HOME      Khutba      ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்! அமர்வு-2| Tamil Bayan - 963   
 

ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்! அமர்வு-2| Tamil Bayan - 963

           

ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்! அமர்வு-2| Tamil Bayan - 963


963 - ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்!! அமர்வு 2
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்!
 
வரிசை : 963
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 25-04-2025| 27-10-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிபுகழ்ந்து அல்லாஹ்வுடைய பாசத்திற்குரிய நேசத்திற்குரிய தூதர் முஹம்மது அவர்கள் மீது இன்னும் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீது அல்லாஹ்வுடைய நிரந்தரமான சலவாத்துகளும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாக, உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! காஜா மக்களுக்கு அல்லாஹு தஆலா உதவி செய்து அருள்வானாக! இஸ்லாமிய முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கக்கூடிய யஹூதிகளுக்கு எதிரிகளுக்கு அழிவையும் நஷ்டத்தையும் தோல்வியையும் அல்லாஹு தஆலா தருவானாக! ஆமீன். 
 
மதிப்பிற்குரிய சகோதரர்களே சகோதரிகளே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வெள்ளிக்கிழமைக்கு எத்தகைய முக்கியத்துவத்தை கொடுத்தார்கள்? இதற்காக எத்தகைய விசேஷமான அமல்களை செய்தார்கள்? என்பதை பற்றி சென்ற குத்பாவிலே நாம் பார்த்தோம்.
 
அதில் குறிப்பாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெள்ளிக்கிழமையின் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்காக இரண்டு சூராக்களை தேர்வு செய்திருந்தார்கள். அந்த சூராக்களை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (பயணத்தில் இருந்தாலே தவிர) உள்ளூரில் இருக்கும் போது வாழ்நாள் முழுதும் வெள்ளிக்கிழமை காலையில் ஃபஜ்ர் தொழுகையில் முதல் ரக்அத்தில் சூரா சஜ்தாவை முழுமையாகவும் இரண்டாவது ரக்அத்தில் சூரா அத்தஹ்ரை முழுமையாகவும் ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலும் வயதானவர்கள், நோயாளிகள், நம்மை விட கடினமான கூலி வேலை செய்யக்கூடிய வாழ்வாதாரத்திற்கு சிரமப்படக்கூடிய தோழர்கள் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இத்தகைய சாக்கு போக்குகளை கூறி தொழுகையை கத்தரிக்க கூடியவர்களாக, தொழுகையை அல்லாஹ்வுடைய வழிகாட்டலுக்கு மாற்றமாக அமைத்துக் கொள்பவர்களாக இருக்கவில்லை. அவர்களுடைய தோழர்களும் அப்படித்தான்.
 
நாம் படைக்கப்பட்டது இந்த இபாதத்திற்கு தான். நாம் இந்த உலகத்தில் இருப்பது இந்த இபாதத்திற்கு தான். நம்முடைய கப்ருடைய வாழ்க்கை நமக்கு சரியாக வேண்டுமா? இந்த இபாதத்தை கொண்டு தான். சரியாகுவது மட்டுமல்ல, அந்த கப்ருடைய வாழ்க்கை சொர்க்கத்தின்  இன்பமாக மாற வேண்டும் என்றால் மஹ்ஷருடைய மகத்தான பயங்கரமான அமளிகள் எந்த நாளுடைய திடுக்கத்தால் குழந்தைகளின் முடி நரைத்து விடுமோ, 
 
فَكَيْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ يَوْمًا يَّجْعَلُ الْوِلْدَانَ شِيْبَا اۨلسَّمَآءُ مُنْفَطِرٌ  بِهٖ‌ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا‏‏
 
நீங்கள் பயந்து கொள்ள வேண்டாமா? உங்களுக்கு நடுக்கம் வரவில்லையா? உங்களுக்கு அச்சம் வரவில்லையா? எந்த நாளில் குழந்தைகள் எல்லாம் வயோதிகர்களாக ஆகிவிடுவார்களோ, வானம் வெடித்து சிதறுமோ அந்த நாளுடைய பயம் உங்களுக்கு எப்போது வரும்? எப்படி வரும்? அந்த நாளிலே எப்படி இருப்பீர்கள் என்று அல்லாஹ் கேட்கிறான். (அல்குர்ஆன் : 73: 17,18)
 
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ‌ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيْمٌ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ‏‏
 
