அல்ஜுமுஆவும் ஸுரா முனாஃபிக்கூனும் | Tamil Bayan - 990
அல்ஜுமுஆவும் ஸுரா முனாஃபிக்கூனும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்ஜுமுஆவும் ஸுரா முனாஃபிக்கூனும்
வரிசை : 990
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 29-08-2025 | 06-03-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்து, அவனுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார், மனைவிமார் மற்றும் தோழர்கள் அனைவர்மீதும் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும், மகத்தான சொர்க்க வெற்றியையும், இம்மை மறுமை நற்பாக்கியங்களையும் வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை (தக்வாவை) உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய முஸ்லிமான, முஃமினான சகோதரர்கள்—காஸா மக்களுக்கு—மகத்தான வெற்றியை தந்தருள்வானாக! அவர்களுடைய இந்த கடுமையான சோதனையில், அவர்களுக்கு அழகியதும் உறுதியானதுமான பொறுமையை தந்தருள்வானாக! அவர்கள் இழந்ததை விட சிறந்ததை அல்லாஹு தஆலா அவர்களுக்கு துன்யாவிலும் ஆகிரத்திலும் தந்தருள்வானாக! ஆமீன்.
ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:
فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيدِ
நபியே! யார் என்னுடைய எச்சரிக்கையை பயப்படுவார்களோ அவர்களுக்கு குர்ஆனை கொண்டு உபதேசம் செய்யுங்கள். (அல்குர்ஆன் 50:45)
நபியே! யார் தங்களது ரப்பிடத்திலே நாளை மறுமையில் ஒன்று திரட்டப்படுவோம் என்று நம்புகிறார்களோ அந்த மக்களை இந்த குர்ஆனை கொண்டு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்குர்ஆன் நமக்கு உபதேசத்திற்காகவே இறக்கப்பட்டது. ஹத்தம் ஃபாத்திஹாவிற்காக அல்ல.
அல்குர்ஆன் நம்மை உண்மையான மனிதர்களாக மாற்றுவதற்காகவும், அல்லாஹ்வின் அடியார்களாக மாற்றுவதற்காகவும், தக்வா உள்ள நன்மக்களாகவும், நீதிமான்களாகவும் உருவாக்குவதற்காகவும் இறக்கப்பட்ட வேதம். அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்விற்கு பிரியமானவர்களாக மாற்றுவதற்காகவும், அவர்களை அல்லாஹ்வுடைய கோபத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும், அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் இந்த குர்ஆன் இறக்கப்பட்டது. இது சடங்குகளுக்காக அல்ல.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் இந்த குர்ஆனோடு அற்புதமான தொடர்பை கொண்டிருந்தார்கள். அது வெறும் ஓதுதல் மட்டுமல்ல; ஈமானிய தொடர்பாக, ஒரு ரூஹ், ஒரு உயிரோடு இணைந்த உறவாக அந்த குர்ஆனோடு அவர்கள் வாழ்ந்தார்கள். குர்ஆனின் வார்த்தைகளை மட்டும் ஓதி விட்டுச் செல்லவில்லை. அந்த வார்த்தைகள் வழங்கும் கருத்துகளை உணர்ந்து, புரிந்து, அதற்கேற்ப தங்களுடைய வாழ்க்கையில் அதை பிரதிபலித்தார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அல்குர்ஆனுடைய வசனத்தை இன்று நாம் ஓதுவது போன்று அப்படியே கடகடவென ஓதிவிட்டு செல்ல மாட்டார்கள் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்.
உங்களில் ஒருவர் அப்படியே சடசடவென ஓதுகிறார்கள் அல்லவா அப்படி ஓத மாட்டார்கள். ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்துவார்கள். அதனுடைய முடிவை நீட்டுவார்கள். சிந்திப்பார்கள். ரஹ்மத்துடைய வசனத்திலே துஆ கேட்பார்கள். அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை வேண்டி அதாபுடைய வசனங்களில் அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்.
சகோதரர்களே! இப்படிப்பட்ட ஒரு ஈமானிய தொடர்போடுதான் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இந்த குர்ஆனோடு வாழ்ந்தார்கள். தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் அவர்களுடைய மொத்த வாழ்க்கை குர்ஆனோடு தொடர்புடையதாக இருந்தது.
அந்த அடிப்படையில் தான் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ வெள்ளிக்கிழமைக்கு இந்த குர்ஆனை கொண்டு எப்படி முக்கியத்துவம் கொடுத்தார்கள்? என்பதை தொடர்ந்து பல வாரங்களாக நாம் பார்த்து வந்தோம்.
அதிலே ஒரு முக்கியத்துவம் தான் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இந்த வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்காக தேர்ந்தெடுத்த இரண்டு சூராக்களிலே ஒன்று, சூரத்துல் முனாஃபிகூன் ரசூலுல்லாஹி ﷺ முதல் ரக்அத்திலே சூரத்துல் ஜுமுஆ ஓதினார்கள் என்றால் இரண்டாவது ரக்அத்திலே சூரத்துல் முனாஃபிகூன் ஓதுவார்கள். இது ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய ஒரு தொடர் வழக்கமாக இருந்தது.
நாம் சிந்தித்திருக்கிறோமா? குர்ஆனிலே எத்தனையோ சூராக்கள் இருக்கின்றனவே அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அந்த சூராக்களை எல்லாம் பிரித்து எடுத்து ஏன் ஓதவில்லை? இந்த சூராவை ரசூலுல்லாஹி ﷺ தொடர்ந்து ஓதக்கூடிய பழக்கத்தை ஏன் வைத்திருந்தார்கள்?
