HOME      Khutba      அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் - அமர்வு 5-5 | Tamil Bayan - 603   
 

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் - அமர்வு 5-5 | Tamil Bayan - 603

           

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் - அமர்வு 5-5 | Tamil Bayan - 603


بسم الله الرحمن الرّحيم

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற தூதர்கள் -அமர்வு :5

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதருடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, அல்லாஹ்விடத்தில் எனக்கும் உங்களுக்கும் நேர்வழியை தேடியவனாக, அல்லாஹு தஆலா அந்த நேர் வழியின் மீது நம்மை பலப்படுத்தவேண்டும், உறுதிப்படுத்தவேண்டும்.

இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உடைய கட்டளைகளை ஏற்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை முற்றிலும் முழுமையாக பின்பற்றி அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடுவதற்கு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தஆலா அருள் பாலிக்க வேண்டும்.

இந்த உலக வாழ்க்கையை அல்லாஹு தஆலா நமக்கு சீராக்கி சிறப்பாக்கி பாதுகாப்பாக ஆக்கித் தர வேண்டும். அல்லாஹ் தஆலா நம்முடைய சோதனைகளை இலேசாக்க வேண்டும். நம்முடைய காரியங்களை நேரான பாதையில் அமைத்து தர வேண்டும்.

யார் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் நன்மையை நாடுவார்களோ, அல்லாஹ் அவர்களுக்கு நன்மையை நாடுவானாக!யார் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் சூழ்ச்சியை நாடுவார்களோ, சதியை நாடுவார்களோ அந்த சூழ்ச்சியை அந்த சதியை அவர்களுக்கு எதிராகவே அல்லாஹ் திருப்பி விடுவானாக!

முஸ்லிம்களுக்கும் இஸ்லாமுக்கும் சூழ்ச்சி செய்வதற்காக, சதி செய்வதற்காக யார் ஒன்று கூடுகிறார்களோ அவர்களுக்குள் அல்லாஹ் தஆலா பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களுக்குள் அல்லாஹு தஆலா குழப்பங்களை ஏற்படுத்தி, அவர்களுடைய உள்ளங்களில் அச்சத்தை அல்லாஹ் தஆலா நிரப்புவானாக. அல்லாஹ் தஆலா அவனுடைய அத்தாட்சியை காண்பித்து தருவானாக! ஆமீன்.

அன்பு சகோதரர்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நபிமார்களின் வரலாறுகளை நமக்கு கூறுவதை தொடர்ந்து நாம் பார்த்து வந்தோம். அந்த வரலாறுகளை அல்லாஹு தஆலா நமக்கு ஏன் கூறுகிறான்? நபிமார்களின் வரலாறுகளையும், நபிமார்களின் சமுதாயத்தின் வரலாற்றையும் நாம் ஏன் படிக்கவேண்டும்?உணரவேண்டும்? அதிலிருந்து படிப்பினைகளை நாம் ஏன் பெறவேண்டும்? என்பதை பற்றியெல்லாம் இந்த தொடரின் ஆரம்பத்திலே கூறியிருந்தோம். இன் ஷா அல்லாஹ் உங்களுக்கு நினைவிருக்கும்.

இன்று நாம் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறை அல்லாஹு தஆலா எப்படி வர்ணிக்கிறான்? நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனிலே எப்படி போற்றி புகழ்கிறான்? அதிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய படிப்பினைகள், பாடங்கள் என்ன?என்பதை இன்ஷா அல்லாஹ் பார்க்க இருக்கின்றோம். அதற்கு முன்பாக ஒரு சில முக்கிய நினைவூட்டல்கள் இருக்கின்றன.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஸூரத்துல் அன்ஆம் ஆறாவது அத்தியாயத்தினுடைய 42, 43, 44, 45ஆகிய வசனங்களில் சில அறிவுரைகளை நமக்கு குறிப்பிடுகின்றான்.

அதுபோன்று சூரா இப்ராஹீமிலும் சில முக்கியமான அறிவுரைகளை அல்லாஹ் நமக்கு குறிப்பிடுகின்றான். அதையும் இன் ஷா அல்லாஹ் பார்ப்போம். அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுகிறான்;

وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى أُمَمٍ مِنْ قَبْلِكَ فَأَخَذْنَاهُمْ بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ

(நபியே!) உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம்முடைய தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்.(அல்குர்ஆன் 6 : 42)

வசனத்தின் கருத்து : திட்டவட்டமாக நபியே உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாய மக்களுக்கு நாம் தூதர்களை அனுப்பினோம். அவர்களை கடினமான காலங்களைக் கொண்டு அவர்களைச் சோதித்தோம். கடினமான காலம் என்றால் வறுமையை குறிக்கலாம். பசி, பட்டினி, பஞ்சத்தை குறிக்கலாம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா பல இடங்களில் இதை நமக்கு உதாரணமாக சொல்கிறான். படிப்பினையாக சொல்கின்றான்.

