இஸ்லாமில் ஸஹாபிய பெண்கள்! | Tamil Bayan - 938
இஸ்லாமில் ஸஹாபிய பெண்கள்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : இஸ்லாமில் ஸஹாபிய பெண்கள்!
வரிசை : 938
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 10-01-2025 | 10-07-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்
கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக- கட்டுப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக; இறையச்சத்தை உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹு தஆலா நமக்கு உதவி செய்வானாக! காஜா மக்களுக்கு அல்லாஹு தஆலா அருள் புரிவானாக! அவர்கள் இழந்ததை விட சிறந்ததை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் அவர்களுக்கு தருவானாக! அவர்களின் கொல்லப்பட்டவர்களை ஷஹீதுகளாக அல்லாஹு தஆலா ஏற்றருள்வானாக! அவர்களுக்கு உதவக்கூடிய நல்ல மூஃமின்கள் முஸ்லிம்களை அல்லாஹு தஆலா ஏற்படுத்தி தருவானாக! அவர்களை இந்த நிலைக்கு தள்ளிய அல்லாஹ்வின் எதிரிகளை அல்லாஹு தஆலா பழிவாங்குவானாக! ஆமீன்.
அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா அவனுடைய மார்க்கத்தை நம்பிக்கை கொண்ட, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றுகிற, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பரப்புகிற, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவே அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு உதவி செய்வதற்காகவே தங்களது வாழ்க்கையை தங்களது செல்வங்களை அர்ப்பணித்துக் கொண்ட இஸ்லாமிய மன்னர்கள், முஸ்லிம்கள், செல்வந்தர்கள், அல்லாஹ்வின் பாதையில் போராடக் கூடியவர்கள், அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்க கூடியவர்கள் அனைவருக்கும் அல்லாஹு தஆலா அவனுடைய ரஹ்மத்துகளையும் பரக்கத்துகளையும் செய்தருள்வானாக! மறுமையில் மகத்தான சொர்க்கத்தின் வீட்டை அவர்களுக்கு கூலியாக தந்தருள்வானாக! ஆமீன்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! சென்ற குத்பா உடைய தொடராக, நாம் நமது இஸ்லாமிய பெண்களை நம்முடைய குடும்பப் பெண்களை உருவாக்குவதில் நமக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வு, நமக்கு இருக்க வேண்டிய மார்க்க அறிவு ரொம்ப முக்கியம்.
இன்று, கண்ணியத்திற்குரிய மதிப்பிற்குரிய பாசத்திற்குரிய நபித்தோழர்களைப் பற்றி பெரும்பாலும் நாம் பேசுகிறோம். கண்டிப்பாக அவர்கள் பேசப்பட வேண்டியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள்.
ஆனால், குர்ஆனிலும் ஹதீஸிலும் ஆண் சஹாபாக்களை பற்றி மட்டும் பேசப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்! பொதுவாகவே நாம் எப்படி மனதிலே சிந்தனையிலே ஸஹாபா என்றாலே அங்கே சஹாபா சமுதாயத்தில் இருந்த ஆண் சஹாபாக்களை கொண்டு வந்து விடுவோம். இதுதான் நம்முடைய சிந்தனைக்கு உடனடியாக வரும்.
அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே எங்கெல்லாம் நபியோடு இணைத்து நபித்தோழர்கள் என்று சொல்கிறானோ அதிலே அந்த சமுதாயத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் அடங்குவார்கள் என்பதை நாம் மனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும்.
என்னென்ன சிறப்புகள் குர்ஆனிலே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களை பற்றி அல்லாஹு தஆலா கூறுகிறானோ அந்த எல்லா சிறப்புகளும் மேன்மைகளும், அந்த சிறப்பிற்குரிய மேன்மைக்குரிய தன்மைகளும் தியாகங்களும் சஹாபிய பெண்மணிகளிடத்திலும் இருந்தன.
அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர் ஒரு மிகப்பெரிய தியாகத்தை செய்தார் என்றால், அதற்கு சமமான அல்லது அதற்கு நெருக்கமாக அல்லது கொஞ்சம் குறைவாக அங்கே அல்லாஹுக்காக மறுமைக்காக இந்த தீனுக்காக தியாகம் செய்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்கள் இருக்கிறார்கள், இன்ன பிற நபித்தோழிகள் இருக்கிறார்கள்.
ஸஹாபாக்களை பற்றி அவர்கள் சொர்க்கவாசிகள் என்று குர்ஆன் சாட்சி சொல்ல கூடிய நேரத்தில், ஹதீஸிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆண் சஹாபாக்களை பற்றி இன்ன தோழர் இன்ன தோழர் என்று சொல்லக்கூடிய அதே நேரத்திலே, பல சஹாபிய பெண்களைக் குறிததும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கத்திற்கான நற்செய்தியை கூறி இருக்கிறார்கள்.
கண்ணியத்திற்குரிய அந்த சஹாபாக்களுக்கு மத்தியிலே சஹாபாக்களுடைய பெண்களில் அவர்களின் மனைவிமார்களோ அல்லது சகோதரிகளோ பெண் பிள்ளைகளோ இந்த இஸ்லாமிற்கு இந்த மார்க்கத்திற்கு எத்தகைய தியாகங்களை செய்தார்கள் என்பதை நாம் அறிய வேண்டும். நமது சமுதாயத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு அதை நாம் உணர்த்த வேண்டும்.