எந்த நாளில் முஸ்லிம் உம்மா ஒரு இடத்திலே ஒன்று கூடுமோ பாமரர்கள், படித்தவர்கள், ஏழைகள், செல்வந்தர்கள், தலைவர்கள், பொதுமக்கள் என்று எல்லோரும் ஒன்று கூடக்கூடிய அந்த தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் ﷺ இந்த சூராவை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
சகோதரர்களே! இது ஒரு சாதாரணமான தீர்வு அல்ல. இந்த சூரா முஸ்லிம் உம்மத்திற்கு ஒரு மகத்தான செய்தியை தருகிறது, ஒரு எச்சரிக்கையை கொடுக்கின்றது.
இன்று, நாம் நம்முடைய ஈமானை கொண்டு திருப்தி அடைந்தவர்களாக இருக்கிறோம். நம்முடைய ஈமானில் நிம்மதி உள்ளவர்களாக இருக்கிறோம்.
நமக்கு நாமே 100 மார்க் போட்டு நாமே நம்மை பாஸாக்கிக்கொண்டோம். எத்தனை ஓட்டைகள் நமக்குள் இருக்கின்றன? அல்லாஹ் மிக அறிந்தவன்.
எவ்வளவு அழுக்குகளை அசுத்தங்களை சுமந்து கொண்டிருக்கிறோம். எவ்வளவு முரண்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
சகோதரர்களே! இந்த சூரா அல் முனாஃபிகூன். நயவஞ்சகத்தை உடையவர்கள் என்று இந்த சூராவிற்கு பெயர் வைக்கப்பட்டது. இந்த சூராவை அல்லாஹ்வுடைய தூதர் ﷺ ஜுமுஆவுடைய இரண்டாவது ரக்அத்திலே முழுமையாக ஓதுவார்கள். இந்த சூரா முஃமின்களுக்கு ஒரு அச்சத்தை கொடுக்கிறது.
முஃமினே! உன்னுடைய ஈமானை பரிசோதித்துக் கொள். துக்கப்பட்டால் துக்கம் பயனளிக்காத நாள் வருவதற்கு முன்பாக, கவலைப் பலனளிக்காத நாள் வருவதற்கு முன்பாக, கப்ருக்குள் சென்று எல்லாவற்றையும் கண்கூடாக பார்த்ததற்கு பிறகு மீண்டும் வருவதற்கு ஆசைப்படுவாய். ஆனால் அந்த ஆசை உனக்கு நிறைவேற்றப்படாது. என்ற எச்சரிக்கை தருவதற்காக. உன்னுடைய இறை நம்பிக்கை அதுதான் நாளை மறுமையின் வெற்றியின் அடிப்படை என்பதை உணர்த்துவதற்காக அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இந்த சூராவை ஓதினார்கள்.
இஸ்லாம் ஓங்கியபோது, இஸ்லாம் செழிப்புற்ற போது, ஒரு கூட்டம் தோன்றினார்கள். இந்த இஸ்லாமைக் கொண்டு உலக ஆதாயத்தை தேடி.
அவர்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அவர்கள் யார்? பார்க்க நம்மைப் போன்று இருப்பார்கள். குர்ஆனை பேசுவார்கள். ஸஹாதா சொல்வார்கள். நம்மோடு தொழவும் செய்வார்கள். ஆனால், அல்லாஹு தஆலாவிடத்திலே அவர்கள் காஃபிர்களாக, நிராகரிப்பாளர்களாக இருப்பார்கள். அவர்கள் தான் முனாஃபிக். முனாஃபிக்குகள் யார்? தோற்றத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
வணக்க வழிபாடும் அவர்களிடத்திலே இருக்கும். ஷஹாதாவும் இருக்கும். ஆனால் மிக மோசமானவர்கள் என்று அல்லாஹு தஆலா அவர்களை வர்ணிக்கின்றான்
அவர்களுக்கு வேலை என்ன? இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் தொந்தரவு தந்து கொண்டே இருக்க வேண்டும். இஸ்லாமை சொல்லி லாபத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், இஸ்லாமை சொல்லி உலகத்தை தேடிக் கொள்ள வேண்டும். ஆனால் இஸ்லாமுக்கோ, முஸ்லிம்களுக்கோ விசுவாசமாக இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் எதிரிகளுக்கு விசுவாசமாக இருப்பார்கள். நிராகரிப்புக்கு விசுவாசமாக இருப்பார்கள். முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ மக்காவிலே இறை மறுப்பாளர்கள், இணை வைப்பாளர்கள் மூலமாக பட்ட துன்பத்தை விட மதீனாவில் முனாஃபிக்குகளால் அல்லாஹ் உடைய தூதர் ﷺ துன்பப்பட்டார்கள் முஷ்ரிக்குகளால், காஃபிர்களால் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய உடலுக்கு துன்புறுத்தல் ஏற்பட்டது.
அவர்கள் ஏசினார்கள், பேசினார்கள். ஆனால் இந்த முனாஃபிக்குகள் மதினாவிலே அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய உள்ளத்தை காயப்படுத்தினார்கள். அவர்களுடைய மனதுக்கு வலி கொடுத்தார்கள். அவர்களுக்கு சஞ்சலங்களையும், துக்கங்களையும், துயரங்களையும், தொடர்ந்து தந்து கொண்டே இருந்தார்கள். இனிக்கப் பேசுவார்கள்.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
وَمِنَ النَّاسِ مَنْ يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ
இன்னும், (நபியே!) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி எவனுடைய பேச்சு உம்மை வியக்க வைக்குமோ அ(த்தகைய)வனும் மக்களில் இருக்கிறான். அவன், தன் உள்ளத்தில் உள்ளவற்றிற்கு (பொய்யாக) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். அவனோ வாதிப்பதில் மிகக் கடுமையான பேச்சாளன் (மிகவும் பொய்யாகவும் முரட்டுத்தனமாகவும் வாதிடுபவன்.) (அல்குர்ஆன் 2:204)
கருத்து : நபியே! அவர்களது பேச்சைக் கேட்டால் அப்படியே மயங்கி விடுவீர்கள். உங்களை அவர்கள் மயக்கி விடுவார்கள் தங்களது பேச்சால். ஆனால், கெட்ட விரோதியாக இருப்பான் என்று அல்லாஹு தஆலா அவர்களை பற்றி சொல்லிக் காட்டுகின்றான்.
