கு எந்த உணர்வு மிகைத்திருக்கிறது! யோசித்துப் பாருங்கள்! 
 
அல்லாஹ் சொல்கிறான்: நான் செய்த நிஃமத்தை எடுத்து விடுகிறேன் ஏன் என்றால்? அவர்கள் தங்களுக்குள்ள ஈமானிய தீனுடைய நிலையை மாற்றிக் கொண்டார்கள். அதனால் அல்லாஹு தஆலா அவர்களுடைய நிஃமத்துகளை பறித்து விடுகிறான். 
 
கண்ணியத்திற்குரியவர்களே! எதுவரை நம்மில் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வுடைய மார்க்கம் அல்லாஹ்வுடைய தீன் பெரியது; அல்லாஹ்வுடைய தீனுக்காகத்தான் எனது வாழ்க்கை! அல்லாஹ்வுடைய தீனுக்காக என்னுடைய உடல் உயிர், என்ற அந்த குறிக்கோள் வராதவரை அதற்காக நாம் நம்முடைய வாழ்க்கையை மாற்றாதவரை அல்லாஹ்விடத்திலிருந்து கண்ணியம் நம்மை தேடி வராது. 
 
அல்லாஹ்வுடைய நிபந்தனையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இஸ்ரவேலர்களுக்கு, எனது ஒப்பந்தங்களை எனது வாக்குறுதிகளை எனது கட்டளைகளை நீங்கள் நிறைவேற்றுங்கள். நான் உங்களது வாக்கை உங்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றி தருவேன் என்று அல்லாஹ் இதை தான் சொன்னான்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! ரமழான் வருகிறது. போகிறது. இப்படியாக நம்முடைய வாழ்க்கை கடந்து விடக்கூடாது. இந்த உம்மத்தை கண்ணியப்படுத்துவதற்காக அல்லாஹு தஆலா இந்த உம்மத்துக்கு தூதரை அனுப்பி இருக்கிறான். அந்த கண்ணியத்தை நோக்கி அந்த ஈமானை நோக்கி அந்த இஸ்லாமை நோக்கி அந்த ஒற்றுமையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். 
 
இந்த ஈமானுக்கு இஸ்லாமுக்கு இந்த ஒற்றுமைக்கு இடையூறாக இருக்கக்கூடிய அனைத்தையும் புறக்கணித்தவர்களாக அவற்றையெல்லாம் சமுதாயத்தில் இருந்து தூக்கி எறிந்தவர்களாக நம்முடைய இந்த ஈமானிய பயணத்தை ஆக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலமாகத்தான் இந்த உலகத்திலும் அல்லாஹ் நமக்கு கண்ணியத்தை கொடுப்பான். வரக்கூடிய நம்முடைய சமுதாய மக்களுக்கு அல்லாஹ் அந்த கண்ணியத்தை, வெற்றியை கொடுப்பான். கப்ரிலே இதன் மூலமாகத்தான் கண்ணியம். நாளை மஹ்ஷரிலே இதன் மூலமாகத்தான் கண்ணியம். 
 
நினைத்து விடாதீர்கள்; இந்த உலகத்தோடு நமக்கு பிரச்சனை முடிந்து விட்டது என்று. நம்மோடு பிரச்சனையே மவுத்திலிருந்து தான் ஆரம்பமாகப் போகிறது. கப்ரிலிருந்து தான் ஆரம்பமாக போகிறது. இங்கு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விதி மீறலுக்கும் இங்கு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு சட்ட மீறலுக்கும் அல்லாஹ்வின் கட்டளையோ நபியின் வழிமுறையோ இதற்கு நாம் எதிராக நடக்கக்கூடிய ஒவ்வொரு அசைவுக்கும் அமைதிக்கும் நாளை கப்ரிலே கேள்வி இருக்கிறது. நாளை மஹ்ஷரிலே கேள்வி இருக்கிறது. அல்லாஹ்விடத்தில் மறுமையில் பயங்கரமான பிடி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 
 
அல்லாஹு தஆலா, எனக்கும் உங்களுக்கும் நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் ஈமானை இஸ்லாமிய தக்வாவை முழுமைப்படுத்தி தருவானாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் நம்மை திருப்புவனாக! அல்லாஹ்வுடைய வேதத்தை நிலை நிறுத்தக்கூடிய மக்களாக அல்லாஹ்வின் தூதரின் சுன்னாவை முழுமையாக பற்றி பிடிக்கக்கூடிய மக்களாக நம்மை ஆக்கி அருள்வானாக! 
 
