ஹஜ்ஜின் ஈமானிய பாடங்கள்! | Tamil Bayan - 967
ஹஜ்ஜின் ஈமானிய பாடங்கள்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ்ஜின் ஈமானிய பாடங்கள்!
வரிசை : 967
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 16-05-2025 | 18-11-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அகிலங்களின் இறைவன் வணங்கத் தகுதியான ஒப்பற்ற நிகரற்ற துணையற்ற இணையற்ற ஏக இறைவனாகிய அல்லாஹ்வை புகழ்ந்தவனாக; அவனுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் சலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக;
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் அன்பையும் மறுமையின் மகத்தான வெற்றியாகிய சொர்க்கத்தையும் வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னிப்பானாக!
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ஹாஜிகள் எல்லாம் ஹஜ்ஜுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன்னுடைய பயண தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகத்திலேயே ஒரு இன்பம் நிறைந்த, ஒரு தேடல் நிறைந்த, ஆசைகள் ஒன்று கூடிய, உண்மையான ஒரு பயணம் இருக்கிறது என்றால் அது ஹஜ் பயணம் தான்.
நம்முடைய உறவுகளை சந்திக்க நாம் செல்லலாம். நம்முடைய நண்பர்களை பார்க்க நாம் செல்லலாம். அல்லது வேறு ஏதாவது உலகத்தில் ஒரு அழகான ஒரு பசுமையான இடத்தில் சில நேரம் சில காலம் கழிப்பதற்காக நாம் சுற்றுலா செல்லலாம்.
உலகத்தில் மனிதன் தன்னுடைய மனதிற்கு நிம்மதி தேடி செய்யக்கூடிய எல்லா பயணங்களையும் (நான் சொல்லுவது ஆகுமான பயணங்கள்) ஒன்று சேர்த்தாலும் அல்லாஹ்வுடைய வீட்டை நாடி அடியான் ஈமான் கொண்டவனாக என்னுடைய ரப்புடைய வீட்டை தரிசிப்பதற்காக நான் செல்கிறேன் என்ற அந்த ஒரே ஏக்கத்தோடு அவன் செல்லும்போது அந்த ஹஜ் பயணத்திலே அவனுக்கு கிடைக்கக்கூடிய இன்பம் இருக்கிறதே! அந்த சிரமங்களை அனுபவிப்பதில் அவனுக்கு கிடைக்கக்கூடிய சுகம் இருக்கிறதே! அதற்கு எதுவும் ஈடாகாது.
அல்லாஹு தஆலா அப்பேற்பட்ட மகத்தான ஒரு பயணமாக ஹஜ் பயணத்தை ஆக்கி வைத்திருக்கிறான். அல்லாஹு தஆலா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொல்கிறான்:
وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ
இப்ராஹீம் இந்த கஅபாவை நீங்கள் கட்டி முடித்து விட்டீர்கள். உயர்த்தி கட்டினீர்கள். சிறப்பித்தீர்கள். இந்த கஅபாவிற்கு ஹஜ் செய்ய மக்களை அழையுங்கள் என்று அல்லாஹ் சொல்லும்பொழுது நீங்கள் அழைக்கும் போது அவர்கள் வருவார்கள். தூரமான இடங்களிலிருந்து நலிந்து மெலிந்த வாகனங்களின் மீது அவர்கள் வருவார்கள். (அல்குர்ஆன் 22:27) (குறிப்பு-1)
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய ஈமான் -இறை நம்பிக்கை அதனுடைய ஒரு மொத்த வெளிப்பாடு என்று சொல்லலாம். தொழுகையிலே ஈமானின் ஒரு வெளிப்பாடு இருக்கிறது. தக்வாவின் ஒரு வெளிப்பாடு இருக்கிறது. அல்லாஹ்வின் அன்பின் பாசத்தின் மீது உண்டான ஒரு வெளிப்பாடு தொழுகையிலே இருக்கிறது.
அது போன்று தான் நோன்பிலும் ஜக்காத்திலும். ஒவ்வொரு இபாதத்தும் நம்முடைய ஈமான் -இறை நம்பிக்கை, நம்முடைய இறையச்சம், நாம் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கக்கூடிய பாசம், அன்பு, அவன் மீது எனக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக் கூடியது. அப்படி வெளிப்படுத்தினால்தான் அது இபாதத். இல்லை என்றால் அது இபாதத்தாக ஆகாது.
தக்பீர் கட்டும் பொழுது அல்லாஹ்வுடைய முஹப்பத் அது அப்படியே கூடிக்கொண்டே போகவேண்டும். ருகூஃ செய்யும்போது சுஜூது செய்யும் போது அந்த முஹப்பத்தானது உச்சத்திற்கு செல்ல வேண்டும்.
அதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
أَقْرَبُ ما يَكونُ العَبْدُ مِن رَبِّهِ، وهو ساجِدٌ، فأكْثِرُوا الدُّعاءَ
அடியான் அல்லாஹ்விற்கு நெருக்கமாக இருக்கக்கூடிய இடம் அவன் ஸுஜூது செய்து கொண்டிருக்கும் பொழுது. ஆகவே, (ஸுஜூதில்) துஆவை அதிகப்படுத்துங்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 482.
எப்படி அது ஏற்படும்? அல்லாஹ்வுடைய அன்பு இல்லை, நாட்டமில்லை, பாசம் இல்லை, அவனுடைய தேடல் இல்லை, அல்லாஹ்வுடைய அந்த நெருக்கத்தின் உணர்வு உங்களுக்கு இல்லை என்றால் எப்படி அல்லாஹ்வுக்கு நீங்கள் நெருக்கமாக இருக்க முடியும்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அடியானே! நீ சுஜூது செய்திருக்கும்போது அவனுக்கு மிக சமீபமாகிவிட்டாய். எனவே நீ கேட்க வேண்டியது எல்லாம் கேட்டுக்கொள்! அது துஆவுடைய நேரம்.
