ஜிப்ரீலின் அறிவுரை அமர்வு 1 | Tamil Bayan - 602
ஜிப்ரீலின் அறிவுரை
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜிப்ரீலின் அறிவுரை (அமர்வு 1-2)
வரிசை : 602
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 25-10-2019 | H 26-02-1441
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய அல்குர்ஆன் 4:131 வது வசனத்தில் கூறுகிறான்:
திட்டவட்டமாக உங்களுக்கும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவருக்கும் நாம் உபதேசம் செய்து விட்டோம். அந்த உபதேசம் என்னவென்றால் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள். இறையச்சத்தோடு அல்லாஹ்வின் பயத்தோடு நீங்கள் வாழுங்கள் என்பதாக.
இந்த உபதேசத்தை இந்த குத்பாவின் ஆரம்பத்தில் எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, அல்லாஹ்வுடைய அறிவுரையைக் கொண்டு எனக்கும் உங்களுக்கும் இந்த அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கின்றேன்.
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய தக்வாவை அதிகப்படுத்துவானாக! நம்முடைய அமல்களை ஏற்றுக் கொள்வானாக! அல்லாஹு தஆலா நம்மை நெருக்கமாக்கி வைப்பானாக! பாவங்களிலிருந்து நம்மை தூரமாக்கி வைப்பானாக!
அல்லாஹ்வை நேசித்தவர்களாக, மறுமையை நேசித்தவர்களாக, இந்த உலக வாழ்க்கையின் உண்மையை புரிந்து கொண்டு அமல் செய்யக் கூடிய நல்லவர்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும், முஃமின்கள் முஸ்லிம்கள் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்.
இந்த ஜும்ஆவின் குத்பாவில் முக்கியமான ஹதீஸை நாம் பார்க்க இருக்கின்றோம்.
ஹதீஸுடைய தரம் ஹதீஸ் ஹஸன். இந்த ஹதீஸ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கிய அறிவுரை ஆகும். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை சந்திக்கிறார்கள்.
அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீ கொண்டு வரக்கூடிய அந்த வானவர்தான் ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்கள். அல்லாஹ்விடத்தில் வானவர்களில் மிக நெருக்கமானவர்கள். அல்லாஹ்வுடைய அன்புக்கும், நேசத்துக்கும் உரியவர்கள். அல்லாஹு தஆலா அவர்களை கண்ணியப்படுத்தி இருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒருபோதும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். (அல்குர்ஆன் 66 : 6)
அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட மிக உயர்ந்த அடியார்கள் என்று அல்லாஹு தஆலா அவர்களை சிறப்பித்து சொல்கிறான். (அல்குர்ஆன் 21 : 26)
அந்த மலக்குகளில் நான்கு மலக்குகள் அல்லாஹ்விடத்தில் மிக உயர்வானவர்கள். அவர்களில் மிகவும் உயர்வானவர், அல்லாஹ்விற்கு உவப்பானவர்தான் ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்கள்.
அல்லாஹு தஆலா ஜிப்ரீலை புகழ்ந்தே பல இடங்களில் சொல்கிறான்.
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
அவர்கள் மலக்குகளுக்கெல்லாம் தலைவர். அல்லாஹ்விடத்தில் நம்பிக்கைக்குரியவர். (அல்குர்ஆன் 81 : 21)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
عَلَّمَهُ شَدِيدُ ٱلْقُوَىٰ ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ
(பலவிதமான) ஆற்றல்களால் கடும் பலசாலி(யான ஜிப்ரீல்) அவருக்கு இதை கற்பித்தார். அவர் (வலிமையும்) அழகிய தோற்றமு(ம் உ)டையவர். ஆக, அவர் (நபியை நேருக்கு நேர்) சமமாக சந்தித்தார். (அல்குர்ஆன் 53 : 5-6)
இப்படியாக நிறைய புகழ்களைக் கொண்டு உயர்வுகளை கொண்டு அல்லாஹு தஆலா ஜிப்ரீலை கண்ணியப்படுத்துகிறான்.
ஜிப்ரீலுக்கும் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இடையே மிகப்பெரிய ஒரு நெருக்கமான அன்பு இருந்தது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஜிப்ரீலை அந்த அளவுக்கு நேசித்தார்கள்.
காரணம், ஜிப்ரீல் அல்லாஹ்வுடைய வஹியை கொண்டு வரக்கூடிய மலக்கு. ஒரு சமயம் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த கவலைக்குள் ஆழ்ந்து விட்டார்கள்.
காரணம், ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் வருவதற்கு சில நாட்களோ அல்லது அல்லாஹ் நாடிய கால அளவு தாமதமாகிவிட்டது. அந்த தாமதத்திற்கு பிறகு ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதரை சந்திக்க வரும்போது, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜிப்ரீலைப் பார்த்து கேட்டார்கள்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِجِبْرِيلَ أَلَا تَزُورُنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا قَالَ فَنَزَلَتْ
{ وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا }
இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே. நீங்கள் என்னை சந்திக்க வரவில்லையே என்று. அப்போதுதான் ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நாங்கள் வானவர்கள். அல்லாஹ்வுடைய கட்டளை இல்லாமல் நாங்கள் சந்திக்க வரமுடியாது.
