மவ்லிதும் மீலாதும் உண்மையான அன்பாகுமா? | Tamil Bayan - 992
மவ்லிதும் மீலாதும் உண்மையான அன்பாகுமா?
ஜுமுஆ குத்பா தலைப்பு : மவ்லிதும் மீலாதும் உண்மையான அன்பாகுமா?
வரிசை : 992
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 05-09-2025 | 13-03-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார், நேசத்திற்குரிய தோழர்கள், அவர்களுடைய சந்ததிகள் அனைவர்மீதும் அல்லாஹு தஆலாவின் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மகத்தான மறுமை வெற்றியையும், சொர்க்கப் பாக்கியத்தையும் வேண்டியவனாக, அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் அன்பையும் நாடியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுங்கள் என்று எனக்கும் உங்களுக்கும் முதலாவதாக உபதேசம் செய்து கொள்கிறேன்.
அல்லாஹு தஆலா ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை நமக்கு நபியாக அனுப்பினான். அவர்களுக்கு ஒரு மார்க்கம் வழங்கப்பட்டது; ஒரு ஷரீஅத் அளிக்கப்பட்டது. அவர்கள் நேர்வழியை பெற்றவர்களாகவும், அதையே மக்களுக்கு வழிகாட்டியவர்களாகவும் இருந்தார்கள்.
அந்த வழி என்ன? அல்லாஹ்விற்கு பிரியமானவற்றைச் செய்வதும், அல்லாஹ்விற்கு பிரியம் இல்லாதவற்றை விட்டு விடுவதும் தான்.
அல்லாஹு தஆலா என்ன விரும்புகிறான்? ஈமான் என்றால் என்ன? அல்லாஹ்வை அவனுடைய தன்மைகளோடு அறிந்து, உறுதியாக நம்பிக்கை கொள்வதே ஈமான்.
அல்லாஹ்விற்கு எது விருப்பமானது என்பதை அறிந்து அதைச் செய்வது; அல்லாஹ்விற்கு எது வெறுப்பானது, எது அவனுக்குப் பிடிக்காதது என்பதை அறிந்து அதை விட்டு விலகுவது – இதுவே ஈமான். இதுவே இஸ்லாம்.
அல்லாஹு தஆலா இந்த மகத்தான பணிக்காகத்தான் நபிமார்களை அனுப்பினான். அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அனுப்பப்பட்ட காலத்தில், மக்கள் அறியாமை (ஜாஹிலிய்யா) எனும் இருளில் மூழ்கியிருந்தார்கள். யூதர்களும் வழிகெட்டிருந்தார்கள்; நஸ்ரானிகளும் வழிகெட்டிருந்தார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றிவந்த அரேபியர்களும், அரேபிய தீபகற்பத்தில் வசித்துக் கொண்டிருந்த மக்களும் வழிகெட்ட நிலையிலேயே இருந்தார்கள். ஒவ்வொரு வழிகேட்டிலும் சிலை வணக்கம், இணைவைப்புகள் நுழைந்திருந்தன.
அல்லாஹ்வை அவனுடைய உண்மையான தன்மைகளுக்கு மாறாக கற்பனை செய்வது, எல்லா மதங்களிலும் பரவியிருந்தது. மக்கள் தங்களது மன விருப்பங்களுக்கு ஏற்ப சடங்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் படைத்த இறைவனை திருப்திப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்கள்.
இதன் மூலம் அவர்கள் தூதர்களின் நேர்வழியிலிருந்து முற்றிலுமாக விலகிச் சென்றிருந்தார்கள். அந்த நேரத்தில் தான் அல்லாஹு தஆலா நம்முடைய நபி முஹம்மது நபி ﷺ அவர்களுக்கு இந்த குர்ஆனை கொடுத்தான், அவர்களுக்கு ஞானத்தை கொடுத்தான்.
அல்லாஹ் தன்னை பற்றி சொல்கிறான்;
اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ
அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் உதவியாளன் ஆவான். அவன் இருள்களிலிருந்து ஒளியை நோக்கி அவர்களை வெளியேற்றுகிறான். (அல்குர்ஆன் 2:257)
அல்லாஹ் நம்பிக்கை கொண்டவரின் நேசனாக, பாதுகாவலனாக இருக்கிறான். அந்த நம்பிக்கையாளர்களை எல்லா வகையான இருள்களிலிருந்தும் வெளியேற்றி, அவர்களை ஒரு வெளிச்சத்தின் பக்கம், அற்புதமான பிரகாசத்தின் பக்கம் அவன் கொண்டு வருகின்றான் என்று அல்லாஹு தஆலா தன்னை வர்ணித்த அந்தப் பணியை இந்த பூமியிலே மக்களுக்கு மத்தியிலே செய்வதற்கு முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை தேர்ந்தெடுத்தான்.
