ஹாஜிகளின் பொறுப்பும் கடமையும் | Tamil Bayan - 973
ஹாஜிகளின் பொறுப்பும் கடமையும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹாஜிகளின் பொறுப்பும் கடமையும்
வரிசை : 973
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 20-06-2025 | 24-12-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை அவனைப் பயந்து கொள்ள வேண்டிய முறையில் பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் தக்வாவையும் அச்சத்தையும் உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹு தஆலாவை நம்மால் முடிந்த அளவு தனிமையிலும், சபையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், எல்லா நிலைகளிலும் பயந்து வாழுமாறு; அல்லாஹ்வின் சட்டங்களைப் பேணி வாழுமாறு; அல்லாஹ் தடுத்த சிறிய, பெரிய பாவங்களை விட்டு விலகி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக, நினைவூட்டியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக; அல்லாஹு தஆலா நம்முடைய இம்மை வாழ்க்கையை மறுமை வாழ்க்கைக்காக ஏற்றுக்கொள்வானாக; அல்லாஹு தஆலா நன்மைகளோடு நம்மை நெருக்கமாக்கி வைப்பானாக! தீமைகளை விட்டு, பாவங்களை விட்டு, குற்றங்களை விட்டு, மேலும் அல்லாஹு தஆலாவிற்கு பிடிக்காத ஒவ்வொரு கெட்ட கொள்கைகளிலிருந்தும், கெட்ட செயல்களிலிருந்தும், கெட்ட ஆசைகளிலிருந்தும் அல்லாஹு தஆலா நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்.
அல்லாஹு தஆலா இஸ்லாமிய மார்க்கத்தில் ஒவ்வொரு இபாதத்தையும் அதற்கான ஒரு செய்தியோடு, அதற்கான சில அடையாளங்களோடு, அதற்கான சில கடமைகளோடும் பொறுப்புகளோடும் கொடுத்திருக்கிறான். நம்முடைய மார்க்கம் நமக்கு கற்றுத் தந்திருக்கக்கூடிய ஒவ்வொரு இபாதத்தினாலும் நமக்கு ஒரு தர்பியா (பயிற்சி) வழங்கப்படுகிறது.
அல்லாஹு தஆலாவை எப்படி வணங்க வேண்டும்? அல்லாஹ்வின் வணக்கம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அல்லாஹுவை வணங்குவதற்காகத்தான் நான் படைக்கப்பட்டிருக்கிறேன்.
எல்லா நிலைகளிலும், எத்தகைய சந்தர்ப்பங்களிலும் அல்லாஹுவை வணங்குவதுதான் என்னுடைய வாழ்க்கையின் முதல் குறிக்கோள். அந்த இபாதத்திற்குப் பிறகுதான் ஓய்வு, குடும்பத் தேவை மற்றும் இந்த உலக வாழ்க்கை.
இப்படிப்பட்ட ஒரு உன்னதமான தர்பியத்தை (பயிற்சியை) அல்லாஹு தஆலா ஒவ்வொரு வணக்க வழிபாட்டிலும் நமக்கு வைத்திருக்கிறான். ஆகவேதான், அல்லாஹு தஆலா நமக்கு சூரத்துல் ஜுமுஆவில் என்ன கட்டளை இடுகிறான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ
நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் (வெள்ளிக் கிழமை பிரசங்கத்தை செவியுறுவதன் பக்கம்) நீங்கள் விரையுங்கள்! இன்னும், வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் (அதன் நன்மையை) அறிகிறவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். (அல்குர்ஆன் 62:9)
வெள்ளிக்கிழமை அல்லாஹ்வின் வணக்கத்தின் பக்கம், அல்லாஹ்வின் நினைவின் பக்கம் அழைக்கப்பட்டால், நீ வியாபாரத்தை விட்டு விட வேண்டும். நீ அல்லாஹ்வின் பக்கம், தொழுகையின் பக்கம், மஸ்ஜிதின் பக்கம் விரைந்து வர வேண்டும் என்று அல்லாஹு தஆலா கட்டளை இடுகின்றான்.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, அவன் எப்போது முஸ்லிமாக இருப்பான் என்றால், அல்லாஹ்வை இந்த உலக வஸ்துக்கள், இந்த உலகப் பொருட்கள், உலகத் தேவைகள் அனைத்தையும் விட முன்னிலைப்படுத்தியவனாக, முதன்மைப்படுத்தியவனாக, அவனுடைய வணக்க வழிபாட்டை முதன்மைப்படுத்தியவனாக இருக்கின்ற வரையில் அவன் முஸ்லிமாக இருப்பான்.
ஒரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவனுக்கும் இடையிலே இருக்கக்கூடிய முதல் வேறுபாடே அதுதான். நமக்கு முதலாவதாக லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ﷺ அதற்குப் பிறகுதான் கணவனுக்கு மனைவி, மனைவிக்கு கணவன், பெற்றோருக்கு பிள்ளை, பிள்ளைகளுக்கு பெற்றோர், நண்பனுக்கு நண்பன், மக்களுக்கு நாடு. இது எல்லாம் இந்த லா இலாஹ இல்லல்லாஹ் க்குப் பிறகுதான்.
இதுதான் எங்களுக்கு, இதற்காகத்தான் நான் படைக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய கப்ரின் வாழ்க்கை இதைக் கொண்டுதான் சிறப்பாகும். என்னுடைய மஹ்ஷரில் என்னுடைய தாய், தந்தை என்னுடன் இருக்க மாட்டார்கள். எனது நாடு என்னோடு நிற்காது. என்னுடைய சமூகம் என்னோடு நிற்காது.
என்னோடு நிற்கக்கூடிய ஒரே ஒரு திருவாசகம், ஒரே ஒரு கலிமா — லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ இந்த கலிமாவைக் கொண்டு தான் எனக்கு பெற்றோர்; இந்த கலிமாவைக் கொண்டு தான் எனக்கு உறவுகள்; இந்த கலிமாவைக் கொண்டு தான் எனக்கு சமூகம்.
இந்த கலிமாவை தகர்க்கக்கூடிய, இந்த கலிமாவை பலவீனப்படுத்தக்கூடிய எதையும், எந்தச் சூழலிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பவன்தான் முஸ்லிம்.
அத்தகைய ஒரு இஸ்லாமைத் தான் நபிமார்கள் போதித்தார்கள். அந்த இஸ்லாமின் பக்கம் தான் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ சஹாபாக்களை அழைத்தார்கள்.
