HOME      Khutba      உலக மோகத்தால் வீழ்ந்த சமுதாயம்! | Tamil Bayan - 959   
 

உலக மோகத்தால் வீழ்ந்த சமுதாயம்! | Tamil Bayan - 959

           

உலக மோகத்தால் வீழ்ந்த சமுதாயம்! | Tamil Bayan - 959


உலக மோகத்தால் வீழ்ந்த சமுதாயம்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உலக மோகத்தால் வீழ்ந்த சமுதாயம்!
 
வரிசை : 959
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 11-04-2025 | 13-10-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்காக சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்காக மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய பாசத்திற்குரிய கண்ணியமான தூதர் முஹம்மது அவர்கள் மீதும் அவர்களின் பாசத்திற்குரிய நேசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் சலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மகத்தான மன்னிப்பையும் நல்லருளையும் சொர்க்க வாழ்க்கையும் வேண்டியவனாக;
 
இந்த உலக வாழ்க்கையில் அல்லாஹ்வை நேசித்து அவனுடைய ரசூலை நேசித்து அவனுடைய மார்க்கத்தை நேசித்து இந்த மார்க்கத்தில் உறுதியாக இந்த மார்க்கத்தின் சட்டங்களை பேணக்கூடிய நற்பாக்கியத்தை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னித்து நம்மைப் பொருந்தி கொள்வானாக! ஆமீன். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த குத்பாவிலே ஒரு முக்கியமான  செய்தியை இன்ஷா அல்லாஹ் நாம் பார்க்க இருக்கிறோம். சூரா (19) மர்யம் உடைய 59 ஆவது வசனத்தில் அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான்.
 
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏
 
ஆக, அவர்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை பாழாக்கினர். இன்னும், காம இச்சைகளுக்கு பின்னால் சென்றனர். ஆகவே, அவர்கள் (நரக நெருப்பில் மிகப் பெரிய) தீமையை சந்திப்பார்கள். (இந்த தீமை என்பது நரகத்தில் மிக மோசமான தண்டனைகள் நிறைந்த ஒரு கிணற்றையோ அல்லது ஒரு பள்ளத்தாக்கையோ குறிக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.) (அல்குர்ஆன் 19:59)
 
இன்று நாம் எல்லாம் சிந்திக்கிறோம்; யோசிக்கிறோம்; முஸ்லிம் சமூகத்திற்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு பலவீனமான அவலமான நிலை என்று. 
 
நம்மிடத்தில் என்ன குறை இருக்கிறது? நம்மிடத்தில் ஆட்சி இல்லையா? அதிகாரம் இல்லையா? செல்வம் இல்லையா? எதில் அல்லாஹு தஆலா நமக்கு குறை செய்திருக்கிறான்? முஸ்லிம் நாடுகளின் செல்வங்களை எல்லாம் ஒன்று சேர்த்தால் அமெரிக்கர்கள் ஐரோப்பியர்கள் என  ஏழு கண்டத்தில் வாழக்கூடிய எல்லா உலக மக்களுக்கும் தினந்தோறும் இலவச உணவு இலவச கல்வி வழங்கலாம். அப்பேற்பட்ட செல்வத்தை அல்லாஹு தஆலா கொடுத்திருக்கிறான். கொடுத்துக் கொண்டே இருக்கிறான். கஜானாக்களை பொருள் சேமிப்பு கிடங்குகளை நாளுக்கு நாள் திறந்து கொண்டே இருக்கிறான். 
 
எந்த வகையிலும் அல்லாஹு தஆலா இந்த உம்மத்தை இந்த உலக விஷயத்தில் அவன் குறை செய்யவே இல்லை. குறை வைக்கவே இல்லை. பிறகு குறை யார் செய்து கொண்டார்கள்? யார் இந்த இழிநிலையை தேடி கொண்டார்கள்? இந்த அவலமான பலவீனமான கேவலமான நிலைக்கு யார் தங்களை தள்ளிக் கொண்டார்கள் என்றால் இந்த சமுதாயம் தான். 
 
அல்லாஹு தஆலா ஆட்சி அதிகாரத்தை, சிறப்பை கொடுத்தான். அல்லாஹ் கொடுத்த நிஃமத்துகளை எல்லாம் உலகம் மோகத்தில் மூழ்கி குஃப்பார்களுக்கு பின்னால் சென்று யஹூதி நஸரானிகளின் கலாச்சாரத்திற்கு பின்னால் சென்று அற்ப ஆபாசங்களில் மூழ்கி, தங்களது துணிவை வீரத்தை தைரியத்தை ஈமானிய பலத்தை இழந்து விட்டார்கள். 
 