நபியே! இந்த வேதம் உங்களுக்கு கொடுக்கப்பட்டது ஏன்?
الر كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ
அலிஃப் லாம் றா. (நபியே!) இது ஒரு வேதம். மக்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியின்படி இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்; மிகைத்தவன், உயர்ந்த புகழுக்குரியவனின் பாதையின் பக்கம் நீர் வெளியேற்றுவதற்காக (கொண்டு வருவதற்காக) இதை உமக்கு இறக்கி தந்தோம். (அல்குர்ஆன் 14:1)
கருத்து : மக்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருவதற்காக. கண்ணியமிக்க புகழுக்குரியவன் ஆகிய அல்லாஹ்வின் பாதையிலே அவர்களை கொண்டு வந்து நிறுத்துவதற்காக.
وَاِنَّكَ لَـتَدْعُوْهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
நபியே! இந்த மக்களை நேரான, அல்லாஹ்வின் சொர்க்கத்தின் பக்கம் கொண்டு போய் சேர்க்கக் கூடிய சரியான பாதையின் பக்கம் நீங்கள் வழி காட்ட வேண்டும். (அல்குர்ஆன் 23:73)
அல்லாஹுவையும் அல்லாஹ்வுடைய தூதரையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ள கூடிய முஃமின்களாகிய நமக்கு அல்லாஹ் தஆலா, வழிகாட்டுகின்றான்.
وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا
மக்களே! முஃமின்களே! நீங்கள் இந்த தூதருக்கு கீழ் படிந்தால் மட்டும் தான் ஹிதாயத்தை நேர் வழியை பெற முடியும். (அல்குர்ஆன் 24:54)
قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ
நபியே சொல்லுங்கள்! அல்லாஹ்விற்கு கீழ்படியுங்கள்! அல்லாஹ்வின் தூதருக்கு கீழ்படியுங்கள்! (அல்குர்ஆன் 3:32)
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
நபியே! முஃமின்களை பார்த்து நீங்கள் சொல்லுங்கள், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள். அப்போது அல்லாஹ் உங்களை நேசிப்பான். அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன். மகா கருணையாளன். (அல்குர்ஆன் 3:31)
சகோதரர்களே! இப்படி அல்குர்ஆனில் நூற்றுக்கணக்கான வசனங்கள் நமக்கு உணர்த்தக்கூடிய பாடங்களும், படிப்பினைகளும் என்ன?
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள்தான் இந்த மார்க்கத்திற்கான அதிகாரம் (அத்தாரிட்டி). அவர்கள்தான் இந்த மார்க்கத்திற்கான ஆதாரம். அவர்கள் சொல்லியது மார்க்கம்; அவர்கள் சொல்லாதது மார்க்கம் அல்ல.
அவர்கள் செய்து காட்டியது இபாதத்; அவர்கள் செய்து காட்டாதது பித்அத். அவர்கள் செய்து காட்டியது சுன்னத்; அது அல்லாஹ்விற்கு விருப்பமானது.
அவர்கள் செய்து காட்டாத அனைத்தும் முஹ்தஸாத் — மக்களால் புதுமையாக உருவாக்கிக் கொள்ளப்பட்ட அனாச்சாரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள்.
அவற்றில் நன்மை இல்லை என்பதோடு மட்டுமல்ல; அவை பாவத்திற்கு வழிவிட்டு, நரகத்திற்கே கொண்டு போய் தள்ளிவிடும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை சரியாகப் புரிந்து கொள்ளும் ஞானத்தை தந்தருள்வானாக!
ஒரு பெரும் பாவம் இருக்கிறது. அது பார்ப்பதற்கே பாவமாகத் தெரியும். மது குடிப்பது, ஒழுக்கக்கேடு, பொய் பேசுவது, புறம் பேசுவது — இவை அனைத்தும் பெரும் பாவங்கள் என்று அனைவருக்கும் தெரிந்தவை.
ஆனால், இந்த அனாச்சாரங்கள், பித்அத்துகள், முஹ்தஸாத்கள் -புதுமையாக உருவாக்கப்பட்ட சடங்குகள் என்னவென்றால், அவை பார்ப்பதற்கு ஒரு அமலாகத் தோன்றும். அதுதான் இவைகளின் மிகப் பெரிய ஆபத்து.
