HOME      Khutba      ஜுமுஆ ஃபஜ்ரில் ஸூரா 76 அத் தஹ்ர் - கூறும் செய்திகள்! அமர்வு 2 | Tamil Bayan - 978   
 

ஜுமுஆ ஃபஜ்ரில் ஸூரா 76 அத் தஹ்ர் - கூறும் செய்திகள்! அமர்வு 2 | Tamil Bayan - 978

        

ஜுமுஆ ஃபஜ்ரில் ஸூரா 76 அத் தஹ்ர் - கூறும் செய்திகள்! அமர்வு 2 | Tamil Bayan - 978


ஜுமுஆ ஃபஜ்ரில் ஸூரா 76 அத் தஹ்ர் - கூறும் செய்திகள்! அமர்வு 2
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜுமுஆ ஃபஜ்ரில் ஸூரா 76 அத் தஹ்ர் - கூறும் செய்திகள்! அமர்வு 1
 
வரிசை : 978
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 11-07-2025 | 16-01-1447
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய தூதர் மீதும், தூதருடைய பாசத்திற்குரிய குடும்பத்தார் மீதும், நேசத்திற்குரிய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் இறையச்சத்தை உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும், அன்பையும், மகத்தான சொர்க்கத்தையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பிக்கிறேன்.
 
அல்லாஹு தஆலா நம்மையும், நமது பெற்றோர்களையும், மூஃமினான முன்னோர்களையும், முஸ்லிம்கள் அனைவரையும் மன்னித்து அருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹ் ﷺ வெள்ளிக்கிழமைக்கு அளித்த முக்கியத்துவம் என்ன? அந்த வெள்ளிக்கிழமையில் நபி ﷺ எந்தெந்த இபாதத்துகளுக்கு சிறப்பாக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டார்கள்? அந்த நாளில் தொழுகைகள்—அது ஜுமுஆ தொழுகையாக இருக்கட்டும், அல்லது ஃபஜ்ரு தொழுகையாக இருக்கட்டும்—அவற்றில் ரசூலுல்லாஹ் ﷺ தேர்ந்தெடுத்த செய்திகள் என்ன? அந்த அத்தியாயங்கள் நமக்கு வழங்கும் ஈமானிய அறிவுரைகள் என்ன? இவற்றைத்தான் கடந்த சில ஜுமுஆக்களில் நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.
 
அதில் இறுதியாக, அல்லாஹ்வுடைய தூதர் ﷺ வெள்ளிக்கிழமையின் ஃபஜ்ர் தொழுகையில், இரண்டாவது ரக்அத்தில், சூரத்துத் தஹ்ர் அல்லது சூரத்துல் இன்ஸான் என்று அழைக்கப்படும் 76-வது அத்தியாயத்தை தொடர்ந்து முழுமையாக ஓதுவார்கள். அரைகுறையாக ஓத மாட்டார்கள். இது ﷺ அவர்களின் இறுதி காலம் வரை தொடர்ந்து வந்த வழிமுறை. இதையே கலீஃபாக்களும் பின்பற்றி வந்தார்கள்.
 
இந்த சூரா அப்படி என்ன அற்புதமான செய்திகளை, படிப்பினைகளை, ஈமானிய உணர்வுகளை நமக்கு வழங்குகிறது என்பதை, இந்த வாரத்தில் ஐந்தாவது வசனத்திலிருந்து பார்க்கலாம்.
 
அல்லாஹு தஆலா, இந்த சூராவில் முஃமின்களை நேரடியாக சொர்க்கத்திற்கே அழைத்து விடுகிறான். இந்த உலகத்தில் நம்முடைய உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்கு தகுதியான ஒன்று இருக்கிறது என்றால், அது அல்லாஹு தஆலா நமக்காக ஏற்படுத்தியுள்ள சொர்க்கமே.
 
சொர்க்கத்தை புரிந்தவர்களுக்கு, சொர்க்கத்தை தேடுபவர்களுக்கு, அல்லாஹ்வுக்காக உயிரை கொடுப்பதும், அல்லாஹ்வுக்காக தன்னையும், தனது சொத்துகளையும், செல்வங்களையும் அர்ப்பணிப்பதும் பெரிய ஒன்றல்ல.
 
இந்த உலகத்தில் மனிதர்கள் இரண்டு வகை. ஒரு கூட்டம்—இப்லீஸுக்காகவும், நஃப்ஸுக்காகவும் வாழ்பவர்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இன்னொரு கூட்டம் இருக்கிறார்கள். அல்லாஹ் தேர்ந்தெடுத்த கூட்டம. ரப்புல் ஆலமீனுக்கு உகப்பான கூட்டம். யார்  அவர்கள்? அல்லாஹ்வுக்காக உயிரை கொடுப்பார்கள். படைத்தவனுக்காக, யார் உயிரை படைத்தானோ, யாரிடம் திரும்பச் செல்ல இருக்கிறோமோ, யாரிடம் நம்முடைய நல்ல முடிவு இருக்கிறதோ, அந்த ரப்புக்காக உயிரை கொடுப்பார்கள்.
 
اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَــنَّةَ‌ 
 
நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் அவர்களுடைய செல்வங்களையும் நிச்சயம் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்கு பகரமாக விலைக்கு வாங்கினான். (அல்குர்ஆன் 9:111)
 
சொர்க்கம் மகத்தான வீடு. மறுமையின் நிரந்தரமான வீடு. மனைவிகள், இன்பங்களாலும், சுகங்களாலும், மனதிற்கு விருப்பமான அனைத்து வகையான இன்பங்களாலும் மகிழ்ச்சியான நிறைந்த வீடு.
 
نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
 
“நாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் நேசர்கள் ஆவோம். அ(ந்த சொர்க்கத்)தில் உங்கள் மனங்கள் விரும்புவதும் உங்களுக்கு உண்டு. இன்னும், அதில் நீங்கள் (வாய்விட்டு) கேட்பதும் உங்களுக்கு உண்டு.” (அல்குர்ஆன் 41:31)
 
உனது நஃப்சுக்கு என்ன வேண்டும். மனிதனே! இங்கே வா. உனக்கு நிறைய கொடுக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
நீ என்னிடத்தில் என்ன கேட்பாய்? இந்த துனியாவில் நாம் கேட்க கூடிய எத்தனையோ துஆக்கள் நமக்கு ஏற்கப்படாமல் இருக்கலாம். நாளை மறுமையில் சொர்க்கத்திலே நாம் கேட்க கூடிய எல்லாம் அல்லாஹ்விடத்தில் நிறைவேற்றப்படும். மகத்தான மறுமை வாழ்க்கை.
 
 சொல்கிறான்: அதற்காக நீங்கள் வாழுங்கள்! 
 
إِنَّ الْأَبْرَارَ
 
மனிதனே! நீ நல்லவனாக ஆகு‌. அல்லாஹ்வுக்கு உகப்பானவனாக ஆகு! உனக்கு பிரியமானதை அல்லாஹ்விற்காக கொடு! அல்லாஹ் எங்கே கொடுக்க சொல்கிறானோ அங்கே கொடு. அவர்கள் தான் அப்ரார் – நல்லவர்கள்.
 
மன் அப்ரார்? நல்லவர்கள் யார்?
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ
 
நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தர்மம் செய்யும் வரை நன்மையை அறவே அடையமாட்டீர்கள். இன்னும், பொருளில் எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 3:92)
 
இந்த  البر என்ற வார்த்தை இருக்கிறதே அது ஒரு அற்புதமான அர்த்தத்தை கொடுக்கும். அல்குர்ஆனிலே அல்லாஹு தஆலா தனது அடியார்களை விவரிப்பதற்காக பல புகழ் வார்த்தைகளை சொல்கிறான். 
 
சில நேரங்களில் முஃமின்கள் என்று சொல்லுவான். சில நேரங்களில் முத்தகீன் என்று சொல்லுவான். சில நேரங்களில் முஹ்சினீன் என்று சொல்லுவான். சில நேரங்களிலே முஜாஹிதீன் என்று சொல்லுவான். சில நேரங்களில் முஹாஜிரீன் என்று அல்லாஹ் சொல்லுவான். இப்படி பல பெயர்கள் தான் தன்னுடைய விசேஷமான நல்லடியார்களுக்கு வைத்திருக்கிறான். அதில் ஒரு பேரு தான் அப்ரார். 
 
அப்ரார் என்ற வார்த்தை எந்த பொருளை கொடுக்கின்றது? தனக்கு விருப்பமானதை விட்டுக் கொடுத்து விடுவார். யாருக்கு கொடுப்பார்? கொடுத்தவனுக்கு கொடுப்பார். அல்லாஹ்வுக்கு கொடுப்பார். அல்லாஹு அக்பர்!
 
அதைவிட பாக்கியம்  என்ன இருக்கிறது? சொல்லுங்கள் பார்க்கலாம்!
 
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நம்முடைய பிள்ளைகளோடு நம் கொஞ்சி மகிழும் போது அந்தப் பிள்ளைக்கு நாம் ஏதாவது ஒரு இனிப்பு பொருளை கொடுப்போம்.  கொடுத்துவிட்டு ஒன்று, இரண்டு, மூன்று என்று அந்த இனிப்பு பொருளை கொடுத்து விட்டு, பிறகு நாம் கேட்போம். அத்தாவுக்கு ஒன்று கொடுக்கிறியா என்று சொல்லி. 
 
அப்படி அந்த பிள்ளை அதை நமக்கு திரும்ப கொடுத்து விடும்பொழுது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா? அதை வாங்கி நாம் சாப்பிட்டு விடுவோமா? அதில் கையால் வாங்கியதற்கு பிறகு திரும்ப அதை பிரித்து அதன் வாயிலே ஊட்டி விடுவோம். 
 
சகோதரர்களே! ஒரு சின்ன உதாரணம். ரப்புல் ஆலமீனுக்கு என்ன தேவை இருக்கிறது? கொடுத்தவனே அவன் தானே!
 
يٰۤاَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَى اللّٰهِ
 
மக்களே! நீங்கள் எல்லாம் என்னிடம் தேவையாக கூடிய ஏழைகள். ஃபக்கீர்கள். என்னிடம் தேவையானவர்கள். (அல்குர்ஆன் 35:15)
 
நான் ஒருவன் தான் தேவையே இல்லாதவன். எனக்குத்தான் எல்லாப் புகழும். உங்களை யாராவது புகழ்ந்தால்தான் உங்களுக்கு புகழ். யாரும் என்னை புகழவில்லை என்றாலும் எனக்கு புகழ் இருக்கிறது. 
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் அப்பேற்பட்ட மகத்தானவன். கொடுத்துவிட்டு கொஞ்சத்தை கேட்கிறான். எதற்காக? நீ கொடுத்ததை விட சிறந்த ஒன்றை உனக்கு கொடுப்பதற்காக. அல்லாஹு அக்பர்! 
 
அல்லாஹ்வுடைய வசனத்தை படித்து சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் சொல்கிறான். முஃமீன்களே! நீங்கள் எதை கொடுத்தாலும் அல்லாஹ் அதற்கு உங்களுக்கு பிரதிபலனை கொடுத்தே தீருவான். நீ எதை கொடுத்தாலும் அல்லாஹ்வின் பாதையிலே எதை தர்மம் செய்தாலும் உனக்கு உடனே கிடைக்கும்.
 
وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ شَىْءٍ فَهُوَ يُخْلِفُهٗ  وَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏
 
நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அதற்கு அவன் (சிறந்த) பகரத்தை ஏற்படுத்துவான். உணவளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன். (அல்குர்ஆன் 34:390
 
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ 
 
எவர் ஒரு நன்மையைச் செய்தாரோ அவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் உண்டு. (அல்குர்ஆன் 6:160)
 
ஒன்றைக் கொடு! பத்தை வாங்கிக் கொள். இன்னும் உனக்கு ஈமான் இருக்கிறதா? இக்லாஸ் உயர்ந்திருக்கிறதா?
 
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
 
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் வந்தன. அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2:261)
 
ஒன்றைக் கொடு. 700 ஐ வாங்கிக் கொள். அதுமட்டுமல்ல, அந்த 700 ஐ நான் பெருக்கிக் கொண்டே இருப்பேன் என்று உதாரணத்தோடு சொல்கிறான். 
 
சகோதரர்களே! அவர்கள் தான் அப்ரார் -நல்லவர்கள். யாருக்கு கொடுப்பார்கள்? அல்லாஹ் யாருக்கு எல்லாம் கொடுக்க சொன்னானோ அவர்களுக்கெல்லாம் கொடுப்பார்கள். 
 
உறவுகளுக்கு கொடுப்பார்கள். ஏழைகளுக்கு கொடுப்பார்கள். எதீம்களுக்கு கொடுப்பார்கள். நல்ல காரியங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். 
 
எதற்காக? மறுமையின் மகத்தான வெற்றியைத் தேடி. அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அந்த அப்ரார் -நல்லவர்கள் இருக்கிறார்களே; அல்லாஹ் எப்படி ஆரம்பிக்கிறான் பாருங்கள்.
 
اِنَّ الْاَبْرَارَ يَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا‌‏
 
நிச்சயமாக நல்லவர்கள் மது குவளையிலிருந்து பருகுவார்கள், அதன் கலப்பு காஃபூர் நறுமணத்தால் இருக்கும். (அல்குர்ஆன் 76:5)
 
வசனத்தின் கருத்து : அவர்களுக்கு கொடுப்பதற்கு பானங்கள் நிறைந்த அந்த குவளைகள் கொண்டு வந்து வைக்கப்படும். அதிலிருந்து அவ்வளவு நறுமணம் வீசும். ஒன்று, குடி பானங்கள் சுவையாக இருப்பது. அதோடு சேர்ந்து அது நறுமணமாக இருக்கும். 
 
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான், சொர்க்கத்தில் அவர்கள் குடிப்பார்கள். பானங்கள் நிறைந்த குவளைகளில் இருந்து அதில் நறுமணங்கள் அப்படி வீசிக் கொண்டிருக்கும். அதில் ( நம்மிடத்தில் இருக்கும் கற்பூரம் அல்ல. அனைவரும் விரும்பும் சுவனத்து) காஃபூர் -கற்பூரம் கலக்கப்பட்டிருக்கும்‌. 
 
துன்யாவை கொண்டு ஒப்பிட முடியாது. அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அங்கே அவர்களுக்கு என்ன இருக்கும்?
 
عَيْنًا يَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُوْنَهَا تَفْجِيْرًا‏
 
அ(ந்த நறுமணமான)து, ஓர் ஊற்றாகும். அதில் இருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துவார்கள். அதை அவர்கள் (விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓட வைப்பார்கள். (அல்குர்ஆன் 76:6)
 
கருத்து : அவர்களுக்காக ஊற்றுகள், நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். சொர்க்கவாசிகள் அதிலிருந்து பருகுவார்கள். அந்த நதி எப்படிப்பட்ட நதி? உலகத்திலே ஒரு நதி ஓட வேண்டும் என்றால் அதற்காக தனி இடம் தேவை. பள்ளம் தேவை. அதற்காக ஒரு ஓட்டம் தேவை. ஆனால் சொர்க்கத்தில் அப்படியல்ல.
 
நீங்கள் உங்கள் விரல்களால் எங்கே சுட்டிக்காட்டுகின்றீர்களோ அங்கே எல்லாம் நதி அப்படியே உங்களை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும். பள்ளம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அங்கு அல்லாஹ் நிர்ணயித்த நீங்கள் சுட்டிக் காட்டுகின்ற இடங்களை தவிர மற்ற எல்லா இடங்களுக்கு அது தாண்டாது. அப்பேற்ப்பட்ட அற்புதமான நதிகள் ஓடிக்கொண்டே இருக்கும். 
 
பிறகு அல்லாஹு தஆலா அந்த நல்லவர்களில் செயல்களை சொல்லிக் காட்டுகின்றான். 
 
இன்று நமக்கு சொர்க்கத்துக்கு செல்ல ஆசை இருக்கிறது. ஆனால் சொர்க்கத்திற்கான அமல்களை செய்ய ஆசை இருக்கிறதா? பலருக்கு இதுதான் நிலைமை. எல்லாம் வேண்டும். சொர்க்கம் வேண்டும். ஆனால் ஓசியில் வேண்டும்.
 
அல்லாஹு தஆலா சொர்க்கத்தை அமல்களுக்கான தியாகங்களுக்கான விலையாக வைத்திருக்கின்றான். உன்னுடைய அந்த தியாகம் கொடுத்துவிட்டு சொர்க்கத்தை வாங்கிக்கொள். அதில் என்ன இருக்கிறது?
 
 அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்...
 