சூரத்துல் பகராவில் ரப்புல் ஆலமீன் முஃமீன்களாகிய நம்மை பார்த்து கேட்கும் போது,

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது'' என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 214)

கருத்து : சொர்க்கத்திற்கு அவ்வளவு இலகுவாக சென்று விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் வந்த முஃமின்களுக்கு ஏற்பட்ட சோதனை உங்களை அடையாது இருக்க, அந்த சோதனையில் நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது தடம்புரண்டு விடுகிறீர்களா? உங்களது ஈமான் உறுதியாக இருக்கிறதா? அல்லது காஃபிர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஈமானை, மார்க்கத்தை இழக்க போகிறீர்களா? சமரசம் செய்து கொள்ள போகிறீர்களா? மார்க்கத்தில் சிலவற்றை விட்டு விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அல்லாஹ்வை விட்டு தூரமாகி விடலாம் என்று எண்ணுகிறீர்களா? இப்படி எல்லாம் அல்லாஹ் உங்களை சோதித்து, உங்களில் உண்மையாளர்கள் யார்? உங்களில் உறுதியானவர்கள் யார்? அல்லாஹ்வின் பக்கம் திரும்ப கூடியவர்கள் யார்? என்று அல்லாஹ் பிரிக்காமல் நீங்கள் சுலபமாக சொர்க்கத்திற்குள் சென்று விடலாம் என்று எண்ணுகிறீர்களா? ஆம். அவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டன.

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ

நிராகரித்தவர்கள் தங்களிடம் வந்த (நமது) தூதர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்'' என்று அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.(அல்குர்ஆன் 14 : 13)

சிலருக்கு இப்படிப்பட்ட வசனங்கள் எல்லாம் குர்ஆனில் இருக்கின்றதா என்று புதுமையாக கூட இருக்கலாம். இன்று நடக்கக் கூடிய சில நிகழ்வுகளைப் பார்த்து இது என்னமோ புதிதாக இந்த நூற்றாண்டிலே நமக்கு மட்டும் நடப்பதைப் போன்று சிலர் நிராசை அடைந்தவர்களாக, நம்பிக்கையில் பலவீனப்பட்டவர்களாக, சோர்ந்து போனவர்களாக பேசுவதைப் பார்க்கின்றோம்.

அல்லாஹ்வை விட்டுவிட்டு, அவன் பக்கம் திரும்புவதை விட்டுவிட்டு, உலக சக்திகளை கொண்டும், தன்னுடைய திறமையைக் கொண்டும் தீர்வுகளை தேடக் கூடியவர்களை பார்க்கின்றோம்.

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா சூரா இப்ராஹீமுடைய 10, 11, 12, 13, 14, 15ஆகிய வசனங்களை படித்துப்பாருங்கள்.

அந்த 13வது வசனத்தில் காஃபிர்கள் நபிமார்களிடத்தில், ரசூல்மார்களிடத்தில் எப்படிப் பேசினார்கள் என்பதை சுட்டிக் காட்டுகின்றான். நம்மை போன்ற சாதாரண மனிதர்களிடம் இல்லை.

வசனத்தின் கருத்து : காஃபிர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட ரசூல்மார்கள் நோக்கி சொன்னார்கள்; எங்களுடைய நாட்டிலிருந்து, எங்களுடைய ஊரிலிருந்து உங்களை நாங்கள் வெளியேற்றுவோம். யாருடைய நாடு? பூமி அல்லாஹ்விற்கு சொந்தமானது. அதே நாட்டில் தான் நபிமார்கள் பிறந்தார்கள். அதே வம்சத்தில் தான் பிறந்தார்கள்.

ஆனால் தவ்ஹீதை, ஈமானை ஏற்றுக்கொண்டு அதன் பக்கம் அழைத்த ஒரே காரணத்தால், இந்த பூமி உங்களுக்கு சொந்தமில்லை என்று அந்த பூமியில் பிறந்த அவர்களது குடும்பத்திலே, நிராகரிப்பாளரின் ஒருவரின் குடும்பத்திலே பிறந்த அந்த நபியைப் பார்த்து, அந்த ரசூலை பார்த்து நிராகரித்தவர்களும் அவர்களுடைய தலைவர்களும் சொன்னார்கள்.

இது எங்களது பூமி? இங்கே நாங்கள் உங்களை வசிக்க விடமாட்டோம். அல்லது எங்களுடைய கொள்கைக்கு நீங்கள் திரும்ப வேண்டும்?