பார்ப்பதற்கு மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒரு அமல்போல் தோன்றும். மார்க்கத்தில் ஊக்குவிக்கப்பட்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றாக அது இருக்கும்.
அதனால் தான் அது மக்களை ஏமாற்றுகிறது. அதனால் தான் அது மார்க்கத்தை அழிக்கிறது. அதனால் தான் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் பித்அத்துகளை கடுமையாக எச்சரித்தார்கள்.
அதுதான் பித்அத், அதுதான் முஹ்தஸாத், அதுதான் அஹ்வா. முந்திய உம்மத் -யூதர்களும் நஸ்ரானிகளும் ஏன் வழிகெட்டார்கள்? அவர்கள் நபிமார்களின் நேர்வழியிலிருந்து எப்போது தடம் புரண்டார்கள்? அவர்கள் தங்களுடைய மார்க்கத்தில், நபிமார்கள் சொல்லாதவற்றை தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும், புதுமைகளாகவும் கொண்டு வந்து, அவற்றையெல்லாம் வணக்க வழிபாடுகள் என்று புகுத்தியபோதுதான் அவர்கள் வழிகெட்டார்கள்; நாசமாய் போனார்கள்.
என்ன ஆனது? நபிமார்களால் வழிகாட்டப்பட்ட உண்மையான இபாதத் எதுவோ, அது மறக்கப்பட்டது. அந்த இபாதத் புறக்கணிக்கப்பட்டது. பின்னர் அந்த இபாதத் சமுதாயத்திலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டு, மறைந்து போய்விட்டது.
பிறகு என்ன ஆனது? அவர்களுடைய மத குருமார்கள், சன்னியாசிகள், துறவிகள் உருவாக்கிய சடங்குகள், சம்பிரதாயங்கள், புதுமைகள், அனாச்சாரங்கள் அவை மார்க்கமாக மாறிவிட்டன. மக்கள் நபிமார்களின் வழியை மறந்தார்கள்; விட்டுவிட்டார்கள். பின்னர் நபிமார்களின் வழியை யாராவது போதிக்க வந்தால், அது அவர்களுக்கு புதுமையாகத் தோன்றியது.
எப்படி என்றால், புதுமை, அனாச்சாரம், சடங்கு—மார்க்கமாக மாறிவிட்டது. உண்மையான மார்க்கம் அவர்களுக்கு புதுமையாக ஆகிவிட்டது.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களின் வழிமுறையிலேயே நீங்களும் செல்வீர்கள். அவர்களைப் பின்பற்றுவீர்கள் என்று தனது உம்மத்தை குறித்து எச்சரித்தார்களே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அந்த எச்சரிக்கையிலே இந்த உம்மத் விழுந்து கொண்டிருக்கிறது. (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3456.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் மீது ஒரு முஃமின் எப்படி அன்பு வைக்காமல் இருக்க முடியும். நம்முடைய ஈமான் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வுடைய ரசூலின் மீதும் ﷺ நாம் வைத்திருக்கக் கூடிய அந்த அன்பின் வெளிப்பாடுகள் ஈமான். நம்முடைய தொழுகை, இது அல்லாஹ்வின் மீதும் ரசூலுல்லாஹ்வின் மீதும் நாம் வைத்திருக்கக் கூடிய மதிப்பின் வெளிப்பாடு.
ஒரு முஃமின் மார்க்கத்தில் செய்யக்கூடிய ஒவ்வொரு அமலும், அதுபோன்று மார்க்கத்திலே தடுக்கப்பட்ட செயல்களை அவன் விடக்கூடிய ஒவ்வொரு காரியமும், அது அல்லாஹ்வின் மீதும், அவனுடைய ரசூலின் மீதும் அந்த முஃமின் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கையின் வெளிப்பாடு, அன்பின் வெளிப்பாடு, மதிப்பின் வெளிப்பாடு.
ரசூலுல்லாஹி ﷺ அவர்களை மதிக்க வேண்டும்; அவர்கள் மீது உள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தனியாக சடங்குகள், சம்பிரதாயங்கள், அனாச்சாரங்களை அல்லாஹ்வோ அல்லாஹ்வுடைய தூதரோ நமக்கு கற்பிக்கவில்லை.