இன்று, ஒரு முஸ்லிமான பெண் என்றால் ஏற்கனவே நாம் பேசியது போன்று இரண்டில் ஒரு நிலை, ஒன்று, சமையலறையில் இரு. இல்லை என்றால் வேலை செய்யப் போ. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு முஸ்லிமான பெண் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு என்ன செய்தாள்? இந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு என்ன செய்தாள்? இந்த சமுதாயத்திற்கு என்ன பங்களிப்பை செய்தாள்? அதை பற்றி சிந்திக்கவில்லை என்றால் நீங்களும் நானும் குற்றவாளிகள்.
நம்முடைய தமிழ்நாட்டிலேயே பல இடங்களுக்கு சென்று வந்து உங்களுக்கு சொல்கிறேன்; முஸ்லிம்களுடைய கிராமங்கள், குக்கிராமங்கள் சிறுநகரங்கள் இருக்கின்றன. முஸ்லிம்களால் நடத்தப்படக்கூடிய முஸ்லிம் மேனேஜ்மென்ட் உடைய பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.
இதில் அவமானம், ஒரு வருத்தத்திற்குரிய செய்தி என்ன தெரியுமா? அந்தப் பள்ளிக்கூடங்களில் நம்முடைய முஸ்லிமான பிள்ளைகள் அந்த பள்ளிக்கூடங்களில் 80 சதவிகிதத்திற்கு மேல் கல்வி படிக்கின்றார்கள் அந்த பள்ளிக்கூடங்களில் அந்தப் பிள்ளைகளுக்கு கல்வி சொல்லிக் கொடுப்பதற்கு நம்முடைய சமுதாய பெண்கள் இல்லை.
இங்கு, இரண்டு விதமான முரண்பாடான நிலைகளுக்கு மத்தியிலே நாம் இருக்கிறோம். ஒன்று நம்மில் பலர் இப்படிப்பட்ட கல்விப் பணி செல்வதால் அதிகம் நேரம் கொடுக்க வேண்டுமோ! குறைவான ஊதியம் கிடைக்குமோ! என்று அந்த பணிகளுக்கு தங்களுடைய பெண்களை அனுப்புவதில்லை.
ஆனால், அந்தப் பணிகளால் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
யார் அங்கே சொல்லிக் கொடுக்கிறாரோ அவர்தான் அந்தப் பிள்ளைகளுக்கான ரோல் மாடல். நம்முடைய பிள்ளைகள் ஒரு ஹிஜாப் அணிந்த, மார்க்கப் பற்றுடைய, ஒழுக்கமான, இஸ்லாம் சொல்லக்கூடிய, ஒழுக்கங்களை பேணக்கூடிய, (பொதுவான ஒழுக்கம் என்பது வேறு எல்லோருக்கும் அந்த சட்டம் உண்டு) இஸ்லாம் சொல்லக்கூடிய ஒழுக்கங்களை பேணக்கூடிய அந்த ஒரு ஆசிரியையிடத்திலே, அல்லாஹ்வை மறுமையை ஆகிறத்தை நினைவூட்டக்கூடிய, தொழுகையை நிலை நிறுத்தக்கூடிய, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று சொல்லி தனது மாணவ மாணவிகளை வரவேற்க கூடிய, வழியனுப்பக் கூடிய அந்த ஆசிரியைகளிடத்திலே படித்திருந்தால் அவர்களுக்கு அவர்கள் தானே முன் உதாரணமாக, வழிகாட்டியாக திகழ்வார்கள்.
யார் இடத்தில் கல்வி படிக்கிறார்களோ அவர்களுடைய கொள்கையும், கோட்பாடும், அவர்களுடைய பண்பாடுகளும் அவர்களிடத்திலே கல்வி படிக்கக்கூடிய மாணவ மாணவிகளிடத்திலே கண்டிப்பாக பிரதிபலிக்கும்.
எல்லோரும் ஒத்துக்கொண்ட ஒப்புக்கொண்ட உண்மை அது. பெற்றோரை விட பிள்ளைகளின் உள்ளத்திலே தாக்கத்தை ஏற்படுத்துபவர் யார்? நீங்க சொன்னா கேட்க மாட்டாங்க. நான் சொன்னா கேட்க மாட்டாங்க. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், ஆசிரியை சொன்னா கண்டிப்பா கேட்பார்கள்.
எத்தனையோ முஸ்லிம்களுடைய பள்ளிக்கூடங்கள், முஸ்லிம்களுடைய கல்லூரிகள், முஸ்லிம்களின் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கே இஸ்லாமியர்கள் கல்வி கற்பதற்கு, கல்வி படித்துக் கொடுப்பதற்கு, சமூகத்தை உருவாக்குவதற்கு, வருங்கால தலைமுறையை உருவாக்குவதற்கு முன்மாதிரி இல்லை. பிற சமுதாய மக்களிடத்தில் இருந்து வாடகைக்கு எடுக்க வேண்டி இருக்கிறது. அவர்களில் எப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு சொல்லித் தர தேவையில்லை.
என்ன இருந்தாலும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! அல்லாஹுவை பயப்படக்கூடிய மறுமையை நம்பக்கூடிய ஒரு ஆசிரியருக்கும் அல்லாஹ்வுடைய பயம் இல்லாத மறுமை நம்பாத ஒரு ஆசிரியருக்கும் இடையிலே வித்தியாசம் இருக்கும்.
