HOME      Khutba      ஸஹாபாக்களின் சிறப்புகள்!! அமர்வு 1-2 | Tamil Bayan- 598   
 

ஸஹாபாக்களின் சிறப்புகள்!! அமர்வு 1-2 | Tamil Bayan- 598

           

ஸஹாபாக்களின் சிறப்புகள்!! அமர்வு 1-2 | Tamil Bayan- 598


ஸஹாபாக்களின் சிறப்புகள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஸஹாபாக்களின் சிறப்புகள் (அமர்வு 1-2)
 
வரிசை : 598
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 04-10-2019 | 05-02-1441
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசித்தவனாக, அல்லாஹ்வின் வரம்புகளை பேணுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! இம்மை மறுமை வாழ்க்கையில் நமக்கு வெற்றியை தருவானாக! அல்லாஹ்வை நேசிக்கின்ற கூட்டத்தோடு நம்மை சேர்த்து வைப்பானாக! 
 
அல்லாஹு தஆலா இந்த குர்ஆனின் மூலமாகவும், நபியின் சுன்னாவின் மூலமாகவும் எந்த மூத்த முதல் சமுதாய மக்களுக்கு நேர்வழி காட்டினானோ, அந்த சமுதாயத்தின் நேர்வழியில் நாமும் நடந்து, அவர்களை நேசித்து, அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றது போன்று, நாமும் அல்லாஹ்வின் திருப்தியை பெறுவதற்கு அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக! ஆமீன்.
 
அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய மாபெரும் அருள், இஸ்லாம் ஈமான் என்ற இந்த அருள். ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
 
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
 
இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். இன்னும், இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக திருப்தியடைந்தேன். (அல்குர்ஆன் 5 : 3)
 
ரப்புல் ஆலமீன் விரும்பியிருந்தால் இன்று நான் உங்களுக்கு எனது மார்க்கத்தை நிறைவு செய்தேன் என்று கூறி இருக்கலாம். ஆனால், உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை என்று கூறுகிறான்.
 
இந்த "உங்கள்" என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறியதிலிருந்து மார்க்கத்தை நேசிக்க வேண்டிய, அறிந்துகொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய, பிறகு இந்த மார்க்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்கள் பொறுப்பு. இது இப்போது உங்களுடையதாக ஆகிவிட்டது. 
 
வானத்திலிருந்து இறக்கப்பட்ட இந்த மார்க்கம் இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டது. இனி நீங்கள் இதை பாதுகாக்க வேண்டும். பரப்ப வேண்டும். இது உங்கள் சொத்தாக ஆகிவிட்டது. இதை நான் உங்களுக்கு நிறைவாக தந்து விட்டேன் என்ற ஒரு சைகையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த இடத்தில் குறிப்பிடுகின்றான்.
 
இந்த தீன் இப்போது உங்களுக்கு சொந்தமாகி விட்டது. இதை நீங்கள் பாதுகாக்க வேண்டும், தேடவேண்டும், பரப்பவேண்டும், கற்க வேண்டும், பிறருக்கு போதிக்க வேண்டும். இது உங்களுடையது.
 
அடுத்து  அல்லாஹ் சொல்கிறான்: எனது அருளை நான் உங்களுக்கு இன்று நிறைவு செய்து விட்டேன் என்று. 
 
இந்த இடத்தில் ரப்புல் ஆலமீன் அல்லாஹ் கொடுத்த மார்க்கத்தை நமக்குக் கிடைக்கப்பெற்ற நிறைவான அருளாக சொல்கின்றான்.
 
இந்த உலகத்தில் எந்த ஒரு செல்வமும் நிறைவான செல்வம் என்று கூற முடியாது. காரணம், அந்த செல்வம் அழிந்து போகக்கூடியது. அந்த செல்வம் கைமாறக்கூடியது. இன்று நம்மிடத்தில் இருக்கும், நாம் வாழும் போதே அந்த செல்வம் நம்மை விட்டுப் பிரியலாம். இல்லை என்றால் நம்முடைய மரணத்திற்குப் பிறகு நாம் அந்த செல்வத்தை விட்டு பிரிந்து விடுவோம். கண்டிப்பாக பிரிவு என்பது யதார்த்தமானது; நிரந்தரமானது; உண்மையானது. 
 
ஆனால், மார்க்கம் அப்படி அல்ல. தீன் அப்படி அல்ல. இந்த உலகத்தில் யார் இந்த மார்க்கத்தைப் பேணி பாதுகாத்து வாழ்கிறார்களோ, இந்த தீன் அவர்களுக்கு இந்த துன்யாவிலும் இருக்கும்; அவர்களுக்கு கப்ரிலும் இருக்கும்; அவர்களுக்கு மறுமையிலும் இருக்கும். சொர்க்கம் வரை இந்த மனிதனைக் கொண்டு போய் சேர்ப்பது இந்த தீனுடைய பொறுப்பாக ஆகிவிடுகிறது.
 
ஆகவே, நமக்கு கிடைக்கப் பெற்ற இன்பங்களில், நமக்கு கிடைக்கப் பெற்ற நிஃமத்துகளில் மிகப் பரிபூரணமான நிஃமத், குறைவில்லாத நிஃமத் இஸ்லாம், தீன் தான். 
 
யார் வேண்டுமானாலும் இதை எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். செல்வம் அப்படி அல்ல. அது விதியில் விதிக்கப்பட்டது. ஒருவருக்கு இவ்வளவு தான் என்றால் அவ்வளவுதான். அதை மீறி ஒரு பருக்கையை கூட அவரால் அடைந்துகொள்ள முடியாது. இந்த உலகத்தை இதன் செல்வத்தை அல்லாஹு தஆலா முடிவு செய்துவிட்டான்.
 
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ
 
நாடியவர்களுக்கு விசாலமாக கொடுப்பான். நாடியவர்களுக்கு சுருக்கி கொடுப்பான். (அல்குர்ஆன் 13 : 26)
 
இந்த துன்யா அதிலிருந்து அல்லாஹ் யாருக்கு எவ்வளவு நாடுகிறானோ, அந்த அளவுக்கு தான். ஆனால் தீன் என்று வந்து விடும் போது, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கு, இந்த தீனை பின்பற்றி எந்த அளவு இந்த தீன் நமது வாழ்க்கையில் வரவேண்டும் என்று நாம் முயற்சி செய்கிறோமோ அந்த அளவுக்கு தீன் நம்மில் முழுமையாக கொண்டே செல்லும்.
 