இப்படி ஒரு வசனம் குர்ஆனில் இருக்கிறதா என்று சிலர் எண்ணுவார்கள். என்ன வார்த்தை? இப்ராஹீம் நபியைப் பார்த்து, மூஸா நபியைப் பார்த்து, ஈஸா நபியைப் பார்த்து, நூஹ் நபியைப் பார்த்து, ஸாலிஹ் நபியைப் பார்த்து, ஹூத் நபியைப் பார்த்து, ஏன்? நம்முடைய தூதர் காத்தமுல் அன்பியா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்தும் இது தான் சொல்லப்பட்டது.

அல்லாஹுத்தஆலா சொல்கின்றான்,

وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ

‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.(அல்குர்ஆன் 14 : 14)

وَاسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ

ஆகவே, (நபிமார்கள்) அனைவரும் (அல்லாஹ்வின்) உதவியைக் கோரினார்கள். பிடிவாதக்கார வம்பர்கள் அனைவருமே ஏமாற்றமடைந்(து அழிந்)தனர்.(அல்குர்ஆன் 14 : 15)

مِنْ وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ

அவர்களுக்கு பின்னால் நரகம்தான் இருக்கிறது. (அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். நரகவாசிகளின் தேகத்திலிருந்து வடியும்) சீழ்தான் அவர்களுக்கு (நீராக)ப் புகட்டப்படும்.(அல்குர்ஆன் 14 : 16)

يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ

அதை அவர்கள் (மிக சிரமத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக் கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையும் (அவர்களுக்கு) உண்டு.(அல்குர்ஆன் 14 : 17)

அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய நபிக்கு சொல்லிவிட்டான். தம்முடைய தூதர்களுக்கு அல்லாஹ் சொல்லிவிட்டான். அதே வஹீதான் என்று நமக்கு ஓதப்படுகிறது. நமக்கு இப்போது அல்லாஹ்விடத்தில் வஹீ வரவேண்டிய அவசியமில்லை. வஹீ வராது. நபிமார்களுடைய காலத்தோடு முடிந்தது. அந்த வஹீயை அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். ஓதி காட்டுகின்றான். அல்லாஹ்வுடைய அதே வஹீ,

அவர்களுடைய ரப்பு வஹீ அறிவித்தான்.

நபிமார்களே! இப்படிப்பட்ட அச்சுறுத்தலால் பயந்து விடாதீர்கள். துவண்டு விடாதீர்கள். என்ன செய்துவிட முடியும்?

இந்த நேரத்தில் மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களை எதிர்ப்பதற்காக வந்த அந்த சூனியக்காரர்களுடைய ஈமானை கொஞ்சம் ஏன் நாம் நினைத்துப் பார்க்கக் கூடாது.

முதலாவதாக மூசா நபியை எதிர்ப்பதற்காக வந்தார்கள். மூசா நபியின் அத்தாட்சிகளை பார்த்து மூசா நபி உண்மையான தூதர் என்று நம்பிக்கை கொண்ட உடனே சஜ்தாவில் விழுந்து விட்டார்கள். மூஸாவின் இறைவன், ஹாரூனின் இறைவனாகிய ரப்புல் ஆலமீனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று சொன்னார்கள்.

ஃபிர்அவ்ன் என்ன சொன்னான்? நீங்கள் எல்லாம் சேர்ந்து சதி செய்து விட்டீர்களா!

قَالَ فِرْعَوْنُ آمَنْتُمْ بِهِ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّ هَذَا لَمَكْرٌ مَكَرْتُمُوهُ فِي الْمَدِينَةِ لِتُخْرِجُوا مِنْهَا أَهْلَهَا فَسَوْفَ تَعْلَمُونَ

அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன் 7 : 123)

لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ

நிச்சயமாக நான் உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.(அல்குர்ஆன் 7 : 124)

பயங்கரமான மிரட்டல் சகோதரர்களே! அதுதான் ஈமான். எவ்வளவு மிரட்டல் வருமோ அவ்வளவு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கூடினால் அது ஈமான். மிரட்டலின் போது, அச்சுறுத்தலின் போது, எதிரிகளின் சூழ்ச்சிகளை பார்க்கும்போது, தடுமாறினால், அந்த நேரத்திலே தடுமாற்றம் வந்தால், அதற்கு முன்பும் தடுமாற்றத்தில் தான் இருந்தோம் என்று பொருள்.

அந்த நேரத்தில் நயவஞ்சகம் வந்தால், எதிரிகளோடு நாம் விட்டுக் கொடுத்து விடலாம். மார்க்கத்தில் சிலவற்றை அட்ஜஸ்ட் செய்து விடலாம் என்று அந்த நேரத்திலே எண்ணம் வந்தால் அதற்கு முன்பும் அந்த நயவஞ்சகத்தில் தான் இருந்தோம் என்று பொருள். அல்லாஹ் பாதுகாப்பானாக.