அல்லாஹ்வின் அடியார்களே! இரண்டாவது பிரச்சனை என்ன? ஒரு கூட்டம் இப்படி. இன்னொரு கூட்டம், எங்கே பணம் கிடைக்கிறதோ, எங்கே காசு கிடைக்கிறதோ, இஸ்லாமிய ஒழுக்கங்கள் சமூக அமைப்பு அனைத்தையும் அப்படியே குழி தோண்டி புதைத்து விட்டு அப்படிப்பட்ட வேலைக்கு அனுப்புவார்கள்.
நம்முடைய முஸ்லிம் சகோதரிகள் எத்தனை பேர் ஐ டி லே இருக்கிறார்கள். ஐ டி லே இருப்பது தப்பல்ல. அங்கே சென்று அவர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலைகளை பாருங்கள்! அவர்கள் பயணிக்க கூடிய பயணத்தை பாருங்கள்! அவர்கள் அங்கே கழிக்கக்கூடிய நேரத்தையும், கலாச்சாரத்தையும் பாருங்கள்!
கடைசியிலே எப்பேற்பட்ட ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்! தியாக மனப்பான்மை கொண்ட சமுதாய கல்வியின் மேல், ஒழுக்கத்தின் மேல், சமுதாய கட்டமைப்பின் மீது அக்கறை கொண்ட சமூகம் உருவாக வேண்டும்.
நம்முடைய பெண்களுக்கு அந்தப் பங்களிப்பு அந்தப் பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை அவர்கள் நிறைவேற்றுவதற்கு நாம் தயாராக்கவில்லை என்றால், அவர்களை உருவாக்கவில்லை என்றால், நம்மிடம் தொழுகை இருந்தும் நோன்பு இருந்தும் நம்முடைய ஜக்காத் இருந்தும் இந்த சமுதாயத்தை நாம் முன்னேற்ற முடியாது. சிறப்பிக்க முடியாது. தோல்வி கண்டே தீருவோம். இதனுடைய குற்றம் நம்மை சாரும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலா சூரத்துல் தவ்பா உடைய 9-71 வது வசனத்தில் கூறுகிறான் பாருங்கள்.
பிரச்சனை என்ன? குர்ஆனை திறப்பதில்லை. குர்ஆனை படிப்பதில்லை. அந்த குர்ஆனுக்கு விளக்கமாக சொல்லப்பட்ட சஹாபாக்களின் வரலாறுகள் இந்த குர்ஆன் இறக்கப்பட்ட காலத்திலே வாழ்ந்த சமுதாயம் எப்படி இருந்தது? என்று ஏதாவது நமக்கு தெரியுமா?
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் அந்த சஹாபிய பெண்மணிகள் அவர்களின் சமுதாயத்தை அப்படியே அல்லாஹ் கொண்டு வந்து கண்ணுக்கு முன்னால் ஒரு சுருக்கமான வசனத்திலே நமக்கு நினைவூட்டி செல்கிறான்:
وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ اُولٰۤٮِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
நம்பிக்கை கொண்ட ஆண்கள், இன்னும், நம்பிக்கை கொண்ட பெண்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவார்கள். அவர்கள், நன்மையை ஏவுகிறார்கள்; இன்னும், தீமையை விட்டு தடுக்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள்; இன்னும், ஸகாத்தை கொடுக்கிறார்கள்; இன்னும், அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். இவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். (அல்குர்ஆன் 9:71)
ஈமான் கொண்ட ஆண்கள், ஈமான் கொண்ட பெண்கள்.
ஒரு சமுதாயத்தில் ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால், அந்த சமுதாயத்தில் ஈமான் இஸ்லாம் மார்க்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், லாயிலாஹ இல்லல்லாஹ் ஓங்க வேண்டும் என்றால், அந்த சமுதாயத்தால் அல்லாஹ்வுடைய தீன் உயர்த்தப்பட வேண்டும் என்றால் அங்கே ஆண்கள் மட்டும் நல்லவர்களாக இருந்தால் போதாது. ஈமான் கொண்ட ஆண்களும் வேண்டும். ஈமான் கொண்ட பெண்களும் அவசியம் வேண்டும்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு பக்கம் அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு இருந்தார்கள் என்றால் இன்னொரு பக்கம் கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் இருந்தார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகிலே கல்வியின் கடலாகிய அலி இருந்தார்கள் என்றால் இன்னொரு பக்கம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இருந்தார்கள்.
ஆலோசனை கொடுப்பதற்கு உமர் இருந்தார்கள் என்றால் இன்னொரு பக்கம் ஆலோசனை கொடுப்பதற்கு உம்மு ஸலமாவும் இருந்தார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும், அமைதியிலும், அவர்களுடைய சொல்லிலும், செயலிலும், பயணத்திலும், சமாதானத்திலும், அவர்களுடைய குடும்ப காரியங்களிலும், அவர்களுடைய சமூக காரியங்களிலும் ஆண்கள் கொடுத்த பங்களிப்புக்கு அப்படியே சமமாக நெருக்கமாக பெண்களும் பங்களிப்பு செய்தார்கள்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
وبُيُوتَهُنَّ خيرٌ لهنَّ
பெண்களே உங்களுக்கு சிறந்தது உங்களது வீட்டில் தொழுது கொள்வது.
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண்: 567, ஸஹீஹுல் ஜாமிஃ, எண்: 7458.