சகோதரர்களே! இந்த சூரா மிகப்பெரிய செய்திகளை நமக்கு தருகிறது. நம்முடைய ஈமானை குறித்து அல்லாஹ்வை நாம் பயந்து கொண்டிருக்க வேண்டும். எப்படி நிராகரிப்பு இணை வைத்தலுடைய வாடை நம்மிடம் வந்து விடாமல் இருக்க அல்லாஹ்விடத்திலே பாதுகாவல் தேடவேண்டுமோ, அதுபோன்று நயவஞ்சகம் நம்முடைய ஈமானில் கலந்து விடாமல் இருக்க அல்லாஹ்விடத்தில் சதா பாதுகாவல் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். பயந்து கொண்டே இருக்க வேண்டும். இஸ்திக்ஃபார் தவ்பா செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நிஃபாக் உடைய ஒவ்வொரு குணத்தை விட்டும் அல்லாஹ்விடத்திலே நம்மை பரிசுத்தப்படுத்த வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். ரசூலுல்லாஹ் ﷺ உடைய காலத்திலே வாழ்ந்த அந்த முனாஃபிக்குகளை பற்றி.
சகோதரர்களே! குர்ஆன் நிரந்தர வாழ்க்கைக்காக இறுதி நாள் வரை இறக்கப்பட்ட வேதம். அன்று சொல்லப்பட்ட அந்த சம்பவங்களுக்காக இறக்கப்பட்ட வசனங்கள் இன்றும் அது போன்று நடக்கும் என்பதற்காக தான் குர்ஆனிலே ஓதப்படுகிறதே தவிர வேறு ஒரு காரணமல்ல. ஹிதாயத் இது. வரலாற்றை படிப்பினைக்காக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் சாட்சி பகருகிறோம்” என்று கூறுவார்கள். நிச்சயமாக நீர் அவனது தூதர்தான் என்று அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி பகருகிறான். (அல்குர்ஆன் 63:1)
விளக்கம் : நபியே! முனாஃபிக்குகள் உங்களிடத்திலே வருவார்கள். உங்களுக்கு ஷஹாதா சொல்வார்கள்; நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதர் என்று. அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வுக்கு தெரியும். அல்லாஹ் அறிந்திருக்கிறான். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்று. அல்லாஹ் சாட்சி சொல்கிறான். அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான். இந்த முனாஃபிக்குகள் பொய்யர்கள். நாவினால் உங்களை தூதர் என்று சொல்கிறார்கள். உள்ளத்திலே உங்களுடைய தூதுத்துவத்தை அவர்கள் நம்பவில்லை. உள்ளம் நிராகரிக்கிறது.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான்; இவர்களுடைய பிழைப்பு என்ன?
اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
அவர்கள் தங்கள் (பொய்) சத்தியங்களை (அல்லாஹ்வின் உலக தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) கேடயமாக ஆக்கிக்கொண்டனர். ஆகவே (அதைக் கொண்டு) அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை மிகக் கெட்டுவிட்டன. (அல்குர்ஆன் 63:2)
விளக்கம் : இவர்கள் தங்களது சத்தியங்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தாங்கள் முஸ்லிம்கள்; முஸ்லிம்கள் என்று சொல்வதை கேடயமாக பயன்படுத்துகின்றார்கள். பார்ப்பதற்கு நல்ல தோற்றத்திலே நபியின் தோழர்களைப் போன்று தோழர்களோடு இருக்கின்றார்கள்.
ஆனால் அதே நேரத்தில் ரசூலுல்லாஹ்வோடு அமர்ந்து கொண்டிருக்கும்போது ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸை மறுத்துக் கொண்டிருப்பார்கள். ரசூலுல்லாஹ்வை எதிர்த்து பேசிக் கொண்டிருப்பார்கள். ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒன்றை சொன்னால் அதற்கு மாற்றமானதை செய்வார்கள். இதை பார்க்கின்ற பாமர மக்கள் புதிதாக இஸ்லாமை தழுவக்கூடியவர்கள்; யாருக்கு இவர்களுடைய உண்மையான அந்த நிலைமை தெரியாதோ அவர்களெல்லாம் என்ன இவர்களும் எதிர்த்து பேசுகிறார்கள். மாற்றி பேசுகிறார்களே! எதிர்க்கிறார்களே! அப்படி என்றால் ரசூலை எதிர்ப்பது தப்பில்லை போல என்று அவர்களும் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை எதிர்த்து பேச ஆரம்பத்து விடுவார்கள். மறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அடுத்து அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ
அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (முதலில் வெளிப்படையாக) நம்பிக்கை கொண்டனர், (ஆனால்) பிறகு, (உள்ளுக்குள்) நிராகரித்தனர். ஆகவே, அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரை இடப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் (தங்களுக்குரிய சீர்திருத்தத்தை, நன்மையை) புரிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 63:3)
விளக்கம் : ஏன் இவர்கள் இப்படி கெட்டு விட்டார்கள்? இவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு இஸ்லாமிய மார்க்கத்தினுடைய சட்ட திட்டங்களை பின்பற்றுவது; இதனுடைய ஒழுக்கங்களை பின்பற்றுவது; அடுத்து மிக முக்கியமான ஒன்று மறுமைக்காக உயிரையும், பொருளையும் தியாகம் செய்வது. அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். அவர்களது உள்ளங்களின் மீது முத்திரையிடப்பட்டு விட்டது. இனி அவர்கள் எந்த உண்மையையும் புரிய மாட்டார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! முனாஃபிக்குகள் மோசமானவர்கள். அவர்கள் நபி ﷺ அவர்களுடைய சமூகத்திற்கு வந்து சாட்சி சொன்னார்கள்.