அந்த ஜிப்ரீல் இப்போது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்துள்ளார்கள் என்றால், கண்டிப்பாக அல்லாஹ்வின் கட்டளையின் படி இந்த அறிவுரைகளை அல்லாஹ் தஆலா சொல்வதாக நீங்கள் வழங்குவதாக அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று அல்லாஹ் ஜிப்ரீலுக்கு கற்றுக் கொடுக்காமல், அல்லாஹ் ஜிப்ரீலுக்கு இந்த கட்டளையை கொடுக்காமல் அவர்கள் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார்கள்.
பார்க்க : தஃப்ஸீர் தபரீ, அல்குர்ஆன் 19 : 64, அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2979, 4731.
وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ
நபியே! உங்களுடைய இறைவனுடைய அனுமதி இல்லாமல் நாங்கள் இறங்க முடியாது. (அல்குர்ஆன் 19 : 64)
ஒவ்வொரு விஷயத்துக்கும் அல்லாஹ்வுடைய கட்டளையை எதிர்பார்ப்பவர்கள் அந்த கண்ணியத்திற்குரிய மலக்குகள்.
அந்த ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து சில அறிவுரைகளை கூறுகிறார்கள் என்றால், இந்த அறிவுரை நமது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்.
இந்த அறிவுரையுடைய ஆழத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவுரைகள் கொடுக்கக்கூடிய பாடத்தை, படிப்பினைகளை, இந்த அறிவுரைகள் நமது வாழ்க்கையில் நமக்கு ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை, நமது உள்ளத்தை பண்படுத்த வேண்டிய அந்த பக்குவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்காகதான் ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய ஒரு அறிமுகத்தை கூறும்போது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருந்த தொடர்பையும் நாம் இங்கு உங்களுக்கு நினைவு கூர்ந்தோம்.
ஜிப்ரீல் சொல்கிறார்: ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரடியாக பார்த்து பேசுகிறார்.
முஹம்மதே!
தன்னுடைய தோழரை எவ்வாறு ஒருவர் அழைப்பாரோ, அப்படித்தான் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அழைத்தார்கள்.
அல்லாஹு தஆலா குர்ஆனில் எங்கும் தன்னுடைய நபியின் பெயரைக் குறிப்பிடவில்லை. யா அய்யுஹன் நபி! யா அய்யுஹர் ரஸூல்! என்று தான் ரப்புல் ஆலமீன் அழைக்கின்றான்.
அதுபோன்று முஃமீன்களான நம்மை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாம் எப்படி நபியை அழைக்க வேண்டும் என்று கட்டளை கொடுக்கும்போது சொல்கிறான்:
لَّا تَجْعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُم بَعْضًا قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு மத்தியில் தூதர் (உங்களுக்கு எதிராக) பிரார்த்திப்பதை உங்களில் சிலர் சிலருக்கு (எதிராக) பிரார்த்திப்பது போன்று ஆக்கிவிடாதீர்கள். (அவருடைய பிரார்த்தனை கண்டிப்பாக நிகழ்ந்துவிடும்.) உங்களில் மறைவாக நழுவிச் செல்பவர்களை திட்டமாக அல்லாஹ் நன்கறிவான். ஆக, அவருடைய கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் (-உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்) குழப்பம் தங்களை அடைந்துவிடுவதை; அல்லது, வலிதரும் (கடுமையான) தண்டனை தங்களை அடைந்துவிடுவதைப் பற்றி உஷாராக (பயந்தவர்களாக) இருக்கட்டும். (அல்குர்ஆன் 24 : 63)
உங்களில் சிலர் சிலரை அழைப்பது போன்று நபியை நீங்கள் அழைக்காதீர்கள். அதாவது, யா முஹம்மத்! யா அஹமத்! என்று பெயர் கூறி அழைக்காதீர்கள் என்று அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகின்றான்.
ஆனால், அதே நேரத்தில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இடையே இருந்த அந்த தோழமை நட்பானது நெருக்கமான ஒரு நட்பு.
ஆகவே, ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களில் ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரடியாக பெயர் கூறி அழைப்பதை நாம் பார்க்கிறோம்.
இந்த அழைப்பு அவர்களுக்கு மத்தியில் இருந்த நெருக்கத்தையும், உரிமையையும் நமக்கு இங்கே படிப்பினையாக பாடமாக காட்டுகிறது.
அழைப்பவர் ஜிப்ரீல். அழைக்கப்படுபவர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். எந்த அளவு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவிமடுத்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரைகளுக்கும், உபதேசங்களுக்கும் செவிசாய்ப்பவர்கள்.
நம்மில் சிலரை போன்று அல்ல. இன்று, எனக்கு தெரியும் என்று அற்ப அறிவைக்கொண்டு பெருமை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பணிவைப் பாருங்கள். பல சந்தர்ப்பங்களில் நாம் பார்க்கலாம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அப்படித்தான். அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட தோழர்களும் அப்படித்தான்.
உபதேசத்தை கேட்பார்கள், செவி கொடுப்பார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எத்தனை சம்பவங்களில் நாம் பார்க்கிறோம். பிறர் குர்ஆன் ஓதுவதை அவர்கள் ரசித்து கேட்பார்கள்.
ரஸுலுல்லாஹ்வை விட யாரும் அழகாக குர்ஆன் ஓதிவிட முடியுமா? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ஒரு நாள் காலையில் கூறுகிறார்கள்.