நம்ம இந்த ஹதீஸை கேட்டு புரிஞ்சது எப்படி? பெண்கள் கோ எஜுகேஷனுக்கு போகலாம். அது மட்டுமா? தர்காக்கள் உரூஸ்க்குப் போகலாம். எல்லா கழிசடையான இடங்களுக்கும் போகலாம். மஸ்ஜிதுக்கு மட்டும் வந்திடக் கூடாது, தீட்டுப்பட்ட மாதிரி.
நீங்க பார்த்து இருக்கலாம்; பல இடங்களில் பெண்கள் பயணம் செய்வார்கள். சில நேரங்களில் பர்ஜேஸ்க்கு வருவார்கள். நம் இடத்திற்கும் புக் வாங்குவதற்கு சில நேரங்களில் வருவார்கள். தொழுதுக்கலாமான்னு பயந்து பயந்து கேப்பாங்க.
எத்தனை முஸ்லிம் சகோதரிகள் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் பொழுது தொழுகையை கழா செய்தே ஆக வேண்டும். காரணம், முஸ்லிம்களுடைய மஸ்ஜிதுகளிலே ஆண்களுக்கு இடம் இருக்கிறது. பெண்கள், வீட்ல சேர்த்து கழா செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டு ஆண்களை அனுப்பி விட்டு பெண்கள் வெளியே நிற்பார்கள். காரணம், தொழுவதற்கு உள்ளே விடமாட்டாங்க. இஸ்லாமை ஏற்காத அந்நிய தீய சக்திகளும் இதை விமர்சிக்கும் அளவுக்கு சீர்திருத்த சிந்தனை இல்லாதவர்களாக சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் மார்க்கமறியா மடையர்களாக மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களே! சஹாபிய பெண்மணிகள் என்ன செய்தார்கள்? அதை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரிந்தார்கள்.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
لا تَمْنَعُوا نِسَاءَكُمُ المساجِدَ
அல்லாஹ்வின் அடியார்களான பெண்களை அல்லாஹ்வின் மஸ்ஜிதில் இருந்து தடுக்காதீர்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண்: 567, ஸஹீஹுல் ஜாமிஃ, எண்: 7458.
எப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மஸ்ஜிதில் ஐந்து நேரத் தொழுகைகளில் ஆண்கள் கலந்து கொண்டார்களோ அதற்கு சமமாக சுபுஹு தொழுகையும் சேர்த்து பெண்களும் கலந்து கொண்டார்கள்.
சுபுஹு தொழுகைக்கு பெண்கள் வருவார்கள். உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள்:
خرجَ نساءُ الأنصارِ كأنَّ علَى رؤوسِهِنَّ الغِربانَ منَ الأَكْسِيَةِ
அந்தப் பெண்கள் சுபுஹு தொழுகைக்கு வந்து அவர்கள் கருப்பு போர்வையை போர்த்திக்கொண்டு வெளியேறுவது ஏதோ காக்கா போவது மாதிரி இருக்குமாம்..
அறிவிப்பாளர்: உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : அபூ தாவூத், எண்: 4101.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொன்னார்கள்:
عليكن بحافَاتِ الطريقَ
பெண்களே! நீங்கள் பள்ளியில் இருந்து வெளியே செல்லும் பொழுது நீங்கள் பாதைக்கு நடுவிலே செல்லாமல். ஓரமாக செல்லுங்கள்.
சஹாபிய பெண்மணிகள் எப்படி பின்பற்றினார்கள் தெரியுமா? அவர்கள் மேலே அணிந்திருக்கக் கூடிய போர்வை அங்கிருக்கக்கூடிய கூடிய வீடுகளின் சுவர்களிலே தேய்கின்ற அளவுக்கு அந்தப் பாதைகளின் ஓரத்தோடு ஒட்டிக்கொண்டு சென்றார்கள்.
அறிவிப்பாளர்: மாலிக் இப்னு ரபீஆ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண்: 5272.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பெண்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் தொழுகை முடித்து அவர்கள் வெளியே செல்கிற வரை ஆண்கள் காத்திருங்கள் பிறகு செல்லுங்கள் என்று ஆண்களுக்கு வழிகாட்டினார்கள்.
இதுதான் சமுதாயம். இரண்டு தரப்பும் சரியாக வேண்டும். சமமாக வேண்டும். இந்த மார்க்கத்திற்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான்:
وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ اُولٰۤٮِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
(அல்குர்ஆன் 9:71)
வசனத்தின் கருத்து : ஈமான் கொண்ட ஆண்கள் ஈமான் கொண்ட பெண்கள்.
யாரையெல்லாம் அல்லாஹ் வர்ணிக்கிறான்? குர்ஆன் இறக்கப்பட்ட காலத்திலிருந்த அந்த சஹாபிய சமுதாயத்தை அல்லாஹ் சொல்கிறான், அதை தொடர்ந்து தான் இந்த வசனம் நமக்கும்.
அல்லாஹ் சொல்கிறான்: மூமினான ஆண்கள் பெண்கள் இவர்கள் அவர்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு பொறுப்பாளர்.
ولي -வலி என்று சொன்னால் அரபி மொழியிலே உற்ற நெருக்கமான நண்பர்; பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்; பாதுகாப்பவர்; தனக்கு தன்னுடைய தேவைகளுக்கு தன்னுடைய வழிகாட்டுதல்களுக்கு அதிகாரம் உடையவர்.