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். ரப்புல் ஆலமீன் கூறுகிறான்; அந்த சோதனையின் போது. எப்படி உறுதியாக இருந்தார்கள் அந்த சூனியக்காரர்கள்;

قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا

அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான். (அல்குர்ஆன் 20 : 72)

உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். இந்த உலக வாழ்க்கையில் தானே நீ எங்களை பிடிக்க முடியும். யாரைப் பார்த்து? உலகத்திலேயே அன்று ஃபிர்அவ்னை விட பெரிய ஒரு சக்தி இல்லை ஆட்சி செய்வதற்கு. அவனுடைய கர்மத்தின் உச்சம்,

فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى

நான் தான் உங்களது கடவுள். என்னை தான் நீங்கள் வணங்க வேண்டும் என்ற சட்டத்தை வைத்திருந்தான்.(அல்குர்ஆன் 79:24)

وَنَادَى فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَاقَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ

பின்னர், ஃபிர்அவ்ன் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! இந்த ‘மிஸ்ர்' தேசத்தின் ஆட்சி எனதல்லவா? (அதிலிருக்கும்) இந்த (நைல்) நதி(யின் கால்வாய்)கள் என் கட்டளைப்படி செல்வதை நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று பறை சாற்றினான்.(அல்குர்ஆன் 43 : 51)

அல்லாஹ்வின் அடியார்களே! ஏறக்குறைய 70,000முஃமின்கள் சூனியம் செய்வதற்காக வந்த சூனியக்காரர்கள் 70,000பேர்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்; அவர்களில் ஒருவரை விடாமல் வலது கை இடது கை, இடது கை, வலது கால், என்று வெட்டி ஈட்டியிலே குத்தி கழுமரத்தில் ஏற்றினான். இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். அவர்கள் ஒருவர் கூட முர்தத் ஆகவில்லை. அதே நிலையிலே அல்லாஹ்வையும், மூசா நபியையும், ஈமான் கொண்டவர்களாக உயிரை துறந்தார்கள்.

எப்படி இருந்திருக்கும்? ஒரு கை வெட்டப்பட்டு விட்டது. இன்னொரு கால் தொடையோடு வெட்டப்பட்டது. ஒரு கை புஜத்தோடு வெட்டப்பட்டு விட்டது. ஒரு பக்கம் கால் தொடையோடு வெட்டப்பட்டது. அவருடைய பின் துவாரத்திலிருந்து ஈட்டியால் குத்ப்பட்டு விட்டது. அதே நிலையிலேயே கழுமரத்தில் ஏற்றி வைக்கப்படுகிறார்கள்.

உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்தில்லை, பறவைகள் அவர்களை கொத்தித் தின்னும். நினைத்துப் பாருங்கள். எப்பேற்பட்ட கஷ்டம்!

அவர்களில் ஒருவர்கூட, யா அல்லாஹ்! நாங்கள் ஈமான் கொண்டதற்குப் பிறகு எங்களை சோதித்து விட்டாயே!என்று அல்லாஹ்வைச் சடைந்து கொள்ளவில்லை. எங்களை கைவிட்டு விட்டாயே என்று அல்லாஹ்வை குறைபட்டுக் கொள்ளவில்லை. மறுமையை புரிந்தார்கள். சொர்க்கத்தை புரிந்தார்கள். ஆகிரத்தை புரிந்தார்கள். ஃபிர்அவ்னிடத்திலே பேசினார்கள். என்ன செய்துவிட முடியும்? மவுத்து தானே கடைசி. எங்களுக்கு மரணம் அவ்வளவுதானே. மறுமை எங்களுக்கு இருக்கிறது.

அன்பு சகோதரர்களே! ரப்புல் ஆலமீன் சொல்லிக்காட்டுகிறான். நபிமார்களே! பயப்படாதீர்கள்.

وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ

‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.(அல்குர்ஆன் 14 : 14)

நபிமார்களே! அநியாயக்காரர்களை நாம் அழிப்போம். அவர்களுக்குப் பின்னால் இந்த பூமியிலே நாம் உங்களை வசிக்க வைப்போம். யாருக்கு இந்த முடிவு? யாருக்கு வரும்? ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்.

