HOME      Khutba      ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்! அமர்வு-1| Tamil Bayan - 963   
 

ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்! அமர்வு-1| Tamil Bayan - 963

           

ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்! அமர்வு-1| Tamil Bayan - 963


ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்! அமர்வு -1 
 
வரிசை : 963
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 18-04-2024 | 20-10-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள்  முன்னால் அல்லாஹ் ரப்புல் ஆலமீனை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சலவாத்தும் சலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும்; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாகவும்; 
 
அல்லாஹ்விடத்தில் உங்களுக்காகவும் எனக்காகவும் நம்முடைய உம்மத்திற்காகவும் குறிப்பாக நம்முடைய சந்ததிகளுக்காகவும் அல்லாஹ்விடத்தில் நேர்வழியை வேண்டியவனாக; இஸ்லாமிய மார்க்கத்தின் பற்றை உறுதியை வேண்டியவனாக நம்முடைய பெற்றோர் முஃமினான முன்னோர் அனைவருக்கும் அல்லாஹ்விடத்திலே பாவ மன்னிப்பை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நம்மை மன்னித்தருள்வானாக! அல்லாஹு தஆலா நம்மை பொருந்தி கொள்வானாக! 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்குர்ஆன் கிடைக்கப்பெற்ற சமுதாயம் நாம். முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற மகத்தான தூதர் அனுப்பப்பட்ட சமுதாயம் நாம். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுதாயமாக நாம் இருக்கிறோம். 
 
அல்லாஹு தஆலா வேறு எந்த உம்மத்தின் மீதும் பொழியாத மகத்தான அருட்கொடையை குர்ஆனுடைய உம்மத்தாகிய ரஹ்மத்துன் லில் ஆலமீனுடைய உம்மத்தாகிய நம்மீது அல்லாஹு தஆலா அருள் பொழிந்திருக்கின்றான். 
 
என்ன கேள்வி என்றால் நம்முடைய இந்த உலக வாழ்க்கையில் அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆனை சிந்திப்பதற்கு நம்முடைய மார்க்கத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய வணக்க வழிபாடுகளை சிந்தித்து உணர்ந்து செய்வதற்கு நாம் எந்த அளவு தயாராகி இருக்கிறோம்? நாம் ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம்; மரணம் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது; இன்று நான் மரணித்துவிட்டால் என்னுடைய மார்க்கத்தில் எதை நான் உணர்ந்திருக்கிறேன்? புரிந்திருக்கிறேன் என்பதை கொண்டுதான் அங்கே மறுமையினுடைய மகத்தான வெற்றி இருக்கிறது. 
 
இரண்டு செயல்களுக்கு மத்தியிலே வித்தியாசம் இருக்கிறது. ஒன்று என்ன? ஒரு செயலை வெறுமனே செய்வது. இன்னொன்று அந்த செயலை அறிந்து புரிந்து கற்று உணர்ந்து அதன் மீது பற்றோடு செய்வது; பாசத்தோடு செய்வது; அல்லாஹ்வுக்காக என்று உள்ளத்தின் ஏக்கத்தோடு செய்வது; மறுமையின் சொர்க்கத்திற்காக என்று அந்த பேராசையோடு செய்வது.
 
இந்த இரண்டாவதுதான் அல்லாஹ்விற்கு பிடித்தமானது. இதை கொண்டுதான் வெற்றி இருக்கிறது. இன்று நாம் இந்த முதல் கட்டத்தில் தான் இருக்கிறோம்; தொழுகிறோம்; நோன்பு வைத்தோம்;  நாம் செய்யக்கூடிய இபாதத்துகளை எல்லாம் சிந்திப்பதற்கு நாம் ஓதக்கூடிய குர்ஆனை சிந்திப்பதற்கு ஒவ்வொரு அமலை சிந்திப்பதற்கு நம்மிடத்திலே நேரமில்லை. 
 
நாம் எப்படி விளங்கி இருக்கிறோம் என்று சொல்லப்போனால் அது ஒரு மிகைப்படுத்தப்பட்டதாக கூட இருக்காது. அல்லாஹ்வின் அடியார்களே! தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்! நம்முடைய தீன் வேறு; பிற மக்களுடைய தீன் வேறு; நம்முடைய ரப்பு வேறு; அவர்கள் வணங்கக்கூடிய தெய்வங்கள் வேறு;
 
قُلْ يَاأَيُّهَا الْكَافِرُونَ (1) لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (2) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (3) وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ (4) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (5) لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ (6)
 
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்) (அல்குர்ஆன் 109:1-6)
 
நம்முடைய தீன் அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது. அவர்களுடைய தீன் மனித சிந்தனைகளில் மனித கற்பனைகளில் ஷைத்தானின் ஊசலாட்டங்களால் போடப்பட்டது; உருவாக்கப்பட்டது; நாம் ரப்புல் ஆலமீனை வணங்குகிறோம். அவர்கள் சைத்தானை வணங்குகிறார்கள். 
 