இன்று, நாம் சமுதாயத்தினுடைய கட்டமைப்பை எப்படி பாழாக்கி வைத்திருக்கிறோம் தெரியுமா? எவ்வளவு நாசப்படுத்தி வைத்திருக்கிறோம் தெரியுமா? ஒரு தந்தை, தன்னுடைய சகோதரரின் பிள்ளைக்கு உபதேசம் செய்ய முடியாது.
உன் பிள்ளையை போய் பாரு; என் பிள்ளையை கண்டிப்பதற்கு உனக்கு அதிகாரம் இல்லை. நீ யார் எனக்கு சொல்றதுக்கு. யார் சொல்றா? இந்த வாண்டு சொல்லுது. எங்க அத்தா சொல்லுவாரு, நீங்க யாரு சச்சா எங்களுக்கு சொல்றதுக்கு. நீங்க போய் உங்க பிள்ளைகளுக்கு சொல்லுங்க.
ஒரு சகோதரனால் தன்னுடைய சகோதரரின் பிள்ளைகளை கோபமாக கண்டிக்க முடியவில்லை. அடிப்பது வேறு. அந்த காலத்தில் எல்லாம் மாமாமார்கள் சச்சாமார்கள பார்த்தால் அரண்டு ஓடுவோம். அத்தா தூக்கிப்போட்டு மிதிக்கிறதை விட அவர்தான் மிதிப்பாரு. அவருடைய வளர்ப்பில் வளர்ந்தவர்கள் பலர்.
இன்று, எப்படி மாறிவிட்டது? எல்லாம் தனித்தனி. என் பிள்ளையை நீ குறை சொல்லக்கூடாது. அத்தாமார்களுக்கு கோபம் வந்துடும். நீ யாரு என் பிள்ளையை குறை சொல்றதுக்கு. உன் பிள்ளையை அங்கே பார்த்தேன் என்றால் பார்த்தால் உனக்கு என்ன? உன் பிள்ளையை போய் பாரு.
அல்லாஹ்வின் அடியார்களே! மார்க்கம் என்ன சொல்லுகிறது தெரியுமா?
فإنما عَمُّ الرجلِ صِنْوُ أبيهِ
சாச்சா, தந்தையின் சகோதரர் என்பவர் தந்தையில் இருந்து பிளக்கப்பட்டவர். அவருக்கு அவ்வளவு உரிமை இருக்கிறது.
அறிவிப்பாளர்: அப்துல் முத்தலிப் இப்னு ரபீஆ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண்: 3758.
நீ இல்லை என்றால் உன்னுடைய பெண் பிள்ளைக்கு அவன் தான் வலி- பொறுப்பாளி. இப்படிப்பட்ட உரிமையை கொடுத்தது மார்க்கம்.
இப்போ உறவுகளுக்கே இந்த உரிமை இல்லை என்றால் சமுதாயம் தன்னுடைய சமுதாயத்தில் ஒருவர் மற்றவருக்கு எப்படி இந்த உரிமையை பார்க்கும்!
தாவா பணியில, சமூக பணியில் இருக்கிறவங்க நிறைய பேர் சொல்லுவாங்க; எங்கேயாவது முஸ்லிமான பெண்கள் தவறான முறையில் திருமணம் இல்லாமல் ஒரு அன்னிய ஆணோடு பார்த்துட்டு, நிறுத்தி வைத்து, அந்த பிள்ளை இடத்துல போன் நம்பரை வாங்கி அவங்க அம்மாவுக்கும் அத்தாவுக்கும் போன் பண்ணா, நீங்க யாருங்க அத கேக்குறதுக்கு? நீங்க போங்க எங்களுக்கு தெரியும் எங்க பிள்ளையை பத்தி என்று.
ஒரு பாவத்திலிருந்து தடுப்பதற்கு அங்கே ஒரு வழி தேடப்பட்டால் உபதேசம் நாடப்பட்டால் தந்தை என்ன சொல்கிறார் என் பிள்ளையை எனக்கு கண்டிப்பதற்கு தெரியும் நீங்க போங்கன்னு சொல்லிவிடுவார்கள்.
இவர்கள் முஸ்லிமுடைய சமுதாயமா? முஸ்லிம் சமுதாயம் என்றால் என் மீது உங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். உங்கள் மீது எனக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் ஒவ்வொருவரும் வலியாக இருக்கிறார்.
எதற்காக அதிகாரம்? நன்மையை ஏவ வேண்டும். தீமையைத்தான் தடுக்க வேண்டும். அல்லாஹு தஆலா சஹாபிய சமுதாயத்தில் வாழ்ந்த ஆண்களும் பெண்களும் இப்படித்தான் இருந்தார்கள். நன்மையை ஏவி தீமையை தடுப்பது, மார்க்க பிரச்சாரம் செய்வது, மார்க்கத்தை பரப்புவது, இது என்னமோ ஆண்களுக்கான கடமை என்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆண்கள் எப்படி தாவா செய்தார்களோ அவ்வாறே பெண்களும் தாவா செய்தார்கள். ஆண்கள் எப்படி மார்க்க கல்வியை கற்றார்களோ பெண்களும் மார்க்க கல்வியை கற்றார்கள். ஆண்கள் எப்படி மார்க்க கல்வியை போதித்தார்களோ பெண்களும் மார்க்க கல்வியை போதித்தார்கள்.
ஆண்கள் எப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு போருக்கு சென்றார்களோ, ஹஜ்ஜுக்கு சென்றார்களோ பெண்களும் உடன் சென்றார்கள். என்ன வேலைகளை அவர்களால் செய்ய முடியுமோ அந்த வேலைகளை அவர்கள் செய்தார்கள்.
وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ اُولٰۤٮِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
(அல்குர்ஆன் 9:71)
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தினார்கள். ஜகாத்தை கொடுத்தார்கள்.
அடுத்து, அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் அவர்கள் சமூகமாக சேர்ந்து கட்டுப்பட்டார்கள். கீழ்ப்படிந்தார்கள்.
தங்களுடைய ஆண்கள் மஸ்ஜிதில் இருந்து வந்தால் அவர்கள் தொழுகைக்கு செல்ல முடியாத நிலையிலே இருந்தால், (பொதுவாக சமுதாய பெண்கள், வெளியே இருந்து வீட்டுக்கு ஆண்கள் வந்தால் அவர்களுடைய பையை பார்ப்பார்கள் கையை பார்ப்பார்கள் என்ன வாங்கி வந்தீர்கள்? என்ன செய்து வந்தீர்கள் என்பதாக) ஸஹாபிய பெண்மணிகள் அதை பார்த்ததில்லை. அவர்கள் என்ன கேட்பார்கள்; அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததை எங்களுக்கு கற்றுத் தாருங்கள்.
வீட்டில் இருந்து வெளியே சென்றால் என்ன சொல்வார்கள் தெரியுமா? எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! ஹராமான உணவை வீட்டுக்கு கொண்டு வந்து விடாதீர்கள்!
அல்லாஹு அக்பர்! இன்று பல உள்ள சகோதரிகளுக்கு தன்னுடைய கணவன், தன்னுடைய தந்தை என்ன வியாபாரம் செய்கிறார் என்றே தெரியாது. ஏதோ காசு கொடுக்கிறாரா? கை நிரம்ப அள்ளிக் கொண்டு வருகிறாரா? அவ்வளவுதான்.
இந்த காசை எங்கிருந்து கொண்டு வராரு? எத்தனை பேரை ஏமாற்றி இருக்கிறார்? எத்தனை பேருக்கு வாக்குக்கு மோசடி செஞ்சி இருக்கிறார்? எத்தனை விஷயங்களில் ஹராமான தொழிலில் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்? அதைப்பற்றி எல்லாம் பெண்களுக்கு தெரியாது.
அப்படிப்பட்ட ஒரு கடமை இருக்கிறதா என்பதே தெரியவில்லை கணவனுடைய வியாபாரத்தை (மானிட்டரில்) கண்காணிப்பது வீட்டில் உள்ள தலைவியின் கடமை பொறுப்பு. அது தன்னுடைய கணவர் ஹலாலாக சம்பாதிக்கிறானா? அவன் செய்கிற தொழிலில் ஹலால் ஹராம் அவனுக்கு தெரிகிறதா என்பதை அவனுடைய மனைவி தெரிந்திருக்க வேண்டும். அவனுடைய பிள்ளைகள் தெரிந்திருக்க வேண்டும். ஈமானிய உணர்வை கொடுக்க வேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான்: அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் அவர்கள் கீழ்ப்படிந்து கட்டுப்பட்டு அல்லாஹ்வுடைய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். இத்தகையவர்கள் மீதுதான் இப்படிப்பட்ட சமுதாயத்தின் மீதுதான் அல்லாஹ்வுடைய ரஹ்மத்து இறங்கும்.
இன்று நாம் ரஹ்மத்துக்காக துஆ செய்கிறோம். கஃபாவிற்கு சென்று துஆ செய்கிறோம். அல்லாஹ் சொல்கிறான்: உங்களது சமுதாயத்திற்கு ரஹ்மத் வேண்டுமா? இதோ சஹாபாக்கள் உடைய சமுதாயம் முன் மாதிரி.
நீங்கள் நன்மையை ஏவ வேண்டுமே. தீமையை தடுக்க வேண்டுமே. தொழுகையை நிலை நிறுத்த வேண்டுமே. ஜகாத்தை சரியாக கொடுக்க வேண்டுமே. அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமே. அதிலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்களிப்பு இருக்க வேண்டுமே.
இவையெல்லாம் நான் சிந்திக்கவில்லை என்றால் எப்படி நாம் ஒரு ஆக்கபூர்வமான ஒரு வீரமிக்க வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள கூடிய இஸ்லாமை கட்டிக் காக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்?!
கண்ணியத்திற்குரிய ஸஹாபிய பெண்மணிகள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழமையை பெற்றிருந்தார்கள். நபியை பார்ப்பது, நபியிடத்திலே இஸ்லாமை ஏற்றது, நபி இடத்திலே கல்வி படித்தது, அந்த அடிப்படையிலே ஆண் சஹாபாக்களுக்கு என்ன சிறப்போ அதே சிறப்பு ஒவ்வொரு பெண் சஹாபிக்கும் இருக்கிறது.
அதுபோன்று, கண்ணியத்திற்குரிய அந்த சஹாபிய பெண்களுக்கு சமமாக இனி உலகத்தில் எந்த பெண்களும் வர முடியாது என்று அவர்களை அல்லாஹு தஆலா சிறப்பிக்கின்றான்.
அதற்கு காரணம், அவர்கள் அல்லாஹ்வுடைய தீனுக்கு கொடுத்த முக்கியத்துவம். அவர்கள் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் கொடுத்த முக்கியத்துவம். அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய ரசூலையும் அவர்கள் ஏற்றுக் கொண்டவிதம்.
ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது மனைவிமார்களிடத்திலே சொன்னார்கள்: வேண்டுமென்றால் நான் உங்களை தலாக் விட்டு விடுகிறேன். நீங்கள் வசதியானவரை திருமணம் முடித்து வசதியாக வாழலாம். இல்லையென்றால் அல்லாஹ்வையும் ரசூலையும் தேர்ந்தெடுத்து வறுமையின் வாழ்க்கையிலே வாழத் தயாராகிக் கொள்ளுங்கள்.
அதற்கு அத்தனை மனைவிமார்களும் உடனே சொன்னார்கள்: மறுமையை நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.
குர்ஆனுடைய நேரடி வசனம் சூரத்துல் அஹ்சாபிலே அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் நபியே நீங்கள் சொல்லுங்கள் உங்களது மனைவிமார்களை அழைத்து
يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلًا
وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِيْمًا
நபியே! உமது மனைவிகளுக்கு சொல்வீராக! “உலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்புகிறவர்களாக இருந்தால், வாருங்கள்! உங்களுக்கு (என்னால் முடிந்தளவு) செல்வத்தை தருகிறேன். இன்னும், அழகிய முறையில் உங்களை (என் திருமண பந்தத்திலிருந்து) நீக்கி விடுகின்றேன்.”
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (சொர்க்கமாகிய) மறுமை வீட்டையும் விரும்பக் கூடியவர்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் நல்லவர்களாகிய உங்களுக்கு மகத்தான கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான் . (அல்குர்ஆன் 33:28,29)
அல்லாஹு தஆலா அந்த சஹாபிய பெண்களுக்கு அப்படிப்பட்ட ஈமானை கொடுத்திருந்தான். அது மட்டுமா? உலகத்திலேயே சிறந்த மிகப்பெரிய ஆளுமை கொண்ட பெண்மணிகளாக நான்கு பெண்மணிகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உதாரணம் காட்டிய போது, அதிலே இரண்டு பெண்கள் இந்த சமுதாயத்தின் பெண்கள். கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும், ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும்.
நூல் : முஸ்னத் அஹ்மத்.
அதுபோன்று கண்ணியத்திற்குரியவர்களே! சஹாபாக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே ஈமானுக்காக இஸ்லாமுக்காக இக்லாஸ்க்காக இறுதி வரை இந்த மார்க்கத்தை நிலைத்திருப்போம் என்று சத்திய வாக்கு பிரமாணம் செய்து கொடுத்தது போன்ற சஹாபிய பெண்மணிகளும் செய்து கொடுத்தார்கள்.
இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா? சஹாபிய பெண்களுக்கு அவர்கள் பைஅத்து செய்து கொடுக்க வந்தால் நபியே நீங்கள் அந்த பைஅத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடுங்கள் என்று அல்லாஹு தஆலா சிறப்பித்தான்.
சஹாபிய பெண்களின் உள்ளங்களை அல்லாஹுத்தஆலா பார்த்தான். அதில் உள்ள தூய்மையை பார்த்தான். இக்லாசை பார்த்தான். தேடலை பார்த்தான். அர்ப்பணிப்பை பார்த்தான்.
அல்லாஹு தஆலா தனது நபிக்கு சொல்கிறான்:
அந்தப் பெண்களுக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கேளுங்கள்.
يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ يُبَايِعْنَكَ عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ بِاللّٰهِ شَيْــٴًــا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا يَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا يَاْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَهٗ بَيْنَ اَيْدِيْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا يَعْصِيْنَكَ فِىْ مَعْرُوْفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
நபியே! நம்பிக்கைக் கொண்ட (முஃமினான) பெண்கள், “அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள்; திருட மாட்டார்கள்: விபச்சாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டார்கள்; தங்கள் கைகள், இன்னும் தங்கள் கால்களுக்கு முன்னர் தாங்கள் இட்டுக்கட்டுகின்ற ஒரு பொய்யை கொண்டுவர மாட்டார்கள்; (-அதாவது தங்கள் கணவனுக்கு பிறக்காத குழந்தையை தங்கள் கணவனின் குழந்தையாகக் கூறமாட்டார்கள்;) நல்ல காரியங்களில் உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று உம்மிடம் அவர்கள் சத்திய வாக்குப் பிரமாணம் செய்பவர்களாக உம்மிடம் வந்தால் நீங்கள் அவர்களிடம் சத்திய வாக்குப் பிரமாணம் வாங்குவீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 60:12)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அது மட்டுமா? எப்படி சஹாபாக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலிருந்து கல்வியை படித்துக் கொண்டு மார்க்கத்தை படித்துக் கொண்டு அந்த ஹதீஸ்களை மக்களுக்கு அறிவித்தார்களோ ஒவ்வொரு சஹாபிய பெண்மணியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே மஸ்ஜிதிலே பயணத்திலே என்ன ஹதீஸ்களை கேட்டார்களோ அதை மனனம் செய்தார்கள். அடுத்த தலைமுறைக்கு அவர்கள் அந்த ஹதீஸ்களை அறிவித்துக் கொடுத்தார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அதுபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய மனைவிமார்கள் யாராக இருக்கட்டும், அவர்கள் எல்லோரிடமிருந்து நீங்கள் ஹதீஸ் நூல்களிலே அறிவிப்பை பார்க்கலாம்.