அல்லாஹு தஆலா இந்த தீனை செல்வந்தர்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை. இந்த தீனை ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு கொடுக்கவில்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், அரபுகள், அரபு அல்லாதவர்கள் என எல்லா தரப்பு மக்களுக்கும் அல்லாஹு தஆலா இந்த தீனை பொதுவாக்கி வைத்து விட்டான்.
 
யார், இந்த செல்வத்தை தீன் என்ற இந்த நிஃமத்தை நிறைவாக பெற விரும்புகிறார்களோ, அதை பின்பற்றுவது கொண்டு, கற்பது கொண்டு, இதன்படி வழி நடப்பது கொண்டு இந்த நிஃமத் அவர்களிடத்தில் பரிபூரணமாகும். யாரிடத்தில் பரிபூரணமாகி விட்டதோ அவர்கள் தான் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள். 
 
அவர்கள் வம்சத்தால், இந்த துன்யாவின் செல்வத்தால், இந்த துன்யாவின் அழகால், இன்னும் எத்தனை விஷயங்களில் வேண்டுமானாலும் மக்களில் அவர் சாதாரணமானவராக இருக்கட்டும். ஆனால், அல்லாஹ்விடத்தில் அவர்தான் மிக உயர்ந்தவர்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ
 
நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர் உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான். (அல்குர்ஆன் 49 : 13)
 
அடுத்து,  அல்லாஹ் சொல்கின்றான்: இந்த தீனை இந்த இஸ்லாமை உங்களுக்கு நான் மார்க்கமாக பொருந்திக் கொண்டேன்; ஏற்றுக் கொண்டேன். 
 
இந்த இஸ்லாம் தான் நமக்கு வழி. இது தான் மார்க்கம். இதுதான் நம்முடைய ஹயாத். இதுதான் நம்முடைய மவுத்.
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை - அவனை அஞ்சவேண்டிய உண்மையான முறையில் - அஞ்சுங்கள். இன்னும், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தே தவிர இறந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 3 : 102)
 
ஒரு மனிதனுடைய வாழ்க்கை, ஒரு மனிதனுடைய மவுத் இஸ்லாமில் இருக்க வேண்டும். இஸ்லாமை பின்பற்றி வாழக்கூடியவர்கள் முஸ்லிமான நிலையில் மரணிப்பார்கள்.
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடுத்ததாக இந்த தீனை நமக்கு போதிப்பதற்காக ஒரு தூதரை தேர்ந்தெடுத்தானே! 
 
தூதர்களில் மிகச் சிறந்தவரை அல்லாஹு தஆலா கடைசி தூதராக, நமக்கு நபியாக, நமக்கு ரசூலாக தேர்ந்தெடுத்தான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
 
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
 
இந்த மார்க்கம் இறக்கப்படுவதற்கு முன்பாக, இந்த நபி அனுப்பப்படுவதற்கு முன்பாக, கண்டிப்பாக அவர்கள் தெளிவான வழிகேட்டில் தான் இருந்தார்கள். சிலை வணக்கத்தில் இருந்தார்கள். ஒருவரை ஒருவர் கொன்று கொன்றிருந்தார்கள். திருடி கொண்டிருந்தார்கள். அபகரித்துக் கொண்டிருந்தார்கள். குலப்பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள். பெண் சிசுக்கொலை செய்து புதைத்துக் கொண்டிருந்தார்கள்.
 
ஆனால், அல்லாஹு தஆலா இந்த தூதரை அனுப்பி இவ்வளவு தூரம் தாழ்ந்து இருந்த அந்த மக்களை, எப்போது இந்த மக்கள் இந்த குர்ஆனை ஏற்றுக் கொண்டு, நபியைப் பின்பற்றினார்களோ அப்போது அவர்களை உயர்த்தினான். 
 
நான் இவர்களை பொருந்திக் கொண்டேன். அவர்களும் என்னை பொருந்திக் கொண்டார்கள் என்று அல்லாஹு தஆலா அந்தத் தோழர்களை உயர்வாக சிறப்பாக சொல்கிறான்.
 
அந்தத் தோழர்களை நபியைக் கொண்டு அல்லாஹ் கண்ணியப்படுத்தினான்.  பெருமையாக பேசுகின்றான். அல்லாஹ் தஆலா அந்தத் தோழர்களை கொண்டு கண்ணியப் படுத்தினான். பெருமையாக பேசுகிறான்.
 
அந்த தூதர் அந்த மக்களுக்கு குர்ஆனை சதா ஓதிக் காண்பித்து கொண்டே இருந்தார். தொழுகையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த தோழர்களுக்கு குர்ஆனை ஓதினார்கள். அரபு சமுதாய மக்களுக்கு அரபிமொழி அவர்களுடைய இரத்தத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது. 
 
அவர்களில் சிறு சிறு குழந்தை கூட அரபி மொழியில் மிகப் பெரிய திறமை உள்ளவர்களாக, அரபிமொழி கலப்படமாகாத அதனுடைய வாலிப உச்சத்தில் இருந்த அந்தக் காலம், அல்குர்ஆன் ஓதப்படுவதை அவர்கள் புரிந்தார்கள், அவர்கள் அறிந்தார்கள், விளங்கினார்கள், அது அவர்களின் உள்ளங்களை மாற்றியது.
 
ஒவ்வொரு வசனமும் ஒரு பெரிய ஒரு வீரரை உருவாக்கியது. ஒரு பெரிய வரலாற்றை உருவாக்கியது. உமரை உருவாக்கியது யார்? காலித் இப்னு வலீதை உருவாக்கியது யார்? இக்ரிமாவை உருவாக்கியது யார்? ஒவ்வொரு நபித்தோழரும் உருவானார் என்று சொன்னால், அவருக்கு பின்னால் குர்ஆனுடைய வசனம், அந்த வசனம் ஓதப்பட்டதை சிந்தித்ததால், உணர்ந்ததால், புரிந்ததால் வாழ்க்கையை மாற்றினார்கள். சுப்ஹானல்லாஹ்!
 
அல்லாஹ்வுடைய அந்த வேதம் எப்பேற்பட்ட வேதம். அதை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் ஓதினார்கள். அந்தத் தோழர்கள் கேட்டார்கள். 
 
