HOME      Khutba      ஸஹாபாக்களின் சிறப்புகள்!! அமர்வு 2-2 | Tamil Bayan - 598   
 

ஸஹாபாக்களின் சிறப்புகள்!! அமர்வு 2-2 | Tamil Bayan - 598

           

ஸஹாபாக்களின் சிறப்புகள்!! அமர்வு 2-2 | Tamil Bayan - 598


ஸஹாபாக்களின் சிறப்புகள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஸஹாபாக்களின் சிறப்புகள்! (அமர்வு 2-2)
 
வரிசை : 598
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 11-10-2019 | H 12-02-14441
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பேணுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம் அனைவருடைய பாவங்களையும் நமது பெற்றோர் முஸ்லிம்கள் முஃமின்கள் அனைவருடைய பாவங்களையும் மன்னிப்பானாக!
 
அல்லாஹு தஆலா அவன் விரும்புகின்ற நல்லவர்களோடு நம்மை சேர்த்து வைப்பானாக! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களுடைய தோழர்களையும் நேசித்து பின்பற்றுகின்ற நல்ல மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தீனை நமக்கு போதிப்பதற்காக, சொல்லாலும் செயலாலும் இந்த தீனை நமக்கு விளக்கி கொடுப்பதற்காக, இந்த தீனை நம் வரையில் கொண்டு சேர்ப்பதற்காக மிகப்பெரிய தியாகங்களை செய்தார்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய தியாகங்கள், மிகப் பெரிய சோதனைகளை சந்தித்துக் கொண்டிருந்தது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் பசியோடும் பட்டினியோடும் இன்னும் பல தொந்தரவுகளை இந்த உலகத்தில் சந்தித்தாலும், அல்லாஹ்வுடைய இந்த தீன் உம்மத்திற்கு போய் சரியாக சேர வேண்டும் என்பதில் மிக மிக முயற்சியும் அதற்குரிய அனைத்து விதமான உழைப்புகளையும் செய்து கொண்டிருந்தார்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உழைப்பின் பலன்தான் அவர்களுடைய சஹாபாக்கள்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 23 ஆண்டு காலங்களுக்கு பிறகு அவர்கள் நமக்கு விட்டுச் சென்றது, எழுத்து வடிவிலான ஒலி வடிவிலான குர்ஆனையும் சுன்னாவையும் மட்டுமல்ல. 
 
மாறாக, எழுத்து வடிவிலான ஒலி வடிவிலான அந்த குர்ஆனையும் சுன்னாவையும் நமக்கு எதார்த்தமாக செயல்பாடுகளாக உள்வாங்கி அதன்படி வாழ்க்கையை மேற்கொண்ட உத்தம தோழர்களையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். 
 
அபூபக்ர், உமர், உஸ்மான், அலி, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல், ஸைத் இப்னு ஸாபித் போன்ற நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கான தோழர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்காக விட்டுச் சென்றார்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யார் நேசிக்கின்றார்களோ, அவர்கள் நமக்கு கொண்டு வந்த குர்ஆனை யார் நேசிக்கின்றார்களோ, அவர்களுடைய சுன்னாவை யார் நேசிக்கின்றார்களோ, அவர் கண்டிப்பாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய சுன்னாவையும் அல்லாஹ்வுடைய வேதத்தையும் நமக்கு கற்பித்த, அதன்படி வாழ்ந்து காட்டிய அந்த சஹாபாக்களையும் நேசிப்பான்.
 
அவர்களைப் போன்று தானும் ஆக வேண்டும் என்று அவர் ஆசைப்படுவார். அவர்களைப் பற்றி அறிய ஆசைப்படுவார். அவர்களுடைய கூற்றுகளை உபதேசங்களை அறிய ஆசைப்படுவார். 
 
அவர்களைப் பற்றிய குர்ஆனில் அல்லாஹ் எப்படி புகழ்கிறான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் எப்படி உயர்வாக பேசுகிறார்கள் என்பதை கற்று அந்த சஹாபாக்களை மதிக்க அவர் ஆரம்பித்து விடுவார்.
 
அந்த சஹாபாக்களுடைய கண்ணியம், மதிப்பு, உயர்வு அவருடைய உள்ளத்தில் வரும். ஒருவர் யாரை நேசிக்கின்றாரோ அவரைப் போன்று இருப்பார். ஒருவர் யாரை விரும்புகிறாரோ யாரை நேசிக்கின்றாரோ அவரைப் போன்று அவரும் ஆகிவிடுவார். அல்லாஹ் அப்படி ஆக்கி விடுவான்.
 
ரசூலுல்லாஹ்வை நேசித்தால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த சுன்னா நம்மிடத்தில் வரும். 
 
ஒருவர் சஹாபாக்களை நேசிக்கும்போது அவருடைய உள்ளத்தில் அந்த சஹாபாக்கள் உடைய தக்வா, அவர்களுடைய பேணுதல், அவர்களுடைய இறையச்சம், அவர்களிடத்தில் இருந்த மார்க்க ஒழுக்கம் இது கண்டிப்பாக வரும்.
 
தாபியீன்கள் சஹாபாக்களை நேசித்த காரணத்தால்தான் ஒவ்வொரு தாயீனும் ஒரு சஹாபாக்களின் வெளிச்சமாக, ஒரு ஸஹாபியின் வெளிப்பாடாக, அந்த சஹாபியின் கூற்றுக்களையும் மார்க்கத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அழைப்பாளராக இருந்தார்.
 
சஹாபாக்களுடைய சிறப்பைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு வலியுறுத்தினார்கள். நம்முடைய ஸலஃபுகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். 
 
இன்றைய ஜும்ஆவில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய சில ஹதீஸ்களையும் நம்முடைய ஸலஃபுகள், தாபியீன்கள், தபுஉத்தாபியீன்கள் நபித்தோழர்களின் விஷயத்தில் எவ்வளவு பேணுதலாக இருந்தார்கள்; நபித்தோழர்களைப் பற்றி நமக்கு என்ன வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கிறார்கள் என்பதை தான் இன்ஷா அல்லாஹ் பார்க்கப் போகிறோம்.
 
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய ஒரு ஹதீஸை பாருங்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
«لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ، ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ، وَلاَ نَصِيفَهُ»
 
என்னுடைய தோழர்களை ஏசாதீர்கள். என்னுடைய தோழர்களின் மதிப்பை குறைத்து விடாதீர்கள். 
 
(இப்படி ஒரு கூட்டம் வருவார்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அறிவித்து கொடுக்கப்பட்டிருந்த காரணத்தினால்தான் அந்த ஒரு செயலை இந்த உம்மத் செய்துவிடக்கூடாது என்பதற்காக அதுபற்றிய எச்சரிக்கையை நமக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.)
 