அல்லாஹ்வுடைய நபி என்பதாக ஒப்புக்கொண்டோம் என்று சொன்னார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை பொய்யர்கள் என்று முடிவு செய்தான். பொய்யர்கள் என்று வெளிப்படுத்தினான். அவர்கள் வாயினால் சொல்வது அவருடைய உள்ளத்தில் இருக்காது என்று அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்தான். நம்மில் ஒவ்வொருவருக்கும் இது கடுமையான எச்சரிக்கை.
நாம் எதை பேசுகிறோமோ குர்ஆனிலிருந்து, சுன்னாவில் இருந்து அது நம்முடைய உள்ளத்தில் நம்பப்பட்ட நம்முடைய செயல்களில் ஏற்று செயல்படுத்தப்பட்ட பேச்சாக இருக்க வேண்டுமே தவிர, சொல்வதோ ஈமான், உள்ளத்தில் இருப்பதோ நிராகரிப்பு சந்தேகமாக இருக்குமேயானால் (அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்!) நயவஞ்சகத்திலே கொண்டு போய் தள்ளிவிடும்
அடுத்து அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ
இன்னும், (நபியே!) நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் உடல்கள் (-வெளித் தோற்றங்கள்) உம்மைக் கவரும். அவர்கள் (உம்மிடம் ஏதும்) கூறினால் அவர்களின் கூற்றை நீர் செவியுறுவீர். (அவர்களின் பேச்சு அந்தளவு கவர்ச்சியாக, ஈர்ப்புடையதாக இருக்கும். அவர்களின் உள்ளங்களும் அறிவுகளும் பயனற்றவையாக இருப்பதால் அவர்களின் வெறும் உடல் தோற்றம் மட்டும்தான் பிரமிக்க வைக்கக்கூடியதாக இருக்கும். எனவே,) அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரப்பலகைகளைப் போல் இருப்பார்கள். ஒவ்வொரு சத்தத்தையும் தங்களுக்கு பாதகமாகவே எண்ணுவார்கள். அவர்கள்தான் (உங்களுக்கு மோசமான) எதிரிகள். ஆகவே, அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அல்லாஹ் அவர்களை அழிப்பான். (நேர்வழியில் இருந்து) அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகிறார்கள்! (அல்குர்ஆன் 63:4)
விளக்கம் : அவர்களுடைய உடல் தோற்றத்தை பார்த்தால் அவர்களுடைய அலங்காரங்களை பார்த்தால் அப்படியே நீங்கள் மயங்கி விடுவீர்கள். தங்களுடைய உடல் தோற்றத்தால் உங்களை அப்படியே கவர்ந்து விடுவார்கள்.
அவர்கள் பேசினால், அப்படி சுவாரஸ்யமாக, அப்படி ஒரு கவர்ச்சியாக, அப்படி ஒரு இன்ட்ரஸ்ட் ஆக பேசுவார்கள். நீங்கள் அப்படியே அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
மேலும், அவர்கள் எப்படி என்றால் சாய்த்து வைக்கப்பட்ட பலகைகளைப் போல உடல் தான், தோற்றம் தான் அப்படி ஒன்றும் அங்கே ஈமானிய உயிரோட்டம் இருக்காது.
முனாஃபிக்களுடைய முக்கியமான அந்த குணத்திற்கு வருகிறான். அவர்கள் இஸ்லாமுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக மாட்டார்கள். எதிரிகள் புறத்திலிருந்து ஏதாவது ஒரு ஆபத்து வந்தால் உடனே பயந்து ஓடிவிடுவார்கள்.
எங்கே காஃபிர்கள் மிகைத்துடுவார்களோ நாம் முஹம்மதோடு சேர்ந்தால் மாட்டிக்கொள்வோமோ! கொல்லப்பட்டு விடுவோமோ! என்று போருக்கு செல்லும்போது பாதி வழியிலே ஓடி விடுவார்கள்.
அங்கே காஃபிர்களோடு தொடர்பு கொண்டு எங்களை விட்டு விடுங்கள். நாங்கள் உங்களுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுக்கிறோம், காட்டிக் கொடுக்கிறோம், எல்லாம் செய்கிறோம், எங்களை ஒன்றும் செய்யாதீர்கள் என்பதாக காஃபிர்களோடு தொடர்பு வைத்துக் கொள்வார்கள்.
முஸ்லிம்களிடத்திலே எங்களுக்கு குடும்பம் இருக்கிறது, குட்டி இருக்கிறது, எங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் உங்களோடு போருக்கு வர முடியாது எங்களை விட்டு விடுங்கள் என்று. இங்கே முஸ்லிம்களிடத்திலே பலவீனத்தை சொல்லி அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்:
يَحْسَبُوْنَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ
ஒவ்வொரு சட்டத்தையும் தங்களுக்கு எதிராக கற்பனை செய்வார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்; நபியே! அவர்கள் தான் உண்மையான எதிரிகள். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். அல்லாஹ் அவர்களை நாசமாக்குவானாக! எவ்வளவு தெளிவான சத்தியமான இந்த மார்க்கத்திலிருந்து எங்கே அவர்கள் திருப்பப்படுகிறார்கள்?