சூரத்துல் முனாஃபிகூன் — வெள்ளிக்கிழமையிலே ஓதக்கூடிய முக்கியமான சூரா. அந்த சூரா எப்போது இறங்கியது? அந்த சூராவின் முக்கியமான வாசகம்;
يَقُوْلُوْنَ لَٮِٕنْ رَّجَعْنَاۤ اِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ
“நாம் மதீனாவிற்கு திரும்பினால் கண்ணியவான்கள் (ஆகிய நாம்) தாழ்ந்தவர்(களாகிய முஹாஜிர்)களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்ற வேண்டும்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்தான் கண்ணியம் உரியது. என்றாலும், நயவஞ்சகர்கள் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 63:8)
அல்லாஹு தஆலா எப்போது இறக்கிறான்? முனாஃபிக்குகளுடைய தலைவன் உபை இப்னு சலூல், தன்னுடைய சகாக்களுக்கிடையில் பேசிக்கொள்கிறான்.
“இந்த மக்காவாசிகள் நாடோடிகளாக வந்தவர்கள். இன்று நாம் அவர்களுக்கு இடம் கொடுத்தவுடன் நமது உரிமைகளைப் பறிக்கிறார்கள். கேவலப்பட்டு, பலவீனப்பட்டு ஒண்ட வந்தவர்கள். இன்று நம்மை மிகைக்கப் பார்க்கிறார்கள். நாம் மதினாவிற்கு திரும்பினால் அவர்களை எல்லாம் விரட்டுவோம்” என்று சொல்லுகிறான்.
சொல்லியது யார்? உபை இப்னு சலூல் — முனாஃபிக்குகளுடைய தலைவன். மதினாவில் மிகப்பெரிய பதவியில் இருந்தவன். அல்லாஹ்வின் தூதர் ﷺ அந்த குறிப்பிட்ட நேரத்தில் வந்திருக்கவில்லை என்றால், மதினாவாசிகள் எல்லாம் இவனைத் தான் தங்களுடைய மன்னனாகத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். அப்படிப்பட்ட அதிகாரத்தில் இருந்தவன். அவன் ஒரு பக்கம் முனாஃபிக்.
ஆனால், அவருடைய மகன் அப்துல்லாஹ் மிகப்பெரிய தியாகி; ஈமானால் உள்ளம் நிரம்பியவர்; அல்லாஹ்வுடைய அன்பாலும், அல்லாஹ்வுடைய தூதரின் அன்பாலும் உள்ளம் நிரம்பியவர். தன்னுடைய தந்தை இப்படிப்பட்ட வார்த்தையைச் சொல்லிவிட்டார் என்று தெரிந்தவுடன், ஓடோடி வருகிறார் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களிடம்.
அன்பான சகோதரர்களே! அரபு உலகத்தில் தந்தையை மதிப்பது என்பது அவர்களுடைய ரத்தத்தோடு ஊறிய ஒன்று. முதல் மதிப்பு தந்தைக்குத் தான். ஆகவேதான், ஹதீஸ்களில் நீங்கள் பார்க்கலாம்: அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொல்லும்போது, “உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தையைவிடவும், அவருடைய பிள்ளைகளைவிடவும் நான் விருப்பமானவராக ஆக வேண்டும்” என்று சொல்லியிருப்பார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 15.
எல்லா இடங்களிலும் தந்தையின் அன்பு, தந்தையின் மதிப்பு முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக இந்த அப்துல்லாஹ் இருக்கிறாரே! அரபு உலகத்திலேயே தந்தைக்கு கீழ்ப்படிவதிலும், தந்தையை மதிப்பதிலும் மிகவும் பிரபலமானவர். இவரைப் போல தந்தையை மதிப்பவர் யாரும் இருக்கமாட்டார் என்று அரபு உலகத்திலேயே அறியப்பட்டவர்.
அவர், ரசூலுல்லாஹ் ﷺ அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களை இப்படிப் பேசியுள்ளார். உங்களது தோழர்களைப் பற்றி இப்படிப் பேசியுள்ளார். எனக்கு அனுமதி கொடுங்கள்; அவருடைய கழுத்தை நான் வெட்டி விடுகிறேன்” என்று கேட்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ “வேண்டாம்” என்று மறுக்கிறார்கள்.
சரி, அத்தோடு பிரச்சினை முடிந்துவிட்டதா? இல்லை. அல்லாஹ்வின் தூதர் ﷺ கொல்வதை மட்டுமே தடுத்தார்கள்.
அப்துல்லாஹ் என்ன செய்தார்? மதினாவின் வாசலில் நின்றுகொண்டார். படை திரும்பிக்கொண்டிருக்கிறது. அந்தப் படைகளில் ஒருவரொருவராகப் பார்த்து உள்ளே அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அவருடைய தந்தை, அவருடைய தோழர்களுடன் வந்தவுடன், வாளை உருவி நின்றுகொள்கிறார்.
“உன்னுடைய நாவினால் நீயும், உன்னுடைய சகாக்களும் இழிவானவர்கள்; அல்லாஹ்வுடைய தூதரும் நபித்தோழர்களும் கண்ணியமானவர்கள்” என்று சொல்லாத வரை, உன்னை மதினாவிற்குள் நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறார்.
சகோதரர்களே! அதற்குப் பிறகு அந்த முனாஃபிக் தன்னுடைய நாவினால் சொல்கிறான்:
“முஹம்மது ﷺ அவர்களும், அவருடைய தோழர்களும் கண்ணியமானவர்கள்; நானும் என் சகாக்களும் இழிவானவர்கள்.”
அதற்குப் பிறகே, அவர் மதினாவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகிறார். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : ஜைத் இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4901.
இதுதான் ஒரு முஃமினுடைய ஈமான், இதுதான் ஒரு முஸ்லிமுடைய ஈமான். நம்முடைய வணக்க வழிபாடுகள் நமக்கு இத்தகைய தர்பியத்தை கொடுக்கின்றன.
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எந்த இபாதத்தையும் அதற்கான நோக்கத்தோடு புரிந்து செய்வதற்கு நமக்கு நேரமே இல்லை. தக்பீர் கட்டியதிலிருந்து சுஜூது வரை நம்முடைய இந்த அசைவு–அமைதிகளில் எதையாவது ஒன்று சிந்திக்கிறோமா? சுஜூது ஏன் என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? தக்பீர் ஏன் என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
அல்லாஹ்வின் அடியார்களே! ஹஜ் வணக்கம் என்பது இப்படி கடந்து போகக்கூடிய வணக்கம் அல்ல. ஒவ்வொரு வணக்கத்திற்குப் பின்னாலும் தத்துவங்கள் இருக்கின்றன, விளக்கங்கள் இருக்கின்றன, பயிற்சிகள் இருக்கின்றன, நோக்கங்கள் இருக்கின்றன. அல்லாஹு தஆலா ஹஜ் வணக்கத்தை நம்முடைய நஃப்ஸுக்கான மிகப்பெரிய ஒரு தர்பியத்தாக ஆன்மிக பயிற்சியாக ஆன்மாவுக்கான பயிற்சியாக கொடுத்திருக்கின்றான்.