إِنْ يَدْعُونَ مِنْ دُونِهِ إِلَّا إِنَاثًا وَإِنْ يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا
 
அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடையவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை. (அல்குர்ஆன் 4:117)
 
சகோதரர்களே! நாம் குர்ஆனை ஓதுகிறோம்! அல்லாஹ்வின் வேதம், அல்லாஹ் பேசிய பேச்சை, கலாமை ஓதுகிறோம்!. நமக்கு சட்டம் இது. நமக்கு வழிகாட்டி இது. நம்முடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய நோய்களுக்கான நிவாரணம் இது. நமக்கு புஷ்ரா (நற்செய்தி)! ரஹ்மா அல்லாஹ்வின் மகத்தான அருள் இது ! அவர்களுடைய வேதம் அப்படிப்பட்டது அல்ல! 
 
 فَوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ 
 
فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ
 
எவர்கள் தங்கள் கைகளைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக்கிரயத்தை அடைவதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்! (அல்குர்ஆன் 2:79)
 
அவர்கள் தாங்களாக உருவாக்கி கொண்டதை வேதம் என்று கற்பனை செய்கிறார்கள்; தங்களது கரத்தால் எழுதி கொண்டு இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்று அவர்கள் கதை கட்டுகிறார்கள். அல்லாஹ் முந்திய நபிமார்களுக்கு இறக்கிய வேதங்களையும் அவர்கள் புரட்டிவிட்டார்கள்.
 
مِنَ الَّذِينَ هَادُوا يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ وَيَقُولُونَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَرَاعِنَا لَيًّا بِأَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِي الدِّينِ ۚ وَلَوْ أَنَّهُمْ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَقْوَمَ وَلَٰكِنْ لَعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا
 
யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்'' என்று கூறி (உமது) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி (‘‘நபியே! நாம் சொல்வதை) நீர் கேட்பீராக. (இனி வேறு எதையும்) நீர் கேட்காதீர்'' என்றும் கூறி ‘ராயினா' என்று நாவைக் கோணி உளறுகின்றனர். (‘ராயினா' என்னும் பதத்திற்கு அரபி மொழியில் ‘எங்களைக் கவனிப்பீராக' என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ ‘மூடனே!' என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உம்மை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உமக்கு) நாம் கட்டுப்பட்டோம். (நாம் சொல்வதை) நீர் கேட்பீராக (என்று கூறி ‘ராயினா' என்னும் பதத்திற்குப் பதிலாக ‘உன்ளுர்னா') ‘எங்களை அன்பாக நோக்குவீராக' என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால், அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:46)
 
அன்பான சகோதரர்களே! நம்முடைய மார்க்கம் அவ்வளவு மகத்தானது! இந்த தீனை சிந்திக்க வேண்டும்; இதை புரிய வேண்டும்! ஒவ்வொரு அமலையும் சிந்திக்க வேண்டும். 
 
இன்று வெள்ளிக்கிழமை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வெள்ளிக்கிழமையை எப்படி மதித்தார்கள்? எத்தகைய முக்கியத்துவத்தை கொடுத்தார்கள்?  இதற்காக விசேஷமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனி கவனம் செலுத்தினார்கள் என்பதை உணர்ந்திருக்கிறோமா? 
 
நாம் வெள்ளிக்கிழமை என்று சொன்னால் ஒன்று வீட்டில் பிரியாணி ஆக்க வேண்டும். இல்லையென்றால் எங்கே பிரியாணி சிறப்பாக விற்கப்படுகிறதோ அங்கே சென்று பிரியாணி வாங்கி சாப்பிட வேண்டும். அதான் நமக்கு வெள்ளிக்கிழமை! 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெள்ளிக்கிழமையின் அந்த இரவு வந்துவிட்டாலே அதிலிருந்து அந்த வெள்ளிக்கிழமைக்கான தயாரிப்பிலே ஆயத்தத்திலே ஆர்வத்திலே ஆசையிலே ஈடுபாட்டிலே இறங்கி விடுவார்கள். 
 
இன்று குறிப்பாக நாம் எடுத்துக்கொண்டது வெள்ளிக்கிழமையினுடைய ஃபஜ்ரு தொழுகை. வெள்ளிக்கிழமையின் ஃபஜ்ரு தொழுகை, மிக சிறப்பான ஒரு தொழுகை பொதுவாக பஜ்ரு தொழுகை மிக சிறப்பானது அதிலும் வெள்ளிக்கிழமையினுடைய 'ஃபஜ்ரு  ஜமாஅத்' மிக மிக முக்கியமானது. 
 