இன்று, ஓதப்படுவது போன்று அல்ல, அன்று தொழுகையில் ஓதப்பட்டது. இன்று தொழுகையில் ஓதப்படுவது ஒரு சடங்காக இருக்கின்றது. அல்லாஹ் மன்னிப்பானாக! ஓதக் கூடியவருக்கும் தான் ஓதுவது புரியாது. ஓதுபவரும் தான் எந்த வசனத்தை ஓதுகிறோம்? அந்த வசனம் இறக்கப்பட்டதுடைய பின்னணி என்ன? அதனுடைய வரலாறு என்ன? அதனுடைய கருத்தாழம் என்ன? என்பது புரியாமல் ஏதோ ஒரு ராகத்தில் மக்களை கவர்வதற்காக ஓதிக் கொண்டு போவார்.
 
இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்வதாக இருந்தால் தொழ வைப்பவர்களில் பல முட்டாள்கள் இருக்கிறார்கள். இமாம்கள் தான், ஆலிம்கள் தான். ஆனால் மார்க்கத்தில் முட்டாள்கள். காரணம், எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே தெரியாது. இரண்டு வசனங்கள் ஒன்றோடொன்று கருத்தால் இணைந்தது, அந்த இரண்டு வசனங்களையும் சேர்த்து ஓத வேண்டும். அவர் ஆரம்பிக்கக் கூடிய முப்ததாவை விட்டுவிடுவார். ஹபரிலிருந்து ஓதுவார். எத்தனை பேர்கள் நீங்கள் பார்த்திருக்கலாம்?
 
அல்லாஹ் சத்தியம் செய்வான். அந்த சத்தியத்தை விட்டு விடுவார்கள். சத்தியத்தினுடைய பதில் பின்னாடி இருக்கும். அதிலிருந்து ஓதுவார்கள். ஓதிக்கொண்டே இருப்பார்கள். அந்த மொத்த சூராவின் கருத்தை இறுதியில் அல்லாஹ் முடிப்பான். அந்த கருத்தை முடிக்காமல் அப்படியே சுஜூதில் சென்று விடுவார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் முழு சூராக்களைத் தான் ஓதி இருக்கிறார்கள்.
 
சுப்ஹுடைய சுன்னத் தொழுகையில் ஒரு கருத்து பரிபூரணமாகக் கூடிய சில வசனங்களை ஓதுவார்கள். சுப்ஹுடைய சுன்னத்தில் மட்டும். (1)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 727.
 
ஆனால் ஃபர்ளான தொழுகையில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முழு முழு சூராக்களைதான் ஓதுவார்கள். சஹாபாக்களும் அப்படித்தான் ஓதுவார்கள்.
 
இவர்கள் எப்படி தெரியுமா? கடித்துக் குதறுவார்கள். இங்கும் அங்கும் என்று சில வசனங்களை மனப்பாடம் செய்துகொண்டு கடித்துக் குதறுவார்கள். பின்னால் உள்ளவர்களுக்குத் தெரியாது எந்த சூராவில் இருந்து ஓதுகிறார் என்று. எந்த வசன எண்ணை ஓதுகிறார் என்று. 
 
இப்படி ஒரு பழக்கம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலோ, சஹாபாக்களிடத்திலோ இல்லை. 
 
நபி அவர்கள் தொழுகையில் ஒரு சூராவை ஆரம்பித்தால் அந்த தொழுகையில் அந்த சூராவை முடிப்பார்கள். அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டால் தவிர.
 
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ افْتَتَحَ الصَّلَاةَ يَوْمَ الْفَتْحِ فِي الْفَجْرِ، فَقَرَأَ بِسُورَةِ الْمُؤْمِنِينَ، فَلَمَّا بَلَغَ ذِكْرَ مُوسَى وهَارُونَ، أَصَابَتْهُ سَعْلَةٌ، فَرَكَعَ»
 
ஒருநாள் மக்காவில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தபோது, ஹஜ்ஜுக்கு வந்திருந்த நேரத்தில் சூரா அல் முஃமினை ஃபஜ்ரு  தொழுகையில் ஓத ஆரம்பித்தார்கள். 
 
அவர்களுக்குக் கடுமையான இருமல் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் ருகூவில் சென்றார்கள். தொழுகையை முடித்துவிட்டு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
எனக்கு இந்த இருமல், வலி மட்டும் ஏற்பட்டு இருக்கவில்லை என்றால், இந்த சூராவை முழுமையாக நான் முடித்து தான் ருகூவில் சென்றிருப்பேன் என்று.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸாயிபு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 15393.
 
இதை நாம் கவனிக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையிலேயே அந்த மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.  நீண்ட நீண்ட ரக்அத்துகளில் அவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். 
 
அந்த தொழுகையை அந்த சஹாபாக்கள் உள்ளச்சத்தோடு தொழுதார்கள்.
 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
 
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1,2)
 
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
 
இன்னும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும். (அல்குர்ஆன் 8 : 2)
 
فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا
 
ஆக, நம்பிக்கை கொண்டவர்கள் அவர்களோ (இறக்கப்பட்ட அத்தியாயத்தைக் கொண்டு) மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது. (அல்குர்ஆன் 9 : 124)
 
அடுத்ததாக சபைகளில், உரைகளில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குர்ஆனை ஓதினார்கள். மக்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள். காலையிலிருந்து மாலை வரை, விழித்ததிலிருந்து அவர்கள் தூக்கத்திற்கு செல்கின்ற வரை குர்ஆனை ஓதி ஓதி அந்தத் தோழர்களை பண்படுத்தினார்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிரசங்கத்தை பார்க்கிறோம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவில் வந்து ஜும்ஆவை ஆரம்பித்ததிலிருந்து, அவர்கள் மரணிக்கின்ற வரை அவர்களுடைய குத்பா குர்ஆனாகத்தான் இருந்தது. 
 
இன்று நம்மில் ஒரு கதீப் பிரசங்கம் செய்வது போன்று, அரசியலை பேசுவதோ, உலக நடப்புகளை பேசுவதோ, அல்லது இப்படி இந்த மக்களுடைய பிரச்சினைகளை பற்றி அலசுவதற்கோ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் ஜும்ஆ மிம்பரை பயன்படுத்தியதில்லை. 
 