மக்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக மறுமை (நிகழும்போது பூமி)யின் அதிர்வு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். நீங்கள் அதை பார்க்கின்ற நாளில், பாலூட்டுகின்ற ஒவ்வொரு பெண்ணும் தான் பால் கொடுத்ததை (-அந்த குழந்தையை) மறந்து விடுவாள். இன்னும், கர்ப்பம் தரித்த ஒவ்வொரு பெண்ணும் தமது கர்ப்பத்தை (குறை மாதத்தில்) ஈன்று விடுவாள். இன்னும், மக்களை மயக்கமுற்றவர்களாக நீர் பார்ப்பீர். ஆனால், அவர்கள் (மதுவினால்) மயக்கமுற்றவர்கள் அல்லர். என்றாலும், அல்லாஹ்வுடைய தண்டனை மிகக் கடினமானதாகும். (அல்குர்ஆன் : 22:1,2)
 
வசனத்தின் கருத்து : மக்களே மறுமையின் திடுக்கத்தை பயந்து கொள்ளுங்கள்! அது மிக பயங்கரமான திடுக்கம். அந்த நாளில் பால் கொடுக்கக்கூடிய தாய் தனது குழந்தையை மறந்து விடுவாள். கர்ப்பத்தில் குழந்தையை சுமந்திருக்கும் பெண் தனது கர்ப்பத்தை ஈன்றெடுத்து விடுவாள். மக்கள் எல்லாம் மயக்கமுற்றவர்களாக இருப்பார்கள். நபியே நீங்கள் அதை பார்ப்பீர்கள். அல்லாஹ் சொல்கிறான்; போதையின் மயக்கம் அல்ல. அல்லாஹ்வின் கட்டளையின் பயம் அவர்களை அப்படி ஆக்கிவிடும். 
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இத்தகைய இபாதத்துகளை முக்கியத்துவத்தோடு அதை பேணுதலோடு செய்தார்கள். இன்று நம்முடைய ஒரு விசித்திரமான போக்கு என்ன தெரியுமா? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த அமல்களை தொடர்ச்சியாக செய்து வழிகாட்டினார்களோ அதற்கு மதிப்பு கொடுக்க மாட்டோம். ஆனால் நாமே எதை சடங்காக சம்பிரதாயமாக உருவாக்கிக் கொண்டோமோ அதைப் பற்றிப் பிடித்துக் கொள்வோம். அதில் எவ்விதமான சமரசத்தையும் செய்து கொள்ள தயார் இல்லை. அதில் எதையும் குறைக்க மாட்டோம். 
 
திருமணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பத்திரிக்கை அது ஒரு முசிபத். அந்த பத்திரிக்கையில் பெயர் போடவில்லை என்றால் அதில் ஒரு முசிபத். பத்திரிக்கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு முசிபத். இப்படி ஒரு உதாரணமல்ல, வாழ்க்கையில் பல உதாரணங்களை எடுத்துக் கொள்ளலாம். 
 
இந்த மௌலுது, மீளாது, ஹத்தம் ஃபாத்திஹா செய்பவர்களை பாருங்கள்! தொழுகை தவறும். கவலை இருக்காது. இன்னும் கட்டாய கடமையாக்கப்பட்ட வழிபாடுகளில் பிரச்சனைகள் ஏற்படும். அவற்றிற்கெல்லாம் சத்தம் வராது. ஆனால் அவர்களுடைய மௌலுது மீலாது சடங்குகளிலே கொஞ்சம் ஏதாவது முன்பின் ஆகிவிட்டால் அவ்வளவுதான் கியாமத்தையே உண்டாக்கி விடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!  
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹுத்தஆலா நம்மை இபாதத்துக்கு தான் படைத்தான். இந்த இபாதத்தை கொண்டு தான் நமக்கு மறுமை-ஆகிறத்து, அந்த மறுமையின் மஹ்ஷர் நாளிலே நமக்கு பாதுகாப்பு. 
 