என்னை பயப்பட கூடியவர்களுக்கு.எனக்கு முன்னால் நிற்க வேண்டும் என்ற அந்த மறுமையின் பயம் உள்ளவர்களுக்கு என்னுடைய இந்த வாக்கு பலிக்கும். என்னுடைய எச்சரிக்கை பயப்படக்கூடியவர்களுக்கு நீங்கள் எதிரிகளை உங்களுடைய ஆயுதத்தைக் கொண்டு, உங்களுடைய அறிவைக்கொண்டு, உங்களுடைய திறமையைக் கொண்டு, உங்களுடைய சூழ்ச்சியைக் கொண்டு, உங்களுடைய திட்டங்களைக் கொண்டு, நீங்கள் சமாளித்து விடலாம் என்றால் முடியவே முடியாது. அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவது மட்டும் தான் முடியும். அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا وَلَكِنْ قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ

நம் வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால், அவர்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருந் ததையே (-பாவங்களையே) ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான். (அல்குர்ஆன் 6:43)

நம்முடைய சோதனை வரும்போது நம் புறத்திலிருந்து, அவர்களுக்கு கஷ்டம் வரும்போது, எதிரிகளால் அவர்கள் நெருக்கடிக்கு ஆளான போது அல்லது பசி, பட்டினி, பஞ்சம், குழப்பங்கள் ஏற்படும் போது நம்மிடத்தில் அல்லவா அவர்கள் வந்திருக்கவேண்டும். என்னிடத்தில் அல்லவா அவர்கள் இறைஞ்சி இருக்கவேண்டும். என்னிடத்தில் அல்லவா அவர்கள் மன்றாடி இருக்க வேண்டும்.

அவர்களது உள்ளங்கள் இறுகிப் போயிருந்தனவே. அல்லாஹ்வுடைய பயம் வரவில்லையே. எதிரிகளின் அச்சுறுத்தல் வரும் போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சோதனையாக, யா அல்லாஹ்!இத்தகைய அநியாயத்தில் இருந்து எங்களை காப்பாற்று என்று அல்லாஹ்விடத்தில் தனிமையில் சுஜூதில் கையேந்தக் கூடிய முஃமின்கள் எங்கே? அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்று சொல்லக்கூடிய அழைப்பாளர்கள் எங்கே? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்,

وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ وَكَانَ رَبُّكَ بَصِيرًا

எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் உங்களை துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உமது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.(அல்குர்ஆன் 25:20)

سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ

(இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் (ஸலாம்) உண்டாகட்டும்! (உங்கள் இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று'' (என்று கூறுவார்கள்.)(அல்குர்ஆன் 13 : 24)

அல்லாஹு தஆலா அஸ்ஹாபுல் உஹ்தூத் (அகழுடையவர்கள்) பற்றி சொல்லிக்காட்டுகின்றான். ஏறக்குறைய அந்த ஊர்வாசிகள் மொத்த மக்கள் ஆண்கள், பெண்கள் ஏன் கடைசியிலே கைக்குழந்தையோடு இருக்கக்கூடிய ஒரு தாய் முதற்கொண்டு. நெருப்புக் குண்டத்தில் நெருப்பு வாய்க்காலில் போடப்படுகிறார்கள்.

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் அவர்களுக்கு இந்த தண்டனை கொடுக்கப்படுகிறது.

وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ

(நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர். (அல்குர்ஆன் 85 : 8)

அன்பு சகோதரர்களே! இந்த சோதனையின்போது தடுமாற்றம் வரக்கூடாது. பலவீனம் ஏற்படக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அங்கே நமது தொழுகை பலவீனமாக இருக்கிறது. நம்முடைய துஆ பலவீனமாக இருக்கிறது. நம்முடைய ஈமான் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். அஹ்ஸாபை நினைத்துப்பாருங்கள்.

وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை.(அல்குர்ஆன் 33 : 22)

إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا

உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.(அல்குர்ஆன் 33 : 10)

هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا

அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர் (அச்சுறுத்தப்பட்டனர்). (அல்குர்ஆன் 33 : 11)

நேரடியாக அல்லாஹு தஆலா அந்த சஹாபாக்களுடைய உள்ளத்தை நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். அவ்வளவு பெரிய ராணுவத்தை அந்த சஹாபாக்கள் பார்த்தபோது சொன்னார்கள். அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையாகிவிட்டது. ரசூலுடைய வாக்கு உண்மையாகிவிட்டது. அல்லாஹ் உண்மை சொல்லி இருக்கின்றான். அல்லாஹ்வுடைய தூதர் உண்மை சொல்லி இருக்கிறார்கள். சோதனைகளும் அச்சுறுத்தல்களும் அதிகமாக அதிகமாக அவர்களுக்கு ஈமான் அதிகமானது. மன அமைதி வந்தது. அல்லாஹ்விற்கு அப்படியே தங்களை ஒப்படைத்து விட்டார்கள். ரப்பே நீ முடிவு செய் என்று.