தொடர்ந்து சொன்னார்கள்: என்னுடைய உயிர் யாரிடம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹது மலை அளவு தங்கத்தை தர்மம் செய்தாலும்  (ஏறக்குறைய ஒரு மைல் உயரமும் ஐந்து மைல்கள் நீளமுள்ள அந்த மலையளவு)  என்னுடைய தோழர்கள் தங்களுடைய ஒரு கரம் அளவுக்கு கொடுத்த தர்மத்தின் நன்மையை அவர் பெற முடியாது. அதன் பாதியின் அளவு நன்மையைக் கூட அவரால் பெறமுடியாது.
 
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3673, முஸ்லிம் : 2540.
 
ஒரு நபித்தோழரின் ஒரு கையளவு கொடுத்த தர்மம், அது தங்கம் அல்ல. தங்கம் என்று சொல்லப்படவில்லை. தானியமாக இருக்கலாம்; சாதாரண ஒரு வஸ்துவாக இருக்கலாம். அந்த நன்மையை கூட நீங்கள் அடைய முடியாது; நீங்கள் உஹது மலை அளவு தங்கத்தை சொந்தமாகி வைத்திருந்து, அதை அப்படியே அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்தாலும்.
 
உங்களுக்கு அந்த தர்மத்தின் நன்மை கிடைக்கும். ஆனால், அந்த நன்மை ஒரு ஸஹாபி தனது கை அளவு செய்த அந்த தர்மத்தின் நன்மைக்கு சமமாகாது என்றால், அல்லாஹு தஆலா நபித்தோழர்களை எந்த அளவு உயர்வாக வைத்திருக்கிறான், எந்த அளவு கண்ணியத்தில் வைத்திருக்கிறான் என்று யோசித்துப் பாருங்கள். 
 
காரணம் என்ன? அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தோள் கொடுத்தார்கள். மக்களெல்லாம் அல்லாஹ்வின் தூதரை கைவிட்ட நிலையில் அவர்கள் அந்தத் தோழருக்காக உயிரை கொடுத்தார்கள். 
 
மக்களெல்லாம் இந்த மார்க்கத்தை புறக்கணித்தபோது அவர்கள் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள். மக்களெல்லாம் இந்த மார்க்கத்தை அழிக்க வேண்டும் என்று தனது உயிரையும் செல்வத்தையும் பொருளையும் கொண்டு அவர்கள் போர் செய்தபோது அந்தப் போரில் இவர்கள் தான் அவர்களை எதிர்த்து நின்றார்கள். அதில் அவர்கள் உயிரையும் கொடுப்பதற்கு தயங்கவில்லை.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா கூறுகிறான்:
 
وَمَا لَكُمْ أَلَّا تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا يَسْتَوِي مِنْكُمْ مَنْ أَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُولَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِنَ الَّذِينَ أَنْفَقُوا مِنْ بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
 
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? வானங்கள் இன்னும் பூமியின் சொத்துக்கள் அல்லாஹ்விற்கே உரியன. (மக்காவின்) வெற்றிக்கு முன்னர் தர்மம் செய்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தவருக்கு உங்களில் எவரும் சமமாக மாட்டார். (மக்காவின் வெற்றிக்கு) பின்னர் தர்மம் செய்து போர் செய்தவர்களை விட அவர்கள்தான் மிக மகத்தான பதவி உடையவர்கள். இன்னும், (உங்கள்) எல்லோருக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்துள்ளான். அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 57 : 10)
 
நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இன்று சிலருக்கு தன்னுடைய அறிவினால் அல்லது தன்னுடைய சீர்திருத்த பனியினால் அல்லது இன்னபிற காரணங்களால் பெருமை தலைக்கேறும்போது, ஆணவமும் கர்வமும் அவருடைய மூளையில் ஊடுருவும்போது நபித்தோழர்களை சாதாரணமாக பார்க்கிறார்கள். 
 
அவர்கள் என்ன இந்த மார்க்கத்திற்கு செய்துவிட்டார்கள்? என்று அவர்களே குறைத்து மதிப்பிடுகின்றனர். அவர்களுடைய குறைகளை தேடி அதை விமர்சிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். 
 
தன்னை பெரியவராக மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறிவையும், தன்னுடைய ஆய்வு திறமையையும், தன்னுடைய கல்வியையும் மக்கள் போற்றிப் புகழ வேண்டும் என்பதற்காக நபித்தோழர்களின் மதிப்பை அவர் குறைக்க ஆரம்பிக்கிறார்.
 
யார் இப்படி செய்ய நினைக்கின்றார்களோ அல்லாஹ் ஸுப்ஹானஹு தஆலா உடைய ஒரு நியதியை பாருங்கள்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
«مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ»
 
யாரொருவர் தன்னுடைய சகோதரனின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடைய குறையை மறைப்பான். யார் ஒருவர் தன்னுடைய சகோதரரின் குறையை வெளிப்படுத்தி அவரை அசிங்கப்படுத்துவாரோ அல்லாஹ் அவரை அசிங்கப்படுத்துவான். அவர் தன்னுடைய வீட்டுக்குள் இருந்தாலும் சரி. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 2544.
 
ஒரு சாதாரண முஃமின்கள் உடைய குறைகளையே நாம் மறைக்க வேண்டுமென்று இருக்க, ஈமானை உள்ளத்தில் தாங்கி ஈமானுக்காவே வாழ்ந்தவர்களைப் பற்றி அல்லாஹ் எப்படி சொல்கிறான் என்று பாருங்கள்.
 
وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ
 
(நபியின் தோழர்களே!) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார். காரியங்களில் அதிகமானவற்றில் அவர் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள் சிரமப்பட்டு விடுவீர்கள். என்றாலும், அல்லாஹ் உங்களுக்கு ஈமானை விருப்பமாக்கினான்; இன்னும், உங்கள் உள்ளங்களில் அதை அலங்கரித்தான்; இன்னும், இறை நிராகரிப்பையும் பாவத்தையும் (தூதருக்கு) மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக்கினான். இத்தகையவர்கள்தான் நல்லறிவுபெற்றவர்கள் (-நேர்வழியாளர்கள்) ஆவார்கள். (அல்குர்ஆன் 49 : 7) 
 
ஸஹாபாக்களைப் பார்த்து நேரடியாக அல்லாஹ் சொல்லக்கூடிய வசனம் இது. இதில் எந்த விதமான மாற்றுக் கருத்துக்கும் வாய்ப்பே இல்லை. தோழர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஈமானை விருப்பமாக்கி வைத்தான். சஹாபாக்களை பார்த்து நேரடியாக அல்லாஹ் சொல்கிறான். 
 
நாமெல்லாம் அவர்களுக்குப் பின்னால் இந்த வசனத்தில் தொடர்ச்சியில் வருவோமே தவிர, நேரடியாக சொல்லப்பட்டது சஹாபாக்களை பார்த்து. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஈமானை விருப்பமாக்கி வைத்தான்.
 