அல்லாஹு தஆலா இந்த 59 ஆவது வசனத்திலே என்ன கூறுகிறான்? அதற்கு விளக்கமாக ஸஹீஹ் அபூதாவூதிலே வரக்கூடிய ஒரு ஹதீஸையும் சேர்த்து பார்ப்போம். 
 
அல்லாஹ் சொல்கிறான்: நபிமார்களுடைய காலங்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இப்படி தோன்றுவார்கள். அவ்வளவுதான் அந்தக் கூட்டம் தோன்றி விட்டால் இழிவே இழிவு. நாசமே நாசம். கேவலமே கேவலம். மற்றபடி பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கலாம். செல்வத்திலே செழிப்பாக இருக்கலாம். 
 
ஆனால், அல்லாஹ் சொல்கிறான் அல்லவா:
 
وَاَنْتُمُ الْاَعْلَوْنَ ‏
 
நீங்கள்தான் மேலோங்குவீர்கள் நீங்கள் தான் உயர்வீர்கள். (அல்குர்ஆன் 3:139) (குறிப்பு-1) 
 
இந்த வசனத்திற்கு என்ன அர்த்தம்? நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்பார்கள். நாம் எதை சொல்வோம்? அல்லாஹ்வுடைய நீதத்தை சொல்வோம். உலகத்தில் முஸ்லிம்கள் ஓங்கி இருந்த போதெல்லாம் நீதம், நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஓங்கி இருந்தன. எப்போது முஸ்லிம்கள் தாழ்ந்தார்களோ அப்பொழுது சமூக சீர்கேடுகள் ஒழுங்கீனங்கள் ஆபாசங்கள் எல்லை மீற ஆரம்பித்து விட்டன. 
 
வரலாற்றிலே ஒரு முக்கியமான ஒரு நிகழ்வை நினைவுபடுத்துகின்றேன். இறுதியாக முடிந்த உஸ்மானிய பேரரசிலே ஒரு கலிஃபா. அவருக்கு ஐரோப்பாவிலே பாரசீக நாட்டிலே மக்களெல்லாம் தெருக்களிலே மது அருந்திவிட்டு ஆபாசமாக நடனமாடுகிறார்கள் என்று தெரிய வருகிறது. 
 
அப்பொழுது அவர் உன்னுடைய நாட்டு மக்கள் பொது இடத்திலே மது அருந்திவிட்டு ஆபாசமாக நடனமாடுகிறார்கள், கூத்தடிக்கிறார்கள் இதுபோன்று எனக்கு ஒரு செய்தி வருகிறது. எனது இந்த கடிதம் கிடைத்தவுடன் உடனடியாக இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உனது நாட்டில் நடக்கக்கூடிய இந்த சீரழிவு எனது நாட்டுக்கு பரவி விடக்கூடாது. அதனுடைய துற்பாக்கியம் எனக்கு சேர்ந்து விடக்கூடாது. எனவே மரியாதையாக இதை நீ நிறுத்திக் கொள்! என்று அந்த பாரிஸ்னுடைய மன்னனுக்கு கடிதம் எழுதுகிறார்கள்.
 
என்ன நடந்தது தெரியுமா? அன்று நிறுத்தப்பட்டது. அந்த பொதுவெளியினுடைய ஆபாச நடனங்கள் 100 ஆண்டுகள் வரை நீடித்து இருந்தது. ஒரு கடிதம் ஒரு எழுத்து இப்பேற்பட்ட ஆற்றலை பயத்தை அந்த வல்லரசை ஆண்டு கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டினுடைய மன்னனுக்கு கொடுத்தது.
 
இன்று, 58 முஸ்லிம் நாடுகள் ஒன்று சேர்ந்து, பல மாநாடுகள் நடத்தி, அறிக்கைகள் கொடுத்து, செய்திகள் கூறி எல்லாம் செய்தாலும் அதை வாங்கி கிழித்து காலில் போட்டு மிதிக்கிறார்கள். 
 
எந்த அளவுக்கு நாம் அவமானப்பட்டு இருக்கிறோம். உயர்ந்த கோபுரங்களில் வாழ்ந்தும் உலகத்திலேயே மக்கள் அனுபவிக்காத செல்வங்களையும் சுகங்களையும் முதல் தரமாக அனுபவித்துக் கொண்டு கேவலமான நிலையில் வாழ்கிறோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! மன்னிப்பானாக! 
 