நாளை சொர்க்கத்திற்கு செல்லும் பொழுது , நாம் சம்பாதித்த பணத்தை நாம் சம்பாதித்த பேர் புகழைக் கொண்டல்ல நீ செய்த அமலின் புண்ணியத்தால் அல்லாஹ் உனக்கு கூலி கொடுத்திருக்கிறான். அந்த சொர்க்கத்தை அனுபவிக்க உள்ளே செல் என்று மலக்குகள் வாழ்த்துவார்கள்? இப்படி இருக்கையில் இந்த இபாதத்துக்காக ஒருவன் சோம்பேறித்தனம் காட்டுவானேயானால் அல்லாஹ்வுடைய தூதர் வழிகாட்டிய இபாதத்தை முழுமையாக செய்வதிலே சாக்கு போக்குகளை கூறி அலட்சியம் செய்வானேயானால் அவன் எத்தகைய பெரிய நஷ்டவாளி என்று யோசித்துப் பாருங்கள்! 
 
எதற்கு அல்லாஹ் நம்மை படைத்தானோ எதைக் கொண்டு அல்லாஹு தஆலா நமக்கு சொர்க்கத்தை தர போகிறானோ மகத்தான அந்த மறுமையின் வெற்றி மிக்க வாழ்க்கை இருக்கிறதோ அந்த சொர்க்கத்திற்கு உரிய அமலை, அல்லாஹ் உடைய இபாதத்தை செய்வதிலே எத்தகைய கவனக்குறைவு! அலட்சியம்! சோம்பேறித்தனம்! எப்பேற்பட்ட சாக்கு போக்குகள்! அல்லாஹ் மன்னிப்பானாக! 
 
சகோதரர்களே! ஏன் இந்த சூரா சஜ்தாவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்நாள் முழுதும் ஓதினார்கள்? நீங்கள் எடுத்துப் பாருங்கள்! இந்த சூரா சஜ்தா ஒரு முஃமினுடைய ஈமானை அதிகப்படுத்தக் கூடியது. அவனுக்கு ஆகிறத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்த கடியது. அவன் ஏன் படைக்கப்பட்டான்? என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறது. 
 
முஃமின் எப்படி இருக்க வேண்டும்? காஃபிர் எப்படி இருப்பான்? என்பதை அல்லாஹு தஆலா அடையாளம் காட்டி வர்ணனை கூறி தெளிவு படுத்துகின்றான். நீ முடிவு செய்து கொள்! நீ முஃமி னா? நீ இப்படி இருக்க வேண்டும். நீ இந்த தன்மையில் இருந்தாலும் உனது பெயர் முஃமினாக வைத்துக் கொண்டாலும் உனது பெயரை நீ முஸ்லிம் என்று வைத்துக் கொண்டாலும் உனக்கு அந்த ஈமான் கிடைக்காது. உனக்கு அந்த இஸ்லாம் கிடைக்காது. 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் பாருங்கள்! 11 வது வசனம். முந்தைய அமர்விலே பத்து வசனங்களை பார்த்தோம். அல்லாஹுத்தஆலா மௌத்தை நினைவூட்டுகின்றான். நபியே எல்லா மக்களுக்கும் சொல்லுங்கள்; நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்கள்? இந்த உலக வாழ்க்கையை வாழ்ந்து நீங்கள் சாதித்து விட்டு மரணத்தை வென்று விட முடியுமா? 
 
قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ‏
 
உங்களுக்கு முடிவு செய்யப்பட்ட வானவர் வருவார். உங்களை உயிர் கைப்பற்றியே தீருவார். பிறகு உங்களது ரப்புக்கு முன்னால் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 32:11)
 
இந்த ஒரு வசனத்தை சிந்தியுங்கள்! அல்லாஹ்விற்கு முன்னால் நிறுத்தப்படுவோமே! 
 
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்; மொழிபெயர்ப்பாளர் இருக்க மாட்டார். அல்லாஹ் நேரடியாக பேசுவான். வலது பக்கம் திரும்பினாலும் அமல். இடது பக்கம் திரும்பினாலும் அமல். முன்னாள் சொர்க்கம். 
 
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7512.
 
என்ன செய்தாய் என்று அல்லாஹ் கேட்பான். வாழ்க்கையை எப்படி செலவழித்தாய்? வாலிபத்தை எப்படி செலவழித்தாய்? பொருளை எப்படி சம்பாதித்தாய்? எப்படி செலவழித்தாய்? மார்க்கத்தை தெரிந்து அதன் படி என்ன அமல் செய்தாய்? என்று அல்லாஹ் கேட்பான். தப்பிக்க முடியாது. 
 
அறிவிப்பாளர் : அபூ பர்ஸா அல் அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2417.
 