ஈமானை உங்களது உள்ளத்தில் அலங்கரித்தான். அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதையும், இறை நிராகரிப்பையும், நபிக்கு மாறுசெய்வதையும் உங்களுக்கு அல்லாஹு தஆலா வெறுப்பான ஒரு காரியமாக ஆக்கி வைத்துவிட்டான். அதாவது ஈமான் அவர்கள் உள்ளத்தோடு இரத்தத்தோடு ஊறி ஒன்றி விட்டது என்று அல்லாஹ் சொல்கிறான்.
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَأَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى وَكَانُوا أَحَقَّ بِهَا وَأَهْلَهَا
 
இன்னும், அவர்களுக்கு இறையச்சத்தின் வாக்கை அவசியமாக்கினான். (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற திரு கலிமாவை விரும்பி ஏற்கும்படியும் அதை உறுதியாக பற்றிப் பிடிக்கும்படியும் செய்தான்.) இன்னும், அவர்கள்தான் அதற்கு மிகத்தகுதியுடைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் (-உரிமை உள்ளவர்களாகவும்) இருந்தார்கள். (அல்குர்ஆன் 48 : 26)
 
அவர்களுடைய உள்ளத்தில் நபியின் நேசமும் அல்லாஹ்வின் நேசமும் இந்த மார்க்கத்தின் நேசமும் இரத்தத்தோடு ஊறிய ஒன்றாக இருந்தது. 
 
அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கூற்றை பாருங்கள். அதுதான் எல்லா நபித்தோளர்களின் கூற்றாக இருந்து.
 
அல்லாஹ்வுடைய தீனில் குறைவு ஏற்படுமா? யாராவது அல்லாஹ்வுடைய தீனை சேதப்படுத்த முடியுமா? அபூ பக்ர் உயிரோடு இருக்கின்ற போது. 
 
நாமெல்லாம் இன்று நமது மனைவி மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில், நம்முடைய வியாபாரத்துக்காக தொழிலுக்காக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில், நம்முடைய சஹாபாக்கள் அவர்களில் யாராவது தன்னுடைய குடும்பத்தில் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்த்திருப்பார்களா? 
 
தன்னுடைய மனைவி மக்கள் செல்வ நிலையிலேயே வாழ வேண்டும்; எனக்கு என்னுடைய குடும்பம் முக்கியம்; என்னுடைய குடும்பத்திற்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்குமா? 
 
எப்பொழுது அல்லாஹ்வுடைய தூதர் போருக்கு கூப்பிட்டாலும் உடனே தயார். அவர்களது விவசாயம் நலிந்து போனது. அவர்களது வியாபாரம் நலிந்து போனது. ரசூலுல்லாஹ்வின் காலமெல்லாம் அவர்கள் ஆயுதம் ஏந்தி தயாராக இருந்தார்கள். 
 
எந்த போருக்கு எந்தத் திசையில் அல்லாஹ்வுடைய தூதர் யாரை அனுப்பினாலும் யாராவது ஒரு தோழர் அனுமதி கேட்டிருப்பாரா? யா ரசூலல்லாஹ்! நான் சொல்ல மாட்டேன் என்று. 
 
மூன்று தோழர்கள் அவர்கள் தங்கி விட்டதற்கு கூட, அல்லாஹ்வுடைய கண்டிப்பு வந்து அவர்கள் அதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்டு அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்றால், அந்த தோழர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தீனுக்காக எத்தகைய தியாகங்களை செய்திருப்பார்கள்!
 
அல்லாஹு தஆலா அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சான்றை கொடுக்கின்றான். 
 
كَتَبَ فِىْ قُلُوْبِهِمُ الْاِيْمَانَ
 
இவர்களது உள்ளத்தில் அல்லாஹ் ஈமானை பதிய வைத்துவிட்டான். இவர்களது உள்ளத்தில் அல்லாஹ் ஈமானை எழுதி வைத்துவிட்டான் என்று. (அல்குர்ஆன் 58 : 22)
 
எந்த அளவு அல்லாஹ் அவர்களைச் சோதித்து இருப்பான் என யோசித்து பாருங்கள். யாரையும் சோதிக்காமல் அல்லாஹு தஆலா இப்படிப்பட்ட ஒரு அந்தஸ்தை கொடுப்பானா? 
 
இப்ராஹீமை பல கட்டளைகளை கொண்டு அல்லாஹ் சோதித்தான். அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். பிறகு அல்லாஹ் அவருக்கு இமாம் என்ற அந்தஸ்தை கொடுத்தான். (அல்குர்ஆன் 2 : 124)
 
அல்லாஹ் இப்ராஹீமை தன்னுடைய நண்பனாக எடுத்துக்கொண்டான் என்ற அந்த கலீலுடைய சான்றை அல்லாஹ் கொடுக்கிறான். (அல்குர்ஆன் 4 : 125)
 
இப்படித்தான் நபிமார்கள் எந்தளவு சோதிக்கப்பட்டார்களோ அதற்கேற்ப அவர்களுடைய அந்தஸ்து என்றால் நபிமார்களுடைய உம்மத்துகளுக்கும் அப்படி தான். 
 
யார் எந்தளவு இந்த மார்க்கத்திற்காக சோதிக்கப்பட்டார்களோ அதற்கு ஏற்பதான் அந்தஸ்தே தவிர, இந்த மார்க்கத்தில் பிறந்து விடுவதால், இந்த மார்க்கத்தில் வளர்ந்து விடுவதால் அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தை அடைய முடியும் என யாரும் கற்பனை செய்து விட வேண்டாம், அமல்களும் தியாகங்களும் இல்லாமல். 
 
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! சஹாபாக்களை விட நாம் இந்த மார்க்கத்திற்கு தியாகம் செய்திருக்கிறேன் என்று யாராவது சொல்ல முடியுமா? யாராவது அப்படி வாதிட முடியுமா? 
 
அல்லாஹு தஆலா இந்த தியாகங்களுக்காகவே அவர்களை தேர்ந்தெடுத்தான் போலும். இதை தான் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சூரா நம்லுடைய வசனத்திற்கு விளக்கம் சொல்கிறார்கள். 
 
وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰى
 
அல்லாஹ் தேர்ந்தெடுத்த அடியார்கள் மீது அல்லாஹ்வுடைய ஸலாம் உண்டாகட்டும் என்று அல்லாஹு தஆலா நபியின் தோழர்களைப் பற்றி குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன் 27 : 59)
 
நம்முடைய ஹதீஸ் நூல்களில் பல ஹதீஸ்களை நம்முடைய ஹதீஸ் கலையின் இமாம்கள் பதிவு செய்கிறார்கள். அதற்காக தனி பாடங்களை அமைத்து, ஸஹாபாக்களின் மதிப்பு இந்த உம்மதுடைய உள்ளங்களில் ஆழமாகப் பதிய வேண்டும். இந்த உம்மதுடைய பிள்ளைகள் சிறுவர்கள் வாலிபர்கள் ஸஹாபாக்களை நேசிக்க வேண்டும். 
 