வரக்கூடிய நமது தலைமுறையை அல்லாஹ் ரட்சிப்பானாக! பயமாக இருக்கிறது. அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். ஒரு கூட்டம் வருவார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? தொழுகையை பற்றி அவர்களுக்கு அக்கறை இருக்காது.
 
اَضَاعُوا الصَّلٰوةَ 
 
தொழுகையை நாசமாக்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 19:59)
 
இன்று, நீங்கள் முஸ்லிம் நாடுகளுக்கு சென்று வந்தால் தெரியும்; பிரம்மாண்டமான மஸ்ஜிதுகள் இருக்கும். ஆனால், அங்கு அதிலே எந்த மூலையில் இருக்கிறார்கள் என்று தொழுகையாளிகளை தேட வேண்டும். இது நம்பர் ஒன். 
 
நம்பர் இரண்டு, தொழுகை நடத்தப்படும். எப்படி என்றால் கண் சிமிட்டும் நேரங்களில் தொழுகை முடிந்துவிடும். 
 
இந்த ரமழானுடைய இறுதி பத்திலே அதுவும் 27ஆம் கிழமை ஒரு முஸ்லிம் நாட்டுக்கு சென்றிருந்தேன். இஷா தொழுகை தராவிஹ் தொழுகை எட்டு ரக்அத் எல்லாம் சேர்ந்து அந்த நாட்டினுடைய நேஷனல் மஸ்ஜிதிலே 20 நிமிஷத்தில் முடித்து விட்டார்கள். கேட்டால் நாங்கள் கியாமுல் லைலுக்கு வருவோம். அப்போது நீட்டி தொழுவோம் என்றார்கள். 
 
சரி, அப்போது எத்தனை மணிக்கு ஆரம்பிப்பீர்கள்? எத்தனை மணிக்கு முடிப்பீர்கள்? நாங்கள் 12 மணிக்கு ஆரம்பித்து 12:45 க்கு முடித்து விடுவோம் என்றார்கள்.
 
யோசித்துப் பாருங்கள்! ரமழான் மாதங்களில் முஸ்லிம் நாடுகளில் மஸ்ஜிதுகள் பூட்டப்படுகின்றன. விபச்சார விடுதிகளும் ஆபாச நடன கேளிக்கை விடுதிகளும் அகல கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு முஸ்லிம்களை வரவேற்றுக் கொண்டிருக்கின்றன. 
 
தொழுகையை வீணாக்குவார்கள். மஸ்ஜிதுல் ஹராமுடைய மிம்பரியில் இருந்து கொண்டு இமாம் பேசுகிறார்; வெயில் அடிக்கிறதாம். அதனால் மன்னர் தொழுகையை சுருக்க சொன்னாராம். 3 நிமிடத்தில் ஜுமுஆ தொழுகை முடிந்து விடுகிறது. 
 
ஆனால், அதே நேரத்தில் வெயில் காலமாக இருக்கட்டும்; குளிர்காலமாக இருக்கட்டும்; மழைக்காலமாக இருக்கட்டும்; எல்லா நேரங்களிலும் அவர்கள் தங்களுடைய கேளிக்கைகளை குறைத்துக் கொள்ள மாட்டார்கள். தங்களுடைய வேடிக்கைகளை குறைத்துக் கொள்ள மாட்டார்கள். ரமழான் மாதம் ஆபாசத்தைக் கொண்டு வரவேற்கப்பட்டது. 
 
ரமழானின் இறுதி பத்திலே ஆபாசங்கள் நடக்கக்கூடிய நாடுகளில் கூட அந்த நடன விடுதிகள் மூடப்படும் பொழுது இஸ்லாமிய புனிதங்களை தாங்கிக் கொண்டிருக்கக் கூடிய நாட்டிலே அங்கே ரமழான் உடைய இறுதி பத்திலே ஆபாச நடனங்கள் பொது வெளியிலே நடத்தப்படுகிறது.  
 
யோசித்துப் பாருங்கள்! எங்கே சென்று கொண்டிருக்கிறோம் அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்!
 