இன்று பலர், ஒருவருக்கு ரசூலுல்லாஹ் மீது அன்பு இருக்கிறது என்றால் அவர் கண்டிப்பாக மவ்லிது ஓதியே ஆக வேண்டும், மீலாது கொண்டாடியே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுவும் எப்படிப்பட்ட மவ்லிது? எந்த மவ்லிது கிதாப் எந்த ஆதாரமும் இல்லாமல் கற்பனை கதைகளால் நிரப்பப்பட்டிருக்கிறதோ, வரம்பு மீறி புகழப்பட்ட கவிதைகளால் நிரம்பியிருக்கிறதோ, அந்த மவ்லிது கிதாபை ஓத வேண்டும் என்கிறார்கள்.
ஒருவர் அவருடைய வீட்டில் தனித்தனியாக ஓதினால் போதாது. ஒருவருக்கு ரசூலுல்லாஹ் மீது அன்பு இருக்கிறது, குர்ஆன் மீது அன்பு இருக்கிறது, மரியாதை இருக்கிறது. குர்ஆனை காலையில் ஓதுகிறோம், மாலையில் ஓதுகிறோம்—மவ்லிது கிதாபை அப்படிச் செய்தால் போதுமா? போதாது என்று சொல்கிறார்கள்.
அதற்காக தடபுடலாக விசேஷம் செய்ய வேண்டும். அதற்காக வைபவம் நடத்த வேண்டும். அதற்காக பள்ளிகளில் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். அதற்காக ஓதுபவர்களை வாடகைக்கு அழைத்து வர வேண்டும். எப்படி பிற மதங்களில் சடங்குகளைச் செய்து கொடுப்பதற்காகவே புரோகிதர்கள் இருப்பார்களோ, அதுபோல ஒரு கூட்டத்தை இதற்காக அழைத்து வந்து, அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை செய்து, கொடுக்க வேண்டிய ஊதியங்களை கொடுத்து—இப்படி எல்லாம் செய்தால்தான் மவ்லிது நடத்தி இருக்கிறோம் என்று கருதப்படுகிறது.
இதுதான் ரசூலுல்லாஹ் மீது உள்ள அன்பு என்று சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு மீலாது மாநாடுகள், மீலாது மஜ்லிஸ் என்று, அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட கதைகளை சொல்லி, அவர்களைப் பற்றி மக்களிடத்தில் பிரசங்கித்து பேசுகிறார்கள். தவறான வழியில் பொருள் ஈட்டுகிறார்கள் .
அல்லாஹ்வின் அடியார்களே! குர்ஆனுடைய வசனங்களை விட ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை கண்ணியப்படுத்தக் கூடிய வாக்கியங்கள் இருக்குமா?
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது அதிக பற்றுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரிதும் இரக்கமுள்ள; அதிகம் கருணையுள்ள தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்து விட்டார். (அல்குர்ஆன் 9:128)
கருத்து : முஃமின்களே! உங்களுக்கு வந்த தூதர் எப்படிப்பட்ட தூதர் தெரியுமா? அவர் உங்களில் இருந்தே வந்திருக்கிறார். அவர் கண்ணியமானவர். அவர் சங்கையானவர், அவர் உண்மையானவர். உங்கள் மீது பேராசை உள்ளவர். நீங்கள் சிரமப்படுவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இப்படி அல்லாஹ் பேசுகிறான்.
يَاأَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا (45) وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا
நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்.
இன்னும், அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் நாம் உம்மை அனுப்பினோம். (அல்குர்ஆன் 33:45,46)
நபியே! நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா?
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியை வாழ்த்துகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரை வாழ்த்துங்கள்! இன்னும் ஸலாம் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)
முஃமின்களே! உங்களுக்கு அனுப்பப்பட்ட நபியை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வாழ்த்துகின்றான். அல்லாஹு அக்பர்.
சகோதரர்களே! அல்லாஹு தஆலா ரசூலுல்லாஹ்வின் மீது அவ்வளவு பாசக்காரன். அல்லாஹ் தஆலா நமக்கு என்ன கூறினான்! முஃமின்களே உங்களுக்கு அனுப்பப்பட்ட நபி எப்படிப்பட்ட நபி தெரியுமா? அந்த அர்ஷுடைய இறைவன், அவர் மீது பாசத்தை நேசத்தையும் பொழிகின்றான். அல்லாஹ் அக்பர்.
அல்லாஹ்வால் நேசிக்கப்பட்ட அந்த நபியை நேசிப்பது என்பது அவருடைய மார்க்கத்தை வெளி தோற்றத்திலும், உள்ரங்கத்திலும் உள்ளும் புறமும் பின்பற்றுவது. அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை மதிப்பது. அவர்கள் சொல்லாததை செய்வதல்ல. அவர்கள் செய்து காட்டியதைப் பற்றி பிடிப்பது. அவர்கள் தடுத்ததை விட்டு விலகுவது.