அபூ மூஸாவே! நேற்றிரவு நீ என்னை பார்த்து இருக்க வேண்டுமே! நீங்கள் குர்ஆன் ஓதிக் கொண்டு இருந்தீர்கள். நான் செவிமடுத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். நான் நீண்ட நேரம் அதை செவி தாழ்த்தி கேட்டேன்.
அதற்கு அபூ மூஸா அவர்கள் நான் ஓதுவதை நீங்கள் கேட்டீர்களா? நீங்கள் கேட்கிறீர்கள் என்று தெரிந்திருந்தால், நான் இன்னும் அழகாக இன்னும் அழகிய ராகத்தோடு நான் ஓதி இருப்பேனே என்று சொல்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ மூஸாவைப் பார்த்துச் சொன்னார்கள்:
يا أبا مُوسَى لقَدْ أُوتِيتَ مِزْمارًا مِن مَزامِيرِ آلِ داوُدَ
அபூ மூஸாவே! தாவூதுக்கு அல்லாஹு தஆலா கொடுத்த ராகங்களில் ஒரு அழகிய ராகம் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று.
அறிவிப்பாளர்: அபூ மூசா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5048.
இப்படி பல சம்பவங்களை நாம் பார்க்கிறோம்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து குர்ஆனை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவியுற்றார்கள்.
உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஓதச் சொல்லி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
அல்லாஹ்வுடைய தூதரே! அல்லாஹ் எனது பெயரைச் சொல்லி ஓத சொன்னானா? உங்கள் மீது குர்ஆன் இறக்கப்பட, எனது பெயரைச் சொல்லி, நான் குர்ஆன் ஓத நீங்கள் கேட்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்னானா? பிறகு, ரசூலுல்லாஹ் வஸல்லம் அவர்களுக்கு குர்ஆனை ஓதி காட்டுகிறார்கள். (1)
அறிவிப்பாளர்: இப்னு மசூத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4582.
இப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதருக்கு நஸீஹா செய்வதற்காக, உபதேசம் வழங்குவதற்காக வந்தார்கள் என்றால், எந்த அளவுக்கு ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணிந்து இருப்பார்கள், பயந்து இருப்பார்கள். எந்தளவு அந்த அறிவுரையை உள்வாங்குவதற்கு புரிவதற்கு ஆயத்தமாகி இருப்பார்கள்.
இன்று, நம்மில் சிலருடைய நிலைமை அல்குர்ஆனில் வர்ணிக்கப்படுகிறது.
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ (49) كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ (50) فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ
ஆக, அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்? தப்பித்து ஓடுகிற பயந்துபோன கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கிறார்கள், அவை வேட்டையாடுகிற, பாய்ந்து வருகிற சிங்கத்தைப் பார்த்து விரண்டோடுகின்றன. (அல்குர்ஆன் 74 : 49-51)
சில மக்கள் ஏன் உபதேசங்களை கேட்டால் இப்படி விரண்டு ஓடுகிறார்கள்? பயம் சிலருக்கு. நாம் செய்வது தவறு என்று தெரிந்துவிட்டால், இந்த அறிவுரையில் நம்முடைய பாவங்களை பற்றி உணர்த்தப்பட்டு விட்டால், இந்த அறிவுரையை கேட்டு நாம் செயல்படாவிட்டால்!
இப்படிப்பட்ட ஷைத்தானிய எண்ணத்திலேயே, நஃப்ஸுடைய எண்ணத்திலேயே பலர் உபதேசங்களை கேட்காமல் விரண்டோடுவதை, அல்லது புறக்கணிப்பதை, அல்லது அந்த சபைக்கு ஆஜராகாமல் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ் சொல்கின்றான்: அவர்களுக்கு என்ன ஆனது? உபதேசங்களைக் கேட்காமல் இப்படி புறக்கணித்து ஓடுகிறார்களே? அதுவும் அவர்களுடைய வெறுப்பை, உபதேசங்களை பார்த்து அவர்கள் பயப்படக்கூடிய அந்த பயத்தை அல்லாஹ் எப்படி சொல்கிறான் என்றால், ஒரு கழுதை ஒரு சிங்கத்தை பார்த்தால் எப்படி வெறுத்து பயந்து அரண்டு ஓடுமோ அப்படி அல்லவா இவர்கள் ஓடுகிறார்கள்.
யார் உபதேசத்தின் சபையில் வந்து உட்கார்ந்து செவிதாழ்த்தி அந்த அறிவுரைகளை பயபக்தியோடு கேட்கிறார்களோ, கண்டிப்பாக அந்த அறிவுரைகள் பலன் தரும் என்று அல்லாஹ் தஆலா சொல்கிறான்.
إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ
யார் ஒருவர் அவருக்கு (சிந்திக்கின்ற உயிருள்ள) உள்ளம் (-அறிவு) இருக்கிறதோ அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது. அல்லது, யார் ஒருவர் - அவரோ (உள்ளத்தால்) பிரசன்னமாகி இருந்து, (சொல்லப்படுவதை) நன்கு புரிபவராக இருந்து, (அழிக்கப்பட்ட முற்கால மக்களைப் பற்றி நாம் கூறுகிற செய்திகளை) - செவிசாய்த்து கேட்பாரோ அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது. (அல்குர்ஆன் 50 : 37)
உபதேசங்கள் பலன் தர வேண்டுமா? முதலில் உங்கள் செவிகளை முழுமையாக அந்த உபதேசங்களுக்கு கொடுங்கள். பிறகு, செவியில் கேட்பதை உள்ளத்தால் சிந்தியுங்கள். உள்ளத்தால் உள்வாங்குங்கள்.