يُوْفُوْنَ بِالنَّذْرِ 
 
அவர்கள் நேர்ச்சையை (-தங்கள் மீதுள்ள கடமையான வணக்கங்களை) நிறைவேற்றுவார்கள். (அல்குர்ஆன் 76:7)
 
உன் மீது கடமையாக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்று. அல்லாஹு அக்பர்! அல்லாஹ் தன் மீது கடமையாக்கிய கடமைகளை அல்லாஹ்வுடைய நேசத்தோடு, அன்போடு, மனிதன் செய்ய வேண்டும்.
 
அல்லாஹ்வுக்கு நீ என்னென்ன வாக்கு கொடுத்தாயோ அந்த வாக்குகளை அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டிலும் பெரிய சோதனை. ஒன்று என்ன? அல்லாஹ் கடமையாக்கியதை நம்மில் பலர் எப்படி செய்கிறார்கள் என்றால், ஏதோ இதனால் அல்லாஹ்வுக்கு நன்மை போகிறது என்பதாக நினைத்துக் கொண்டு செய்கிறார்கள். 
 
இந்த தொழுகையை தொழுதால் இதனுடைய நன்மையை நான் அறுவடை செய்யப் போகிறேன். மறுமையில். எனக்கு அல்லாஹ் கொடுக்கப் போகிறான் என்று தொழுதால் எவ்வளவு அழகாக தொழுவோம்! எவ்வளவு சிறப்பாக நீட்டி, நிதானமாக, அமைதியாக தொழுவோம்! 
 
இன்று நம்மிலே பலருக்கு; ஏதோ கடமை; இந்த அளவுக்கு நாம் செய்தால் போதும். சிலருக்கு ஏதோ செய்கிறோம்; ஏதோ அல்லாஹ்வுக்கு செய்கின்ற மாதிரி இல்லை.
 
இல்லை. இதற்காக செயலை செய்யும் போது இதற்குரிய நன்மையை அல்லாஹ் எனக்கு பத்திரப்படுத்தி மறுமையில் தரப்போகிறான் என்று எண்ணத்தோடு செய்ய வேண்டும். 
 
அடுத்தது இரண்டாவது என்ன? சில நேரங்களில் அல்லாஹ்விடம் நாம் பேசுவோம். வாய்விட்டு பேசுவோம். மனதால் பேசுவோம். யா அல்லாஹ்! எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எல்லாம் நல்லபடியா நடந்துருச்சுனா நான் ஹஜ்ஜுக்கு போறேன்; அல்லது ஒரு உம்ரா செய்றேன்; அல்லது என்னுடைய உறவுகளில் கஷ்டப்படக் கூடியவர்களுக்கு ஒரு லட்சம், ரெண்டு லட்சம், மூணு லட்சம் கொடுக்கிறேன் அப்படின்னு நிய்யத்‌ வைக்கணும். 
 
நம்ம நிய்யத் வைக்கும் போது பிச்சைக்காரங்க மாதிரி அஞ்சு ரூபா பத்து ரூபா நிய்யத் வச்சா? அல்லாஹ்விடமிருந்து வாங்கும்போது மட்டும் கோடிக்கணக்கான லட்சக்கணக்கா வேணும். கொடுக்கும் போது மட்டும் அஞ்சு பத்து வேணும். 
 
நாம் நம்முடைய நிய்யத்தை பெரிதாக்கினால் அல்லாஹ்விடத்தில் இருந்து வரக்கூடிய வெகுமதியும் பெரிதாக இருக்கும். சில நேரத்துல இப்படி நிய்யத் வைப்போம். ஒரு மதரஸாவுக்கு, ஒரு எத்தீம் கானாவுக்கு, ஒரு மர்கஸுக்கு. 
 
கடைசியில கைக்கு வந்தவுடன் அப்படியே தாரில் கை ஒட்டுன மாதிரி ஒட்டிக்கும். இப்பொழுது தான் இன்னொரு தேவை. இத ஒரு பிசினஸ்ல போட்டதுக்கு அப்புறமா அடுத்த மாசம் கொடுத்தா என்ன? அடுத்த வருஷம் கொடுத்தா என்ன? ஷைத்தான் விளையாடுவான். இந்த நல்லவர்கள் அப்படியல்ல. அவர்கள் எதை அல்லாஹ்வுக்காக நிய்யத் வைத்தார்களோ அதனுடைய நேரத்தில் கொடுத்து விடுவார்கள். அல்லாஹு அக்பர்!
 
நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ்வுக்காக எதை முடிவு செய்தார்களோ கொடுத்து விடுவார்கள்.
 
அல்லாஹ் எப்பேர்பட்டவன்? எவ்வளவு நன்மையாக அல்லாஹ் இதை சொல்லிக் காட்டுகிறான், சாதாரணமான போட்டி அல்ல. நஃப்ஸோடு போட்டி போடுவது என்பது பெரிய விஷயம். சைத்தான்களை கூட சில நேரங்களில் வீழ்த்தி விடலாம்.
 
ஆனால், நமக்குள் இருக்கிற நஃப்ஸ் இருக்கிறது பாருங்கள். நம்முடைய பலவீனத்தை நன்கு தெரிந்தது. இவனுக்கு எப்படி ஆசை காட்ட வேண்டும், இவனை எப்படி பயமுறுத்த வேண்டும். இவனுடைய பலவீனம் என்ன? இவனுடைய பலம் என்ன? என்பதெல்லாம் நமக்குள் இருக்கக்கூடிய நப்ஸுக்கு நன்றாக தெரியும். 
 