ரப்புக்கு முன்னால் நீ பணிந்ததை வெளிப்படுத்தினாய். நீ அடிமை என்பதை வெளிப்படுத்தினாய். அவனிடத்திலே நீ சரண் அடைந்து விட்டாய். உன்னுடைய சுமைகளை உனது கடன் சுமைகளை உன்னுடைய பொருளாதார சுமைகளை உன்னுடைய எல்லா சிரமங்களையும் அவனுக்கு முன்னால் நீ அப்படியே கழற்றி வைத்து விடு!
இன்று பலர் மூன்று தஸ்பீஹ்க்கு மட்டும்தான் அந்த சுஜூதை வைத்திருக்கிறார்களே தவிர, ஈமான் உச்சம் அடைவதற்காக உயர்வதற்காக அந்த இறை அன்பினால் சொர்க்கத்தின் ஆசையால் நரகத்தின் பயத்தால் கண்ணீர் சிந்துவதற்கு எத்தனை பேர் சுஜூதை ஆக்கி வைத்திருக்கிறார்கள்?! யோசித்துப் பாருங்கள்!
அழ வேண்டும்; அழ வேண்டும்; சுஜூது செய்த இடம் அப்படியே கண்ணீரால் நிரம்ப வேண்டும் அப்பேற்பட்ட ஒரு இடம் அந்த இடம்.
அல்லாஹ்வின் அடியார்களே! ஹஜ்ஜுப்பயணம் ஒரு மகத்தானது. ஈமானுடைய , இக்லாஸின் பயணம். தக்வா உடைய பயணம். அல்லாஹ்வின் அடியார்களுக்கு சேவை செய்வதற்கான பயணம். ஹஜ்ஜுப்பயணம் நம்முடைய குணங்களின் வெளிப்பாடுகளை அறிவதற்காக உள்ள பயணம்.
நீ எப்படிப்பட்டவன்? சுயநலவாதியா? சமூக சிந்தனை உள்ளவனா? உனது நண்பனை பற்றி சகோதரனை பற்றி அக்கறை உள்ளவனா? உன்னுடைய தேவையை விட பிறருடைய தேவைக்கு முன்னுரிமை கொடுப்பவனா? என்று பல சோதனை (டெஸ்டு) களுக்கு உரிய பயணம் தான் ஹஜ்ஜுப்பயணம்.
நினைத்துக் கொள்ளாதீர்கள்; நம்முடைய பயணத்திற்கு நீங்கள் ஒரு மதிப்பு போடலாம். சாப்பாடு நன்றாக இருந்தது 5 ஸ்டார். ஹோட்டல் நன்றாக இருந்தது 5 ஸ்டார். பயணம் ஏற்பாடு நன்றாக இருந்தது 5 ஸ்டார். உங்களது பயணம் எல்லாம் கம்ஃபர்டபிள் எல்லாம் சவுரியமாக இருந்தது இந்த பயணத்திற்கு நான் ஒரு பைவ் ஸ்டார் மார்க் கொடுப்பேன் என்று.
சகோதரர்களே! அர்ஷுடைய இறைவன் அரசன் அவன் ஒரு மார்க் போடுவான். அவன் ஒரு தகுதியை நிர்ணயிப்பான். நீ செய்த ஹஜ் உன்னுடைய இபாதத்திற்கு என்னிடத்திலே என்ன மதிப்பு என்று.
அந்த மதிப்பானது, நாம் தங்கிய வசதியான அந்த தங்கும் இடங்களை வைத்து அல்ல. நாம் சாப்பிட்டோமே வகை வகையான உணவுகள் அதை வைத்து அல்ல.
நம்முடைய வசதிக்காக நாம் தேர்ந்தெடுத்தோம். கேட்டகிரி, டைமண்ட், பவளம், முத்து, ஸ்டாண்டர்ட், ஹை கிளாஸ் இதெல்லாம் நம்முடைய வசதிக்காக. நம்முடைய பழக்கத்தில் நாம் பழகிவிட்ட சில சுகங்களுக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டது; நாம் தேடிக் கொண்டது.
வசதி சுகங்கள் இதை வைத்து கொண்டு அல்லாஹு தஆலா ஹஜ்ஜுக்கு மார்க் போடுவானா? வசதி சுகங்களைக் கொண்டு ஈமான், தக்வா, இக்லாஸ், அல்லாஹ்வுடைய முஹப்பத் இவையெல்லாம் வந்துவிடாது. ஒரு மனிதன் குடிசையில் தங்குகிறான். ஒரு மனிதன் மாடி வீட்டிலே தங்குகிறான். அப்படித்தான் ஹஜ்ஜிலே நமது தங்குமிடங்களும். அல்லாஹு தஆலா அவரவருக்கு கொடுத்த அந்த பொருளாதாரத்தின் அடிப்படையிலே அவர்கள் தேடிக் கொள்ளக்கூடிய ஒன்றே தவிர இதற்கும் நம்முடைய ஹஜ் மக்புல் ஆக ஆவதற்கும் தொடர்பில்லை. நம்முடைய ஹஜ் அல்லாஹுவின் பார்வையிலே அல்லாஹ்வுடைய அன்புக்காக அல்லாஹ்வுடைய அந்த பொருத்தத்திற்காக அந்த தக்வாவிற்காக என்னை பரிசுத்தப்படுத்துவதற்காக என்று இருந்தால் அல்லாஹ்விடத்திலே அது ஏற்றுக் கொள்ளப்படும், இல்லை என்றால் கண்டிப்பாக அது ஏற்கப்படாது.