உங்களது உடலும், உள்ளமும் இங்கே இருக்க வேண்டும். பணிவாக அமர வேண்டும். இப்படிப்பட்ட தன்மை யாருக்கு இருக்குமோ கண்டிப்பாக அல்குர்ஆனின் அறிவுரைகள், இஸ்லாமிய ஈமானிய உபதேசங்கள் அவர்களுடைய உள்ளத்தில் நல்ல பலனைக் கொடுக்கும்.
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஜிப்ரீல் அழைக்கிறார்.
أتاني جبريلُ عليه السَّلامُ فقال : يا محمَّدُ ! عِشْ ما شئتَ فإنَّك ميِّتٌ
முஹம்மதே! நீங்கள் எவ்வளவு வேண்டுமோ, எத்தனை காலம் வேண்டுமோ வாழ்ந்து கொள்ளுங்கள். எவ்வளவு காலம் வாழ விரும்புகிறீர்கள்? எத்தனை ஆண்டுகள் வாழ விரும்புகிறீர்கள்? வாழ்ந்து கொள்ளுங்கள். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு உங்களுக்கு மரணம் தான். (2)
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாக்கிம், எண் : 7921.
மரணம் இல்லாத ஒரு உலக வாழ்க்கை இல்லை. நபிமார்கள் மரணித்துவிட்டார்கள். அவர்களுக்கு பிறகு இந்த உலகத்தில் என்ன மிச்சம் இருக்கிறது? என்ன நன்மை மிச்சமிருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள்.
இந்த உலகம் யாருக்காவது நிரந்தரமாக இருந்திருந்தால், அதாவது இந்த உலகத்தில் யாராவது நிரந்தரமாக இருந்திருந்தால், அல்லாஹ்வுடைய தூதர் இந்த உலகத்தில் நிரந்தரமாக இருந்திருப்பார்கள்.
காரணம், அவர்களை விட இந்த துன்யாவில் விருப்பமானவர்கள் அல்லாஹ்விற்கு இல்லை. இந்த துன்யாவில் நீண்ட வாழ்க்கை கிடைப்பது தான் அல்லாஹ் அவனது அடியார்களுக்கு மிக விருப்பமாக கொடுக்கக் கூடியது என்றால், கண்டிப்பாக அதை அல்லாஹ் தன்னுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுத்திருப்பான்.
இந்த இடத்தில் கவனித்துப் பாருங்கள்! அல்லாஹ் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் சொல்கிறார்கள். முஹம்மதே! எவ்வளவு காலம் வாழ வேண்டுமோ, வாழ்ந்து கொள்ளுங்கள். நீங்கள் மரணிக்கத்தான் போகிறீர்கள். (2)
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாக்கிம், எண் : 7921.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தனது திருமறையில் நேரடியாக ரசூலுல்லாஹ்விற்கு மரணத்தை நினைவூட்டுகின்றான்.
إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ
நிச்சயமாக நீரும் மரணிப்பவரே! இன்னும், நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான். (அல்குர்ஆன் 39 : 30)
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ரஸூலுல்லாஹ்விற்கு நினைவூட்டிய அந்த நினைவூட்டலை தான் ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய வாசகத்தால் இப்படிச் சொல்கிறார்கள்.
முஹம்மதே! நீ வாழு. எவ்வளவு தூரம் வாழப் போகிறீர்கள்? எவ்வளவு காலம் வாழப் போகிறீர்கள்? அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மவுத் இருக்கிறது.
இந்த மரணத்தை நினைப்பது மனிதனுடைய மிக முக்கியமான அடிப்படை. மரணத்தை கொஞ்சம் மறந்து விட்டால் அவ்வளவு தான். இந்த உள்ளத்தில் உலக மோகம் அவ்வளவு குடிகொண்டு விடும். மரணத்தை ஒரு மனிதன் மறந்து விட்டால், அவ்வளவு தான். அவனுடைய அமல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும்.
பாவங்கள் அப்படியே அவனுடைய நேரங்களையும், செல்வங்களையும், வாழ்க்கையையும் சூழ்ந்து கொள்ளும். பிறகு எப்படி ஒரு சதுப்புநில சேரில் அவன் மாட்டிக் கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் மூழ்கி அவன் இறந்து விடுவானோ அது போலத்தான்.
அல்லாஹு தஆலா பல வசனங்களில் மரணத்தை நமக்கு நினைவூட்டுகின்றான்.
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ
எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே! பிறகு, நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 25 : 57)
இன்று கவலைக்குரிய செய்தி என்ன என்றால், இறந்து போனவர்களுடைய கப்ர்களுக்கு சென்றால் அங்கே ஒரு பலகையை வைப்பார்கள். அந்தப் பலகைகளில் இந்த வசனத்தை எழுதி இருப்பார்கள்.
உயிரோடு இருப்பவர்களுக்கு செய்யப்பட்ட இந்த உபதேசம் கடைசியாக இறந்தவர்களுக்கு எழுதப்படக்கூடிய ஒரு வசனமாக மாறிவிட்டது.
இந்த உலகத்தில் யார் நிரந்தரமாக இருந்தார்கள்? ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களா? செல்வம், ஆட்சி கொடுக்கப்பட்ட சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களா? அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களா?