எப்படி அவர்கள் திருப்பப்படுகிறார்கள்? அல்லாஹ்வுடைய ஒவ்வொரு வாக்கும் உண்மையாகுவதை பார்க்கின்றார்கள். அல்லாஹ்வுடைய ஒவ்வொரு வசனமும் அது காலை விடுவதை போன்று நடப்பதை பார்க்கிறார்கள். இருந்தும் அவர்கள் அதைக் கொண்டு ஈமான் கொள்ளாமல் இந்த உண்மையான தோழர்களை போன்று, முஃமின்களைப் போன்று தியாகம் செய்ய முன்வராமல் பயந்து ஓடுகின்றார்களே?
அதுமட்டுமா அவர்கள் இந்த ரசூலுல்லாஹி ﷺ அவர்களோடு நடந்து கொண்ட ஒரு கெட்ட தன்மையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் இருக்கிறதே விசாலமான மார்க்கம், கருணை உள்ள மார்க்கம்.
அல்லாஹ் கருணையாளன். அவனுடைய தூதர்களை கருணையாளர்களாக அல்லாஹ் அனுப்பினான். இஸ்லாமை கருணை உள்ள மார்க்கமாக அல்லாஹ் ஆக்கினான். முஃமின்களை கருணையாளர்கள் என்று அல்லாஹ் வர்ணித்தான்.
அப்படிப்பட்ட முனாஃபிக்களிடத்திலே கூட சஹாபாக்கள் சென்று சொன்னார்கள். நீங்கள் உங்களது தவறுகளுக்காக வருந்தினீர்கள் என்றால், ரசூலுல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு கேட்பார்கள் வாருங்கள்! ரசூலுல்லாஹ்வுடைய சபைக்கு செல்வோம். அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக மன்னிப்பு கேட்டால் அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான் என்பதாக. அவ்வளவு அன்புகூர்ந்து அழைக்கிறார்கள் தோழர்கள்.
அப்போது அந்த முனாஃபிக்கள் சொன்னார்கள்: ஒருபோதும் நாங்கள் வரமாட்டோம்.
முனாஃபிக், முஃமினுடைய அடையாளங்களில் பிரித்தறிவிக்க கூடிய அடையாளம் முஃமின் பயப்படுவான், முஃமின் பணிந்து விடுவான், அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டால் அப்படியே நடுங்கி விடுவான். அவனுடைய உள்ளத்துடைய அச்சம் அவனை அப்படியே பணிய வைத்துவிடும்.
திமிரு பேசமாட்டான். எதிர்த்துப் பேச மாட்டான். அகம்பாவமான வார்த்தையை சொல்ல மாட்டான். முனாஃபிக் இருக்கிறானே அவன் பேசக்கூடிய பேச்சு எப்படி தெரியுமா இருக்கும்? எங்களுக்கு தெரியும். அல்லாஹ் கிட்ட தானே கேட்கணும், நாங்க கேட்டுக்குறோம். அது என்ன அவர் எங்களுக்கு கேட்கிறது.
இப்படி இன்னும் பல விதமான வார்த்தைகள் இருக்கின்றன. முனாஃபிக்கள் பேசக்கூடிய வார்த்தைகள். அல்லாஹு தஆலா வித்தியாசப்படுத்துகின்றான்.
முஃமின்கள் பயப்படுவார்கள், பணிந்து விடுவார்கள், இந்த முனாஃபிக்குகள் எப்படி?
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ
(உங்கள் செயல்களுக்காக வருந்தி, திருந்தி) வாருங்கள், அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (அல்லாஹ்விடம் பாவ)மன்னிப்புத் தேடுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்கள் தலைகளை (இங்கும் அங்கும்) வேகமாக அசைக்கிறார்கள். இன்னும், (உம்மை) புறக்கணிப்பவர்களாகவே அவர்களை நீர் காண்பீர். அவர்களோ (அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல்) பெருமையடிப்பவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 63:5)
கருத்து : அல்லாஹ்வுடைய தூதர் உங்களுக்காக மன்னிப்பு கேட்பார். வாருங்கள் ரசூலிடத்தில் சென்று சொல்வோம் என்றால், மாட்டேன் என்று அவர்கள் தலையை அசைத்து விடுவார்கள். அவர்கள் இந்த மார்க்கத்தை விட்டு ரசூலுடைய சமூகத்தை விட்டு திரும்பி ஓடுவார்கள். பெருமை பிடித்தவர்களாக இருப்பார்கள்.
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்;
سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
நீர் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடினாலும், அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமம்தான். அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு கீழ்ப்படிய மறுக்கிற) பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 63:6)
அந்த முனாஃபிக்குகள் எப்படி? காஃபிர்களை குறை சொல்லவே மாட்டார்கள். மு.ஃமின்களை குறை சொல்வார்கள், முஸ்லிம்களை குறை சொல்வார்கள். முஸ்லிம்களை ஏசுவார்கள், பேசுவார்கள்.
அடுத்து, அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
هُمُ الَّذِينَ يَقُولُونَ لَا تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَفْقَهُونَ
“அல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள் மீது தர்மம் செய்யாதீர்கள், இறுதியாக அவர்கள் (நபியை விட்டும்) பிரிந்து விடுவார்கள்” என்று இவர்கள் கூறுகிறார்கள். வானங்கள் இன்னும் பூமியின் பொக்கிஷங்கள் எல்லாம் அல்லாஹ்விற்கே உரியன. என்றாலும் நயவஞ்சகர்கள் புரிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 63:7)
விளக்கம் : ரசூலுல்லாஹ்விடத்தில் இருக்கின்றார்களே இந்த ஏழைகள். இவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள், தர்மம் கொடுக்காதீர்கள் என்று மதீனாவில் இருந்து அந்த முனாஃபிக்குகள் முஹாஜிர்களை சுட்டிக்காட்டி, முஹாஜிர்களை ஏளனப்படுத்தி தங்களது மதீனாவாசிகளிடத்திலே சொன்னார்கள்.