அது எதை வைத்து ஆகும்? நீங்கள் தல்பியா எப்படி சொன்னீர்கள்? நீங்கள் தல்பியா ஓதும்போது உங்களுடைய கல்பு எப்படி இருந்தது? ஒவ்வொரு நேரம் அந்த ஹஜ்ஜிலே ஒரு ஒரு அமலில் இருந்து இன்னொரு அமலுக்கு நீங்கள் திரும்பும் போது உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது? என்பதை கவனிக்க வேண்டும். அல்லாஹ்வுடைய பயம் எப்படி இருந்தது? அல்லாஹ்வுடைய பாசம் எப்படி கூடியது? என்ற தேடலிலே ஹஜ்ஜுடைய பயணம் நகருமேயானால் ஒவ்வொரு இபாதத்திலும் உங்களுடைய உள்ளங்களை அது உருக்கி உங்களுடைய கண்களை அழ வைத்து உங்களுடைய பாவங்களை நினைத்து அழ வைத்து அல்லாஹ்விடத்திலே நெருங்குவதிலே இவ்வளவு காலம் தாமதம் செய்து விட்டேனே என்று அந்த வருத்தத்தை உங்களுக்கு கொடுத்தால் அந்த ஹஜ் அல்லாஹ்விடத்திலே மதிப்பு போடப்படும்.
அல்லாஹ்வின் அடியார்களே! ஹஜ் என்பது ஏதோ நாம் முஸ்லிம் சமூகத்திலே வாழ்கிறோம். வசதி உள்ளவர்களாக இருக்கிறோம். யாரைப் பார்த்தாலும் கேட்கிறார்கள்; ஹஜ்ஜுககு போகலையா என்பதற்காக செய்யப்படக்கூடிய ஒரு இபாதத் அல்ல.
இதுவும் அல்லாஹு தஆலா உடைய ஒரு பெரிய ஏற்பாடு., வசதி உள்ளவர்களை பார்த்து நீங்கள் இன்னும் ஹஜ்ஜுக்கு போகலையா என்று கேட்பது கூட இதுவும் அல்லாஹ்வுடைய ஏற்பாடு. இல்லை என்றால் நம்முடைய செல்வந்தர்கள் எத்தனை பேர் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ஹஜ்ஜை தாமதப்படுத்திருப்பார்களோ!
ஒரு முஃமின் இந்த ஹஜ் உடைய ரகசியத்தை அடைந்து கொள்வானேயானால் அதில் இருக்கக்கூடிய இன்பம் இருக்கிறதே, தொழுகையில் என்ன இன்பம் இருக்கிறதோ, நோன்பில் என்ன இன்பம் இருக்கிறதோ, ஜக்காத்திலே சதக்காவிலே என்ன இன்பங்கள் இருக்கின்றனவோ அந்த எல்லா இன்பங்களையும் தனக்குள் ஒன்று சேர்த்த உள்ளடக்கிய ஒரு இபாதத் தான் ஹஜ் உடைய இபாதத்.
ஹஜ்ஜிலே ஐங்கால தொழுகை இருக்கிறது. நோன்பு இருக்கிறது. தான தர்மங்கள் இருக்கின்றன. ஜிகாதிலே இருப்பது போன்று உடலுக்கான சிரமம் இருக்கிறது. எனவே தான் ஹஜ் என்பது மட்டும் ஒரு ஜிகாத்.
அல்லாஹ்வின் அடியார்களே! மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தவ்ஹீத் உடைய தத்துவங்களை உள்ளடக்கியது. இன்று, முஸ்லிம் உம்மத் உடைய மிகப்பெரிய ஒரு அவல நிலை என்னவென்றால் முஸ்லிமானவர்தான் ஆனால் தவ்ஹீதை தெரியாதவர். முஸ்லிம், ஆனால் தவ்ஹீதை தெரியாதவர்.
அல்லாஹு தஆலா ஒவ்வொரு வணக்கத்திலும் தவ்ஹீத் உடைய வெளிப்பாடை வைத்திருக்கிறான். தவ்ஹீத் இல்லை என்றால் இஸ்லாம் இல்லை. ஒரு மனிதன் முஸ்லிம் ஆகுவது தவ்ஹீத் சாட்சியத்தை சொன்னால்தான். (அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது முஹம்மதர் ரசூலுல்லாஹ்)
இஸ்லாமிய மார்க்கம் ஏனைய தவறான பொய்யான மனிதர்களால் கற்பனையில் உருவாக்கப்பட்ட கொள்கையிலிருந்து கோட்பாடுகளில் இருந்து வழிகெட்ட சமயங்களில் இருந்து வேறுபடுகிறது என்றால் முதலாவது எதைக்கொண்டு வேறுபடுகிறது? இந்த மார்க்கத்தில் இருக்கக்கூடிய தவ்ஹீதை கொண்டு. ஈமானை கொண்டு.
அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரியவன். என்னுடைய வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அவனுக்கே நான் செய்வேன். நான் நெருப்பில் பொசுக்கப்பட்டாலும், நான் ஈட்டியால் குத்தப்பட்டாலும் எந்த நேரத்திலும் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்க மாட்டேன் என்ற அந்த ஓரிறை கொள்கை ஏகத்துவத்தில் தான் இந்த இஸ்லாமிய மார்க்கத்தினுடைய முதல் சிறப்பே ஆரம்பம் ஆகிறது.