யார் இந்த உலகத்தில் நிரந்தரமாக இருந்தார்கள்? பிறகு இந்த உலகத்தில் அவர்கள் சம்பாதித்ததில் சேகரித்தில் எதை கொண்டு சென்றார்கள்? அவர்கள் சம்பாதித்த செல்வத்தை கொண்டு செல்ல முடிந்ததா?
அவர்கள் போரிட்டு, தியாகங்கள் செய்து, இரத்தம் சிந்தி, அவர்கள் கட்டிக்காத்த ஆட்சிகளில் எதையாவது சிலவற்றை அவர்களால் கொண்டு செல்ல முடிந்ததா? அவர்கள் வாங்கிய சொத்துக்களில் எதையாவது கொண்டு செல்ல முடிந்ததா?
இல்லையே! வாழ்ந்து கொள்ளுங்கள். எவ்வளவு காலம் வாழப் போகிறீர்கள்? நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மரணிப்பீர்கள் என்று.
ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ
இன்னும், எல்லா இனத்தவருக்கும் (அவர்கள் வாழ்வதற்கும், அழிவதற்கும்) ஒரு தவணையுண்டு. அவர்களது (முடிவுக்குரிய) தவணை வந்தால் ஒரு வினாடி பிந்த மாட்டார்கள்; இன்னும், (ஒரு வினாடி) முந்த மாட்டார்கள். (அல்குர்ஆன் 7 : 34)
ஒவ்வொரு உம்மத்துக்கும் ஒரு தவணை இருக்கிறது. யார், எப்போது, எங்கே, மரணிக்க வேண்டும்? அல்லாஹு தஆலா நேரத்தை முடிவு செய்து விட்டான். அல்லாஹ் தஆலா இடத்தை முடிவு செய்து விட்டான். நாளை முடிவு செய்துவிட்டான். அதை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
யா அல்லாஹ்! ஒரு அழகிய முடிவை எங்களுக்குக் கொடு! என்று அல்லாஹ்விடம் துஆ செய்யக்கூடிய அந்த பயத்தில் நாம் இருக்கிறோம்.
நபிமார்கள் நல்லவர்கள். அல்லாஹ்விடத்தில் அப்படித்தான் இறைஞ்சினார்கள். யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் கேட்ட துஆவை பாருங்கள். எப்பேற்பட்ட ஒரு நபி ரசூலுல்லாஹ்வால் புகழப்பட்டவர்கள். அல்கரீம் கண்ணியத்திற்குரியவர்.
கண்ணியத்திற்குரியவரின் மகனார், கண்ணியத்திற்குரியவரின் பேரனார், கண்ணியத்திற்குரியவரின் கொள்ளுப்பேரன் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் வர்ணிக்கப்பட்ட அந்த நபி அல்லாஹ்விடத்தில் கேட்பதை பாருங்கள்.
யா அல்லாஹ்! என்னை முஸ்லிமாக மரணிக்க வை!
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹ் இப்னு குஸைமா, எண் : 5766.
நாளை நமக்கு பல திட்டங்கள் இருக்கலாம், பல சந்திப்புகள் இருக்கலாம், பல நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்வதற்காக சில முன்னேற்பாடுகள் இருக்கலாம். அல்லாஹ்வுடைய மலக்குக்கு அல்லாஹ் தஆலா நம்மோடு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் முடிவு செய்திருப்பான். அந்த மலக்கு அனுமதி இல்லாமல் வருவார். எவ்வளவு பலமான உயரமான கோட்டைக்குள் இருந்தாலும் சரி.
அல்லாஹ் கூறுகிறான்:
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும், பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4 : 78)
மரணம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு நினைவூட்ட கூடிய மிகப்பெரிய ஒன்று. நாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்று அல்லாஹ்தான் அறிவான்.
وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 31 : 34)
நாளை நாம் என்ன செய்வோம்? என்பதை நம்மால் அறிய முடியாது. எந்த இடத்தில் மரணிப்போம்? என்பதையும் அறிய முடியாது.
பத்திரிக்கையில் படித்தோம். இங்கு சீரியஸாக இருக்கக்கூடிய ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்வதற்காக ஒரு மருத்துவர் அமெரிக்காவில் இருந்து வந்தார். விமான நிலையத்தில் இருந்து இறங்கி அந்த மருத்துவமனையை அடைவதற்கு முன் விபத்தில் இவர் மரணித்து விட்டார்.
அமெரிக்காவிலிருந்து ஒரு மருத்துவர் இந்தியாவிலுள்ள நோயாளியை சிகிச்சை செய்வதற்காக வருகிறார். விமான நிலையத்திலிருந்து மருத்துவமனையை அடைவதற்குள் அங்கு டாக்டர் செல்லவில்லை. டாக்டருடைய ஜனாஸா தான் சென்றது.
இடமும் அல்லாஹ்வால் முடிவு செய்யப்பட்டு விட்டது. காலமும் அல்லாஹ்வால் முடிவு செய்யப்பட்டு விட்டது.
அதை நோக்கி நாம் நகருகிறோம். ஒவ்வொரு காலையும் அப்படித்தான். அடுத்த நாள் காலையை நாம் பார்க்க முடியுமா? ஒவ்வொரு மாலையும் அப்படித்தான்.