நம்முடைய நஃப்ஸை பக்குவப்படுத்துவது, பழக்கப்படுத்துவது – எப்படி ஒரு குதிரை வீரன் தன்னுடைய குதிரையைப் போருக்கும், விளையாட்டுக்கும் பழக்கப்படுத்துவானோ, அதுபோன்றுதான் நம்முடைய நஃப்ஸும். அதை எப்படி பழக்கப்படுத்துகிறோமோ, அப்படியே அந்த நஃப்ஸ் பழகிக் கொள்ளும்.
வணக்க வழிபாடுகளுக்கான ஒரு பயிற்சி இந்த ஹஜ் வணக்கத்தில் இருக்கிறது. அடியான் தன்னுடைய ஓய்வுகளை, தன்னுடைய பொதுவான நேரங்களை, அவனுடைய இன்பங்களை, சுகங்களை, உறவுகளை, நட்புகளை எல்லாம் அல்லாஹ்வுடைய வணக்கத்திற்காக ஒதுக்கி வைக்கிறான். அவற்றை விட்டு அவன் தூரமாகிறான்.
அல்லாஹ்வுடைய அன்பு கிடைக்க வேண்டும், அல்லாஹ்வை வணங்க வேண்டும், அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹஜ் வணக்கம் என்பது நம்முடைய ரப்பை வணங்குவதற்கான இபாதத்திற்குரிய மிகப்பெரிய ஒரு பயிற்சி.
ஏதோ நம்மிடத்தில் கொஞ்சம் காசு–பணம் வந்து விட்டது; ஊரில் உள்ளவர்கள் எல்லாம் “ஹஜ் செல்லுங்கள்” என்று சொன்னார்கள்; சென்றுவிட்டோம்; சில பொருட்களை வாங்கினோம்; ஹாஜி என்ற பெயரோடும் பட்டத்தோடும் ஓடி வந்து விட்டோம்; மக்கள் எல்லாம் கை கொடுத்தார்கள், கட்டித் தழுவினார்கள் – என்பதல்ல ஹஜ்.
ஹஜ் என்பது இதற்கு மேல் உள்ள மிகப்பெரிய தத்துவங்களை உள்ளடக்கியது. வணக்க வழிபாட்டின் ஆர்வம் ஒரு முஃமினிடத்தில் வரவேண்டும்; இபாதத்துக்கான வேகம் வரவேண்டும். இபாதத்துக்காக சிரமங்களை சகித்துக் கொள்ளக்கூடிய அந்தப் பக்குவம் வரவேண்டும்.
“என்னுடைய ஓய்வா? என்னுடைய சுகமா?” – இவை அனைத்தையும் அல்லாஹ்வுடைய வணக்கத்திற்காக நான் அர்ப்பணிப்பேன்.
ஹாஜிகள் மினாவுக்கு செல்கிறார்கள்; மினாவிலிருந்து அரஃபா, அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா, பிறகு முஸ்தலிஃபாவிலிருந்து மினா, பிறகு மினாவிலிருந்து அல்லாஹ்வுடைய வீடு அல்-மஸ்ஜிதுல் ஹராம், கஅபத்துல்லாஹ், பிறகு மீண்டும் மினா, பிறகு கல்லெறிவதற்கு – இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய அலைச்சலை ஏன் அல்லாஹு தஆலா அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறான்?
அல்லாஹு தஆலாவிற்கு என்ன வேண்டும்?
لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ
அவற்றின் இறைச்சிகள், அவற்றின் இரத்தங்கள் அல்லாஹ்வை அறவே அடையாது. எனினும், இறையச்சம்தான் உங்களிடமிருந்து அவனை அடையும். (அல்குர்ஆன் 22:37)
குர்பானியுடைய மாமிசங்கள் அல்லாஹ்விற்கு தேவையில்லை. அதனுடைய ரத்தங்கள் அல்லாஹ்விற்கு தேவையில்லை, உங்களுடைய தக்வா அல்லாஹ்விற்கு தேவை. உங்களுடைய தக்வா தான் அல்லாஹ்விற்கு சேரும் என்று சொல்கிறானே!
அன்பான சகோதரர்களே! அதுதான் இங்கே முக்கியம். அல்லாஹு தஆலா இந்த அலைச்சலைக் கொண்டு, சிரமங்களைக் கொண்டு, என்னுடைய அடியான் எதை நாடுகிறான்? யாரைத் தேடுகிறான்? யாருக்காக இதையெல்லாம் செய்கிறான்? என்று அல்லாஹ் பார்த்து மகிழ விரும்புகிறான்.
ஆகவேதான் ஹதீஸ் குத்ஸியிலே பார்க்கிறோம். அரஃபாவின் தினத்திலே அல்லாஹுத்தஆலா முதல் வானத்திற்கு இறங்கி, மலக்குகளை எல்லாம் ஒன்று கூட்டி, அந்த மலக்குகளிடத்தில் பேசுகிறான்:
என் வானவர்களே! இதோ எனது அடியார்கள்; புழுதி படிந்த மேனியோடு, தலைமுடி எல்லாம் பரட்டையாக, இங்கே வந்து ஒன்று கூடியிருக்கிறார்களே!
யாருக்காக? எதற்காக? எதை எதிர்பார்த்து இருக்கிறார்கள்?
அல்லாஹு தஆலா சொல்கிறான்: நீங்கள் சாட்சியாக இருங்கள்; நான் அவர்களை மன்னித்து விட்டேன்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1348.
லப்பைக் என்று அந்த அடியான் அங்கே கதறிக் கொண்டிருக்கிறானே!
லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வ யுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
ஒரு பக்கம் தன்னுடைய உலகத் தேவையை கேட்கிறான், மறுமையின் தேவையை கேட்கிறான், தவ்ஹீதுடைய வார்த்தையை முழங்குகிறான். பிறகு தல்பியாவை ஓதுகிறான். அல்லாஹு தஆலா பார்த்து சந்தோஷப்படுகிறான்:
யாருக்காக என் அடியான் இதையெல்லாம் செய்கிறான்? எங்கேயோ பிறந்தவன், எப்படியோ வாழ்ந்தவன், எவ்வளவு வசதிகளுக்கு மத்தியில் வளர்ந்தவன், பழக்கப்பட்டவன் அனைத்தையும் விட்டுவிட்டு, ஒரு கஃபன் துணியைப் போன்று, இரண்டு ஆடைகளை மட்டும் தன் உடலிலே போர்த்திக் கொண்டு, உலகத்தை மறந்து, மனைவியை மறந்து, பிள்ளைகளை மறந்து, குடும்பத்தை மறந்து, வியாபாரத்தை மறந்து, தொழில்துறையை மறந்து, தன் சொந்த பந்தங்களை மறந்து என் முன்னால் வந்து நிற்கிறானே!
அல்லாஹுத்தஆலா அந்த வானவர்களுக்கு சொல்கிறான்: “நான் இவர்களை மன்னித்து விட்டேன். நீங்கள் சாட்சியாக இருங்கள்.”
அல்லாஹு தஆலா அரஃபாவின் தினத்தில் நரகத்திலிருந்து விடுதலை செய்வதைப் போன்று வேறு எந்த நாளிலும் செய்வதில்லை.
இப்படிப்பட்ட ஹஜ் நமக்கு எதை கொடுக்கிறது? ஏன் அந்த அரஃபா? ஏன் அந்த முஸ்தலிஃபா? ஏன் ஜம்ராத்திற்கு கல்லெறிய செல்கிறோம்? பத்தாவது அன்று கல்லெறிந்தோம் போதுமல்லவா? இல்லை, பிறை பதினொன்றுக்கும் வா! மூன்று ஜம்ராக்களுக்கு கல்லெறி. நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரி, நடந்து வா. எப்படி முடியுமோ, நீ வா. அந்தக் கூட்டங்களை நீ சகித்துத்தான் ஆக வேண்டும். இன்று அங்கே கல்லெறிய வேண்டும், அங்கே நின்று பிரார்த்திக்க வேண்டும். பிறை 12லும் வா, முடிந்தால் 13லும் தங்கி விட்டு செல்.
அல்லாஹு தஆலா நமக்கு ஒரு தர்பியத்தை கொடுக்க விரும்புகிறான். இபாதத்துக்காகத்தான் நான் அல்லாஹ்வை வணங்குவது தான் என்னுடைய வாழ்க்கையின் நோக்கம். அவனுடைய கட்டளை தான் எனக்கு முக்கியம்.
என்னுடைய ஓய்வு எனக்கு முக்கியமல்ல, என்னுடைய சுகம் எனக்கு முக்கியமல்ல. இந்த வாழ்க்கையில் நான் சுகமாக இருந்து, இந்த வாழ்க்கையில் நான் ஆரோக்கியமாக இருந்து, இந்த வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் நான் அனுபவித்து விட்டு, அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், நாளை மறுமையில் அந்த அடியான் நரகத்திற்கு சென்றால், அவருடைய ஆரோக்கியம் எதற்கு? அவருடைய செல்வம், சுகம், அவனுடைய இன்பமான வாழ்க்கை எதற்கு? யோசித்துப் பாருங்கள்!
இந்த வாழ்க்கையில் ஒருவன் அல்லாஹ்விற்காக இவற்றை எல்லாம் அர்ப்பணித்து, இவற்றையெல்லாம் தியாகம் செய்து, அல்லாஹ் பொருந்திக் கொண்ட நிலையிலேயே அவன் மரணிக்கும் போது, அவன் சொர்க்கம் செல்வானேயானால், இந்த களைப்பு, இந்த சோர்வு, இந்த அசதி, இந்த வலி — இது பெருசா? அல்லது அல்லாஹ்விடத்தில் பெற்ற சொர்க்கம் பெருசா? யோசித்துப் பாருங்கள்!
அல்லாஹு தஆலா சொர்க்கத்திற்கான அந்த விலையை நம்மிடத்திலே எதிர்பார்க்கிறான். ஹஜ் வணக்கத்தின் மூலமாக இபாதத்துக்காக உன்னை தயார்படுத்து. ஹஜ்ஜுக்கு சென்று வணங்கினார்கள்; அதோடு முடிந்து விட்டதா? ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்கிறார். எல்லா தொழுகையையும் நேரத்தோடு தொழுகிறார். இங்கே வந்ததற்கு பிறகு அவரிடத்திலே தொழுகையின் பேணுதல் இல்லை. ஹஜ்ஜுக்கு செலவழித்தார்; ஆனால் இங்கே வந்து ஜகாத் கொடுப்பதில்லை, இங்கே வந்து தானதர்மங்கள் செய்வதில்லை. ஹஜ்ஜில் நண்பர்களோடு உறவுகளை பேணியிருந்தார்; ஆனால், இங்கே வந்து ரத்த உறவுகளை பேணுவதில்லை.
தாய் தந்தைக்கு பணிவிடை செய்வதில்லை. இவருடைய ஹஜ் ஹஜ்ஜா? இல்லை. இது நஃப்ஸுக்கான ஹஜ்ஜாக ஆகிவிடும். அல்லாஹ்வுக்கான ஹஜ் ஆக இருக்குமேயானால், ஹஜ்ஜில் அல்லாஹ்வை இவர் வணங்கியது அல்லாஹ்வுக்காக இருக்குமேயானால், மறுமைக்காக இருக்குமேயானால், அவர் ஹஜ்ஜிலிருந்து திரும்பியதற்கு பிறகு இங்கும் அந்த ஐந்து நேரத் தொழுகைகளை பேணுவார்; அல்லாஹ் கடமையாக்கிய ஜகாத்தை கொடுப்பார்; அல்லாஹ் ஆர்வமூட்டிய தர்மங்களை வழங்குவார்; உறவுகளை சேர்த்து வாழ்வார். அதுதான் ஹஜ்.
ஹஜ் என்பது அங்கே சில கடமைகளை செய்து விட்டு சொர்க்கத்திற்கான சர்டிபிகேட் நமக்கு கிடைத்துவிட்டது அவ்வளவுதான் என்று பெருமையிலும் மமதையிலும் வருவதல்ல; பயத்தோடு வருவதுதான் ஹஜ்.