அந்தோ! பரிதாபம். கவலை, வேதனை என்னவென்றால் நம்மிலும் பலர் இருக்கிறார்கள் ஃபஜ்ரு தொழுகாமல் ஜுமுஆவுக்கு வந்தவர்களும். அல்லது ஃபஜ்ருடைய ஜமாஅத்தை தவறவிட்டுவிட்டு அல்லது ஃபஜ்ரு தொழுகையை கழா செய்துவிட்டு ஜுமுஆவுக்கு வந்தவர்களும் இருப்பார்கள்; இருக்கிறார்கள்; இல்லையா? 
 
சகோதரர்களே!  அப்படி இல்லை என்றால் ஃபஜ்ரு தொழுகையிலே பள்ளிவாசலில் கூட்டத்தை நீங்கள் பார்க்கலாம். 
 
இந்த ஜும்மாவுடைய நாளில் விசேஷமாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பஜ்ரு தொழுகைக்கு என்று வாழ்நாள் எல்லாம் இரண்டு சூராக்களை விசேஷமாக வைத்திருந்தார்கள். இதிலிருந்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் ஜும்மாவுடைய ஃபஜ்ருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 891.
 
ஏன் அப்படி செய்தார்கள்? இன்று பல ஆலிம்களே அந்த சுன்னத்துகளை பேணுவதில்லை. அல்லது அவர்கள் பேணுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆலிம்சா இந்த ரெண்டு சூரவெல்லாம் பெருசா  முழுசா ஓதி தொழுகற அளவுக்குல்லாம் நாங்க என்ன வெட்டியா இருக்கிறோம் என்று நினைச்சுக்கிட்டீங்களா நீங்க? எல்லாவற்றிலும் ஷார்ட்கட். 
 
ஸஜ்தாவை ஆரம்பித்தாலும் அந்த சஜ்தாவுடைய வசனம் முடிந்தவுடன் முதல் ரக்அத் முடிஞ்சுடும். அடுத்தது அந்த ஸஜ்தாவில் மீதம் இருக்கக்கூடியதை ஓதி இரண்டாவது ரக்காத் அல்லது இரண்டாவது ரக்அத்திலே சூரா அத்தஹர் சூரா அல் இன்சானுடைய இறுதி பகுதியினுடைய ஒரு 10 வசனங்கள்... முடிந்தது...! 
 
ஏன், வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் ஓத வேண்டிய சூரத்துல் அஃலா சூரத்துல் ஙாஷியாவை கூட முழுமையாக ஓதாமல் இரண்டிலிருந்தும் பாதி பாதி எடுத்து  ஓதியும் தொழக்கூடிய அளவுக்கு ஒரு மட்டமான நிலையில் தான் மனநிலை நமக்கு இருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
எப்படி எல்லாம் விளையாடுகிறோம்? யாராவது துன்யாவிலே உங்களுக்கு 100 ரூபாய் சம்பளம் என்றால் 50 ரூபாய் கொடுத்தால் ஒத்துக்கொள்வீர்களா? ஒத்துக்கொள்வோமா? துன்யா விஷயத்தில் நாம் எந்த வகையிலும் ஆல்ட்ரேஷன் -வருவாயில் குறைவு செய்வதை ஒத்துக்கொள்வதே இல்லை. எல்லாம் முழுசாக வேண்டும்! 
 
ஆனால் தீன் என்று வந்துவிட்டால் மட்டும் எவ்வளவு அதில் வெட்ட முடியுமோ அதில் குறைக்க முடியுமோ கத்தரிக்க முடியுமோ சுருக்க முடியுமோ சுருக்கிவிட்டு கடைசியாக சொல்வது என்ன? மார்க்கம் லேசுங்க! ஏங்க சிரமப்படுத்திக்கிறீங்க? 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி கொடுத்த ஒவ்வொன்றுக்கும் தப்பான பொருளை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சூரத்துஸ் ஸஜ்தாவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையில் முதல் ரக்அத்திலே முழுமையாக ஓதுவார்கள். இந்த சூரா, மிக மகத்தான சூரா! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உம்மத்திற்கான செய்தியை அல்லாஹ்விடமிருந்து பெற்ற மிக மகத்தான அறிவுரைகளை, மிக மகத்தான நற்செய்திகளை, ஒழுக்கங்களை அதுபோன்று நிராகரிப்பாளர்களுக்கு மறதியாளர்களுக்கு புறக்கணிப்பவர்களுக்கு உலகமே வாழ்க்கை என்று மறுமையை மறந்தவர்களுக்கு என்ற அனைவருக்குமான எச்சரிக்கையை அல்லாஹு தஆலா இந்த சூராவில் சொல்கிறான். 
 
அல்லாஹுத்தஆலா எப்படி ஆரம்பிக்கிறான் பாருங்கள்!
 