எனவே, ஒன்று ஆசை காட்டும். இல்லை நம்மை பலவீனப்படுத்தும். பயத்தை உண்டாக்கும். குழப்பத்தை உண்டாக்கும். அந்த நல்லவர்கள் இவற்றையெல்லாம் மீறி நஃப்ஸை  அடக்கி அல்லாஹ்வுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார்கள்.
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்;
 
وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا‏
 
இன்னும், ஒரு நாளை பயப்படுவார்கள், அதன் தீமை (அல்லாஹ் கருணை புரிந்தவர்களைத் தவிர மற்ற எல்லோரையும்) சூழ்ந்ததாக, (அவர்கள் மீது) பரவியதாக, கடுமையானதாக இருக்கும். (அல்குர்ஆன் 76:7)
 
அந்த ஒரு நாளை பயப்படுவார்கள். பயம் இருக்க வேண்டும். அந்த நாள் எப்படி? அதனுடைய தீமையும், அதனுடைய ஆபத்துகள் அதனுடைய பிரச்சினைகள் எங்கும் பரவி இருக்கும். நாளை மறுமையிலே அந்த அமல்களின் ஆபத்துக்கள் அப்பேற்பட்ட ஆபத்துகளாக இருக்கும். 
 
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! நாளை மறுமையிலே எழுப்பப்படும் பொழுது நபிமார்களே திகைத்து திக்குத் தெரியாமல் பயந்து நடுங்கி, எங்கே நமது நிலைமை என்னவாகும் என்று அரண்டு கொண்டிருப்பார்கள்.
 
يَوْمَ يَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَيَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ‌  قَالُوْا لَا عِلْمَ لَـنَا  اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏
 
அல்லாஹ் தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில், “உங்களுக்கு என்ன பதில் கூறப்பட்டது?” என்று (அவர்களிடம்) கூறுவான். “எங்களுக்கு (அதைப் பற்றி) அறவே ஞானமில்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்” என்று (அவர்கள் பதில்) கூறுவார்கள். (அல்குர்ஆன் 5:109)
 
நாளை மறுமையில் அல்லாஹு தஆலா ரசூல் மார்களை எழுப்பி உங்களுக்கு என்ன பதில் கொடுக்கப்பட்டது? நீங்கள் உங்களது மக்களை சந்தித்தபோது உங்களுக்கு என்ன ஆனது? என்று கேட்கும் பொழுது அந்த திடுக்கத்திலேயே அவர்கள் சொல்வார்கள், யா அல்லாஹ்  எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே என்ன நடந்தது என்று. எல்லாம் உனக்கே தெரியும் என்பதாக அவர்கள் அப்படியே சரணடைந்து விடுவார்கள். 
 
நினைத்துப் பாருங்கள்! எப்படி இருக்கும்? ஆதமிடத்தில் சென்றால் அவர் பயந்து கொண்டிருப்பார், நூஹ் இடத்திலே சென்றால் அவரும் பயந்து கொண்டிருப்பார். இப்ராஹீம் இடத்திலே சென்றால் அவர் பயந்து கொண்டிருப்பார். மூஸாவிடத்திலே சென்றால் அவர் பயந்து கொண்டிருப்பார். ஈஸா இடத்திலே சென்றால் அவரால் பேசவே முடியாது. (அலைஹிமுஸ்ஸலாது வஸ்ஸலாம்) 
 
இறுதியாக முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே ஓடோடி வருவார்கள் என்றால் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! மறுமையில் அந்த பயங்கரம் எப்படி இருக்கும் என்று! 
 
அல்லாஹு தஆலா மறுமை வரும் பயங்கரத்தை மிகப்பெரிய திடுக்கம் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். (அல்குர்ஆன் 21:103) 
 
உலகத்தில் இந்த மனிதர்கள் கண்டிருக்ககூடிய திடுக்கத்தில் எல்லாம் ஒரு தூசியைப் போல மறுமையின் திடுக்கத்திற்கு முன்னால். 
 
அடுத்து அல்லாஹ் எப்படி வர்ணிக்கிறான் என்று பாருங்கள். அந்த நல்லவர்கள் யார் தெரியுமா?
 
وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏
 
இன்னும், அவர்கள் உணவை - அதன் பிரியம் (-அதன் தேவை தங்களுக்கு) இருப்பதுடன் - ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிப்பார்கள். (அல்குர்ஆன் 76:8)
 
சகோதரர்களே! நம்முடைய இந்த மார்க்கத்தின் விசாலத்தை பாருங்கள். இந்த மார்க்கத்தின் மகத்தான மாண்பை பாருங்கள். அல்லாஹு தஆலா மிஸ்கீன் என்று சொல்கிறான், யதீம் என்று சொல்கிறான். பெரும்பாலும் நம் சமூகத்தில் இருக்கக்கூடிய மிஸ்கீன்கள் யதீம்களை நாம் எடுத்துக் கொள்வோம். 
 
ஆனால் அல்லாஹு தஆலா அடுத்து கைதிகள் என்று ஒரு கூட்டத்தை சொல்கிறான். குறிப்பாக யார்? முஸ்லிம்களால் போரிலே கைப்பற்றப்பட்டார்களோ, அவர்களுக்கும் அவர்கள் உணவு வழங்குவார்கள். அவர்கள் முஷ்ரிக்குகளாக இருந்தாலும், அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தாலும், அந்த கைதிகளுக்கு நல்ல உணவுகளை கொடுப்பார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால், இஸ்லாமிய மார்க்கத்தின் அதைப் பின்பற்றக் கூடியவர்களின் மகத்தான நற்குணத்தை அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான். 
 
உலகத்திலேயே இஸ்லாமை தவிர கைதிகளை பேணக்கூடிய, பரிபாலிக்கக்கூடிய, கைதிகளை அழகிய முறையில் நடத்தக்கூடிய ஒரு மார்க்கம்; இந்த மார்க்கத்தை பின்பற்றக் கூடியவர்கள் இவர்களை தவிர யாரும் இருக்க முடியாது. 
 