ஆனால், முஸ்லிம் உம்மத்திலே பெரும்பாலானவர்களுக்கு இது தெரிவதில்லை. கப்ரை வணங்குவது தப்பா? கப்ருக்கு சஜ்தா செய்வது தப்பா? கப்ராலிகளிடத்திலே துஆ கேட்பது தப்பா? அங்கே நேர்ச்சை செய்வது தவறா? அங்கே சுற்றி வருவது தவறா? அவர்களிடத்திலே சென்று நீங்கள் துஆ கேட்பது தப்பா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு தான் இன்று பலருடைய இந்த இஸ்லாமிய கல்வியின் அறிவின் நிலை இருக்கிறது என்றால் சமுதாயம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்!
அல்லாஹ்வின் அடியார்களே! உலகத்தில் பின்தங்குவதால் படிப்பிலே பின் தங்குவதால் ஏற்படக்கூடிய அந்த பின்தங்குதலைக் கொண்டு நம்முடைய இழிவு இல்லை. நம்முடைய இழிவு எங்கிருக்கிறது தெரியுமா? தவ்ஹீதிலே அல்லாஹ்வின் மார்க்கத்திலே பின்தங்குவதை கொண்டு தான் நம்முடைய இழிவு, நம்முடைய கேவலம், நம்முடைய பலவீனம் இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் தவ்ஹீதின் மீது உருவாக்கப்பட்டார்கள். வஹ்தஹு லாஷரீக்க லஹு -அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டோம். அல்லாஹ்வுடைய சட்டம் மேலானது; அல்லாஹ்வுடைய கட்டளை மேலானது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீற மாட்டோம். அல்லாஹ்வுடைய தீனுக்காகத்தான் நாங்கள் அனுப்பப்பட்டு இருக்கிறோம்.
சஹாபாக்கள் உடைய ஒரே முழக்கமாக இருந்தது; எங்களை அல்லாஹ் அனுப்பி இருக்கிறான்.
இன்று ஒரு ஆட்சியாளரால் இதை சொல்ல முடியுமா? இன்று ஒரு முஸ்லிம் உம்மத் இந்த வார்த்தையை சொல்வதற்கு தகுதி வைத்திருக்கிறதா? என்ன ஒரு தகுதி நம்மிடத்திலே இருக்கிறது? நாங்கள் அல்லாஹ்வுடைய அடியான் என்று சொல்வதற்கு.
நம்முடைய தொழுகையை நாமே பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். தொழுது முடித்து வெளியே சென்றால் இந்த தொழுகையிலே ஓதப்பட்ட எல்லா வசனங்களுக்கும் மாறு செய்கிறோம். தொழுகையில் ஏன் வசனங்கள் ஓதப்படுகின்றன? சடங்குக்காகவா?
சூரத்துல் ஃபாத்திஹாவிலே அடியான் அல்லாஹு தஆலா இடத்திலே கேட்கிறான்:
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ
யா அல்லாஹ்! எனக்கு நேர்வழி காட்டு என்று. அவன் துஆ கேட்கிறான். (அல்குர்ஆன் 1:6)
அடுத்தது, அல்லாஹுத்தஆலா ஒரு சூராவை ஓத வைக்கிறான். மூஃமினே! நீ கேட்ட ஹிதாயத் அடுத்த சூராவில் இருக்கு. ஒவ்வொரு வசனமும் உனக்காக இறக்கப்பட்ட ஹிதாயத்.
ஒவ்வொரு வசனத்திலும் பாருங்கள்! படிப்பினை இருக்கின்றன. சிந்தித்துப் பார்க்கிறோமா? இந்த சூராவிலிருந்து எனக்கு என்ன பாடம் என்று.
اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَ
(அல்குர்ஆன் 108:1) (குறிப்பு-2)
சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? இந்த வசனம் எந்த படிப்பினை பாடத்தை குறிக்கிறது என்று. இது அல்லாஹ்வுடைய தூதரின் சிறப்பை மட்டும் சொல்கிறதா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மதிப்பை மட்டும் இந்த சூரா சொல்கிறதா? அவர்களுடைய உம்மத்திற்கு இதிலே ஆதரவு இருக்கிறது. அவர்களுடைய உம்மத்திற்கு இதிலே படிப்பினையை அல்லாஹ் வைத்திருக்கிறான்.
நபியை எதிர்ப்பவன் எப்படி இழிவடைவானோ அதுபோன்றுதான் நபியின் உம்மத்தை எதிர்ப்பவனும் இழிவடைவான். நபி எப்படி உயர்ந்தவர்களோ அவர்களுடைய உம்மத்தையும் அல்லாஹ் உயர்வு படுத்துவான்.
அல்லாஹுத்தஆலா கண்ணியத்தை நபிக்கு மட்டும் செய்யவில்லை.
وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
நீங்கள் துணிவிழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; நீங்கள்தான் உயர்ந்தவர்கள் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால். (அல்குர்ஆன் 3:139)
وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ
அல்லாஹ்வுக்கு கண்ணியம் இருக்கிறது. மிகைப்பவன் அல்லாஹ். அல்லாஹ்வுடைய தூதருக்கு கண்ணியம் இருக்கிறது. மிகைப்பவர்கள் அல்லாஹ்வுடைய தூதர். அடுத்து வசனத்தை முடித்து விட்டானா? முஃமின்களுக்கு கண்ணியம் இருக்கிறது. முஃமின்கள் மிகைப்பார்கள். (அல்குர்ஆன் 63:8) (குறிப்பு-3)
மேலும், ஒருபோதும் சத்தியமாக முஃமின்கள் மீது காஃபிர்களுக்கு ஆதிக்கத்தை முஃமின்களை அடக்குவதற்கு காஃபிர்களுக்கு நாம் அதிகாரத்தை கொடுக்க மாட்டோம் என்று அல்லாஹ் சொல்கிறானே. (அல்குர்ஆன் 4:141)
அந்த முஃமின்களாக இருக்கிறோமா? தவ்ஹீத் இல்லாத முஸ்லிம், ஷிர்க் செய்கிறோம். நேரடியான ஷிர்க். ஏன்? அவர்கள் இந்த மார்க்கத்தினுடைய ஷஹாதத்தை புரியவில்லை. ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள். எப்படி செல்கிறார்கள்? பாவாவுடைய அனுமதிக்காக காத்துக்கிட்டு இருக்கிறாராம். எதுக்கு? ஹஜ்ஜுக்கு! அப்ளை பண்றதுக்கு பாவாவின் ஹஜ்ரத்தின் அனுமதிக்காக.! எங்கே? ஏதாவது ஒரு தர்காவில் வந்து படுத்தால் கனவில் வந்து சொல்லனுமா! அந்த தர்காவில் அடங்கியிருக்கிறவங்க நீ ஹஜ்ஜுக்கு போகலாம். பச்சை பாவா பச்சைக் கொடி காட்டுவார். அப்பதான் ஹஜ்ஜுக்கு போகணும். போறதுக்கு முன்னாடி தர்காவுடைய வழிபாடு. சென்று வந்த உடனே நேரா பள்ளிவாசலுக்கு போக மாட்டாங்க. பள்ளிவாசலில் போய் தொழுதுட்டு வீட்டுக்கு போறது சுன்னத். நேரா தர்காவில் போய் சலாம் சொல்லி பாவா உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் பயணம் சலாமத்தா போயிட்டு சலாமத்தா வந்து விட்டேன் என்று ஒரு தர்காவுக்கு ஒரு கப்ருக்கு நன்றி செலுத்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள்.
சமுதாயத்திலே மார்க்க அறிஞர்களுக்கு ஆலிம்களுக்கு தெரியாதா? தங்களுடைய ஊர்களிலே அப்படிப்பட்ட ஒரு கேவலமான செயல் நடக்கின்றது. கேவலம் இதைப் பற்றி எல்லாம் அறிஞர்கள்?! பேச மாட்டார்கள்.
ஹஜ் வணக்கம், இதனுடைய தல்பியாவை எடுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹு தஆலா இந்த ஹஜ்ஜை பற்றி சொல்லும் பொழுதே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் குறிப்பிடுகின்றான்: சூரத்துல் ஹஜ் உடைய 26 ஆவது வசனம்.
وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِيْمَ مَكَانَ الْبَيْتِ اَنْ لَّا تُشْرِكْ بِىْ شَيْـٴًـــا
அல்லாஹ்வுடைய வணக்கத்திற்காக இந்த கஅபாவை நாம் கட்டிக் கொடுத்தோம் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 22:26) (குறிப்பு-4)
நோக்கம் என்ன? எனக்கு நீங்கள் யாரையும் இணை வைக்காதீர்கள். கஅபா அல்லாஹ்வுடைய வீடு பைத்துள்ளாஹ். அதனுடைய முதல் தன்மையே சிஃபத்தே எனக்கு சமமாக எதையும் ஆக்காதே.
இன்று, ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள். ஷிர்க் வைத்தவர்களாக ஹஜ்ஜுக்கு சென்று விட்டு திரும்புகிறார்கள். ஷிர்க்கான எண்ணங்களோடு ஷிர்க்கான செயல்களோடு. செல்வதற்கு முன்பும் ஷிர்க். வந்த பிறகும் ஷிர்க் செய்கிறார்கள் என்றால் அவர்களுடைய ஹஜ் கொண்டு அவர்கள் உணரவில்லை.
மீண்டும் அந்த ஹஜ்ஜுக்கு அவர்கள் வருகிறார்கள் என்றால் அய்யாமுல் ஜாஹிலியாவிலே முஷ்ரிக்குகள் செய்த ஹஜ்ஜுக்கும் இன்று இவர்கள் செய்யக் கூடிய ஹஜ்ஜுக்கும் இடையிலே என்ன வேறுபாடு இருக்கிறது?
அல்லாஹ்வின் அடியார்களே! ஷிர்க் என்பது சிலைகளை நிறுத்தி வைத்து வணங்குவது மட்டும் அல்ல. அது ஷிர்க்கினுடைய ஒரு வெளிப்பாடு. சைத்தான் ஒவ்வொருவரையும் வழி கெடுப்பதற்காக ஷிர்க்கை அவரவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப வழி கெடுத்துக்கொண்டே இருப்பான். காட்டிக்கொண்டே இருப்பான்.
இன்று, முஸ்லிம்களுடைய ஷிர்க் இருக்கிறதே இந்ந பெரியோர்களை மகான்களை நல்லவர்களை அடக்கஸ்தலங்களில் இருப்பவர்களை கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரிலே வரம்பு மீறி சென்று அல்லாஹ்வுக்கு சமமானவர்களாக ஆக்கிக் கொண்டார்கள்.
அல்லாஹு தஆலா கஅபாவின் முதல் நோக்கம் பற்றி சொல்கிறான்.
وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِيْمَ مَكَانَ الْبَيْتِ اَنْ لَّا تُشْرِكْ بِىْ شَيْـٴًـــا
இப்ராஹீமே! அல்லாஹ்விற்கு யாரையும் இணை வைக்காதீர்கள். (அல்குர்ஆன் 22:26)
அல்லாஹுத்தஆலா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஅபாவை கட்டி முடித்த போது ஒப்பந்தம் வாக்கு உறுதிமொழி வாங்குகிறான்.
இப்ராஹீமே! இந்த கஅபாவை நீங்கள் பரிசுத்தப்படுத்தி வையுங்கள்! சிலைகளிலிருந்து தவ்ஹீதினுடைய சுத்தத்தை கொண்டு இதை சுத்தப்படுத்துங்கள்!
ஒரு முக்கியமான செய்தியை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுடைய ஊர்களிலே பள்ளிகளிலே கேலண்டர் மாட்டி இருக்கும். கடைகளுடைய விளம்பரங்களுக்காக முஸ்லிம்கள் அல்லாதவர்கள் கஅபா படங்களை போட்டு உங்களுக்கு கேலண்டர் அடித்து கொடுத்திருப்பார்கள். நீங்கள் எல்லாம் பள்ளிகளிலே வரிசையாக மாற்றி வைத்திருப்பீர்கள்.
உங்களுக்கு தெரியுமா? பார்த்து இருக்கிறீர்களா? அந்த கேலண்டர்களிலே நூற்றிலே 99 கேலண்டர்களிலே ஒரு ஒரு பேப்பரை கிழிக்கும் பொழுது பெரும்பாலும் சைத்தானுடைய படங்கள் இருக்கும். அதற்கு பின்னால் சைத்தானுடைய சிலைகள் உடைய படம் இருக்கும். எப்படி முஸ்லிம்களுடைய மஸ்ஜிதில் சிலைகளைக் கொண்டு வந்து சைத்தான் வைத்து விட்டான் முஸ்லிம்கள் மாட்டி பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
சிலை என்பது அது இவ்வளவு பெருசாக இருந்தாலும் சரி, உயரம் இருந்தாலும் சரி, சிலை சிலை தான். அது மட்டுமா? அங்கே நேரம் காலம், ராகு காலம் என்று எல்லா ஷைத்தான்கள் குஃப்ரான நம்பிக்கையினுடைய அந்த ஜோசியங்கள் எல்லாம் எழுதப்பட்டு இருக்கும். தொழுதுவிட்டு செல்லக்கூடிய அப்பாவிகளிலே பலர் அதைப் பார்த்தார்கள் என்றால் எப்பேற்பட்ட தவறான ஒரு ஈமானிய பரிதாப நிலைக்கு ஆளாகுவார்கள்! யோசித்துப் பாருங்கள்!
இன்று, இந்த ஈமானுடைய இந்த புரிதலுக்கு மக்கள் வரவில்லை. நான் உங்களிடத்திலே வாக்கு வாங்குகிறேன், காபாவை சுத்தப்படுத்தி வையுங்கள் என்று அல்லாஹு தஆலா இப்ராஹீம் நபி இடத்திலே சொல்கிறான்.
அல்லாஹ்வை வணங்குவதற்காக கட்டப்பட்ட அந்த பரிசுத்தமான பள்ளிவாசலிலே அவ்வளவு சிலைகளை கொண்டு வந்து குவித்து விட்டார்கள். அந்த சிலைகளை அந்த கஅபாவிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக அல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான்.
நபிமார்களின் தவ்ஹீத் உடைய மார்க்கத்தை புதுப்பிப்பதற்காக அல்லாஹ் அனுப்பினான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொறுத்தார்கள்; பொறுத்தார்கள்; பொறுத்தார்கள், எட்டாம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்ட போது முதலாவதாக அவர்கள் செய்த சீர்திருத்தம் என்ன? அந்தக் கஅபத்துல்லாஹ்விலிருந்து அந்த முஷ்ரிக்குகள் உள்ளும் வெளியேயும் மாட்டி வைத்திருந்த அத்தனை சிலைகளையும் உடைத்து எறிந்தார்கள். கஅபாவை பரிசுத்தப்படுத்தினார்கள்.
அது மட்டுமல்ல, அடுத்த ஹிஜ்ரி பத்தாவது ஆண்டிலே இனி முஷ்ரிக்குகள் யாரும் இந்த மக்கா நகரத்திலே பூமியிலே வசிக்க கூடாது. நான்கு மாதங்கள் அனுமதி. ஒன்று முஸ்லிமாக வேண்டும்; இல்லை என்றால் ஊரை விட்டு ஓடு என்று பகிரங்கமான அறிவிப்பு செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் புறத்திலிருந்து அல்லாஹ்வின் தூதரின் புறத்திலிருந்து உண்டான அறிவிப்பு என்பதாக. (அல்குர்ஆன் 9:1)
அல்லாஹ்வின் அடியார்களே! ஷிர்க் என்பது அவ்வளவு பயங்கரமானது. ஒரு மூஃமின் ஹஜ்ஜுக்கு செல்பவர் அவர் சொல்லக்கூடிய அந்த முதல் தல்பியாவிலே அவனுடைய நிய்யத்தைக் கொண்டு தான். அந்த தல்பியாவை கொண்டுதான். அந்த தல்பியாவே தொழுகைகளைக் கொண்டுதான்.
எத்தகைய மகத்தான வாக்கியம் தெரியுமா? இவ்வளவு மகத்தான ஆழமான சிந்தனைகளை உடைய கருத்துகளை உடைய தூது செய்திகளை உடைய வாக்கியம் தெரியுமா? ஒர் அடியானுடைய இதயம் துடித்து விட வேண்டும்.