யா அல்லாஹ்! என்னுடைய வாழ்க்கை இறையச்சத்தோடு அமைய வேண்டும். உன்னுடைய பயத்தோடு அமைய வேண்டும். நான் உன்னை இந்த மக்காவில், இந்த கஅபாவில், அல் மஸ்ஜிதுல் ஹராமில் வணங்கியது உண்மையாக அமைய வேண்டும். எனவே, வாழ்நாள் எல்லாம் உன்னை வணங்குவதற்கு, உன்னுடைய வணக்க வழிபாடுகளை ஆர்வத்தோடு, ஆசையோடு, உறுதியோடு, பேணுதலோடு செய்வதற்கான வாய்ப்பை கொடு! என்ற துஆவோடு யார் வருகிறாரோ, அவர்தான் உண்மையான ஹாஜி.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொல்கிறார்கள்?
مَنْ أَتَى هَذَا الْبَيْتَ، فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ
ஹஜ் முடித்து வருபவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக வருகிறார். ஹஜ் முடித்து வருபவர், அவர் தாய் பெற்றெடுத்த நாளில் அவர் இருந்ததைப் போன்று வருகிறார் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்களே!
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1350.
அதற்கான பொருள் என்ன? அவர் இனி பாவங்களில் செல்லக் கூடாது. இனி அல்லாஹ்வின் கட்டளைகளை அவர் மீறக் கூடாது. அல்லாஹ்வின் சட்டங்களை அவர் உடைக்கக் கூடாது. அல்லாஹ் தடுத்த குற்றங்களில் அவர் ஈடுபடக் கூடாது. அவர் மன்னிக்கப்பட்டு விட்டார், சுத்தப்படுத்தப்பட்டு விட்டார். இனி அவர் அந்த பாவங்களின் பக்கம் திரும்பக் கூடாது என்ற ஒரு அறிக்கையும் அந்த ஹதீஸுக்குள் இருக்கிறது.
ஒரு பக்கம் நற்செய்தி — யார் ஹஜ் செய்தார்களோ, அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது என்ற நற்செய்தி இருக்கிறது.
அதோடு சேர்த்து அங்கு ஒரு எச்சரிக்கையும் இருக்கிறது.
ஹஜ் செய்தவர்களே! அல்லாஹ்வின் வீட்டிற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களே! இந்த பூமியில் அல்லாஹ்வுடைய வீட்டை விட, மக்காவில் இருக்கக்கூடிய அல் மஸ்ஜிதுல் ஹராம் — கஅபதுல்லாஹ்வை விட புனிதமான, கண்ணியமான, உயர்வான, சங்கையான, மரியாதைமிக்க ஒரு இடம் அறவே கிடையாது.
உலக மன்னர்கள் எல்லாம் கட்டிய மாளிகைகளை விட, அவர்களுடைய அரண்மனைகளை விட, உலக செல்வந்தர்கள் எல்லாம் ஒன்று கூடி தங்கத்தாலும், வெள்ளியாலும், வைரங்களாலும், வைடூரியங்களாலும், மாணிக்கங்களாலும், மரகதங்களாலும் எப்பேர்பட்ட ஒரு அரண்மனையை கட்டி எழுப்பினாலும், உலகத்திலேயே மிகச் சுகமான, மிகக் கவர்ச்சியான இடத்தில் கட்டினாலும், அல்லாஹ்வுடைய வீடு கஅபாவின் ஒரு கல்லுக்கு கூட அது சமம் ஆகாது.
ரப்புல் ஆலமினுடைய வீடு எந்த வீட்டை அல்லாஹ் தன் பக்கம் சேர்த்தானோ;
فَلْيَـعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ
இந்த ஆலயத்தின் இந்த வீட்டின் இறைவனை வணங்குங்கள். (அல்குர்ஆன் 106:3)
அல்லாஹு தஆலா கஅபாவை தன் பக்கம் சேர்த்து அதை பெருமைப்படுத்துகிறான் என்றால் அதைவிட சிறந்த ஒன்று எது இருக்க முடியும்?
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உலகத்தில் ஒரு விஷயத்திற்காக அழுதார்கள் என்றால், இந்த உலகத்தில் ஒரு பிரிவை நினைத்து அழுதார்கள் என்றால், கஅபாவின் பிரிவை நினைத்துத்தான் அழுதார்கள்.
காபாவைப் பார்த்துத்தான் அவர்கள் பேசினார்கள்:
ما أطيبَكِ من بلدٍ وأحبَّكِ إليَّ، ولولا أنَّ قومي أخرجوني منكِ ما سَكَنتُ غيرَكِ
“கஅபா! இந்த பூமியிலே நீ தான் எனக்கு மிகவும் விருப்பமான பூமி. என்னுடைய சமுதாயம் என்னை இந்த ஊரிலிருந்து வெளியேற்றவில்லை என்றால், உன்னை அல்லாமல் வேறு எந்த பூமியிலும் நான் தங்க மாட்டேன்” என்று அந்த கஅபாவைப் பார்த்துப் பேசினார்களே!
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3926.
அத்தகைய கஅபாவுக்கு அழைக்கப்பட்ட ஹாஜிகள், அல்லாஹ்வுடைய விருந்தினர்களாக, அந்த காபாவில், அல் மஸ்ஜிதுல் ஹராமில் தங்கி வணக்க வழிபாடுகள் செய்பவர்களாக, அதை தவாஃப் செய்பவர்களாக, அங்கே ருகூஃ, சுஜூத் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
யாருக்காக இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் அல்லாஹ் கட்டளையிட்டானோ?
“இவர்களுக்காக நீங்கள் காபாவை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று.
وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ
இன்னும், “(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்கி இருப்பவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம் பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள்” என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம். (அல்குர்ஆன் 2:125)
கருத்து : உங்களது பொறுப்பு காபாவை கட்டுவது மட்டுமல்ல. இந்த காபாவை சுத்தமாக வைத்திருப்பது. இந்தக் காபாவிற்கு வரக்கூடிய வணக்கசாலிகளுக்கு சேவை செய்வது, பணிவிடை செய்வது, அவர்களுக்கு இங்கே சுத்தத்தை ஏற்படுத்தி வசதியை ஏற்படுத்தி கொடுப்பது உங்கள் மீது கடமை என்று அல்லாஹு தஆலா கட்டளை இட்டானே.