இன்று உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை மனித உரிமை அமைப்புகளும் இஸ்லாமிய மனித உரிமைக்கு முன்னால் தோற்று விட வேண்டும். மனித உரிமை ஒன்றை உலகம் கற்றது என்றால் அது இஸ்லாம் வந்ததற்கு பிறகுதான். குர்ஆன் இறக்கப்பட்டதற்குப் பிறகுதான். ரசூலுல்லாஹ் ﷺ அனுப்பப்பட்டதற்கு பிறகுதான். 
 
ஒரு சமயம் ரசூலுல்லாஹ் ﷺ கைபர் உடைய போரிலே ஒரு கைதி மாட்டிக் கொள்கிறார். செல்வம் எங்கே இருக்கிறது? மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர் தெரியாது என்று சொல்கிறார். பொய் சொல்கிறாய் என்று சஹாபாக்கள் அடித்து விட்டார்கள். அடி வாங்கிக் கொண்டு பயந்து கொண்டு இந்த இடத்தில் இருக்கிறது என்று அவர் சொல்கிறார். சஹாபாக்கள் விட்டுவிட்டார்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள். அவர் உண்மையை சொன்னார். அடித்தீர்கள். அவர் பொய் சொன்னார். அடிப்பதை விட்டு விட்டீர்கள் என்று. அவர் தெரியாது என்று சொன்னார் அடித்தீர்கள். அவர் தெரியும் என்று சொல்லி ஏதோ ஒரு பொய்யான இடத்தை சொன்னார். அவரை நீங்கள் விட்டு விட்டீர்கள். 
 
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.
 
இஸ்லாமிய மார்க்கத்தில் கைதிகளை துன்புறுத்துவதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் தடுத்து விட்டார்கள். அவரிடத்திலே எப்படி செய்தி ஆராய முடியுமோ அப்படித்தான் ஆராய வேண்டுமே தவிர, கண்டுபிடிக்க வேண்டுமே தவிர மனிதனை உடலால் வேதனை செய்து அவரிடத்தில் இருந்து செய்திகளை வாங்குவது என்பதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் தடுத்து விட்டார்கள். எத்தகைய மார்க்கம் பாருங்கள்!
 
அல்லாஹு தஆலா அவனுடைய அல் குர்ஆனிலே உங்களிடத்திலே போரிலே உங்களை கொல்ல வந்தவன், இந்த மார்க்கத்தை அழிப்பதற்காக போர் தொடுத்தவன், அவன் கைதியாக இருந்தாலும் அவனுக்கு நல்ல உணவு அளியுங்கள். 
 
இஸ்லாமிய மார்க்கத்தின் முதல் யுத்தம் பத்ர் யுத்தம். மிகப்பெரிய ஒரு திருப்பு முனையாக அமைந்த யுத்தம்! கைதிகள் இவர்களெல்லாம் யார்? முஹம்மது ரசூலுல்லாஹ்வை கொல்ல முயற்சித்தவர்கள். மக்காவிலே நூற்றுக்கணக்கான சஹாபாக்களை தொடர்ந்து வேதனை கொடுத்தவர்கள். அவர்கள் கைதியாக இருக்கிறார்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ ஒரே ஒரு வார்த்தை சொன்னார்கள். உங்கள் கைதிகளோடு அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று. 
 
அறிவிப்பாளர் : அபூ அஸீஸ் இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி, எண் : 977.
 
முஹாஜிர், அன்சாரி தோழர்கள் எல்லோரும் பேரீத்தம் பழங்களை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு ரொட்டியும் இறைச்சியும் கைதிகளுக்கு கொடுத்து விடுவார்கள். எப்படி? காய்ந்து போன பேரீத்தம் பழங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு ரொட்டி கறி இருக்கின்றது அல்லவா அதை கைதிகளுக்கு கொடுத்து பரிமாறினார்கள். 
 
எப்பேற்பட்ட போதனை! அதை பின்பற்றினார்கள் சஹாபாக்கள். அதனால் தான் அவர்கள் சஹாபாக்கள். அதே இஸ்லாம் இன்று நமக்கு மத்தியில் இருக்கிறன்து. ஆனால், அதனை நாம் பின்பற்றுவதில்லை. நாம் ஏற்றுக் கொள்வதில்லை. புறக்கணிக்கிறோம் சொல்லாலும், செயலாலும். அல்லாஹ் பாதுகாப்பானாக‌.
 
அல்லாஹ் அந்த நல்லவர்களை சொல்கிறான். அவர்கள் யார்? உணவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த உணவின் தேவை இருக்கும். உணவுக்காக செலவழிப்பது என்பது சாதாரணமான செலவழிப்பா? ஒரு பத்து பேருக்கு உணவளிக்க வேண்டும். 100 பேருக்கு உணவளிக்க வேண்டும் என்றால் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். 
 
அதுவும் அல்லாஹு தஆலா தொடர்ச்சியை குறிக்கக்கூடிய வார்த்தையை சொல்கிறான். அதை மிஸ்கீன்களுக்கு கொடுப்பார்கள். யதீம்களுக்கு கொடுப்பார்கள். கைதிகளுக்கு கொடுப்பார்கள். 
 
சில நேரத்தில் சில நேரத்திற்காக தன்னுடைய வசதியை வெளிப்படுத்துவதற்காக மனிதன் விருந்து கொடுப்பான். இன்று பெரும்பாலும் வலிமா விருந்துகளில் நடப்பது போல். அல்லது வேறு ஏதாவது விருந்துகளில் நடப்பது போல். 
 
உறவுகளை அழைத்து ஒன்று கூட்டி அவர்களுக்கு உணவளிப்போம்; மகிழ்வோம்; என்பது வேறு. சமூகத்தில் இருக்கும் ஏழைகள் எல்லாம் அந்த நேரத்தில் ஒன்று திரட்டுவோம். அனாதைகளை எல்லாம் அழைத்துக் கொள்வோம் என்பது வேறு. 
 