அவர்கள் எந்த மார்க்கத்திற்காக மக்காவில் பிறந்தார்களோ, தங்களது பிள்ளைகளை இழந்தார்களோ, தங்களது அவ்வளவு வேதனைகளை உடலில் சந்தித்தார்களோ, தாங்கிக் கொண்டார்களோ, எந்த மார்க்கத்திற்காக அத்தனை போர்களை சந்தித்தார்களோ, எந்த மார்க்கத்திற்காக நபியும், நபியின் தோழர்களும் மிகப் பெரிய ஜிஹாதுகளை செய்தார்களோ, அந்த மார்க்கத்தை பிரச்சாரம் செய்வது. அந்த மார்க்கத்தை பின்பற்றுவது, படிப்பது. சகோதரர்களே! அது அல்லாஹ்வுடைய தூதரை மதிப்பது.
நபியின் மீது அன்பை வெளிப்படுத்துவதற்காக, நபியின் மீது பாசத்தை வெளிப்படுத்துவதற்காக. யா அல்லாஹ்! உன்னுடைய நபியை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ்விடத்தில் நாம் சொல்ல கூடிய வாக்கை நிரூபிப்பதற்காக அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய சாட்சியங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று என்ன? அவர்களுடைய மார்க்கத்தை, ஷரீஅத்தை பின்பற்றுவது.
இரண்டாவது என்ன? அல்லாஹ்வின் தூதர் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவது.
யார் மௌலீதையும், மீலாதையும் ரசூலுல்லாஹ் மீது உள்ள அன்பின் அடையாளமாக ஆக்கினார்களோ, கொஞ்சம் அவர்களின் வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள். ஷரியத்தை பின்பற்றுதல் இருக்காது; ஸலவாத்தின் உண்மையான முக்கியத்துவமும் இருக்காது.
அவர்கள் சில ஸலவாத்துகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். நீங்கள் தொழுகையில் ஓதுகிறீர்களே அந்த ஸலவாத்து, அவர்களுக்கு ஸலவாத்தே இல்லை. அதை அவர்கள் மதிக்கவே மாட்டார்கள். தொழுகையில் ஓதுவதோடு கதை முடிந்தது.
அதற்கு பதிலாக, அவர்கள் சில குறிப்பிட்ட ஸலவாத்துகளை வைத்திருப்பார்கள்—ஸலாத்துன் நாரியா, தரூதே ஷரீஃப் போன்றவை. எந்த ஸலவாத்துகள் ஷிர்க்கானதாக, அல்லது ஷிர்க்கிற்கு நிகரானதாக, அல்லது ஷிர்க்கில் கொண்டு போய் சேர்க்கக் கூடியதாக, அல்லது அதன் வெளிப்படையான அர்த்தங்களே ஷிர்காக இருக்கும்படியாக உள்ளதோ, அந்த ஸலவாத்துகள்தான் அவர்களுக்கு முக்கியம்.
அதுவும் அந்த ஸலவாத்துகளை அல்லாஹ்வின் அன்பினாலோ, ரசூலுல்லாஹ் மீது உள்ள அன்பினாலோ அவர்கள் ஓதுவதில்லை. தங்களுக்கு ஏதாவது ஒரு காரியம் தேவை என்றால், அதை நிறைவேற்றுவதற்காகவே ஓதுகிறார்கள்.
ஸலவாத்தை எதற்காக ஓத வேண்டும்? அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைப் பெறுவதற்காக. நான் எப்படி தொழுது அல்லாஹ்விடத்தில் மன்னிப்பை எதிர்பார்க்கிறேனோ, அதுபோல ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் மீது அல்லாஹ்விற்காக, அந்த நபிக்காக, பாசத்தோடும் நேசத்தோடும் ஸலவாத்து ஓதினால், அல்லாஹ் என்னுடைய பாவங்களை மன்னிப்பான்; மறுமையில் என்னுடைய தரஜாக்களை உயர்த்துவான்; இந்த துன்யாவில் என் மீது தனது ரஹ்மத்தை மழையாக பொழிவான்—இந்த நம்பிக்கையோடு ஸலவாத்தை ஓத வேண்டும்.
எப்படி அல்ல? 4444 தடவை ஓதினால் வழக்கில் வெற்றி பெறலாம், எதிரியை வெல்லலாம், சூழ்ச்சிகளை மடக்கலாம்—இப்படிப்பட்ட மந்திரங்களாக அல்ல சகோதரர்களே. இதற்கு குர்ஆனிலும் இல்லை, ஹதீஸிலும் ஆதாரம் இல்லை.