அல்லாஹ் சொல்கிறான்: உங்களது ரப்பிடத்திலே நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள் என்று கூறிவிட்டு. ஒரு பக்கம் முஃமின்களாகிய நமக்கு நம்பிக்கையை வலுவூட்டுகின்றான். காஃபிர்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். 
 
وَلَوْ تَرٰٓى اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْ رَبَّنَاۤ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًـا اِنَّا مُوْقِنُوْنَ‏
 
குற்றவாளிகள் தங்கள் இறைவனிடம் தங்கள் தலைகளை தாழ்த்தியவர்களாக, எங்கள் இறைவா! நாங்கள் (உனது தண்டனையை கண்கூடாகப்) பார்த்தோம்; இன்னும், (உனது தூதர்களை நீ உண்மைப்படுத்தியதையும்) நாங்கள் செவியுற்றோம். ஆகவே, எங்களை (உலகிற்கு) திரும்ப அனுப்பு! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம். (நீதான் வணக்கத்திற்குரியவன்; நீ கூறிய மறுமை, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்மை என்று இப்போது) நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று கூறுகிற சமயத்தை நீர் பார்த்தால் (அது திடுக்கம் மிகுந்த ஒரு காட்சியாக இருக்கும்). (அல்குர்ஆன் 32:12)
 
கருத்து : நபியே! இன்று இந்த காஃபிர்கள் முஷ்ரிக்குகள் யஹூதிகள் நசராணிகள் கொலைகார பாவிகள் செய்யக்கூடிய அழுச்சாட்டியத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் நாளை மறுமையிலே தப்பித்து விடுவார்கள் என்று நினைத்து விட வேண்டாம்! இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை நீங்கள் பார்ப்பீர்கள். இந்த குற்றவாளி அனைவரும் நாளை மறுமையிலே வருவார்கள். தங்களது தலைகளை தொங்க போட்டு, தாழ்த்தி இருப்பார்கள். தங்களது ரப்புக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருப்பார்கள். 
 
அப்போது அல்லாஹ்விடத்திலே கதறுவார்கள்; எங்கள் ரப்பே! நாங்கள் பார்த்துக் கொண்டோம். நபிமார்கள் சொன்னதை எல்லாம் உண்மை என்று இப்போது கண்டு கொண்டோம். அவர்கள் கூறிய எச்சரிக்கைகளை, இப்போது நீ செய்வதை நீ சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண்டோம். எங்களை உலகத்திற்கு திரும்ப அனுப்பு; நாங்கள் நல்ல அமல் செய்து வருவோம். 
 
அல்லாஹு அக்பர்! அது ஒருபோதும் நடக்காது. 
 
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்: 
 
وَ لَوْ شِئْنَا لَاٰتَيْنَا كُلَّ نَفْسٍ هُدٰٮهَا وَلٰـكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّىْ لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ‏
 
நாம் நாடியிருந்தால் எல்லா ஆன்மாவிற்கும் அதற்குரிய நேர்வழியை (அதற்கு வலுக்கட்டாயமாக) கொடுத்திருப்போம். எனினும், நிச்சயமாக ஜின்கள் இன்னும் மனிதர்கள் அனைவரிலிருந்தும் (நரகத்திற்குத் தகுதியானவர்களைக் கொண்டு) நரகத்தை நான் நிரப்புவேன் என்ற வாக்கு என்னிடமிருந்து உறுதியாகி விட்டது. (அல்குர்ஆன் : 32:13)
 
கருத்து : சொர்க்கம் முஃமினுடைய நிரந்தர இல்லமாக அமையும், நரகம் காஃபிர், முஷ்ரிக், யஹூதி, நசராணி, முனாஃபிக் ஆகியோரின் நிரந்தர தங்குமிடமாக அமையும். 
 
அல்லாஹ் சொல்கிறான்: நாம் நாடியிருந்தால் வலுக்கட்டாயமாக ஒவ்வொருவரையும் முஃமினாக ஆக்கி இருக்க முடியும். அல்லாஹ்வுக்கு அது சிரமமானது அல்ல. ஆனால் அல்லாஹுத்தஆலா அப்படி விரும்பவில்லை. உன்னுடைய விருப்பத்தால் உன்னுடைய ஆசையோடு நீ ஈமான் கொள்ள வேண்டும். நீ என்னை பயந்து நீ என்னை ஈமான் கொள்ள வேண்டும். 
 