அவர்கள் நாம் செலவழிக்கவில்லை என்றால் நமது மதீனாவை விட்டு ஓடிவிடுவார்கள். குறிப்பாக ரசூலுல்லாஹ் ﷺ ஒரு போருக்கு சென்று விட்டு திரும்பும் போது சில முக்கியமான நிகழ்வுகள் அங்கே நடக்கின்றன. முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இடையிலே சிறிய வாக்குவாதம் ஏற்படுகிறது. தண்ணீர் பிடிக்கக்கூடிய விஷயத்திலே சண்டை ஏற்பட்டு விடுகிறது. அப்போது முஹாஜிர் முஹாஜிர்களை உதவிக்கு அழைக்கின்றார், அன்சாரி அன்சாரிகளை உதவிக்கு அழைக்கின்றார்.
அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் கூறினார். பார்த்தீர்களா? அரபு பழமொழியை போல ஆகிவிட்டது. உனது நாயை கொழுக்க நீ வளர்த்தாயானால் அது உனது குழந்தையை தான் கடித்துக் குதரும் என்று. கடைசியில் நாடோடிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் நம்மீதே கைவைத்து விட்டார்கள் என்று சஹாபாக்களை பார்த்து அவ்வளவு மோசமான வார்த்தையை சொல்லி விடுகிறார்.
அது மட்டுமல்ல இவர்களுக்கு இனி செலவழிக்க கூடாது; இவர்கள் மதீனாவை விட்டு ஓட வேண்டும். அது மட்டுமல்ல;
يَقُولُونَ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ
“நாம் மதீனாவிற்கு திரும்பினால் கண்ணியவான்கள் (ஆகிய நாம்) தாழ்ந்தவர்(களாகிய முஹாஜிர்)களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்ற வேண்டும்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்தான் கண்ணியம் உரியது. என்றாலும், நயவஞ்சகர்கள் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 63:8)
அடுத்த அல்லாஹ் சொல்கிறான்:
وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ
அல்லாஹ்விற்கு தான் கண்ணியம். அவனுடைய ரசூலுக்கு தான் கண்ணியம், முஃமின்களுக்கு தான் கண்ணியம், முனாஃபிக்குகள் அறிய மாட்டார்கள், புரிய மாட்டார்கள், உண்மையை யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! முனாஃபிக்குகளுடைய இந்த கொடூர முகத்தை அல்லாஹுதஆலா விவரித்து காட்டுகிறான். ரசூலுல்லாஹ் ﷺ மதீனாவினுடைய 10 ஆண்டுகளிலே பத்ரு போருக்கு பிறகிலிருந்து இந்த முனாஃபிக்களுடைய ஆபத்துகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருந்தார்கள்.
உஹது போரிலே ரசூலுல்லாஹி ﷺ அவர்களுக்கு இந்த முனாஃபிக்குகளால் பிரச்சினை, அஹ்ஸாப் போரிலே பிரச்சனை. அதுபோன்று ரசூலுல்லாஹி ﷺ அவர்களுக்கு தபூக் போரிலே இந்த முனாஃபிக்குகளால் பிரச்சினை. பனு முஸ்தலக் போரிலே இந்த முனாஃபிக்குகளால் பிரச்சனை. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களின் பிரியத்திற்குரிய, பாசத்திற்குரிய நமது தாயாகிய பத்தினியான ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது அவதூறு சொன்னார்கள்.
அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குபோதெல்லாம் அல்லாஹ்வுடைய தூதருக்கு மனவேதனை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
அத்தகைய முனாஃபிக்குகளுடைய குணங்களை அல்லாஹுதஆலா இந்த சூரா உடைய ஆரம்ப வசனங்களிலே நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்.
நயவஞ்சகம் என்பது ரசூலுல்லாஹ் ﷺ உடைய காலத்தோடு முடியக்கூடிய ஒன்றல்ல. முனாஃபிக்குகள் யார் என்பது அது வஹியின் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த குணத்தை உடையவர்கள் தொடர்ந்து இந்த உம்மத்தில் இருந்து கொண்டே இருப்பார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஒவ்வொருவரும் தன்னுடைய ஈமானை சஹாபாக்களுடைய ஈமானாக மாற்ற வேண்டும்.
ஆகவே தான் அல்லாஹ் சொல்லி காட்டுகின்றான்:
فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا
அவர்கள் ஈமான் கொண்டது போன்று இவர்கள் ஈமான் கொண்டால் நேர்வழி பெறுவார்கள். (அல்குர்ஆன் 2:137)
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ
இன்னும், “(இந்த தூதரை உண்மையாக பின்பற்றிய) மக்கள் (-நபித்தோழர்கள்) நம்பிக்கை கொண்டது போன்று (நீங்களும்) நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள்.” எனினும், அவர்கள் (அதை) அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:13)
முனாஃபிக்குகள் பொய் பேசுவார்கள்; வாக்கு மீறுவார்கள்; ஏமாற்றுவார்கள்; வஞ்சகம் செய்வார்கள்; துரோகம் செய்வார்கள்; உம்மத்திற்கு ஒரு சிரமம் என்று சொன்னால் உம்மத்திற்கு கை கொடுக்க மாட்டார்கள். உம்மத்தின் கவலையோடு, துக்கங்களோடு, உம்மத்தின் பிரச்சனைகளோடு உம்மத்திற்கு தோள் கொடுக்க மாட்டார்கள்.
ஆனால் காஃபிர்களை பற்றி கவலைப்படுவார்கள். அல்லாஹ்வின் அடியார்களே! இந்த சூரா நமக்கு ஜுமுஆவிலே மிகப்பெரிய ஒரு பயத்தை கொடுக்கக்கூடிய சூரா.