الم
 
تَنْزِيلُ الْكِتَابِ لَا رَيْبَ فِيهِ مِنْ رَبِّ الْعَالَمِينَ
 
அலிஃப் லாம் மீம். (நபியே! உம் மீது) அருளப்பட்ட இவ்வேதம் உலகத்தாரின் இறைவனிடமிருந்தே வந்ததென்பதில் ஒரு சந்தேகமுமில்லை. (அல்குர்ஆன் 32:1,2)
 
இன்று நமக்கு இறங்குவதை போன்று அல்லாஹ் சொல்கிறான். இந்த வேதம் சாதாரணமான வேதமல்ல! சந்தேகம் இல்லாத வேதம்! அகிலங்களின் இறைவன் மனிதர்கள் ஜின்களின் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட வேதம். 
 
என்ன நினைத்து கொண்டார்கள்? இதை முஹம்மது சுயமாக பேசிவிட்டார் இட்டு கட்டிவிட்டார் என்று அவர்கள் சொல்கிறார்களா? முட்டாள்கள். மடையர்கள். வீணர்கள். நபியே! உங்களது இறைவன் புறத்திலிருந்து இறக்கப்பட்ட சத்தியம் இது. இந்த குர்ஆன் தான் சத்தியம். குர்ஆனை தவிர எதுவெல்லாம் இறை மார்க்கம் என்றோ இறை கொள்கை என்றோ ஆன்மீகம் என்றோ மறுமையின் வெற்றிக்கான காரணமாக இருக்கும் என்றோ சொல்லப்படுகிறதோ எல்லாமே பொய்.  வழிகேடு.
 
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَا أَتَاهُمْ مِنْ نَذِيرٍ مِنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ
 
(நம் நபி) “இதை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்'' என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உமது இறைவனால் உமக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உமக்கு முன்னர் இதுவரை ஒரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக! (அல்குர்ஆன் 32:3)
 
இது உங்களுக்கு இறக்கப்பட்ட சத்திய வேதம்! நபியே! இது ஏன் இறக்கப்பட்டது உங்களுக்கு?! இன்று முஸ்லிம்களிடத்தில் குர்ஆன் எதற்காக ஓதப்படுகிறது? கத்தம் பாத்தியா ஓதுவதற்காக...! முஸ்லிம்களிடத்தில குர்ஆன் எதற்காக? பாத்திஹா ஓதுவதற்காக. யாசீன் சூரா வியாழக்கிழமை மாலை வந்தவுடன் கடைக்கடையாக சென்று அல்லது இறந்தவர் வீட்டில் ஓதுவார்கள். எப்படி கேவலமான நிலையில் இந்த உம்மஹ் இருக்கிறது பாருங்க! 
 
அல்லாஹ் சொல்லி காட்டுகிறான் இந்த குர்ஆன் சடங்குக்காக இறக்கப்பட்டதல்ல. மக்களின் நேர்வழிக்காக, நீங்கள் அவர்களை அச்சம் கொண்டு எச்சரிக்கை செய்வதற்காக, நபியே! இந்த குர்ஆன் உங்களுக்கு இறக்கப்பட்டது மனிதர்களை மாற்றுவதற்காக; அவர்களின் கொள்கைகளை மாற்றுவதற்காக; அவர்களின் சம்பிரதாயங்களை மாற்றுவதற்காக; அவர்களின் பொருளாதார சீர்திருத்தத்திற்காக; அந்த பொருளாதாரத்தை சரி செய்வதற்காக; அவர்களது குடும்ப வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக; மனிதர்களின் உள்ளங்களை புனிதமாக்குவதற்காக; நேர்மையில் சத்தியத்தில் உண்மையில் ஒழுக்கத்தில் அவர்களை கொண்டுவந்து நிறுத்துவதற்காக இறக்கப்பட்ட வேதம். 
 
சடங்காக ஓதிவிட்டு குர்ஆனை முத்தம் கொடுத்து விட்டு ஐந்து ரூபாய் பத்து ரூபாய் 500 ரூபாய் 50  ரூபாய்யை பொறுப்பாக வாங்கி பாக்கெட்டில் வைத்துவிட்டு செல்வதற்காக அல்ல! இதன் மூலமாக நீ மாறவேண்டும்; உன் சமுதாயத்தை மாற்ற வேண்டும். 
 
உங்களது சமூகத்துக்கு இதற்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வரவில்லை. அத்தகைய சமுதாயத்தை எச்சரிக்க வேண்டும். ஜாஹில்களாக இருந்தார்கள் அரபுகள். எதை வணங்குவது? என்று அவர்களுக்கு தெரியாது. சுத்த மட்டமானவர்களாக இருந்தார்கள். அல்லாஹ் இந்த குர்ஆனை கொண்டு அவர்களை மேம்படுத்தினான்; உயர்த்தினான். அவர்களை அப்பேற்பட்ட ஒரு மனித புனிதர்களாக அல்லாஹ் மாற்றினான். 
 