அதுபோக சஹாபிய பெண்மணிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே அதிக காலங்கள் அந்த கல்வி சபையிலே கழித்த ஒவ்வொரு சஹாபிய பெண்மணியும் மார்க்க கல்வியை கற்று அடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு அந்த கல்வியை கற்பிக்கக் கூடியவராக இருந்தார்கள்.
சஹாபாக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் தொழுதது போன்று அந்த சஹாபிய பெண்மணிகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் தொழுதவர்கள்தாம். எடுத்துக்காட்டாக நூற்றுக்கணக்கான சம்பவங்களை நிகழ்வுகளை சொல்லலாம்.
அது மட்டுமா? எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய தோழர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே கேள்வி கேட்டார்களோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பயணத்திலே இருக்கும் பொழுது பல சஹாபிய பெண்களும் தங்களுடைய சந்தேகங்களை நேரடியாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமிடத்திலே கேள்வி கேட்டார்கள். அந்த அளவுக்கு இந்த மார்க்கத்தினுடைய வஹியோடு இந்த மார்க்கத்தில் அந்த சட்டங்களோடு அவர்கள் அப்படியே ஒன்றி போய் இருந்தார்கள்.
பொதுவாக நம்முடைய நிலைமை என்ன? பயான் செய்வாங்க. பயானை கேட்பாங்க. அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு. இதை எப்படி நான் செயல்படுத்துவது? இதில் எனக்கு சாதக பாதகங்கள் என்ன? அதை எப்படி சரி செய்வது? என்பதை பற்றி எல்லாம் நாம் உணர மாட்டோம்.
காரணம் என்னவென்றால் பயான் செய்ரவர் அவர் வேலை பயான் செய்றாரு. பயானை கேட்கிற நம்ம கேட்டோமா, அதோட போயிட்டே இருக்க வேண்டியது தான்.
சகோதரர்களே! இது நம்முடைய பெரும்பாலானவர்களுடைய நிலைப்பாடாக இருக்கிறது. சொல்லப்படக்கூடிய விஷயம் சிந்திக்க வேண்டியவை. பின்பற்றப்பட வேண்டியவை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எடுத்து நடக்கப்பட வேண்டியவை என்பதை நாம் நம்மிலே எத்தனை பேர் சிந்திக்கிறோம்.
வெளில போய் பயான் நல்லா இருந்துச்சு. பயான் சூப்பரா இருந்துச்சு. என்னங்க சொன்னாரு? என்னங்க மாற்றம் வந்துச்சு? என்னங்க செய்யப் போறீங்க? நீங்க வந்து கேளுங்க. அடுத்த வாரம் சூப்பரா இருக்கும். அதோட முடிஞ்சிடுச்சு.
அல்லாஹ்வின் அடியார்களே! கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் அப்படி கடந்து செல்லவில்லை. ஒவ்வொரு சொல்லையும் செயலையும் அதை உருவாக்கினார்கள். உடனே செயல்படுத்தினார்கள். அதில் எங்களால் எதை செய்ய முடியும்? முடியாது என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே கேள்வி கேட்டார்கள். பல உதாரணங்களை சொல்லலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை சொன்னார்கள்:
பெண்களே! உங்களை எல்லாம் நரகத்தில் நான் அதிகமாக பார்த்தேன் என்று. சஹாபிய பெண்மணிகள் ஆடிப் போய்விட்டார்கள். யா ரசூலுல்லாஹ்! எங்களுக்கு என்ன நேர்ந்தது? என்ன பாவம் செய்தோம்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: கணவனுக்கு மாறு செய்கின்றீர்கள்; பிள்ளைகளை சபிக்கின்றீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே! என்ன செய்வது? அதிகமாக தர்மம் செய்யுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பான்.
அறிவிப்பாளர்: அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண்: 1462.
பிராப்ளம் கேட்டு உடனே அதற்குரிய சொல்யூஷன். என்னை எப்படி திருத்திக் கொள்வது? என்ன தப்பு அந்த தப்பை எப்படி திருத்துவது? அதற்குரிய பாவ பரிகாரம் என்ன? இப்படிப்பட்ட உணர்வோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு வாழ்ந்தார்கள்.
சமூக அக்கறை உள்ளவர்களாக, இந்த மார்க்கத்தில் பற்றுள்ளவர்களாக, இந்த சமூகத்திற்காக நான் எதை செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ளவர்களாக இருந்தார்கள்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அப்படிப்பட்ட பெண்களாக நம்முடைய சமுதாய பெண்களை, நம்முடைய மனைவிகளை, நம்முடைய பெண் பிள்ளைகளை, நம்முடைய சகோதரிகளை உருவாக்க வேண்டும். அந்த சிந்தனையை கொடுக்க வேண்டும்.
இப்படி நாம் சேர்ந்து சமுதாயத்தை உருவாக்கும்போது தான் ஒரு ஆக்கப்பூர்வமான, ஒழுக்கமான, இஸ்லாமிய சமுதாயம் உருவாகும்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நேர்வழியிலே நம்மை உறுதிப்படுத்துவானாக! நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய குழப்பங்கள் பிரிவினைகள் கோபத்தாபங்கள் காழ்ப்புணர்ச்சிகள் அனைத்தையும் அல்லாஹு தஆலா போக்கி, ஒற்றுமை மிக்க வலிமை மிக்க சமுதாயமாக அல்லாஹு தஆலா நம்மை உருவாக்குவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/