அன்பு சகோதரர்களே! அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அந்த நபிமார்களுடைய வரலாறு,

وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ

‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.(அல்குர்ஆன் 14 : 14)

அல்லாஹ்வை பயப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வுடைய எச்சரிக்கையை பயந்தவர்களுக்கு கண்டிப்பாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையாகும். அதே நேரத்தில் யார் வெற்றி வேண்டும், வெற்றி வேண்டும் எந்த சமுதாயமும் இருக்கக்கூடாது எங்கள் சமுதாயத்தை தவிர என்று யாரெல்லாம் கூறிவிட்டார்களோ, அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் பிடிவாதம் பிடித்த முரண்டு பிடித்த அயோக்கியர்கள் அநியாயக்காரர்கள் நஷ்டமடைந்தே தீர்வார்கள்;கேவலப்பட்டே தீர்வார்கள்.

துன்யாவோடு விட்டுவிடுவோமா?உனக்கு நரகத்தை வைத்து இருக்கின்றேன் நரகவாதிகளின் சீழும் சலமும் உனக்கு குடிக்க கொடுக்கப்படும். குடித்து பார். முடியுமா? முடியாது. விக்குவான்,விக்குவான் முடியாது. மவுத் வரும். ஆனால் மவுத்தாக மாட்டான். கடுமையான வேதனை. அன்பு சகோதரர்களே! இந்த அநியாயக்காரர்கள் உலகத்தில் எவ்வளவு தான் ஆட்சி அதிகாரங்களை பிடித்தாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வுடைய பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

அநியாயக்காரர்கள் செய்கின்ற செயல்களை அல்லாஹ் பார்க்காமல் இருக்கின்றான் என்று நபியே நீங்கள் எண்ணாதீர்கள். பார்வைகள் பிதுங்க கூடிய நாளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு தாமதத்தை கொடுத்திருக்கின்றான். அநியாயக்காரர்கள் வெகு விரைவில் அறிந்து கொள்வார்கள். எந்த முடிவை அவர்கள் சந்திக்கப் போகிறார்கள்? (அல்குர்ஆன் 14 : 42)

وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ

பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 26 : 227)

அன்பு சகோதரர்களே! நம்முடைய வேலை என்ன? நபிமார்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையை கொடுத்தானோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும். அதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் பார்ப்போம்.

இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு தொடர்புடைய ஒரு முக்கியமான விஷயம். இப்ராஹீம் நபி நம்ரூதால் அச்சுறுத்தப்பட்டார்கள். சாதாரண அச்சுறுத்தலா? ஊரே சேர்ந்து அவர்களை நெருப்பில் போட்டது. இந்த ஊரிலே நீ இருக்கக்கூடாது. இப்ராஹீமே!ஒன்று ஈமானை விடு. எங்களது சிலைகளை ஏசுவதை விடு. இல்லை என்றால் ஊரைவிட்டு ஓடி விடு. இல்லை என்றால் கொன்று விடுவோம்.

உன்னைக் கல்லால் எறிந்து கொள்வேன் என்று அவருடைய சொந்த தகப்பனாரே சொன்னார்கள். ஊர் மக்களும் சேர்ந்து கொண்டார்கள்.

அன்பு சகோதரர்களே! இப்ராஹீம் நபியுடைய அந்த தன்மையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். எது இன்று நம்மிடத்தில் இல்லையோ நபிமார்கள் அதைக் கொண்டுதான் அல்லாஹ்வுடைய உதவியை பெற்றார்கள்.

وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ

முஃமின்களுக்கு உதவுவது நம் மீது கடமை.

அல்லாஹு தஆலா நபிமார்களுக்கு உதவுவோம் என்று வாக்களித்தான். அந்த வாக்கு எப்படி கிடைத்தது. அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள் சூரா ஹூதுடைய 25ஆவது வசனம் இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் வர்ணிக்கிறான்.

إِنَّ إِبْرَاهِيمَ لَحَلِيمٌ أَوَّاهٌ مُنِيبٌ

நிச்சயமாக இப்றாஹீம் மிக்க சகிப்புடையவர், அதிகம் பிரார்த்திப்பவர் (எதற்கும்) நம்மையே முன்நோக்குபவர் ஆவார்.(அல்குர்ஆன் 11 : 75)

இப்ராஹீம் எப்பேற்பட்டவர் தெரியுமா? கோபப்படாதவர். இன்று நமக்கு எதிரிகள் ஏதாவது செய்யும் போது நமக்கு கோபம் அவர்கள் மீது வருகிறது. கண்டிப்பாக வரும். ஆனால் நம்மில் எத்தனை பேர் தன்மீது கோபப்படுகிறார்கள். என்னுடைய பாவத்தால் என்மீது இந்த எதிரி சாட்டப்பட்டு இருப்பானோ? என்னுடைய உம்மத்துடைய பாவத்தால் இந்த எதிரி என் மீது சாட்டப்பட்டு இருப்பானோ என்று யோசிப்பவர்கள் எத்தனைபேர்?