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
அல்லாஹ் உன்னிடத்திலே நான் வந்து விட்டேன். ஆஜராகி விட்டேன். உன் அழைப்புக்கு நான் பதில் அளித்து விட்டேன். (ஒரு முறையா?) அல்லாஹ்வே வந்து விட்டேன்; அல்லாஹ்வே வந்து விட்டேன்; உனக்கு இணை யாரும் இல்லை. என்னுடைய குடும்பத்தை என்னுடைய மனைவி மக்களை எனது செல்வத்தை எனது ஆட்சியாளரை இந்த உலகத்தில் எந்த ஒன்றையும் நான் உனக்கு இணையாக்க மாட்டேன். (குறிப்பு:5)
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1905.
அல்லாஹ்வுடைய அன்பிலே இணை வைக்கக் கூடாது. அல்லாஹ்வுடைய பயத்திலே இணை வைக்கக் கூடாது. வெறும் சுஜூது செய்வது மட்டுமல்ல. எந்த ஒன்றிலும் அல்லாஹ்வுக்கு யாரையும் சமமாக்க கூடாது. துஆ அல்லாஹ்விடத்தில் தான் கேட்பேன். பயப்படுவேன். அல்லாஹ்வை மட்டும் தான் ஆதரவு வைப்பேன். அல்லாஹ்வை மட்டும் தான் எல்லாம் என்னுடைய ரப்புக்கு தான் என்னுடைய ரப் அனுமதி அளித்ததை தவிர நான் எதையும் செய்ய மாட்டேன் என்ற அந்த வாக்கை அடியான் அங்கே கொடுக்கின்றான்.
ஒரு அடியான் அல்லாஹ்வின் சட்டங்களை மதிப்பதில்லை. அல்லாஹ்வின் மார்க்கத்தை மீறுகிறான். இவருடைய தல்பியா எப்படி அவருடைய உள்ளத்தில் இருந்து வரக்கூடிய தல்பியாவாக இருக்கும்? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை காலிலே போட்டு மிதிக்கின்றான். அவனுடைய நபியின் சுன்னத்தை புறக்கணிக்கிறான்.
ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; யார் ஹராமான செல்வத்திலிருந்து ஹஜ் செய்வார்களோ அவர்கள் தல்பியா சொல்லும் பொழுது உன்னுடைய தல்பியா நிராகரிக்கப்பட்டது; உன்னுடைய தல்பியா அங்கீகரிக்கப்படவில்லை என்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து மறுக்கப்படும் என்பதாக.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தபரானி.
(குறிப்பு: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் சர்ச்சை இருக்கிறது. ஆனாலும் அறிஞர்கள் இதன் கருத்தை ஏற்றிருக்கிறார்கள்.)
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
إنَّ الله طيبٌ، لا يقبل إلا طيِّبًا
அல்லாஹு தஆலா தூய்மையானவன். அவன் தூய்மையானதை தான் ஏற்றுக் கொள்வான். (குறிப்பு:6)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1015.
முஃமின்களே! நீங்கள் தர்மம் கொடுக்க வேண்டுமா?
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَيِّبٰتِ مَا كَسَبْتُمْ
நீங்கள் சம்பாதித்ததில் ஹலாலானதை தேடி நீங்க அல்லாஹ்வுடைய பாதையிலே தர்மம் கொடுங்கள். (அல்குர்ஆன் 2:267)
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஹஜ்ஜுடைய வணக்கம் பல தத்துவங்களை பல தாத்பரியங்களை கொடுக்கக்கூடியது. அதிலே குறிப்பாக முதலாவது சொல்லக்கூடிய இந்த தல்பியா இருக்கிறதே தவ்ஹீதினுடைய உச்சகட்டம். இது அடியான் தன்னுடைய உள்ளத்தை அல்லாஹ்விற்கு முன்னால் சமர்ப்பித்து விடக்கூடிய மிகப்பெரிய ஒரு முழக்கம் இது.
யா அல்லாஹ்! நான் என்னென்ன வாழ்க்கையில் சுகங்களை அனுபவித்தேனோ, என்னென்ன வசதிகள் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றனவோ, நான் என்னென்ன பெருமைகளை சேர்த்தேனோ இதுவெல்லாம் எனக்கு சொந்தமானது அல்ல. எல்லாப் புகழும் உனக்குத்தான். மக்கள் என்னை புகழ்கிறார்களா? அந்தப் புகழ் எல்லாம் உனக்குத்தான். நான் ஒரு தகுதியற்றவன். எனக்கு எதுவும் இல்லை. நான் மண்ணில் இருந்து படைக்கப்பட்டேன். பிறகு மண்ணாகக்கூடியவன். உனக்கு சுஜூது செய்து உனக்கு பணியவில்லை என்றால் உனக்கு கீழ்படியவில்லை என்றால் எனக்கு எந்த மதிப்பும் இல்லை.
அடியான், அல்லாஹ்விடத்திலும் அல்லாஹ்வின் அடியார்களிடத்திலும் மதிப்பை அடைகிறான் என்றால் அல்லாஹ்வுடைய தவ்ஹீதத்தை கொண்டு தான். அதுவும் இந்த ஹஜ் உடைய படிப்பினைகளில் ஒன்றை இன்ஷா அல்லாஹ் மீண்டும் பார்ப்போம்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய சகோதரர்கள் நம்முடைய குடும்பத்தார்களில் யார் ஹஜ்ஜுக்கு செல்கிறார்களோ அவர்கள் பயண ஏற்பாடுகளை எல்லாம் சரியாக செய்து கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி நாம வேற அரஃபாவிலும் மினாவிலும் முஸ்தலிபாவிலும் சாப்பிடுவதற்கு அதை வாங்கிட்டீங்களா? இதை வாங்கிட்டீங்களா? என்று கேட்டுகிட்டு இருக்கிறோம்.