அல்லாஹ் சொல்கிறான்:- 
 
اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ مَا لَكُمْ مِنْ دُونِهِ مِنْ وَلِيٍّ وَلَا شَفِيعٍ ۚ 
 
أَفَلَا تَتَذَكَّرُونَ
 
அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களைப்) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா? (அல்குர்ஆன் 32:4)
 
அல்லாஹ்வை பற்றி பேசிக்கொண்டே அல்லாஹ் எப்படிப்பட்டவன்? வானங்களை படைத்தான்; பூமியை படைத்தான்; அவற்றுக்கு மத்தியில் அத்தனை பிரபஞ்ச படைப்புகளையும் ஆறே நாட்களில் அழகாக படைத்துவிட்டான். 
 
சுப்ஹானல்லாஹ்! எப்பேற்பட்ட ஆற்றல் உள்ளவன். அல்லாஹுத்தலா ஆறு நாட்களில் படைத்து ஏழாவது நாளிலே அர்ஷுக்கு மேல் அவன் தன்னுடைய தகுதிக்கு தக்கவாறு உயர்ந்துவிட்டான். நபியே அந்த ரப்பை பற்றி சொல்லுங்கள்! அவனை தவிர உங்களை பாதுகாக்க கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? அல்லாஹ்வை தவிர உங்களை காப்பாற்றக்கூடிய இரட்சிக்கக்கூடிய உங்களுக்கு அருள் புரியக்கூடிய உங்கள் மீது கருணை காட்டக்கூடிய யாரும் இல்லை. அவனிடம் சிபாரிசு  செய்வோர் யாருமில்லை. 
 
அல்லாஹ்விடத்திலே அவனுடைய பொருட்டால் அவனுடைய பெயரின் பொருட்டால் அவனுக்காக செய்த அமல்களின் பொருட்டால் கேளுங்கள். அல்லாஹு தஆலா  சிந்திக்க சொல்கிறான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? நீங்கள் நல்ல உபதேசம் பெறமாட்டீர்களா? 
 
சகோதரர்களே! இந்த சுப்ஹுடைய தொழுகையில் இந்த ஆயத்து ஓதும் போதெல்லாம் அல்லாஹ்வுடைய வல்லமை நமக்கு புரிய வேண்டும். நம்முடைய ரப்பின் மீது ஈமான் யகீன் அதிகமாக வேண்டும். அல்லாஹு தஆலா எப்பேர்ப்பட்ட வல்லமையை சொல்லி காட்டுகிறான் பாருங்கள்! 
 
يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ
 
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகிறான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும். அந்த (ஒரு) நாள் நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். (அல்குர்ஆன் 32:5)
 
வசனத்தின் கருத்து : நம்முடைய காரியங்களை அல்லாஹ் நிர்வகிக்கிறான். வானத்திலிருந்து பூமி வரை உள்ள அத்தனை காரியங்களையும் அவன் நிர்வகிக்கிறான்.
 
வானத்திலிருந்து   இறங்க வேண்டிய ஒரு கட்டளை ஒரு பொருள் வானத்திலிருந்து பூமிக்கு  இறங்க வேண்டும் என்றால்  500 ஆண்டுகள் தேவை. அல்லாஹு தஆலா ஒரே நாளில் அதை இறக்கி விடுகின்றான். பிறகு பூமியிலிருந்து ஒரு அமல் வானத்திற்கு ஏற வேண்டும் என்றால் அதற்கு 500 ஆண்டுகள் தேவை. அல்லாஹு தலா ஒரே நாளில் அதை ஏற்றிவிடுகின்றான். சுப்ஹானல்லாஹ்! 
 
அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வுடைய ஒரு நாள் என்பது நீங்கள் எண்ணக்கூடிய  ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானது!  
 
ذَٰلِكَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيزُ الرَّحِيمُ
 
அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும் வெளிப்படையானதையும் (உள்ளது உள்ளபடி) நன்கறிந்தவன்; (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான். (அல்குர்ஆன்32:6)
 
நீங்கள் வணங்கக்கூடிய அல்லாஹ், நீங்கள் பிரார்த்திக்க கூடிய அல்லாஹ், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய அல்லாஹ்  பிற மக்கள் வணங்கக்கூடிய சிலைகளை போன்று அல்ல. பிற மக்கள் வணங்கக்கூடிய  இறந்த மனிதர்களை போன்று அல்ல. அவன் யார்? மறைவானதை அறிந்தவன்; ரகசியங்களை அறிந்தவன்; வெளிப்படையானதை அறிந்தவன்; யாவரையும் மிகத்தவன்; அல்லாஹ் அருளாளன்! அல்லாஹ் மீதுள்ள நம்பிக்கை  இதை ஓதும்போது நாம் கேட்கும் போதெல்லாம் நம்முடை யகீன் அல்லாஹ்வின் மீது உண்டான அன்பு அல்லாஹ்வின் மீது உண்டான பயம் அல்லாஹ்வுடைய சக்தியின் மீது நமக்கு யகீன் கூடிக்கொண்டே இருக்கவேண்டும்.
 