என் புறத்திலிருந்து வார்த்தை முடிவாகிவிட்டது. மனிதர்களும் ஜின்ககளும் செய்கின்ற பாவத்தினால் நரகத்தை கண்டிப்பாக பாவம் செய்த ஜின்களாலும் பாவம் செய்த மனிதர்களாலும் நிரப்புவேன் என்று நான் முடிவு செய்து விட்டேன்.. 
 
பிறகு அல்லாஹுத்தஆலா மறுமையில்  மறுமையை பற்றி குஃப்பார்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் சொல்லிக் காட்டுகின்றான்: 
 
فَذُوْقُوْا بِمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌  اِنَّا نَسِيْنٰكُمْ‌ وَذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
 
ஆக, நீங்கள் உங்கள் இந்த நாளின் சந்திப்பை மறந்த காரணத்தால் (நரக தண்டனையை) சுவையுங்கள்! நிச்சயமாக நாம் உங்களை (நரக தண்டனையில்) விட்டுவிடுவோம். இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நிரந்தரமான தண்டனையை சுவையுங்கள்! (அல்குர்ஆன் 32:14)
 
கருத்து : இன்றைய நாளில் உங்கள் இறைவனை சந்திக்க வேண்டும் என்பதை மறந்தீர்கள் அல்லவா சுவைத்துக் கொள்ளுங்கள்! 
 
நரகத்தில் துன்பப்படக்கூடிய, வேதனைகளை அனுபவிக்க கூடிய நரகவாசிகளின் சீல் சலங்களை அல்லாஹுத்தஆலா குடிக்க கொடுப்பான். கேவலமான உணவுகள். துர்நாற்றத்தால் கேவலமானது. கடுமையாக சூடு ஏறியது. அதற்கு மேல் ஒரு சூடு கிடையாது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சூரா அல் காஷியாவிலே ஓதுவார்கள்.
 
تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍ‏
 
(அல்குர்ஆன் 88:5)
 
ஆனியா என்றால் என்ன? ஒன்று கடினமான குளிர்ச்சி. அதற்கு மேல் குளுமைப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட குளிர்ச்சியான பானம். எப்படி குடிக்க முடியும்? 
 
இன்னொரு பானம் இருக்கும். கடுமையாக சூடேற்றப்பட்டது. அந்த பானம் ஒரு தூரத்தில் இருக்கும் போதே அதிலிருந்து வரக்கூடிய ஜுவாலை முகங்களை கருக்கி விடும்.
 
وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜுமுஆவிலே சூரத்துல் கஹ்ஃபிலே ஓதிய வசனம். அவர்களது முகங்களை எல்லாம் சுட்டெரித்து விடும். பொசுக்கி விடும். (அல்குர்ஆன் 18:29)
 
அல்லாஹ் சொல்வான்: இப்போது நாம் உங்களை விட்டுவிடுவோம். அங்கே மறுமையில் கதறுவதால் கத்துவதால் ரப்பி ரப்பி என்று கூப்பாடு போடுவதால் ஒன்றும் நடக்கப்போவது கிடையாது. அல்லாஹ் சொல்லிவிடுவான்; நீங்கள் கேவலம் அடையுங்கள்! நீங்கள் கேவலப்படுங்கள்! என்னிடத்தில் பேசவே பேசாதீர்கள் என்று. 
 
நாளை மறுமையில் காஃபிர்களுக்குரிய  வேதனையான தண்டனைகளில் அதாபுகளிலே ஒரு பெரிய வேதனை-அதாபு என்ன தெரியுமா? சூரத்துல் முதஃப்பிபீனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
 
كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَٮِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ‌‏
 
(அல்குர்ஆன் 83:15)
 
அதாபிலேயே பெரிய அதாப்; இவ்வளவு பயங்கரமான நெருப்பை விட விஷ ஜந்துக்களை விட வேறு என்ன அதாப்-வேதனை பெரிய அதாபாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைப்பீர்கள். 
 
இனி எங்களது ரப்பிடத்திலே நாங்கள் பேச முடியாது; அவன் எங்களை பார்க்க மாட்டான்; அவன் கைவிட்டு விட்டான் என்று அந்த காஃபிர்களான நரகவாசிகள் உணரும் பொழுது கதறுவார்கள்! அழுது அழுது துடிப்பார்கள்! அது அவர்களுக்கு வேதனை- அதாபிலேயே பெரிய வேதனையாக  இருக்கும். 
 