அத்தகைய வணக்கசாலிகளாக சென்று வந்ததற்கு பிறகு மீண்டும் உலக மோகத்தின் பக்கம், ஹராமின் பக்கம், அல்லாஹ் தடுத்த ஆபாசங்களின் பக்கம், அல்லாஹ் தடுத்த பாவங்களின் பக்கம், ஒருவன் திரும்புவானேயானால் அல்லாஹ் தனக்கு கொடுத்த கண்ணியத்தை அவன் வீணாக்கி விட்டான். அல்லாஹ் தனக்கு கொடுத்த வெகுமதியை அவன் பாழாக்கி விட்டான். அல்லாஹ் தன்னை சிறப்பித்த அந்த சிறப்புகளை எல்லாம் அவன் நிர்மூலமாக்கி விட்டான். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வின் அடியார்களே! இது இபாதத்துக்கான தர்பியத். ஹஜ் என்பது அக்லாக்குக்கான தர்பியத், நம்முடைய நற்குணங்களுக்கான தர்பியத். இந்த உலக வாழ்க்கையில் இந்த இரண்டும் மிக முக்கியம். இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. ஒன்று என்ன? வணக்க வழிபாடு, அல்லாஹ்வுடைய இபாதத். இரண்டாவது, அல்லாஹ்வின் அடியார்களோடு நற்குணத்தோடு பழகுவது. இஸ்லாமிய மார்க்கத்தின் இரண்டு பகுதிகள் இதுவே.
ஒன்று அல்லாஹ்வுடைய கடமை, முதலுரிமை, முன்னுரிமையாக முற்படுத்தப்பட வேண்டியவை. இரண்டாவது, அடியானே! உன்னுடைய சக மனிதர்களோடு—பெற்றோர், பிள்ளைகள், குடும்பம், நண்பர்கள், சமூகம்—அவர்களோடு எத்தகைய நற்குணத்தோடு நீ வாழுகிறாய் என்பதே.
ஹஜ்ஜுக்கு சென்றால் அங்கே தன்னுடைய நண்பர்களுக்கும், புதிதாக அறிமுகமானவர்களுக்கும் பணிவிடை செய்தார்; அன்பாகப் பழகினார்; அவரால் முடிந்த அளவு சில தானதர்மங்களையும் செய்தார்; மன்னித்தார்; விட்டுக் கொடுத்தார்; சண்டைச் சச்சரவுகளை விட்டு விலகி இருந்தார்; பெருமை அடிக்கவில்லை. கஃபன் துணியைப் போர்த்திக்கொண்டு, “நானும் உன்னைப் போன்றவன் தான்” என்று ஒரு ஏழையோடு ஏழைக்கு அருகில் படுத்துத் தூங்கினார்.
இப்படிப்பட்ட பல தர்பியத்தைகளை எல்லாம் அடைந்து இங்கே வந்ததற்குப் பிறகு, தனது பெற்றோருக்கு பணிவிடை செய்ய மனமில்லை; தன்னுடைய சக உறவுகளோடு அன்போடு பழகுவதற்கு மனமில்லை; தன்னுடைய நண்பர்களுக்கு பணிவிடை செய்வதற்கோ, அவர்களை மன்னிப்பதற்கோ, அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதற்கோ மனமில்லை என்றால், இவர் எந்த ஹஜ்ஜை யாருக்குச் செய்தார்? அவருடைய ஹஜ்ஜினால் அவரில் மாற்றம் ஏற்படாத இந்த உள்ளத்தை வைத்து அவர் அல்லாஹ்வை எப்படி நெருங்குவார்?
சகோதரர்களே! ஹஜ் என்பது அஹ்லாக்குக்கான தர்பியத். அங்கே எப்படி வாழ்ந்தோமோ, எப்படி இருந்தோமோ, அதேபோன்று ஈமானிய சகோதரத்துவத்தை, அந்த ஈமானிய பணிவை, விட்டுக்கொடுத்தலை, மன்னித்தலை, பெருந்தன்மையை, தன்னைவிட தனது சகோதரனுக்கு முன்னுரிமை கொடுப்பதை அடியான் தன் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
அதுதான் ஹஜ். அவர்தான் ஹாஜி. சும்மா சொல்லிவிடுவார்களா ரசூலுல்லாஹ் ﷺ
“ஹஜ்”-க்கான அந்த சிறப்பு என்னவென்றால், இஸ்லாம் எப்படி முந்திய பாவங்களை அழித்து விடுகிறதோ, ஹிஜ்ரத் எப்படி முந்திய பாவங்களை அழித்து விடுகிறதோ, அதுபோல ஹஜ் முந்திய பாவங்களை அழித்து விடுகிறது என்று அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்களே!
அறிவிப்பாளர் : அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 121.
ஆனால், ஹஜ் செய்து வந்தார்; ஆனால் அஹ்லாக் மாறவில்லை. அதிலும் இப்போது பெருமை இருக்கிறது. கஃபன் துணியை உடுத்தியதற்குப் பிறகும், மவ்த் உடைய வாய்வரை சென்று வந்ததற்குப் பிறகும் கூட பெருமை இருக்கிறது. உலக மோகம் இருக்கிறது.
அங்கே மினாவின் பள்ளத்தாக்குகளில் அத்தனை மக்களோடு ஒருவராக படுத்து தூங்கியதற்குப் பிறகு, முஸ்தலிஃபாவில் ஒரு பரதேசியாக, பிளாட்ஃபாரத்தில் வாழ்பவர்கள் போன்று வாழ்ந்து, அங்கே தூங்கிவிட்டு, அரஃபாவில் மக்களில் ஒருவனாக கெஞ்சி கதறி, “மிஸ்கீன்” என்று அல்லாஹ்விடத்தில் சொல்லிவிட்டு, இங்கே வந்து பெருமை அடிக்கிறான். குலப் பெருமை பேசுகிறான். பணத்தால் பெருமை பேசுகிறான். படிப்பால் பெருமை பேசுகிறான் என்றால், இவனுடைய ஹஜ் யாருக்கு?
ஊருக்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் – நான் ஹாஜி என்பதாக. கல்யாணப் பத்திரிக்கையில் வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம் – ஹாஜி இன்னார் என்பதாக. ஆனால் அல்லாஹ்விடத்தில் அது ஹஜ்ஜாக ஆகாது.
அல்லாஹ்வின் அடியார்களே! ஹஜ் என்பது சாதாரணமான ஒன்றல்ல. பல பொறுப்புகளையும், பல கடமைகளையும் உணர்த்தக் கூடியது. அதற்குப் பிறகு உண்டான வாழ்க்கை – வணக்க வழிபாடுகளை சரி செய்ய வேண்டும். நம்முடைய நற்குணங்களை சரி செய்ய வேண்டும்.
அல்லாஹ்வுக்காக வாழ்வேன், அல்லாஹ்வின் மார்க்கத்தை கற்பேன், அதை பிரச்சாரம் செய்வேன். அல்லாஹ்வுடைய தீன்தான் எனக்கு. அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது, அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்விடத்தில் கொண்டு வந்து சேர்ப்பது.