அல்லாஹு நம்மை நோக்கி  நம்மை சிந்திக்க சொல்கிறான்:
 
الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ ۖ وَبَدَأَ خَلْقَ الْإِنْسَانِ مِنْ طِينٍ ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلَالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ ۖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَا تَشْكُرُونَ
 
அவனே எல்லா பொருள்களையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான். பின்னர், ஓர் அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து அவனுடைய சந்ததியைப் படைக்கிறான். பின்னர், அவன் (படைப்பாகிய) அதைச் செப்பனிட்டுத் தனது ‘ரூஹை' அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே! (அல்குர்ஆன்32:7-9) 
 
வசனத்தின் கருத்து : அல்லாஹு  படைத்த எல்லா படைப்பையும் மிக நேர்த்தியாக படைத்திருக்கிறான். அல்லாஹு  மனிதனுடைய முதல் படைப்பை மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினான். பிறகு அவருடைய சந்ததிகளை  அற்பமான மென்மையான தண்ணீரிலிருந்து  உருவாக்கினான்.
 
இந்த மனிதனை எவ்வளவு சிறப்பாக செம்மையாக படைத்து அதில் தன்னுடைய  ரூஹை ஊதினான் என்று கூறிவிட்டு பிறகு நம்மை நோக்கி அல்லாஹுத்தஆலா கேட்கிறான்; உங்களுக்கு நான் கேட்கும் ஆற்றலை கொடுத்தேனே? பார்க்கும் திறனை கொடுத்தேனே? நீங்கள் புரிவதற்கு சிந்திப்பதற்கு உண்டான அறிவின் ஆற்றலை உங்களுக்கு நெஞ்சங்களை உள்ளங்களை படைத்து கொடுத்தேனே? நீங்கள் மிக குறைவாக நன்றி செலுத்துகிறீர்களே!  (அல்குர்ஆன் 32:9)
 
சகோதரர்களே! நாம் வெட்கி தலை குனிய வேண்டும் நம்முடைய ரப்பு  எஜமானன் சொல்கிறான் நீ மிக குறைவாக  நன்றி செலுத்துகிறாயே  நன்றி கெட்டவனாக இருக்கிறாயே என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
நாம்  வெட்கப்பட வேண்டும். நம்மில் யாரும் நான் அல்லாஹ்விற்கு முழுமையாக நன்றி செலுத்திவிட்டேன் என்று சொல்ல முடியாது. காலையில் எழுந்ததற்கு  காலையிலே நாம் குடித்த ஒரு கிளாஸ் தண்ணீருக்கு சாப்பிட்ட ஒரு கவள உணவுக்கு? நன்றி செலுத்தி முடிக்க முடியுமா? 
 
أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُمْ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً ۗ وَمِنَ النَّاسِ مَنْ يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ
 
(மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் என்பதையும், அவன் தன் அருட் கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (இவ்வாறெல்லாமிருந்தும்) மனிதர்களில் பலர் ஒரு கல்வியும், (தர்க்க ரீதியான) வழிகாட்டலும், தெளிவான வேத நூலின் ஆதாரமுமின்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றனர். (அல்குர்ஆன் 31:20)
 
அல்லாஹ்வின் அடியார்களே! வெளிப்படையாக மறைவாக உள்ரங்கமாக வெளிரங்கமாக அல்லாஹுத்தஆலா அவனுடைய நிஃமத்துகளை நம் மீது பூரணமாக்கி வைத்திருக்கிறான்.  ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ்வுடைய அருளை அவர் எண்ணி பார்ப்பாரேயானால் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அல்லாஹ் அவர் மீது அருள் புரிந்து வைத்திருக்கிறான். இப்படிப்பட்ட நிலையில் இந்த மனிதன் பேசுகிறான்.
 
இந்த இடத்திலே காபிர்களுடைய நிலையை அல்லாஹ் சொல்லி காட்டுகின்றான். நாம் சிந்தித்து பார்க்க  வேண்டும். அல்லாஹு தலா இத்தகைய குப்ஃருடைய நிலையிலிருந்து அல்லாஹ்வை நிராகரிக்கும் நிலையிலிருந்து அல்லாஹ் என்னை பாதுகாத்து என்னை அவனுடைய மஸ்ஜிதிலே தொழுகையிலே அவனை ஈமான் கொண்ட நிலையிலே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறானே! சுப்ஹானல்லாஹ்! 
 