ஆனால், நான் எவ்வளவு பெரிய பணக்காரன் என்னுடைய வசதி எவ்வளவு என்பதற்காக கொடுக்கக்கூடிய ஒரு விருந்து இருக்கிறது அல்லவா. அந்த விருந்துக்கு மனிதன் செலவு செய்கிறான். ஆனால், அதனால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. 
 
நன்மை எந்த விருந்துக்கு கிடைக்கும்? எந்த விருந்தை கொண்டு பசித்தவர்களின் பசியை போக்குவது நோக்கமாக இருக்கிறதோ, எந்த விருந்தை கொண்டு அல்லாஹ்வின் திருமுகம் நோக்கமாக இருக்கிறதோ அந்த விருந்துக்கு அல்லாஹ்வின் கூலி இருக்கிறது. 
 
நம்முடைய மகிழ்ச்சிக்கு அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான். ஆனால், அந்த மகிழ்ச்சி நம்முடைய பெருமைக்கு, அகம்பாவத்திற்கு வீண் விரயத்திற்கு காரணமாகி விடக்கூடாது. அல்லாஹ் அடுத்து அதையும் சொல்லிக்காட்டுகிறான் பாருங்கள். 
 
அந்த விருந்து கொடுப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்றால்;
 
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا (9) إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا
 
“நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் (இதற்கு) கூலியையும் நன்றியையும் நாங்கள் நாடவில்லை.
 
நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் (பாவிகளின் முகங்கள்) கடுகடுக்கின்ற (குற்றவாளிகளின் நெற்றிகள்) சுருங்கிவிடுகின்ற ஒரு நாளை பயப்படுகின்றோம்.” (அல்குர்ஆன் 76:9,10)
 
கருத்து : அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக கொடுக்கின்றோம்; நாங்கள் இதற்காக எந்த கூலியையும் எதிர்பார்க்கவில்லை. நன்றியை எதிர்பார்க்கவில்லை என்று தன்னுடைய மனதிலே அவர்கள் சொல்லுவார்கள். 
 
நாளை மறுமையின் மகத்தான, கடினமான உஷ்ணங்கள் நிறைந்த, கடினமான குளிர் நிறைந்த ஆபத்துகள் நிறைந்த அந்த மறுமை நாளை நாங்கள் பயப்படுகிறோம். 
 
அல்லாஹு தஆலா அப்படியே அந்த நல்லவர்களின் அந்த மகத்தான குணத்தை சொல்லிவிட்டு திரும்ப அவர்களை மறுமைக்கு அழைத்துச் செல்கிறான்.
 
فَوَقَاهُمُ اللَّهُ شَرَّ ذَلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا
 
ஆக, அந்நாளின் தீமையில் இருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாப்பான். இன்னும், அவன் அவர்களுக்கு முக செழிப்பையும் (பிரகாசத்தையும் அழகையும்) மன மகிழ்ச்சியையும் கொடுப்பான். (அல்குர்ஆன் 76:11)
 
அல்லாஹு தஆலா இப்படிப்பட்ட நல்லவர்களை மறுமையின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பான். கண்டிப்பாக அவர்களுக்கு பாதுகாப்பு உண்டு. அது மட்டுமா? அவர்களுடைய முகங்களை எல்லாம் அப்படியே அதாவது நட்சத்திரங்களைப் போல, சந்திரனைப் போல மின்னக்கூடியதாக பிரகாசிக்க கூடியதாக அல்லாஹ் ஆக்கி விடுவான். அது மட்டுமல்ல. அல்லாஹ் அவர்களுக்கு சந்தோஷத்தை வாரி வழங்கிக் கொண்டே இருப்பான். மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டே இருப்பான்.
 
وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ‏
 
இன்னும், அவர்கள் (வணக்க வழிபாட்டில், பாவங்களை விட்டு விலகி இருப்பதில், சோதனைகளை தாங்கிக் கொள்வதில்) பொறுமையாக இருந்ததால் அவன் அவர்களுக்கு சொர்க்கத்தையும் பட்டையும் (-பட்டாடைகளையும்) கூலியாகக் கொடுப்பான். (அல்குர்ஆன் 76:12)
 
சகோதரர்களே! சோதனையின் போது அடியான் அல்லாஹ்வை பொருந்தி கொண்டே இருக்க வேண்டும். இன்றைய காசா மக்கள் இருக்கிறார்கள் அல்லவா! அவர்களுக்கு எவ்வளவு துன்பங்கள்! அதே நிலையிலே தொழுது கொண்டிருக்கிறார்கள். குர்ஆன் ஓதிக் கொண்டே இருக்கிறார்கள். எத்தனை சிரமங்கள்? உணவு வாங்க செல்கிறவர்கள் கொல்லப்படுகிறார்கள். உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. 
 
இந்த நிலையிலும் அவர்கள் தொழுகிறார்கள். நோன்பு வைக்கிறார்கள். தங்களுக்குள் இருப்பதை பகிர்ந்து கொள்கிறார்கள். ரப்பை அவர்கள் புகழ்கிறார்கள். அல்லாஹ்வை அவர்கள் பொருந்தி கொள்கிறார்கள் என்றால் இது ஈமான். 
 
சகோதரர்களே! இன்று நாம் நல்ல நிலைமையில் இருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இப்போது தொழுவதை விட இப்போது நம்முடைய அமல்களை விட அந்த நேரத்தில் அவர்கள் தொழுகிறார்களே அவர்களுடைய குழந்தைகளை பாருங்கள். அல்லாஹ்வை எப்படி புகழ்கிறார்கள் என்று நினைத்துப் பாருங்கள். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்: அவர்களுடைய பொறுமையின் காரணமாக அல்லாஹ் அவர்களுக்கு கூலி கொடுப்பான். சொர்க்கத்தையும் சொர்க்கத்தின் பட்டுகளையும். 
 
مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا (13) وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا
 
அவர்கள் அதில் கட்டில்களில் சாய்ந்தவர்களாக (சொர்க்க இன்பங்களை அனுபவிப்பவர்களாக) இருப்பார்கள். அதில் சூரியனையோ குளிரையோ காண மாட்டார்கள். (அங்கு உஷ்ணமும் இருக்காது, கடும் குளிரும் இருக்காது.)
 
இன்னும், அதன் (மரங்களின்) நிழல்கள் அவர்களுக்கு அருகில் இருக்கும். அவற்றின் கனிகள் மிக தாழ்வாக (பறித்து புசிப்பதற்கு இலகுவாக) ஆக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 76: 13,14)
 
وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۟ؔ ۙ
 
இன்னும், வெள்ளியினால் செய்யப்பட்ட பாத்திரங்களுடனும் கண்ணாடிகளாக இருக்கிற கெண்டிகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். (அல்குர்ஆன் 76:15)
 
கருத்து : தாம்பளத்திலே வெள்ளி தங்கம் சேர்ந்து செய்யப்பட்ட அந்த கெண்டிகளிலே, அந்தக் குவளைகளிலே சொர்க்கவாசிகளுக்கு பணிவிடை செய்யக்கூடிய அந்த பணியாளர்கள் அழகிய மதுரமான பானங்களை எடுத்துக்கொண்டு அந்த சொர்க்கவாசிகளை சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள்.
 
قَوَارِيْرَا۟ؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِيْرًا‏
 
அவை வெள்ளி கலந்த கண்ணாடிகளாகும். அவற்றை (-அவற்றின் அளவையும் அழகையும்) அவர்கள் (-சொர்க்கவாசிகளுக்கு பானம் புகட்டுகின்ற பணியாளர்கள்) துல்லியமாக நிர்ணயிப்பார்கள். (அல்குர்ஆன் 76:16)
 
தனக்கு எவ்வளவு பெரிய கிளாஸ் தேவை? குடிபானங்கள் உடைய குவளைகள் தேவை என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
 
  وَيُسْقَوْنَ فِيْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًا ‏
 
இன்னும் அதில் (-சொர்க்கத்தில்) மதுக் குவளையில் இருந்து அவர்களுக்கு (மது) புகட்டப்படும். அதன் கலவை இஞ்சியாக இருக்கும். (அல்குர்ஆன் 76:17)
 
அங்கு கொடுக்கக் கூடிய குடிபானக் குவளைகளுக்கிடையே  அந்த பானங்களில் ஸன்ஜபீல் -இஞ்சியில் இருக்கும் மதுரம் அதில் கலக்கப்பட்டிருக்கும்.
 
عَيْنًا فِيْهَا تُسَمّٰى سَلْسَبِيْلًا‏
 
அதில் உள்ள ஓர் ஊற்றாகும் அது. அதற்கு சல்சபீல் என்று பெயர் கூறப்படும். (அல்குர்ஆன் 76:18)
 
وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُـؤْلُـؤًا مَّنْثُوْرًا‏
 
இன்னும் (சிறுவர்களாகவே) நிரந்தரமாக இருக்கும் சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள். நீர் அ(ந்த சிறு)வர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துக்களாக அவர்களை நினைப்பீர். (அல்குர்ஆன் 76:19)
 
وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا
 
இன்னும் (சொர்க்கத்தில்) நீர் எந்த இடத்தைப் பார்த்தாலும் பேரின்பத்தையும் பேராட்சியையும் நீர் பார்ப்பீர். (அல்குர்ஆன் 76:20)
 
عَالِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا
 
அவர்களுக்கு மேல் (உள் புறம்) பச்சை நிற மென்மையான பட்டும் (வெளிப் புறம்) தடிப்பான பட்டு ஆடைகளும் இருக்கும். இன்னும் வெள்ளியினால் செய்யப்பட்ட காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களின் இறைவன் அவர்களுக்கு மிகத் தூய்மையான பானத்தை புகட்டுவான். (அல்குர்ஆன் 76:21)
 
إِنَّ هَذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيُكُمْ مَشْكُورًا
 
நிச்சயமாக இவை (அனைத்தும்) உங்களுக்கு (-நீங்கள் செய்த நன்மைகளுக்கு) கூலியாக இருக்கும். உங்கள் (-சொர்க்கத்தைப் பெறுவதற்காக நீங்கள் செய்த) உழைப்பு நன்றி அறியப்பட்டதாக (பாராட்டுக்குரியதாக, நற்கூலிகளுக்கு தகுந்ததாக) இருக்கும். (அல்குர்ஆன் 76:22)
 
சொர்க்கவாசிகளே! இதோ உங்கள் கூலிகளை, வெகுமதிகளை, உங்களுடைய ரிவார்டுகளை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய முயற்சிகளுக்கெல்லாம் இங்கே கூலி கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
 
முஃமினே! நீ சொன்ன ஒரு சுப்ஹானல்லாஹ் உடைய கூலி கூட உனக்கு மறுமையிலே அங்கே தவறாது. அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம் அனைவரையும் அந்த சொர்க்கத்திற்கான அமல்களை செய்வதற்குரிய வாய்ப்பை தருவானாக! அல்லாஹு தஆலா சொர்க்கவாசிகளாக நம்மையும் நம்முடைய பெற்றோர்கள், முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக! 
 
இன் ஷா அல்லாஹ் மீதம் இருக்கக்கூடிய பகுதியை அடுத்த ஜுமுஆவில் பார்க்கலாம். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்மை பொருந்தி கொள்வானாக! ஆமீன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/