நம்முடைய ஈமான் எப்படி இருக்கிறது? அல்லாஹ்விற்கு இஹ்லாஸாக இருக்கிறோமா? இந்த மார்க்கத்திற்கு இஹ்லாஸாக இருக்கிறோமா? நாளை மறுமையின் நம்பிக்கை நமக்கு உண்மையில் இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனை இந்த சூராவின் மூலமாக நமக்கு கொடுக்கப்படுகின்றது. அல்லாஹு தஆலா இந்த சூராவை முடிக்குபோது முஃமின்களை பார்த்து அல்லாஹ் பேசுகிறான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
நம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் (திருப்பி உலகக் காரியங்களில்) ஈடுபடுத்தி விடவேண்டாம். ஆக, அத்தகையவர்கள்தான் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 63:9)
எத்தகைய மகத்தான செய்தி இந்த சூராவிலே இருக்கிறது யோசித்துப் பாருங்கள்! இதனுடைய ஆரம்பம் முனாஃபிக்குகளை பற்றி பேசுகின்றது. இதனுடைய இறுதியில் நேரடியாக முஃமின்களை அல்லாஹ் முன்னோக்கி பேசுகிறான். முஃமின்களே! இந்த உலகத்துடைய செல்வம் நீங்கள் சேர்த்து வைத்த செல்வமோ சேர்க்க ஆசைப்படுகின்ற செல்வமோ, நீங்க தேடி வைத்திருக்கக்கூடிய உங்களுடைய குடும்பம் அல்லாஹ்வுடைய நினைவை விட்டு உங்களை மறக்க செய்துவிட வேண்டாம். யார் அப்படிபட்ட நிலைக்கு ஆளாகி விட்டாரோ அவர் தான் நஷ்டவாளி.
யார் நஷ்டவாளி? அல்லாஹ்வுடைய பார்வையிலே யார் அல்லாஹ்வை மறந்தார் தன்னுடைய செல்வத்தால், குடும்பத்தால், அல்லாஹ்வை மறந்து விட்டாரோ, துனியாவில் மூழ்கி விட்டாரோ, மறுமைக்கான தயாரிப்பை எடுத்துக் கொள்ளவில்லையோ அவர் நஷ்டவாளி.
அடுத்து அல்லாஹ் சொல்கிறான். குறிப்பாக முனாஃபிகளுடைய குணத்தை அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
எப்படி? தங்களுடைய குடும்பத்திற்காக தீனை விட்டு விடுவார்கள். தங்களுடைய துனியாவிற்காக தீனை விட்டு விடுவார்கள். முஃமின்கள் யார்? தீனுக்காக குடும்பத்தை விடுவார்கள். முஃமின்கள் யார்? தீனுக்காக உயிரை கொடுப்பார்கள். மூஃமின்கள் யார்? தங்களையும் தங்களது செல்வங்களையும், சொத்துக்களையும் அப்படியே அர்ப்பணிக்க துடித்துக் கொண்டிருப்பார்கள்.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ
இன்னும், உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து (நல்ல வழிகளில்) தர்மம் செய்யுங்கள். ஆக, (ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால்) அவர் கூறுவார்: “என் இறைவா! நீ என்னை (-என் மரணத்தை) கொஞ்சம் சமீபமான தவணை வரை (இவ்வுலகில்) பிற்படுத்தி வைக்கமாட்டாயா! (இன்னும் சிறிது காலம் வாழவைக்க மாட்டாயா!). நான் தர்மம் செய்வேனே, நல்லவர்களில் ஆகிவிடுவேனே.” (அல்குர்ஆன் 63:10)
வசனத்தின் விளக்கம் : முஃமின்களைப் பார்த்து அல்லாஹ் பேசுகிறான். முஃமின்களே நாம் உங்களுக்கு கொடுத்ததில் இருந்து தர்மம் செய்யுங்கள்! உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால் அவர் சொல்வார்; என் இறைவா எனக்கு இன்னும் ஒரு சமீபமான ஒரு தவணை வரை என்னை தாமதப்படுத்த மாட்டாயா? என்னை பிற்படுத்த மாட்டாயா? நான் தர்மம் செய்வேனே! நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே!
அல்லாஹ் சொல்கிறான்.
எந்த ஒரு ஆன்மாவையும் அதற்குரிய தவணை வந்துவிட்டால் அல்லாஹ் ஒருபோதும் அதை பிற்படுத்த மாட்டான். நீங்கள் செய்யக்கூடிய அனைத்து செயல்களையும் அல்லாஹ் ஆழ்ந்து அறிந்து கொண்டிருக்கிறான்.
சகோதரர்களே! இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு இந்த வசனத்தை ஓதுகிறார்கள்; விளக்கம் சொல்கிறார்கள்;
அவர்கள் ஒருமுறை மக்களுக்கு அறிவுரை செய்து கொண்டிருக்கும்போது சொல்கிறார்கள். ஒருவன் ஹஜ் செய்ய வேண்டும் ஹஜ் செய்ய வேண்டும் என்று நினைப்பான். கடைசியில் அவன் ஹஜ் செய்யாமல் இருப்பான். மரணம் வந்துவிடும். அந்த நேரத்திலே சொல்வான்;
யா அல்லாஹ்! நான் ஹஜ் செய்யவில்லை எனக்கு கொஞ்சம் காலத்தை அவகாச படுத்து! நான் ஹஜ் செய்து விடுகிறேன் என்று. அதற்குப் பிறகு தர்மம் செய்பவன் தர்மம் செய்யாமல் செல்வத்தை சேர்த்துக் கொண்டிருந்தவன் மவுத்து நேரத்திலே சொல்வான்; யா அல்லாஹ்! எனக்கு அவகாசத்தை கொடு நான் தர்மம் செய்து கொள்கிறேன் என்று சொல்வான்.