எப்படி முஃமின்களுக்கு அல்லாஹ்வை பார்ப்பது சொர்க்க இன்பங்களிலேயே பெரிய இன்பமோ, மகத்தான இன்பமோ, ஹுரை விட தங்கம் வெள்ளியினால் கட்டப்பட்ட மாளிகைகளை விட தேனாறு  பாலாறுகளை விட பற்பல வகையான பழங்களை விட மறுமையின் சொர்க்கத்தில் அல்லாஹுவின் திருமுகத்தை அவனது பொருத்தத்தோடு பார்ப்பது முஃமின்களுக்கு எப்படி பேரின்பமாக இருக்குமோ அதுபோன்று காஃபிர்களுக்கு மிகக் கடினமான வேதனையை கொடுக்கும். 
 
தங்களது ரப்பை இனி அவர்கள் அணுக முடியாது. அவனிடத்திலே பேச முடியாது. அவன் கைவிட்டு விட்டான். அவன் இனி நமது குரலைக் கேட்க மாட்டான். இனி முடிந்தது நம்முடைய கதை என்று சீல் வைக்கப்படும் அல்லவா அதை நினைத்து அவ்வளவு துடிப்பார்கள். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; அவ்வளவுதான் இந்த நரகத்தில் உங்களை நாம் விட்டு விடுவோம். நீங்கள் செய்த பாவங்களின் காரணமாக நிரந்தரமான அதாபை சுவைத்து பாருங்கள்! 
 
அல்லாஹு தஆலா, இப்படி ஒரு பக்கம் மறுமையில் காஃபிர்கள் படக்கூடிய துன்பங்களை அந்த மறுமையின் நரக வேதனைகளை சொல்லிக் காட்டி விட்டு முஃமின்களாகிய நம்மை முன்னோக்குகிறான். 
 
எத்தகைய மகத்தான சூராவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜுமுஆவுடைய ஃபஜ்ருக்காக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் யோசித்துப் பாருங்கள்! ஃபஜ்ர் தொழுகையோ தொழுகையில் மிக மகத்தான தொழுகை! 
 
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا‏
 
(அல்குர்ஆன் 17:78)
 
மலக்குகளை விசேஷமாக அல்லாஹ் ஆஜர் படுத்துகின்ற தொழுகையிலே இந்த வசனங்களை முஃமின்களுக்கு ஓதி காட்டினார்கள். அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான். 
 
اِنَّمَا يُؤْمِنُ بِاٰيٰتِنَا الَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ۩‏
 
(அல்குர்ஆன் 32:15)
 
நம்முடைய இந்த வேத வசனங்களைக் கொண்டு நம்பிக்கை கொள்பவர்கள் யார் தெரியுமா? அவர்களுக்கு குர்ஆனை கொண்டு வேத வசனங்களை கொண்டு உபதேசம் செய்யப்பட்டால் உடனே ஏற்றுக் கொள்வார்கள். பயந்து விடுவார்கள். பணிந்து விடுவார்கள். அல்லாஹ்வை துதிப்பார்கள். போற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒருபோதும் அவர்கள் அகந்தை ஆணவம் கொள்ள மாட்டார்கள். பெருமை அடிக்க மாட்டார்கள். அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முன்னால் அல்லாஹ்வுடைய கலாமிற்கு முன்னால் பணிவதை தவிர வேறு அடையாளம் அவர்களிடத்திலே இருக்காது. 
 
எப்பேர்பட்ட மகத்தான அந்த வர்ணனை பாருங்கள்! முஃமின்களை அல்லாஹ் எப்படி நேசிக்கிறான்! அது மட்டுமா? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளை விட்டு தூரமாக இருக்கும். மக்கள் எல்லாம் இரவு நேரங்களிலே இன்பமாக தூங்கி சுகம் பெறுவதை வழமையாக வைத்திருக்கும் போது அவர்கள் இரவிலே அல்லாஹ்வுடைய பயத்தில் நின்று தொழுது அழுது அல்லாஹ்விடத்திலே சொர்க்கத்தை வேண்டுவதையும் நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவதையும் அவர்கள் அப்படியே இன்பமாக பார்ப்பார்கள். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
 
تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا وَّمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏
 
அவர்களுடைய விலாப்பகுதிகள் படுக்கையில் இருந்து  தூரமாக இருக்கும். தங்களது ரப்பிடத்திலே துஆ செய்து கொண்டிருப்பார்கள் ஒரு பக்கம் பயம்;  இன்னொரு பக்கம் ஆசை; அல்லாஹ் சொல்கிறான் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த செல்வத்திலே தான தர்மங்கள் செய்து கொண்டே இருப்பார்கள். (அல்குர்ஆன் 32:16)
 
மூன்று அடையாளங்களை அல்லாஹு தஆலா முஃமின்களுக்கு இந்த சூராவிலே செய்தியாக குறிப்பாக இந்த வசனங்களிலே சொல்கிறான். 
 
ஒன்று? அல்லாஹ்வுடைய வேதத்தோடு தொடர்போடு இரு. இதை ஓது! இதை உணரு! இதை சிந்தி! இதனுடைய கருத்துக்களை உள்வாங்கு! இதனுடைய எச்சரிக்கைகளை கேட்டு நீ கண்ணீர் சிந்தி அழு! இதனுடைய சுபச் செய்திகளை கேட்டு நீ மகிழ்ச்சியடை! 
 
குர்ஆன் உள்ளங்களை மாற்ற வேண்டும். குர்ஆன் உள்ளங்களிலே உணர்வுகளை கொண்டு வர வேண்டும். கண்களிலே அழுகையை கொண்டு வர வேண்டும். திடுக்கத்தை பயத்தை கொண்டு வர வேண்டும். அல்லாஹ்வுடைய வேதம் ஓதி காட்டப்பட்டு விட்டால் அவ்வளவுதான் அதை ஒரு முஃமினால் மீற முடியாது. அவன் தான் முஃமின். 
 
உமருல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சபையிலே ஒரு சம்பவம் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். மகத்தான கலிஃபா! நீதமிக்க கலிஃபா! அந்த சபையிலே ஒருவர் கலீஃபா உமரை பார்த்து நீ நீதமும் செலுத்துவதில்லை. தர்மமும் கொடுப்பதில்லை. உரியவர்களின் உரிமையை கொடுப்பதில்லை என்று உளறி விடுகிறார். எப்படி இருக்கும்! கலீஃபா உமர் சாட்டையை எடுத்து விட்டார். அங்கே இருந்த ஒரு நபித்தோழர் ஒரே ஒரு வசனத்தை ஓதினார். 
 
உமரே! அல்லாஹ் சொல்கிறான்: 
 
خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ‏
 
மன்னிப்பை பற்றி பிடியுங்கள்! நன்மையை ஏவுங்கள்! அறியாத மக்கள் பேசும் பேச்சை விட்டு விடுங்கள் என்று. (அல்குர்ஆன் 7:199)
 
அவ்வளவுதான் முடிஞ்சிடுச்சு. மன்னிப்பை கைப்பிடி என்ற ஒரு வசனம் சாட்டையை கைவிட்டது . அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளுக்குள் உமரை மாற்றி விட்டது  என்று அந்த சஹாபி சொல்கிறார். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7286. 
 
நமக்கு சொல்ல முடியுமா? சட்டத்தை சொன்னால் எனக்கு தெரியும் சட்டம்! நீ போ! எனக்கே குர்ஆன் சொல்லிக் கொடுக்க வந்துட்டீங்களா? எனக்கே சட்டம் சொல்லிக் கொடுக்க வந்துட்டீங்களா? இந்த சட்டத்தை எப்படி எங்கே பின்பற்ற வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்! நீங்கள் போங்கள்! நீங்கள் போங்கள்! நீங்க ரொம்ப படிச்சிட்டீங்க! நீங்க போங்க!. 
 
எப்பேர்பட்ட குஃப்ர்களை நயவஞ்சகங்களை உள்ளத்திலே மறைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது நம்மை அறியாமல் குஃப்ரை நயவஞ்சகத்தை சைத்தான் நமது நாவிலே பேச வைத்துக் கொண்டிருக்கிறான். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: வேதத்திற்கு முன்னால் கட்டுப்படக்கூடியவர்கள் முஃமின்கள்! சுஜூது பணிந்து விழுந்து விடுவார்கள் முஃமின்கள்!. அல்லாஹ்வை துதித்து கொண்டே இருப்பார்கள் முஃமின்கள்! இரவு வணக்கங்களிலே கவனம் செலுத்துவார்கள் முஃமின்கள்! 
 