தொழுகையை வீணாக்குவார்கள். தொழுகையில் அக்கறை இருக்காது. 
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்: 
 
وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌
 
ஆபாசங்களுக்கு பின்னால் அசிங்கங்களுக்கு பின்னால் ஒழுங்கீனங்களுக்கு பின்னால் ஓடுவார்கள். (அல்குர்ஆன் 19:59) 
 
இன்று, மொத்த இஸ்லாமிய நாடுகளை எடுத்துக் கொண்டால் குடி, கும்மாளம், ஆடல், பாடல், இசை இவற்றில் இஸ்லாமிய நாடுகள் இன்று ஐரோப்பா நாடுகளோடு போட்டி போடுகிறார்கள். 
 
கண்டிப்பாக போட்டி போட வேண்டும். எதிலே? அவர்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகளிலே போட்டி போடலாம். அவர்கள் உருவாக்கியதைப் போன்று சமூகத்தை பலப்படுத்துவதற்கு, நாட்டை காப்பதற்கு ஆயுதங்கள் தேவை! கண்டிப்பாக போட்டி போடுங்கள்! 
 
ஆனால், எதிலே போட்டி போடுகிறார்கள்? மது குடிப்பதிலே, ஆபாசங்களிலே, கேளிக்கை விடுதிகளிலே, உனது நாட்டில் இருக்கக்கூடிய கேளிக்கை விடுதிகளை விட என்னுடைய நாட்டில் இருக்கக்கூடிய கேளிக்கை விடுதிகளின் பிரம்மாண்டத்தை பாருங்கள்! நீங்கள் என்ன கால்பந்து போட்டி நடத்துவது நாங்கள் நடத்துகிறோம் பாருங்கள்! என்று போட்டி போடுகிறார்கள்.
 
ஒரு கால் பந்து அதிகப்படியாக எவ்வளவுதான் தரமாக இருந்தாலும் 100 டாலருக்கு மதிப்பு இருக்காது. இரண்டு மில்லியன் கொடுத்து ஒரு மன்னன் வாங்குகிறான். எப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனமான மூடத்தனமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். 
 
முஸ்லிம் நாடுகளில் குழந்தைகள் உண்ண உணவில்லாமல் இருக்கிறார்கள். எத்தனை ஆப்பிரிக்க நாடுகளில் எத்தனை ஏழை நாடுகளிலே ஒதுங்குவதற்கு மஸ்ஜிதுகள் இல்லாமல் மதரஸாக்கள் இல்லாமல் ஓதுவதற்கு குர்ஆன் இல்லாமல் இருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் இங்கே சிந்திக்க நேரமில்லை. 
 
ஒவ்வொரு நாடும் எப்படி போட்டி போடுகிறார்கள் என்றால், உன் நாட்டிலே ஆபாச விடுதிகளும் கேளிக்கைகளையும் மது விடுதிகளும் இருக்கின்ற காரணத்தால் என்னுடைய நாட்டில் உள்ளவர்கள் அங்கே வந்து மது அருந்த வருகிறார்கள்; ஆட வருகிறார்கள்; பாட வருகிறார்கள். எனவே என் நாட்டிலேயே நான் அதை திறந்து என்னுடைய அந்த வருமானத்தை நானே வைத்துக் கொள்ளப் போகிறேன் என்று போட்டி.
 
அல்லாஹு தஆலா உனக்கு கணக்கில்லாமல் வற்றாத ஜீவ நதியாக செல்வத்தை ஹலாலாக கொடுத்துக் கொண்டிருக்கிறான். நீ ஹராமிலே தேடுகிறாயே! 
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்! பயந்து கொள்ள வேண்டும்! அவர்களைப் பற்றி பேசுவதினுடைய நோக்கம் என்ன? நமக்கும் இந்த படிப்பினை இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையை சிந்திக்க வேண்டும். நாம் எப்படி மார்க்கத்தில் இருக்கிறோம். அல்லாஹு தஆலா எச்சரிக்கிறான்; இந்த ஆபாசங்களுக்குப் பின்னால் செல்லாதீர்கள் என்று.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீஸை ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அடிமை அறிவிக்கிறார்கள்:
 
உங்களை மக்கள் அப்படி போட்டி போட்டு சீரழிப்பார்கள், எப்படி ஒரு உணவு விரிப்பில் உட்கார்ந்து இருக்கும்பொழுது சாப்பிடக்கூடியவர்கள் ஒருவர் மற்றவரை அழைப்பது போன்று சீரழிவுக்கு உங்களை அழைப்பார்கள். 
 