இறையச்சமிக்க வசனங்களை ஓதிக் கொண்டே இருப்பார்கள். சூரா தக்வீரை ஓதுவார்கள். சூரா இன்ஃபிதாரை ஓதுவார்கள். சூரா கஹ்ஃபை ஓதுவார்கள். ஓதிக் கொண்டே இருப்பார்கள்.
 
சஹாபிய பெண்மணிகள் சொல்கிறார்கள்: தொடர்ந்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரா கஹ்ஃபை ஜும்ஆ குத்பாவில் மிம்பரில்  ஓதினார்கள். நேரடியாக அவர்கள் ஜும்ஆ மிம்பரில் அந்தக் கஹ்ஃப் சூராவை ஓதியதை நான்  கேட்டு கேட்டு மனப்பாடம் செய்து கொண்டேன் என்று.
 
அறிவிப்பாளர்: அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 872.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தத் தோழர்களை இப்படி குர்ஆனைக் கொண்டு உருவாக்கினார்கள்.
 
கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்! இந்த குர்ஆன் எந்த தூதர் மீது இறக்கப்பட்டதோ, இந்த குர்ஆனுக்காக எந்த ஆசிரியரை அல்லாஹ் தேர்ந்தெடுத்தானோ அந்த ரசூல் குர்ஆனை ஓதினால், அது எப்படிப்பட்ட திலாவத்தாக இருக்கும்!? 
 
இன்று நம்மில் இறையச்சமிக்க, மார்க்க ஒழுக்கமுள்ள, குர்ஆனை ஓதக்கூடிய, ஒரு காரி, ஒரு இமாம், ஒரு ஆலிம் ஓதினால் நம்முடைய உள்ளம் அதைக்கேட்டு எவ்வளவு பயப்படுகிறது? எவ்வளவு நடுங்குகிறது? அதைக் கேட்க வேண்டும் என்று எவ்வளவு ஆசை வருகிறது? யோசித்துப் பாருங்கள். 
 
உலகத்தில் உள்ள அத்தனை இமாம்களையும், அத்தனை காரிகளையும் நாம் ஒரு தட்டில் வைத்தாலும் அல்லது அவர்களுடைய திலாவத்தை ஒரு தட்டில் வைத்தாலும் ரஸூலுல்லாஹ்வுடைய  திலாவத்திற்கு சமமாகுமா?
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ حَكِيمٍ عَلِيمٍ
 
நிச்சயமாக நன்கறிந்த மகா ஞானவானிடமிருந்து நீர் இந்த குர்ஆனை (கற்றுக் கொடுக்கப்பட்டு) மனனம் செய்து கொடுக்கப்படுவீர். (அல்குர்ஆன் 27 : 6)
 
அல்லாஹ்வால் ஞானம் கற்பிக்கப்பட்ட ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த குர்ஆனை ஓதினால் எப்படி இருந்திருக்கும்? நினைத்துப் பாருங்கள்! அந்த திலாவத் எப்படி இருந்திருக்கும்? நினைத்துப் பாருங்கள். 
 
இன்று நாமும் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஓதுகிறோம். ரசூலுல்லாஹ் ஓதி இருப்பார்களே! என்ன அர்த்தங்களை எல்லாம் புரிந்து இருப்பார்கள்! அல்லாஹ்விடத்தில் பேசிய நபி, கலாமுல்லாஹ்வை சுமந்த நபி, எந்த நபியின் மீது இந்த குர்ஆன் நேரடியாக இறக்கப்பட்டதோ, அந்த நபி குர்ஆனை ஓதினால், அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அந்த புகழ்ச்சி எப்படி இருந்திருக்கும்!
 
அதையும் அரபி மொழியை எந்த விதமான துணை சாதனமும் இல்லாமல், அரபி மொழியை கற்காமலேயே நேரடியாக புரிந்து கொள்ளக்கூடிய புலமைமிக்க, இறையச்சமிக்க, ஈமான் நிறைந்த அந்த தோழர்கள் கேட்டிருந்தால், எந்த அளவு அந்த குர்ஆனை புரிந்து இருப்பார்கள். யோசித்துப் பாருங்கள்! 
 
யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா? சாதாரண விஷயமா இது? குர்ஆன் இறக்கப்பட்ட நபி நேரடியாக ஓதுகிறார். அரபி மொழியில் திறமைமிக்க அந்த அரபு மக்கள் அவர்களிடத்தில் மொழி மட்டுமல்ல. ஈமான் இருந்தது என்று அல்லாஹ் சாட்சி சொல்கிறான். அவர்களது உள்ளத்தில் ஈமானை அல்லாஹ் பிரியமாக்கி வைத்தான் என்று சொல்கிறான்.
 
وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ
 
என்றாலும், அல்லாஹ் உங்களுக்கு ஈமானை விருப்பமாக்கினான்; இன்னும், உங்கள் உள்ளங்களில் அதை அலங்கரித்தான்; இன்னும், இறை நிராகரிப்பையும் பாவத்தையும் (தூதருக்கு) மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக்கினான். இத்தகையவர்கள்தான் நல்லறிவுபெற்றவர்கள் (-நேர்வழியாளர்கள்) ஆவார்கள். (அல்குர்ஆன் 49 : 7)
 
அப்படிப்பட்ட தூய்மையான உள்ளம் உள்ளவர்கள், சுத்தமான உள்ளம் உள்ளவர்கள், ஷிர்க் கலக்காத ஈமான், முகஸ்துதி கலக்காத ஈமான், பாவங்கள் கலக்காத அமல், அப்படியே பாவம் செய்தாலும் அதனுடைய தவ்பாவை பெறாதவரை அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. அப்படியே பாவங்கள், தவறுகள் செய்தாலும் அதிலிருந்து விலகி தவ்பா கேட்டு அழாமல் அவர்களால் இருக்க முடியாதே. அந்த தோழர்களுக்கு அல்லாஹ்வுடைய தூதரின் திலாவத் எந்த அளவு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
 
அந்த குர்ஆன் திலாவத்தை செய்து செய்து அந்த நபி, அந்தத் தோழர்களை உருவாக்கினார். தஸ்கியா செய்தார். அதற்கு முன்பு அவர்களது உள்ளங்கள் அழகற்ற உள்ளங்களாக இருந்தது. அல்லாஹ் சாட்சி சொல்கிறான். 
 