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு சொல்கிறார்கள்:
وكانَ ابنُ عُمَرَ يقولُ: إذَا أمْسَيْتَ فلا تَنْتَظِرِ الصَّبَاحَ، وإذَا أصْبَحْتَ فلا تَنْتَظِرِ المَسَاءَ
மாணவனே! காலையில் இருந்தால் மாலையை எதிர்பார்த்து இருக்காதே! அதாவது இப்போதே தவ்பா செய்து கொள்! இப்போதே நீ விட்ட அமல்களை செய்து கொள்! இப்போதே நீ அல்லாஹ்விடம் நெருங்கி விடு!
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6416.
அல்லாஹ்வை நெருங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? தன்னுடைய ஈமான் லாயிலாஹ இல்லல்லாஹ்வை ஒருவன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். யா அல்லாஹ்! நான் உனக்கு இணைவைக்க மாட்டேன்; உனக்கு மாறு செய்யமாட்டேன்; நான் செய்த பாவங்களை மன்னித்து விடு என்று அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும்.
அல்லாஹ்வுடன் நெருங்குவதற்கு பிற இந்து சமயத்தவர் தங்களுடைய பொய் தெய்வங்களுக்கு செய்யக்கூடிய அந்த சடங்கு சம்பிரதாயங்கள் இஸ்லாமில் இல்லை.
ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِنْ دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ
அது (-இரவை பகலிலும் பகலை இரவிலும் நுழைப்பது அல்லாஹ்விற்கு மிக எளிதாகும்.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். (எதையும் படைக்க ஆற்றல் உள்ளவன்). இன்னும், அவனையன்றி அவர்கள் அழைக்கின்றவை பொய்யானவையாகும். (-எதையும் படைப்பதற்கும் உருவாக்குவதற்கும் ஆற்றல் அற்றவை). இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன். (அல்குர்ஆன் 22 : 62)
அந்த ரப்பை நெருங்குவதற்கு இரண்டு ரக்அத் தொழுகை போதும். யா அல்லாஹ்! என்னை மன்னித்துவிடு! நம்முடைய அந்த கண்ணீர் சொட்டு போதுமானது.
யா அல்லாஹ்! எனது பாவத்தை நினைத்து வருந்துகிறேன்! என்னைக் கைவிட்டு விடாதே! என்று அடியான் ஒரு கண்ணீர் சொட்டு விட்டு விட்டால் போதும். அல்லாஹு தஆலா அந்த அடியானை நரகத்தை விட்டும் ஹராமாக்கி விடுகிறான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
عَينانِ لا تمسُّهما النَّارُ: عينٌ بَكَت من خشيةِ اللَّهِ، وعَينٌ باتت تحرُسُ في سبيلِ اللَّهِ
எந்தக் கண் அல்லாஹ்வுடைய பயத்தால் அழுததோ, அந்த கண்ணை அல்லாஹ் தஆலா நரகத்தின் மீது ஹராமாக்கி விடுகிறான்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1639.
இரண்டு ரக்அத் தொழுகை, நீங்கள் மறைத்து செய்யக்கூடிய, அல்லாஹ்வுடைய முகத்தை நாடி மட்டும் செய்யக்கூடிய உங்களது தர்மம், அது சில ரூபாய்களாக இருக்கலாம், சில ஆயிரமாக இருக்கலாம், நீங்கள் ஒரு ஏழைக்கு கொடுக்கக்கூடிய அந்த ஒரு தர்மம் போதுமானது. அல்லாஹ் பாவங்களை மன்னிப்பதற்கு. அல்லாஹ்வை நெருங்குவதற்கு.
அல்லாஹ்வை நெருங்குவது இலகுவானது. அல்லாஹ்வை விட்டு தூரமாவதுதான் கஷ்டம். அதனால்தான் அல்லாஹ் சொர்க்கத்தை உடைய பாதையை இலகுவானது என்று சொல்லி இருக்கிறான்.
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى
இன்னும், சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்குவோம். (அல்குர்ஆன் 87 : 8)
சொர்க்கத்தினுடைய பாதை அவ்வளவு இலகுவானது. நரகத்தின் பாதை மிக கஷ்டமானது. பள்ளிவாசலுக்கு வருவதற்கு ஏதாவது செலவு பண்ணனுமா? பணக்காரர்கள் தான் வரமுடியுமா? ஏதாவது காசு கொடுக்கணுமா?
இதேஇது அல்லாஹ் தடுத்த ஹராமான இடத்திற்கு செல்வதாக இருந்தால் கண்டிப்பாக அங்கே பல செலவுகள் இருக்கும். அதை எல்லாம் இந்த மனிதன் இலேசாக எடுத்துக் கொள்கிறான். எந்த செலவும் இல்லாமல், எந்த சிரமமும் இல்லாமல், மனதிற்கு மகிழ்ச்சியான புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய, உண்மையான ராஹத்தை இந்த மனிதனுக்கு உணர வைக்கக்கூடிய, அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகள், அதனுடைய சுவையை தெரியாதவர்களுக்கு சிரமமாக இருக்கும்.
அல்லாஹ் கூறுகிறான்:
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நீங்கள் அதிலிருந்து விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் உறுதியாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (அல்குர்ஆன் 62 : 8)
சிலர் நினைக்கலாம்; கூட்டிட்டு போய் பெரிய ஹாஸ்பிடலில் வைத்து, இருக்கிற டாக்டர்கள் எல்லோரையும் கூப்பிட்டு, இருக்கிற செல்வத்தை எல்லாம் அழித்தாவது, நாம் நம்முடைய நோயாளியை காப்பாற்றிவிடலாம் என்று சில பேர் இப்படி பேசுவதை பார்த்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம்.