ரசூலுல்லாஹ் ﷺ மீது ஸலவாத்து சொல்லுங்கள்—ஆம். தேவைகளை அல்லாஹ்விடத்தில் கேளுங்கள். உங்களுக்கு என்ன ஹலாலான தேவையோ, அதை அல்லாஹ்விடத்தில் துஆவின் மூலம் கேளுங்கள். ஆனால், ஒரு இபாதத்தை துன்யாவின் தேவைக்காக மாற்றிவிடாதீர்கள். அப்படிப்பட்ட ஒரு இபாதத்தை அல்லாஹ் நமக்கு கற்றுக்கொடுக்கவில்லை.
துஆ என்பது, நம்முடைய துன்யா மற்றும் மறுமை தேவைகளுக்காக அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு மகத்தான அருள்.
சகோதரர்களே, அல்லாஹு தஆலா சொல்கிறான்,
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ
முஃமின்களே! அல்லாஹ் வாழ்த்துகின்றான்! ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை. (அல்குர்ஆன் 33:56)
அன்பான சகோதரர்களே, குர்ஆனுடைய ஒவ்வொரு வசனமும் அல்லாஹ் நபியை போற்றி புகழ்ந்தது. அர்த்தத்தோடு ஓதிப் பாருங்கள் உங்களுக்கு புரியும்.
وَالضُّحَى (1) وَاللَّيْلِ إِذَا سَجَى (2) مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى
(முற்)பகல் மீது சத்தியமாக! இரவின் மீது சத்தியமாக! அது இருள் சூழ்ந்து நிசப்தமாகும்போது, (நபியே!) உம் இறைவன் உம்மை விட்டுவிடவில்லை. இன்னும், அவன் (உம்மை) வெறுக்கவில்லை. (அல்குர்ஆன் 93:1-3)
சில நாட்கள் வஹீ வரவில்லை. முஹம்மதுடைய இறைவன் அவ்வளவுதான் விட்டு விட்டான் என்று குறைஷிகள் குறை பேசினார்கள்.. அல்லாஹ் அர்ஷிலிருந்து வசனத்தை இறக்கினான். முஹம்மதே, அல்லாஹ் உங்களை ஒருபோதும் விடமாட்டான். உங்களை நபியாக தேர்ந்தெடுத்ததற்கு பிறகு அல்லாஹ் உங்களை விட்டு விடுவானா? உங்களை கோபித்துக் கொள்வானா? இல்லை முஹம்மதே.
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى
அல்லாஹ் உங்களுக்கு துன்யாவிலும், ஆகிரத்திலும் நற்பாக்கியங்களை பொழிந்து, மதிப்பு மரியாதைகளை சொர்க்கத்தில் உயர்ந்த தகுதிகளை கொடுத்துக் கொண்டே இருப்பான். நீங்கள் திருப்தி அடைவீர்கள். (அல்குர்ஆன் 93:5)
எப்படி அல்லாஹ் பேசுகின்றான் பாருங்கள்! எத்தனை குர்ஆனுடைய வசனங்கள்! (அல்குர்ஆன் 94:1-4)
முஹம்மதே! நினைத்துப் பாருங்கள். குறைஷிகள் என்று குஃப்ருடைய இருள்களில் மூழ்கி இங்கிருந்து வெளியேறுவது எப்படி இறைவனை வணங்குவது என்று தெரியாமல் இருந்தீர்களே!
مَا كُنْتَ تَدْرِىْ مَا الْكِتٰبُ وَلَا الْاِيْمَانُ
வேதம் என்றால் என்ன, ஈமான் என்றால் என்ன என்று நீர் அறிந்திருக்கவில்லை. (அல்குர்ஆன் 42:52)
அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாமில் விளக்கத்தை கொடுத்து, நெஞ்சங்களை விரிவாக்கினானே. ஷிர்குடைய, குஃப்ருடைய சடங்குகளை எல்லாம் உங்களில் இருந்து அகற்றி சுமைகளை அல்லாஹ் உங்களுக்கு நீக்கி வைத்தானே. உங்களுடைய புகழ்களை அல்லாஹ் உயர்த்தினானே.
அல்லாஹ்வின் அடியார்களே, உலகத்தில் ரப்புல் ஆலமீன் உடைய பெயருக்கு பிறகு எந்த விதமான இடைவெளி இல்லாமல் அதிகம் அதிகம் உலக மக்களால் உச்சரிக்கப்படக்கூடிய ஒரே பெயர் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ. எங்கு அதான் உயர்த்தப்பட்டாலும் பாங்கு சொல்லப்பட்டாலும், அதான் உயர்த்தப்படாத பாங்கு சொல்லப்படாத இடமே இல்லை. பூமியிலே அதான் உயர்த்தப்படாத பாங்கு சொல்லப்படாத நேரமே இல்லை.