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
 
(அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. “அல்லாஹ்வின் நினைவினால் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன” என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 13 : 28)
 
இந்த இடத்தில் இந்த வசனம் நபித்தோழர்களுக்காக இறக்கப்பட்டது என்று முஃபஸ்ஸிர்கள் சொல்கிறார்கள். 
 
அந்த நபி அவர்களை தஸ்கியா செய்தார். சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தார். எந்த ஒரு தவறை தங்களுடைய தோழர்களிடத்தில் பார்த்தாலும் உடனே அதை திருத்துவார். 
 
இன்று, அப்படி ஒரு ஆசிரியரைப் பார்க்க முடியாது. அப்படி ஒரு ஆலிமை பார்க்க முடியாது.
 
தங்களுடைய தோழர்களை தவறில் பார்த்துவிட்டு நபி திருத்தாமல் சென்றதில்லை. 
 
أَخَذَ الحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كِخْ كِخْ» لِيَطْرَحَهَا، ثُمَّ قَالَ: «أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ»
 
தன்னுடைய பேரன் சின்ன குழந்தை பள்ளிக்கு உள்ளே நுழைகிறார். அங்கே சதகாவின் ஏதோ ஒரு பேரீத்தம் பழம் இருக்கிறது. அவ்வளவுதான். பசியில் அந்த குழந்தை அந்த பேரித்தம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விடுகிறது. அல்லாஹ்வுடைய தூதர் என்ன வேலையில் இருந்தார்களோ அப்படியே அதை விட்டு விட்டு வந்தார்கள். அந்த குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு அந்த பேரீத்தம் பழத்தை எடுத்தார்கள். சொன்னார்கள். இது ஸதகாவுடைய பேரித்தம் பழமாக இருக்கலாம். அது நமக்கு ஹலால் அல்ல.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1491, 
 
அந்தத் தோழர்களை அப்படியே ஹலாலில் உருவாக்கினார்கள். ஒரு ஹராமுடைய உணவு ஒரு நபித்தோழரின் வாயில் சென்றிருக்குமா? ஒரு நபித்தோழரின் உடலில் சென்றிருக்குமா? சிந்தித்துப் பாருங்கள். மார்க்கத்தை சரியாக புரிவதற்கு, ஹிதாயத் கிடைப்பதற்கு, ஹலால் மிக முக்கியமானது. 
 
யார் ஹலாலை பேணவிவில்லையோ அவர்கள் ஹிதாயத்திலிருந்து தூரமாகி விடுவார்கள். அவர்களுடைய துஆவும் அங்கீகரிக்கப்படாது. ஹலாலான உணவு, ஹலாலான சம்பாத்தியம் நேர்வழிக்கு மிக முக்கியமானது. 
 
யார் ஹராமான சம்பாத்தியத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு இன்பம் கிடைக்காது. இல்மின் ஒளியும் கிடைக்காது. இல்முடைய பரக்கத்தும் கிடைக்காது. அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையிலேயே இல்முடைய ஹிதாயத்தில் இருந்து தூரமாகிவிடுவார்கள். அல்லாஹ் தஆலா அந்த சஹாபாக்களை குர்ஆனைக் கொண்டு சுத்தப்படுத்தக்கூடிய பொறுப்பை நபிக்கு கொடுத்தான்.
 
அடுத்ததாக ஓதிக் காண்பித்ததோடு சென்றார்களா? அல்லது அவர்களது உள்ளங்களுக்கு அறிவுரை சொல்வதை கொண்டு மட்டும் நிறுத்திக் கொண்டார்களா? இல்லை. பிறகு இந்த குர்ஆனையும், அதனுடைய விளக்கமாக ஹதீஸையும் ஆழமாக அந்த மக்களுக்கு போதித்தார்கள்.
 
மூன்று மிக மகத்தான பணிகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அந்த தோழர்களுக்கு மத்தியில் செய்தார்கள். 
 
ஒன்று, அந்த மக்களுக்கு சதா குர்ஆனை ஓதிக் கொண்டே இருந்தார்கள். 
 
அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் மீது நாம் கொஞ்சம் அழ வேண்டும். 
 
இன்று, நம்மில் ஒருவரை பார்த்து நீ குர்ஆனை ஓதியது அதிகமா? அல்லது இன்னபிற புத்தகங்களை படித்தது அதிகமா? எனக் கேட்டால், அந்த மனிதர் என்ன பதில் சொல்வார்? 
 
நீ குர்ஆனை செவியேற்றது அதிகமா? ஹராமுக்கு போகவேண்டாம். ஹலாலான விஷயங்களில் குர்ஆன் அல்லாததை நீ செவியுற்றாய் அல்லவா? அது அதிகமா? என்று கேட்டால், நாம் என்ன பதில் சொல்ல முடியும்? 
 
அந்த தோழர்களுக்கு மத்தியில் ஹராமானதை கேட்பதற்கு எதுவும் இல்லை. குர்ஆனை ஓதிக்கொண்டே இருந்தார்கள்.
 
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَئِكَ يُؤْمِنُونَ بِهِ وَمَنْ يَكْفُرْ بِهِ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
 
(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓது(வதுடன் அதன் பிரகாரம் அவர்கள் செயல்படவும் செய்)கிறார்கள். அவர்கள்தான் அதை (உண்மையாக) நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2 : 121)
 
அவர்களுடைய ஆர்வத்தை பாருங்கள். அடுத்த நாள் காலையில் போர். எதிரிகளோடு சண்டை செய்ய வேண்டும். அன்றைய இரவில் அந்தத் தோழர்களுடைய அமல் என்னவென்றால், இரவுத் தொழுகையில் குர்ஆனை ஓதுவது.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓய்வெடுக்கப் போகிறார்கள், நீண்ட பயணத்திற்கு பிறகு. சஹாபாக்கள் ஓய்வெடுக்கப் போகிறார்கள். பாதுகாப்பதற்கு பொறுப்பாளர் யார்? என்று கேட்கிறார்கள். 
 