அப்பொழுது நபி சபையிலே இருந்தவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அந்த நாளிலே எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா? அப்படி ஒரு பலவீனமான நிலையா? ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இல்லை நீங்கள் அதிகமாக இருப்பீர்கள். ஆனால் கடலுக்கு மேல் இருக்கக் கூடிய அந்த நுரையை போல இருப்பீர்கள். பார்ப்பதற்கு தான் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால், ஒன்றும் அதற்குள் இருக்காது. 
 
மேலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: உங்களுடைய எதிரிகளின் உள்ளங்களில் இருந்து அல்லாஹ் உங்கள் மீது உண்டான பயத்தை எடுத்து விடுவான். (குறிப்பு:2) 
 
அறிவிப்பாளர் : ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4297.
 
உமர் (ரழியல்லாஹு அன்ஹு) என்று பெயரை சொன்னால்  ரோம பாரசீக மன்னர்கள் பேரை கேட்டவுடன் எழுந்து நின்று விடுவார்கள். எப்பேற்பட்ட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இந்த முஸ்லிம் உம்மாவுக்கு நம்முடைய முன்னோர்கள் கொடுத்து சென்றார்கள். தங்களுடைய மனைவிகளை விதவைகளாக்கி, தங்களுடைய குழந்தைகளை அனாதைகளாக்கி எத்திமாக்கி, தங்களுடைய கை கால்களை இழந்து இந்த நாடுகளை முஸ்லிம் உம்மாவின் கையிலே கொடுத்து சென்றார்கள். 
 
சாதாரணமான தியாகமா? அபூ அய்யூப் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதருக்கு மதினா  முனவ்வராவிலே வீட்டை கொடுத்தார்கள். ஆனால் அவர்களுடைய கப்ர் எங்கே இருக்கிறது தெரியுமா? 95 வயதில் அல்லாஹ்வின் பாதையிலே போருக்கு புறப்பட்டு சென்றார்கள். மன்னர் சொல்கிறார்; அபூ அய்யூபே! பலவீனமாகிவிட்டீர்கள், 90 வயசு தாண்டி விட்டீர்கள். நீங்கள் இருந்தால் நாங்கள் இந்த ஜிஹாதை பார்த்துக் கொள்கிறோம். அதற்கு அவர்கள் ‘’இல்லை!
 
اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا‏
 
நீங்கள் பலவீனமாக இருந்தாலும் பலம் உள்ளவராக இருந்தாலும் அல்லாஹ்வின் பாதையிலே போருக்கு புறப்படுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறான்.  (அல்குர்ஆன் 9:41) (குறிப்பு:3) 
 
நான் வருவேன்; இந்த போரிலே கலந்து கொள்வேன் என்று சொல்கிறார்கள். மதினாவில் இருந்து துருக்கியை நோக்கிய படையிலே அவ்வளவு நீண்ட பயணத்திலே செல்கிறார். வசியத் என்ன தெரியுமா? நான் வழியிலே மரணித்து விட்டாலும் எனது ஜனாஸாவை சுமந்து சென்று கொண்டே இருங்கள். அல்லாஹ்வின் பாதையிலே எனது ஜனாசா செல்லட்டும். இறுதியாக எங்கே போர் முடிகிறதோ அங்கே முஸ்லிம்கள் வெற்றி கொள்ளும் பொழுது ஒரு ஓரத்திலே என்னுடைய ஜனாஸாவை அடக்கம் செய்யுங்கள். 
 
துருக்கியில் அபூ அய்யூப் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஜனாஸா அடக்கம் செய்யப்படுகிறது. 
 
இப்படி உயிர்களை கொடுத்து இந்த தீனுக்காக மறுமைக்காக நாடுகளையும் செல்வங்களையும் கொடுத்துவிட்டு சென்றார்கள். ஆனால், ஒரு இஸ்லாமிய நாட்டை தேட முடியாது. இஸ்லாமுக்காக நாங்கள் வாழ்கிறோம். முஸ்லிம்களுக்காக நாங்கள் வாழ்கிறோம். இஸ்லாமை பின்பற்றுவதும் பரப்புவதும் இஸ்லாமை ஓங்க செய்வதும்தான் எங்களுடைய வாழ்க்கை. எங்கள் ஆட்சி எங்கள் அதிகாரம் எங்களுடைய செல்வம் எல்லாம் இதற்காகத்தான் என்று சொல்லக்கூடிய ஒரு ஆட்சியாளரையும் இப்பொழுது பார்க்க முடியாது. காரணம் என்ன? மன இச்சை, ஆபாசங்கள். அதிலே போட்டி. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: உங்களுடைய எதிரிகளுக்கு உங்கள் மீது இருக்கக்கூடிய பயத்தை அல்லாஹ் அகற்றி விடுவான். 
 