சஹாபாக்கள் மீது அன்பும் பற்றும் எந்த அளவு இருக்குமோ அந்த அளவு அவர்களிடத்தில் மார்க்கப் பற்றும் இருக்கும். மார்க்கத்தின் மீது அவர்களுக்கு கண்ணியம் இருக்கும். 
 
சஹாபாக்களை காயப்படுத்தினால் மார்க்கத்தை காயப்படுத்துவதும் மார்க்கத்தின் மதிப்பை முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்து வீழ்த்தி விடுவதும் மிக இலகுவானதும் என்பதை இப்லீஸ் புரிந்திருக்கிறான். அந்த இப்லீஸுடைய ஏஜன்டுகள் புரிந்திருக்கிறார்கள். 
 
எனவேதான் ஒவ்வொரு காலத்திலும் முஸ்லிம்களை வழி கெடுக்க நினைக்கும் போது அது சிந்தனை ரீதியாகவோ அல்லது பாவங்கள் ரீதியாகவோ எப்படியோ முஸ்லிம்களை பலவீனப்படுத்த வேண்டும் என்று நினைக்கும்போது இப்லீஸ் பயன்டுத்தக்கூடிய வழி, சஹாபாக்களை பற்றிய விமர்சனங்களை முஸ்லிம் என்ற பெயர் தாங்கிகள் மூலமாகவே உருவாக்குவது.
 
நபித்தோழர்களை கண்ணிய குறைவாகவும் அவர்களின் குறைகளை விமர்சித்தவர்களை வரலாறு நெடுக நாம் பார்க்கிறோம்; எப்படி அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அவர்களுடைய வாழ்நாளிலேயே அவர்களை அசிங்கப்படுத்தினான் என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
நம்முடைய ஸலஃபு ஸாலிஹீன்கள், தாபியீன்கள், தபவுத் தாபியீன்கள் ஸஹாபாக்களை எந்த அளவு மதித்தார்கள்; ஸஹாபாக்களின் மதிப்பை பற்றி நமக்கு என்ன அறிவுரைகளை கூறி இருக்கிறார்கள் பாருங்கள். 
 
அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் (பிறப்பு -118, இறப்பு-181) மிகப்பெரிய ஒரு தபவுத்தாபியீன். பல ஹதீஸ்களினுடைய இமாம்களுக்கு ஆசிரியராக இருப்பவர்கள். 
 
அவர்களிடத்தில் ஒருவர் வந்து கேட்கிறார். இது போன்ற குழப்பம் அந்த காலத்தில் அப்படியே தலை தூக்க ஆரம்பித்தது. காரணம், இப்லீஸ் தான் இந்த குழப்பத்தை உண்டாக்குவான். அந்த இப்லீஸ் இன்றும் இருக்கிறான். அன்றும் இருந்தான். அந்த சிந்தனை தான் இப்லீஸிய சிந்தனை, யஹூதிய சிந்தனை. 
 
அவர் இடத்தில் ஒருவர் கேட்கிறார்; உமர் இப்னு அப்துல் அஸீஸ் சிறந்தவரா? முஆவியா சிறந்தவரா? என்று. 
 
உமர் இப்னு அப்துல் அஸீஸ் இவர் தாபியீன், முஆவியா ரழியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ் ஸலல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களுடைய தோழர். ரசூலுல்லாஹ் உடைய மனைவியின் சகோதரர். குர்ஆனுடைய வஹியை எழுதியவர். கடைசி காலத்தில் அவர் இஸ்லாமை ஏற்றிருந்தாலும் இந்த இஸ்லாமிற்காக மிகப்பெரிய தியாகங்களை செய்த, இஸ்லாமிற்காக ஜிஹாதுகளை செய்து பல நாடுகளை வெற்றி கொண்டு, இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய மன்னர்களில் ஒருவர்.
 
ஆனால், மன்னர் ஆட்சி என்ற காரணத்தால் அவர்களை சிலர் குறைவாகப் பேசலாம். அப்படிப்பட்ட சிந்தனையில் உள்ளவர் ஒருவர் தான் இப்படி கேட்கிறார்: முஆவியா சிறந்தவரா? அல்லது உமர் இப்னு அப்துல் அஸீஸ் சிறந்தவரா? என்று. 
 
அப்போது அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹிமஹுல்லாஹ் கூறுவதைப் பாருங்கள். முஆவியா உடைய மூக்குத் துவாரத்தில் அவர் ரசூலுல்லாஹ் உடன் பயணம் செய்த போது ஏற்பட்ட அந்த புழுதி தூசி இருக்கிறது அல்லவா, அந்த தூசி உமர் இப்னு அப்துல் அஸீஸை விட சிறந்தது, அவரை விட சிறப்பானது என்பதாக.
 
உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் ஐந்தாவது கலீஃபா என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமுக்காக வாழ்ந்து நீதத்தை நிலைநாட்டி மார்க்கத்தை உறுதிப்படுத்திய மிகப் பெரிய தாபியீ. 
 
அவர் ஒரு மன்னர் மட்டுமல்ல, அரசர் மட்டுமல்ல, மிகப்பெரிய இமாம்; ஆலிம். பல ஹதீஸ்களை அறிவித்த ஒரு பெரிய ஹதீஸ்களுடைய ராவி -அறிவிப்பாளர் அவர். அப்படி ஒரு உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தும் கூட, ஒரு தாபியீ எவ்வளவு தான் அமல்களில் உயர்ந்திருந்தாலும் ரசூலுல்லாஹ்வுடைய கடைசி காலத்தில் இஸ்லாமை ஏற்று இஸ்லாமுக்காக வாழ்ந்த ஒரு ஸஹாபியினுடைய மூக்கில் பயணத்தில் செல்லும் போது ஏற்படக்கூடிய அந்த புழுதி தூசுக்கு கூட அவர் சமமாக மாட்டார்கள்; அந்த சஹாபியின் தூசி இந்த தாபியீனை விட சிறந்தது. எப்பேற்பட்ட அழுத்தமான பதிலை இங்கே பதிவு செய்கிறார்கள் பாருங்கள். 
 
அதுபோன்றுதான், இமாம் அபு ஸுர்ஆ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரி 200 ல் பிறந்து 264ல் வஃபாத்தான அறிஞர். அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து பேசுகிறார்; நான் முஆவியாவை வெறுக்கிறேன் என்று. 
 
முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஏற்பட்ட அந்த கருத்து வேற்றுமையை தொடர்ந்து ஏற்பட்ட அந்த யுத்தம், இதனால் சிலர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை மரியாதை குறைவாக பேசுகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் வந்து சொல்கிறார், நான் முஆவியாவை வெறுக்கிறேன் என்று.
 
அதற்கு இமாம் என்ன பதில் சொன்னார்கள்: முஆவியா இடத்தில் விசாரணை செய்யப்போவது நாளைக்கு மறுமையில் நீயா? முஆவியாவுடைய ரப்பா? முஆவியா குற்றம் செய்திருந்தால் அந்த குற்றத்திற்காக அவரை விசாரிக்க போவது யார்? நீயா அல்லது முஆவியாவுடைய ரப்பா?
 
முஆவியாவுடைய ரப்பு ஆகியவன் ரப்புர் ரஹீம் - கருணைமிக்கவன், இரக்கமுள்ளவன். சரி, முஆவியா தப்பு செய்திருந்தால், அலீ நியாயத்தில் இருந்தால், அலீவுடைய ரப்பு யார்? அவனும் அல்லாஹ். 
 
அலீக்காக முஆவியாவிடத்தில் நீதம் வாங்கக் கூடியவன் யார்? அல்லாஹ் தான். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தண்டிப்பதாக இருந்தால் தண்டிக்கக்கூடியவன் யார்? அல்லாஹு தஆலா தான். 
 
இப்படி அவன் ரஹீமாகவும் இருக்கின்றான், கரீமாகவும் இருக்கின்றான். எந்த முஆவியா இடத்தில் அலீக்காக வேண்டி நீதத்தை வாங்க வேண்டுமோ அந்த ரப்பு தான் உன்னுடைய ரப்பு. ரப்புர் ரஹீம் -கருணை உள்ளவன், இரக்கம் உள்ளவன். 
 
அதேநேரத்தில் தயாளமுள்ளவன். அவன் நாடும் போது முஆவியாவை மன்னிக்கவும் செய்யலாம். அதே நேரத்தில் முஆவியாவை மன்னித்துவிட்டு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனது திருப்திபடுகின்ற அளவு அவர்களுக்கு அவனுடைய தயாளத்தால் அல்லாஹு தஆலா அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சுவர்கத்தின் பதவிகளை உயர்த்தலாம். அவன் மிகப் பெரிய தயாளன். அந்த இருவரும் தங்களது ரப்பிடத்தில் அதை பேசிக் கொள்வார்கள். அந்த இருவருக்கும் இடையில் உள்ளே செல்வதற்கு நீ யார்?
 
முஆவியாவும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களுடைய தீர்ப்புக்காக நாளை மறுமையில் உன்னிடத்தில் வருவார்களா? ரப்பிடத்தில் செல்வார்களா? அந்த ரப்பு, ரஹீம் ரவூஃப் கரீம். அவன் அவர்களை திருப்திபடுத்துவான். 
 
முஇஆவியாவை மன்னிப்பதற்கும் அல்லாஹ் போதுமானவன், அலீக்கு கண்ணியத்தை உயர்த்துவதற்கும் அல்லாஹ் போதுமானவன். இந்த இருவருக்குமிடையில் உள்ளே நுழைந்து தீர்ப்பு செய்வதற்கு நீ யார்? என்று அந்த மனிதருக்கு அழகிய பாடத்தை கொடுத்தார்கள்.
 
இமாம் இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 164 ல் பிறந்து 241 ல் வஃபாத்தான மிகப் பெரிய ஒரு சுன்னாவின் இமாம். அவர்கள் சொல்கிறார்கள்: ஒரு மனிதர் ரசூலுல்லாஹ்வுடைய தோழர்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை, மதிப்பை குறைத்துப் பேசுவதை பார்த்தால், உடனே அந்த பேச்சுக்கு நீ செவி சாய்க்காதே. அதில் உண்மை இருக்குமா? என்று நீ ஆராய்ச்சி செய்ய வேண்டாம். அவன் முஸ்லிம் இல்லை என்பதை நீ விளங்கிக் கொள். அவனுடைய இஸ்லாமியப் பற்றில் நீ சந்தேகப்பட்டு கொள். அவன் ஒரு முஸ்லிமாக இருந்தால் நபியின் தோழரை இப்படி ஏச மாட்டான்; குறைவாக பேச மாட்டான். 
 
மேலும் சொன்னார்கள்: எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை; நபித்தோழர்களின் தவறுகளைப் பற்றி பிரஸ்தாபித்து பேசுவதற்கோ, அவர்களை விமர்சிப்பதற்கோ, அவர்களை மதிப்பை குறைத்து பேசுவதற்கோ.
 
யாராவது அப்படி செய்தால், மன்னர் அவரை கண்டிக்க வேண்டும்; அவரை தண்டிக்க வேண்டும். 
 
அவர் செய்த இந்தத் தவறு என்பது, வெறும் கூப்பிட்டு இப்படி செய்யாதே! என்று சொல்லி அனுப்பக்கூடிய அளவிற்குண்டான மன்னிக்கப்படக் கூடிய குற்றம் அல்ல. மாறாக அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அவரை தவ்பா செய்ய சொல்ல வேண்டும். அப்படி தவ்பா செய்தால், அவரிடமிருந்து அந்த தவ்பாவை ஏற்று அவரை விட்டு விட வேண்டும். 
 
அப்படி இல்லாமல் மீண்டும் நபித்தோழர்களை விமர்சிப்பதையும், அவர்களைப் பற்றி குறை பேசுவதையும் அவர் தொடர்ந்து கொண்டே இருந்தால், மன்னர் அவரை வாழ்நாள் எல்லாம் சிறையில் அடைத்து விட வேண்டும். அவரை வெளியில் விடக்கூடாது, அவர் தவ்பா செய்கின்ற வரை அல்லது தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்கின்ற வரை. 
 
யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே! இதுதான் ஒரு இஸ்லாமிய நாடாக இருக்குமேயானால் நபித்தோழர்களை விமர்சிப்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய தீனுடைய சட்டம். 
 
பிஷ்ரு இப்னு ஹாரிஸ் ரஹிமஹுல்லாஹ் ஹிஜ்ரி 179 ல் பிறந்து 227 ல் வஃபாதான ஒரு பெரிய அறிஞர் சொல்கிறார்கள்: ரசூலுல்லாஹ் உடைய தோழரை யார் ஏசுவாரோ அவர் காஃபிர். அவர் நோன்பு வைத்தாலும் சரி, தொழுதாலும் சரி, தன்னை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டாலும் சரி. 
 