டாக்டர், என்ன செலவானாலும் பரவாயில்லை. நான் செய்ய தயார். என் அப்பாவை காப்பாத்துங்க. என் மனைவியை காப்பாத்துங்க. எங்க அண்ணனைக் காப்பாத்துங்க. என்ன செலவானாலும் பரவாயில்லை.
எங்கிருந்து டாக்டரை கூட்டிட்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. எல்லாம் பண்ணுங்க. நாங்க தயார். எந்த நாட்டுக்கு கூட்டிட்டு போகணும் கூட்டிட்டு போங்க. யாரை கூட்டிட்டு வரணும் கூட்டிட்டு வாங்க.
அல்லாஹ் உங்க நேரத்தை முடிவு செய்து விட்டால் எந்த மருத்துவர்களும், எந்த மருந்தும் பயன் தராது. அல்லாஹ் பாதுகாப்பானாக.
ஒரு சிறிய இணை அல்லது நம்பிக்கையில் இந்த எண்ணம் கலந்து விட்டால் இது ஒரு பெரிய இணைவைத்தல் ஆகிவிடும்.
சிலர் சொல்கிறார்கள்; எங்க அப்பாவிற்கு அட்டாக் வந்துடுச்சு, உடனே ஆம்புலன்சுக்கு போன் பண்ணினோம். உடனே ஆம்புலன்ஸ் வந்தது. உடனே கூட்டிட்டு போனோம். டாக்டர் ரெடியா இருந்தார். உடனே பார்த்தார். உடனே சிகிச்சை அளித்தார். எங்க அப்பாவை காப்பாற்றிவிட்டார். நல்ல டாக்டர்கள். ரொம்ப திறமையானவர்கள். கரெக்டா கண்டு பிடிச்சு கரெக்டா ஆபரேஷன் செய்து கரெக்டா காப்பாத்திட்டார். இல்லைனா மவுத் ஆகி இருப்பார்.
அல்லாஹ்வை மறந்து விட்டார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவற்றையெல்லாம் இலேசாக்கி கொடுத்தான் என்பதை மறந்து விட்டார்கள். அல்லாஹ் ஒரு தவணை வைத்திருக்கிறான். அவ்வளவுதான். அல்லாஹு தஆலா ஒரு நேரத்தை முடிவு செய்திருக்கிறான்.
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். உங்களுடைய உணவை நீங்கள் முடிக்காத வரை நீங்கள் மரணிக்க மாட்டீர்கள். எந்த உணவுப்பருக்கையில் பெயர் எழுதப்பட்டு இருக்கிறதோ அந்த பருக்கை வயிற்றுக்குள் செல்லாத வரை மரணம் வராது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : முத்தலிப் இப்னு ஹன்தப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஷுஅபுல் ஈமான் பைஹகீ, எண் : 1141.
எந்த மருந்து செல்ல வேண்டும் என்று எழுதப்பட்டிருந்ததோ, எந்த மாத்திரை செல்ல வேண்டும் என்று எழுதப்பட்டிருந்ததோ, எந்த ஊசி போட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்ததோ, எது அல்லாஹ்வின் புறத்திலிருந்து முடிவு செய்யப்பட்டிருந்ததோ, அது உள்ளே போகாதவரை மவுத்தாக முடியாது.
வாழ்க்கையை கொடுப்பவன் அல்லாஹ். மவுத்தை கொடுப்பவன் அல்லாஹ்.
லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு என்ற திக்ரு மிக சக்தி வாய்ந்த திக்ரு. அந்த திக்ருடைய வாசகங்களில் ஒன்று, யுஹ்யீ வயுமீது -அவன் தான் ஹயாத்தை கொடுப்பவன். அவன் தான் மவுத்தை கொடுப்பவன். (3)
அறிவிப்பாளர்: உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 2235
அந்த நம்பிக்கை நமக்கு வர வேண்டும். இந்த நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் சிலருக்கு இந்த துன்யாவின் மீது அவ்வளவு பற்று. துன்யாவின் மீது அவ்வளவு பயம். எதைப் பார்த்தாலும் பயம். காரணம், மவுத்தாகி விடுவோமோ என்று பயப்படுகிறார்கள்.
இந்த மரணம் என்பது அல்லாஹ்வால் முடிவு செய்யப்பட்டது. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதருக்கு இந்த அறிவுரையை சொன்னார்கள் என்றால், ரஸூலுல்லாஹ்வே! முஹம்மதே! எனது தோழரே! அல்லாஹ்வின் நபியே! மவுத்தை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் வாழுங்கள். எவ்வளவு வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமோ அல்லாஹ்விடத்தில் நீங்கள் கேட்டுப் பெறலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ கேட்டிருந்தால் அல்லாஹ் மறுத்திருக்க மாட்டான். எவ்வளவு வாழ வேண்டுமோ நீங்கள் வாழுங்கள். ஆனால் நீங்கள் மரணிக்கத்தான் போகிறீர்கள்.
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாக்கிம், எண் : 7921.
மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் சம்பவத்தைப் பார்க்கிறோம். மலக்குல் மவ்த் வரும்போது கோபத்தில் அடித்து விட்டார்கள். மலக்குல் மவ்த் திரும்ப சென்று அல்லாஹ்விடத்தில், யா அல்லாஹ்! நீ என்ன இப்படிப்பட்ட ஒரு கோபமான அடியாரிடத்தில் என்னை அனுப்பி விட்டாயே!