அல்லாஹ்வுக்காக வாழ்வேன். என்னுடைய உடல், உயிர், பொருள், செல்வம், அறிவு – இவை அனைத்தையும் அல்லாஹ்விற்கு கொடுத்துவிட்டுப் பிறகு தான் என்னுடைய தேவைக்கும், என்னுடைய குடும்பத்தின் தேவைக்கும் என்ற கொள்கை அங்கே வரவேண்டும். அதுதான் ஹஜ்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ்ஜத்துல் விதாவில் பொறுப்பு கொடுத்தார்களே! என்ன பொறுப்பு கொடுத்தார்கள்?
بَلِّغُوا عَنِّي ولو آيَةً
இந்த மார்க்கத்தை நீங்கள் பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். என்னிடமிருந்து கேட்டது ஒரே ஒரு வசனமாக இருந்தாலும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3461.
فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ
இங்கே வந்தவர் வராதவருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்களே!
அறிவிப்பாளர் : அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1741.
ஹாஜி எல்லா சாமானையும் வாங்கிக்கொண்டு வந்தார். ஹஜ்ஜிலிருந்து வரும் பொழுது சீனாக்காரன் போட்ட எல்லா சாமானையும் வாங்கிக்கொண்டு வந்தார். ஆனால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொடுத்த பொறுப்பை வாங்கவில்லை என்றால், அவர் எந்த வகையான ஹஜ்ஜை செய்தார்?
முசல்லா வாங்குவதில் ஆர்வம், தஸ்பீஹ் மணி உருட்டுவதில் ஆசை, டூப்ளிகேட் காபா, டூப்ளிகேட் காபாவின் கதவு—காபா என்பது ஒன்றுதான். காபாவின் கதவும் ஒன்றுதான். ஐந்து ரியாலிலிருந்து, ஐம்பது ரியாலிலிருந்து, ஐந்நூறு, ஐந்தாயிரம் ரியால் வரை காபாவின் கதவு என்று சொல்லப்படும் அனைத்தும் டூப்ளிகேட் தான். அது எப்படி காபாவின் கதவாகும்?
அதிலே பரகத் இருக்கிறது என்று வாங்கி வருகிறார்கள். அந்த காசை அங்கேயே தர்மம் செய்யுங்கள். இல்லை என்றால் உங்கள் ஊரில் உள்ள ஏழைகளுக்கு தர்மம் செய்யுங்கள். கண்டிப்பாக சொர்க்கம். கண்டிப்பாக அல்லாஹ்வுடைய வாக்கு.
எப்பேர்ப்பட்ட ஒரு மட்டமான மனநிலைக்கு முஸ்லிம்களின் அறிவு சென்றுவிட்டது பாருங்கள்.
காபாவை வாங்கி வருகிறார்களாம். காபாவின் கதவை வாங்கி வருகிறார்களாம். அதை வீட்டில் வைத்து ஃப்ரேம் போட்டு மாட்டுகிறார்கள். பார்த்தால்.... பரகத்!!. இருந்தால்..... பரகத்!!!. தொழுகையைக் கொண்டுதான் பரகத். துஆவைக் கொண்டுதான் பரகத். குர்ஆன் ஓதுவதைக் கொண்டுதான் பரகத்.
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹ் ﷺ உடைய பொறுப்பை எடுத்து வர வேண்டும். சஹாபாக்களுக்கு சொன்னார்களே!
இந்த தீனை படியுங்கள், பரப்புங்கள்; இதைக் கொண்டுதான் கண்ணியம்.
இன்றைய முஸ்லிம் சமுதாயம் ஏன் வீழ்ச்சி அடைந்தது? துன்யாவை முன்வைத்தார்கள், தீனை பின்னால் தள்ளினார்கள். இதுவே இழிவு, அவமானமே அவமானம், கேவலமே கேவலம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஆகவே கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ஹஜ் என்பது ஒரு பெயருக்காக, புகழுக்காக, ஒரு பட்டத்திற்காக செய்யக்கூடிய வணக்கம் அல்ல.
ஹஜ் என்பது அல்லாஹ்வுடைய இபாதத்திற்காக, “நான் அல்லாஹ்வுக்கு பணிய போகிறேன்; அல்லாஹ்வுடைய கட்டளைதான் எனக்கு முக்கியம்; வணங்குவதுதான் எனக்கு முக்கியம்” என்ற ஒரு தர்பியத்திற்காக, அல்லாஹ்வை நெருங்குவதற்காக செய்யக்கூடிய ஒரு இபாதத்.
நம்முடைய அஹ்லாக்குகளை சரி செய்வதற்கான, நம்முடைய நற்குணங்களை சரி செய்வதற்கான இபாதத். நமக்கு மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவத்தை வேரூன்ற வைப்பதற்கான, உறுதிப்படுத்துவதற்கான, அதை புதுப்பிப்பதற்கான, அந்த இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்கான ஒரு இபாதத் அது.
ஒரு முஸ்லிமுடைய வலியைக் கொண்டு நான் வலியை உணர வேண்டும்; அப்போதுதான் முஸ்லிம். ஒரு முஸ்லிமுடைய வலியை உனது வலியாக உணரவில்லை என்றால், உன்னுடைய சுஜூதால் அல்லாஹ்வுக்கு எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ் அதை திரும்பிப் கூட பார்க்க மாட்டான்.
ஹஜ் வணக்கம் என்பது ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பதற்கான ஒரு இபாதத். ஏகத்துவத்தின் தர்பியத்துடைய ஒரு இபாதத்.