அந்த வார்த்தையை கவனியுங்கள்! அந்த அளவு உங்களைப் பற்றிய பயம் எதிரிகளுடைய உள்ளத்தில் இருந்தது. இருக்கும். ஆனால் உங்களுடைய செயல்களால் அந்த பயம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய் கொண்டே இருக்கும். 
 
பிறகு உங்களுக்கு என்ன ஏற்படும்? உங்களது உள்ளங்களிலே அல்லாஹு தஆலா வஹன் பலவீனத்தை கோழைத்தனத்தை இயலாமையை போட்டு விடுவான். சஹாபாக்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! என்ன பலவீனம்? என்ன கோழைத்தனம்? சொன்னார்கள்: உலகத்தின் மீது உண்டான வெறி; மௌத்தின் மீது உண்டான வெறுப்பு. (குறிப்பு:2) 
 
அறிவிப்பாளர் : ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபுதாவூத், எண் : 4297.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று, இந்த ஆசாபாசங்களும் இந்த உலக மோகங்களும் எந்த அளவுக்கு நம்முடைய சமுதாயத்தை சீரழித்திருக்கிறன யோசித்துப் பாருங்கள்! 
 
தொழுகையை உதாரணமாக அல்லாஹ் கூறினான். அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்கள் மீறப்படுகின்றன. மார்க்கத்தை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொழுகையே நேரத்தில் தொழுவதில்லை. தொழுகையை விடக்கூடியவர்கள்; அந்த தொழுகையை மன இச்சைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டவர்கள். தங்களுக்கு ஏற்ப தொழுகையை கூட்டி குறைத்து (ஆல்ட்ரேஷன் செய்து) கொண்டவர்கள். இப்படியாக இந்த தொழுகையை மோசடிகளை செய்து கொண்டிருக்கும் பொழுது ஏனைய ஹலால் ஹராமுடைய சட்டங்களை என்னவென்று சொல்ல முடியும்! 
 
முஸ்லிம் நாடுகளில் வட்டி ஹலால் ஆக்கப்பட்டு விட்டது. விபச்சாரம் ஓரின சேர்க்கை தனி மனித உரிமை என்று பேசப்படுகிறது. அல்லாஹு தஆலா கூறி இருக்கக்கூடிய சொத்துரிமையின் சட்டங்கள் பெண்களுக்கான அநீதி; ஆண்களைப் போன்று பெண்களுக்கு பங்கு என்று முஸ்லிம் நாடுகளுடைய பாராளுமன்றங்களிலே பேசப்படுகின்றது. எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் யோசித்துப் பாருங்கள்! 
 
முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் குர்ஆனுடைய இந்த வசனத்திற்கு விளக்கமாக கூறுகிறார்கள்: (அல்குர்ஆன் 19:59)
 
எப்படி கால்நடைகள், ஆடுகள், மாடுகள், கழுதைகள் பொது இடங்களிலே தங்களது இயற்கையான தேவைகளை மிருக ஆசைகளை நிறைவேற்றுமோ அதுபோன்று இவர்கள் செய்வார்கள். 
 
இன்று, முஸ்லிம் நாடுகளில் அதாவது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிரான்ஸ்னுடைய நகரங்களிலும் நடந்து கொண்டிருந்த மது விழாக்கள், அரைகுறை ஆடையோடு கட்டிப்பிடித்து விளையாடக்கூடிய நடனங்கள் முஸ்லிம் நாடுகளுடைய தலைநகரங்களில் நடக்கின்றன.
 
முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் சொன்னார்கள்: வானத்தில் இருக்கக்கூடிய அல்லாஹ்வை பயப்பட மாட்டார்கள். பூமியில் இருக்கக்கூடிய மக்களையும் கண்டு வெட்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
சொல்கிறார்கள்: இந்த உம்மத்திலே ஒரு கூட்டம் உருவாகுவார்கள். எப்படி தெரியுமா? மது அருந்தி கொண்டே இருப்பார்கள். 
 
இன்று முஸ்லிம் நாடுகள் மதுவை உற்பத்தி செய்வதிலும் போட்டி போட ஆரம்பித்து விட்டன. ஒரு விமான நிலையத்தில் இறங்கினால் முஸ்லிம் நாட்டினுடைய விமான நிலையமா? ஐரோப்பாவின் விமான நிலையமா? என்று நீங்கள் தடுமாறக்கூடிய அளவுக்கு அந்த விமான நிலையங்களில் மது விற்பனைகளை பார்க்கலாம். 
 