أشهد أن لا إله إلا الله
என்று எப்போது முஅத்தின் ‘’அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு’’ – ‘’வணங்குதற்கு தகுதியானவன் அல்லாஹுவை தவிர வேறு இறைவன் அறவே இல்லை என நான் சாட்சி கூறுகிறேன் ‘’ என்று சொல்வாரோ அதை தொடர்ந்து ‘’அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’’ ‘’முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுவின் தூதராவார்’’ என நான் சாட்சி கூறுகிறேன்
أشهد أن محمدا رسول الله
என்று ரசூலுல்லாஹ் உடைய சாட்சியத்தை சொல்லாமல் இருக்க முடியாது.
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய பெயர் எங்கு குர்ஆனில் கூறப்பட்டாலும் அதோடு சேர்ந்து அல்லாஹு தஆலா ரசூலுல்லாஹ்வை கூறுகின்றான். பூமியிலே எங்கு முஃமின்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தாலும் அங்கே ரசூலுல்லாஹ்வை நினைவு கூராமல் இருக்க முடியாது.
ரசூலுல்லாஹி ﷺ முஃமின்களுக்கு நேசமானவர். (அல்குர்ஆன் 33:6)
நபியை நேசிக்காமல் ஈமான் இல்லை. நபியை நேசிக்க வில்லை என்றால் நமது தொழுகை இல்லை, நோன்பு இல்லை, எந்த இபாதத்தும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது. நபியின் நேசம் நம்முடைய ஈமானின் ஷர்த் -நிபந்தனை.
எத்தனை மக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்கின்றார்கள். நீங்கள் தெரிந்ததை போன்றோ படித்ததை போன்றோ அவர்கள் ரசூலுல்லாஹ்வின் வரலாறு படித்திருக்க மாட்டார்கள். ஆனால், இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஒரு புதிய சகோதரரை கேட்டுப் பாருங்கள், உனக்கு என்ன ஆசை என்பதாக? கலிமா சொல்லிய சில நிமிடங்களிலே கேட்டுப் பாருங்கள். அவர் சொல்லுவார். நான் மக்காவிற்கு செல்ல வேண்டும், கஅபாவை பார்க்க வேண்டும், மதினாவிற்கு செல்ல வேண்டும் என்பதாக. பழகிப் பாருங்கள், படித்துப் பாருங்கள், கேட்டு பாருங்கள்.
ரசூலுல்லாஹ் உடைய அன்பு என்பது ஒருவர் ஷஹாதா சொல்லும் பொழுது அவருடைய உள்ளத்திலே அப்படியே ஒட்டிக் கொள்ளக் கூடியது.
أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدا رسول الله
என்று ஒரு முஃமின் சொல்லும் பொழுது அங்கு அல்லாஹ்வுடைய அன்பு வந்துவிடும். அங்கே ரசூலுல்லாஹ் உடைய அன்பு வந்துவிடும். அப்படி அன்போடு சொன்னால்தான் அது ஷஹாதா. அல்லாஹ்வை நேசித்து, பயந்து, பணிந்து அவனை ரப்பாக ஏற்றுக் கொண்டு, நான் அவனுடைய அடியான் அடிமை அப்து என்று உச்சரிக்கப்படுவது தான் ஷஹாதா.
முஹம்மது ரசூலுல்லாஹ் உடைய உம்மதில் உள்ள ஒருவர்; எனக்கு அல்லாஹ்வின் தூதராக அல்லாஹ் முஹம்மதை தேர்ந்தெடுத்தான்; நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை பின்பற்றுவேன் என்ற உறுதி மொழியோடு சொல்லப்படுவது தான் ஷஹாதா.
சகோதரர்களே! அந்த அன்பை வெளிப்படுத்துவதற்கான வெளிப்பாடு என்ன? அவர்களுடைய ஷரியத்தை கற்க வேண்டும், படிக்க வேண்டும். இன்று மௌலீது கிதாபுகளை படிக்கின்ற அளவுக்கு மார்க்க கல்விகளை படிக்கின்றார்களா? ஹலால் ஹராமை தெரிந்து கொள்கின்றார்களா? ரசூலுல்லாஹ் உடைய சுன்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? அத்தனை ஹராமான செயல்களையும் வட்டியிலிருந்து, இன்னும் என்னென்ன தடுக்கப்பட்ட காரியங்கள் இருக்கின்றதோ, ஏன்? இந்த இசையை அல்லாஹ்வின் தூதர் ﷺ கடுமையாக எச்சரித்தார்களோ அந்த சினிமா பாடல்களின் மெட்டுகளில் இசையை கொண்டே மௌலீது பாடல்கள்.