இன்னைக்கு காலையில ஹஜ். நேத்து ஒருத்தர் ராத்திரியில போன் பண்றாரு ஹஜ் உடைய சட்டத்தை கேட்டு. ஹஜ் உடைய காலையில் 6:00 மணிக்கு ஃப்ளைட். ஹஜ் உடைய சட்டத்தை கேட்டு 11:00 மணிக்கு போன் பண்றாரு.
எப்படி மக்கள் இருக்கிறார்கள் பாருங்கள்! ஒரு மாசமா நாலு மாசமா இந்த குப்பையை மூட்டை கட்டியது தான் மிச்சம். ஹலால் ஹராமை தெரியவில்லை. சட்டங்களை தெரியவில்லை. கொஞ்சம் ஈமானிய உணர்வுகளோடு அதற்கெல்லாம் நேரமில்லை.
சகோதர்களே! எவ்வளவு பெரிய பொருள்களை செலவு செய்கிறார்கள். எவ்வளவு நேரங்களை கொடுக்கின்றார்கள். ஆனால் அதை எதற்காக என்று உணராமல் செய்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் மன்னிப்பானாக! அல்லாஹ் நம்மை திருத்துவானாக!
நம்முடைய ஹாஜிகளுடைய ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அல்லாஹ்வால் பொருந்தி கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக நன்மைகள் நிறைந்த ஹஜ்ஜாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நமக்கும் அல்லாஹுத்தஆலா அல்லாஹ்வுடைய வீட்டை மீண்டும் மீண்டும் ஹஜ் செய்வதற்கு உம்ரா செய்வதற்கான தவ்ஃபீக்கை அல்லாஹ் தந்தருள்வானாக! யாருக்கு இதுவரை ஹஜ் நசீபாகவில்லையோ அவர்களுக்கு அல்லாஹு தஆலா ஹஜ்ஜை விரைவாக நசீபாக்கி தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ
இன்னும், ஹஜ்ஜுக்காக மக்களுக்கு (மத்தியில்) அறிவிப்(புச் செய்து அவர்களை அழைப்)பீராக! அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள். இன்னும் தூரமான பாதைகளிலிருந்து வருகின்ற மெலிந்த எல்லா (வகையான) வாகனத்தின் மீது (வாகனித்தவர்களாகவும் வருவார்கள்). அவர்கள் தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும், (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்த கால்நடை பிராணிகள் மீது குறிப்பிட்ட (அந்த ஹஜ்ஜுடைய) நாட்களில் (அவற்றை அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயரை நினைவு கூர்வதற்காகவும் (அவர்களை ஹஜ்ஜுக்கு அழைப்பீராக!) ஆக, (அல்லாஹ்விற்காக அறுக்கப்பட்ட) அவற்றிலிருந்து புசியுங்கள். இன்னும், வறியவருக்கும் ஏழைக்கும் (அவற்றிலிருந்து) உணவளியுங்கள். (அல்குர்ஆன் 22:27,28)
குறிப்பு: (2)
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2) إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)
(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) ‘கவ்ஸர்’ஐ உமக்குக் கொடுத்தோம். ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக! நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்). (அல்குர்ஆன் 108:1-3)
குறிப்பு: (3)
يَقُوْلُوْنَ لَٮِٕنْ رَّجَعْنَاۤ اِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ
“நாம் மதீனாவிற்கு திரும்பினால் கண்ணியவான்கள் (ஆகிய நாம்) தாழ்ந்தவர்(களாகிய முஹாஜிர்)களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்ற வேண்டும்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்தான் கண்ணியம் உரியது. என்றாலும், நயவஞ்சகர்கள் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 63:8)
குறிப்பு: (4)
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَنْ لَا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
இன்னும், (நபியே!) இப்ராஹீமுக்கு (கஅபாவாகிய எனது) ஆலயத்தின் இடத்தை நாம் (காண்பித்து கொடுத்து அதில் ஆலயத்தை புதிதாக கட்டி எழுப்ப) அமைத்து கொடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக! (இப்ராஹீமே!) நீர் எனக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்! மேலும், எனது வீட்டை (அதை) தவாஃப் செய்பவர்களுக்காகவும் தொழுகையில் நிற்பவர்களுக்காகவும், குனிபவர்களுக்காகவும், சிரம் பணிபவர்களுக்காகவும் (சிலைகளை விட்டும்) சுத்தமாக வைத்திருப்பீராக! (அல்குர்ஆன் 22:26)
குறிப்பு: (5)
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
உன் அழைப்புக்குப் பதில் அளித்து விட்டேன்; அல்லாஹ்வே! உன் அழைப்புக்குப் பதில் அளித்து விட்டேன்; உன் அழைப்புக்குப் பதில் அளித்து விட்டேன்; உனக்கு இணை துணை அறவே இல்லை; உன் அழைப்புக்குப் பதில் அளித்து விட்டேன்; நிச்சயமாகப் புகழ், அருட்கொடை, ஆட்சி அனைத்தும் உனக்கே சொந்தமானது; உனக்கு இணை துணை அறவே இல்லை.
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1905.
குறிப்பு: (6)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ { يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} وَقَالَ { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} " . ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ " .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). "நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். "அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவா, என் இறைவா" என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1015.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/