சமீபத்திய ஒரு சம்பவத்தை சொல்கிறேன்; ஒரு பேணுதலாக இருந்த முஸ்லிம் நாடு. அந்த உடையோடு ஒரு முஸ்லிம் நாட்டிலே ஒரு விமான நிலையத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக மது விற்காத ஒரு தண்ணீர் கடை விமான நிலையத்திற்குள் இருக்கிறதா? என்று தேடி தேடி சென்று கடைசியில் எங்குமே இல்லை. சரி தண்ணீர் வாங்குவோம் என்று அங்கே சென்றால் அந்த மது அரங்கில் விமான நிலையத்திற்குள் இருக்கக்கூடிய மது அரங்கிலே எந்த நாட்டை நாம் புனிதமாக நமது உயிரை விட மதிக்கிறோமோ அந்த நாட்டினுடைய அரபிகள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். 
 
எந்த இஸ்லாமிய மார்க்கத்தில், மது குடித்தவனை மட்டையாலும் செருப்பாலும் அடியுங்கள் என்று சொல்லப்பட்டதோ அந்த மார்க்கத்தை பின்பற்றக்கூடிய மக்களுடைய நிலை என்ன? கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு மது குடித்து கொண்டிருக்கிறார்கள். தொழுகைகளை விட கூடியவர்களாக இருப்பார்கள். விளையாட்டிலே செஸ் விளையாடுவது, எல்லாவிதமான சூதாட்ட விளையாட்டுகளும் உள்ளன. 
 
சொன்னார்கள்: இஷா தொழுகைக்கு வர மாட்டார்கள். சுபுஹு தொழுகைக்கு தூங்கிக் கொண்டிருப்பார்கள். 
 
நூல் : தஃப்சீர் இப்னு கசீர்.
 
முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்; வெள்ளிக்கிழமை லீவாக இருக்கும். வியாழக்கிழமை அவ்வளவு அரட்டை அடித்து விட்டு பஜ்ரு தொழுகைக்கு அங்கே வரவே மாட்டார்கள். இமாமும் நாலு பேரும் இருப்பார்கள். 
 
கஅப் ரலியல்லாஹு அன்ஹு இந்த வசனத்தை ஓதி காட்டுகிறார்கள். (அல்குர்ஆன் : 19:59)
 
அல்லாஹ்வின் அடியார்களே! நமது நாட்டிலும் எத்தனை நெருக்கடிகளை நாம் சந்தித்து வருகிறோம் யோசித்துப் பாருங்கள்! நம்முடைய உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நம்முடைய சொத்துக்கள் பறிக்கப்படுகின்றன. இப்படி நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு நாம் ஆளாகி கொண்டு இருக்கிறோம். நம்முடைய வருங்கால தலைமுறை என்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு நாம் இருக்கிறோம். ரோஹிங்கியா உடைய முஸ்லிமை நினைத்துப் பாருங்கள்! உலகத்திலே சுற்றி வாழக்கூடிய முஸ்லிம் மைனாரிட்டிகளை நினைத்துப் பாருங்கள்! சைனா உடைய முஸ்லிம்களுடைய நிலையை நினைத்துப் பாருங்கள்! 
 
அல்லாஹ்வின் அடியார்களே! சில சோதனைகள் நம்முடைய கரங்களால் நாம் தேடிக் கொண்டதாக இருக்கும். காரணம் என்ன? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட உலகத்தை நேசிக்கின்ற காரணத்தால். ஹராமான விஷயங்களை செய்து இந்த மதுவுக்கு இந்த சூதாட்டங்களுக்கு இந்த கேளிக்கைகளுக்கு அடிமையாகி விடுவதால் தான் இந்த சோதனைகள் எல்லாம். 
 
முன்பெல்லாம் சினிமாவிலே ஒரு முஸ்லிம் நடிக்க சென்றால் அவனை மதிக்கவே மாட்டார்கள். ஒரு மனுஷனாக அல்ல ஒரு மிருகமாக கூட மதிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கேவலமாக பார்ப்பார்கள். 
 