ஷிர்க்கிலிருந்தும் நயவஞ்சகத்தில் இருந்தும் ஒவ்வொரு தீய கெட்ட செயல்களில் இருந்தும் கொள்கைகளில் இருந்தும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நமது சமுதாயத்தையும் பாதுகாத்து அருள்வானாக! நம்முடைய சமுதாய மக்களுக்கு அல்லாஹு தஆலா கண்ணியத்தை மார்க்க விழிப்புணர்வை தந்தருள்வானாக! உயர்வை தந்தருள்வானாக! காஃபிர்களுடைய சூழ்ச்சிகளில் இருந்து அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் முழு உலகத்தில் உள்ள முஸ்லிம்களையும் பாதுகாத்து அருள்வானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு: (1)
 
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
 
இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப்பெண் இணைவைப்பவளைவிடச் சிறந்தவள், (இணைவைக்கும்) அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. (இணைவைக்கும்) அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ்வோ, தன் கட்டளையினால் சொர்க்கம் இன்னும் மன்னிப்பிற்கு (உங்களை) அழைக்கிறான். இன்னும், மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான். (அல்குர்ஆன் 2:221)
 
குறிப்பு: (2)
 
وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَاجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا
 
எவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ; இன்னும், நீர் அருள் புரிந்தீரோ அவரை நோக்கி, “நீ உன் மனைவியை உன்னுடன் வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!” என்று நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! இன்னும், அல்லாஹ் எதை வெளிப்படுத்தக் கூடியவனாக இருக்கிறானோ அதை உமது உள்ளத்தில் நீர் மறைக்கிறீர். இன்னும், மக்களை பயப்படுகிறீர். அல்லாஹ்தான், நீர் அவனை பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். சைது, அவளிடம் (திருமணத்) தேவையை முடித்து (அவளை விவாகரத்து செய்து) விட்டபோது அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம். இது ஏனெனில், நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின் மனைவிகள் விஷயத்தில், அவர்களிடம் (-அந்த மனைவிகளிடம்) அவர்கள் (-அந்த வளர்ப்புப் பிள்ளைகள் திருமணத்) தேவையை முடித்து (விவாகரத்து செய்து) விட்டால் அப்போது (அப்பெண்களை வளர்ப்புப் பிள்ளைகளின் தந்தைகள் திருமணம் முடித்துக் கொள்வதில்) சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஆகும். அல்லாஹ்வின் காரியம் (கண்டிப்பாக) நடக்கக்கூடியதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 33:37)
 
குறிப்பு: (3)
 
إِنَّا أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِنْ كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
 
நிச்சயமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்விற்கு) முற்றிலும் பணிந்த நபிமார்கள் அதன் மூலமாக யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள். இன்னும், குருமார்களும், பண்டிதர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் காக்கும்படி பணிக்கப்பட்டவர்களாகவும், அதற்கு சாட்சியாளர்களாகவும் இருந்த காரணத்தால் அவர்களும் அதன் மூலமே தீர்ப்பளிப்பார்கள். ஆக, (பண்டிதர்களே!) மக்களை அஞ்சாதீர்கள்; என்னை அஞ்சுங்கள். இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். எவர் அல்லாஹ் இறக்கியதன் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 5:44)
 
குறிப்பு: (4)
 
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا
 
நாம் எந்த ஒரு தூதரையும் அனுப்பவில்லை, அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அவருக்கு (எல்லோரும்) கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்திருந்து, அவர்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், இன்னும், அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம் அவர்களுக்காக) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை அங்கீகரிப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:64)
 
குறிப்பு: (5)
 
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا
 
எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் புறக்கணித்தார்களோ அவர்களின் செயல்களை கவனிப்பவராக(வும் அவர்களை விசாரிப்பவராகவும்) நாம் உம்மை அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:80)
 
குறிப்பு: (6)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
 
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரும் தன் மார்க்கத்தை விட்டும் மாறினால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்கள் மீது அன்பு வைப்பான்; அவர்களும் அவன் மீது அன்பு வைப்பார்கள். (அவர்கள்) நம்பிக்கையாளர்களிடம் பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். இன்னும், பழிப்பவனின் பழிப்பை பயப்படமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன், தான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 5:54)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/