இரண்டு தோழர்கள் தயாராகிறார்கள். அதில் ஒருவர் சொல்கிறார்; மற்றொருவரை பார்த்து, நாம் இருவருமே விழித்திருந்தால் தூங்கிவிடலாம். எனவே முதல் பாதி இரவில் நீங்கள் தூங்குங்கள். நான் விழித்திருக்கிறேன். அடுத்த பாதையில் நான் தூங்குகிறேன். நீங்கள் விழித்திருங்கள். ரஸூலுல்லாஹ்வின் கடமையை, பொறுப்பை நாம் சரியாக செய்தவர்களாகுவோம் என்று கூறிவிட்டு, எல்லா தோழர்களையும் படுக்கவைத்துவிட்டு, தனது சக தோழரையும் படுக்க வைத்துவிட்டு, இந்த தோழர் சூரத்துல் கஹ்ஃபை ஓத ஆரம்பித்து தொழுகையில் நின்றுவிட்டார்.
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹமத், எண் : 14704.
 
அவர்களுக்கு மத்தியில் பொழுதுபோக்கு என்பதே குர்ஆனை ஓதுவது தான். அதுபோன்று உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மஸ்ஜிதில் இஷா தொழுகையை தொழுதார்கள். எல்லோரும் சென்று விட்டார்கள். உமருடைய நெருக்கமான தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்கள் மற்ற நஃபில்களை தொழுது விட்டு பார்த்தார் அப்துர் ரஹ்மான். 
 
பள்ளிக்கு வெளியே இருவரும் வருகிறார்கள். மஸ்ஜிதுந் நபவியிலிருந்து கொஞ்ச தூரத்தில் உள்ள மைதானத்தில் நெருப்பு எரிகிறது. கூட்டங்களின் ஆரவாரம் தெரிகிறது. உமர் அவர்கள் சொல்கிறார்கள், அப்துர் ரஹ்மானே! ஏதோ புதிய வியாபாரிகள் நம்முடைய மதீனாவிற்கு வந்து இருக்கிறார்கள் போலும். இன்று இரவு நாம் அவர்களை பாதுகாப்போம். இன்று இரவு அந்த வியாபாரிகளுக்கு நாம் பாதுகாப்பு கொடுப்போம் வாருங்கள் என்று அழைத்துக் கொண்டு அப்துர் ரஹ்மானோடு உமர் செல்கிறார்கள்.
 
அந்த வியாபாரக் கூட்டத்தை விசாரிக்கிறார்கள். நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள், ஓய்வெடுங்கள், நாங்களும் பாதுகாப்போம் என்று சொல்கிறார்கள். தன்னை கலிஃபா என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அந்த வியாபாரிகள் நிம்மதியாக படுத்தார்கள். கலீஃபா உமருல் ஃபாருக்கும் அப்துர்ரஹ்மானும் தொழுகையில் நின்றார்கள். குர்ஆனை ஓதினார்கள். சுப்ஹுடைய தொழுகை வரை நின்று தொழுது கொண்டே இருந்தார்கள்.
 
இன்று, நமக்கு ஒரு நிமிடத்திற்கு மேல் தொழுகையில் நிற்பதற்கு சூராவே தெரியாது. ஒரு நிமிடத்திற்கு மேல் தொழுகையில் நிற்பதற்கு இன்று நம்மில் பலருக்கு சூராவே தெரியாது. 
 
அப்படியே ஓதினாலும் அதில் அவர் மனதைப் பறிகொடுக்கவில்லையே! எப்படி அவரால் நிற்க முடியும்? தொழுகைக்கு வெளியே குர்ஆனில் உள்ளத்தைப் பறிகொடுத்து இருந்தால், தொழுகையிலும் உள்ளத்தைப் பறி கொடுக்க முடியும். 
 
எப்போது தொழுகைக்கு வெளியே சிலர், சினிமா பாட்டுகளில் சிலர், இசைகளில் சிலர், இன்னும் இப்படியாக தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்கள், தொழுகையில் வந்து எப்படி உள்ளத்தை குர்ஆனில் பறிகொடுப்பார்கள்? 
 
அவர்களில் ஒருவருடைய நோக்கமோ எப்படி இருக்குமென்றால், தொழுகை எப்போது முடியும்? எப்போது சீக்கிரமாக செல்வோம்? தொழுகையை இமாம் ஏன் நீட்டி விட்டார்? இன்று ஏன் இமாம் அதிகமாக ஓதினார்? இவ்வளவு ஓத வேண்டுமா? தொழுகையைச் சுருக்கமாக தொழுங்கள் என்று வந்திருக்கிறதே! நோயாளி இருப்பார், ஹதீஸ் அப்போது வரும். எங்கே சொல்லப்பட்டது? எந்தப் பின்னணியில் சொல்லப்பட்டது? எந்த வரலாற்றோடு சொல்லப்பட்டது? அதைப்பற்றி எல்லாம் பேச மாட்டார்கள். ஹதீஸ் வந்து விடும். மார்க்கம் இலேசாயிற்றே?
 
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படியாக அந்த தோழர்களுக்கு குர்ஆனுடைய ஆழமான இல்மையும் போதித்தார்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான். ஆம், கண்டிப்பாக. இந்த குர்ஆன்  இறப்படுவதற்கு முன்னர், இந்த நபி அனுப்பப்படுவதற்கு முன்னர், இந்த தோழர்கள் தெளிவான வழி கேட்டில் தான் இருந்தார்கள். 
 
ஆனால், அடுத்து பாருங்கள். எப்போது இந்த குர்ஆன் இறக்கப்பட்டு, இந்த நபி அந்த மக்கள் மீது பணி செய்தாரோ, குர்ஆனை ஓதினாரோ, தஸ்கியா செய்தாரோ, அந்த மக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்தாரோ, யாரை ஜாஹில் என்று சொல்லப்பட்டதோ, அதே மக்களை அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா  அறிஞர்கள் என்று சொல்கிறான். முஃமின்கள் என்று சொல்கிறான். முத்தகீன் என்று சொல்கிறான். முஃப்லிஹ் -வெற்றியாளர்கள் என்று சொல்கிறான். கல்வி கொடுக்கப்பட்டவர்கள் என்று சொல்கிறான்.
 
அந்த சஹாபாக்களை தான் மார்க்கத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அல்லாஹ் சொல்கின்றான், அந்த சஹாபாக்களை அல்லாஹ் தனது நபிக்காக தேர்ந்தெடுத்தான். இது ஒரு எதார்த்தமான அல்லது இத்திஃபாக் என்று சொல்வார்கள். ஏதோ நபி என்று ஒருத்தர் வரவேண்டும், வந்தார். ஏதோ அங்கே அவருக்கு சில பேர் இருக்க வேண்டும். அப்படி அல்ல. 
 
நபியையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அந்த நபிக்கு உரிய தோழர்களாக யார் ஆக வேண்டும் என்பதையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். ஆகவேதான் அந்தத் தோழர்களை அல்லாஹு தஆலா புகழ்கிறான். அந்தத் தோழர்களை புகழ்வதை கொண்டு அல்லாஹ் பெருமைப்படுகின்றான்.
 
ரப்புல் ஆலமீன் கூறுவதைப் பாருங்கள்:
 
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
 
(இஸ்லாமை ஏற்பதில்) முதலாமவர்களாகவும் முந்தியவர்களாகவும் இருந்த முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்; இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து இவர்க)ளை நன்மையில் பின்பற்றிய(மற்ற)வர்க(ள் ஆகிய இவர்க)ளைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இன்னும், இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். இன்னும், சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9 : 100)
 
முந்தியவர்கள் முந்திக்கொண்டு வந்தார்கள். மக்கள் நிராகரித்த போது, மக்கள் நபியை கைவிட்ட போது, இந்த முஹாஜிர்களும், அன்சாரிகளும், அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர்கள் கொல்லப்பட்டாலும், எங்களது பெண்கள் விதவையாக்கபட்டாலும், எங்களது குழந்தைகள் அனாதையாக்கப்பட்டாலும், எங்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், நாங்கள் உங்களை விட்டுப் பின்வாங்க மாட்டோம் என்று வந்தார்கள். 
 
இந்த மார்க்கத்தின் முதல் சமுதாயம் என்று அல்லாஹ் அவர்களை போற்றுகின்றான். இந்த மார்க்கத்தின் முதல் சமுதாயம் என்று அவர்களின் உயர்வை அல்லாஹ் சொல்கின்றான். 
 
அவர்கள்தான் முஹாஜிர்கள், அன்சாரிகள். இன்று நாம் முஃமீன்களாக இருக்கலாம், முஸ்லிம்களாக ஆகலாம், இன்னும் அமல்களை அதிகரித்துக்கொண்டே செல்லலாம். எவ்வளவு வேண்டுமானாலும் அல்லாஹ் நாடிய அளவு. ஆனால், இந்த புகழ் கிடைக்குமா? இந்த உயர்வு கிடைக்குமா?
 
இன்று, நம்மில் ஒருவருக்கு இஸ்லாம், அவர் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால், ஒரு முஸ்லிம்களுடைய முஹல்லாவில் பிறந்ததால் அவருக்கு சொத்தாக கிடைத்திருக்கலாம். ஆனால், அந்த தோழர்களுக்கோ, இந்த இஸ்லாம் தியாகத்தால் கிடைத்தது. இந்த இஸ்லாம் பல சோதனைகளுக்குப் பிறகு கிடைத்தது. பல துன்பங்களுக்கு பிறகு கிடைத்தது. 
 
எத்தனையோ இழப்புகளை அவர்கள் சந்தித்ததற்கு பிறகு இந்த இஸ்லாம் அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் சந்தித்த சோதனைகளில் சிலவற்றை இன்று நம்மில் யாரும் சந்தித்திருந்தால் கூட, அந்த இழப்புகளை பார்த்து பயந்து இஸ்லாமை விட்டிருப்பார்கள்.
 
இன்று, நடப்பதை பார்க்கிறோம். சின்ன சின்ன சோதனைகளால் நாங்களும் கோயிலுக்கு வருகிறோம் என்று சொல்கிறார்களே! நாங்களும் பூஜை போடுகிறோம் என்று சொல்கிறார்களே! சமய நல்லிணக்கம் என்று பேசிக்கொண்டே இஸ்லாமை பேசுகிறார்களே! தங்களை ஒரு சிலை வணங்கிகளாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்களே! 
 
ஒன்றும் நடக்கவில்லை. யாரும் யாரையும் நிர்பந்திக்கவில்லை. ஒரு சூழல், ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதற்கே பயந்து கொண்டு, நாங்களும் கோயிலுக்கு வருகிறோம் என்று ஓடக்கூடிய கோழை சமுதாயமாக இருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அந்த சுமைய்யாவுக்கு ஏற்பட்டதை போன்று, பிலாலுக்கு ஏற்பட்டதை போன்று, அம்மார் இப்னு யாஸிருக்கு ஏற்பட்டதை போன்று, அந்த சோதனையில் ஒரு சில கடுகளவு இன்று நம்மில் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன நிலையாகுமோ?
 
நினைத்துப் பாருங்கள். அந்த முஹாஜிர்கள் யாராவது முர்தத் ஆகி இருப்பார்களா? சிலர் பேசுகிறார்கள்; முட்டாள்கள், மடையர்கள், வீணர்கள், புத்தி இல்லாதவர்கள், மார்க்கத்தை புரியாதவர்கள், ஸஹாபாக்கள் முர்தத் ஆனார்கள் என்று. 
 
முட்டாள்களே! ஹதீஸைப்படி!  யார் ஸஹாபாக்கள்? யாரை முஹாஜிர்கள், அன்சாரிகள் என்று அல்லாஹ் சொல்கின்றானோ, பத்ரிலும், உஹதிலும், அஹ்ஸாபிலும், ஹன்தக்கிலும், ஹுனைனிலும், கைபரிலும், தாயிஃபிலும் கலந்து கொண்டார்களோ, அந்த சஹாபாக்களா முர்தத் ஆனார்கள்? 
 
யார் முர்தத் ஆனார்கள்? 
 
யார் ரஸூலுல்லாஹ்வின் கடைசி காலத்தில், ரஸூலுல்லாஹ்வை பார்க்காமலேயே, தூரத்திலிருந்து இஸ்லாம் பரவுவதைக் கண்டு, இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் செல்வம் கிடைக்கும் என்ற ஆசையில் வந்தார்களோ, அந்த கிராமத்து அரபிகள் முர்தத் ஆனார்கள். (2)
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 10840.
 