இன்று சினிமாவில் நடிப்பவர்களையும் அதற்கு இன்வெஸ்ட்மென்ட் செய்பவர்களையும் அந்த துறையை சேர்ந்தவர்களையும் மஸ்ஜிதிற்குள் அழைத்துவந்து கௌரவிக்கப்படுகிறது. எப்படிப்பட்ட மனநிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்! அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
ஆகவே, எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! நாம் செய்யக்கூடிய பாவம் நாம் அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறுவது நமது உம்மத்துக்கான சோதனையாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்! என்னுடைய தவறு இந்த சமுதாயத்தின் பிரச்சனைக்கு காரணம் என்ற பொறுப்பை உணருங்கள்! 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதைத்தான் நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். குர்ஆன் இதை தான் நமக்கு போதிக்கின்றது. 
 
நீங்கள் எல்லோரும் சேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வாருங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 24:31)
 
ஆகவே தான், சோதனை வரும் பொழுது அநியாயக்காரர்களுக்கு மட்டும் என்று வராது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
 
وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً‌  وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
 
இன்னும், நிச்சயமாக உங்களில் உள்ள அநியாயக்காரர்களுக்கென்று மட்டுமே வராத ஒரு தண்டனையை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8:25)
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த செய்தியை நாம் நம்முடைய தலைமுறைக்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் எதை தருகிறீர்களோ இல்லையோ தக்வாவை கொடுங்கள்! இபாதத்தை கொடுங்கள்! தக்வாவுடைய வாழ்க்கையை போதியுங்கள்! அல்லாஹ்வும் ரசூலும் கிழித்த அந்த கோட்டுக்குள் வாழக்கூடிய அந்த மன உறுதியை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள்! 
 
அல்லாஹு சுப்ஹானஹு வ  தஆலா எனக்கும் உங்களுக்கும் மார்க்கத்தின் உடைய உறுதியை மார்க்கத்தின் மீது உண்டான நம்பிக்கையை மார்க்கத்தின் மீது உண்டான நேசத்தை அதிகப்படுத்துவானாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக !அல்லாஹு தஆலா வெற்றி பெற்ற உயர்ந்த சமுதாயமாக நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தை உலகமெங்கிலும் ஆக்குவானாக! அல்லாஹு தஆலா நல்லறிவை தருவானாக! நேர்வழியை தருவானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு: (1)
 
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
நீங்கள் துணிவிழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால். நீங்கள்தான் உயர்ந்தவர்கள் (அல்குர்ஆன் 3:139)
 
குறிப்பு: (2)
 
يُوشِكُ الأممُ أن تداعَى عليكم كما تداعَى الأكَلةُ إلى قصعتِها . فقال قائلٌ : ومن قلَّةٍ نحن يومئذٍ ؟ قال : بل أنتم يومئذٍ كثيرٌ ، ولكنَّكم غُثاءٌ كغُثاءِ السَّيلِ ، ولينزِعنَّ اللهُ من صدورِ عدوِّكم المهابةَ منكم ، وليقذِفَنَّ اللهُ في قلوبِكم الوهْنَ . فقال قائلٌ : يا رسولَ اللهِ ! وما الوهْنُ ؟ قال : حُبُّ الدُّنيا وكراهيةُ الموتِ-- الراوي : ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود الصفحة أو الرقم: 4297 | خلاصة حكم المحدث : صحيح
 
உணவு உண்பவர்கள், (ஒருவர் மற்றொருவரை) உணவுத் தட்டை நோக்கி அழைப்பது போன்று, (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுக்கெதிராகச் செயல்பட அழைத்துக்கொள்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
 
அப்போது ஒருவர், அந்நேரம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா? எனக் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லை, அந்நேரம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். எனினும் நீங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் சருகுகளைப் போன்று இருப்பீர்கள். இன்னும், உங்களைப் பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் கழற்றி எடுத்துவிட்டு, உங்கள் உள்ளங்களிலே ‘வஹ்ன்’ எனும் சிந்தனையைப் போட்டு விடுவான் எனக் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’ என ஒரு மனிதர் கேட்க, ‘உலகத்தை நேசிப்பதும், மரணத்தை வெறுப்பதும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
அறிவிப்பாளர் : ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4297.
 
குறிப்பு: (3)
 
اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا وَّجَاهِدُوْا بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
 
நீங்கள் பலமின்றி இலகுவானவர்களாக இருக்கும் நிலையிலும்; இன்னும்,வலுவுடன் கனமானவர்களாக இருக்கும் நிலையிலும் போருக்கு புறப்படுங்கள். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் போரிடுங்கள். நீங்கள் (உபதேசங்களை) அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். (அல்குர்ஆன்  9:41)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/