வரலாற்றிலே அநியாயக்கார அரசர்கள், அநியாயக்கார அதிகாரிகள் சாட்டப்படுவதில்லை மக்கள் பாவங்கள் செய்தாலே தவிர. மக்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து திரும்பினாலே தவிர. பஃதாதை படையெடுத்து அழித்தொழித்த அந்த மங்கோலியர்களின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள்.

இந்த சோதனைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதை எதிர்கொள்வது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதை கொண்டு தான் இருக்கிறது. இப்ராஹிம் நபியை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையில் இப்ராஹிம் சகித்துக் கொண்டு இருந்தார்.

நாம் யாருக்காக சகிக்கின்றோம்? நாம் முஃமின் என்ற ஒரே காரணத்திற்காக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டால் அப்போது நாம் சகிப்பது யாருக்காக? அல்லாஹ்விற்காக.

அந்த சகிப்புத் தன்மை நபிமார்களிடத்திலே இருந்தது. 13ஆண்டுகள் மக்காவில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பேற்பட்ட இன்னல்களுக்கு ஆளானார்கள். அல்லாஹ்வுடைய அனுமதி வருகிறவரை தங்களுடைய தோழர்களில் யாரையும் நீங்கள் இந்த ஊரை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லவில்லை. சுமையா கொல்லப்பட்டார். பிலால் அடித்து துன்புறுத்தப்பட்டார். கப்பாப் சூடு வைக்கப்பட்டார்.

இவ்வளவு சோதனைகளை பார்த்தும் கூட இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களுடைய மில்லத்தை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்கள் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொன்னான். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சகித்தார்கள். பொறுத்தார்கள். அல்லாஹ்வுடைய அனுமதி வந்ததற்குப் பிறகுதான் அந்த இடத்தை விட்டு அவர்கள் சென்றார்கள். பொறுமையாளர் இப்ராஹிம் (அலை) அல்லாஹ்விடம் துஆ கேட்கக்கூடியவர் இப்ராஹீம் நபி அல்லாஹ்விடம் அதிகம் துஆ கேட்கக்கூடியவர்கள்.

அன்பு சகோதரர்களே! நீங்கள் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு மன்றாடுவீர்களோ, எவ்வளவு துஆ கேட்பீர்களோ எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். இந்த நிலையை விடவா நாம் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி நம் கைகளை உயர்த்தி அல்லாஹ்விடத்தில் அழுது மன்றாடுவதற்குரிய ஒரு சிறந்த நேரம் இருக்கமுடியும்? எப்படிப்பட்ட தேவையிலே நாம் இருக்கின்றோம்.

இப்ராஹிம் நபியுடைய வரலாறை எடுத்துப்பாருங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சரி. அவர்கள் அல்லாஹ்வின் பக்கமே திரும்பி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டார்கள். அவருடைய மனைவி சாரா அலைஹிவஸல்லம் அவர்களை மிஸ்ருடைய கொடுங்கோல் அரசன் அவனுடைய அடியாட்கள் இழுத்துச் சென்று விடுகிறார்கள். சாரா அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். நீ செல். அவன் கேட்டால் சகோதரி என்று சொல்லிவிடு. அனுப்பிவிட்டார்கள். என்ன செய்தார்கள்? அங்கே செல்லலாமா? இங்கே செல்லலாமா? அவரைப் பார்க்கலாமா? இவரைப் பார்க்கலாமா? ஸஹிஹ் முஸ்லிமுடைய ஹதீஸை பாருங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். சாராவை மிஸ்ருடைய அரசனின் அந்த சிப்பாய்கள் இழுத்துச் சென்றுவிட்டார்கள். இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் தொழுகையில் நின்று விட்டார்கள். யா அல்லாஹ்!என் மனைவியை நீ காப்பாற்று.

யா அல்லாஹ்!உன்னுடைய அடிமைப் பெண்ணை நீ காப்பாற்று. எதுவரை தொழுதார்? எவ்வளவு நேரம் துஆ செய்தார்? சாரா அலை ஸலாமத்தாக திரும்பி வந்து கணவனாரே அல்லாஹ் என்னை பாதுகாத்தான் என்று இப்ராஹீம் நபியை சந்திக்கின்ற வரை அவர்கள் தொழுத இடத்தை விட்டு செல்லவில்லை.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2371.