முஸ்லிம் சமூகத்தில் எவ்வளவு ஷிர்க்குகள் மலிந்து கிடக்கின்றன! மஸ்ஜிதுகள் செழிப்பாக்கப்படுவதைவிட கப்ருகள் செழிப்பாக்கப்படுகின்றன. மஸ்ஜிதுகளில் அழக்கூடியவர்களின் எண்ணிக்கையைவிட, கப்ருகளை முட்டிக்கொண்டு அழக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மஸ்ஜிதுகளுக்கு சேவை செய்வதைவிட, கப்ருகளுக்கு சேவை செய்வதை புண்ணியமாக கருதக்கூடிய சமுதாயத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு முஸ்லிமுக்கு மஸ்ஜிதா, கபுரா என்பதில்கூட வித்தியாசம் தெரியாமல் இருக்கக்கூடிய அப்பேர்ப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறோம். இத்தனை பேர் ஹஜ் செய்து வருகிறார்களே! இவர்களெல்லாம் தங்களது சமூகத்துக்கு மத்தியிலே இந்த தவ்ஹீதுடைய அழைப்பை செய்தால் எப்பேர்ப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
இன்றும் தர்கா வழிபாடுகள், உரூஸ் வைபவங்கள், கந்தூரி காவடி வழிபாடுகள், தர்காவில் நேர்ச்சை, தர்காவில் ஃபாத்திஹா, தர்காவில் பிரார்த்தனை என்பவை எப்பேர்ப்பட்ட ஒரு வணக்கமாக முஸ்லிம்களின் வெகுஜன மக்களிடையே போற்றப்பட்டு, பின்பற்றப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்! இவற்றை தங்களுடைய வருமானத்திற்காக ஆதரிக்கும் ஆலிம் பட்டம் பெற்றவர்கள்
இவற்றையெல்லாம் சீர்திருத்த வேண்டும். இந்த மக்களை எல்லாம் தவ்ஹீதின் பக்கம், அல்லாஹ் ஒருவனை வணங்குவதின் பக்கம் அழைக்க வேண்டும் என்ற அந்தக் கொள்கையை உறுதியோடும் வேகத்தோடும் ஒருவர் ஹாஜியாக திரும்பவில்லை என்றால், அவர் என்ன செய்து விட்டு அங்கே வந்தார்?
அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவிடத்தில் துஆ கேட்க வேண்டும். நம்முடைய ஹஜ்ஜும், ஹஜ்ஜுக்கு சென்றவர்களுடைய ஒவ்வொரு ஹஜ்ஜும் அல்லாஹ்வும் ரசூலும் விரும்பக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஹஜ்ஜாக மாற வேண்டும் என்றால், அந்த இஸ்லாமிய அடிப்படைகளை உணர வேண்டும். இஸ்லாமிய அழைப்பை உணர வேண்டும். இஸ்லாம் சொல்லியுள்ள அந்த ரிசாலத் (தூதுத்துவ) பொறுப்பை விளங்க வேண்டும். அதை நம்முடைய பொறுப்பாகவும் வாழ்க்கை நோக்கமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! முஸ்லிம்களுக்கு கண்ணியத்தை அளிப்பானாக! காசா மக்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! இஸ்ரேலை எதிர்த்து நிற்கும் ஈரான் மக்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! இஸ்ரேலுக்கு அல்லாஹ் அழிவையும், நாசத்தையும், தோல்வியையும் வழங்குவானாக! இழிவானவர்களாக, கேவலப்பட்டவர்களாக பாலஸ்தீன் பூமியிலிருந்து அவர்கள் ஓடி செல்ல அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு துணை நிற்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
كُنْتُ مع عَمِّي، فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بنَ أُبَيٍّ ابْنَ سَلُولَ يقولُ: لا تُنْفِقُوا علَى مَن عِنْدَ رَسولِ اللَّهِ حتَّى يَنْفَضُّوا، وقالَ أيضًا: لَئِنْ رَجَعْنَا إلى المَدِينَةِ لَيُخْرِجَنَّ الأعَزُّ منها الأذَلَّ، فَذَكَرْتُ ذلكَ لِعَمِّي، فَذَكَرَ عَمِّي لِرَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فأرْسَلَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ إلى عبدِ اللَّهِ بنِ أُبَيٍّ وأَصْحَابِهِ، فَحَلَفُوا ما قالوا، فَصَدَّقَهُمْ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وكَذَّبَنِي، فأصَابَنِي هَمٌّ لَمْ يُصِبْنِي مِثْلُهُ قَطُّ، فَجَلَسْتُ في بَيْتِي، فأنْزَلَ اللَّهُ عزَّ وجلَّ: {إِذَا جَاءَكَ المُنَافِقُونَ} إلى قَوْلِهِ {هُمُ الَّذِينَ يقولونَ: لا تُنْفِقُوا علَى مَن عِنْدَ رَسولِ اللَّهِ} إلى قَوْلِهِ {لَيُخْرِجَنَّ الأعَزُّ منها الأذَلَّ} فأرْسَلَ إلَيَّ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَقَرَأَهَا عَلَيَّ، ثُمَّ قالَ: إنَّ اللَّهَ قدْ صَدَّقَكَ. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : زيد بن أرقم | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 4901 التخريج : أخرجه الترمذي (3312) بلفظه، ومسلم (2772) بنحوه، وأحمد (19333) باختلاف يسير.
ஸைத் இப்னு அர்கம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் என் மாமாவுடன் இருந்தேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபைய் இப்னு சலூல், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் மீது (பொருட்களைச்) செலவு செய்யாதீர்கள்; அப்போதுதான் அவர்கள் (அவரை விட்டுப்) பிரிந்து செல்வார்கள்" என்று கூறுவதை நான் கேட்டேன். மேலும் அவன், "நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அங்கிருந்து நிச்சயம் வெளியேற்றிவிடுவார்கள்" என்றும் கூறினான்.
இதை நான் என் மாமாவிடம் தெரிவித்தேன். என் மாமா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைய்யையும் அவனது தோழர்களையும் அழைத்து வர ஆளனுப்பினார்கள். தாங்கள் (அவ்வாறு) கூறவில்லை என்று அவர்கள் சத்தியம் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களை உண்மைப்படுத்தி, என்னைப் பொய்யாக்கிவிட்டார்கள். இதனால் எனக்கு முன்னெப்போதும் ஏற்படாத கடும் மனவேதனை ஏற்பட்டது. எனவே நான் என் வீட்டிலேயே அமர்ந்துவிட்டேன்.
அப்போது அல்லாஹ் (கண்ணியம் மிக்கோனும் மேலானவனுமாகிய அவன்), 'இதா ஜாஅகல் முனாஃபிகூன்' (நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால்...) என்று தொடங்கி, 'ஹுமுல்லதீன யகூலூன லா துன்ஃபிகூ அலா மன் இந்த ரசூலில்லாஹ்' (அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள் மீது நீங்கள் செலவு செய்யாதீர்கள் என்று கூறுபவர்கள் அவர்களே...) என்பது வரையிலும் மற்றும் **'லயுக்ரிஜன்னல் அஅஸ்ஸு மின்ஹல் அதல்'** (கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்) என்பது வரையிலும் (இறைவசனங்களை) அருளினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பி (என்னை வரவழைத்து), அந்த வசனங்களை எனக்கு ஓதிக்காட்டினார்கள்; பிறகு, "நிச்சயமாக அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜைத் இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4901.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/