அல்லாஹ் கேட்கிறான்:
 
وَقَالُوا أَإِذَا ضَلَلْنَا فِي الْأَرْضِ أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ ۚ بَلْ هُمْ بِلِقَاءِ رَبِّهِمْ كَافِرُونَ
 
‘‘(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். இதுமட்டுமல்ல, அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர். (அல்குர்ஆன் 32:10)
 
கருத்து : மனிதன் இவ்வளவு தெளிவாக அவனுக்கு அறிவுரை வழங்கப்பட்டதற்கு பிறகு அவனுக்கு உபதேசம் சொல்லப்பட்டதற்கு பிறகு கூட அவன் பெருமை பேசுகிறான். திமிராக பேசுகிறான். என்னே!  எல்லாம் இறந்து பூமியிலே நாங்கள் மண்ணோடு மண்ணாக மறைந்துவிட்டால் நாங்கள் புதிதாக மீண்டும் படைக்கப்பட்டு எழுப்பப்படுவோமா? என்று கூறி தனது இறைவனின் சந்திப்பை மனிதன் மறுக்கிறான்.
 
 قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ
 
(நபியே!) கூறுவீராக: “உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் ‘மலக்குல் மவ்த்து' (என்ற மரண வானவர்)தான் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.'' (அல்குர்ஆன் 32:11)
 
நபியே! நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட மலக்குல் மௌத் உங்களுடைய உயிரை வாங்குவார்! பிறகு நீங்கள் உங்களது இறைவனிடம் கொண்டு வரப்படுவீர்கள்! அல்லாஹ்வின் அடியார்களே! மனிதனின் பலவீனத்தை அவன் புரிவதற்கு அல்லாஹுத்தஆலா அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தி இருக்கிறான். 
 
எந்த ஒரு பெரிய அரசனாக கொம்பனாக இருந்தாலும் எப்பேர்பட்ட அதிகாரியாக இருந்தாலும் எப்பேர்பட்ட படைகளின் தளபதியாக இருந்தாலும் அல்லாஹ் விதித்த மரணத்திற்கு  முன்னால் அவன்  சரணடைந்தே ஆகவேண்டும். கைது வாரண்ட் எப்படி வருகிறது? எந்த நேரத்தில் வருகிறது? யாரும் அதை தவிர்க்க முடியாது! (அல்குர்ஆன் 32:11)
 
நினைத்துப்பாருங்கள்! சூரத்துல் ஜுமுஆவிலே இதை ஓதுகிறோம். அதுபோன்று இந்த சூராவிலே நினைவூட்டப்படுகிறது. இந்த ஜுமுஆவுடைய நாளிலே நமக்கு (ஆஹிரத்) மறுமை நினைவூட்டப்படுகிறது. இந்த சூராவாக இருக்கட்டும்  அடுத்து ஓதக்கூடிய தஹருடைய சூரா பிறகு ஜும்மாவிலே ஓதக்கூடிய 2 சூராக்கள் இந்த எல்லா சூராக்களையும் நீங்கள் எடுத்து பாருங்கள்! 
 
மனிதருடைய மரணத்திற்கு முன்பு இருந்த நிலை பிறகு அவருடைய உலக வாழ்க்கை பிறகு அவருடைய மறுமை ஆஹிரத் அல்லாஹ்வை பயந்து கொள் என்ற செய்தி அவனுக்கு கொடுக்கப்படும். 
 
இந்த உலக வாழ்க்கை ஒன்றுமில்லை. எந்த நேரத்தில் மரணிப்போமோ அதோடு நம்முடைய இந்த உலக வாழ்க்கையின் ஆடம்பரங்கள் எல்லாம் முடிந்துவிடும். நாம் அனுபவித்ததை எல்லாம் மறந்துவிடுவோம். எப்படி நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டோமோ அப்படியே அல்லாஹ்வுக்கு முன்னால்  கொண்டு போகப்படுவோம். 
 
அல்லாஹ் சொல்லி காட்டுகிறான்; மறுமையின் காட்சியை அப்படியே கொண்டுவந்து நிறுத்துகிறான் பாருங்கள்! 
 
وَلَوْ تَرَىٰ إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُو رُءُوسِهِمْ عِنْدَ رَبِّهِمْ رَبَّنَا أَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ
 
(நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக “எங்கள் இறைவனே! எங்கள் கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பிவை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்'' என்று கூறுவதை நீர் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்.)    (அல்குர்ஆன் 32:12) 
 