நாம் எப்படி? போகிற போக்கில் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று சென்று விடுகிறோம். அதற்கு பிறகு துன்யா, நம் வேலை உண்டு என்று சென்று விடுகிறோம். அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம். என்னிடத்தில் என்ன பாவம் இருக்கிறது? என்னுடைய உம்மத்தில் என்ன பாவம் இருக்கிறது? நன்மையை ஏவி தீமையை தடுப்பது, தவ்ஹீதை ஏவுவது, ஷிர்க்கில் இருந்து தடுப்பது, சுன்னாவை மக்களுக்கு சொல்வது, பித்அத்தில் இருந்து அவர்களை தடுப்பது, இதைவிட இன்று என்ன பெரிய காரியம் இருக்கமுடியும் சகோதரர்களே? இதை விட்டதால்தானே இந்த முஸீபத். அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.

ஆகவே அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய மார்க்கம் இது. ஆதம் அலைஹி வசல்லம் அவர்களை அல்லாஹ் தஆலா பூமியில் இறக்கிய காலத்திலிருந்து உள்ள மார்க்கம் இது. வானத்திலும் இதே இஸ்லாம் தான். பூமியிலும் இதே இஸ்லாம் தான். அல்லாஹ் தான் வணக்கத்திற்குரியவன். அவனைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு உரியவர்கள் கிடையாது. அந்த அல்லாஹ்வை வணங்குவதற்கு தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். அந்த வணக்க வழிபாடுகளில் எந்தவிதமான சமரசத்தையும் எந்தவிதமான விட்டுக் கொடுத்தலையும் நம்மால் செய்ய முடியாது.

இந்த உலகத்தில் நமக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படலாம். சூழ்ச்சிகள் செய்யப்படலாம் அவை நம்முடைய உலக வாழ்க்கையைத்தான் பாதிக்குமே தவிர, நம்முடைய மார்க்கத்தை பாதிக்கும் படி நாம் விட்டுவிடக் கூடாது. உலக வாழ்க்கையில் தான் அந்த பாதிப்பே தவிர நம்முடைய மறுமையை பாதிக்கும்படி விட்டு விடக் கூடாது.

அதற்கு என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்விடத்தில் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எந்த நிலையிலும் நாங்கள் விடமாட்டோம். எங்களுடைய இஸ்லாமிய அடையாளங்களை நாங்கள் விடமாட்டோம். எங்களுடைய வணக்க வழிபாடுகளை விடமாட்டோம். அதனால் இந்த உலகத்திலே எந்த இழப்பை சந்தித்தாலும் சரி.

நம்மை எதிர்க்கக்கூடிய, நமக்கு அநியாயம் செய்யக் கூடிய அதே எதிரிகளை சந்தித்தாலும், எப்படி மூஸா அலைஹி வஸ்ஸலாம் ஃபிர்அவ்னை சந்தித்த போது ஃபிர்அவ்னே எனது ரப்பும் உன்னுடைய ரப்பும் அல்லாஹ் என்று சொன்னார்களோ, அந்த பச்சைப் பாலகன் அந்த அநியாயக்கார மன்னனைப் பார்த்து உன்னுடைய ரப்பு யார் என்று கேட்ட போது, என்னுடைய ரப்பும் அல்லாஹ். உன்னுடைய ரப்பும் அல்லாஹ் என்று சொன்னார்களோ, எப்படி இந்த துன்யாவிலே அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு முஃமினும் தனக்கு அநியாயம் செய்த அநியாயக்கார மக்களை நோக்கி, அநியாயக்கார அதிகாரிகளை நோக்கி, அநியாயக்கார அரசர்களை நோக்கி நாங்கள் உங்களை பயப்பட மாட்டோம். அல்லாஹ்வை பயப்படுவோம். என்னுடைய ரப்பும் உங்களுடைய ரப்பும் அல்லாஹ். என்னுடைய மீளுமிடமும் உன்னுடைய மீளுமிடமும் அல்லாஹ்விடத்தில் இருக்கிறது என்று சொன்னார்களோ அதே வார்த்தையை சொல்வதற்குத்தான் நாம் கடமைப்பட்டிருக்கிறோமே தவிர, பயப்படுவதற்கோ, மனம் தளருவதற்கோ, அல்லது விட்டுக் கொடுப்பதற்கோ அல்லது எந்த விதமான பலவீனத்துக்கோ நமக்கு அனுமதி இல்லை.

சகோதரர்களே! அல்லாஹ் பாதுகாப்பானாக. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நபிமார்களுடைய வாழ்க்கையில் நமக்கு படிப்பினைகளை பாடங்களை வைத்திருக்கின்றான். அந்த படிப்பினைகளைக் கொண்டு, பாடங்களைக் கொண்டு அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புரிந்து அதன்படி செயல்படக்கூடிய நல்ல தவ்ஃபீக்கை எனக்கும், உங்களுக்கும், ஒவ்வொரு முஃமின்களுக்கும் அல்லாஹு தஆலா தந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/