இப்படியாக அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு சொல்லும்பொழுது அந்த சபையிலே இருந்தவர் அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹு விடத்தில் கேட்கின்றார்.
இப்னு அப்பாஸ் அவர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நீங்கள் சொல்லக்கூடிய இந்த கருத்து சரியான கருத்து அல்ல. திரும்பி வருவதை ஆசைப்படக் கூடியவன் முஃமின் அல்ல, அவன் ஒரு காஃபிர் அவனைப் பற்றி தான் வசனங்கள் வருகின்றது. சூரத்துல் முஃமினுடைய இறுதியில் அல்லாஹ் சொல்லிக் காட்டுவான்;
யா! அல்லாஹ் எனக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை கொடு.
نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُ
நாங்கள் இதுவரை செய்யாத நல்ல அமல்களை செய்து வருவோம். என்பதாக ஆசைப்படுவார்கள். அல்லாஹ் காஃபிர்களை பற்றி சொல்கின்றான். (அல்குர்ஆன் 35:37)
இப்னு அப்பாஸ் அவர்களே நீங்கள் என்ன முஃமின்களை பற்றி சொல்வதாக பேசுகிறீர்களே? என்று. இப்னு அப்பாஸ் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு - குர்ஆனின் விரிவுரையாளர் சொன்னார்கள்; சகோதரனே! அல்லாஹ்வின் வசனத்திலிருந்து நான் உனக்கு ஓதி காட்டுகிறேன் என்று இந்த அத்தியாயத்தினுடைய இந்த வசனத்தை ஓதி காட்டினார்கள்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا
அல்லாஹ் ஆரம்பிப்பதே யாரைப் பார்த்து ஆரம்பிக்கிறான்? முஃமின்களே! உங்களுக்கு செல்வமோ, உங்களது குடும்பமோ, அல்லாஹ்வின் நினைவில் இருந்து உங்களை மறதியில் ஆழ்த்தி விட வேண்டாம். முஃமின்களே! நாம் உங்களுக்கு கொடுத்ததில் இருந்து தர்மம் செய்யுங்கள். உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பாக. அப்படி மரணம் வந்துவிட்டால் சொல்வார்; எனக்கு ஒரு வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அவகாசப்படுத்தி கொடு! நான் நல்ல அமல்களை செய்து கொள்வேனே என்று.
அல்லாஹ்வின் அடியார்களே! பாவிகள் ஆசைப்படுவது என்பது இது பொதுவான ஒன்று. காஃபிர் ஆசைப்படுவான்; மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஈமான் கொள்வேனே என்று. பாவியான முஸ்லிம் ஆசைப்படுவான்; எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் தவ்பா செய்து நல்லவனாக வாழ்வேனே என்று.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா அல்குர்ஆனை நமக்கு உபதேசமாக படிப்பினையாக இறக்கி இருக்கிறான். அல்குர்ஆனுடைய ஒவ்வொரு வசனமும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு சிந்திக்க வேண்டிய உபதேசங்களாக இருக்கின்றன.
குறிப்பாக ரசூலுல்லாஹ் ﷺ இந்த ஜுமுஆ நாளிலே தேர்ந்தெடுத்த இந்த சூரா நமக்கு மிகப்பெரிய எச்சரிக்கையான சூரா.
இன்று இது குறித்த விழிப்புணர்வு, நயவஞ்சகத்தை குறித்த விழிப்புணர்வு நமக்கு இல்லாமல் போனது எல்லா பாவங்களையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும், இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும், துரோகமான எல்லா செயல்களையும் செய்து கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! பாதுகாப்பானாக! சீர்திருத்தம் செய்வானாக!
ஆனால் நமக்கு நாமே நம்மை பக்கா முஸ்லிம்களாக முஃமின்களாக நினைத்து நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹ் ﷺ எச்சரிக்கை செய்தார்கள். சஹாபாக்கள் பயந்தார்கள். கலீபா உமர் எத்தகைய பெரிய ஒரு சஹாபி தொடர்ந்து பயந்து கொண்டே இருந்தார்கள். என்னுடைய உள்ளத்திலே நயவஞ்சகம் கலந்து விடுமா? என்று. நான் நயவஞ்சகத்தினரில் அறிவிக்கப்பட்டிருப்பேனோ! என்று பயந்து கொண்டு அது குறித்து விசாரித்து கொண்டே இருந்தார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அபி முளைக்கா, 30 பெரிய சஹாபாக்களிடத்திலே கல்வி படித்த பேரறிஞர், சொல்கிறார்;
நான் பார்த்த அத்தனை சஹாபாக்களும் ஒவ்வொருவரும் தன்னுடைய ஈமானைக் குறித்து எனது ஈமானிலே நயவஞ்சகம் இருக்குமோ என்று பயந்து கொண்டிருந்தார்கள். இதை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் இதை பதிவு செய்கிறார்.
இமாம் ஹஸன் பஸரி சொல்கிறார்கள்; யாரிடத்தில் ஈமான் இருக்குமோ அவர்தான் ஈமானை பற்றி பயப்படுவார். ஈமானே இல்லாத முனாஃபிக் ஈமானை பற்றி எப்படி பயப்படுவான்? என்று சஹாபாக்கள் ஈமானுடையவர்கள் அந்த ஈமானை குறித்து பயந்தார்கள்.
யாருடைய உள்ளம் வெருமென காலியாக இருக்குமோ, ஈமானை விட்டு அவர்கள் இந்த ஈமானை குறித்து பயப்பட மாட்டார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய எண்ணங்களை அல்லாஹு தஆலா தூய்மைப்படுத்துவானாக! நமது ஈமானை உறுதிப்படுத்துவானாக! உண்மையாக்குவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/