அறிஞர்கள் பல விளக்கங்களை சொல்கிறார்கள்; மஃரிப்புடைய தொழுகை இஷாவுடைய தொழுகை மஃரிப்புக்கும் இஷாவிற்கும் இடையிலே தொழுவது. அல்லது இஷாவிற்கு பிறகு சில ரக்அத்துகளை தொழுவது. யார் இதை சரியாக செய்து விடுகிறார்களோ குறைந்தபட்சம் மகரிபு தொழுகையை இஷா தொழுகையை யார் சரியாக தொழுது விடுகிறார்களோ அதற்குப்பின் சில ரக்அத்துகளை தொழுது விடுகிறார்களோ அவர்களுக்கு இந்த வசனம் பொருந்தும்.  (அல்குர்ஆன் 32:16)
 
குறைந்தபட்சம் இஷாவிற்கு பிறகு எவ்வளவு அவருக்கு முடியுமோ அவர் எத்தனை ரக்அத்துகளை தொழுவாரோ இந்த வசனங்களுக்கு உரியவராக ஆகிவிடுகின்றார். 
 
பிறகு, அல்லாஹ்வுடைய பாதையிலே ஏழை எளியவர்களுக்கு உறவுகளுக்கு இல்லாதவர்களுக்கு தர்மம் செய்வது அல்லாஹ் சொல்லி காட்டுகின்றான்: இத்தகைய மக்களுக்கு அல்லாஹுத்தஆலா மறுமையின் கண் குளிர்ச்சிகளை எப்படி எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான் என்பதை யாரும் அறிய மாட்டார்கள். 
 
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِىَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍ‌ جَزَآءً بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
 
(அல்குர்ஆன் 32:17)
 
யோசித்துப் பாருங்கள்! எத்தகைய மகத்தான வசனம் அல்லாஹ்வுடைய தூதர் சொல்லிக் காட்டினார்கள்: 
 
قالَ اللَّهُ تَبارَكَ وتَعالَى: أعْدَدْتُ لِعِبادِي الصَّالِحِينَ، ما لا عَيْنٌ رَأَتْ، ولا أُذُنٌ سَمِعَتْ، ولا خَطَرَ علَى قَلْبِ بَشَرٍ
 
நான் எனது அடியார்களுக்காக கண்கள் பார்த்திராத காதுகள் கேட்டிராத எந்த மனிதனின் உள்ளத்திலும் உதித்திராத பேரின்ப பாக்கியங்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்வதாக சொல்லிவிட்டு இதை நீங்கள் குர்ஆனிலே ஓத வேண்டும் என்றால் இந்த வசனத்தை ஓதி கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி காட்டினார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3244, 4780. 
 
இப்படிப்பட்ட மகத்தான செய்திகளை இந்த சூராக்கள் கொடுக்கின்றன. நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு அமலையும் அதுவும் குறிப்பாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏன் இந்த நேரத்தில் இந்த துஆவை கற்றுக் கொடுத்தார்கள்? ஏன் இந்த தொழுகைக்கு இந்த சூராவை தேர்ந்தெடுத்தார்கள்? ஏன் இந்த நாளிலே இப்படிப்பட்ட அமல்களை செய்தார்கள்? இவை எல்லாம் நாம் சிந்திக்க வேண்டியது. நம்முடைய ஈமானை அதிகப்படுத்தக்கூடியது. அந்த சிந்தனைகள் நமக்கு மார்க்க பற்றை தரக்கூடியது. நம்முடைய ஆகிறத்தை நினைவூட்டக்கூடியது. நமக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உண்டான அந்த ஈமானிய உறவை இந்த சிந்தனைகள் புதுப்பித்துக் கொண்டே இருக்கும். மேம்படுத்திக் கொண்டே இருக்கும். வலுப்படுத்திக் கொண்டே இருக்கும். 
 
அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்று அறிந்து பின்பற்றக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! அல்லாஹ் நம்முடைய சந்ததிகளுக்கும் ஈமானையும் இல்லாமையும் தந்தருள்வானாக! அல்லாஹு தஆலா உலகத்தில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் முஃமின்களையும் பாதுகாத்து அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/