கருத்து : மறுமை அந்த காட்சியை நீங்கள் பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? காஃபிர்கள் பாவிகள் குற்றவாளிகள் தங்களது தலைகளை குனிந்தவர்களாக ரப்புக்கு முன்னால் நின்று கொண்டிருப்பார்கள். அப்போது சொல்வார்கள்: எங்கள் இறைவா! நான் நீ எச்சரித்ததை நாங்கள் கண்கூடாக பார்த்து கொண்டோம்; இந்த நரகத்தின் சத்தத்தை நாங்கள் கேட்டுக்கொண்டோம், எங்களை மீண்டும் உலகத்திற்கு அனுப்பு! நாங்கள் நல் அமல் செய்து வருகிறோம். நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டு வருகிறோம் என்று சொல்வார்கள். அல்லாஹு அக்பர் அது அவர்களுக்கு ஏற்கப்படாது. 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَلَوْ شِئْنَا لَآتَيْنَا كُلَّ نَفْسٍ هُدَاهَا وَلَٰكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّي لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
 
நாம் விரும்பியிருந்தால் (இவர்களில் உள்ள) ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் நேரான வழியில் செல்லக்கூடிய வசதியைக் கொடுத்திருப்போம். எனினும், ஜின் இன்னும் மனிதர்களில் (உள்ள பாவிகள்) பலரைக் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவோம் என்ற நம் தீர்ப்பு (முன்னரே) ஏற்பட்டு விட்டது. (அல்குர்ஆன் 32:13)
 
அல்லாஹ் சொல்கிறான்: வலுக்கட்டாயமாக  ஒருவருக்கு ஹிதாயத்தை நேர்வழியை திணிப்பதாக இருந்தால் அது நமக்கு ஒன்னும் பெரிய கஷ்டமானதல்ல! வலுக்கட்டாயமாக நாம் ஒவ்வொருவருக்கும் ஹிதாயத்தை நேர்வழியை கொடுத்திருப்போம். 
 
என்றாலும் அல்லாஹ்வுடைய இல்மின் படி அல்லாஹுத்தஆலா நரகத்தை மனிதர்களாலும் ஜின்களாலும் நிரப்புவான் என்ற வாக்கு இப்போது உறுதியாகிவிட்டது, உண்மையாகிவிட்டது; ஊர்ஜிதமாகிவிட்டது என்று கூறி யாரெல்லாம் இந்த உலகத்திலே நபிமார்களை கேலிக் கிண்டல் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அல்லாஹ்வின் மார்க்கத்தை அலட்சியம் செய்து கொண்டிருந்தார்களோ அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்து கொண்டிருந்தார்களோ அந்த பாவிகளை பார்த்து அல்லாஹ் சொல்வான்:
 
فَذُوقُوا بِمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا إِنَّا نَسِينَاكُمْ ۖ وَذُوقُوا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
 
ஆகவே, ‘‘ (நம்மைச்) சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்துவிட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (இந்நாளை நீங்கள் மறந்தவாறே) நிச்சயமாக நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' (என்றும் கூறப்படும்). (அல்குர்ஆன் 32:14)
 
இன்றைய நாளின் சந்திப்பை மறந்தீர்களே நீங்கள் இப்போது இந்த தண்டனையை சுவைத்து கொள்ளுங்கள். இன்றைய நாளின் சந்திப்பை நீங்கள் மறந்துவிட்டீர்கள் அல்லாஹ் சொல்வான் நாமும் உங்களை விட்டுவிடுவோம். உங்களது எந்த பேச்சும் கேட்கப்படாது. நீங்கள் இந்த உலகத்தில் என்னென்ன பாவங்கள் செய்து கொண்டிருந்தீர்களோ அதன் காரணமாக இப்போது நீங்கள் தண்டனையை சுவைத்து கொள்ளுங்கள் என்று அல்லாஹு தஆலா அந்த பாவிகளுக்கு எச்சரிக்கை செய்வான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன் ஷா அல்லாஹ் மீதமுண்டான பகுதியை அடுத்த ஜுமுஆவில் பார்ப்போம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்று கொடுத்த ஒவ்வொரு அமலையும் நாம் சிந்திக்க வேண்டும். 
 
அந்த அடிப்படையில் தான் குறிப்பாக ஒவ்வொரு வாரத்திலும் தொழக்கூடிய இந்த ஜுமுஆவிலே நமக்கு என்னென்ன அமல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன? அந்த அமல்களை கொண்டு என்னென்ன தத்துவங்கள் நாடப்பட்டிருக்கின்றன? என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டும்.  
 
இந்த சூராக்கள் ஏதோ எதார்த்தமாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதியது அல்ல! இதிலே சில செய்திகளை அல்லாஹ் நமக்கு சொல்ல விரும்புகிறான். அதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எடுத்து வைக்கின்றார்கள். அதற்காகத்தான் இப்படிப்பட்ட அமல்களை வழமையாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்கள். 
 
நாம் அந்த உணர்வோடு அந்த பசுமையான நினைவோடு அந்த தக்குவாவுடைய பயத்தோடு நாம் வாழ வேண்டும் என்பதற்காக அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா அல்லாஹ்வுடைய இபாதத்தை கற்று புரிந்து உணர்வோடு செய்யக்கூடிய நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/