மூஸா அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் திரும்பி அல்லாஹ் அனுப்பி வைக்கிறான். நீங்கள் மூஸாவிடத்தில் எவ்வளவு காலம் வாழப்போகிறீர் என்று. ஒரு மாட்டின் மீது கை வைத்து அதன் முடியின் எண்ணிக்கை அளவுக்கு வாழ விரும்புகிறாரா? நான் வாழ்க்கை கொடுக்க தயார். இறங்கி வருகிறார். என்ன சொல்கிறீர்கள்? மூஸாவே! அல்லாஹ் இப்படிக் கேட்கிறான். மூஸா அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதற்கு பிறகு என்ன? அதற்கு பிறகு மவுத்துதான். வந்துதான் ஆகணும். அப்போ நான் இப்போவே அல்லாஹ்வை சந்திக்க தயார் என்று கூறுகிறார்கள். (4)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2372.
இந்த மரணத்தை நாம் எதிர்கொண்டு, அந்த எதிர்பார்ப்பில் இருக்க வேண்டும். அதற்காக நான் மவுத்தா போறேன் என்று சொல்வதில்லை. அதனுடைய அர்த்தம் என்ன? அதற்காக தவ்பா செய்து, விட்ட அமல்களை சரிசெய்து, நம்முடைய பாவங்களை விட்டு விலகி, நம்முடைய இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியாக இருந்து அல்லாஹ்வை சந்திக்க வேண்டும்.
அல்லாஹ் சொல்லுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை - அவனை அஞ்சவேண்டிய உண்மையான முறையில் - அஞ்சுங்கள். இன்னும், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தே தவிர இறந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 3 : 102)
இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் சொல்கின்றார்கள். நீங்கள் முஸ்லிம்களாக வாழுங்கள். அப்பொழுதுதான் முஸ்லிம்களாக மரணிப்பீர்கள் என்று.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு நல்ல முடிவை கொடுப்பானாக! இந்த உலக வாழ்க்கையின் அற்ப இன்பங்களை கண்டு, இந்த உலக வாழ்க்கையில் சில காலம் சுக போகங்களில் மூழ்கி, மறுமையை மறந்து விடுபவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கி விட வேண்டாம்.
நம்முடைய உள்ளத்தின் ஈடுபாட்டை அல்லாஹ்வோடும், அல்லாஹ்வுடைய அமல்களோடும் இந்த மார்க்கத்தோடும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த நல்ல வழிகளிலும் ஆக்கியருள்வானாக!
நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக! பாவங்களை விட்டு நம்மை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தூரமாக்குவானாக! வெண்மையான ஆடை எப்படி கழுவப்படுமோ அதுபோல நம்முடைய பாவங்களிலிருந்து அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மை கழுவுவானாக! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவரையும் சொர்க்கத்திற்கு உரியவர்களாக ஆக்கி அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள்:
குறிப்பு-1)
قالَ لي النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: اقْرَأْ عَلَيَّ، قُلتُ: آقْرَأُ عَلَيْكَ وعَلَيْكَ أُنْزِلَ؟ قالَ: فإنِّي أُحِبُّ أنْ أسْمَعَهُ مِن غَيرِي، فَقَرَأْتُ عليه سُورَةَ النِّسَاءِ، حتَّى بَلَغْتُ: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا} [النساء: 41]، قالَ: أمْسِكْ، فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ.الراوي : عبدالله بن مسعود | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 4582 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه مسلم (800) باختلاف يسير
குறிப்பு-2)
أتاني جبريلُ عليه السَّلامُ فقال : يا محمَّدُ ! عِشْ ما شئتَ فإنَّك ميِّتٌ ، وأحبِبْ من شئتَ فإنَّك مفارقُه ، واعمَلْ ما شئتَ فإنَّك مجزِيٌّ به ، ثمَّ قال : يا محمَّدُ ! شرفُ المؤمنِ قيامُه باللَّيلِ ، وعِزُّه استغناؤُه عن النَّاسِ الراوي : سهل بن سعد الساعدي | المحدث : أبو نعيم | المصدر : حلية الأولياء الصفحة أو الرقم : 3/290 | خلاصة حكم المحدث : غريب من حديث محمد بن عيينة تفرد به زافر بن سليمان وعنه محمد بن حميد التخريج : أخرجه الطبراني في ((المعجم الأوسط)) (4278)، والحاكم (7921) باختلاف يسير.
குறிப்பு-3)
من دخل السوقَ فقال : لا إلهَ إلَّا اللهُ وحدَه لا شريكَ له ، له الملكُ وله الحمدُ يُحيي ويميتُ وهو حيٌّ لا يموتُ بيدِه الخيرُ وهو على كلِّ شيءٍ قديرٍ كتب اللهُ له ألفَ ألفِ حسنةٍ ومحا عنه ألفَ ألفِ سيئةٍ ورفع له ألفَ ألفِ درجةٍ . الراوي : عمر بن الخطاب | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي الصفحة أو الرقم : 3428 | خلاصة حكم المحدث : حسن التخريج : أخرجه الترمذي (3428) واللفظ له، وابن ماجه (2235)، وأحمد (327)
குறிப்பு-4)
و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا و قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَفَقَأَ عَيْنَهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ قَالَ فَرَدَّ اللَّهُ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِمَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَهْ قَالَ ثُمَّ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ (صحيح مسلم – 4374)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/