இந்தியாவிலேயே வந்து விட்டதா? என்று தெரியவில்லை. ஆனால் அரபு நாடுகளிலே மௌலீது வைபவங்கள் என்பது இசை கச்சேரிகளோடு சேர்ந்தது. அந்த அளவிற்கு மடத்தனமான வழிகேட்டிலே சென்று கொண்டிருக்கின்றார்கள். பெண்களை வைத்து பாட வைத்து இசையோடு கூடி உட்கார்ந்து ரசூலுல்லாஹ்வின் அன்பு என்று சிந்திக்கக் கூடிய அளவிற்கு மடத்தனத்தின் உச்சத்திலே சென்று கொண்டிருக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! ஷரியத்தை கற்க வேண்டும். மார்க்கத்தை கற்க வேண்டும். பின்பற்ற வேண்டும். அந்த மார்க்கத்தை பிரச்சாரம் செய்ய வேண்டும். எடுத்துச் சொல்ல வேண்டும். அல்லாஹ்வுடைய தூதரின் மீது அந்த அன்பை வெளிப்படுத்துவதற்காக.
எப்படி لا إله إلا الله என்ற திக்ரை நாம் நம்முடைய ஈமானிற்கு உறுதிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதிகமதிகம் கூறி அதை கொண்டு ரசூலுல்லாஹ் உடைய அன்பை புதுப்பிப்பதற்காக, அதை வளர்த்துக் கொள்வதற்காக, அதை ஆழப் படுத்துவதற்காக, ரசூலுல்லாஹி ﷺ மீது ஸலவாத்தை தொழுகையில் மட்டுமல்ல, தொழுகைக்கு வெளியிலும் நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அது ஒரு திக்ர். ஸலவாத் என்பது அல்லாஹ்வுடைய திக்ருகளிலே ஒன்று.
அல்லாஹ்விடத்தில் நாம் துஆ கேட்கிறோம்; நம்முடைய நபிக்காக ﷺ. ஸலவாத் என்பது, யா அல்லாஹ், இந்த நபியின் மீது ரஹ்மத்து செய்வாயாக! இந்த நபியின் உடைய தரஜாதுக்களை உயர்த்துவாயாக! இந்த நபியின் மீதும் அவரின் குடும்பத்தின் மீதும் உன் பரக்கத்துகளை பொழிவாயாக! இதன் மூலமாக அல்லாஹு தஆலா நமக்கு ரஹ்மத் செய்கிறான். நமக்கு பரக்கத் செய்கிறான்.
ஸலவாத்து ஓதப்படாத துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஸலவாத்து ஓதப்படாத மஜ்லிஸ்கள் வீணான மஜ்லிஸ்கள். ஆனால், சடங்குகளாக ஆக்கப்பட்ட மௌலீதோ மீலாதோ மக்கள் புதுமைகளாக உருவாக்கிய மாற்றார்களை பார்த்து காப்பியடித்து மார்க்கத்திலே சடங்குகளாக புகுத்தினார்களே, அல்லாஹ்வின் மீதோ, அல்லாஹ்வுடைய தூதரின் மீதோ, மார்க்கத்தின் மீதோ நம்முடைய அன்பை வெளிப்படுத்துவதற்கான வெளிப்பாடு இதுவல்ல.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா அல்லாஹ்வுடைய மார்க்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு அருள் புரிவானாக! ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சொல்லியதை செய்து, அல்லாஹ்வை நெருங்குவதற்கு அருள் புரிவானாக! அவர்கள் எதை மார்க்கத்தில் சொல்லித் தரவில்லையோ அத்தனை அனாச்சாரங்கள் புதுமைகளை விட்டு விலகி, அல்லாஹ்வுடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அல்லாஹு தஆலா அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَن قَبْلَكُمْ شِبْرًا بشِبْرٍ، وَذِرَاعًا بذِرَاعٍ، حتَّى لو سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ، قُلْنَا: يا رَسُولَ اللَّهِ، اليَهُودَ وَالنَّصَارَى؟ قالَ: فَمَنْ؟
‘‘உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.129 எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால்கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வேறு யாரை?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3456.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/