இன்று பார்க்கிறோம் சர்வ சாதாரணமாக பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். தங்களுடைய மாத இதழ்களையும், தங்களது புத்தகங்களையும் சஹாபாக்களின் குறைகள் என்பதற்காகவே தலைப்பிட்டு அதற்காகவே பக்கங்களை ஒதுக்கி, அவர்கள் மிகப்பெரிய தங்களது எழுத்துத் திறமையை அதில் காட்டுகின்றார்கள். 
 
அன்புக்குரியவர்களே! இந்த இடத்தில் இமாம் அபூ ஸுர்அ ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய கூற்றை நாம் நினைவு கூற வேண்டும். அவர்கள் சொல்கிறார்கள்: ஒருவர் ரசூலுல்லாஹ் உடைய தோழர்களை பற்றி மதிப்பு குறைவாக பேசினால் அவன் ஒரு நாத்திகனாக தான் இருப்பான் என்பதை உறுதி செய்து கொள். 
 
உள்ளத்தில் குஃப்ரை -இறைநிராகரிப்பை மறைத்து வைத்துக் கொண்டு தன்னை முஸ்லிம் என்று சொல்லக்கூடிய போலிக்கு தான் முனாஃபிக் என்று சொல்லப்படும். 
 
காரணம் என்ன? நான் ஏன் இப்படிப்பட்ட பெரிய வார்த்தையை கூறுகிறேன் என்பதற்கு அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்: ஏனென்றால் அல்லாஹ்வுடைய தூதர் உண்மையானவர். குர்ஆன் உண்மையானது. இந்த ரசூலையும், ரசூலுல்லாஹ் உடைய சுன்னாவையும் குர்ஆனையும் நமக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள் சஹாபாக்கள். 
 
யார் சஹாபாக்களை குறைவாக பேசுகிறார்களோ அவர்கள் நமக்கு குர்ஆனுக்கும் சுன்னாவிற்கும் ரசூலுல்லாஹ்விற்கும் சாட்சிகளாக இருக்கக்கூடிய நம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தின் சாட்சிகளை அவர்கள் காயப்படுத்த நினைக்கின்றார்கள். அந்த சாட்சிகளை காயப்படுத்தி விட்டால், அந்த சாட்சிகளை குறை படுத்திவிட்டால் மிக விரைவாக சீக்கிரமாக குர்ஆனிலும் சுன்னாவிலும் சந்தேகத்தை உண்டு பண்ணிவிடலாம். 
 
அப்படிதானே செய்தார்கள். முதலாவதாக ஸஹாபாக்களை விமர்சித்தார்கள். நாங்கள் யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை பார்த்திருக்கிறீர்களா? 
 
நல்லவர்களின் நன்மையைப் பற்றி பேசுவோம்; நம் குறைகளை நாம் திருத்துவோம் என்பதற்கு பதிலாக, சில ஜமாஅத்துகளின் பைலாக்கலில், அட்டைப் படங்களில் நாம் யாரையும் விமர்சனம் செய்ய தயங்கமாட்டோம். எல்லோரையும் விமர்சனம் செய்வோம். என்ன ஒரு முட்டாள்தனமான கொள்கை பாருங்கள்!
 
இமாம் சொல்கிறார்கள்: ஸஹாபாக்களை காயப்படுத்த நினைக்கிறார்களோ அவர்கள் தான் இந்த உம்மத்தில் காயப்படுத்தப்பட வேண்டியவர்கள். கண்டிப்பாக அவர்கள் நாத்திகர்தளாக தான் இருப்பார்கள். 
 
இமாம் ஸரஹ்ஷி ரஹிமஹுல்லாஹ் ஹிஜ்ரி 409 ல் பிறந்து 490 ல் வஃபாத்தான அறிஞர். சொல்கிறார்கள்: இவர்களுடைய கூற்றும் அதுதான், யார் ஸஹாபாக்களின் விஷயத்திலேயே விமர்சனங்கள் செய்கிறாரோ அவன் ஒரு முல்ஹித் -இறை நிராகரிப்பாளனாக இருப்பான். இஸ்லாமை உள்ளுக்குள் எதிர்ப்பவனாக இருப்பான்.
 
அவன் திருந்தவில்லை என்றால் அவனுக்கு நாம் கொடுக்க கூடிய சிகிச்சை, நம்முடைய வாள்தான். இஸ்லாமிய நாடாக இருக்குமேயானால் நபித்தோழர்களை விமர்சனம் செய்பவர்களுக்கு கொடுக்கப் படக்கூடிய தண்டனை வாள்தான். 
 
இமாம் முஹம்மது இப்னு ஸுபைஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ஹிஜ்ரி 183 ல் இறந்த மிகப்பெரிய ஓரு ஹதீஸ் கலையின் அறிஞர். இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய ஆசிரியர். ஸஹாபாக்களை பற்றி குறைவாக, விமர்சனம் செய்யக் கூடிய, ஏசக்கூடிய மக்களைப் பார்த்துச் சொல்கிறார்கள்:
 
ஓ மனிதனே! எங்கேயாவது யஹூதிகளை பார்த்திருக்கிறாயா? மூசா நபியின் தோழர்களை அவர்கள் ஏசியதாக. யூதர்கள் மூசா நபியின் தோழர்களை ஏசியதாக நீ பார்த்திருக்கிறாயா? ஏசியதில்லையே. கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் தோழர்கள் ஏசியதில்லையே. முட்டாளே, உனக்கு என்ன நேர்ந்தது? முஹம்மதின் தோழர்களை நீ ஏச வந்துவிட்டாய். 
 
எனக்கு தெரியும்; இந்த முஸிபத் உனக்கு எப்படி ஏற்பட்டது என்று. உன்னுடைய பாவங்களை பற்றி நீ சிந்திக்கவில்லை. நீ செய்த அநியாயங்கள் குற்றங்களைப் பற்றி சிந்திக்கவில்லை. உன்னுடைய பாவத்தை நினைத்து பார்த்திருந்தால் உனது ரப்பை நீ பயந்திருப்பாய். நீ உனது பாவத்தை சிந்தித்து இருந்தால் அதற்கு தவ்பா கேட்டு இருப்பாய். குற்றம் செய்தவர்களை பாவிகளை பார்த்து ஏளனமாக பேசி இருக்க மாட்டாய், உன்னுடைய பாவத்தைப் பற்றி நீ சிந்தித்து இருந்தால். 
 
காரணம், அவரை விட பாவம் என்னிடத்தில் அதிகமாக இருக்கிறது என்று உனது பாவத்தை நினைத்து நீ பயந்து இருப்பாய். அப்படி இருக்க அல்லாஹ் யாரை மன்னித்து நல்லவர்கள் என்று சான்று சொன்னானோ அந்த சஹாபாக்களை பற்றி நீ எப்படி பேசி இருப்பாய்? உனது பாவத்தை பற்றி நீ சிந்தித்து இருந்தால் நீ பாவிகளை பற்றிய பேச மாட்டாயே! சஹாபாக்கள் அந்த நல்லவர்களை பற்றி எப்படி பேசியிருப்பாய். 
 