நபித்தோழர்கள் ஒருவரும் முர்தத் ஆகவில்லை. பத்ரில் கலந்து கொண்ட சஹாபாக்கள் முர்தத் ஆனார்களா? உஹதில் கலந்து கொண்டவர்கள், பைஅத்துர் ரிள்வானில் கலந்து கொண்டவர்கள், மக்கா வெற்றியில் கலந்து கொண்டவர்கள், ஹுனைன் யுத்தத்தில் கலந்துகொண்டவர்கள்,  இவர்களில் யாராவது ஒருவர் முர்தத் ஆனார் என்று நீங்கள் எங்கிருந்து சொல்ல முடியும்? யோசித்துப் பாருங்கள். 
 
ஆம், முர்தத் ஆனார்கள். யார் முர்தத் ஆனது? நபியின் கடைசி காலத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாமை ஏற்க ஆரம்பித்தார்கள் அல்லவா? ஏன், எதற்கு, என்று புரியாமல் அரபு உலகமே முஸ்லிமாக மாற போகிறது. இனி நாமும் முஸ்லிமாக மாறினால் தான் நமக்கும் ஏதாவது லாபம் கிடைக்கும் என்று, அந்த கல்வியறிவு இல்லாத பாமரர்கள்தான் முர்தத் ஆனார்களே தவிர, சஹாபாக்களில் ஒருவரும் அல்ல. 
 
அப்படி முர்தத் ஆனவர்களை திரும்ப நேரான வழி கொண்டு வந்தவர்கள் தான் சஹாபாக்கள். அந்த நேரான வழிக்கு கொண்டு வந்த உத்தமர்களை, தியாகிகளை, அந்த வீரர்களை தான் நாம் ஸஹாபாக்கள் என்று சொல்கிறோம்.
 
அல்லாஹ் சொல்கின்றான். முந்தியவர்கள் முதலாமவர்கள் அவர்கள் தான் முஹாஜிர்கள், அன்சாரிகள், பிறகு அல்லாஹ் சொல்கிறான்; உங்களுக்கு அல்லாஹ்விடத்தில் கண்ணியம் வேண்டுமா? உயர்வு வேண்டுமா? மதிப்பு வேண்டுமா? இந்த மார்க்கத்தின் உண்மை உங்களுக்கு வேண்டுமா?
 
அவர்களை பின்பற்றுங்கள் அவர்கள் போன வழியில் நீங்களும் சல்லுங்கள். அவர்கள் பயணித்த பாதையில் நீங்களும் பயணியுங்கள். அவர்கள் மார்க்கத்தைப் பின்பற்றியது போன்று நீங்களும் பின்பற்றுங்கள்.
 
அப்படி பின்பற்றும் போது, இக்லாஸான எண்ணத்தோடு, அமல்களில் நல்ல அமல்களை அந்த நபித்தோழர்களிடமிருந்து எடுத்து, ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் அந்த தவறை முன்னுதாரணமாக ஆக்காதீர்கள். அவர்கள் செய்த நன்மையை முன்னுதாரணமாக ஆக்குங்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான், அல்லாஹு தஆலா அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொள்வார்கள். சொர்க்கத்தை அல்லாஹ் தஆலா அவர்களுக்கு தயார் செய்து விட்டான். அதில் நதிகள் ஓடும். அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.  இது தான் மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9 : 100)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! சஹாபாக்களை பற்றி அறிய வேண்டிய இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து அந்த விஷயங்களை இன்ஷா அல்லாஹ் நாம் அறிவோம். 
 
நம்முடைய வாழ்க்கையில், நபித்தோழர்களுடைய பாதையிலிருந்து வழி தவறாமல், நம்முடைய சமுதாயத்தை பாதுகாப்போம். அதற்கு அந்த நபித் தோழர்களுடைய கண்ணியம், சிறப்பு, அவர்கள் இந்த மார்க்கத்திற்கு செய்த தியாகம் என்ன? நாம் ஏன் அவர்களைப் பின்பற்ற வேண்டும்? அவர்களைப் பின்பற்றுவது தான் நமக்கு பாதுகாப்பான வழி என்ற அடிப்படைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா எனக்கும், உங்களுக்கும் அல்லாஹ்வுடைய அன்பையும், கருணையையும் கொடுத்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை சரியாக புரிந்து, மார்க்கத்தை நேர் வழியில் பின்பற்றி வெற்றிபெற்ற அந்த உத்தம ஸஹாபாக்களை நேசித்து, அவர்களுடைய பாதையில் நாமும் இந்த மார்க்கத்தை பின்பற்றுவதற்கு உதவி செய்வானாக! 
 
நம்முடைய சிந்தனையில், நம்முடைய அறிவில், நம்முடைய விளக்கங்களில், வழிகேடுகள், குழப்பங்கள் வந்து விடுவதில் இருந்து, ஷைத்தானின் ஊசலாட்டங்கள் வந்து விடுவதில் இருந்து, சந்தேகங்கள், நயவஞ்சகங்கள், முகஸ்துதிகள்  வந்துவிடுவதிலிருந்து அல்லாஹ் என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْفَزَارِيُّ يَعْنِي مَرْوَانَ بْنَ مُعَاوِيَةَ، عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَنْصَارِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ يَسَارٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، " كَانَ يَقْرَأُ فِي رَكْعَتَيِ الْفَجْرِ فِي الْأُولَى مِنْهُمَا: {قُولُوا آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا} [البقرة: 136] الْآيَةَ الَّتِي فِي الْبَقَرَةِ، وَفِي الْآخِرَةِ مِنْهُمَا: {آمَنَّا بِاللهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ} [آل عمران: 52] " (صحيح مسلم - 727)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ " قَالَ: فَلَمَّا قَامَ أَبُو بَكْرٍ، وَارْتَدَّ مَنْ ارْتَدَّ، أَرَادَ أَبُو بَكْرٍ قِتَالَهُمْ، قَالَ عُمَرُ: كَيْفَ تُقَاتِلُ هَؤُلَاءِ الْقَوْمِ وَهُمْ يُصَلُّونَ؟ قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ: وَاللَّهِ، لَأُقَاتِلَنَّ قَوْمًا ارْتَدُّوا عَنِ الزَّكَاةِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا مِمَّا فَرَضَ اللَّهُ وَرَسُولُهُ، لَقَاتَلْتُهُمْ. قَالَ عُمَرُ: فَلَمَّا رَأَيْتُ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِقِتَالِهِمْ، عَرَفْتُ أَنَّهُ الْحَقُّ. (مسند أحمد- 10840)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/