சரி, நீ உயர்ந்த நல்லவர்தான் என்று வைத்துக் கொண்டால் பாவிகளை பார்த்து அவர்களை திருத்துவதற்கு தான் நீ முயற்சி செய்திருப்பாயே தவிர, அவர்களை விமர்சனம் செய்திருக்கமாட்டாய். அளவற்ற அருளாளன் கருணையாளனுக்கெல்லாம் கருணையாளன் இவர்களை மன்னிக்கப் போதுமானவன் என்று அந்த பாவ மன்னிப்புக்காக நீ துஆ செய்திருப்பாய். 
 
நான் உறுதியாகச் சொல்கிறேன்: நீ மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒருவன். எனவேதான், யாரை அல்லாஹ் ஷஹீதுகள் என்று அங்கீகரித்தனோ, யாரை ஸாலிஹீன் என்று அல்லாஹ் அங்கீகரித்தனோ அவர்களை நீ குறை பேச துணிந்துவிட்டாய். நீ தீயவர்களில் உள்ளவன்; நீ கெட்டவர்களில் உள்ளவன். 
 
எனவேதான் யாரை அல்லாஹ் ஷஹீதுகள், ஸாலிஹீன்கள் என்று அங்கீகரித்தானோ அவர்களை நீ குறை பேசி விட்டாய். 
 
முஹம்மதின் தோழர்களை குறை பேசக்கூடியவனே, நீ பகலில் நோன்பு வைக்காமல் இரவில் தூங்கி விட்டாலும் கூட அது பரவாயில்லை. நீ பகலெல்லாம் நோன்பு வைத்து இரவெல்லாம் நஃபில் வணக்கங்களைச் செய்து விட்டு ஆனால் நபியின் தோழர்களைப் பற்றி நீ தரக்குறைவாக பேசுகிறாயே? உன்னுடைய இரவு வணக்கம் உனக்கு புண்ணியத்தை தராது. உன்னுடைய நோன்பும் உனக்கு புண்ணியத்தைத் தராது. உனக்கு நாசம் உண்டாகட்டும்! நீயோ அந்த நல்லவர்களை ஏசி கொண்டிருக்கிறாய். கண்டிப்பாக மிக கேடு உனக்கு உண்டு என்பதை நீ நற்செய்தியாக பெற்றுக்கொள். 
 
முட்டாளே! நீ இந்த மாதிரியான கொள்கைக்கு இந்த மாதிரியான பேச்சுக்கு யாரை ஆதாரமாகக் கொண்டு வருகிறாய்? உன்னை போன்ற முட்டாளின் பேச்சை எடுத்து தானே நீ பேசுகின்றாய். பின்னோர்களில் மிக தீயவன் யார் என்றால், சிறந்த முன்னோர்களை ஏசி பேசுகின்றானே அவன் தான். 
 
பின்னோர்களில் தீயவன் யாரென்றால் சிறந்த முன்னோர்கள் தனக்கு முன்னால் சென்ற அந்த சான்றோரை ஏசுகின்றானே அவன்தான். நமது சான்றோர்கள் சஹாபாக்களில் ஒருவர் பின்னால் வந்த ஆயிரம் பேரை விட அவர்கள் சிறந்தவர்கள்.
 
இமாம் இப்னு ஸலாஹ் -ஹதீஸ் கலையின் மிகப்பெரிய அறிஞர். 577 ல் பிறந்து 643 ல் வஃபாத்தான அறிஞர். அவர்கள் சொல்கிறார்கள்: இந்த உம்மத்துடைய அறிஞர்கள் எல்லாம் அவர்களின் ஒருமித்த முடிவு, சஹாபாக்கள் நல்லவர்கள்; நீதமானவர்கள்; மார்கத்தில் நம்பத்தகுந்தவர்கள் ஆவார்கள் என்பது. 
 
அவர்களில் எல்லோரும் அலீ ரழியல்லாஹு அன்ஹு, முஆவியா ரழியல்லாஹு அன்ஹு இருவருக்கும் இடையே நடந்த குழப்பத்தில் பங்கெடுத்தவராக இருந்தாலும் சரி, எல்லா சஹாபாக்களும் நீதமானவர்கள்; நல்லவர்கள் இதுதான் அறிஞர்களின் முடிவாகும். 
 
இமாம் தஹாவி ரஹிமஹுல்லாஹ் ஹிஜ்ரி 238 ல் பிறந்து 321 ல் இறந்த மிகப்பெரிய அறிஞர் சொல்கிறார்கள்: நம்முடைய கொள்கை, ரசூலுல்லாஹ்வின் தோழர்களை நேசிப்போம். அவர்களில் ஒருவரை நேசிப்பதில் அளவு கடக்க மாட்டோம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் அவர்களுக்கு என்ன கண்ணியத்தை கொடுத்தார்களோ அந்த கண்ணியத்தை குறைக்கவும் மாட்டோம். அதற்கு மேலாக அவர்களை ஷியாக்கள் ராஃபிதாக்கள் உயர்த்துவது போன்று அவர்களை நாங்கள் அளவு கடந்து உயர்த்தவும் மாட்டோம். 
 
அந்த தோழர்களில் யார் ஒருவரை விட்டும் நாங்கள் நீங்கிக் கொள்ள மாட்டோம். அதாவது எங்களுக்கு சஹாபாக்கள் பிடிக்காது; நாங்கள் அவர்களை பின்பற்ற மாட்டோம்; அவர்களுக்கும் எங்களுக்கும் இந்த மார்க்கத்தில் சம்பந்தம் இல்லை என்று நாங்கள் விலகிக் கொள்ள மாட்டோம். 
 
யார் சஹாபாக்களை வெறுப்பாரோ அவர்களை நாமும் வெறுப்போம். நபித்தோழர்களை யார் வெறுப்பாரோ அவர்களை நாமும் வெறுப்போம். நாம் அவர்களைப் பற்றி பேசினால் நல்லதை தான் பேசுவோம். சஹாபாக்களை நேசிப்பது தீனாகும் -மார்க்கமாகும். இறை நம்பிக்கையை அதிகப்படுத்தக்கூடிய ஒரு அமலாகும். உள்ளத்தின் தக்வாவை உள்ளத்தின் நன்மையை அதிகப்படுத்தக்கூடிய ஒரு செயலாகும். 
 
ஸஹாபாக்களை வெறுப்பது, அவர்களை கோபிப்பது, அவர்கள் மீது பகைமை காட்டுவது இறை நிராகரிப்பை ஏற்படுத்தக்கூடியது. நயவஞ்சகத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த மார்க்கத்தை விட்டு ஒருவனை வெளியேற்றக் கூடிய செயலாகும்.
 
அன்புக்குரிய சகோதரர்களே! இதுதான் நம்முடைய முன்னோர்களின் வழிகாட்டுதல்களாக இருந்தது. இன்று நாம் வாழக்கூடிய இந்த காலகட்டத்தில் நம்முடைய பிள்ளைகளுக்கு நம்முடைய ஸஹாபாக்களின் மதிப்பை சொல்லிக் கொடுத்து அவர்களை இந்த மார்க்கத்தின் ஆதாரமாக, இந்த மார்க்கத்தின் சான்றாக நம்முடைய வளரும் தலைமுறையினருக்கு போதிக்க வேண்டும். 
 
சஹாபாக்களின் உயர்வுகளை குறித்து என்னென்ன குர்ஆனுடைய வசனங்கள் இருக்கிறதோ அவற்றை தொகுத்து நம் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். ஹதீஸ்களில் சஹாபாக்களின் சிறப்புகளைப் பற்றி வந்திருக்கக்கூடிய ஹதீஸ்களை நமது பிள்ளைகளுக்கு மத்தியில் வாசித்துக் காட்ட வேண்டும். 
 
இன்று, மக்கள் இன்டர்நெட்களைப் பார்த்து இன்னும் அந்த வலைத்தளங்களில் வரக்கூடிய விஷயங்களை எல்லாம் பார்த்து ஆலிம்களே தடுமாறக் கூடிய நிலையிலே இருக்கிறார்கள். 
 
யார் இன்று ஹதீஸ்களை விமர்சனம் செய்கிறார்களோ, ஸஹாபாக்களை விமர்சனம் செய்கிறார்களோ, அந்த முட்டாள்கள் இடத்தில் ஒரு முறை நேரடியாக கேட்கப்பட்டது; இப்படி நீங்கள் ஸஹாபாக்களை விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறீர்களே? ஹதீஸ்களை நீங்கள் இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு ஹதீஸாக எடுத்து விமர்சனம் செய்கிறீர்களே? என்ன நீங்கள் ஹதீஸ்களில் அப்படி ஆராய்ச்சி செய்கிறீர்கள்? அதற்காக நீங்கள் ஹதீஸ் கிதாபுகளை படிக்கின்றீர்களா? எந்த அடிப்படையில் நீங்கள் ஹதீஸ்களை அணுகுகிறீர்கள்? ஆராய்ச்சி செய்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட போது, (அல்லாஹ்வுடைய எதார்த்தம் என்னவென்று சொன்னால் பொய்யனின் வாயிலிருந்து அவன் பொய் சொல்கிறான் என்பதை அல்லாஹ் வரவழைத்து விடுவான்.) 
 
அவர் அவ்வளவு சாதாரணமாக சொல்கிறார்: இதுக்கு நாங்க ஒன்னும் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்றதில்லை. இன்டர்நெட்டில் போயி கூகுள்ல நகதுல் ஹதீத் -ஹதீஸ் விமர்சனம் என்று அடிப்போம் அதைப் பற்றி நிறைய யூதருக்கு நஸ்ராக்கள் பேட்டிகள் இருக்கு. அவர்கள் ஹதீஸை பற்றி விமர்சனம் பண்ணது எல்லாம் இருக்கு. அதை நாங்க பார்ப்போம். அதுல எந்த விமர்சனம் எங்களுக்கு பிடிக்குதோ, அது சரியா இருக்கும்னு நாங்க நினைக்கிறோமோ அந்த ஹதீஸை நாங்கள் விமர்சனம் பண்றோம்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
 
அன்பு சகோதரர்களே! அப்படிப் பார்த்தால் அவர்கள் செய்யக்கூடிய விமர்சனங்கள் நியாயமானது என்று கருதினால், அவர்கள் அல்லாஹ்வின் மீது விமர்சனம் செய்தவர்கள் ஆயிற்றே. யூதர்கள் அல்லாஹ்வின் மீது விமர்சனம் செய்தவர்கள். அல்லாஹ்வின் கை கட்டப்பட்டது என்று சொன்னவர்கள்.
 
அல்லாஹ் ஏழை நாங்கள் செல்வந்தர்கள் என்று சொன்னவர்கள். (அல்குர்ஆன் 3:181) அல்லாஹ்வுடைய தூதரை விமர்சனம் செய்தவர்கள் ஆயிற்றே?
 
என்ன ஒரு வழிகாட்டுதல் பாருங்கள். யாருடைய வழியில் செல்ல வேண்டுமோ, அந்த வழியை விட்டுவிட்டு, யார் இஸ்லாமிய மார்க்கத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணுவதற்காகவே இப்லீஸின் ஏஜெண்டுகளாக வேலை செய்கிறார்களோ அவர்களுடைய பாதையில் பயணித்துக் கொண்டு, நாங்கள்தான் குர்ஆன் ஹதீஸை சரியாகப் பின்பற்றுகிறோம், நாங்கள் தான் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்கு சரியான முறையில் போதிக்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்திகின்றார்களே.
 
அன்பு சகோதரர்களே! குறிப்பாக வாலிப சமுதாயமே! அவர்களுடைய பொதுப்பணியை பார்த்து, அவர்கள் செய்யக்கூடிய இன்னபிற சமூகப் பணிகளை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். அந்த சமூகப் பணிக்காக இன்று செல்வீர்கள். நாளை அவர்கள் எந்த சாக்கடையில் விழுந்தார்களோ அதே கொள்கையில் அந்த சாக்கடையில் விழவேண்டும். 
 
நீங்கள் எந்த சமூகப் பணியை செய்யாமல் இருந்தால் கூட அல்லாஹ் கண்டிப்பாக மன்னித்து விடுவான். ஆனால், ஈமானில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் தொழுதால், அந்த நபித்தோழர்கள் மீது குறை பேசிக்கொண்டு எந்த வணக்க வழிபாடுகள் செய்தாலும் நாளை எந்த முகத்தில் அல்லாஹ்விடத்தில் செல்ல முடியும்? யோசித்து பாருங்கள்!
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமக்கு அறிவுரை கூறுகிறான்:
 
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
 
(-முஹாஜிர்கள், அன்ஸாரிகள் ஆகிய) இ(ந்த இரு)வர்களுக்கும் பின்னர் வந்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் ஈமானில் எங்களை முந்திய எங்கள் (முஹாஜிர், அன்ஸாரி) சகோதரர்களையும் மன்னிப்பாயாக! நம்பிக்கை கொண்டவர்கள் மீது குரோதத்தை (-பொறாமையை) எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.” (அல்குர்ஆன் 59 : 10)
 
இந்த துஆவை நாமும் செய்வோமாக! அந்த சஹாபாக்களை நேசித்து அல்லாஹ்வுடைய நேசத்தையும் இந்த நபியுடைய நேசத்தையும் பெறுவோமாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/